By மெர்லின் இராஜேந்திரம்
நாம் நம் வாழ்க்கையில் இதுவரை பல கிறிஸ்துமஸ் செய்திகளைக் கேட்டிருப்போம், பேசியிருப்போம், பார்த்திருப்போம், வாசித்திருப்போம். ஆண்டவராகிய இயேசுவின் பிறப்பு மாஅற்புதம்! அது ஒரு மறைபொருள்! அவர் தேவனை வெளியாக்குவதற்கு, தேவன் எப்படிப்பட்டவர் என்பதைக் காண்பிப்பதற்கு மட்டும் வரவில்லை. பூரணமான மனிதனாக இருப்பதற்கும், மாறுவதற்கும், அவர் வந்தார். ஆதாம் தோற்றுப்போன காரியத்தில் அவர் வெற்றிபெற வேண்டியிருந்தது. அவன் தோற்கடிக்கப்பட்ட காரியத்தில் அவர் வெற்றிவாகை சூடவேண்டியிருந்தது. ஆதாம் ஒருபோதும் வாழாத ஒரு மனிதனை, மனிதத்துவத்தை, மானிடத்தை அவர் முன்வைக்க வேண்டியிருந்தது.
இயேசுவின் பிறப்பைப்பற்றிப் பேசும்போது யோசேப்பு, மரியாள், தேவதூதர்கள், மேய்ப்பர்கள், அகுஸ்துராயன் எனப் பலர் நம் நினைவுக்கு வருவார்கள். லூக்கா நற்செய்தி “முன்னணை” என்ற வார்த்தையைப் பலமுறை குறிப்பிடுகின்றது. ராஜாவாகிய இயேசு ஏன் தொழுவத்தில் பிறக்க வேண்டும், ஏன் முன்னணையில் கிடத்தப்பட வேண்டும் என்ற கேள்வி பலருக்கு எழும். இந்தக் கேள்விக்கு நான் ஐந்து குறிப்புகளை என் பதிலாக முன்வைக்கிறேன்.
ஒன்று, முன்னணை இயேசுவின் முதல் வருகைக்கும், இரண்டாவது வருகைக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்பிக்கிறது. முன்னணை அவர் யூத ராஜ சிங்கமாக இருப்பினும், அவர் உலகத்தின் பாவத்தைச் சுமக்கும் ஆட்டுக்குட்டி என்பதை விளக்குகிறது. இரண்டு, முன்னணை தற்செயல் அல்ல, அது தேவனுடைய நித்தியத் திட்டம். மூன்று முன்னணை இயேசுவே மனுக்குலத்தின் மெய்யான உணவு என்பதைத் தெரிவிக்கிறது. நான்கு, முன்னணை அவருடைய தன்னிகரற்ற, ஒப்பற்ற, ஈடுயிணையற்ற தாழ்மை, எளிமையாகிய இயல்பை அடையாளப்படுத்துகிறது. ஐந்து, முன்னணை பரலோகத்தின் தரமும், அளவும், மதிப்பீடும், பார்வையும் உலகத்தின் தரமும், அளவும், மதிப்பீடும், பார்வையும் முற்றிலும் வித்தியாசமானவை என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆண்டவராகிய இயேசு இந்தப் பூமிக்கு இரண்டுமுறை வருவார் என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. முதல் வருகை, இரண்டாம் வருகை என இரு வருகைகள் உள்ளன. இரண்டாம் வருகையில் இரகசிய வருகை, பகிரங்க வருகை என இரண்டு அம்சங்கள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்குமுன் முதன்முறையாக வந்தார். அவர் முதல் வருகையின்போது இந்தப் பூமிக்கு ராஜாவாக வரவில்லை; மாறாக, ஆட்டுக்குட்டியாக வந்தார். இந்தப் பூமியை ஆள்வதற்கு வரவில்லை; தம்மைப் பலியாக்க வந்தார். இந்தப் பூமியை நியாயந்தீர்க்கும் நீதிபதியாக வரவில்லை; தம்மைப் பலியாக்கும் கிருபாதார பலியாக வந்தார்.
இயேசு தேவ குமாரன், அதாவது தேவன். “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவான் 1:1). அவர் தேவன். ஆனால், அவர் மனித குமாரனாக, அதாவது மனிதனாக, இந்தப் பூமிக்கு வந்தார். ஆதியிலே தேவனோடு, தேவனாக இருந்த “அந்த வார்த்தை மாம்சமானது” (யோவான் 1:14). “பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” (எபி. 2:14).
ஆண்டவராகிய இயேசு ஒருவரே ஒப்பற்ற, தன்னிகரற்ற, ஈடுயிணையற்ற தேவன்-மனிதர். எனினும், “மனித குமாரன்” என்ற பட்டத்தையே அவர் அதிகமாக விரும்பினார்; அந்தப் பெயரே அவருக்கு மிகவும் பிடித்தமான பெயர் என்பதை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். ஏனென்றால், தேவன் மனிதனைப் படைத்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, அவர் இங்கு, இந்தப் பூமியில், வரலாற்றில், காலத்திலும் இடத்திலும், உண்மையான மனிதனாக இருக்க வந்தார் என்ற காரியத்துக்கு “மனித குமாரன்” என்ற பட்டம் வலுவூட்டுகிறது.
