Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

தேவனுடைய அன்பு

Translated from the original article, “Love of God”
By A.W.Tozer

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் எங்களுக்குள் விசுவாசத்தின் உறுதிப்பாட்டையும், மனச்சாட்சியின் குற்றச்சாட்டுகளையும் ஒரே நேரத்தில் கேட்கிறோம்; கேட்டு, எங்கள் மனதில் அடிக்கடி குழம்புகிறோம். உம்மைப்போல் பரிசுத்தமும், நீதியுமுடைய ஒருவர் எங்களை நேசிப்பதற்கு எங்களில் ஒன்றுமே இல்லை. இது நிச்சயம். இருந்தபோதும், நீர் கிறிஸ்து இயேசுவுக்குள் எங்கள்மேல் கொண்ட உம்முடைய மாறாத அன்பைத் தெரியப்படுத்தியிருக்கிறீர். உம் அன்பைப் பெறுவதற்கு எங்களில் ஒன்றுமே இல்லை; அதுபோல, நீர் எங்களை நேசிப்பதைத் தடுக்க இந்தப் பிரபஞ்சத்தில் ஒன்றுமே இல்லை. நீர் எங்களை நேசிப்பதற்குக் காரணமும் இல்லை; நாங்கள் தகுதியானவர்களும் இல்லை. எங்களை நேசிப்பதற்கான காரணம் நீரே. இந்த அன்பினால் நீர் எங்களை நேசிக்கிறீர். எங்களைக் கண்டுகொண்ட உம் அன்பின் தீவிரத்தை, நித்தியத்தை, விசுவாசிக்க எங்களுக்கு உதவிசெய்யும். அப்போது, அன்பு பயத்தை விரட்டும்; குழம்பிப்போன எங்கள் இருதயங்கள் நாங்கள் என்னவாக இருக்கிறோமோ அதன்மேல் நம்பிக்கை வைக்காமல், நீர் உம்மை என்னவாகத் தெரியப்படுத்தியிருக்கிறீரோ அதன்மேல் நம்பிக்கை வைத்து, சமாதானத்தோடு இருக்கும், ஆமென்.

"தேவன் அன்பாகவே இருக்கிறார்," என்று அப்போஸ்தலனாகிய யோவான் ஆவியானவரால் எழுதினார். அவருடைய வார்த்தைகள் தேவனுடைய இன்றியமையாத சுபாவத்தை வரையறுக்க ஒரு கூற்று என்று சிலர் கருதுகிறார்கள். இது ஒரு மாபெரும் தவறு. யோவான் அந்த வார்த்தைகளின்மூலம் ஓர் உண்மையைக் கூறினார். அவர் ஒரு வரையறையைத் தரவில்லை.

அன்பு தேவனுக்குச் சமம் என்று சொல்வது ஒரு பெரிய தவறு. இதனால் மதரீதியான, தவறான அநேகத் தத்துவங்கள் உருவாகியிருக்கின்றன; இதனால் பரிசுத்த வேதவாக்கியங்களுக்கு முற்றிலும் ஒவ்வாத மேலோட்டமான கவிதைகள் பெருவாரியாக உருவாகியிருக்கின்றன; இது வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் தட்பவெப்பநிலைக்கு முற்றிலும் முரணான இன்னொரு தட்பவெப்ப நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தேவன் என்னவாக இருக்கிறாரோ அப்படியே அன்பு இருக்கிறது என்று அப்போஸ்தலன் கூறியிருந்தால், அன்பு என்னவாக இருக்கிறதோ அப்படியே தேவன் இருக்கிறார் என்று நினைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட நிலைமைக்குள் நாம் தள்ளப்படுவோம். எழுத்துப்பிரகாரமாக தேவன் அன்பாக இருந்தால், எழுத்துப்பிரகாரமாக அன்பு தேவனாக இருக்கிறது என்றாகிவிடும். அதன்பின் அன்பை ஒரு தேவனாக ஆராதிக்கவேண்டியது நம் கடமையாகிவிடும்; அது கட்டாயமாகிவிடும். அன்பு தேவனுக்குச் சமம் என்றால், தேவனும் அன்புக்குச் சமம் என்றாகிவிடும்; தேவனும் அன்பும் ஒன்று என்பதுபோல் ஆகிவிடும். அப்போது, நாம் தேவனில் இருக்கும் ஆளுமை என்ற கருத்தை அழித்துவிடுகிறோம்.அப்போது அவருடைய ஒரேவொரு குணாம்சத்தைத்தவிர அவருடைய மற்ற எல்லாக் குணாம்சங்களையும் அடியோடு மறுதலித்துவிடுகிறோம். அந்த ஒரேவொரு குணாம்சத்தை நாம் தேவனுக்கு மாற்றீடாகச் செய்துவிடுகிறோம். அப்படிச் செய்தால் நம்மிடம் இருக்கும் தேவன் இஸ்ரவேலின் தேவன் அல்ல; அவர் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும், பிதாவுமானவர் அல்ல; அவர் தீர்க்கதரிசிகளின் தேவனும், அப்போஸ்தலர்களின் தேவனும் அல்ல; அவர் பரிசுத்தவான்களின் தேவனும், சீர்திருத்தவாதிகளின் தேவனும், இரத்தசாட்சிகளின் தேவனும் அல்ல; அவர் சபையின் இறையியலாளர்களின் தேவனும், பாடலாசிரியர்களின் தேவனும் அல்ல.

