Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

உள்ளத்தின் ஆரோக்கியம்

By மெர்லின் இராஜேந்திரம்

ஆரோக்கியமான ஆவியும், ஆரோக்கியமான உள்ளமும் மிகவும் நுட்பமானவை.

ஆண்டவராகிய இயேசு தம் வார்த்தையால் அல்லது கைகளால் தொட்டு மக்களுடைய உடலின் நோய்களைக் குணமாக்கினார் என்று வேதாகமம் முழுவதும் வாசிக்கிறோம். ஆனால், அவர் உள்ளத்தின் காயங்களைக் குணமாக்கினார் என்று நான்கு நற்செய்திகளிலோ அல்லது உள்ளத்தின் காயங்கள் எப்படிக் குணமாகின்றன என்று நடபடிகளிலோ அல்லது அதைப்பற்றிய ஒரு போதனை நிருபங்களிலோ சொல்லப்பட்டிருக்கிறதா?

இலட்சக்கணக்கான விசுவாசிகள் உள்ளத்தின் காயங்கள் என்ற புதைமணலில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆவிக்குரிய வாழ்க்கையில் அவர்களால் முன்னேறிச்செல்ல முடியவில்லை. உள்ளக் காயங்களின் வலியிலிருந்தும், வேதனையிலிருந்தும் அவர்களால் விடுதலை பெற முடியவில்லை. உள்ளத்தின் காயங்கள் அவர்களை இன்னும் கீழே, இன்னும் அதிகமான இருளுக்குள், இழுத்துச்செல்கின்றன. உள்ளத்தின் காயங்களுக்குப் பதில் தரும் அடுத்த போதனைக்காக, தங்கள்மேல் கைகளைவைத்து ஜெபித்து, காயங்களைக் குணமாக்கப்போகிற அடுத்த தீர்க்கதரிசிக்காக, கடந்த காலக் கருநிழல்களைத் துரத்தப்போகிற அடுத்த விடுதலை ஊழியத்துக்காக, அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். உள்ளத்தின் காயங்களைக் குணமாக்கும் மருந்தைத் தேடி மக்கள் ஓடுகிறார்கள்.

அவர்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வாழ்கிறார்கள் அல்லது வளர்கிறார்கள் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது, மூழ்கிப்போகாமல் மூச்சுப்பிடித்துத் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். "தாங்கள் பழுதடைந்த ஒரு பாண்டமோ, சேதமடைந்த ஒரு சரக்கோ!" என்ற எண்ணம் அவர்களைத் திணறடிக்கிறது. “உள்ளத்தின் காயங்கள் குணமானால் தேவனுடைய நித்திய நோக்கம் நிறைவேறக்கூடிய மக்களாக மாறிவிடுவோம்,” என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ஆதி சபையோடு ஒப்பிடும்போது நாம் உள்ளத்தில் ஊனர்களா அல்லது நமக்குத் தெரியாத ஏதோவொன்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததா அல்லது அவர்களுக்குத் தெரிந்த ஏதோவொன்று நமக்குத் தெரியவில்லையா? நற்செய்திகளிலும், நிருபங்களிலும் அந்த எண்ணம் பின்னிப்பிணைத்திருப்பதால், அதை ஒரு தனிப் போதனையாகக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையோ!

பாவநிவாரணபலியில் துக்கங்கள் அடங்கும்

பாவநிவாரணபலியில் உள்ளத்தின் காயங்கள் சுகமாக்கப்படுவதும் அடங்கும். "மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்...நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:4-5). ஆண்டவராகிய இயேசுவின் சிலுவை மரணத்தால் உடலின் வியாதிகளும், உள்ளத்தின் காயங்களும் குணமாக்கப்படுகின்றன: இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள பாடுகள், துக்கங்கள், சமாதானம் என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். இயேசு உண்மையாகவே நம்முடைய உள்ளத்தின் காயங்களைக் குணப்படுத்துகிறாரா? ஆம். இது உறுதி. நற்செய்திகளில் அவர் எங்கு, எப்படி, குணமாக்குகிறார் என்றும், நாம் அதை எப்படிப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கொஞ்சம் பார்ப்போம்.

காயமடைந்த தண்டு (முறிந்த அல்லது நெரிந்த தண்டு)

"அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்," (ஏசாயா 42:3) என்று மேசியாவைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. முறிந்த (காயப்பட்ட) நாணல், மங்கியெரிகிற (புகை கக்குகிற) திரி. இந்த இரண்டு உவமைகளும் உள்ளக் காயங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவனைப்பற்றிய படம்.

ஒரு செடியின் தண்டை நாம் தெரிந்தோ தெரியாமலோ வளைத்திருப்போம் அல்லது காயப்படுத்தியிருப்போம். அதை நாம் இன்னும் வெட்டி எறியவில்லை. அந்தச் செடி இன்னும் தண்டில்தான் இருக்கிறது. தண்டு முறிந்திருக்கிறது. செடியின் தோலுக்குப் பாதிப்பில்லை. தோற்றத்தில் அது இன்னும் இயல்பாகவே தெரிகிறது. ஆனால், அதன் தண்டில் காயம் ஏற்பட்டிருப்பதால், அது பெறவேண்டிய முழுமையான ஊட்டச்சத்தைப் பெறமுடியாது.

கையிலோ, காலிலோ எலும்பு முறிந்திருக்கிறது. ஆனால், தோல் கிழியவில்லை.

காயம் தோலில் இல்லை, உடலில் இல்லை; காயம் உள்ளத்தில் இருக்கிறது.

