By மெர்லின் இராஜேந்திரம்
2020, ஜனவரி 11, சீனாவின் உகான் மாநிலத்தில் கொரொனா வைரசினால் முதன்முதலாக ஒருவர் உயிரிழந்தார். உலக சுகாதார நிறுவனம் மார்ச் மாதம் 11ஆம் தேதி இது உலகளாவிய தொற்றுநோய், கொள்ளைநோய், என்று அறிவித்தது. அன்றுமுதல் உலகம் மாறிவிட்டது, இப்போது மாறிக்கொண்டிருக்கிறது, இன்னும் மாறப்போகிறது. எங்கும் பயம்; எல்லாரிலும் பயம்.
“பூமியின் தோற்றத்தையும், வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே. இந்தக் காலத்தையோ நிதானியாமல் போகிறதென்ன? நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமல் இருக்கிறதென்ன” என்று (லூக்கா 12:56, 57) ஆண்டவராகிய இயேசு அன்று கேட்டார், இன்றும் கேட்கிறார்.
இந்தப் பயத்தின் மத்தியில், இந்த நிச்சயமற்ற நிலைமையின் மத்தியில், தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற கேள்வி நிச்சயமாக எழும். இந்தக் கேள்விக்குப் பதில் உண்டா? உண்டு.
I. பிற பேரழிவுகளைப்போல், இந்தக் கொரோனாவைரசின் அழிவிலும், மனுக்குலத்தின் ஒழுக்கக்கேட்டையும், தேவனை அற்பமாய்க் கருதும் ஆவிக்குரிய அலட்சியத்தையும் மனிதனுக்குப் படம்பிடித்துக்காட்டுகிறார். கொரோனா வைரஸ் தேவனுக்குவிரோதமான கலகத்தின் ஓர் அடையாளம், ஓர் உவமை. கிறிஸ்தவர்கள் உட்பட, மனிதன் தேவனை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஆனால், தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்குமுன் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இது திடமான அடித்தளமாகிய கிறிஸ்துவின்மேல் உறுதியாக நிற்கவேண்டிய வேளை. தம்மை விசுவாசிக்கிறவர்களின் வாழ்வில் தம் நித்திய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக எல்லாவற்றையும் ஏற்பாடுசெய்கிற, அனுமதிக்கிற, ஒழுங்கமைக்கிற, ஆளுகைசெய்கிற இறையாண்மையுள்ள தேவன் தம் மக்களைத் தாங்குவார், ஆதரிப்பார்.
இயேசு கிறிஸ்துவைத்தவிர மற்றவையெல்லாம் வெறும் புதைமணல்களே. நாம் புதைமணல்களின்மேல் நிற்கிறோமா அல்லது கற்பாறையின்மேல் நிற்கிறோமா? நம் நம்பிக்கை தேவன்மேல் இருக்க வேண்டும். சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவோமா, பாதிக்கப்பட்டால் பிழைப்போமா என்பதல்ல கேள்வி. “தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார். நாம் விழித்திருப்பவர்களானாலும் நித்திரையடைந்தவர்களானாலும் தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே” (1 தெச. 5:9, 10). விழித்திருப்பவர்களானாலும் சரி, நித்திரையடைந்தவர்களானாலும் சரி. அதாவது வாழ்ந்தாலும் சரி, மரித்தாலும் சரி நாம் அவருடனே பிழைத்திருப்போம். இது கற்பாறை. இது புதைமணல் அல்ல.
“நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள்: நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலங்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே” (யாக்கோபு 13, 14).
நித்தியத்தை விசுவாசிக்கும் நமக்கு இதுவே ஆதாரம், ஆறுதல். ஆனால், இந்தக் கற்பாறை இன்று இப்போது இங்கு நம் பாதங்களின்கீழ் இருக்கிறது. நாம் நிற்கும் பாறை இன்றும், என்றென்றும் இந்த உலகத்தில் தேவனுடைய செயலின் கற்பாறை.
இன்று நாமெல்லாரும் பல பிரச்சினைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதன் மத்தியில் தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார்? நம் நம்பிக்கை எதிர்காலம் மட்டும் அல்ல. இதோ நம் நம்பிக்கை இங்கு இருக்கிறது. நம்பிக்கை பலம்வாய்ந்தது. நம்பிக்கை இருப்பதால் நாடோறும் எழுந்து நம் வேலையைச் செய்கிறோம்.
வாழ்ந்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடன் இருப்போம். இந்த நம்பிக்கை இருப்பதால் நாம் பிறருடைய நலனுக்காக நாம் நம்மை ஊற்றுவோம். நான் வாழ்வேனா அல்லது மரிப்பேனா என்பதைத் தீர்மானிப்பவரும் அவரே. அது மட்டும் அல்ல. அவருக்குச் சித்தமானால் நாம் இதையோ அல்லது அதையோ செய்வோம். சுகமோ, சுகவீனமோ, பலமோ பலவீனமோ, எல்லாம். அவருக்குச் சித்தமானால் நாம் வாழ்கிறோம். வாழும்போது அவருக்குச் சித்தமானதைச் செய்கிறோம். எனவே, இன்று, நாளை, நித்தியம் என்றும் அவரே நம் கன்மலை.
பிரச்சினைகளைக்குறித்து நான் என்ன நினைக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல. தேவனுடைய எண்ணம் என்ன என்பதே காரியம்.
“மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனிதனுடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலுமிருக்கிறது. புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” (1 பேருது 1:24-25). நம் கருத்துக்கள் புல். “வேதவாக்கியம் தவறாது” (யோவான் 10:35). “கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது” (சங். 19:9). “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்” (மத். 7:24). தேவனுக்குச் செவிகொடுப்பதும், அவரை விசுவாசிப்பதும் நம் வீட்டை நாம் மணலில் அல்ல, கற்பாறையில் கட்டுவதைப்போன்றது. “அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர்; செயலில் மகத்துவமானவர்” (ஏசாயா 28:29). “அவருடைய அறிவு அளவில்லாதது” (சங். 147:5).
கசப்பான இந்த நாட்களில் நாம் தேவனுடைய வார்த்தையின் இன்பத்தை மறந்துவிடக்கூடாது. “துக்கப்படுகிறவர்கள் எனப்பட்டாலும் எப்போதும் சந்தோஷப்படுகிறவர்கள். சாகிறவர்கள் எனப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்கள்...” (2 கொரி. 6:10).
இறையாண்மையுள்ள தேவனே கர்த்தர், ஆண்டவர், அதாவது ஆள்கிறவர். தேவன் இருக்கிறவராக இருக்கிறார், தாமாக இருக்கிறார், நித்தியமாக இருக்கிறார், முற்றிலும் சுயாதீனமாக, சுதந்திரமாக இருக்கிறார், முழுவதும் இறையாண்மையுள்ளவராக இருக்கிறார். அவர் இப்படிப்பட்டவராக இருப்பதற்கு யாரையும், எதையும் சார்ந்திருக்கவில்லை, சார்ந்திருக்கத் தேவையுமில்லை. அவர் தம் விருப்பம்போல் செயல்படுகிறார்; தாம் விரும்புவதைச் செய்ய அவருக்கு முழு உரிமை உண்டு; முழு அதிகாரம் உண்டு. அவரைக் கேள்வி கேட்கவோ, அவருடைய செயலைத் தடுக்கவோ, நிறுத்தவோ எதற்கும் எந்த ஆற்றலும் இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கும் எல்லாவற்றின்மேலும் அவருக்குக் கட்டுப்பாடும், ஆளுகையும், அதிகாரமும், உரிமையும் உண்டு; யாரும் அவரை எதிர்க்க முடியாது. அவர் சர்வவல்லவர், சர்வஞானி, சகலத்தையும் ஆள்கிறவர். அவர் வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர். அவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அவருடைய விருப்பமே உச்ச விருப்பம். “முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன். என் ஆலோசனை நிலைநிற்கும். எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்...அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன். அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்துமுடிப்பேன்” (ஏசா. 46:10, 11) என்று தேவன் சொல்லுகிறார். இது தேவனுடைய சாராம்சத்தின் ஒரு பகுதி. தேவனாக இருப்பதென்றால் எப்போதும் அவருடைய ஆலோசனையே நிற்கும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அவர் அறிவித்துவிட்டு சும்மா இருப்பதில்லை. அதைச் செய்துமுடிக்கிறார், நிறைவேற்றுகிறார். அவர் ஒன்றைச் சொன்னபின், “அவர் தம் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுகிறார்” (எரே. 1:12). யோபு “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்,” (யோபு 42:2) என்று தன் சொந்த அனுபவத்தில் கற்றுக்கொண்டார். "நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார். தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்” (சங். 115:3), என்றும், “வானத்திலும் பூமியிலும் சமுத்திரங்களிலும் எல்லா ஆழங்களிலும் கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்,” (சங். 135:6) என்றும் சங்கீதத்தில் வாசிக்கிறோம். “பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லை என்று எண்ணப்படுகிறார்கள். அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும், பூமியின் குடிகளையும் நடத்துகிறார். அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை” (தானி. 4:35) என்று நெபுகெத்நேச்சார் அரசன் கற்றுக்கொண்டான். “அவர் தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிறார்,” (எபே. 1:12) என்று பவுல் சொல்லுகிறார். சில காரியங்களை மட்டும் அல்ல, எல்லாவற்றையும். அவருக்கு வெளியே இருக்கிற ஆற்றலின்படியோ, சித்தத்தின்படியோ அல்ல, அவருடைய சித்தத்தின்படியே. தேவனுடைய இறையாண்மையில் எல்லாம் அடங்கும். அவருடைய இறையாண்மை பரந்து விரிந்தது. காற்று, மின்னல், உறைபனி, தவளைகள், பேன்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள், காடைகள், புழுக்கள், மீன், குருவிகள், புல், செடிகள், பஞ்சம், சூரியன், சிறைக்கதவுகள், பார்வையின்மை, காதுகேளாமை, பக்கவாதம், காய்ச்சல், பலவிதமான நோய்கள், பயணத்திட்டம், அரசர்களின் இருதயம், தேசங்கள், கொலைகாரர்கள், எல்லாம் தேவனுடைய இறையாண்மையின் சித்தத்தையே நிறைவேற்றுகின்றன. “ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார். எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்” (ரோமர் 9:18-20). தேவனுடைய சித்தமே நிற்கும், நடக்கும், நிறைவேறும், நிலைநிற்கும். உச்ச நீதிமன்றம்போல் அவருடைய சித்தமே உச்ச சித்தம். அதைவிட உச்ச சித்தம் வேறொன்றில்லை.
