Translated from the original article, “The service of the tabernacle”
By C.H.Mackintosh (1869)
வனாந்தரத்தில் தேவனுடைய வேலையாட்களை மிக எளிதாக இனங்காண முடிகிறது என்பது எவ்வளவு அழகு! எவ்வளவு அருமை! அவர்கள் தங்களுக்குக் குறிக்கப்பட்ட இடத்தில் இருந்தார்கள்; தங்களுக்கு நியமிக்கப்பட்ட இடத்தில், மண்டலத்தில், வேலைசெய்தார்கள். ஆகவே, மேகம் எழும்பியபோது, "புறப்படுங்கள்," என்று முழங்கியவுடன் அவரவர் என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்தார்களேதவிர வேறு எதையும் அவர்கள் செய்யவில்லை. அவனவன் தான் என்ன வேலை செய்யவேண்டும் என்பதைத் தெரிந்தெடுக்கும் உரிமை ஒருவனுக்கும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் செய்யவேண்டிய வேலையை யெஹோவா தெரிந்தெடுத்தார். தாங்கள் கர்த்தருடைய பக்கத்தில் இருப்பதாக லேவியர்கள் கூறியிருந்தார்கள் (யாத். 32:26). அவர்கள் தேவனுடைய அதிகாரத்துக்கு அடிபணிந்தார்கள். அவர்கள் வனாந்தரத்தில் செய்த எல்லா வேலைக்கும், சேவைக்கும் இந்த உண்மைதான் ஆதாரம். இந்த வெளிச்சத்தில் பார்க்கும்போது, ஒருவன் எதைச் சுமக்க வேண்டும் என்பது ஒரு பொருட்டேயில்லை. அது பலகைகளா அல்லது தொங்குதிரைகளா அல்லது குத்துவிளக்குகளா என்பது ஒரு பொருட்டேயில்லை. "இது என் வேலையா? இதுதான் கர்த்தர் எனக்குத் தந்திருக்கும் வேலையா?" என்பதுதான் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய ஒரே கேள்வி.
இதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை, இதை முடிவுசெய்யும் உரிமையை, யெஹோவா மனிதனுக்குக் கொடுத்திருந்தால் அல்லது மனிதன் தன் விருப்பம்போல் தெரிந்தெடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஒருவன் ஒரு குறிப்பிட்ட வேலையை விரும்பியிருப்பான்; இன்னொருவன் இன்னொரு வேலையை விரும்பியிருப்பான்; வேறொருவன் வேறொரு வேலையை விரும்பியிருப்பான். இப்படி அவனவன் தனக்கு விருப்பமான வேலையைச் செய்திருந்தால் வனாந்தரத்தில் கூடாரத்தை எப்படிச் சுமந்து சென்றிருக்க முடியும்? அதை அதற்குரிய இடத்தில் எப்படி நிறுவியிருக்க முடியும்? சாத்தியமில்லை. ஒப்புயர்வற்ற ஒரேவொரு அதிகாரம் மட்டுமே இருக்க முடியும். யெஹோவாவே அந்த அதிகாரம். எல்லாருக்காகவும் அவர் ஏற்பாடு செய்தார், தீர்மானித்தார், முடிவுசெய்தார். எல்லாரும் அவருக்குப் பணிந்தடங்க வேண்டியிருந்தது. மனிதன் தன் சொந்த விருப்பத்தின்படிச் செயல்படுவதற்கு அங்கு இடமே இல்லை. இது யெஹோவாவின் சிறப்பான இரக்கம். தேவனுடைய இந்த ஏற்பாட்டின் காரணமாக சண்டையும், குழப்பமும் தவிர்க்கப்பட்டன. பணிந்தடங்க வேண்டும்; மக்களுடைய விருப்பம் உடைக்கப்பட வேண்டும்; தெய்வீக அதிகாரத்துக்கு மக்கள் இணங்க வேண்டும். இல்லையென்றால் நியாயாதிபதிகளின் புத்தகத்தில் "...அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்து வந்தான்" (நியா. 21:25) என்று பார்ப்பதுபோல்தான் இருக்கும்.
