ரூத் போவாசின் வயல்வெளியில் அறுக்கிறவர்களுக்குப்பின்னால் போய், அரிக்கட்டுகளிலிருந்து சிந்தின கோதுமைமணிகளைப் பொறுக்கி, தான் பொறுக்கினவைகளைத் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை இருந்தது. அதுபோல, கர்த்தருடைய பாடல்-வயலில் நாங்கள் பாடல்-மணிகளைப் பொறுக்கி, தட்டி, அடித்து கிறிஸ்துவை மையமாகக்கொண்ட ஏறக்குறைய 200 பாடல்களைத் தொகுத்துள்ளோம். இவைகள் மட்டுமே சபை வரலாற்றில் கிறிஸ்துவை மையமாகக்கொண்ட பாடல்கள் என்று நாங்கள் ஒருபோதும் கருதவில்லை. இது ஓர் ஆரம்பம்.
தேவனுடைய மக்கள் பாடல்களின் பின்புலத்தையும், ஓரளவுக்குச் சபை வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியவர்களைப்பற்றிய சில தகவல்களைத் தந்திருக்கிறோம். இவைகளைத் தெரிந்துகொள்வதின்மூலம் இந்தப் பாடல்களை நீங்கள் இன்னும் அதிகமாகப் பாராட்டலாம், அனுபவிக்கலாம்.
எந்தப் பாடலுக்காவது யாராவது காப்புரிமை கோருவதாக இருந்தால் எங்களுக்குத் தெரிவியுங்கள். நாங்கள் எழுதிய, மொழிபெயர்த்த பாடல்களை யார் வேண்டுமானாலும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.