ஜீவவழியா அல்லது சட்ட வழியா
Translated from the original article, ‘The living way or the legal way’
By DeVern Fromke
இந்தக் கட்டத்தில் நாம் மூன்று காரியங்களில் ஏதொவொன்றைச் செய்ய வேண்டியிருக்கும். ஒன்று “முடியாது” என்று கதறுவோம் அல்லது ஏமாற்றத்தால் பெருமூச்சுவிட்டு “இது மிகவும் கடினம்” என்று கூறுவோம் அல்லது வழி ஏற்படுத்திக்கொண்டு முன்னேபோய் ஆவியானவரின் ஜீவனுக்குள் நுழைவோம். கர்த்தருடைய மக்களைப் பார்க்கும்போது அவர்களில் சிலர் ஆவிக்குரிய கூர்மையின் இரகசியத்தை கற்றுக்கொண்ட மக்கள் என்று நீங்கள் உணர்வீர்கள். கர்த்தரை உண்மையாகவே நேசிப்பதாகச் சொல்கிற மக்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கிடையே ஆவிக்குரிய தொய்வு அல்லது கைவிடப்பட்ட ஒரு போக்கு இருக்கிறது. இன்று நான் உங்களுடன் ஒரு கோட்பாட்டைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அது நம் ஆவிக்குரிய வாழ்க்கை கூர்மையாக இருக்க உதவும் என்று நான் விசுவாசிக்கிறேன்.
முதலாவது, நான் பில்லி என்ற ஒரு சிறுவனைப்பற்றிய ஒரு கதையைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு நாள் காலையில் அவனுடைய அம்மா வெளியே போக ஆயத்தமாகிக்கொண்டிருந்தாள். வெளியே போவதற்குமுன் அவள் தன் மகனைப் பார்த்து, “பில்லி நான் சாக்கலேட் செய்திருக்கிறேன். அது கெட்டியானபிறகு நீ அதை வெட்டிச் சாப்பிடலாம். ஆனால், இன்றிரவு நான் ஒரு விருந்துக்குச் செல்ல வேண்டும். அந்த விருந்துக்குக் கொண்டுசெல்ல 24 துண்டுகளை வைத்துவிட்டு, மீதியை நீ சாப்பிடலாம்,” என்று கூறினார். வெட்டிச் சாப்பிடக்கூடிய அளவுக்குக் கெட்டியானவுடன் அவன் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிச் சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிட்டான், சாப்பிட்டான், சாப்பிட்டுக்கொண்டேயிருந்தான். மீதியிருந்த துண்டுகளை எண்ணிப்பார்த்தான். 20 துண்டுகள் மட்டுமே இருந்தன. ஆனால், 24 துண்டுகள் வேண்டுமே! என்ன செய்வது! “இவைகளைப் பெரிய துண்டுகளாக வெட்டியது நல்லதாப் போச்சு. ஒவ்வொரு பெரிய துண்டையும் இரண்டாக வெட்டினால் 40 துண்டுகள் வரும். அம்மாவுக்கு 24 துண்டுகள்தான் வேண்டும். நான் இன்னும் 16 துண்டுகளைச் சாப்பிடலாம்,” என்று எண்ண ஆரம்பித்தான். 40 துண்டுகளாக வெட்டி 16 துண்டுகளைச் சாப்பிட்டபிறகு தட்டிலே மிகக் கொஞ்சமாக இருப்பதுபோல் தோன்றியது. எனவே, இருந்த சின்னத் துண்டுகளைத் தட்டில் பரப்பிவைத்தான். அம்மா திரும்பி வந்தபோது, அம்மா சொன்னதை நிறைவேற்றிவிட்ட நம்பிக்கையில் பில்லி நிம்மதியாக இருந்தான். 24 துண்டுகள் வேண்டும் என்று அம்மா சொல்லியிருந்தார். அம்மா சொன்னபடி அங்கு இப்போது 24 துண்டுகள் இருந்தன. அம்மா ஏதாவது சொல்வார்களா என்ற எதிர்பார்ப்போடு பில்லி சாயங்காலம் முழுவதும் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தான். அன்றிரவு அவனுடைய அம்மா சாக்கலேட்டை எடுத்துக்கொண்டு விருந்துக்குச் செல்லவிருந்தபோது, அவன் கண்ணீருடன் அவரிடம் ஓடி, “அம்மா, என் மனச்சாட்சி என்னைக் குற்றப்படுத்தவில்லை. ஆனால், நான் மிகவும் சுயநலவாதி என்று எனக்குள் ஆழத்தில் ஏதோவொன்று சொல்லுகிறது,” என்று கூறினான்.