எடுத்துக்காட்டு:
உடன்படிக்கையின் மக்களாகிய இஸ்ரயேல் மக்களுடைய வரலாற்றை வடிவமைத்தவர் இறையாண்மையுள்ள தேவன். “உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன்,” (ஆதி. 22:17) என்று தேவன் ஆபிராமுக்குக் கொடுத்த வாக்குறுதி நிறைவேறத் தாமதமானதால், ஆபிரகாம் தேவனுக்கு உதவுவதாக நினைத்து, இஸ்மவேலைப் பெற்று தன் சந்ததியை நீட்டிக்க விரும்பினார். ஆனால், தேவன் இஸ்மவேலைத் தள்ளி ஈசாக்கைக் கொடுத்தார். ஈசாக்கின்மூலம்தான் ஆபிரகாமின் சந்ததி தொடர வேண்டும் என்று தேவன் தீர்மானித்திருந்தால் ஆபிரகாம் ஆகாரை மனைவியாக்கிக்கொள்வதற்குமுன்பே சாராள் ஈசாக்கைப் பெற்றிருக்கலாமே! ஆபிரகாமுக்கு ஈசாக்கைக் கொடுத்திருக்கலாமே! ஆனால், இஸ்மவேலுக்குப்பின்தான் ஈசாக்கு பிறந்தான். இது தேவனுடைய இறையாண்மை.
ரெபேக்காளின் கர்ப்பத்தில் பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருக்கையில் அவள் கர்த்தரிடத்தில் விசாரித்தாள். அப்போது கர்த்தர், “இரண்டு தேசங்கள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது. இரண்டுவிதமான மக்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும். அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள். மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்” என்றார் (ஆதி. 25:22, 23). ரெபேக்காள் ஏசாவைவிட யாக்கோபை அதிகமாக நேசித்தற்கு ஒருவேளை இது காரணமாக இருக்கலாம். எனவே, தேவனுடைய சித்தம் நிறைவேறத் தான் அவரோடு ஒத்துழைப்பதாகக்கூட அவள் நினைத்திருக்கலாம். ஆபிரகாம் தேவனுடைய வாக்குறுதி நிறைவேற அவருக்கு உதவிசெய்ததாக நினைத்ததுபோல இவளும் நினைத்திருக்கலாம். யாக்கோபின்மூலம்தான் உடன்படிக்கையின் மக்களுடைய சந்ததி தொடரவேண்டும் என்று தேவன் தீர்மானித்திருந்தால் அவனைத் தலைப்பிள்ளையாகப் பிறப்பித்திருக்கலாமே! ஏசாதான் முதலில் பிறக்கிறான். ஆனால், தேவன் யாக்கோபைத் தெரிந்தெடுக்கிறார். இது தேவனுடைய இறையாண்மை.
இன்று தேவனுடைய மீட்பின் திட்டம் நமக்குத் தெளிவாகத் தெரியும். இயேசு “உலகத் தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி” (வெளி. 13:8). அவர் பஸ்கா ஆட்டுக்குட்டி. ஆட்டுக்குட்டி ஆட்டுத் தொழுவத்தில் பிறக்காமல் மன்னர்கள் வாழும் அரண்மனையிலா பிறக்கும்? இது தேவனுடைய இறையாண்மை. ஆண்டவராகிய இயேசு பெத்லகேமில் பிறப்பார் என்பதை அவர் பிறப்பதற்கு ஏறக்குறைய 700, 800 ஆண்டுகளுக்குமுன் “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும் இஸ்ரயேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது” (மீகா 5:2) என்று மீகா தீர்க்கதரிசனமாக உரைத்திருந்தார். இயேசு எப்போது பிறக்க வேண்டும், எங்கு பிறக்க வேண்டும், எப்படிப் பிறக்க வேண்டும் என்பதைத் தேவன் உலகத்தைப் படைப்பதற்குமுன்னே தீர்மானித்திருந்தார். உலகத்தைப் படைப்பதற்குமுன்பே இயேசுவின் சிலுவை மரணத்தைத் திட்டமிட்ட தேவன் அவருடைய பிறப்பைத் திட்டமிடாமல் இருந்திருப்பாரா? இயேசு பெத்லகேமில் பிறப்பதைத் தீர்மானித்தபிறகு, தேவன் பெத்லகேம் ஊரிலேயே தாவீதின் வம்சத்தைச் சேர்ந்த ஒரு நீதிமானையும், ஒரு கன்னிகையையும் தெரிந்தெடுத்திருக்க முடியாதா? அது அவருக்குக் கடினமா? இல்லையே! அவர் நாசரேத்தில் வாழ்ந்த யோசேப்பையும் மரியாளையும் ஏன் தெரிந்தெடுக்க வேண்டும்? பெத்லகேமுக்கு வருவதற்குமுன்பே மரியாள் ஏன் கர்ப்பவதியாக வேண்டும்? அவர்களைப் பெத்லகேமுக்குக் கூட்டிவர அவருக்கு வேறு வழியில்லையா? ஓர் உறவினர் வீட்டில் ஒரு குடும்ப விழா ஏற்பாடு செய்திருக்கலாம். அந்த விழாவுக்கு யோசேப்பையும், மரியாளையும் அழைத்திருந்தால் அவர்கள் கணக்கெடுப்பதற்கு முன்னரே பெத்லகேமுக்கு வந்திருப்பார்கள். யோசேப்பையும், மரியாளையும் தங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்களுடைய உறவினர்களோடு தேவன் கனவில் பேசியிருக்கலாம்; ஒரு தூதனை அனுப்பியிருக்கலாம். ஓர் உறவினர் வீட்டில் தங்க ஏற்பாடு செய்திருக்கலாம். தேவன் அப்படிச் செய்யவில்லை. அப்போதைய மிக உயர்ந்த அதிகாரம் படைத்த ரோம இராயனின் ஆணையின்படி யோசேப்பும் மரியாளும் பெத்லகேமுக்கு வருகிறார்கள். அந்த இராயன் மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஆணையைக் கொஞ்சம் முந்தியோ அல்லது பிந்தியோ வெளியிட்டிருக்கக்கூடாதா? மேலோட்டமாகப் பார்த்தால் அது மக்கள் தொகை கணக்கெடுப்பு. ஆனால், இது தேவனுடைய இறையாண்மை. யோசேப்பையும் மரியாளையும் பெத்லகேமுக்குக் கொண்டுவருவதற்காக இராயனை ஏவி மக்கள்தொகை கணக்கெடுக்க ஆணை பிறப்பிக்க முடிந்த தேவனால் அவர்களுக்குச் சத்திரத்தில் இடம் ஏற்பாடுசெய்யத் தெரியாதா அல்லது முடியாதா? மக்கள் தொகை கணக்கெடுக்க ஆணை பிறப்பிக்க இராயனை ஏவுவதைவிட சத்திரக்காரனை ஏவுவதும், ஓர் இடத்தை ஆயத்தம்பண்ணுவதும் கடினமா? ஓர் இடத்தையும், ஒரு படுக்கையையும் ஆயத்தம்செய்வது எளிதோ எளிது. முன்னணை தேவன் ஆயத்தம்பண்ணின படுக்கை.
எஸ்தர் புத்தகத்தில் தேவன் என்ற வார்த்தைகூட இல்லை. ஒரு குறிப்பிட்ட நாளில் நாடு முழுவதும் வாழ்ந்த யூதர்களைக் கொலைசெய்ய அரசு ஆணை வெளியிடப்பட்டது. அரசால் அனுமதிக்கப்பட்ட இனப்படுகொலையை நிறைவேற்ற ஆமான் உத்தேசித்திருந்தான். ஆனால், ஒரே இரவில் அந்த ஆணை செல்லாததாகி, ஆமான் கழுமரத்தில் ஏற்றப்பட்டான். மொர்தகாய் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டான். யூத இனம் இரட்சிக்கப்பட்டது. இந்த ஆணையின் விளைவு ஓர் இனத்தின் இரட்சிப்பு. இது தேவனுடைய இறையாண்மை. தேவன் அந்த ஆணை வெளியிடுவதைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா?
