By மெர்லின் இராஜேந்திரம்
“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2). மரியாள், மார்த்தாள் ஆகிய இருவரின் சகோதரன் லாசரு மரித்து நான்கு நாட்கள் ஆனபின் இயேசு பெத்தானியாவுக்கு வருகிறார். மார்த்தாளுக்கும் ஆண்டவராகிய இயேசுவுக்கும் இடையே நடந்த உரையாடலின்போது அவர், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்,” என்றார். உடனே மார்த்தாள், “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளில் அவனும் உயிர்த்தெழுவான் என்று அறிந்திருக்கிறேன்,” என்றாள். இயேசு அவளை நோக்கி, “நானே உயிர்த்தெழுதல்...” என்று சொன்னார். உயிர்த்தெழுதல் கடைசி நாளில் நடக்கவிருக்கும் ஒரு நிகழ்வு என்று மார்த்தாள் தவறாக நினைத்தாள். ஆனால், இயேசுவோ, “அது நீ நினைப்பதுபோல் ஒரு நிகழ்வு அல்ல; அது ஒரு நபர், நானே அந்த நபர், நானே உயிர்த்தெழுதல்,” என்று சொன்னார்.
அதுபோல, மறுரூபமாகுதல் என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது, கடைசிநாளில் நடக்கவிருக்கும் ஒரு நிகழ்வு என்று பெருப்பாலோர் நினைக்கிறார்கள். ஆனால், மறுரூபமாகுதல் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நினைப்பதுபோல, ஒரு குறிப்பிட்ட நாளில், கடைசிநாளில், நிகழப்போகிற நிகழ்வு அல்ல. அது தேவ மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நடைபெறுகிற தொடர்ச்சியான காரியம். அவர்கள் நாள்தோறும், கணந்தோறும் மறுரூபமாகிறார்கள், மறுரூபமாக வேண்டும் என்று பவுல் திட்டவட்டமாகக் கூறுகிறார். இந்த உண்மையை, “நாமெல்லாரும் திறந்தமுகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியில் காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரி. 3:18) என்று பவுல் மீண்டும் வலியுறுத்துகிறார். இந்த வசனத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதற்காக நான் இதைக் கொஞ்சம் திருத்தி அமைக்கிறேன். “நாமெல்லாரும் முக்காடு இல்லாத முகத்தோடு கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியைப்போலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு நாம் மறுரூமாகிக்கொண்டிருக்கிறோம்.” ஆமென். கண்ணாடியைத் துணியைப்போட்டு மூடிவிட்டால், அதற்குமுன் இருக்கும் எதையும் அந்தக் கண்ணாடியால் பிரதிபலிக்க முடியாது. அதுபோல, நாம் முக்காடு இல்லாத, அதாவது துணியால் மூடப்படாத, திறந்த முகத்தோடு கர்த்தரைக் கண்டு, கண்ணாடியைப்போல் அவரைப் பிரதிபலிக்க வேண்டும். நாம் கண்ணாடி. நாம் இயேசுவை நோக்கிப் பார்க்க வேண்டும்; அவரைப் பிரதிபலிக்க வேண்டும். மோசே தன் முகத்தில் முக்காடு போட்டுக்கொண்டதுபோல் நாம் போடத் தேவையில்லை. பலருடைய முக்காடு இன்னும் நீங்காமலிருக்கிறது. வேதாகமத்தை வாசிக்கும்போதுகூட முக்காடு அவர்கள் இருதயத்தில் இருக்கிறது. கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது அந்த முக்காடு எடுபட்டுப்போம் (2 கொரி. 3:13-17).
