வேத வாசிப்பு:
அப். 4:11-12; 2 கொரி. 11:2-4; கொலோ. 1:15-20; எபி. 12:25-29; சங். 11:3-4; 118:22-23; லூக். 6:47-48; 1 கொரி. 3:10-15; 1 பேதுரு
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
தேவனுடைய மீட்பின் திட்டத்தை நான் உங்களுக்குக் கொஞ்சம் திரைநீக்கிக்காண்பிக்க விரும்புகிறேன். இது அதற்கான ஒரு முன்னுரை.
ஒருவன் ஒரு வீட்டைக் கட்ட விரும்பினால், 1. முதலாவது, தான் கட்ட விரும்புகிற வீட்டைப்பற்றிய தெளிவான வரைபடம் வேண்டும். 2. இரண்டாவது, வீட்டைக் கட்டுவதற்குத் தேவையான தரமான கட்டுமானப்பொருட்கள் வேண்டும். 3. மூன்றாவது, வீட்டைக் கட்டுவதற்கு நேர்த்தியான இடம் வேண்டும்.
மூன்று காரியங்கள் வேண்டும்: ஒன்று, தெளிவான வரைபடம்; ஏதோவொரு வரைபடம் அல்ல. தெளிவான வரைபடம். இரண்டு, தரமான கட்டுமானப்பொருட்கள்; ஏதொவொருவிதமான கட்டுமானப்பொருட்கள் அல்ல, தரமான கட்டுமானப்பொருட்கள். மூன்று, நேர்த்தியான இடம். ஏதோவோர் இடம் அல்ல, நேர்த்தியான இடம்.
“வீடு கட்டுகிறவர்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே (இயேசுவே ) மூலைக்குத் தலைக்கல்லானவர்,” என்று அப்போஸ்தலர் நடபடிகள் 4:11இல் வாசிக்கிறோம்.
“அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே” என்று சங்கீதம் 11:3 கூறுவதுபோல் இன்று தனிமனிதன், குடும்பம், திருமணம், சமுதாயம், சபைகள், தேவமக்கள் என எல்லா அடித்தளங்களும், அதாவது அஸ்திபாரங்களும், நிர்மூலமாகிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆம், தனிமனித ஒழுக்கம் என்ற அடித்தளம் கேள்விக்குறியாகிவிட்டது; திருமணம், குடும்பம், என்ற அமைப்புமுறையின் அடித்தளம் அலங்கோலமாகிவிட்டது; சமுதாயத்தில் ஒழுங்கு, ஒழுக்கம் என்ற அடித்தளங்கள் தலைகீழாகிவிட்டன; நீதி, நேர்மை, நியாயம், அமைதி, சமாதானம்போன்ற நேர்மறையான பண்புகள் மறைந்துவிட்டன; எங்கும் வன்முறை; சகிப்புத்தன்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். “எது சரி, எது தவறு” என்று சொல்லமுடியாத அளவுக்கு இரண்டுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் மறைந்துவிட்டன; ஏசாயா 5:20 கூறுவதுபோல், மக்கள் “தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறார்கள்.” விழுந்துபோன, கெட்டுப்போன, பாவம் நிறைந்த இந்த உலகத்தில் சீர்கேடுகளும், அழிவுகளும், தீயசக்திகளும், நாசமோசங்களும் கோலோச்சுகின்றன. மக்கள் இருளிலே தடவித்திரிகிறார்கள்.