மத்தேயு 26இல் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் நீதியைக் கொன்று, அநீதியை நிலைநாட்டச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். இயேசுவின் நெருக்கமான ஒரு சீடன், யூதாஸ், தன் குருவை 30 வெள்ளிக்காசுகளுக்காக முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்கிறான். ஆலோசனைச் சங்கத்தார் அவரைச் சிலுவையில் அறைய தீர்ப்பளிக்கிறார்கள். ரோமப் போர்வீரர்கள் அவரைக் கொடுமையாகச் சித்திரவதை செய்கிறார்கள். பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார். இயேசு சிலுவையில் அறையப்பட்டதற்கு ஏரோது, பொந்தியுபிலாத்துபோன்ற அரசியல்வாதிகளும், யூதத் தலைவர்களுமே காரணம் என்று சொல்லலாமா? அவர்களுடைய சதித்திட்டமே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள முடியுமா? தேவன் கடைசி நிமிடத்தில் தலையிட்டு அவர்கள் நினைத்த தீமையை நன்மையாக மாற்றினார் என்று நாம் சொல்லமுடியுமா? ஏரோது, பொந்தியுபிலாத்து, மதத்தலைவர்கள்தான் இதற்குக் காரணம் என்று ஒப்புக்கொண்டால், தேவனுடைய மீட்பின் திட்டம் திட்டமாகவே இருக்கமுடியாது. அவர் “உலகத் தோற்றத்திற்குமுன்பே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி” இல்லையா? ஆதாம் ஏவாள் விழுந்தபோது, ஏதேன் தோட்டத்திலேயே அவருடைய மீட்பின் திட்டம் தெளிவாகத் தெரிகிறதே! இவைகளெல்லாம் தேவனுடைய இறையாண்மையின்படி நடந்ததா அல்லது தற்செயலாக நடந்ததா? அவர் “அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவந்தார்” (மத். 20:28). அவரே தம்முடைய ஜீவனைக் கொடுத்தாரா அல்லது இவர்கள் அவருடைய ஜீவனை எடுத்தார்களா? இந்த அதிகாரத்தில் பார்க்கிற தோல்விகள், வலிகள், பாவங்கள் ஆகியவைகளின் இறுதி விளைவு மீட்பு. இது தேவனுடைய இறையாண்மை.
அப்போஸ்தலர் நடபடிகள் 26இல் பவுல் இராயனுக்கு அபயமிடாதிருந்திருந்தால் விடுவிக்கப்பட்டிருப்பார். ஆனால், அவர் அப்படி முறையிட்டதால் கடைசியில் ரோமாபுரியின் அரண்மனையில் நற்செய்தி அறிவிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இது தேவனுடைய இறையாண்மை.
தேவனுடைய இறையாண்மை ஒரு மறைபொருள், பரம்புதிர், பரம இரகசியம்.
அப்படியானால் தேவன் ஒரு சர்வாதிகாரியா? மனிதர்கள் வெறும் பொம்மைகள்தானா? இல்லை. தேவனும் மனிதனும் சேர்ந்து செயல்படுகிறார்கள்.
ஆபிரகாம் செயல்பட்டபோது தேவனும் செயல்பட்டுக்கொண்டிருந்தார். ரெபேக்காள் செயல்பட்டபோது தேவனும் செயல்பட்டுக்கொண்டிருந்தார். தேவன் தம் வாக்குறுதியை நிறைவேற்ற வல்லவர். அவர் செய்ய நினைத்தது ஒருபோதும் தடைபடாது. முதலின் பிறந்தவன் என்பதைவிட, மூத்தவன் என்பதைவிட, அவருடைய இறையாண்மையே காரியம்.
ஆமான் செயல்பட்டபோது தேவனும் செயல்பட்டுக்கொண்டிருந்தார். அகாஸ்வேரு ராஜா செயல்பட்டபோது தேவனும் செயல்பட்டுக்கொண்டிருந்தார். யோசேப்பின் சகோதரர்கள் செயல்பட்டபோது தேவனும் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
தேவன் இறையாண்மையுள்ளவர் என்பதால் நன்மை, தீமை ஆகிய இரண்டுக்கும்பின்னால் அவர் இருக்கிறார். எல்லா நன்மைகளுக்குப்பின்னால் தேவன் இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக்கொள்வோம். ஆனால், தீமைக்குப்பின்னால் அவர் இருக்கிறார் என்பதை நம்மால் எளிதாக ஒப்புக்கொள்ளமுடியவில்லை. தேவன் இறையாண்மையுள்ளவர் என்பதால் அவருடைய அறிவுக்குஅப்பாற்பட்டு எதுவும் நடைபெறுவதில்லை.
இது கசப்பான உண்மை. இது கசப்பான காலம். தேவனுடைய சில செயல்கள் கசப்பானவை என்று சொல்வது தேவதூஷணம் அல்ல. ரூத்தின் மாமியார் நகோமியின் கணவனும், இரண்டு மகன்களும் இறந்தார்கள். ஒரு மருமகள் அவளைவிட்டுப் பிரிந்துபோனாள். கடுமையான பஞ்சம், இந்தப் பாடுகளின்போது அவள், “சர்வ வல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார். கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தினார்...” (ரூத் 1:19-21) என்று சொன்னாள். அவள் பொய் சொல்லவில்லை, மிகைப்படுத்தவில்லை, தேவனைக் குற்றப்படுத்தவில்லை. அவள் சொன்னது அப்பட்டமான உண்மை. இது கசப்பான இறையாண்மை. நகோமியின் வாழ்க்கையும், வாழ்க்கையின் சம்பவங்களும், சோகங்களும் தேவனுடைய இறையாண்மைக்கு அப்பாற்பட்டவைகளா?
மரணமும் ஜீவனும் அவருடைய கரத்தில் இருக்கின்றன என்பதை யோபு அனுபவத்தில் கற்றுக்கொண்டார். “நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன். நிர்வாணியாய் அவ்விடத்திற்குத் திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார்; கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்று யோபு சொன்னபோது பாவம் செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை (யோபு 1:21, 22). கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் என்பது உண்மைதானே! அவர் நேரடியாக எடுக்கவில்லை என்றாலும், அது அவருடைய இறையாண்மைக்கு அப்பாற்பட்டதா? யோபுவின் 10 பிள்ளைகள் இறந்தார்களே!
நம் மூச்சுக்காற்று தேவன் நமக்கு அருளியிருக்கும் கொடை. நம் ஒவ்வொரு இதயத் துடிப்பும் அவருடைய இரக்கம். ஜீவனும் மரணமும் அவர் கரத்தில் இருக்கின்றன. “நான் நானே அவர். என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள். நான் கொல்லுகிறேன். நான் உயிர்ப்பிக்கிறேன். நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன். என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை” (உபா. 32:39) என்று தேவன் சொல்லுகிறார். அவர் உயிர்ப்பிக்கிறவர் மட்டும் அல்ல, அவர் கொல்லுகிறவரும்கூட.
எனவே, கொரோனா வைரசையும் நம் எதிர்காலத்தையும் நினைக்கும்போது யாக்கோபு சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது. “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றி பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே!” (யாக். 4:15).
இந்தக் காலத்தில் நாம் ரோமர் 8:35-37யை நினைவில்கொள்வது நல்லது. “உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம். அடிக்கப்படும் ஆடுகளைப்போல் எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ, இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வெறெந்தச் சிருஷ்டியானாலும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” (ரோமர் 8:35-39). “உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்” என்று வலிநிறைந்த வார்த்தைகளை மறக்க முடியாது. இந்த வார்த்தைகள் இன்றைய நம் நிலைமையை படம்பிடித்துக் காட்டுகின்றன. “உமதுநிமித்தம்” என்று சொல்லமுடியாவிட்டாலும் இதுதான் இன்று உண்மை. எந்நேரமும் கொல்லப்படுகிறோம். எல்லாருடைய கழுத்துக்கும்மேல் மரணம் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், மரணமானாலும், ஜீவனானாலும்...நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது என்பதையும் மறக்க முடியாது.
எனவே, கொரோனாவைரசுக்குப்பின்னால் அவர் இருக்கிறார். இது அவருக்குத் தெரியாததல்ல. அவர் தடுத்திருக்கலாமா? தடுத்திருக்கலாம். ஆனால், தடுக்கவில்லை. அது அவருடைய இறையாண்மை. நோவா காலத்தில் பெருவெள்ளத்தை அவர் தடுத்திருக்கலாமா? மக்களின் அழிவைத் தடுத்திருக்கலாமா? தடுத்திருக்கலாம். ஆனால், அவர் தடுக்கவில்லை. அது அவருடைய இறையாண்மை.
கிறிஸ்தவர்கள் சுனாமியால் சாகவில்லையா? தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களைச் சுட்டுக்கொல்லவில்லையா? கிறிஸ்தவர்கள் சாகாவரம்பெற்றவர்களா? கிறிஸ்தவர்களுக்கும் கொரோனாவைரஸ் வரும். ஆனால், கிறிஸ்தவன் “சாவு எனக்கு ஆதாயம்” என்று சொல்வான். அவன் தேகத்தைவிட்டுப் பிரிந்து “கிறிஸ்துவுடன் இருக்கப்” பிரியப்படுவான்.
