Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

கொல்லைப்புறத்துக் கோயிலின் கூலிக்கார லேவியன்

By மெர்லின் இராஜேந்திரம்

(நியாயாதிபதிகள் 17-21)

நீதிபதிகளின் காலத்தில் இஸ்ரயேல் மக்களின் ஒழுக்கம் தாழ்ந்தது, ஆவிக்குரிய தரம் வீழ்ந்தது, அறிவுத்திறன் மழுங்கியது; தேவ குணங்களும், உயர் மனிதப் பண்புகளும் சிதைந்தன. சில வேளைகளில், இவை கண்கூடாகத் தெரிந்தன; வேறு சில வேளைகளில், மங்கலாகத் தெரிந்தன.

மீகா என்பவன் தன் தாயிடம் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகளைத் திருடுகிறான்.

தாயிடம் திருடும் என்னே மகன்! அவனுடைய தாய் பணத்தைத் திருடியவனைச் சபிக்கிறாள். திருடியது மகன்தான் என்று தெரியாமல் திருடனைச் சபிக்கும் தாய்! "நான்தான் அந்தப் பணத்தைத் திருடினேன்," என்று மீகா ஒப்புக்கொள்கிறான். தன் தாயின்மேல் கொண்ட அன்பினாலோ அல்லது பாவத்தின் அருவருப்பைப்பற்றிய உணர்வினாலோ இல்லை, தாயின் சாபம் தனக்கு வந்துவிடக்கூடாது என்ற பயத்தினால்தான் அவன் தன் தவற்றை ஒப்புக்கொள்கிறான்.

பாவத்தின் அசிங்கத்தைப் பார்த்து பலர் மனந்திரும்புவதில்லை. மாறாக, தங்களுடைய பாவம் பிறருக்குத் தெரிந்துவிட்டதே என்பதற்காக வருத்தப்படுவார்கள்.

மீகாவின் தாய், "மகனே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக" என்று தன் மகனை ஆசீர்வதிக்கிறாள். இது திருடியதை ஒப்புக்கொண்ட மகனுக்குத் தாயின் வெகுமதியா!

"கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!" என்று கர்த்தருடைய பெயரைச் சொன்னவுடன், பக்தியுள்ள வார்த்தைகளைக் கேட்டவுடன் ஏமாந்துவிட வேண்டாம்! தொடர்ந்து வாசிக்கும்போது, அவளுடைய உண்மையான உள்ளம் வெளிவருகிறது! அங்கு உடன்படிக்கையின் கூடுதான் இருக்கிறதேதவிர, உடன்படிக்கையின் உத்தமம் இல்லவே இல்லை. காலியான கூடு! வெறுமையான ஓடு! கர்த்தர் என்ற பெயரை மட்டும் வைத்திருந்தார்கள், கர்த்தருக்குரிய எதுவும் அங்கு இல்லை. உடன்படிக்கையின் தேவனுக்கு உத்தமமாக இருப்பதற்குப்பதிலாக, உலகத்தின் தேவர்களோடு சமரசம் செய்துகொண்டார்கள். உடன்படிக்கையின் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வதற்குப்பதிலாக, அதில் கலப்படம் செய்துகொண்டார்கள். சமரசம்! கலப்படம்! குளறுபடி! இவைகள் மேலோங்கிநின்றன!! இன்றும் அப்படியே! காலம் மாறவில்லை! மனிதன் மாறவில்லை! மனிதனின் மனமும், குணமும் மாறவில்லை! தேவனும் மாறவில்லை! மாற வேண்டியவன் மனிதன், தேவனல்ல!

திருடப்பட்ட பணம் திரும்பக் கிடைத்தவுடன் அவள், "செதுக்கப்பட்ட ஒரு சுரூபத்தையும், அச்சில் வார்க்கப்பட்ட ஒரு சிலையையும் உண்டு பண்ண... இந்த வெள்ளியை …முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன்," என்று அதைத் தன் மகனிடம் திரும்பக் கொடுக்கிறாள். நன்றியுணர்வோ! காணிக்கையோ!

"செய்யக்கூடாது" என்று சீனாய் உடன்படிக்கை மீண்டும் மீண்டும் தடைசெய்த செயலைச் செய்வதற்கு கொஞ்சம்கூடப் பயம் இல்லை! அவளுடைய உண்மைச் சாயல் அம்பலமாகிறது! தேவனுடைய தரத்தைத் தங்கள் தரத்துக்குத் தாழ்த்துகிறார்கள். ஆராதனை என்ற பெயரில் அட்டூழியம் அரங்கேறுகிறது. இது ஆசரிப்புக் கூடாரத்து ஆராதனையின் வீட்டுப் பதிப்பா? அவன் அந்தப் பணத்தை சுரூபம் செதுக்குவதற்கும், சிலை வடிப்பதற்கும் தன் தாயிடம் திரும்பக் கொடுத்தான். அவள் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து ஒரு தட்டானிடம் கொடுத்து சுரூபம் செதுக்கச் சொன்னாள், சிலை வடிக்கச் சொன்னாள். இதிலும் பித்தலாட்டம்! ஆயிரத்து இருநூறு வெள்ளிக்காசுகளையும் கர்த்தருக்கு நியமித்ததாகச் சொன்னாள். ஆனால், ஆயிரம் வெள்ளிக்காசுகளைத் தன்னிடம் வைத்துக்கொண்டு இருநூறு காசுகளை மட்டுமே இப்போது கொடுக்கிறாள்.

