Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

ஆராதனை

By மெர்லின் இராஜேந்திரம்

மனிதன், ஆராதனையின்மூலம், தேவனோடு தன் உறவைத் தொடங்குகிறான். ஆராதனைதான் தேவனுடனான உறவின் தொடக்கம், ஐக்கியத்தின் ஆரம்பம்.

இன்றைய ஆராதனை

இன்று ஆராதனை என்ற பெயரில் பல காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆலயம் அல்லது கோயில் அல்லது சபை என்றழைக்கப்படும் சர்ச் இருக்கிறது; சுரூபங்களுக்கு மாலைகள் போடுவதும், மெழுகுதிரிகள் கொளுத்துவதும், தூபங்காட்டுவதும், இசைக்கருவிகள் வாசிப்பதும், மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதும், ஒலி பெருக்கிகளின் ஓசையும், நடனம் ஆடுவதும், பறைகளை வேகமாக அடிப்பதும், பாடல்களுக்கேற்ப கைகைளை உயர்த்துவமும், அசைப்பதும், 'ஆராதிக்கிறோம்' 'தொழுகிறோம்' என்று சொல்வதும், 'ஸ்தோத்திரம்' 'அல்லேலூயா' என்று ஆர்ப்பரிப்பதும், முழங்கால்படியிடுவதும், அயல் மொழிகளில் உரத்த சத்தமாயப் பேசுவதும், குதிப்பதும், ஆர்ப்பரிப்பதும், ஆரவாரம் செய்வதும்போன்ற பல காரியங்கள் இன்று ஆராதனை என்று கருதப்படுகிறது. முதலாவது ஒரு கேள்வி: இது ஆராதனையா? அடுத்த கேள்வி: இதுதான் ஆராதனையா?

கத்தோலிக்கக் கோவில்களையும், புரொட்டஸ்டண்ட் ஆலயங்களையும் பார்த்துப் பிரமிக்கிறோம். ஓ! எத்தனை பிரமாண்டமான கட்டிடங்கள்! உயர்ந்த ஊசிக்கோபுரங்கள்! ஓங்கி ஒலிக்கும் மணிகள்! உள்ளே சிவப்புக் கம்பள விரிப்புகள்! தொங்கிக்கொண்டிருக்கும் குழல் விளக்குகள்! கண்ணைப் பரிக்கும் அலங்காரங்கள்! வண்ண உடைகள்! விதவிதமான சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள்! இவைகளைப் பார்க்கும்போது மலைத்துப்போகிறோம். பெந்தெகொஸ்தே பாடல்களைக் கேட்டு பரவசப்படுகிறோம்? CSI, Methodists, Baptists, Presbyterians, Adventists போன்றவர்களின் வழிபாட்டு முறைமைகளை யார்தான் விரும்பமாட்டார்? 'வழிபாடு' அவ்வளவு நேர்த்தியாக நடக்கிறது.

ஆராதனை – வரையறை

ஆனால், உண்மையாகவே ஆராதனை என்றால் என்ன? "தேவனுக்கே என் வாழ்க்கையில் முதல் இடம், மைய இடம், மிக உயர்ந்த இடம், மிக மேன்மையான இடம்...அவரே என் வாழ்கையின் எல்லாவற்றுக்கும் ஆதிகாரணர் என்பதை நான் அங்கீகரிக்கிறேன், ஆமோதிக்கிறேன், உணர்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன். அவரே என்னை ஆள்கிற ஆண்டவர் என்பதை நான் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறேன். அவருக்கு மட்டுமே என் வாழ்வில் எல்லா அதிகாரம் உண்டு. நான் அவருடைய அரசாங்கத்தின் குடிமகன். நான் அவருடைய ஆட்சியின்கீழ இருக்கிறேன். என் ஆள்தத்துவத்தின் எல்லாப் பகுதிகளிலும், என் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும், எந்த நிலைமையிலும், எந்தச் சூழ்நிலையிலும் அவருக்கு என்மேல் முழு அதிகாரமும், உரிமையும் உண்டு; அவருக்கு மட்டுமே உண்டு. எல்லா நிலைமைகளிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் நான் முற்றிலும் அவருக்கு மட்டுமே கீழ்ப்படிகிறேன். என்னை நான் அவருக்கு ஒப்புக்கொடுக்கிறேன்," என்பதுதான் ஆராதனையின் ஆரம்பம், தொடக்கம். இதுதான் தேவனை ஆராதிக்கிறவனின் ஆவியாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஆராதனை ஓர் உறவு. இது வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவர்களாகிய நாம் செய்கிற ஒரு பயிற்சியோ அல்லது மதச்சடங்கோ அல்ல. மாணவர்கள் பள்ளிகளில் வாராந்தோறும் அல்லது தினந்தோறும் செய்கிற உடற்பயிற்சியைப்போன்று, தேவனுக்கு நாம் செய்யும் ஆராதனை வாராத்துக்கு ஒருமுறை செய்கிற ஒரு பயிற்சி அல்ல.

ஆராதனை என்பது பிரத்தியேகமான முறைகளில், பிரத்தியேகமான வழிகளில், பிரத்தியேகமான இடங்களில், பிரத்தியேகமான தொனியில், பிரத்தியேகமான நாட்களில், பிரத்தியேகமான உடையணிந்து நாம் செய்கிற ஒரு குறிப்பிட்ட காரியம் அல்ல. ஆராதனை என்பது நாம் வாழும்முறை; அது நம் வாழ்க்கைமுறை; நம் வாழ்கையின் போக்கு; நம் வாழ்கையின் அணுகுமுறை; நம் வாழ்கையில் நம் மனப்பாங்கு; அது நம் உள்ளான மனிதனின் மனப்பாங்கு, மனப்போக்கு. ஆராதனை நம் வாழ்கையில் நாம் தேவனுக்குக் கொடுத்திருக்கும் இடத்தைக் குறிக்கின்றது. தேவனுக்கு என் வாழ்கையில் எந்த இடத்தைக் கொடுத்திருக்கிறேன் என்பதுதான் ஆராதனை. தேவனுக்கு என் வாழ்க்கையில் மைய இடமும், முதல் இடமும் கொடுத்திருக்கிறேனா என்பதுதான் ஆராதனை. இந்த ஆராதனை நம் முழு உணர்விலும் கலந்த உயிரோடு இணைந்தது. இது உதட்டளவில், ஏட்டளவில், பேச்சளவில் உள்ள ஒன்றல்ல, இது உள்ளத்தில் உள்ள ஒன்றாகும். இதுதான் ஆராதனை.

சாத்தானின் விருப்பம்

சாத்தான்! அவன் கள்ளன், திருடன், கொலைகாரன், ஏமாற்றுக்காரன், வஞ்சகன், மோசடிப்பேர்வழி, போலி. அவன் தேவனுக்குரிய ஆராதனையைத் திருடிக்கொள்ள விரும்புகிறான். அந்த ஆராதனைக்காக அவன் ஏங்குகிறான். அவன் தேவனுடைய இடத்தில் இருந்துகொண்டு, தேவனுக்குச் சேரவேண்டிய எல்லாவற்றையும் தனதாக்கிக்கொள்ள விரும்புகிறான். எனவே, எல்லாரும் தன்னை ஆராதிக்க வேண்டும் என்று அவன் ஏங்குகிறான். ஆராதனையே அவன் இலக்கு என்று சொன்னால் அது மிகையாகாது. அதுதான் அவன் குறிக்கோள். ஆதியிலேயே அவனுடைய அந்த எண்ணம் மிகத் தெளிவாகத் தெரிந்தது. *"நான் வானத்துக்கு ஏறுவேன். தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன்," * என்று அவன் தன் இருதயத்தில் சொன்னான் (ஏசாயா 14:13). அவனுடைய உண்மையான நிறம் இங்கு தெரிகிறது. தேவனுக்குக் கொடுக்கப்படுகிற ஆராதனை தனக்கு வர வேண்டும் என்று அவன் விரும்பினான். அதற்காக அவன் ஏங்கினான். அவனுடைய எண்ணம் நிறைவேறாததால் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும்.

