Preloader
சாட்சியின் கூடாரம்
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More
8 Mar 2025 : தேவ அறிவு Read More

கள்ளத் தீர்க்கதரிசனம் - பிலேயாம்

By மெர்லின் இராஜேந்திரம்

1. பிலேயாம்

எண்ணாகமம் 22இல் பிலேயாமின் கதை ஆரம்பிக்கிறது. அவனுடைய வாழ்க்கையிலிருந்து பல காரியங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

தேவனுடைய ஊழியக்காரன் பணத்துக்காகத் தன் சுதந்திரத்தை இழக்கக்கூடாது. பண ஆசை முந்தியோ, பிந்தியோ ஊழியத்தை அழித்துவிடும்.

இஸ்ரயேல் மக்களைத்தவிர வேறு சிலர் உண்மையான தேவனை அறிந்திருந்தார்கள் என்று இது காண்பிக்கிறது. உண்மையான தேவனை அவர்கள் விசுவாசித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், உண்மையான தேவனைப்பற்றிய அறிவு அவர்களிடம் இருந்தது. இன்னொரு எடுத்துக்காட்டு மெல்கிசேதேக் (ஆதி.14).

பிலேயாமிடம் வல்லமையான தீர்க்கதரிசன வரம் செயல்பட்டது. சில நேரங்களில் அவன் தேவனிடமிருந்து வந்த உண்மையான வாக்கை உரைத்தான். தன்னிடம் இப்படிப்பட்ட ஒரு வரம் செயல்பட்டது பிலேயாமுக்குத் தெரியும். ஆனால், இந்த வரத்தைத் தான் விரும்பியதுபோலப் பயன்படுத்தமுடியாது என்றும் அவனுக்குத் தெரியும். ஒரு விளக்கைக் கொளுத்துவதுபோலவும், அணைப்பதுபோலவும் தீர்க்கதரிசனத்தைப் பயன்படுத்த முடியாது என்றும், தேவனிடமிருந்து வருகிற உண்மையான வார்த்தைகளைப் பேசும்போது அதைத் தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவனுக்குத் தெரியும். கட்டுப்படுத்த முடியாது என்பது மட்டும் அல்ல, தேவன் தம் வாக்கை அருள்வாரா, அருளமாட்டாரா என்றுகூட அவனுக்குத் தெரியாது (எண். 23:3). தேவன் சொன்னதை மட்டுமே அவனால் பேச முடிந்தது.

எனினும் அவன் பாலாக்கின் பணத்தை இச்சித்தான். பாலாக் பிலேயாமை ஒருவிதமான மந்திரவாதியாகத்தான் கருதினான். தான் வெறுக்கும் மக்களைச் சபிக்க வருமாறு பாலாக் பிலேயாமை வருந்தி அழைக்கிறான். தேவன் மறுக்கிறார், தடைசெய்கிறார். பிலேயாம் சிறுபிள்ளையைப்போல் கெஞ்சுகிறான். தேவன் அனுமதிக்கிறார். ஏன்? தான் ஏற்கெனவே தடைசெய்தபிறகும் அனுமதி கேட்கிறான் என்றால் அவன் பாலாக்கின் பணத்தின்மேல் தன் இருதயத்தை வைத்துவிட்டான் என்று தேவனுக்குத் தெரியாதா? எனவே அனுமதிக்கிறார். ஆனால், ஒரு நிபந்தனை. தேவன் சொல்வதை மட்டுமே சொல்ல வேண்டும். "இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து: அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடே கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்" (எண். 22:20). அனுமதி அளித்தபின் தேவன் அவனுக்கு எதிராக நிற்கிறார். ஏன்? அவனுடைய இருதயத்தில் பேராசை குடிகொண்டிருக்கிறது. அதைக் கொஞ்சம் சரிசெய்ய வேண்டும். எப்படி? உருவின பட்டயத்தோடு தூதன் நிற்கிறார். கழுதை பேசுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது அவனுக்குள் நிச்சயமாகப் பயம் ஏற்பட்டிருக்கும். எனவே, இதற்குப்பின் தன் விருப்பம்போல் எதையும் பேசுவதற்கு அவனுக்குத் தைரியம் வராது. "கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன். கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னை கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார். அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான். கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடே கூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடேகூடப் போனான். பிலேயாம் வருகிறதைப் பாலாக் கேட்டமாத்திரத்தில், கடைசி எல்லையான அர்னோன் நதியின் ஓரத்திலுள்ள மோவாபின் பட்டணமட்டும் அவனுக்கு எதிர்கொண்டு போனான். பாலாக் பிலேயாமை நோக்கி: உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடே உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா? என்னிடத்திற்கு வராமல் இருந்ததென்ன? ஏற்றபிரகாரமாக உம்மை நான் கனம் பண்ணமாட்டேனா என்றான். அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும், ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்" (எண். 22:32-38). தேவனுடைய வார்த்தையைவைத்து ஒருபோதும் வியாபாரம் செய்யக்கூடாது.