பேராசை சிலைவழிபாட்டைக்கூட விழுங்கிவிடுகிறது! செதுக்கப்பட்ட சுரூபமும், வார்ப்பிக்கப்பட்ட சிலையும் மீகாவின் வீட்டில் வைக்கப்பட்டன. இந்தச் சுரூபம் தாய்க்கும் மகனுக்கும் இடையே தற்காலிகமாக முறிந்திருத்த உறவைச் செப்பனிடும் சின்னமா! வெள்ளிக்காசைத் திருடியவன்மேல் கூறிய சாபத்தைத் தடுக்க இது ஒரு தாயத்தா! ஒரு மந்திரமா! மீகாவின் மதச் சமரசம், மதக் குளறுபடி, மதக் கலப்பு, மிகவும் ஆழமானது. அவன் தன் வீட்டில் ஒரு சிறு கோவில் கட்டி அந்தச் சுரூபத்தையும், சிலையயையும், அங்கு வைத்தான். அவன் உருவாக்கிய தேவர்கள்!! மனிதன் தேவர்களை உருவாக்குகிறான்! என்ன பெயர் வைத்தானோ! ஜெபங்கள் ஏறெடுப்பதற்கும், பலிகள் செலுத்துவதற்கும் அவன் தன்னுடைய ஒரு மகனை ஆசாரியனாகப் பிரதிஷ்டை பண்ணினான். அவனுக்கு ஆசாரியனுக்குரிய ஏபோத் என்னும் உடைகளையும் செய்தான். சீனாய் உடன்படிக்கையின்படி, அந்த நேரத்தில், ஒரேவொரு ஆசாரிப்புக்கூடாரம்தான் இருக்க வேண்டும்; அங்கு லேவியர்கள் மட்டுமே ஆசாரியர்களாக இருக்க வேண்டும். உடன்படிக்கை முறிந்தது! உடன்படிக்கையின் உத்தமம் உடைந்தது! மீகா மீறினான், வரம்புமீறினான், உடன்படிக்கையை மீறினான்! உடன்படிக்கையின் உறவை உடைத்தான்! அப்போது, பிழைப்புக்காகத் தனக்கு வசதியான இடங்களுக்குப் பயணம் செய்கிற ஒரு லேவியன் அந்த ஊருக்கு வந்தான். ஊர் ஊராகப் போகிற லேவியன்! பிழைப்புத் தேடும் லேவியன்! தன் அழைப்பை விற்கும் லேவியன்! ஆசாரியத் தொழில் ஓர் ஆதாயத் தொழிலாகிவிட்டது.

இவன் ஏன் ஊர் ஊராகச் சென்றான்? அவனுடைய சொந்த ஊராகிய பெத்லகேமில் போதுமான வருவாய் இல்லையோ! ஆம், இஸ்ரயேல் மக்கள் அந்த நாட்களில் தேவனைத் தேடவில்லை, தேவனை தேவனுடைய வழிகளில் ஆராதிக்கவில்லை, தேவனுடைய உடன்படிக்கைக்கு உத்தமமாக இருக்கவில்லை! ஆசாரியர்களையும், லேவியர்களையும் அவர்கள் ஆதரிக்கவில்லை. எனவே, அவன் பிழைப்புத் தேடி போகிறான். வேறு வழி! இன்றும் இன்னும் நிலைமை மாறிவிடவில்லை! அவன் மீகாவின் வீட்டை வந்தடைந்தான். மீகா அந்த லேவியனைத் தன் வீட்டில் தனக்கு ஆசாரியனாக நியமிக்கிறான்.

தனியார் ஆசாரியன்! தனிநபர் ஆசாரியன்! தனிவீட்டு ஆசாரியன்! தனிநபருக்குச் சொந்தமான ஆசாரியன்! தனிமனித வழிபாட்டு ஆசாரியன்! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! லேவியனுக்குத் “தொழில்” கிடைத்துவிட்டது, ஊழியத்துக்கு இடம் கிடைத்துவிட்டது, நிலையான வருமானம் கிடைத்துவிட்டது. மீகாவுக்கு ஆசாரியன் கிடைத்துவிட்டான். இஸ்ரயேல் மக்களின் ஒழுக்கக் கேடு ஆசாரியர்களையும் பாதித்தது. இந்த லேவியன் பணம், பதவி , சிலைகள், சுரூபங்கள் ஆகியவைகளை ஒப்புக்கொண்டான்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம்.

மீகா தனிமனித ஒழுக்கக் கேட்டின், ஆவிக்குரிய வீழ்ச்சியின், அடையாளம்.

லேவியன் ஆசாரியனின் ஒழுக்கக்கேட்டின், ஆவிக்குரிய வீழ்ச்சியின், அடையாளம்.

உடன்படிக்கையின் கட்டமைப்பு முற்றிலும் மாறிவிட்டது. ஒழுங்கு, ஒழுக்கம், மறைந்துவிட்டன. அஞ்ஞானிகளின் மூடநம்பிக்கை மட்டுமே மிஞ்சியிருந்தது. "அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்" என்ற வாக்கியம் நீதிபதிகளின் புத்தகத்தில் பல இடங்களில் வருகிறது. ஆனால், இந்த அதிகாரத்தில்தான் அது முதன்முதலாக வருகிறது.

"நானே ராஜா! நானே மந்திரி!"

