By மெர்லின் இராஜேந்திரம்
நம்முடைய தேவனுக்கு ஒரு பெரிய நோக்கம் உண்டு. எந்த நோக்கமோ, திட்டமோ, குறிக்கோளோ இல்லாமல், அவர் இந்த உலகத்தையோ, உலகத்திலுள்ளவைகளையோ, மக்களையோ சிருஷ்டிக்கவில்லை. ஏதோவொரு வகையான இன்பத்துக்காக அல்லது பொழுதுபோக்குக்காக அல்லது விளையாட்டாக அல்லது நாம் சொல்வதுபோல் அவர் “சும்மா” சிருஷ்டிக்கவில்லை. வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அவர் சும்மா சிருஷ்டிக்கவில்லை. தேவன் படைத்த எல்லாவற்றிற்கும் ஒரு நோக்கம் உண்டு; எந்த நோக்கமும் இல்லாமல் தேவன் எதையும் சும்மா செய்யவில்லை, சும்மா செய்வதில்லை.
மனிதர்களாகிய நாம் ஒரு வீட்டைக் கட்டுவதற்குத் திட்டம் போடுகிறோம். திட்டம் போட்டு, எத்தனை சதுர அடியில் கட்டப்போகிறோம், என்ன அளவில் கட்டப்போகிறோம், எத்தனை ஜன்னல்கள், கதவுகள், அவை எங்கெங்கு வரும், எத்தனை கம்பிகள், எத்தனை சிமெண்ட் மூட்டைகள் தேவைப்படும், எங்கு படுக்கை அறை இருக்கும், எங்கு வரவேற்பறை இருக்கும் என்றெல்லாம் தீர்மானித்து விடுகிறோம். இப்படித் திட்டமிட்டுத்தான் மனிதர்களாகிய நாமே செயல்படுகிறோம் என்றால் தேவன் திடுதிப்பென்று ஒருநாள், “சரி, வானத்தைப் படைப்போமே! ஆகாயவிரிவை உண்டாக்குவோமே! மனிதர்களை சிருஷ்டிப்போமே!” என்று அவர் செய்திருப்பாரா?
நம் தேவன் ‘ஒழுங்கின் தேவன்’ என்பதுபோல், அவர் ‘நோக்கத்தின் தேவன்.’ தமிழ் வேதாகமத்தில்; ‘நோக்கம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. மாறாக ‘தீர்மானம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எபேசியர், ரோமர் நிருபங்களில் ‘அவருடைய தீர்மானம்’ என்ற வார்த்தை பலமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘தீர்மானம்’ என்ற வார்த்தையை ‘நோக்கம்’ என்று சொல்வது சரியாக இருக்கும். ‘அவருடைய தீர்மானம்’ என்பது ‘அவருடைய நோக்கம்.’
“வானங்கள் உம்முடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன. ஆகாயவிரிவு உம்முடைய கரத்தின் கிரியையைத் தெரிவிக்கிறது,” (சங். 19:1) என்று சங்கீதக்காரர் சொல்லுகிறார். எனவே, தேவன் எல்லாவற்றையும், எல்லாரையும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே படைத்திருக்கிறார், சிருஷ்டித்திருக்கிறார். எந்த நோக்கமோ, திட்டமோ, இல்லாமல் அவர் எதையும் செய்யவில்லை.
ஆதாமைப் படைத்ததிற்கும் ஒரு நோக்கம் உண்டு. மனிதனைக்குறித்த தேவனுடைய திட்டம் என்ன? மனிதனை அவருடைய குமாரனுடைய சாயலுக்கு ஒத்தசாயலாக்குவதே தேவனுடைய நோக்கம். அது உண்மைதான். இது மனிதனைக்குறித்த தேவனுடைய திட்டம் அல்லது நோக்கம். ஆனால், தேவனுடைய நோக்கத்தின் மையம் மனிதன் அல்ல. தேவனுடைய நோக்கம் நிறைவேற வேண்டுமானால் அதற்கு மனிதர்கள் தேவை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்த தேவனுடைய நோக்கம் நிறைவேறுவதற்கு நாம் வேண்டும், சபை வேண்டும். நாம்தான் தேவனுடைய நோக்கத்தின் மையம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. நாம் இல்லாமல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்த தேவனுடைய நோக்கம் வெற்றிடத்தில் நிறைவேற முடியாது. காற்று வருவதற்கு விசிறி ஒரு கருவி, வெளிச்சம் வருவதற்கு விளக்கு ஒரு கருவி, படம் காட்டுவதற்கு திரை ஒரு கருவி. நாம் இயேசுவைக் காண்பிப்பதற்கு ஒரு திரை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்த தேவனுடைய நோக்கம் நிறைவேறுவதற்கு நாம் ஒரு கருவி அல்லது ஒரு பாத்திரம். இந்தப் பாத்திரம் தேவை; இந்தக் கருவி தேவை. தண்ணீரை வெற்றிடத்தில் அந்தரத்தில் தொங்கவிட முடியாது. ஒரு பாத்திரம் தேவை. அதுபோல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்த அவருடைய நோக்கம் நிறைவேற வேண்டுமானால், அவருக்கு ஒரு கூட்டுப் பாத்திரம் தேவை. நீங்களும் நானும் தேவை. ஒரு தனிப்பட்ட மனிதன் மட்டும் போதாது. ஒரு பெரிய கூட்டுப் பாத்திரம் நிச்சயமாக தேவை. ஏனென்றால், நம் தேவன் அவ்வளவு பெரியவர்.
தேவனுடைய மகிமையான, உன்னதமான, உயர்ந்த நோக்கம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே. தேவனுடைய இருதயம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மேல்தான் இருக்கிறது. தேவனுடைய நோக்கத்தின் மையம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே. தேவனுடைய இருதயத்தில் இருக்கிற மையம் அல்லது மையக்கரு அல்லது குவிமையம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே.
இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால் தேவனுக்கும் மனிதனுக்கும், மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே இன்பமாக, இசைவான, இணக்கமான, நெருக்கமான, இனிமையான, சுமுகமான உறவு தேவை. தேவன் ஆதாமை சிருஷ்டிக்கிறார்; சிருஷ்டித்து ஏதேன் தோட்டத்தில் வைத்திருந்தபோது தேவனுக்கும் ஆதாமுக்கும், ஆதாமுக்கும் தேவனுக்கும் இடையே ஓர் இன்பமான உறவு இருந்தது. அது அற்புதமான உறவு! சுவையான உறவு! இருவருக்கும் இடையே இருந்த உறவு கடமையினிமித்தமோ அல்லது கட்டாயத்தினிமித்தமோ, நிர்ப்பந்தத்தினிமித்தமோ அல்லது எந்த எதிர்பார்ப்பினிமித்தமோ இருந்த உறவல்ல.
