Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

சட்டவாதத்தின் ஆபத்து

Translated from the original article, “Beware of legalism” By Harry Foster வேத வாசிப்பு: அப். 27:9-26, 44

சட்டவாதத்தைக்குறித்து நாம் அநேகப் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும், கற்றுக் கொள்ள வேண்டும்; கிருபையில் நிற்பது என்றால் என்ன, சட்டவாதத்தைக்குறித்த மனப்பாங்கு என்றால் என்ன, இரண்டுக்குமிடையேயுள்ள வித்தியாசம் என்ன என்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான பாடமாகும். அஞ்சா நெஞ்சுடையவர்களைக்கூட ஆட்டங்காணச்செய்திருக்கக்கூடிய, மிகவும் துணிச்சல்வாய்ந்தவர்களைக்கூடத் துவண்டுவிடச் செய்திருக்கக்கூடிய பேராபத்துக்களிலிருந்து, நெருக்கடியிலிருந்து தேவனுடைய கிருபையை அறிந்த ஒரு மனிதனின் இன்ப சத்தம் தொனித்தது: “ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்டபடியே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்.” சட்டம் ஆட்சிசெய்திருந்தால் பவுலுக்கோ அல்லது நூற்றுக்கு அதிபதிக்கோ அல்லது கப்பலின் மாலுமிக்கோ அல்லது கப்பலின் எஜமானுக்கோ எந்த எதிர்காலமும் இருந்திருக்கவே இருந்திருக்காது. “இனி தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுவதும் அற்றுப்போயிற்று,” என்று லூக்கா குறிப்பிட்டிருப்பதுபோல்தான் நடந்திருக்க வேண்டும். அவர்கள் பிழைப்பதற்கு வழியேயில்லை. ஆயினும், தேவனுடைய கிருபை ஆட்சிசெய்வதால் அது ஒரு பொய்யான பயமாக மாறிற்று; அவர்கள் திடமனது பெற்று , நம்பிக்கையுடன் முன்னேறிச்செல்ல முடிந்தது.

சட்டவாதத்தைப்பற்றிய காரியத்தில் மனிதனுடைய மனப்பாங்கு

சட்டவாதம் பேராபத்தானது; ஆயினும், அதைவிடப் பயப்படத்தக்க வேறொரு ஒரு பெரிய ஆபத்து இருப்பது அரிது. பழைய ஏற்பாட்டில் மனித இருதயத்தின் இப்பேர்ப்பட்ட மனப்பாங்கை நாம் அடிக்கடி எதிர்கொள்ளுகிறோம்; அந்த மனப்பாங்கு இலவசமான கிருபை என்ற தேவனுடைய தளத்தை ஏற்றுக்கொள்வதற்குப்பதிலாக சட்டப்பிரகாரமான தன் சொந்தத் தளத்தைத் தெரிந்தெடுக்கிறது. சட்டவாதம் ஒரு குற்றம், தவறு; இது தேவபக்தியற்றவர்கள் செய்கிற தவறல்ல; மாறாக, தேவன்மேல் ஊக்கமான பக்திவைராக்கியம் கொண்டவர்கள் செய்கிற தவறாகும். புதிய ஏற்பாட்டிலும், குறிப்பிடத்தக்க இதே காட்சி தேவனுடைய மக்களிடையே மீண்டும் தோன்றுகிறது. கலாத்தியர்களைப்போல, இவர்கள் மனந்திரும்பியபோது இவர்களே இடித்துப்போட்ட கட்டிடத்தை இவர்களே மீண்டும் கட்டுகிற ஆபத்து எப்போதும் இருக்கிறது. இலவசமான கிருபை என்ற தளத்தில் காணப்பட்டபிறகு, அதைவிட்டுவிட்டு அவர்கள் மிக வேகமாக விலகிச்சென்றுவிடுகிறார்கள். விசுவாசத்தில் ஆரம்பித்தபிறகு கிரியைகளினாலே பரிபூரணப்பட நாடுகிறார்கள்.