தேவ மக்களைப் பல வழிகளில் தோற்கடிக்கலாம். இஸ்ரயேல் மக்களைச் சபிப்பதற்காகப் பாலாக் பிலேயாமை அழைக்கிறான். தேவனுக்குப் பயந்து தேவன் சொன்னதைச் சொன்னான். ஆனால், எண்ணாகமம் 25இல் ஒரு மாறுபட்ட தந்திரத்தைப் பார்க்கிறோம். இஸ்ரயேலர்கள் மோவாபின் பெண்களோடு விபச்சாரம் செய்தார்கள், அவர்களுடைய விருந்தில் பங்குபெற்றார்கள், அவர்களுடைய தேவர்களுக்குச் செலுத்திய பலிகளைச் சாப்பிட்டார்கள், அவர்களுடைய தேவர்களைப் பணிந்தார்கள். "இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள். இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது" (எண். 25:1-3). இஸ்ரயேலரை அழிப்பதற்கான வழியை மோவாபியர் கண்டுபிடித்துவிட்டார்கள். தேவன் அவர்களை அழிப்பதற்கான வழியை மோவாபியர் கண்டுபிடித்துவிட்டார்கள். எண். 23:9 என்ன சொல்லுகிறது? “அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.” ஆனால், இப்போது மோவாபியரோடு கலந்தார்கள். அவர்களோடு ஒன்றாகிவிட்டார்கள். "பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே". இது பிலேயாமின் யோசனை என்று வேதாகமம் சொல்லுகிறது (எண். 31:16); "செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியைவிரும்பி, தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது" (2 பேதுரு 2:16); "சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு" (வெளி. 2:14).

இதோ ஒரு தீர்க்கதரிசி! சம்பிரதாயமான நேரங்களில் உண்மையானவன்போல் நடிக்கிறான். மேடையைவிட்டு கீழே இறங்கியவுடன் தன் சுய இலாபத்துக்காக மோசமான ஆலோசனை கொடுக்கிறான்! பிரசங்க மேடையில் தேவனுடைய தெளிவான வார்த்தையைப் பேசுகிறான். பிரசங்க மேடையைவிட்டுக் கீழே இறங்கியவுடன் தன் விருப்பம்போல் செயல்படும் கள்ளத்தீர்க்கதரிசி! சமரசம் செய்துகொள்ளும் தீர்க்கதரிசி!

2. தீர்க்கதரிசனம் - பொருள்

தீர்க்கதரிசனம் உரைத்தல் என்றால் தேவனைப் பேசுவது, தேவனுக்காகப் பேசுவது, வருங்காரியங்களை முன்னறிவிப்பது என்று பொருள் (1 கொரி. 14:3). தீர்க்கதரிசி என்றால் தேவனைப் பேசுபவன், தேவனுக்காகப் பேசுபவன், வருங்காரியங்களைப் பேசுபவன் என்று பொருள். தீர்க்கதரிசனம் என்ற வார்த்தையை இறைவாக்கு என்றும் மொழிபெயர்க்கலாம். தீர்க்கதரிசி என்றால் தீர்க்கமான தரிசனம் உடையவன் அதாவது திட்டவட்டமான, தெளிவான, தூரப்பார்வையுடையவன் என்று பொருள். இறைவாக்கு என்பது நல்ல வார்த்தை. இறை என்றால் தேவன் என்று பொருள். வாக்கு என்றால் வார்த்தை என்று பொருள். எனவே, இறைவாக்கினன் என்றால் தேவனை, தேவனுடைய வார்த்தையை, தேவனுக்காகத் திட்டவட்டமாக, தெளிவாக, உறுதியாகப் பேசுபவன் என்று பொருள். தேவனைப் பேசுவதும், தேவனுக்காகப் பேசுவதுமே தீர்க்கதரிசனம் உரைப்பதின் முதன்மையான காரியங்கள். தீர்க்கதரிசனம் உரைப்பதில் வருங்காரியங்களை முன்னறிவிப்பதும் அடங்கும். ஆனால், அதுவல்ல முதன்மையான காரியம். வருங்காரியங்களை முன்னறிவிப்பதுதான் தீர்க்கதரிசனம் உரைப்பதின் முதன்மையான காரியம் என்றால், தீர்க்கதரிசனம் உரைப்பது குறிசொல்லுதலுக்குச் சமானமாகிவிடும். கிளி ஜோசியம், குருவி ஜோசியம்போல் இது ஒரு ஜோசியமாகிவிடும். தேவனை அறியாத மக்கள் தங்கள் எதிர்காலத்தை அறியுமாறு குறிகாரர்களைத் தேடுவதுபோல், வருங்காரியங்களைத் தெரிந்துகொள்ள தேவ மக்கள் “தீர்க்கதரிசிகளைத்” தேடுவது துர்ப்பாக்கியம்.

