தலையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள்
Translated from the original article, “Hold Fast The Head”
By Watchman Nee
"எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்" (எபேசியர் 1:22-23).
"அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் அனைத்துக் காரியங்களிலும் நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். அவராலே சரீரம் முழுதும் அதற்கு ஆதரவாயிருக்கிற சகல கணுக்களினாலும் ஒன்றிணைக்கப்பட்டு ஒவ்வொரு உறுப்பும் அதனுடைய அளவுக்குத்தக்கதாய் செயல்படுகிறபடியே, அது வளர்ந்து அன்பினாலே கட்டியெழுப்பப்படுகிறது" (எபேசியர் 4:15-16).
"கணுக்களாலும், கட்டுகளாலும் உதவி பெற்று இணைக்கப்பட்டு, தேவ வளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரம் முழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்... (கொலோசெயர் 2:19).
கிறிஸ்துவை எல்லாக் காரியங்களுக்கும் தலையாக்குவதற்காக, தேவன் அவரை, முதலாவது, சபைக்குத் தலையாக்கினார். சபைக்குத் தலையாக்கப்பட்டபிறகு அவருடைய அதிகாரம் பரந்துவிரிந்து அவர் எல்லாவற்றிற்கும் தலையாக்கப்படுவார். இந்தப் பிரபஞ்சத்தில், எதிர்காலத்தில், அவருடைய அந்தஸ்து என்னவாக இருக்கும் என்பது இன்று சபையில் அவருடைய அந்தஸ்து என்ன என்பதோடு நெருங்கிய தொடர்புடையது. கிறிஸ்து எல்லாவற்றிற்கும் தலையாக இருப்பதற்குமுன் அவர், முதலாவது, தம் பிள்ளைகளிடையே, அதாவது தம் சரீரமாகிய சபையில் இப்படிப்பட்ட தலையாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இந்த விஷயம் அளவிடமுடியாத அளவுக்கு எவ்வளவு முக்கியமான காரியம் என்பதைப் பாருங்கள்! கிறிஸ்து சபையின் தலையாய் இருக்கிறார்; சபை கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது. முழுச் சரீரமும் தலைக்குள் கூட்டப்பட்டிருக்கிறது. சரீரத்தில் எதுவும் தலைக்கு வெளியே வாழமுடியாது. நம் பௌதீக சரீரம் தலையிலிருந்து தனியே பிரிந்துவிட்டால், நம் சரீரத்திற்கு மரணம் சம்பவித்துவிட்டது என்று பொருள். ஒரு மனிதனின் எல்லா அசைவுகளும் தலையால் கட்டுப்படுத்தப்படுகின்றன. தலைக்குக் காயம் ஏற்படும்போது அது தன் வீரியத்தை இழந்துவிடுகிறது; அப்போது சரீரத்தின் நடவடிக்கைகள் நின்றுபோய், கடைசியில், சரீரம் செத்துவிடுகிறது. ஏனென்றால், தலைதான் சரீரத்தினுடைய உயிரின் கட்டுப்பாட்டு மையம்.
தேவனுடைய குமாரனை உடையவன் ஜீவனை உடையவன் என்று தேவனுடைய வார்த்தை பறைசாற்றுகிறது (1 யோவான் 5:12). கிறிஸ்தவன் தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவிடமிருந்து ஜீவனைப் பெறுகிறான். இருப்பினும், இந்த ஜீவன் கர்த்தரைவிட்டு ஒருபோதும் பிரிந்துபோவதேயில்லை. குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். ஆனால், இந்த ஜீவன் குமாரனில் இருக்கிறது என்றும் (1 யோவான் 5:15), ஒரு கணப்பொழுதுகூட இந்த ஜீவன் குமாரனைவிட்டுப் பிரிந்துபோகவில்லை என்றும் தேவனுடைய வார்த்தை கூறுகிறது. ஆகவே, கர்த்தராகிய இயேசு இல்லாமல் நம்மால் வாழ முடியாது.
