By மெர்லின் இராஜேந்திரம்
“நீ...கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணு” (யாத். 40:2). “கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று” (யாத். 40:34).
“அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நம்மிடையே கூடாரமடித்தார். அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவான் 1:14).
“மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்;: அது, இதோ மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது. அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார். அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள். தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்” (வெளி. 21:3).
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறி கானானுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது, ஒருநாள் தேவன் இஸ்ரயேல் மக்களிடையே, சபையாரிடையே, தமக்கு ஒரு கூடாரத்தை அமைக்கும்படி மோசேயிடம் சொல்லுகிறார். மகிமையின் தேவன் சாதாரணமான மனிதர்களிடையே வாசம்பண்ண விரும்பினார். மனித வரலாற்றில் இது மிகவும் முக்கியமான காரியம். வானங்களும், வானாதி வானங்களும் அவரைக் கொள்ளமுடியாது. மனிதன் கட்டுகிற ஆலயம், கூடாரம், எம்மாத்திரம்? தேவன் மெய்யாகவே கூடாரத்தில் வாசம்பண்ணுவாரோ? (1 இரா. 8:27). மகிமையின் தேவன் மனிதர்களிடையே வருகிறார். தேவன் தம் சாட்சியை இந்தப் பூமியில் நிறுவ விரும்பினார். தம்மை வெளியாக்குவதற்காக, வெளிக்காட்டுவதற்காக, வெளிக்காண்பிப்பதற்காக, வெளிப்படுத்துவதற்காக தேவன் இந்தப் பூமியில் தமக்காக ஒரு கூடாரத்தை அமைக்க விரும்பினார். இது அவருடைய நோக்கம். தம் மகிமையை வெளிப்படுத்த தமக்கு ஒரு பாத்திரம், ஒரு கூட்டுப்பாத்திரம், வேண்டும் என்பது அவருடைய விருப்பம். எனவே, இந்தக் கூடாரம் அவரை, அவருடைய மகிமையை, வெளிக்காண்பிக்கிற ஒரு கருவி, ஊடகம்.
இந்தக் கூடாரம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்குறிக்கிற ஓர் அடையாளம், ஒரு மாதிரி. தேவனுடைய வாசஸ்தலம் மனிதர்களிடையே இருக்கிறது. “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யோவான் 1:18). இயேசுவே தேவனின் வெளியாக்கம். அதுபோல கூடாரமாகிய இயேசு தேவனின் வெளியாக்கம். இந்தக் கூடாரம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சகல அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சித்திரம். இது அவரைப்பற்றிய பெருவாரியான காரியங்களைச் சித்திரிக்கிற, விவரிக்கிற ஒரு பிரதிநிதித்துவம். கானான், கன்மலை, மன்னா, மேகத்தூண் போன்றவைகள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு அடையாளங்களாக இருப்பதுபோல் கூடாரமும் ஓர் அடையாளமே.
இவைகளை நாம் எழுத்தின்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. “எழுத்து கொல்லுகிறது. ஆவியோ உயிர்ப்பிக்கிறது” (2 கொரி. 3:6). கூடாரம் எழுத்துக்குரியதாயிராமல் ஆவிக்குரியதாயிருக்கிறது. மோசே கூடாரத்தைக் கட்டியதுபோல நாமும் ஒரு கட்டிடத்தைக் கட்டவேண்டும் என்று எழுத்தின்படி எடுத்ததால்தான் இன்று தேவனுடைய மக்கள் பூமிக்குரிய கட்டிடங்களையும், கோயில்களையும், சபைகளையும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆவிக்குரிய வாசஸ்தலம் கட்டப்படுகிறது என்று எபேசியர் 2இல் பவுலும், ஆவிக்குரிய மாளிகை கட்டப்படுகிறது என்று 1 பேதுருவில் பேதுருவும் கூறுகிறார்கள்.
தேவ மக்களுடைய வாழ்க்கையும், சேவையும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், அதனுடன் தொடர்புடைய ஆவிக்குரிய, மதிப்புமிக்க பல கோட்பாடுகளையும் கூடாரத்தில் நாம் காணமுடியும்.