கொல்லைப்புறத்தில் கோயில் கட்டப்பட்டதும், கோயிலில் சிலைகளும், சுரூபங்களும் வைக்கப்பட்டதும், ஆசாரியன் சம்பளத்துக்கு அமர்த்தப்பட்டதும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறு சறுக்கல் என்று, ஒருவேளை, சிலர் நினைக்கக்கூடும். ஆனால், நியாயாதிபதிகள் 18ஆம் அதிகாரத்தை வாசிக்கும்போது அந்த எண்ணம் தவிடுபொடியாகிவிடும். முதலாவது ஒரேவொரு குடும்பம் மட்டுமே தடம்புரள்கிறது. ஆனால் 18ஆம் அதிகாரத்துக்கு வரும்போது, ஒரு கோத்திரம் தடம்புரள்கிறது. அதைத் தொடர்ந்து மற்ற கோத்திரங்களும் தடம்புரள்கின்றன. அப்போதைய வரலாற்றுப் பின்புலம் கொஞ்சம் தெரியவேண்டும். பன்னிரெண்டு கோத்திரங்களும் தங்களுக்குரிய எல்லா இடங்களையும் இன்னும் சுதந்தரிக்கவில்லை. அவர்கள் சுதந்தரிக்கவேண்டிய நிலங்களும், நகரங்களும் இன்னும் இருந்தன. "அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை" (நியா. 18:1). எனவே, உளவுபார்த்து வருமாறு தாண் கோத்திரத்தார் தம் கோத்திரத்தில் வலிமையுள்ள ஐவரை அனுப்புகிறார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய் எப்பிராயீம் மலையை அடைந்து, தற்செயலாக மீகாவின் வீட்டுக்குப் போகிறார்கள். மீகாவின் வீட்டில் ஓர் ஆசாரியன் இருப்பதை எப்படியோ அறிந்துகொள்கிறார்கள். அவனிடம் விசாரிக்கும்போது, மீகா தனக்குச் சம்பளம் தருவதையும், தான் அவனுக்கு ஆசாரியனாக இருப்பதையும் அவன் விவரித்துச் சொல்லுகிறான். தங்கள் பயணம் வெற்றியாக முடியுமா என்றும், தாங்கள் நினைத்தது கைகூடுமா என்றும் அவர்கள் அவனிடத்தில் விசாரிக்கிறார்கள். “சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது," (நியா. 18:6) என்று சொல்லி, அவன் அவர்களை வழியனுப்புகிறான். அவர்கள் புறப்பட்டுப்போய் லாயீசு என்ற நகரத்தை உளவுபார்க்கிறார்கள். இந்த நகரம் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் பகுதி இல்லை. நகரத்தை உளவுபார்த்துவிட்டு, தங்கள் கோத்திரத்தாரிடம் திரும்பிப்போய், "செல்வம் கொழிக்கும் நாட்டைக் கண்டோம். பாதுகாப்புடன் இருக்கும் மக்களைப் பார்த்தோம். அந்த நாட்டைக் கைப்பற்றுவதில் எந்தச் சிரமமும் இருக்காது. எழுந்திருங்கள். போவோம், வாருங்கள்," என்று சொல்லுகிறார்கள். தாண் கோத்திரத்தாரில் அறுநூறுபேர் ஆயுதங்களோடு புறப்பட்டுப்போகிறார்கள்.

லாயீசைத் தாக்குவதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, மீகாவின் வீட்டுக்குள் நுழைகின்றனர். கொல்லைப்புறத்துக் கோயிலில் இருக்கும் செதுக்கப்பட்ட சிலையையும், ஏபோத்தையும், சுரூபங்களையும் எடுக்கிறார்கள். லேவியனையும் அழைத்துக்கொள்கிறார்கள். இல்லை, இழுத்துக்கொள்கிறார்கள்.

“உளவுபார்க்க வந்தபோது ‘நினைத்த காரியம் நடக்கும்’ என்று 'நல்ல வார்த்தை' சொன்னவன் இந்த லேவியன். "நல்ல காலம்" பிறக்க இந்தக் கோயிலும், இங்குள்ள சிலைகளும் காரணம். இது ‘அதிர்ஷ்டத்தின்’ அடையாளம். இவைகளை நம்மோடு கொண்டுபோனால் இன்னும் 'யோகம்' பிறக்கும்" என்று அவர்கள் நினைத்திருக்கலாம்!

லேவியன் மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போய்விடுகிறான். ஒரு குடும்பத்துக்கு மட்டும் ஆசாரியனாக இருப்பதைவிட ஒரு கோத்திரத்துக்கு ஆசாரியனாக இருப்பது பதவி உயர்வு இல்லையா? ஒரேவொரு குடும்பத்தின் வருமானத்தைவிட ஒரு கோத்திரத்தின் காணிக்கையும், தசமபாகமும் அதிகம் இல்லையா? இது சம்பள உயர்வுதானே! பதவி உயர்கிறது! வருவாய் அதிகரிக்கிறது! பேரும், புகழும், செல்வாக்கும் பெருகும்! இப்படிப்பட்ட வாய்ப்பை நழுவவிடலாமா?

ஆனால், சம்பளத்துக்கு நியமிக்கப்பட்ட ஆசாரியனிடம் தேவனுடைய வார்த்தையை எதிர்பார்க்கலாமா? அவன் தேவனுக்கு உண்மையும் உத்தமுமாக இருப்பான் என்று எதிர்பார்க்கலாமா? சிலைகளையும், சுரூபங்களையம் கையோடு கொண்டுபோகிறவனிடம் தேவனுடைய வழிகளை எதிர்பார்க்கலாமா? பிழைப்புக்காகத் தேவனுடைய உடன்படிக்கையை சமரசம் செய்கிறவனிடம் தேவனுடைய சாட்சியை எதிர்பார்க்கலாமா? இவன் தன்னை "விற்கிறான்."

மீகா அவர்கள் பின்னால் பரிதாபமாகக் கதறிக்கொண்டு வருகிறான். "நான் உண்டுபண்ணின என் தெய்வங்களையும், என் ஆசாரியனையும், எனக்குண்டான அனைத்தையும் வாரிக்கொண்டு போகிறீர்கள்; இனி எனக்கு என்ன இருக்கிறது; ‘உனக்கு என்ன நேர்ந்தது?’ என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம்?" என்று கதறுகிறான் (18:24). அவனுடைய உளறலில் எத்தனை முரண்பாடுகள்! அவன் உண்டாக்கிய தேவர்கள்! அவனுடைய ஆசாரியன்! தான் உண்டாக்கிய தெய்வங்களோடு மனிதன் தன்னை எவ்வளவு இறுக்கமாக இணைத்துக்கொள்ளுகிறான்! "அதிர்ஷ்ட" தெய்வங்களையும், "அதிர்ஷ்ட" ஆசாரியனையும் மனிதன் எளிதாக விட்டுவிடுவானா?