தேவனுடைய குணாம்சங்களைப் புரிந்துகொள்ளுதல்

நாம் நம் ஆத்துமாக்களினிமித்தம் வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் வார்த்தைகளுக்கு அடிமையாவதிலிருந்து தப்பித்து, அதற்குப்பதிலாக அந்த வாத்தைகளின் அர்த்தங்கள்மேல் நாம் உத்தமமான பற்றாசைகொள்ள வேண்டும். வார்த்தைகள் எண்ணங்களை வெளியாக்க வேண்டும். அவை எண்ணங்களைப் பிறப்பிக்கக்கூடாது. தேவன் அன்பாக இருக்கிறார் என்று நாம் சொல்லுகிறோம்; தேவன் ஒளியாக இருக்கிறார் என்று நாம் சொல்லுகிறோம்; தேவன் சத்தியமாக இருக்கிறார் என்றும் சொல்லுகிறோம். ஒரு மனிதனைப்பற்றிப் பேசுகையில், "அவன் தயவாக இருக்கிறான்," என்று சொல்லும்போது, அந்த வார்த்தைகளை எந்த அர்த்தத்தில் நாம் புரிந்துகொள்கிறோமோ, அதே அர்த்தத்தில்தான் தேவனைப்பற்றி நாம் சொல்லுகிற வார்த்தைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். "அவன் தயவாக இருக்கிறான்" என்று சொல்லும்போது, தயவும் அந்த மனிதனும் ஒன்று என நாம் கூறவில்லை. அப்படிச் சொல்லும்போது நம் வார்த்தைகளை அந்த அர்த்தத்தில் யாரும் புரிந்துகொள்வதில்லை.

"தேவன் அன்பாக இருக்கிறார்," என்று சொல்லும்போது, அன்பு தேவனுடைய இன்றியமையாத ஒரு குணம் என்பதே அதன் பொருள். அன்பு தேவனுக்குரிய ஏதோவொன்று என்பது உண்மை; ஆனால், அன்பு தேவன் அல்ல. பரிசுத்தம், நீதி, உத்தமம், சத்தியம்போன்ற வார்த்தைகளைப்போல், அன்பு என்ற வார்த்தையும் தேவன் தம் ஒருமையான ஆள்தத்துவத்தில் எப்படி இருக்கிறார் என்பதை வெளியாக்குகிறது. தேவன் மாறாதவர்; எனவே, அவர் எப்போதும் அவரைப்போலவே செயல்படுகிறார். தேவன் ஒருமையானவர்; எனவே, அவர் தம் ஒரு குணாம்சத்தைக் காண்பிக்க, தம் குணாம்சங்களில் இன்னொன்றைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதில்லை.