இஸ்ரயேல் மக்கள் தங்கள் நடுவே, தங்கள் பாளயத்தின் நடுவே, தேவனுடைய கூடாரத்தை, வாசஸ்தலத்தை, சாட்சியை நிறுவ வேண்டும், அமைக்க வேண்டும், கட்ட வேண்டும், கட்டியமைக்க வேண்டும் என்று மோசே சொன்னார். கர்த்தருடைய கூடாரத்தைக் கட்டும் வேலை ஓய்வு நாளில் தொடங்கியது (யாத். 35). ஊரும், பெயரும்தான் சபையின் தளம் என்று சாதிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். எந்த ஊரைத் தளமாகக்கொண்டு இஸ்ரயேல் மக்கள் கூடாரத்தைக் கட்டினார்கள்? ஓய்வு நாளில் அவர்கள் இந்த வேலையை ஆரம்பித்தார்கள். ஓய்வுநாளையும் எழுத்தின்படி எடுத்தால் பிரச்சினைதான். தேவன் தம் வேலைகளையெல்லாம் முடித்து ஓய்ந்திருந்தார். கிறிஸ்துவுக்குள் இளைப்பாறுகின்ற, ஓய்ந்திருக்கிற மக்களால் மட்டுமே தேவனுடைய சாட்சியைக் கட்டவும், கட்டியெழுப்பவும் முடியும். தாவீது கர்த்தருக்காக ஆலயம் கட்டவேண்டும் என்று விரும்பினான். ஆனால், கர்த்தர் அவனிடம், “நீ திரளான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைப் பண்ணினாய். நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட வேண்டாம். எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தப்பண்ணினாய். இதோ உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான். சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கப்பண்ணுவேன். அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவேன். அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்” (1 நாளா. 22:7-10) என்று தேவன் தாவீதிடம் சொன்னார். தேவனுடைய இளைப்பாறுதலை அனுபவிக்காத, அவர் செய்துமுடித்த வேலைகளில் திருப்தியுறாமல் அலைபாய்ந்துகொண்டிருக்கிறவர்களால் கர்த்தருடைய கூடாரத்தைக் கட்டமுடியாது. அந்த வேலையைச் செய்வதற்கு அவர்கள் தகுதியானவர்களல்ல. யுத்தங்கள் செய்து, இரத்தம் சிந்துபவர்கள் கர்த்தருடைய கூடாரத்தைக் கட்டுகிற எண்ணத்தை விட்டுவிடலாம். ஆண்டவராகிய இயேசு நமக்காக எல்லாற்றையும் செய்துமுடித்துவிட்டார் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இளைப்பாறுதலைக் குலைக்கும் காரியங்கள் பல வரலாம். குறிப்பாக பயம். இது எதிரியின் ஒரு பெரிய ஆயுதம். ஆனால், கூடாரத்தைக் கட்டுகிறவர்கள் கிறிஸ்துவுக்குள் அவருடைய இளைப்பாறுதலை அனுபவிக்க வேண்டும். ஓய்வுநாள் நாளையோ, நேரத்தையோ குறிக்கவில்லை. அது கிறிஸ்துவுக்குள் நம் நிலையைக் குறிக்கிறது. தேவன் தம் குமாரனில் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார். அவர் கல்வாரியில் செய்துமுடித்ததை நாம் உணரவேண்டும், பாராட்ட வேண்டும், அனுபவிக்க வேண்டும்,
கூடாரம் தேவனுக்குப் பிரியமானது, இன்பமானது, மகிழ்ச்சியானது என்று தெரிந்தவுடன் இஸ்ரயேல் சபையார் அனைவரும் மனமகிழ்ச்சியுடன் செயல்பட்டார்கள். “மனமுள்ளவன் எவனோ” (யாத். 35:5) என்றும், “மனப்பூர்வமுள்ள ஸ்தீரி” (வ. 22) என்றும், “மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்” (வ. 29) என்றும் வாசிக்கிறோம். கர்த்தரைப் பிரியப்படுத்துவதற்கு அவர்கள் முன்வந்தார்கள். அவர்களுடைய இருதயம் எழுப்புதலடைந்தது, அவர்களுடைய ஆவி கிளர்ந்தெழுந்தது, உற்சாகமடைந்தது (யாத். 