Preloader
சாட்சியின் கூடாரம்
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More
8 Mar 2025 : தேவ அறிவு Read More

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்

By மெர்லின் இராஜேந்திரம்

கிறிஸ்தவத்தில் பிரிவுகள்:

கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க திருச்சபை, புரொட்டஸ்டண்ட் திருச்சபை, பியூரிட்டன்ஸ், பிரெஸ்பிட்றேரேயன்ஸ், மெதடிஸ்ட் சபை, ஆங்கிலேய சபை, பிரதரன் சபை, இரட்சண்ய சேனை, லுத்தரன் சபை, அஸெம்பிளி ஆஃப் காட், அட்வென்ட் சபை, யெஹோவா சபை, ஆர்தோடக்ஸ், கிழக்கத்தியக் கிறிஸ்தவர்கள், மார்மோன்ஸ், சுயாதீன சுவிசேஷ சபைகள், சுயாதீன வேதாகம சபைகள் என 40,000க்கும் அதிகமான பிரிவுகள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இதில் பெந்தெகொஸ்தே சபையும் ஒன்று. பெந்தெகொஸ்தே சபையில் உட்பிரிவுகள் பல உண்டு. எல்லாப் பிரிவினர்களும் தங்கள் பிரத்தியேகமான உபதேசத்தை வலியுறுத்துகிறார்கள். அதுபோல பெந்தேகோஸ்தே சபைகள், குறிப்பாக, பரிசுத்த ஆவியையும், அபிஷேகத்தையும், அந்நிய பாஷையையும் வலியுறுத்துகின்றன.

கேள்வி:

"அந்நிய பாஷைதான் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்துக்கு அடையாளமா? இந்த அடையாளம் இல்லாதவர்கள் பரலோகத்துக்குப் போகமாட்டார்களா?" என்ற கேள்விக்கு, "இல்லை" என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிடலாம். ஆனால், இந்தப் பதிலுக்கு விளக்கம் தேவை. இந்தக் கேள்விக்கு விரிவான பதில் தேவையென்றால், அதற்கு ஒரு புத்தகம் தேவைப்படும். ஆனால், நீங்கள் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக, தேவையானவைகளை மாத்திரம் தருகிறேன்.

தவறான பதங்கள்:

என் பிரிய பெந்தெகொஸ்தே சகோதரர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், அந்நிய பாஷை என்னும் சொற்களை ஆவியின் அபிஷேகம், அக்கினி அபிஷேகம், பரலோக அபிஷேகம், அபிஷேக ஊற்று, அபிஷேக நதி, அபிஷேக ஆராதனை, சுகமளிக்கும் அபிஷேகக் கூட்டம், அபிஷேக எழுப்புதல் கூட்டம் எனப் பல பெயர்களில் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், அபிஷேகம், அக்கினி, அந்நியபாஷை ஆகியவைகளைக் குழப்புகிறார்கள். எனவே, என்னால் இயன்ற அளவுக்கு, சுருக்கமாக, நான் இவைகளை விளக்க முற்படுகிறேன்.

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்றால் என்ன? நாம் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோமா இல்லையா? பெற்றோம் என்றால் எப்போது பெற்றோம்? பெறவில்லையென்றால் எப்போது எப்படிப் பெறுவோம்? அபிஷேகத்தைக்குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது? அபிஷேகம் என்றால் என்ன? நாம் அபிஷேகம் பெற்றிருக்கிறோமா, பெறவில்லையா? எப்போது பெற்றோம் அல்லது பெறுவோம்? இதுபோன்ற சில கேள்விகளுக்குப் பதில் சொல்லுகிறேன். அப்போது அந்நிய பாஷையைப் பபுரிந்துகொள்ளலாம்.

அபிஷேகம் என்றால் என்ன?

“அபிஷேகம்” என்னும் வார்த்தைக்கு மூலமொழியில் "கிரியோ” “அலெய்ப்போ” என்னும் இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிரியோ என்றால் “தடவுதல்” அல்லது “பூசுதல்” என்றும் "அலெய்ப்போ" என்றால் “அபிஷேகித்தல்” அல்லது "ஊற்றுதல்" என்றும் பொருள். ஆகவே, அபிஷேகம் என்றால் “பூசுதல்”, “தடவுதல்” “ஊற்றுதல்” என்று பொருள்.

பழைய ஏற்பாட்டில் "அபிஷேகம்”

முழு வேதாகமத்திலும் “அபிஷேகம்” என்ற வார்த்தை 151 வசனங்களில் ஏறக்குறைய 163முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் மட்டும் 142 முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பழைய ஏற்பாட்டில் மனிதர்கள், மிருகங்கள், பொருட்கள் என மூன்று சாரார் அபிஷேகம் தைலம், எண்ணெய், சுகந்தவர்கம் ஆகியவைகளைக்கொண்டு (பூசுதல், தடவுதல், ஊற்றுதல்). செய்யப்பட்டார்கள்.

  1. ”மனிதர்கள்” (அதாவது அரசர்கள், ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள், சில விசேஷித்த செயல்களுக்காக சில நபர்கள்) (யாத். 29:7; 40:9, 13; 1 இராஜா. 19:16; 2 இராஜா. 9:6; 1 சாமுவேல் 16:3, 13; பிரசங்கி 9:8; யாக்கோபு 5:14),
  2. ”விலங்குகள்” (ஆடுகள்போன்ற வீட்டு மிருகங்கள்),
  3. ”பொருட்கள்” (ஆசரிப்புக்கூடாரத்தின் பொருட்கள் அல்லது தேவாலயத்திலுள்ள பொருட்கள்),
  4. “சடலங்கள்” (உயிரற்ற சரீரங்களை அடக்கம் செய்யும்போது) அபிஷேகம் செய்யப்பட்டன.

புதிய ஏற்பாட்டில் "அபிஷேகம்”

“அபிஷேகம்” என்னும் வார்த்தை புதிய ஏற்பாட்டில் 19 வசனங்களில் 21 தடவைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 18 தடவைகளில் இந்த வார்த்தை எண்ணெய், சுகந்தவர்க்கம், சேறு பூசுதல், இயேசு கிறிஸ்து அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்ற தொடர்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3 தடவை மட்டுமே இது விசுவாசிகளுடைய அபிஷேகத்தோடு தொடர்புபடுத்திப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாடு

(1) கிறிஸ்து அபிஷேகம் பண்ணப்பட்டவர், (2) எல்லா விசுவாசிகளும் அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள்,
(3) வியாதிஸ்தர்கள் அபிஷேகம் பண்ணப்படுகிறார்கள் என்று அபிஷேகத்தை மூன்று நிலைகளில் சுட்டிக்காட்டுகிறது.

1. இயேசு கிறிஸ்துவும் அபிஷேகமும்

“கிறிஸ்து” (Christ) என்ற வார்த்தை “கிறிஸ்டோஸ்” என்ற கிரேக்கச்சொல்லிலிருந்து வருகிறது. இதற்கு “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று பொருள். கிறிஸ்துவோடு இணைந்திருக்கிறவன் அபிஷேகம் பண்ணப்பட்டவரோடு இணைந்திருக்கிறான் என்று பொருள். கிறிஸ்து என்ற சொல்லுக்கு இணையான எபிரெய வார்த்தை “மேசியா” (Messiah). எனவே, நம் இயேசு, கிறிஸ்து. நம் இயேசு மேசியா. சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா, பேதுருவிடம் "மேசியாவைக் கண்டோம்," என்று கூறுகிறான். மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம் என்று யோவான் 1:41 கூறுகிறது. யோவான் 4:25இல் சமாரியப் பெண் இயேசுவை நோக்கி, *"கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன்" *என்று கூறுகிறாள். இந்த மேசியாவைக் குறித்துதான் தானியேலும் தாம் கண்ட தரிசனத்தில், “பிரபுவாகிய மேசியா வருமட்டும்” என்றும் “மேசியா சங்கரிக்கப்படுவார்” என்றும் கூறுகிறார் (தானி. 9:25, 26). இந்தப் பூமிக்குவந்தவர் இயேசு. ஆனால், அவர் "கிறிஸ்து, மேசியா, அபிஷேகம்பண்ணப்பட்டவர்,” என்று பொருள்.