தாவீது ஒருமுறை யுத்தம் செய்யத் திராணியுள்ள மக்களைக் கணக்கெடுத்தான். தாவீதின் இந்தச் செயலை தேவன் விரும்பவில்லை. இதனால் தேவன் அவனைத் தண்டித்தார். ஆனால், மக்களைக் கணக்கெடுப்பதற்குத் தேவனே தாவீதை ஏவினார் (2 சாமு, 24:1) என்பது அதிர்ச்சியாக இருக்கலாம். இஸ்ரயேல் யூதா என்பவர்களை இலக்கம் பார்ப்பதற்குத் தாவீது ஏவப்பட்டான். மக்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவனே அனுப்புகிறார் (2 தெச. 2:12) என்பதை மனமார ஒப்புக்கொள்ள முடிகிறதா? அவரே நாடுகளைப் போருக்கு அனுப்புகிறார் (யோவேல் 3:9) என்று வாசிக்கிறோமே! “அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” என்று ரோமர் 8:28இல் விவரிக்கப்பட்டுள்ள தேவனும் அவரே.
எல்லா நன்மைகளுக்கும் அவரே ஊற்று, காரணர். இதை விளக்குவதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் தேவையில்லை. வேதாகமம் முழுவதும் இதைப் பார்க்கலாம். ஒரு சிறிய எடுத்துக்காட்டு போதும். அது மிகவும் அழகான எடுத்துக்காட்டு. “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவி விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் அவைகளில் ஒன்றாகிலும் தரையில் விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது. ஆதலால் பயப்படாதிருங்கள். அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (மத். 10:29-31). தேவனுடைய சித்தமில்லாமல் ஒரு வைரசும் அசையாது. இது தேவனுடைய அற்புதமான இறையாண்மை. நாம் அநேகம் குருவிகளைவிட விசேஷித்தவர்கள். நம் தலைமுடிகளெல்லாம் எண்ணப்பட்டுள்ளன. பயப்படாதிருங்கள். தேவனுடைய அற்புதமான இறையாண்மையை விளக்க இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு தேவையா? இதுதான் இன்று நம் இன்றியமையாத் தேவை. இதுதான் இன்று நாம் மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் வாழ்வதற்கான இரகசியம். கட்டுப்படுத்தவேண்டிய இறையாண்மை, தடுக்கவேண்டிய இறையாண்மை கட்டுப்படுத்தவில்லை, தடுக்கவில்லை. கட்டுப்படுத்தாத தடுக்காத இறையாண்மை இதன் மத்தியில் நம்மைத் தாங்க வல்லது.
இங்கிலாந்தைச் சார்ந்த கென்றி மார்டின் என்பவர் இந்தியாவில், குறிப்பாக, மேற்கு வங்காளத்தில், இறைபணியாற்றினார். அவர் தம் 31ஆவது வயதில் (அக்டோபர் 16, 1812) கொரோனாவைரஸ் போன்ற ஒரு கொள்ளைநோயினால் இறந்தார். அவர் 1812 ஜனவரியில் ஒரு பத்திரிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்:
“நிலைமையைப் பார்க்கும்போது நான் கண்ட எல்லா வருடங்களையும்விட இந்த வருடம் மிகவும் ஆபத்தாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். புதிய ஏற்பாட்டை பாரசீக மொழியில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் வேலையைச் செய்துமுடிக்கும்வரை நான் வாழ்ந்தால், அதற்குப்பின் என் வாழ்க்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. நான் வாழ்ந்தாலும் சரி, இறந்தாலும் சரி, கிறிஸ்து என்னில் மகிமைப்படுவார். அதற்குப்பின்னரும் நான் செய்வதற்கு ஏதாவது வேலை இருந்தால் நான் சாகமாட்டேன்.”
கிறிஸ்து நம்மில் செய்யவேண்டிய வேலையும், நாம், தேவநியமத்தின்படி, செய்யவேண்டிய வேலையையும் செய்துமுடிக்காதவரை நாம் சாகாவரம்பெற்றவர்கள்.
“கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார். பூமி பூரிப்பாகி திரளான தீவுகள் மகிழக்கடவது” (சங். 97:1).
நன்மை, தீமை இரண்டுக்கும்;பின்னால் அவர் இருந்தாலும், இரண்டுக்கும்பின்னால் அவர் சமச்சீரற்ற முறையில் இருக்கிறார். தீமைக்குப்பின்னால் அவர் எவ்வாறு இருக்கிறார் என்றால் அவருடைய இறையாண்மையின் எல்லையைத்தாண்டி எந்தத் தீமையும் நிகழ்வதில்லை. எ.கா. யோபு. யோபுவின் வாழ்க்கையில் நடந்தவை தேவனுக்குத் தெரியாதவை அல்ல. அவர்தான் அந்தத் தீமைக்குக் காரணம் என்று அவரைக் குற்றப்படுத்தமுடியாது. அவர் நன்மைக்குப்பின்னால் எப்படி இருக்கிறார் என்றால் எல்லா நன்மைக்கும் அவரே காரணம். இது எப்படி என்று விளக்க முடியாது. ஆனால், இது வேதாகமம் போதிக்கும் மாறாத சத்தியம். கொரோனாவைரசுக்குப்பின்னால் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதற்கு என்னிடம் விளக்கம் இல்லை. நமக்குத் தெரியாக பலகோடிக் காரியங்களை அவர் செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியும். “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படமுடியாதவைகள்! அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!” (ரோமர் 11:33).
தேவன் இறையாண்மையுள்ளவர், சர்வ வல்லவர், என்பது தேவன் இல்லை என்று வாதிடுகிற நாத்திகர்களுக்கும், தேவன் இருந்தால் என்ன இல்லாவிட்டால் எனக்கென்ன என்று தேவனை விசுவாசிக்காத அவிசுவாசிகளுக்கும் ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது. “தேவன் இறையாண்மையுள்ளவர் என்றால் இந்த உலகத்தில் நடக்கிற துன்பங்களையும், தீமைகளையும், கொடுமைகளையும், அநியாயங்களையும், அக்கிரமங்களையும், அநீதிகளையும் அவர் ஏன் தடுப்பதில்லை? ஏன் கொள்ளைநோய்கள்?” என்று இவர்கள் பெரிய புத்திசாலிகள்போல் கேள்வி கேட்பார்கள்.
மனிதன் சுயாதீனமுள்ளவன், என்று வேதம் தெளிவாகப் போதிக்கிறது. தேவன் மனிதனை சாவி கொடுத்தால் இயங்குகிற ஒரு பொம்மையைப்போல் அல்லது தொலையியக்கியால் இயங்கும் ஓர் இயந்திரம்போல் இயக்குவதில்லை. அவன் சுதந்தரவாளி. அவன் தன் விருப்பம்போல் போகலாம் போகாமல் இருக்கலாம், பேசலாம் பேசாமல் இருக்கலாம், தெரிந்தெடுக்கலாம் தெரிந்தெடுக்காமல் இருக்கலாம், செய்யலாம் செய்யாமல் இருக்கலாம், கீழ்ப்படியலாம் கீழ்ப்படியாமல் இருக்கலாம், வாசிக்கலாம் வாசிக்காமல் இருக்கலாம், பாடலாம் பாடாமல் இருக்கலாம், தொடர்புகொள்ளலாம் தொடர்புகொள்ளாமல் இருக்கலாம், எழுதலாம் எழுதாமல் இருக்கலாம், இப்படி ஆயிரக்கணக்கான காரியங்களை மனிதன் தன் விருப்பம்போல் செய்யலாம் அல்லது செய்யாமல் இருக்கலாம். அவன் விரும்பினால் நன்மை செய்யலாம் அல்லது தீமை செய்யலாம். எ.கா. ஆதாம் ஏவாள். அவர்கள் தங்கள் விருப்பம்போல்தான் செயல்பட்டார்கள். ஏவாள் சர்ப்பத்தோடு பேசும்போதோ, மரத்தின் கனியைப் பறித்தபோதோ, பறித்துச் சாப்பிட்டபோதோ, ஆதாமுக்குக் கொடுத்தபோதோ, தேவன் தலையிட்டுத் தடுத்தாரா? இல்லையே! அவர்கள் தங்கள் விருப்பம்போல் செயல்பட்டார்கள். ஏனென்றால் அவர்கள் சுதந்திரவாளிகள்.
மனிதன் ஒரு சுதந்திரவாளி என்பது நாம் நினைப்பதைவிட மிகவும் சிக்கலானது. அப்படியானால் அவன் தன் சுதந்திரத்தைப் பயன்படுத்தி தேவனுடைய இறையாண்மைக்கு முற்றிலும் முரணான செயலைச் செய்து அவருடைய திட்டத்தைத் தவிடுபொடியாக்க முடியுமா? இது சாத்தியம் என்றால் தேவனுடைய இறையாண்மை மனிதனுடைய சுதந்திரத்தைச் சார்ந்ததாகிவிடுமே! ஆனால், அப்படி இருக்க முடியாது. தேவனால் படைக்கப்பட்ட மனிதன் படைத்த அவரைக் கட்டுப்படுத்தவோ, ஆளவோ, அவர்மேல் அதிகாரம் செலுத்தவோ முடியாது.