முறிந்த எலும்பைத் துணியால் கட்டி மறைக்கலாம். ஆனால், துணிக்குக்கீழே முறிந்த எலும்பு அசிங்கமாக இருக்கிறது, வலிக்கிறது. பல நாட்கள், பல மாதங்கள், பல வருடங்கள் அது அப்படியே இருக்கிறது. முறிந்த எலும்பை யாரும் தெரியாமல்கூடத் தொட்டுவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருப்போம். ஏனென்றால், அதைத் தொட்டால், இடித்தால், அதில் ஏதாவது பட்டால், பயங்கரமாக வலிக்கும். அதைத் தொட்டவர்களுக்கும், இடித்தவர்களுக்கும், அதைப்பற்றி ஒன்றும் தெரியாது.

உள்ளத்தின் காயங்களினால் வெளிவரும் எதிர்வினை

இந்த வசனங்களில் வாசிக்கிற உள்ளத்தின் காயங்கள் அப்படிப்பட்டவை. முறிந்த ஆவியை, நசுங்கிய உள்ளத்தைப் பிறர் பார்வையிலிருந்து சாமர்த்தியமாக மறைத்துவிடுவோம். யாராவது தற்செயலாக, கவனக்குறைவால், அதைத் தொடும்போது சீறிப்பாய்வோம் அல்லது சுருங்கிவிடுவோம் அல்லது இழுத்துக்கொள்வோம் அல்லது ஒதுங்கிவிடுவோம்.

நம் எதிர்வினை மிகப் பலமாக இருக்கும். உள்ளம் உடைந்தவன் சூழ்நிலைக்குத் தக்கவாறு நடவாமல், அளவுக்கு அதிகமாகவே எதிர்த்துத் தாக்குவான்.

புகை கக்கும் விளக்குத்திரி

ஏசாயா எண்ணெயில் எரியும் விளக்கையும் குறிப்பிடுகிறார். அந்த விளக்கு மங்கி எரிகிறது. திரி கரிந்துபோயிருக்கிறது. எண்ணெய் குறைந்திருக்கிறது. சரியாக எரியவில்லை. வெளிச்சம் தருவதற்குப்பதிலாக புகை கக்குகிறது. அந்த அளவுக்கு அவர்கள் காயப்பட்டிருக்கிறார்கள், முறிந்திருக்கிறார்கள், நெறிந்திருக்கிறார்கள். தாங்கள் உயிரோடிருப்பதாக வெளியே காட்டிக்கொள்கிறார்கள். சிரிக்கிறார்கள், வாழ்த்துகிறார்கள், எல்லாம் இயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள். காயங்களை மறைக்கிறார்கள். ஆனால், வெளிச்சம் இல்லையே! விளக்கு அணைந்துபோகவில்லையேதவிர, எரிகிறது என்று சொல்லமுடியாது. மங்கி எரிகிறது. கஷ்டப்பட்டு எரிகிறார்கள்.

மற்ற விளக்குகள் பிரகாசமாக எரிந்துகொண்டிருப்பதையும், தேவனுடைய ஒளி அவர்கள்மூலம் வீசுவதையும், இந்த மங்கியெரியும் விளக்குகள் பார்க்கின்றன. “பரிசுத்த ஆவியானவர் எங்களைக் குணமாக்கினால் நாங்களும் கொளுந்துவிட்டு எரியமுடியுமே! எங்களில் பரிசுத்த ஆவியானவர் இல்லையோ! ஏன் இந்தப் பரிதாபமான நிலை! தப்பித்தோம் பிழைத்தோம் என்ற நிலைமையில்தானே வாழ்கிறோம்!” என்று இந்த விளக்குகள் அங்கலாய்க்கின்றன.

இதுதான் உணர்ச்சிகள் காயப்பட்ட, உள்ளம் உடைந்த, ஒருவனின் நிலைமை. நெரிந்த நாணலின், மங்கியெரிகிற திரியின், நிலைமை.

ஆண்டவராகிய இயேசுவின் சிலுவை மரணத்தில் இவர்களுக்கு சுகம் உண்டு.

ஆரோக்கியமான உணர்ச்சிகள்

ஆதாரமான வசனம்

ஏசாயா 42:1-4 மேசியாவைப்பற்றிய ஒரு தீர்க்கதரிசனம். "அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்." உணர்ச்சிரீதியாகக் காயப்பட்டவன் நெரிந்த நாணலுக்கும், மங்கியெரிகிற திரிக்கும் ஒப்பிடப்படுகிறான்.

கர்த்தருடைய பார்வை

கர்த்தர் இவர்களை எப்படிப் பார்க்கிறார்? நெரிந்த நாணல்கள், மங்கியெரிகிற திரிகள், எளிதில் சோர்வடைந்துவிடும், மனந்தளர்ந்துவிடும், சலித்துவிடும், நம்பிக்கையிழந்துவிடும். ஆனால், தேவன் இவர்களைப்பொறுத்தவரை இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை. அதாவது அவர் சோர்வடைய மாட்டார், மனந்தளர மாட்டார், ஊக்கங்குறைய மாட்டார், சலித்துக்கொள்ள மாட்டார், நம்பிக்கையிழக்க மாட்டார். எதுவரை? நியாயத்தை நிலைப்படுத்துமட்டும். அவர் மங்கியெரிகிற திரியை அணைக்கமாட்டார்; நெரிந்த நாணலை முறிக்கமாட்டார். நம் வாழ்க்கையில், நம் உணர்ச்சிகளில், நியாயத்தை நிலைப்படுத்துவார். அவர் செய்வார். அவரால் மட்டுமே செய்ய முடியும்.

நியாயம் - தேவனுடைய பார்வை

நியாயத்தை நிலைநிறுத்துவத்தைப்பற்றிய நம் பார்வை தேவனுடைய பார்வையிலிருந்து மிகவும் வித்தியாசமானது. நம்மைக் காயப்படுத்தியவர்களோடு தேவன் இடைப்படவேண்டும் என்றும், அவர் அவர்களை நியாயந்தீர்க்கவேண்டும் என்றும் இயற்கையான மனிதன் எதிர்பார்ப்பான். தேவன் அப்படிச் செய்யலாம் அல்லது செய்யாமலும் போகலாம். ஆனால், அவர் காயப்பட்ட உணர்ச்சிகளோடு, உடைந்த உள்ளத்தோடு, இடைப்படுவார்; நம் உணர்ச்சிகளைச் சுகமாக்குவார். நெரிந்த நாணலை நிமிர்த்துவார். மங்கியெரிகிற திரியை ஒளிரச்செய்வார்.