தேவனுடைய மற்ற குணாம்சங்களிலிருந்து, அவருடைய அன்பைப்பற்றி நாம் அதிகமாகக் கற்றுக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, தேவன் தாமாகவே இருப்பதால், அவருடைய அன்புக்கு எந்தத் தொடக்கமும் கிடையாது என்று நாம் அறிந்துகொள்ள முடியும். அவர் நித்தியமானவர் என்பதால், அவருடைய அன்புக்கு எந்த முடிவும் இருக்க முடியாது. அவர் எல்லையற்றவராக இருப்பதால், அவருடைய அன்புக்கு எல்லை இருக்க முடியாது. அவர் பரிசுத்தராக இருப்பதால், அவருடைய அன்பு கறையற்ற, தூய்மையின் சாறாகும். அவர் மிகப் பரந்தவராக இருப்பதால், அவருடைய அன்பு அளவிடமுடியாத அளவுக்குப் பரந்த, ஆழம் காணமுடியாத கரையற்ற ஒரு கடல்போன்றது. இதற்குமுன் நாம் மகிழ்ச்சியோடும், அமைதியோடும் முழங்கால்படியிடுகிறோம். இதிலிருந்து மிகவும் பெருமிதமாக பேச்சாற்றல்கூட குழப்பமடைந்து, தலைகுனிந்து, பின்வாங்கிப்போய்விடும்.

தேவனுடைய அன்பைப் புரிந்துகொள்ளுதல்

நாம் தேவனை அறிய வேண்டும்; மற்றவர்களினிமித்தம் நாம் அறிந்ததைச் சொல்ல வேண்டும்; அப்படியானால், நாம் அவருடைய அன்பைப்பற்றி பேச முயல வேண்டும். எல்லாக் கிறிஸ்தவர்களும் இதைச் செய்ய முயன்றிருக்கிறார்கள். ஆனால், ஒருவர்கூட இதை ஒருபோதும் அவ்வளவு நன்றாகச் செய்ததில்லை. நாம் தேவனுடைய மலைக்க வைக்கும் அற்புதமான அன்பைப்பற்றிப் பேசுவது, ஒரு குழந்தை நட்சத்திரத்தை எட்டிப்பிடிப்பதுபோல்தான் இருக்கும். இதைவிட அதிகமாக என்னால் எதுவும் செய்ய முடியாது. இருந்தாலும், அந்தக் குழந்தைத் தன் கையை நட்சத்திரத்தை நோக்கி நீட்டும்போது, அந்தக் குழந்தை மற்றவர்களின் கவனத்தை நட்சத்திரத்தின் பக்கமாக ஈர்க்கக்கூடும். ஒருவன் அந்த நட்சத்திரத்தைப் பார்க்கவேண்டுமானால், எந்தத் திசையில் பார்க்கவேண்டும் என்று அவன் பார்க்கவேண்டிய திசையைக்கூட அந்தக் குழந்தை ஒருவேளை சுட்டிக்காட்டக்கூடும். எனவே, நான் என் இருதயத்தைத் தேவனுடைய உயர்ந்த, பிரகாசிக்கிற அன்பைநோக்கி உயர்த்துகையில், அதைப்பற்றி இதுவரை அறிந்திராத ஒருவன் உற்சாகமடைந்து மேல்நோக்கிப் பார்த்து, நம்பிக்கை பெறக்கூடும்.

அன்பு என்றால் என்னவென்று நமக்குத் தெரியாது; அன்பு என்றால் என்னவென்று நாம் ஒருவேளை ஒருபோதும் அறியாமல்கூடப் போகக்கூடும். ஆனால், அன்பு எப்படி வெளியாகிறது, வெளியரங்கமாகிறது, என்று நாம் அறிந்துகொள்ள முடியும். இங்கு, அது நமக்குப் போதும். முதலாவது, அது நல்ல விருப்பமாக, ஆசையாக, வெளியாகிறது என்று பார்க்கிறோம். அன்பு எல்லாருடைய நன்மையையும் விரும்புகிறது. அது ஒருவருக்கும் ஒருபோதும் தீங்கையோ அல்லது தீமையையோ விரும்புவதே இல்லை.