இந்தக் கதையைப் பின்புலமாக வைத்துக்கொண்டு நாம் இப்போது 1 கொரிந்தியர் எட்டாம் அதிகாரத்துக்குத் திரும்புவோம். இங்கு நாம் ஒரு வகையான கிறிஸ்தவர்களைப் பார்க்கிறோம். “எங்கள் மனச்சாட்சி எங்களைத் தொந்தரவு செய்யவில்லை,” என்று மனச்சாட்சியின் மட்டத்தில் வாழ்வதில் இவர்கள் திருப்தியாக இருக்கிறார்கள். இவர்கள் பரிசுத்த ஆவியானவரின் உணர்வுகளைக் கூர்மையாக அறிந்து வாழ்கிற நிலைமைக்குச் செல்வது அரிது. ஆவியானவரின் உணர்வுகளைக் கூர்மையாக அறிந்து வாழாமல், மனச்சாட்சியின்படி வாழ்கிறவர்கள் அநேகர். கொரிந்து சபையில் இருந்த பிரச்சினையை நாம் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம். அங்கு சில இளம் விசுவாசிகள் இருந்தார்கள். அவர்கள் “கோவிலில் சிலைகளுக்குப் படைக்கப்பட்ட இறைச்சியைச் சாப்பிடக்கூடாது,” என்று கூறினார்கள். அவர்கள் சிலைகளை நிஜமான ஒன்று என்று கருதினார்கள். எனவே, தவறாகப் பயிற்றுவிக்கப்பட்ட அவர்களுடைய மனச்சாட்சி அவர்களைத் தொந்தரவுசெய்தது. அங்கு இன்னொரு வகையான கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். அவர்களிடம் இதைப்பற்றி அதிகமான அறிவு இருந்தது. ஆனால், அவர்கள் மிகவும் சுயநலவாதிகளாக இருந்தார்கள். “உலகத்திலே சிலை என்று ஒன்றும் இல்லை. எனவே, நாம் இந்த இறைச்சியைச் சாப்பிட விரும்பினால், சாப்பிடலாம். அதற்கு நமக்கு அதிகாரம் உண்டு,” என்று இந்தக் கிறிஸ்தவர்கள் கூறினார்கள். இவ்வாறு நாம் இங்கு இருசாராரையும், அவர்களுக்கிடையே இருந்த ஒரு முரண்பாட்டையும் பார்க்கிறோம். ஒரு சாரார் ஏறக்குறைய அறியாமை உடையவர்கள். இன்னொரு சாரார் ஏறக்குறைய சுயநலவாதிகள். இங்கு இது ஒருவேளை சிலைகளுக்குப் படைக்கப்பட்ட இறைச்சியோடு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடும். ஆனால், இந்தக் கோட்பாடு சபையின் எல்லாப் பழக்கவழக்கங்களுக்கும் பொருந்தும்.
மக்கள் மூன்று மட்டங்களில் வாழ முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டும். கீழ்மட்டத்தில் வாழ்கிற மக்கள் எப்போதும் உடைத்துக்கொண்டு வெளியேற விரும்புகிறார்கள். அவர்களுக்கு எப்போதும் சட்டம் வேண்டும்; அதாவது அவர்களைத் தடைசெய்கிற ஏதாவது அவர்களுக்கு வேண்டும். ஏதாவது அவர்களைத் தடுக்க வேண்டும், தடைசெய்ய வேண்டும். இரண்டாவது, கிடைமட்டத்தில் வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். சட்டப்பூர்வமானவை என்று அவர்களுடைய மனச்சாட்சி சொல்லுகிற எல்லாவற்றையும் அவர்கள் செய்வார்கள். மூன்றாவது, தகுதியான மட்டத்தில் வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். இது என்னவென்று நாம் பார்ப்போம். மூன்று மட்டத்தில் வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். சட்டத்தின்படி வாழ்கிறவர்கள், மனச்சாட்சியின்படி வாழ்கிறவர்கள், தகுதியின்படி வாழ்கிறவர்கள்.