மீகாவையும், அவன் குடும்பத்தாரையும் அழித்துவிடுவதாக தாண் புதல்வர் பயமுறுத்துகிறார்கள். மீகா பயந்து வீடு திரும்புகிறான்.

நீதியோ அல்லது நேர்மையோ அல்லது நியாயமோ அல்ல, மாறாக அதிகாரம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. வலியவன் எளியவனை மிதித்துவிடுவான். பலம், பணம், பதவி இன்றும் கோலோச்சுகின்றன.

அவர்கள் லாயீசு ஊரை அடைந்து "அச்சமின்றி அமைதியில் வாழ்ந்த மக்களை" வாளுக்கு இரையாக்கி, நகரத்தைத் தீயால் சுட்டெரிக்கிறார்கள். அந்த நகரத்துக்குத் தாண் என்று புதிதாகப் பெயர் சூட்டினர். அங்கு அவர்கள் தாங்கள் கொண்டுவந்த சிலைகளையும், சுரூபங்களையும் நாட்டுகிறார்கள். தங்கள் கையோடு அழைத்துக்கொண்டுவந்த லேவியனை ஆசாரியனாக அமர்த்துகிறார்கள். அவன் மோசேயின் வழித்தோன்றல் (18:30) என்று தெரியவருகிறது. அவனும், அவனுக்குப்பின் அவனுடைய சந்ததியும் தாண் கோத்திரத்தின் ஆசாரியனாகச் செயல்படுகிறார்கள்.

கொல்லைப்புறத்துக் கோயிலும், கோயிலின் சிலைகளும் சுரூபங்களும், கூலிக்கார ஆசாரியனும் ஒரு குடும்பத்திடமிருந்து ஒரு கோத்திரத்துக்குக் கைமாறுகின்றன(ர்). ஆனால், தேவனுடைய ஆசாரிப்புக்கூடாரம் இன்னும் அதற்குரிய இடமாகிய சீலோவில்தான் இருந்தது (18:30-31).

உடன்படிக்கைத்துரோகம்! நம்பிக்கைத்துரோகம்! இதை முளையிலே கிள்ளியெறியவில்லையென்றால் மேலும் பல பாவங்கள் கூடச்சேர்ந்துவிடும்: வன்முறை தாண்டவமாடும்! தன்னலம் வன்கொலோச்சும்! அதிகார வெறி ஆட்டிப்படைக்கும்! நன்றியீனம் கொடிகட்டிப்பறக்கும்! பண்பற்ற, பக்குவமற்ற முரட்டுப் பயமுறுத்தல்கள் பகிரங்கமாக விடப்படும்! மலைக்கவைக்கும் மூடநம்பிக்கைகள் மலையளவு உயரும்! இந்தப் பாவங்கள் ஒன்றாகச் சேர்ந்து வளர்வது அசாதாரணம் இல்லை!

நியாயாதிபதிகள் 19ஆம் அதிகாரத்துக்கு வரும்போது, இன்னும் முழுமையாக உருவாகாத, இப்போதுதான் மெல்லமெல்ல உருவாகிக்கொண்டிருக்கிற, இஸ்ரயேல் நாட்டில் காட்டாட்சி காட்டாற்று வெள்ளம்போல் கரைபுரண்டு ஓடுகிறது.

"கொல்லைப்புறத்துக் கோயில் கூலிக்கார" லேவியன் ஒரு பெண்ணைத் தன் மறுமனையாட்டியாகச் சேர்த்துக்கொள்ளுகிறான்.

லேவியர்கள் கன்னிகைகளை மட்டுமே திருமணம் செய்யவேண்டும் (லேவியர் 21:7, 13-15).

அவள் இங்கும் அங்கும் சுற்றித்திரிந்து அவனுக்குத் துரோகமாக விபச்சாரம் செய்கிறாள்; கடைசியாக, தன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போய்விடுகிறாள். அவள்மேல் கொண்ட பிரியத்தால், அவளைச் சமாதானப்படுத்தி, வீட்டுக்கு அழைத்துவர அவன் அவளைத் தேடி அவளுடைய சொந்த ஊராகிய பெத்லகேமுக்குப் போகிறான். அங்கு அவன் அவளைக் கண்டு, சமாதானப்படுத்தி, ஊருக்குத் திரும்ப ஆயத்தமாகிறார்கள். அப்போது, மாமனாரின் வேண்டுதலினாலும், வற்புறுத்தலினாலும் லேவியன் தன் மாமனார் வீட்டில் சிலநாட்கள் தங்கி உண்டு, குடித்து மகிழ்ச்சியாய் இருக்கிறான். சிலநாட்கள் கழித்து ஒருநாள் அங்கிருந்து புறப்படுகிறார்கள். பொழுதோடு புறப்பட்டிருந்தால் ஒரே நாளில் பத்திரமாக வீடு வந்து சேர்ந்திருக்கலாம். ஆனால், பொழுதுசாய்ந்தபின்தான் புறப்படுகிறார்கள். ஊருக்குப் போய்ச்சேரமுடியவில்லை. வழியில் ஓர் இரவு எங்காவது தங்க வேண்டிய கட்டாயம். கானானியருடைய பட்டணத்தில் தங்க விரும்பவில்லை. பென்யமீன் நாட்டைச் சேர்ந்த கிபியா என்ற ஊரில் இரவைக் கழிக்கப் போகிறார்கள். அந்த ஊரில் அவர்கள் தங்குவதற்கு ஒருவனும் தங்கள் வீட்டில் இடம் கொடுக்கவில்லை.

ஆண்டவராகிய இயேசுவுக்கு சத்திரத்தில்கூட இடம் கொடுக்காத உலகம்தானே!

அவர்கள் திறந்தவெளியில் தங்குகிறார்கள். அப்போது, வயலில் வேலைசெய்துவிட்டு, வீடு திரும்புகிற ஒரு முதியவர் அவர்களைக் கண்டு, "வெட்டவெளியில் தங்கவேண்டாம். அது ஆபத்தானது," என்று சொல்லி அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோகிறார்.

