Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

கிறிஸ்துவே மெய்

By மெர்லின் இராஜேந்திரம்

"நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல் கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்...கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர்கிறேன்," (பிலி. 3:12, 14).

"ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது" (கொலோசெயர் 2:16, 17).

இயேசு கிறிஸ்துவே

"மெய்யான ஒளி" (யோவான் 1:19) "மெய்யான சாட்சி" (யோவான் 5:32) "மெய்யான தீர்க்கதரிசி" (யோவான் 6:14) "மெய்யான அப்பம்" (யோவான் 6:32) "மெய்யான போஜனம்", " மெய்யான பானம்" (யோவான் 6:55) "மெய்யான திராட்சச்செடி" (யோவான் 15:1) "மெய்யான வாசல்" (யோவான் 10:7) "மெய்த்தேவன்" (யோவான் 17:3) "மெய்யான கூடாரம்" (எபிரேயர் 8:2) "மெய்யான தேவனும் நித்தியஜீவனும்" (1 யோவான் 5:20)

1. கிறிஸ்துவா, மதமா?

கிறிஸ்தவர்களாகிய நாம் மதவாதிகளாக மாறிவிட்டோம். இது துக்ககரமான காரியம். 'கிறிஸ்தவம்' என்ற ஒரு மதத்தை, மதஅமைப்பை, உருவாக்கி நாம் அவரை அந்த மதத்துக்குள் அடக்கப்பார்க்கிறோம். இதில் நாம் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டோம் என்பது அதைவிட வேதனையான காரியம். ஏனென்றால், கிறிஸ்து 'கிறிஸ்தவம்' என்ற மதத்துக்குள்தான் இருக்கிறார், அதற்கு வெளியே அவர் இல்லை என்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். ஒருவன் கிறிஸ்துவைச் சந்திக்க வேண்டுமானால், அவன் கிறிஸ்தவம் என்ற மதஅமைப்புக்குள் வரவேண்டும் என்ற ஒரு கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். ஒரு பிறவிக் குருடன் இருந்தான். அவன், இயேசு சொன்னபடி, சீலோவாம் குளத்தில் போய்க் கழுவினான். கழுவியபின் பார்வை பெற்றான். அதன்பின் அவனுக்கும், மதவாதிகளாகிய பரிசேயர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால், அவர்கள் அவனை ஜெப ஆலயத்தை விட்டு வெளியே தள்ளினார்கள். "அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள். அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டார்," ஜெப ஆலயத்தை விட்டு வெளியே தள்ளியபின், இயேசு அவனைச் சந்தித்தார் (யோவான் 9). மதத்துக்கு வெளியே இயேசு இல்லை என்று நாம் நம்புகிறோம்; மற்றவர்களையும் நம்பச் சொல்லுகிறோம்.

ஒருவகையில் யூதமதம் தேவன் தந்ததுதான். ஆனால், அவர் மதத்தை விரும்பவில்லை. மாறாக, அந்த மக்களோடு ஓர் உறவை விரும்பினார். ஆனால், அவர்களோ, அவரோடு உறவைப் பேணிப்பாதுகாப்பதைவிட, அவரை விரும்புவதைவிட, அவர் கொடுத்த எல்லாவற்றையும் ஒரு புறம்பான மதமாக மாற்றிவிட்டார்கள்.

நிச்சயமாக, இயேசு கிறிஸ்து 'கிறிஸ்தவம்' என்ற மதத்தை உருவாக்க வரவில்லை. அவர் 'கிறிஸ்தவம்' என்ற மதத்தின் ஸ்தாபகர் அல்ல. "...நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்" (மாற்கு 2:17). "நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் ...அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்" (மத். 5:17). "நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" (யோவான் 10:10). "என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்," (யோவான் 6:38) "காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன்," "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்," (யோவான் 12:46). " நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்க வந்தேன்," (யோவான் 12:47)."சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்," (யோவான் 18:37). தாம் இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கத்தை இவ்வாறு பல இடங்களில் இயேசு கூறியிருக்கிறார். தாம் ஒரு மதத்தை நிறுவ வந்தததாக அவர் ஒருபோதும் கூறவில்லை.

பாவிகளை மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தது எப்படி மதமாகும்? சட்டத்தையும், தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்ற வந்தது மதமா? ஜீவனைத் தருவதும், அதைப் பரிபூரணமாகத் தருவதும் மதத்துக்குரியதா? இழந்துபோனதைத் தேடி வந்தது ஒரு ஸ்தாபனமா? பிதாவின் சித்தத்தைச் செய்வது மதமா? உலகத்துக்கு ஒளியாக வந்ததும், பார்வையற்றவர்கள் பார்வை பெற வந்ததும் மதமா?

2. கிறிஸ்துவா, உபதேசங்களா?

கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவம் என்ற மதத்தை உருவாக்கியதோடு நின்றிருந்தால்கூட பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால், இன்று கிறிஸ்தவத்தில் இருக்கும் குழப்பத்திற்கும், குழுக்களுக்கும் அளவேயில்லை. உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான கிறிஸ்தவக் குழுக்கள் இருக்கின்றன. இவர்களுக்கிடையே நடக்கும் சண்டைகளைப் பார்த்து உலகம் நகைக்கின்றது. இதனால் நாம் உலகத்துக்கு கேலிப்பொருளாக மாறிவிட்டோம். இந்த உலகத்துக்கு உப்பாகவும், பூமிக்கு வெளிச்சமாகவும் இருக்கத் தவறிவிட்டோம். கொசுவை வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்க ஆரம்பித்துவிட்டோம்.

போதனைகள், உபதேசங்கள், பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள் ஆகியவைகளைக்குறித்து ஸ்தாபனங்களுக்கிடையே. கிறிஸ்தவப் பிரிவுகளுக்கிடையே, நடக்கின்ற சண்டையைப் பார்க்கிறவன், கேள்விப்படுகிறவன், சிரிக்காமல் இருக்கமாட்டான். "நாங்கள்தான் உயர்ந்தவர்கள்; எங்கள் உபதேசம்தான் சரி; எங்கள் சபைதான் வேதத்தின்படி சரியான சபை; தேவனோடு ஐக்கியம்கொள்ள வேண்டுமானால் எங்களுடன்தான் சேர வேண்டும். பரலோகம் போவதற்கு நாங்கள்தான் வழி" என்று ஒவ்வொரு குழுவும் கோஷமிடுகின்றது.

"மனுஷனுடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்," (மத்தேயு 15:9; ஏசாயா 29:13). அதற்கு முந்தைய வசனம் "இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது," என்று இயேசு கூறினார். எவ்வளவு உண்மை!

எத்தனை உபதேசங்கள்!

ஞானஸ்நானம்: எப்படி கொடுப்பது-இயேசு கிறிஸ்துவின் பெயரிலா அல்லது பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயரிலா? யார் கொடுப்பது-பாஸ்டரா அல்லது விசுவாசியா? எங்கு கொடுப்பது-ஓடும் தண்ணீரிலா அல்லது தொட்டியிலா? யாருக்குக் கொடுப்பது-பெரியவர்களுக்கா அல்லது குழந்தைகளுக்கா? முழுக்கா அல்லது தெளிப்பா? எப்போது கொடுப்பது என்று யாராவது சொல்கிறார்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது.

