Preloader
சாட்சியின் கூடாரம்
4 Sep 2026 : என் பசியும், என் தாகமும் மேலும் வாசிக்க
31 Aug 2026 : அப்பிரயோஜனமான ஊழியன் மேலும் வாசிக்க
26 Aug 2026 : என்னை நடத்தியவர் யார்? நடத்துகிறவர் யார்? மேலும் வாசிக்க
"...மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க..." (எபிரேயர் 12:1)

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த வரலாற்றையும், கடந்த பல நூற்றாண்டுகளாகக் கிறிஸ்துவை வார்த்தையால் அறிவித்து, வாழ்வில் நிரூபித்த தேவ மனிதர்களையபற்றிய வரலாற்றையும் அறியாதது வருந்தத்தக்கது. சபை வரலாற்றை யாரும் நமக்குக் கற்பிக்கவுமில்லை, கற்றுக்கொள்ள நாம் முயலவுமில்லை. மாநாடுகளுக்கும், கூட்டங்களுக்கும், சடங்குகளுக்கும், அமைப்புமுறைகளுக்கும் கொடுத்த அதே அளவுக்கு சபை வரலாற்றை அறிவதற்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால், நம் ஆவிக்குரிய கிட்டப்பார்வையைத் தவிர்த்திருக்கலாம். சபை வரலாற்றுக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நினைப்பது தவறு. சபை வரலாற்றிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது. நம் கிறிஸ்தவப் பயணத்தில் சபை வரலாறு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சொல்லப்போனால், நம் கிறிஸ்தவப் பயணம் சபை வரலாற்றின் ஒரு தொடர்ச்சி.   

கடந்த இருபத்தோரு நூற்றாண்டுகளில், தேவனுடைய ஊழியர்கள் இலட்சக்கணக்கானோர் கர்த்தருக்காகவும், அவருடைய அரசை விரிவாக்குவதற்காகவும், அவருடைய சபையைக் கட்டுவதற்காகவும், அவருடைய நற்செய்தியை அறிவிப்பதற்காகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். நற்செய்தி மிகவும் விலை உயர்ந்தது; ஆயினும், அது இலவசமாக அறிவிக்கப்படுவதால், அதன் உண்மையான மதிப்பை மக்கள் பெரும்பாலும் முழுமையாக உணர்வதில்லை, அங்கீகரிப்பதில்லை, பாராட்டுவதில்லை. இன்று நாம் அனுபவிக்கின்ற செளகரியமும், சமாதானமும், மிக முக்கியமாக, தேவ காரியங்களைப்பற்றிய விசுவாசமும், அறிவும் சபைப் பிதாக்கள் பெரிய விலை கொடுத்து வாங்கி நமக்கு வைத்துவிட்டுப்போயிருக்கும்  சொத்துக்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க அவர்கள் செய்த தியாகங்கள் மகத்தானவை. அவர்களுடைய வரலாறு இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன.

சபை வரலாறு என்பது நம் குடும்ப வரலாறாகும். ஏனென்றால், நாம் பரலோகத்திலும், பூமியிலும் இருக்கிற தேவனுடைய முழுக்குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் (எபேசியர் 3:14). ஆகையால், சபை வரலாற்றைக் கற்றுக்கொள்வது என்பது நம் குடும்பத்தின் நிழற்படங்கள் அடங்கிய செருகேட்டைப் பார்த்து, நம் குடும்பப் பரம்பரையை ஆராய்வதுபோன்றதாகும்.   

வரப்போகிற நாட்களில், விசுவாசத்தின் முன்னோடிகள் சிலரைப்பற்றியும், இந்தியாவுக்கு, குறிப்பாக, தமிழ்நாட்டுக்கு நற்செய்தி எப்படி வந்தது என்றும் பார்ப்போம்.