மறுரூபமாகுதல் என்ற வார்த்தைக்கு கிரேக்கமொழியில் மெட்டமார்ஃபோ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மெட்டமார்ஃபோ என்பது ஒரு சிறு முட்டையிலிருந்து ஒரு கம்பளிப்பூச்சு வெளிவந்து, அது மாறி ஒரு வண்ணத்துப்பூச்சியாக உருமாற்றம் அடைகிற முழுமையான ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. புதிதாகப் பிறந்த விசுவாசியின் மாற்றம் மனமாற்றத்தில் தொடங்கி மறுரூபமாகுதலில் முடிவடைகிறது. நம் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பமே ஒரு மாற்றம்தானே! இந்த மாற்றம் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
ஆண்டவராகிய இயேசு ஒருநாள் தம் சீடர்களை ஓர் உயர்ந்த மலைக்கு அழைத்துக்கொண்டுபோய், அவர்களுக்குமுன்பாக “மறுரூபமானார்” (மத். 17:2). அவர் இந்தப் பூமியில் மனித குமாரனாக வாழ்ந்தார். ஆனால், தாம் தேவ குமாரன் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தினார். நம் மறுரூபம் இயேசுவுக்கு ஒத்த மறுரூபமாக இருக்க வேண்டும், அதாவது நம் குணம் கிறிஸ்துவின் குணத்துக்கு ஒத்த குணமாக மாறவேண்டும் என்பதே நம்மைப்பற்றிய தேவனுடைய நித்திய நோக்கம், திட்டம், குறிக்கோள், இலக்கு. “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்” (ரோமர் 8:28, 29).
இந்த நோக்கத்தை நிறைவேற்ற தேவன் நம் மனதைப் புதிதாக்குகிறார். மனம் நம் ஆத்துமாவின் பிரதானமான பகுதி. மனிதன் தன் மனம்போகிற போக்கில் வாழ்பவன். அவன் தன் மனமும் மாம்சமும் விரும்புகிறதைச் செய்கிறவன். தேவன் நம் ஆவியை ஒரு கணப்பொழுதில் மறுபடி ஜெநிப்பித்தார். நம் உடலையும் ஒரு கணப்பொழுதில் உருமாற்றுவார். ஆனால், அவர் நம் ஆத்துமாவை, பிரதானமாக, நம் மனதைப் புதுப்பித்து நம்மை மறுரூபமாக்க நீண்ட காலம் ஆகிறது. அதற்காகத்தான் தேவன் நமக்கு 70 அல்லது 80 ஆண்டுகளைத் தருகிறார். ஏனென்றால், நம் மனம் புதிதாவதால் நாம் மறுரூபமாகின்றோம் என்று வேதாகமம் சொல்லுகிறது. அதாவது எல்லாவற்றையும்குறித்து நாம் சிந்திக்கும் விதம் மாற வேண்டும். “எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது,” (1 கொரி. 2:16) என்று பவுல் ஆணித்தரமாகச் சொல்லுகிறார். தான் கிறிஸ்துவைப்போல் சிந்திப்பதாகவும், தன் எண்ணங்கள், சிந்தனைகள், யோசனைகள், அபிப்பிராயங்கள், கருத்துக்கள் கிறிஸ்துவைப்போல் மாறிவிட்டதாகவும், தன் மனம் கிறிஸ்துவின் மனதைப்போல் மாறிவிட்டதாகவும் பவுல் உறுதியாகக் கூறுகிறார். எனவேதான், “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது,” (பிலி. 2:5) என்று வேண்டுகோள் விடுக்கிறார். மனம் புதிதாவதே மறுரூபமாவதற்கான வழிமுறை.
பழைய ஏற்பாட்டில் மக்கள் பலி கொடுத்தார்கள். பலிகொடுத்தவர்கள் உயிரோடிருக்கும் விலங்குகளைக் கொன்று பலிகொடுத்தார்கள். ரோமர் 12:1இல் "அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை," என்று நாம் “உயிருள்ள பலி” கொடுக்குமாறு பவுல் வேண்டுகிறார். அதாவது நாம் நம்மை உயிரோடு பலிகொடுக்க வேண்டும் என்று பவுல் கோருகிறார். நாம் நம்மை ஏன் உயிரோடு பலிகொடுக்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும் பவுல் அங்கு சொல்லுகிறார். என்ன காரணம்? தேவனுடைய இரக்கங்களினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருப்பதே காரணம். பழைய ஏற்பாட்டில் மக்கள் பலிகளை ஆலயத்துக்குக் கொண்டுவந்து செலுத்திவிட்டுச் சென்றதுபோல நாமும் இந்தப் பலியை ஒரேவொரு முறை ஆலயத்தில் கொடுத்துவிட்டுப் போய்விடலாமா? இல்லை. இது ஒரேவொருமுறை கொடுத்துமுடிக்கிற பலியல்ல. இது வாழ்நாள் முழுவதும் நாம் நம்மைத் தொடர்ச்சியாகப் படைக்கிற பலி. தேவ மக்கள் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் வாழும் விதமே இந்தப் பலி. உலகத்துக்கு ஒத்த வேடம்போடாமல், உலகத்தின் முறைமைகளுக்கும், வழிகளுக்கும், போக்குகளுக்கும் மரித்து, நம் மனம் புதிதாக்கப்படுவதால் நாம் மறுசாயலாக்கப்படுவதே இந்தப் பலி. மிருகங்களைப் பலி கொடுப்பது எளிது. ஆனால், இந்தப் பலி செலுத்துவது கடினம். ஆனால், இப்படிப்பட்ட பலியே “தேவனுக்குப் பிரியமானது.” இதுவே நாம் செய்யவேண்டிய “புத்தியுள்ள ஆராதனை.”