35:21). அவர்கள் செயல்பட்ட விதத்தை விவரிப்பதற்கு மனமகிழ்ச்சி, மனவிருப்பம், மனமலர்தல், மனப்பூர்வம், உற்சாகம் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். தேவனோ, மோசேயோ இஸ்ரயேல் மக்களைக் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களிடையே தமக்கு ஒரு சாட்சி வெண்டும் என்ற தம் இருதய விருப்பத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அவ்வளவுதான். இதை அவர் அவர்களுக்குக் கட்டளையாகச் சொல்லவில்லை. மோசேயும் இதை வலியுறுத்தவில்லை, அவர்களைப் பலவந்தம் செய்யவில்லை. “மனமுள்ளவன் எவனோ அவன் அதைக் கொண்டுவரட்டும்,” என்றார். இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் மனமுவந்து செயல்பட்டார்கள். யாரும் யாரையும் பின்னாலிருந்து குத்தித்தள்ளவில்லை. “உன் கூடாரத்துக்குப் போ. உன் கூடாரத்தில் என்ன இருக்கிறது என்று பார், அதை எடுத்துக்கொண்டு வா, தேவனுக்காக ஏதாவது செய், தாமதிக்காதே, சீக்கிரம் போ,” என்று ஒருவனும் ஒருவனையும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களெல்லாரும் தானாகவே எழும்பினார்கள், முன்வந்துசெயல்பட்டார்கள்.
நாம் கிறிஸ்துவின் சாட்சியாக இருக்க வேண்டுமானால், கிறிஸ்துவின் கூடாரமாகிய சபையைக் கட்டவும், கட்டியமைக்கவும் வேண்டுமானால் இஸ்ரயேல் மக்களுடைய இந்தக் குணம் நமக்கு வேண்டும். தேவனுக்குக் கொடுப்பதை, சில சமயங்களில், நாம் பாக்கியமாகக் கருதுவதற்குப் பதிலாகப் பாரமாகக் கருதுவது துர்ப்பாக்கியமாகும். இது சுமப்பதற்கரிய பாரம் என்று எண்ணுவது தவறான பார்வை. இது தேவன் நம்மிடம் கோருவதோ, எதிர்பார்ப்பதோ அல்ல. தேவன் தம் இருதயத்தைத் திறந்துகாண்பிக்கிறார். தம் மக்கள் இதற்கு என்ன மறுமொழி கொடுப்பார்கள், பதில் தருவார்கள் என்று அவர் காத்திருக்கிறார்.
ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு அவர் விலகிக்கொள்கிறார். நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைச் சாப்பிட வேண்டாம் என்று சொன்னார். தீர்மானிக்கும் உரிமையை அவர் அவர்களுக்குக் கொடுத்துவிட்டார். அவர்களைப் பலவந்தம்பண்ணவில்லை, கட்டாயப்படுத்தவில்லை. நம் தேவன் அவ்வளவு பெருந்தன்மையுள்ளவர்.
கிறிஸ்துவின் சாட்சிக்காக நிற்கும்போது நம் இருதயம் இப்படி இருக்க வேண்டாமா? இது சுமையா சுகமா? பாரமா பரிசா? துன்பமா இன்பமா? துக்கமா மகிழ்ச்சியா? பேதுருவும், அவருடன் சிறைப்பட்டிருந்த மற்ற அப்போஸ்தலர்களும் “அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியால் சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப் போனார்கள்” (அப். 5:41). அவமானப்படுவதையும், அடிபடுவதையும் அவர்கள் பெருமையாகக் கருதினார்கள். பவுல் கூடாரமாகிய சபையைக் கட்டுவதற்குப் பெரிய விலை செலுத்தினார். ஆனால், அவர் அதைப் பாரமாகவோ, சுமையாகவோ, கருதினார் என்று வேதாகமத்தில் எங்கும் பார்க்க முடியாது. அதற்கு மாறாக, அவர் சந்தோஷப்பட்டார். “இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமான சபைக்காக என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்” (கொலோ. 1:24) என்று பவுல் தன்னைப்பற்றி கூறுகிறார். இதுதான் அவருடைய மனப்பாங்கு. அவருடைய வாழ்க்கையில் துன்பம், துக்கம், துயரம், வேதனை, வலி போன்ற அனுபவங்கள் எத்தனையோ இருந்தபோதும் கிறிஸ்துவின் சாட்சியை நிறுவுவதைத் தேவன் தனக்குத் தந்த சிலாக்கியமாக, பாக்கியமாக, கருதினார்.
நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பாருங்கள். அவர்தாம் இந்தப் பூமியில் தேவனுடைய சாட்சி, வெளியாக்கம். அவரே தேவனுடைய கூடாரம். முப்பத்துமூன்றரை ஆண்டுகள் அவர் இந்தப் பூமியில் கூடாரமடித்திருந்தார். ஒருவன் தேவனைச் சந்திக்க வேண்டுமானால் அவன் இயேசு கிறிஸ்துவிடம்தான் வர வேண்டும். அவர் பிதாவின் சித்தத்தைச் செய்வதற்காகவே இந்தப் பூமிக்கு வந்தார். “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிச் செய்யும்,” என்று ஜெபிக்கும் அளவுக்கு அவர் வியாகுலப்பட்டார். அவ்வளவு கடுந்துயரம்! ஆனாலும், பிதாவின் சித்தத்தைச் செய்வது அவருக்குப் பிரியமாயிருந்தது. “அப்பொழுது நான் இதோ, வருகிறேன். புஸ்தகச் சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது. என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்,” (சங். 40:8; எபி. 10:7) என்பது அவருடைய மனப்பாங்கு. தேவனைப் பிரியப்படுத்த, திருப்திப்படுத்த, மகிழ்ச்சியாக்க நாம் ஒரு விலை கொடுத்தாக வேண்டும். ஆனாலும், அது மகிழ்ச்சியானது, இன்பமானது. இதனால் தேவன் மகிழ்கிறார், திருப்தியாகிறார், அவருடைய நோக்கம் நிறைவேறுகிறது என்ற நிச்சயம் இருக்கும்போது நாம் கொடுக்கும் விலை பெரிதாகத் தோன்றாது.
இதே கோட்பாட்டை இஸ்ரயேல் மக்களிடம் பார்க்கிறோம். அவர்கள் தங்களிடமிருந்த எல்லாவிதமான விலையேறப்பெற்ற பொருட்களையும், பொக்கிஷங்களையும் கொண்டுவந்தார்கள். அவர்களுடைய இருதயங்கள் தேவன்மேல் கொண்ட அன்பினால் கொளுந்துவிட்டு எரிந்தன. (அன்பில்லாமல் செய்யப்படும் காரியங்கள் எவ்வளவு நல்ல காரியங்களாக இருந்தாலும் அவை செத்த கிரியைகளே). அவர்களுடைய இருதயத்தில் அப்படிப்பட்ட ஓர் அசைவு ஏற்படாதிருந்தால் அவர்கள் தங்கள் பொக்கிஷங்களையெல்லாம் கொண்டுவந்திருப்பார்களா? தங்கள் தங்கள் கூடாரத்துக்குப் போய் தங்களிடம் என்ன இருக்கிறது என்று தேடியிருப்பார்களா? அவைகளைக் கொண்டுவந்ததைப் பாரமாகக் கருதியிருப்பார்களா? (ஒரு காரியத்தில் நம் இருதயம் இல்லையென்றால் அதைச் செய்யாததற்கு நாம் பல நொண்டிச்சாக்குகளைக் கண்டுபிடிப்போம்). அவர்களுடைய இருதயம் நெகிழ்ந்தது, அவர்களுடைய ஆவி அனல் கொண்டது. குளிர்ந்த இருதயம், கொடுப்பதற்குத் தன்னிடம் ஒன்றுமே இல்லை என்றும், இது சாத்தியமே இல்லை என்றும், முடியாது என்றும், கூடாது என்றும் சொல்லும். ஆனால், அன்புள்ள இருதயமோ, கொடுப்பதற்குத் தன்னிடம் என்ன இருக்கிறது என்றும், இது சாத்தியமே என்றும், முடியும் என்றும், கூடும் என்றும் சொல்லும்;.