அந்த இரவில், கீழ்த்தரமான கயவர்கள் சிலர் காமவெறியோடு முதியவர் வீட்டை முற்றுகையிடுகிறார்கள். லேவியனைப் பாலியல்பலாத்காரம்செய்யும் நோக்கத்தோடு, அவனை வெளியே அனுப்புமாறு கூச்சல்போடுகிறார்கள், கதவைத் தட்டுகிறார்கள்.

தேவ மக்களா இப்படிச் செய்வது! அசிங்கம்! விருந்தோம்பலுக்குப் பேர்பெற்ற மக்களா இப்படிச் செய்வது! அநாகரிகம்! அடைக்கலம் கொடுக்கவேண்டியர்கள் கொடுக்காமல், கொடுத்தவனுக்கு இப்படிப்பட்ட கொடுமை செய்வதா? அக்கிரமம்! அண்டிய அந்நியனுக்குக் காட்டும் பரிவா இது? அநியாயம்! வரவேற்கவில்லை, விருந்தோம்பல் செய்யவில்லை, என்பதைகூடப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், லேவியனை அந்தக் காமவெறியர்கள் மானபங்கப்படுத்த முயல்வது அதைவிடக் கொடுமை!

தொடர்ந்து நடக்கும் அசம்பாவிதத்தைப் பார்க்கும்போது, அவர்கள் யாரை வேண்டுமானாலும்-ஆண்களோ, பெண்களோ- மானபங்கப்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

மதிகெட்ட இந்தப் பாவச் செயலைத் தடுக்க, கயவர்களின் காமவெறிக்கு முதியவர் தன் மகளையும், லேவியனின் மறுமனையாட்டியையும் கையளிக்க முன்வருகிறார்.

இது படு கேவலமான, மோசமான செயல்! அடைக்கலம் தேடி வந்தவனுக்கு விருந்தோம்பல் செய்வதும், அவனைப் பாதுகாப்பதும், தன் தலையாய கடமை என்று முதியவர் நினைத்தால், லேவியனின் மறுமனையாட்டியையும் பத்திரமாகப் பாதுகாத்திருக்க வேண்டுமே! அவளை அவர் எப்படிக் கையளிக்கலாம்? விருந்தோம்பல் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொள்ளும் ஒருதலைப்பட்சமான கோழை! தன் உயிருக்குப் பயந்து இரண்டு அப்பாவிப் பெண்களைக் காமவெறி பிடித்த கொடூர மிருகங்களுக்கு இரையாக்குகிறான். தன் மகளையும், அடுத்தவனின் மனைவியையும் தாராளமாகத் தாரைவார்க்கிறார். தன் மகளைப் பலிகடாவாக்குவது துரோகம்! அடுத்தவனின் மனைவியைப் பலிகடாவாக்குவது துரோகமே துரோகம்! தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பிறரைப் பலிகொடுத்த கொலைகாரர்கள்!

கயவர்கள் கூட்டம் இணங்க மறுக்கிறது; கூச்சல், குழப்பம் அதிகரிக்கிறது; லேவியன் தன் மறுமனையாட்டியை வெளியே இழுத்துக்கொண்டு வந்து, அவர்களுக்குமுன் விட்டுவிட்டு, கதவைச் சாத்திட்டுப்போய்விடுகிறான்.

அங்கு நடந்த பயங்கரமான பழியைப் புரிந்துகொள்ள கற்பனை தேவையில்லை. காப்பாற்ற வேண்டியவர்கள் தங்களை நம்பியவளைக் கைவிடுகிறார்கள், காட்டிக்கொடுக்கிறார்கள், கைகழுவுகிறார்கள்.

இதோ, இந்தப் பூமியில், ஓர் அபலைப்பெண்ணின் கடைசி இரவு, தேவ மக்களுக்குச் சொந்தமான ஓர் ஊரில், முடியப்போகிறது!

காமவெறியர்கள் அவளை இரவு முழுவதும் வேட்டையாடுகிறார்கள். விடியற்காலையில், லேவியன் தன் ஊருக்குப் புறப்பட வீட்டின் கதவைத் திறக்கிறான். அங்கு வாயிற்படியில் அவள் விழுந்துகிடக்கிறாள். "எழுந்திரு, போவோம்," என்று அவளைத் தட்டி எழுப்புகிறான். பதில் இல்லை. அப்போதுதான், அவள் இறந்துவிட்டாள் என்பதை அவன் அறிகிறான். அவன் அவளுடைய உடலை வீட்டுக்குக் கொண்டுபோய், அதைப் பன்னிரண்டு துண்டுகளாகக் கூறுபோட்டு, "வன்முறை நிற்குமா? நியாயம் கிடைக்குமா? கொடூரப்போக்கு மாறுமா?” என்று சொல்லாமல் சொல்லி, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் ஒவ்வொரு துண்டாக அனுப்புகிறான்.

“இஸ்ரயேலில் அந்த நாட்களில் ராஜா இல்லை" (19:1).

இந்த நிலைமைக்கு லேவியன் காரணமில்லையா? அவன் உடந்தையில்லையா? அவனுடைய சுயநலமும், கோழைத்தனமும் காரணமில்லையா? தன் உயிரைக் காப்பாற்றுவற்காதத்தானே அவன் அவளை அவர்களுக்குமுன் தள்ளிவிட்டான்! அவனை மானபங்கப்படுத்துவற்குத்தானே அவர்கள் வந்தார்கள்! போகவேண்டியதுதானே! ஏன் ஒளிந்துகொண்டான்? "நானும் வரமாட்டேன். அவளையும் தரமாட்டேன், விடமாட்டேன்," என்று எதிர்த்துநின்றிருக்கலாமே! இரவு முழுவதும் தூங்கிவிட்டு, விடியற்காலையில்தானே எழுந்து பார்க்கிறான்? காமுகர்கள் கையில் அவள் கதி என்னவாகும் என்று தெரியாதா? இந்தப் பழியில், பாதகத்தில், பாவத்தில், மதிகேட்டில், தனக்குச் சம்பந்தமேயில்லை என்பதுபோல் இப்போது செயல்படுகிறான்!