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தபோது, தம் வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்துக்குச் சென்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகச்சுருளை எடுத்து வாசித்தார். அதில் தம்மைக்குறித்த தீரக்கதரிசனம் நிறைவேறுவதை வாசித்தபோது, “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்,” என்று வாசிக்கிறார் (ஏசாயா 61:1, 2, 3; லூக்கா 4:18). அப்போஸ்தலனாகிய பேதுருவும் "நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்" (அப். 10:38) என்று கூறுகிறார்.

பிதாவாகிய தேவன் தம் குமாரனாகிய இயேசுவைப் பரிசுத்த ஆவியால் கிறிஸ்துவாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அதாவது ஏசாயா 61:1, லூக்கா 4:18ல் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல் அபிஷேகம் செய்திருந்தார் என்று தெளிவாகத் தெரிகிறது.

ஆண்டவராகிய இயேசு தேவனால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்வதில் எந்தக் குழப்பமும் இல்லை. அவர் கிறிஸ்து, மேசியா. அதுபோல வியாதிப்பட்டவர்களுக்கு எண்ணெய்பூசி ஜெபிப்பதைப் புரிந்துகொள்வதிலும் குழப்பம் இல்லை. ஆனால், விசுவாசிகளின் அபிஷேகத்தில்தான் குழப்பம் இருக்கிறது. ஆனால், இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லாததுபோல, சபையின் சரீரமாகிய எல்லா விசுவாசிகளும் சபையின் தலையாகிய கிறிஸ்துவுக்குள் அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிறார்கள் என்பதிலும் எந்தக் குழப்பமும் தேவையில்லை (லூக்கா 4:18-19; அப். 10:38; 1 யோவான் 2:20; 2 கொரிந்தியர் 1:21-22).

2. "விசுவாசிகளும் அபிஷேகமும்"

“புதிய ஏற்பாட்டில் “அபிஷேகம்” என்னும் வார்த்தை 21 முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும், 18 முறை எண்ணெய், சுகந்த வர்க்கம், சேறு பூசுதல், இயேசு கிறிஸ்து அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்ற தொடர்பிலும் மீதி 3 முறை மட்டுமே விசுவாசிகளுடைய அபிஷேகத்தின் தொடர்பிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சொன்னேன்.

அந்த மூன்று இடங்கள்:

“உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே" (2 கொரி. 1:21). ”நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்" (1 யோவான் 2:20). ”நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்க வேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக” (1 யோவான் 2:27).

விசுவாசிகள் ஏற்கெனவே, “அபிஷேகத்தைப்” பெற்றிருக்கிறார்கள் என்றே இந்த மூன்று வசனங்களும் தெளிவாகச் சொல்லுகின்றன. "அபிஷேகம்பண்ணினார்", "அபிஷேகம்பெற்றோம்" என்பது கடந்தகாலம். இது நடந்துமுடிந்த ஒன்று. இது நடந்துகொண்டிருக்கிற அல்லது நடக்கப்போகிற ஒன்றல்ல. பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகத்தைப் பெற நாம் காத்திருக்க வேண்டுமென்றோ அல்லது பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகம் இனி நிகழப்போகிறது என்றோ அல்லது விசுவாசிகள் இரட்சிக்கப்பட்டபின் சிறிது இடைவெளிக்குப்பிறகு இதைப் பெறுவார்கள் என்றோ அல்லது இது விசுவாசிகளுடைய வாழ்வில் அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வு என்றோ இந்த வசனங்கள் சொல்லவில்லை. இது விசுவாசிகளின் வாழ்வில் ஒருமுறை நிகழ்ந்தது. எனவே, உண்மையான விசுவாசிகள் எல்லாரும், உண்மையாகவே மறுபடியும் பிறந்த தேவ பிள்ளைகள் எல்லாரும், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் ஏற்கெனவே பெற்றிருக்கிறார்கள். ஆமென்.

இயேசு, அவர் கிறிஸ்து, அவர் மேசியா. நாம் கிறிஸ்தவர்கள். கிறிஸ்து என்றால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்று பொருள் என்று ஏற்கெனவே சொன்னேன். அப்படியானால் கிறிஸ்தவன் என்றால் அபிஷேகம்பண்ணப்பட்டவரோடு இணைந்திருக்கும் அபிஷேகம்பண்ணப்பட்டவன் என்று பொருள். "அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்" (1 கொரி. 6:17). கிறிஸ்தவன் என்பவன் அபிஷேகம்பண்ணப்பட்டவன்.

கேள்வியும் பதிலும்

அப்படியானால், மத்தேயு 3:11இல், யோவான் ஸ்நானன் “மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்," என்று இரண்டு ஞானஸ்நானங்களைப்பற்றிக் கூறினாரே! இந்த இரண்டு ஞானஸ்நானங்களும் எப்போது நிகழ்ந்தன அல்லது எப்போது நிகழும்?

இதில்தான் குழப்பம், தடுமாற்றம். இந்த வசனத்தைப் பிடித்துக்கொண்டு அநேக சபைகள் "எங்களுக்கு ஆவியின் ஞானஸ்நானம் உண்டு, அக்கினியின் ஞானஸ்நானம் உண்டு," என்று பறைச்சாற்றிக்கொள்கிறார்கள்.

யோவான் ஸ்நானன் சொன்னதுபோல் ஆவியின் ஞானஸ்நானமும், அக்கினியின் ஞானஸ்நானமும் உண்மையாகவே உண்டு. இதற்கு மாற்றுக்கருத்து இல்லவே இல்லை. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்றால் என்ன? அக்கினி ஞானஸ்னானம் என்றால் என்ன? இது எப்போது நிகழும் அல்லது நிகழ்ந்தது?

"ஆவியின் ஞானஸ்நானம்”

முதலாவது, யோவான் ஸ்நானனுடைய வார்த்தைகளிலிருந்து இந்த இரண்டு ஞானஸ்நானங்களையும் இயேசுதாம் கொடுப்பார் என்று தெளிவாகிறது. அவர் எப்போது கொடுப்பார் அல்லது கொடுத்தார்?

ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தைவிட்டுப் போவதற்குமுன் தம் சீடர்களிடம், “நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோவான் 14:16). “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்" (யோவான் 16:7). “ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்” (அப். 1:5).

இந்த வசனங்களின் அடிப்படையில் ஒரு காரியம் தெளிவாக விளங்குகிறது. அது என்னவென்றால், பரிசுத்த ஆவியானவர் சீடர்களுக்கு அருளப்படப் போகிறார். இது அதிக காலம் சென்ற பிறகல்ல வெகு சீக்கிரத்தில் சம்பவிக்கப்போகிற ஒரு நிகழ்வாகும்; காரணம் ”சில நாளுக்குள்ளே” என்று அப். 1:4லிலும் ”எருசலேமை விட்டு போகாமல்” என்று அப். 1:5லும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அப்படியானால் இது எப்போது நிகழ்ந்தது? அதைத்தான் லூக்கா பரிசுத்த ஆவியானவர் பெந்தெகொஸ்தே நாளில் சீடர்களுக்கு அருளப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தை நமக்காக எழுதி வைத்திருக்கிறார்.

“பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்” என்பது கிறிஸ்து உயிர்தெழுந்ததிலிருந்து 50 வது நாள் பெந்தெகொஸ்தே நாளன்று சீடர்கள் (யூதர்கள்) மேலறையில் கூடி வந்திருந்தபோது, அவர்கள்மேல் பொழிந்தருளினார். இந்த நிகழ்ச்சி அப். 2ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இதுதான் சபையின் ஆரம்பம். அன்று முதலாவது யூதர்கள் சபையில் அங்கமானார்கள். பிறகு தேவன் யூதர்களல்லாத புறவினத்தாரையும் தம் சரீரமாகிய சபையில் பங்குள்ளவர்களாக்கினார் என்பதைக் காண்பிக்கும் வகையில் அப். 8 ஆம் அதிகாரத்திலும், 10 ஆம் அதிகாரத்திலும் பரிசுத்த ஆவி அருளப்படுவதைக் காணலாம். அதுபோல, கிறிஸ்துவின் முதல்வருகைவரை அல்லது அவருடைய சிலுவை மரணம்வரை மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் மட்டும் பெற்றிருந்தவர்களும் தேவனுடைய சபையில் பங்குள்ளவர்கள் என்பதைக் காண்பிக்கும் வகையில் யோவானுடைய சீடர்களுக்கு அப். 19 ஆம் அதிகாரத்திலும் பரிசுத்த ஆவியானவர் அருளப்படுவதைக் காணலாம்.

இவ்வாறு, தேவன் யூதர்கள், புறவினத்தார் என எல்லோரையும் தம் புதிய திட்டமாகிய சபையில் பங்குள்ளவர்களாக்கினார் என்பதைக் காண்பிக்கும் பொருட்டு நான்கு நிலைகளில் “பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம்” வரலாற்றுச் சம்பவமாக ஏற்கனவே நடந்துமுடிந்துவிட்டது. அதன்பிறகு இரட்சிக்கப்பட்டு சரீரத்தில் இணைபவர்கள் கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போதே பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம்பண்ணப்பட்டு உலகளாவிய சபையில் அங்கத்தினராகிறார்கள். இதைப் பவுல் 1 கொரிந்தியர் 12:13இல் மிகத்தெளிவாக குறிப்பிடுகிறார். தேவன் எல்லாத் தரப்பு மக்களும் தம் சபையில் பங்குள்ளவர்களாகலாம் அதில் எந்தத் தடையோ அல்லது விலக்கோ இல்லை என்பதை இந்த வரலாற்றுச் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. "உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்" (கலா. 3:28).

இப்படி ஒரேவொரு நடந்துமுடிந்த நிகழ்வில் பல அம்சங்கள் உள்ளன. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் ஒரேமுறை வந்தார். அவர் நம்மை ஒரேமுறை முத்திரித்தார். அவர் நமக்கு ஒரேமுறை ஞானஸ்நானம் தந்தார். அவர் நம்மை ஒரேமுறை அபிஷேகித்தார். அவர் நம்மை ஒரேமுறை உயிர்ப்பித்தார்.

1. "பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம்செய்கிறார்” என்று  தெரியுமா?

"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல” என்றும் *"இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்"*என்றும் ரோமர் 8:9, 11 கூறுகின்றன. இரட்சிக்கப்பட்ட எல்லா விசுவாசிகளுக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறார். நாம் எப்போது ஆண்டவராகிய இயேசுவை நம் இரட்சகராக விசுவாசித்தோமோ அப்போது பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்தார். "நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்" (யோவான் 14:16, 17). "ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்" (யோவான் 3:6). முதல் ஆவி பரிசுத்த ஆவியையும், இரண்டாவது ஆவி நம் மனித ஆவியையும் குறிக்கிறது. கிறிஸ்து பரிசுத்த ஆவியாக நமக்குள் வந்து அக்கிரமங்களிலும் பாவங்களிலும் மரித்திருந்த நம்மை உயிர்ப்பித்தார். நமக்குள் வந்தவர் நமக்குள் நிரந்தரமாகத் தங்கி வாசம் செய்கிறார். "ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே" (2 கொரி. 5:5). "அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்" (எபே. 1:14). "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" (1 கொரி. 6:19). "நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர்" (யாக்கோபு 4). பரிசுத்த ஆவியானவர் நம்மில், நமக்குள் வாசம்செய்கிறார்.

2. "பரிசுத்த ஆவியானவர் முத்திரிக்கிறார்.”

"நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்" (எபேசியர் 1:13). "நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்" (எபேசியர் 4:30). தபால் நிலையத்தில் கடிதங்கள்மேல் முத்திரை குத்துவார்கள். அதுபோல நாம் தேவனுக்குச் சொந்தம் என்பதின் அடையாளமாகப் பரிசுத்த ஆவியால் தேவன் நம்மை முத்திரித்திருக்கிறார்.

3. "பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்."

"நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்" (1 கொரி. 12:13). ஒரே ஆவியால் ஞானஸ்நானம்பண்ணப்பட்டோம். ஒரே ஆவியானவரால் தாகம்தீர்க்கப்பட்டோம்.

4. "பரிசுத்த ஆவியின் அபிஷேகம்."

"நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்" (1 யோவான் 2:20).

5. "பரிசுத்த ஆவியின் மறுஜென்மமுழுக்கு."

"நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்" ( தீத்து 3:5). பரிசுத்த ஆவியானவரின் செயல் இல்லாமல் ஒருவனும் இரட்சிக்கப்பட முடியாது.

ஆவியானவரின் இரண்டு அம்சங்கள்

ஆவியானவரின் செயல்பாடுகளைப்பற்றியும், பல்வேறு அம்சங்களைப்பற்றியும் சொல்வதானால் நான் ஏற்கனவே சொன்னதுபோல் ஒரு புத்தகம் தேவைப்படும். ஆனால், நீங்கள் புரிந்துகொள்வதற்காக பரிசுத்த ஆவியானவரின் இரண்டு அம்சங்களைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இதைப் புரிந்துகொண்டால், உங்கள் சிக்கல் தீர்ந்துவிடும்.

பரிசுத்த ஆவியானவரின் வேலையில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று ஜீவனின் அம்சம், மற்றொன்று வல்லமையின் அம்சம். ஒன்று உள்ளானது, மற்றொன்று புறம்பானது. ஒரு பக்கம் அவர் ஜீவனின் ஆவியானவர். இன்னொரு பக்கம் அவர் வல்லமையின் ஆவியானவர். ஜீவனின் ஆவியாக நமக்குள் இருக்கிறார். வல்லமையின் ஆவியாக நம்மேல் இருக்கிறார். இது பழைய ஏற்பாட்டு ஆவியானவருக்கும் புதிய ஏற்பாட்டு ஆவியானவருக்கும் இடையேயுள்ள ஒரு வித்தியாசம். பழைய ஏற்பாட்டில் ஆவியானவர் மனிதர்கள்மேல் வந்தார். அவர்களை வல்லைமையாகப் பயன்படுத்தினார். அவர்கள்மூலம் தம் நோக்கம் நிறைவேறியவுடன் அவர்களைவிட்டுப் போய்விடுவார். ஆனால் புதிய ஏற்பாட்டில் அவர் நமக்குள் வருகிறார். நமக்குள் வருகிறவர் நமக்குள் நிரந்தரமாகத் தங்கி வாசம்செய்கிறார். "நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்" (1 கொரி. 12:13) என்ற வசனத்தில் இந்த இரண்டு அம்சங்களும் சொல்லப்பட்டுள்ளன. ஒன்று, ஆவியினால் ஞானஸ்நானம்பண்ணப்பட்டோம். இரண்டு, ஆவியினால் தாகம்தீர்க்கப்பட்டோம். ஞானஸ்நானம் என்றால் முழுகுதல் என்று பொருள். தண்ணீரில் ஞானஸ்நானம் எடுப்பதை நாம் புரிந்துகொள்கிறோம். நாம் தண்ணீருக்குள் முழுகுகிறோம். இது தண்ணீரால் ஞானஸ்நானம். அதுபோல ஆவியால் ஞானஸ்நானம் என்றால் நாம் ஆவிக்குள் முழுகுகிறோம். நாம் தண்ணீருக்குள் முழுகும்போது தண்ணீர் நமக்கு வெளியே இருக்கிறது. தண்ணீர் நமக்கு உள்ளே இல்லை. ஆவியானவரால் தாகம் தீர்க்கப்படுகிறோம் என்றால் அவரை நாம் தண்ணீராகக் குடிக்கிறோம் என்று பொருள். ஞானஸ்நானம் எடுக்கும்போது நாம் தண்ணீரில் இருக்கிறோம். குடிக்கும்போது தண்ணீர் நமக்குள் இருக்கிறது. ஆவியினால் நிரப்பப்பட குடிக்க வேண்டும், ஆவியினால் தரிப்பிக்கப்பட ஞானஸ்நானம் வேண்டும்.

"பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை" (யோவான் 7:37-39) என்ற இந்த வசனத்தில் பரிசுத்த ஆவியானவரைத் தண்ணீருக்கு உவமையாகச் சொல்லுகிறார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற பரிசுத்த ஆவி என்று சொல்கிறார். அவர் மகிமைப்பட்டபின்தான் பரிசுத்த ஆவியானவர் வர முடியும் என்றும் சொல்கிறார். அவர் உயிர்த்தெழுந்த அன்றுதான் மகிமையடைந்தார். அதன்பிறகுதான் பரிசுத்த ஆவியானவர் ஒருவனுக்குள் வர வாய்ப்பு உண்டு. இந்த வசனத்தில் மேலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். விசுவாசிகளின் உள்ளத்திலிருந்துதான் தண்ணீர் வெளியே ஓட வேண்டும். ஓடவில்லையென்றால் ஆழ்த்துணைக் கிணறு தோண்டுவதுபோல் கற்களையும், சேறு சகதிகளையும் அகற்ற வேண்டும். சரி. உயிர்த்தெழுந்த நாளில் இயேசு சீடர்கள் நடுவே தோன்றி "உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார் (யோவான் 20:21, 22). இந்த வசனத்தில் அவர் பரிசுத்த ஆவியானவரை சுவாசத்துக்கு, மூச்சுக்கு, ஒப்பிடுகிறார். "நீங்களோ உன்னத்ததிலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்" (லூக்கா 24:49). "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்" (அப். 1:8). இந்த வசனங்களில் பரிசுத்த ஆவியானவர் தண்ணீருக்கும், சுவாசத்துக்கும், உடைக்கும் ஒப்பிடப்படுகிறார். சுவாசமும், தண்ணீரும் உள்ளான அம்சங்கள். உடுத்துதல் புறம்பான அம்சம். கிறிஸ்தவனுக்கு இரண்டும் தேவை. உள்ளாக நிரப்பிட வேண்டும், புறம்பாக வல்லமையை உடுத்த வேண்டும். ஆனால், கோடித்துணி போட்ட பிணத்தைவிட நிர்வாணமான உயிருள்ளவன் வாசி.

உயிர்த்தெழுந்த நாளில் அவர்கள் ஜீவனின் ஆவியைப் பெற்றார்கள். "அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்" (1 கொரி. 15:45). பெந்தெகொஸ்தே நாளில் வல்லமையின் ஆவியைப் பெற்றார்கள். இயேசு உயிர்தெழுந்தபிறகு பூட்டியிருந்த வீட்டுக்குள் வந்து, "அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" (யோவான் 20:22) என்று சொன்னார். "தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்" (ஆதி. 2:7). இங்கு இப்போது இயேசு பரிசுத்த ஆவியை ஊதுகிறார். சீடர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்களா இல்லையா? பெற்றார்கள். என்றைக்காவது இந்த வசனத்தை நாம் தியானித்திருக்கிறோமா? ஒன்று, ஜீவனின் அம்சம். மற்றொன்று வல்லமையின் அம்சம்.

நம்முள் வர அவருடைய வழி

ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன். தேவனுடைய நோக்கம் உபதேசங்களோ, போதனைகளோ அல்ல. கிறிஸ்துவே தேவனுடைய நோக்கம். இந்தக் கிறிஸ்துவை நமக்குத் தர வேண்டும். ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் பங்குபெறத் தவறிய ஜீவ மரமாகிய இயேசுவில் நாம் பங்கு பெற வேண்டும். இதை நோக்கியே தேவன் வேலைசெய்கிறார். இந்தக் கிறிஸ்துவை நமக்கு எல்லாமுமாக ஆக்க வேண்டும். அதற்கு என்ன வழி?

ஒரு பெரிய நதி. அந்த நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நதியின் நீரை நாம் பருக வேண்டும், பயன்படுத்த வேண்டும். அதற்காக நதியை நம் வீட்டுக்குள் திருப்பிவிட முடியுமா? இது சாத்தியமா? வீட்டுக்குள் நதி எப்படி ஓட முடியும்? ஆனால், நமக்கு நதியின் நீர் கண்டிப்பாக வேண்டும். எனவே, நதியிலிருந்து பெரிய குழாய்கள்மூலம் ஊர்வழியாக நீரைக் கொண்டுவருகிறார்கள். சரி, நதியைத்தான் வீட்டுக்குள் திருப்பிவிட முடியாது. பெரிய குழாய்களையாவது வீட்டுக்குள் கொண்டுபோகலாமா? அதுவும் முடியாது. அப்படியானால் நீரை வீட்டுக்குள் கொண்டுவர என்ன வழி? பெரிய குழாய்களிலிருந்து சின்ன சின்ன குழாய்கள்மூலமாக வீட்டுக்குள் நீரைக் கொண்டுபோகலாம். இப்படி வீட்டுக்குள் வந்த நீரை நாம் குளிக்க, குடிக்க, துவைக்க, கழுவ என எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆம், பிதாவாகிய தேவன் எல்லா வளங்களையும் உடைய நதிபோன்றவர். அவர் தமக்குரிய எல்லாவற்றையும் தம் பிள்ளைகளுக்குத் தர விரும்புகிறார். ஆனால், அவர் மனிதனுக்குள் வர முடியாது. எனவே, நதியிலிருந்து குழாய்கள்மூலமாக நீரைக்கொண்டுவருவதுபோல, அவர் இயேசு என்ற பெயரில் இந்த உலகத்துக்கு வந்தார். முப்பத்ததுமூன்றரை ஆண்டுகள் இந்தப் பூமியில் வாழ்ந்தார். நதியைப் பார்க்காதவர்கள் இந்தக் குழாயைப் பார்த்தார்கள். "தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. அவருடைய மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்" (யோவான் 1:18). "என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்" என்று இயேசு சொன்னார். இயேசுவைப் பார்த்தவர்கள், "ஆ! தேவன் என்று ஒருவர் இருந்தால், அவர் இப்படித்தான் இருப்பார்" என்று புரிந்துகொண்டார்கள். ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, அவர் எந்த மனிதனுக்குள்ளும் வர முடியவில்லை. ஏனென்றால், அவர் மாம்சத்திலில் இரத்தத்திலும் இருந்தார். ஒரு உடல் இன்னொரு உடலுக்குள் நுழைய முடியாது. "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." (யோவான் 1:14). இஸ்ரயேல் மக்கள் நடுவே கூடாரம் இருந்ததுபோல் அவர் நம்மிடையே கூடாரமடித்தார். ஆனால், அவருடைய நோக்கம் நம்மிடையே வாழ்வதல்ல, நமக்குள் வருவதே அவர் நோக்கம். அவர் நமக்குள் இல்லாதவரை அவருடையவைகள் நம்முடையவைகளாகாது. எனவே, அவர் மரித்து உயிர்த்து ஆவியானார். இப்போது பெரிய குழாய்களிருந்து சின்ன குழாய்கள்மூலம் தண்ணீரை வீட்டுக்குள் கொண்டுவருவதுபோல், அவர் நமக்குள் வரக்கூடிய நிலையில் இருக்கிறார். அவரை விசுவாசிக்கும்போது நமக்குள் அவர் வருகிறார். இப்போது ஒரு கேள்வி. நமக்குள் வந்தவர் பிதாவா, குமாரனா, ஆவியானவரா? நமக்குள் வந்தது நதியா? பெரிய குழாயா, சின்ன குழாயா? எந்தத் தண்ணீர்? நதியிலிருந்த தண்ணீர்தான் பெரிய குழாயில் வந்தது. பெரிய குழாயில் இருந்த தண்ணீர்தான் சின்னக் குழாயில் வந்தது. அந்தத் தண்ணீரைத்தான் நாம் இப்போது பயன்படுத்துகிறோம்.