முதல் ஆதாமுக்கு என்ன நடந்தது? தேவனுக்கும் ஆதாமுக்கும் இடையே நல்ல இணக்கமான உறவு இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் விரும்பினார்கள். ஆதாம் தேவனை ஆராதித்தானா? இன்று மக்கள் 'ஆராதனை' செய்கிற முறையில் அவன் தேவனை ஆராதிக்கவில்லை. ஆனால், மேலே சொல்லப்பட்டுள்ள வரையறையின்படி ஆதாம் நிச்சயமாகத் தேவனை ஆராதித்தான். அவனுடைய ஆராதனையின் தரம் மிகவும் உயர்ந்தது. ஏதேனில் கோயில் இல்லை, கோபுரம் இல்லை, மணி இல்லை, விளக்குகள் இல்லை, பாடல்கள் இல்லை, இசைக்கருவிகள் இல்லை, பாஸ்டர் இல்லை, ஒலிபெருக்கி இல்லை, நியான் விளக்குகள் இல்லை, ஆசாரியன் இல்லை, அங்கி இல்லை, பலிகள் இல்லை. இன்று நாம் ஆராதனைக்குப் பயன்படுத்துகிற எதுவும் அங்கு இல்லை. ஆனால், அவன் தேவனை ஆராதித்தானா இல்லையா? நிச்சயமாக ஆராதித்தான். அப்படியானால் அவன் தேவனை எப்படி ஆராதித்தான்? அவனுடைய வாழ்க்கையில் அவருக்குத்தான் முதல் இடம் இருந்தது. அவனுக்கு அவர்தான் எல்லாமுமாக இருந்தார். ஆனால், தேவனுக்குரிய ஆராதனையை சாத்தான் தந்திரமாகத் தனதாக்கிக்கொண்டான். ஆதாமின் வாழ்க்கையில் அவனுக்கு எல்லாமுமாக இருந்த தேவனை விரட்டிவிட்டு அவருடைய இடத்தை எடுத்துக்கொள்ள சாத்தான் வெறியோடு அலைந்தான். ஒருவேளை தேவனை விரட்டமுடியாவிட்டால் அதற்கு மாற்று வழி என்ன? ஆதாமை அவரிடமிருந்து பிரித்துவிடுவதற்குத் திட்டம் தீட்டினான். அதைத்தான் அவன் செய்தான். ஆதாம் தேவன்மேல் பயபக்தியாக இருந்தான். தன் வாழ்க்கையின் ஆதிகாரணர் அவர்தான் என்பதை அவன் மனப்பூர்வமாக அறிந்திருந்தான், அதை அவன் மனதார ஏற்றுக்கொண்டிருந்தான். அவன் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தான். அவனுடைய வாழ்க்கையில் அவருக்குத்தான் முதல் இடமும், மைய இடமும் இருந்தது. ஆனால் சாத்தான் ஆதாமை வஞ்சித்தான். அவனுடைய வாழ்க்கையிலிருந்து தேவனை அகற்றிவிட்டு, அவன் தேவனுக்குக் கொடுத்த பயபக்தி, கீழ்ப்படிதல், அங்கீகாரம் எல்லாவற்றையும் சாத்தான் பறித்துக்கொண்டான். அவன் மனிதனிடமிருந்து ஆராதனையை அபகரித்துக்கொண்டதால் இப்பிரபஞ்சத்தின் தேவனாக மாறினான்.

கடைசி ஆதாமும், இரண்டாம் மனிதனுமாகிய இயேசு கிறிஸ்து தாம் இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தம்மை வெளியரங்கமாகக் காண்பித்தபோது எதிரியாகிய சாத்தான் என்ன செய்தான்? ஆராதனையை இயேசுவிடமிருந்து பறிக்க முயன்றான். “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்துக்கொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்,” (மத்தேயு 4:9) என்று நயவஞ்சகமாகப் பேசினான். எதிரியாகிய சாத்தான் இந்த ஆராதனையைப் பெறுவதில் எவ்வளவு குறியாக இருக்கிறான் பாருங்கள். இதே எண்ணத்தை ஏதேனில் முதல் ஆதாமிடம் பிரதிபலித்தான். அதில் அவன் வெற்றியும் பெற்றான். எனவே, முதல் ஆதாமை வஞ்சித்ததுபோல, கடைசி ஆதாமையும் வஞ்சித்துவிட்டால் தேவன் விரும்புகிற புதிய இனம் உருவாகாது இல்லையா? தேவனுடைய நோக்கம் தோற்றுப்போகுமே! அப்போது சாத்தான் வெற்றிபெற்றுவிடுவானல்வா? இதற்காக அவன் எவ்வளவு தீவிரமாக வேலைசெய்கிறான் பாருங்கள்.

உண்மையான ஆராதனை

இங்குதான் நமக்குப் பரலோக ஒளி தேவைப்படுகிறது. நம் சுய ஞானத்தைக்கொண்டு இதைப் புரிந்துகொள்வது கடினம். அப்படியே புரிந்துகொண்டாலும், அதை ஏற்றுக்கொள்வது அதைவிடக் கடினம். ஒருநாள் ஒரு சமாரியப் பெண் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஒரு கேள்வி கேட்டாள். “எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே (கெரிசம்) தொழுதுகொண்டுவந்தார்கள். நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே (தேவாலயம்) தொழுதுகொள்ள வேண்டும் என்கிறீர்களே. உண்மையாகவே நாம் எந்த மலையில் தொழுதுகொள்ள வேண்டும்? இந்த மலையிலா அல்லது அந்த மலையிலா?” இதுதான் அவளுடைய கேள்வி. அதற்கு இயேசு, “ஸ்திரீயே நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரம் அல்ல; எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளும் காலம் வரும்.. உண்மையாய்த் தொழுதுகொள்ளும் காலம் வரும்; அது இப்பொழுதே வந்திருக்கிறது தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்,” என்றார் (யோவான் 4:20:24).

அற்புதம்! மகா அற்புதம்! இது என்ன? இங்கு இயேசு ஒரு புதிய முறைமையை, வழியை, ஒழுங்கை, ஆராதனையை அறிமுகம்செய்கிறார். கிறிஸ்தவர்களாகிய நமக்கு சிலுவை எப்படி ஒரு பிரச்சினையாக இருக்கிறதோ, அதுபோல அதனுடன் தொடர்புடைய ஆராதனையும் ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. ஆராதனை என்பது ஒரு புறம்பான காரியம் அல்ல என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து திட்டவட்டமாகக் கூறுகிறார். ஆனால், இன்று இது ஒரு பெரிய சிக்கலாக மாறிவிட்டது. இந்தச் சிக்கலை அவிழ்ப்பது எப்படி? இதை நாம் சரிசெய்தாக வேண்டும். இல்லையென்றால் தேவனோடு நம் உறவு நேர்த்தியாக இருக்க முடியாது.