வேதாகமத்தில் சில பகுதிகள் விசித்திரமாகத் தோன்றலாம்; அப்படிப்பட்ட பகுதிகளுக்கு இதுவே விளக்கமும், வியாக்கியானமுமாகும். எடுத்துக்காட்டாக, “அவர் மாம்சத்தில் இருந்த நாட்களில்...அவர் குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார்,” என்று எபிரெயரில் வாசிக்கிறோம். “அவர் ஏன் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள வேண்டும்? அவர் ஏற்கெனவே பரிபூரணர்தானே! அப்படியானால் அவர் ஏன் பூரணராக வேண்டும்?” என்று எண்ணத் தோன்றும். “மனித குமாரன்” என்ற பட்டம் இதற்குப் போதுமான விளக்கத்தைத் தருகிறது. தேவ குமாரன் இந்த உலகத்திற்குள் மனித குமாரனாக வந்து, மனிதன் என்ற தளத்திலேயே வாழ்ந்தார்; அவர் தேவன் என்ற தளத்தில் வாழவில்லை. தேவ குமாரன் அடிமையாக, பணிவிடைக்காரனாக, வேலைக்காரனாக, இந்தப் பூமிக்கு வந்தார். “மனித குமாரன் ஊழியங்கொள்ள வராமல் ஊழியஞ்செய்ய வந்தார்.” அவர் தேவ குமாரன்தான். ஆனால், மனித குமாரனாக வந்தார் (மத். 20:28). பரிசுத்தமான தேவன் பாவிகளாகிய சீடர்களின் கால்களைக் கழுவினார். கால்களைக் கழுவுகிறவர் தேவகுமாரனா மனித குமாரனா? ராஜாவா வேலைக்காரனா? எருசலேம் வீதிகளில் கழுதையில் பயணித்தார். இது ராஜாவா, அடிமையா? அவர் ராஜாதி ராஜாதான்; ஆனால், தம் முதல் வருகையில் அவர் ஆள்வதற்கு ராஜாவாக வரவில்லை; மாறாக மரிப்பதற்கு ஆட்டுக்குட்டியாக வந்தார். தம்மைப் பலியாக்கும் பலிகடாவாக வந்தார். ராஜாவை அடிக்கமுடியுமா, காறித்துப்ப முடியுமா, வீதிகளில் இழுத்துச் செல்ல முடியுமா, முள்முடி சூட்டி அழுத்த முடியுமா, ஆணியறைய முடியுமா? அவருடைய முதல் வருகையின்போது அவருக்கு இப்படிச் செய்தார்களே!
இது அன்றும் சரி, இன்றும் சரி யூதர்கள் பார்க்கத் தவறிய, தவறுகிற காரியம். அவர்கள் மேசியாவை, அதாவது கிறிஸ்துவை, எதிர்பார்த்தார்கள். தங்களை ரோம இராயனின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இரட்சித்து, ஆளப்போகும் தாவீதின் குமாரனை எதிர்பார்த்தார்கள். தங்களுக்காக யுத்தம் செய்யும் யுத்தவீரனை எதிர்பார்த்தார்கள். அவர்கள் குதிரையில் வரப்போகிற ராஜாவை எதிர்பார்த்தார்கள். அவர் வந்தார். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததுபோல் வரவில்லை. அவர்களுடைய எண்ணத்தில் கல்வாரிச் சிலுவைக்கு இடமே இல்லை. அவர்கள் இயேசுவை மேசியா என்று ஏற்றுக்கொள்ளாததற்கு இது ஒரு முக்கியமான காரணம். மீட்பின் திட்டம் அவர்களுக்கு மறைபொருளாகவே இருந்தது. அவருடைய முதல் வருகையில் அவர் ஆட்டுக்குட்டியாக வந்தார். இரண்டாவது வருகையில் அவர் ராஜாவாக வருவார், யுத்தம்செய்ய வருவார், நியாயந்தீர்க்க வருவார்.
இன்று தேவனுடைய மீட்பின் திட்டம் நமக்குத் தெளிவாகத் தெரியும். இயேசு “உலகத் தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி” (வெளி. 13:8). அவர் பஸ்கா ஆட்டுக்குட்டி. இயேசு யோர்தான் கரையோரம் நடந்துபோகும்போது யோவான் ஸ்நானன் முதன்முதலாக அவரை இந்த உலகத்துக்கு, “இதோ! உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29). என்று அறிமுகம்செய்கிறார். ஆட்டுக்குட்டி ஆட்டுத் தொழுவத்தில் பிறக்காமல் மன்னர்கள் வாழும் அரண்மனையிலா பிறக்கும்? இது தேவனுடைய நித்தியத் திட்டம். இது தற்செயலாக நடந்ததல்ல. முன்னணை தேவனுடைய நித்தியத் திட்டம்.
ஆண்டவராகிய இயேசு பெத்லகேமில் பிறப்பார் என்பதை அவர் பிறப்பதற்கு ஏறக்குறைய 700, 800 ஆண்டுகளுக்குமுன் “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரயேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது” (மீகா 5:2) என்று மீகா தீர்க்கதரிசனமாக உரைத்திருந்தார். இயேசு எப்போது பிறக்க வேண்டும், எங்கு பிறக்க வேண்டும், எப்படிப் பிறக்க வேண்டும் என்பதைத் தேவன் உலகத்தைப் படைப்பதற்குமுன்னே தீர்மானித்திருந்தார். “தேவனுக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு உலகத்தோற்றத்திற்குமுன்பே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார்” (எபே. 1:4). இயேசு உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி. நாம் உலகத்தோற்றத்திற்குமுன்பே கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். உலகத்தைப் படைப்பதற்குமுன்பே இயேசுவின் சிலுவை மரணத்தைத் திட்டமிட்ட தேவன் அவருடைய பிறப்பைத் திட்டமிடாமல் இருந்திருப்பாரா?