தேவன் நமக்குக் கிறிஸ்துவின் ஒரு சிறிதளவை மட்டுமே தந்திருக்கிறார் என்றும், நாம் அந்தப் பங்கை எடுத்துக்கொண்டு அதில் திருப்தியாயிருக்கலாம் என்றும் நினைக்க வேண்டாம். தேவன் நமக்கு மொத்தக் கிறிஸ்துவைத் தந்திருக்கிறார். அவர் நம்மைத் தம் குமாரனுடன் நெருக்கமாக இணைத்திருக்கிறார். நாம் வாழ்வதற்கான எல்லா வல்லமையும் கிறிஸ்துவில்தான் இருக்கிறது. நாம் கர்த்தரிடமிருந்து விலகிப்போனால் அவருடனான தொடர்பை இழந்துவிடுகிறோம். அப்போது நாம் உடனே ஜீவனற்றவர்காளாகிவிடுகிறோம். இவ்வாறு, கிறிஸ்தவன் கிறிஸ்துவிடமிருந்து ஜீவனைப் பெற்றுக்கொண்டாலும்கூட அது கர்த்தரில்தான் நிலைத்திருக்கிறது. நாம் இன்னும் அவரில்தான் வாழ வேண்டும். நாம் ஜீவனைப் பெற்றிருக்கிறோம். இருந்தபோதும், இந்த ஜீவனையும் தலையையும் பிரிக்கமுடியாது. நாம் அவரை ஏற்றிருந்தாலும்கூட நாம் இன்னும் அவரில்தான் வாழ வேண்டும். நாம் அவரைப் பெற்றிருந்தாலும்கூட நாம் இன்னும் அவரைத்தான் சார்ந்திருக்க வேண்டும். இதன்படி நாம் ஒன்றிலும் சுயாதீனமாக இருக்க முடியாது. கர்த்தர் மட்டுமே தலை. அவர் மட்டுமே நம் ஜீவனின் ஆதாரம்.
தலையின் அதிகாரம்
கிறிஸ்துவே சரீரத்தின் ஜீவன். அதின் தலை எந்த முறையில் அவரே அதன் அதிகாரமுமாவார். ஜீவன் அவரில் இருப்பதால், அதிகாரமும் அவரில்தான் இருக்கிறது. அவர் நம் ஜீவன்; ஆகையால், அவருக்கு அதிகாரம் உண்டு. நாம் அவருடைய அதிகாரத்துக்குக் கீழ்ப்படியும்போது, நம்மிடம் ஜீவன் இருக்கிறது. ஆகவே, கிறிஸ்துவின் சரீரம் என்றால் என்னவென்பதை நாம் பார்த்தால், தலையின் கட்டுப்பாட்டை நம்மால் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது. ஏனென்றால், சரீரத்தின் அவயவங்கள் தங்கள் தங்கள் விருப்பம்போல் அசையமுடியாது; மாறாக, தலையின் கட்டளைப்படிதான் அவைகள் அசைகின்றன; தலையிலிருந்து எந்தக் கட்டளையும் வரவில்லையென்றால், சரீரத்தில் எந்த அசைவும் இருக்காது. சரீரத்தின் எந்த அவயவமும் தானாகவே எதையும் ஆரம்பிக்க முடியாது; மாறாக, அது தலையினால் ஆளப்பட வேண்டும். எங்கு ஜீவன் இருக்கிறதோ, அங்கு அதிகாரம் இருக்கிறது. ஜீவனே உண்மையான அதிகாரம். கர்த்தர் நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதால், அவருக்கு நம்மேல் அதிகாரம் உண்டு.