கொரிந்து சபையில் இருந்த இந்தப் பிரச்சனையோடு பவுல் எப்படி இடைப்படுகிறார் என்று பார்க்கவேண்டும். பவுல் "எவைகளைச் செய்யலாம், எவைகளைச் செய்யக்கூடாது" என்ற ஒரு சட்டப் புத்தகத்தை எழுத வேண்டும் என்று கொரிந்துவில் சிலர் எதிர்பார்த்தார்கள். இப்படிச் சட்டத்தின்படி வாழ்கிறவர்கள் கீழ்மட்டத்தில் வாழ்கிறவர்கள். அறியாமையுள்ள இந்தப் பலவீனமான விசுவாசிகளுக்கும், சுயநலவாதிகளான மற்ற விசுவாசிகளுக்கும் இந்த அதிகாரத்தில் முதல் வசனத்தில் அவர் என்ன சொல்கிறார் என்று நாம் பார்ப்போம்: “விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும். அன்போ கட்டியெழுப்பும்.” மனதுக்குப் பிடித்த ஒருவிதமான அறிவு உண்டு. அதுதான் இந்த அறிவு, இறுமாப்பை உண்டாக்குகிற அறிவு. ஆனால், நிறைவான உள்ளான அறிவு ஒன்று உண்டு. இப்போது நாம் அதைப் பார்க்கப்போகிறோம். பலவீனமான, அறியாமையுள்ள இந்த விசுவாசிகளிடம் ஒருவிதமான புறம்பான அறிவு இருந்தது. அவர்கள் தேவனைப்பற்றிய சில காரியங்களை அறிந்திருந்தார்கள். ஆனால், அவர்கள் விக்கிரகங்களை இன்னும் ஒரு பொருளாகக் கருதினார்கள். உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லை என்ற நிறைவான, உள்ளான அறிவு இன்னொரு சாராரிடம் இருந்தது. “ஆகிலும் இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றைவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாக இருப்பதால் அசுசிப்படுகிறது,” என்று ஏழாம் வசனத்தில் பவுல் கூறுகிறார். ‘உங்களிடம் நிறைவான அறிவு இருக்கிறது என்பதும், இந்த இறைச்சியைச் சாப்பிட உங்களுக்குச் சுதந்திரம் உண்டு என்பதும் உண்மைதான்’ என்று பவுல் கூறுவதுபோல் தோன்றினாலும், அவர் இப்போது என்ன கூறுகிறார் என்பதைக் கவனியுங்கள். “நான் என் சுதந்திரத்தைப் பயன்படுத்தி இடைப்பட்ட சட்டப்பூர்வமான மட்டத்தில் வாழவில்லை. நான் என் சுதந்திரத்தைப் பயன்படுத்தி இடைப்பட்ட சட்டப்பூர்வமான மட்டத்தில் வாழமுடியும். ஆனால், நான் அப்படிச் செய்யாமல் நான் இன்னொரு மட்டத்துக்கு முன்னேறிச் செல்கிறேன். அந்த மட்டத்தில் நான் அவருடைய அன்பின் அடிமை,” என்று அவர் கூறுவதுபோல் தோன்றுகிறது.
மக்கள்மேல் கட்டுப்பாடுகளைத் திணிக்கிற சட்டப்பூர்வமான வழியை பவுல் அவர்களுக்குப் போதிக்கவில்லை. மாறாக, அவர் அன்பின் ஜீவிக்கும் வழியை அவர்களுக்குப் போதித்தார் என்பதைக் கவனியுங்கள். அங்கு சிலரிடம் உள்ளான அறிவு இருந்தது. இருந்தபோதும் அவர்கள் இந்த வெளிப்பாட்டைத் தங்களுடைய சொந்த நலனுக்காக, சுயநலத்தோடு பயன்படுத்தினார்கள் என்பதை உங்களால் பார்க்க முடிகிறதா? "ஆ! எங்களிடம் வெளிப்பாடு இருக்கிறது! உலகத்தில் விக்கிரகமானது ஒன்றும் இல்லை. எனவே, நாங்கள் இந்த இறைச்சியைச் சாப்பிடலாம்," என்று அவர்கள் கூறினார்கள். ஒருவன் இந்தத் தொனியில் பேசுகிறான் என்றால், அவன்தான் இன்னும் அவனுடைய உலகத்தின் மையம். அவன் எல்லா நல்ல காரியங்களையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறான். கொரிந்துவில் இருந்த சூழ்நிலையை பவுல் 13ஆம் வசனத்தில் சுருக்கமாகக் கூறுகிறார். "ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன். "இப்படிப்பட்ட போதனை மக்களை அடிமைப்படுத்தும்," என்று மக்கள் சொல்வதுண்டு. ஆனால், பலவிதமான அடிமைத்தனம் உண்டு என்பதை மறக்க வேண்டாம். அதில் ஒன்று கலகக்கார மனதின் அடிமைத்தனம். இன்னொன்று, அன்பின் அற்புதமான அடிமைத்தனம்.
