By மெர்லின் இராஜேந்திரம்
மனிதனுக்கு எத்தனை எதிர்பார்ப்புகள்! எத்தனை நம்பிக்கைகள்! எத்தனை கற்பனைகள்! எத்தனை கனவுகள்! எத்தனை ஊகங்கள்! எத்தனை அனுமானங்கள்!
ஒரேவொரு நம்பிக்கை, ஒரேவோர் எதிர்பார்ப்பு - ஆண்டவராகிய இயேசுவின் வருகை.
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகின்றன; நம்பிக்கைகள் நழுவுகின்றன; கற்பனைகள் கானலாகின்றன; கனவுகள் கலைகின்றன; ஊகங்கள் தவறுகின்றன; அனுமானங்கள் அழிகின்றன.
வண்ணத்துப்பூச்சியைப் பார்த்து உணர்வடைகிறேன்; அதன் உருமாற்றத்தை உன்னிப்பாகக் கவனித்துத் தெளிவடைகிறேன். கம்பளிப்புழுவுக்கு மகிமை உண்டு! அது கூட்டுப்புழுவாகி, கடைசியில் வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறது. இதுவே அதன் மகிமை! இதுவே இயற்கையின் உத்தரவாதம்! கூட்டுப்புழு கூட்டிலிருந்து வண்ணத்துப்பூச்சியாக வெளிவராமல் ஒரு சுண்டெலியாக அல்லது ஒரு தவளையாக அல்லது ஒரு மொச்சைக்கொட்டையாக வெளிவந்தால் அது விநோதமாக இருக்கும்.
தேவன் சொல்லாத வாக்குறுதிகளை அவர் சொன்னதாக நினைப்பதும், அந்தக் கற்பனையான வாக்குறுதிகள் நிறைவேற வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் மதியீனம்.
தான் எழுதிய புத்தகம் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிட வேண்டும் என்று எழுத்தாளன் எதிர்பார்க்கிறான். சபையில் எண்ணிக்கை வருடாவருடம் இருமடங்காகப் பெருக வேண்டும் என்று ஊழியக்காரர் எதிர்பார்க்கிறார். பிள்ளைகள், பெற்றோர், கணவன், மனைவி, உடன்பிறந்தவர், உற்றார் உறவினர், நண்பர்கள், சபை, ஊழியக்காரர், விசுவாசிகள், படிப்பு, வேலை, திருமணம், உடல்நலம், வசதிகள், வாய்ப்புகள் எதிர்காலம் என எல்லாரையும், எல்லாவற்றையும்குறித்த எதிர்பார்ப்பு எல்லாரிடமும் இருக்கிறது.
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகும்! நம்பிக்கைகள் நழுவிப்போகும்! கனவுகள் கலைந்துபோகும்! ஊகங்கள் உருமாறும்! அனுமானங்கள் அவமாய்ப்போகும்! எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், கனவுகள், கற்பனைகள், ஊகங்கள், அனுமானங்கள் ஆகியவைகளின் எச்சங்கள்கூட எரிந்து சாம்பலாகிவிடும்.
ஆராதனைக்குப் போக முடியாது; போனாலும், விடுதலையோடு பாடவோ, ஆராதிக்கவோ முடியாது; என்ன காரணம்? தேவன்மேல் கோபம்! "மற்றவர்களுக்கு அவர் தாராளமாகக் கொடுக்கிறார். எனக்குக் கஞ்சத்தனமாகக் கொடுக்கிறார். அவர் மற்றவர்களைப் பொறுமையாக நடத்துகிறார். என்னைக் கடுமையாக நடத்துகிறார்," என்ற கோபம். அவர் நம்முடன் செய்திருந்த உடன்படிக்கையை மீறிவிட்டார் என்பதுபோலவும், நம்மைக் கைவிட்டுவிட்டார் என்பதுபோலவும், தம் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போய்விட்டார் என்பதுபோலவும் நினைக்கிறோம்.
ஒரு கேள்வி? எழுதப்பட்ட பத்திரம் ஏதாவது நம்மிடம் இருக்கிறதா? அவர் ஏதாவது வாக்குறுதி செய்தாரா? அனுமானம், ஊகம், தற்புனைவு, எதிர்பார்ப்பு, கற்பனை என்ற பல பூச்சிகள் நம்மைக் கடித்துக் குதறுகின்றன. நம் உடனடித் தேவை பூச்சிக்கொல்லி மருந்து.