ஒரு புறம், தேவன் இறையாண்மையுள்ளவர் என்பதால் அவர் தம் பரிபூரண சித்தத்தைத் தம் பிள்ளைகளின் வாழ்வில் நிறைவேற்ற எல்லாவற்றையும், எல்லாரையும் வடிவமைக்கிறார், திட்டமிடுகிறார், நியமிக்கிறார், அனுப்புகிறார், அனுமதிக்கிறார், கட்டுப்படுத்துகிறார், ஆளுகைசெய்கிறார். தேவன் தம் நித்திய நோக்கத்தைத் தாம் தெரிந்தெடுத்த மக்களின் வாழ்வில் நிறைவேற்ற வல்லவர்.
மறுபுறம், தேவன் தெரிந்தெடுத்த மக்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. தேவமக்கள் அவர்மேல் அசையாத நம்பிக்கை வைத்து அவருக்கு நன்றியோடு கீழ்ப்படிந்து வாழ வேண்டும். இது ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதுபோல் தோன்றும். அப்படியல்ல.
தேவன் முற்றிலும் இறையாண்மையுள்ளவர். ஆனால், மனிதன் தன் பொறுப்பை எந்த வகையிலும் தட்டிக்கழிக்க முடியாது. மனிதன் தன் செயலுக்குத் தானே பொறுப்பேற்க வேண்டும். தன் செயலுக்குத் தேவனைக் குற்றப்படுத்தக் கூடாது. ஏனென்றால், மனிதன் தன் விருப்பத்தின்படி தெரிந்தெடுக்கிறான், தீர்மானிக்கிறான், கீழ்ப்படிகிறான் அல்லது கீழ்ப்படியாமல் இருக்கிறான், விசுவாசிக்கிறான் அல்லது விசுவாசிக்காமல் இருக்கிறான். இதுபோல் பல ஆயிரம் உள்ளன.
ஆனால், மனிதனுடைய செயல்கள் தேவனுடைய இறையாண்மையைப் பாதிக்காது. இதை விளக்குவதற்கு வேதாகமத்தில் நிறைய எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. நான் சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன்.
எகிப்தில் யாக்கோபு மரித்தபின், யோசேப்பின் சகோதரர்கள் தாங்கள் யோசேப்புக்குச் செய்த துரோகத்தை நினைத்து யோசேப்புக்குப் பயந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட யோசேப்பு தன் சகோதரர்களைப் பார்த்து, “நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள்; தேவனோ இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களைக் காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார்,” (ஆதி. 50:20) என்று சொன்னார். நன்மையாக மாற்றினார் அல்லது நன்மையாகச் செய்துமுடித்தார் என்பதைவிட நன்மைக்காகவே தீர்மானித்திருந்தார் என்று சொல்லது சரியாக இருக்கும். அவர்கள் தீமை செய்ய நினைத்தார்கள். தேவன் நன்மை செய்ய நினைத்தார். தேவன் தன்னை மிகவும் அழகான குதிரைகள்பூட்டிய இரதத்தில் எகிப்துக்குக் கொண்டுசெல்ல ஓர் அற்புதமான திட்டம் தீட்டியிருந்ததாகவும், தன் சகோதரர்கள் தங்கள் பொல்லாத சூழ்ச்சியினால் அந்தத் திட்டத்தை முறியடித்துவிட்டதாகவும் யோசேப்பு சொல்லவில்லை; அல்லது தன் சகோதரர்கள் ஒரு பொல்லாத சதித்திட்டம் தீட்டியதாகவும், தேவன் சரியான நேரத்தில் தலையிட்டு அவர்களுடைய தீமையை நன்மையாக மாற்றித் தன்னைக் காப்பாற்றியதாகவும் யோசேப்பு சொல்லவில்லை. (வேதாகமத்தில் சில பத்திகள் அப்படிச் சொல்லுகின்றன). மாறாக, இந்த ஒரே நிகழ்வில் தேவனும், யோசேப்பின் சகோதரர்களும் செயல்பட்டார்கள். தேவன் நல்ல நோக்கத்தோடு செயல்பட்டார். யோசேப்பின் சகோதரர்கள் தீய நோக்கத்தோடு செயல்பட்டார்கள். தேவனுடைய இறையாண்மையுள்ள, காணமுடியாத ஆளுகை செயல்படுவதால், யோசேப்பின் சகோதரர்களுடைய செயல் குற்றமற்றது என்று சொல்ல முடியாது. அவர்கள் குற்றமற்றவர்களா? இல்லவே இல்லை. தேவன் தம் இறையாண்மையின்படி யோசேப்பின் வாழ்வில் செயல்பட்டதால், அவனுடைய சகோதரர்கள் நிரபராதிகளா? இல்லை. அதே நேரத்தில், அவர்களுடைய செயல் தேவனுக்கு அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ தரவில்லை. “ஐயையோ! எனக்குத் தெரியாமல் யோசேப்பின் சகோதரர்கள் செயல்படுகிறார்களே!” என்று தேவன் அங்கலாய்க்கவில்லை. அவர்களுடைய செயல் அவருக்குத் தெரியும். யோசேப்பின் சகோதார்கள் தம் திட்டத்தை முறியடிக்கச் செயல்படுகிறார்களே என்று தேவன் பதறவில்லை. அதுபோல, இன்று கொரோனாவைரஸ் தேவனுக்கு அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ ஏற்படுத்தாது. “ஐயையோ! எனக்குத் தெரியாமல் இது எப்படி இந்த உலகத்தில் வந்தது?” என்று தேவன் கையைப் பிசைந்துகொண்டிருக்க மாட்டார். தேவனுடைய இறையாண்மை மனிதர்களுடைய செயலைப் பொறுத்ததல்ல. மனிதர்களின் செயல் தேவனுடைய இறையாண்மையைப் பாதிக்காது. தேவன் தம் இறையாண்மையின்படி செயல்படுகிறார் என்பதால், மனிதன் தம் விருப்பம்போல் செயல்படலாம் என்பதல்ல.
தேவன் தம் மக்களாகிய இஸ்ரயேலை சிட்சிப்பதற்கு அசீரியர்களைப் பயன்படுத்தினார். அசீரியர்கள் தேவனுடைய கரத்தில் வெறும் கருவியே என்று சொல்லலாம் (ஏசா. 10:5). ஆனால், அசீரியர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. இஸ்ரயேலை ஒடுக்கத் தேவன் அசீரியர்களைப் பயன்படுத்தினாலும், தங்கள் செயலுக்கு அசீரியர்களே பொறுப்பு. எனவே, தேவன் அவர்களிடம் கணக்குக் கேட்பார். இஸ்ரயேலர்கள் தோற்றார்கள். அசீரியர்கள் இஸ்ரயேல்மேல் பெற்ற வெற்றிக்கு தாங்களே காரணம் என்று நினைத்தார்கள். ஆனால், தேவன் தம் இறையாண்மையின்படி அவர்களுக்கு அந்த வெற்றியைத் தந்தார். இவ்வாறு ஒரே நேரத்தில் தேவனுடைய இறையாண்மையும், மனிதனுடைய பொறுப்பும் செயல்படுகிறது. ஒரு தச்சன் ஒரு கோடரியையோ அல்லது வாளையோ பயன்படுத்தும்போது, பயன்படுத்தப்படுகிற கருவிகள் தங்களைக்குறித்து உயர்வாகக் கருதலாமா?
“தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்குவதால்” “அதிக பயத்தோடும், நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்” (பிலி. 2:11-12) என்று பவுல் பிலிப்பியர்களுக்குச் சொல்லும்போது, அவர் என்ன சொல்லவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். “தேவன் தம் பங்கைச் செய்துமுடித்துவிட்டார். இப்போது நீங்கள் செய்ய வேண்டிய பங்குதான் மீதியிருக்கிறது. அதை நீங்கள் செய்யவேண்டும். இது உங்கள் முறை,” என்றோ அல்லது “இரட்சிப்பு முற்றிலும் கிருபையைச் சார்ந்தது. எனவே, நீங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் ஒன்றும் செய்யாமல் எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். தேவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். தேவனைச் செயல்பட விடுங்கள்,” என்றோ சொல்லவில்லை. மாறாக, அவர்களுடைய விருப்பங்களிலும், செயல்களிலும் தேவன் செயல்பட்டுக்கொண்டிருப்பதால், அதாவது தேவன் அவர்களில் வேலைசெய்துகொண்டிருப்பதால், அவர்கள் தங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்பட வேண்டும் என்று பவுல் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். தேவனுடைய இறையாண்மை அவர்கள் பிரயாசப்படுவதற்கு ஓர் ஊக்கமாகச் செயல்படுகிறதேதவிர, ஓர் எதிர்ப்பாக அல்ல.
ஓர் இரவு கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி, “நீ பயப்படாமல் பேசு...இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு,” (அப். 18:8-10) என்று சொன்னார். தேவனே தம் மக்களைத் தெரிந்தெடுக்கிறார். தேவனே தம் மக்களைத் தெரிந்தெடுக்கிறார் என்பதால் நற்செய்தி அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லலாமா? இல்லை. தேவன் தம் இறையாண்மையின்படி மக்களைத் தெரிந்தெடுக்கிறார். ஆனால், நாம் நம் பொறுப்பை ஏற்று நற்செய்தி அறிவிக்க வேண்டும். இரண்டும் ஒன்றுக்கொன்று இணக்கமானவை. தேவனுடைய தெரிந்தெடுத்தல் நற்செய்தி அறிவிக்க ஓர் ஊக்கமாகச் செயல்படுகிறதேதவிர ஓர் எதிர்ப்பாக அல்ல.