என் அறிவின்படி, புதிய ஏற்பாட்டில், ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே வருங்காரியங்களைத் தெரிவிக்கும் வகையில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்கிறது (அப். 21:9-11).

3. தீர்க்கதரிசனம் - வரம்

பரிசுத்த வேதாகமம் ஆரம்ப வரங்கள், அற்புத வரங்கள், முதிர்ச்சியின் வரங்கள் என பலவகையான வரங்களைப்பற்றிப் பேசுகிறது. தேவனால் மறுபடி பிறந்த தேவமக்கள் எல்லாருக்கும் நித்திய ஜீவன் (ரோமர் 6:23), பரிசுத்த ஆவி (அப். 2:38) ஆகிய இரண்டு ஆரம்ப வரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வரம் என்பதை கொடை அல்லது ஈவு என்று சொல்வது சிறப்பாக இருக்கும். 1 கொரிந்தியர் 12:8-10 அற்புத வரங்களைப்பற்றியும், ரோமர் 12:3-8 முதிர்ச்சியின் வரங்களைப்பற்றியும் பேசுகின்றன.

வேதாகமத்தில் "ஆரம்ப வரங்கள்" "அற்புத வரங்கள்" என்று இருப்பதுபோல், தேவ மக்கள் வளர்ந்து முதிர்ச்சியடையும்போது அவர்கள் வாழ்க்கையில் காணப்படுகிற "முதிர்ச்சியின் வரங்கள்" ரோமர் 12:3-8இல் காணப்படுகின்றன. இவை குணநலன்களைப்பற்றிய வரங்கள்.

  1. தீர்க்கதரிசனம் உரைத்தல்: இது தேவனுடைய மனதை நேர்த்தியாக நிதானித்து எடுத்துரைக்கும் குணம்.
  2. ஊழியம் செய்தல்: இது மேடையேற விரும்பாமல் திரைக்குப்பின்னால் சபை, சமுதாயம், வீடு போன்று எல்லா இடங்களிலும் பணிவிடை செய்யும் குணம்.
  3. போதித்தல்: தேவனைப்பற்றிய உண்மைகளைப் பேசும் குணம்.
  4. ஊக்குவித்தல்: தேவனுடைய உத்தமத்தைப்பற்றிய தங்கள் சாட்சியை எடுத்துரைத்து மக்களைக் கட்டியெழுப்பும் குணம்
  5. பகிர்ந்துகொடுத்தல்: தேவனுக்கும் மக்களுக்கும் வலதுகை கொடுப்பது இடதுகைக்குத் தெரியாமல் தன் வளங்களைப் பகிர்ந்துகொள்ளும் குணம்.
  6. நிர்வகித்தல்: காரியங்களைச் சாமர்த்தியமாகக் கையாளும் குணம்.
  7. இரக்கம் காட்டுதல்: பிறருக்காக மனதுருகும் கனிவான குணம். இது விருந்தோம்பலோடு தொடர்புடையது.

மனிதர்களின் தேவைகளும் குறைகளும் பற்பல! வரம் பெற்றவர்கள் அவை அனைத்தையும் கையாளவும் நிறைவு செய்யவும் வேண்டுமா? இல்லை! உதவுவதற்கும், திருத்துவதற்கும் வரம்பு உண்டு. ஆண்டவராகிய இயேசுவும்கூட பெரும்பாலும் தம்மிடத்தில் வந்தவர்களுக்கு ஊழியம் செய்தார்; அவரிடத்தில் வந்த பிசாசு பிடித்தவர்கள், நோயாளிகள், மதத்தலைவர்கள் ஆகியோரோடு அவர் இடைப்பட்டார். மனமில்லாதவர்களைத் தேடிப் போய் அவர்களோடு வாக்குவாதம் நடத்தவில்லை. அப்படியே, தேவன் தம் மக்களில் உருவாக்கும் முதிர்ச்சியின் வரங்களுக்கு வரம்பு உண்டு.