இரட்சிப்பு: கிருபையினாலா அல்லது கிரியையினாலா? இரட்சிக்கப்பட்டுவிட்டோமா அல்லது இரட்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோமா? ஒருமுறை இரட்சிக்கப்பட்டுவிட்டால் நித்தியத்துக்கும் இரட்சிக்கப்பட்டுவிட்டோமா அல்லது பெற்ற இரட்சிப்பை இழக்க வாய்ப்பிருக்கிறதா?

பரிசுத்த ஆவி: விசுவாசிகள் எல்லாரும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்களா இல்லையா? பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளம் என்ன? அந்நிய பாஷையில் பேச வேண்டுமா வேண்டாமா? இரட்சிக்கப்படும்போது பரிசுத்த ஆவியைப் பெறுகிறோமா அல்லது உபவாசித்துக் காத்திருந்து பெற வேண்டுமா?

திருவிருந்து: மாதத்துக்கு ஒரு முறையா அல்லது வாரந்தோறுமா? யார் பங்குபெறலாம்-நகை கழற்றியவரா, மருந்து மாத்திரை சாப்பிடாதவரா, தொடர்ந்து ஆறு மாதங்களாவது கூட்டத்துக்குத் தவறாமல் வந்தவரா, தசமபாகம் ஒழுங்காகக் கொடுத்தவரா, சபைக்குரிய சந்தாவைக் கட்டியவரா, ஞானஸ்நானம் பெற்றவரா பெறாதவரா? அப்பத்தை எப்படித் தயாரிக்க வேண்டும்-முந்தின நாளா அல்லது அன்றைக்கா, வட்டமாகவா சதுரமாகமா, சிறியதாகவா பெரியதாகவா? என்ன மாவு பயன்படுத்த வேண்டும்-மைதாவா, கோதுமையா? உப்புப் போட வேண்டுமா, வேண்டாமா? மாவு புளிக்க வேண்டுமா வேண்டாமா?

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை: இரகசிய வருகையா, பகிரங்க வருகையா? விசுவாசிகள் எப்போது எடுத்துக்கொள்ளப்படுவார்கள்? இரகசிய வருகையிலா அல்லது பகிரங்க வருகையிலா? இரகசிய வருகை மகா உபத்திரவ காலத்திற்கு முன்பு நிகழுமா அல்லது பின்பு நிகழுமா அல்லது நடுவிலா?

ஊழியம்: பகுதிநேர ஊழியமா முழுநேர ஊழியமா? ஊழியக்காரர் திருமணம் செய்யலாமா செய்யக்கூடாதா? ஆரோனைப்போல் அழைக்கப்பட்டவர்கள்தான் ஊழியக்காரர்களா அல்லது எல்லோரும் ஊழியக்காரர்களா?

இப்படிப்பட்ட சர்ச்சைகளுக்கு எல்லையே இல்லை. இப்படிப் பேசுபவர்கள் சமான்யர்கள் அல்ல. அவர்கள் தங்களுக்குப் பல பெரிய பட்டங்களைச் சூட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றிப் பேசுகிற எல்லாரும் வேதாகமத்திலிருந்து பல மேற்கோட்களை அடுக்கிவைப்பார்கள். தாங்கள் பேசுகிற காரியம்தான் வேதாகமத்தின் மையம் என்பதுபோலவும், தேவனுடைய இருதயத்தின் ஆழத்தில் இருக்கிற காரியம் இதுதான் என்பதுபோலவும் ஆணித்தரமாகப் பேசுவார்கள். அவர்கள் பேச்சைக் கேட்கிறவன் ஒருகணம் திகைத்துப்போய்விடுவான்.

தாங்கள் பேசுகிற காரியத்துக்கு தேவனுடைய பார்வையில் என்ன மதிப்பு, எவ்வளவு மதிப்பு? இதுதான் தேவனுடைய இருதயமா என்று இவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. "என்று எழுதியிருக்கிறதே," என்பதைப் பார்ப்பவர்கள் "என்றும் எழுதியிருக்கிறதே," என்பதைப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள் (மத். 4:4, 7) "நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ எப்படி வாசிக்கிறாய்?" (லூக்கா 10:26) என்று இயேசு அந்த வாலிபனிடம் கேட்ட கேள்வியை நாம் சிந்தித்துப் பார்த்தால் எவ்வளவு நலமாயிருக்கும். "ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறிய வேண்டியபிரகாரம் அவன் இன்னும் அறியவில்லை," (1 கொரி. 8:2). இது பவுல். இதை ஏற்றுக்கொள்வதற்கு நமக்கு அதிகமான தாழ்மை வேண்டும். இப்படிப்பட்ட மனப்பாங்கைப் பார்ப்பது இன்று அரிதாகிவிட்டது. வேதாகமக் கல்லூரியில் சில மாதங்கள் படித்துவிட்டால், வேதாகமத்தை சில தடவைகள் வாசித்துவிட்டால், அங்கும் இங்குமாக சில மேற்கோள்களைக் காட்டி கொஞ்சம் பேசத் தெரிந்துவிட்டால், நாம் சொல்வதைக் கேட்கக் கொஞ்சப்பேர் இருந்துவிட்டால், நம்மை யாராவது பாஸ்டர் என்று சொல்லிவிட்டால் அல்லது நம்மை நாமே அவ்வாறு அழைக்க ஆரம்பித்துவிட்டால், நாம் சொல்வதுதான் சட்டம் என்றாகிவிடுகிறது. "இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம்; அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்வேன்," (1 கொரி. 13:12). என்னே பவுலின் தாழ்மை! இந்தத் தாழ்மை எங்கே போய்விட்டது?

தாங்கள் சொல்வதை நம்பாதவன், ஏற்றுக்கொள்ளாதவன், நரகத்துக்குச் செல்கிறான் அல்லது அவனுக்குத் தேவனோடு உறவில்லை என்று ஏறக்குறைய பெரும்பாலான குழுக்கள் சாதிக்கின்றன.

போதனைகளுக்கும், உபதேசங்களுக்கும் ஓர் இடம் இருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவை கிறிஸ்துவின் இடத்தை எடுத்துக்கொள்ள முடியுமா? கிறிஸ்து செய்யவேண்டிய வேலையை இவை செய்யுமா? போதனைகளும், உபதேசங்களும் நம்மைக் கிறிஸ்துவிடம் நடத்துவதற்குப்பதிலாக, அவரைவிட்டு விலக்கிக்கொண்டு செல்கின்றன என்பதுதான் உண்மை. மரத்தின் தண்டைப் பிடித்துக்கொண்டால், இலைகளையும் கிளைகளையும்குறித்து சண்டைபோட்டுக்கொண்டிருப்போமா? நான் இயேசுவைப் பின்பற்றப் போகிறேனா அல்லது ஒரு குறிப்பிட்ட போதனையை, உபதேசத்தை, பின்பற்றப் போகிறேனா? இயேசு சில சட்டதிட்டங்களைக் கொடுத்து, "இவைகளைப் பின்பற்றுங்கள்" என்று சொன்னாரா அல்லது "என்னைப் பின்பற்றுங்கள்" என்று சொன்னாரா?

இன்றைய சபைகளின் போதனையைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றாமல், கொஞ்சம் கேள்வி கேட்க ஆரம்பித்தால், நம்மை "கலகக்காரன்' என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.