இது அப்போஸ்தலனாகிய யோவானின் வார்த்தைகளை விளக்குகிறது: "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்" (1 யோவான் 4:18). பயம் ஒரு வேதனையான உணர்ச்சி; நமக்குத் தீங்கு அல்லது துன்பம் வரக்கூடும் என்ற எண்ணத்தின் விளைவாகவே அந்த உணர்ச்சி எழுகிறது. நம் நலனை விரும்பாத ஒருவனுடைய சித்தத்திற்கு நாம் கீழ்ப்படியும்வரை இந்தப் பயம் நீடித்திருக்கும். நாம் நம் நலனை விரும்புகிறவனுடைய சித்தத்தின் பாதுகாப்பின்கீழ் வரும் கணத்தில் பயம் ஓடிவிடுகிறது. கூட்டம் அதிகமான ஒரு கடையில் காணாமல்போன ஒரு குழந்தை பயந்து நடுங்குகிறது; ஏனென்றால், அந்தக் குழந்தை தன்னைச் சுற்றியிருக்கும் அந்நியர்களை எதிரிகளைப்போல பார்க்கிறது. ஒரு கணம் கழித்து அந்தக் குழந்தை தன் தாயின் கரங்களில் இருக்கும்போது எல்லாப் பயமும் மறைந்துவிடுகிறது. குழந்தைக்குத் தெரிந்த தாயின் நல்ல விருப்பம் பயத்தை விரட்டிவிடுகிறது.

உலகம் எதிரிகளால் நிறைந்திருக்கிறது. இந்த எதிரிகளிடமிருந்து நமக்குத் தீங்கும், துன்பமும் வரக்கூடும் என்ற சாத்தியக்கூறு இருக்கும்வரை, பயத்தைத் தவிர்க்கமுடியாது. பயத்துக்கான காரணங்களை அகற்றாமல், பயத்தை வெல்வதற்கு எடுக்கும் முயற்சி முற்றிலும் வீண். சாந்த உபாயங்களைவிட இருதயம் அதிக ஞானமுள்ளது. எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடக்கும் என்ற நிச்சயம் இருக்கும்வரை, நம்பிக்கைக்காக "சராசரி விதியை" நாம் நோக்கிப்பார்க்கும்வரை, தப்பிப்பிழைப்பதற்கு எதிரியை நம் சூழ்ச்சியால் வெல்லவேண்டும் என்பதற்காக நாம் நம் திறமையை நம்பும்வரை, பயம் இருக்கத்தான் செய்யும். பயம் மனவேதனையை உண்டாக்கும்.

அன்பு தேவனுக்குரியது என்பதை அறிந்து, நேசருடைய கரத்தில் சாய்ந்தவண்ணம் அந்தரங்கமான இடத்துக்குள் நுழைவது மட்டுமே பயத்தை விரட்டும். இதனால், மட்டுமே, பயத்தை விரட்ட முடியும்; இது மட்டுமே பயத்தை விரட்டும். எதுவும் தன்னைச் சேதப்படுத்த முடியாது என்ற உறுதியான நம்பிக்கை ஒருவனுக்கு ஏற்பட்டுவிட்டால், அந்தக் கணமே, அவனைப் பொறுத்தவரை, எல்லாப் பயமும் இந்தப் பிரபஞ்சத்தைவிட்டு ஓடிவிடுகிறது. உடலில் ஏற்படுகிற வலியினாலும், வேதனையினாலும் வருகிற இயற்கையான எதிர்உணர்வுகளை, பதட்டமான எதிர்விளைவுகளை, சில நேரங்களில் அவன் உணரக்கூடும். ஆனால், பயம் என்ற கொடும் வேதனை ஒரேடியாகப் போய்விட்டது. தேவன் அன்பாக இருக்கிறார்; தேவன் இறையாண்மையுள்ளவர். அவருடைய அன்பு என்றென்றைக்கும் நீடித்திருக்கும் நம் நலனை விரும்புவதற்கு அவரைத் திட்டமிடசசெய்கிறது. அவருடைய இறையாண்மை அதைப் பாதுகாப்பதற்கு அவருக்கு ஆற்றலாகிறது. நல்ல மனிதனை ஒன்றும் சேதப்படுத்த முடியாது.

அவர்கள் சரீரத்தைக் கொல்லலாம்;
தேவனுடைய சத்தியமோ இன்னும் நிலைத்திருக்கிறது
அவருடைய இராஜ்ஜியம் என்றென்றைக்குமுள்ளது. 