ஒன்பதாம் அதிகாரத்திலும் இதே கோட்பாடு செயல்படுவதைக் காணலாம். இந்த மக்கள் அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவில்லை. அவர் தன்னைப் பலியாக ஊற்றினார். ஆனால், அவர்கள் அவரைப் புரிந்துகொள்ளவில்லை. "என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மாறுத்தரமாவது," என்று மூன்றாம் வசனத்தில் பவுல் கூறுகிறார். கர்த்தருடைய ஊழியக்காரன் என்ற முறையில் தனக்கு மூன்று உரிமைகள் இருக்கின்றன என்று அவர் கூறுகிறார். 'மற்றவர்களைப்போல சாதாரணமாக எல்லா உணவைச் சாப்பிட எனக்கு உரிமை உண்டு," என நான்காம் வசனத்திலும், 'எல்லாரையும்போல சாதாரணமாக உறவுகொள்ளவும், குடும்பம் நடத்தவும், குழந்தைகளைப் பெறவும் எனக்கு உரிமை உண்டு,' என்று ஐந்தாம் வசனத்திலும், 'எல்லாரையும்போல், கர்த்தருடைய ஊழியக்காரன் என்ற முறையில் சம்பளம் பெற எனக்கு உரிமை உண்டு,' என்று ஆறாம் வசனத்திலும் கூறுகிறார். இவைகள் தன்னுடைய உரிமைகள் என்று அவர் நிரூபிக்கிறார். "இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையோ? போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்தில் எழுதியிருக்கிறதே! தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரா?" என்று பவுல் வினவுகிறார். களத்தில் தானியங்களைப் போரடித்துக்கொண்டிருக்கும் மாடுகளைப் பாருங்கள். போரடிக்கிற மாடுகளின் வாயைக் கட்டுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஏனென்றால், அவைகள் போரடித்துக்கொண்டிருக்கையில், குனிந்து சில தானியங்களைச் சாப்பிடலாம். தேவன் மாடுகளுக்கு மட்டும்தான் உரிமைகளைக் கொடுக்கிறாரா அல்லது அவருடைய ஊழியர்களுக்கும் உரிமைகளைக் கொடுக்கிறாரா? கர்த்தருடைய மற்ற ஊழியக்காரர்கள் அவர்களுடைய உரிமைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், அதே சிலாக்கியம் பவுலுக்கு இல்லையா?
ஆனால், பவுல் இப்போது ஒரு குண்டைத் தூக்கிப்போடுகிறார். "மற்றவர்கள் உங்களிடத்தில் இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாம் அல்லவா? கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும் படுகிறோம்."
நான் என் "உரிமைகளைக்" கோரி, "சட்டப்பூர்வமான" மட்டத்தில் வாழவிரும்பவில்லை. மாறாக, நான் இதைத் தாண்டி "தகுதியான" மட்டத்திற்குச் சென்றுவிட்டேன். தேவனுக்குத் தன்மேலுள்ள உரிமைகளைப்பற்றி மட்டுமே தான் அக்கறைப்படுவதாக 9ஆம் அதிகாரத்தில் பவுல் கூறுகிறார். எனினும், தனக்கு உரிமைகள் உண்டு என்று அவர் ஆணித்தரமாக நிரூபிக்கிறார். "அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்கு சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்," என்று 14ஆம் வசனத்தில் அவர் கூறுகிறார். "அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை. இப்படி நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதும் இல்லை," என்று 15ஆம் வசனத்தில் அவர் தொடர்ந்து கூறுகிறார்.