இயேசு பெத்லகேமில் பிறப்பதைத் தீர்மானித்தபிறகு, தேவன் பெத்லகேம் ஊரிலேயே தாவீதின் வம்சத்தைச் சேர்ந்த ஒரு நீதிமானையும், ஒரு கன்னிகையையும் தெரிந்தெடுத்திருக்க முடியாதா? அது அவருக்குக் கடினமா? இல்லையே! அவர் நாசரேத்தில் வாழ்ந்த யோசேப்பையும் மரியாளையும் ஏன் தெரிந்தெடுக்க வேண்டும்? பெத்லகேமுக்கு வருவதற்குமுன்பே மரியாள் ஏன் கர்ப்பவதியாக வேண்டும்? அவர்களைப் பெத்லகேமுக்குக் கூட்டிவர அவருக்கு வேறு வழியில்லையா? ஓர் உறவினர் வீட்டில் ஒரு குடும்ப விழா ஏற்பாடு செய்திருக்கலாம். அந்த விழாவுக்கு யோசேப்பையும், மரியாளையும் அழைத்திருந்தால் அவர்கள் கணக்கெடுப்பதற்கு முன்னரே பெத்லகேமுக்கு வந்திருப்பார்கள். யோசேப்பையும், மரியாளையும் தங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்களுடைய உறவினர்களோடு தேவன் கனவில் பேசியிருக்கலாம்; ஒரு தூதனை அனுப்பியிருக்கலாம். ஓர் உறவினர் வீட்டில் தங்க ஏற்பாடு செய்திருக்கலாம். தேவன் அப்படிச் செய்யவில்லை.
அப்போதைய மிக உயர்ந்த அதிகாரம் படைத்த ரோம இராயனின் ஆணையின்படி யோசேப்பும் மரியாளும் பெத்லகேமுக்கு வருகிறார்கள். அந்த இராயன் மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஆணையைக் கொஞ்சம் முந்தியோ அல்லது பிந்தியோ வெளியிட்டிருக்கக்கூடாதா? மேலோட்டமாகப் பார்த்தால் அது மக்கள் தொகை கணக்கெடுப்பு. ஆனால், இது தேவனுடைய இறையாண்மை.
யோசேப்பையும் மரியாளையும் பெத்லகேமுக்குக் கொண்டுவருவதற்காக இராயனை ஏவி மக்கள்தொகை கணக்கெடுக்க ஆணை பிறப்பிக்க முடிந்த தேவனால் அவர்களுக்குச் சத்திரத்தில் இடம் ஏற்பாடுசெய்யத் தெரியாதா அல்லது முடியாதா? மக்கள் தொகை கணக்கெடுக்க ஆணை பிறப்பிக்க ஓர் இராயனை ஏவுவதைவிட சத்திரக்காரனை ஏவுவதும், ஓர் இடத்தை ஆயத்தம்பண்ணுவதும் கடினமா? ஓர் இடத்தையும், ஒரு படுக்கையையும் ஆயத்தம்செய்வது எளிதோ எளிது. முன்னணை தேவன் ஆயத்தம்பண்ணின படுக்கை.
முன்னணை அந்த இரவில் வயல்வெளிகளில் தங்கி, தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளம். *“பிள்ளையைத் துணிகளில் சுற்றி முன்னணையில் கிடத்தியிருப்பார்கள்” *(லூக். 2:12) என்று தேவதூதன் அவர்களிடம் சொன்னார் எல்லாக் குழந்தைகளையும் துணிகளில்தான் சுற்றியிருப்பார்கள். எனவே, துணி அடையாளமாக இருக்க முடியாது. ஆனால், முன்னணை பிரத்தியேகமான அடையாளம். பிறந்திருக்கிறவர் கர்த்தர், கிறிஸ்து, இரட்சகர். - ஆம், எல்லா எதிரிகளிடமிருந்து இரட்சிக்கிறவர். கிறிஸ்து-மேசியா, ஆம், தேவனுடைய எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்போகிறவர். கர்த்தர்- ஆம், எல்லாரையும் ஆளப்போகிறவர். இந்த உலகத்தில் எந்த அரசனும் முன்னணையில் படுத்ததில்லை. ஆண்டவராகிய இயேசுவின் முதல் படுக்கை அலங்காரமான அரண்மனையின் தங்கத் தொட்டில் அல்ல, முன்னணை. இதுவே ஆட்டுக்குட்டியின் படுக்கை. இது தேவனுடைய நித்தியத் திட்டம்.
ஆடு, மாடு, கழுதை, குதிரைகளுக்குத் தீனி வைக்கும் இடம்தான் முன்னணை. மிருகங்கள் பசித்தபோது உணவுக்காக முன்னணைக்குச் செல்லும். அங்குதான் அவர்களுக்குத் தேவையான உணவு இருக்கும்.