3. கிறிஸ்துவா, நியாயப்பிரமாணமா?

தேவன் மோசேயின்மூலம் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். அதில் பலிகள், பண்டிகைகள், ஓய்வுநாள், விருத்தசேதனம், சடங்குகள், ஒழுங்குகள், ஆலயம், ஆசாரியர்கள், அங்கி என நிறையக் காரியங்கள் இருக்கின்றன.

1. அவை நிழல், சாயல், மாதிரி, ஒப்பனை, திருஷ்டாந்தம் (எபிரேயர் 8:5, 9:9, 4:11) "ஆகையால், போஜனத்தையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும், மாதப் பிறப்பையும், ஓய்வு நாட்களையுங் குறித்தாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது," (கொலோ. 2:16, 17). அவைகள் வரப்போகிற முழுமையின் சுருக்கம், அசலின் நகல், ஊற்றின் தோற்றம், முழுமையான ஆதாரத்தின் முழுமையற்ற பிரதிநிதி, நிரந்தரமானவைகளின் தற்காலிகமான வெளியாக்கம், காரணத்தின் விளைவு, நிறைவான, முந்தைய, உயர்வான, ஆவிக்குரியவைகளின் குறைவான, பிந்தைய, தாழ்வான, பூமிக்குரிய விவரங்கள். உருவகமா உண்மையா? நிஜம் வந்தபின் நிழல் எதற்கு? உண்மையான நபர் வந்தபின் அவரைப் பார்ப்பதை விட்டுவிட்டு, அவருடைய புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கப்போகிறேனா?

2. தேவன் அவைகளை ஒரு குறிப்பிட்ட காலம்வரை பயன்படுத்தினார், ஆசீர்வதித்தார். அவைகளின் நோக்கம் நிறைவேறியபின், தேவன் அவைகளை நீக்கிவிட்டார். "இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல," (எபிரேயர் 9:10).

பலிகள்: பழைய ஏற்பாட்டில் செலுத்தப்பட்ட எந்தப் பலிகளையும் நாம் இன்று செலுத்துவதில்லை. ஏனென்றால், இயேசு கிறிஸ்துவே எல்லாப் பலிகளின் நிறைவாக இருக்கிறார். "இதோ! உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி," (யோவான் 1:29). எல்லாப் பலிகளின் முழுநிறைவு அவரே. "இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்" (எபிரேயர் 10:12). இயேசுவே சர்வாங்க தகனபலி, போஜன பலி, சமாதான பலி, பாவநிவாரண பலி, குற்றநிவாரண பலி. இன்று நாம் கூட்டத்துக்குச் செல்லும்போது ஆடுகளையும், புறாக்களையும் கொண்டுசெல்லுகிறோமா? இல்லையே!

பண்டிகைகள்: பஸ்கா பண்டிகை, புளிப்பில்லா அப்பப் பண்டிகை, பெந்தெகொஸ்தே பண்டிகை, முதற்பலன்களின் பண்டிகை, எக்காளப் பண்டிகை, கூடாரப் பண்டிகை, என எல்லாம் கிறிஸ்துவே என்று நமக்கு நன்றாகத் தெரியும்.

ஓய்வு நாள்: "வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்," (மத். 11:28) என்று இயேசு கூறினார். உண்மையான ஓய்வு ஒரு நாளா அல்லது ஒரு நபரா? தேவன் மோசேயின்மூலம் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். ஆனால், அந்த நியாயப்பிரமாணத்திற்கு அவர்கள் 2000 வியாக்கியானங்களையும், விளக்கங்களையும் கொடுத்தார்கள். ஓய்வு நாளில் படுக்கை போடக்கூடாது; படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கக்கூடாது; 3 கி.மீ. தூரத்துக்கு அதிகமாக நடக்கக்கூடாது; அடுப்பு எரிக்கக்கூடாது. இவைகளையெல்லாம் அவர்கள் சகித்து இளைத்துப்போனார்கள். இது அவர்களால் தாங்கமுடியாத பாரமாக இருந்தது. எனவேதான் இயேசு இவ்வாறு கூறினார். ஏழாவது நாள் வருகைக்காரர்கள் இந்த ஒரு காரியத்தைப் பார்த்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! பார்த்த மாத்திரத்தில் அவர்களுடைய கோட்டை இடிந்துவிடுமே!

விருத்தசேதனம்: "கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை; விருத்தசேதமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்," (கலா.6:15). "எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது" (லேவி. 12:3) என்று தேவன் சொன்னார். ஆனால், இதன் நோக்கம் என்ன? "ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்," (உபா. 10:16) என்று இதற்கு அவரே விளக்கம் கொடுத்தார். இதைத்தான் "ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்" (ரோமர் 2:28, 29) என்று பவுல் கூறுகிறார்.

இதுபோல அத்தனை பலிகள் கொடுக்கச் சொன்னபோதும், "பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்," (சங். 51:16, 17) என்று பலியின் உண்மையான பொருளை அன்றே மக்கள் புரிந்திருந்தார்கள்.

நியாயப்பிரமாணம்: "விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்," (ரோமர் 10:4) நாம் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள். எனவே, முதல் கணவனாகிய நியாயப்பிரமாணத்திற்கு நாம் கட்டுப்பட்டவர்களல்ல; நாம் அதிலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். "...நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்திற்கு வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே," (கலா.3:25) இப்போது நாம் தேவனுடைய குமாரர்கள்; அடிமைகளல்ல. தேவன்தான் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். அதில் என்ன தவறு இருக்கிறது? தவறு இருக்கிறது என்று சொல்ல முடியாது. மாறாக அது பலவீனமானது; நிறைவானதல்ல; நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். நியாயப்பிரமாணமும், தீர்க்கதரிசனமும் அடங்கியதுதான் பழைய ஏற்பாடு (மத். 11:33). ஆனால், இயேசு கிறிஸ்து இந்த இரண்டின் முடிவாகவும், நிறைவாகவும் இருக்கிறார்.

"வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை." (யோவான் 5:39, 40). இயேசு, ஒருநாள், பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்துக்கொண்டு ஒரு மலைக்குச் சென்றார். அங்கு அவர்களுக்குமுன்பாக அவர் மறுரூபமானார். அப்போது மோசேயும், எலியாவும் அங்கு தோன்றினார்கள். இதைப் பார்த்த பேதுரு, இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்," (மத்தேயு 17:4) என்றான். "அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று," (மத்தேயு 17:5). சீடர்கள் எழுந்து பார்த்தபோது அங்கு இயேசு மட்டுமே இருந்தார். மோசேயோ, எலியாவோ அங்கு இல்லை. இதன் பொருள் என்ன? மோசே நியாயப்பிரமாணத்தின் பிரதிநிதி என்றும், எலியா தீர்க்கதரிசிகளின் பிரதிநிதி என்றும் நமக்குத் தெரியும். மோசே தேவனுடன் முகமுகமாய்ப் பேசினார். அப்படி இன்று யாராவது பேசுகிறார்களா என்று எனக்குத் தெரியாது. அப்படிப் பேசுவதாக சிலர் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள். எலியா எவ்வளவு வல்லமையான ஊழியக்காரர்! இயேசு வரும்வரை அவர்கள் செய்யவேண்டிய ஒரு வேலை இருந்தது. அந்த நோக்கம் நிறைவேறியபின் அவர்கள் ஒதுங்கிவிட வேண்டும். "தேவன் கொடுத்தது, தேவன் ஆசீர்வதித்தது,' என்று சொல்லி அவைகளுக்கும், அவர்களுக்கும் கூடாரம் அமைத்துவிடக் கூடாது. ஆனால், இன்று அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. "உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?" (1 கொரி. 1:12, 13).