  1. ஒருவன் தனக்கு அருளப்பட்ட விசுவாச வரம்புக்கு உட்பட்டு தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும். ஒருபோதும் தன் விசுவாச வரம்புக்கு அப்பாற்பட்டதையும், அப்பாற்பட்டவர்களையும் திருத்த முயலக்கூடாது.
  2. ஊழியம்செய்கிறவன், 3) போதிக்கிறவன், 4) ஊக்குவிக்கிறவன் ஆகிய மூவரும் காத்திருக்க வேண்டும். ஊழியன் பணிவிடை செய்வதற்குத் தேவனே தன்னிடம் காரணத்தையும், ஆட்களையும் கொண்டுவரும்வரைக் காத்திருக்க வேண்டும். போதிக்கிறவன் சாரமற்ற, அற்பமான, சுவையான தகவல்களைப் பேசாமல், தேவனுடைய சத்தியத்தைப் பேசக் காத்திருக்க வேண்டும். ஊக்குவிக்கிறவன் தேவையுள்ளவர்கள் ஆலோசனையோ, அறிவுரையோ கேட்கும்வரை காத்திருக்க வேண்டும்.
  3. பகிர்ந்து கொடுப்பவன் வஞ்சனையில்லாமல் கொடுக்க வேண்டும். யாருக்கும் தெரியாமல் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட வேண்டும்.
  4. நிர்வகிப்பவன் எந்த அளவுவரை கவனமாகச் செய்ய முடிகிறதோ அந்த அளவுக்குத்தான் செய்யவேண்டும்.
  5. இரக்கம் செய்கிறவன் உற்சாகத்தோடு இரக்கம் செய்ய வேண்டும். எதுவரை உற்சாகமாகச் செய்ய முடியுமோ அதுவரை செய்ய வேண்டும்.

எல்லா வரங்களுக்கும் ஒரு வரம்பு இருக்க வேண்டும். இல்லையென்றால், வரங்களையுடையவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தாங்கள் இடைப்படும் மக்கள் பலரை அழிப்பார்கள். முடிவில் தாங்களும் வலுவிழந்து வளமிழந்து, சோர்ந்துபோவார்கள். எனவே, பேய்களைத் தேடிப்போக வேண்டாம். வேறுபட்டு விசுவாசிக்கின்ற எல்லாரையும் திருத்துவது நம் வேலை என்று நினைக்க வேண்டாம். நம் செயல்பாடுகள் நம் விசுவாச வரம்புக்குள் இருக்க வேண்டும். அதிகமான காரியங்களை நிர்வகிக்க வேண்டும் என்ற உந்துதலை மறுக்க வேண்டும். நம் கதைகளை மட்டுப்படுத்த வேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களைச் சரி செய்யவேண்டும் என்ற போக்கை மட்டுப்படுத்த வேண்டும். அன்போடு நடந்துகொண்டு, நம்மைச் சுற்றியுள்ள எல்லாரையும், எல்லாவற்றையும் நம் ஜெபமாக மாற்றுவோம். "நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்...நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை... எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மைபாராட்டமாட்டோம்" (2 கொரி. 10:13-15).

1 கொரிந்தியர் 12இல் சொல்லப்பட்டுள்ளபடி தீர்க்கதரிசனம் உரைத்தல் ஓர் அற்புத வரம். தேவ மக்கள் எல்லாரிடமும் ஆரம்ப வரங்கள் உண்டு. கிறிஸ்துவுக்குள் வளர்ந்து முதிர்ந்த தேவ மக்களிடம் முதிர்ச்சியின் வரங்கள் இருக்கும். தேவன் அற்புத வரங்களை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஒருவன்மூலமாக அற்புத வரங்கள் வேலைசெய்வதால் அவன் கிறிஸ்துவுக்குள் வளர்ந்தவன் என்றோ அல்லது முதிர்ச்சியடைந்தவன் என்றோ பொருள் இல்லை. அற்புத வரங்களுக்கும் வளர்ச்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சில எடுத்துக்காட்டுகள்மூலம் நான் இதைத் தெளிவாக்குகிறேன். பிலேயாமின் கழுதை மனித மொழியைப் பேசியதால் அது பரிசுத்தமான கழுதையா? அது மனிதக் கழுதையா? அதன் குணம் மாறிவிட்டதா? அது கழுதைதான்.

கொரிந்து சபையில் அற்புத வரங்கள் அத்தனையும் செயல்பட்டபோதும், அவர்களிடையே இருந்த அசிங்கமான பாவங்கள் நமக்குத் தெரியாதவை அல்லவே!

தேவன் யாருக்கு வேண்டுமானாலும் அற்புத வரங்களைக் கொடுக்கலாம். சேவல் கூவியதால் பேதுரு மனந்திரும்பினார். அப்படியானால் அது பரிசுத்தமான சேவலா?

பவுலின் உடலில் ஒரு முள் கொடுக்கப்பட்டிருந்தது. அது சாத்தானின் தூதன் என்று சொல்லப்பட்டிருக்கிறது (2 கொரி. 12:7). ஒரு மனிதன் தன்னை உயர்த்திவிடக்கூடாது என்பதற்காகத் தேவன் சாத்தானைக்கூடப் பயன்படுத்தலாம். யோபுவைச் சோதிக்கத் தேவன் சாத்தானை அனுமதிக்கவில்லையா? அதாவது பயன்படுத்தவில்லையா?