எருசலேமும் ஆராதனையும்

எருசலேம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இடம். இதில் சந்தேகமே இல்லை. அங்கு ஆலயத்தைக் கட்டுவதற்கான வரைபடத்தைத் தேவனே கொடுத்தார். அதின் எல்லா விவரங்களையும் அவர் துல்லியமாகச் சொல்லியிருந்தார். எருசலேம் கனத்துக்கும், மரியாதைக்கும் உரிய இடமாகக் கருதப்பட்டது. அங்கிருந்த ஆலயம்தான் ஆராதனை மையமாகக் கருதப்பட்டது. தேவனை ஆராதிக்கும் காரியத்தில் ஒருவேளை சமாரியர்கள் யூதர்களைப் பின்பற்றியிருக்கலாம். “அவர்களுடைய ஆலயம் மலையின்மேல் இருக்கிறது. எனவே, நாமும் மலையின்மேல் ஓர் ஆலயத்தைக் கட்டுவோம்,” என்று நினைத்து கெரிசிம் மலையில் ஆலயத்தைக் கட்டியிருக்கலாம். ஒருவேளை அதே யெஹோவா தேவனையே அவர்களும் ஆராதித்திருக்கக்கூடும். இது சாத்தியமே. எனவே, அந்தச் சமாரியப் பெண்ணின் கேள்வி என்ன? நீங்களும் நாங்களும் ஒரே தேவனையே ஆராதிக்கிறோம். நீங்கள் அந்த மலையைப்பற்றியும், அங்கிருக்கும் ஆலயத்தைப்பற்றியம் பேசுகிறீர்கள். நாங்கள் இந்த மலையைப்பற்றியும், இந்த மலையிலிருக்கும் ஆலயத்தைப்பற்றியும் பேசுகிறோம். உண்மையாகவே இந்த மலையும், ஆலயமும்தான் முக்கியமா அல்லது அங்கிருக்கும் தேவன் முக்கியமா? இதுதானே கேள்வி? எருசலேமில் இந்த ஆராதனை முறைமையை ஆரம்பித்தவர் தேவனே. அவர்தான் இதை ஆரம்பித்தார். இது மனிதனின் மனதில் தோன்றவில்லை. எனவே, தேவன்தான் இந்த ஆராதனைமுறைமையின் காரணகர்த்தர். இதைத் திட்டமிட்டவர், வெளிப்படுத்தியவர் தேவன். பிரமாண்டமான ஆலயம், பிரமிக்கத்தக்க கட்டிடம், மலைப்புண்டாக்கும் சித்திர வேலைபாடுகள், துல்லியமான வழிபாட்டு விவரங்கள், மதிப்புமிக்க ஆசாரியர்கள், அங்கிகள், வஸ்திரங்கள், உடுப்புகள், பலிகள், ஆராதனை ஒழுங்குகள், பீடங்கள், தூபங்கள், அக்கினி, ஜெபம், வேத வாசிப்பு--இப்படிப் பல காரியங்கள். மனிதனுடைய கற்பனைக்கு இடமேயில்லை. எல்லாவற்றையும், தேவனே கொடுத்ததை, இங்கு இப்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒதுக்குகிறார். அவர் அங்கு என்ன சொல்லுகிறார் என்றால், “பெண்ணே, நீ சொல்லுகிற தொழுகை, நீ பேசுகிற ஆராதனை உண்மையான ஆராதனை இல்லை. இந்த மலையிலும் அல்ல எருசலேமிலும் அல்ல...மாறாக ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும்...

அவர் சொன்னது உண்மையா இல்லையா? இது உண்மை இல்லையென்றால் வேறு எது உண்மை? வனாந்தரத்தில் ஆசரிப்புக்கூடாரத்தின் எல்லா விவரங்களையும் தேவனே மோசேக்குக் கொடுத்திருந்தார். அந்தக் கூடாரம்தான் தேவனுடைய இலக்கா? நோக்கமா? அது ஒரு தற்காலிகமான ஏற்பாடுதானே? நம் முற்பிதாக்கள் பலிபீடங்களைக் கட்டி தேவனை ஆராதிக்கவில்லையா? பலிகள் செலுத்தவில்லையா? அவைகளும் ஒரு தற்காலிகமான ஏற்பாடுதானே? அவைகள் அழிந்துபோகும், மாறிப்போகும். தேவன் ஒருவரே மாறாதவர். தேவன் ஒருவரே நிலைத்திருக்கிறார். ஓய்வு நாளும் ஒரு திருஷ்டாந்தமே (எபி. 4:11). அந்த ஆசாரிய முறைமையினால் பூரணப்படுதல் உண்டாகாது (எபி. 7:11). ஆசாரியத்துவம் மாற்றப்பட்டுவிட்டது.

மாம்சசம்பந்தமானவைகள் அழிந்துபோகும். இவரே என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறார் (எபி. 7:27). பூமிக்குரியவைகளெல்லாம் மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்டவை. அவைகள் கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்டவைகள் அல்ல. அது ஒரு நிழல். நிழல் மறைந்துபோகும், மறைந்து போகவேண்டும். அது ஒரு திருஷ்டாந்தம். அது மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நிழலான கூடாரம். அது பரலோகத்தில் கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்தின் ஓர் அடையாளம். எருசலேமில் நடந்த ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருந்தது (எபி 8:5). இது முந்தினது. முந்தினதைப் பழமையாக்குகிறார். பழைமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது (எபி. 7:13). அங்கு ஆராதனைக்கேற்ற முறைகளும் பூமிக்குரிய காரியங்களும் இருந்தன. இங்கு ஆராதனை முறைமைகள் இருக்கின்றன (எ.பி. 9:1). அந்தக் கூடாரம் இந்தக் காலத்திற்கு உதவுகிற ஒப்பனை (எபி. 9:9). அங்கு செலுத்தப்படுகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தாது (எபி. 9:9). இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரை நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல (எபி. 9:10). அது ஒரு சாயல், அது ஒரு மாதிரி. அந்தக் கூடாரம் ஒரு ஒப்பனை. இன்று நமக்கு விசேஷித்த உடன்படிக்கையும், விசேஷித்த வாக்குத்தத்தங்களும், விசேஷித்தப் பலிகளும், விசேஷித்த ஆராதனையும் இருக்கின்றன.

இந்தக் கூடாரம் அல்லது ஆலயம் நிரந்தரமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று தேவன் ஒருபோதும் நினைக்கவில்லை. அது அவருடைய நோக்கம் அல்ல. அவர் அதை நிரந்தரமாக ஸ்தாபிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. மனிதர்களும் அதை நிரந்தரமாக்க வேண்டும், நிலைவரமானதாக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தற்காலிகமான ஏற்பாடு நிரந்தமான ஒன்றாகிவிட வேண்டும் என்ற எண்ணம் தேவனுக்கு ஒருபோதும் இருந்ததேயில்லை. இதுதான் ஆத்துமாவுக்கும் ஆவிக்கும் இடையேயுள்ள ஒரு சிறிய ஆனால் மிக முக்கியமான இடைவெளி. இங்குதான் கிறிஸ்தவர்களாகிய நாம் திசைமாறிவிட்டோம். இந்தக் கூடாரம், ஆலயம், ஆராதனை, பலிகள் ஆகியவைகளெல்லாம் பரலோகத்திலுள்ளவைகளுக்கு நிழல், அதின் மாதிரி. அவை பரலோகத்திலுள்ளவைகளைச் சிறிதளவு காண்பித்தன, வெளியாக்கின. ஆனால், தேவன் அவைகளுக்கு ஒரு காலக்கெடு வைத்திருந்தார். இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரை நடந்தேறும்படி கட்டளையிட்டிருந்தார் (எபி. 9:10). பானங்கள், பண்டிகைகள், மாதப்பிறப்புகள், ஓய்வுநாட்கள், ஆகியவைகளெல்லாம் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது. அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது (கொலோ. 2:17). மன்னா கிறிஸ்து, பலிகள் கிறிஸ்து, பண்டிகைகள் கிறிஸ்து, உடன்படிக்கைப் பெட்டி கிறிஸ்து, ஆலயம் கிறிஸ்து, கானான் கிறிஸ்து. எல்லாம் கிறிஸ்துவையே சுட்டிக்காட்டுகின்றன. எல்லாம் அவரையும், அவருடைய சிலுவையையுமே குறிக்கின்றன. சிலுவைதான் ஆத்துமாவையும் ஆவியையும் பிரிக்கும். அங்குதான் ஆத்துமத்துக்குரியவை போய் ஆவிக்குரியவை வரும்.

ஆராதனையும், ஆவிக்குரிய வாழ்கையும்

ஆராதனையில் ஆவிக்குரிய வாழ்க்கை என்ன இருக்கிறது என்ற கேள்வி எழலாம். ஆராதனை மதத்தோடு தொடர்புடையதல்ல; இதற்கும் ;கட்டிடக்கலைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஆராதனைக்கு இடமோ, பிரத்தியேகமான உடையோ, சடங்கோ, சம்பிரதாயமோ தேவையில்லை. அவைகளெல்லாம் கல்வாரிச் சிலுவையில் முடிவுக்கு வந்துவிடுகின்றன. மாதிரிகளையும், நிழல்களையும், ஒப்பனைகளையும், திருஷ்டாந்தங்களையும், தொடர்ந்துகொண்டிருந்தால் நாம் சிலுவைக்குப் பகைஞர்கள். அது சிலுவைக்கு முரணானது. இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் எங்கிருக்கிறோம் என்று பாருங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்ததையும், சொன்னதையும், கொண்டுவந்ததையும் நாம் பார்க்கவேண்டிய பிரகாரம் பார்க்காததால் மாதிரிகளையும், பாவனைகளையும், நிழல்களையும் நாம் இன்னும் கண்ணுங்கருத்துமாகப் பராமரித்துக்கொண்டிருக்கிறோம் அவைகளை உறுதியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறோம், கட்டிக்காக்கிறோம்.