தேவன் என்றைக்காவது, “சரி! இந்த ஆதாமைப் படைக்கவே படைத்துவிட்டோம். ஏதொவொரு வகையான உறவை இவனோடு வைத்துக்கொள்வோம். இவனை விட்டால் நமக்கு வேறு யார் இருக்கிறான்? இவனை விட்டால் என்னை ஆராதிக்க வேறு யார் உண்டு? இவன் ஒருவன்தான் இந்தப் பூமியில் இருக்கிறான். அதற்காகவாவது இவனோடு ஓர் உறவை வைத்துக்கொள்வோம்,” என்று தேவன் நினைத்திருப்பாரா? இல்லை, அப்படி அவர் ஒருபோதும் நினைக்கவில்லை.
அதுபோல ஆதாமும், “இவர் என்னைப் படைத்துவிட்டார். நான் அவரால் படைக்கப்பட்டவன். ஏதோவொருவகையான உறவை அவரோடு வைத்துக்கொள்வோம். அவருடைய நல்ல அபிப்பிராயத்தைப் பெறுவதற்காக அவரை ஆராதிப்போம். ஏதாவது நன்மைகள் தராமலா போய்விடுவார்? ஏதாவது ஆசீர்வாதங்களைத் தராமலா போய்விடுவார்? எப்போதாவது உதவும். எனவே, இவரோடு ஓர் உறவை வைத்துக்கொள்வோம்,” என்று நினைத்தானா?
இப்படி தேவனுக்கும் ஆதாமுக்கும் இடையே இருந்த உறவில் கட்டாயமோ, கடமையோ, நிர்ப்பந்தமோ, எதிர்பார்ப்போ இருக்கவில்லை. அவர்களுடைய உறவு இருவருக்கும் இன்பமாக இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் பார்ப்பதற்கும், பேசுவதற்கும், பழகுவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதற்கோ, பேசுவதற்கோ, பழகுவதற்கோ, பகிர்ந்துகொள்வதற்கோ அவர்கள் இருவருக்கும் எந்த சங்கடமும் இருக்கவில்லை. அப்படிப்பட்ட ஓர் அற்புதமான உறவு தேவனுக்கும் ஆதாமுக்கும், ஆதாமுக்கும் தேவனுக்கும் இடையே இருந்தது. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே இப்படிப்பட்ட நேர்த்தியான, இன்பமான, இசைவான உறவு இருக்கும்போது மட்டுமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்த தேவனுடைய நோக்கம், திட்டம் நிறைவேறும். தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே இப்படிப்பட்ட இணக்கமாக, சுமுகமான உறவு இல்லையென்றால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக்குறித்த தேவனுடைய நோக்கம் நிறைவேற முடியாது. தேவனுக்கும் ஆதாமுக்கும் இடையே இருந்த உறவு இன்பமான உறவு! பகலின் குளிர்ச்சியான வேளையில் தேவன் ஆதாமுடன் ஏதேன் தோட்டத்தில் உலா வந்தாராம். ஆதாமைப் பார்ப்பதற்குத் தேவனுக்கு அவ்வளவு சந்தோஷம். இது முதல் நிலை. அதாவது முதல் மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே இருந்த உறவு மிகவும் இணக்கமாக இருந்தது. இதுதான் முதல் நிலை. இன்பமான, இனிமையான உறவு!
நான் இப்படி நினைக்கிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்த தேவனுடைய நோக்கம் சாத்தானுக்கு முழுமையாகத் தெரியாவிட்டாலுங்கூட ஓரளவுக்கு அவனுக்குத் தெரிந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரு நேர்த்தியான உறவு இருந்தால் தேவனுடைய நோக்கம் நிறைவேறிவிடும் என்பதற்காக அந்த உறவை முறிக்க, அதை சிதைக்க, உடைக்க, அதில் பிளவை ஏற்படுத்த அவனால் என்ன செய்ய முடியுமோ அதை அன்றைக்கும் செய்தான், இன்றைக்கும் செய்கிறான், நாளைக்கும் தொடர்ந்து செய்வான். தேவனுக்கும் ஆதாமுக்கும் இடையே இருந்த இந்த இணக்கமான உறவை சாத்தான் முறித்தான். அந்த உறவை முறித்ததோடு விட்டிருந்தால் பரவாயில்லை. முறிந்த நிலை மோசமான நிலைதான்.
ஆனால், அதையும் தாண்டி பல படிகள் மேலேபோய் அவனைத் தன்னோடு இணைத்துக்கொண்டான். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மனிதனுக்குத் தேவனோடு இருந்த உறவை முறித்து, அவனை அவரிடமிருந்து பிரித்து, அதன்பின் அவனைத் தன்னோடு சேர்த்துக்கொண்டான். சரியாகச் சொல்வதானால் முன்பு தேவனுக்கும் ஆதாமுக்கும் இருந்த உறவு இப்போது சாத்தானுக்கும் ஆதாமுக்கும் ஏற்பட்டுவிட்டது. ஆதாம் சாத்தானோடு ஒன்றாகிவிடுகிறான் என்றால் அது மிகையல்ல. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உறவு சரியாக இருக்கும்வரை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக்குறித்த தேவனுடைய நோக்கம் நிறைவேறும். தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவு சிதைந்துபோனால் தேவனுடைய நோக்கம் நிறைவேறாது. இதைச் செய்வதற்காகத்தான் சாத்தான் அன்றைக்கு முயன்றான், அதில் வெற்றியும் பெற்றான். இன்றைக்கும் அவனுடைய முயற்சி தொடர்கிறது.
இந்த உலகத்தில் இரண்டே இரண்டு மனிதர்கள்தான் இருக்கிறார்கள். 1 கொரிந்தியரில் பவுல் அப்படிச் சொல்லுகிறார். முதல் மனிதனாகிய ஆதாம், இரண்டாம் மனிதனாகிய இயேசுகிறிஸ்து என்று இரண்டு மனிதர்களைப்பற்றி அவர் அங்கு பேசுகிறார். இந்த இரண்டு மனிதர்களும் இந்த உலக மக்களின் இரண்டு பிரதிநிதிகள். அதுபோல இரண்டு ஆதாம்கள். ஒன்று முதல் ஆதாம், இன்னொருவர் கடைசி ஆதாமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. ஆம், அவருடைய பெயர் கடைசி ஆதாம். முதல் மனிதன், இரண்டாம் மனிதன்; முதல் ஆதாம், கடைசி ஆதாம். உலகத்தில் இருக்கும் எல்லா மக்களையும் இந்த இரண்டு ஆதாமுக்குள் வைத்துவிடலாம். ஒன்று, அவர்கள் முதல் மனிதனாகிய ஆதாமுக்குள் இருக்கிறார்கள் அல்லது கடைசி ஆதாமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிறார்கள். யாரும், “நாங்கள் கிறிஸ்துவுக்குள்ளும் இல்லை, ஆதாமுக்குள்ளும் இல்லை, நடுவில் இருக்கிறோம்” என்று சொல்ல முடியாது.