மார்டின் லூத்தர்

தேவனுடைய அன்பின் குணாதிசயங்கள்

தேவன் நண்பரைப்போன்றவர் என்று அவருடைய அன்பு கூறுகிறது; அவர் நம் நண்பர் என்றும், நாம் அவருடைய நண்பர்களாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்றும் அவருடைய வார்த்தை நிச்சயமாகக் கூறுகிறது. ஒரு மனிதனிடம் தாழ்மையின் ஒரு சிறிய அறிகுறியாவது இருந்தால், அவன் தான் தேவனுடைய நண்பன் என்று நினைக்கத் துணியவே மாட்டான். ஆனால், இந்த எண்ணம் மனிதர்களிடம் தோன்றவில்லை. "நான் தேவனுடைய நண்பன்," என்று ஆபிரகாம் ஒருபோதும் சொல்லியிருக்க முடியாது. ஆனால், ஆபிரகாம் தம் நண்பன் என்று தேவனே கூறினார் (யாக்கோபு 2:23). கிறிஸ்துவைத் தங்கள் நண்பர் என்று கூறச் சீடர்கள் தயங்கியிருக்கக்கூடும். ஆனால், "நீங்கள் என் நண்பர்கள்," என்று கிறிஸ்து அவர்களிடம் கூறினார் (யோவான் 15:15). பணிவு இவ்வளவு துணிச்சலான எண்ணத்தை ஏற்கத் தயங்கலாம். ஆனால், விசுவாசம் தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதற்கும், தேவனுடனான நட்பைக் கோருவதற்கும் துணிகிறது. ஒருவேளை நாம் சுய-உணர்வுள்ள தாழ்மையோடு தோட்டத்தின் மரங்களுக்கிடையே ஒளிந்து கொண்டிருக்கலாம். ஆனால், தேவன் தம்மைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறாரோ அதை விசுவாசித்து, கிருபாசனத்தண்டையில் தைரியமாகக் கிட்டிச்சேரும்போது, நாம் தேவனை அதைவிட அதிகமாகக் கனம்பண்ணுகிறோம்.

அன்பு உணர்ச்சிபூர்வமாகத் தன்னை ஒருமைப்படுத்துகிறது. அது எதையும் தன்னுடையதாகக் கருதாது; மாறாக, அது எதை நேசிக்கிறதோ, அதற்கு எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்துவிடுகிறது. இந்த உலகத்தில் நாம் இதைக் கண்கூடாகக் காண்கிறோம். ஓர் இளம் தாய் இருக்கிறாள்; அவள் மிகவும் ஒல்லியாகவும், களைப்பாகவும் இருக்கிறாள். அவள் கொழுகொழுவென்றிருக்கும் ஆரோக்கியமான ஓர் குழந்தைக்குப் பால் கொடுக்கிறாள், அவள் முறுமுப்பதில்லை, புகார் செய்வதில்லை, வருத்தப்படுவதில்லை. ஒளிரும் கண்களோடும், சந்தோஷத்தோடும், பெருமிதத்தோடும் அந்தத் தாய் குழந்தையைக் கவனிக்கிறாள். அன்பைப் பொறுத்தவரை, தன்னைத்தானே தியாகம் செய்வது மிகவும் சாதாரணமானது, "ஒருவன் தன் சிநேகிதனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை," என்று கிறிஸ்து தம்மைப்பற்றிக் கூறினார் (யோவான் 15:13).

தேவன் தம் இருதயத்தை மனிதர்களுடன் உணர்ச்சிப்பூர்வமாக ஒன்றுபடுத்தயிருக்கிறார்; இது சுதந்திரமான, தேவனுடைய விநோதமான, அழகான விசித்திரப்போக்காகும். தேவன் தன்னிறைவானவர்; ஆனால், அவர் நம் அன்பை விரும்புகிறார்; நம் அன்பைப் பெறும்வரை, அவர் திருப்தியடையமாட்டார். தேவன் சுதந்திரமானவர்; ஆனால், அவர் தம் இருதயத்தை என்றென்றும் நம்மோடு கட்டியிணைத்து வைத்திருக்கிறார். "நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே, அன்பு உண்டாயிருக்கிறது" (1 யோவான் 4:10).

தேவன் நம்மை எவ்வளவு விசேஷமாக நேசிக்கிறார் என்பது எல்லா சிருஷ்டிகளும் அறிந்திருக்கிற அறிவுக்கு அப்பாற்பட்டது; இது மிக உயர்ந்தது; அதாவது நம் சிருஷ்டிகர் நம்மை எந்த அளவுக்கு, எவ்வளவு இனிமையாக, எவ்வளவு கனிவாக, நேசிக்கிறார் என்று உண்டாக்கப்பட்ட எந்தச் சிருஷ்டிக்கும் தெரியாது. சர்வ வல்லமையுள்ள தேவன் இந்த உயர்ந்த, வரம்பற்ற, மதிப்பிடமுடியாத அன்பின் நித்திய ஆச்சரியத்தை தம் நன்மையினால் நமக்குக் காண்பித்திருக்கிறார். ஆகையால், நாம் கிருபையோடும், அவருடைய உதவியோடும் ஆவிக்குரிய கண்களால் கண்டு நிற்கலாம்," என்று நோர்விச்சைச் சேர்ந்த ஜூலியன் கூறினார்.