இந்த மனப்பாங்கு புதிய ஏற்பாடோடு முடிந்துவிடவில்லை. தற்காலத்திய கிறிஸ்தவத்தில் காணப்படுகிற ஏராளமான மதப்பிரிவுகள், வேதப்புரட்டுகள் நம்மைத் திகைப்புக்குள்ளாக்குகின்றன, அச்சுறுத்துகின்றன. அவை ஒவ்வொன்றின் தவறை, குற்றத்தை, பிழையைக் கண்டுபிடிக்க நம் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால், இங்கு ஓர் எளிமையான பரீட்சை இருக்கிறது; அது அவர்களுடைய அசத்தியத்தைப் பெரும்பாலும் அம்பலமாக்கிவிடும். ஒரு கட்டத்தில், இரட்சிப்பு கிருபையைச் சார்ந்திராமல் கிரியைகளைச் சார்ந்திருக்கிறது என்று அவர்கள் ஆக்கிவிடுகிறார்கள். சட்டவாதம் ஜென்மசுபாவமான மனிதனின் பெருமைக்குக் கவர்ச்சியாக இருக்கிறது. இந்தக் காரணத்தினால்தான், சத்தியத்திலிருந்து விலகிச்செல்லும்போது, ஒவ்வொரு விலகிச்செல்லுதலுக்கும் அதினதின் சட்டதிட்டங்களும், தடைசெய்யப்பட்ட கட்டுகளும் இருக்கின்றன; என்ன செய்ய வேண்டும், எது தடை செய்யப்பட்டிருக்கிறது என்ற சட்டதிட்டங்கள் இருக்கின்றன. இது ஏதோ தெய்வீக அநுகூலத்தை அனுபவித்து மகிழ்வதற்கான தளத்தைப் பெறுவதற்கான நல்லொழுக்கத்தைப்பற்றிய சட்டங்களோடு சம்பந்தப்பட்டவை அல்ல.

ஆனால், “நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால்” இரட்சிப்பு வருகிறது என்கிற கோட்பாடு இதைவிட இன்னும் ஆழமாகச் செல்கிறது. சுவிசேஷத்தை நம்புகிற (Evangelical) கிறிஸ்தவர்களுக்கிடையேகூட இது நுழைந்துவிடுகிறதென்றால் அது ஆச்சரியம் அல்ல. மோதல்கள், முறிந்த உறவுகள், விமரிசனங்கள், பிரிவினைக்குழுக்கள், பெருமை ஆகியவைகளின் மூலகாரணத்தை நாம் ஆராய்ந்துபார்த்தால், அது தேவனுடைய கிருபையைப் பொறுத்தவரை ஒரு தோல்வியைக் குறிக்கிறது என்று நாம் பொதுவாகக் காண்போம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சட்டவாதம் தேவனுடைய வீட்டிலுங்கூட தன் வல்லமையை நிலைநாட்டிவிட்டது. அது யூதர்களுக்கும், யூத மதத்தினருக்கும் எப்படி இருந்ததோ அப்படியே இன்றைய சபைக்கும் இருக்கிறது; தேவன்மேல் கொண்ட தங்கள் பக்திவைராக்கியத்தினால், சட்டவாதத்தின் ஆவியினால் மனிதர்கள் மேற்கொள்ளப்படுகிறார்கள்.