இந்த உலகத்தில் வேண்டுமானால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அதன்பின் சுயேட்சைகள் என்று சொல்லலாம். ஆனால், தேவனைப் பொறுத்தவரை ஒன்று அவர்கள் தேவனுடைய மக்கள். இல்லையென்றால், சொல்வதற்கும் கேட்பதற்கும் சற்று கடினமாகத்தான் இருக்கும், அவர்கள் சாத்தானின் மக்கள். இப்படி இரு கூட்டத்தார்கள் உண்டு.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சாத்தானை “இதோ உலகத்தின் அதிபதி வருகிறான்,” என்று குறிப்பிட்டார். சாத்தான் உலகத்தின் அதிபதி. ஒருமுறை மட்டும் அல்ல, பலமுறை அவர் அவனைப்பற்றி இப்படிச் சொன்னார். “இதோ உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றும் இல்லை. இதோ உலகத்தின் அதிபதி இப்போதே புறம்பே தள்ளப்பட்டான். இதோ உலகத்தின் அதிபதி இப்போதே நியாயந்தீர்க்கப்பட்டான்.” இப்படி அவர் அவனை “உலகத்தின் அதிபதி” என்று கூறினார். “உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கிறது,” என்று யோவான் தன் நிருபத்தில் எழுதுகிறார். “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளுடைய இருதயங்களில் பிரகாசிக்கப்படாதபடிக்கு இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்,” என்று பவுல் கூறுகிறார். சாத்தான் இப்பிரபஞ்சத்தின் தேவன் என்று பவுல் குறிப்பிடுகிறார். உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கிறது. இந்த உலகத்தின் அதிபதி சாத்தான். எனவே, இந்த உலகத்தில் ஒருவன் பிறக்கும்போதே முதல் ஆதாமின் பிள்ளையாகத்தான் பிறக்கிறான். கிறிஸ்துவை விசுவாசித்து மறுபடி பிறப்பதின்மூலமாகத் தான் அவன் மீண்டும் கிறிஸ்துவுக்குள் வருகிறானேதவிர பிறக்கும்போதே ஒருவனும் கிறிஸ்தவனாகப் பிறப்பதில்லை. எனவே, முதல் பிறப்பில் எல்லாரும் ஆதாமின் பிள்ளைகள்தான்.
முதல் நிலை தேவனுக்கும் மனிதனுக்கும், மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே இருந்த இன்பமான, அன்பான, இணக்கமான, நெருக்கமான உறவு. இரண்டாவது, அந்த உறவு முறிந்து மனிதனுக்கும் சாத்தானுக்கும் இடையே உறவு ஏற்படுகிறது. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள இந்த உறவு சரிசெய்யப்படாதவரை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக்குறித்த அவருடைய நோக்கம் நிறைவேறாது. எனவே, அதை சரிசெய்வதற்காக ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வருகிறார். அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் என்ன? மனிதன் இழந்துபோன, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே முறிந்திருந்த, உடைந்திருந்த இந்த உறவை சீர்செய்ய வேண்டும், சரிசெய்ய வேண்டும். மனிதனும் தேவனும் ஒன்றாகாதவரை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக்குறித்த தம் திட்டம் நிறைவேறாது என்று தேவனுக்குத் திட்டவட்டமாகத் தெரியும். அந்த நோக்கம் நிறைவேறுவதற்காக நாம் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள்.
இதற்காக அவர் ஒரு பெரிய விலைக்கிரயம் செலுத்த வேண்டியிருந்தது. தம் சொந்த இரத்தத்தைச் சிந்த வேண்டியிருந்தது. சிலுவை மரணத்தைச் சகிக்க வேண்டியிருந்தது. சிலுவை மரணத்தை அவர் ருசி பார்த்தார். எனவே, சிலுவை என்பது பாவமன்னிப்பைத் தந்த இடம் மட்டும் அல்ல; அது சாத்தானுடைய ஆதிக்கத்தை முறித்த இடம்; மக்களுக்கு சாத்தானோடு இருந்த உறவை முறித்து, உடைத்து அவர்களைத் தேவன் தம்மோடு சேர்த்துக்கொண்ட இடம்; சாத்தானின் ஆளுகையை முடிவுக்குக் கொண்டுவந்த இடம்; ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் மனிதனைக் கொண்டுவந்த இடம்; சாத்தான் புறம்பே தள்ளப்பட்ட இடம்; அவன் நியாயந்தீர்க்கப்பட்ட இடம்; அவனுடைய ஆதிக்கத்தின்கீழ் இருந்த மக்களையெல்லாம் விடுவித்துக்கொண்டு வந்து கிறிஸ்துவுக்கு உட்படுத்திய இடம்; சாத்தானின் அரசாட்சியை முறித்த இடம். சிலுவை ஓர் அற்புதம்! சிலுவையின் மேன்மையை, மகத்துவத்தை, மகிமையை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
இப்போது நாம் மூன்றாவது நிலையைப் பார்க்கிறோம். ஆண்டவராகிய இயேசுவை விசுவாசிக்கும்போது ஒருவன் மீண்டும் அவருக்குள் கொண்டுவரப்படுகிறான். மக்களுக்கு சாத்தானோடு இருந்த உறவை முறித்து அவர்களைத் தமக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வந்தார். எல்லாரையும், எல்லாவற்றையும் தமக்குள் அவர் கூட்டிச்சேர்க்க விரும்புகிறார்.
இந்த மூன்று நிலைகளையும் நாம் இப்படிச் சொல்லலாம். முதல் கட்டம் தேவனோடு நேரடியான உறவு. தேவனுடன் நேர்த்தியான உறவு இருந்தபோது தேவனுடைய திட்டம் அங்கு அப்பட்டமாக பளிச்சென்று தெரிகிறது. இரண்டாவது கட்டம், அந்த உறவு முறிந்து அது மனிதனுக்கும் சாத்தானுக்கும் இடையேயான உறவாக மாறிவிடுகிறது. எனவே, தேவனுடைய நோக்கம் சிதைந்துபோகிறது. மூன்றாவது, இழந்துபோன இந்த உறவை ஆண்டவராகிய இயேசு மீண்டும் சரிப்படுத்துகிறார், சீர்படுத்துகிறார், செம்மைப்படுத்துகிறார். எனவே, தொலைந்துபோன, காணாமல்போன, இழந்துபோன, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேவனுடைய நோக்கம் மீண்டும் உயிர்பெறுகிறது.
இந்த மூன்று கட்டங்களையும் நாம் இப்படிச் சொல்லலாம். முதல் கட்டம், ஆதாம் தேவனுக்குள் இருந்தான். தேவன் படைத்த எல்லாம் தேவனுக்குள் இருந்தன. ஆதாம் தேவனுக்குள் இருந்தபோது தேவனுடைய திட்டம் செயல்படுகிறது. இரண்டாவது கட்டம், அவன் வீழ்ச்சியின்மூலம் தேவனைவிட்டு வெளியேறுகிறான். அப்போது தேவனுடைய திட்டம் சிதைந்துபோகிறது. மூன்றாவது கட்டம், தேவன் தமக்கு வெளியே இருந்த மக்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மூலமாக மீண்டும் தமக்குள் கொண்டுவருகிறார்.
புதிய ஏற்பாட்டை, குறிப்பாக நிருபங்களை, வாசிக்கும்போது ‘கிறிஸ்துவுக்குள்’ என்ற வார்த்தையை யாரும் தவறவிட முடியாது. அப்போஸ்தலனாகிய பவுல் தன் நிருபங்களில் இந்த வார்த்தையைப் பல நூறு தடவைப் பயன்படுத்தியிருக்கிறார்.