அதுபோல, முன்னணை இந்த மனுக்குலம் வாழ்வதற்குத் தேவையான மெய்யான அப்பம் இவரே என்பதின் அடையாளமாக இருக்கலாம். மனிதன் தவறான, கேடான, தேவையற்ற தீனிகளைத் தின்று உடலில் பலவிதமான நோய்களினால் அவதிப்பட்டு, அகால மரணம் அடைகிறான். மனுக்குலத்தின் நலத்துக்காகவும், நல்வாழ்வுக்காகவும் தேவன் தம்மையே மெய்யான உணவாக வழங்குகிறார். அவரைத்தவிர மற்றவையெல்லாம் “பொய்யான அப்பமே.” மனிதன் எதை மெய்யான அப்பம் என்று நினைக்கிறானோ அது மெய்யான அப்பம் அல்ல. ஆண்டவராகிய இயேசுவே மெய்யான அப்பம். மனுக்குலத்துக்குத் தேவையான மெய்யான உணவு இதோ முன்னணையில் இருக்கிறார். “ஜீவ அப்பம் நானே” என்றும், “நான் வானத்திலிருந்து வந்த அப்பம்” என்றும் “நான் வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்” என்றும், “வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே” என்றும் இயேசு சொன்னாரே! பெத்லகேம் என்றால் அப்பத்தின் வீடு என்று பொருள். இந்த உணவை ஒவ்வொரு நாளும் முறையாகச் சாப்பிட்டால் சபைகளில் சிக்கல்களும் குழப்பங்களும் அரிதாகிவிடும்; ஒழுக்கக்கேடு அடியோடு அழிந்துவிடும்; உட்பூசல் உடைந்துவிடும்; புறங்கூறுதல் புறமுதுகு காட்டி ஓடிவிடும்; குடும்பத்தில் வீட்டில் சமுதாயத்தில் சபையில் சமாதானம் கரைபுரண்டோடும்; அவர்கள் தேவனால் வாழ்கிற மக்களாக இருப்பதால் தேவன் தங்கும் இல்லமாகிவிடுவார்கள். மனுக்குலத்துக்கு இந்த மெய்யான அப்பம் போதும். ஆனால், மனிதன் இதில் திருப்தியாவதில்லை.
முன்னணை, அவருடைய அடக்கத்துக்கும்கூட ஓர் அடையாளமாக இருக்கலாமோ! இது என் பரிசுத்த கற்பனை. மரியாள் “பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்” (லூக். 2:7) என்பதை வாசிக்கும்போது, நிக்கொதேமும் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும் இயேசுவைச் சிலுவையிலிருந்து இறக்கித் “துணிகளால் சுற்றி, கல்லறையில் வைத்தார்கள்” என்ற வார்த்தைகள் என் நினைவுக்கு வருகின்றன. பிறக்கும்போது அவரருகே யோசேப்பும் மரியாளும் இருக்கிறார்கள். அடக்கம்பண்ணும்போது நிக்கோதேமும் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும் இருக்கிறார்கள். பிறந்தபோதும் துணிகளில் சுற்றினார்கள். இறந்தபோதும் துணிகளால் சுற்றினார்கள். பிறந்தபோது முன்னணையில் கிடத்தினார்கள். இறந்தபோது கல்லறையில் வைத்தார்கள். என்னே மேன்மை!
தேவ குமாரன் கிடத்தப்பட்ட முதல் இடம் முன்னணை, அது அவருக்குச் சொந்தமானதல்ல. அவர் கடைசியாக அடக்கம்பண்ணப்பட்ட இடம், கல்லறை, அதுவும் அவருக்குச் சொந்தமானதல்ல. இந்த உலகத்தில் ஒரு கழுதைகூட அவருக்குச் சொந்தம் இல்லை. சீடர்களோடு வருடாவருடம் பஸ்கா விருந்து உண்ட வீடு அவருக்குச் சொந்தம்; இல்லை. அவ்வப்போது கலிலேயாக் கடலில் பயணிக்கப் பயன்படுத்திய படகு அவருக்குச் சொந்தம் இல்லை.
தம்மைப் பின்பற்ற விரும்பின ஒருவனிடம், “நரிகளுக்குக் குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மனித குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” (மத். 8:20) என்றார். “நிலம் வேண்டும், வீடு வேண்டும், சொத்து வேண்டும்,” என்று துடியாய்த் துடிக்கும் கிறிஸ்தவர்கள் கண்ணில் இந்த வசனம் படட்டும். “இயேசுவைப் பின்பற்றினால் என்ன கிடைக்கும்?” என்ற எதிர்பார்ப்போடு அவரைத் தேடுகிறவர்கள் கண்ணில் இந்த வசனம் படட்டும். மனித குமாரனுக்கோ தலைசாய்க்க இடம் இல்லை என்பதை “மனித குமாரனுக்கோ தலைசாய்க்க ஏற்ற இடம் இல்லை, பொருத்தமான இடம் இல்லை, தகுதியான இடம் இல்லை” என்று சொல்வது சரியாக இருக்கும். அவர் தலைசாய்க்கத் தெரிந்துகொண்ட இடம் முன்னணை. என்னே தாழ்மை! என்னே எளிமை!