அப்போஸ்தலர்கள் சிறைச்சாலையிலிருந்து விடுதலையானபின்பு சபையார் வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கிய இறையாண்மையுள்ள தேவனை நோக்கி ஜெபிக்கிறார்கள். அவர்கள் “அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவும் செய்யும்படி ஏரோதும் பொந்தியுபிலாத்தும் புறஜாதிகளோடும் இஸ்ரயேல் ஜனங்களோடும்கூட நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய் மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்,” என்று சங்கீதம் 2யை மேற்கோள்காட்டி ஜெபிக்கிறார்கள் (அப். 4:27, 28).
தேவன் தம் இறையாண்மையின்படி எல்லா நிகழ்வுகளையும் கட்டுப்படுத்துகிறார் என்பதால் அவரைச் சிலுவையில் அறையக் காரணமாக இருந்த ஏரோது, பொந்தியுபிலாத்து, மதத்தலைவர்கள் நிரபராதிகள் இல்லை. சிறு குழந்தைகள் ஒரு தட்டானைப் பிடித்து ஒரு தாளில் மல்லாக்கப் படுக்க வைத்துக் குண்டூசியால் குத்தி விளையாடுவதைப்போல் இயேசுவைக் கொடூரமாய்க் கொலைசெய்தார்கள். தேவனுடைய பார்வையில் இது அவசியம், தேவை. இது அவருடைய இறையாண்மை. ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களின் செயல் நியாயமானதா? குற்றமற்றதா? சரியா? நல்லதா? இல்லை. இதில் சம்பந்தப்பட்ட கொடியவர்கள் குற்றமற்றவர்களா? இல்லை. தங்கள் கொடூரக் கொலைக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டாமா? வேண்டும். யூதாஸ் ஸ்காரியோத்தைக்குறித்துச் சொல்லும்போது, “மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும்,” என்று இயேசு சொன்னார் (மத். 26:24). யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க வேண்டும். இது தேவனுடைய இறையாண்மை. ஆனால், அவன் காட்டிக்கொடுத்தது பாவம். அவனுடைய செயலுக்கு அவன்தான் பொறுப்பு. தேவனுடைய கணக்கு வேறு. மனிதனுடைய கணக்கு வேறு. அவர்களெல்லாம் குற்றவாளிகளே. சதித்திட்டம் தீட்டிய ஏரோது, பிலாத்து, மதத் தலைவர்கள், காட்டிக்கொடுத்த யூதாஸ்போன்றோர் குற்றவாளிகள் இல்லையென்றால், இந்த உலகத்தில் வேறு எந்தத் தவறைச் செய்பவனையும் குற்றவாளி என்று சொல்லவே முடியாது. இது குற்றமே இல்லையென்றால் பிராயச்சித்தப்பலி தேவையில்லையே!
தேவனுடைய இறையாண்மையை மனிதன் தன் தவறான செயல்களை நியாயப்படுத்தவோ அல்லது பாவத்தின் விளைவைக் குறைக்கவோ பயன்படுத்தக்கூடாது.
தேவன் இறையாண்மையுள்ளவர், அவர் அநியாயத்துக்கு நல்லவர். மனிதன் தார்மீகப் பொறுப்புள்ளவன், அவன் அநியாயத்துக்குக் கெட்டவன்.
ஆயினும், தேவன் தம் இறையாண்மையின்படி திரைக்குப்பின்னால் ஆளுகைசெய்து, அவமானத்திலிருந்து கனத்தையும், அசிங்கத்திலிருந்து மகிமையையும் கொண்டுவருகிறார். சாம்பலுக்குப்பதிலாகச் சிங்காரம்.
யாக்கோபின் 12 பிள்ளைகளுக்கிடையேயிருந்த உறவின் தரத்தைப் பார்க்கும்போது, இவர்களிலிருந்து மேசியா வரமுடியுமா என்று தோன்றும். ஆனால், தேவன் தாம் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வல்லவர்.
தேவனுடைய இறையாண்மை என்பதை விதி அல்லது தலையெழுத்து என்பதோடு குழப்பக்கூடாது. “எது நடக்க வேண்டுமோ அது நடக்கும். என்ன எழுதியிருக்கிறதோ அது நடந்தே தீரும்” என்று நினைக்கக்கூடாது, சும்மா இருக்கக்கூடாது. இது தவறு.
இதை யோசேப்பு புரிந்துகொண்டார் (ஆதி. 40). யோசேப்பு எகிப்தில் சிறையில் அநியாயமாய் அடைக்கப்பட்டிருந்தபோது, அதே சிறைச்சாலைக்கு ஒருநாள் பார்வோனின் பானபாத்திரக்காரனும், சுயம்பாகியும் கைதிகளாகக் கொண்டுவரப்பட்டார்கள். ஒருநாள் அவர்கள் இருவரும் கண்ட கனவுகளுக்கு யோசேப்பு விளக்கம் கொடுத்தான். அவன் சொன்னபடியே அப்படியே நடந்தது. அப்போது அவன் தன்னைப் பெரிய ஆளாகக் காட்டியிருக்கலாம். தான் எவ்வளவு வரம்பெற்றவன் என்று நிரூபித்திருக்கலாம். இன்றைக்குப் பலர் செய்வதுபோல். ஆனால், அவனுடைய பதில் என்ன தெரியுமா? “சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா?” (40:8). பார்வோன் மன்னனுக்குமுன்பாக இவன் தம்பட்டம் அடித்திருக்கலாம். பார்வோனின் கனவுகளுக்கும் பொருள் சொல்லும்போது, எவ்வளவு தாழ்மையாகப் பதில் சொல்லுகிறான்! கடுகளவுகூடப் பிசகாமல் அவன் தேவனுக்கு உத்தமமாக இருந்தபோதும், தான் எவ்வளவு மட்டுப்பட்டவன் என்று பானபாத்திரக்காரனிடமும், சுயம்பாகியிடமும், பார்வோன் மன்னனிடமும் அறிவித்தபோதும், அநியாயமாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பாடுபட்டபோது உறுதியான உண்மையோடும், நேர்மையாக நடந்தபோதும், அவன் தேவனுடைய இறையாண்மையை விதி என்று கருதவில்லை. அவன் இரண்டையும் குழப்பவில்லை. முதலாவது, இன்னும் மூன்று நாட்களில் விடுதலையாகி மீண்டும் தன் பழைய நிலைமைக்கு உயர்த்தப்படப்போகிற பானபாத்திரக்காரனிடம் தன் நிலைமையை எடுத்துரைத்து “நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்க வேண்டும்,” என்று வேண்டுகிறான் (ஆதி. 40:14). தான் தேவனை விசுவாசிப்பதால் தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று யோசேப்பு நினைக்கவில்லை. தன் சூழ்நிலைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும், மாற்றம் வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுக்கிறான். ஆனால், அந்த நடவடிக்கை நேர்மையான நடவடிக்கையாக இருக்க வேண்டும். இரண்டாவது, தான் எப்படி இந்தச் சிறைச்சாலைக்கு வந்தேன் என்று யோசேப்பு சொல்லுகிறான். “நான் எபிரேய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன். என்னை இந்தக் காவல்கிடங்கில் வைக்குப்படிக்கு நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை” (40:15). இது கவனிக்க வேண்டிய முக்கியமான காரியம். ஏனென்றால், அந்த நாட்களில் பெரும்பாலும் பொருளாதார சூழ்நிலைகளின் காரணமாகவே ஒருவன் அடிமையாகத் தன்னை விற்றான். எடுத்துக்காட்டாக, ஒருவன் திவாலாகிவிட்டான் என்றால் அவன் தன்னை அடிமையாக விற்றுவிடுவான். ஆனால், யோசேப்பின் நிலைமை அப்படியல்ல. பார்வோன் மன்னன் அதை அறிய வேண்டும் என்று யோசேப்பு விரும்பினான். அவன் ஒரு பலிகடா. மேலும், எகிப்தில் அடிமையாக இருந்த காலத்தில்கூட அவன் “காவல்கிடங்கில் வைக்குப்படி ஒன்றும் செய்யவில்லை.” தான் அநியாயமாய்ச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதை அவன் பானபாத்திரக்காரனிடம் சொல்லுகிறான். தேவனின் இறையாண்மையையும் தன் தார்மீகக் கடமையையும் யோசேப்பு குழப்பவில்லை.
தேவனுடைய இறையாண்மையையும், நன்மைத்தனத்தையும் நம்புவதென்றால் நாம் செயல்படாமல் சும்மா இருக்க வேண்டும் என்பதல்ல பொருள். தாவீதின் மகன் அதோனியா தன்னை ராஜாவாக்க முயன்றபோது, இதைக் கேள்விப்பட்ட தாவீது உடனே நடவடிக்கை எடுத்தான். சாலொமோனை ராஜாவாக்கினான். “விசுவாசித்து நடப்பதென்றால்” கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருப்பதல்ல என்று தாவீதுக்குத் தெரியும். எத்தனை வருடங்கள் அவன் தேவனோடு நடந்திருக்கிறான்! தேவனை மீறி செயல்படக்கூடாது அல்லது தேவனை விட்டுவிட்டு சுயாதீனமாகச் செயல்படக்கூடாது என்பது எப்படி உண்மையோ அதுபோல பக்தி என்ற போர்வைக்குள், விசுவாசம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு சும்மா இருப்பதும் ஆபத்தானது.