கிறிஸ்தவன் என்பவன் யார்? கிறிஸ்துவுக்குள் இருப்பவன் கிறிஸ்தவன். ஆதாம் தேவனுக்குள் இருந்தவன். மனிதன் இந்தப் பூமியில் பிறக்கும்போது தேவனற்றவனாகத்தான் பிறக்கிறான். ஒருவனும் கிறிஸ்துவோடு பிறப்பதில்லை. ஒருவனும் கிறிஸ்தவனாகப் பிறப்பதில்லை. இயற்கையான பிறப்பால் யாரும் கிறிஸ்தவனாக இருக்க முடியாது.
கிறிஸ்துவற்ற நிலையில் பிறக்கிற மக்களை அப்படி அந்த நிலையிலேயே வைத்துக்கொள்ள சாத்தான் பிரியப்படுகிறான், பிரயத்தனம் செய்கிறான். எத்தனைபேரை எவ்வளவு காலத்துக்கு அப்படி வைத்துக்கொள்ள முடியுமோ அப்படி வைத்துக்கொள்ள அவன் முயற்சிக்கிறான். இது ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதைப்போன்றது. எந்த ஆட்சியாளனாவது தங்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை இழக்கச் சம்மதிப்பானா? தங்கள் கட்சியின் உறுப்பினர்களை இழந்துபோனால் தங்கள் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அவர்களுக்குத் தெரியாதா? இது சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அவன் தன் குடிமக்களை இழக்கச் சம்மதிக்க மாட்டான். தன் ஆட்சியை இழக்க விரும்பமாட்டான். தன் உறுப்பினர்களோடு தன் ஆட்சியைத் தொடர விரும்புகிறான். எனவே, தன் ஆளுகையின்கீழ், தன் ஆதிக்கத்தின்கீழ், தன் அரசாட்சியின்கீழ் இருக்கக்கூடிய எந்த மனிதனையும் அவன் இழக்கச் சம்மதிக்கமாட்டான், விரும்பமாட்டான். மக்கள் இரட்சிக்கப்படுவது ஏன் அரிதாயிருக்கிறது என்று நாம் சில சமயங்களில் ஆச்சரியப்படுவதுண்டு. “என் சாட்சி சரியில்லையோ! என் வாழ்க்கை சரியில்லையோ! போதுமான அளவுக்கு நான் கிறிஸ்துவை வெளிக்காண்பிக்கவில்லையோ?” என்ற கேள்விகள் எழும். இப்படிப்பட்ட எண்ணங்கள் எழுவதை நான் பாராட்டுகிறேன்.
ஆனால், சாத்தானுடைய கையிலிருந்து ஒரு மனிதனைக் கிறிஸ்துவுக்குள் கொண்டுவருவது ஒரு பனிப்போரைவிடக் கடுமையானது. உலகத்தில் நடக்கிற பல பனிப்போர்கள் நிச்சயமாக ஒருநாள் முடிவுக்கு வந்துவிடும். ஆனால், சாத்தானுடைய ஆளுகையின்கீழ் இருக்கிற ஒரு மனிதனை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் கொண்டுவருவதற்குக் கடுமையான போராட்டம் உண்டு. இதற்குத் தேவனுடைய கிருபை அதிகமாக தேவை. திறப்பின் வாசலில் நிற்க வேண்டும்.
சாத்தான் ஆதாமைத் தேவனைவிட்டுப் பிரித்துக்கொண்டுபோனான். மனிதனை தேவனைவிட்டுப் பிரித்துக்கொண்டுபோனது சாத்தானுக்கு அன்று இன்பமாக இருந்தது. இன்றைக்கும் இன்பமாக இருக்கிறது. மனிதனைத் தேவனுக்கு வெளியே கொண்டுபோய் விடவேண்டும். சாத்தான் தன் வஞ்சகத்தால் ஆதாமை தேவனுக்கு வெளியே, தேவனைவிட்டு, கொண்டு போனான். அதே தந்திரத்தைப் பயன்படுத்தி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையும் தேவனுக்கு வெளியே கொண்டுபோய்விடலாம் என்று சாத்தான் நினைத்தான். அதற்காக அவன் பலமுறை முயன்றான்.
முதலாவது, ஆதாம் தேவனுக்குள் இருந்தான். இரண்டாவது, அவன் தேவனைவிட்டு வெளியேபோய் சாத்தானோடு சேர்ந்துகொண்டான். மூன்றாவது, தேவனுக்கு வெளியே இருந்த மனிதர்களைத் தேவனுக்குள் கொண்டுவருவதற்காக ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வருகிறார். முதல் ஆதாமில் சாத்தான் வெற்றி பெற்றான். எனவே, அதே மமதையோடு கடைசி ஆதாமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் தேவனுக்கு வெளியே இழுக்க அவன் முயன்றான். ஆனால், தோற்றுப்போனான், படுதோல்வி.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்ததுமுதல் சிலுவைக்குச் செல்லும்வரை சாத்தான் அவரில் பல தந்திரங்களைக் கையாண்டான். எப்படியாவது அவரைத் தேவனுக்கு வெளியே கொண்டுபோய்விட வேண்டும் என்பதற்காகக் கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தான். அவருடைய நிலையிலிருந்து அவரை இழுத்துக்கொண்டு போய்விடப் பிரயத்தனம் பண்ணினான்.
யோவான் சுவிசேஷத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இப்படிச் சொல்லுகிறார்: “நான் சுயமாய் வரவில்லை. பிதா என்னை அனுப்பினார், எனவே நான் வந்தேன். நான் சுயமாய்ப் பேசவில்லை, பிதா பேசுகிறார். நான் கேட்கிறேன், எனவே பேசுகிறேன். நான் என் சுயசித்தத்தைச் செய்யவில்லை. நான் என் சுய மகிமையைத் தேடவில்லை. எனக்கு விருப்பமான இடத்துக்கு நான் செல்லவில்லை.” நான் சுயமாய் வரவில்லை. சுயமாய்ப் பேசவில்லை, சுயமாய்ச் செய்யவில்லை, சுயமாகக் கிரியைகள் நடத்தவில்லை, என் சுயசித்தத்தைச் செய்யவில்லை, என் சுயமகிமையைத் தேடவில்லை.
இது என்ன? அவர் ஒரு தளத்தில் நின்று கொண்டார். அது என்ன தளம்? ஆதாம் இழந்துபோன தளம், அவன் தேவனுக்குள் இருந்திருக்க வேண்டும். ஆனால், இருக்கவில்லை. அந்தத் தளத்தை விட்டு வெளியேறிவிட்டான். வேறு ஒரு தளத்துக்குள் சென்றுவிட்டான். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். “நான் என் பிதாவில் இருக்கிறேன். நான் இந்தத் தளத்தைவிட்டு வெளியே போகமாட்டேன்” (யோவான் 16:20). அவர் சொல்லுகிறார். “நான் எப்போதும் என் பிதாவில் இருக்கிறேன். என் பிதாவை விட்டு நான் வெளியே போவதில்லை. அவர் என்ன செய்யச் சொல்லுகிறாரோ அதை நான் செய்கிறேன். அவர் எங்கு போகச் சொல்லுகிறாரோ, அங்கு நான் போகிறேன். அவர் என்ன பேசச் சொல்லுகிறரோ, அதை நான் பேசுகிறேன். அவர் எந்த மகிமையைத் தேடச் சொல்லுகிறாரோ அதைத் தேடுகிறேன்,” என்கிறார். அவர் தன் சொந்த வாழ்க்கையை வாழவில்லை. அவர் அந்த நிலையில் நின்றுகொண்டார்.