சட்டவாதத்தின் சில கூறுகள்

சட்டவாதம் என்றால் என்னவென்று துல்லியமாக வரையறுக்க முயற்சிசெய்யாமல், அதின் சில பண்புகளை, அடிப்படைக் கூறுகளை, நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சட்டவாதிகள் எப்போதுமே புறம்பான காரியங்களாலே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவைகள்தான் எல்லாம் என்பதுபோல அவர்கள் மதத்தினுடைய மரபுகளின் நுணுக்கமான விவரங்களுக்கும், மொழிக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இப்படிச் செய்வதால் புதிய ஏற்பாட்டின் மிக எளிமையான செயல்முறைகள்கூட சடங்குகளாக மாற்றப்பட்டுவிடுகின்றன. காரியத்திற்கு மிகைப்படுத்தப்பட்ட, இயல்புக்கு மீறிய பக்தி அளிப்பதால் காரியத்தின் ஆவியை நாம் பார்க்கத் தவறுகிறோம். தேவனைப் பொறுத்தவரை, ஒரு காரியம் என்ன ஆவிக்குரிய சத்தியத்தைக் குறிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ, அதைத்தவிர வேறெதற்கும் எந்த மதிப்பும் கிடையாது. மேலும், சட்டவாதிகளின் மனம் எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிப்பதிலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்துகிறது. அந்தக் காரியத்தினால் அது ஆட்டிப்படைக்கப்படுகிறது. சட்டம் அதற்காகத்தானே இருக்கிறது! ஒழுக்கரீதியாக எது தவறு அல்லது எது சரி என்ற காரியத்தில் நாம் கண்டிப்பாக இருக்க வேண்டிய தேவையில்லை என்று நான் கூறுவதாகவோ அல்லது அதை நான் உற்சாகப்படுத்துவதாகவோ யாரும் எண்ணிவிடவேண் டாம். ஆயினும், நம்மை நாம் நீதிபதிகளாகவோ அல்லது மத்தியஸ்தர்களாகவோ ஆக்கிக்கொண்டால், எது சரி என்று நாம் கருதுகிறோமோ அதுதான் மற்ற விசுவாசிகளுடனான நம் உறவை ஆளுகை செய்தால், மெய்யாகவே நாம் சரியாக இருந்தாலும்கூட நம் உரிமைகளுக்காக நாம் வாதாடினால், வற்புறுத் தினால், நாம் சட்டவாதிகளாக மாறிவிட்டோம் என்று பொருள், சட்டவாதத்தின் மனப்பாங்கினால் நாம் மேற்கொள்ளப்பட்டுவிட்டோம் என்று பொருள். ஆவிக்குரிய முன்னேற்றம் என்பது நம்மிலோ அல்லது மற்றவர்களிலோ இருக்கிற அல்லது இருக்க வேண்டிய குற்றமற்ற தன்மையைச் சார்ந்திருக்கிறது என்ற நிலைமையை உருவாக்கிவிட்டால், ஆவிக்குரிய முன்னேற்றம் ஏற்படுவதற்கான சாத்தியமே இல்லை.

இதற்கு நல்ல எடுத்துக்காட்டு இரண்டு கடன்காரர்களைப்பற்றிய உவமையில் காணப்படுகிறது. ஓர் எஜமானுக்குப் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டிருந்த ஒரு கடன்காரனை அந்த எஜமான் மன்னித்துவிட்டான். இது உங்களுக்கு நினைவிருக்கக்கூடும். மன்னிக்கப்பட்ட அந்தக் கடன்காரன் வெளியேபோய், தன்னிடத்தில் மிகவும் அற்பமான பணமாகிய நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்த தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவன் தனக்குப்பட்டிருந்த கடன் முழுவதைòம் உடனடியாகக் கொடுத்துத் தீர்க்க வேண்டும் என்று கோரினான். அவன் பொல்லாத ஊழியக்காரன் என்று கருதப்பட்டு தண்டிக்கப்பட்டான். நூறு வெள்ளிப்பணத்தைப் பொறுத்தவரை அவன் செய்தது சரிதான்; அவனுக்குக் கடன்பட்ட வன், குற்றத்துக்குரியவன்தான். சட்டத்தின் நியாயம் அவன் பக்கம்தான் இருந்தது. இருந்தபோதும் அவனுடைய எஜமான் அவனைத் தண்டித்தான். அவன் செய்தது சரிதான்; இருந்தபோதும் அவன் செய்தது மாபெரும் தவறு. அவன் தன் எஜமானிடமிருந்து மாபெரும் கிருபையைப் பெற்று அனுபவித்தான்; ஆனால், அவன் தன் உடன் வேலையாளுக்குக் கிருபை காட்ட மறுத்தலால் மிகப் பயங்கரமான பாவம் செய்தான். ஒரு காரியத்தை “வேதத்துக்குரியது” என்று கூறி, அதை ஒரு சட்டத்தைக் கைக்கொள்ளுவதுபோல் கைக்கொள்ளுவதற்கு வலியுறுத்துவதால் கர்த்தருடைய பிள்ளைகளிடையே எத்தனை கசப்பான வார்த்தைகளும், கொடூரமான செயல்களும் எழுகின்றன! எல்லாவற்றிலும் எது சரி, எது தவறு என்று எப்போதுமே நியாயந்தீர்க்கிற மனச்சார்பு காலப்போக்கில் ஒருவகையான வெறியாக மாறிவிட முடியும்.

