By மெர்லின் இராஜேந்திரம்
இரட்சிக்கப்பட்ட சிலர் விசுவாசத்தில் நிலைத்திருப்பதுபோலவும், வேறு சிலர் விசுவாசத்தைவிட்டு விலகிவிட்டதுபோலவும், இன்னும் சிலர் விசுவாசத்தில் இருக்கிறார்களா இல்லையா என்று சொல்லமுடியாததுபோலவும் இருக்கிறது. இதை எப்படி விளக்குவது?
இரட்சிப்பில் விசுவாசம், விசுவாசத்தின் தன்மை, கிருபை, நிலைத்திருத்தல், விசுவாசதுரோகம், மறுதலித்தல், உடன்படிக்கையின் தன்மை, நீதிப்படுத்தப்படுதல், ஒப்புரவாகுதல், மறுசாயலாக்கப்படுதல்போன்ற பல அம்சங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.
இரட்சிப்பைப்பற்றிய சில கேள்விகள்: ஆண்டவராகிய இயேசுவை ஒருமுறை விசுவாசித்து, இரட்சிக்கப்பட்டவன் தான் பெற்ற இரட்சிப்பை இழக்கும் சாத்தியம் உண்டா? உண்மையான இரட்சிப்பின் அடையாளங்கள் என்ன? ஒருவனுடைய இரட்சிப்பு உண்மையானது என்று எப்படித் தெரியும்? இரட்சிக்கப்பட்டபின் ஒருவன் எப்படியும் வாழலாமா? ஒருவன் எப்படி வாழ்ந்தாலும் அவனுடைய இரட்சிப்பு நிலைத்திருக்குமா? பெற்ற இரட்சிப்பைக் காத்துக்கொள்ள ஒருவன் ஏதாவது செய்ய வேண்டுமா வேண்டாமா? ஒருவன் ஒன்றும் செய்யாவிட்டாலும் தேவன் அவனைக் கடைசிவரைக் காத்துக்கொள்வாரா? இது முற்றிலும் தேவனைச் சார்ந்ததா அல்லது மனிதனைச் சார்ந்ததா அல்லது தேவனையும் மனிதனையும் சார்ந்ததா? ஒருமுறை இரட்சிக்கப்பட்டவன் எப்போதும் இரட்சிக்கப்பட்டவனா? ஒருமுறை இரட்சிக்கப்பட்டவன் தான் பெற்ற இரட்சிப்பை இழக்க வாய்ப்பே இல்லை என்றால் “பின்வாங்குதல்” “விசுவாசதுரோகம்” என்றால் என்ன பொருள்? இரட்சிப்பைப்பற்றி இதுபோன்ற பல கேள்விகளும், சந்தேகங்களும் நமக்கு எழலாம்.
இரட்சிப்பின் உத்தரவாதம்: இரட்சிப்பின் நிச்சயம் என்றால் என்ன? “இரட்சிப்பின் உத்தரவாதம்” என்பது ஒரு விசுவாசி இன்று தான் பாவ மன்னிப்பைப் பெற்றுத் தேவனுடன் சரியான நிலையில் இருப்பதாகவும், இறுதியில் இது நிச்சயமாக முழுமையடையும் அல்லது உறுதியான இலக்கை எட்டும் என்று நம்புவதைக் குறிக்கலாம். அதாவது “நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன். எனவே, நான் மரித்தபின் பரலோகத்துக்குப் போவேன்,” என்பது இரட்சிப்பின் உத்தரவாதம் என்று பலர் நினைக்கலாம். ஆனால், இது மிகக் குறுகிய பார்வை என்று நான் நினைக்கிறேன்.
இயேசுவை விசுவாசிப்பவன் இரட்சிக்கப்பட்டிருக்கிறான் என்பதும், இரட்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறான் என்பதும், இரட்சிக்கப்படுவான் என்பதும் வேதாகமத்தின் தவறாத, மாறாத உண்மை. பிறக்கும் குழந்தைக்குள் பெற்றோரின் உயிர் இருக்கிறது. ஆனால், அந்த உயிர் வளர்ந்து முதிர்ச்சியடைய வேண்டும். அதுபோல, நாம் மறுபடிபிறக்கும்போது நாம் தேவனுடைய தெய்வீக, நித்திய ஜீவனைப் பெறுகிறோம். ஆனால், இந்த ஜீவன் வளர வேண்டும். இறுதியில் நாம் இந்த ஜீவனுக்குள் நுழைவோம். இது ஒரு தொடர் ஓட்டம். இங்கு ஆரம்பித்தது நித்தியத்தில் போய் முடிவடையும். இதற்கு ஆரம்பமும் முடிவும் உண்டு.
நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதின் முன்சுவையை நாம் இந்தப் பூமியிலே கொஞ்சம் அனுபவிக்கிறோம். இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்காகப் பரிந்துபேசப் பரலோகத்திலுள்ள கூடாரத்துக்குள் நுழைந்துவிட்டதால் நாம் இன்று தேவனுக்குமுன்பாகத் தைரியமாகச் சேர முடியும் (எபி. 4:16); நாம் ஜெபிப்பதற்கு தேவனிடத்தில் தைரியமாகப் போக முடியும்; நாம் அவரை, “அப்பா, பிதாவே!” (கலா. 4:6; ரோமர் 8:15)) என்று கூப்பிட முடியும். இவைகள் நாம் பெற்றிருக்கும் இரட்சிப்பின் முக்கியமான அம்சங்கள்தானே! ஆம், நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். இரட்சிப்பின் பரிமாணங்களையும், முன்சுவைகளையும் நாம் இந்தப் பூமியில் பார்க்கிறோம், அனுபவிக்கிறோம். ஆனால், கிறிஸ்தவனின் இரட்சிப்பு எதிர்காலத்தில்தான், மறுமையில்தான் முழுமையடையும்.
இதற்கிடையில் இரட்சிக்கப்பட்டவன் விசுவாசத்தைவிட்டு விலகிச்செல்வது சாத்தியமா? விசுவாசதுரோகம் சாத்தியமா, உண்மையா? ஒருவன் தான் பெற்ற இரட்சிப்பை இழக்கும் வாய்ப்பு உண்டென்றால், அவன் நிபந்தனைகளுக்குட்பட்டுத்தான் நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க முடியுமா? நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் இரட்சிப்பு நிச்சயம் என்றால் இயேசுவின் சிலுவை மரணமும், இரத்தமும், கிருபையும், நம் விசுவாசமும் போதாதா? இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் நிச்சயமாகப் பரலோகத்துக்குப் போக முடியும் என்ற உத்தரவாதம் உண்டா இல்லையா?
இரட்சிப்பைப்பற்றிய வேதவசனங்களை வாசிக்கும்போது இரட்சிப்பின் நிச்சயத்தைப்பற்றிய கேள்விகளும், சந்தேகங்களும், பயங்களும் எழுகின்றன; அச்சமும், நடுக்கமும் நம்மை ஆட்கொள்ளுகின்றன. எனவே, இரட்சிப்பைப்பற்றி நாம் கொஞ்சம் அறிந்திருக்க வேண்டும். இதைப்பற்றிய பல கண்ணோட்டங்களும், அணுகுமுறைகளும், பார்வைகளும், கருத்துக்களும் உள்ளன.
1. ஒரே வசனத்துக்குப் பல்வேறு விளக்கம் கொடுக்கும் போக்கு இன்று பரவலாக இருக்கிறது. மாறுபட்ட கருத்துடைய பல வசனங்களை மேற்கோள்காட்டி பட்டிமன்றம் நடத்தும் போக்கும் இன்று அதிகமாகவே இருக்கிறது. ஒரே வசனத்துக்கு பல்வேறு விளக்கமும், வியாக்கியானமும் கொடுக்கும் மக்கள் மலிந்திருக்கும்போது, முரண்பட்ட வசனங்களுக்கு பல்வேறு விளக்கமும், வியாக்கியானமும் கொடுக்கும் மக்களுக்குப் பஞ்சம் இருக்குமா?
வேதாகமத்தில், இரட்சிப்பின் நித்திய உத்தரவாதத்தை உறுதிசெய்யும் வசனங்களும், இரட்சிப்பை இழக்க வாய்ப்பு உண்டு என்று சொல்லும் வசனங்களும் உள்ளன. இது ஒரு தர்மசங்கடமான நிலைமை. ஒருபுறம், “தேவன் எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” (ரோமர் 8:30) என்று முன்குறிக்கப்பட்டு, முன்னறியப்பட்டு, அழைக்கப்பட்டு, நீதிப்படுத்தப்பட்ட மக்கள் ஒருநாள் நிச்சயமாக மகிமைப்படுத்தப்படுவார்கள் என்று பவுல் திட்டவட்டமாகக் கூறுகிறார். தேவனுடைய பார்வையில் இவைகள் நடந்துமுடிந்துவிட்டன என்பதுபோல் அவர் பேசுகிறார். ஆனால், இன்னொரு புறம், “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்” (2 கொரி. 13:5) என்றும் அதே பவுல் கொரிந்திய விசுவாசிகளிடம் கேட்கிறார்.
கிறிஸ்தவர்களுக்கு “மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள் அருளப்பட்டுள்ளன” (2 பேதுரு 1:4); ஆனால், இப்படிப்பட்ட வாக்குறுதிகள் அவர்கள் தங்கள் “அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படிச்” செயல்படுகின்றன (2 பேதுரு 1:10) என்று பேதுரு கூறுகிறார்.
ஆண்டவராகிய இயேசுவும், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும் என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது” (யோவான் 6:37-40) என்று (யோவான் 17:6-17) தம்மை விசுவாசிப்பவர்களைத் தாம் கடைசிவரைப் பாதுகாப்பதாக இயேசு வாக்குறுதி அளிக்கிறார். தம்மிடம் வருகிற, அதாவது தம்மை விசுவாசிக்கிற, ஒருவனையும் தாம் கெட்டுப்போக விடப்போவதில்லை என்று இயேசு உறுதியளிக்கிறார். ஆனால், அதே இயேசு தம்மை விசுவாசித்தவர்களை நோக்கி, “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால், மெய்யாகவே என் சீடராயிருப்பீர்கள்” (யோவான் 8:31) என்றும் சொன்னார்.
இதுபோன்ற வசனங்களை வாசிக்கும்போது ஆரம்ப விசுவாசம் போதுமா அல்லது நிலைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழத்தானே செய்யும். “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும், இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால் மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்ற வசனங்களை (எபிரேயர் 6:4-6) வாசிக்கும்போது விசுவாசத்துரோகம் சாத்தியமே என்றும், விசுவாசத்தை மறுதலிக்கிறவர்கள் தப்பிக்க வழியில்லை என்றும் தெரிகிறது.
அப்படியானால் விசுவாசிகள் இப்படிப்பட்ட பரிதாபமான நிலைமைக்குள் விழுவார்களா விழமாட்டார்களா? விழமாட்டார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட நிலைமைக்குள் விழுகிறவன் விசுவாசியா இல்லையா?
யோவான் தன் நிருபத்தில், “உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவேண்டும் என்றும், தேவ குமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்க வேண்டும் என்றும்,” (1 யோவான் 5:13) ஆண்டவராகிய இயேசுவை விசுவாசிக்கின்ற விசுவாசிகளுக்கு எழுதுகிறார். இந்த வசனத்தை வாசிக்கும்போது ஒருவன் ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்தபோதும், தன்னிடம் தேவனுடைய நித்திய ஜீவன் இருப்பதை அறியாமல் இருப்பது சாத்தியம் என்று தெரிகிறது.
இப்படிப்பட்ட வேதவசனங்களை பகுப்பாய்வுசெய்வது எந்த அளவுக்குச் சாத்தியம் என்றும், பயனுள்ளது என்றும் எனக்குத் தெரியாது. ஒரே வசனத்துக்கு மாறுபட்ட பொருள்விளக்கமும், வியாக்கியானமும் கொடுக்கும் வல்லுநர்கள் அதிகமாக இருக்கும்போது, மாறுபட்ட கருத்துடைய இதுபோன்ற வசனங்களை அவரவர் தம்தம் கருத்துக்குச் சாதகமாக வளைப்பது வியப்பல்ல.
உள்ளேநுழைதல், நிலைத்திருத்தல்: கிறிஸ்தவர்கள், பொதுவாக, தேவனுடைய மையமாகிய கிறிஸ்துவை விட்டுவிட்டு கிறிஸ்துவுக்குரியதுபோல் தோன்றுகிற சுற்றுவட்டத்தில் சுற்றிச்சுற்றி வருகிற போக்குடையவர்கள். எனவே, சிலர் இரட்சிப்பின் உத்தரவாதத்தைப்பற்றிய வசனங்களை வியாக்கியானம்செய்யும்போது “உள்ளேநுழைதல்” “நிலைத்திருத்தல்” என்ற இரண்டு பதங்களைப் பயன்படுத்துகிறார்கள். “உள்ளேநுழையும்”போது தேவனுடைய கிருபை செயல்படுகிறது அல்லது தேவனுடைய கிருபை செயல்படும்போது “உள்ளேநுழைகிறார்கள்” என்றும், “நிலைத்திருக்கும்போது” விசுவாசியின் கீழ்ப்படிதல் செயல்படுகிறது அல்லது விசுவாசி கீழ்ப்படியும்போது “நிலைத்திருக்கிறார்கள்” என்றும் சிலர் சொல்லுகிறார்கள். அதாவது, ஒருவனுடைய வாழ்க்கையில் தேவனுடைய கிருபை செயல்படும்போது அவன் “உள்ளே நுழைகிறான்” என்றும், உள்ளே நுழைந்தவன் தொடர்ந்து கீழ்ப்படியும்போது அவன் “நிலைத்திருக்கிறான்” என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.
இந்தக் கூற்றுக்குச் சாதகமான வசனங்கள் நிறைய இருக்கின்றன. இந்தக் கூற்றை எந்த மறுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டால் இரட்சிப்பின் உத்தரவாதம் கேள்விக்குறியாகிவிடும். “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு,” (எபே. 2:8) என்பது பொய்யா? இந்தக் கூற்றை ஏற்றுக்கொண்டால், ஒரு விசுவாசி இரட்சிக்கப்பட்டபின் வேதவசனங்களுக்குக் கீழ்ப்படியவில்லையென்றால் அவன் தன் இரட்சிப்பை இழந்துவிடுவான் என்று சொல்வதுபோல் ஆகிவிடும்; இயேசு கிறிஸ்துவின் மரணம், சிலுவை, அவருடைய இரத்தம், உயிர்த்தெழுதல் ஆகியவை பயனற்றவைகளாகிவிடுமே! இரட்சிப்பின் நித்திய உத்தரவாதத்துக்கு கிறிஸ்துவும் அவருடைய வேலையும் போதாதா? அன்றொருநாள் அவன் கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டானே! அது பொய்யா?
2. இரட்சிப்பின் அளவுகோல்கள்: யோவானின் முதல் நிருபம் “ஒரு விசுவாசியின் இரட்சிப்பின் நிச்சயத்தை அளப்பதற்கான அளவுகோல்கள், பரீட்சைகள்,” என்று சிலர் சொல்கிறார்கள்.
சீர்திருத்த காலத்துக்குமுன் கத்தோலிக்க இறையியலாளர்கள் இரட்சிப்பின் நிச்சயம் தேவதிரவிய அனுமானங்களைப் பொறுத்தது என்று சொன்னார்கள். சீர்திருத்த காலத்தில், மார்டின் லூத்தர்போன்ற சீர்திருத்தவாதிகள், “ஒருவனிடம் இரட்சிப்புக்கேதுவான விசுவாசம் இருந்தால் அவனுக்கு இரட்சிப்பின் உத்தரவாதமும் உண்டு,” என்ற சொன்னார்கள். அதாவது, “பாவமன்னிப்பு, நீதிப்படுத்தப்படுதல், ஒப்புரவாகுதல் ஆகியவைகளுக்காக ஒருவன் கிறிஸ்துவை விசுவாசித்தால் அவனுக்கு இரட்சிப்பின் உத்தரவாதமும் உண்டு,” என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால், “ஒருவன் கிறிஸ்துவின் குணத்துக்கு ஏற்ற மறுசாயலாக்கப்பட்ட வாழ்க்கை வாழாதவரை அவனுக்கு இரட்சிப்பின் உத்தரவாதம் இல்லை,” என்று ‘பியூரிட்டன்ஸ்’ சொன்னார்கள்.
அப்படியானால், இரட்சிப்பின் முழு நிச்சயம் இல்லாதவன் கிறிஸ்தவன் இல்லையா? மனந்திரும்பிய எல்லாருக்கும் இந்த முழு உத்தரவாதம் உண்டென்றால், “உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்”(எபி. 6:12), என்ற வசனத்தின் “முடிவுபரியந்தம்” ஜாக்கிரதையாயிருந்தால்தான் பூரண நிச்சயம் உண்டாகும் என்பதற்கு என்ன பொருள்? “இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய், உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து, கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்” (2 பேதுரு 1:5-10) என்று பேதுரு சொல்வதற்கு என்ன பொருள்? பேதுரு ஒரு நீண்ட பட்டியல் தருகிறார். இந்தப் பட்டியலில் சொல்லப்பட்டவைகள் இல்லாதவன் நிலை என்னவென்பதையும் அவர் சொல்லுகிறார். இரட்சிப்புக்கேற்ற ஆரம்ப விசுவாசம் போதுமென்றால், அதைத் தொடர்ந்து பரிசுத்தமான வாழ்க்கை தேவையில்லையா என்ற கேள்வி எழாதா? ஆரம்ப விசுவாசத்தைக்கொண்டு ஒருவன் உண்மையாக இரட்சிக்கப்பட்டிருந்தால், அதைத் தொடர்ந்து பரிசுத்தமான வாழ்க்கை இயல்பாகவே வரும், வரவேண்டும் என்று இதுபோன்ற வேத வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன!