பெருவெள்ளத்திற்குப்பின் வெள்ளம் வடிந்துவிட்டதா என்று பார்க்க நோவா அனுப்பின “புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையில் நோவாவிடமே வந்தது” (ஆதி. 8:9). இவ்வளவு பெரிய உலகத்தில் ஒரு புறா தன் உள்ளங்கால் வைக்க ஓர் இடம் கிடைக்கவில்லையாம். ஆம், தன் உள்ளங்காலை வைப்பதற்கு ஏற்ற இடம் கிடைக்கவில்லை, பொருத்தமான இடம் கிடைக்கவில்லை, சரியான இடம் கிடைக்கவில்லை, தகுதியான இடம் கிடைக்கவில்லை. ஒரு புறாவே தன் கால் வைத்து இளைப்பாற இடம் கிடைக்காமல் பேழைக்குத் திரும்புகிறதென்றால், இயேசு தலைசாய்க்த்தக்க இடம் எங்கே இருக்கிறது? அவர் பிறப்பதற்கு ஏற்ற, பொருத்தமான, தகுதியான, சரியான இடம் எங்கு இருக்கிறது?
“சத்திரத்தில் அவர்களுக்கு இடம் இல்லை” (லூக். 2:7). ஆம், சத்திரம் அவரை ஏற்றுக்கொள்வதற்குப் பொருத்தமான, சரியான, தகுதியான, ஏற்ற இடம் இல்லை. “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவான் 1:11). ஆம், அவருக்குச் சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்வதற்குப் பொருத்தமானவர்கள் இல்லை, தகுதியானவர்கள் இல்லை, சரியானவர்கள் இல்லை, ஏற்றவர்கள் இல்லை. அவர் பிறப்பதற்குத் தகுதியான இடம், பொருத்தமான இடம், சரியான இடம், ஏற்ற இடம் இந்தப் பூமியில் உண்டா?
ஒரு நூற்றுக்கு அதிபதி ஒருநாள் இயேசுவிடம் வந்து, “என் வேலைக்காரன் வேதனைப்படுகிறான்,” என்று தகவல் சொன்னான். இயேசு, “நான் வந்து அவனைக் குணமாக்குகிறேன்,” என்றார். உடனே அவன் பதறிப்போய், “ஆண்டவரே, நீர் என் வீட்டுக்கு வர நான் பாத்திரன் அல்ல,” என்று கதறினான்.
ஆண்டவராகிய இயேசு, “நான் சாந்தமும், மனத்தாழ்மையுமாயிருக்கிறேன். என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்,” என்றார்.
அவர் ஊருக்கு வெளியே மனிதர்களால் ஒதுக்கப்பட்ட இடத்தில் பிறந்தார்; ஊருக்கு வெளியே கொடிய குற்றவாளியைப்போல் மரித்தார். “நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.” அவருடைய ஒரே சொந்தம் சிலுவை மட்டுமே. “ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்.” (எபி. 12,13).
“அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி. 2:5-8). முன்னணையில் ஆரம்பித்து கல்வாரிச் சிலுவைவரை அவருடைய வாழ்க்கை தாழ்ந்து தாழ்ந்து சென்றது. மனிதன் தன் வாழ்க்கையில் ஏறிப்போவான், முன்னேறிப்போவான். ஆனால், இயேசு மேலிருந்து கீழே இறங்கி, இன்னும் இறங்கி, மேலும் இறங்கி, மேலும் மேலும் இறங்கி வந்தார். பிலிப்பியர் 2:6-8 இதன் விளக்கம். முன்னணையில் தாழ்ந்தவர் சிலுவைவரை தாழ்ந்தார். இரட்சகர் இப்படித்தான் எல்லா எதிரிகளிடமிருந்து இரட்சிக்கிறார். மேசியா இப்படித்தான் தேவனுடைய எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகிறார். கர்த்தர் இப்படித்தான் ஆளுகைசெய்கிறார்.
அவரை முதன்முதலாக வந்து பார்த்தவர்கள் சாதாரணமான மேய்ப்பர்கள். இளவரசர்களும், மகாராணிகளும் அல்ல.
பரத்திலிருந்து பூமிக்கு வந்தவர். விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தவர். உயரத்திலிருந்து தாழ்வுக்கு வந்தவர். என்னே தேவன்! என்னே மாதாழ்மை!
இது தாழ்மையின் பாதை, கடினமான பாதை, இதுவே அவருடைய அரசின் பாதை.
கிறிஸ்துவுக்குரியவை ஆவிக்குரியவை, பரத்துக்குரியவை, உன்னதத்துக்குரியவை. அவருக்குரியவை பூமிக்குரியவையோ, இயற்கையானவையோ அல்ல. மனிதர்கள் அவரைப் பூமிக்குரியவராகப் பார்த்ததால், “இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகள் எல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா?” (மத். 13:55, 56) என்று அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று நாத்தான்வேல் சொல்லவில்லையா? மனிதர்கள் அவரை இயற்கையான தளத்தில் பார்த்தார்கள். எனவே, அவர்களால் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
அழகு, அறிவு, அந்தஸ்து, ஆஸ்தி, பணம், பதவி, பட்டம், பொருள், பொன், பகட்டு, வீடு, நிலம், சொத்து, சம்பத்து, இனம், மொழி, குலம், கோத்திரம், ஜாதி, சாதனை, வெற்றி, நாடு, நிறம் போன்றவைகளை உலகம் மதிக்கிறது, உயர்வாகக் கருதுகிறது. இவைகள் இல்லாதவர்களை உலகம் மிதிக்கிறது, துச்சமாகக் கருதுகிறது.