நிழல்கள், ஒப்பனைகள்

ஆவிக்குரிய ஆராதனை என்றால் என்ன பொருள்? எது ஆவிக்குரிய ஆராதனை? ஆராதனை என்றால் என்ன பொருள் என்று ஆரம்பத்தில் சொன்னேன். அந்த வரையறையின்படி நாம் ஆராதிக்க வேண்டும். பரலோக ஆராதனைக்கு ஒப்பான ஒன்றை தேவன் இந்தப் பூமியில் தந்திருக்கிறார் என்றால் அதின் ஆவிக்குரிய பொருளைப் பார்ப்பதே ஆவிக்குரிய ஆராதனையாகும். ஆராதனைக்குச் செல்லும்போது நாம் மிருகங்களைக் கொண்டுசெல்லுகிறோமா? இல்லையே? பழைய ஏற்பாட்டில் பலிகள் தொடந்து செலுத்தப்பட்டன. பலிகள் இல்லாமல் ஆராதனையே இல்லை. இன்று நாம் அப்படிப்பட்ட பலிகள் செலுத்துவதில்லை. அதாவது அன்று கொடுக்கப்பட்ட பலிகள் சாதாரண நிழல்களே என்றும், அந்தப் பலிகள் கிறிஸ்துவையே குறிக்கின்றன என்றும் நாம் புரிந்துகொள்கிறோம். கிறிஸ்து எவ்வளவு அழகானவர்! எவ்வளவு பரிபூரணர்! எவ்வளவு முழுமையானவர்! எவ்வளவு விலையேறப்பெற்றவர் என்ற உணர்வு நம் இருதயத்தின் ஆழத்திலிருந்து எழ வேண்டும். அதுதான் நாம் தேவனுக்குமுன்பாகக் கொண்டுவருகிற பலி. கிறிஸ்துவின் பரிபூரணத்தை, அழகை, மேன்மையை, மகத்துவத்தை நாம் பாராட்டுகிறோம்.

ஆசாரியர்களின் வஸ்திரங்களும், ஆடைகளும், உடைகளும் எதைக் குறிக்கின்றன? இன்று நாம் தேவனுக்குமுன்பாகப் போகும்போது அப்படிப்பட்ட உடைகளை அணிந்துசெல்ல வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரா? இல்லை என்று நாம் ஆணித்தரமாகச் சொல்வோம். அவை நிழல்கள், திருஷ்டாந்தங்கள், ஒப்பனைகள் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அப்படியானால் அதன் பொருள் என்ன? ஆசாரிய உடைகளில் கிறிஸ்துவைப் பார்க்கிறோம், கிறிஸ்துவின் குணத்தைப் பார்க்கிறோம். அங்கு கிறிஸ்துவின் நீதி, அழகு, மகிமை ஆகியவைகளைப் பார்க்கிறோம். இந்தக் குணங்கள் தேவ-மனிதனாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சுபாவத்தைக் குறிக்கின்றன. இன்று கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற அனைவருக்கும் இந்த உடை கொடுக்கப்படுகிறது. தேவனுடைய பார்வையில் கிறிஸ்துவுக்குள்ளான நாம் எல்லாரும் அழகும், மகிமையும், பரிசுத்தமுமான இந்த ஆடையைத் தரித்திருக்கிறோம். அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களின் நீதிகளே (வெளி. 19:8).

அதுபோல ஆலயமும், கூடாரமும் நிழல்களே. அவை பரிசுத்தவான்களுக்கிடையேயுள்ள ஆவிக்குரிய ஐக்கியத்தைக் குறிக்கின்றன. பரிசுத்தவான்களாகிய நாம் உயர்த்தப்பட்ட தலையாகிய கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டு ஒரே சரீரமாக்கப்பட்டிருக்கிறோம். ஜீவனுள்ள கற்களாகிய நாம் மூலைக்கல்லும் தலைக்கல்லுமாகிய கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டு ஒரே ஆலாயமாகிறோம். ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசு கிறிஸ்துமூலமாய்த் தேனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்கும் பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள் (1 பேதுரு 2:5). நாம் ஆவிக்குரிய கற்கள். ஆவிக்குரிய மாளிகை கட்டப்படுகிறது. நாம் ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துகிற ஆவிக்குரிய ஆசாரியர்கள். “அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாய் எழும்புகிறது. அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்” (எபே. 2:21:22). ஆவிக்குரிய ஆலயம் எழும்பிக்கொண்டிருக்கிறது. நாம் ஆரம்பத்தில் கரடுமுரடான கற்களாக இருந்தோம். பயனற்ற கற்கள். சாலொமோன் “ஆலயம் கட்டுகையில் அது பணிதீர்ந்துகொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது. ஆகையால் அது கட்டப்படுகிறபோது சுத்திகள் வாச்சுகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை” (1 இரா. 6:7). அதுபோல கற்கள் வெட்டியெடுக்கப்படும் இடத்திலேயே நாமும் சரிசெய்யப்பட்டு, பழுதுகள் நீக்கப்பட்டு, அடிப்பு வேலைப்பாடாய் உருவாக்கப்பட்டு, செய்யப்படவேண்டிய அத்தனை வேலைகளும் செய்யப்பட்டு, தேவனுடைய ஆவிக்குரிய ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கொண்டுவரப்படுகிறோம். சுத்திகள் வாச்சுகள்போன்ற எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அதில் கேட்பதில்லை. எந்தப் பகட்டும், பரபரப்பும், ஆரவாரமும் இன்றி அமைதியாகப் பொருத்தப்படும்போது அங்கு சுத்திகள் வாச்சுகள்போன்ற எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதில் கேட்பதில்லை. எந்தப் பகட்டும் பரபரப்பும் ஆரவாரமும் இன்றி அவை அமைதியாகப் பொருத்தப்படுகின்றன. இது எதைக் குறிக்கிறது? இது எதன் முன்னடையாளம்? ஜீவனுள்ள கற்களாகிய நாம் தேவனுடைய ஆவிக்குரிய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டுவருகிறோம் என்பதையே இது குறிக்கிறது. தேவன் இப்போது கைகளால் கட்டப்பட்ட கோயில்களில் (ஆலயங்களில், தேவாலயங்களில்) வாசம்பண்ணுவதில்லை. “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுவதில்லை. எல்லாருக்கும் ஜீவனையும், சுவாசத்தையும் கொடுக்கிற அவர் தமக்கு யாதொன்று தேவையானதுபோல் மனுஷர் கைகளால் பணிவிடை கொள்ளுகிறதுமில்லை" (அப். 17:24-25). மாறாக, கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்ட அவருடைய அவயவங்களாகிய ஆவிக்குரிய சரீரத்தில், ஆவிக்குரிய ஆலயத்தில், அவர் வாசம்பண்ணுகிறார்.