பழைய ஏற்பாட்டில் இரண்டு வகையான வேலைக்காரர்கள் இருந்தார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். சில வேலைக்காரர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டார்கள்; அவர்களுக்குச் சில உரிமைகள் இருந்தன; அவர்களுடைய எஜமான் அவர்களுக்குத் தவறு இழைத்தால் அவர்கள் நீதி கேட்டுச் செல்வதற்குச் சில வழிகள் இருந்தன. இன்னொரு வகையான வேலைக்காரன் இருந்தான். அவன் கொத்தடிமை. அவனுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. எந்தச் சம்பளமும் கிடையாது. அவனுக்குத் தவறு இழைக்கப்பட்டால் அவன் நீதி நியாயம் கேட்டு எங்கும் போகமுடியாது. அவனுக்குப் போக்கிடம் கிடையாது. எபிரேய மக்கள் தங்கள் சொந்த மக்களைக் கொத்தடிமைகளாக நடத்த ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அவர்கள் யுத்தத்திற்குப் போய், மற்ற நாடுகளைக் கைப்பற்றினால், அந்த நாடுகளின் மக்களைக் கொத்தடிமைகளாக நடத்தலாம். ஆண்டவராகிய இயேசு தம் பரலோக உரிமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு கொத்தடிமையாக இந்தப் பூமிக்கு வந்தார். இது என்னே அற்புதம்! அப்போஸ்தலனாகிய பவுலும் அதே கிரேக்க வார்த்தையை 19ஆம் வசனத்தில் பயன்படுத்துகிறார்: "நான் ஒருவனுக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்."
நாம் ஒருவரோடொருவர் உரையாடிக்கொண்டிருக்கும்போது, "என் உரிமைகள் எனக்குத் தெரியும்," என்று மக்கள் அடிக்கடிச் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? 'சட்டப்பூர்வமான' மட்டத்தில் மக்கள் 'என் சுதந்திரத்தில்' அல்லது 'என் உரிமைகளில்' வாழும்போது அவர்களுடைய மனச்சாட்சியால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு கணம், ஒரு மரத்தையும் அதன் கனிகளையும் பாருங்கள். மரத்தின் கனிகள் நான் செய்கிற காரியங்கள். நான் செய்வது தவறு என்று எனக்குச் சுட்டிக்காட்ட மனச்சாட்சி சற்று உயர்ந்த மட்டத்தில் வேலைசெய்கிறது. ஆனால், மனச்சாட்சியால் மண்ணுக்குக் கீழே சென்று மரத்தின் வேர்களைப் பார்க்க முடியாது. இது பரிசுத்த ஆவியானவரின் வேலை. நான் என்ன செய்கிறேன் என்று எனக்குக் காண்பிப்பதைவிட, நான் என்னவாக இருக்கிறேன் என்று எனக்குக் காண்பிப்பதே பரிசுத்த ஆவியானவரின் வேலை. சில கொரிந்தியர்களின் மனச்சாட்சி பலவீனமாக இருந்தது என்று பவுல் கூறுகிறார். ஏனென்றால், அவர்கள் புறம்பான மனதால் மட்டுமே வாழ்ந்தார்கள். ஆனால், பரிசுத்த ஆவியானவர் என் மனச்சாட்சியின் அருகில் வந்து வேலை செய்து, அதைப் பிரகாசிக்கும்போது என்னிடம் நல்ல மனச்சாட்சி இருக்கிறது; அது உள்ளான பார்த்தலை அல்லது உள்ளான வெளிப்பாட்டை ஆதாரமாகக்கொண்டு வேலைசெய்கிறது. "என் மனச்சாட்சி என்னைத் தொந்தரவு செய்யவில்லை. என் சுதந்திரம் எனக்குத் தெரியும். என் உரிமைகள் எனக்குத் தெரியும்," என்று சொல்லுகிற மக்கள் இன்று அநேகர் இருக்கிறார்கள். அவர்கள்தான் அவர்களுடைய உலகத்தின் மையம். அவர்கள் எல்லாவற்றையும் தங்களோடு மட்டுமே தொடர்புபடுத்திப்பார்ப்பார்கள். ஆனால், நாம் உடைத்துக்கொண்டு அதைவிட உயர்ந்த மட்டத்துக்குள் நுழைந்தால், அங்கு தேவன்தான் மையம்; அங்கு எல்லாம் அவரோடு தொடர்புடையனவாக இருக்கின்றன.அப்போது நாம் கேட்கும் கேள்விகள்கூட வித்தியாசமாக இருக்கும்.