மேலும், சட்டவாதம் விவாதங்களில் மட்டுமீறி ஈடுபடுகிறது. எது சரி, எது தவறு என்று காரணகாரியங்களைப்பற்றிப் பேசுவது நீதிமன்றங்களின் வேலை. அங்கு இருதயங்களின் உணர்ச்சிகளுக்கு இடமேயில்லை, அல்லது கொஞ்சம்தான் இடம் உண்டு. அங்கு தர்க்கமும், வாதத்திறமையும்தான் முக்கியம். பரிசேயத்தனமான மனதால் வேதாகமத்திலிருந்துகூட ஒவ்வொரு விஷயத்தையும் தர்க்க முறையில் வாதிட்டு, தன் சொந்தக் கருத்தை நிரூபிக்க முடியும். அது வாதப்பிரதிவாதத்தில் பிரியப்படுகிறது. அது எந்த அளவுக்கு வாதிக்கும் ஆர்வமுடையது என்றால் தான் தவறாக இருக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்று அதனால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. அது கர்த்தரிடம்கூட வாதம் செய்யத் துணிகிறது.

சட்டவாதி இறுமாப்புடையவனாக மாறிவிடுகிறான். தெய்வீக வேலைகளையெல்லாம் வெறும் சூத்திரங்களாக மாற்றிவிட முடியும் என்ற எண்ணத்தில், தேவன் எப்படி வேலைசெய்கிறார், ஏன் வேலை செய்கிறார் என்று தனக்குத் தெரியும் என்று அவன் கற்பனை செய்துகொள்ளுகிறான். கர்த்தருடைய ஆசீர்வாதம் எங்கு குறைவுபடுவதுபோல் தோன்றுகிறதோ அங்கு அவன் எல்லாச் சூழ்நிலைகளையும் அலசிப்பார்த்து, ஆவிக்குரிய சட்டங்களை மீறியதுதான் அந்தக் கஷ்டத்துக்குக் காரணம் என்று கூறுவான். தேவன் வேலைசெய்வதில் ஆவிக்குரிய கோட்பாடுகள் இருக்கின்றன என்பது நிச்சயமாக உண்மைதான். ஆனால், அவருடைய சட்டத்திற்கு நாம் கொடுக்கும் பொருள்விளக்கத்திற்குள் நாம் அவரை ஒருபோதும் அடக்கிவிட முடியாது. கிருபை எப்போதும் இப்பேர்ப்பட்ட எல்லைகளைத் தாண்டிச் சென்று, கிருபையால் வாழ்பவர்களுக்கு மகிழ்ச்சியான ஆச்சரியத்தைக் கொண்டுவரும். ஆயினும், சட்டவாதி, ஒருபோதும் ஆச்சரியப்படுவதில்லை; ஏனென்றால், நடந்துகொண்டிருக்கிற எல்லாவற்றுக்கும் விளக்கமும், காரணமும் தனக்குத் தெரியும் என்று அவன் கற்பனைசெய்து கொள்ளுகிறான். இதைப்பற்றி இன்னும் அதிகமாகச் சொல்ல முடியும். சட்டவாதத்தால் ஆவிக்குரிய வளர்ச்சி முடங்கிப்போகும் வாய்ப்பு உண்டு, அதற்கு முடமாக்கும் ஆற்றல் உண்டு என்ற முக்கியமான காரியத்தை மட்டும் நான் கூற விரும்புகிறேன்.