தேவன் சிலுவையில் முடிவுக்குக் கொண்டுவந்ததை நாம் ஏன் உயிர்ப்பிக்க வேண்டும்? அவர் அழித்துஒழித்ததை நாம் ஏன் உருவாக்க வேண்டும்? அவர் இடித்ததை நாம் ஏன் கட்ட வேண்டும்? அவர் பிடுங்கியதை நாம் ஏன் திரும்பவும் நாட்ட வேண்டும்? அவர் தற்காலிகம் என்று சொன்னதை நாம் ஏன் நிரந்தரம் என்று சொல்ல வேண்டும்? அவர் வேண்டாம் என்று சொல்வதை நாம் ஏன் வேண்டும் என்று சொல்ல வேண்டும்? அவர் வெளியேற்றியதை நாம் ஏன் வரவேற்க வேண்டும்? அவர் கிழித்ததை நாம் ஏன் மறுபடியும் தைக்க வேண்டும்? நிஜம் இருக்கும்போது நாம் ஏன் நிழலில் வாழ வேண்டும்? மெய்ப்பொருளை விட்டுவிட்டு நாம் ஏன் அடையாளங்களில் தங்கிவிட வேண்டும்? இவ்வளவு உயர்வான காரியத்தைத் தேவன் வைத்திருக்கும்போது நாம் ஏன் தாழ்வானவைகளில் தேங்கி நிற்க வேண்டும்? இவைகளைப் பார்க்கும்போது கிறிஸ்தவர்களாகிய நாம் தேவனுடைய மனதை விட்டு எவ்வளவு தூரம் சென்று விட்டோம் என்று தெரிகிறதா? இந்த வாக்கியம் மிகக் கடுமையானது என்று எனக்குத் தெரியும். ஆனால் இவைகளெல்லாம் ஆராதனையோடு சம்பந்தப்பட்டவை. எனவே சொல்லித்தான் ஆக வேண்டும்.

தேவன் தந்த அடையாளங்கள், நிழல்கள், மாதிரிகள், திருஷ்டாந்தங்கள், ஒப்பனைகள் முதலானவைகளின் ஆவிக்குரிய பொருளை நாம் பார்க்கத் தவறினால், அவைகளின் நிஜத்துக்குள் நாம் நுழையவில்லையென்றால், மாறாக அந்த நிழல்களையே நாம் இன்னும் வெகு விமரிசையுடன் பராமரித்துக்கொண்டிருந்தால் நான் ஒன்று சொல்வேன். இப்படிப்பட்டவர்கள் இன்னும் ஆத்தும மட்டத்திலேயே இருக்கிறார்கள். எனவே, இவர்கள் வஞ்சிக்கப்படுவது எளிது. இவர்கள் வஞ்சகத்தை வரவேற்க ஆயத்தமாயிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இது ஒரு பயங்கரமான வஞ்சகம். இந்த வஞ்சகம், ஏமாற்றுவேலை, எப்படி வேலைசெய்கிறது? நல்ல பக்தியுள்ள ஏராளமான கிறிஸ்தவர்கள் தெய்வீக வெளிப்பாட்டுக்கு முற்றிலும் முரணான பாரம்பரிய முறைமைக்கு முழுவதும் அடிமைப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பாரம்பரிய முறைமை ஆவிக்குரிய வெளிப்பாட்டுக்குச் செல்லும் வழியை அடைத்துக்கொண்டிருக்கிறது, தடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையோ அந்த அடிமைத்தனத்தை அழித்து, நம்மை சுயாதீனத்துக்கு நடத்துகிறது. சிலுவை நமக்குப் புதிய ஜீவனுள்ள வழியைத் திறந்திருக்கிறது (எபி. 10:19). அந்த வழி நம்மைக் கிறிஸ்துவின் பரிபூரண ஜீவனுக்கும், ஒளிக்கும் நடத்துகிற தேவனுடைய ஆவியானவரே. இப்படிப்பட்ட புதிய வழி, ஜீவனுள்ள வழி, இருக்கும்போது நாம் ஏன் பழைய வழியை, ஜீவனற்ற வழியை, தொடர வேண்டும்?

எபிரேயர் நிருபம்

எபிரேயர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் நோக்கம் அதுதான். அவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்த யூதர்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் எருசலேமில் ஆலயம் இருந்தது, பலிகள் செலுத்தப்பட்டன, ஆராதனை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால், ஆண்டவராகிய இயேசுவே ஆலயம், ஆசாரியத்துவம், பலிகள், சட்டதிட்டங்கள், நியாயப்பிரமாணம், ஓய்வுநாள்போன்ற எல்லாவற்றின் மெய்ப்பொருள் என்பதை அவர்கள் புரிந்திருந்தார்கள். இந்தக் கிறிஸ்துவுடன் உண்மையான ஐக்கியம், உறவு, கொள்வதைப்பற்றிய பரலோக வெளிச்சத்தை இந்த எபிரேய விசுவாசிகள் பெற்றிருந்தார்கள். இனிமேல் புறம்பான தோற்றமோ, ஆராதனை முறைமைகளோ, சடங்குகளோ, சம்பிரதாயங்களோ, பிரார்த்தனைகளோ, பாரம்பரியங்களோ, கட்டிடங்களோ, ஆசாரியர்களோ, ஆடைகளோ, பலிகளோ, பலிபீடங்களோ அல்ல, இப்போது எல்லாம் கிறிஸ்துவே என்ற காரியத்தை அவர்கள் தௌ;ளத்தெளிவாகப் பார்த்திருந்தார்கள். எனவே, அவர்கள் மதத்துக்குரிய, சம்பிரதாயமான, வரலாற்றுக்குரிய,பாரம்பரியமான இந்தப் பாளயத்தை விட்டு வெளியே வந்திருந்தார்கள்.

அது நீரோ மன்னனின் ஆட்சிக்காலம். இந்த விசுவாசிகளின் வீடுகள் நாசமாக்கப்பட்டன, சொத்துக்கள் பறிமுதல்செய்யப்பட்டன, விசுவாசிகள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள், சமூகத்தலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டார்கள், தனிமைப்படுத்தப்பட்டார்கள், நாடுகடத்தப்பட்டார்கள்.

அங்கிருந்த எல்லா விசுவாசிகளும் (யூதர்களும், புறவினத்தார்களும்) இந்தச் சித்திரவதையை அநுபவித்தார்கள். ஆனால், யூத விசுவாசிகள் இந்தப் பாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு ஒரு வழி இருந்தது. அந்த நாட்களில் கிறிஸ்தவம் சட்டவிரோதமானதாகக் கருதப்பட்டது. ஆனால்,யூத மதம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. யூதர்கள் ஜெபஆலயங்களை அரசாங்கத்திடம் பதிவுசெய்ய முடியும். ஆனால் கிறிஸ்தவர்கள் தலைமறைவாகவே வாழ்ந்தார்கள். அவர்கள் இரகசியமாக வாழ்ந்தார்கள். எனவே, யூதவிசுவாசிகள் தங்கள் குடும்பங்களோடு ஜெபஆலயங்களுக்குத் திரும்பிச்செல்ல ஆரம்பித்தார்கள். அப்படித் திரும்பிச்செல்லும்போது ஜெப ஆலயத்தில் எல்லாருக்கும் முன்பாக. “இயேசு மேசியா என்பதை நான் மறுக்கின்றேன்,” என்று பகிரங்கமாக அறிக்கை செய்யவேண்டும். அவர்கள் கிறிஸ்துவை மேசியா என்று விசுவாசித்து மதத்தைவிட்டு வெளியே வந்தவர்கள். ஆனால், இப்போது சபையில் சேர்ந்தபிறகு அவர்களுடைய பிள்ளைகள் பள்ளிகளில் சித்திரவதைப்படுத்தப்படுகிறார்கள்; அவர்களுடைய வீடுகள் அடித்து நொறுக்கப்படுகின்றன; சொத்துக்கள் சூரையாடப்படுகின்றன. என்ன செய்வது? “ஜெபஆலயங்களுக்குத் திரும்பிச்சென்றுவிட்டால் பாதுகாப்பாக இருக்குமே,” என்று நினைத்து திரும்பிச்செல்ல ஆரம்பித்தார்கள்.

உண்மையாகவே ஆவிக்குரிய, பரலோகத்துக்குரிய காரியத்துக்கு அன்றும் பெரிய விலைகொடுக்க வேண்டியிருந்தது; இன்றும் இருக்கிறது; என்றும் இருக்கும்.