“என்ன இது? இந்தப் பூமியில் என் வாழ்க்கையின் மிகச் சிறந்த நாட்களை, ஆக்கமும் ஊக்கமும் மிக்க நாட்களை, ஆற்றலும் திறமையும் நிறைந்த நாட்களை, ஒரு சில முளைகளையும், தொங்குதிரைகளையும், பலகைகளையும் கவனிப்பதில்தான் நான் செலவிட வேண்டுமா இதற்காகத்தான் நான் பிறந்தேனா? என் வாழ்க்கைக்கு இதைவிட உயர்ந்த குறிக்கோள், நோக்கம், இருக்கக்கூடாதா? முப்பது வயதிலிருந்து ஐம்பது வயதுவரை இதுதான் என் வேலையா, தொழிலா?" என்று ஒருவேளை ஒரு மெராரியன் கேட்கக்கூடும். அப்படிக் கேட்காவிட்டால், ஒருவேளை அவன் அப்படி நினைக்கக்கூடும்.
தேவனுடைய சித்தத்தைச் செய்வது கனத்துக்குரிய செயல்
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இரண்டு பதில்கள் உள்ளன. முதலாவது, “இந்த வேலையை எனக்கு நியமித்திருக்கிறவர் யெஹோவா," என்று மெராரியன் அறிந்திருந்தால் போதும். ஒரு காரியத்தைத் தேவன் செய்யச் சொல்லியிருந்தால், அதை மற்றவர்கள் எவ்வளவு அற்பமாகவும், இழிவாகவும் கருதினாலுங்கூட, அது கனத்துக்குரிய காரியமாகும். நாம் எப்போதும் தேவன் நமக்கு நியமித்த வேலையைச் செய்து கொண்டிருக்கும்வரை, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல. ஒருவன் தன் நண்பர்கள் ஒளிமயமான எதிர்காலம் நிறைந்த வேலை என்று கருதக்கூடிய ஒன்றை ஆசையாய்ப் பின்பற்றக்கூடும். உலக மக்கள் பிரம்மாண்டமானது என்றும், மகிமையானது என்றும் கருதக்கூடிய காரியங்களைத் தேடுவதில் அவன் தன் ஆற்றலையும், நேரத்தையும், திறமைகளையும், செல்வத்தையும் செலவழிக்கக்கூடும். இருப்பினும், அவனுடைய வாழ்க்கையோ பகட்டான நீர்க்குமிழிபோல் சட்டென்று மறைந்துவிடும். ஆனால், தேவனுடைய சித்தம் என்னவாக இருந்தாலும் சரி அதைச் செய்கிறவன் எவனோ, கர்த்தருடைய கட்டளைகள் என்னவாக இருந்தாலும் சரி அவைகளை நிறைவேற்றுகிறவன் எவனோ, அவனுடைய பாதையில் தெய்வீக அங்கீகாரம் என்னும் சுடரொளி வீசும். உலக மக்களின் மிகப் பகட்டான திட்டங்களெல்லாம் ஒரு தலைமுறைகூட நிலைத்துநிற்காமல் மறைந்தொழிந்துபோகும்போது, தேவனுடைய சித்தத்தின்படிச் செய்பவனின் வேலை என்றென்றைக்கும் நிலைத்துநிற்கும், நினைவுகூரப்படும்.