பிதாவாகிய தேவன் இங்கு இவ்வாறு கூறுவதின் பொருள் என்ன? "இதோ! இங்கு இப்போது இயேசு இருக்கிறார். நியாயப்பிரமாணத்திற்கும், தீர்க்கதரிசனத்திற்கும் அல்லது தீர்க்கதரிசிகளுக்கும் இதுவரை நீங்கள் செவிகொடுத்தது போதும்; இனிமேல் நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குச் செவிகொடுங்கள்." இதுதானே அதன் பொருள்? எனவே, நாம் இனிமேல் யாரைப் பின்பற்றப்போகிறோம்? யாருக்குச் செவிகொடுக்கப்போகிறோம்? பழைய நியாயப்பிரமாணம் நீங்கிவிட்டது என்று ஓரளவுக்கு நமக்குத் தெரிகிறது. ஆனால், நம்மை அறியாமலே புதிய நியாயப்பிரமாணத்தை நாம் உருவாக்கியிருக்கிறோமே! "கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு...தலையைப் பற்றிக்கொள்ளுங்கள்" (கொலோ. 2:18). தலையாகிய கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளாமல் "மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து; தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன" (கொலோ. 2:21). இந்த அதிகாரத்தைத் தொடர்ந்து வாசியுங்கள்.

இயேசு மரித்து உயிர்த்தெழுந்த நாளில், இரண்டு சீடர்கள் எருசலேமிலிருந்து எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு அவர்களுக்குத் தோன்றி, அவர்களுடனே உரையாடினார். "மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்" (லூக்கா 24:27). நியாயப்பிரமாணங்களும், தீர்க்கதரிசனங்களும் இயேசுவைக்குறித்தே பேசின. "நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே. அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள்," (யோவான் 5:46, 47) என்று மோசே தம்மைக்குறித்து எழுதியிருப்பதாகவே இயேசு கூறினார்.

ஆனால், நாம் இன்னும் தீர்க்கதரிசிகளை நாடித் தேடி ஓடுகிறோம். குழந்தைக்குப் பெயர் சூட்டுவது, பள்ளி கல்லூரியில் படிப்பது, வீடு வாங்குவது அல்லது கட்டுவது, திருமணம் போன்ற பல காரியங்களுக்கு இன்னும் நாம் "தீர்க்கதரிசிகளிடம்" ஓடுவது வருந்தத்தக்கது. "இவருக்குச் செவிகொடுங்கள்" என்று பிதா சொன்னாலும், நம்மால் அவருக்குச் செவிகொடுக்க முடியவில்லையே! ஏன்?

4. குமாரனா, காரியங்களா?

கிறிஸ்துவைத்தவிர நம் வாழ்க்கையில் வேறு நல்ல பங்கு என்ன உண்டு? "மார்த்தாளே, மார்த்தாளே நீ அநேகக் காரியங்களைக்குறித்து கவலைப்படுகிறாய்." "கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்" (சங்கீதம் 16:5)."கர்த்தாவே, நீரே என் பங்கு" (சங்கீதம் 119:57) ஆம், போதனைகள், உபதேசங்கள், கூட்டங்கள், மாநாடுகள், செய்திகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவைகளைக்குறித்து எவ்வளவு கவலை! இவைகளா நம் பங்கு? வாலிபர் கூட்டங்கள், ஞாயிற்றுக்கிழமை காலையிருந்து மாலைவரை கூட்டங்கள், வேதபாட வகுப்புக்கள், காத்திருப்புக் கூட்டங்கள், ஜெபக் கூட்டங்கள், முழு இரவுக் கூட்டங்கள், அமாவாசை முழு இரவு ஜெபம், பவுர்ணமி முழு இரவு ஜெபம், உபவாசக் கூட்டங்கள், மாநாடுகள்...கூட்டங்களுக்கு எல்லையேயில்லை, பஞ்சமேயில்லை. இவைகள் தவறாமல் நடந்தேறுகின்றன. இவைகளில் பங்குபெறுபவர்கள் விசுவாசிகள் என்று கருதப்படுகிறார்கள், ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இல்லையென்றால் பங்குபெறாதவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். கூட்டங்கள் தேவலையில்லை என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், இவைகள் கிறிஸ்துவின் இடத்தை எடுத்துக்கொள்ள முடியுமா? "திங்கட்கிழமை தேர்வு இருந்தாலும், அவன் ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் கூட்டத்துக்கு வர வேண்டும். இல்லையென்றால் அவன் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுபவன் அல்ல," என்று முத்திரை குத்தி விடுவார்கள். தேவன் இவைகளிலா பிரியமாயிருக்கிறார்?

இயேசு ஞானஸ்நானம் பெற்று கரையேறியபோது, வானத்திலிருந்து, "இவர் என்னுடைய நேசகுமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்," என்று ஒரு சத்தம் உண்டானது. பிதாவாகிய தேவன் ஒரு காரியத்தில் பிரியமாயிருக்கிறாரா அல்லது இயேசு என்ற நபரில் பிரியமாயிருக்கிறாரா? பிதாவின் இருதயம் அவருடைய குமாரனில்தான் இருக்கிறது. அவர் தம் குமாரனில்தான் பிரியமாயிருக்கிறார். தேவன் தம் குமாரனைக்கொண்டு இப்பிரபஞ்சம் முழுவதையும் நிரப்ப விரும்புகிறார். மதசம்பந்தமான செயல்பாடுகளைக்கொண்டு அல்ல.

5. கிறிஸ்துவா, கட்டிடமா?

சபை என்ற பெயரில் பெரிய அல்லது சிறிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அந்தக் கட்டிடத்தை சபை என்றோ, ஆலயம் என்றோ, தேவனுடைய வீடு என்றோ, வாசஸ்தலம் என்றோ அழைக்கிறோம். சபை என்பது ஒரு கட்டிடமா? அந்த இடமா தேவனுடைய வீடு அல்லது வாசஸ்தலம்? அது ஆலயமா? தேவன் அந்த இடத்தின்மேல் பிரியமாயிருக்கிறாரா? "ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார், வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது; இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார்" (அப். 7:48-50) என்று ஸ்தேவான் பேசினாரே. அது புதிய ஏற்பாட்டின் ஆரம்பம் இல்லையா? முதன்முதலாக ஆலயத்தைக் கட்டின சாலோமோனுக்கும் இது தெரியும். "தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?" (1 இரா. 8:27). ஆலயத்தின் வரைபடத்தைக் கொடுத்தவரே அவர்தான். ஆனால், அதை இடித்துப் போடுங்கள் என்று சொன்னவரும் அவரே. நாற்பத்தாறு வருடங்கள் செலவழித்து கட்டப்பட்ட ஆலயத்தை இடித்துப்போடச் சொன்னார் (யோவான் 2ஆம் அதிகாரம்). ஏனென்றால், "உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுவதில்லை. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர் தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளினால் பணிவிடை கொள்ளுகிறதுமில்லை" (அப். 17:24, 25). ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம் (எந்தக் குழுவினராக இருந்தாலும் சரி, எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி) கிறிஸ்துவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட இப்படிப்பட்ட இடங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. எனவேதான் பெரிய பெரிய இடங்களைக் கட்டிக்கொண்டிருக்கிறோம். அங்கு சில வசனங்களை எழுதிவைத்து, அது தேவனுடைய ஆலயம் என்ற பொய்யான எண்ணத்தை பாமர மக்களிடம் ஏற்படுத்திவிட்டோம். "அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது. அதற்கேற்றபடி செலுத்தப்பட்டு வருகிற பலிகளும், காணிக்கைகளும், ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம். இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல" (எபி. 8:9, 10). இதைவிட வேறு எப்படி தெளிவாகச் சொல்ல முடியும்? அவை வெறும் சடங்குகள், சாயல், ஒப்பனை, நிழல், மாதிரி. இரண்டாவதை நிறைநிறுத்துவதற்காக முதலாவதை நீக்கிப்போட்டார்.