நிலைமை எப்படி இருக்கிறது, ஆனால் எப்படி இருக்க வேண்டும் என்று பல வேளைகளில் நம்மால் பகுத்துணரமுடியவில்லை. நாம் தேவனுடைய இறையாண்மையை நம்ப வேண்டும். நம் பொறுப்பைத் தட்டிக்கழிக்கக்கூடாது.
தேவன் ஒரே நேரத்தில் எவ்வாறு இறையாண்மையுள்ளவராகவும், தனிப்பட்டவகையில் உறவுகொள்ளுகிறவராகவும் இருக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால், தேவன் இறையாண்மையுள்ளவர் என்றும், தனிப்பட்டவிதத்தில் உறவுகொள்ளுகிறவர் என்றும் வேதாகமம் வலியுறுத்துகிறது. நாம் மட்டுப்பட்ட மக்கள். நாம் ஒருவரோடொருவர் பேசுகிறோம், ஒருவரையொருவர் சந்திக்கிறோம், கேள்வி கேட்கிறோம், பதில்களைக் கேட்கிறோம், அன்புசெய்கிறோம், கோபப்படுகிறோம், நட்புகொள்ளுகிறோம், பிறரோடுள்ள நம் உறவு வளர வேண்டுமானால் அதற்கு நேரம் தேவை. உறவுகொள்ளுவதற்கு நாம் மட்டுப்படுத்தப்பட்ட மனிதர்களாக இருக்க வேண்டும். பார்க்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும், பகிர்ந்துகொள்ள வேண்டும், கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும். போக்குவரத்து இருக்க வேண்டும். இதுபோல, தேவன் கேள்வி கேட்கிறார், பதில் கோருகிறார், அன்புசெய்கிறார், கோபப்படுகிறார், நட்பைப் போற்றுகிறார், பகிர்ந்துகொள்கிறார், போக்கும்வரத்துமாக இருக்கிறார், கொடுக்கல் வாங்கல் செய்கிறார். இப்படி அவர் தனிப்பட்ட விதத்தில் உறவுகொள்ளுகிறார். வேதாகமத்தின் வேறு சில பத்திகள், “அவர் தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிறார்,” (எபே. 1:12) என்று சொல்லுகின்றன. இவ்வாறு இறையாண்மையுள்ள, தனிப்பட்டவிதத்தில் உறவுகொள்ளுகிற தேவனை எப்படிக் கற்பனைசெய்துபார்ப்பது என்று தெரியவில்லை. ஆனால், இந்த இரண்டும் ஒரே நேரத்தில் உண்மையில்லையென்றால், வேதாகமம் விவரிக்கும் தேவன் இல்லாமல் போய்விடுவார், கிறிஸ்தவமும் இல்லாமல் போய்விடும். தேவன் ஒரு பரமஇரகசியம். தேவனைப்பற்றி நமக்கு நிறையத் தெரியாது. அதுபோல தேவனுடைய இறையாண்மையும் ஒரு பரம இரகசியம்.
தேவன் இறையாண்மையுள்ளவர். அவர் காலத்தையும் இடத்தையும் கடந்தவர். அதே நேரத்தில் அவர் தனிப்பட்டவிதத்தில் மனிதர்களோடு உறவுகொள்கிறார். நாம் ஒருவரோடொருவர் தனிப்பட்ட விதத்தில் உறவுகொள்வதற்கு நமக்கு நேரமும் இடமும் தேவை. அதுபோல் நாம் நேரம் இடம் என்ற மண்டலத்தில்தான் தேவனோடு உறவுகொள்ளுகிறோம். அவரும் நம்மோடு உறவுகொள்ளுகிறார். இறையாண்மையுள்ள தேவன் என்ற முறையில் அவர் காலத்தையும் இடத்தையும் தாண்டியவர், கடந்தவர், அப்பாற்பட்டவர். காலத்தையும் இடத்தையும் தாண்டிய இறையாண்மையுள்ளவர் என்ற முறையில் எந்த விதிவிலக்குமின்றி அவர் எல்லாவற்றையும் ஆளுகைசெய்கிறார். நம்மைப் படைத்தவர் என்ற தனிப்பட்ட முறையில் அவருடைய சாயலையுடைவர்களாகிய நம்மோடு தனிப்பட்ட விதத்தில் உறவுகொள்ளுகிறார்; தனிப்பட்டவராக மட்டுமல்ல, நன்மை நிறைந்தவராகவும் தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறார். இந்த இரண்டு அம்சங்களையும் எப்படி ஒன்றாக இணைப்பது என்பது நமக்கு அப்பாற்பட்டது. விமானத்தின் ஓர் இறக்கையைப் பிய்த்து எறிந்தபின் ஒரேவொரு இறக்கையைவைத்து எப்படிப் பறக்க முடியாதோ, அதுபோல தேவனுடைய இறையாண்மையையும், அவருடைய தனிப்பட்ட உறவையும் பிரிக்க முடியாது.
சங்கீதங்கள் 46, 37 இறையாண்மையுள்ள தேவனின் அதிகாரத்தை விவரிக்கின்றன.
“மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள். வெளிப்படுத்தப்பட்டவைகளோ இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்” (உபா. 29:29). இரண்டு குறிப்புகள். மறைவான காரியங்களை நாம் அறியமுடியாது. மறைவான காரியங்கள் நிறைய இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நேரத்துக்கும் நித்தியத்துக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது? காலத்தையும் இடத்தையும் கடந்த நித்திய தேவன் எப்படி காலத்திலும் இடத்திலும் தம்மை வெளிப்படுத்துகிறார்? தேவன் மனிதனாக வந்தார், மனித வாழ்க்கை வாழ்ந்தார், மரித்தார், உயிர்த்தார். இது வரலாறுதானே! தேவன் எப்படித் தம்மை இப்படிக் காலத்திலும் இடத்திலும் வெளிப்படுத்தினார்? அவர் எப்படி காலத்தையும் இடத்தையும் கடந்தவராகவும், தனிப்பட்டவராகவும் இருக்கிறார்?
ஒரே தேவன் எப்படி மூன்றாக இருக்கிறார்?
இந்தக் காரியங்களில் மறைவான பரமஇரகசியங்கள் இருக்கின்றன என்று சொல்லும்போது அவைகள் ஒன்றுக்கொன்று முரணானவை என்று சொல்லவில்லை. அவைகளைப் போதுமான அளவுக்குப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று மாத்திரம் சொல்லுகிறேன். நம் அறியாமையை நாம் ஒப்புக்கொள்கிறோம். தேவன் தம்மை வெளிப்படுத்தாதவரை நாம் புரிந்துகொள்ள முடியாது. மறைவானவைகள் தேவனுக்குரியவை. எனவே, நமக்கு எல்லாம் தெரியும் என்பது மதியீனம். அவைகளைக் கண்டுபிடிக்க முயல்வதுகூடப் புத்திசாலித்தனம் இல்லை.
சில காரியங்கள் தற்காலிகமாக மறைவாக இருக்கலாம். அவைகளை நாம் ஆராய வேண்டும். “காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை. காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை” (நீதி. 25:2). ஆனால், இது உலகளாவிய சட்டம் இல்லை. முதல் பாவமே மறைவான காரியங்களை அறிந்து தேவனைப்போல் மாற வேண்டும் என்பதில் சம்பந்தப்பட்டிருந்தது. எல்லாம் அறிந்த தேவனை பயபக்தியோடு ஆராதிப்பதும், அவர் கிருபையாக வெளிப்படுத்தியிருப்பவைகளுக்குக் கீழ்ப்படிவதுவே ஞானம்.
ரோமர் 8, 9இல் தேவன் இறையாண்மையுள்ளவர் என்று பவுல் சொல்லுகிறார். ரோமர் 10இல் நாம் நம் வாயினால் அறிக்கைசெய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்.
நாம் அளவிடமுடியாத, விவரிக்கமுடியாத ஒரு பரம காரியத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
நமக்கு வினாடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், வருடம் என்ற நாட்காட்டி இருக்கிறது. தேவன் இப்படி ஒரு நாட்காட்டி வைத்திருக்கிறாரா? அவர் இருந்தவராகவே இருக்கிறார். அவர் மாறாதவர். அவர் என்றும் புதிதானவர். நித்திய தேவன் காலம், நேரத்தில் எவ்வாறு செயல்படுகிறார் என்று நமக்குத் தெரியாது. காலநேரம் என்றால் என்னவென்று நமக்குத் தெரியாது. நித்தியம் என்றால் என்னவென்று நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. தேவன் ஏதாவது ஒன்றன்பின் ஒன்று என்று வரிசை வைத்திருக்கிறாரா? அந்த வரிசையின்படி எல்லாவற்றையும் செய்கிறாரா? காலங்களைக் கடந்த தேவன் நம் காலநேரத்துடன் நம்முடன் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார் என்று தெரியாது.
முன்குறித்தலையும், முன்னறிதலையும்பற்றி வேதாகமம் தெளிவாகப் பேசுகிறது. ஆனாலும், இன்றும் இது ஒரு விவாதப்பொருளாகவே உள்ளது (ரோமர் 8:28-30). தேவன் முன்குறித்தார், முன்னறிந்தார், முன்னறிந்து முன்குறித்தவர்களை ஏற்ற நேரத்தில் அழைத்தார். இவைகளெல்லாம் இன்றைக்கும் விவாதிக்கப்படுகின்றன.