தேவனுடைய அன்பின் இன்பம்

அன்பின் இன்னொரு குணாதிசயம் என்னவென்றால், அது தான் அன்புகூருபவரில் இன்புறுகிறது. தேவன் தம் படைப்பில் இன்புறுகிறார். தேவனுடைய இன்பமே படைப்பில் அவருடைய குறிக்கோள் என்று அப்போஸ்தலனாகிய யோவான் வெளிப்படையாகக் கூறுகிறார். தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் நேசிப்பதில் மகிழ்கிறார். தேவன் தன் கைவேலையில் அகமகிழ்ந்து குறிப்பிடுகையில் அதில் அவர் எவ்வளவு இன்புறுகிறார் என்பதை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. சங்கீதம் 104 தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்ட ஓர் இயற்கைக் கவிதையாகும்; தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகையில் அந்தச் சங்கீதத்தில் உணர்ச்சிகள் கொந்தளிக்கின்றன; அந்தச் சங்கீதம் முழுவதும் தேவனுடைய பூரிப்பைப் பார்க்கிறோம். "கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்" (சங்கீதம் 104:31).

தேவன் பரிசுத்தவான்களிடத்தில் சிறப்பாக இன்புறுகிறார். தேவன் எங்கோ தூரத்தில் இருக்கிறார் என்றும், முகவாட்டமாக எல்லாவற்றிலும் மிகவும் அதிருப்தியாக இருக்கிறார் என்றும், அக்கறையில்லாத ஒரு மனநிலையோடு இந்த உலகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றும், நீண்ட காலத்துக்குமுன்பே இந்த உலகத்தில் அவருக்கு ஈடுபாடு போய்விட்டது என்றும் அநேகர் நினைக்கிறார்கள். ஆனால், இப்படி நினைப்பது தவறு. தேவன் பாவத்தை வெறுக்கிறார் என்பதும், அக்கிரமத்தை அவர் ஒருபோதும் இன்பத்துடன் பார்க்க முடியாது என்பதும் உண்மை. ஆனால், எங்கு மனிதர்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்யவேண்டும் என்று பிரயாசப்படுகிறார்களோ, அங்கு அவர் உண்மையான பாசத்துடன் மறுமொழி கொடுக்கிறார். கிறிஸ்து நமக்காகப் பாவப்பரிகாரம் செய்துவிட்டதால், தெய்வீக ஐக்கியம் கொள்வதில் இருந்த தடையை அவர் நீக்கிவிட்டார். இப்போது, கிறிஸ்துவுக்குள், விசுவாசிக்கும் எல்லா ஆத்துமாக்களிடமும் தேவன் பூரிப்பாயிருக்கிறார். "உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கம்பீரமாய்க் களிகூருவார் (செப்பனியா 3:17).

யோபுவின் புத்தகத்தில் வாசிப்பதுபோல, தேவனுடைய படைப்பின் வேலை இசையோடு நடைபெற்றது. "நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்?...அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே" (யோபு 38:4-7).

இசை, இன்பத்தின் வெளியாக்கம், இன்பத்தின் தோற்றுவாய். தேவனுக்கு மிகத் தூய்மையானதும், மிக அருகிலுமுள்ள இன்பம் அன்பின் இன்பமாகும். நரகம் எந்த இன்பமும் இல்லாத இடம். ஏனென்றால், அங்கு அன்பு இல்லை. பரலோகம் இசையால் நிரம்பியிருக்கிறது; ஏனென்றால், அது பரிசுத்த அன்பின் இன்பங்கள் பெருகுகிற இடம். பூமி அன்பின் இன்பங்கள் வேதனையோடு கலந்திருக்கும் இடம்; ஏனென்றால், இங்கு பாவம் இருக்கிறது; வெறுப்பும், தீய விருப்பமும் இருக்கின்றன. இப்படிப்பட்ட நம் உலகத்தில் கிறிஸ்து நமக்காக தம்மைக் கையளித்துத் துன்பப்பட்டதுபோல, அன்பு சிலவேளைகளில் துன்பப்படவேண்டியிருக்கும்; ஆனால், துக்கத்தின் காரணங்கள் கடைசியாக ஒழிக்கப்பட்டு, ஒரு புதிய இனம் சுயநலமற்ற, பரிபூரணமான, அன்புநிறைந்த உலகத்தை என்றென்றைக்கும் அனுபவித்து மகிழும்; இது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற உறுதியான வாக்குத்தத்தம்.