நமக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வதில் எப்போதும் ஒரு மதிப்பு உண்டு. ஒரு மெராரியரின் வேலை ஒரு சில “முளைகளை” அல்லது “பாதங்களைப்” பராமரிப்பதாக இருந்தாலும், அந்த வேலைக்கு ஒரு விசேஷித்த கனம் உண்டு. கூடாரத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிற்கும் மிக ஆழமான ஈடுபாடும், மிக உயர்ந்த மதிப்பும் உண்டு. இந்த முழு உலகத்திலுள்ள எதையும் பரம்பொருளான பண்டபாத்திரங்களைக்கொண்ட பலகைகளாலான கூடாரத்தோடு ஒப்பிடவே முடியாது. வனாந்தரத்தில் அந்த அற்புதமான கூடாரத்தின் ஒரு மிகச் சிறிய முளையை அல்லது ஒரு சிறிய பலகையைத் தொடுவதற்கு ஒருவன் அனுமதிக்கப்பட்டான் என்றால் அது எவ்வளவு கனமும், கீர்த்தியுமாகும்! எகிப்தின் மன்னனாக அல்லது அசீரியாவின் அரசனாக இருப்பதைவிட கூடாரத்தின் முளைகளைப் பராமரிக்க ஒரு மெராரியனாக இருப்பது மகிமையானது! மெராரியன் என்ற வார்த்தைக்குச் ‘சோகத்தோடு’ப் பிரயாசப்பட்டு உழைக்கிற ஏழை என்று பொருள் இருப்பது உண்மைதான். ஆனால், அவனுடைய உழைப்பு மிக உன்னதமான தேவனுடைய வாசஸ்தலத்தை, வானத்துக்கும் பூமிக்கும் சொந்தக்காரருடைய வாசஸ்தலத்தை, கட்டுவதோடு தொடர்புடையது. அவனுடைய கைகள் பரலோகத்தில் இருக்கிற காரியங்களுக்கு முன்மாதிரிகளான காரியங்களைக் கையாண்டன. ஒவ்வொரு முளையும், ஒவ்வொரு பாதமும், ஒவ்வொரு தொங்குதிரையும், ஒவ்வொரு மூடுதிரையும் வரப்போகிற நன்மைகளுக்கு நிழலாக இருந்தது. அவன் கிறிஸ்துவுக்கு நிழலாக இருந்த காரியங்களைக் கையாண்டான். எல்லாம் கிறிஸ்துவுக்கு நிழலாக இருந்தன.
பணிவிடை செய்த மெராரியர்கள் அல்லது கெர்சோனியர்கள் இந்தக் காரியங்களைப் புரிந்துகொண்டார்களா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், இன்று நம்மால் அவைகளைப் புரிந்துகொள்ள முடியும். கூடாரத்தையும், அதைச் சார்ந்த பரம்பொருளான பணிமுட்டுகளையும் புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தின்கீழ் கொண்டு வந்து, அவைகள் எல்லாவற்றிலும் நாம் கிறிஸ்துவைக் காண்பது நம் சிலாக்கியம்.
தங்களுடைய சேவையைப்பற்றிய அறிவு எந்த அளவுக்கு லேவியர்களிடம் இருந்தது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், பரலோக நிஜத்தின் பூமிக்குரிய நிழல்களைத் தொடுவதற்கும், கையாளுவதற்கும், வனாந்தரத்தின் வழியாகச் சுமந்துசெல்வதற்கும் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்றால் அது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மிகவும் விலையேறப்பெற்ற சிலாக்கியம் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். அவர்கள் கையிட்டுச்செய்த எல்லாவற்றிலும் “கர்த்தர் இவ்வாறு உரைக்கிறார்” என்ற அதிகாரம் இருந்தது. இது விசேஷமான இரக்கம். இப்படிப்பட்ட இரக்கத்தை, இப்படிப்பட்ட சிலாக்கியத்தை, யாரால் அளவிட முடியும்? அந்த அற்புதமான கோத்திரத்தில் இருந்த ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேவன்தாமே நிர்ணயித்தார். அவர்களுடைய வேலையைத் தேவனுடைய ஆசாரியன் மேற்பார்வை செய்தான். அவர்கள் தங்கள் தங்கள் விருப்பத்தின்படி காரியங்களைச் செய்யவில்லை; அவர்கள் ஒருவரை ஒருவர் பின்பற்றி காரியங்களைச் செய்யவில்லை. மாறாக அவர்கள் எல்லாரும் தேவனுடைய அதிகாரத்திற்கு அடிபணிந்தார்கள்; என்ன செய்ய வேண்டும் என்று தேவன் அவர்களிடம் சொன்னாரோ, அதை அவர்கள் துல்லியமாகச் செய்தார்கள். இதுதான் 8580 வேலைக்காரர்களுடைய ஒழுங்கின் இரகசியம் (4:48). இன்றைக்கும் ஒழுங்கின் உண்மையான ஒரே இரகசியம் இதுதான் என்று முழு நிச்சயத்தோடு சொல்ல முடியும்.