அந்த யூதவிசுவாசிகளைப் பேராபத்திலிருந்து காப்பாற்றவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்துமுடித்த வேலையினால் விளைந்த மாற்றத்தைத் தெரிவிக்கவுமே எபிரேயர் நிருபம் எழுதப்பட்டது. பழைய முறைமை, பூமிக்குரிய முறைமை, பரலோகத்தின் பிரதிநிதித்துவமாகிய ஆலயம் கடந்துபோய்விட்டது என்றும், அதற்குப்பதிலாக அதின் இடத்தில் பரலோக நிஜம் வந்துவிட்டது என்றும் அந்த ஆசிரியர் கூறுகிறார். பரலோகத்தில் உள்ளவைகளின் சாயல் என்றும் பரலோகத்தில் உள்ளவைகள் என்றும் அவர் கூறுகிறார் (எபி. 9:23). நம் வரலாற்றுக் கிறிஸ்தவத்தைப் பாருங்கள். அதுதான் நம் பாரம்பரியக் கிறிஸ்தவம். இந்தக் கிறிஸ்தவம் நம்மையும், நம் ஆராதனையையும் ஆத்தும மட்டத்திலேயே வைத்துவிடுகிறது. அதாவது பிரத்தியேகமான கட்டிடம் வேண்டும், அந்தக் கட்டிடத்தில் பிரத்தியேகமான ஜன்னல்கள் இருக்க வேண்டும். அங்கு பிரத்தியேகமான இசை வாசிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகையான ஜெபங்கள் ஜெபிக்க வேண்டும். அங்கு வரக்கூடிய மக்கள் ஒரு தனிவகையான மக்கள். ஒரு தனி உடை. இவைகளெல்லாம் எதற்காக? நம் ஆராதனைக்கு உதவிசெய்வதற்காக. இவைகள் நாம் தேவனுடன் கொண்டிருக்கும் உறவை, ஐக்கியத்தை, நிஜம் என்று நிரூபிப்பதற்காக, நிஜமாக்குவதற்காக. இதுதான் தேவனுடன் நமக்கிருக்கும் உறவு என்றால் நாம் எந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? கல்வாரிச் சிலுவைக்கு முந்தைய காலகட்டத்தில்தானே? அப்படியானால் கல்வாரிச் சிலுவை வீணா? நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கல்வாரியில் சிலுவையில் மரித்தது வீணா? தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்ததே? ஏன்? தேவன் கிழித்ததை நாம் ஏன் தைத்து அதன் வரலாற்றைத் தொடர வேண்டும்? இது நம்மை ஆத்தும மட்டத்திலேயே வைத்துக்கொள்ளவில்லையா? அதற்குமேல் போவதற்காகத்தானே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்? அதுதானே ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுவது? இந்த ஆத்தும காரியங்கள் தேவனுடன் நாம் கொள்ளவேண்டிய நிறைவான, தனிப்பட்ட, அந்தரங்க, உள்ளான, ஆவிக்குரிய வாழ்க்கையை தடுத்துக்கொண்டிருக்கின்றனவோ என்று நான் சந்தேகப்படுகிறேன்.

கிறிஸ்துவை ஜீவனாக அறிய வேண்டுமானால் நாம் இந்தப் புறம்பான முறைமையிலிருந்து விடுதலைபெற வேண்டும். மதத்துக்குரிய காரியங்கள் பிரேதச்சீலைகள் போன்றவை. “அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகர்ந்த வர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக்கட்டினார்கள்” (யோவான் 19:40). “அதற்குள்ளே குனிந்து பார்த்து சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்” (யோவான் 20:5). ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்தபோது அவர் பிரேதச் சீலைகளுடன் உயிர்த்தெழவில்லை. அவைகளைக் கல்லறையில் விட்டுவிட்டுச் சென்றார். எனவே நாம் ஏன் ஒரு முறைமையை நிலைநிறுத்த வேண்டும்? இது என்ன வாடா விளக்கா? அணையா விளக்கா? இது என்ன அக்கினி அவியாமல் பார்த்துக்கொள்வதா? தேவனே அணைத்தபிறகு நாம் ஏன் கொளுத்த வேண்டும்? பழையை முறைமை அனைத்தையும் ஆண்டவர் சிலுவையில் முடிவுக்குக் கொண்டுவந்தார். எல்லாம் முடிந்தது. ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும் என்பதின் பொருள் இதுதான் என்று நான் நினைக்கிறேன்.

“பின்பு ஆரோனின் குமாராகிய நாதாபும் அபியுவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து அவைகளின்மேல் அக்கினியையும் போட்டு கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்” (லேவி. 10:1). ஆரோனின் குமாரர்கள் இருவரும் தேவனை ஆராதிக்கச் சென்றார்கள். ஆனால், தேவன் கட்டளையிடாத அந்நிய அக்கினியைக் கொண்டு (யாத். 30:9) தேவனை ஆராதிக்க முற்பட்டார்கள். தேவன் இந்த ஆராதனையை அங்கீகரித்திருக்கலாம் என்று தோன்றுகிறதா இல்லையா? அவர்கள் அப்படி என்ன பொல்லாத பாவத்தைச் செய்தார்கள் என்று எண்ணம் எழுகிறதா இல்லையா? ஆராதனை என்ற பெயரில் நாம் எதைச் செய்தாலும் தேவன் சந்தோஷப்படுவார் என்று நாம் நினைக்கக்கூடாது. அவர்கள் இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள். இதுபோல் இன்று நடக்கவில்லை என்பதால் தேவன் இவைகளை ஏற்றுக்கொள்கிறார் என்று நாம் நினைக்கக்கூடாது. அக்கினியைத் தேவன் கொளுத்த வேண்டும் (லேவி. 1:7 6:12 9:24 16:12). மாம்சத்தில் நல்ல மாம்சம் கெட்ட மாம்சம் என்று இருக்கிறதா? மாம்சம் ஒன்றுக்கும் உதவாது என்று ஆண்டவராகிய இயேசு கூறுகிறார் (யோவான் 6:63). அதை நம்மால் ஆமென் என்று சொல்லி ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேவனுக்கு இப்படிப்பட்ட ஆராதனையில் எந்த விருப்பமும், நாட்டமும், ஈடுபாடும் இல்லவே இல்லை.

காயீனும் ஆபேலும் தேவனை ஆராதித்தார்கள். நாம் இதுவரை கேள்விப்பட்டிருப்பதுபோல் காயீன் அப்படி ஒன்றும் அழுகிப்போன கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாக் கொடுக்கவில்லை. நிச்சயமாக நல்ல எண்ணத்தோடுதான் தேவனை ஆராதிக்கச் சென்றிருப்பான். ஒருவன் கர்த்தரிடம் போகிறான் என்றால் அது நல்ல எண்ணம்தானே? ஆலயத்திற்குச் செல்கிறான் என்றால் அது நல்ல எண்ணம்தானே? அதை தேவன் அங்கீகரிக்கவேண்டாமா? பாராட்ட வேண்டாமா? அவர் காயீனின் கனிகளை ஏற்றுக்கொள்ளவில்லை, அங்கீகரிக்கவில்லை. ஏன்? அவன் என்ன தவறு செய்தான்? விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியைத் தேவனுக்குச் செலுத்தினான் (எபி. 11:4). அந்த ஆபேல் மரித்தும் இன்னும் பேசுகிறான்.

ஆராதனை என்ற பெயரில் நாம் தேவனுக்கு விரோதமாகக் குற்றம்செய்கிறோம் என்று அறியாமலே குற்றங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அது குற்றம், மீறுதல், அக்கிரமம், அத்துமீறல். தேவனை ஆராதிப்பதற்காக நாம் நம் விருப்பம்போல் உத்திகளை உருவாக்கலாமா? தேவன் அதைப் பொறுத்துக்கொள்வாரா? நம் நோக்கம் சரியாக இருக்கலாம். மோசே இரண்டாவது முறை கன்மலையை அடித்தபோது தண்ணீர் வந்தது? அதை பல இலட்சம் மக்கள் குடித்தார்கள். கன்மலையைப் பார்த்துப் பேசச் சொன்னார். ஆனால் மோசே கன்மலையை அடித்தார். இந்த ஊழியத்தினால் அங்கு மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்களா இல்லையா? மக்கள் தாகம் தீர்ந்தது என்பதற்காகத் தேவன் பேசு என்பதற்குக் கீழ்ப்படியாமல் அடிக்கலாமா?