‘துணி வெளுக்க மண்ணுண்டு, தோல் வெளுக்கச் சாம்பலுண்டு, மணி வெளுக்கச் சாணையுண்டு, மனம் வெளுக்க வழியில்லை’ என்று ஒரு புலவன் பாடினான். ஆனால், நம் மனம் வெளுக்க, நம் மனதைப் புதிதாக்க வழியுண்டு என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. பேராசை, இச்சை, பொறாமை, பெருமை, கசப்பு, வெறுப்பு, பகைமை, வஞ்சகம்போன்றவைகளை உள்ளத்தில் சாதுரியமாக மறைத்துக்கொண்டு வெளியே நாடகமாடாமல் நம் மனதை தேவனுடைய வார்த்தைக்கும், வழிகளுக்கும் ஏற்றாற்போல் மாற்றும்போது நம் குணத்தில் ஞானமுள்ள மாற்றங்கள் உருவாகும். இந்த ஞானமுள்ள மாற்றத்தினால் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று நம்மால் பகுத்தறிய முடியும் (ரோமர் 12:1).
தேவனுடைய வார்த்தைக்கு நம் மனதைப் புதிதாக்கி நம்மை மறுரூபமாக்கும் வல்லமை உண்டு. “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையுள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும்...இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது,” (எபி. 4:12). ஆம், தேவ மக்களில் தேவன் விரும்புகிற மாற்றத்தைச் செய்ய தேவனுடைய வார்த்தைக்கு அசாதாரணமான அற்புத ஆற்றல் உண்டு. ஏனென்றால், “அவருடைய வார்த்தைகள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன” (யோவான் 6:63). தேவன் தம் வார்த்தையால் இந்த உலகத்தையும், அதிலுள்ள யாவற்றையும் படைத்தாரே! அதே வார்த்தையால் அவருடைய பிள்ளைகளைப் புதிதாக்க முடியும்.
1 கொரிந்தியர் 6:9-11இல் எப்படிப்பட்டவர்கள் தேவனுடைய அரசைச் சுதந்தரிப்பதில்லை என்று பவுல் கூறுகிறார். அப்படிச் சொன்னபின், *“உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்...ஆயினும் கழுவப்பட்டீர்கள்,” என்று கூறுகிறார். ஆம், தேவனுடைய வார்த்தையால் எப்பேர்ப்பட்ட மனதையும் புதிதாக்க முடியும்.
யோபு, “என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன். இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால், நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்,” என்றார் (யோபு 42:5, 6). நம் உருவத்தைக் காட்டுவது கண்ணாடி. நாம் எப்படி நம்மை உற்றுப்பார்த்தாலும், முன்னும் பின்னும் திரும்பித்திரும்பிப் பார்த்தாலும், உள்ளதை உள்ளபடி காட்டுவது கண்ணாடி. மௌனமாக நம் உண்மை நிலையைப் பிரதிபலிப்பது கண்ணாடி! கண்ணாடி காண்பிக்கும் என் உருவம் அழகாயில்லை என்பதால் அதை உடைத்துப்போட்டால் நான் அழகானவனாகிவிடுவேனா? நம் ஆத்துமாவின் உண்மையான நிலையைக் காண்பிக்கும் கண்ணாடியாகிய தேவனுடைய வார்த்தையை நாம் வரவேற்க வேண்டும்.
