லேவியராகமம் - யூதக் குழந்தைகள் படிக்கும் முதல் புத்தகம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுதான் கிறிஸ்தவர்கள் படிக்கும் கடைசிப் புத்தகமாக அல்லது படிக்காமல் விட்டுவிடும் புத்தகமாக அல்லது படித்தாலும் புரிந்துகொள்ள முற்சிக்காத புத்தகமாக இருக்கலாம்.
ஆதியாகமத்தில் பார்க்கிற விழுந்துபோன மனிதன், யாத்திராகமத்தில் பார்க்கிற மீட்கப்பட்ட மனிதன், லேவியாராகமத்தில் தேவனை நெருங்கவும், சேவிக்கவும், ஆராதிக்கவும் ஆரம்பிக்கிறான். மீட்கப்பட்ட மனிதன் பலிகளின்மூலம் தேவனை அணுகுகிறான். சீனாய் மலையிலிருந்து பேசிய தேவன் இப்போது கூடாரத்திலிருந்து பேசுகிறார். ஒருவரும் சேரக்கூடாது ஒளியில் வாசம்பண்ணுகிற பரிசுத்தமான தேவன் பாவ மக்களிடையே கூடாரமடிக்கிறார்.
முதல் ஐந்து புத்தகங்களின் மையப் புத்தகம் லேவியராகமம். லேவியராகமத்தின் மையப்பொருள் பரிசுத்தம். இந்தப் புத்தகத்தில் பரிசுத்தர், பரிசுத்தம், பிரசன்னம், பாவம், பலிகள், பாவமன்னிப்பு, பாவப்பரிகாரம் - இவைகளைப் பார்க்கிறோம். தேவன் பரிசுத்தர்; பரிசுத்தமான தேவன் பாளயத்தில் இருக்கிறார்; பாளயத்தில் அவருடைய பிரசன்னம் இருக்கிறது; மனிதன் பாவி; பரிசுத்தமான தேவனை பாவியாக மனிதன் அணுகவேண்டும்; பாவத்துக்குப் பரிகாரம் வேண்டும்; அணுகிய மனிதன் அவருடைய அருகில் இருக்கவேண்டும். இதற்கு என்ன வழி? லேவியராகமம் இதை விவரிக்கிறது? லேவியராகமத்தின் சட்டங்களிலும், சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும், பலிகளிலும் நாம் கிறிஸ்துவின் எல்லா அம்சங்களையும் பார்க்கிறோம்.
லேவியராகமத்தின் சாராம்சம் பரிசுத்தம். "உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர்: ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்." இதுவே இந்தப் புத்தகத்தின் இலக்கு.
எனவே, இது தவிர்க்கவேண்டிய புத்தகம் அல்ல, மாறாக தோண்டவேண்டிய ஒரு புதையல். வாருங்கள், சேர்ந்து தோண்டுவோம்.