எடுத்துக்காட்டு 1 = சமாரியப் பெண் யோவான் 4. ஆண்டவராகிய இயேசு ஒரு கிணற்றருகே தனியாக உட்கார்ந்திருக்கிறார். அப்போது ஒரு பெண் அந்தக் கிணற்றில் தண்ணீர் மொள்ள வருகிறாள். அவர் யாரென்று அவளுக்குத் தெரியாது. ஆனால், அவள் யாரென்று அவருக்குத் தெரியும். அவர் ஒரு சாதாரணமான யூத வாலிபன் என்று நினைத்து அவள் அவருடன் பேசுகிறாள். உரையாடிக்கொண்டிருக்கும்போது, இயேசு அவளிடம், "போய், உன் கணவனை இங்கு அழைத்துவா," என்றார். அவள், "எனக்குக் கணவன் இல்லை," என்று பதில் சொன்னாள். இயேசு, "உனக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள். நீ இப்போது ஒருவனோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாய். ஆனால், அவன் உன் கணவன் இல்லை. நீ சொன்னது சரிதான்," என்றார்.

நாம் கொஞ்சம் கற்பனைசெய்ய வேண்டும். இந்தப் பெண்ணுக்கு ஐந்துமுறை திருமணம் ஆகியிருக்கிறது. இப்போது ஆறாவதாக ஒருவனுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். இருவரும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? திருமணம் செய்துகொள்ள விரும்பாதது அவனா அல்லது அவளா?

ஐந்து கணவர்களில் எத்தனைபேர் இறந்துபோனார்கள், எத்தனைபேர் விவாகரத்து செய்தார்கள்? விவகாரத்துசெய்தது அவளா அல்லது அவர்களா? அவள் எத்தனைபேரை விவகாரத்துசெய்தாள் அல்லது எத்தனைபேர் அவளை விவகாரத்துசெய்தார்கள்?

அவள் ஏன் ஐந்துமுறை திருமணம் செய்தாள்? 6ஆவது நபரைத் திருமணம் செய்யாமல் ஏன் அவரோடு வாழ்ந்துகொண்டிருந்தாள் என்று தெரியாது. ஆனால், ஒன்று நிச்சயம். அவளுடைய உணர்ச்சிகள் எவ்வளவு காயப்பட்டிருக்கும்! அவளுடைய உள்ளம் எவ்வளவு உடைந்திருக்கும்! வலியும், வேதனையும், வருத்தமும், மூட்டை மூட்டையாக இருந்திருக்கும்! அவள் ஒரு நெரிந்த நாணல், ஒரு மங்கியெரிகிற திரி.

அவள் ஊருக்குச் சென்று, "நான் செய்த எல்லாவற்றையும் ஒருவர் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள்," (வ. 29) என்று ஊராரிடம் சொன்னாள். இந்த வசனத்திலிருந்து, யோவான் நற்செய்தியில் நாம் வாசிப்பதைவிட, அவர் அவளைப்பற்றிய அதிகமான விவரங்களைச் சொல்லியிருப்பார் என்றே தெரிகிறது. அவள் செய்த எல்லாவற்றையும் அவர் சொன்னார்,

குணமடைய வழி

1. தற்போதைய நிலைமையை ஒப்புக்கொள்ளுதல்

இயேசு, "'எனக்குக் கணவனில்லை என்று நீ சொன்னது சரிதான். கணவர் உனக்கு ஐவர் இருந்தனர். இப்பொழுது உன்னோடிருப்பவனோ உன் கணவன் அல்லன். நீ சொன்னது உண்மையே" என்று மிகவும் சாதாரணமாகச் சொன்னார். அவர் தீர்ப்பிடவில்லை, கண்டனம்பண்ணவில்லை, குற்றவாளியெனத் தீர்க்கவில்லை, தண்டிக்கவில்லை, தம் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவில்லை. அவள் தன்னோடு பேசிக்கொண்டிருக்கும் தருணத்தில் அவளுடைய நிலைமை என்ன என்று அவர் சொல்லுகிறார். அவ்வளவே. இதுவே முதல் படி.

தற்போதைய நம் நிலைமையைக்குறித்து தேவனுக்குமுன்பாக நாம் உண்மையும் உத்தமுமாக இருக்க வேண்டும். அவருடைய பதிலில் எந்த அபிப்பிராயமோ, உணர்ச்சியோ, இல்லை. அவர் உண்மையைச் சொன்னார். அவளுடைய நிலைமையை அவளும் ஒப்புக்கொள்கிறாள், அவரும் ஒப்புக்கொள்கிறார். எந்த மேற்பூச்சும் இல்லை, பகட்டும் இல்லை, விளக்கமும் இல்லை. அவர் உண்மையைச் சொல்லுகிறார். அவளும் உண்மையை ஒப்புக்கொள்ளுகிறாள்..

2. வெளிப்பாட்டிற்குப்பின் வரலாற்றை மாற்றியமைத்தல்

ஐந்துமுறை திருமணம், ஆறாவது ஒரு மனிதனுடன் சேர்ந்து ஒரு வாழ்க்கை. இந்தக் கட்டத்தில் தன் வாழ்க்கையைக்குறித்துத் தேவன் என்ன நினைப்பார் என்ற எண்ணம் அவளுக்கு இருந்திருக்காது. ஐந்து கணவர்களை இழந்திருக்கிறாள். அவர்கள் இறந்திருக்கலாம் அல்லது விவகாரத்துசெய்திருக்கலாம். இரண்டும் நிகழ்ந்திருக்கலாம். முதல் கணவனை இழந்து, இரண்டாவது திருமணம் செய்தபோது தன் கவலைகளும், காயங்களும் முடிந்துவிடும் என்று அவள் நினைத்திருக்கலாம். ஆனால் அது ஒரு தொடர்கதைபோல் தொடர்ந்தது.