செத்த பிணத்தைத் துண்டு துண்டுகளாக வெட்டி அனுப்பும்போது, நிச்சயமாக அது மக்களிடையே ஏதோவொரு விளைவை ஏற்படுத்தும். ஆனால், தேவனுக்கேற்ப தங்கள் எண்ணங்களையும், சிந்தனைகளையும், யோசனைகளையும், அபிப்பிராயங்களையும், கருத்துக்களையும், தீர்மானங்களையும் மாற்றியமைத்துக்கொள்ளாத அல்லது மாற்றியமைத்துக்கொள்ள விரும்பாத, மக்களிடம் நேர்மறையான, நீதியான பதிலையும், செயலையும் எதிர்பார்க்கமுடியாது. அவர்கள் தேவனுடைய வழியை விட்டுவிலகி, தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, தேவனைக் கைவிட்டு பல காலம் ஆயிற்று. இப்படிப்பட்ட மக்களிடம் நீதியான விளைவை எதிர்பார்க்கலாமா? எனவே, வெட்டி அனுப்பப்பட்ட உடலின் துண்டுகளைப் பார்த்தவுடன், வன்முறை வெடிக்கும் என்றும், பழிபாவம் பெருகும் என்றும், கொடூரம் கொடிதாகும் என்றும் நிச்சயமாகத் தெரியும்.

முட்செடிகளில் திராட்சைப்பழங்களா? முட்புதர்களில் அத்திப்பழங்களா? சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றமுடியுமா? எத்தியோப்பியன் தன் தோல் நிறத்தை மாற்ற இயலுமா?

கிபியா ஊரார் குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தண்டிப்பார்கள் என்று, ஒருவேளை, சிலர் நினைத்திருக்கலாம் ((நியா. 20). ஆனால், அந்த ஊரார் அவ்வளவு நீதிமான்களா! அவ்வளவு நல்லவர்களா! அப்படியானால் அந்த இரவே அவர்கள் அந்த அசிங்கத்தைத் தடுத்திருப்பார்களே! அருவருப்பான அட்டூழியம் அங்கு பகிரங்கமாக அரங்கேறியபோது ஊரார், ஊர்த்தலைவர்கள், பெரியவர்கள், மூப்பர்கள் என்ன செய்தார்கள்? வேடிக்கை பார்த்த மக்கள்தானே! "யாருக்கோதானே! எனக்கென்ன?" என்று அலட்சியமாக இருந்த மக்கள்தானே!!

தன் மறுமனையாட்டிக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்ட "கொல்லைப்புறத்துக் கோயில் கூலிக்கார" லேவியன் கொதித்துப்போகிறான்; கோபம் கொப்பளிக்கிறது; கோத்திரங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறான். இந்தப் படுபாதகச் செயலில் தன் பங்கு என்னவென்று அவன் சொல்லவில்லை. அவன் எவ்வளவு வெட்கக்கேடாக நடந்துகொண்டான் என்பதைத் மிகத் தந்திரமாக மறைத்துவிடுகிறான். கெட்டிக்காரன்! கில்லாடி! தன் தவறுகளையும், தோல்விகளையும் மனிதன் மிகத் தந்திரமாக மறைத்துவிடுவான்.

கிபியா ஊரார் குற்றவாளிகளை ஒப்படைத்திருந்தால், விவகாரம் முடிந்திருக்கும். ஆனால், அவர்கள் குற்றவாளிகளை ஒப்படைக்கவில்லை. பென்யமீன் கோத்திரத் தலைவர்களாவது தலையிட்டு, நியாயம் செய்திருக்கலாமே! ஒருவேளை, நடந்த படுபாவச் செயலை யாரும் அவர்களுக்குச் சொல்லவில்லையா அல்லது நடந்த படுபாவச் செயலின் பயங்கரத்தை அவர்கள் உணரவில்லையா அல்லது நடந்தது படுபாவச் செயல்தான் என்பதை ஒப்புக்கொள்வதற்கு மனம் இல்லையா? அவர்களும் குற்றவாளிகளைத் தண்டிக்கவுமில்லை, ஒப்படைக்கவுமில்லை. மாறாக, பென்யமீன் கோத்திரத்தார் அனைவரும் மற்ற 11 கோத்திரங்களையும் எதிர்க்க ஒன்றாக அணிவகுத்துநின்றார்கள்.

தேவனுடைய கட்டளைக்கு உண்மையும் உத்தமுமாக இருப்பதைவிட, தங்கள் ‘கோத்திரத்துக்கு’ உண்மையும் உத்தமுமான பரிதாபமான மக்கள்!

நாடு முழுவதும் வன்முறை தலைவிரித்தாடும்போது, இந்த ஒரு சில குற்றவாளிகளைப் பிடிக்க யாரும் வரமாட்டார்கள் என்று கிபியா ஊரார் நினைத்தார்களோ! அப்படி வந்தால், நாட்டில் யுத்தம் வரும்; யுத்தம் வந்தால் எல்லாருக்கும் நட்டமும், இழப்பும் ஏற்படும். எனவே, ஒரு சில காமுகர்களைத் தேடி வரமாட்டார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