பலவீனங்களோ, தோல்விகளோ இல்லாத பூரணமான மனிதர்களைத்தான் தேவன் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த உலகத்தில் தேவன் ஒருவனைக்கூடப் பயன்படுத்த முடியாது. தேவன் ஒருவரைத்தவிர இந்த உலகத்தில் பூரணமான நபர் வேறு யாராவது உண்டா? படுமோசமானவர்களைக்கூடத் தேவன் வல்லமையாகப் பயன்படுத்தலாம். ஆவியானவர் சிம்சோனின்மேல் வல்லமையாக இறங்கினாரே! பெலிஸ்தர்களைக் கட்டுப்படுத்தவும், இஸ்ரயேலைக் காப்பாற்றவும் தேவன் அவனைப் பயன்படுத்தினாரே! அவன் தான் விரும்பிய பெலிஸ்தியப் பெண்ணைத் திருமணம் செய்வதில் பிடிவாதமாக இருந்தான் (நியா. 14:2); திருமண விருந்தின்போது முட்டாள்தனமான பந்தயம் வைத்தான் (நியா. 12:12-13); காசாவில் ஒரு வேசியோடு வாழ்ந்தான். இவைகளெல்லாம் அருவருப்பான் செயல்கள் இல்லையா? அவனுடைய வாழ்க்கைமுறை, தந்திரங்கள், செயல்கள் ஆகியவைகள் அவனைத் திருப்திப்படுத்துவதற்காகவே இருந்தன, தேவ மக்களுடைய நலனுக்காக அல்ல. ஒருவனுடைய வாழ்க்கையின் ஒரு பரிமாணத்தில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை செயல்படுவதால், அவனுடைய வாழ்க்கையின் எல்லாப் பரிமாணங்களிலும் தேவ தரத்தின்படியான ஒழுக்கமும், முதிர்ச்சியும் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதுபோல, ஆவிக்குரிய வரங்கள் அந்தரங்கமான பாவங்களைக் கண்டுகொள்ளாமலிருப்பதற்கான போர்வை அல்ல.

மத்தேயு 7:21-23 பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். பலர் உண்மையாகவே கர்த்தருடைய நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள், பிசாசுகளைத் துரத்துகிறார்கள், அற்புதங்கள் செய்கிறார்கள். தேவன் இவர்களைப் பாராட்ட வேண்டாமா? அவர் சொன்ன பதில் நமக்குத் தெரியும். இயேசு சும்மா சொன்னாரா?

பிற சீடர்களைப்போல் யூதாசும் பேய்களைத் துரத்தியிருப்பான், அற்புதங்கள் செய்திருப்பான்.

"அப்பொழுது ராமாவுக்கடுத்த நாயோதிற்குப் போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவன் ராமாவுக்கடுத்த நாயோதிலே சேருமட்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து, தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல் முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்," என்ற 1 சாமுவேல் 19:23-24யை வாசித்து இதைப் புரிந்துகொள்ளலாம்.

தீர்க்கதரிசனம் தேவனுடைய கொடை. 1 கொரிந்தியர் 12யை வாசிக்கவும்.

4. கள்ளத் தீர்க்கதரிசி - அடையாளம்

கள்ளத் தீர்க்கதரிசியை அடையாளம் காண்பதற்கு வேதாகமம் பல அளவுகோல்களை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, ஒருவன் கர்த்தருடைய பெயரால் சொல்லுகிற காரியம் நடக்கவில்லையென்றால், நிறைவேறவில்லையென்றால் அவன் கள்ளத்தீர்க்கதரிசி. "ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்" (உபா. 18:22). இதை நாம் எளிதில் புரிந்துகொள்கிறோம். சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவன் பொய்யன் என்பதைப் புரிந்துகொள்வதைப்போல், ஒருவன் சொன்னது நடக்கவில்லையென்றால் அவன் பொய்யன் என்பதையும் நாம் எளிதில் புரிந்துகொள்கிறோம். ஆனால், ஒரு காரியம் நூறு ஆண்டுகளுக்குப்பின் நடக்கப்போவதாக ஒருவன் சொன்னால் அதை எப்படி நிரூபிக்கமுடியும். அது நடக்குமா நடக்காதா என்று நமக்கு எப்படித் தெரியும்? நாம் அதுவரை உயிரோடு இருந்தால்தானே அதை நிரூபிக்க முடியும். எனவே, இந்த அளவுகோலின்படி ஒருவன் உண்மையான தீர்க்கதரிசியா இல்லையா என்று சொல்ல முடியாது.