நம் வீட்டுக்கு ஒருவர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் நமக்குப் பிரியமானவர் என்றால், அவருக்குக் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது என்று தேடிப்பார்த்து அவருக்கு அவ்வளவாய் விருந்தோம்பல் செய்வோம். அவர் நமக்குப் பிரியமானவர் இல்லையென்றால். வீட்டில் என்ன இருக்கிறது என்றும் நமக்குத் தெரியாது. அவருக்கு நல்ல விருந்தோம்பலும் செய்யமாட்டோம். நம் விருந்தோம்பலின் தரம் நம் இருதயத்தைப் பொறுத்தது.
நன்றி நிறைந்த இருதயத்தோடு அவர்கள் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள். “கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது” (2 கொரி. 5:14) என்று பவுல் சொல்லுகிறார். நற்செய்தியை அறிவிக்கும் காரியத்தைப்பற்றிப் பேசும்போது, “நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு” என்றும் (1 கொரி. 9:17), கொடுக்கிற காரியத்தைப்பற்றிப் பேசும்போது, “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரி. 9:7) என்றும் பவுல் கூறுகிறார். மக்கெதோனியா சபைகள் “மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். மேலும், அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்கள்,” (2 கொரி. 8:2, 3) என்று பவுல் சாட்சி சொல்லுகிறார். அவர்களுடைய மனமகிழ்ச்சியைப் பாருங்கள்! எவ்வளவு உற்சாகமாக இவர்கள் செய்திருக்கிறார்கள்!
“நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் சம்பூரணராக்கப்பட்டிருக்கிறீhகள்,” (1 கொரி. 1:5) என்று பவுல் கூறுகிறார். இதன் பொருள் என்னவென்றால் நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் எல்லா வளங்களையும் பெற்றிருக்கிறோம். நாம் பெறாதது ஒன்றும் இல்லை. ஆனால், அந்த ஐசுவரியங்கள் என்னவென்பதைக் கண்டுபிடிக்க நமக்கு அன்பு வேண்டும். கர்த்தராகிய இயேசுவின்மேல் நமக்கு உண்மையான அன்பு இருந்தால் அவருக்குக் கொடுப்பதற்கு நம்மிடம் ஏராளமான காரியங்கள் இருக்கும் என்பதைக் கண்டுபிடிப்போம். ஆராதனைக்கு வரும்போது, கூடிவரும்போது, அவருடைய சாட்சியை நிறுவுவதற்கு அவருக்குக் கொடுப்பதற்கு நம்மிடம் ஏராளமான ஐசுவரியங்கள் இருக்கும், இயேசுவின்மேல் நமக்கு உண்மையான அன்பிருந்தால் நம் இருதயம் கொளுந்துவிட்டு எரியும். “அன்பால் எம் இதயம் தகனமாக்கும்,” என்பது நம் ஜெபமாக இருக்க வேண்டும். முன்பு 'இல்லை' என்று நினைத்தது இப்போது இருக்கும், முன்பு 'முடியாது' என்று நினைத்தது இப்போது முடியும். அவருக்குக் கொடுப்பதற்கு நம்மிடம் விலையேறப்பெற்ற ஒன்று, மதிப்புள்ள ஒன்று இருக்கும். கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறதா?