உள்ளம் உடைந்திருக்கும், உணர்ச்சிகள் காயப்பட்டிருக்கும், வேதனைகள் பெருகியிருக்கும், தனிமை வாட்டியிருக்கும். ஆரம்பத்தில் தேவனைப்பற்றிய எண்ணம் எழுந்திருக்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அந்த எண்ணம் அடியோடு அழிந்திருக்கும். தேவனைப்பற்றிய எண்ணம் எழுந்திருந்தாலும், தேவனுக்குத் தன்மேல், தன் வாழ்க்கையின்மேல், எந்த அக்கறையும், கரிசனையும், இல்லை என்ற எண்ணம்தான் மேலோங்கியிருந்திருக்கும். ஆறாவது ஒரு நபரோடு சேர்ந்து வாழ்ந்தபோது, தேவனைப்பற்றி அவளுக்கு எந்தக் கவலையும் இருந்திருக்காது.

இதுதான் நிதர்சனமான உண்மை. அவள் ஒரு மனைவியாக, ஒரு தாயாக, இருக்க விரும்பியிருப்பாள். அவள் தன் வாழ்க்கையில் சமாதானத்தையும், இளைப்பாறுதலையும், நிலைத்தன்மையையும் விரும்பியிருப்பாள். அவளுக்குள் பல கேள்விகள் இருந்திருக்கும். இயேசு அவளைப்பற்றிய சில உண்மைகளைச் சொன்னவுடன், அவள் பேச்சை உடனே மாற்றுகிறாள். ஆவிக்குரிய காரியங்களைப் பேச ஆரம்பித்துவிடுகிறாள் (வ. 20). அவள் ஆவிக்குரியவள்; ஆனால், குழப்பத்தில் இருந்தாள்.

தன் சொந்த முயற்சியால்தான் தான் வாழ்க்கையில் இந்த நிலையையாவது எட்டியிருப்பதாக அவள் நினைத்தாள். அவள் உறுதியான, உள்ளாக உரம் படைத்தவள். வாழ்க்கையின் சவால்களையெல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு முன்னேறி வந்திருக்கிறாள். "தேவன் எங்கே? என் வாழ்க்கையில் தேவன் எங்கே போனார்? அவர் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? அதைப்பற்றி எனக்கென்ன கவலை? என் வாழ்க்கையில் அவருக்கு அக்கறையில்லை, கரிசனையில்லை என்று நிரூபித்திருக்கிறார். இந்த ஆறாவது நபரை எனக்குப் பிடித்திருக்கிறது. இவனோடு வாழ்க்கையைத் தொடர்வோம்” என்ற எண்ணத்தோடு அவளுடைய வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.

மாற்றியமைத்தல் - இயேசு எல்லாவற்றையும் பார்த்தார், இயேசு அங்கே இருந்தார்

இயேசு காரியங்களை வெளிப்படுத்தியவுடன், அவள் தன் வாழ்க்கையை வித்தியாசமாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தாள். "நான் கடந்து வந்த பாதை இவருக்குத் தெரியும். என் உணர்ச்சிக் கொந்தளிப்பு இவருக்குத் தெரியும். எனக்குள் இருக்கும் கேள்விகள் இவருக்குத் தெரியும். நான் 5 கணவர்களுடன் வாழ்ந்ததும், இப்போது ஒருவருடன், திருமணம் செய்யாமல் கூடி வாழ்வதும் இவருக்குத் தெரியும். என்னைப்பற்றிய எல்லாவற்றையும் சொன்னாரே! என் வாழ்க்கையைப்பற்றிய என் எண்ணத்தை நான் இப்போது மாற்ற வேண்டும். என் வாழ்க்கையில் தேவன் இல்லை, தேவனுக்கு இடம் இல்லை, என்ற என் எண்ணத்தை நான் இப்போது மாற்ற வேண்டும்," என்ற கட்டத்துக்கு அவள் வந்திருந்தாள்.

யாப்போக்கு ஆற்றங்கரையில் யாக்கோபும் தேவனும்.

யாக்கோபின் கிணற்றருகே சமாரியப் பெண்ணும், ஆண்டவராகிய இயேசுவும்.

நெரிந்த நாணல்களுக்கு, மங்கியெரிகிற திரிகளுக்கு, தேவனோடு இப்படிப்பட்ட அனுபவம் வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் வரலாற்றைப்பற்றிய தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்து மாற்றியமைப்பார்கள். இந்த வரலாற்றின் ஆரம்பம் தேவன், இந்த வரலாற்றின் மையம் தேவன், இந்த வரலாற்றின் முடிவு தேவன். இந்த வரலாற்றின் எல்லா இடங்களிலும், எல்லா நேரமும் அவர் இருக்கிறார்.

உணர்ச்சிரீதியாகக் காயப்பட்ட நெரிந்த நாணல்கள் தங்கள் வரலாற்றைப்பற்றிய தங்கள் அபிப்பிராயத்தை மாற்றியமைப்பதற்காகத் தேவன் அவர்களைப்பற்றிய உண்மைகளை, விவரங்களை, அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.