அப்படியானால் உண்மையான தீர்க்கதரிசியை அடையாளம் காண வேறு அளவுகோல் வேண்டும். அது என்ன? ஒருவன் சொல்லுகிற காரியம் நடந்தால் அல்லது அவனால் அற்புதங்களும், அடையாளங்களும் நடந்தால் அவன் உண்மையான தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொள்ளலாமா? இல்லை. அவன் சொன்னது நடந்தாலும், அவனால் அற்புதங்களும், அடையாளங்களும் நடந்தாலும் அவன் உண்மையான தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொள்ளக் கூடாது. இன்னொரு அளவுகோல் இருக்கிறது. "உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக. அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப்பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக" (உபா. 13). அவனுடைய தீர்க்கதரிசனம் மக்களைத் “தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகும்படிச் செய்தால்” அவன் கள்ளத் தீர்க்கதரிசி. தங்களை மீட்டு இரட்சித்தத் தேவனைவிட்டு விலக்கி வேறே தேவர்களைப் பின்பற்றவும், அவர்களைச் சேவிக்கவும் செய்தால் அவன் கள்ளத்தீர்க்கதரிசி.

ஒருவனுடைய தீர்க்கதரிசனம் மக்களைத் தேவனிடம் நடத்துகிறதா அல்லது தேவனைவிட்டு விலக்கிச் செல்கிறதா என்பதுதான் உண்மையான தீர்க்கதரிசனத்தின் அளவுகோல் என்றால் ஒருவன் தேவனைப் போதுமான அளவுக்கு அறிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஒருவனுடைய செய்தி தன்னைத் தேவன்பால் ஈர்க்கிறதா அல்லது அவரைவிட்டு விலக்குகிறதா என்று எப்படித் தெரியும்? ஒரு தீர்க்கதரிசி நம்மைப் பொய்த் தேவர்களுக்கு நேராக நடத்துகிறானா இல்லையா என்று தீர்மானிக்குமுன் தேவன் தம்மைப்பற்றி என்ன வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். மக்கள் பொய்த் தேவர்களுக்கு வேதாகமத்திலுள்ள பெயர்களைக்கூடக் கொடுப்பார்கள். யோவான் இதைப்பற்றிப் பேசுகிறார்.

"பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்" (1 யோவான் 4:1-6)

"கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்" (2 யோவான் 9).

ஒரு காரியம் தேவனுக்குரியதா இல்லையா என்று பகுத்துணர வேண்டும். கலாத்தியர் 1:8-9இல், "நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்," என்று பவுலும் இதைப்பற்றிப் பேசுகிறார். “என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்,” (மத். 12:30) என்று ஆண்டவராகிய இயேசுவும் சொன்னார்.

"யோவாப் அப்சலோமின் பட்சம் சாயாதவனாயிருந்தும், அதோனியாவின் பட்சம் சாய்ந்திருந்தான்" (1 இரா. 2:28). தாவீதுக்கு எதிராக அவனுடைய மகன் அப்சலோம் கலகம்செய்தபோது, தாவீதின் படைத்தளபதி யோவாப் அப்சலோமின் பக்கம் சாயவில்லை. தாவீதின் பக்கம் உறுதியாக நின்றான். ஆனால், தாவீதின் கடைசிக் காலத்தில் அப்சலோமின் தம்பி அதோனியா முடிசூட்ட முயன்றபோது யோவாப் அவன் பக்கம் சாய்ந்தான். கடந்த காலத்தில் நாம் வெற்றிபெற்ற காரியங்களில் தடுமாறவோ, தோற்கவோ மாட்டோம் என்று எண்ணுவது இறுமாப்பு. சோதனை எங்கு, எப்போது, எப்படி வரும் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. எந்தச் சோதனையில் வென்றதாக நினைக்கிறோமோ, அதே சோதனை வேறு வடிவத்திலும், அளவிலும், வண்ணத்திலும் வரும். பெரும்பாலானவர்கள் தங்கள் பலவீனமான பகுதிகளில் தோற்பதில்லை, பலமான பகுதிகளில்தான் தோற்கிறார்கள். ஏனென்றால், பலமான கோட்டையெனக் கருதி காவலைக் குறைத்துவிடுகிறோம். எதிரி எளிதாகத் தாக்கி அழித்துவிடுகிறான். பெரிய சோதனையில் வெல்கிறோம். சிறிய சோதனையில் தோற்றுவிடுகிறோம். மலைகளைத் தாண்டுகிறோம், புல்லில் தடுக்கிவிழுகிறோம். எச்சரிக்கையாயிருப்போமாக!