6. கிறிஸ்துவா, பாரம்பரியமா?

நம்முடைய கிறிஸ்தவப் பாரம்பரியங்களுக்கு அளவேயில்லை. மத்தேயு 15ஆம் அதிகாரத்தை வாசித்துப்பாருங்கள். வேதபாரகர்களும், பரிசேயர்களும் முன்னோர்களின் பாரம்பரியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். இயேசுவோ அவர்களைத் தமக்கு நேராகத் திருப்பினார். கைகழுவ வேண்டும், பாத்திரத்தின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்ய வேண்டும், வெள்ளை உடுத்த வேண்டும், கழுத்தில், காதில் மஞ்சள் நிறத்தில் எதுவும் மின்னிவிடக் கூடாது, மருந்து மாத்திரை சாப்பிட்டால் அவன் விசுவாசி இல்லை, ஊழியக்காரன் திருமணம் செய்யக்கூடாது, தவறாமல் தசமபாகம் கொடுக்க வேண்டும், ஞாயிற்றுக்கிழமை கூட்டத்துக்குச் செல்லவில்லையென்றால் அவன் கிறிஸ்தவன் இல்லை, கிறிஸ்துமஸ், பெரிய வெள்ளி, ஈஸ்டர் என்ற பண்டிகைகள்...2000 ஆண்டுகளுக்குமுன் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு தேவன் ஒரு குறிப்பிட்ட காரியத்தைக் கொடுத்திருப்பார். ஆனால், காலப்போக்கில் அதை வழிபட ஆரம்பித்துவிடுகிறோம்.

அவரவர் தங்களுக்குத் தோன்றியபடி தேவன் இப்படித்தான் இருப்பார் என்று கற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்கள். மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிவரத் தாமதமாயிற்று. அதற்குள் பொறுமையிழந்த இஸ்ரயேல் மக்கள் ஆரோனைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்களுக்குப் பயந்து, ஆரோன் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொடுத்தான். இது அவனுடைய, அவர்களுடைய கற்பனை.

கொள்ளிவாய்ச் சர்ப்பத்தினால் கடிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள், கம்பத்தின்மேல் தூக்கிவைக்கப்பட்ட வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைத்தார்கள். எனவே, நாம் இப்போது நம் வீடுகளில் வெண்கல சர்ப்பம் வைக்கப்பட்ட ஒரு கம்பத்தை வைத்துக்கொள்வோமா? இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நமக்குப் பாவமன்னிப்பு கிடைத்தது. எனவே, நம் வீட்டில் ஒரு பெரிய சிலுவையைத் தொங்க விடுவோமா? பாரம்பரியங்களை நாம் எப்படி வேண்டுமானாலும் உருவாக்க முடியும். "தானியேல் மூன்று வேளை ஜெபித்தான், எனவே நாமும் மூன்றுவேளை ஜெபிக்க வேண்டும். இயேசு தனித்திருக்கும்படி வனாந்திரத்திற்குச் சென்றார், எனவே நாமும் வனாந்திரத்திற்குச் செல்ல வேண்டும். இயேசு தாடி வைத்திருந்தார், எனவே நாமும் தாடி வைக்க வேண்டும்." இப்படியே தொடர்ந்தால் "அவர் கழுதையில் சென்றார், படகில் சென்றார், எனவே நாமும் எங்கு சென்றாலும் ஒன்று கழுதையின்மேல் செல்ல வேண்டும் அல்லது படகில் செல்ல வேண்டும்," என்று பாரம்பரியங்களை உருவாக்கிக்கொண்டேயிருக்கலாம். அதற்கு முடிவேயிருக்காது.

ஆனால், இப்படிப்பட்ட பாரம்பரியங்களா காரியம்? நிச்சயமாக இல்லை. தேவனுடைய பார்வையில் இவைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை.

7. கிறிஸ்துவா, கும்பலா?

இப்படி, கிறிஸ்துவைத்தவிர அல்லது கிறிஸ்துவைவிட வேறு பல காரியங்களுக்குக் கிறிஸ்தவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஊரோடு ஒத்துப்போகாவிட்டால் தனியே இருக்க வேண்டியிருக்குமே என்ற பயம். கும்பலோடு கும்பலாகச் சேர்ந்துவிடுவதுதான் பாதுகாப்பான வழி என்று பலர் நினைக்கிறார்கள். அந்தக் கூட்டம் "ஒழிக" என்று சொல்லும்போது எல்லாரும் "ஒழிக" என்று கோஷமிட வேண்டும்; "வாழ்க" என்று சொல்லும்போது, "வாழ்க" என்று சொல்ல வேண்டும். இப்படி நடந்து கொண்டால், தலைவர்கள் பாராட்டுவார்கள், தட்டிக்கொடுப்பார்கள். கூட்டத்தோடு ஒத்துப்போகவில்லையென்றால், வழிமொழியவில்லையென்றால், நம்மைக் கலகக்காரன் என்று முத்திரை குத்திவிடுவார்கள். ஏன் "ஒழிக" அல்லது "வாழ்க" என்று சொல்ல வேண்டும் என்று மக்கள் சிந்தித்துப்பார்ப்பதில்லை. தலைவன் குழல் ஊதினால் மற்றவர்கள் கூத்தாடவேண்டுமா? அவர் புலம்பினால் மற்றவர்கள் மாரடிக்க வேண்டுமா? வேறு வழியில்லையா? கூட்டத்தோடு கூட்டமாகப் போய்க்கொண்டிருக்கிறோம். இன்றைய நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுகிறோம். செத்த மீன்கள், காய்ந்த சருகுகள் தண்ணீரின் போக்கில் மிதந்துசெல்வதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்? கொஞ்சமாவது ஜீவன் இருந்தால் அவை நீரின் எதிர்திசையில் செல்வதற்கு நிச்சயமாக முயற்சிசெய்யும்.