தேவனை ஆராதிக்க வேண்டும் என்பதற்காக தேவன் கட்டளையிடாத காரியங்களைச் செய்யலாமா? அவைகள் நலமானவைகள்போலத் தோன்றும்; ஆவிக்குரியவைகள்போலவும், வேதத்துக்கடுத்தவைகள்போலவும் தோன்றும்.

சவுல் பெலிஸ்தரோடு யுத்தத்துக்குச் செல்ல வேண்டும். அவன் தனக்கு சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள் மட்டும் காத்திருந்தான். சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. ஜனங்கள் அவனைவிட்டு சிதறிப்போனார்கள். அப்பொழுது சவுல் “சர்வாங்கதகனைபலியையும், சமாதான பலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள்,” என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான். சாமுவேல் தீர்க்கதரிசி வருகிறார். சவுல் துணிகரமாக இப்படிச் செய்ததால் அவனுடைய ராஜ்யம் நிலைநிற்காது என்று சொன்னார். அவனுடைய குற்றம் என்ன? அவன் அப்படி எதை மீறிவிட்டான்? தேவனுக்குப் பலிகளைத்தானே செலுத்தினான்? இது தவறா? அந்த மக்கள் கூட்டத்துக்குமுன்பாகத் தேவனுக்குப் பலி செலுத்துவது தவறா? அந்நிய தேவர்களுக்கு அவன் பலி செலுத்தவில்லையே? கர்த்தர் விதித்த கட்டளைகளைக் கைக்கொள்ளாமற்போனீர் (1 சாமு. 13:8-13). ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும்.

அதே சவுல் மீண்டும் அதே தவறைச் செய்தான். சவுல் அமலேக்கியருக்கு விரோதமாக யுத்தத்திற்குப் போகிறான். அமலேக்கியரை மடங்கடித்து அவர்களுக்குரிய எல்லாவற்றையும் சங்கரிக்க வேண்டும் என்று சாமுவேல் சொல்லி அனுப்புகிறார். ஆனால் சவுல் அப்படிச் செய்யவில்லை... தேவனாகிய கர்த்தருக்கு.. பலியிடுவதற்காக.. ஆடுமாடுகளில் பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள். ஆராதனைக்காக, பலியிடுவதற்காக. அதற்குச் சாமுவேல் “கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும் ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்” என்றார். 1 சாமு 15:21:22).

யூதாவில் உசியா என்று ஒரு ராஜா இருந்தான். பதினாறு வயதில் ராஜாவாகி ஐம்பத்திரண்டு வருடம் அவன் எருசலேமை ஆண்டான். யுத்தங்களில் வெற்றி பெற்றான். எதிரிகளை அதம்பண்ணினான். பட்டணங்களைக் கட்டினான். எல்லாரும் அவனுக்குக் கப்பங்கட்டினார்கள். அவனுடைய கீர்த்தி எல்லாத் திசைகளிலும் பரவிற்று. அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு எல்லாம் அநுகூலமாயிற்று (2 நாளா. 26:15). அவன் பலப்பட்டபோது மேட்டிமைகொண்டு கர்த்தருக்குத் தூபம் காட்ட துணிகரமாக ஆராதனைக்குள் நுழைந்தான். ஒரு கேள்வி வரும்? தேவன்தானே அவனை ஆசீர்வதித்தார்? இப்போது அவன் தேவனை ஆராதிக்க விரும்புகிறான். இதில் என்ன தவறு கண்டீர்கள்? அவனுடைய செயலை எண்பது ஆசாரியர்கள் எதிர்த்தார்கள். “உசியாவே கர்த்தருக்குத் தூபங்காட்டுவது உமக்கு அடுத்ததல்ல...பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு வெளியேபோம். மீறுதல் செய்தீர். இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது” (2 நாளா 26:18). எனவே நல்ல நோக்கம் போதாது. தேவன் சொன்னாரா? தேவன் கட்டளையிட்டாரா? தேவன் கோரினாரா?

விடுதலை

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் ஜீவனுள்ளமுறையில் நிறைவாக அறிந்துகொள்ள விரும்பினால், மதத்தின் எல்லாவிதமான புறம்பான கட்டுப்பாட்டிலிருந்தும் நாம் விடுதலையாக வேண்டும். நம்மை நாம் தேவனுக்குத் திறக்க வேண்டும். நாம் ஆவியில் விடுதலையோடு இருக்க வேண்டும். சம்பிரதாயங்கள், முறைமைகள், மாமூலான பழக்கவழக்கங்கள் போய்விட வேண்டும். அவைகளுக்குப்பதிலாக நிஜம், மெய்பொருள், ஜீவன் வரவேண்டும். தேவனோடு நமக்கிருக்கும் உறவு, தேவனுக்குக் கொடுக்கப்படும் ஆராதனை, தேவனோடு நமக்கிருக்கும் அந்தரங்க வாழ்க்கை எந்த இடத்தையும் அல்லது நமக்கு வெளியே இருக்கிற அல்லது நம்மைச் சுற்றி இருக்கிற வேறு எதையும் சார்ந்ததல்ல. ஆராதனை அவருடன் நமக்கிருக்கும் ஆவிக்குரிய (ஆவியின்) ஐக்கியத்தையே முற்றிலும் சார்ந்திருக்கிறது. இடம், நேரம், இசை, பாடல், இசைக்கருவிகள், உடை, பலி, மணி, ஆசாரியன், பாடல் குழு, கைதட்டல்கள் எதுவும் பொருட்டல்ல. இவைகளெல்லாம் ஆராதனைக்கு உதவும் என்று நாம் கருதுகின்றோம். ஆடம்பரமான, அலங்கரிக்கப்பட்ட, பிரமாண்டமான கோவில்களில் காணமுடியாத ஆராதனையையும், உறவையும், ஐக்கியத்தையும் எலிகள் ஓடிக் கொண்டிருக்கிற, சிலந்திவலைகள் தொங்கிக்கொண்டிருக்கிற, அழுக்கடைந்த இருட்டறையில் அனுபவிக்கமுடியும். கற்பனைகூட செய்துபார்க்க முடியாத இடத்தில் தேவனுடைய மக்கள் பலர் அவருடன் மிக அற்புதமான ஐக்கியம் கொண்டிருக்கிறார்கள். அத்திமரம், கடற்கரை, வனாந்தரம், மலை, காடு, வயல், படகு, கிணற்றோரம். நாம் விசுவாசிப்பவர் இன்னார் என்று நாம் அறிந்திருந்தால் அவருடன் ஐக்கியம்கொள்வதற்கும், நல்லுறைவைப் பராமரிப்பதற்கும், ஆராதிப்பதற்கும் நமக்கு எந்த உதவிகளும் தேவையில்லை. உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது (கொலோ. 3:3).

எபிரேயர் நிருபம் எழுதப்பட்ட காலத்தில் யூதமதம், யூதமதமுறைமை, இன்னும் இருந்தது. ஆனால் இன்னுங் கொஞ்சக் காலத்தில் அந்த மதமும், மதமுறைமையும் அழிந்துவிடும் என்று அந்த நிருபத்தின் ஆசிரியர் அறிந்திருந்தார். எப்படித் தெரியும்? ஆண்டவராகிய இயேசு ஏற்கெனவே அதைப்பற்றி தீர்க்கதரிசனமாகக் கூறியிருந்தார். இயேசு தேவாயலத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகையில் அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். “இயேசு அவர்ளை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே. இவ்விடத்தில் ஒரு கல்லின்மேன் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மத். 24:1.2) எல்லாம் இடிக்கப்படும்; எல்லாம் சிதறடிக்கப்படும். ஆலயம் இருக்காது, பலிபீடம் இருக்காது, பலிகள் இருக்காது, பண்டிகைகள் இருக்காது, ஆசாரியர்கள் இருக்கமாட்டார்கள், தூபங்காட்டுதல் இருக்காது, பாரம்பரியம் இருக்காது, சம்பிரதாயங்கள் இருக்காது. ஆண்டவராகிய இயேசு தீர்க்கதரிசனமாக முன்னுரைத்தபடி பழையை முறைமையும், அதற்குரிய அனைத்தும் அழிக்கப்படும், நொறுக்கப்படும், தூள்தூளாக்கப்படும். அவைகள் ஒழிந்துபோகும்.