"எனக்குச் சரீர வாழ்க்கையைப்பற்றித் தெரியும்," என்று ஒருவன் சொன்னால், அவன் தன்னைத்தானே ஒரு கேள்வி கேட்க வேண்டும். "நான் கர்த்தருடைய அதிகாரத்துக்குப் பணிந்தடங்கியிருக்கிறேனா?" என்பதே அந்தக் கேள்வி. அவன் கர்த்தருடைய அதிகாரத்துக்குப் பணிந்தடங்கியிருக்கிறானா இல்லையா என்பதுதான் உண்மையாகவே அவனுக்குச் சரீர வாழ்க்கையைப்பற்றித் தெரியுமா தெரியாதா என்பதை நிரூபிக்கும். தேவனுடைய வார்த்தையைப் பொறுத்தவரை, "மெய்யாகவே கர்த்தர் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்; ஆனால், நான் இப்படி நினைக்கிறேன்," என்பதுதான் சிலருடைய மனப்பாங்காக இருக்கிறது. "ஆனால்" என்று சொல்ல நமக்கு அனுமதி தந்தது யார்? "ஆனால்" என்று சொல்ல நமக்கு அதிகாரத்தைத் தந்தது யார்? இந்த உலகத்தில் ஒருவன் தன் மேலதிகாரியின் கட்டளையைப் பின்பற்றவில்லையென்றால், அவன் கீழ்ப்படியாதவன் என்று சொல்வார்கள். கிறிஸ்துவே தலை, நாம் அல்ல. எனவே, கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் இருக்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது.
"பின்பற்று" என்றால் என்ன பொருள்? நான் எந்த வழியில் நடக்க வேண்டும், நான் எந்த இடத்துக்குப் போக வேண்டும் என்ற காரியங்களெல்லாம் வேறொருவரால் தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான் இதன் பொருள். நாம் கர்த்தரைப் பின்பற்றுகிறோம். ஆகையால், நாம் போகவேண்டிய பாதையைத் தீர்மானிக்கும் எந்த அதிகாரமும் நமக்குக் கிடையாது. சரீரத்திற்கும் தலைக்கும் உள்ள உறவைப் பொறுத்தவரையில், சரீரம் தலைக்குக் கீழ்ப்படிய வேண்டும், தலையைப் பின்பற்ற வேண்டும். நாம் கிறிஸ்துவின் சரீர வாழ்க்கையை வாழ விரும்பினால், நாம் நம் தலையை மூடிக்கொள்ளவேண்டும், அதாவது நம் தனிப்பட்ட அபிப்பிராயம், தன்முனைப்பான சித்தம் அல்லது சுயநலமான எண்ணம் ஆகியவைகள் இருக்கக்கூடாது. நாம் கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவரைத் தலையாக இருக்க அனுமதிக்க வேண்டும். அவ்வளவே! கர்த்தர் மட்டுமே அந்த அந்தஸ்தில் இருக்க முடியும். வேறு ஒருவரும் அந்த இடத்தில் இருக்க முடியாது. நான் தலையாக இருக்க முடியாது. சபையில் வேறு யாரும் தலையாக இருக்க முடியாது. ஏனென்றால், சரீரத்திற்கு ஒரேவொரு தலைதான் உண்டு. சரீரம் தலையாகிய கிறிஸ்துவுக்குப் பணிந்தடங்கியிருக்கிறது. ஆகையால், நாமெல்லாரும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
ஆனால், துரதிருஷ்டவசமாக, இன்று சபையில் அநேகத் தலைகளும், அநேகத் தலைவர்களும், மனிதர்களுடைய அநேக வழிகளும், சட்டதிட்டங்களும் இருக்கின்றன. பெரும்பாலும் தான் அதிகாரமாக இருக்க வேண்டும் என்று மனிதன் நாடுகிறான். கிறிஸ்து பரலோகத்தில் தலையாக இருக்கையில், மனிதன் பூமியில் தலையாக இருக்க விரும்புகிறான். பூமிக்குரிய தலையின் எண்ணம் பரலோகத் தலையின் எண்ணத்தோடு ஒத்துப்போகும்போது, நாம் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறோம். ஆனால், பூமிக்குரிய தலை பரலோகத் தலையோடு ஒத்துப்போகவில்லையென்றால், நாம் கீழ்படிய மறுக்கிறோம் என்று பொருள். இந்த முழு அமைப்புமுறையும் எவ்வளவு தவறாக இருக்கிறது!