ஓய்வுநாளில் குணப்படுத்தக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால், இயேசு, பெரும்பாலும் ஓய்வு நாளில்தான் குணப்படுத்தினார். "குணமாக்குவதற்கு ஆறுநாட்கள் இருக்கிறதே. அந்த நாட்களில் குணமாக்காமல் ஓய்வுநாளில் குணமாக்குகிறீரே?" என்று கேட்கும் அளவுக்கு அவர் ஓய்வுநாளை மீறினார். "நாங்கள் உபவாசிக்கிறோம். ஆனால், நீரும் உம்முடைய சீடர்களும் உபவாசிப்பதுபோல் தெரியவில்லை. அதற்கு மாறாக போகிற இடங்களிலெல்லாம் சாப்பிட்டுக்கொண்டேயிருக்கிறீர்கள்," என்று அவர்மேல் குற்றஞ்சுமத்தினார்கள். "கை கழுவாமல் சாப்பிடுகிறீர்" என்றார்கள். "நீர் போஜனப்பிரியன், மதுபானப்பிரியன், ஆயக்காரர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்," என்று புலம்பினார்கள். அன்றைய மத நீரோட்டத்தை அவர் எதிர்த்தார். அவர்களுடைய பார்வையில் அவர் அசுத்தமானவர், தீண்டத்தகாதவர். பிதாவைப் பிரியப்படுத்துவதுதான் அவருடைய நோக்கமேதவிர, அன்றைய மதத் தலைவர்களைப் பிரியப்படுத்துவதல்ல. அவருடைய சீடர்களும் குழம்பிப்போனார்கள். எனவே, ஒருமுறை, அவர்கள் அவரிடம், "நீர் இப்படிப் பேசுவதால், நடப்பதால், செய்வதால் பரிசேயர்கள் இடறலடைந்தார்கள், காயப்பட்டார்கள் என்று உமக்குத் தெரியுமா?" என்ற அர்த்தத்தில் அவரிடம் கேட்டார்கள். "அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள். வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்." (மத். 15:10-12).

தலைவர்கள் புண்படக்கூடாதாம், காயப்படக்கூடாதாம், அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாகச் செயல்படக்கூடாதாம். ஏனென்றால், அவர்களுடைய அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுமே. சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டுவிடுவோமே. தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோமே, கூட்டம் இல்லாமல் போய்விடுமே...அவர்களுடைய கோபத்துக்கு ஆளாகக்கூடுமே என்ற பயம். அன்றைய கூட்டத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அவர் எதையும் செய்யவில்லை.

ஸ்தேவான் அன்றைய மதத்தின் போக்குக்கு எதிராகப் பேசியதால், அவரை அவர்கள் கல்லெறிந்து கொன்றார்கள். இன்றைய நிலைமை மாறிவிட்டது என்று சொல்லிவிட முடியுமா?.

யூதாவின் ராஜாவும், இஸ்ரவேலின் ராஜாவும் சேர்ந்து சீரிய ராஜாவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் புறப்பட்டார்கள். யுத்தத்துக்குப் போகலாமா வேண்டாமா, தேவன் வெற்றியைத் தருவாரா மாட்டாரா என்பதை அறிய தேசத்திலுள்ள நானூறு தீர்க்கதரிசிகளிடம் விசாரித்தார்கள். யுத்தத்துக்குப் போகலாம் என்றும், தேவன் வெற்றியைத் தருவார் என்றும் நானூறு தீர்க்கதரிசிகளும் ஏகமனதாய்க் கூறினார்கள். இவர்களையல்லாமல் விசாரித்துக் கேட்பதற்கு கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறு யாராவது இருக்கிறார்களா என்று யூதாவின் ராஜா கேட்டான். அப்போது, இஸ்ரவேலின் ராஜா, "மிகாயா என்று ஒரு தீர்க்கதரிசி இருக்கிறான். ஆனால், அவன் எனக்குச் சாதகமாகப் பேச மாட்டான்," என்று கூறினான். அப்படியானால் என்ன பொருள்? முதலாவது, தனக்கு யார் சாதகமாகப் பேசுவார்களோ அவர்களை மட்டுமே அவன் வரவழைத்து, அவர்களிடம் மட்டுமே அவன் விசாரித்திருக்கிறான். மிகாயா தனக்குச் சாதகமாகச் சொல்ல மாட்டான் என்று அவனுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. மேலும், வந்த தீர்க்கதரிசிகளும் ராஜாவின் கோபத்துக்குப் பயந்து, அவனுக்குச் சாதகமாகச் சொல்லிவிட்டு, தந்த காணிக்கையை வாங்கிச் சென்றுவிட்டார்கள். இந்த நிலைமை இன்றும் மாறிவிடவில்லையே! மிகாயா வரவழைக்கப்பட்டான். யுத்தத்தில் யூதாவின் ராஜா மரித்துப்போவான் என்று மிகாயா சொன்னான். அவர்கள் நானூறு பேர் என்பதால் அவர்கள் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர்கள் பெரும்பான்மை என்பதற்காக அவன் தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக அவன் சேர்ந்துவிடவில்லை. மிகாயாவை யூதாவின் ராஜா கன்னத்தில் அறைந்தான். ஆனால், அவன் எதிர்த்து தன்னந்தனியாக நின்றான். 1 இராஜாக்கள் 22ஆம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள்.

தனியாக நடப்பது கடினமான பாதை. எனவே, மக்கள் கூட்டத்தை விரும்புகிறார்கள். கும்பல், இந்த வாரம், "ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்," என்று ஆர்ப்பரிக்கும். அதே கும்பல், அடுத்த வாரம், "இவனைச் சிலுவையில் அறையும்" என்று சத்தமிடும். இதுதான் கும்பலின் மனப்பாங்கு. ஒருவனை உயர்த்த வேண்டும் என்று நினைத்துவிட்டால், தலைக்குமேல் தூக்கிவைத்துக் கூத்தாடும். அதேபோல், தாழ்த்த வேண்டும் என்று நினைத்துவிட்டால், காலின்கீழ் போட்டு மிதித்துவிடும். பிலாத்து இயேசுவை அவர்களுக்குமுன் நிறுத்தி, "இதோ, உங்கள் ராஜா," என்றான். அவர்கள், "இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும்," என்று சத்தமிட்டார்கள். பிலாத்து, "உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா?" என்று கேட்டான். அதற்கு அவர்கள் சொன்ன பதில்தான் உச்சக்கட்டம். "இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை." கடந்த வாரம் வேறு மாதிரி சொன்னீர்களே! அது போன வாரம். போய்விட்டது. கும்பல் வேறுமாதிரி நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இயேசுவை நாத்திகர்கள் சிலுவையில் அறையவில்லை. அவர் மரணத்துக்குப் பாத்திரர் என்று பக்தியற்றவர்கள் தீர்ப்பிடவில்லை. மாறாக ஆஸ்திகர்கள், பக்தியுள்ளவர்கள், மதவாதிகள். பரிசேயர்களும், சதுசேயர்களும் என்றைக்காவது ஒன்று சேர முடியுமா? சேர்ந்தார்களே! பரிசேயர்களும், சதுசேயர்களும், வேதபாரகர்களும், பொதுமக்களும், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் இயேசுவைக் கொல்வதற்கு ஒன்று சேர்ந்தார்களே! எவ்வளவு பெரிய கூட்டணி! இப்படிப்பட்ட கூட்டணி மனித வரலாற்றில் வேறு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. நல்ல காரியத்துக்கு ஒன்று சேர்ந்தால் நல்லது. ஆனால், இங்கு இவர்கள் இயேசுவைக் கொல்வதற்கு ஒன்று சேர்ந்தார்கள். "நாங்கள் ஆவியில் ஒன்றாயிருக்கிறோம்; கர்த்தரில் ஒன்றாயிருக்கிறோம்" என்று இவர்கள் பாடலாம்.