நம் பணிந்தடங்காமை
அப்படியானால், இன்று சபையில் ஏன் இவ்வளவு குழப்பம்? ஏன் இவ்வளவு முரண்பட்ட எண்ணங்களும், உணர்ச்சிகளும், அபிப்பிராயங்களும் இருக்கின்றன? ஏன் ஒருவரோடொருவர் இப்படி சண்டைபோடுகிறார்கள்? ஏன் ஒருவர் இன்னொருவருடைய பாதையில் இப்படிக் குறுக்கிடுகிறார்கள்? தேவனுடைய வார்த்தைக்கு முழுமையாகவும், முற்றிலும் பணிந்தடங்காததே இதற்குக் காரணம். நம் சித்தத்தின்படிதான் நாம் வேலை செய்கிறோம். நமக்காக நம் வழிகளைத் தெரிந்தெடுப்பதற்குத் தேவனை அனுமதிப்பதற்குப்பதிலாக நாமே நம் சொந்த வழிகளைத் தெரிந்தெடுக்கிறோம். மனிதனுடைய எண்ணங்களுக்கு உண்மையாக என்ன மதிப்போ அதற்குரிய இடத்தில் அவைகளை நாம் வைக்கவேண்டும். தேவனுடைய எண்ணங்கள் நிபந்தனையின்றி நிறைவாக ஆளும் நிலைக்கு உயரவேண்டும். இப்படிப்பட்ட மனப்பாங்கும், மனநிலையும் நமக்குத் தேவை.
இதுவே இன்றைய இன்றியமையாத் தேவை; இதுவே நாம் வாழ்கிற இந்த நாட்களின் கதறுதல். இன்று மனிதனுடைய சித்தமே எல்லா இடங்களிலும் மேலோங்கிநிற்கிறது. அது ஒரு பேரலையைப்போல் எழும்பி, அதை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த எல்லாத் தடைகளையும் அடித்துச்சென்றுவிடுகிறது. காலத்தால் அழியாத பல பழைய அமைப்புகள் பெருக்கெடுத்து வருகிற பெருவெள்ளத்தால் அடித்துச்செல்லப்படுகின்றன. பல மாளிகைகளின் அடித்தளங்கள் மக்களின் பிரியத்தில், பாசத்தில், அன்பில் ஆழமாகப் போடப்பட்டிருந்தன என்று நினைத்தோம். அப்படிப்பட்ட மாளிகைகளெல்லாம், “அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்து விடுவோம்,” ((சங். 2:3) என்ற உணர்ச்சியின் தாக்குதலில் நொறுங்கிப்போய்விடுகின்றன.