"கர்த்தாவே, நீரே என் தலை. எதையும் தீர்மானிக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை. எனக்கு விருப்பமானவைத் தெரிந்தெடுக்க எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் தலையாக இருக்க முயல்கிற என் முயற்சியிலிருந்தும், தங்களைத் தலைகளாக ஸ்தாபித்துக்கொள்ளுகிற மற்ற மக்களிடமிருந்தும் என்னை விடுவிப்பீராக," என்று நீங்கள் கர்த்தரிடம் எப்போதாவது ஜெபித்திருக்கிறீர்களா? கர்த்தருடைய கட்டளையை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும்: கிறிஸ்துவே தலை; ஆகையால், ஒருவனும் தன் சொந்த சித்தத்தைப் பின்பற்ற முடியாது. கர்த்தரால் ஆட்கொள்ளப்பட்டு, அதன்பின் அவருடைய கட்டுப்பாட்டுக்குப் பணிந்தடங்குவது ஒவ்வொரு கிறிஸ்தவனின் அடிப்படை அனுபவமாக இருக்க வேண்டும்.
பேதுரு நற்செய்தியைப் பிரசங்கித்தபோது, "ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார்," (வ. 36) என்று பிரசங்கித்தார் என்று நடபடிகள் இரண்டாம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம். அவர் தன் வாயைத் திறந்து, "கிறிஸ்துவே ஆண்டவர்," என்று பறைசாற்றினார். கிறிஸ்து இரட்சகர் மட்டுமல்ல; அவர், முதலாவது, ஆண்டவர். அவர் நமக்கு ஆண்டவராக இருக்க வேண்டும். நாம் பாவம் செய்திருக்கிறோம்; எனவே, அவர் நம் இரட்சகராகவும் இருக்கவேண்டும்.
பவுல் மனந்திரும்பியபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சிந்தித்துப்பாருங்கள். அவர் தமஸ்குவுக்குச் சென்றுகொண்டிருந்த வழியில், ஆண்டவர் அவரைச்சுற்றிப் பிரகாசித்தார். உடனே பவுல் அவரிடம், "ஆண்டவரே, நீர் யார்?" (அப். 9:5) என்று கேட்டார். அவர் இயேசுவை இரட்சகராக விசுவாசிப்பதற்குமுன், முதலாவது அவரை ஆண்டவராகப் பார்த்தார். "ஆண்டவரே, என் கதை முடிந்தது. இப்போதிலிருந்து என்னை வழிநடத்துகிறவர் நீரே. ஏனென்றால், நீரே என் ஆண்டவர்," என்று நேர்மையாகச் சொல்லும் இடத்திற்கு நாமெல்லாரும் வரவேண்டும்.
தலையுடன் நம் உறவு
நாமெல்லாரும் தலையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை உணர வேண்டும். இப்படிச் செய்தால் கிறிஸ்துவே ஆண்டவர் என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம் என்று பொருள்; அவருடைய அதிகாரத்துக்கு முற்றிலும் நாம் கீழ்ப்படிகிறோம் என்று பொருள். "அவராலே சரீரம் முழுதும் அதற்கு ஆதரவாயிருக்கிற சகல கணுக்களினாலும் ஒன்றிணைக்கப்பட்டு, ஒவ்வொரு உறுப்பும் அதனுடைய அளவுக்குத்தக்கதாய்ச் செயல்படுகிறபடியே அது வளர்ந்து, அன்பினாலே கட்டியெழுப்பப்படுகிறது" (எபே. 4:16).
கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவயவங்களெல்லாம் தலையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு, சரீர வாழ்க்கை வாழ்கின்றன. எனவே, அவைகள் ஒன்றாகச் சேர்த்து இணைக்கப்பட்டிருக்கின்றன என்று இந்த பத்தியிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். நமக்கு அடுத்தவனை மட்டும்தான் நாம் கவனிக்க வேண்டும் என்பதல்ல இதன் பொருள். தேவன் நம்மிடம் இதை மட்டும்தான் எதிர்பார்க்கிறார் என்பதல்ல இதன் பொருள். மாறாக, எல்லாவற்றிற்கும்மேலாக நாம் கர்த்தருடன் நேர்த்தியான உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதே இதன் பொருள். நமக்குத் தலையுடன் இப்படிப்பட்ட உறவு இருந்தால், சரீரத்தின் மற்ற அவயவங்களுடன் நமக்கு நல்ல உறவு இருக்கும். நாம் தலைக்குப் பணிந்தடங்கினால் நமக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கும் இடையே உள்ள எல்லா விஷயங்களையும் எளிதாகத் தீர்த்துவிடலாம். கர்த்தரோடு நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென்றால், சகோதர சகோதரிகளோடும் நமக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.
நம்மால் சரீர வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ முடியுமா முடியாதா என்பது தலையுடன் நமக்கு இருக்கும் உறவைச் சார்ந்திருக்கிறது. மற்ற கிறிஸ்தவர்கள் இணக்கமானவர்களாக இருந்ததால் நாம் கிறிஸ்தவர்களாக மாறவில்லை; ஏதோவொருவகையான கிறிஸ்தவ யுக்தியைக் கையாளுவதில் நாம் கைதேர்ந்தவர்களாகிவிட்டதால் விசுவாசிகள் இந்த முறையில் நாம் வெற்றிபெற்றுவிடவில்லை. நாம் கிறிஸ்துவை அறிந்ததால், கிறிஸ்துவர்களாக மாறினோம். எந்த வழியில் நாம் கிறிஸ்தவர்களாக மறுபடி பிறந்தோமோ, அதே வழியில்தான் நாம் தொடர்ந்து வெற்றிகரமான கிறிஸ்தவர்களாக வாழ்கிறோம். தலையுடன் உறவு கொண்டதன்மூலம் நாம் பிறந்தோம். தலையுடன் நேர்த்தியான உறவைப் பராமரிப்பதன்மூலம் நாம் தொடர்ந்து கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். ஆண்டவராகிய கிறிஸ்துவே இந்தத் தலை.
கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் ஐக்கியம்கொள்ளத் தேவையில்லை என்று நான் கூறுவதாக எண்ணவேண்டாம். இல்லை; விசுவாசிகள் கிறிஸ்துவுடன் கொண்டிருக்கும் உறவே விசுவாசிகளுக்கிடையேயுள்ள ஐக்கியத்திற்கு ஆதாரம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது, அவ்வளவுதான்; நாம் ஒருவரோடொருவர் ஐக்கியம்கொள்ள வேண்டும். ஏனென்றால், என்னில் வாசம்செய்கிற கிறிஸ்துவையும், உங்களில் வாசம்செய்கிற கிறிஸ்துவையும் பிரிக்கமுடியாது. என்னில் வாசம்செய்கிற கிறிஸ்து ஒரு சிறு துண்டு கிறிஸ்து அல்ல. மாறாக, முழுக் கிறிஸ்து. உங்களில் கிறிஸ்து இருக்கிறார், என்னில் கிறிஸ்து இருக்கிறார். இந்தக் கிறிஸ்துதான் நாம் ஐக்கியம்கொள்வதற்கான ஆதாரம். அவரை ஒதுக்கித்தள்ளிவிட்டால் நாம் ஐக்கியம்கொள்வதற்கு வேறு ஒன்றுமே இல்லை.