ஆண்டவராகிய இயேசு ஒருவனைச் சந்திக்கும்போது அவனுடைய தற்போதைய உண்மையான நிலைமையை--கடிந்துகொள்ளாமல், கண்டனம்செய்யாமல், தீர்ப்பிடாமல், அபிப்பிராயம் சொல்லாமல்--முதலாவது, உள்ளதை உள்ளபடி அவனுக்குத் தெரிவிக்கிறார், வெளிப்படுத்துகிறார், ஒப்புக்கொள்ளுகிறார். இதற்கு

எடுத்துக்காட்டு

1. சமாரியப் பெண்

இயேசு, "'எனக்குக் கணவனில்லை என்று நீ சொன்னது சரிதான். கணவர் உனக்கு ஐவர் இருந்தனர். இப்பொழுது உன்னோடிருப்பவனோ உன் கணவன் அல்லன். நீ சொன்னது உண்மையே." அவர் உடைந்த உள்ளத்தைக் குணப்படுத்துகிற அநேக நிகழ்ச்சிகளில் இந்த மாதிரியைக் காணலாம்.

குணமடைய முதல் வழி : நம் தற்போதைய நிலைமையை ஒப்புக்கொள்ளுதல்.

வேடிக்கை என்னவென்றால் பல பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உலகம் இன்று இதை ஓர் யுக்தியாகப் பயன்படுத்துகிறது. “உன் தற்போதைய நிலைமையை நீ ஒப்புக்கொள். உன் வாழ்க்கைக்கு நீதான் பொறுப்பு,” என்பது அவர்களுடைய கோஷம்.

அதுபோல, "இயேசுவை உன் வாழ்க்கைக்குள் வரவிடு. அவர் உனக்காக எல்லாவற்றையும் செய்வார்," என்று மேலெழுந்தவாரியான, ஒரு வகையான முற்போக்கான, தடவிக்கொடுக்கிற நற்செய்தி இன்று பல இடங்களில் பிரசங்கிக்கப்படுகிறது. இது கிறிஸ்துவின் நற்செய்தியல்ல, சமூக நற்செய்தி.

சமாரியப் பெண்ணுக்கு எவ்வளவோ கசப்பான அனுபவங்கள் இருக்கும்! மறக்கமுடியாத நினைவுகள் இருக்கும்! அவளுடைய உள்ளம் உடைந்திருக்கும்! வலிகளும், வேதனைகளும், துக்கங்களும், துயரங்களும் பெருகியிருக்கும்! தன்னைப்பற்றியும், தன் வாழ்க்கையைப்பற்றியும் ஒரு விதமான கருத்து அவளிடம் இருக்கும். "நீர் இவைகளையெல்லாம் பார்த்தீர் என்றால், இவைகளெல்லாம் உமக்குத் தெரியும் என்றால், நான் ஐந்துமுறை திருமணம் செய்ததும், ஆறாவது ஒருவனுடன் சேர்ந்து வாழ்வதும் உமக்குத் தெரியும் என்றால், நீர் ஏன் என் வாழ்க்கையில் தலையிடவில்லை? நான் இந்தப் பாடுகளின்வழியாகப் போகையில் நீர் எங்கேயிருந்தீர்? என்பதுபோன்ற கேள்விகள் இருக்கும். ஆனால், இயேசு அவளுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை; எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

உள்ளம் உடைந்தவன் இந்தப் பூமியிலேயே தன்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது என்பதை உணர வேண்டும். ஆரோக்கியமான உள்ளம் உடையவன் ‘ஏன், எதற்கு, எப்போது, எப்படி, எங்கே, என்ன, யார்’போன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்காவிட்டாலும், தன் ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறுவான். இவன் "இந்தக் கேள்விகளுக்கு இந்தப் பூமியில் பதில் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; பரலோகத்தில் பதில் கிடைத்தால் போதும்," என்ற மனப்பாங்குடன் தன் வாழ்க்கையைத் தொடர்வான். ஆனால், நெரிந்த நாணல்களும்,மங்கியெரிகிற திரிகளும் ‘ஏன், எதற்கு, எப்போது, எப்படி, எங்கே, என்ன, யார்’போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவார்கள். விடை கிடைக்காவிட்டால் கேள்விகளிலேயே தேங்கிவிடுவார்கள், தங்கிவிடுவார்கள்.

பல கேள்விகளுக்குப் பரலோகம்தான் பதில் சொல்லும். அதுவரை காத்திருக்க வேண்டும்.

ஆரோக்கியமான உள்ளம் வேண்டுமானால், விடை கிடைக்காத கேள்விகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, விசுவாசத்தோடு முன்னேற வேண்டும். "ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்," (2 தீமோ. 1:12) என்ற பவுலின் வார்த்தைகள் நம் அறிக்கையாக இருக்க வேண்டும்.

அவள் இயேசுவைச் சந்தித்த அந்தத் தருணத்தில், அவர் அவளுடைய கடந்த காலத்தில் கவனம் செலுத்தாமல், இப்போது, இந்தத் தருணம், இங்கே, இந்த உரையாடல் என்பதில் கவனம் செலுத்துகிறார். அவள் தன் கடந்த காலத்தைப்பற்றிப் பேசவோ, கேள்விகள் கேட்கவோ, காயப்பட்ட உணர்ச்சிகளை விவரிக்கவோ, கண்ணீரோடு கதறவோ அவர் அனுமதிக்கவில்லை. அவருடைய பெயர் "நான் இருக்கிறேன்." அவர் இருந்தார் அல்லது இருப்பார் என்பதைவிட அவர் ‘இப்போது, இங்கே, இந்தத் தருணத்தில், இந்த உரையாடலில்’ இருக்கிறார்.

நான் ‘இப்போது, இங்கே, இந்தத் தருணத்தில் அவருடைய பிரசன்னத்தில்’ இருக்கும்போது கடந்தகால ‘ஏன், எதற்கு, எப்போது, எப்படி, எங்கே, என்ன, யார்’போன்ற கேள்விகள் பொருளற்றவைகளாகிவிடுகின்றன. அவள் ஏன் ஐந்துமுறை திருமணம் செய்தாள் என்றும், ஆறாவது நபரை ஏன் திருமணம் செய்யவில்லை என்றும் அவர் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.