சட்டவாதம் அன்புக்குத் தடங்கல் ஏற்படுத்துகிறது

“திடமனதாயிருங்கள்.” கிறிஸ்துவின் கிருபை நிறைந்த இருதயத்தால் மட்டுமே இப்பேர்ப்பட்ட வார்த்தைகளை இப்பேர்ப்பட்ட மனிதர்களுக்கு இப்பேர்ப்பட்ட நேரத்தில் பேசுவதற்கு அப்போஸ்தலனாகிய பவுலை ஏவியிருக்க முடியும். பவுலின் மனப்பாங்கு சட்டவாதத்தின் மனப்பாங்காக இருந்திருந்தால், அவர் மிகவும் வித்தியாசமாகப் பேசியிருப்பார். அந்தக் கப்பலில் பயணம் செய்தவர்களின் சோகமான இக்கட்டான நிலைமைக்கு நிச்சயமாக அந்த மூன்று தலைவர்களும்தான் காரணம். அவர்களைத்தான் குற்றஞ்சாட்டியிருக்க வேண்டும். நூற்றுக்கு அதிபதி பவுல் சொன்னதைக் கேட்காமல், மாலுமியையும் கப்பலின் சொந்தக்காரனைòம் அதிகமாக நம்பினான். பவுல் சொன்னபடிதான் நடந்தது. எனவே அவர் சொன்னதுதான் சரி. மற்ற தலைவர்கள் சொன்னபடி நடக்கவில்லை. எனவே, அவர்கள் சொன்னது தவறு. பவுல் மட்டும்தான் இரட்சிக்கப்படத் தகுதியானவர், மற்றவர்களெல்லாம் மரிக்கவேண்டியவர்கள்தான் என்று சட்டவாதி வாதிட்டிருக்கக்கூடும். பவுல் சட்டத்தைக் கைக்கொண்டவர் அல்ல; அவர் பாராட்டு, குற்றம்சுமத்துதல் இரண்டைòம் குருட்டுத்தனமான ஆதரிக்கிறவரல்ல. அவர் தேவனுடைய கிருபையை அதிகமாகச் சார்ந்துகொண்டார்; அவரோடு பயணம்செய்த எல்லாரையும் கர்த்தர் காப்பாற்றினார்.

பவுல் சட்டத்தின் குருட்டாதரவாளர் இல்லை என்பது பாக்கியம். ஒருவேளை, மற்றவர்கள் எந்த அளவுக்குத் தகுதியுடையவர்களோ அந்த அளவுக்குத்தான் அவரும் தகுதியுடையவர். அவர் கப்பலில் என்ன செய்து கொண்டிருந்தார்? எருசலேமுக்குப் போகக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டபிறகும், போய்த்தான் தீருவேன் என்று அவர் ஏன் விடாப்பிடியாக இருந்தார்? அங்கு போனபிறகு, மனிதர்களுடைய தவறான எண்ணங்களைத் தீர்க்கும் வீண் முயற்சியில் யூதமதத்துக்குரிய பழக்கங்களில் அவர் ஏன் சம்பந்தப்பட்டார்? தேவனால் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்குச் செவிகொடுப்பதற்குப்பதிலாக, நூற்றுக்கு அதிபதி முட்டாள்தனமான தன் சொந்தப் பாதையைத் தெரிந்தெடுத்துக்கொண்டான். நடபடிகள் 21ஆம் அதிகாரத்தைக் கவனமாக வாசிக்கும்போது, அப்போஸ்தலனாகிய பவுலும்கூட இதே தவறைத்தான் செய்திருப்பார் என்ற சாத்தியம் இருப்பதை ஏற்கமறுப்பது கடினம். “மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு…புறப்படாமல் இருக்க வேண்டியதாயிருந்தது,” என்று பவுல் உறுதியாகக் கூறினார். இது பவுலின் இருதயத்திற்கு தேவன் கொடுத்த கடிந்துகொள்ளுதலின் எதிரொலியாகக்கூட இருந்திருக்கக்கூடும். இல்லையென்றால் வேறென்ன? தோல்வி, ஏன் கீழ்ப்படியாமையுங்கூட, அவரைத் தேவனுடைய அன்பிலிருந்து பிரித்துவிட்டதா? சட்டவாதி “ஆம்” என்று பதிலளிக்கக்கூடும். ஆயினும், வேதாகமமோ “இல்லை” என்று கூறுகிறது. எவ்வளவோ காரியங்கள் நடந்தபிறகும், கிருபையின் தேவன் அவரருகே நின்று, “பவுலே, திடன்கொள்,” என்று கூறினார் (அப். 23:11).