ஆதாமை வெளியே கொண்டுவந்ததுபோல் இவரையும் கொண்டுவர சாத்தான் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தான். தேவனுடைய நோக்கம் நிறைவேற வேண்டுமானால் தான் பிதாவுக்குள்தான் இருந்தாக வேண்டும் என்பது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு நன்றாகத் தெரியும். பிதாவை விட்டு வெளியே போய்விட்டால் தம்மைக்குறித்த பிதாவின் நோக்கம் நிறைவேறாது என்று இயேசுகிறிஸ்துவுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தத் தளத்தைவிட்டு அவர் ஒருபோதும் வெளியே போகவில்லை. மனுஷகுமாரன் என்ற நிலையைவிட்டு அவர் விலகவில்லை. தேவகுமாரன் என்ற நிலைக்குள் அவரைத் தள்ள சாத்தான் எத்தனையோ முயற்சிகள் செய்தான். ஆனால், அவன் வெற்றி பெறவில்லை, படுதோல்வியடைந்தான்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம் சிலுவை மரணத்தின்மூலம் நம்மை இந்தத் தளத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டான், புறம்பே தள்ளப்பட்டான். பிரபஞ்சத்தின் தேவன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டான்.
பிதா இல்லாமல் சுயமாகக் காரியங்களைச் செய்வதற்கு இயேசுவைத் தள்ளிவிட முடியாதா என்று சாத்தான் பயங்கரமாக முயன்றான். தாமாக செயல்பட வைத்துவிட வேண்டும், சுயமாக நடக்கச் செய்துவிட வேண்டும், பிதாவுக்கு வெளியே கொண்டுபோய் அவருக்கு ஓர் உலகத்தை உருவாக்கி அதில் அவரைச் செயல்பட வைத்துவிட்டால்...அப்படியானால் இவரும் தேவனுக்கு வெளியே போய்விடுவாரே! முதல் ஆதாமுக்கு என்ன சம்பவித்ததோ அதே காரியம் இவருக்கும் சம்பவித்துவிடும் அல்லவா? அப்போது சாத்தான் வெற்றி பெற்றதாகிவிடுமல்லவா?
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையில் சாத்தான் நினைத்தது நடக்கவேயில்லை. அவர் நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தபின் சாத்தான் அவரிடத்தில் வருகிறான். அவர் பசியோடு இருக்கிறார். அப்போது அவன் அவரைப் பார்த்து, “கல்லுகளை அப்பங்களாக்கிச் சாப்பிடும்,” என்று சொல்லுகிறான். நல்ல ஆலோசனை! அந்த ஆலோசனையில் எந்தத் தவறும் இருப்பதுபோல் தோன்றவில்லை. அவர் பசியாயிருக்கிறார். அவருக்கு உடனடியாக சாப்பாடு தேவை. அது மட்டும் அல்ல. கல்லுகளை அப்பங்களாக மாற்றவும் அவரல் முடியும். அந்த வல்லமை அவரிடம் இருக்கிறது. நாம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தால் என்ன செய்வோம்? ஒரு தேவை இருக்கிறது. அந்தத் தேவையை நிறைவாக்கக்கூடிய ஆற்றலும் நமக்கிருந்தால் நாம் எப்படி செயல்படுவோம்? ஆனால், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சாத்தானின் சொல்லைக் கேட்கவில்லை. அவர் தம் தளத்தில் உறுதியாக நின்றுகொண்டார். அவர் பிதாவுக்கு வெளியே செல்லவில்லை.
சாத்தான் அவரை உயர்ந்த மலையில்மேல் கொண்டுபோய் நிறுத்தி, உலகத்தின் மகிமையையெல்லாம் அவருக்குக் காண்பித்து, தன்னை வணங்கினால் அதைத் தருவதாகச் சொன்னான். ஆனால், இயேசு கிறிஸ்து அவனுடைய ஆலோசனைக்கு உட்படவில்லை. சாத்தான் சொன்னதின் பொருள் என்ன? “இந்த உலகமெல்லாம் ஒருநாள் உம் பாதங்களின்கீழ் வரும்தானே! அதை அடைவதற்கு நான் ஒரு வழி சொல்லுகிறேன். சிலுவைக்குச் சென்று, பாடுபட்டு, உயிர்த்து அதன்பின் ஆளுகைக்கு வரவேண்டாம். இதோ! ஒரு குறுக்குவழி. என்னை ஆராதித்தால் போதும், இவையெல்லாவற்றையும் உமக்குத் தந்து விடுகிறேன்.” இயேசுகிறிஸ்து தன் தளத்தில், நிலையில் நின்றார். “இல்லை. சாத்தானே, நீ நினைப்பதுபோல் அல்ல. நான் என் பிதாவில் இருக்கிறேன். என் பிதா எனக்குத் தராத எதுவும் எனக்குத் தேவையில்லை. இந்த உலகம் ஒருநாள் என்னுடையதாக மாறும். ஆனால், அதற்கு உன் உதவி தேவையில்லை. நீ சொல்லுகிற வழியும் தேவையில்லை.” இதுதான் இயேசுகிறிஸ்துவின் நிலை. அவர் தன் இடத்தை விட்டு வெளியேவரவில்லை. அவர் பிதாவில், சுகமாக இருந்து கொண்டார்.
கீழே குதிக்கச் சொன்னான். அவர் குதித்தால் தேவதூதர்கள் அவரைத் தாங்குவார்களா? நிச்சயமாகத் தாங்குவார்கள். ஆனால், அவரோ “என் பிதா செய்யச் சொல்லவில்லை. எனவே செய்ய மாட்டேன்; அவர் குதிக்கச் சொல்லவில்லை. எனவே, குதிக்கமாட்டேன்”.
அவருடைய சகோதரர்கள் ஒருநாள் அவரைப் பார்த்து, “நீர் எருசலேமுக்குப் போய் உம்மைப் பெரிய ஆளாகக் காட்டும்,” என்று ஆலோசனை சொன்னார்கள். அவர் மறுத்துவிட்டார். கெத்செமனே தோட்டத்தில் பேதுரு வாளை உருவி ஒரு போர்வீரனின் காதை வெட்டியவுடன், அவர், “சபாஷ், நல்ல சீடன் இப்படித்தான் இருக்க வேண்டும்,” என்று அவனைப் பாராட்டவில்லை. சமாரியா வழியாகப் போகும்போது அந்த ஊர்க்காரர்கள் அவரைத் தங்கள் ஊர் வழியாகப் போக அனுமதிக்கவில்லை. அவருடைய சீடர்கள் வானத்திலிருந்து அக்கினியை இறக்கட்டுமா என்றபோது மறுத்தார். சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது இடது பக்கத்துக் கள்ளனும், மற்றவர்களும், “நீ தேவனுடைய குமாரனேயானால் கீழே இறங்கி வா. அப்போது நாங்கள் உன்னை விசுவாசிப்போம்,” என்று சொன்னபோது மனுஷகுமாரன் என்ற தன் நிலையைவிட்டு அவர் வெளியே வரவில்லை.