ஒரு நாள், ஒரு கூட்டத்தில் நான் இந்தக் காரியங்களைப் பேசிமுடித்தபிறகு, வேதாகமக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவி என்னிடம் வந்து, "நான் எந்தெந்த இடங்களுக்குப் போகலாம், எந்தெந்த இடங்களுக்குப் போகக்கூடாது; நான் எவைகளைச் செய்யலாம், எவைகளைச் செய்யக்கூடாது; நான் எவைகளை உடுக்கலாம், எவைகளைஉடுக்கக்கூடாது," என்று கேட்டாள். நான் அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். எனவே, அவள், "நான் கேட்ட கேள்விகள் தவறானவையா?" என்று கேட்டாள். அதற்கு நான், "நான் இந்த முழு நாளையும் வீணாக்கிவிட்டேனோ என்று எண்ணத் தோன்றுகிறது. உன்னுடைய கேள்விகள் நீ எந்த மட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய் என்பதைக் காண்பிக்கிறது. நான் சொல்வதை நீ புரிந்துகொள்கிறாயா? நீதான் உன் வாழ்க்கையின் மையமாக இருக்கிறாய் என்பதையும், எல்லாவற்றையும் நீ உன்னோடுதான் தொடர்புபடுத்துகிறாய் என்பதையும் உன்னால் பார்க்க முடிகிறதா?" என்று கேட்டேன். நான் சொன்னதை அவள் புரிந்துகொண்டாள் என்று நான் நினியாகிறேன். ஏனென்றால், அவள் கண்ணீர் வழிந்தோட அந்த இடத்தைவிட்டுக் கடந்துசென்றாள்.
இதற்கான காரணத்தை நாம் பத்தாம் அதிகாரத்தில் பார்க்கிறோம். இங்கு நிறையக் காரியங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், நாம் 23ஆம் வசனத்தில் தொடங்குவோம். பவுல் "எல்லாவற்றையும்" என்று சொல்லும்போது, அவர் இறைச்சி சாப்பிடுவதைப்பற்றியும், "என் சுதந்திரத்தைப்"பற்றியும், "என் உரிமைகளைப்"பற்றியும் பேசுகிறார் என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். இவைகளெல்லாம் இங்கு இந்த இட அமைப்பில் இருக்கின்றன. சில காரியங்கள் வேதவாக்கியங்களில் திட்டவட்டமாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த வசனத்தில் அவர், "நான் இறைச்சி சாப்பிடலாம்; எனக்கு உரிமைகள் உண்டு; அவைகளை அநுபவிக்கச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், அவை தகுதியானவை அல்ல; அவைகள் சட்டப்பூர்வமானவை; ஆனால், அவை என் விக்குரிய வாழ்க்கையைக் கட்டியெழுப்பாது. ஒவ்வொருவனும் தன் சுயபிரயோசனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோசனத்தைத் தேட வேண்டும்," என்று கூறுகிறார். எனவே, அவர், "நான் என் சுதந்திரத்தில் வாழவில்லை, என் உரிமைகளுக்காக வாழவில்லை, என் ஆதாயத்திற்காக வாழவில்லை; மாறாக, தேவன் என்னை ஆதாயம்பண்ணுவதிலேயே நான் பிரதானமான அக்கறைப்படுகிறேன்," என்று கூறுகிறார். அவர் எல்லாவற்றையும் எப்படித் தேவனோடு தொடர்புபடுத்துகிறார் என்று 31ஆம் வசனம் கூறுகிறது: "ஆகையால், நீங்கள் புசித்தாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்காகச் செய்யுங்கள்." "நான் என் சுயபிரயோசனத்தைத் (ஆதாயத்தைத்) தேடாமல், அநேகருடைய பிரயோசனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எல்லாவிதத்திலும், எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல," என்று 33ஆம் வசனத்தில் அவர் கூறுகிறார்.