தேவனுடைய அன்பை ஊக்கமாகக் கொடுத்தல்

அன்பினால் இயங்காமல் மௌனமாக இருக்க முடியாது; ஏனென்றால், அதுதான் அன்பின் சுபாவம். அது ஊக்கமானது, படைக்கும் திறனுள்ளது, நலம் பயக்கக்கூடியது. "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணினார்" (ரோமர் 5:8). "தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16).

எனவே, எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு இப்படித்தான் இருக்க வேண்டும். என்ன விலைக்கிரயமானாலும் சரி, அன்பு தான் நேசிப்பவர்களுக்கு எப்போதும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போஸ்தலர்கள் சபைகளைக் கடுமையாகக் கடிந்துகொண்டார்கள்; ஏனென்றால், சபையில் இருந்த சிலர் இதை மறந்துவிட்டு, தங்கள் சகோதரர்கள் குறைச்சலோடு இருக்கையில் அவர்களுக்கு உதவுவதற்குப்பதிலாக, தனிப்பட்ட தங்கள் இன்பங்களில் மூழ்கிவிட்டார்கள். "ஒருவன் இவ்வுலக ஆஸ்தியுடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டு என்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால் அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுவதெப்படி?" (1 யோவான் 3:17). எனவே, பல நூற்றாண்டுகளாக "அன்புக்குரியவன்" என்று அழைக்கப்பட்ட யோவான் இதை எழுதினார்.

தேவனுடைய அன்பு இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு மாபெரும் நிஜம்; இது ஒரு தூண்; இந்தத் தூணின்மேல்தான் உலகத்தின் நம்பிக்கை இருக்கிறது; ஆனால், இது தனிப்பட்ட, நெருக்கமான ஒரு காரியம். தேவன் மக்கள்தொகையை நேசிக்கவில்லை; மாறாக, அவர் மக்களை நேசிக்கிறார். அவர் எண்ணிக்கையை நேசிக்கவில்லை; மாறாக, அவர் மனிதர்களை நேசிக்கிறார். அவர் நம்மைத் தொடக்கமில்லாத, முடிவில்லாத வல்லமையான அன்பினால் நேசிக்கிறார்.

கிறிஸ்தவ அனுபவத்தில், மிகத் திருப்தியாக்குகிற அன்பு என்ற உட்பொருள் இருக்கிறது. மற்ற எல்லா மதங்களிலிருந்தும் அது நம் அனுபவத்தை வேறுபடுத்திக்காட்டுகிறது; அது நம் அனுபவத்தை மிகத் தூய்மையான, மிக மெச்சத்தகுந்த தத்துவத்துக்கும் மேலாக உயர்த்துகிறது. இந்த அன்பு இந்த உட்பொருள் ஏதோவொரு பொருள் அல்ல. தம் மக்கள்மேல் பாடிக்கொண்டு, சபை நடுவே இருக்கும் தேவனே அன்பு. தேவனுடைய அன்பின் பாட்டுக்கு நம் இருதயம் இசைந்து மறுமொழியாக பாடுவதே உண்மையான கிறிஸ்தவ மகிழ்ச்சி.

தேவனுடைய மறைவான அன்பே
உன் உயரம்ஆழம் அறியலாகுமோ
ஒருவனும் அறியானே.
தூரத்தினின்று உன் கவினார்ந்த அழகைக் காண்கிறேன்
உள்ளேஉம் இளைப்பாறுதலுக்காகப் பெருமூச்சுவிடுகிறேன்
என் இருதயம் வலிக்கிறது
உன்னில் இளைப்பாறுதலைக் காணும்வரை அது ஓயாது. 

ஜெர்ஹார்ட் டெஸ்டீஜென்