தங்கள் செயல்களுக்குத் தாங்களே பொறுப்பேற்க வேண்டிய இரண்டாம்நிலை முகவர்கள்மூலம் இறையாண்மையுள்ள தேவன் எவ்வாறு செயல்படுகிறார் என்று நமக்குத் தெரியாது. எடுத்துக்காட்டு யூதாஸ், யோசேப்பின் சகோதரர்கள், அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள்.
இவ்வாறு நாம் ஒரு பரமஇரசகியத்துக்குள் அடைபட்டுவிடுகிறோம். இது ஆச்சரியம் இல்லை. ஏனென்றால், நாம் தேவனைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம், சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். தேவனைப்பற்றிப் பரமஇரகசியம் எதுவும் இல்லையென்றால், அவர் தேவனாக இருக்கமாட்டார். தேவனையும், தேவனுடைய வழிகளையும்பற்றி நாம் எல்லாவற்றையும் புரிந்துகொண்டால் அவர் மிகச் சிறியவராக, மிக எளிதில் அடக்கப்படத்தக்கவராக, நம் வீட்டுத் தேவனாகிவிடுவார், குருசடித் தேவனாகிவிடுவார். தேவனுடைய இறையாண்மை தேவனைப்பற்றிய மறைபொருளோடு (பரமஇரகசியத்தோடு) சம்பந்தப்பட்டுள்ளதால், தேவன் ஒரு மறைபொருள் (பரமஇரகசியம்) என்பதை ஏற்றுக்கொண்டால், தேவனைப்பற்றிய மறைபொருள் எவ்வாறு செயல்படுகிறதோ, அவ்வாறே இறையாண்மையைப்பற்றிய மறைபொருளும் செயல்படுகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
தேவன் ஒருவரா? மூவரா? தேவன் ஒருவர் என்பது உண்மை. ஆனால், இவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக இருக்கிறாரே! இது ஒரு பரமஇரகசியம். இதை விளக்கமுடியாது. இது வேதம் எடுத்துரைக்கும் மாறாத, மறுக்கமுடியாத உண்மை.
இதுபோலவே, தேவன் தம் இறையாண்மையின்படி தம் மக்களை இறுதிவரைப் பாதுகாக்கிறார் என்பதும், இரட்சிக்கப்பட்டவர்கள் பொறுப்புள்ளவர்களாக இறுதிவரை நிலைத்திருக்க வேண்டும் என்பதும் உண்மை.
தெரிந்தெடுத்தல் தேவனுடைய இறையாண்மையின் இன்னொரு மூலக்கூறு. தேவ மக்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இயேசுவை விசுவாசிக்கிறார்கள். அப்படியானால், நற்செய்தி அறிவிக்க வேண்டாமா? மனிதன் தேவனைத் தேடவேண்டாமா? நற்செய்தி அறிவிக்க வேண்டும். மனிதன் தேவனைத் தேட வேண்டும். தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாக அவர் நமக்குத் தூரமானவர் அல்ல. அவரைத் தேடினால் கண்டுபிடிக்கலாம். நற்செய்தியைக் கேட்கிறவர்கள் விசுவாசிக்கிறார்கள். எனவே, தெரிந்தெடுத்தல் என்று ஒன்று இருப்பதால் மனிதன் தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது அல்லது நற்செய்தி அறிவிப்பதைக் குறைக்கவோ, நிறுத்தவோ முடியாது. மாறாக, தேவனுடைய தெரிந்தெடுத்தல் என்று ஒன்று இருப்பதைப் பார்ப்பவன் தன் இரட்சிப்புக்குக் காரணம் தேவனுடைய கிருபை என்று ஒப்புக்கொள்வான். அது அவனிடத்தில் தாழ்மையை வளர்க்கவும் (ரோமர் 9), நற்செய்தி அறிவிப்பதை ஊக்குவிக்கவும் (அப். 18:9-10) செயல்படுகிறது. மக்கள் இயேசுவை விசுவாசிக்குமாறு அல்லது நற்செய்திக்குக் கீழ்ப்படியுமாறு அழைக்கும்போது தேவனுடைய இறையாண்மை பாதிக்கப்படுவதில்லை. மாறாக, மக்களை இரட்சிப்புக்கேதுவான விசுவாசத்துக்குக் கொண்டுவரவும், மனிதனுடைய பொறுப்பை அதிகரிக்கவும், தேவனுடைய பொறுமையைப் போற்றவும் செயல்படுகின்றன.
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பரமஇரகசியமான வேறுபல உபதேசங்களை ஒப்புக்கொள்ளப் பழகிவிட்டோம். இதை அறிந்த மக்கள் வேதாகமத்தை வாசிக்கும்போது எது பரமஇரகசியம் என்பதைப் புரிந்துகொண்டு, அதை சேதப்படுத்தக்கூடாது என்பதில் குறியாக இருப்பார்கள். மிகச் சிறந்த எடுத்துக்காட்டு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றியது. ஆண்டவராகிய இயேசு தேவனும் மனிதனுமாவார். பல வசனங்கள் அவருடைய தெய்வீகத்தைப்பற்றிப் பேசுகின்றன. வேறு பல வசனங்கள் அவருடைய மனுஷீகத்தைப்பற்றிப் பேசுகின்றன. ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. தெய்வீகத்தைப்பற்றிய வசனங்களை வைத்துக்கொண்டு அவர் தேவன் மட்டுமே என்றும், மனுஷீகத்தைப்பற்றிய வசனங்களை வைத்துக்கொண்டு அவர் மனிதன் மட்டுமே என்று வாதிடுவது மதியீனம்.
தேவனுடைய பக்கத்தில் அவர் இறையாண்மையுள்ளவர். அவர் தம் மக்களைக் கடைசிவரைப் பாதுகாக்கிறார். மனிதனுடைய பக்கத்தில் அவன்; கடைசிவரை நிலைத்திருந்து தன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. இது ஒரு பரமஇரகசியம். மனிதன் சுதந்தரவாளி. அவன் தன் விருப்பம்போல் முடிவெடுத்து வாழலாம். அவனுடைய செயலுக்கு அவன்தான் முழுப் பொறுப்பு. ஆனால், தேவனுடைய இறையாண்மை கேள்விக்குறியதல்ல.
இந்த அணுகுமுறை தேவனுடைய தெரிந்தெடுத்தல், பாடுகள், ஜெபம்போன்ற பல காரியங்களுக்குப் பொருந்தும். ஜெபத்தைப் பொறுத்தவரை, ஒரு பக்கம், “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்குமுன்னமே நம்முடைய தேவை இன்னதென்று தேவன் அறிந்திருக்கிறார்” (மத். 6:8). “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று நீங்கள் கேளாமலும், சந்தேகப்படாமலும் இருங்கள்” (லூக்கா 12:29). இதுபோன்ற வசனங்களை வாசிக்கும்போது ஜெபிக்கத் தேவையில்லாததுபோல் தோன்றும். ஆனால், நாம் ஜெபிக்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கான வசனங்கள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன. ஜெபிக்க வேண்டுமா, வேண்டாமா? ஒரு பக்கம், தாம் தெரிந்தெடுத்தவர்களை முடிவுபரியந்தம் பாதுகாப்பதாகச் சொல்லுகிற தேவனுடைய இறையாண்மையுள்ள வாக்குத்தத்தங்கள் இருக்கின்றன. மறுபக்கம், விசுவாசிகள் புதிய உடன்படிக்கைக்கும், உடன்படிக்கையின் கர்த்தருக்கும், அவர்களுடைய அழைப்புக்கும் உண்மையும் உத்தமுமாக நிலைத்திருக்குமாறு வலியுறுத்தும் வசனங்கள் இருக்கின்றன. இவ்வாறு, தேவனுடைய இறையாண்மையும், மனிதனுடைய பொறுப்பும் இன்னொரு வடிவத்தில் வழங்கப்படுகிறது.
எனவே, இது எப்போதும் பரம்புதிராகவே இருக்கும். பரமஇரகசியத்தைச் சரியான இடத்தில் கண்டுபிடிக்க வேண்டும். தேவன் தம் இறையாண்மையின்படி தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைக் கடைசிவரைப் பாதுகாப்பார் என்று சொல்லியபின், மனிதன் தன் பொறுப்பை உத்தமமாக நிறைவேற்றினால்தான் இது சாத்தியம் என்று சொன்னால் இது பரமஇரகசியம் இல்லை. இது தர்க்கரீதியான முரண்பாடு. தேவனுடைய தெரிந்தெடுத்தலைப்பற்றிய காரியமும் இதுவே. இரட்சிப்பின் நிச்சயத்தைப்பற்றிய எல்லா வசனங்களும் நல் வாழ்வில் செயல்படட்டும். விசுவாசதுரோகத்துக்கு எதிரான எச்சரிக்கைகள் தேவனுடைய வாக்குறுதிகளைச் செல்லாததாக்கிவிடுமா? நிச்சயமாக இல்லை. அவை நாம் பெற்ற இரட்சிப்பில் நிலைத்திருப்பதற்கு நம்மை உந்தித்தள்ளுகின்றன. தேவனுடைய வாக்குறுதிகள் நம்மைச் சோம்பேறிகளாக்குகிறதா? நிச்சயமாக இல்லை. அவை நம் வைராக்கியத்தையும், நன்றியுணர்வையும், தேவனுடைய உத்தமத்தைப் பராட்டுவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.