அப்போஸ்தலனாகிய பவுல் அத்தேனே பட்டணத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, அந்த மக்களைப் பார்த்து ஒரு காரியம் சொன்னார்: “ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்” (அப். 17:28). கொலோசெயருக்கு எழுதிய நிருபத்தில் இப்படிச் சொல்லுகிறார்: *“ஆகையால் நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்து கொண்டு... பெருகுவீர்களாக,”*என்று கூறுகிறார். கிறிஸ்துவுக்குள் வேர்கொள்ளுங்கள், கிறிஸ்துவுக்குள் நடந்துகொள்ளுங்கள். கிறிஸ்துவின்மேல் கட்டப்படுங்கள். கிறிஸ்துவைவிட்டுத் தூரமாக இருக்கக்கூடிய மக்களைக் கிறிஸ்துவுக்குள் கொண்டுவரவேண்டும் என்பதற்காகத்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இப்படிப்பட்ட ஒரு மாபெரும் காரியத்தைச் செய்து முடித்தார்.
“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17) என்றும், “கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை. புது சிருஷ்டியே காரியம்” (கலா. 6:15) என்றும், “கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே” (கலா. 4:27) என்றும் பவுல் கூறுகிறார். கிறிஸ்துவுக்குள்... கிறிஸ்துவுக்குள்...தேவன் நம்மை ஏற்றுக்கொண்டிருக்கிறார். யாருக்குள்? கிறிஸ்துவுக்குள். தேவன் நம் பாவங்களை மன்னித்தார். யாருக்குள்? கிறிஸ்துவுக்குள். தேவன் நம்மை உட்காரவைத்தார். யாருக்குள்? கிறிஸ்துவுக்குள். தேவன் நம்மை நேசிக்கிறார். யாருக்குள்? கிறிஸ்துவுக்குள். நாம் கிறிஸ்துவுக்கு வெளியே போய்விட்டால் தேவன் நம்மை நேசிப்பதற்கு நம்மிடம் ஒன்றும் இல்லை. நாம் கிறிஸ்துவுக்கு வெளியே போய்விட்டால் தேவன் நம் செயல்பாடுகளை அங்கீகரிக்க முடியாது.
ஊசா உடன்படிக்கைப்பெட்டியைக் கீழே விழாமல் தாங்கிப்பிடித்ததால் தேவன் அவன் செயலை அங்கீகரித்தாரா? சாமுவேல் தீர்க்கதரிசி வரத் தாமதமானதால் சவுல் பலிகளைச் செலுத்தியதால் தேவன் அதை அங்கீகரித்தாரா? ஏற்றுக்கொண்டாரா? கிறிஸ்துவுக்கு வெளியே நம் பாவங்கள் மன்னிக்கப்பட என்ன வழி? ஒரு வழியும் இல்லை.
எனவே, “கிறிஸ்தவன்” என்பது ஒரு சாதாரணமான காரியம் இல்லை. நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் இந்தப் பூமியில் கிறிஸ்தவனாக இருப்பதற்கு நோக்கம் உண்டு. நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன், கிறிஸ்துவுக்குள் அசைகிறேன், கிறிஸ்துவுக்குள் வாழ்கிறேன். நான் கிறிஸ்துவுக்குள் வேர்கொள்ளுகிறேன், நான் கிறிஸ்துவில் நடக்கிறேன், கிறிஸ்துவில் கட்டப்படுகிறேன். என்னே அற்புதம்!
இப்போது ஒரு கேள்வி எழும். தேவனுடைய நோக்கம்தான் என்ன? “காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள் கூட்டப்பட வேண்டும்” (எபேசியர் 1:9,10). தேவனுடைய நோக்கம் என்ன? தேவனுடைய நோக்கத்தின் மையம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவரைக்குறித்த நோக்கம் நிறைவேறுவதற்கு நீங்களும், நானும், சபையும் வேண்டும். அவருக்காகத்தான் நீங்கள், நான், சபை. வெற்றிடத்தில் தேவனுடைய நோக்கம் நிறைவேறாது. அவரைக்குறித்த தேவனுடைய நோக்கம் நிறைவேற சபை வேண்டும். கூட்டங்கள் வேண்டும், கூடுதல்கள் வேண்டும், மக்கள் வேண்டும், தேவனுடைய மக்கள் வேண்டும். தேவனுடைய மக்கள் அவருக்கு ஒரு கூட்டுப் பாத்திரம். தேவனுடைய மக்கள் அவருக்கு ஒரு கருவி.
காலத்தின் முடிவில் எல்லாம்--பரலோகத்திலுள்ளவைகளும், பூலோகத்திலுள்ளவைகளும்--கிறிஸ்துவின் தலைமைக்குள் கூட்டப்பட வேண்டும். அதன் பொருள் என்ன? எல்லாம் கிறிஸ்துவின் தலைமைக்குள் வரவேண்டும். அவர் எல்லாவற்றுக்கும் எல்லாருக்கும் தலையாக இருக்க வேண்டும். எல்லாம் அவருடைய ஆளுகையின்கீழ், அதிகாரத்தின்கீழ், ஆட்சியின்கீழ் வரவேண்டும். இவருக்கு மிஞ்சி ஒன்றும் இருக்கக்கூடாது. இவருக்குக் குறைவாகவும் எதுவும் இருக்கக்கூடாது. இன்று எல்லாம் கிறிஸ்துவின் தலைமைக்குள் இல்லை. தேவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்த இப்படிப்பட்ட ஓர் உன்னத நோக்கத்தை வைத்திருக்கிறார். தேவன் இப்பிரபஞ்சம் முழுவதிலும் இயேசு கிறிஸ்துவைத்தவிர வேறொன்றையும் பார்க்க விரும்பவில்லை. ஒரு தனிமனிதனில் ஆரம்பித்து, குடும்பம், சபை, நாடுகள், பிரபஞ்சம் என்று எல்லாவற்றையும், எல்லாரையும் கிறிஸ்துவைக்கொண்டு அவர் நிரப்ப விரும்புகிறார். “அவரே சர்வத்துக்கும் சுதந்தரவாளி” (எபி. 1:2). எல்லாவற்றுக்கும் அவரே சுதந்தரவாளி, சொந்தக்காரர், வாரிசு, உரிமையாளர். “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும். துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும் சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது” (கொலோ. 1:16). “சகலமும் அவர்மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” (யோவான் 1:3) சகலமும் அவர்மூலமாய், அவரைக்கொண்டு, அவருக்கென்று உண்டாக்கப்பட்டன. எனவே இவர் சர்வத்துக்கும் சுதந்தரவாளி, சொந்தக்காரர், வாரிசு, உரிமையுள்ளவர்.