சட்டப்படிபார்த்தால், நூற்றுக்கு அதிபதியும் அவனோடு இருந்தவர்களும் பவுலின் அன்பை இழந்திருக்க வேண்டும்; பவுல் தங்களை அன்புசெய்தாக வேண்டும் என்று அவர்கள் உரிமை பாராட்டியிருக்க முடியாது. தேவனுடைய அன்பைக் கோருகிற உரிமையை அப்போஸ்தலனாகிய பவுலும் இழந்திருக்க வேண்டும். கிருபை மட்டுமே அன்பைப் பராமரிக்க முடியும். தேவன் நம்மேல் அன்புகூருகிறார் என்பதை மற்றவர்கள் செய்கிற இன்னின்ன காரியங்கள் சரி, இன்னின்ன காரியங்கள் தவறு என சரி தவறு’ என்ற சட்டப்பிரகாரமான அணுகுமுறை முடமாக்குவதுபோல வேறொன்றும் முடமாக்குவதில்லை; நாம் மற்றவர்கள்மேல் காட்டுகிற அன்புக்கு இப்பேர்ப்பட்ட அணுகுமுறை தடங்கல் ஏற்படுத்துவதுபோல வேறொன்றும் தடங்கல் ஏற்படுத்துவதில்லை. கொரிந்துவிலும், ரோமாபுரியிலும் இருந்த கிறிஸ்தவர்கள் முக்கியமற்ற காரியங்களுக்காகச் சண்டைபோட்டுக்கொண்டு, ஒருவரையொருவர் நியாயந்தீர்த்து ஒருவரையொருவர் விட்டு விலகி ஒதுங்கி இருந்தார்கள்; முட்டாள்தனமான அற்பகாரியங்களால் அவர்கள் தங்களுக்கிடையே தடைச்சுவர்களை எழுப்பிக்கொண்டார்கள். ஏன்? கிறிஸ்து அவர்களை எப்படி ஏற்றுக்கொண்டிருக்கிறார்? கிருபையில் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இப்படி கிறிஸ்து அவர்களைக் கிருபையில் ஏற்றுக்கொண்டதுபோல, அவர்களும் மற்றவர்களைக் கிருபையில் ஏற்றுக்கொள்வதற்குப்பதிலாக, அவர்கள் நியாயத்தீர்ப்பிலே உட்கார்ந்துவிட்டார்கள். சட்டவாதம்தான் முக்கியம் என்று நினைத்து, அதற்கு இடங்கொடுக்கும்போது எப்போதுமே பிரிவினைòம், சகோதர சிநேக முறிவும்தான் ஏற்படுகின்றன.