தேவனை அறிகிற அறிவு முதன்மையான அறிவு. “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” (யோவான் 17:3). நாம் அவரை அறிய வேண்டும் என்பதே அவர் நம்மோடு இடைப்படுவதின் மேலான நோக்கம். இது மேலோட்டமான ஏட்டறிவல்ல. இது உள்ளான உற்றறிவு. இதுவே பவுலின் ஆவல் (பிலி. 3:8, 10, 11). இதுவே பரிசுத்தவான்களுக்கான அவருடைய ஜெபம். ஆராதனைகள், வேதபாடங்கள், சிறப்புக்கூட்டங்கள், மாநாடுகள், ஊழியங்கள் ஆகியவைகள் இருந்தும் தேவனை மிகக் குறைவாக அறிந்த கிறிஸ்தவர்கள் அதிகம். தேவ மக்கள் தேவனை அறிகிற அறிவில் வளர்கிறார்களா, அவர்களுடைய குணம் கிறிஸ்துவுக்கேற்றாற்போல் மாறுகிறதா என்பதே நம் ஊழியத்தின் மதிப்பைத் தீர்மானிக்கும். தேவனை அறிகிற அறிவுக்கு அடுத்த முக்கியமான அறிவு நம்மை அறிகிற அறிவு. தேவனை அறியாதவன் தன்னையும் அறிய மாட்டான். நாம் தேவனையும் அறிய வேண்டும், நம்மையும் அறிய வேண்டும். நாம் நம் உண்மையான நிலையை அறிந்தால்தான் நம் மனம் எந்த அளவுக்கு அசிங்கமானது என்றும், எந்த அளவுக்குப் புதிதாக வேண்டும் என்று நமக்குத் தெரியும்.
“எங்கள் புறம்பான மனிதன் அழிந்துகொண்டிருந்தாலும். உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரி. 4:16) என்று பவுல் கூறுகிறார். நம் புறம்பான மனிதன் என்பது நம் புறம்பான வெளி வாழ்க்கை. உள்ளான மனிதன் என்பது நம் உள்ளான கட்டமைப்பு, நம் அடிப்படைத்தன்மை, நம் நபர். நம் இயற்கையான ஆசைகள், ஆவல்கள், வாஞ்சைகள், ஏக்கங்கள், நாட்டங்கள், தேட்டங்கள், எண்ணங்கள், கற்பனைகள், சாய்மானங்கள், மனப்பாங்குகள், சுவைகள், முன்னுரிமைகள் ஆகியவைகளால் ஆனதுதான் நம் உள்ளான கட்டமைப்பு. நம் உள்ளான கட்டமைப்பு தேவனுக்கு நன்றாகத் தெரியும். நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஓரளவுக்குத் தெரியும். நமக்குக் கொஞ்சம் தெரியும். நம் உள்ளான கட்டமைப்பு முழுவதும் புதிதாக்கப்பட வேண்டும். நாம் பல்வேறு சூழ்நிலைகளின்வழியாகப் போகும்போது நாம் எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்பதுதான் நம் உள்ளான கட்டமைப்பை வனைகிறது. “நெருப்பிலிடப்பட்ட இரும்பின் துரு நீங்கி, அதுவும் நெருப்பாகி விடுவதுபோல, தேவனுக்கு நேராய்த் தன்னை முழுவதும் திருப்புகிறவன் எல்லா அசுசியும் நீங்கி, முழுவதும் புது மனிதனாகிவிடுகிறான்” என்று தாமஸ் கெம்பிஸ் என்ற பரிசுத்தவான் சொன்னார்.
தேவனை அறியாவதன், தன்னை அறியான். தன்னை அறியாதவன் புதிதாகமாட்டான், மறுரூபமாகமாட்டான். மறுரூபமாகமுடியாது. தேவன் எவ்வளவு பரிசுத்தர் என்று அறியாதவன், தான் எவ்வளவு அசுத்தன் என்று எப்படி அறிவான்? தான் எவ்வளவு அசுத்தன் என்று அறியாதவன் எப்படித் தன்னைக் கழுவிச் சுத்தம்செய்வான்? தன்னைச் சுத்தன் என்று நினைப்பவன் தன்னைக் கழுவுவானோ! தன் உள்ளான கட்டமைப்புப் பூரணமானது என்று கருதுபவன் தன்னை மாற்ற விரும்புவானா?