சிலர் தேவன் நித்திய ஜீவன் அளிப்பதாகச் சொன்ன வாக்குறுதிகளைத் தனியாகவும், கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிந்து சீடனாவதைத் தனியாகவும் பிரித்துப்பார்க்கிறார்கள். இரட்சிப்பின் நிச்சயத்துக்குக் கீழ்ப்படிதல் அவசியம் என்றால் விசுவாசம் கூட்டல் செயல்கள் அவசியம் என்று பொருள். இரட்சிப்புக்குச் செயல்களும் அவசியம் என்றால் விசுவாசமும், கிருபையும் போதாது என்றாகிவிடுகிறதே! கிருபையும், விசுவாசமும் போதும் என்றால் மெய்யான மனந்திரும்புதல் அவசியம் இல்லையா? பழைய பாவங்களைக்குறித்து கவலையில்லையா? இரட்சிக்கப்பட்டபிறகும் பழைய பாவங்களிலே தொடர்ந்து வாழலாமா? அவைகளிலிருந்து விடுபெற வேண்டாமா?
1 கொரிந்தியர் 3இல் “இயற்கையான” (ஜென்மசுபானமான) மனிதனைப் பார்க்கிறோம். இயற்கையான மனிதன் இரட்சிக்கப்படாதவன். அங்கு நாம் பார்க்கிற இரட்சிக்கப்பட்டவன் மாம்சப்பிரகாரமானவன்; அவன் இரட்சிக்கப்பட்டிருக்கிறான்; ஆனால், அவன் உலகப்பிரகாரமாக வாழ்கிறான்; கடைசியில் “அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோல” தப்புகிறான். அவனுடைய வேலைகள் எரிந்துசாம்பலாகின்றன. ஆவிக்குரியவன் இயேசுவைக் கர்த்தரென அறிந்து, அவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்கிறான். கீழ்ப்படியாதவன் மிகப் பெரிய விலைகொடுக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால், அவனுடைய இரட்சிப்பின் நிலை என்ன? அவன் இரட்சிப்பை இழப்பானா அல்லது காத்துக்கொள்வானா?
சிலர் இரட்சிப்பின் நிச்சயத்தைப்பற்றி நினைப்பதேயில்லை. கிறிஸ்தவனின் இரட்சிப்பு புதிய வானம் புதிய பூமியில் முழுநிறைவடையும். இந்தத் தரிசனம் இல்லையென்றால் இரட்சிப்பைப்பற்றியும், நித்திய உத்தரவாதத்தைப்பற்றியும் பேசுவது பயனற்றது.
1. புதிய ஏற்பாடு “சிலர் ஆண்டவராகிய இயேசுவுக்குக் கீழ்ப்படிகிற உண்மையான விசுவாசிகள்” என்றும், “வேறு சிலர் இயேசுவுக்குக் கீழ்ப்படியாத உண்மையான விசுவாசிகள்” என்றும் இரண்டு சாராரைப்பற்றிப் பேசவில்லை. இப்படி இரண்டு சாரார் இருப்பதாகவோ, இவர்களுக்கிடையே தரத்தில் பெரிய வித்தியாசம் இருப்பதாகவோ புதிய ஏற்பாடு சொல்லவில்லை.
1 கொரிந்தியர் 3ஆம் அதிகாரத்தை எடுத்துக்கொள்வோம். கொரிந்து சபையில் இருந்த பிரிவினையைப்பற்றி பவுல் 1 கொரிந்தியர் 1:10-4:20வரையிலான வசனங்களில் பேசுகிறார். குறிப்பாக 1:10-11; 3:5-6; 21-23; 4:6. “நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும், ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று...உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்...உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று எனக்கு அறிவிக்கப்பட்டது” (1 கொரி. 1:10-11). “பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே! நான் நட்டேன், அப்பொல்லோ நீர்பாய்ச்சினான். தேவனே விளையச்செய்தார்” (1 கொரி. 3:5-6). “இப்படியிருக்க ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக. எல்லாம் உங்களுடையதே. பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும், மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள். கிறிஸ்து தேவனுடையவர்” (1 கொரி. 3:21-23). “சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவன்நிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும் நான் உங்கள் நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து இவைகளை எழுதினேன்” (1 கொரி. 4:6). கொரிந்திய விசுவாசிகள் தங்களைப் பிறரைவிட ஞானிகளாகவும், ஆவிக்குரியவர்களாகவும் கருதியதுதான் இந்தப் பிரிவினைக்குக் காரணம். 1 கொரிந்தியர் 1:19-31இல் பவுல் உலக ஞானத்தைப்பற்றியும், தேவ ஞானத்தைப்பற்றியும் பேசுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம் (1:18; 2:6; 3:18). அவர்கள் தங்களை ஞானிகளாகவும், முதிர்ச்சியடைந்த ஆவிக்குரியவர்களாகவும் கருதினார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் நினைத்ததுபோல் அவர்கள் ஞானிகளோ, ஆவிக்குரியவர்களோ அல்ல. எனவே, பவுல் அவர்களுடைய சிந்தனையையும், நடத்தையையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டி அவர்கள் நினைப்பதுபோல அவர்கள் “ஆவிக்குரியவர்களல்ல, மாறாக மாம்சத்துக்குரியவர்கள், கிறிஸ்துவுக்குள் குழந்தைகள்” (3:1) என்று கூறுகிறார். கொரிந்திய விசுவாசிகள் தங்களை முதிர்ந்த ஆவிக்குரியவர்களாகக் கருதினார்கள். ஆனால், உயிர்த்தெழும்போது, இப்போது இருக்கும் உடலைவிட முற்றிலும் வித்தியாசமான ஓர் உயிர்த்தெழுந்த உடல் கிடைக்கும் என்ற அறிவுகூட அவர்களிடம் இல்லை (1 கொரி. 15). பவுல் சரீரப்பிகாரமாக அவர்களிடையே இருந்தபோது அவர்கள் உண்மையாகவே “மாம்சத்துக்குரியவர்களாக” (வ. 1) இருந்தார்கள். அவர் அவர்களைவிட்டு வந்தபிறகு இப்போதும் அவர்கள் “மாம்சத்துக்குரியவர்களாகவே” (வ. 3) இருக்கிறார்கள். அவர்களிடம் மாம்சத்துக்குரிய எல்லாக் குணங்களும் அன்றும் இருந்தன், இன்றும் இருக்கின்றன. அவர்கள் “வெறும் சாதாரண மனிதர்களைப்போல, மனித மார்க்கமாய் நடக்கிறார்கள்.” (வ. 3). “பொறாமையும், வாக்குவாதமும், பேதகங்களும்” இருப்பதும், மனிதர்களைத் தலைவர்களாக்கி, தலைவர்களைப் பெரிய ஜாம்பவான்களாக மாற்றி அவர்களைவைத்து குழுக்களை உருவாக்கியிருப்பதும் இதற்கு நிரூபணம்.
அப்படியானால் பவுல், இங்கு, ஒரு புதிய வகைக் கிறிஸ்தவர்களை அறிமுகப்படுத்துகிறாரா? கிறிஸ்தவர்களுக்கிடையே இப்படி ஒரு நிலையா? ஆவியைப் பெறாத ஜென்மசுபாவமானவர்களை (இயற்கையானவர்களை) பவுல் “பைத்தியக்காரர்கள்” (2:14) என்று சொல்லுகிறார். இந்தக் கிறிஸ்தவர்களை அவர் இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. இவர்களுடைய ஆவிக்குரிய நிலைமையையும், தரத்தையும் பவுல் ஏற்கெனவே சொல்லிவிட்டார் (1:4-9). ஆனால், “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல” (ரோமர் 8:9) என்றும், “ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களா? நீங்கள் இத்தனை புத்தியீனரா?” (கலா. 3:3) என்றும் ஆவியில்லாதவன் கிறிஸ்தவனாக இருக்க முடியாது என்று பவுல் பல இடங்களில் மீண்டும்மீண்டும் சொல்லுகிறாரே! அப்படியானால், இவர்கள் ஆவியைப் பெற்றவர்களா, பெறாதவர்களா? அவர் கொரிந்திய விசுவாசிகளை, “நீங்கள் ஆவிக்குரியவர்களைப்போல் சிந்திக்காமல், நடக்காமல் மாம்சத்துக்குரியவர்களாக, வெறும் மனிதர்களைப்போல் சிந்திக்கிறீர்கள், நடக்கிறீர்கள்,” என்று சொல்லுகிறார். அதாவது “ஆவியில்லாத, ஆவியைப் பெறாத, மனிதர்கள் எப்படிச் சிந்திப்பார்களோ, நடப்பார்களோ அப்படியே நீங்கள் சிந்திக்கிறீர்கள், நடக்கிறீர்கள்,” என்று அவர் அவர்கள்மேல் குற்றஞ்சுமத்துகிறார். இது ஒரு தர்மசங்கடமான நிலைமை. எனவேதான், இதைப்பற்றி விவாதம் பல நூற்றாண்டுகளாக நடந்துகொண்டேயிருக்கிறது, தவறான புரிதல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. கொரிந்திய விசுவாசிகளின் உள்ளார்ந்த முரண்பாட்டை உணர்த்த பவுல் மிகக் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவர்கள் ஆவியைப் பெற்றிருக்கிறார்கள்; ஆனால், இந்த நேரத்தில் அவர்கள் ஆவியை உடையவர்கள்போல் சிந்திக்கவோ, நடக்கவோ இல்லை என்று பவுல் சொல்லுகிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா?
பவுல் ஒரு புதிய வகையான, வித்தியாசமான கிறிஸ்தவர்களை அறிமுகப்படுத்துகிறார் என்பதைவிட இந்த அணுகுமுறை ஏற்கத்தக்கது. சிலர் “ஆவிக்குரிய” என்பதற்குப் புதிய பொருள் கொடுக்கிறார்கள். வேறு சிலர் இந்த வசனங்களை ஆதாரமாகவைத்து மனிதனை ஆவிக்குரியவன், மாம்சத்துக்குரியவன், ஜென்மசுபாவத்துக்குரியவன் என் முப்பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற திட்டவட்டமான பகுதிகளைப் பவுலின் பிற நிருபங்களில் அதிகமாகப் பார்க்க முடியவில்லை.
அவர் கொரிந்திய விசுவாசிகளை ஆவிக்குரியவர்கள் என்று சொல்லமுடியவில்லை என்று சொல்லும்போது அவர்கள் ஆவிக்குரியவர்கள் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார் என்பதே பொருள். கொரிந்திய விசுவாசிகளிடம் ஆவி இல்லை என்று அவர் சொல்லவில்லை. ஏனென்றால், ஆவியில்லாதவன் விசுவாசியாக இருக்க முடியாது. விசுவாசி என்றாலே அவன் ஆவியையுடையவன் என்று பொருள். எனவே, கொரிந்திய விசுவாசிகள் ஆவியில்லாத மக்களைப்போல் நடப்பதாகவும், அவர்கள் அதை நிறுத்த வேண்டும் என்றும் சொல்லுகிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
1. 1 கொரிந்தியர் 3யை வாசிக்கும்போது, பவுல் மாம்சத்துக்குரிய கிறிஸ்தவர்கள், ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என இரண்டு வகையான கிறிஸ்தவர்களை அறிமுகப்படுத்துகிறார் என்றோ, அவர்களுக்கிடையே காற்றுபுகமுடியாத அளவுக்கு இறுக்கமான ஒரு வித்தியாசத்தைக் குறிப்பிடுகிறார் என்றோ சொல்லமுடியாது. ஏனென்றால், எல்லாக் கிறிஸ்தவர்களும் ஏதோவொரு கட்டத்தில், கொரிந்திய விசுவாசிகளைப்போல், பொறாமைப்படுகிறார்கள், சண்டைபோடுகிறார்கள்; எனவே, கிறிஸ்தவர்கள் இவைகளில் ஈடுபடும்போது அவர்கள் மாம்சத்துக்குரியவர்களே என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையான கிறிஸ்தவன் ஒருபோதும் பொறாமைப்படுவதில்லை, சண்டைபோடுவதில்லை என்று ஒருவேளை பூரணவாதிகள் சொல்லக்கூடும். எனவே, அவர்கள் இந்தக் கூற்றை ஒப்புக்கொள்ளாமல் போகலாம். அதுபோல, இயேசுவை இரட்சகராக மட்டும் ஏற்றுக்கொள்கிற கிறிஸ்தவர்கள் ஒருவகை, அவரை ஆண்டவராக, அதாவது கர்த்தராக, ஏற்றுக்கொள்கிற கிறிஸ்தவர்கள் இன்னொரு வகை எனவும், இவர்களுக்கிடையே வித்தியாசம் உண்டு என்று பவுல் சொல்லுகிறார் என்றும் நாம் சொல்ல முடியுமா?
2. கொரிந்திய விசுவாசிகளிடம் காணப்படுகிற பாவங்கள் எல்லா விசுவாசிகளிடமும் இருக்கின்றன. இதற்கு யாராவது விதிவிலக்கு உண்டா? எனவே, அவர்கள் இயேசுவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றபோது கொடுத்த வாக்குறுதிகளைவிட்டு விலகிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் நற்செய்திக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது தாங்கள் இயேசுவை விசுவாசிப்பதாக அறிக்கைசெய்வார்கள். அதன்பின் கொஞ்சநாட்களோ, மாதங்களோ, இயேசுவைப் பின்பற்றுவார்கள். பிறகு தங்கள் மனச்சாட்சியை மழுங்கடித்துவிட்டு, அஞ்ஞானிகளைப்போலவே வாழ்வார்கள். பவுல் இங்கு அப்படிச் சொல்லவில்லை.
1 கொரிந்தியர் 5இல் பவுல் பாலியல் ஒழுக்கக்கேட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிற, மனந்திரும்பாத ஒருவனைப்பற்றிச் சொல்லுகிறார். அந்த மனிதனின் ஆவிக்குரிய நிலையைப்பற்றி பவுலால்கூட உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இதனால் பொறாமை, வாக்குவாதம், பேதகம்போன்ற பாவங்கள் ஒரு பொருட்டல்ல என்பதல்ல இதன் பொருள். பாவம் அருவருப்பானது, அசிங்கமானது. எனவே, இதை எப்படிப் பார்க்கலாம்? சில கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் சில நிலைகளில் ஆவியானவரின் பிரசன்னத்தையும், வல்லமையையும் பார்க்கமுடிகிறது (1:3-8); அவர்களுக்குள்ளே கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி பலமாகக் காணப்படுகிறது; அவர்கள் உபதேசத்திலும், அறிவிலும் சம்பூரணமாயிருக்கிறார்கள்; அவர்களிடம் வரங்களும் நிறைவாக இருக்கின்றன; அவர்கள் கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்; ஆனால், குறிப்பிட்ட சில காரியங்களில் அவர்கள் ஆவியானவருக்கு ஒவ்வாத, ஏற்காத, பொருந்தாத வகையில் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள். இதை நாம் இப்படித்தான் பார்க்க வேண்டும்.
3. எல்லாவற்றிற்கும்மேலாக இந்த அதிகாரத்தில் “மாம்சத்துக்குரியவர்கள்” என்று சொல்லப்படுகிறவர்களுக்கும் வ. 14-15இல் சொல்லப்படுகிறவனுக்கும் சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.
கொரிந்திய விசுவாசிகளின் மாம்சம் அவர்களுடைய பொறாமையிலும், வாக்குவாதத்திலும், பேதகங்களிலும் வெளியரங்கமானது. அவர்கள் மனிதர்களைத் தலைவர்களாக்கி, அவர்களை மையமாகவைத்து குழுக்களை, கட்சிகளை, உருவாக்கினார்கள். எனவே, இப்படிப்பட்ட தலைவர்களின் பங்களிப்பு எவ்வளவு மட்டுப்பட்டது என்று பவுல் அவர்களுக்கு எடுத்துரைக்கிறார்.