பவுலையும் யூதர்களின் கும்பல் இப்படித்தான் நடத்தியது. அவர் எருசலேம் தேவாலயத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு அவர்கள் அவனைப் பிடித்து இழுத்து அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் (அப். 21).

கூச்சல்போடுகிற, கோஷம் எழுப்புகிற ஒரு திரளான கூட்டத்தை வைத்துக்கொண்டு அடுத்தவன் குரல்வளையை நெறித்துப் பெறுகிற வெற்றி நிச்சயமாக வெற்றியே இல்லை. அது தோல்வியைவிட மோசமானது, படுதோல்வி.

8. கிறிஸ்துவா, ஸ்தாபனமா?

என்னென்ன பெயர்கள்! எத்தனை ஸ்தாபனங்கள்! ஒரு பெரிய வியாபார நிறுவனத்தை நிர்வகிப்பதுபோல், இன்று இந்த ஸ்தாபனங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இதற்குத் தலைமை இடம் இருக்கும், கிளைகள் இருக்கும். இது ஓர் அமைப்புமுறை. இவர்களுக்கென்று பிரத்தியேகமான சட்டதிட்டங்கள், பாரம்பரியங்கள், ஒழுங்குகள், பயிற்சிகள், உடைகள், கூட்டங்கள், செய்திகள்...இருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒவ்வொரு ஸ்தாபனமும், "நாங்கள்தான் கிறிஸ்துவின் சரீரம்" என்பார்கள். ஒவ்வொரு ஸ்தாபனமும் தங்கள் எண்ணிக்கையைப் பெருக்க விரும்புகிறது. தங்கள் கிளைச் சபைகளை ஸ்தாபிக்க விரும்புகிறது. எண்ணிக்கைதான் இவர்களுடைய பெரிய பலம். இது மனிதர்கள் ஏற்படுத்திய கூடாரம். கிறிஸ்து தங்கள் ஸ்தாபனத்துக்குள்தான் இருக்கிறார் என்று ஒவ்வொரு ஸ்தாபனமும் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. "அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தம் செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்" (எபி. 13:12, 13). நாம் பாளயளமாகிய ஸ்தாபனத்தைவிட்டு கிறிஸ்துவினிடம் புறப்பட்டுப்போவோம். இன்னும் எத்தனை வருடங்களாக நாம் பாளயத்தில், கூடாரத்தில், ஸ்தாபனத்தில், தங்கி இருக்கப்போகிறோம்?

"அதோ, அங்கு ஒரு கழுதைக்குட்டியைக் கட்டிவைத்திருக்கிறார்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது கேட்டால்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்." எத்தனை இலட்சம் கழுதைகளை இப்படி கட்டிவைத்திருக்கிறார்கள்! அவைகள் ஆண்டவருக்கு வேண்டும். தயவுசெய்து அவைகளை அவிழ்த்துவிடுங்கள். ஆண்டவர் சவாரிசெய்ய வேண்டிய கழுதைகளை இப்படிக் கட்டிப்போடுவதால் என்ன இலாபம்? "எங்கள் ஸ்தாபனத்தில் இத்தனை கழுதைகளைக் கட்டிப்போட்டிருக்கிறோம்," என்று சொல்வதால் தேவன் மகிழ்ச்சி அடைவாரா? ஆடுகளைத் தொழுவத்துக்குள் அடைத்து வைத்து என்ன செய்யப்போகிறோம்? "எங்கள் தொழுவம்தான் பெரிய தொழுவம்," என்று சொல்லப்போகிறோமா? மேய்ப்பன் ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். தொழுவத்தைவிட்டு மேய்ப்பன்பின்னால் செல்ல வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?

காட்டுமிருகங்கள் காட்டில் இருக்க வேண்டும். அவைகளை மிருகக்காட்சிசாலையில் வைத்து வேளாவேளைக்கு சாப்பாடு கொடுத்தால் போதுமா? அப்படிச் செய்தால் நாளடைவில் என்ன நடக்கும்? தங்கள் சுபாவத்தை இழந்துவிடும். வேட்டையாடும் தங்கள் குணத்தை இழந்துவிடும். அவைகளை ஆட்டுவிக்க அங்கு ஒரு காப்பாளன். மக்கள் அவைகளைப் பார்க்க வரும்போது, இந்த மிருகங்கள் வெளியே வந்து வேடிக்கை காட்ட வேண்டும். இந்த மிருகங்களை இப்படி அடைத்துவைப்பதற்கா தேவன் படைத்தார்? அவைகளை அவிழ்த்து விடுங்கள், அவைகள் தங்கள் வாழ்விடமாகிய காட்டுக்குப் போகட்டும், வேட்டையாடட்டும், தங்கள் உணவைத் தேடட்டும்.

கட்டப்பட்ட நிலையிலிருக்கும் லாசருக்களின் கட்டுகளை அவிழ்த்து அவர்களைப் போக விடுங்கள். கிறிஸ்துவினிடத்திற்குப் போவோம்; ஆண்டவருக்குத் தேவை; மேய்ப்பன் பேர்சொல்லி வெளியே அழைத்துக்கொண்டு போகிறார்.

9. கிறிஸ்துவா, பாஸ்டரா?

ஒரு குழுவை எடுத்துக்கொண்டால், பாஸ்டர் என்ன சொல்லுகிறாரோ அதுதான் சட்டம் என்ற நிலை வந்துவிட்டது. அவரைக் கேள்விகேட்டால், கேள்விகேட்பவனை "பேராசைக்காரன்' "கலகக்காரன்' "விஷமி" என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அந்தக் குழுவிலுள்ள மற்றவர்களும் அவனைச் சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ஏனென்றால், அவன் அவர்களுடைய பாஸ்டரைக் கேள்வி கேட்டுவிட்டானே! நாளடைவில் அவன்மேல் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவனை வெளியேற்றிவிடுவார்கள். ஒன்று அவனை வெளியேற்றுவதற்காக அவன்மேல் குற்றஞ்சமத்துவார்கள். இல்லையென்றால், அவனாக வெளியேறிபின், எந்த அளவுக்கு அவனைக் குணக்-கொலை செய்ய முடியுமோ அந்த அளவுக்குச் செய்வார்கள். தயக்கமின்றி, மகிழ்ச்சியுடன் செய்வார்கள். இதைச் செய்வதற்கு வேதாகமத்திலிருந்து மேற்கோள்களையும் காட்டுவார்கள்.

ஒரு குழு இருந்தால் நிச்சயமாக அங்கு தலைமைத்துவம் இருக்கும். ஆனால், நாம் இன்று பார்ப்பதுபோன்ற தலைமைத்துவம் அல்ல. அவலட்சணமாக ஆதாயத்துக்காக இறுமாப்பாய் ஆளுகிற தலைவர்கள் இன்று அதிகமாக இருக்கிறார்கள்.