கர்த்தர் நம்மோடு ஒருவகையில் இடைப்பட்டிருப்பதால், தேவனுடைய மற்ற ஊழியக்காரர்கள் செய்கிற சில குறிப்பிட்ட காரியங்களை நம்மால் செய்ய முடியாது. தேவனுடைய சித்தத்தை நாம் புரிந்துகொண்டிருப்பதைப் பலியாக்கிவிட்டு, நாம் உண்மையாகவே சமரசம் செய்யாதிருப்போமாக. அதே நேரத்தில் நாம் மற்றவர்களை அற்பமாக எண்ணக்கூடாது அல்லது அவர்களிடமிருந்து நம்மைத் தனியாகப் பிரித்துக்கொள்ளும் ஆவியும் நம்மிடம் இருக்கக்கூடாது. ஆவிக்குரிய முன்னேற்றம் மற்றவர்களை நியாயந்தீர்க்கும் இந்தச் சோதனையோடு எப்போதும் சேர்ந்தேசெல்கிறது. தேவனுடைய சித்தத்துக்கு மிக நெருக்கமாக இருப்பவர்கள் தங்கள் குறைபாடுகளைக்குறித்து மிகவும் உணர்வுள்ளவர்களாகவும், கூர்மையாக உணர்ந்தறிகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இங்கேயே, இப்போதே ஒரு நியாயாசனத்தை நிறுவுகிற சோதனைக்கு அவர்கள் ஆளாகிவிட்டால், மற்றவர்களுடைய முன்னேற்றத்தைவிட தங்களுடைய முன்னேற்றத்துக்கே அவர்கள் தடங்கல் ஏற்படுத்துவார்கள்.

சட்டவாதம் விசுவாசத்திற்குத் தடங்கல் ஏற்படுத்துகிறது

கிருபை எங்கே ஆட்சிசெய்கிறதோ, அங்கு மட்டும்தான் விசுவாசம் வெற்றிபெற முடியும். சட்டம் ஆளுகைசெய்தால், தெய்வீக எச்சரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் மனம்போன போக்கிலே போனவர்களுக்கு நிச்சயமாக எந்த எதிர்காலமும் இருக்காது. அப்படிப் பார்த்தால் அங்கு விசுவாசத்திற்கான எந்த ஆதாரமும் இருந்திருக்க முடியாது. எல்லாருக்கும் சம்பவிக்கவிருந்த நம்பிக்கையற்ற தீர்ப்பை பவுல் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். “நீங்கள் உங்களுடைய மடச்செயலின் விளைவுகளைச் சந்தித்துதான் ஆக வேண்டும். எனவே ஜெபிப்பதால் அல்லது நம்புவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை,” என்று அவர் கூற வேண்டியிருந்திருக்கும். சந்தோஷமான விஷயம் என்ன வென்றால், காரியங்கள் இப்படி நடக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் செய்தது தவறு என்றும், அவர்கள் முட்டாள்தனமாக நடந்துகொண்டார்கள் என்றும் அவர்களுக்கு உணர்த்தியபிறகு, “திடமன தாயிருங்கள்,” என்று அவர் அவர்களை உற்சாகப்படுத்தினார். பவுல் கர்த்தரிடமிருந்து ஒரு வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்தார். எல்லாக் கிருபையின் தேவன் அதை முற்றிலும் நிறைவேற்றுவார் என்று அவர் தைரியமாக விசுவாசித்தார்.

கிருபை இல்லாமல் விசுவாசம் சாத்தியமே இல்லை. சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதின் விளைவாகத்தான் தேவனுடைய ஆசீர்வாதம் வருகிறதென்றால், நாம் அவைகளைக் கடைப்பிடிக்கத் தவறினால் அவரிடமிருந்து அதற்குமேல் எந்த ஆசீர்வாதத்தைòம் எதிர்பார்க்க முடியாது; அவைகள் தற்காலிகமாக நின்றுபோகும். அப்படித்தானே! நம் விசுவாசத்திற்கு சவால் விடும் வகையிலும், அதை வாடச் செய்யவும் பிசாசானவன் நம் குற்றங்களையும், தோல்விகளையும்_சில நேரங்களில் பல வருடங்களுக்குமுன் செய்த தவறுகளையும்கூட_மறக்காமல் சுட்டிக்காட்டுவான், நம் நினைவுக்குக் கொண்டு வருவான். நாம் நம் குற்றங்களை உணரவேண்டியதும், நம் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதும் முக்கியம்; ஆனால், அவை நம்மை ஆள்கின்ற காரணியாக மாறுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. கிருபை ஆட்சிசெய்கிறது! பவுல் தன் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டார் என்பதில் சந்தேகம் இல்லை. நூற்றுக்கு அதிபதியும் தன் பாடத்தைக் கற்றுக்கொண்டான் என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால், காரியங்கள் அதோடு முடிந்துவிடவில்லை. கர்த்தர் கிருபையில் தோன்றி சந்தோஷமாக இருக்குமாறும், விசுவாசம் வைக்குமாறும் கூறாதிருந்திருந்தால், அவர்கள் இன்னும் சோர்ந்துபோன, நம்பிக்கையற்ற மனிதர்களாகத்தான் இருந்திருப்பார்கள்.