கணினிக்குள் நுழையும் கிருமியைச் சரியான நேரத்தில் முற்றிலும் கொன்று அழிக்கவில்லையென்றால் கணினி செயலிழந்துவிடும், செல்லாக்காசாகிவிடும். மனிதனுடைய உடலுக்குள் நுழையும் கிருமிகளைக் கொல்லவில்லையென்றால், மனிதன் மரித்துவிடுவான். அதுபோல, மனதுக்குள் இருக்கும் கிருமிகளையும் கொல்லவேண்டும். பெரும்பாலானவர்களின் மனதுக்குள் பல பூச்சிகள் குடிகொண்டிருக்கின்றன,
பூமிக்குரிய சில நன்மைகளை விரும்புவதில், எதிர்பார்ப்பதில், எந்தத் தவறும் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. ஆனால், “பெற வேண்டியது என் உரிமை, தர வேண்டியது அவருடைய கடமை,” என்ற நியாயமற்ற எதிர்பார்ப்பில்தான் பிரச்சினை இருக்கிறது. நியாயமற்ற எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கைகளையும், கனவுகளையும், கற்பனைகளையும், ஆசைகளையும் நாம் வளர்த்துக்கொள்கிறோம். தவறான நம்பிக்கைகளையும், தனிப்பட்ட கனவுகளையும் ஆசையாய்ப் பின்பற்றி, நாளடைவில் அவைகளை நாம் வழிபட ஆரம்பித்துவிடுகிறோம். காலப்போக்கில் மிக எளிதில் நாம் வழிவிலகிச் சென்று விடுகிறோம். பாதை மாறுகிறது, பயணம் மாறுகிறது, இலக்கு மாறுகிறது. ஆரம்பத்தில், ஒரு நன்மையின்மேல் அப்பாவித்தனமான ஆசை இருந்தது. நாளடைவில், அந்த நன்மையின்மேல் உள்ள நப்பாசை நம்மை ஆட்டிப்படைக்க, அதுவே நம் "தேவன்" ஆகிவிடுகிறது. அந்த நன்மை கிடைக்கத் தவறினால் அல்லது தாமதமானால், அந்த நன்மையைப்பற்றிய நம் மதிப்பு கூடுகிறதேதவிர குறைவதில்லை. அந்த நன்மை கிடைத்துவிட்டதுபோலவும், அதை நாம் அனுபவிப்பதுபோலவும், அதில் திருப்தியடைவதுபோலவும் நாம் அடிக்கடி கற்பனைசெய்ய ஆரம்பித்துவிடுகிறோம். அதில் ஓர் அலாதி இன்பம்.
மனிதன் தன் எதிர்பார்ப்புகளையும், கற்பனைகளையும், கனவுகளையும், நம்பிக்கைகளையும் ஏற்கெனவே அடைந்துவிட்டதாக நேர்மறையாகச் சிந்திக்குமாறு நேர்மறை-சிந்தனைக் குருக்கள் கருத்தரங்குகளில் கவர்ச்சியான கோஷங்களை எழுப்புகிறார்கள். இதற்கு ஒரு கூட்டம் மக்கள் அணிதிரள்கிறார்கள். "எண்ணமே வாழ்வு" என்பது இவர்களுடைய கோஷம். இப்படிப் பிரசங்கிக்கும் பிரசங்கிமார்களுக்கும் பஞ்சமில்லை. "வீடு கிடைத்துவிட்டதாக நம்புங்கள். கார் கிடைத்துவிட்டதாக நம்புங்கள். வேலை கிடைத்துவிட்டதாக நம்புங்கள், திருமணம் ஆகிவிட்டதாக நம்புங்கள்," என நம்பிக்கை என்றால் என்ன, விசுவாசம் என்றால் என்னவென்பதை வரையறுக்காமலே, பிரசங்கிகள் மணிக்கணக்கில் பிரசங்கிக்கிறார்கள். இது மக்களுடைய காதில் தேன் பாய்வதுபோல் இருக்கும். எதை நம்ப வேண்டும், எதை விசுவாசிக்க வேண்டும் என்பதைப்பற்றிக் கவலைப்படுவதேயில்லை.