3. குணமடைய மூன்றாவது வழி

தாமே மேசியா என்று அவர் சொன்னவுடன் அவள் தண்ணீர் குடத்தைக் கிணற்றருகே வைத்துவிட்டு ஊருக்குள் சென்று நடந்த எல்லாவற்றையும் சொன்னாள். ஊரார் வந்து அவரைச் சந்தித்துத் தங்கள் ஊரில் தங்குமாறு வேண்டினர். அவரும் அங்கு இரண்டு நாட்கள் தங்கினார்.

அவர் அவளை அவள் இருந்த நிலைமையில் ஏற்றுக்கொண்டார். அவள் செய்த எல்லாவற்றையும் இயேசு சொன்னவுடன் அவள் தன்னையும், தன் வாழ்க்கையையும்பற்றிய கருத்தை மாற்ற ஆரம்பித்துவிட்டாள். அவள் தன் வரலாற்றைப்பற்றி மாற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். அதன்பின், அவள் தான் பெற்ற வெளிப்பாட்டையும், தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தையும் பிறரிடம் போய்ச் சொன்னாள்.

நம் இன்றைய, இப்போதைய, நிலைமையை ஒப்புக்கொள்ளவேண்டும். நம் நிலைமையை, வாழ்க்கையை, நாம் சரியாகப் புரிந்துகொள்வதற்குத் தேவன் வெளிப்பாட்டைத் தரும்போது நம் எண்ணத்தை, கருத்தை, அபிப்பிராயத்தை, மாற்ற வேண்டும். தேவனிடமிருந்து பெற்ற வெளிப்பாட்டைத் தொடர்ந்து நாம் எப்படி முன்சென்றோம் என்று பறைசாற்றவேண்டும்.

4. குணமடைய நான்காவது வழி

அவர் கிணற்றருகே சந்தித்த பெண் அந்த ஊரில்தான் வாழ்ந்தாள். அவள் இப்போது புதியவள்! புதிய வாழ்வு! புதிய பிறவி! புதிய ஆரம்பம்! புதிய பார்வை! புதிய புரிந்துகொள்ளுதல்!

அவள் ஆறாவது நபரைத் திருமணம் செய்யாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறாளே! அவள் என்ன செய்யப்போகிறாள்? திருமணம் செய்யப்போகிறாளா அல்லது அப்படியே தொடரப்போகிறாளா அல்லது பிரிந்துவிடப்போகிறாளா? அவளே தீர்மானிக்கட்டும், முடிவெடுக்கட்டும், என்று அவர் விட்டுவிட்டார். இதை அவள்தான் தீர்மானிக்க வேண்டும், முடிவுசெய்ய வேண்டும். அவளுக்காக அவர் தீர்மானிக்கமாட்டார், முடிவுசெய்யமாட்டார். தேவன், தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருப்பார். இன்றைக்கும் அவர் நம்மோடு இப்படித்தான் இடைப்படுகிறார்.

நாம் என்ன செய்யப்போகிறோம், என்ன முடிவு செய்யப்போகிறோம், என்ன தீர்மானம் எடுக்கப்போகிறோம், என்று அவர் பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருப்பார்.

"லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்" (ஆதி. 29:31). கர்த்தர் பார்த்துக்கொண்டிருந்தார்.

"உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக. கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்" (நீதி. 24:17-18). கர்த்தர் பார்த்துக்கொண்டிருப்பார்.

"அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று. அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார்" (லூக். 22:60-61). கர்த்தர் பார்த்தார்.

பெரும்பாலும் அவர் நம் வாழ்கையின் நிகழ்வுகளைவிட, நிகழ்வுகளுக்கு நாம் கொடுக்கும் பதிலில், மறுமொழியில், மாறுத்தரத்தில்தான் அதிகமாக இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவருடைய எந்த வற்புறுத்துதலும் இல்லாமல், நாமே தீர்மானிப்பதற்கு அவர் நம்மை விட்டுவிடுவார். தேவனுக்கேற்ற தீர்மானம் எடுப்பதற்கு நமக்குத் தெரியும். நாம் எடுக்கும் சரியான தீர்மானத்தில் அவர் இருப்பார்.

நமக்காகத் தேவன் தீர்மானிக்க வேண்டும் என்ற நம் விருப்பம்

"எனக்காகத் தேவன் தீர்மானிப்பார், முடிவெடுப்பார்" என்ற ஒருவகையான போதனை பரவலாகப் பிரசங்கிக்கப்படுகிறது.

"தேவனை நான் இழக்க விரும்பவில்லை. தேவனுக்குப்பதிலாக நான் செயல்பட விரும்பவில்லை" என்று தேவ மக்கள் சொல்லும்போது, அது கேட்பதற்கு நன்றாக இருக்கும்; அது ஆவிக்குரியதுபோல், அவர்கள் மிகவும் ஆவிக்குரியவர்கள்போலவும் தோன்றும். ஆனால், அது உண்மை இல்லை. உண்மை என்னவென்றால் தீர்மானம் எடுப்பதற்கு, முடிவெடுப்பதற்கு, அவர்கள் பயப்படுகிறார்கள்; மாற்றத்தைக்குறித்து அவர்கள் பயப்படுகிறார்கள்; எதிர்காலத்தைக்குறித்து அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்களுடைய தற்போதைய நிலைமை பரிதாபமாக இருந்தாலும், ஆரோக்கியமாக இல்லாவிட்டாலும், அவர்கள் அதில் பழகிவிட்டதால், அவர்களுக்கு அது மிகவும் பரிச்சயமாகிவிட்டதால், அதையே தொடர விரும்புகிறார்கள். அதில் ஒரு வகையான ஆறுதலும், திருப்தியும், அடைகிறார்கள். இதுதான் உண்மை.