இஸ்ரயேல் மக்கள் கொண்டுவந்த எல்லாப் பொருட்களும், ஏதோ ஓர் அம்சத்தில், கிறிஸ்து என்ற நபரையும் அவருடைய வேலையையும் குறிக்கின்றன. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத்தவிர தேவனைத் திருப்திப்படுத்த இந்த முழுப் பிரபஞ்சத்திலும் வேறு என்ன உண்டு? இஸ்ரயேல் மக்கள் கொண்டுவந்ததுபோல் நாம் இன்றைக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொடுத்தால் தேவன் திருப்தியாகிவிடுவாரா? நிச்சயமாக இல்லை. இந்த வசனங்களைத் தங்களுக்குச சாதகமாகப் பயன்படுத்தி தேவனுடைய மக்களைச் சுரண்டுகிறவர்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது. பூமிக்குரிய கூடாரத்தைக் கட்டுகிறவர்கள் பூமிக்குரிய பொருட்களை இச்சிக்கத்தான் செய்வார்கள். நாம் ஆவிக்குரிய கூடாரத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறோம். நம் தேவை ஆவிக்குரிய கிறிஸ்து, மாம்சத்தின்படியான கிறிஸ்துவல்ல. யாருடைய இருதயம்; கிறிஸ்துவின் மேலுள்ள அன்பினால் நிறைந்திருக்கிறதோ, யாருடைய இருதயம் தேவனுடைய சாட்சிக்காக கொளுந்துவிட்டு எரிகிறதோ, யாருடைய இருதயம் தேவனுடைய வீட்டைக்குறித்த பக்திவைராக்கியத்தால் துடிக்கிறதோ, அவனிடம் தன்னைச் சந்திக்கிற மனிதர்களுக்குக் கொடுப்பதற்கு ஏதோவொன்று இருக்கும். ஏதோவொன்று என்றால் கிறிஸ்துவுக்குரிய ஏதோவொன்று என்று பொருள். இவன் கிறிஸ்துவைக் காண்பவன், அவருடைய அழகை, அருமையை, மேன்மையை, மகத்துவத்தை, திருப்தியை, மகிமையை, போதுமானதன்மையை, காண்பவன். இவன் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிறவன். இவன் மனிதர்களை அல்ல, எப்போதும் தேவனைப் பிரியப்படுத்தி வாழ்பவன். வெளியே எதையாவது செய்ய வேண்டும் என்றால் அதற்குமுன் அந்தரங்கத்தில் உள்ளான உணர்வு, அதிர்வு, அன்பு இருக்க வேண்டும். இருதயத்தில் ஒரு சலனம் இருக்க வேண்டும். புறம்பான ஊழியம் உள்ளான நிலைமையின் வெளியாக்கம்.
ஒரு குளத்தில் ஒரு சிறிய கல்லை வீசினால் அதைச்சுற்றி வட்ட அலைகள் எழுகின்றன. ஆண்டவராகிய இயேசுவின்மேல் உண்மையான அன்பு இருந்தால் அவருக்காக ஒரு பாடல், ஜெபம், சாட்சி, துதி வெளியே வரும்.
இஸ்ரயேல் மக்கள் தேவைக்கும் அதிகமாகக் கொண்டுவந்தார்கள். “போதும். இதற்குமேல் வேண்டாம்,” என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் கொண்டுவந்தார்கள். “செய்ய வேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாகவும் இருந்தது” (யாத். 36:7). தாராளம், ஏராளம். இந்த அடையாளத்தின் ஆவிக்குரிய நிஜம், மெய், நம்மிடையே நிறைவேறினால் எவ்வளவு அழகாக இருக்கும்! அந்த நாளுக்காக என் உள்ளம் ஏங்குகிறது. “பாடுவோம், ஜெபிப்போம், சாட்சி சொல்வோம், ஆராதிப்போம்,” என்று யாரும் யாரையும் உந்தித்தள்ளவேண்டிய தேவையில்லாத நாட்கள் வரும் என்று நான் நம்புகிறேன். அப்படிப்பட்ட நாட்கள் வரவேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன்.