இதை விளக்க அவர் இரண்டு உருவகங்களைப் பயன்படுத்துகிறார். முதலாவது விளைநிலம் (3:5-9). “நான் நட்டேன். அப்பொல்லோ நீர்பாய்ச்சினான். தேவனே விளையச்செய்தார்” (3:6). விதைத்தவனுக்கும், விதைக்கு நீர்ப்பாய்ச்சுபவனுக்கும் ஒரேவொரு நோக்கம்தான் இருக்கிறது. “அவனவன் தன்தன் வேலைக்குத்தக்கதாய்க் கூலியைப் பெறுவான்” (3:8). இந்த உருவகத்தில் கொரிந்திய விசுவாசிகள் தோட்டத்தில் வேலைசெய்யும் வேலையாட்கள் என்று சொல்லப்படவில்லை. பவுலும் அப்பொல்லோவும் “தேவனுக்கு உடன்வேலையாட்கள்” என்றும், கொரிந்திய விசுவாசிகள் தேவனுடைய “பண்ணை” (வ. 9) (தோட்டம் அல்லது விளைநிலம்) என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இரண்டாவது உருவகம் “மாளிகை” (கட்டிடம்” (வ.9). இந்த உருவகத்தில் அதே வேறுபாடுகள் தொடர்கின்றன. இந்த உருவகத்தில் கொரிந்திய விசுவாசிகள் “தேவனுடைய மாளிகை.” பவுல் இயேசு கிறிஸ்து என்னும் நபரை அஸ்திபாரம் போட்ட ஒப்பந்தக்காரர். அவர் போட்ட அஸ்திபாரத்தின்மேல் பிறர் கட்டுகிறார்கள். கட்டுபவர்களின் வேலைப்பாடு எத்தன்மையுள்ளது என்று கடைசி நாளில் தெரியும். கட்டுபவர்களின் வேலையின் தரத்தை நெருப்பு கடைசி நாளில் பரீட்சிக்கும். அவர்கள் கட்டுவது நெருப்புக்குத் தப்பி நிலைத்திருந்தால் அவர்கள் கூலியைப் பெறுவார்கள். நெருப்பில் வெந்து எரிந்துபோனால் அவர்களுடைய வேலையெல்லாம் வீண். “அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால் அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால் அவன் நஷ்டமடைவான். அவனோ இரட்சிக்கப்படுவான். அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்” (3:14-15). இந்த வசனத்தின்படி ஒரு கிறிஸ்தவனின் வேலைகள் திருப்தியில்லாதவை என்றாலும் அவன் ஆக்கினைக்குள்ளாகமாட்டான் என்று சொல்லலாமா? அவனுக்கு ஆக்கினைத்தீர்ப்பு இல்லை என்று நிச்சயிக்கலாமா? ஏனென்றால், அவன் தப்பித்துக்கொள்வான் என்று பவுல் சொல்லுகிறாரே! ஒரு வகையில் இப்படிச் சொல்வது சரிதான். ஆனால், இது பொதுவான கிறிஸ்தவர்களுக்கு, குறிப்பாக, அவர் “குழந்தைகள்” என்று அழைக்கிறவர்களுக்குப் பொருந்தும் என்று பவுல் சொல்வதாக நான் நினைக்கவில்லை (3:1). மாறாக, அவர் இங்கு கிறிஸ்தவத் தலைவர்களைப்பற்றிப் பேசுகிறார். கிறிஸ்தவ வேலையாட்களின் வேலையின் தரத்தை அவர் உயர்த்த விரும்புகிறார். எனவே, அவர் கிறிஸ்தவ வேலையாட்களை, அதாவது ஊழியர்களை, மனதில்வைத்துத்தான் இதைச் சொல்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. சுருக்கமாகச் சொல்வதானால், அவர் நிரந்தரமாகப் பின்வாங்குவதைப்பற்றியோ அல்லது ஒழுக்கக்கேட்டைப்பற்றியோ இங்கு பேசவில்லை. மாறாக, கிறிஸ்தவத்; தலைவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களின் மோசமான வேலைப்பாட்டைப்பற்றிப் பேசுகிறார்.
16-17இல் ஒரு சிறு குறிப்பு மறைமுகமாகக் காணப்படுகிறது. அது வெளிப்படையாக இல்லை. கட்டிடத்தைப்பற்றிய உருவகத்தை அத்துடன் நிறுத்தாமல் பவுல் அதைக் கொஞ்சம் நீட்டிக்கிறார். கொரிந்திய விசுவாசிகள் வெறுமனே ஒரு கட்டிடம் மட்டும் அல்ல, அந்தக் கட்டிடமே தேவனுடைய ஆலயம், தேவனுடைய வாசஸ்தலம், என்று அவர் சொல்லுகிறார். “ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்” (3:17). 10-15 வசனங்களில் சொல்லுகிற காரியத்தையே இந்த வசனங்களிலும் பவுல் மீண்டும் வலியுறுத்துகிறார் என்று நாம் ஒருவேளை ஒதுக்கிவிடலாம். எப்படியென்றால், அங்கு நெருப்பு சுட்டெரிக்கிறது, அவன் நஷ்டப்படுகிறான், கடைசியில் எப்படியோ தப்பித்துக்கொள்கிறான். இங்கு தேவன் அழிக்கிறார். ஆனால், இந்த வசனங்களில் அவர் கட்டுபவர்கள் என்று பன்மையில் சொல்லாமல் “ஒருவன்” என்று ஒருமையில் சொல்லுகிறார். முதல் நான்கு அதிகாரங்களையும் வாசிக்கும்போது, பிரிவினை, பொறாமை, வாக்குவாதம், பேதகம்போன்றவைகளுக்கு இடங்கொடுப்பவர்கள் தேவனுடைய ஆலயமாகிய சபையை அழிக்கும் வேலையைச் செய்கிறார்கள் என்று சொல்லுகிறார். அவர்களே அந்த ஆலயமாக இருப்பதால் அவர்கள் ஒரே நேரத்தில் தங்களுக்கு அழிவை ஏற்படுத்துகிறார்கள், தேவனுடைய தீர்ப்புக்கும் உள்ளாகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் எதற்காக அழைக்கப்பட்டார்களோ, தெரிந்துகொள்ளப்பட்டார்களோ அந்தத் தரத்தின்படி எல்லா நேரமும் வாழ்வதில்லை என்பதையும், இதுபோன்ற ஒவ்வொரு தோல்வியும் மோசமான மீறுதலே என்றும், தேவனுடைய ஆலயமாகிய சபையைச் சேதப்படுத்துகிறவர்கள் ஒரே நேரத்தில் தங்களைச் சேதப்படுத்தி, தேவனுடைய தீர்ப்புக்கும் உள்ளாவார்கள் என்றும், சபையில் தலைவர்கள் என்று கருதப்படுகிறவர்கள் தீர்ப்பின் நாளில் இரட்சிக்கப்பட்டாலும், தங்களுடைய வேலையென்று சொல்லிக்கொள்ள அவர்களிடம் ஒன்றும் இருக்காது என்றும் பவுல் இந்த அதிகாரத்தில் ஒப்புக்கொள்கிறார் என்று தெரிகிறது. இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டபின் “ஜென்மசுபாவமான நிலை”யிலிருந்து “மாம்சப்பிரகாரமான நிலை’க்குத் தாழ்ந்துபோய், பின்பு “ஆவிக்குரிய” நிலைக்கு, அதாவது இயேசுவை ஆண்டவராக, கர்த்தராக ஏற்றுக்கொள்கிற கட்டத்துக்கு உயர்கிற சாத்தியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதுபோல “மாம்சத்துக்குரிய” கிறிஸ்தவன் என்பவன் ஒரு காலத்தில் இயேசுவை விசுவாசிப்பதாக அறிக்கைசெய்தபின், இப்போது எல்லா வகையிலும் தன்னைச் சுற்றியுள்ள அஞ்ஞான உலகத்தைப்போல வாழ்பவன் என்பதையும் என்னால் ஏற்கமுடியவில்லை.
புதிய உடன்படிக்கையைப்பற்றி நேரடியான குறிப்புகள் புதிய ஏற்பாடு முழுவதும் நிரம்பியிருக்கின்றன. புதிய உடன்படிக்கையைப்பற்றிய எண்ணமும் புதிய ஏற்பாட்டில் அதிகமாகவே இருக்கிறது. “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது” (லூக்கா 22:20). “இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது” (1 கொரி. 11:25). ஆண்டவராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில் புதிய உடன்படிக்கையைப்பற்றிப் பேசினார்; என்றும், புதிய உடன்படிக்கையைத் தம் மரணத்தோடு சம்பந்தப்படுத்தினார் என்றும் லூக்காவும், பவுலும் கூறுகிறார்கள். மத்தேயுவும், மாற்கும் தங்கள் நற்செய்தியில் “புதிய” என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும், புதிய உடன்படிக்கையைப்பற்றிய எண்ணம் அங்கு இருக்கிறது. நிகழவிருக்கும் இயேசுவின் மரணம் பழைய உடன்படிக்கையின் நிஜம் என்றும், அது பழைய உடன்படிக்கையை முடிவுக்குக்கொண்டுவந்து அதை மாற்றப்போகிறது என்றும் அவர்கள் சொல்வதால் “புதிய” உடன்படிக்கை அங்கு இருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது. “இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரயேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்தும் காலம் வருகிறது. அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை. அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிற்கவில்லையே. நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்கிறார். அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரயேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன். நான் அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள். ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும் ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுதில்லை...புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார். பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபத்திருக்கிறது” (எபிரேயர் 8:8-13). “அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடு பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என் பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எபிரேயர் 10:16) எபிரேயர் நிருபத்தின் இந்தப் பத்திகள், “இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது இஸ்ரயேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்...” என்ற எரேமியா 31:31-34யை கிறிஸ்தவ விசுவாசத்தின் சாராம்சத்தோடு இணைக்கின்றன. 2 கொரிந்தியர் 3, கலாத்தியர் 4 ஆகிய அதிகாரங்கள் புதிய உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகின்றன. இப்படிப்பட்ட வெளிப்படையான வேதவாக்கியங்களையும்தாண்டி, புதிய உடன்படிக்கையைப்பற்றி பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் புதிய ஏற்பாட்டில் நிறைய இருக்கின்றன (எரே. 31:29; 32:36-41: எசே. 36:25-27: மல். 3:1). யோவான் 3:2 “புதிய பிறப்பைப்”பற்றிப் பேசுகிறது.
தேவனுடைய சட்டம் தேவ மக்களின் இருதயத்தில் எழுதப்படும் ஒரு காலம் வரும் என்று பழைய ஏற்பாட்டு வாக்குறுதிகளும், தீர்க்கதரிசனங்களும் முன்னறிவித்தன. ஒரு காலம் வருகிறது. அப்போது “கர்த்தரை அறிந்துகொள்” என்று போதகர்கள் போதிக்க வேண்டிய தேவையிருக்காது. ஏனென்றால், எல்லாரும் அவரை அறிந்துகொள்வார்கள் (எரே. 31:34) என்று இந்த வசனங்கள் கூறுகின்றன. “கர்த்தரை அறிந்துகொள்” என்று போதிப்பதற்குப் போதகர்கள் தேவைப்படாத ஒரு காலம் வரும் என்பதல்ல; மாறாக, கர்த்தரை அறிந்துகொள்ள உதவிசெய்ய மத்தியஸ்தராகிய போதகர்கள் தேவைப்பட மாட்டார்கள் என்பதே கவனிக்கப்பட வேண்டிய காரியம். போதகர்கள் சொல்லித்தரவில்லையென்றால் கர்த்தரை அறிய முடியாது என்ற நிலை இருக்காது என்பதே இதன் பொருள். ‘போதகர்களுக்கு மட்டுமே கர்த்தரைத் தெரியும்; அது அவர்களுடைய சிலாக்கியம்’ என்ற நிலை மாறும் என்பதே இதன் பொருள். புதிய உடன்படிக்கை மோசேயின்மூலமாக ஏற்படுத்தப்பட்ட பழைய உடன்படிக்கையைப்போன்றதல்ல. பழைய உடன்படிக்கையின்படி பிதாக்கள் புளித்த திராட்சைக் காய்களைச் சாப்பிட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின (எரே. 31:29). புதிய உடன்படிக்கை அப்படியல்ல. தேவனுடைய புதிய உடன்படிக்கையின் மக்களுடைய கல்லான இருதயம் அகற்றப்பட்டு, அவர்களுக்குச் சதையான இருதயம் கொடுக்கப்படுகிறது. “சுத்தமான ஜலம் தெளித்து” சுத்தமாக்கி, “நவமான இருதயத்தைக் கொடுத்து,...உள்ளத்தில் புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை...மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தைக் கொடுக்கிறார்” (எசே. 36:25, 26). கழுவிப் புதிதாக்குதல், சுத்தமாக்கிப் புதிதாக்குதல், புதிய பிறப்பு, புதிய ஆவி, புதிய இருதயம், சதையான இருதயம் ஆகியவைகளே புதிய உடன்படிக்கை.
தேவனுடைய ஆவியானவர் தேவமக்கள்மேல் ஊற்றப்படும் காலம் வரும் என்று பழைய ஏற்பாடு பல இடங்களில் முன்னுரைத்தது (ஏசா. 44:3-5: எசே. 11:19-20: 36:25-27: யோவேல் 2:28-32). இது நிறைவேறிற்று என்று சொல்லும் புதிய ஏற்பாட்டுப் பகுதிகளையும் கவனிக்க வேண்டும். புதிய உடன்படிக்கை யுகத்தின் ஒரு முக்கியமான சிறப்பியல்பை யோவான் நற்செய்தியில் காணலாம். மகிமைப்படுத்தப்பட்ட கிறிஸ்து ஆவியானவரை வழங்குகிறார் (யோவான் 7:37-39). “தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே. உங்களோடுகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே. அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் (நிச்சயத்தை, உத்தரவாதத்தை) கொடுத்திருக்கிறார்” (2 கொரி. 1:22). “...ஆவியென்னும் அச்சாரத்தைத் தந்தவரும் அவரே” (2 கொரி. 5:5). “நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்” (எபே. 1:13-14). “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” (எபே. 4:30). நாம் இறுதியில் சுதந்தரிக்கப்போகிற சுதந்தரத்தின் அச்சாரமாகப் (நிச்சயமாக, உத்தரவாதமாக) பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளப்பட்டிருக்கிறார். ஆவியானவர் சபையை உயிர்ப்பிப்பதையும், பலப்படுத்துவதையும், வழிநடத்துவதையும் அப்போஸ்தலர் நடபடிகள் முழுவதும் பார்க்கிறோம். பெந்தெகொஸ்தே நாள்முதல் இயேசுவின் இரண்டாம்வருகைவரையிலான காலம் ஆவியானவரின் காலம், அதாவது புதிதாக்குகின்ற, உணர்த்துகின்ற, கழுவுகின்ற, தூய்மையாக்குகின்ற, பலப்படுத்துகின்ற வல்லமையுள்ள ஆவியானவரின் காலம். “ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோம்” (ரோமர் 8:23) என்பதில் சந்தேகம் இல்லை. “பாவ சுபாவத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கு” (ரோமர் 8:4) தேவன் தம் குமாரனைப் பாவ மாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பினார்.
இரட்சிப்பின் நிச்சயத்தைப்பற்றி விவாதிப்பவர்கள் பெரும்பாலும் நீதிப்படுத்தப்படுதல், விசுவாசம்போன்றவைகளோடு தொடர்புடையவைகளையே பேசுகிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியானவரோடும், புதிய உடன்படிக்கையோடும் தொடர்புடைய வல்லமை, மறுசாயலாக்கப்படுதல்போன்றவைகளைப் பெரும்பாலும் புறக்கணிக்கிறார்கள். புதிய உடன்படிக்கையின் மக்கள் புதிய இருதயத்தைப் பெற்றிருக்கிறார்கள்; பரிசுத்தமாய் வாழ்வதற்கும், நீதியை நேசிப்பதற்கும், கர்த்தருக்குப் பிரியமாய் நடப்பதற்கும் பரிசுத்த ஆவியால் பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், கிறிஸ்தவர்கள் புதிய உடன்படிக்கையின் வாரிசுகள் என்ற முறையில் தாங்கள் ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டு, மறுபடிஜெநிப்பிக்கப்பட்டு, மறுசாயலாக்கப்பட்டவர்கள் என்றுதான் நினைத்தார்களேதவிர, வேறுவிதமாக நினைக்கவில்லை. பழைய உடன்படிக்கையின்படி, உடன்படிக்கையின் மக்களுக்கும் பிறருக்கும் இடையே, உடன்படிக்கையின் மக்களுக்கும் சிறப்பு அந்தஸ்து பெற்ற தலைவர்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருந்தது. ஆனால், புதிய உடன்படிக்கை இந்த வித்தியாசத்தை நீக்கிவிடுகிறது. புதிய உடன்படிக்கையின் சாராம்சம் என்னவென்றால் புதிய உடன்படிக்கையின் மக்கள் புதிய இருதயத்தைப் பெற்றிருக்கிறார்கள், கழுவப்பட்டிருக்கிறார்கள், பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறார்கள். விசுவாசத்தின்மூலமாக நீதிப்படுத்தப்படுதல், இரட்சிக்கப்படுதல் ஆகியவைகளிலிருந்து இந்தக் கருத்தைப் பிரிக்கமுடியாது. ஆவியென்னும் கொடை நீதிப்படுத்தப்படுவதோடு தொடர்புடையது (ரோமர் 5-8). இரட்சிப்பு விசுவாசத்தின்மூலம் கிருபையால் (எபே. 2:8) வருகிறது. “கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்.” “ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” (வ. 9). ஆனால், இந்த இரட்சிப்பு “நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்,” (வ. 10) என்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.
இப்படிச் சொல்வதால், புதிய உடன்படிக்கையின் விசுவாசிகள் புதிய வானம், புதிய பூமியின் இந்தப் பக்கத்திலேயே பரிபூரணமான ஒழுக்கத்தையும், ஆவிக்குரிய பரிபூரணத்தையும் அனுபவிப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். அப்படிப்பட்ட வாக்குறுதி ஒன்றும் இல்லை. ஆயினும், புதிய உடன்படிக்கையையும், ஆவியானவரின் யுகத்தையும்பற்றிய பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களும், அவைகளின் நிறைவேறுதலைக்குறித்த புதிய ஏற்பாட்டுக் கூற்றுக்களும் கிறிஸ்தவன் கிறிஸ்துவின் சாயலுக்கு மறுசாயலாக்கப்பட்ட வாழ்க்கை வாழுமாறு நடத்துகிறது. உண்மையில் இந்த எதிர்பார்ப்புதான் இரட்சிப்புக்கும், இரட்சிப்பின் நிச்சயத்துக்கும் இடையேயுள்ள சிக்கலுக்குக் காரணம். ஒருவன் கிறிஸ்துவுக்குள் என்னவாக இருக்கிறானோ அது நிச்சயமாக அவனை மறுசாயலாக்கும். எனவே, கிறிஸ்தவன் கிறிஸ்துவின் தரத்துக்கு ஒத்த வாழ்க்கை நடைமுறையில் வாழ்வது அவ்வளவு சாத்தியம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தாலும், கிறிஸ்தவர்கள் தோற்றுப்போன வாழ்க்கை வாழ்வது இறையியல்ரீதியாக அதிர்ச்சியாகவே இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் நாம் கிறிஸ்துவில் என்னவாக இருக்கிறோமோ அந்தத் தரத்தின்படி வாழுமாறு அறிவுரைகளும், அறைகூவல்களும் நமக்குத் தரப்படுகின்றன.