தேவனுடைய அதிகாரத்துக்குப் பணிந்தடங்குதல்
இதுதான் இந்த யுகத்தின் ஆவி. இதற்கு மாற்றுமருந்து என்ன? பணிந்தடங்குதல்தான் இதற்கு மாற்றுமருந்து. எதற்குப் பணிந்தடங்க வேண்டும்? சபையின் அதிகாரம் என்று அழைக்கப்படுகிறதே, அதற்குப் பணிந்தடங்க வேண்டுமா அல்லது பாரம்பரியத்துக்குப் பணிந்தடங்க வேண்டுமா அல்லது மனிதர்களின் கட்டளைகளுக்கும், உபதேசங்களுக்கும் பணிந்தடங்க வேண்டுமா? இல்லை தேவனுக்கு ஸ்தோத்திரம்! இவைகளுக்குப் பணிந்தடங்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியானால் எதற்குப் பணிந்தடங்க வேண்டும்? ஜீவிக்கும் தேவனுடைய சத்தத்துக்கு, பரிசுத்த வேதவாக்கியங்களின் சத்தத்துக்கு, பணிந்தடங்க வேண்டும். ஒரு பக்கம் சுயசித்தத்திற்கும், இன்னொரு பக்கம் மனிதனுடைய அதிகாரத்துக்கும், பணிந்தடங்குவதற்கு இதுவே மாபெரும் தீர்வாகும். “நாம் கீழ்ப்படிய வேண்டும்.” சுயசித்தத்துக்கு இதுதான் தீர்வு. “நாம் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.” இதுவே மனிதனுடைய அதிகாரத்துக்குத் தலைகுனிவதற்குத் தீர்வு. இந்த இரண்டு காரியங்களும் நம்மைச்சுற்றி இருப்பதை நாம் பார்க்கிறோம். சுயசித்தம் உத்தமமின்மையாக மாறிவிடுகிறது. மனிதனுக்கு அடிபணிதல் மூடப்பழக்கமாக மாறிவிடுகிறது. இந்த இரண்டும் முழு உலகத்தை அசைத்துவிடும். “மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதே அவசியமாயிருக்கிறது” (அப். 5:29). இதை அழியாத வார்த்தை. இந்த வசனத்தைப் பேசுவதற்கும், உணர்வதற்கும், இந்த வசனத்தின்படி நடப்பதற்கும் தேவனால் போதிக்கப்பட்டவர்களைத்தவிர மற்றவர்களை இந்த இரண்டு காரியங்கள் அடித்துச்சென்றுவிடும்.
கரடுமுரடான, கவர்ச்சியற்ற “தகசுத்தோல்களை” வனாந்தரத்தில் பராமரிப்பதற்கு இதுதான் கெர்சோனியர்களுக்கு ஆற்றல் அளித்தது. பார்வைக்கு முக்கியம் இல்லாததுபோல் தோன்றிய “முளைகளை”ப் பராமரிப்பதற்கு இதுதான் மெராரியர்களுக்கு ஆற்றல் அளித்தது. ஆம், எந்த வேலைக்கு ஒருவன் தகுதியானவன் என்று கர்த்தர் நினைக்கிறாரோ, அந்த சேவைக்கு கர்த்தர் அவனை அழைக்கும்போது, அந்த சேவைக்கு அவன் தன்னை அர்ப்பணிக்க இதுதான் அவனுக்கு ஆற்றல் அளிக்கும். மனிதர்களுடைய பார்வையில், அது கரடுமுரடானதாகவும், கவர்ச்சியற்றதாகவும், இழிவானதாகவும், முக்கியமற்றதாகவும் தோன்றக்கூடும். நான் நிற்கவேண்டிய இடத்தை நமக்கு நியமித்திருக்கிறவர் கர்த்தர் என்பதும், நாம் செய்யவேண்டிய வேலையை கர்த்தர் நமக்குத் தந்திருக்கிறவர் கர்த்தர் என்பதும், நாம் செய்யும் வேலை “பதினாயிரம் பேர்களில் சிறந்த, முற்றிலும் அழகான” நபருடைய மகிமையோடு நேரடியாகத் தொடர்புடையது என்பது போதும்.