தேவன்மேலும், தேவனுடைய வார்த்தையின்மேலும் உள்ள பசியைத் தணிக்கின்ற, தடுக்கின்ற யாவுமே ஒரு வகையில் சிலைவழிபாடுதான். உணவு உடைபோன்ற வாழ்வின் அடிப்படைத் தேவைகள் நஞ்சல்ல (மத். 6:31); "என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்." புசிப்பதும் குடிப்பதும், பெண் கொள்வதும் கொடுப்பதும், வாங்குவதும் விற்பதும், நட்டுவதும் கட்டுவதும் துன்மார்க்கம் அல்ல (லூக். 17:27-30); "நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது. லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்." பார்வைக்கு இனியதும், அறிவைப் பெறுவதற்கு விரும்பத்தக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், செய்தித்தாள்களும் மட்டமானவை அல்ல (ஆதி. 3:6); "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்." “வயலும் வியாபாரமும், மாடுகளும் மனைவியும்” சாத்தானின் தந்திரம் அல்ல (லூக்கா 14:18-20); "அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப்பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்." தேவனுடைய வரங்கள் அவருடைய எதிரிகள் அல்ல. இவைகளெல்லாம் தேவனை அவருக்குரிய இடத்திலிருந்து தள்ளிவிட முடியும். இந்த சிலைவழிபாட்டை அடையாளம் காண்பது அரிது, அடையாளம் கண்டாலும் ஒப்புக்கொள்வது அரிதிலும் அரிது, ஒப்புக்கொண்டாலும் குணப்படுத்துவது அதிலும் அரிதோ அரிது.

5. கள்ளத் தீர்க்கதரிசிகள் ஆபத்தானவர்கள்

பொய்ப் போதகத்தினால் ஒருவன் பிறரை ஜீவனுள்ள தேவனைவிட்டு வழிவிலகச் செய்தால் அவன் தேவனுடைய ஆக்கினைத் தீர்ப்புக்குத் தப்பமாட்டான். இது வெளிப்படையான உண்மை. கள்ளத் தீர்க்கதரிசிகள் ஆபத்தானவர்கள் என்பதற்கு வேறு இரண்டு காரணங்களும் உள்ளன. ஒன்று, கள்ளத் தீர்க்கதரிசி என்ற வார்த்தையிலேயே அந்தக் காரணம் அடங்கியிருக்கிறது. அவன் வஞ்சகன். அவன் தேவனுடைய பெயரால் தேவனுடைய வார்த்தையைப் பேசுவான். இது கவர்ச்சியாக இருக்கும். அவன், “வாருங்கள், நாம் அருவருப்பான பாவங்களைச் செய்வோம்,” என்று சொன்னால் பலர் அவன் பின்னால் போக மாட்டார்கள். ஆனால், கள்ளத் தீர்க்கதரிசி ஆவிக்குரியவன்போலவும், உண்மையுள்ளவன்போலவும் காட்டுவான், நடிப்பான். இரண்டு, கள்ளத் தீர்க்கதரிசிகள் வெளியேயிருந்து வரலாம். ஆனால், அவர்கள் உள்ளேயிருந்து எழும்பும்போது அதை எதிர்ப்பது கடினமாகிவிடும். உள்ளேயிருந்து எழும்பும் கள்ளத்தீர்க்கதரிசி நம் குடும்பத்தில்கூட இருக்கலாம். "நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்" (அப். 20:29). இது வெளியேயிருந்து வரும் கள்ளத் தீர்க்கதரிசி); "உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்" (அப். 20:30) இது உள்ளேயிருந்து எழும்பும் கள்ளத் தீர்க்கதரிசி); "அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள். அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான். மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான்" (அப். 13:6-8). இது குடும்ப உறுப்பினராக இருக்கலாம்.

தேவனுடைய வார்த்தை ஒருவனுடைய வாழ்க்கையின் ஆதாரமாக இல்லையென்றாலும், கிறிஸ்து ஒருவனுடைய ஜீவனாக இல்லையென்றாலும் அவன் நேரடியாகவும், வெளிப்படையாகவும் வரும் தாக்குதல்களை ஒருவேளை இனங்காணவும், எதிர்த்து முறியடிக்கவும் கூடும். கள்ள நோட்டு கருப்பு நிறத்தில் இருந்தால் அது கள்ள நோட்டு என்று எளிதாகத் தெரியும். ஆனால், கள்ள நோட்டு அச்சுஅசலில் நல்ல நோட்டுபோலவே தெரியும். எனவே, அதை இனங்காண்பது அரிது. "லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல" (கொலோ. 2:8) என்று பவுல் குறிப்பிடுகிற கலாசாரத்திலும், போலி ஆவிக்குரிய பதங்களிலும், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்கிறவர்களுடைய நய வசனிப்பிலும்...இச்சகப் பேச்சிலும்” (ரோமர் 16:18), வசனங்களை மேற்கோள்காட்டுவதிலும், பிரசங்கங்களிலும், நற்செயல்களிலும் மறைந்திருக்கும் வஞ்சகத்தை இனங்காண்பதும், எதிர்ப்பதும் கடினம். "நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது," என்று வெளிப்படுத்தின விசேஷம் 13:2இல் பார்ப்பதுபோல், வலுசர்ப்பம் “சிறுத்தை, கரடி, சிங்கம்”போலவும் (வெளி. 13:2), எதிரிகள் “ஓநாய்கள்”போலவும் (அப். 20:29), நேரடியாகவும், வெளிப்படையாகவும் தாக்கும்போது அதை இனங்கண்டு, எதிர்க்கலாம். ஆனால் வலுசர்ப்பம் “ஆட்டுக்குட்டியாகவும்” (வெளி. 13:11), எதிரிகள் “சகோதரர்களாகவும்” (2 கொரி. 11:26; அப். 20:30; 2 கொரி. 11:13; 2 தீமோ. 2:16; 2 பேதுரு 2:1; 1 யோவான் 4:1) ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு வரும்போது அதை இனங்கண்டு எதிர்ப்பது கடினம்.