தேவனை விசுவாசிப்பதாகவும், ஆராதிப்பதாகவும் சொல்லுகிற சபைகள்கூட 2 கொரிந்தியர் 11:2, 3, 4இல் வாசிப்பதுபோல், “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல…கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகிவிட்டார்களோ” என்று பயப்படுகிறேன். ஏனென்றால், பவுல் கூறுவதுபோல், சபைகள் வேதத்துக்கு ஒவ்வாத, வேதத்துக்கு முரணான, வேதத்துக்குப் பொருந்தாத வேறொரு இயேசுவையும், வேறொரு ஆவியையும், வேறொரு சுவிசேஷத்தையும் பிரசங்கிக்கின்றன. அநேக சபைகள் கிறிஸ்துவின் தெய்வீகம், பாவத்துக்குப் பரிகாரமான இரத்தம், உயிர்த்தெழுதல்போன்ற அடிப்படையான போதனைகளைக் கைவிட்டுவிட்டன. தேவன் பாவம் என்று சொல்லியிருப்பவைகளை சபைகள் பொருட்படுத்துவதில்லை. தேவ மக்களிடையேகூட தேவனுக்கும், வேதாகமத்துக்கும் முற்றிலும் முரணான ஏராளமான கருத்துக்களும், அபிப்பிராயங்களும் ஊடுருவியிருக்கின்றன. ஆனால், புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில்தான், இயேசு கிறிஸ்துவின் தரத்தின்படிதான், எல்லாமும், எல்லாரும் தீர்க்கப்படவேண்டும். தனிப்பட்ட நபர்கள் என்ற முறையிலும், தேவ மக்கள் என்ற முறையிலும், சபை என்ற முறையிலும் நாம் தேவனுடைய உறுதியான அடித்தளத்தின்மேல் கட்டிக்கொண்டிருக்கிறோமா என்று சீர்தூக்கிப்பார்ப்பது அவசியம். ஏனென்றால், “போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது,” என்று 1 கொரிந்தியர் 3:11 கூறுகிறது. “பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார். இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது,” என்று எபிரேயர் 12இல் வாசிப்பதுபோல் தேவன் ஒருநாள், ஒரு மரத்தை உலுக்குவதுபோல் எல்லாவற்றையும் உலுக்குவார். கிறிஸ்துவின்மேல் கட்டப்படாமல் வேறு அடித்தளத்தின்மேல் கட்டப்பட்டவைகள் எல்லாம் அந்த நாளில் இடிந்துவிழுந்து அழிந்துவிடும். கிறிஸ்து மட்டுமே அசையாதவர். கிறிஸ்து மட்டுமே நிலைத்திருப்பார். கிறிஸ்துவுக்குரியவர்கள் மட்டுமே நிலைத்திருப்பார்கள். கிறிஸ்துவின்மேல் கட்டப்பட்டவர்கள் மட்டுமே நிலைத்திருப்பார்கள்.
ஆண்டவராகிய இயேசுவே தனிமனிதனுக்கும், குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும், சபைக்கும், முழுப் பிரபஞ்சத்திற்கும் ஒரே அடித்தளம். இந்த அடித்தளத்தைப் புறக்கணிக்கிறவர்கள், அலட்சியப்படுத்துகிறவர்கள், ஒதுக்கித்தள்ளுகிறவர்கள் நாசமடைவார்கள். ஏனென்றால், “வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.” “வீடு கட்டுகிறவர்களாகளால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை .”
இந்த முன்னுரையில் நான் மூன்று முக்கியமான காரியங்களைச் சொல்ல விரும்புகிறேன்.
“என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன். ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின் மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து, முழுவதும் அழிந்தது என்றார்.” லூக்கா 6:47-48
இரண்டு மனிதர்கள் வெவ்வேறுவிதமான இரண்டு வீடுகளைக் கட்டுகிறார்கள். ஒருவன் கற்பாறையின்மேல் தன் வீட்டைக் கட்டுகிறான். மற்றொருவன் மணலின்மேல் தன் வீட்டைக் கட்டுகிறான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்து, அவருடைய வார்த்தைகளைக் கவனமாய்க் கேட்டு, அவைகளின்படி நடக்கிறவன் கற்பாறையின்மேல் ஆழமாய்த் தோண்டி தன் வீட்டுக்கு அடித்தளம் போடுகிறான். கற்பாறையில் ஆழமாய்த் தோண்டி அடித்தளம் போட்டு கட்டப்பட்ட வீட்டின்மேல் பெரும் புயல் வீசி மோதினாலும் அது விழாமல் உறுதியாக நிற்கும். தேவன் எல்லாவற்றையும் உலுக்கும் நாளில் அந்த வீடு நிலைகுலையாமல் உறுதியாக நிற்கும்.
ஒருவன் ஆண்டவராகிய இயேசு என்ற அடித்தளத்தின்மேல் தன் வீட்டைக் கட்டுவதில் மூன்று காரியங்கள் அடங்கும்: 1. ஒன்று, அவரிடத்தில் வருவது; 2. இரண்டு, அவருடைய வார்த்தைகளைக் கேட்பது; 3. மூன்று, கேட்ட வார்த்தைகளின்படி நடப்பது.
இயேசுவாகிய அடித்தளத்தின்மேல் ஒருவன் தன் வாழ்க்கையைக் கட்டவேண்டுமானால் அவன் முதலாவது தன் முழு இருதயத்தோடு கர்த்தரைத் தேடவேண்டும்; இதுதான் அவரிடத்தில் வருவதின் பொருள். இரண்டாவது வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்க்க வேண்டும்; இதுதான் அவருடைய வார்த்தைகளைக் கேட்பதின் பொருள். மூன்றாவது அவருடைய கட்டளைகளின்படி நடக்க வேண்டும்; இதுதான் கேட்ட வார்த்தைகளின்படி நடப்பதின் பொருள்.