சாமுவேல் தீர்க்கதரிசி ஈசாயின் பிள்ளைகளின் புறத்தோற்றத்தைப் பார்த்து முடிவுசெய்யவிருந்தபோது, “நீ இவர்களுடைய முகத்தையும் இவர்களுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்க வேண்டாம்...மனிதன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனிதன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்,” (1 சாமு. 16:7) என்று தேவன் சொன்னார். தேவன் மனிதர்களுடைய புற அழகையோ, புறத்தோற்றத்தையோ ஒரு பொருட்டாகக் கருதுவதேயில்லை.
பவுல் நம் அழைப்பைப்பற்றிப் பேசும்போது, “நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள். மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை. வல்லவர்கள் அநேகரில்லை. பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்,” (1 கொரி. 1:26-29) என்று சொல்லுகிறார். இந்தப் பட்டியலில் உலகம் மதிக்கிற ஏதாவது இருக்கிறதா? தேவன் யாரை, எதை மதிக்கிறார் என்று பவுல் மிக ஆணித்தரமாகக் கூறுகிறார்.
பொன்னாபரணங்களையும், உயர்ந்த ஆடைகளையும் உலகம் மதிக்கும், போற்றும், பாராட்டும். ஆனால், “அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே...தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது,” (1 பேதுரு 3:3-4) என்று பேதுரு சொல்லுகிற இந்த அலங்காரத்தை உலகம் மதிக்குமா?
யாரெல்லாம் பாக்கியவான்கள் என்று ஆண்டவராகிய இயேசு ஒரு நீண்ட பட்டியல் தருகிறார். அவர் சொல்லுகிற பாக்கியவான்களை இந்த உலகம் பைத்தியக்காரர்கள் என்று துணிந்து சொல்லும். துயரப்படுகிறவர்கள், சாந்தகுணமுள்ளவர்கள், இரக்கமுடையவர்கள், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள், துன்பப்படுகிறவர்கள், தரித்திரர்கள், பசியாயிருக்கிறவர்கள், அழுகிறவர்கள், அவர்நிமித்தம் நிந்திக்கப்படுகிறவர்கள், பகைக்கப்படுகிறவர்கள், தூஷிக்கப்படுகிறவர்கள், தள்ளிவிடப்படுகிறவர்கள். இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
பவுல் தன் ஊழியத்தைப்பற்றிப் பேசும்போது, “இந்த உலகம் எங்களுக்குத் தருவது கனவீனம், துர்க்கீர்த்தி, எத்தன் என்ற பட்டம். ஆனால், பரலோகம் எங்களுக்குத் தருவது கனம், நற்கீர்த்தி, நிஜஸ்தர் என்ற நற்சான்று” என்றும், உலகத்தைப்பொறுத்தவரை “நாங்கள் அறியப்படாதவர்கள், சாகிறவர்கள், தண்டிக்கப்படுகிறவர்கள், துக்கப்படுகிறவர்கள், தரித்திரர்கள், ஒன்றும் இல்லாதவர்கள். ஆனால், தேவனைப்பொறுத்தவரை நாங்கள் நன்றாய் அறியப்பட்டவர்கள், எப்போதும் உயிரோடு இருக்கிறவர்கள், கொல்லப்படாதவர்கள், எப்போதும் சந்தோஷமாயிருக்கிறவர்கள், அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்கள், சகலத்தையும் உடையவர்கள்,” (2 கொரி. 6:7-10) என்று சொல்லுகிறார். சுருக்கமாகச் சொல்வதானால், “அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையுண்டிருக்கிறது. நானும் உலகத்திற்குச் சிலுவையில் அறையுண்டிருக்கிறேன்” (கலா. 56:14). உலகத்தின் தரமும், அளவும், மதிப்பீடும் வேறு, பரலோகத்;தின் தரமும், அளவும், மதிப்பீடும் வேறு.
“பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம்...பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்” (மத். 6:19-20) என்று சொல்லும் இயேசுவின் தரத்தை உலகம் ஏற்றுக்கொள்ளுமா? பரலோகத்தின் பார்வை உலகத்தின் பார்வையிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. இரண்டும் ஒன்றையொன்று சந்திப்பதற்கு வாய்ப்பே இல்லை. இரண்டு பார்வைகளும் முற்றிலும் வேறுபட்டவை.
இதுபோல, ராஜாதி ராஜாவுக்குச் சத்திரத்தில் இடம் இல்லையா? பிறப்பு தொழுவத்திலா? படுக்கை முன்னணையா? உதவ ஆள் இல்லையா? என்ற கேள்விகள் பொருளற்றவை. அவருடைய பிறப்புமுதல் இறப்புவரை அவரிடம் இயற்கையாக குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் எதுவும் இல்லை. அவரிடம் எல்லாம் இயற்கைக்கு முரணாகவே இருந்தது. தேவன் அவரை அந்த மட்டத்தில்தான் வைத்திருந்தார். எனவே, “அவர் அன்றைக்கு யூதர்களுக்கு இடறலாகவும் கிரேக்கர்களுக்குப் பைத்தியமாகவும் இருந்தார்” (1 கொரி. 1:23). இன்றைக்கும் நிலைமை மாறிவிடவில்லை. இயற்கையாக அவரிடம் மகத்தானது ஒன்றும் இல்லை. ஆனால், அவர் விசுவாசிக்கிறவர்களுக்குத் தேவ பெலனும் தேவ ஞானமுமாயிருக்கிறார். மறைவான ஞானம். உலகத்தின் ஞானம் இல்லை. இந்தப் பிரபஞ்சத்தின் பிரபுக்களின் ஞானம் இல்லை.