யூதவிசுவாசிகள் தங்கள் பழைய முறைமைக்குத் திரும்பிச்சென்றுவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தப் பழையை முறைமை இருந்தால்தான் தேவனோடு உறவும், ஐக்கியமும் கொள்ளமுடியும், தேவனை ஆராதிக்க முடியும் என்றால் அவைகள் இல்லாவிட்டால் இந்த மக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் உறவு மறைந்துவிடும் அல்லவா? அவர்களுடைய ஐக்கியம் உடைந்துபோகும் அல்லவா? அவர்களுடைய ஆராதனை நின்றுவிடும் இல்லையா? முறைமை போய்விட்டால் ஆராதனையும் போய்விடும். எபிரேயர் நிருபத்தின் ஆசிரியர் அந்த யூதவிசுவாசிகளை வரப்போகிற பேரழிவிலிருந்து காப்பாற்ற விரும்பினார். பூமியோடு கட்டப்பட்டிருந்த அந்த ஆராதனை முறைமை ஒழிந்துவிடும் என்று அவருக்குத் தெரியும். எனவே அவர் அவர்களை இரட்சிப்புக்கேற்ற புதிய வழிக்குக் கொண்டுவர விரும்பினார்.

தேவனோடு நமக்கிருக்கும் உறவும், ஐக்கியமும் நாம் தேவனுக்கு ஏறெடுக்கும் ஆராதனையும் இப்படிப்பட்டதாக இருக்க வேண்டும். நாம் கூட்டங்களுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி கர்த்தர் நம்மோடு இருக்கிறார், நமக்குள் இருக்கிறார். கூட்டங்களில் ஆத்துமாவைக் கிளுகிளுப்பாக்குகிற நல்ல இசை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி கர்த்தர் நம்மோடு இருக்கிறார், நமக்குள் இருக்கிறார். நாம் பூமிக்குரிய தாழ்வான ஆத்துமாக்குரிய அந்த மண்டலத்தில் இல்லை. “இந்த மலையிலும் அல்ல எருசலேமிலும் அல்ல...

செங்கல்லும், சிமெண்டும், மரமும், கண்ணாடியும், பறையும், கையும் காலும், இசையும் மந்திரமும் ஆவியோடு தொடர்புகொள்ள முடியாது. மனிதனுக்கு ஓர் ஆவியுண்டு. “மனுஷரில் ஒரு ஆவியுண்டு. சர்வ வல்லவருடைய சுவாவமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்” (யோபு 32:8). தேவனோடு சேர்ந்திணைந்த நம் ஆவியின்மூலமாக மட்டுமே தேவனைத் தொடர்புகொள்ள முடியும். இதைத்தான் கல்வாரிச் சிலுவை செய்துமுடித்தது. சிலுவையைப்பற்றிய செய்தியை மக்கள் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை என்று உங்களுக்குப் புரியும் என்று நான் நினைக்கிறோன். இதுதான் ஆராதனை. இதுதான் உறவு. இதுதான் ஜக்கியம் என்று நீங்கள் அறிவித்தால் நீங்கள் மதம் என்ற பாளயத்துக்குப் புறம்பே போய்விட்டீர்கள் என்று பொருள். “பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்” (லேவி. 6:11). ஏனென்றால் இன்றைய கிறிஸ்தவம் வரலாற்றுக்குரிய, பாரம்பரியமான, பூமிக்குரிய ஒரு மதத்தை, முறைமையைப் பலமாகப் பிடித்துக்கொண்டு, அதை விடமறுக்கிறது. அநேகர் பாளயத்துக்குள் இருக்கவே விரும்புகிறார்கள். இதைவிட மோசமான காரியம் என்னவென்றால் தேவன் அதை ஒழித்துவிட்டார்.

ஆனால் சாத்தான் அதைப் பிடித்துக்கொண்டான். தற்காலிகமான நோக்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட தெய்வீக நிழலை, அடையாளமாகக் கொடுக்கப்பட்ட அமைப்புமுறையை, சாத்தான் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு அதைத் தனதாக்கிக்கொண்டான். அதன்மூலம் தேவனுடைய மக்கள் தேவனோடு உண்மையான ஜக்கியம் கொள்வதையும், ஆவியோடும் உண்மையோடும் அவரை ஆராதிப்பதையும் அவன் தடுத்து விட்டான், மறைத்துவிட்டான்.

அந்தப் பழைய முறைமையில் ஆவிக்குரியவர்களே இல்லை என்று நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன். மாறாக அதுதான் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்றால், அந்த மண்டலத்தில்தான் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றால், அவைகள் இல்லையென்றால் அல்லது அவைகளுக்கு வெளியே ஆவிக்குரிய வாழ்க்கை இல்லை என்றால், அந்த அமைப்புமுறையைத் தாண்டி அவர்களால் பார்க்க முடியவில்லையென்றால், அவை இல்லாத வாழ்க்கை என்ன கிறிஸ்தவ வாழ்க்கை என்று அதை ஒருகாரியமாக நினைக்கிறார்கள் என்றால், அவர்கள் கல்வாரிச் சிலுவையின் பொருளைத் தவறவிட்டுவிட்டார்கள். அவர்கள் சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்து என்றால் என்னவென்பதை பார்க்கத் தவறிவிட்டார்கள்.

பெஞ்சமின் வார்பீல்டு என்ற பரிசுத்தவான் சொன்னதுபோல் “கிறிஸ்துவல்லாத சிலுவை என் அடைக்கலமாக இருக்க முடியாது. சிலுவையில்லாத கிறிஸ்து என் இரட்சகராக இருக்க முடியாது. ஓ! சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவே! நான் உம்மில் இளைப்பாறுகிறேன்." சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவே தேவ பெலனும் தேவ ஞானமுமாயிருக்கிறார் (1 கொரிந்தியர் 2:24).

துரைத்தனங்களோடும் அதிகாரங்களோடும் அந்தகார லோகாதிபதிகளோடும் மல்யுத்தம் செய்வதற்குப் புறம்பான காரியங்களாலான ஓர் அமைப்புமுறை போதாது. நாம் ஒரு பயங்கரமான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நாம் சந்திக்கின்ற எதிர்ப்பு சாதாரணமானதல்ல. பயங்கரமான எதிர்ப்பை நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். நாம் தேவனுக்கேற்ற ஓர் ஆவிக்குரிய நிலையை எடுத்தால் மட்டுமே அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள முடியும். அதற்குக் குறைவான எதுவும் இந்தக் காரியத்தில் உதவாது.

தேவன் நமக்காக வைத்திருக்கிற முதன்மையும் மேன்மையுமான இடத்தைவிடக் குறைவான எந்த இடத்தையும் நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. நாம் அதை விரும்பவில்லை. பொம்மைகள், படங்கள், ஓவியங்கள், விளக்கப்படங்கள், அடையாளங்கள், நிழல்கள் இவைகளெல்லாம் குறைந்த அறிவுள்ள குழந்தைகளுக்குரியவை. இயேசுவை விசுவாசிக்கும்போது நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம். இந்தப் படக்கதைகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம்வரைக்கும்தான் உதவும். வாழ்நாள் முழவதும் நாம் குழந்தைகளாகவே இருக்கப்போவதில்லை. தேவன் பிள்ளைகளை அல்ல குமாரர்களை, குமாரத்திகளைத் தேடுகிறார். குழந்தைகளுக்கும் குமாரர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? புறம்பான காரியங்கள் தேவனைப்பொறுத்தவரை பாலர் பள்ளியோடு தொடர்புடையவை. கல்வாரிச் சிலுவை இதைப் புறம்பே தள்ளிவிடுகிறது. அதற்குப்பதிலாக பரலோக ஒழுங்கைக் கொண்டுவருகிறது. இதன்மூலம் நாம் தேவனுடைய முழு வளர்ச்சியடைந்த குமாரர்களாகிறோம். நாம் அப்படிப்பட்டவர்களாக இருப்போமாக!..