உள்வாழும் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகளைப்பற்றி நான் இப்போது சொல்லவில்லை. அவர் விவாசிகளை நடத்தவேண்டும், போதிக்க வேண்டும், நினைப்பூட்டவேண்டும், உணர்த்தவேண்டும், கண்டிக்கவேண்டும், தேற்றவேண்டும். இப்படிப் பல வேலைகளைச் செய்கிறார். இதைப்பற்றித் தெரிந்துகொள்ளாமல் அந்நிய பாஷையிலே குறியாயிருந்தால் எப்படி?

எபேசியர் 5:18இல் கூறப்பட்டுள்ள ”பரிசுத்த ஆவியின் நிரப்புதல்" உண்டு. அது விசுவாசியின் வாழ்வில் தொடர்ந்து நிகழ வேண்டும். ”பரிசுத்த ஆவியின் நிரப்புதல்" நம் வாழ்நாள் முழுவதும் நடைபெறுகிற ஒரு நிகழ்வாகும். இரட்சிக்கப்பட்டவர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பட்டார்கள் என்று அப்போஸ்தலர் நடபடிகளில் திரும்பத் திரும்ப வாசிக்கிறோம் (அப் 2:4, 2:38, 4:31, 7:55, 8:17, 9:17, 13:52, 19:1-6). எனவே இரட்சிக்கப்பட்ட ஒரு விசுவாசியை கர்த்தர் பரிசுத்த ஆவியால் நிரப்பும் அனுபவம் வேதத்துக்கு உட்பட்டதே! ஆனால், அதற்கும் அந்நிய பாஷைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

சரி, “அக்கினி ஞானஸ்நானம்” என்றால் என்ன? அது எப்போது நிகழும் அல்லது நிகழ்ந்தது?

"அக்கினியினால் ஞானஸ்நானம்”

யோவான் ஸ்நானன் மத்தேயு 3:11 இல், இரண்டு நிலைகளினாலான ஞானஸ்நானங்களைக் கூறிவிட்டு, அடுத்த வசனத்தில் அதற்குக் கொஞ்சம் விளக்கமும் அளிக்கிறார். “தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்” (வ. 12).

யோவான் ஸ்நானன் சொன்ன காரியங்களைக் கேட்ட யூதர்களுக்கு, யோவேல் 2:28-32; மல்கியா 3:2-5 ஆகிய இரண்டு பகுதிகள் நினைவுக்கு வந்திருக்கும். இந்த இரண்டு பகுதிகளையும் எடுத்து வாசித்துவிட்டு அதன்பின் தொடரவும்.

கடைசி நாட்களில் ஆவியானவர் இஸ்ரயேலர்கள்மேல் ஊற்றப்படுவார் என்றும், அதன்பின் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பின் நாள் வரும் என்று யோவேல் தீர்க்கதரிசி சுட்டிக்காட்டுகிறார். கர்த்தர் நியாயத்தீர்ப்பு கொடுக்க வெளிப்படுவார் என்றும், இஸ்ரயேலரில் மீதியானவர்களை அக்கினியைப்போல் புடமிட்டுச் சுத்தமாக்கிக் கூட்டிச்சேர்த்துக்கொள்வார் என்றும், சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், கர்த்தருக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ் செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீர்ப்புக் கொடுக்க வருவார் என்றும் மல்கியா தீர்க்கதரிசி கூறுகிறார்.

பெந்தெகொஸ்தே நாளில் அப்போஸ்தலனாகிய பேதுரு தன் பிரசங்கத்தில் யோவேல் தீர்க்கதரிசியின் வசனங்களை மேற்கோள் காட்டுகிறார் (அப். 2:16-21). ஆனால், பெந்தெகொஸ்தே நாளன்று யோவேல் தீர்க்கதரிசி சொன்ன எல்லாம் நிறைவேறவில்லை. யோவேல் தீர்க்கதரிசி ஆவியானவர் ஊற்றப்படுவதைப்பற்றியும், நியாயத்தீர்ப்பைப்பற்றியும் சொல்லியிருந்தார். பெந்தெகொஸ்தே நாளில் ஆவியானவர் ஊற்றப்பட்டார். ஆனால், அன்று நியாயதீர்ப்பு எதுவும் நிகழவில்லை. அதாவது யோவேலின் தீர்க்கதரிசனத்தில் இரண்டு கட்டங்களில் நிறைவேறுகிற தீர்கதரிசனங்கள் அடங்கி இருக்கின்றன.

  1. சபை நிறுவப்பட்ட பெந்தெகொஸ்தே நாளில் யூதர்கள்மேல் அதாவது சீடர்கள்மேல் ஆவியானவர் ஊற்றப்பட்டார்.
  2. ஆனால், அக்கினி ஞானஸ்நானம் என்பது ஏழு வருட உபத்திர காலத்தில் மீதியாயிருக்கிற தாம் தெரிந்துகொண்ட இஸ்ரயேலரை அக்கினியால் புடமிட்டுச் சுத்திகரிப்பதையும், நியாயத்தீர்ப்பு வழங்குவதையும் ஒடுக்கப்படுகிறவர்களுக்கு நியாயம் வழங்குவதையும் காண்பிக்கிறது. (உபத்திரவ காலத்தைப்பற்றிய சர்ச்சைக்குள் நாம் இப்போது செல்ல வேண்டாம்).

யோவேலின் தீர்க்கதரிசன வசனங்கள் இரண்டு வெவ்வேறு கட்டங்களையும் காலங்களையும் எடுத்துரைக்கின்றன.

ஆகவே, அக்கினி ஞானஸ்நானம் என்பது மல்கியா கூறினதுபோல ஏழு வருட உபத்திரவகாலத்தில் மீதியாயிருக்கிற யூதர்களைப் புடமிட்டு தம் இராஜ்ஜியத்தில் கூட்டிச்சேர்க்கிற காரியத்தையும்; கிறிஸ்துவை மறுதலிக்கிற, அவிசுவாசிகளை அவியாத ஆக்கினியிலே தள்ளி நியாயத்தை நிலைநாட்டுகிறதையும் காண்பிக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் “அக்கினி” நியாயத்தீர்ப்பைக் காண்பிக்கிறது.

ஆச்சரியத்தைக் கவனியுங்கள்

இயேசு பரமேறிச் செல்வதற்குமுன் அப். 1:4 இல், ”அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என்றார், அவர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை மட்டுமே குறிப்பிடுகிறார்.

யோவான் ஸ்நானன் இரண்டு ஞானஸ்நானங்களைக் கூறியிருக்க, இயேசு இங்கு ஒன்றை மாத்திரம் குறிப்பிடுகிறார். அவர் ஏதோ ஞாபக மறதியில் அப்படிக் கூறவில்லை. அல்லது இரண்டையும் கூற வந்தவர் தவறுதலாக ஒன்றை மட்டும் கூறிவிட்டு நிறுத்துவிட்டாரா? இல்லை, “அக்கினி ஞானஸ்நானம்” தம் சீடர்களுக்கு உரியதல்ல, அக்கினி ஞானஸ்நானம் விசுவாசிகளுக்குரியது அல்ல. அது அவிசுவாசிகளுக்கு உரியது. எனவேதான் இயேசு இங்கு அக்கினி ஞானஸ்நானதைச் சொல்லாமல் பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கூறுகிறார்.