ஒருமுறை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஓர் உவமையைச் சொன்னார். ஒருவனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. தோட்டக்காரன் அந்த தோட்டத்தைக் குத்தகைக்கு கொடுத்துவிட்டு தூர தேசத்துக்குச் செல்கிறான். காலம் நிறைவேறும்போது, குத்தகைக்காரனிடம் கனிகளை வாங்கி வரும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்புகிறான். அனுப்பிய எல்லா வேலைக்காரர்களையும் குத்தகைக்காரன் பிடித்து, அடித்து, கொலைசெய்கிறான். அனுப்பிய எல்லா வேலைக்காரர்களையும் துன்புறுத்துகிறான், சித்திரவதைசெய்கிறான். “சரி, வேலைக்காரர்களைத்தான் மதிக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, அங்கீகரிக்கவில்லை. என் மகனையாவது மதிப்பார்கள்,” என்று நினைத்து அவன் தன் மகனை அனுப்புகிறான். மகன் வருகிறான். மகனைக் கண்டவுடன், “இந்தத் தோட்டத்துக்கு இவன்தான் சுதந்தரவாளி. இந்தத் தோட்டத்துக்கு இவன்தான் சொந்தக்காரன், உரிமையுள்ளவன், வாரிசு. இவனைத் தீர்த்துக்கட்டிவிட்டால் இந்தத் தோட்டம் நமக்குச் சொந்தமாகிவிடுமே,” என்று நினைத்து அவனைத் தோட்டத்துக்கு வெளியே கொண்டுபோய் கொலைசெய்தார்கள் (மத்.21:33-39).
ஒருநாள் எல்லாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தலைமையின்கீழ் வரும். எல்லாம் அவரைக் கொண்டு நிரப்பட்டிருக்கும்.
தேவனுடைய மையம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மையமாகவைத்து என்ன செய்ய வேண்டும் என்று தேவன் நினைத்திருக்கிறாரோ, அத்தனை காரியங்களும் உங்களுக்கும், எனக்கும் சம்பவிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அது என்ன?
ரோமர் 8:17 ஓர் அற்புதமான வசனம். “நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரருமாமே, கிறிஸ்துவுக்கு உடன்-சுதந்தரருமாமே. நாம் பிள்ளைகளானால் வாரிசுகளாமே, வாரிசுகளானால் தேவனுடைய வாரிசுகளாமே, கிறிஸ்துவுக்கு உடன்-வாரிசுகளாமே. நாம் பிள்ளைகளானால் சொந்தக்காரர்களாமே, தேவனுடைய சொந்தக்காரர்களாமே, கிறிஸ்துவுக்கு உடன் சொந்தக்காரர்களாமே. நாம் பிள்ளைகளானால் உரிமைக்காரர்களாமே, தேவனுடைய உரிமைக்காரர்களாமே, கிறிஸ்துவுக்கு உடன்-உரிமைக்காரர்களாமே.” தேவன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை வாரிசாக நியமித்திருக்கிறார். பரலோகத்திலுள்ளவைகள் பூலோகத்திலுள்ளவைகள் எல்லாம் கிறிஸ்துவின் தலைமையின்கீழ் கூட்டிச்சேர்க்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு என்ன சம்பவிக்குமோ அது நமக்கும் சம்பவிக்கும், சம்பவிக்க வேண்டும்.
தேவனுடைய இருதயம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்மேல்தான் இருக்கிறது. தேவனுடைய இருதயம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு வெளியே இல்லை, அவருக்கு வெளியே இருக்கிற எதிலும் அவருடைய இருதயம் இல்லவே இல்லை. அவை எப்பேர்ப்பட்ட உயர்ந்தவைகளாக இருந்தாலும் சரி, ஆவிக்குரியவைகளைப்போல் தோன்றினாலும் சரி, நல்லவைகளாகத் தோன்றினாலும் சரி, வேதாகமத்துக்குரியவைகள்போல் தோன்றினாலும் சரி, தேவனுடைய இருதயம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்மேல்தான் இருக்கிறது. அவர்தான் அவருடைய மையம். அவரைத்தவிர வேறொன்றிலும் அவருக்கு நாட்டமோ, ஈடுபாடோ, அக்கறையோ, கரிசனையோ இல்லை.
தேவனுடைய இருதயம் நம்மேல் இருக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? என்னுடைய இருதயம் இயேசுவின்மேல் இருக்க வேண்டும். நான் கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டும். தேவனுடைய பார்வை முழுக்க முழுக்க கிறிஸ்துவின்மேல்தான் இருக்கிறது. நான் கிறிஸ்துவுக்குள் இருந்தால் தேவனுடைய பார்வை என்மேல் விழும். அவர் என்மேல் பிரியமாயிருப்பார். தேவன் இந்தப் பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறார் என்றால், நான் அவர் செல்கிற பாதையில் அவர் கண்ணில் படும்படி நிற்க வேண்டும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எரிகோவுக்குச் செல்கிறார். அவர் போகிற பாதையை அறிந்த சகேயு ஒரு காட்டத்திமரத்தில் ஏறி உட்கார்ந்து கொள்கிறான். ஏன்? அவர் பார்வை தம்மேல் படாதா? “அவர் இந்த வழியாகத்தான் வருவார், நான் அவரைப் பார்க்கலாம்.” எனவே, அவர் போகிற பாதையில் நான் நின்றால் அவர் பார்வை என்மேல் விழும்.
அதுபோல, நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது மட்டுமே தேவனுடைய பார்வை நம்மேல் விழும். அப்போதுதான் தேவனுடைய கரிசனை, அக்கறை, ஈடுபாடு, வழிகாட்டுதல், நடத்துதல், இடைப்படுதல் ஆகியவை நம்மேல் இருக்கும். கிறிஸ்துவுக்குள் இருக்கும்போதுதான் இவைகள் நடக்கும். கிறிஸ்துவுக்கு வெளியே போய்விட்டால் அவருடைய நடத்துதல், வழிகாட்டுதல், இடைப்படுதல், கரிசனை அவ்வளவு துல்லியமாக, திட்டவட்டமாக இருக்காது. அவ்வளவு அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இன்று மக்கள் அதிகமாக கைபேசி பயன்படுத்துகிறார்கள். சில சமயங்களில் யாரையாவது அழைக்கும்போது, “நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்,” என்ற பதில் வரும். அதுபோல ஒருவன் கிறிஸ்துவுக்குள் இல்லையென்றால் அவன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறான் என்று பொருள். எவ்வளவு விலையுயர்ந்த கைபேசியாக இருந்தாலும் அதனால் பயன் இல்லை.