பதினொரு கோத்திரங்களும் கோபத்தால் கொந்தளிக்கின்றன. எல்லாரும் மொத்தமாகச்சேர்ந்து பென்யமீன் கோத்திரத்துக்கு எதிராகப் படையெடுத்திருந்தால் ஒரே நாளில் வென்றிருப்பார்கள். ஆனால், அப்படிச் செய்யாமல் ஒவ்வொருமுறையும் ஒரேவொரு கோத்திரத்தின் படைகளை மட்டும் தனியாக அனுப்புகிறார்கள். முதல் நாள் போரில் இஸ்ரயேலர் இருபத்திரண்டாயிரம்பேரை இழந்தார்கள் (20:21); இரண்டாவது நாள் போரில், பதினெட்டாயிரம் பேரை இழந்தார்கள் (20:25). அடுத்த நாள், கிபியானியரையும், பென்யமீனைரையும் அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்பதாகத் தேவன் வாக்குறுதி செய்கிறார் (20:28). மூன்றாம் நாளில் இஸ்ரயேலர் பதுங்கியிருந்து தாக்குகிறார்கள், வெற்றிபெறுகிறார்கள். பென்யமீன் கோத்திரத்தார் ஏராளமானவர்கள் யுத்தத்தில் இறந்துபோகிறார்கள்.

சட்டம் செல்லுபடியாகாதபோது, காட்டாட்சி கொடிகட்டிப் பறக்கும்போது, மக்கள் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மறந்து கோத்திரத்துக்கும், குழுவுக்கும் உண்மையாயிருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும்போது, நீதியை நசுக்கிவிட்டு பழிவாங்கும் எண்ணம் மேலோங்கும்போது, மூடநம்பிக்கையான பகைகளும் வெறிகளும் நீதிமன்றங்களை அகற்றிவிட்டு, அவைகளே நீதிபதிகளாக மாறும்போது, சகோதர்களுக்கிடையே விசுவாசத்தையும், உபதேசத்தையும், சபையையும், சுவிஷேசத்தையும்பற்றிய பொதுவான தளம் இல்லாதபோது, அரசாங்கம் ஆளப்படுகிறவர்களின் சம்மதத்தோடு நடைபெறாமல், ஆளுகிறவர்களை அச்சுறுத்தி நடத்தும்போது இதுதான் நடக்கும், இப்படித்தான் நடக்கும்.

ஒரு "கொல்லைப்புறத்துக் கோயில் கூலிக்காரனால்" உள்நாட்டுப்போர் வெடித்தது. ஒரு தனி மனிதன்! உலகப்போர்கள்கூட வரலாம்!

இது சர்வாதிகாரிகளின் மந்திரம்! இது வன்முறையின் எந்திரம்! இது தாதாக்களின் தந்திரம்!

எந்தக் கலாச்சாரமும் இதற்கு விதிவிலக்கல்ல. எந்தக் கலாச்சாரமும் இப்படிச் செயல்பட முடியும் என்பது சோகமான உண்மை. பண்டைய இஸ்ரயேலர்கள் மற்றவர்களைவிட மோசமானவர்கள் என்பதால் இந்தப் புதைகுழிக்குள் மூழ்கவில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு ஓர் அடையாளம். அவ்வளவே. பெருமளவோ, சிறிதளவோ எல்லாக் கலாச்சாரத்திலும் இது இன்றைக்கும் நடந்துகொண்டிருக்கிறது. தேவன், நம்பிக்கை, மதம், உலகப்பார்வைபோன்ற காரியங்களில் அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட, மதிக்கப்பட்ட குறைந்தபட்ச நடைமுறைகளிலாவது இசைவும், இணக்கமும் இல்லாத சமுதாயம் முந்தியோ பிந்தியோ கொடுங்கோலர்களும், அடக்கியாள்பவர்களும் வளர்வதற்குரிய மிகச் சிறந்த இடமாகிவிடும்.

இது வரலாறு! ஆனாலும், இவைகளுக்குப்பின்னால், "இதுவரை நீங்கள் போகலாம். இதற்குமேல் போகமுடியாது" என்று சொல்லுகிற தேவனுடைய கரம் இருக்கிறது என்று பார்க்கிறோம்.

லேவியனின் மறுமனையாட்டியைப் பாலியல் பலாத்காரம்செய்து, படுகொலைசெய்தபின் உள்நாட்டுப் போர் மூண்டது; வன்முறை வெடித்தது. இதோ! இப்போது வன்முறையின் கேவலமான கடைசிக் காட்சி! (நியா. 21). பென்யமீன் கோத்திரத்து எல்லைகளிலுள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கால்நடைகள் அனைத்தையும், அனைவரையும் இஸ்ரயேலர் வெட்டுகிறார்கள், கொளுத்துகிறார்கள், அழிக்கிறார்கள் (நியா. 20:48). பென்யமீன் கோத்திரத்தில் அறுநூறு வீரர்கள் மட்டும் தப்பிப் பாலைவனத்துக்கு ஓடிப்போய், ரிம்மோன் என்னும் கோட்டைக்குள் ஒளிந்துகொள்கிறார்கள் (நியா. 20:47).

பாலியல் பலாத்காரம், படுகொலை, உள்நாட்டுப்போர், வன்முறை, சாவு, அழிவு ஆகியவைகளுக்குப்பின், 11 கோத்திரத்தார் கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள். பென்யமீன் கோத்திரத்துக்கு எதிராக அவர்கள் பல தடைகள் விதித்திருந்தார்கள். இஸ்ரயேலர் தங்கள் மகள்களைப் பென்யமீன் புதல்வருக்கு மணமுடிப்பதில்லை என்பது ஒரு தடை. இது அவர்களுடைய சபதம் (நியா. 21:1). அவர்கள் தங்கள் சபதத்தை நிறைவேற்றினால். பென்யமீன் கோத்திரம் அழிந்துபோகும். ஏனென்றால், இப்போது 600 ஆண்கள் மட்டுமே அந்தக் கோத்திரத்தில் மீதியாயிருக்கிறார்கள். இந்தத் துர்பாக்கியமான நிலையை நீக்க, அவர்கள் எடுத்த நடவடிக்கை கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது, குமட்டலுண்டாகுகிறது.