"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்" என்று சாதகமான ஒரு வசனத்தை உருவி பெரிய பிரசங்கம் செய்வார்கள். இதைக் கேட்பவர்களும் தங்கள் இருதயம் ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கும் என்று நினைப்பார்கள். வேதாகமம் சொல்லும் நம்பிக்கையையும், தங்கள் சொந்த நம்பிக்கையையும் இவர்கள் குழப்பிக்கொள்வார்கள்.
சில நேரங்களில் அது கைகூடிவரலாம். எதிர்பார்த்தது நடந்தால், அதைப்பற்றி சபையில் சாட்சி சொல்வார்கள். எதிர்பார்த்தது, நம்பியது, நடக்கவில்லையென்றால் ஏமாந்துபோய், மூலையில் முடங்கிப்போய், “தேவன் ஏன் அதைத் தரவில்லை?” என்று தலையைப் பிய்த்துக்கொள்வார்கள்.
தேவனுடைய நன்மைத்தனத்தை மனிதன் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அது அவனுக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது. எனவேதான், தெளிந்த மனம் அவசியம் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது (1 பேதுரு 1:13). நம் எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கைகளையும், கற்பனைகளையும், கனவுகளையும் நினைக்கும்போது குப்பைக்கூளங்களின் குவியல்தான் கண்முன் வருகிறது. பழைய சாமான்கள் விற்கும் கடையில் இருக்கும் எந்த மதிப்பும் இல்லாத, தரமற்ற பொருட்கள்தான் கண்முன் விரிகின்றன.
வேதாகமம் நம்பிக்கையைப்பற்றிப் பேசும்போது, "ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்" (1 பேதுரு 1:13). என்று கூறுகிறது. நம் மிகப் பெரிய நம்பிக்கைகள் அன்றாட வாழ்க்கையின் நிச்சயமற்ற காரியங்களில் நிலைத்திருந்தால், தேவன் ஏனோதானோவென்று மனம்போல் செயல்படுபவராகத் தோன்றுவார். நம்மை ஆசீர்வதிப்பதா அல்லது சபிப்பதா அல்லது அலட்சியப்படுத்துவதா என்று அவரால் தீர்மானிக்க முடியவில்லை என்றுகூட நாம் நினைக்கக்கூடும். ஒரு நாள் நம் வேலை பறிபோகிறது. இன்னொரு நாள் இன்னொரு நல்ல வேலை கிடைக்கிறது. ஒருநாள் நல்ல சுகமாக இருக்கிறோம். இன்னொரு நாள் நோயில் படுத்துவிடுகிறோம். முதல் குழந்தை நல்ல சுகத்தோடு இருக்கிறது. இரண்டாவது குழந்தையை எப்போதும் மருத்துவரிடம் கொண்டுபோகவேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் நம்பிக்கை நழுவிக்கொண்டே போகிறது.
ஆண்டவராகிய இயேசு மீண்டும் வரும்போது, நமக்குக் கிடைக்கப்போகிற கிருபையின்மேல் நாம் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று அப்போஸ்தலன் கூறுகிறார். இது கடந்தகாலத்தில் நாம் அவரை முதன்முதலாக விசுவாசித்தபோது நமக்குக் கிடைத்த கிருபை இல்லை. இது எதிர்காலத்தில் நமக்கு கிடைக்கைப்போகிற கிருபை. இயேசுவின் வருகை நாம் அனுபவிக்கப்போகிற கிருபை. இது நம் வாழ்க்கையில் இதுவரை அனுபவித்த எல்லாக் கிருபைகளின் ஒட்டுமொத்தமாகும். சூரிய கிரகணத்தின்போது சந்திரன் சூரியனை மறைப்பதுபோல், ஆண்டவராகிய இயேசுவின் வருகையின்போது நாம் பெறப்போகிற கிருபை நாம் இதுவரை அனுபவித்த எல்லாக் கிருபையையும் மறைத்துவிடும்.
தற்போதைய என் சூழ்நிலை எப்படி இருந்தாலும் அது பொருட்டல்ல. எதிர்காலக் கிருபையை நோக்கிச் செல்கிறேன். அதற்கு நேராக என் முகத்தைத் திருப்பிவிட்டேன். அதை மனதில் வைத்து எல்லாவற்றையும் தீர்மானிக்கிறேன். அதைச் சிந்திக்கிறேன். அப்படிச் செய்யும்போது, என் புத்தி தெளிவடைகிறது. என் மனம் புதிதாகிறது.