இஸ்ரயேலர் எரிகோவையும், ஆயியையும் கைப்பற்றியதைக் கேள்விப்பட்ட கிபியோனியர் இஸ்ரயேலரை நேரடியாகவும், வெளிப்படையாகவும் எதிர்க்கமுடியாது என்று தெரிந்து, வஞ்சகத்தால் அவர்களோடு உடன்படிக்கைசெய்தார்கள். அவர்கள் இஸ்ரயேலர்களை எப்படி வஞ்சித்தார்கள் தெரியுமா? "அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய கீர்த்தியையும், அவர் எகிப்திலே செய்த யாவையும், அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த எமோரியரின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த யாவையும் கேள்விப்பட்டோம். ஆகையால், எங்கள் மூப்பரும் எங்கள் தேசத்துக் குடிகளெல்லாரும் எங்களை நோக்கி: உங்கள் கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடத்தில்: நாங்கள் உங்கள் அடியார், எங்களோடே உடன்படிக்கை பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள். உங்களிடத்தில் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்கள் வழிப்பிரயாணத்துக்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டுவந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது. நாங்கள் இந்தத் திராட்சரசத் துருத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோயிற்று; எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாலே பழசாய்ப்போயிற்று என்றார்கள். அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள்" (யோசுவா 9:9-12). தாங்கள் தூரமான நாட்டிலிருந்து வருவதாகக் காட்டிக்கொள்ள பழைய கோணிப்பை, பழைய திராட்சைத்துருத்தி, பழைய மிதியடி, பழைய ஆடைகள், பூசணம்பூத்த பழைய உணவுகளோடு யோசுவாவிடம் வந்து, தேவனையும் தேவனுடைய அற்புதச் செயல்களையும் இஸ்ரயேலர் பிற அரசர்களுக்கும், அவர்களுடைய நாடுகளுக்கும் செய்ததைப் புகழ்ந்து பேசினார்கள், பாராட்டினார்கள். யோசுவா உட்பட இஸ்ரயேலர் அனைவரும் அவர்களுடைய தோற்றத்திலும், பேச்சிலும் ஏமாந்தார்கள், அவர்களுடைய முகஸ்துதியில் மயங்கினார்கள் அவர்கள் கர்த்தரிடம் நேரடியாக விசாரிக்கவில்லை. தேவனுடைய வழிகாட்டுதலோ, வழிநடத்துதலோ இல்லாமலே கிபியோனியரோடு உடன்படிக்கை செய்தார்கள் (யோசுவா 9:14). தேவனுடைய எண்ணத்தை அறிய முனையாததும், தேவனுடைய பகுத்துணரும் ஞானம் இல்லாததுமே நம் பல வீழ்ச்சிகளுக்குக் காரணம்.

6. கள்ளத்தீர்க்கதரிசிகளிடம் எப்படி நடக்க வேண்டும்?

மூன்று காரியங்கள். ஒன்று, கள்ளத் தீர்க்கதரிசிகள் தேவனுடைய இறையாண்மைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. நாம் நம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் கர்த்தரிடத்தில் அன்பாயிருக்கிறோமா இல்லையா என்பதைத் தேவன் கள்ளத்தீர்க்கதரிசிகள்மூலமாக சோதிப்பார். "அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக" (உபா. 13:3-4).

இரண்டாவது, சத்தியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும், நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம்மிடம் பகுத்துணர்வு இருக்காது. அதனால் நாம் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்குப் பலியாவோம்.

மூன்றாவது, கள்ளத்தீர்க்கதரிசிகளை தேவ மக்களிடமிருந்து விலக்க வேண்டும். இல்லையென்றால் தேவ மக்கள் படிப்படியாக அவர்களை நம்ப ஆரம்பிப்பார்கள். இதன் விளைவாக அவர்கள் பெரும் சேதத்தை உண்டாக்குவார்கள் "நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்...நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை... எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மைபாராட்டமாட்டோம்" (2 கொரி. 10:13-15). "பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்" (1 யோவான் 4:1-6)