இந்த மூன்றையும் செய்வது மிகக் கடினம். இதற்கு அதிகமான விலை கொடுக்க வேண்டும்; அதிக நேரம் செலவழிக்க வேண்டும். ஆனால், ஆழமான அடித்தளத்தின்மேல் உறுதியான வீட்டைக் கட்டுவதற்கு இதைத்தவிர வேறு குறுக்கு வழியில்லை. நம் எண்ணங்கள், நம் சிந்தனைகள், நம் அபிப்பிராயங்கள், நம் கருத்துக்கள் ஆகியவைகளால் நாம் வாழ்ந்தால் நாம் மணலின்மேல் நம் வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறோம் என்று பொருள். மணலின்மேல் வீட்டைக் கட்டுவது எளிது. கற்பாறையில் ஆழமாகத் தோண்டி அடித்தளம் போட்டு அதின்மேல் வீட்டைக் கட்டுவது கடினம்.
“போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.” உண்மையான ஒரே அடித்தளமாகிய இயேசு கிறிஸ்துவின்மேல் ஆழமாகத் தோண்டி அடித்தளமிட்டால் மட்டும் போதாது. அந்த அடித்தளத்தின்மேல் தேவனுடைய கட்டுமானப்பொருட்களைக்கொண்டுதான் கட்டவும் வேண்டும். “எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும்.” என்று 1 கொரிந்தியர் 3:10-15 அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். ஒரே அடித்தளமாகிய இயேசு கிறிஸ்துவின்மேல் ஆழமாகத் தோண்டி அடித்தளமிட்டால் மட்டும் போதாது. அந்த அடித்தளத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல்போன்ற தேவனுடைய கட்டுமானப்பொருட்களைக்கொண்டுதான் கட்டவும் வேண்டும்.
உண்மையான ஒரே அடித்தளமாகிய இயேசு கிறிஸ்துவின்மேல் ஆழமாகத் தோண்டி அடித்தளமிட்டால் மட்டும் போதாது; அந்த அடித்தளத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல்போன்ற தேவனுடைய கட்டுமானப்பொருட்களைக்கொண்டு கட்டினால் மட்டும் போதாது; தேவனுடைய திட்டத்தின்படிதான், வரைபடத்தின்படிதான், கட்டவும் வேண்டும். தம் வீட்டை எப்படிக் கட்ட வேண்டும் என்று தேவனே வரைந்திருக்கிறார், வடிவமைத்திருக்கிறார், திட்டமிட்டிருக்கிறார். தேவன் மோசேக்குக் காண்பித்த மாதிரியின்படியே அவன் சாட்சியின் கூடாரத்தை உண்டாக்கினான். யாத்திராகமம் 40:18முதல் 38வரையிலான 20 வசனங்களில் “கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே” என்று ஏழுமுறை சொல்லப்பட்டிருக்கிறது. மோசே தன் சொந்த எண்ணத்தின்படியோ, விருப்பத்தின்படியோ, கருத்தின்படியோ தேவனுடைய சாட்சியின் கூடாரத்தை நிறுவவில்லை, ஏற்படுத்தவில்லை. தேவன் தனக்குக் கற்பித்தபடியே, கட்டளையிட்டபடியே, அவன் எல்லாவற்றையும் செய்தான். “மோசே கூடாரத்தை உண்டுபண்ணப்போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்,” என்று எபிரேயர் 8:5இலும், யாத்திராகமம் 25:40யிலும் வாசிக்கிறோம்.
அதுபோல “தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானமும் இருக்கவேண்டிய மாதிரியையும், ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும், ஆசாரியரையும் லேவியரையும் வரிசைகளாக வகுக்கிறதற்கும், கர்த்தருடைய ஆலயப்பணிவிடை வேலை அனைத்திற்கும், கர்த்தருடைய ஆலயத்து வேலையின் பணிமுட்டுகள் அனைத்திற்குமுரிய கட்டளையையும் கொடுத்தான்” என்று 1 நாளாகாமம் 28:11-13இல் வாசிக்கிறோம். ஆம், தாவீது தேவன் தனக்குக் கொடுத்த ஆலயத்தின் மாதிரியை தன் மகன் சாலொமோனுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றான். சாலொமோன் அந்த மாதிரியின்படியே ஆலயத்தைக் கட்டினான். கட்டுவதில் கைதேர்ந்த பவுலும் இந்தக் காரியத்தில் மிகவும் கவனமாக இருந்தார் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம்.