கிறிஸ்துவின் ஆவிக்குரிய மதிப்பை நாம் இனங்காணவேண்டும். அவருடைய மனித மாம்சமாகுதல், அவருடைய மனித வாழ்க்கை ஆகியவைகளை நாம் இனங்காண வேண்டும்.
மக்கள் அவரை ராஜாவாக்க முயன்றபோது அவர் அதில் மயங்கி அதை வரவேற்கவில்லை. அவர் அவர்களைவிட்டு விலகிப்போய்விட்டார் (யோவான் 6:15). மக்கள் அவர்மேல் கல்லெறிய முயன்றபோதும் அவர் அவர்களைவிட்டு விலகிப்போய்விட்டார் (யோவான் 8:59). அவரைப்பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான். மக்கள், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் உன்னதத்தில் ஓசன்னா!” (மத். 21:9) என்று ஆர்ப்பரித்தபோதும், அதே மக்கள், “அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்,” (லூக். 23:21) என்று கூக்குரலிட்டபோதும் அவரைப்பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான். மக்கள் அவரைப் பின்பற்றியதும், அவரைப் பின்பற்றிய அதே மக்கள் அவரைவிட்டுப் போனதும் அவரைப்பொறுத்தவரை ஒன்றுதான். மக்கள் “உம்மைப் பின்பற்றுவோம்,” என்று அறிக்கைசெய்யும்போது அவர் மயங்குவதும் இல்லை. அதே மக்கள் அவரைவிட்டுப் போகும்போது அவர் மருள்வதும் இல்லை. அவரைப்பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான். ராஜாதி ராஜா குதிரையில் சவாரி செய்ய வேண்டும். ஆனால், அவர் கழுதையில் சவாரி போனார்.
அவருடைய போக்கு இந்த உலகத்தின் போக்குக்கு முற்றிலும் முரணானது. “நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க என்ன செய்ய வேண்டும்?” என்று ஒரு வாலிபன் கேட்டால் நாம் அந்த வாலிபனை விடுவோமா? தேவனைத் தேடும் வாலிபன் என்று அவனை வாரி அணைத்துக்கொள்வோம். ஆனால், இயேசுவின் பதிலைக் கேட்ட வாலிபன் வருத்தத்தோடு போய்விட்டான். ஊக்கத்தோடு வந்தவன் எதிர்த்தும் பேசாமல், பதிலும் சொல்லாமல் துக்கத்தோடு திரும்பிப்போய்விட்டான். முழங்கால்படியிட்டு மன்றாடியவன் முகத்தைத் திருப்பிக்கொண்டுபோய்விட்டான். இயேசு அவன்பின்னால்; ஓடவில்லை, கீழ்ப்படியுமாறு கட்டாயப்படுத்தவில்லை. தம்மை ஏற்றுக்கொள்ளுமாறு தம் தரத்தைத் தாழ்த்தவில்லை. இயேசு அவனைப் போகவிட்டுவிட்டார்.
அவருடைய சீடர்கள் பலர் அவருடனே நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். அப்போது அவர் பன்னிருவரையும் நோக்கி, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?” (யோவான் 6:66, 67) என்று கேட்டார். சில விசுவாசிகள் சபையைவிட்டுப் போய்விட்டால், மீதியிருக்கிறவர்களிடம், நாம் இப்படிக் கேட்போமா? “நீங்களாவது போய்விடாதீர்கள்,” என்றுதானே சொல்லியிருப்போம். அவருடைய போக்கு உலகத்தின் போக்குக்கு முற்றிலும் மாறுபட்டது.
அவர் தம் பாடுகளையும், மரணத்தையும்பற்றி அடிக்கடி பேசியபோது, பேதுரு ஒருநாள் அவரைத் தனியே அழைத்துக்கொண்டு போய், “ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாது” என்று சொன்னார். ஒரு விசுவாசி இன்னொரு விசுவாசியிடம் அல்லது பாஸ்டரிடம், “பிரதர், உங்களுக்கு இது நடக்கக்கூடாது” என்று சொன்னால் நாம் அதைத் தவறாகக் கருதுவோமா? இல்லை. நம்மேல் எவ்வளவு அக்கறையும், கரிசனையும் உள்ளவர் என்றுதானே நினைப்போம். ஆனால், இயேசுவின் பதில் என்ன? “எனக்குப் பின்னாகப் போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்,” என்று சொன்னாரே! இயேசு இப்படிச் சொல்லியிருக்க வேண்டாம் என்று நாம் நினைத்ததுண்டே! கெத்செமனே தோட்டத்தில் ரோமப் போர்வீரர்கள் இயேசுவைப் பிடிக்க வந்தபோது இதே பேதுரு தன் வாளால் ஒரு போர்வீரனை வெட்டினான். நாம் அந்த இடத்தில் இருந்தால் அவனுடைய செயலைப் பாராட்டியிருப்போம். “எனக்கு ஒரு துன்பம் வருவதைப் பார்த்தவுடன், எனக்காக எதையும் செய்யத் துணிந்த என் சீடன்,” என்று அவனைப் பாராட்டியிருப்போம். ஆண்டவரின் பதில் என்னவென்று நமக்குத் தெரியும். இது உலகத்தின் பார்வையா அல்லது பரலோகத்தின் பார்வையா? தம்மைத் தேடி வந்த மக்களிடம், “நீங்கள் என்னை எனக்காகத் தேடவில்லை. நான் கொடுத்த உணவுக்காகவும், நான் செய்த அற்புதங்களுக்காகவுமே தேடுகிறீர்கள்,” என்று சொன்னார். நாம் ஆள் சேர்க்கிறவர்கள். நாம் இப்படியெல்லாம் பதில் சொல்பவர்கள் அல்ல.