இதைப் புரிந்துகொண்டால், 1 யோவானில் பார்க்கிற பதற்றத்திற்கான காரணத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். விசுவாசிகள் பாவம் செய்கிறார்கள் என்று யோவான் தன் நிருபத்தில் தெளிவாகச் சொல்லுகிறார். “நான் பாவம் செய்வதில்லை” என்று சொல்பவன் பொய்யன், தன்னை வஞ்சிக்கிறான், தேவனைப் பொய்யராக்குகிறான் என்று யோவான் மிகத் தெளிவாகக் கூறுகிறார் (1 யோவான் 1:6-10). அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் பாவம் செய்வதில்லை என்றும் அவர் வலியுறுத்துகிறார். இதற்குப் பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆயினும், மிக வெளிப்படையான, மிகச் சிறப்பான விளக்கம் என்னவென்றால் இடத்தைப்பொறுத்தவரை ஒரு பக்கம் நாம் “ஏற்கெனவே” அந்த இடத்தை அடைந்துவிட்டோம். ஆனால், அனுபவத்தைப்பொறுத்தவரை நாம் “இன்னும் அடையவில்லை.” இந்த இரண்டுக்கும் இடையே நாம் பாவம் செய்கிறோம், நாம் பாவம்செய்வோம். எனினும், பாவம் செய்யும்போது அது அதிர்ச்சியளிக்கிறது; பாவம்செய்வதற்குச் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது; பாவம் செய்யக்கூடாது; பாவம் தடைசெய்யப்பட்டது; பாவம் திகிலளிக்கிறது; பாவம் செய்வது கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நாம் என்னவாக இருக்கிறோமா அதற்கு ஒவ்வாதது, முரணானது, பொருந்தாதது, ஏற்புடையது அல்ல.
இரட்சிப்பைப்பற்றிய எல்லா வசனங்களையும் பட்டியலிட்டு-சாதகமாகவோ, பாதகமாகவோ-விளக்கம் அளிக்கவோ, அவைகளிலுள்ள குறைகளையும், நிறைகளையும் எடுத்துரைக்கவோ என்னால் இயலாது. ஆனால், என்னால் ஒன்றை உறுதியாகக் கூறமுடியும். அது என்னவென்றால், புதிய உடன்படிக்கையின் தன்மையின்படி, தங்கள் வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசுவுக்குக் கீழ்ப்படிகிற உண்மையான விசுவாசிகள் என்றும், தங்கள் வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசுவுக்குக் கீழ்ப்படியாத உண்மையான விசுவாசிகள் என்றும் அவர்களுக்கிடையே சொல்லத்தக்க அளவுக்கு வித்தியாசம் இருக்கிறது என்றும் புதிய ஏற்பாடு எங்கேயும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தக் கருத்தை ஒப்புக்கொண்டால், எந்த வகையிலும் மறுசாயலாக்கப்பட்ட வாழ்க்கையால்தான் இரட்சிப்பை உறுதிசெய்ய முடியும் என்ற எண்ணம் இல்லையென்றால் ஒருவகையான கிறிஸ்தவ உத்தரவாதம் சாத்தியமே. இது பிற கருத்துக்களுடன், குறிப்பாக, ஆண்டவராகிய இயேசுவின்மேல் வைக்கும் விசுவாசமே கிறிஸ்தவ உத்தரவாதத்தின் அடிப்படை என்ற கருத்தோடு எப்படித் தொடர்புடையது என்பதை ஆராய வேண்டும்.
போலியான, தற்காலிகமான விசுவாசம் என்று ஒன்று இருப்பதை வேதாகமம் சுட்டிக்காட்டுகிறது. இது மிகவும் சிக்கலானது. இதைத் தெளிவாக்க முயல்கிறேன்.
1. யூதாஸ் ஸ்காரியோத்போன்ற ஒரு நபரைப்பற்றிப் பேசுவது பிரச்சினைக்குரியது. யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்ததற்கும், பேதுரு இயேசுவை மறுதலித்ததற்கும் இடையேயுள்ள ஒப்புமைகளையும், முரண்பாடுகளையும் கிறிஸ்தவர்கள் விவரிப்பதுண்டு. யூதாசின் விசுவாசதுரோகத்தை முழுமையான கிறிஸ்தவ விசுவாசத்தினின்று விலகிய விசுவாசதுரோகம் என்று கருதமுடியுமா என்பது சந்தேகமே. இதை வேறு வகையில் சொல்வதானால், ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்தபிறகு, பெந்தெகொஸ்தேவுக்குப்பிறகு, மக்கள் “விசுவாசிகளாகிற” அனுபவங்கள் குறிப்பிட்ட அம்சங்களில் பிரத்தியேகமானவை, தனித்துவமானவை என்று நான்கு நற்செய்திகளிலும் பார்க்கிறோம். அவை வேறு எந்தத் தலைமுறையிலும் திரும்பநடக்கமுடியாத அளவுக்கு, குறிப்பிட்ட அம்சங்களில் பிரத்தியேகமானவை, தனித்துவமானவை. மக்கள் விசுவாசிகளாவதற்கு அவர்கள் யாரை மேசியா என்று அறிக்கைசெய்தார்களோ அவர் சிலுவையில் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, உயிர்த்தெழும்வரைக் காத்திருக்க வேண்டியிருந்தது. அவர்கள் விசுவாசிகளானபிறகும் சந்தேகங்களோடும், பாவங்களோடும், சுயநலத்தோடும் போராடவேண்டியிருந்தது என்பது உண்மை. (ஆகையால், ஒரு வகையில், நம் ஆவிக்குரிய திருயாத்திரைக்கு அவர்கள் எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள் என்றும் கருதலாம்). ஆயினும், இன்று நாம் விசுவாசிகளாவதற்கும், வளரும் நம் விசுவாசம் முழுமையான விசுவாசமாக மாறுவதற்கும் நாம் ஆண்டவராகிய இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல் என்ற மீட்பின் திட்டம் நிறைவேறுவதற்காகக் காத்திருக்கத் தேவையில்லை. இது ஏற்கெனவே நடந்துமுடிந்துவிட்டது. அதுபோல, பெந்தெகொஸ்தே நாளுக்காக நாம் எருசலேமில் காத்திருக்கத் தேவையில்லை. இவை ஏற்கெனவே நடந்துமுடிந்த வரலாற்று நிகழ்ச்சிகள். முதல் சீடர்கள் விசுவாசிகளானது நம்மைப்போல் அல்ல. அவர்கள் விசுவாசிகளானதற்கும் நாம் விசுவாசிகளானதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு மனுக்குலத்தின் பாவங்களுக்காகச் சிலுவையில் மரித்து இரத்தம் சிந்துவதற்குமுன் யூதாஸ் என்ன நிலையில் இருந்தானோ, என்ன மட்டத்தில் விசுவாசம் வைத்திருந்தானோ அந்த நிலையிலிருந்து, அந்த மட்டத்திலிருந்து அவன் விசுவாசதுரோகம் செய்தான். அவனுடைய விசுவாசதுரோகம் “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்” (எபி. 6:4-6) அல்லது “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல். நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்...தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நித்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள். பழிவாங்குதல் எனக்குரியது. நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பாரென்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம். ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே” (எபி. 10:26-31) என்று சொல்லப்பட்டுள்ளதுபோன்ற விசுவாசதுரோகம் இல்லை. யூதாஸ் காட்டிக்கொடுத்த பாவத்தின் அகோரத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், புதிய உடன்படிக்கையின்கீழ் விசுவாசதுரோகம் என்றால் என்பதை வரையறுக்க யூதாஸ் ஸ்காரியாத்தையோ, கோராவையோ, லோத்தின் மனைவியையோ, ஏன் இஸ்ரயேல் மக்களையோகூட, எடுத்துக்காட்டாகக் கொள்ளக்கூடாது.
2. விசுவாசதுரோகம் என்ற வார்த்தையைச் சற்று ஆராய்ந்தால் அதன் தன்மையைப் புரிந்துகொள்ளலாம். இந்த வார்த்தை புதிய ஏற்பாட்டில் அப். 21:21, 2 தெச. 2:3 ஆகிய இடங்களில் இரண்டுமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்.21:21 யூதர்கள் மோசேயைவிட்டுப் பிரிந்துபோவதைக் குறிப்பிடுகிறது. 2 தெச. 2:3 கேட்டின் மகன் வெளிப்படும்போது நிகழும் பெரிய கலகத்தைக் குறிப்பிடுகிறது. எனவே, ஒரு காலத்தில் உறுதியாகப் பற்றியிருந்த மத-நிலையிலிருந்தும், நிலைப்பாட்டிலிருந்தும் தீர்க்கமாக விலகிச்செல்வது விசுவாசதுரோகம் என்று நாம் வரையறுக்கலாம். இதில் விசுவாச நிலையிலிருந்தும், நிலைப்பாட்டிலிருந்தும் விலகிச்செல்வது சம்பந்தப்பட்டிருப்பதால் இது பொதுவான விசுவாசத்திலிருந்து வித்தியாசமானது. இது திட்டமிட்டு, தீர்மானித்து, தீர்க்கமாக, திரும்பமுடியாத அளவுக்கு விலகிச்செல்வதாகும்; எனவே, இது பின்மாற்றத்திலிருந்து வித்தியாசமானது. இதில் ஒரு நிலையையும், நிலைப்பாட்டையும் முற்றிலும் நிராகரிப்பது சம்பந்தப்பட்டிருப்பதால் இது ஒருவன் ஒரு சிறிய இறையியல் கருத்தை மாற்றிக்கொள்வதிலிருந்து வித்தியாசமானது.
3. புதிய ஏற்பாட்டில் எத்தனை பத்திகள் விசுவாசதுரோகத்தைக் குறிக்கின்றன அல்லது விவரிக்கின்றன என்று திட்டவட்டமாகக் கூறமுடியாது. தேமா விசுவாசதுரோகியா (2 தீமோ. 4:10)? 1 கொரிந்தியர் 5இல் சொல்லப்பட்டுள்ள ஒழுக்கங்கெட்ட மனிதன் விசுவாசதுரோகியா? அவன் விசுவாசதுரோகியாகத்தான் மரித்தானா? சில பத்திகளை அவ்வளவு எளிதாக ஒதுக்கித்தள்ளிவிடமுடியாது. எபிரேயர் 6:4-6, 2 கொரிந்தியர் 13:5போன்ற வசனங்களின் கடுமையான எச்சரிக்கைகள் வெறுமனே அனுமானம் என்றோ அல்லது எபிரேயர் 6:4-6, 1 யோவான் 2:19இல் சொல்லப்பட்டுள்ள பிரிந்துபோகிறவர்கள் இரட்சிப்பிலிருந்து அல்ல, வெறுமனே பரபரப்பான ஊழியத்திலிருந்து மட்டுமே பிரிந்துபோகிறார்கள் என்றும் வாதிட்டு அவைகளின் அச்சுறுத்துதலையும், அதிர்ச்சியையும், பலத்தையும் குறைத்துவிட முடியாது. இந்த முயற்சிகள் பொறுப்பற்ற விரிவுரையாளர்கள் கையாளும் நம்பிக்கையற்ற உபாயங்கள்.
4. உண்மையான விசுவாசிகள் விலகிச்சென்றார்களா அல்லது அவர்கள் ஏதோவொரு விதத்தில் விசுவாசிகளாக இருந்தபோதும் அவர்கள் உண்மையான விசுவாசிகள் இல்லை என்று சொல்ல முடியுமா என்பதுதான் கேள்வி. இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்வது கடினம்.
பவுல் தன் நிருபங்களில் நிலைத்திருப்தைப்பற்றி அதிகமாகவே சொல்லியிருக்கிறார். இரட்சிப்பு என்னும் தெய்வீக வேலையில் நாம் தொடர்ந்து நிலைத்திருக்கும்போது, இரட்சிப்பின் அடுத்தடுத்த படிகளில் நாம் முன்னேறுகிறோம் என்று அவர் குறிப்பிடுகிறார். நம் இரட்சிப்பில் நித்திய தெய்வீக முன்முயற்சிகள்பற்றி பவுல் தன் நிருபங்களில் அடிக்கடி குறிப்பிடுகிறார். ஒரு பக்கம், தெய்வீகத் தெரிந்தெடுத்தல், தெய்வீக முன்னறிதல், தெய்வீக முன்குறித்தல் (ரோமர் 8:23, 29-30; 2 கொரி. 1:22; 5:5; பிலி. 1:6; 1 தெச. 5:9; 2 தெச. 2:13-14) இருக்கின்றன. இன்னொரு புறம், இரட்சிப்பின் வேலை முழுநிறைவடையும் வழிமுறை என்பது முடிவடையும் கோட்டைத் தொடும் ஒரு தடைஓட்டம் போன்றதுதானேதவிர கீழ்நோக்கிச் செல்லும் பாதை இல்லை என்றும் பவுல் கூறுகிறார் (ரோமர் 5:1-11; 8:28, 31-39; 1 கொரி. 1:8-9; 10:13; 1 தெச. 5:23-24; 2 தெச. 3:3). தேவன் தம் மக்களைப் பாதுகாத்து, பராமரித்துக் காப்பாற்றுவதில் அவருடைய உத்தமம் விளங்குகிறது.
கிறிஸ்தவனின் இரட்சிப்பு நிச்சயமாக முழுநிறைவடையும் என்பதற்குப் பவுல் தெளிவான ஏராளமான ஆதாரங்களைத் தருகிறார். கிறிஸ்தவனின் இரட்சிப்பு முழுநிறைவடைவதற்கு அச்சுறுத்தல்கள் தோன்றினாலும், அவைகளால் இரட்சிப்பை முறியடிக்க முடியாது என்பது அவருடைய எண்ணம். தேவனுடைய உத்தமமும், அன்பும் தெய்வீக வெற்றியை எந்தக் கேள்வியும் இல்லாமல் உறுதியாக்கும். முழ இரட்சிப்பு நிச்சயம் என்பதற்கு தேவனுடைய செயல்பாட்டையும், இடைப்படுதலையுமே சார்ந்திருக்கிறது.
ரோமர் 14:1-23; 1 கொரி. 5:1-5; 6:9-11; 8:7-13; 10:12; 11:27-34; கலா. 5:9-11 ஆகிய வசனங்களில் பவுல் என்ன கூறுகிறாரென்றால் தேவன் தம் உத்தமத்தினாலும், அன்பினாலும் ஒருவனுடைய இரட்சிப்பை உறுதிசெய்கிறார் என்பதால் அவனுடைய நடத்தை ஒரு பொருட்டல்ல என்று அவர் சொல்லவில்லை. பவுலைப் பொறுத்தவரை, ஒழுக்கம், நேர்மை, கீழ்ப்படிதல் ஆகியவை மிகவும் முக்கியமானவை, கீழ்ப்படியாத விசுவாசிகள்மேல் தண்டனை வரும் என்று சொல்லுகிறார். ஆயினும், அவர்களுடைய இரட்சிப்பின் உத்தரவாதம் அவர்கள் ஆண்டவராகிய இயேசுவைத் தங்கள் இரட்சகராக விசுவாசித்து ஏற்;றுக்கொண்டபிறகு செய்த பாவங்களுக்காக மனந்திரும்புவதைச் சார்ந்தது என்று சொல்லவில்லை. புதிய உடன்படிக்கையின் இயல்பைப் பார்க்கும்போது விசுவாசத்தைத்தவிர வேறு எதுவும் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
ரோமர் 9-11, 2 கொரிந்தியர் 13:5, கலாத்தியர் 5:1-4 ஆகிய வசனங்களை ஆராய்ந்துபார்க்கும்போது தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்பவர்களிடையே அவிசுவாசம் காணப்படுகிறது என்றால் அது எதைக் குறிக்கிறது என்று பார்க்க வேண்டும். 2 கொரிந்தியர் 13:5இல் பவுல் ஒருவன் இரட்சிப்பை இழக்க வாய்ப்புண்டு என்று எச்சரிக்கிறாரா அல்லது அவன் மனந்திரும்பாதவன் என்று சொல்லுகிறாரா? “உங்களை நீங்களே சோதித்தறியுங்கள்” என்று சொல்வதின் நோக்கம் பவுல் தான் அப்போஸ்தலன் என்பதை நிரூபிப்பதற்காகவும், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று பொய்யாய்ச் சொல்லிக்கொண்டிருந்த சில கொரிந்தியர்களை அம்பலப்படுத்துவதற்காகவும் இருக்கலாம். தேவன் இஸ்ரயேலர்களைத் தெரிந்துகொண்டிருந்தாலும்கூட, அவர்கள் இயேசுவின்மேல் வைக்கும் விசுவாசம் இல்லாமல் இரட்சிப்பில் பங்குபெற முடியாது. 1 கொரி. 9:23-27; 15:2; 2 கொரி. 6:1; கலா. 2:2; 4:11; 1 தெச. 3:5; பிலி. 2:16 போன்ற வசனங்களில் பவுல் தன் அப்போஸ்தல ஊழியத்தின் விளைவை அலசுகிறார். தன் பிரயாசம் வீணாகப்போய்விடுமோ என்று அவர் பயப்படுவதற்குக் காரணம் மனந்திரும்பியவர்கள்போல் காணப்பட்ட சிலர் இரட்சிக்கப்படாமல் போகலாம் என்பதாக இருக்கலாம். விசுவாசம் என்னும் பரீட்சையில் தோற்றுப்போவதற்குக் காரணம் மனந்திரும்பியதுபோல் காண்பித்த அவர்களுடைய பொய்யான அறிக்கையா அல்லது இரட்சிப்பிலிருந்து விலகக் காரணமான அவர்களுடைய விசுவாசதுரோகமா என்பதைப் பவுல் இங்கு தெளிவாகச் சொல்லவில்லை. பவுல் தன் ஊழியம் வெற்றி என்பதை நம்பாததுபோல் தோன்றினாலும், இரட்சிப்பின் தெய்வீக வேலை கிறிஸ்தவர்களில் நடைபெறுவதைப் பார்க்கும்போது தேவனுடைய உத்தமத்தின் கண்ணோட்டத்திலிருந்து நிலைமையைப் பார்க்கும்போது அவருக்கு நம்பிக்கை பிறக்கிறது.
