
எங்கள் நோக்கமும், நோக்கும்
"நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்." (கொலோசெயர் 3:4)சாட்சி: நாங்கள் நம் பிதாவாகிய தேவனுடைய நித்தியத் திட்டத்தையும், நோக்கத்தையும்பற்றிய நற்செய்தியை அறிவிக்க வாஞ்சிக்கின்றோம். நம் பிதாவானவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இப்பிரபஞ்சத்தில் வெளியரங்கமாக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளார், திட்டமிட்டுள்ளார். இந்த நோக்கத்திற்காகவே, இந்த நோக்கத்தின்படியே, அவருடைய குமாரனுடைய சாயலுக்கு, அதாவது குணத்துக்கு, ஒத்தசாயலாக மாறுவதற்கு அவர் நம்மை அழைத்து, நீதிப்படுத்தியிருக்கிறார்; இப்போது பரிசுத்தமாக்கிகொண்டுமிருக்கிறார். நாம் அவரை அறிய வேண்டும் என்பதற்காகவும், அவருடைய தெய்வீக சுபாவத்தில் பங்குபெற வேண்டும் என்பதற்காகவும் அவர், கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்த மீட்பின் வேலையின்மூலம், தம் தெய்வீக ஜீவனை நமக்குத் தந்திருக்கிறார். தேவன் இந்தக் கிறிஸ்துவை நம்முடைய எல்லாத் தேவைக்கும் போதுமான, விவரிக்கமுடியாத, அற்புதமான ஈவாக, கொடையாக, நமக்குத் தந்திருக்கிறார்.
இன்று கிறிஸ்துவை அவருடைய மைய இடத்திற்கும், முதன்மையான இடத்திற்கும் கொண்டுவருவதற்காகப் பரிசுத்த ஆவியானவர் தேவ மக்களுடைய வாழ்க்கையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் நாம் அவருடைய உயிர்த்தெழுந்த ஜீவனால் வாழுமாறு, சிலுவையின்வழியாக நம்மை உயிர்தெழுதலுக்குள் கொண்டுவருகிறார். இதுவே இந்த நோக்கத்தை அடைவதற்கான வழியாகும்.

கூடாரம்:
இந்த உலகம் கிறிஸ்துவை அறிய வேண்டும் என்பதற்காகவும், அவர்பால் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவும், இறுதியில் ஆட்டுக்குட்டியானவர் பட்ட பாடுகளின் பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த சாட்சியை நிரூபிக்க வேண்டும் என்பது எங்கள் ஆவல்.

ஊழியங்கள்
தேவமக்கள் கிறிஸ்துவுடன் நெருக்கமாக நடப்பதற்குத் தேவையான வளங்கள் இங்கு உள்ளன. 'சாட்சியின் கூடாரத்தில்,' தேவமக்களின் விசுவாசத்தை வளமாக்கவும், கிறிஸ்துவை அறிகிற அறிவை ஆழமாக்கவும் தேவையான வளங்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உங்கள் ஆவிக்குரிய பயணத்தை உற்சாகப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்ட கட்டுரைகளையும், செய்திகளையும் உன்னிப்பாய் ஆராய்ந்துபாருங்கள்.
சபை வரலாறு: கிறிஸ்தவ விசுவாசத்தின் வளமான வரலாற்றை ஆராயுங்கள். பரிசுத்தவான்கள்மூலமாகவும், இரத்தசாட்சிகள்மூலமாகவும் தேவன் தம் நித்தியத் திட்டத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். சபை வரலாற்றின் கடந்தகாலத்தின் பாடங்களைப் புரிந்துகொண்டு, இன்றைய காலகட்டத்தில் விசுவாசத்தில் நிலைத்துநிற்பது எப்படி என்பதைக் கண்டறியுங்கள்.
விசுவாசத்தின் முன்னோடிகள்: கிறிஸ்துவை அறிவிக்கவும், அவரை வெளிப்படுத்தவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்த முன்னோடிகளின் (மிஷனரிகளின்) வாழ்க்கையும் பணிவிடையும் நிச்சசயமாக உங்களைத் தூண்டியெழுப்பும். முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறு 'ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்க்கையின்" வல்லமையை நமக்குப் பறைசாற்றுகின்றன.
வேத ஆய்வு: தேவனுடைய உயிருள்ள வார்த்தையை ஆழமாக ஆராயுங்கள். நீங்கள் அடிப்படைச் சத்தியங்களைத் தேடுகிறவராக இருந்தாலும் சரி, வேதாகமத்தின் ஆழமான சத்தியங்களை நாடுகிறவராக இருந்தாலும் சரி, இந்த வளங்கள் உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்கும்.
பாடல்கள்: கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் இந்தப் பாடல்களின்மூலம் உங்கள் இதயத்தைத் தேவனைநோக்கி உயர்த்துங்கள். இந்தப் பாடல்கள் தேவனுக்காக வாழும் வாழ்க்கையின் சாட்சியை எதிரொலிக்கும்.
இந்த வலையொளியில் உள்ள ஒவ்வொரு பகுதியும் நம் கண்களையும், இருதயத்தையும் நம் விசுவாசத்தைத் தொடக்கி நிறைவாக்குகிற இயேசுவின்மேல் நிலைநிறுத்த உதவும் கருவியாகும். நீங்கள் கிருபையிலும், சத்தியத்திலும் வளர இவை உங்களுக்கு வழிகாட்டும்.

At Tent of Testimony
we provide a wealth of resources, including sermons, articles, and blogs, to inspire and equip believers. These materials are designed to deepen your understanding of Christ, strengthen your faith, and encourage a life that declares and demonstrates His truth.