ஆகையால், தேவனிடம் அக்கினி ஞானஸ்நானம் அல்லது அக்கினி அபிஷேகம் கேட்டு மன்றாடுவதும், காத்திருப்பதும், அதைப் பெற்றுக்கொண்டதாகப் பெருமிதம் கொள்வதும் மதியீனம்! அக்கினி ஞானஸ்நானம் அல்லது அபிஷேகம் கேட்பவர்கள், ”தேவனே எங்களுக்கு நியாயதீர்ப்பைத் தாரும்! எங்களைத் தண்டியும்! அதை இப்போதே தாரும்," என்று கேட்கிறார்கள் என்று பொருள். அது வேண்டாம் என்று தேவனே விலக்கியிருக்கும்போது அதுதான் வேண்டும் எனக் கேட்பதை என்னவென்று சொல்வது!

"அப். 2இல் அக்கினி”

சிலர் அப்போஸ்தலருடைய நடபடிகள் இரண்டாம் அதிகாரத்தில் அக்கினி இறங்கி அவர்கள்மேல் வந்தது என உறுதியாகக் கூறுகிறார்கள். இதுவும் அவர்களுடைய அறியாமையையே காண்பிக்கிறது. (அப். 2:3) “அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.” இந்த வசனத்தை சாதாரணமாக ஒருமுறை வாசித்தாலே, இங்கே நெருப்புக்கு இடமே இல்லை என்பது புரிந்துவிடும். ஆனாலும் எங்கிருந்து இவர்கள் நெருப்பை இங்கே கொண்டு வந்து இப்படிப் புகையவிடுகிறார்கள் என்று தெரியவில்லை. அக்கினிமயமான நாவுகள்போல என்பதற்கும் அக்கினிமயமான நாவுகள் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அவன் சிங்கம்போன்றவன் என்பதற்கும் அவன் சிங்கம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. அதேபோல காணப்பட்டு என்பதற்கும் கண்டார்கள் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

இங்கே அக்கினி இறங்கி வரவில்லை. மாறாக அக்கினியைப்போல பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டது என்பதுதான் உண்மை. பெந்தெகொஸ்தே நாளில் ஆவியானவர் இறங்கி வந்தபோது அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது என்று உவமையணியில் உருவகமாகக் கூறப்பட்டுள்ளது அவ்வளவுதான். இங்கே நாம் குழப்பம் அடைவதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை.

காரியத்தின் கடைத்தொகை

"அபிஷேகம் என்றொன்று உண்டு அதை இரண்டு ஏற்பாடுகளும் அங்கீகரிக்கின்றன. அதேபோல் புதிய ஏற்பாட்டில் வாழ்கின்ற விசுவாசிகளாகிய நமக்கும் அபிஷேகம் என்றொன்று உண்டு. அது பரிசுத்த ஆவியானவரால் செய்யப்படுகிற அபிஷேகம். அது நாம் கிறிஸ்துவை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொண்டு இரட்சிப்பைப் பெறும் அந்தக் கணத்தில் நிகழ்கிற சம்பவம். நாம் இரட்சிக்கப்படுகிறபோதே பரிசுத்த ஆவியானவராலே அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிறோம். அது இனி சம்பவிக்கப்போகிற நிகழ்வாகவோ மற்றும் இரட்சிப்பைப் பெற்றபின் வேறொரு நிலையில் சம்பவிக்கப்போகிற நிகழ்வாகவோ குறிப்பிடப்படவில்லை. “அபிஷேகம்” என்றால் பூசுதல், தடவுதல், ஊற்றுதல் என்று பொருள். ஒரு பிரத்யேக நோக்கத்திற்காக சிலர் இராஜாக்களாக, சிலர் ஆசாரியர்களாக, சிலர் தீர்க்கத்தரிசிகளாக அபிஷேகம் பண்ணப்பட்டார்கள். நபர்கள் மட்டும் அல்ல, தேவாலயத்தில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் அபிஷேகம்பண்ணப்பட்டன. புதிய ஏற்பாட்டிலே மூன்று நிலைகளில் அபிஷேகத்தைக் காணலாம். அதாவது (1) கிறிஸ்து அபிஷேகம் பண்ணப்பட்டவர், (2) எல்லா விசுவாசிகளும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் (3) வியாதிஸ்தர்கள் அபிஷேகம் பண்ணப்படுதல் ஆகிய மூன்று நிலைகள் ஆகும்.

எண்ணெய், தைலம், சுகந்த வர்க்கம் கொண்டு அபிஷேகம் செய்வதையும்; தேவனுடைய குறிப்பிட்ட காரியத்திற்காக பிரித்தெடுக்கப்படுதலையும் (இயேசு மற்றும் விசுவாசிகள்) காண்பிக்கிறது.

அக்கினி அபிஷேகம் என்று ஒன்றில்லை. அக்கினி ஞானஸ்நானம் என்று ஒன்று உண்டு. அது விசுவாசிகளாகிய நமக்ககுறியதல்ல. அது அவிசுவாசிகளுக்கு உரியதாகும். அது அவர்கள் அடையும் நியாயத்தீர்ப்பைக் காண்பிக்கிறது. அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் சம்பவிக்கும்."

வரங்கள்

வேதாகமம் ஆரம்ப வரங்கள், அற்புத வரங்கள், முதிர்ச்சியின் வரங்களைப்பற்றிப் பேசுகிறது.

ஆரம்ப வரங்கள்: "நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்கள்" (1 கொரி. 1:7) என்று பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதுகிறார். இங்கு அவர் ஒவ்வொரு விசுவாசியும் பெறுகிற, தெய்வீக ஜீவன், பரிசுத்த ஆவி என்னும் இரண்டு ஆரம்ப வரங்களைக் குறிப்பிடுகிறார். "தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" (ரோமர் 6:23). "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்" (அப். 2:38). பரிசுத்த ஆவியின் வரத்தை என்பதைவிட பரிசுத்த ஆவி என்னும் வரத்தை என்பதுதான் சரி. எனவே, ஒவ்வொரு விசுவாசியும் தெய்வீக ஜீவன் என்னும் வரத்தையும், பரிசுத்த ஆவி என்னும் வரத்தையும் பெறுகிறான். இது இன்றுவரை பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்குத் தெரியாதது பரிதாபம். "ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்" (எபி. 6:4). நாம் ஒருதரம் பரிசுத்த ஆவியைப் பெற்றோம்.

முதிர்ச்சியின் வரங்கள். தேவ மக்கள் வளர்ந்து முதிர்ச்சியடையும்போது அவர்கள் வாழ்க்கையில் காணப்படுகிற "முதிர்ச்சியின் வரங்கள்" ரோமர் 12:3-8இல் காணப்படுகின்றன. இவை குணநலன்களைப்பற்றிய வரங்கள். 1) தீர்க்கதரிசனம் உரைத்தல்: இது தேவனுடைய மனதை நேர்த்தியாக நிதானித்து எடுத்துரைக்கும் குணம். 2) ஊழியம் செய்தல்: இது மேடையேற விரும்பாமல் திரைக்குப்பின்னால் சபை, சமுதாயம், வீடு போன்று எல்லா இடங்களிலும் பணிவிடை செய்யும் குணம். 3) போதித்தல்: தேவனைப்பற்றிய உண்மைகளைப் பேசும் குணம். 4) ஊக்குவித்தல்: தேவனுடைய உத்தமத்தைப்பற்றிய தங்கள் சாட்சியை எடுத்துரைத்து மக்களைக் கட்டியெழுப்பும் குணம் 5) பகிர்ந்து கொடுத்தல்: தேவனுக்கும் மக்களுக்கும் வலதுகை கொடுப்பது இடதுகைக்குத் தெரியாமல் தன் வளங்களைப் பகிர்ந்துகொள்ளும் குணம். 6) நிர்வகித்தல்: காரியங்களைச் சாமர்த்தியமாகக் கையாளும் குணம். 7) இரக்கம் காட்டுதல்: பிறருக்காக மனதுருகும் கனிவான குணம். இது விருந்தோம்பலோடு தொடர்புடையது.