5. உண்மையான விசுவாசிகள் விலகிச்செல்கிறார்கள் அல்லது விலகிச்செல்பவர்கள் உண்மையான விசுவாசிகள் இல்லை என்று சொல்லும்போது இரண்டு சிக்கல்கள் எழுகின்றன.
தேவமக்கள் இறுதிவரை பாதுகாக்கப்படுவார்கள் என்றும் இறுதிவரை நிலைத்திருப்பார்கள் என்றும் சொல்லும் வசனங்கள் எவ்வளவு பலமானவை? சில பத்திகள் தேவமக்கள் தங்கள் இரட்சிப்பில் கடைசிவரை நிலைத்திருக்கிறார்கள், உறுதியாயிருக்கிறார்கள் என்று சொல்லுகின்றன. ஆனால், அதே நேரத்தில் நிலைத்திருப்பதற்கு அவர்கள் முயற்சிசெய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் விசுவாசத்தைவிட்டு வழுவிச்செல்வார்கள் என்றும் சில பத்திகள் கூறுகின்றன. மனிதன் தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது என்று அவை காண்பிக்கின்றன. அப்படியானால் ஒருவனுடைய இறுதி இரட்சிப்பு நிபந்தனைக்குட்பட்டதா? மனிதன் தன் பொறுப்பைத் தட்டிக்கழித்து விலகிச்செல்லாதவரை அவனைப் பத்திரமாகப் பாதுகாக்கத் தேவன் உண்மையுள்ளவர் என்று சொல்லலாமா? இது உண்மையென்றால் அவர் முற்றுமுடிய இரட்சிக்க வல்லமையுள்ளவர் என்பது பொய்யா?
எடுத்துக்காட்டாக, “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 6:47). “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை...அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல் கடைசிநாளில் அவர்களை எழுப்புவதே என்னை அனுப்பின் பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும் என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது” (யோவான் 6:37-40). “நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை” (யோவான் 10:28). “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்” (1 கொரி. 1:8). “உங்களில் நற்கிரியைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்” (பிலி. 1:5). ஒரு கிறிஸ்தவனுக்கு நித்திய பாதுகாப்பு உண்டு என்று இதுபோன்ற வசனங்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றனவே! இது உண்மையில்லை என்று சொன்னால் பிதாவானவர் தமக்குத் தந்தவைகளை அவர் முடிவுபரியந்தம் பாதுகாக்க விரும்பவில்லை அல்லது அவரால் பாதுகாக்க இயலாது என்றாகிவிடுமே! ஆண்டவராகிய இயேசுவின் மனுஷீகத்தையும் தெய்வீகத்தையும் குறிக்கும் வசனங்கள் பல உள்ளன. அவருடைய தெய்வீகத்தைக் குறைக்க மனஷீகத்தைப்பற்றிய வசனங்களையும், மனுஷீகத்தைக் குறைக்கத் தெய்வீகத்தைப்பற்றிய வசனங்களையும் பயன்படுத்துவது பொருளற்றது. கிறிஸ்து தேவனுடைய பரமஇரகசியம். சில ஆவிக்குரிய காரியங்கள் பரம்புதிரானவை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். வேதாகமம் ஒரு உண்மையைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்லும்போது அதற்கு மாறாகத் தோன்றுவதுபோன்ற வசனங்களைவைத்து அதை அழிக்காமல் அதன் முழு வீரியத்தையும் புரிந்துகொள்ள அதற்கு ஒத்தாசையான வசனங்களின் விளக்கத்தை நாட வேண்டும், தேட வேண்டும். அதுபோல. இதுவும் வாதப்பிரதிவாதம் செய்யப்படுகிற ஒரு வழக்கு. இதுவும் பரம்புதிரானதுதான். பரஸ்பரமாகக் குற்றஞ்சாட்டி இதன் வீரியத்தை நாம் நிர்மூலமாக்கக்கூடாது. விசுவாசியின் நித்திய உத்தரவாதத்தைப் புதிய ஏற்பாடு உறுதிசெய்கிறது என்பதற்குச் சில வசனங்களிலிருந்து ஏதோவொன்றைக் கழிக்கக்கூடாது. அப்படிச் செய்வதற்கு வலுவான காரணம் இருந்தால் மட்டுமே செய்யலாம்.
விசுவாசிகளை தற்காலிகமான விசுவாசி, போலியான விசுவாசி என்று புதிய ஏற்பாடு வகைப்படுத்துகிறதா? அதாவது இரட்சிப்புக்கேதுவான விசுவாசம்போல் தோன்றுகிறது, ஆனால், அது பொய்யான விசுவாசம் என்று சொல்லலாமா? அப்படியானால் விலகிச்செல்பவர்களைப்பற்றிச் சொல்லும் வசனங்கள் உண்மையான விசுவாசத்தைவிட்டுச் சென்றார்கள் என்று சொல்ல முடியாதே!
புதிய ஏற்பாட்டில் போலியான விசுவாசத்தைப்பற்றிய விளக்கங்களும், எச்சரிக்கைகளும் ஏராளமாக உள்ளன. எடுத்துக்காட்டாக, “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் உங்களை ஒருக்காலும் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை,” (மத். 7:21-23). “பஸ்கா பண்டிகையிலே அவர் எருசலேமில் இருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால் அவர்களை நம்பி இணங்கவில்லை. மனிதர் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தபடியால் மனிதர்களைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சிகொடுக்க வேண்டியதாயிருக்கவில்லை” (யோவான் 2:23-25). “இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீடராயிருப்பீர்கள்,” (யோவான் 8:31) என்று உண்மையான சீடர்கள் யார் என்பதற்கான ஓர் அளவுகோலைக் கொடுக்கிறார். 1 யோவான் 2:19இலும் இதே நிலைப்பாடு பிரதிபலிக்கிறது. சபையைவிட்டுப் பிரிந்துபோனவர்களைக் கடுமையாகவே விவரிக்கிறார். “அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள். ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை. நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே. எல்லாரும் நம்முடையவர்களல்ல என்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.” வேறு விதமாகச் சொல்வதானால், உண்மையான விசுவாசம், வரையறையின்படி, நிலைத்திருக்கும். நிலைத்திருக்கவில்லையென்றால், வரையறையின்படி, விசுவாசம் உண்மையானதாக இருக்க முடியாது. “கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திராமல் மீறிநடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்” (2 யோவான் 9). பவுல் கொலோசெய விசுவாசிகளிடம், “நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல் ஸ்திரமாயும், உயுதியாயும் விசுவாசத்தில் நிலைத்திருந்தால், முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராயும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினால் ஒப்புரவாக்கினார்,” (கொலோ. 1:22-23) என்று கூறுகிறார். சுருக்கமாகச் சொல்வதானால், உண்மையான விசுவாசம் நிலைத்திருத்தலோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. தற்காலிகமான விசுவாசம் போலியானது. 2 பேதுரு 1:10-11இல் பேதுருவும் இதே காரியத்தை வலியுறுத்துகிறார். எபிரேயர் நிருபத்தில் விசுவாசதுரோகத்தைப்பற்றிய பத்திகளை வாசிப்பதற்குமுன் எபிரேயர் 3:14இல் “நாம் ஆரம்பத்தில் கொண்டிருந்த நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில் கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்” என்று வாசிக்கிறோம் (3:6; 4:14; 6:11 இவைகளையும் வாசிக்கவும்).
இதுபோன்ற வசனங்களின் வரம்பும் பன்முகத்தன்மையும் “வெறுமனே” இரட்சிப்பைத் தாண்டி சீடத்துவத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கின்றன என்ற சாத்தியத்தை முற்றிலும் மறுக்கின்றன. மேற்கோள் காட்டிய சில வசனங்களைத் தனியாகப் பார்த்தால் நாம் இரட்சிப்பில் தொடர்கிறோமா, நிலைத்திருக்கிறோமா என்பது நம் விடாமுயற்சிகளைப் பொறுத்தது என்று சொல்வதுபோல் தோன்றலாம். ஆனால், அந்த வசனங்களைத் தேவனே முன்வந்து நம்மைப் பாதுகாக்கிறார் என்ற வாக்குறுதிகளோடும், நிலைத்திருத்தல் உண்மையான விசுவாசத்தின் அளவுகோல் என்று சொல்லுகிற பத்திகளோடும் ஒருங்கிணைக்க நாம் முயலவேண்டும். எடுத்துக்காட்டாக, 1 யோவான் 2:19இல் பிரிந்துபோனவர்கள் ஒருகாலத்தில் சபையில் இருந்தார்கள். இல்லையென்றால், “அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள்” என்று யோவான் சொல்ல வேண்டிய தேலையில்லையே! பிரிந்துபோனவர்கள் ஞானஸ்நானம் பெற்று, சபையில் அவயவங்களாக இருந்தவர்கள், கிறிஸ்தவர்கள் என்று முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். ஆயினும், அவர்கள் “நம்முடையவர்களாயிருக்கவில்லை. நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே” என்று யோவான் எழுதுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் போலியான விசுவாசம் சாத்தியமே என்றும், உண்மையான விசுவாசம் வரையறையின்படி நிலைத்திருக்கிறது என்றும் அவர் சொல்லுகிறார்.
இரண்டு பிரதானமான விளக்கங்கள் உள்ளன. உண்மையான விசுவாசிகள் விலகிச்செல்ல நேரிடும் என்பது ஒரு விளக்கம். விலகிச்செல்பவர்கள் உண்மையான விசுவாசிகள் இல்லை. அவர்கள் தற்காலிகமான போலி விசுவாசிகள் என்பது இன்னொரு விளக்கம். இதில் இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன.
6. என் நிலைப்பாடு சரியென்றால், இந்தச் சிக்கலைத் தீர்க்க மனமாற்றத்தைப்பற்றிய இறையியலை நாம் இன்னும் ஆழமாக ஆராய வேண்டும். இந்தக் கேள்வியைப் பல வழிகளில் கேட்கலாம். ஆனால், இதை இப்படிக் கேட்கலாம். “உள்ளேயும்” இல்லாமல் “வெளியேயும்” இல்லாமல் அதற்கு மூன்றாவது மாற்று இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா? யார் “உள்ளே” இருக்கிறார்கள் என்றும், யார் “வெளியே” இருக்கிறார்கள் என்றும் தேவனுக்குத் தெரியும். ஆனால், சிலர் “உள்ளேயும்” இல்லை, “வெளியேயும்” இல்லை. எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சொல்லும்படி மனமாற்றத்தின் படி தெளிவில்லாமல் இருக்கிறதா?
சிலருடைய மனமாற்றம் போலியானது என்றும் (1 யோவான் 2:19), தன்னை விசுவாசி என்று அறிக்கை செய்பவனின் உத்தமம் அவன் விசுவாசத்தில் நிலைத்திருப்பதோடு பின்னிப்பிணைந்திருக்கிறது, அதாவது தற்காலிக விசுவாசம் இருண்ட மேகத்தின்கீழ் தெளிவில்லாமல் இருக்கிறது என்றும் சில வசனங்கள் சொல்லுகின்றன என்பது உண்மை. எடுத்துக்காட்டு விதைப்பவனின் உவமை, சரியாகச் சொன்னால், நிலத்தின் உவமை (மாற்கு 4) இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது. 30, 60, 100 என வித்தியாசமான விளைச்சலைத் தரும் நல்ல நிலம் இருக்கிறது. வேறு மூன்று வகையான நிலங்களும் இருக்கின்றன. கடினமான வழியோரத்தில் விதை முளைக்கவேயில்லை. விதைத்த விதையை, ஆகாயத்துப் பறவைகள் வந்து உடனே சாப்பிட்டுவிடுகின்றன. இதன் விளக்கம் என்னவென்றால், சிலர் தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறார்கள். கேட்ட வார்த்தை கொஞ்ச நேரம் நிலத்தின் மேற்பரப்பில் இருக்கிறது. அந்த வார்த்தை அவர்களுடைய இருதயத்தில் முளைப்பதற்குமுன்பே சாத்தான் அதை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டுபோய்விடுகிறான். கற்பாறையில் விழுந்த விதைகள் முளைக்கின்றன. ஆனால், விரைவில் வாடி விடுகின்றன. ஆழமான மண் இல்லாததால், மண் சீக்கிரம் சூடாகி விதையை முளைப்பிக்கின்றது. அது முளைத்த வேகத்தைப் பார்க்கும்போது நல்ல விளைச்சல் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ஆனால், கோடை வெயிலில் அவை காய்ந்துபோகின்றன. வேர்கள் ஈரப்பதத்தைத் தேடுகின்றன. ஆனால், கீழே இருப்பதோ கற்பாறை. எனவே, செடி வாடிவிடுகிறது. இவர்கள் “மகிழ்ச்சியோடு வசனத்தை ஏற்றுக்கொண்டு, கொஞ்சகாலம்” (லூக். 8:13) இயேசுவைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், ஆழமான வேர் இல்லாததால், அவர்கள் குறுகிய காலம் மட்டுமே இருக்கிறார்கள். “வசனத்தினிமித்தம் உபத்திரவமும், துன்பமும்” வரும்போது வலுவிழந்து அவர்கள் விலகிவிடுகிறார்கள். சில விதைகள் முட்புதரில் விழுகின்றன. இங்கும் விதைகள் முளைத்து, துளிர்க்கின்றன. ஆனால், முட்கள் போட்டிபோட்டுக்கொண்டு வளர்ந்து இளந்தளிர்களை நெருக்கிச் சாகடிக்கின்றன. அதனால் அவைகள் செத்துவிடுகின்றன. இவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறார்கள். ஆனால், “உலகக் கவலைகள், செல்வ மயக்கம், சிற்றின்பங்கள்” வசனத்தை நெருக்கிச் சாகடிக்கின்றன. வார்த்தையை விதைப்பதற்குமுன் அல்லது விதைத்தவுடன் அல்லது பார்த்தவுடன் முட்களைப் பிடுங்கி எறியவில்லை. அவன் வார்த்தை, முட்கள் ஆகிய இரண்டையும் விரும்புகிறான். ஒன்றை விரும்பி மற்றொன்றை வெறுக்கவில்லை. முட்கள் வளர்ந்து வார்த்தைiயைக் கொல்லுகின்றன. எனவே, அவர்களும் கனியற்றவர்களாகிவிடுகிறார்கள்.
கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கற்பாறையிலும், முட்புதர்களிலும் விதை முளைக்கிறது, ஆனால், அவை வளர்ந்து கனிகொடுக்கவில்லை. கற்பாறையில் விதைக்கப்பட்டவர்கள் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால் கொஞ்சக்காலம் மாத்திரம் நிலைத்திருக்கிறார்கள். வசனத்தைக் கேட்டவுடன் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்கிறார்கள். கற்பாறையில் விதை முளைக்கும் வேகத்தைப் பார்த்தவுடன் அங்கு நல்ல விளைச்சல் ஏற்படும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், அது கொஞ்சக்காலம் மாத்திரம் நிலைத்திருக்கும் என்று தேவனுக்குத் தெரியும். அதன் ஆவிக்குரிய வாழ்க்கை தற்காலிகமானது.
ஒருவனை அவன் கனிகளால்தான் அறிய முடியும் என்று ஆண்டவராகிய இயேசுவும் சொல்லுகிறார், வேதாகமும் தெளிவாகச் சொல்லுகிறது (மத். 7:15-20).
எபிரேயர் 6:4-6 போன்ற வசனங்களை நாம் ஒதுக்கித்தள்ளமுடியாது. இது பெரிய சவால். இங்கு எச்சரிக்கப்படுகிறவர்கள் கிறிஸ்தவர்களா இல்லையா? இங்கு எச்சரிக்கப்படுகிறவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லையென்றால் “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலனையும் ருசிபார்த்தும்” என்பதை எப்படி விளக்க முடியும்? பிரகாசிக்கப்பட்டவன் கிறிஸ்தவன் இல்லையா? பரம ஈவை ருசிபார்த்தவன் கிறிஸ்தவன் இல்லையா? பரிசுத்த ஆவியைப் பெற்றவன் கிறிஸ்தவன் இல்லையா? தேவனுடைய நல்வார்த்தையையும், இனி வரும் உலகத்தின் பெலனையும் ருசிபார்த்தவன் கிறிஸ்தவன் இல்லையா? இவர்கள் கிறிஸ்தவர்கள்தான் என்றால் கிறிஸ்தவர்கள் தங்கள் இரட்சிப்பை இழக்கமுடியாது என்று வேதாகமம் சொல்வதை எப்படி விளக்குவது? எபிரேயர் 6:6, எபிரேயர் 10:26யை எப்படி விளக்குவது? இரண்டு வசனங்களும் அவர்கள் மறுதலித்துப்போய்விட்டார்கள் என்று சொல்லுகின்றனவே! அவர்கள் மறுதலித்துப்போனார்கள் என்றும், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவரை அவமானப்படுத்துகிறார்கள் என்றும் அந்த வசனங்கள் சொல்லுகின்றனவே! அப்படியானால் உண்மையான விசுவாசிகள் தங்கள் இரட்சிப்பை இழக்கும் சாத்தியம் உண்டா? ஆனால், தேவன் தம் கிருபையினால் தம் மக்களைப் பாதுகாப்பார் என்றும் வேதாகமம் உறுதியாகச் சொல்லுகிறதே! “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று சொல்லுகிறாரே! (எபி. 13:5).