உள்ளம் உடைந்தவன்--முறிந்த நாணல், மங்கியெரிகிற திரி--தான் தன்னந்தனியாக இருப்பதாக நினைக்கிறான். அப்படியல்ல. தேவன் நம் கண்களுக்குத் தெரியாமல் பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஒருநாள் ஆண்டவராகிய இயேசு தேவாலயத்தில் போதித்துக்கொண்டிருந்தார். அப்போது வேதவல்லுநர்களும், பரிசேயர்களும் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை (யோவான் 8:3-11) இழுத்துக்கொண்டுவந்து, அவருக்குமுன்பாக, மக்களுக்கு நடுவில் நிறுத்தினார்கள். "ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்" (லேவி. 20:10) என்ற சட்டத்தின்படி விபசாரனும் விபசாரியும் கொலைசெய்யப்படவேண்டும். ஆனால், மதவாதிகள் விபச்சாரியை மட்டும் பிடித்துக்கொண்டுவந்திருக்கிறார்கள். விபச்சாரன் எங்கே? அவனை ஏன் விட்டுவிட்டார்கள்?

தேவனுடைய வார்த்தைக்கேற்ப தங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்குப்பதிலாக, தங்களுக்கேற்ப தேவனுடைய வார்த்தையை மாற்றுவதில் மதவாதிகள் கில்லாடிகள்.

"மோசேயின் சட்டப்படி இவளைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். நீர் என்ன சொல்லுகிறீர்?" என்று அவர்கள் கேட்டார்கள். “கல்லெறியுங்கள்” என்று சொன்னால், அவர் இரக்கமற்றவர் என்று குற்றம் சாட்டலாம்; “கல்லெறியக்கூடாது” என்று சொன்னால், அவர் மோசேயின் சட்டத்தை மீறுகிறார் என்று குற்றம் சாட்டலாம். இதுதான் அவர்களுடைய சதி. ஆனால், இயேசுவோ குனிந்து, விரலாலே தரையில் எழுதத்தொடங்கினார்.

அவர் தரையில் என்ன எழுதியிருப்பார்!

கூடாரப் பண்டிகை என்ற ஜீவத் தண்ணீர் பண்டிகை கொண்டாடிய ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் "இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்" (எரேமியா 17:13) என்ற வசனத்தை அவர்கள் வாசிப்பார்களாம். இந்தப் பெண் இந்தப் பண்டிகைக்கு அடுத்த நாளில் பிடிக்கப்பட்டாள் (யோவான் 8:2).

ஒருவேளை அவர் அவள்மேல் குற்றம்சாட்டியவர்களின் பாவங்களையும், பெயர்களையும் தரையில் எழுதிக்கொண்டிருந்தாரோ! அதை அவர்கள் பார்த்தார்களோ!

அவர்கள் அந்தக் கேள்வியைத் திரும்பத்திரும்பக் கேட்டதால், அவர் நிமிர்ந்து பார்த்து, "அவள்மேல் கல்லெறியுங்கள். ஆனால், உங்களில் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்," என்று சொல்லிவிட்டு, மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர் சொன்னதைக் கேட்டதும், தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒருவர்பின் ஒருவராகப் போய்விட்டார்கள். கடைசியில் இயேசுமட்டும் இருந்தார்; அப்பெண்ணோ அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தாள். இயேசு, "உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா?" என்றார். அதற்கு அவள், "இல்லை, ஆண்டவரே," என்றாள்.

ஆரோக்கியமான உள்ளம்-அதே நான்கு படிகள்

  1. தற்போதைய நிலைமையை உணர்வதும், ஒப்புக்கொள்வதும்.
  2. தேவனுடைய வெளிப்பாட்டின் அடிப்படையில் நம் வாழ்க்கையைப்பற்றிய நம் எண்ணத்தை மாற்றியமைத்தல்.
  3. பெற்றனுபவித்த உண்மையைப் பறைசாற்றுதல்.
  4. தீர்மானம் எடுத்தல்.

தேவனும் யாக்கோபும் யாப்போக்கு ஆற்றங்கரையில் **தனித்திருந்தார்கள். **

இயேசுவும் சமாரியப் பெண்ணும் யாக்கோப்பின் கிணற்றருகே **தனித்திருந்தார்கள். **

இயேசுவும் விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணும் தேவாலயத்தில் தனித்திருக்கிறார்கள்.

அவர் அந்தப் பெண்ணைக் கடிந்துகொள்ளவில்லை, கண்டனம் செய்யவில்லை, ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லை, அபிப்பிராயம் சொல்லவில்லை. அவளுடைய தற்போதைய நிலைமையை அவர் ஒப்புக்கொள்ளுகிறார்.

படைத்த தேவனும், படைக்கப்பட்ட மனிதனும் ஒருநாள் ஒருவரையொருவர் நேருக்குநேர் சந்திக்கும்போது இதுதான் நடக்கும், நடக்க வேண்டும். நம்மை நம் நிலைமையிலேயே அவர் ஏற்றுக்கொள்ளுகிறார். நாம் எங்கு, எப்படி, எந்த நிலைமையில் இருந்தாலும் சரி-அங்கு, அப்படி, அந்த நிலைமையில் நம்மைச் சந்திக்கிறார்.

அவள் எப்படி இந்தச் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டாள்? அவர்கள் ஏன் அவளுடைய காதலனை இழுத்துவரவில்லை? விபசாரத்தில் மாட்டிக்கொண்டால் கல்லெறிந்து கொல்வார்கள் என்று தெரிந்தும் அவள் ஏன் இப்படிச் செய்தாள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பரலோகம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இயேசு, "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே," என்று சொன்னார்.

"நீ போ" என்பதன் என்ன பொருள்? மரண தண்டனையிலிருந்து விடுதலை என்று பொருள். அவள் தன் வாழ்க்கையைத் திரும்ப ஆரம்பிக்க சுதந்திரம் என்று பொருள்.