மோசே சீனாய் மலையிருந்து இறங்கிவரத் தாமதமானதால், இஸ்ரயேல் மக்கள் ஆரோனிடம், "எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும்" (யாத். 32:1) என்று கூப்பாடு போட்டார்கள். தேவனே இவர்களை நேரடியாக நடத்தினாலும், இவர்கள் அதில் பிரியப்படுவதைவிட தங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களில்தான் அதிகப் பிரியப்படுகிறார்கள். ஊனக் கண்ணால் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் ஒரு தெய்வம் வேண்டும்.

சாமுவேல் தீர்க்கதரிசியாக இருந்த காலத்தில், இஸ்ரவேலின் மூப்பர்கள் சாமுவேலினிடத்தில் வந்து, "...சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி எங்களை நியாயம் விசாரிப்பதற்கு ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும்" என்றார்கள். சாமுவேல் இந்தக் காரியத்தைக் கர்த்தரிடத்தில் சொன்னார். அப்போது கர்த்தர், "...அவர்கள் உன்னைத் தள்ளவில்லை; நான் அவர்களை ஆளாதபடிக்கு என்னைத்தான் தள்ளினார்கள்," என்றார் (1 சாமு. 8:5-8). இப்போது நாமும் ஏறக்குறைய அப்படித்தான் சொல்லுகிறோம். "எங்களைச்சுற்றி எப்படி இருக்கிறதோ அப்படித்தான் எங்களுக்கும் வேண்டும்."

பவுல் எருசலேமிலிருந்த சபையின் தலைவர்களை நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டது. மிகவும் அதிகாரமுடைய தலைவர்கள். தலைமைச் சபை, தலைமை இடம், பெரிய தலைவர்கள். "அல்லாமலும் எண்ணிக்கையுள்ளவர்களாயிருந்தவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்ட வர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை; தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதம் உள்ளவரல்லவே" (கலா. 2:6). பவுல் அவர்களைப் பார்த்து மிரண்டுவிடவில்லை. இன்னொரு மொழிபெயர்ப்பை இங்கு கூறுகிறேன். *"செல்வாக்கு உள்ளவர்கள் எனக் கருதப்பட்டவர்கள்கூட நான் கற்பிப்பதற்கு அதிகமாய் ஒன்றும் சொல்லவில்லை. இவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தார்கள் என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. கடவுள் ஆளைப்பார்த்தா செயல்படுகிறார்?" *

அவர் அப்போஸ்தலர், தீர்க்கதரிசி, சுவிசேஷகர், மேய்ப்பர், போதகர். சரி, இருக்கட்டும். அவர் 30 வருடமாக ஊழியம் செய்கிறார். சரி, இருக்கட்டும். அவர் வல்லமையான ஊழியக்காரர். பேய்களெல்லாம் அவரைப் பார்த்ததும் ஓடிவிடும். சரி, இருக்கட்டும். அவர் மரித்தவர்களை உயிரோடு எழுப்பியிருக்கிறார். சரி, இருக்கட்டும். அவர் தீர்க்கதரிசனம் சொன்னால் அப்படியே பலிக்கும். சரி, இருக்கட்டும். உலகம் முழுவதும் அவருக்குச் சபை இருக்கிறது. சரி, இருக்கட்டும். அவருக்கு வேதாகமம் அத்துப்படி. அவர் ஒரு நடமாடும் வேதாகமம் வேதாகமத்தைக் கையில் எடுக்காமலே மேற்கோள் காட்டுவார் பாருங்கள். சரி, காட்டட்டும். அவர் கூட்டங்களில் பிரசங்கம் பண்ணுவதை நீங்கள் பார்க்க வேண்டுமே. சரி, பண்ணட்டும். அவர் 2 ஆண்டுகள் வேதாகமக் கல்லூரியில் பயின்றவர். அவர் ஒரு வேதபண்டிதர். சரி, இருக்கட்டும். அவர் வேதாகமத்தின் எல்லாப் புத்தகங்களுக்கும் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். சரி, இருக்கட்டும். பவுல் சொல்வதுபோல இவர்கள் செல்வாக்கு உள்ளவர்களாகவே இருக்கட்டும். பெரிய ஆட்களாகவே இருக்கட்டும். அதனால் என்ன? அழகு, அறிவு, அந்தஸ்து, பணம், பதவி, பட்டம், படிப்பு, நாடு, தேசம், நிறம், உயரம், எடை, குலம், கோத்திரம், இனம், மொழி...இவைகளைப் பார்த்தா தேவன் செயல்படுகிறார்? அவர் ஆளைப் பார்த்து செயல்படுபவரல்ல.

"நடுகிறவனாலும் ஒன்றுமில்லை; நீர் பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை; விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்" (நடுகிறவனும் ஒன்றுமில்லை; நீர் பாய்ச்சுகிறவனும் ஒன்றுமில்லை; விளையச்செய்யும் தேவனுக்கு எல்லாம் சேரும்) (1 கொரி. 3:7) "ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பானாக" (1 கொரி. 3:21).

இயேசு கிறிஸ்துவைவிடச் சிறந்த ஒரு மேய்ப்பன் உண்டோ? இவரைவிட உயர்ந்த ஒரு தலைவன் உண்டோ? இஸ்ரவேல் மக்கள் அவரைத் தள்ளியதுபோல் நாமும் தள்ளிவிட்டு, எங்களுக்கு ஒரு ராஜாவைத் தாரும் என்று கேட்கப்போகிறோமா?

நம்மேல் அன்புகூர்ந்து நமக்காக மனிதனாய் வந்தவர்; இந்தப் பூமியில் பாடுகள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தவர்; தேவ திட்டத்தின்படி சிலுவையில் மரித்து, இரத்தம் சிந்தி, அடக்கம்பண்ணப்பட்டவர், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, அதன்பின் பரமேறிச் சென்று, சிங்காசனத்தில் அமர்ந்தவர்; இன்று நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்துபேசிக்கொண்டிருப்பவர்; நம்மைச் சந்திக்க வரப்போகிறவர். இவர் நம் இலக்கா? அல்லது மேற்சொன்ன பல காரியங்கள் நம் இலக்காக? மதம், உபதேசம், போதனை, நியாயப்பிரமாணம், பாரம்பரியம், கட்டிடம், ஸ்தாபனம், காரியம், கும்பல், ஊழியக்காரர்-இவை இயேசு கிறிஸ்து நமக்காகச் செய்த காரியங்களைச் செய்ய முடியுமா? அவருடைய இடத்தில் இவைகளை வைக்கலாமா?

கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தசாயலாக வேண்டும்; இது நம் நோக்கம். கிறிஸ்துவைப் பிரசங்கிக்க வேண்டும்; இது நம் வேலை. கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும்; இது நம் அன்றாட நடை. கிறிஸ்து நம்முள் இருக்கிறார்; அவர் நம் ஜீவன். அவர் நம்மில் வாழ்கிறார்; இது நம் வாழ்க்கை. நாம் கிறிஸ்துவைக் காண வேண்டும், அறிய வேண்டும், ஆதாயம்பண்ண வேண்டும்; இது நம் ஜெபம். கிறிஸ்துவைக் கொடுக்க வேண்டும்; இது நம் ஏக்கம். கிறிஸ்துவே நம் இலக்கு; இது நம் பரிசு.

"என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்... அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்" (பிலி. 3:8, 11).