இதற்கு ஒரு சிறந்த மாற்று உண்டு. மனமாற்றத்தைப்பற்றிய நம் இறையியல் தாழ்வானது என்பதைப் புரிந்துகொண்டால் இதற்கு ஒரு மாற்று உண்டு. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் உடல் ஊனத்தோடும், பல குறைபாடுகளோடும் பிறப்பதுபோல், பல கிறிஸ்தவர்களின் மனமாற்றம் உண்மையாகவே கேள்விக்குரியது என்று நான் நினைக்கிறேன். நாற்பது வாரங்களுக்குமுன் பிறக்கும் குறைப்பிரசவக் குழந்தைகளைப் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்க வேண்டியுள்ளது. மதமாற்றம் அல்ல, மனமாற்றமே இரட்சிப்பின் திட்டம். அதுதான் தேவனுடைய திட்டத்தின் தொடக்கம். பலர் வெறுமனே மதம்மாறியதால் அவர்களைப் பெட்டிக்குள் வைத்து, அவர்களைப் பாதுகாக்கப் பிற்காலத்தில் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் ஏற்ற காலத்தில் ஏற்ற முறையில் பிறந்திருந்தால் ஆவியானவர் போதிப்பதைப் புரிந்துகொள்கிற திறனைப் பெற்றிருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய நித்திய நோக்கம் தவறாமல் தடைபடாமல் நிறைவேறியிருக்கும். உண்மையாக மனமாறியவர்கள் சீடர்களாகி. பிறரையும் சீடராக்குவார்கள். உண்மையான விசுவாசிகள் தங்கள் ஆரம்ப நம்பிக்கையை முடிவுவரைப் பற்றிக்கொண்டிருப்பார்கள் என்று எபிரேயர் 3:6, 14 ஏற்கெனவே கூறிவிட்டது. அதாவது தங்கள் ஆரம்ப நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்பவனே உண்மையான விசுவாசி என்று அந்த வசனங்கள் கூறுகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பிற புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களைப்போல் எபிரேயர் நிருபமும் ஒருவிதமான தற்காலிகமான விசுவாசம் உண்டு என்று சொல்லுகிறது. கற்பாறையில் விதைக்கப்பட்ட விதையைப்போல, இது ஒருவிதமான மனமாற்றம். இதில் ஜீவனின் அடையாளங்கள் கொஞ்சம் இருக்கின்றன. ஆனால், அது நிலைத்திருந்து கனிகொடுக்கவில்லை. ஆவியானவர் அவனில் ஆரம்ப பிரகாசித்தலைக் கொண்டுவருகிறார். மாற்கு 4இல் சொல்லப்பட்டுள்ளதுபோல, அவன் வார்த்தையை ஆரம்பத்தில் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்கிறான். அவன் வரப்போகிற யுகத்தின சுவையைக் கொஞ்சம் அனுபவிக்கிறான். ஒருவேளை அவனுடைய பழைய பழக்கவழக்கங்கள் போய்விடலாம். அவன் பரிசுத்தத்தையும், தேவனையும், தேவனுடைய ஆளுகையையும் நேசிக்க ஆரம்பிக்கிறான். ஆனால், உண்மையான விசுவாசத்துக்கு இவைகள் போதாது. அவன் நிலைத்திருக்க வேண்டும்.
நிருபங்களின் இறையியலின் பின்புலத்தைப் பார்க்கும்போது, இப்படிப்பட்ட எச்சரிக்கைகளுக்குப் போதுமான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. மனுவுருவெடுத்த தேவ குமாரனே தேவன் மனுக்குலத்துக்குக் கொடுத்த கடைசி வார்த்தை (1:1-4). எனவே, அவர் மட்டுமே தருகிற இரட்சிப்பைப் புறக்கணிக்கிறவன் தப்பிக்க முடியாது (2:1). குமாரன் எல்லாருக்காகவும் ஒரு பலியை ஒரேதரம் செலுத்தினார். “இனி பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்பட வேண்டியதில்லை” (எபி. 10:18). “பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனி இல்லை” (எபி. 10:26). செலுத்தப்பட்ட ஒரே பலியைத் திரும்பத்திரும்பச் செலுத்தவேண்டிய தேவையும் இல்லை (எபி. 9:25-28). எல்லாருக்காகவும் ஒரேதரம் செலுத்தப்பட்ட இந்த ஒரே பலி தேவனுடைய மக்கள் எல்லாருக்கும் என்றென்றைக்கும் போதுமானது (10:10-14). ஆகையால், இதைச் சுவைத்தவன், இதன் ஆரம்பத்தை இனங்கண்டவன், இதன் முக்கியத்துவத்தோடு தன்னை இணைத்துக்கொண்டவன் இந்த நற்செய்தியைப் பின்னர் வேண்டுமென்றே நிராகரித்தால், அவன் தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை. அவன் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு வேறு வழியே இல்லை. இது விசுவாசதுரோகம். இது அவன் தான் ஒருநாள் உறுதியாகப் பற்றியிருந்த தன் மதநிலைப்பாட்டிலிருந்தும், இருப்பிலிருந்தும் விலகுவதாகும். இரட்சிப்புக்கேதுவான விசுவாசத்தில் கடைசிவரை நிலைத்திருத்தலும் அடங்கும் என்றால் இப்படி விலகிச்செல்பவனிடம் ஆரம்பத்தில் இருந்தது இரட்சிப்புக்கேதுவான விசுவாசம் என்று சொல்ல முடியுமா?
7. உண்மையான விசுவாசிகள் கடைசிவரைப் பாதுகாக்கப்படுவார்கள் என்று சொல்பவர்களுக்கும், புறம்பான விசுவாசத்தைவிட்டு விலகிச்செல்பவர்கள் வெறுமனே போலியான, தற்காலிகமான விசுவாசத்தை மட்டுமே உடையவர்கள் என்று சொல்பவர்களுக்கும், உண்மையான விசுவாசிகளும் விசுவாசத்தைவிட்டு விலகிச்செல்ல முடியும் என்று சொல்பவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன?
ஒருவன் “உண்மையான விசுவாசி கடைசிவரைப் பாதுகாக்கப்படுவான்” என்ற குழுவைச் சார்ந்தவன் என்றால் அவன் விசுவாசத்தைவிட்டு விலகிச்செல்பவர்களுக்குக் கொடுக்கப்படும் எச்சரிக்கைகளுக்குச் செவிகொடுக்க வேண்டும். அப்படிச் செவிகொடுக்கும்போதுதான் அவன் தான் தெரிந்தெடுக்கப்பட்டவன் என்று காண்பிக்க முடியும்.
எந்த அணுகுமுறை பெரும்பாலான வசனங்களுக்குப் பொருத்தமானது என்பதை நாம் முடிவுசெய்ய வேண்டும். ஒரு சாரார் இரட்சிப்பின் நித்திய உத்தரவாதம் தேவனைச் சார்ந்தது என்றும், எதிர்சாரார் அது மனிதனைச் சார்ந்தது என்றும் சொல்லுகிறார்கள்.
ஒரு புறம், தேவன் தம் இறையாண்மையினால் தம் மக்களைப் பாதுகாக்கிறார். தேவன் இறையாண்மையுள்ளவர் என்பதால் அவர் தம் பரிபூரண சித்தத்தைத் தம் பிள்ளைகளின் வாழ்வில் நிறைவேற்ற எல்லாவற்றையும், எல்லாரையும் வடிவமைக்கிறார், திட்டமிடுகிறார், நியமிக்கிறார், அனுப்புகிறார், அனுமதிக்கிறார், கட்டுப்படுத்துகிறார், ஆளுகைசெய்கிறார். தேவன் தம் நித்திய நோக்கத்தைத் தாம் தெரிந்தெடுத்த மக்களின் வாழ்வில் நிறைவேற்ற வல்லவர். மறுபுறம், மனிதன் தான் பெற்ற இரட்சிப்பில் இறுதிவரை நிலைத்திருக்க வேண்டும். தேவன் தெரிந்தெடுத்த மக்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. தேவமக்கள் அவர்மேல் அசையாத நம்பிக்கை வைத்து அவருக்கு நன்றியோடு கீழ்ப்படிந்து வாழ வேண்டும். இதுதான் நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும். இந்த அணுகுமுறை ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதுபோல் தோன்றும்.
வேதாகமம் இணக்கம் என்று ஒன்றை முன்வைக்கிறது அல்லது வெளிப்படையாகப் போதிக்கிறது. இது இரட்சிப்பின் நிச்சயத்தைப் புரிந்துகொள்வதற்கு மிக முக்கியமான காரியம். ஆனால், இதைப் பலர் புறக்கணித்துவிடுகிறார்கள். தேவன் முற்றிலும் இறையாண்மையுள்ளவர். ஆனால், மனிதன் தன் பொறுப்பை எந்த வகையிலும் தட்டிக்கழிக்க முடியாது. மனிதர்கள் தங்கள் செயலுக்குத் தாங்களே பொறுப்பேற்க வேண்டும். தங்கள் செயலுக்குத் தேவனைக் குற்றப்படுத்தக் கூடாது. ஏனென்றால், மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தெரிந்தெடுக்கிறார்கள், தீர்மானிக்கிறார்கள், கீழ்ப்படிகிறார்கள், அல்லது கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள், விசுவாசிக்கிறார்கள் அல்லது விசுவாசிக்காமல் இருக்கிறார்கள், முரட்டாட்டம்செய்கிறார்கள், இதுபோல் பல உள்ளன). ஆனால், மனிதனுடைய செயல்கள் தேவனுடைய இறையாண்மையைப் பாதிக்காது. இந்த இரண்டும் முரண்பாடுபோல் தோன்றலாம். ஆனால், இவை பரஸ்பரமாக இணக்கமானவை. இதை விளக்குவதற்கு வேதாகமத்தில் நிறைய எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. நான் சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன்.
இந்த இரண்டு கூற்றுகளும் உண்மை. இந்த இரண்டும் பரஸ்பரம் இணக்கமானவை. இதன் பொருள் இந்த இரண்டும் ஒரே நேரத்தில் உண்மை என்று நிரூபிக்க முடியும் என்று நான் சொல்லவில்லை. மாறாக, இந்த இரண்டும் பரஸ்பரம் இணக்கமானவை, பொருத்தமானவை, என்று காண்பிக்க முடியும். இதற்கு நியாயமான சான்றுகள் போதுமான அளவுக்கு உள்ளன. ஆகையால், இந்த இரண்டு கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதால் இந்தக் கூற்றுகளைத் தனித்தனியாக நியாயப்படுத்தக்கூடிய பிற ஆதாரங்களை ஒதுக்கிவிடமுடியாது.
வேதாகமத்தின் எல்லா ஆசிரியர்களும், விதிவிலக்ககின்றி, இரட்சிப்பைப்பற்றிப் பேசும்போது, இணக்கவாதிகளாகவே இருக்கிறார்கள்.
எகிப்தில் யாக்கோபு மரித்தபின், யோசேப்பின் சகோதரர்கள் தாங்கள் யோசேப்புக்குச் செய்த துரோகத்தை நினைத்து யோசேப்புக்குப் பயந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட யோசேப்பு தன் சகோதரர்களைப் பார்த்து, “நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள்É தேவனோ இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களைக் காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார்,” என்று சொன்னான் (ஆதி. 50:19-20). இந்த நிகழ்ச்சியில் நான் சொன்ன இரண்டு கூற்றுகளையும் பார்க்கலாம். இரண்டும் பரஸ்பரம் இணக்கமானது. தேவன் தன்னை மிகவும் அழகான குதிரைகள்பூட்டிய இரதத்தில் எகிப்துக்குக் கொண்டுசெல்ல ஓர் அழகான திட்டம் தீட்டியிருந்ததாகவும், தன் சகோதரர்கள் தங்கள் பொல்லாத சூழ்ச்சியினால் அந்தத் திட்டத்தை முறியடித்துவிட்டதாகவும் யோசேப்பு சொல்லவில்லைÉ அல்லது தன் சகோதரர்கள் ஒரு பொல்லாத சதித்திட்டம் தீட்டியதாகவும், தேவன் விரைந்துவந்து தலையிட்டு அவர்களுடைய தீமையை நன்மையாக மாற்றித் தன்னைக் காப்பாற்றியதாகவும் யோசேப்பு சொல்லவில்லை. (வேதாகமத்தில் சில பத்திகள் அப்படிச் சொல்லுகின்றன). மாறாக, இந்த ஒரே நிகழ்வில் தேவனும், யோசேப்பின் சகோதரர்களும் செயல்பட்டார்கள். தேவன் நல்ல நோக்கத்தோடு செயல்பட்டார். யோசேப்பின் சகோதரர்கள் தீய நோக்கத்தோடு செயல்பட்டார்கள். தேவனுடைய இறையாண்மையுள்ள, காணமுடியாத ஆளுகை செயல்படுவதால், யோசேப்பின் சகோதரர்களுடைய செயல் குற்றமற்றது என்று சொல்ல முடியாது. அவர்கள் குற்றமற்றவர்களா? இல்லவே இல்லை. தேவன் தம் இறையாண்மையின்படி யோசேப்பின் வாழ்வில் செயல்பட்டதால், அவனுடைய சகோதரர்கள் நிரபராதிகளா? இல்லை. அதே நேரத்தில், அவர்களுடைய செயல் தேவனுக்கு அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ தரவில்லை. “ஐயையோ! எனக்குத் தெரியாமல் யோசேப்பின் சகோதரர்கள் செயல்படுகிறார்களே!” என்று தேவன் அங்கலாய்க்கவில்லை. அவர்களுடைய செயல் அவருக்குத் தெரியும். யோசேப்பின் சகோதார்கள் தம் திட்டத்தை முறியடிக்கச் செயல்படுகிறார்களே என்று தேவன் பதறவில்லை. தேவனுடைய இறையாண்மை மனிதர்களுடைய செயலைப் பொறுத்ததல்ல. மனிதர்களின் செயல் தேவனுடைய இறையாண்மையைப் பாதிக்காது. தேவன் தம் இறையாண்மையின்படி செயல்படுகிறார் என்பதால், மனிதன் தம் விருப்பம்போல் செயல்படலாம் என்பதல்ல.
தேவன் தம் மக்களாகிய இஸ்ரயேலை சிட்சிப்பதற்கு அசீரியர்களைப் பயன்படுத்தினார். அசீரியர்கள் தேவனுடைய கரத்தில் வெறும் கருவியே என்று சொல்லலாம் (ஏசா. 10:5). ஆனால், அசீரியர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. இஸ்ரயேலை ஒடுக்கத் தேவன் அசீரியர்களைப் பயன்படுத்தினாலும், தங்கள் செயலுக்கு அசீரியர்களே பொறுப்பு. எனவே, தேவன் அவர்களிடம் கணக்குக் கேட்பார். இஸ்ரயேலர்கள் தோற்றார்கள். அசீரியர்கள் இஸ்ரயேல்மேல் பெற்ற வெற்றிக்கு தாங்களே காரணம் என்று நினைத்தார்கள். ஆனால், தேவன் தம் இறையாண்மையின்படி அவர்களுக்கு அந்த வெற்றியைத் தந்தார். இவ்வாறு ஒரே நேரத்தில் தேவனுடைய இறையாண்மையும், மனிதனுடைய பொறுப்பும் செயல்படுகிறது. ஒரு தச்சன் ஒரு கோடரியையோ அல்லது வாளையோ பயன்படுத்தும்போது, பயன்படுத்தப்படுகிற கருவிகள் தங்களைக்குறித்து உயர்வாகக் கருதலாமா?
“தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்குவதால்” “அதிக பயத்தோடும், நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்” (பிலி. 2:11-12) என்று பவுல் பிலிப்பியர்களுக்குச் சொல்லும்போது, அவர் என்ன சொல்லவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். “தேவன் தம் பங்கைச் செய்துமுடித்துவிட்டார். இப்போது நீங்கள் செய்ய வேண்டிய பங்குதான் மீதியிருக்கிறது. அதை நீங்கள் செய்யவேண்டும். இது உங்கள் முறை,” என்றோ அல்லது “இரட்சிப்பு முற்றிலும் கிருபையைச் சார்ந்தது. எனவே, நீங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் ஒன்றும் செய்யாமல் எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். தேவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். தேவனைச் செயல்பட விடுங்கள்,” என்றோ சொல்லவில்லை. மாறாக, அவர்களுடைய விருப்பங்களிலும், செயல்களிலும் தேவன் செயல்பட்டுக்கொண்டிருப்பதால், அதாவது தேவன் அவர்களில் வேலைசெய்துகொண்டிருப்பதால், அவர்கள் தங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்பட வேண்டும் என்று பவுல் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். தேவனுடைய இறையாண்மை அவர்கள் பிரயாசப்படுவதற்கு ஓர் ஊக்கமாகச் செயல்படுகிறதேதவிர, ஓர் எதிர்ப்பாக அல்ல.
ஓர் இரவு கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி, “நீ பயப்படாமல் பேசு...இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு,” (அப். 18:8-10) என்று சொன்னார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் தேவனே தம் மக்களைத் தெரிந்தெடுக்கிறார். தேவனே தம் மக்களைத் தெரிந்தெடுப்பதால் நற்செய்தி அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லலாமா? இல்லை. தேவன் தம் இறையாண்மையின்படி மக்களைத் தெரிந்தெடுக்கிறார். ஆனால், நாம் நம் பொறுப்பை ஏற்று நற்செய்தி அறிவிக்க வேண்டும். இரண்டும் ஒன்றுக்கொன்று இணக்கமானவை. தேவனுடைய தெரிந்தெடுத்தல் நற்செய்தி அறிவிக்க ஓர் ஊக்கமாகச் செயல்படுகிறதேதவிர ஓர் எதிர்ப்பாக அல்ல.