மனிதர்களின் தேவைகளும் குறைகளும் பற்பல! வரம் பெற்றவர்கள் அவை அனைத்தையும் கையாளவும் நிறைவு செய்யவும் வேண்டுமா? இல்லை! உதவுவதற்கும், திருத்துவதற்கும் வரம்பு உண்டு. ஆண்டவராகிய இயேசுவும்கூட பெரும்பாலும் தம்மிடத்தில் வந்தவர்களுக்கு ஊழியம் செய்தார்; அவரிடத்தில் வந்த பிசாசு பிடித்தவர்கள், நோயாளிகள், மதத்தலைவர்கள் ஆகியோரோடு அவர் இடைப்பட்டார். மனமில்லாதவர்களைத் தேடிப் போய் அவர்களோடு வாக்குவாதம் நடத்தவில்லை. அப்படியே, தேவன் தம் மக்களில் உருவாக்கும் முதிர்ச்சியின் வரங்களுக்கு வரம்பு உண்டு. 1) ஒருவன் தனக்கு அருளப்பட்ட விசுவாச வரம்புக்கு உட்பட்டு தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும். ஒருபோதும் தன் விசுவாச வரம்புக்கு அப்பாற்பட்டதையும், அப்பாற்பட்டவர்களையும் திருத்த முயலக்கூடாது. 2) ஊழியம்செய்கிறவன், 3) போதிக்கிறவன், 4) ஊக்குவிக்கிறவன் ஆகிய மூவரும் காத்திருக்க வேண்டும். ஊழியன் பணிவிடை செய்வதற்குத் தேவனே தன்னிடம் காரணத்தையும், ஆட்களையும் கொண்டுவரும்வரைக் காத்திருக்க வேண்டும். போதிக்கிறவன் சாரமற்ற, அற்பமான, சுவையான தகவல்களைப் பேசாமல், தேவனுடைய சத்தியத்தைப் பேசக் காத்திருக்க வேண்டும். ஊக்குவிக்கிறவன் தேவையுள்ளவர்கள் ஆலோசனையோ, அறிவுரையோ கேட்கும்வரை காத்திருக்க வேண்டும். 5) பகிர்ந்து கொடுப்பவன் வஞ்சனையில்லாமல் கொடுக்க வேண்டும். யாருக்கும் தெரியாமல் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட வேண்டும். 6) நிர்வகிப்பவன் எந்த அளவுவரை கவனமாகச் செய்ய முடிகிறதோ அந்த அளவுக்குத்தான் செய்யவேண்டும். 7) இரக்கம் செய்கிறவன் உற்சாகத்தோடு இரக்கம் செய்ய வேண்டும். எதுவரை உற்சாகமாகச் செய்ய முடியுமோ அதுவரை செய்ய வேண்டும்.

எல்லா வரங்களுக்கும் ஒரு வரம்பு இருக்க வேண்டும். இல்லையென்றால், வரங்களையுடையவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தாங்கள் இடைப்படும் மக்கள் பலரை அழிப்பார்கள். முடிவில் தாங்களும் வலுவிழந்து வளமிழந்து, சோர்ந்துபோவார்கள். எனவே, பேய்களைத் தேடிப்போக வேண்டாம். வேறுபட்டு விசுவாசிக்கின்ற எல்லாரையும் திருத்துவது நம் வேலை என்று நினைக்க வேண்டாம். நம் செயல்பாடுகள் நம் விசுவாச வரம்புக்குள் இருக்க வேண்டும். அதிகமான காரியங்களை நிர்வகிக்க வேண்டும் என்ற உந்துதலை மறுக்க வேண்டும். நம் கதைகளை மட்டுப்படுத்த வேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களைச் சரி செய்யவேண்டும் என்ற போக்கை மட்டுப்படுத்த வேண்டும். அன்போடு நடந்துகொண்டு, நம்மைச் சுற்றியுள்ள எல்லாரையும், எல்லாவற்றையும் நம் ஜெபமாக மாற்றுவோம். "நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்...நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை...எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மைபாராட்டமாட்டோம்" (2 கொரி. 10:13-15).

அற்புத வரங்கள்: 1 கொரிந்தியர் 12:7-11 ஆவியின் ஒன்பது அற்புத வரங்களைப்பற்றிப் பேசுகிறது. "ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்." முதலாவது, இவை அற்புத வரங்கள். இவைகளைத் தேவன் தம் சித்தப்படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். இரண்டாவது, ஒருவனுடைய வாழ்க்கையில் அல்லது ஒருவன்மூலம் அற்புதவரங்கள் செயல்படுவதால் அவன் ஆவிக்குரியவன் என்று பொருள் இல்லை. ஒன்றிரண்டு எடுத்துக்காட்டு தருகிறேன். இஸ்ரயேல் மக்களுடைய வாழ்க்கையில் நடந்ததுபோன்ற அற்புதங்கள் யாருடைய வாழ்க்கையிலாவது நடக்குமா என்று எனக்குத் தெரியாது. 40 வருடங்களில் அவர்களுடைய கால்கள் வீங்கவில்லை. ஆடைகள் பழையதாகவில்லை. வானத்திலிருந்து வந்த தேவதூதர்களின் உணவாகிய மன்னாவை உண்டார்கள். கன்மலைத் தண்ணீரைக் குடித்தார்கள். பகலில் மேகத் தூண், இரவில் நெருப்புத் தூண். கோத்திரத்தில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருக்கவில்லை. சிவந்த சமுத்திரத்தைத் தரையில் நடப்பதுபோல் நடந்து கடந்தார்கள். வேதம், "அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை, ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்" (1 கொரி. 10:5) என்று சொல்லுகிறது. அத்தனை இலட்சம்பேர் வனாந்தரத்தில் மடிந்தார்கள். இன்று நம் வாழ்வில் இப்படிப்பட்ட அற்புதங்கள் நடந்தால் நம்மைக்குறித்து நாம் என்ன நினைப்போம்? நாம் பெரிய ஆவிக்குரியவர்கள் என்றும், தேவன் நம்மேல் மிகவும் பிரயமாயிருக்கிறார் என்றும் மார்தட்டிக்கொள்வோம். ஆனால், காலேப், யோசுவா இரண்டுபேரைத்தவிர மீதி அத்தனைபேரும் வனாந்தரத்தில் இறந்தார்கள் என்று வேதம் சொல்லுகிறதே! அவர்களில் தேவன் பிரயமாயிருக்கவில்லை என்று வேதம் சொல்லுகிறதே! சரி, ஒருவன்மூலம் அற்புதங்கள் நடந்தால் அது அவனுடைய ஆவிக்குரிய தரத்தின் அடையாளம் இல்லையா? இல்லை. "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்" (மத். 7:22, 23). இயேசுவின் நாமத்தில்தானே அற்புதங்கள் செய்தார்கள், தீர்க்கதரிசனம் உரத்தார்கள், பிசாசுகளைத் துரத்தினார்கள். ஒன்றிரண்டு அற்புதங்கள் அல்ல, அநேக அற்புதங்கள். அவர்கள் அவருடைய நாமத்தைப் பயன்படுத்தியபோது அவர் தடுத்திருக்கலாமே! அவர் தடுக்கமாட்டார். விட்டுவிடுகிறார். அதுபோல, இன்றும் அவருடைய பெயரில் செய்யும்போது பலவேளைகளில் விட்டுவிடுகிறார். அந்நிய பாஷை பேசும்போதும் விட்டுவிடுவார். ஆண்டவராகிய இயேசு நற்செய்தி அறிவிக்க தம் 12 அப்போஸ்தலர்களையும், 70 சீடர்களையும் அனுப்பினார். அவர்கள் திரும்பிவந்து, "ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது" (லூக்கா 10:17) என்றார்கள். இயேசு இன்னும் ஒருபடி மேலேபோய், "இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது" என்று சொல்லிவிட்டு, "ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்." இன்று ஒருவன் தன்மூலம் ஒரு வரம் செயல்பட்டால் எவ்வளவு சந்தோஷப்படுகிறான்? நாம் எதற்காகச் சந்தோஷப்படவேண்டும் என்று இயேசு திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார். நீ எதற்காகச் சந்தோஷப்படப்போகிறாய்? அவர் அனுப்பிய 12பேரில் யூதாசும் இருந்தான். அவனும் பிசாசுகளைத் துரத்தினான், அவனும் நற்செய்தி அறிவித்தான், அவனும் அற்புதங்கள் செய்தான்.