“பென்யமீனருக்கு எதிராகப் படையெடுப்பதற்கு எல்லாரும் ஆயுதங்களோடு வரவேண்டும்,” என்று அழைத்தபோது, கீலேயாத்திலுள்ள யாபேசின் நகரத்தார் அந்த அழைப்பை ஏற்று இஸ்ரயேலின் படையில் சேரவில்லை என்று அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். எனவே, ஒரு வகையில் அவர்களைத் தண்டிப்பதற்காகவும், இன்னொரு வகையில், பென்யமீன் கோத்திரத்தில் மீந்திருந்த 600 பேருக்குப் பெண்களைக் கண்டுபிடிப்பதற்காகவும், இஸ்ரயேல் படைகள் யாபேஸ் நகரத்தை அழிக்கிறார்கள்; எல்லா ஆண்களையும், கணவனை அறிந்த எல்லாப் பெண்களையும் வெட்டிக்கொல்கிறார்கள். அங்கிருந்த நானூறு கன்னிப் பெண்களை மட்டும் கொல்லாமல் பிடித்துக்கொண்டு வருகிறார்கள் (நியா. 21:10-14). அவர்களை பென்யமீன் ஆண்களுக்கு மனைவிகளாகக் கொடுக்கிறார்கள்.

மொத்தம் 600 பேர் இருக்கிறார்கள். கிடைத்ததோ 400 பேர். இன்னும் 200 கன்னிகைகள் வேண்டுமே! என்ன செய்யலாம்? ஒரு கேவலமான யுக்தியின்மூலம் 400பேர் கிடைத்தார்கள். இன்னும் தேவையான 200 பேரைக் கண்டுபிடிக்க இவர்கள் யோக்கியமான வழியையா தெரிந்தெடுப்பார்கள்?

சீலோவிலே ஆண்டவரின் ஆண்டுவிழா நடக்கும்போது சீலோவின் புதல்விகள் நடனமாட வருவது வழக்கம். அப்போது 200 பேரும் ஆளுக்கு ஒரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் நாட்டுக்குக் கொண்டுபோகலாம் என்று தீர்மானிக்கிறார்கள். அதன்படி பெண்களைக் கடத்துகிறார்கள். பெண்களின் தகப்பனோ, சகோதரனோ தடுத்தால் அல்லது முறையிட்டால், அவர்களை மிரட்டுகிறார்கள். கடத்திக்கொண்டுபோன பெண்களை மனைவியாக்கிக்கொள்கிறார்கள் (21:20-23). பென்யமீன் கோத்திரத்தின் எண்ணிக்கை குறைந்தபோதும், அடியோடு அழிழ்ந்துபோகாமல் தப்பிப்பிழைக்கிறது.

பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் எடுத்த தீர்மானங்களிலும், முன்மொழிந்த தீர்வுகளிலும் விரவிக்கிடக்கும் கசப்பு, துயரம், பயம், வெறுப்பு, தனிமை, பழிவாங்குதல், உக்கிர கோபம், கையறுநிலை, இழப்பு, இறப்பு ஆகியவைகளைக் காணத் தவற முடியாது.

நியாயாதிபதிகளின் புத்தகத்தில் பார்ப்பதுபோல், இஸ்ரயேலர் இப்போது இரண்டு வகையான பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. கானானின் பெரும்பகுதியில், இவர்களுக்கு மிக அருகில், வாழ்ந்த கானானியர் இவர்களை அடிமைப்படுத்தினார்கள் அல்லது அடக்கினார்கள். இவர்கள் அடிமைத்தனத்துக்கும், அடக்குமுறைக்கும் ஆளானார்கள். அப்போது தேவனை நோக்கிக் கதறும்போது, அவர்களை இரட்சிக்கத் தேவன் ஒரு தலைவனை எழுப்புகிறார். இது ஒரு பிரச்சினை. இந்தப் பிரச்சினை அவர்களுக்கு வெளியேயிருந்து வந்த பிரச்சினை.

இன்னொரு பிரச்சினை அவர்களுக்கு உள்ளே இருந்தது. அது இதைவிட ஆழமான பிரச்சினை. கலகம்! கிளர்ச்சி! முரட்டாட்டம்! எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களோடு புனிதமான உடன்படிக்கை செய்திருந்த தேவனை மீண்டும் மீண்டும் கைவிட்டார்கள். இது அவர்களுக்குள் ஒரு நோய்போல் இருந்தது. இந்தச் சுழற்சியில் அவர்கள் சிக்கியிருந்தார்கள். உள்ளே, தேவனை மறக்கிறார்கள், மறுக்கிறார்கள்; சீரழிவு, சீர்கேடு பெருகுகிறது; தன்னிலையை இழுக்கிறார்கள். அப்போது வெளியேயிருந்து ஒடுக்கப்படுகிறார்கள், அடக்கப்படுகிறார்கள். இது ஒரு தொடர்கதை.

இந்தப் புத்தகத்தின் கடைசியில், ஐந்தாவது தடவை, ஆசிரியர் இஸ்ரயேல் மக்களைப் பகுப்பாய்ந்து இறுதியில் தன் முடிவைக் கூறுகிறார். "அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்" (21:25). இப்படிப்பட்ட ஒரு நாட்டை ஒழுங்குபடுத்த, உறுதிப்படுத்த, பாதுகாக்க, நீதியை நிலைநிறுத்த, வழிநடத்த ஓர் அரசன் தேவைதான். ஆனால், அந்த அரசன் பிரச்சினைகளைத் தீர்ப்பவனாக இருப்பானா அல்லது அவனும், அவனுடைய வம்சமும், இன்னும் அதிகமான பிரச்சினையாகிவிடுவார்களா? எனவே, இஸ்ரயேலின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் திறக்கிறது. "புதிய அரசர்கள்" ஆள்வார்கள். பிரச்சினைகளுக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால் இதோ "ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர்" (வெளி. 19:15) வருகிறார்.