ஒன்று, உண்மையான ஒரே அடித்தளம் வேண்டும். இரண்டு, உண்மையான ஒரே அடித்தளத்தின்மேல் கட்டினால் மட்டும் போதாது. தேவனுக்குமுரணான மரம் புல் வைக்கோல் ஆகியவைகளுக்குப்பதிலாக தேவனுக்கு ஒத்த, தேவனுடைய குணத்துக்கு ஒத்த, பொன் வெள்ளி விலையேறப்பெற்ற கற்கள் ஆகியவைகளைக்கொண்டு கட்டவேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அடித்தளம் மட்டுமல்ல; தேவனால் அங்கீகரிக்கப்பட்ட கட்டுமானப்பொருளும் அவரே; மூன்று, மாபெரும் கட்டிடக்கலைஞராகிய தேவனுடைய திட்டமும், வரைபடமும், மாதிரியும் அவரே. அப்போஸ்தலனாகிய பேதுரு தன் முதல் நிருபம் 2ஆம் அதிகாரம் 1முதல் 10வரையிலான வசனங்களில் “ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்,” என்று சொல்வதுபோல், கிறிஸ்துவே முழுக் கட்டிடத்தின் வடிவத்தையும், குணத்தையும் தீர்மானிக்கிற விலையேறப்பெற்ற ஜீவனுள்ள மூலைக்கல். நம்மை மையமாகக்கொண்டு, நம் சொந்த அபிப்பிராயங்களின்படி, நம் சொந்தக் கட்டுமானப்பொருட்களைக் கொண்டு நாம் நம் வாழ்க்கையைக் கட்டுவது பேராபத்தை உண்டாக்கும். நம் தனிப்பட்ட வாழ்க்கையை, குடும்ப வாழ்க்கையை, சமுதாய வாழ்க்கையை, சபை வாழ்க்கையை நாம் எதில் கட்டுகிறோம், எதைக்கொண்டு கட்டுகிறோம், எப்படிக் கட்டுகிறோம் என்பதை ஒருநாள் நெருப்பு சோதிக்கும். நம் சொந்த எண்ணங்களும், அபிப்பிராயங்களும், கருத்துக்களும், யோசனைகளும் நெருப்பில் எரிந்து சாம்பலாகிவிடும். ஒருவேளை நாம் கிறிஸ்துவாகிய அடித்தளத்தின்மேல் நம் வாழ்க்கையைக் கட்டத் தொடங்கியிருக்கலாம். அதாவது நாம் பெயரளவில் கிறிஸ்தவராக இருக்கலாம். ஆனால், அடித்தளம் போட்டபின் தேவனால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களைக்கொண்டு அவருடைய திட்டத்தின்படி, வரைபடத்தின்படி, மாதிரியின்படி கட்டிக்கொண்டிருக்கிறோமா என்று ஆராய்ந்துபார்க்க வேண்டும்.
தேவன் தம் வீட்டைத் தம் தெளிவான திட்டத்தின்படி, தம் தரமான கட்டுமானப்பொருட்களைக்கொண்டு ஏன் கட்டிக்கொண்டிருக்கிறார் என்று நமக்குத் தெரியவேண்டும். மாபெரும் கட்டிடக்கலைஞராகிய தேவனுடைய நோக்கத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம் என்று பேதுரு தன் நிருபத்தில் வலியுறுத்துகிறார். தேவன் எதற்காகத் தமக்காக ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறார்? தாம் வாழ்வதற்காக, தம் சொந்த வீட்டில் சுதந்திரமாக வாழ்வதுபோல் வாழ்வதற்காக, போற்றப்படுவதற்காக, ஆராதிக்கப்படுவதற்காக, தம் மகிமையை வெளிகாட்டுவதற்காக, தம் வேலையைச் செய்வதற்காக, தம் திட்டங்களை நிறைவேற்றுவதற்காகத் தேவன் தமக்காக ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறார். இந்த அற்புதமான நோக்கத்திற்காகத்தான் தேவன் தம் வீடாகிய சபையைக் கட்டிக்கொண்டிருக்கிறார். தம் வீடாகிய சபை எப்படி இருக்க வேண்டும் என்ற தம் விருப்பத்தையும் அவர் நமக்குக் காண்பித்திருக்கிறார். அது அவரைப் போற்றுகிற குடும்பமாக, பிதாவின் சித்தத்தைச் செய்கிற ஒரு குடும்பமாக, இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இந்த முன்னுரையை நான் இத்துடன் முடித்துக்கொள்கிறேன். மீண்டும் தொடர்வோம். அதுவரை, கிறிஸ்துவின் கிருபை உங்களோடு இருப்பதாக, ஆமென்.
வேத வாசிப்பு: அப். 4:11-12; 2 கொரி. 11:2-4; கொலோ. 1:15-20; எபி. 12:25-29; சங். 11:3-4; 118:22-23; லூக். 6:47-48; 1 கொரி. 3:10-15; 1 பேதுரு 2:1-10.