விபசாரத்தில் கையும்களவுமாய்ப் பிடிக்கப்பட்ட பெண்ணுக்கு அவர் சொன்ன பதில் என்ன? முதலாவது நாம் இப்படிப்பட்ட ஒரு பெண்ணைச் சந்திக்க சம்மதிப்போமா? அவளோடு உரையாடுவோமா? சமாரியப் பெண்ணோடு அவர் உரையாடியதுபோல் நாம் உரையாடுவோமா? இவைகளெல்லாம் உலகத்தின் பார்வை அல்ல.
நாட்டைக்குறித்து மனிதன் பெருமைப்படுகிறான். ஆனால், நம் குடியுரிமை பரலோகத்தில் இருக்கிறது (பிலி. 3:20) என்று வேதம் சொல்லவில்லையா? பரலோகமே நம் சொந்த நாடு. நாம் தேவன்தாமே கட்டியுண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்காகக் காத்திருக்கிறோம். அந்த நகரத்தைத் தூரத்தில் காண்கிறோம், அதைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியில் தங்களை அந்நியரும் பரதேசிகளுமாக அறிக்கையிட்டு விசுவாசத்தோடு பரிசுத்தவான்கள் மரித்தார்களே! இது உலகத்தின் பார்வையா அல்லது பரலோகத்தின் பார்வையா? இது உலகத்தின் தரமா அல்லது பரலோகத்தின் தரமா? சொந்த நாட்டுக்குப் போவதாக அறிக்கைசெய்தார்களே. மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்களே! அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும், தேவமக்களோடு துன்பத்தை அநுபவிப்பதைத் தெரிந்தெடுத்தார்களே! இனிவரும் பெலன்மேல் நோக்கமாயிருந்தார்களே! வாதிக்கப்பட்டார்கள்; நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், காவலையும் அநுபவித்தார்கள். கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினால் வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத்தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு திரிந்தார்கள், குறைவையும் துன்பத்தையும் உபத்திரவத்தையும் அநுபவித்தார்கள். வனாந்தரங்களிலும் மலைகளிலும் குகைகளிலும் பூமியின் வெடிப்புகளிலும் சிதறுண்டு அலைந்தார்கள். உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை.
ஆம், அவர்களுக்கு இவைகள் ஒரு பொருட்டேயல்ல. இந்த உலகம் அவர்களுக்கு ஏற்றதல்ல.
இயேசு ராஜாதான். ராஜா என்றால் அரண்மனையில்தானே பிறக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அவர் இந்த உலகத்தின் ராஜா இல்லை. “என் ராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல” என்று அவர் தீர்க்கமாகச் சொன்னார் (யோவான் 18:36).
உலகம் அவருக்குப் பாத்திரமாயிருக்கவில்லை. இயேசுவின் மகிமை, மகத்துவம், வல்லமை, மேன்மை, கனம், துதி, அதிகாரம் வேறு. உலகம் உயர்வாகக் கருதும் அழகு, அறிவு, அந்தஸ்து, ஆஸ்தி, பணம், பதவி, பட்டம், இனம், மொழி, நிறம், நாடு, குலம், கோத்திரம், வீடு, சொத்துபோன்றவை தேவனுக்கோ தேவ மக்களுக்கோ எதையும் கூட்டப்போவதில்லை. அவைகள் இல்லாததால் அவர்களுக்கு எதுவும் குறையப்போவதுமில்லை.
அவர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்.
அவருடைய பிறப்பு, வாழ்க்கை, பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல், சிங்காசனத்திலமர்தல், எல்லாம் மகத்துவமே!
ஒன்று, அவருக்கு அரண்மனையும் ஒன்றுதான், தொழுவமும் ஒன்றுதான். தொட்டிலும் ஒன்றுதான் முன்னணையும் ஒன்றுதான்.
இரண்டாவது, அவர் பிறப்பதற்கு ஏற்ற, பொருத்தமான, தகுதியான, சரியான இடம் இந்தப் பூமியில் இல்லை. சாலொமோன் தேவனுக்கு ஒரு பிரமாண்டமான ஆலயத்தைக் கட்டிமுடித்து ஜெபித்தபோது, “தேவன் மெய்யாக பூமியில் வாசம்பண்ணுவாரோ! இதோ! வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே. நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்” என்று சொல்லி ஜெபித்தான். அதுபோல, தேவன் இந்தப் பூமியில் பிறப்பதற்கு ஏற்ற இடம் எது? அரண்மனை எம்மாத்திரம்?
தொழுவத்தில் பிறந்து, முன்னணையில் கிடத்தப்பட்ட இயேசுவே நம் கர்த்தர், கிறிஸ்து, இரட்சகர். அல்லேலூயா!