நமக்கு சிம்சோனைத் தெரியும். பலவீனங்களோ தோல்விகளோ இல்லாத பூரணமானவர்களைத்தான் தேவன் பயன்படுத்த வேண்டும் என்றால் அவர் ஒருவனைக்கூடப் பயன்படுத்த முடியாது. உண்மைதான். ஆனால், படுமோசமானவர்களை அவர் வல்லமையாகப் பயன்படுத்துகிறாரே! அதைப்பற்றி என்ன சொல்ல? ஆவியானவர் சிம்சோனின்மேல் வல்லமையாக இறங்கினார். பெலிஸ்தர்களைக் கட்டுப்படுத்தி, இஸ்ரயேலைக் காப்பாற்ற, தேவன் அவனைப் பயன்படுத்தினார். சிம்சோனின் செயல்பாடுகளினுடே "கர்த்தருடைய செயல்" இருப்பினும், அவனுடைய செயல்கள் சரியாகிவிடாது. நம் வாழ்வின் ஒரு பரிமாணத்தில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை இருப்பதால், எல்லாப் பரிமாணங்களிலும் அவர் உருவாக்கும் ஒழுக்கமும், முதிர்ச்சியும் இருக்கும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை. ஆவிக்குரிய கொடைகள் தனிப்பட்ட பாவங்களைக் கண்டுகொள்ளாமலிருப்பதற்கான போர்வை இல்லை.

கொரிந்திய விசுவாசிகளிடம் இத்தனை வரங்கள் காணப்பட்டன. எனினும், "மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று," (1 கொரி. 3:1) என்று அவர்களுடைய ஆவிக்குரிய தரம் என்னவென்று பவுல் சொல்லுகிறார். மாம்சத்துக்குரியவர்கள், குழந்தைகள். எனவே, அற்புத வரங்கள் செயல்படுவதால் ஒருவன் ஆவிக்குரியவனாகிவிடுவதில்லை. ஒருவனுடைய ஆவிக்குரிய தரத்தை நிர்ணயிப்பது வரங்கள் அல்ல. அவர்கள் மாம்சத்துக்குரியவர்களாகவும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளாகவும் இருந்தபோதும் அற்புத வரங்கள் அவர்களிடம் இருந்தது. அல்லது அற்புத வரங்கள் செயல்பட்டபோதும் அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரவில்லை.

1 கொரிந்தியர் 12 முழுவதையும் பலதடவை வாசித்துப்பாருங்கள். அவர்கள் அந்நிய பாஷை பேசுவதற்கு பவுல் அவர்களை உற்சாகப்படுத்துகிறாரா அல்லது அவர்களை மட்டுப்படுத்தி, கட்டுப்படுத்துகிறாரார் என்று நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.

சரி, இப்போது குறிப்பாக அந்நிய பாஷை என்ற அற்புத வரத்தைப்பற்றிப் பேசுகிறேன். முதலாவது, உண்மையான அந்நிய பாஷை உண்டு. ஆனால், இன்று இவர்கள் பேசுவது அந்நிய பாஷை அல்ல. இது உளறல். இரண்டாவது, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்துக்கும் அந்நிய பாஷைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏனென்றால், அந்நிய பாஷை ஓர் அற்புத வரம். தேவன் இதை ஒருவனுக்குக் கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். மூன்றாவது, எல்லாரும் அந்நிய பாஷை பேசுவதில்லை. "எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?" (1 கொரி. 12:29-30) என பவுல் இங்கு பல கேள்விகளை எழுப்புகிறார். இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை என்பதே. நான்காவது, சிலர் உண்மையான பாஷையைப் பேசினாலும் அதனால் என்ன? எடுத்துக்காட்டு. பிலேயாமின் கழுதை உண்மையாகவே மனிதனுடைய மொழியைப் பேசியது. அதனால், அது ஆவிக்குரிய கழுதையா? அது வெறும் கழுதைதான்.

ஆரம்ப வரங்களைப்பற்றியோ, முதிர்ச்சியின் வரங்களைப்பற்றியோ கிறிஸ்தவர்களுக்குத் தெரியாது. அற்புத வரங்களைப்பற்றி ஆர்வமாக இருப்பார்கள். இது குழந்தைத்தனம். மிட்டாயை விட்டுவிட்டு அதைப் பொதிந்து வைத்திருக்கும் தாளை வைத்துக்கொண்டு குதிக்கும் சிறுவர்கள்.

என்னைப் படைத்து, என்னைத் தெரிந்துகொண்டு, என்னை அழைத்து, எனக்காக இந்த உலகத்துக்கு வந்து, எனக்காகச் சிலுவையில் மரித்து, எனக்காக இரத்தம் சிந்தி, என் பாவங்களைச் சுமந்து, எனக்காக அடக்கம்பண்ணப்பட்டு, எனக்காக உயிர்த்து, என்னை மறுபடி ஜெநிப்பித்து, எனக்குள் ஜீவனாக வந்து, என்னைப் பரிசுத்த ஆவியினால் அவருக்குச் சொந்தமென முத்திரித்து, என்னை நீதிமானாக்கி, என்னைத் தேவனோடு ஒப்புரவாக்கி, என்னைக் கழுவிச் சுத்தமாக்கி, என்னைத் தேவனுடைய பிள்ளையாக்கி, என் பெயரை ஜீவப் புத்தகத்தில் எழுதி, எனக்கு அவரை "அப்பா! பிதாவே!" என்று அழைக்கும் உரிமையைத் தந்து, எனக்காகப் பரமேறிச்சென்று, எனக்காகப் பிதாவிடம் பரிந்துபேசிக்கொண்டிருந்து, என்னைச் சந்திக்கவரும், என்னை நியாந்தீர்க்கப்போகும் இயேசு எனக்குப் போதும்.

நாம் கிறிஸ்துவை விசுவாசிப்பதால்தான் கிறிஸ்தவர்கள். உபதேசங்களையும், போதனைகளையும் பின்பற்றுவதைவிட கிறிஸ்துவைப் பின்பற்றுவோம். இயேசு பரலோகத்தில் இருக்கிறார் என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு அவர் நமக்குள் இருக்கிறார் என்பதும் உண்மை.

நம்மில் கிறிஸ்து உருவாக வேண்டும், நாம் கிறிஸ்துவால் வாழ வேண்டும், கிறிஸ்து நம்மில் பெருக வேண்டும். கிறிஸ்து நம்மில் மகிமைப்பட வேண்டும். கிறிஸ்துவே தேவனுடைய தரம், அளவுகோல், வேறு எந்த அளவுகோலும் இல்லை. தேவன் கிறிஸ்துவைக்கொண்டுதான் நம்மை நியாயந்தீர்ப்பார் (2 கொரி. 13:5; ரோமர் 8:10; 2 கொரி. 4:6-7; காலா. 2:20; கலா. 4:19; எபே. 3:17; கொலோ. 1:27.

நம் இலக்கு கிறிஸ்துவே. இலக்கைநோக்கி ஆசையாய்ப் பின்தொடர்வோம்.