வெறுமனே தங்கள் சுதந்திரத்தையும், தங்கள் உரிமைகளையும், நற்செய்தி அறிவிப்பதால் கிடைக்கும் ஆதாயத்தையும் அனுபவிப்பதிலேயே பெரும்பாலோர் தங்கிவிடுகிறார்கள். நாம் வெறும் சட்டவாதிகளாக மட்டும் இருந்தால், "என் மனச்சாட்சி என்னைத் தொந்தரவு செய்யவில்லை," என்று சொல்வோம். ஆனால், இது ஆத்துமாவில் உள்ள மனதின்மேல் மட்டுமே வேலைசெய்கிற மனச்சாட்சி. பரிசுத்த ஆவியானவரின் உணர்வுகளை உணரக்கூடிய 'பிரகாசிப்பிக்கப்பட்ட' மனச்சாட்சி, அந்த மட்டத்தைத் தாண்டி, 'ஏதோவொன்று தவறு' என்று உள்ளே இருக்கிற குறுகுறுப்பை உணரும் என்று நான் விசுவாசிக்கிறேன். இந்த உயர்ந்த மட்டத்தில், மனச்சாட்சி உள்ளான பிரமாணமாகிய ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தின்மேல் வேலைசெய்கிறது. சில சபைகளில் ஆவிக்குரிய எழுப்புதல் ஏற்பட்ட நேரங்களில் நான் அங்கு இருந்தேன். அப்போது விசுவாசிகள் உண்மையாகவே தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அடுத்த வருடம் நான் அங்கு போனபோது அவர்கள் கர்த்தருக்கென்று இன்னும் அதிகமான கனிகொடுத்து கர்த்தருக்குள் வளர்ந்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவர்களுடைய ஆவிக்குரிய கூர்மை போய்விட்டது என்பதை முதல் கூட்டத்திலேயே நான் உணர்ந்து கொண்டேன். பரிசுத்த ஆவியானவரின் கண்டித்து உணர்த்தும் வல்லமை தங்கள் மத்தியிலே ஏன் இல்லை என்று அவர்கள் வியந்தார்கள். ஆண்டவராகிய இயேசுவின் நெருக்குகிற அன்பு உண்மையாகவே அவர்களை இறுக்கிப் பிடிக்கவில்லை. தேவனுடைய ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக இருப்பதற்குப்பதிலாக, அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதில் திருப்பியடைந்துவிட்டார்கள். என் வாழ்க்கையில் எப்போதெல்லாம் அந்த ஆவிக்குரிய கூர்மை போய்விட்டதுபோல் தோன்றியதோ, அப்போதெல்லாம் பரிசுத்த ஆவியானவர், "நீ வெறுமனே சட்டப்பிரகாரமான மட்டத்தில் தங்கிவிட்டாய்," என்று சுட்டிக்காட்டியிருப்பதை நான் கண்டிருக்கிறேன்.
நீங்கள் இந்த உயர்ந்த மட்டத்திற்குச் செல்லவேண்டும் என்று ஒருவரும் உங்களிடம் ஒருபோதும் கோருவதில்லை. இது எவ்வளவு அற்புதம்! "என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்," என்று பவுல் கூறுகிறார். அவர் எதை உண்மையான மகிழ்ச்சியுடன் சொல்லுகிறார் என்று நான் நினைக்கிறேன். கர்த்தருக்குரிய ஏதோவொன்றை நாம் உண்மையாகவே பார்த்தால் மட்டுமே, நம் முழு ஆள்தத்துவமும் தேவனுடைய இருதயத்தைத் திருப்திசெய்ய நாடி ஓடும். பல வேளைகளில் நான் வெறுமனே கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றுகிற பில்லியைப்போல் இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். "அதோ! அங்கு 24 துண்டுகள் இருக்கின்றன. என் விருப்பப்படிச் சாப்பிட எனக்கு ஒரு உரிமை உண்டு, சுதந்திரம் உண்டு, என்று என் அம்மா கூறினார். எனக்கு உரிமைகள் இருக்கின்றன; நான் என் ஆதாயத்தை அனுபவிக்கிறேன்," என்று என்னால் கூற முடியும். ஆனால், நான் என் உதடுகளால் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் வேறு ஏதோவொன்று எனக்குள் ஆழத்தில் பேசிக்கொண்டிருந்தது. மரத்தின் வேர்களைத் திரைநீக்கக் காண்பிக்கிற பரிசுத்த ஆவியானவர் எப்போதும், "கொடு, கொடு," என்று கூறுகிறார்.
நாம் நம் சபைக்கு அல்லது நாம் ஐக்கியம் கொண்டிருக்கும் மக்களிடம் திரும்பிச்செல்லும்போது, இது நம்மில் ஜீவிக்கும் ஒரு கோட்பாடாக மாறும் என்று நான் நம்புகிறேன். ஜீவிக்கும் வழியே நிஜமான மகிழ்ச்சியின் வழியாகும். சட்டப்பூர்வமான வழி எல்லா நேரமும் உள்ளாகப் புண்படுத்துகிற வழியாகும்; ஏனென்றால், தேவன் எதிர்பார்க்கின்ற நிறைவுக்கென்று நாம் வாழவில்லை என்று நமக்குத் தெரியும்.