தேவன் இயேசுகிறிஸ்துவை சர்வத்துக்கும் வாரிசாக வைத்திருக்கிறார். நாமும் கிறிஸ்துவின் உடன் வாரிசுகளாக இருக்கிறோம். நாம் இப்போது தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். எபேசியர் நிருபத்தில் அப்படி வாசிக்கிறோம். எபேசியர் நிருபம் அற்புதமான நிருபம். பவுலின் நிருபங்களை மூன்று வகைகளாகப் பிரிப்பார்கள். அவருடைய நிருபங்கள் மொத்தம் பதினேழு. சில சபைகளில் சில பிரச்சினைகள் இருந்தன. எனவே, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அவர் சில நிருபங்களை எழுதினார். எடுத்துக்காட்டாக கலாத்தியருக்கு எழுதிய நிருபம், கொரிந்தியர்களுக்கு எழுதின நிருபம். அந்தச் சபைகளில் பிரச்சினைகள் இருந்தன. பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்ற நோக்கத்தில் அந்த நிருபங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
வேறு சில நிருபங்களை குறிப்பிட்ட சில நபர்களுக்கு எழுதினார். தீமோத்தேயுவுக்கு, தீத்துவுக்கு, பிலேமோனுக்கு எழுதின நிருபம். குறிப்பிட்ட நபர்களுக்கு.
வேறு சில நிருபங்களைப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவோ அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கோ எழுதவில்லை. மாறாக அவைகளில் ‘கிறிஸ்தவ விசுவாசம்’, “சபை” போன்ற பொதுவான காரியங்களைப்பற்றி எழுதினார். அப்படி எழுதப்பட்ட ஓர் அற்புதமான நிருபம் எபேசியருக்கு எழுதப்பட்ட நிருபம்!
இந்த நிருபத்தில் பவுல் நம் தெரிந்துகொள்ளுதலைப்பற்றி எழுதுகிறார். அவர் நம்மை எப்போது தெரிந்துகொண்டாராம்? உலகத் தோற்றத்திற்குமுன்பே தேவன் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொண்டார் (எபே. 1:4). நேற்று இன்றல்ல, உலகத்தை உருவாக்குவதற்குமுன்பே. நான் ஏற்கெனவே சொன்னேன், போனால் போகிறது என்பதுபோல தேவன் இந்த உலகத்தை சிருஷ்டிக்கவில்லை. சிலர் இப்படிச் சொல்வதை கேட்டிருக்கிறேன். “ஏதோ பிறந்துவிட்டோம்! ஏதோ இருக்கிறோம்! எப்படியோ வாழ்க்கை போகிறது!” என்று விரக்தியில் பேசும் மக்களைப் பார்த்திருக்கிறேன். “நாமெல்லாம் சொல்லி வைத்தா பிறந்தோம்?” விரக்தி.
தேவன் இப்படி ஒருபோதும் நினைப்பதில்லை. உலகத் தோற்றத்திற்குமுன்பே தேவன் நம்மை கிறிஸ்துவுக்குள் முன்குறித்தார். நம்முடைய வாழ்க்கை கடந்த நித்தியத்திலிருந்து வரப்போகிற நித்தியம்வரை கிறிஸ்துவோடு இணைந்திருக்கிறது. தேவன் நம்மை ஏனோதானோவென்று உருவாக்கவில்லை. நாம் முன்குறிக்கப்பட்டவர்கள், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், உலகத் தோற்றத்திற்குமுன்பே கிறிஸ்துவுக்குள் முன்குறித்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கிறிஸ்துவுக்குள் கொண்டுவந்தார்.
என் பிரிய சகோதர சகோதரிகளே, நாம் கிறிஸ்துவுக்குள் இருப்பது ஒரு மிகப் பெரிய பாக்கியம். கிறிஸ்தவனாக இருப்பதற்கு என்ன பொருள்? ஆதாம் இழந்த, ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீட்ட, அந்தத் தளத்துக்குள், அந்த மண்டலத்துக்குள், நான் இருக்கிறேன். தேவன் இந்த மகத்தான செயலை செய்து முடித்திருக்கிறார். நான் இருக்கும் இடம் கிறிஸ்துவுக்குள்
அப்போஸ்தலனாகிய பவுல் அத்தனை வருடங்கள் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றியபிறகும், “நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்பட விரும்புகிறேன்,” என்று எழுதுகிறார் (பிலி. 3:9). அதாவது “ஒருவன் என்னைக் காணவிரும்பினால், என்னைக் காணவேண்டிய இடம் கிறிஸ்து.” அதாவது “என் முகவரி கிறிஸ்து,” என்று பவுல் கூறுவதுபோல் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு முகவரி உண்டு: இடம், தெரு, வீட்டு எண். அதுபோல பவுல் சொல்லுகிறார், “என் முகவரி கிறிஸ்து. என்னை நீங்கள் சந்திக்க விரும்பினால் கிறிஸ்துவிடம் வாருங்கள். வேறு எங்கும் என்னைக் காணமுடியாது.” கிறிஸ்தவனுக்கு வேதம் கொடுக்கிற முகவரி ‘கிறிஸ்துவுக்குள்.’ உன் உண்மையான முகவரி என்னவென்றால் ‘கிறிஸ்துவுக்குள்.’ மக்கள் நம்மைச் சந்திக்கவேண்டிய இடம் ‘கிறிஸ்துவுக்குள்.’ “கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்பட விரும்புகிறேன்”. இது பவுலின் வாஞ்சை. ஒருவன் என்னைக் காணவிரும்பினால் நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்பட விரும்புகிறேன்.
எனவே, கிறிஸ்துவின் சரீரம் எதற்காக? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்த இந்த உயர்ந்த, உன்னத நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால்.. வேதம் சொல்லுகிறபடி நாம் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்கள் (ரோமர் 9:28), அவருடைய நோக்கத்தின்படி அழைக்கப்பட்டவர்கள்--நாம் தற்செயலாகத் தேவனைத் தெரிந்துகொள்ளவில்லை அல்லது தேவனும் நம்மைத் தற்செயலாகத் தெரிந்துகொள்ளவில்லை. அவருடைய நோக்கத்தின்படியே முன்குறிக்கப்பட்டு, தெரிந்துகொள்ளப்பட்டு, அழைக்கப்பட்டிருக்கிறோம். இப்போது கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம். அப்படியானால் சபை எதற்காக, இந்தக் கூட்டங்கள் எதற்காக? சபை என்றால் என்ன? எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவுதான் சபை. சபை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நிறைவு. அப்படி இருக்க வேண்டும். சபை உபதேசங்களுக்கோ, பாரம்பரியங்களுக்கோ, சடங்குகளுக்கோ சாட்சி அல்ல. சபை கிறிஸ்துவின் நிறைவாக இருக்க வேண்டும்.
அவர் எப்படி வாரிசாக இருக்கிறாரோ அவர் எவைகளையெல்லாம் சுதந்தரித்துக்கொள்வாரோ அவைகளை அவரோடு கூடச்சேர்ந்து சுதந்தரித்துக்கொள்வதற்காக ஒரு கூட்டம் தேவ மக்களை தேவன் ஆயத்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார். எபேசியர் 3ஆம் அதிகாரம் 20, 21ஆம் வசனங்களைப் பாருங்கள். சபையிலே கிறிஸ்து இயேசுவின்மூலமாய் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக, ஆமென்.