நாமும் கரடுமுரடான, கவர்ச்சியற்ற “தகசுத்தோல்”போன்ற அல்லது முக்கியமற்ற “முளைகளைப்”போன்ற காரியங்களோடு மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். கிறிஸ்துவுடன் தொடர்புடைய எதுவானாலும் சரி - அவருடைய பெயர் அல்லது அவருடைய நபர் அல்லது உலகத்தில் அவருடைய குறிக்கோள் - அது விவரிக்கமுடியாத அளவுக்குத் தேவனுக்கு விலையேறப்பெற்றது என்பதை மறக்க வேண்டாம். மனிதனுடைய பார்வையில் அது மிகவும் சிறியதாக இருக்கலாம். அதனால் என்ன? தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து நாம் காரியங்களைப் பார்க்க வேண்டும். அவருடைய தரத்தின்படி நாம் அவைகளை அளக்க வேண்டும். கிறிஸ்துவே அந்தத் தரம். தேவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவைக்கொண்டு அளக்கிறார். என்னவாகயிருந்தாலும் சரி, அதற்குக் கொஞ்சமாவது கிறிஸ்துவோடு தொடர்பு இருந்தால் தேவனுடைய பார்வையில் அது கனத்துக்குரியது, முக்கியமானது. அதற்கு மாறாக, இந்த உலக மக்களின் மிகவும் ஆரவாரமான நடவடிக்கைகளும், மிகப் பிரம்மாண்டமான திட்டங்களும், மிகவும் மலைப்புண்டாக்கும் வேலைகளும் காலை நேரத்து மேகத்தைப்போலவும், அதிகாலை பனியைப்போலவும் மறைந்துபோகும்.
கிறிஸ்துவா அல்லது சுயமா
மனிதன் சுயத்தைத் தன் மையமாக, தன் இலக்காக, தன் தரமாக எடுத்துக்கொள்கிறான். காரியங்கள் எந்த அளவுக்கு அவனை உயர்த்துகின்றன என்பதையும், அவனுடைய நலன்களை வளர்க்கின்றன என்பதையும் வைத்து அவைகளை மதிப்பிடுகிறான். மதத்தையும் மக்கள் அப்படித்தான் எடுத்துக்கொள்கிறார்கள். தங்களைப் பகட்டாகக் காட்டுவதற்கு மக்கள் மதத்தை ஒரு மேடையாக்குகிறார்கள்.
சுருக்கமாகச் சொல்வதானால், எல்லாவற்றையும் சுயத்தை வளர்ப்பதற்கான முதலீடாகக் கருதுகிறார்கள். சுயத்தை வெளிச்சம் போட்டு அழகாகக் காட்டுவதற்கும், அதன்மேல் கவனத்தை ஈர்க்கவும் எல்லாம் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, தேவனுடைய நினைவுகளுக்கும் மனிதனுடைய நினைவுகளுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. கிறிஸ்துவுக்கும் சுயத்துக்கும் எவ்வளவு தூரமோ அந்த அளவுக்கு அந்த இடைவெளி அதிகமாக இருக்கிறது. கிறிஸ்துவுக்குரிய எல்லாவற்றுக்கும் நித்திய மதிப்பும், நித்திய செல்வாக்கும் உண்டு. சுயத்துக்குரிய எல்லாம் கடந்துபோகும், மறைந்துபோகும், மறக்கப்பட்டுப்போகும். ஆகையால், சுயத்தைத் தன் இலக்காக மாற்றிக்கொள்வதே ஒருவன் செய்கிற மிக மோசமான தவறு. இதன் விளைவு நித்திய ஏமாற்றம். மாறாக, ஒருவன் கிறிஸ்துவைத் தன் இலக்காக மாற்றிக்கொண்டால் அதுவே அவன் செய்கிற மிக ஞானமுள்ள, பாதுகாப்பான, சிறந்த செயல். இதன் விளைவு மகிமை. இது தவறாது.
அன்புக்குரியவர்களே, நீங்கள் ஒருகணம் நின்று உங்கள் இருதயத்தோடும், மனசாட்சியோடும் பேசுங்கள். உங்கள் ஆத்துமாவைப்பொறுத்தவரை நான் உங்களுக்குச் செய்யவேண்டிய ஒரு பரிசுத்தமான கடமை எனக்கு உண்டு என்று நான் நினைக்கிறன். நான் என் அறையில் உட்கார்ந்துகொண்டு இந்த வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் அறையில் தனியாக உட்கார்ந்துகொண்டு இதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு புத்தகம் எழுதுவதோ அல்லது வேதவாக்கியங்களை வெறுமனே வியாக்கியானம் செய்வதோ என் நோக்கம் இல்லை. உங்களுடைய மிக உள்ளான ஆத்மாவோடு இடைப்படுகிற ஆசீர்வாதமான வேலையைச் செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்.