நாம் பெறுகிற கல்வியும், நாம் வாழ்கிற சுற்றுச்சூழலும், தனித்தனியே நம்மிடம் இருக்கும் இயற்கையான தாலந்தும் வித்தியாசமாக இருந்தாலும்கூட, நம்மெல்லாருக்கும் பொதுவான ஒன்று இன்னும் இருக்கத்தான் செய்கிறது. நம்மெல்லாருக்குள்ளும் கிறிஸ்து வாசம்செய்கிறார் என்பதுதான் அந்தப் பொதுவான ஒன்றாகும். நம்மில் வாசம்செய்கிற கிறிஸ்து ஒரே கிறிஸ்து. எனவே, நாம் ஒருவரோடொருவர் ஐக்கியம்கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட நபரிடம் திறமை இருக்கிறது, நல்ல மனநிலை இருக்கிறது அல்லது அவர் கனிவானவர், பண்பானவர் என்பதால் நீங்கள் அவருடன் ஐக்கியம்கொள்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. மக்களை ஆதாரமாகக்கொண்டுதான் நீங்கள் ஐக்கியம்கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் தலையை உறுதியாகப் பற்றிக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக, உங்கள் ஐக்கியம் அப்சலோம் இஸ்ரயேல் மக்களிடம் கொண்டிருந்த உறவைப்போன்றதாகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட ஐக்கியம் மக்களைத் தாவீதிடமிருந்து பிரித்தது (2 சாமு. 15:1-7). ஒருவன் இப்படி நடந்தால் அவன் தலையை உறுதியாய் பற்றிக்கொள்ளவில்லை என்று பொருள்.
கிறிஸ்தவர்களுக்கிடையே உள்ள ஐக்கியம் கிறிஸ்துவோடு தொடர்புடைய ஐக்கியமாக இருக்க வேண்டும். தலைக்கு வெளியே ஐக்கியம்கொள்வதற்கு நமக்கு எந்த ஆதாரமும் கிடையாது. நாமெல்லாரும் தலையை உறுதியாகப் பற்றிக்கொண்டால் நம் ஐக்கியம் இயல்பானதாகவும், இலாபகரமானதாகவும் இருக்கும். இல்லையென்றால் ஐக்கியம் கெட்டுவிடும்.
கிறிஸ்தவன் என்ற முறையில் நீங்கள் எவ்வளவு தூரத்துக்குப் போவீர்கள்? கர்த்தரை நீங்கள் கடைசிவரைப் பின்பற்றுவீர்களா? ஒருவன் பின்வாங்கிப்போய் விழுந்துவிட்டால் அவனுடனான ஐக்கியம் பாதிக்கப்படாதா? முழு ஐக்கியத்தைப் பராமரிக்க நாமெல்லாரும் நம் வாழ்நாள் முழுவதும் கர்த்தரைப் பின்பற்றவேண்டும். எல்லாரும் தலையை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போது மட்டுமே இது நிறைவேறும்.
கிறிஸ்துவுடனான சேர்க்கைக்கான நிபந்தனைகள்
தலையை உறுதியாகப் பற்றிக்கொள்வதற்கான நிபந்தனைகள் என்ன? ஒரு பக்கம், மாம்சத்தோடும் அதின் ஜென்மசுபாவமான ஜீவனோடும் ஆழமாக இடைப்பட நாம் சிலுவையை அனுமதிக்க வேண்டும். மறுபக்கம், ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது, ஆரோக்கியமான சரீர ஐக்கியத்தை நாம் அனுபவிப்போம். ஜென்மசுபாவமான ஜீவனோடு சிலுவை இடைப்படாவிட்டால் நம்மால் சரீர வாழ்க்கையை வாழ முடியாது.
ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிற ஒரு கூட்டம் மக்களைப்பற்றி திருவெளிப்பாடு பேசுகிறது (வெளி. 14:1-5). ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் நாம் அவரைப் பின்பற்றுகிறோம் என்று நம்மால் சொல்ல முடியுமா? சிலுவையே நாம் ஐக்கியம்கொள்வதற்கான வழி என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அது நம் மாம்சத்தோடு இடைப்படுகிறது. அது நம் சுய-ஜீவனை உடைக்கிறது. எனவே, ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் நாம் அவரைப் பின்பற்றலாம். கர்த்தருக்குமுன்பாக நமக்கு எந்தத் தடங்கலும் இல்லையென்றால், நாம் சபைக்கு எந்தத் தடங்கலும் ஏற்படுத்த மாட்டோம். கர்த்தருடனான நம் உறவு நேர்த்தியாக இருந்தால், சரீரத்தோடும் நம் உறவு நேர்த்தியாக இருக்கும். ஒவ்வோர் அவயவத்திற்கும் தலையுடன் நேரடியான உறவு இருக்கிறது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக, நம் பௌதீக சரீரத்தில், இடது கையில் காயம் ஏற்பட்டால், அதற்கு உதவுவதற்கு தலை வலது கைக்குக் கட்டளை கொடுக்கிறது. வலது கை தானாகவே எந்த அசைவையும் ஏற்படுத்துவதில்லை. கிறிஸ்துவின் சரீரத்திலும் இதுவே உண்மை. சரீரத்தின் அவயவங்களுக்கிடையேயுள்ள உறவு எல்லா நேரமும் தலையின்மூலமாகவே வருகிறது. ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுக்கு உதவச் செல்லும்போது அவன் தலையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால், அவன் கர்த்தர்நிமித்தம் செல்லுகிறான் என்று பொருள். இல்லையென்றால் அவன் வெறுமனே மனுஷீகப்பிரகாரமான நட்பினிமித்தம் செல்லுகிறான் என்று பொருள். தலையை உறுதியாய் பற்றிக்கொண்டால் நாம் யாரோடும் நேரடியான உறவு வைத்துக்கொள்வதிலிருந்து காப்பாற்றப்படுவோம். இதனால், ஒரு சிலரோடு மட்டும் நாம் விஷேசமான உறவு வைத்துக்கொள்ளமாட்டோம். இதற்கு மாறாகச் செய்தால், நாம் பிரிவினையை அல்லது கட்சிமனப்பான்மையை ஏற்படுத்துவோம்.
தேவன் சபையில் பிரிவினையையோ அல்லது கட்சியையோ அனுமதிப்பதில்லை. கட்சி என்றால் என்ன? சில கிறிஸ்தவர்கள் தலையை விட்டுவிட்டு வேறு ஏதோவொரு யுக்தியின்மூலம் தங்களுக்கிடையே நேரடியான உறவை ஏற்படுத்திக்கொள்ளும்போது அங்கு கட்சி உருவாகிறது. அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் ஒரு விசேஷமான உறவு வைத்திருக்கிறார்கள்; ஆனால், இந்த உறவு தலையிலிருந்து பிறக்கவில்லை. இதுதான் கட்சி.
இருப்பினும், கட்சியைவிட சமயக்குழு இன்னும் மோசமானது. சிலர் ஒருவரிடத்தில் ஒருவர் மிக நெருக்கமாக இருக்கிறார்கள். இயற்கையாகவே அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் எளிதில் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். எனவே, அவர்கள் ஒரு சமயக்குழுவைத் தொடங்குகிறார்கள். ஆனால், சகோதர சகோதரிகள் தலையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டால், அவர்களுடைய இருதயங்கள் தலையின் இருதயத்தைப்போல் விசாலமாக இருக்கும். நாம் மெய்யாகவே ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரவேண்டும். இருந்தபோதும், இந்தப் பரஸ்பர அன்புக்கு ஓர் அடித்தளம் உண்டு. இது கிறிஸ்துவின் முழுச் சரீரத்திற்கும் சொந்தம். ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர வேண்டும் என்றால், சரீரத்தில் உள்ள எல்லா அவயங்களிலும் அன்புகூர வேண்டும் என்று பொருள். சரீரத்தின் எல்லைக்குக் குறைவான எதையும் தேவன் அனுமதிப்பதில்லை. தலையை உறுதியாய்ப் பற்றிக்கொள்வதால் மட்டுமே கிறிஸ்தவர்கள் கட்சிகளாகவும், சமயக்குழுக்களாகவும் பிரிந்துபோகாமல், அவர்களால் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர முடியும்.