அவளுடைய உள்ளமும், உணர்ச்சிகளும் எப்படி இருந்திருக்கும்! அவளுடைய அந்தரங்கம் இப்போது வெளியரங்கமாகிவிட்டது. அவளுடைய இரகசிய விவகாரம் இப்போது அம்பலமாகிவிட்டது. ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்த காரியம் இப்போது ஊருக்கே தெரிந்துவிட்டது. அவளுடைய மதிப்பு, மரியாதையெல்லாம் இப்போது காற்றோடு போய்விட்டது. அவள் இனிமேல் மதிப்பையும், மரியாதையையும் சம்பாதிக்க வேண்டும். பல வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு அவளைப்பற்றிய கிசுகிசு செய்திகள் பரவிக்கொண்டிருக்கும். சிலர் ஒருவேளை அவளுடைய முகத்துக்கு நேரேகூடப் பேசலாம். சிலர் முதுகுக்குப்பின்னால் பேசக்கூடும். ஆனால் அவள் இந்தப் பாதையின்வழியாகப் போய்த்தான் தன் வாழ்க்கையைத் திரும்பக் கட்டியாக வேண்டும். அவளுடைய முதுகெலும்பு உறுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் தாக்குப்பிடிக்க முடியும். இல்லையென்றால் உடைந்துபோவாள்.

"இனிப் பாவஞ்செய்யாதே" என்பதன் பொருள் என்ன? “உன்னுடைய இப்போதைய விவகாரத்தை முறித்துவிடு. போ, ஆனால், உன் பழைய வாழ்க்கைக்கு அல்ல. மாறாக அதை முறித்துவிட்டு, உன் வாழ்க்கையைத் திரும்பக் கட்டியெழுப்பு,” என்பதே அதன் பொருள்.

இருவரும் தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டார்கள். இருவரும் திருமணம் ஆனவர்களாக இருக்கலாம் அல்லது ஒருவருக்குத் திருமணம் ஆகியிருக்கலாம். ஒருவேளை அவள் அவனுடைய துணைவியாக இருக்கலாம். அவளுக்கு அவன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பையும், ஆடம்பரமான ஒரு காரையும், மேலும் பல வசதிகளையும் செய்து கொடுத்திருக்கலாம்.

"நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. என் வாழ்க்கைக்குப் பொருள் தந்தவளே நீதான். நீதான் எனக்கு எல்லாமே." என்றெல்லாம் அவன் சொல்லியிருப்பான். ஆனால், அது ஒரு பொருட்டல்ல. "இனி பாவம் செய்யாதே" ஆலோசனையல்ல. கட்டளை.

இவள் இன்று வாழ்ந்தால்

ஒருவேளை இந்தப் பெண் இன்று வாழ்ந்தால், இந்த உறவை முறிப்பதற்கு அவள் ஓர் உளவியல் மருத்துவரைப் போய்ப் பார்க்கக்கூடும் அல்லது யாராவது "உள்ளம் குணமடையும் பயிலரங்கம்" நடத்தினால் அதில் போய்ச் சேரக்கூடும் அல்லது “உன்னை விபசாரத்தின் ஆவி பிடித்திருக்கிறது. எனவே வல்லமையுள்ள ஓர் ஊழியக்காரரிடம் போய் அந்த ஆவியை விரட்ட வேண்டும்,” என்று யாராவது ஆலோசனை சொல்லியிருக்கக்கூடும் அல்லது “இது உன் முற்பிதாக்கள் செய்த பாவத்தின் விளைவு. எனவே, நீ அந்தப் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்" என்று யாராவது சொல்லியிருக்கக்கூடும்.

ஆண்டவராகிய இயேசு இப்படிப்பட்ட எந்த வழிமுறைகளையும் பரிந்துரைக்கவில்லை. பழைய உறவை முறித்துவிடு, துறந்துவிடு, விட்டுவிடு, ஒழித்துவிடு, அழித்துவிடு, வெட்டிவிடு, உடைத்துவிடு.

போ, இனி பாவம் செய்யாதே.

இயேசு ஜீவத் தண்ணீர் ஊற்று

ஜீவனுக்குப் போகும் பாதை பெரும்பாலும் முரண்பாடான உணர்ச்சிகளுக்கும், கடினமான தீர்மானங்களுக்கும் பின்னால் மறைந்திருக்கிறது. ஆனால், நம்மிடம் தேவனுடைய வெளிப்பாடு இருந்தால், நம் வாழ்க்கையில் நீதியை நிலைநாட்ட விரும்பினால், முதலாவது நம் இருதயத்தில் அதை முடிவுசெய்ய வேண்டும். நம் கடினமான தீர்மானங்கள் நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். இயேசு சந்தித்த மக்களைப் பார்க்கும்போது அவர் அவர்களுக்கு வல்லமை அளித்து, அவர்கள் வாழ்க்கையை அவர்களே திரும்பக் கட்டட்டும் என்று விட்டுவிட்டார்.

அவர் யார், அவர் என்ன செய்தார், அவர் என்ன கட்டளையிட்டார் என்பதற்கு நாம் சாட்சிகள். நற்செய்தியை நாம் அறிவிப்பதற்குக் காரணம் அது வெறுமனே ஓர் சத்தியம் என்பதால் மட்டும் அல்ல. நம்மை இரட்சித்து, மறுசாயலாக்குகிற அதன் வல்லமையை நாம் அனுபவித்திருக்கிறோம். ஆகையால், நாம் ஓர் உண்மையை மட்டும் பறைசாற்றவில்லை, நாம் அதற்குச் சாட்சிகளாகவும் இருக்கிறோம்.

நாம் அவரையும், நம்மை மறுசாயலாகும் அவருடைய ஜீவ வல்லமையையும் அறிந்திருக்கிறோம். ஆகையால், நாம் நற்செய்தி அறிவிக்கிறோம், ஞானஸ்நானம் கொடுக்கிறோம், அறிவுறுத்துகிறோம், சீடர்களாக்குகிறோம்.