இதுபோன்ற இணக்கமான போக்குகள் அப்போஸ்தலர் 4இல் அப்பட்டமாக முன்வைக்கப்படுகின்றன. அப்போஸ்தலர்கள் சிறைச்சாலையிலிருந்து விடுதலையானபின்பு சபையார் வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கிய இறையாண்மையுள்ள தேவனை நோக்கி ஜெபிக்கிறார்கள். அவர்கள் “அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவும் செய்யும்படி ஏரோதும் பொந்தியுபிலாத்தும் புறஜாதிகளோடும் இஸ்ரயேல் ஜனங்களோடும்கூட நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய் மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்,” என்று சங்கீதம் 2யை மேற்கோள்காட்டி ஜெபிக்கிறார்கள் (அப். 4:27, 28).
ஒரு கணம் இவைகளைச் சிந்தித்துப்பார்த்தால் இவைகளைப் புரிந்துகொள்ள ஓர் இணக்கமான அணுகுமுறை தேவை என்று தெளிவாகும். இணக்கமான அணுகுமுறையைத்தவிர வேறொன்றும் இவைகளை விளக்க முடியாது. இணக்கமான அணுகுமுறை இல்லையென்றால் நற்செய்தி அழிந்துவிடும். ஆண்டவராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டதற்கு ஏரோது, பொந்தியுபிலாத்துபோன்ற அரசியல்வாதிகளும், யூதத் தலைவர்களுமே காரணம் என்று சொல்லலாமா? அவர்களுடைய சதித்திட்டமே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள முடியுமா? தேவன் கடைசி நிமிடத்தில் தலையிட்டு அவர்கள் நினைத்த தீமையை நன்மையாக மாற்றினார் என்று நாம் சொல்லமுடியுமா? ஏரோது, பொந்தியுபிலாத்து, மதத்தலைவர்கள்தான் இதற்குக் காரணம் என்று ஒப்புக்கொண்டால், தேவனுடைய மீட்பின் திட்டம் திட்டமாகவே இருக்கமுடியாது. அவர் “உலகத் தோற்றத்திற்குமுன்பே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி” இல்லையா? ஆதாம் ஏவாள் விழுந்தபோது, ஏதேன் தோட்டத்திலேயே அவருடைய மீட்பின் திட்டம் தெளிவாகத் தெரிகிறதே! தேவன் தம் இறையாண்மையின்படி எல்லா நிகழ்வுகளையும் கட்டுப்படுத்துகிறார் என்பதால் அவரைச் சிலுவையில் அறையக் காரணமாக இருந்த ஏரோது, பொந்தியுபிலாத்து, மதத்தலைவர்கள் நிரபராதிகள் இல்லை. சிறு குழந்தைகள் ஒரு தட்டானைப் பிடித்து ஒரு தாளில் மல்லாக்கப் படுக்க வைத்துக் குண்டூசியால் குத்தி விளையாடுவதைப்போல் இயேசுவைக் கொடூரமாய்க் கொலைசெய்தார்கள். தேவனுடைய பார்வையில் இது அவசியம், தேவை. இது அவருடைய இறையாண்மை. ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களின் செயல் நியாயமானதா? குற்றமற்றதா? சரியா? நல்லதா? இல்லை. இதில் சம்பந்தப்பட்ட கொடியவர்கள் குற்றமற்றவர்களா? இல்லை. தங்கள் கொடூரக் கொலைக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டாமா? வேண்டும். யூதாஸ் ஸ்காரியோத்தைக்குறித்துச் சொல்லும்போது, “மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்É ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும்,” என்று இயேசு சொன்னார் (மத். 26:24). யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க வேண்டும். இது தேவனுடைய இறையாண்மை. ஆனால், அவன் காட்டிக்கொடுத்தது பாவம். அவனுடைய செயலுக்கு அவன்தான் பொறுப்பு. தேவனுடைய கணக்கு வேறு. மனிதனுடைய கணக்கு வேறு. அவர்களெல்லாம் குற்றவாளிகளே. சதித்திட்டம் தீட்டிய ஏரோது, பிலாத்து, பிற மதத் தலைவர்கள், காட்டிக்கொடுத்த யூதாஸ்போன்றோர் குற்றவாளிகள் இல்லையென்றால், இந்த உலகத்தில் வேறு எந்தத் தவறையும் செய்பவன் குற்றவாளி என்று சொல்லவே முடியாது. இது குற்றமே இல்லையென்றால் பிராயச்சித்தப்பலி தேவையில்லையே!
1. இணக்கமான அணுகுமுறை அப்பட்டமான முரண்பாடுகளை ஒப்புக்கொள்கிறது என்பதல்ல இதன் பொருள். இந்த இரண்டு முன்மொழிவுகளும் எவ்வாறு கைகோர்த்துச் செல்கின்றன என்றும் நான் காட்ட முயலவில்லை. இதில் அறியப்படாத இரகசியங்கள் கணிசமாக இருக்கின்றன. நாம் அளவிடமுடியாத, விவரிக்கமுடியாத ஒரு பரம காரியத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இரட்சிப்பு இந்த உலகத்துக்குரியதே இல்லை. தான் பெற்ற நற்செய்தியைப்பற்றி, “நான் இதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்” (கலா. 1:12) என்று பவுல்; சொல்லுகிறார். நற்செய்தியை வரையறுக்க வேண்டும் அல்லது அளக்க வேண்டும் என்றால், அது எல்லா அம்சங்களிலும் “கிறிஸ்துவின்படி” இருக்க வேண்டும். வெளிப்பாட்டின்மூலமாகவே பவுல் நற்செய்தியைப் பார்த்தார். எனவே, நாம் நமக்கு மிகக் குறைவாகத் தெரிந்த ஒரு காரியத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். நற்செய்தியும், இரட்சிப்பும் நித்திய மண்டலத்துக்குரியவை; அது நம்மைத் தேவனுடைய இருதயத்துக்குள் கொண்டுசெல்கிறது.
நமக்கு வினாடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், வருடம் என்ற நாட்காட்டி இருக்கிறது. தேவன் இப்படி ஒரு நாட்காட்டி வைத்திருக்கிறாரா? அவர் இருந்தவராகவே இருக்கிறார். அவர் மாறாதவர். அவர் என்றும் புதிதானவர். நித்திய தேவன் காலம், நேரத்தில் எவ்வாறு செயல்படுகிறார் என்று நமக்குத் தெரியாது. காலநேரம் என்றால் என்னவென்று நமக்குத் தெரியாது. நித்தியம் என்றால் என்னவென்று நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. தேவன் ஏதாவது ஒன்றன்பின் ஒன்று என்று வரிசை வைத்திருக்கிறாரா? அந்த வரிசையின்படி எல்லாவற்றையும் செய்கிறாரா? காலங்களைக் கடந்த தேவன் நம் காலநேரத்துடன் நம்முடன் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார் என்று தெரியாது. முன்குறித்தலையும், முன்னறிதலையும்பற்றி வேதாகமம் தெளிவாகப் பேசுகிறது. ஆனாலும், இன்றும் இது ஒரு விவாதப்பொருளாகவே உள்ளது (ரோமர் 8:28-30). தேவன் முன்குறித்தார், முன்னறிந்தார், முன்னறிந்து முன்குறித்தவர்களை ஏற்ற நேரத்தில் அழைத்தார். இவைகளெல்லாம் இன்றைக்கும் விவாதிக்கப்படுகின்றன. தங்கள் செயல்களுக்குத் தாங்களே பொறுப்பேற்க வேண்டிய இரண்டாம்நிலை முகவர்கள்மூலம் இறையாண்மையுள்ள தேவன் எவ்வாறு செயல்படுகிறார் என்று நமக்குத் தெரியாது. எடுத்துக்காட்டு யூதாஸ், யோசேப்பின் சகோதரர்கள், அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள். மனிதன் ஒரு சுதந்தரவாளி என்பது நாம் நினைப்பதைவிட மிகவும் சிக்கலானது. அவன் தன் சுதந்தரத்தைப் பயன்படுத்தி தேவனுடைய இறையாண்மைக்கு முற்றிலும் முரணனான செயலைச் செய்து அவருடைய திட்டத்தைத் தவிடுபொடியாக்க முடியுமா? அப்படியானால் தேவனுடைய இறையாண்மை மனிதனுடைய சுதந்தரத்தைச் சார்ந்ததாகிவிடும். ஆனால், அப்படி இருக்க முடியாது. இது உண்மையானால் நாம் முன்வைக்கிற இந்த இணக்கமான அணுகுமுறை செல்லுபடியாகாது. தேவன் ஒரே நேரத்தில் எவ்வாறு இறையாண்மையுள்ளவராகவும், தனிப்பட்டவகையில் உறவுகொள்ளுகிறவராகவும் இருக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால், தேவன் இறையாண்மையுள்ளவர் என்றும், தனிப்பட்டவிதத்தில் உறவுகொள்ளுகிறவர் என்றும் வேதாகமம் வலியுறுத்துகிறது. நாம் மட்டுப்பட்ட மக்கள். நாம் ஒருவரோடொருவர் பேசுகிறோம், ஒருவரையொருவர் சந்திக்கிறோம், கேள்வி கேட்கிறோம், பதில்களைக் கேட்கிறோம், அன்புசெய்கிறோம், கோபப்படுகிறோம், நட்புகொள்ளுகிறோம், பிறரோடுள்ள நம் உறவு வளர வேண்டுமானால் அதற்கு நேரம் தேவை. உறவுகொள்ளுவதற்கு நாம் மட்டுப்படுத்தப்பட்ட மனிதர்களாக இருக்க வேண்டும். பார்க்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும், பகிர்ந்துகொள்ள வேண்டும், கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும். போக்குவரத்து இருக்க வேண்டும். இதுபோல, தேவன் கேள்வி கேட்கிறார், பதில் கோருகிறார், அன்புசெய்கிறார், கோபப்படுகிறார், நட்பைப் போற்றுகிறார், பகிர்ந்துகொள்கிறார், போக்கும்வரத்துமாக இருக்கிறார், கொடுக்கல் வாங்கல் செய்கிறார். இப்படி அவர் தனிப்பட்ட விதத்தில் உறவுகொள்ளுகிறார். வேதாகமத்தின் வேறு சில பத்திகள், “அவர் தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிறார்,” (எபே. 1:12) என்று சொல்லுகின்றன. இவ்வாறு இறையாண்மையுள்ள, தனிப்பட்டவிதத்தில் உறவுகொள்ளுகிற தேவனை எப்படிக் கற்பனைசெய்துபார்ப்பது என்று தெரியவில்லை. ஆனால், இந்த இரண்டும் ஒரே நேரத்தில் உண்மையில்லையென்றால், வேதாகமம் விவரிக்கும் தேவன் இல்லாமல் போய்விடுவார், கிறிஸ்தவமும் இல்லாமல் போய்விடும். சுருக்கமாகச் சொல்வதானால், இணக்கத்தன்மையைப்பற்றிய பரமஇரகசியம் தேவனைப்பற்றிய பரமஇரகசியத்தோடு தொடர்புடையது. தேவன் ஒரு பரமஇரகசியம். தேவனைப்பற்றி நமக்கு நிறையத் தெரியாது. அதுபோல இணக்கமான அணுகுமுறையும் ஒரு பரம இரகசியம். இரட்சிப்பைத் தேவதூதர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
2. தேவனுடைய நன்மைத்தனத்தைப்பற்றியும் வேதாகமம் வலியுறுத்துகிறது. தேவன் இறையாண்மையுள்ளவர் என்பதால் நன்மை, தீமை ஆகிய இரண்டுக்கும்பின்னால் அவர் இருக்கிறார். பொதுவாக, தேவன் எல்லா நன்மைகளுக்குப்பின்னாலும் இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக்கொள்வோம். ஆனால், அவர் தீமைக்குப்பின்னாலும் இருக்கிறார் என்பதை நம்மால் எளிதாக ஒப்புக்கொள்ளமுடியவில்லை. தேவன் இறையாண்மையுள்ளவர் என்பதால் அவருடைய அறிவுக்குஅப்பாற்பட்டு எதுவும் நடைபெறுவதில்லை. மக்களைக் கணக்கெடுப்பதற்குத் தேவனே தாவீதை ஏவுகிறார் (2 சாமு, 24:1). மக்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவனே அனுப்புகிறார் (2 தெச. 2:12). அவரே நாடுகளைப் போருக்கு அனுப்புகிறார் (யோவேல் 3:9). ரோமர் 8:28இல் விவரிக்கப்பட்டுள்ள தேவனும் அவரே. நன்மை, தீமை இரண்டுக்குப்பின்னால் அவர் இருப்பினும், இரண்டுக்கும்பின்னால் அவர் சமச்சீரற்ற முறையில் இருக்கிறார். தீமைக்குப்பின்னால் அவர் எவ்வாறு இருக்கிறார் என்றால் அவருடைய இறையாண்மையின் எல்லையைத்தாண்டி எந்தத் தீமையும் நிகழ்வதில்லை. ஆனால், அவர்தான் அந்தத் தீமைக்குக் காரணம் என்று அவரைக் குற்றப்படுத்தமுடியாது. அவர் நன்மைக்குப்பின்னால் எப்படி நிற்கிறார் என்றால் எல்லா நன்மைக்கும் அவரே காரணம். இது எப்படி என்று என்னால் விளக்க முடியாது. ஆனால், இது வேதாகமம் போதிக்கும் சத்தியம்.
3. இவ்வாறு நாம் ஒரு பரமஇரசகியத்துக்குள் அடைபட்டுவிடுகிறோம். இது ஆச்சரியம் இல்லை. ஏனென்றால், நாம் தேவனைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம், சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். தேவனைப்பற்றிப் பரமஇரகசியம் எதுவும்; இல்லையென்றால், அவர் தேவனாக இருக்கமாட்டார். தேவனையும், தேவனுடைய வழிகளையும்பற்றி நாம் எல்லாவற்றையும் புரிந்துகொண்டால் அவர் மிகச் சிறியவராக, மிக எளிதில் அடக்கப்படத்தக்கவராக, நம் வீட்டுத் தேவனாகிவிடுவார். இணக்கமான அணுகுமுறை தேவனைப்பற்றிய மறைபொருளோடு (பரமஇரகசியத்தோடு) சம்பந்தப்பட்டுள்ளதால், தேவன் ஒரு மறைபொருள் (பரமஇரகசியம்) என்பதை ஏற்றுக்கொண்டால், தேவனைப்பற்றிய மறைபொருள் எவ்வாறு செயல்படுகிறதோ, அவ்வாறே இணக்கத்தன்மையைப்பற்றிய மறைபொருளும் செயல்படுகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
தேவன் ஒருவரா? மூவரா? தேவன் ஒருவரே என்பது உண்மை. ஆனால், இவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக இருக்கிறாரே! இது ஒரு பரமஇரகிசயம். இதை விளக்கமுடியாது. வேதம் எடுத்துரைக்கும் மாறாத, மறுக்கமுடியாத உண்மை.
இதுபோலவே, தேவன் தம் இறையாண்மையின்படி தம் மக்களை இறுதிவரைப் பாதுகாக்கிறார் என்பதும், இரட்சிக்கப்பட்டவர்கள் பொறுப்புள்ளவர்களாக இறுதிவரை நிலைத்திருக்க வேண்டும் என்பதும் உண்மை.
தெரிந்தெடுத்தல் தேவனுடைய இறையாண்மையின் இன்னொரு மூலக்கூறு. தேவ மக்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இயேசுவை விசுவாசிக்கிறார்கள். அப்படியானால், நற்செய்தி அறிவிக்க வேண்டாமா? மனிதன் தேவனைத் தேடவேண்டாமா? நற்செய்தி அறிவிக்க வேண்டும். மனிதன் தேவனைத் தேட வேண்டும். தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாக அவர் நமக்குத் தூரமானவர் அல்ல. அவரைத் தேடினால் கண்டுபிடிக்கலாம். நற்செய்தியைக் கேட்கிறவர்கள் விசுவாசிக்கிறார்கள். எனவே, தெரிந்தெடுத்தல் என்று ஒன்று இருப்பதால் மனிதன் தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது அல்லது நற்செய்தி அறிவிப்பதைக் குறைக்கவோ, நிறுத்தவோ முடியாது. மாறாக, தேவனுடைய தெரிந்தெடுத்தல் என்று ஒன்று இருப்பதைப் பார்ப்பவன் தன் இரட்சிப்புக்குக் காரணம் தேவனுடைய கிருபை என்று ஒப்புக்கொள்வான். அது அவனிடத்தில் தாழ்மையை வளர்க்கவும் (ரோமர் 9), நற்செய்தி அறிவிப்பதை ஊக்குவிக்கவும் (அப். 18:9-10) செயல்படுகிறது. மக்கள் இயேசுவை விசுவாசிக்குமாறு அல்லது நற்செய்திக்குக் கீழ்ப்படியுமாறு அழைக்கும்போது தேவனுடைய இறையாண்மை பாதிக்கப்படுவதில்லை. மாறாக, மக்களை இரட்சிப்புக்கேதுவான விசுவாசத்துக்குக் கொண்டுவரவும், மனிதனுடைய பொறுப்பை அதிகரிக்கவும், தேவனுடைய பொறுமையைப் போற்றவும் செயல்படுகின்றன. இணக்கத்தன்மையின் கூறுகள் வேதாகமத்திற்குப் புறம்பான வழிகளில் செயல்பட அனுமதித்தால், கடைசியில் நாம் இணக்கத்தன்மையை மறைமுகமாக மறுப்போம், கடைசியில் அது தேவனைப்பற்றிய உபதேசத்தைப்போன்ற ஓர் உபதேசம் என்ற வகையில் மாத்திரம் அது நிற்கும். தேவன் யார், தேவன் எப்படிப்பட்டவர் என்ற சாட்சியை நாம் களங்கப்படுத்துவோம்.