தன் நிலையை அறிந்த தாவீது “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்; நிலைவரமான ஆவியை என்னிலே புதுப்பியும்” (சங். 51:10) என்று கதறினான்; இது நம் இருதயத்தின் கதறலாகவும் இருக்க வேண்டும்.
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பல்வேறு குறைபாடுகளோடு ஆரோக்கியம் இல்லாமல் பிறக்கிறார்கள். நிறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகள் இல்லாமல் ஆரோக்கியமாகப் பிறக்கிறார்கள். இதுபோல, உண்மையான மனமாற்றம் இல்லாமல் வெறுமனே மதமாற்றத்தால் அநேகர் குறைபாடுகளோடு ஆரோக்கியம் இல்லாமல் பிறக்கிறார்கள். ஆனால், ஆரோக்கியமான ஆவிக்குரிய பிறப்பின் விளைவாக மாம்சத்தின் வெளிப்படையான பல செயல்கள் தானாகவே அடியோடு அழிந்துவிடும். இது தேவனுடைய பிள்ளைகளின் சிலாக்கியம். “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17) என்பது புதிதாகப் பிறந்த விசுவாசியின் ஆரோக்கியமான ஆவிக்குரிய பிறப்பின் சாட்சி. “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து, எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா. 2:20) என்பதற்கு அவன் உரிமைபாராட்டலாம். இது ஆரோக்கியமான ஆவிக்குரிய குழந்தையின் சிலாக்கியம்.
ஒரு குழந்தை இயல்பாகவே தன் தந்தையின் சாயலில் வளர்கிறது. அந்தக் குழந்தைக்குள் இருக்கும் பெற்றோரின் உயிருக்கு அந்த வல்லமையும், ஆற்றலும் உண்டு. அதுபோல, இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் பெற்ற புதிய ஜீவன் புதிய படைப்பின் சிருஷ்டிகருடைய சாயலில் இயல்பாகவே வளர்கிறது. நித்திய ஜீவனுக்கு அந்த வல்லமையும், ஆற்றலும் உண்டு. அல்லேலூயா!
புதிதாகப் பிறக்கும் விசுவாசி புதிய மனிதனைத் தரித்துக்கொள்கிறான்; அவன் உயிர்தெழுந்த கிறிஸ்துவோடு இணைந்திருக்கிறான். இவன் “இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் அன்றாட நிரப்பீட்டினால்” (பிலி. 1:11) “கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்” என்ற மண்டலத்தில் “தன்னைச் சிருஷ்டித்தவரைப்பற்றிய பூரண அறிவிலும், சாயலிலும் தொடர்ந்து” வளர வேண்டும் (கொலோ. 3:10).
நம் மனம் புதிதாக, நாம் மறுரூபமாக, வேண்டுமனால், அதற்காகத் தேவன் நமக்கு வழங்கியிருக்கும் வழியை நாம் அறிய வேண்டும், ஒப்புக்கொள்ள வேண்டும், விசுவாசிக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு தம் சிலுவை மரணத்தின்மூலம் செய்துமுடித்த வேலையே (ரோமர் 6:11) தேவன் நமக்கு வழங்கியிருக்கும் மாபெரும் வழங்கீடு. தான் கிறிஸ்துவோடு மரித்ததைப் புதிய விசுவாசி தெளிவாக இனங்காண வேண்டும், அதைத் தயங்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும். பழைய மனிதனை மேம்படுத்த முடியாது. அவன் மரிக்க வேண்டும். அவன் கிறிஸ்துவுடனே சிலுவையில் அறையப்பட்டான்.
“மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனிதன்” (எபே. 4:24) வளர்வதற்காகப் “கெட்டுப்போகிற பழைய மனிதனைக் களைந்துபோட வேண்டும்” (எபே. 4:22). உள்ளாடைக்குமேல் மேலாடையைத் தரித்துக்கொள்வதுபோல், பழைய மனிதனுக்குமேல் புதிய மனிதனைத் தரித்துக்கொள்ளக் கூடாது. பழைய மனிதனைக் களைந்துபோட்டு புதிய மனிதனைத் தரித்துக்கொள்ள வேண்டும். “பழைய ஆதாமை மேம்படுத்தும் சங்கத்தில்” உறுப்பினர்களாக இருக்கும் பக்தகோடிகள் பல கோடி. பழைய ஆதாமை மேம்படுத்த முடியாது. அவன் சாவதற்கு மட்டுமே தகுதியானவான். எனவே, பழைய ஆதாமை மேம்படுத்தும் வேலையைக் கைவிட்டுவிட்டு, பக்தியுள்ள சுய-வாழ்க்கைக்குப்பதிலாக கிறிஸ்துவை ஜீவனாகவும், வாழ்க்கையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்; இது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுடனான சேர்க்கை.
நிலைமையைப் பொறுத்தவரை, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவைமரணம், உயிர்த்தெழுதல்மூலமாகச் செய்துமுடிக்கப்பட்ட வேலையினால், நாம் மறுபடிபிறக்கும்போது “புதிய மனிதனுக்குள்” பிறக்கிறோம். “பழைய மனிதனையும், அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே” (கொலோ. 3:9, 10). இது நம் நிலைமை. அனுபவத்தைப்பொறுத்தவரை, நாம் புதிய மனிதனுக்குச் சாதகமாகப் (தரித்துக்கொண்டு) பழைய மனிதனைத் தள்ளி (களைந்துபோட்டு), சிலுவை மரணத்தின்மூலம் செய்துமுடிக்கப்பட்ட வேலையை நம் வாழ்க்கையில் செயல்படுத்த பரிசுத்த ஆவியானவருக்குத் தங்குதடையற்ற சுதந்திரம் கொடுக்க வேண்டும். “அப்படியே நீங்களும் உங்களைப் பாவத்துக்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்” (ரோமர் 6:11). நாம்தான் இதைச் செய்ய வேண்டும். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்...” (கலா. 2:20).
புதிதாகப் பிறந்த விசுவாசியின் வாழ்க்கையில் கர்த்தராகிய இயேசு முழுமையாக வெளியரங்கமாவதற்கு, அவனுடைய சுய-வாழ்க்கையின் மிக நாசுக்கான, தந்திரமான, கொடிய குணங்களை “எப்பொழுதும் மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பதற்கு” (2 கொரி. 4:11) பரிசுத்த ஆவியானவர் வாழ்நாள் முழுவதும் அவனோடு ஆழமாக இடைப்படவேண்டியிருக்கும். நம் மனதைப் புதிதாக்கி நம்மை மறுரூபமாக்க நம்மில், நம்மோடு இடைப்படுகிற பரிசுத்த ஆவியானவருக்கு நாம் நம்மை முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும் (2 கொரி. 4:11).
மாம்சம் நம் வாழ்க்கையின் அசிங்கமான பகுதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையில் அது மிகவும் அருமையாகக்கூட இருக்கலாம். ஆனால், அது நாம் புதிய பிறப்பின்மூலம் பெற்ற புதிய ஜீவனுக்கு அந்நியமானது. அது வேறொரு இனத்தைச் சார்ந்தது. அது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் ஜீவன் அல்ல. எனவேதான் மாம்சம் ஆவியானவருக்கு விரோதமாக இருக்கிறது; ஆவியானவர் மாம்சத்துக்கு விரோதமாக இருக்கிறார் (கலா. 5:17). மாம்சம் ஆவியானவருக்கு விரோதமாக இச்சிக்கிறது, போராடுகிறது. ஆனால், ஆவியானவர் இந்தச் சவாலைச் சந்திக்க வல்லமையுள்ளவர். கிறிஸ்துவின் ஆளுகைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் இந்தப் போட்டியாளனை பரிசுத்த ஆவியானவர் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார். நம்மில் இருக்கும் கிறிஸ்துவின் ஜீவனுக்கு ஆபத்தை விளைவிக்கும் எல்லாவற்றையும் செயலிழக்கச் செய்ய அவர் சிலுவை என்னும் பெரிய ஆயுதத்தை எடுத்துக்கொண்டு நிற்கிறார். இந்தப் போராட்டத்தில் நாம் அவரோடு ஒத்துழைக்குமாறு அவர் நம்மை அழைக்கிறார். நாம் அவரோடு ஒத்துழைக்கும்போது மட்டுமே கிறிஸ்துவின் குணம் விசுவாசியில் வெளியரங்கமாகும், நம் மனம் அவருடைய மனம்போல் புதிதாகும்.
