நாங்கள் நம் பிதாவாகிய தேவனுடைய நித்தியத் திட்டத்தையும், நோக்கத்தையும்பற்றிய நற்செய்தியை அறிவிக்க வாஞ்சிக்கின்றோம். நம் பிதாவானவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இப்பிரபஞ்சத்தில் வெளியரங்கமாக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளார், திட்டமிட்டுள்ளார். இந்த நோக்கத்திற்காகவே, இந்த நோக்கத்தின்படியே, அவருடைய குமாரனுடைய சாயலுக்கு, அதாவது குணத்துக்கு, ஒத்தசாயலாக மாறுவதற்கு அவர் நம்மை அழைத்து, நீதிப்படுத்தியிருக்கிறார்; இப்போது பரிசுத்தமாக்கிகொண்டுமிருக்கிறார். நாம் அவரை அறிய வேண்டும் என்பதற்காகவும், அவருடைய தெய்வீக சுபாவத்தில் பங்குபெற வேண்டும் என்பதற்காகவும் அவர், கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்த மீட்பின் வேலையின்மூலம், தம் தெய்வீக ஜீவனை நமக்குத் தந்திருக்கிறார். தேவன் இந்தக் கிறிஸ்துவை நம்முடைய எல்லாத் தேவைக்கும் போதுமான, விவரிக்கமுடியாத, அற்புதமான ஈவாக, கொடையாக, நமக்குத் தந்திருக்கிறார்.
இன்று கிறிஸ்துவை அவருடைய மைய இடத்திற்கும், முதன்மையான இடத்திற்கும் கொண்டுவருவதற்காகப் பரிசுத்த ஆவியானவர் தேவ மக்களுடைய வாழ்க்கையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் நாம் அவருடைய உயிர்த்தெழுந்த ஜீவனால் வாழுமாறு, சிலுவையின்வழியாக நம்மை உயிர்தெழுதலுக்குள் கொண்டுவருகிறார். இதுவே இந்த நோக்கத்தை அடைவதற்கான வழியாகும்.
இந்த உலகம் கிறிஸ்துவை அறிய வேண்டும் என்பதற்காகவும், அவர்பால் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவும், இறுதியில் ஆட்டுக்குட்டியானவர் பட்ட பாடுகளின் பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த சாட்சியை நிரூபிக்க வேண்டும் என்பது எங்கள் ஆவல்.