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பரமஇரகசியமான வேறுபல உபதேசங்களை ஒப்புக்கொள்ளப் பழகிவிட்டோம். இதை அறிந்த மக்கள் வேதாகமத்தை வாசிக்கும்போது எது பரமஇரகசியம் என்பதைப் புரிந்துகொண்டு, அதை சேதப்படுத்தக்கூடாது என்பதில் குறியாக இருப்பார்கள். மிகச் சிறந்த எடுத்துக்காட்டு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றியது. ஆண்டவராகிய இயேசு தேவனும் மனிதனுமாவார். பல வசனங்கள் அவருடைய தெய்வீகத்தைப்பற்றிப் பேசுகின்றன. வேறு பல வசனங்கள் அவருடைய மனுஷீகத்தைப்பற்றிப் பேசுகின்றன. ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. தெய்வீகத்தைப்பற்றிய வசனங்களை வைத்துக்கொண்டு அவர் தேவன் மட்டுமே என்றும், மனஷீகத்தைப்பற்றிய வசனங்களை வைத்துக்கொண்டு அவர் மனிதன் என்று மட்டுமே வாதிடுவது மதியீனம்.
இரட்சிப்பும் இதைப்போன்றதுதான், இரட்சிப்பின் நிச்சயமும் இதைப்போன்றதுதான். இரட்சிப்பில் தேவனுடைய பக்கம் இருக்கிறது; தேவனுடைய பக்கத்தில் அவர் இறையாண்மையுள்ளவர். அவர் தம் மக்களைக் கடைசிவரைப் பாதுகாக்கிறார். ஆதில் மனிதனுடைய பக்கமும் இருக்கிறது. மனிதன் கடைசிவரை நிலைத்திருந்து தன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. இது ஒரு பரமஇரகசியம். மனிதன் சுதந்தரவாளி. அவன் தன் விருப்பம்போல் முடிவெடுத்து வாழலாம். அவனுடைய செயலுக்கு அவன்தான் முழுப் பொறுப்பு. ஆனால், தேவனுடைய இறையாண்மை கேள்விக்குறியதல்ல.
இணக்கமானதன்மை என்ற இந்த அணுகுமுறை தேவனுடைய தெரிந்தெடுத்தல், பாடுகள், ஜெபத்தின் தன்மைபோன்ற பல காரியங்களுக்குப் பொருந்தும். ஜெபத்தைப் பொறுத்தவரை, ஒரு பக்கம், “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்குமுன்னமே நம்முடைய தேவை இன்னதென்று தேவன் அறிந்திருக்கிறார்” (மத். 6:8). “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று நீங்கள் கேளாமலும், சந்தேகப்படாமலும் இருங்கள்” (லூக்கா 12:29). இதுபோன்ற வசனங்களை வாசிக்கும்போது ஜெபிக்கத் தேவையில்லாததுபோல் தோன்றும். ஆனால், நாம் ஜெபிக்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கான வசனங்கள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன. ஜெபிக்க வேண்டுமா, வேண்டாமா? இரட்சிப்பின் நிச்சயமமும் இதுபோன்றதுதான். ஒரு பக்கம், தாம் தெரிந்தெடுத்தவர்களை முடிவுபரியந்தம் பாதுகாப்பதாகச் சொல்லுகிற தேவனுடைய இறையாண்மையுள்ள வாக்குத்தத்தங்கள் இருக்கின்றன. மறுபக்கம், விசுவாசிகள் புதிய உடன்படிக்கைக்கும், உடன்படிக்கையின் கர்த்தருக்கும், அவர்களுடைய அழைப்புக்கும் உண்மையும் உத்தமுமாக நிலைத்திருக்குமாறு வலியுறுத்தும் வசனங்கள் இருக்கின்றன. இவ்வாறு, தேவனுடைய இறையாண்மையும், மனிதனுடைய பொறுப்பும் இன்னொரு வடிவத்தில் வழங்கப்படுகிறது.
எனவே, இது எப்போதும் பரம்புதிராகவே இருக்கும். பரமஇரகசியத்தைச் சரியான இடத்தில் கண்டுபிடிக்க வேண்டும். தேவன் தம் இறையாண்மையின்படி தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைக் கடைசிவரைப் பாதுகாப்பார் என்று சொல்லியபின், மனிதன் தன் பொறுப்பை உத்தமமாக நிறைவேற்றினால்தான் இது சாத்தியம் என்று சொன்னால் இது பரமஇரகசியம் இல்லை. இது தர்க்கரீதியான முரண்பாடு. இரட்சிப்பின் நிச்சயத்தைப்பற்றிப் பேசும்போது, எந்தச் சந்தேகமும் இல்லாமல் பேசமுடியும் என்றால் நாம் இணக்கத்தன்மையை மறுதலிக்கிறோம் என்று பொருள். தேவனுடைய தெரிந்தெடுத்தலைப்பற்றிய காரியமும் இதுவே. எந்தக் கஷ்டமும் இல்லாமல் இதை விளக்க முடியாது. இரட்சிப்பின் நிச்சயத்தைப்பற்றிய எல்லா வசனங்களும் நல் வாழ்வில் செயல்படட்டும். விசுவாசதுரோகத்துக்கு எதிரான எச்சரிக்கைகள் தேவனுடைய வாக்குறுதிகளைச் செல்லாததாக்கிவிடுமா? நிச்சயமாக இல்லை. அவை நாம் பெற்ற இரட்சிப்பில் நிலைத்திருப்பதற்கு நம்மை உந்தித்தள்ளுகின்றன. தேவனுடைய வாக்குறுதிகள் நம்மைச் சோம்பேறிகளாக்குகிறதா? நிச்சயமாக இல்லை. அவை நம் வைராக்கியத்தையும், நன்றியுணர்வையும், தேவனுடைய உத்தமத்தைப் பராட்டுவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பலவகையான சந்தேகங்கள் எழலாம். இப்போது தொடங்கியுள்ள இரட்சிப்பு இறுதியில் வெற்றியாக முடிவுபெறுமா என்ற சந்தேகம் எழலாம். இதுபோன்ற சந்தேகங்கள் எழுந்தாலும் இந்தச் சந்தேகங்களுக்குப் பதில் கிறிஸ்துவிலும், கிறிஸ்து நமக்காக மரித்து, உயிர்த்தெழுந்ததிலும், தேவனுடைய தவறாக வாக்குறுதிகளையும், அன்பையும் பெரிதாக்கிப் பார்ப்பதிலும் இருக்கிறது (யோவான் 5:24; 6:37; ரோமர் 8:15-17; 29-30; 38-39; பிலி. 1:6; 2 தீமோ. 1:12). இரகசிய பாவம் இருக்கும்போது ஒருவனிடம் இரட்சிப்பின் நிச்சயம் இருக்காது. இஸ்ரயேலர்கள் தாங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்ற நிலையில் பெருமைபாராட்டி, பாவம் செய்யப் பயப்படாததுபோல, பாவத்தைக்குறித்து வெட்கப்படாததுபோல, ஒரு கிறிஸ்தவன் பாவம்செய்யப் பயப்படவில்லையென்றால், பாவத்தைக்குறித்து வெட்கப்படவில்லையென்றால் அவனிடம் தான் பெற்ற இரட்சிப்பைக்குறித்து என்ன நிச்சயம் இருக்கும்! கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்று யாக்கோபு 2இல் சொல்வதை நினைவில்கொள்வது நல்லது. புதிய ஏற்பாட்டில் இரட்சிப்புக்கேதுவான விசுவாசம் புதிய உடன்படிக்கையோடும், ஆவியானவரின் வல்லமையோடும் இணைந்திருப்பதால் நற்கிரியைகள் இயல்பாகவே வெளியாகும். நற்கிரியைகள் ஒருவனை இரட்சிக்காது. அவை இரட்சிப்பின் நிச்சயத்திற்கு அடிப்படையான காரணமாக இருக்க முடியாது. கிறிஸ்துவும், அவர் செய்துமுடித்தவைகளும், அவருடைய வாக்குறுதிகளுமே காரணம். ஆனால், நற்கிரியைகள் ஒருவனுடைய இரட்சிப்பை உறுதிப்படுத்தும் சான்றுகளாக இருக்கமுடியும். யாக்கோபு 2இலும், 2 கொரிந்தியர் 13:10இலும் உறுதிப்படுத்தும் சான்றுகள் இல்லாதது இரட்சிப்புக்கேதுவான விசுவாசம் இருப்பதை கேள்விக்குரியதாக்குகிறது.
1 யோவான் முழுவதும் நம் விசுவாசத்தின் பரீட்சைகளே. சத்தியத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளுதல், தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவே இயேசு என்று அறிக்கைசெய்தல், முதன்மையான கீழ்ப்படிதல், பிற விசுவாசிகள்மேல் அன்பு, ஆவியானவரின் சாட்சி ஆகியவைகள் பெற்ற இரட்சிப்பின் பரீட்சைகள் என்று யோவான் தன் நிருபத்தில் எழுதுகிறார்.
பல சந்தேகங்கள்: இயேசு கிறிஸ்து என்னை மன்னிக்கும் அளவுக்கு நான் தகுதியானவனா? அவர் என்னை மன்னிப்பாரா? நான் மரித்தவுடன் இயேசு என்னைப் பரலோகத்துக்குக் கொண்டுபோவாரா? பாவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு விசுவாசி தன் இரட்சிப்பைக்குறித்து என்ன நினைக்கிறான்? “ஒருமுறை இரட்சிக்கப்பட்டவன் எப்போதும் இரட்சிக்கப்பட்டவன்” என்று முழக்கத்தைக் கேள்விப்பட்ட ஒரு பெயர்க் கிறிஸ்தவன், அது உண்மை என்று நம்புகிறான் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவனுடைய வாழ்க்கையில் புதிய உடன்படிக்கை வாக்களிக்கிற இரட்சிப்பின் கனிகள் இல்லவே இல்லையென்றால் அவனுடைய நிலைமை என்ன? இப்படிப் பலதரப்பட்ட மக்களுக்கு ஒரேவிதமான மருந்தைக் கொடுக்கும் மருத்துவனின் உரிமத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும்.
இரட்சிப்பின் நிச்சயத்துக்குப்பின்னால் இழையோடுகிற மறைபொருளை நாம் போதுமான அளவுக்குப் புரிந்துகொண்டால், ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்கும் பல்வேறு கூற்றுக்களை எந்த வகையிலும் குறைக்காமல் அவைகளை நாம் அப்படியே விட்டுவிடலாம். குறைப்பது ஆபத்தானது, முறைகேடானது. கிறிஸ்துவின் பெயரைச் சொல்லுகிறவன் கிறிஸ்துவுக்கேற்றவாறு நடக்க வேண்டும். உண்மையாகவே தம்முடையவர்கள் யார் என்று தேவனுக்கு மட்டும்தான் தெரியும். கிறிஸ்துவின் பெயரைச் சொல்லுகிறவன் அக்கிரமத்தைவிட்டு விலக வேண்டும். அவன் விசுவாசத்தை மறுதலித்துவிட்டுத் தன்னைக் கிறிஸ்தவன் என்று அழைக்கக்கூடாது. ஆனாலும், தேவன் அவனை இரட்சிக்க வல்லவர். கிறிஸ்துவை மறுதலிக்கிற அல்லது விசுவாசிக்காத விசுவாசிகளுக்கு என்ன சொல்லலாம்? இதுபோன்ற வேளைகளில் வேதவாக்கியங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை நாம் புரிந்துகொண்டால், நம் இறையியலும், நம் ஆலோசனையும் முதிர்ச்சியடையும், சமநிலையில் இருக்கும்.
நிலைத்திருப்பதே இரட்சிப்பின் நிச்சயத்தின் ஆதாரம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நிலைத்திருக்கவில்லையென்றால் இரட்சிப்பின் நிச்சயம் குறைகிறது. இரட்சிப்பின் உத்தரவாதம் கிறிஸ்துவும் அவர் செய்துமுடித்த வேலைகளுமே. இரட்சிப்பின் நிச்சயம் தேவனுடைய குணத்தையும், புதிய உடன்படிக்கையின் இயல்பு, தெரிந்தெடுத்தலின் இறுதிநிலை, தேவனுடைய அன்பு, அவருடைய வாக்குறுதிகள்போன்ற பலவற்றைச் சார்ந்திருக்கிறது. ரோமர் 1-4வரைப் பேசிய காரியங்களின் சுருக்கமாக அல்லது முடிவுரையாக ரோமர் 5:1-11இல் நாம் கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தினால் தேவனுடைய பார்வையில் நீதிமான்களாக்கப்படுகிறோம் என்றும், அதன் அடிப்படையில் தேவன் நம்மை ஏற்றுக்கொள்கிறார் என்றும், நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினால் நாம் தேவனுடைய அன்பை அறியலாம் என்றும், கோபாக்கினைக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயம் என்றும் பவுல் கூறுகிறார். நாம் தேவனுடைய உடைமை என்று பரிசுத்த ஆவியானவர் நம்மை முத்திரித்திருக்கிறார். அவர் நம் இறுதி மீட்பின் உத்தரவாதமாகவும் இருக்கிறார். தேவன் நம்மில் ஆரம்பித்திருப்பதை நாம் உயிர்த்தெழும் கடைசிநாளில் செய்துமுடிக்கச் சித்தங்கொண்டிருக்கிறார், தீர்மானித்திருக்கிறார் என்பதற்கு அச்சாரமாகப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளப்பட்டிருக்கிறார். எனவே, நாம் அவரையும், அவருடைய உத்தமத்தையும் நம்பலாம். ஆனால், இதுபோன்ற நிச்சயமும், உத்தரவாதமும் ஆவிக்குரிய அலட்சியத்தை அனுமதிக்கவில்லை. இரட்சிக்கப்பட்டவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்வதற்கு இது உரிமம் கொடுக்கவில்லை.
உண்மையில், இந்தத் தரிசனமே தம் புதிய உடன்படிக்கைக்குத் தங்களை அழைத்த தேவன் தங்களைத் தம் குமாரனுடைய சாயலுக்கு ஒத்த சாயலாக்க தங்களில் வல்லமையாய் வேலைசெய்கிறார் என்பதாலும், அவர் விரும்புகிற கனிகளைத் தங்கள் வாழ்க்கையில் உருவாக்க ஆவியானவர் செயல்படுகிறார் என்பதாலும் அவர்களை நிலைத்திருக்கத் தூண்டுகிறது. இது இயேசு கிறிஸ்துவின் மேலான அழைப்பைநோக்கிச் செல்பவர்களுக்கு ஊக்கமாக இருக்கிறது. இரட்சிப்பு நாம் பரலோகத்துக்குப் போவதற்கான பயணச்சீட்டு இல்லை. இது அவருடைய இரக்கத்திற்குத் தகுதியேயில்லாத, இயேசு தம் சொந்த இரத்தத்தால் வாங்கிய, பாவிகளை அன்பினால் அணைத்துக்கொள்வதாகும், தம் பிள்ளைகளாக மாற்றுவதாகும். நாம் அவரோடு நடக்கவும், அவருக்காக வாழவும், அவருடைய சாயலுக்கு ஒத்த சாயலாக மாறுமாறும் அழைக்கப்பட்டிருக்கிறோம். விதைப்பவன் அறுவடையை எதிர்பார்த்துத்தான் விதைக்கிறான், பொழுதுபோக்குக்காக விதைப்பதில்லை. எனவே, விசுவாசி தன் முழு இருதயம், முழு ஆத்துமா, முழு மனம், முழுப் பலம் எல்லாவற்றையும் கர்த்தருக்குக் கொடுக்கிறான். கர்த்தருடைய கிருபையிலும், கர்த்தரை அறிகிற அறிவிலும் வளர்கிறான். அவனுடைய வாழ்க்கை சாட்சியுள்ள வாழ்க்கையாகிறது. அவன் வாழ்க்கை கிறிஸ்துவின் நறுமணத்தை வீசுகிறது. அவனைத் தொடுகிறவர்கள் கிறிஸ்துவைத் தொடுவார்கள்.
“கர்த்தாவே! கர்த்தாவே!” என்று சொல்லிவிட்டு அவர் கட்டளைகளை நிறைவேற்றாமல் இருப்பவர்களுக்கு இது மறைமுகமான சவாலாகவும் இருக்கிறது. தேவன் தாம் நேசிக்கும் தம் பிள்ளைகளை இந்தப் பூமியில் சிட்சிக்கிறார். சிட்சை அவருடைய அன்பின் அடையாளம். எனவே, அது அவருடைய பிள்ளைகளுக்கு ஓர் ஆசீர்வாதம். ஆனால், தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லிவிட்டு அவன் ஒருவேளை இந்தப் பூமியில் தன் மனம்போன போக்கில் வாழ்ந்தால், கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்த சாயலாக மாறவில்லையென்றால் வரப்போகிற யுகத்திலும், தம் அன்பினாலும், இரக்கத்தினாலும் அவர்களை மீண்டும் சிட்சிப்பாரோ! அவன் தேவனுடைய இரக்கத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்துக்குமுன் நிற்போம். “மோசம் போகாதிருங்கள். தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்துக்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்” (கலா. 6:7-8). இரட்சிப்பைவிட்டு விலகிச்செல்பவர்களுக்குக் கொடுக்கப்படும் எச்சரிக்கைகள் இவர்களுக்குத்தானோ! நாம் கர்த்தருக்குப் பயந்து, பரிசுத்த ஆவியானவரின் ஆறுதலோடு வாழ வேண்டும். நம் தேவன் பட்சிக்கிற அக்கினி.
இது ஓர் ஊக்கம், இது ஒரு சவால், இது ஓர் எச்சரிக்கை.