ஒரு பெரிய விருந்து! அதில் 21 வகை உணவுகள். ஒரு விருந்தில் 21 வகையான உணவுகள் இருந்தால் எப்படிச் சாப்பிட முடியும்? ஒன்றிரண்டு வகைகளைச் சாப்பிட்டதுமே வயிறு நிரம்பிவிடுமே! சாப்பிட உட்கார்ந்திருக்கிறோம். பணியாள் வந்து, "குடிக்க என்ன வேண்டும்?" என்று கேட்கிறார். சொல்லுகிறோம். சூப்பு கொண்டுவருகிறார். குடிக்கிறோம். வயிறு கொஞ்சம் நிரம்புகிறது. பணியாள் திரும்ப வந்து, “என்ன வேண்டும்?” என்று கேட்கிறார். ரொட்டி கொண்டு வருகிறார். சாப்பிடுகிறோம். பாதி வயிறு நிரம்பிவிடுகிறது. மீண்டும் வந்து, "உங்கள் பசியை அதிகரிக்க ஏதாவது கொண்டு வரட்டுமா?" என்று வினவுகிறார். வயிறு ஏற்கெனவே நிரம்பிவிட்டது. "வேண்டாம்" என்கிறோம்.. இதுதான் 21 வகையான உணவுகள் உள்ள விருந்தின் குணம். ஒன்றைச் சாப்பிட்டதும், பசியும், அடுத்ததின் அளவும், அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் படிப்படியாகக் குறைந்துவிடும்.
ஆனால், நல்ல விருந்து வித்தியாசமானது. ஒன்றைச் சாப்பிட்டதும், அது “அடுத்தது எப்போது வரும்,” என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கும். அது நம் பசியைத் தூண்டும். முதல் ஒன்றிண்டு வகை உணவிலே நம் வயிற்றை நிரப்பிவிடாது; பாதியில் நிறுத்தாது. கொஞ்சம் இனிப்பு, கொஞ்சம் உப்பு, கொஞ்சம் காரம், கொஞ்சம் துவர்ப்பு, கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் சூடு, கொஞ்சம் குளிர், கொஞ்சம் மிதமான சூடு, கொஞ்சம் மென்மை, கொஞ்சம் கடினம் என உணவு வகை அதிகரித்துக்கொண்டே போகும். கடைசியில் முக்கியமான உணவு வரும். அதைப் பார்க்கும்போது நாக்கில் நீர் ஊரும், கை துருதுருவென்று வரும், கண்ணைக் கவரும். “ஓ! இதற்காகத்தான் காத்திருந்தேன்!” என்று இருதயம் சொல்லும்.
கிருபையும் இதேபாணியில்தான் செயல்படுகிறது என்று நான் நினைக்கிறன். கிருபை கடல் அலைகளைப்போல் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. ஒரு கிருபையை அனுபவித்தவுடன், அடுத்த கிருபை எப்போது வரும் என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும் கூடுகிறது. தேவன் அடுத்ததாக என்ன கிருபை தருவார் என்ற ஆவல் அதிகரிக்கிறது.
ஏமாற்றம் தரும் எதிர்பார்ப்புகளும், கலைந்த கனவுகளும் கற்பனைகளும், நழுவிய நம்பிக்கைகளும், அதமான அனுமானங்களும் அடுத்து வரும் கிருபையை அனுபவிப்பதற்கான வழிமுறையே என்று நாம் உறுதியாக நம்புகிறேன்.
இந்தச் செயல்முறை, ஆண்டவராகிய இயேசு வாக்களித்ததுபோல், அவர் வெளிப்படும்வரை தொடரும். இதுவே கிறிஸ்தவ அனுபவத்தின் முழுமொத்த கிருபை. மகிமையில் வெளிப்படுவோம்.
எத்தனை வயதானால் என்ன? என்ன நிலைமையில் இருந்தால் என்ன? வாழ்க்கையில் எத்தனை கிருபைகளைச் சாப்பிட்டிருந்தால் என்ன? இயேசு கிறிஸ்து திரும்பி வரும்போதுதான் மிகச் சிறந்த கிருபை கிடைக்கும். அதுவே கடைசி கிருபை. அந்தக் கிருபையைச் சுவைப்பதற்காகக் காத்திருக்கிறோம்.
வாக்குறுதி வழியில் இருக்கிறது.
அதுவரை மற்ற கிருபைகைளைச் சுவைக்கிறேன்.