சட்டவாதம் தெய்வீக நோக்கத்திற்குத் தடங்கல் ஏற்படுத்துகிறது,

இதுவரை நான் மனிதனுடைய பக்கத்தைப்பற்றி மட்டும்தான் பேசியிருக்கிறேன்; ஆனால், இந்த விஷயத்தில் தெய்வீக அம்சம் ஒன்று இருக்கிறது. பவுல் ரோமாபுரிக்கு வந்துசேர்ந்தது அவருடைய சொந்த ஆசீர்வாதத்திற்காக அல்ல. அது தேவனுடைய குறிக்கோளின் இலக்கை நிறைவேற்றுவதற்காகவே. பவுல் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு கருவியாகத் தெரிந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், அது சாத்தியமேயில்லை என்று சட்டவாதம் முடிவுசெய்திருக்கும். ஆயினும், கிருபையின் தேவன் தம் ஊழியக்காரனுக்கு இரண்டுமுறை தரிசனமாகி, போகும் வழி விநோதமாக இருந்தாலும், “நீ இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும்” என்ற உறுதியான முடிவு உண்டு என்ற நிச்சயத்தைக் கொடுத்து அவரை உற்சாகப்படுத்தினார். அப்போஸ்தலனுடைய வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு இது நம்மெல்லாருக்கும் உண்மை. நாம் தகுதியற்றவர்களாக இருந்தாலுங்கூட, தம் மக்களைக்குறித்த தேவனுடைய முழுமையான நோக்கம் நிறைவேறுவதற்குத் தேவையான எல்லாவற்றையும் தேவனுடைய கிருபை வழங்குகிறது. இந்தக் காரணத்திற்காக நாமெல்லாரும் கிருபையில் நிலைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். சட்டவாதம் ஆவிக்குரிய முன்னேற்றத்தை எப்போதும் தடுத்துநிறுத்திவிடும் என்று சாத்தானுக்குத் தெரியும். தேவனுடைய மக்கள் தேவன்மேல் பக்திவைராக்கியம் கொண்டிருப்பதை சாத்தான் பார்த்தால், அவர்களைத் திரும்பவும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்குக் கொண்டுபோய் அந்தப் பக்திவைராக்கியத்தை அழிக்க அவன் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்வான். அவன் இதில் வெற்றிபெற்றுவிட்டால், நாம் சந்தோஷப்பட முடியாது. அதன்பிறகு, கிறிஸ்துவின் முழு நிறைவுக்கு வளர்வதைக்குறித்துப் பேசவே வேண்டாம்.

தேவனுடைய மக்களுக்குமுன் ஒரு மகிமையான இலக்கு இருக்கிறது. சட்டப்பிரகாரம் பேசுவதானால், அவர்களிடம் எந்த உரிமையும் இல்லை; அதை அடையும் ஆற்றலும் இல்லை; ஆனால், சூறாவளி வீசினாலுங்கூட, நாம் முன்னேறிச்செல்வதற்குக் கிருபை வெற்றிகரமாக அதைவிடச் சத்தமாக நம்மைக் கூவி அழைக்கிறது: “மனுஷரே, திடமனதாயிருங்கள்; எனக்குச் சொல்லப்பட்டபிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்.” கிருபை ஆட்சிசெய்கிற மண்டலத்தில் எந்த மக்கள் வாழ்கிறார்களோ, அந்த மக்களில் தேவனுடைய முழுமையான குறிக்கோள் முற்றிலும் நிறைவேறும்.