ஆகையால், உங்களிடம் கனமான, கூர்மையான இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு என்னை அனுமதியுங்கள். உங்கள் இலக்கு என்ன? கிறிஸ்துவா அல்லது சுயமா? சர்வவல்லமையுள்ளவரும், எல்லாருடைய இருதயங்களை ஆராய்ந்தறிகிறவருமான தேவனுக்குமுன்பாக நேர்மையாகப் பதில் சொல்லுங்கள். தெய்வீகப் பிரசன்னத்தின் வெளிச்சத்தில் நியாயந்தீர்ப்பதுபோல் உங்களை நீங்களே கண்டிப்புடன் நியாயந்தீர்த்துக்கொள்ளுங்கள். எந்தவிதமான மேல்பூச்சினால் அல்லது பொய்யான வர்ணப்பூச்சினால் வஞ்சிக்கப்படவேண்டாம். தேவன் மேல்மட்டத்துக்குக்கீழே பார்க்கிறார். நீங்களும் அப்படி மேல்மட்டத்துக்குக்கீழே பார்க்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். எல்லாவற்றுக்கும் மாற்றாக தேவன் உங்களுக்குக் கிறிஸ்துவை வழங்குகிறார். நீங்கள் அவரை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? அவர்தான் உங்களுடைய ஞானமா, உங்களுடைய பரிசுத்தமா, உங்களுடைய நீதியா, உங்களுடைய மீட்பா? எந்தவிதத் தயக்கமுமின்றி, “என் நேசர் என்னுடையவர்; நான் அவருடையவன்(ள்),” என்று உங்களால் சொல்ல முடியுமா? ஆராய்ந்துபாருங்கள். உங்கள் ஆத்துமாவின் மிக ஆழத்தில் இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் திட்டவட்டமாகக் கண்டுபிடித்துவிட்டீர்களா? கிறிஸ்துவை மட்டுமே உங்கள் ஒரே இலக்காக வைத்திருக்கிறீர்களா? எல்லாவற்றையும் நீங்கள் கிறிஸ்துவைக்கொண்டு அளக்கிறீர்களா?
அன்புக்குரிய நண்பர்களே, இவைகள் குத்திக்கிழிக்கும் கேள்விகள். இந்தக் கேள்விகள் எவ்வளவு கூர்மையாக வெட்டும் என்பதையும், இவைகளுக்கு எவ்வளவு வல்லமை உண்டு என்பதையும் அறியாமல் நான் இந்தக் கேள்விகளைக் கேட்பதாக நீங்கள் நினைக்க வேண்டாம். சிறிதளவாவது நான் அதின் பாரத்தையும், ஆழத்தையும் உணர்கிறேன் என்பதற்குத் தேவனே சாட்சி. கிறிஸ்துவுடன் சம்பந்தப்பட்டவைகளைத்தவிர வேறொன்றும் நிலைத்துநிற்காது என்பது திண்ணம், உறுதி. மேலும், எவ்வளவு சிறிய காரியமாக இருந்தாலும் சரி, அதற்கு மறைமுகமாகவாவது கிறிஸ்துவோடு சம்பந்தம் இருந்தால், பரலோகத்தின் மதிப்பீட்டில், தீர்ப்பில், அதற்கு மேன்மையான செல்வாக்கு உண்டு. யாருடைய இருதயத்திலாவது இப்படிப்பட்ட உணர்வைத் தட்டியெழுப்ப முடிந்தால் அல்லது தட்டியெழுப்பப்பட்ட இருதயத்தில் இந்த உணர்வை இன்னும் ஆழமாக்க முடிந்தால், நான் இந்த வார்த்தைகளை எழுதியது வீண் அல்ல என்று நான் நினைப்பேன்.