நம் மனம் புதிதாக்கப்பட தேவன் தம்மையும், தம் வார்த்தையையும், தம் ஜீவனையும், கிறிஸ்துவையும், பரிசுத்த ஆவியானவரையும், பரிசுத்தவான்களையும் தந்திருக்கிறார்.
நாம் வாழும் உலகம் பொல்லாங்கனுக்குள் விழுந்துகிடக்கிறது. விழுந்துபோன மனிதன் கொடுத்தவரை விட்டுவிட்டு அவர் கொடுத்தவைகளைக் கொண்டாடுகிறான். படைத்தவரை விட்டுவிட்டு அவர் படைத்தவைகளைப் பற்றிக்கொள்கிறான். வளமான வாழ்வைத் தந்தவரை விட்டுவிட்டு அவர் தந்த வாழ்வை வழிபடுகிறான். இன்னும் கீழாகப் போய், “என் வளமான வாழ்வுக்கு என் சாமர்த்தியமும், என் கைப்பெலனுமே காரணம்,” என்று இறுமாப்படைகிறான். தேவனுடைய அங்கீகாரத்தையும், பிரியத்தையும் நாடுவோர் யார்? “இவன் என் நேசகுமாரன். இவன்மேல் நான் பிரியமாயிருக்கிறேன்,” என்று தேவன் நம்மைக்குறித்துச் சொல்லமுடியுமா?
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய வாழ்க்கை இதற்கான வழியைக் காண்பித்தது. அவருடைய பரலோக வாழ்க்கை நாம் இந்த வாழ்க்கை வாழ்வதற்கான வல்லமையை வழங்குகிறது. ஆண்டவராகிய இயேசு செய்துமுடித்த மீட்பின் செயல்களை முழுமையாக விசுவாசிக்காதவன் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான பலத்தையும், வல்லமையையும் பெற முடியாது. நம் இரட்சிப்பின் நோக்கமாக நாம் இயேசு கிறிஸ்துவின் குணத்துக்கு ஒத்த குணத்தைப் பெற வேண்டும் என்பதை வாஞ்சையோடு நாடாதவன் அதன் வல்லமையை அனுபவிக்க முடியாது. இயேசு இந்தப் பூமியில் தம் வாழ்க்கையில் தேவனுடைய குணத்தை, சாயலை, வாழ்ந்தார். நாம் இன்று நம் வாழ்க்கையில் தேவனுடைய குணத்தைக் காண்பிக்குமாறு அவர் பரலோகத்தில் வாழ்கிறார். தேவன் தம்மை வெளிப்படுத்துவதற்கு ஒரேவொரு வழிதான் உண்டு. நம்மில் வாழும் கிறிஸ்துவே அந்த வழி. பெரும்பாடுள்ள பெண் அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டுக் குணமடைந்து போய்விட்டதுபோல, அவரை அறியாமலே நாம் நம் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க முடியும்.
பழைய மனிதன் சிலுவையிலறையப்பட்டான். அவன் செத்துப்போய்விட்டான். அவனைத் தோண்டியெடுத்து திருத்த வேண்டாம். பழைய மனிதனைத் திருத்த முடியாது. அவன் மரிப்பதற்கு மட்டுமே தகுதியானவன். தேவன் நம்மை ஆதாமிலிருந்து கிறிஸ்துவுக்குள் இடமாற்றம் செய்துவிட்டார். நாம் ஒரு புதுப் படைப்பு. நம் பிறப்பு புதிய பிறப்பு. நம் ஜீவன் புதிய ஜீவன். நம் வழி புதிய வழி. நம் இருதயம் புதிய இருதயம். நாம் புதிய வானத்தையும், புதிய பூமியையும், புதிய எருசலேமையும் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். புதிய மனதோடு அங்கு நுழைவோமாக. ஆமென்.