தேவனுடைய பிள்ளைகள் எல்லாருக்கும் கிறிஸ்துவுக்குள் அளவிடமுடியாத ஐசுவரியங்கள் இருக்கின்றன என்பது மாறாத உண்மை. இதைப் பார்ப்பதற்கு நம் கண்கள் திறக்கப்படவேண்டும். நம் இருதயத்தில் அன்பு வேண்டும். இருதயம் திறக்க வேண்டும், வாய்கள் திறக்க வேண்டும், மனம் திறக்க வேண்டும், ஆவி அனல்கொள்ள வேண்டும். தேவனுடைய திருப்திக்காக, தேவனுடைய பிரியத்துக்காக, தேவனுடைய மகிழ்ச்சிக்காக, தேவனுடைய சாட்சிக்காக, தேவனுடைய கூடாரத்தைக் கட்டுவதற்காகவும், கட்டியமைப்பதற்காகவும். நம் உடனடித் தேவை தேவன்மேல் அன்பு. நம்முடைய இருதயம் கர்த்தரிடத்தில் திரும்பும்போது நம்மேல் இருக்கிற முக்காடு அகன்றுபோகும். அப்போது நம்முடைய வளங்களையும், ஐசுவரியங்களையும் கண்டுபிடித்து அவைகளைத் தேவனுக்குக் கொடுப்போம்.
தனிப்பட்ட முறையில் நாம் ஒவ்வொருவரும் கர்த்தராகிய இயேசுவை அனுபவிப்பதையும், அறிந்ததையும் கொண்டுவரும்போதுதான் கூடாரமாகிய சபை, தேவன் விரும்புகிறபடி, கட்டப்படும். இவைகளெல்லாம் நம் இருதயத்தின் பயிற்சிகள். சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. இருயத்தின் இந்தப் பயிற்சிகள் மிகவும் பயனுள்ளவை. *“வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம்” *என்பதற்கிணங்க, நாம் எப்போதும் கிறிஸ்துவைக் கொண்டுவருபவர்களாகவும், மற்றவர்களுக்குக் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
சபை என்பது கூட்டம் அல்ல, கூடிவருவதும் அல்ல. மாநாடுகளும் அல்ல. தனிப்பட்ட விதத்தில் நாம் நம் வாழ்க்கையில் பார்த்த, அனுபவித்த, அறிந்த, ருசித்த, தொட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நம் பாராட்டுதல்களையும், துதிகளையும், தேவனுக்குக் கொண்டுவருகிறோம். தம் அன்பின் குமாரனுடைய அம்சங்களை பிதாவானவர் நம்மிலும், நம்மிடையேயும் பார்க்கிறார். இஸ்ரயேல் மக்கள் கொண்டுவந்த பொருட்களைப் பார்த்தபோது “போதும்” என்றார்கள். நாம் கொண்டுவருகிற கிறிஸ்துவைப் பார்க்கும்போது பிதாவாகிய தேவன் மகிழ்ந்து, “இன்றைக்கு இவ்வளவு கிறிஸ்து போதும். என்னைத் திருப்தியாக்குகிற, மகழ்ச்சியாக்குகிற, பிரியப்படுத்துகிற கிறிஸ்துவைப் போதுமான அளவுக்கு நான் பார்க்கிறேன்,” என்று அவர் பேசுவார். ஆண்டவராகிய இயேசு ஞானஸ்நானம் பெற்று கரையேறியபோதும், தாபோர் மலையில் மறுரூபமானபோதும் பிதாவாகிய தேவன் பரலோகத்திலிருந்து பேசியதுபோல, “இவர் என்னுடைய நேசகுமாரன். இவரில் பிரியமாயிருக்கிறேன்,” என்று சாட்சிபகர்வார். மனிதர்களி;ன் வாழ்க்கையில் தம் குமாரனுடைய குணாம்சங்களைப் பார்க்கும்போது அவர் அக்களிப்பார், அகமகிழ்வார். இதுதான் சபை வாழ்க்கையின் உண்மையான சுபாவம்.
அவர்கள் என்னென்ன பொருட்களைக் கொண்டுவந்தார்கள் என்று பாருங்கள். ஒருவனே எல்லாவற்றையும் கொண்டுவந்து கூடாரத்தைக் கட்டவில்லை. அதுபோல ஒருவனும் ஒன்றும் கொண்டுவராமலும் போகவில்லை. ஒவ்வொருவனும் ஏதோவொன்றைக் கொண்டுவந்தான். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. பொன், வெள்ளி, பித்தளை, துணி, நூல், மரம், தூண்கள், பாதங்கள், சல்லடை, தொங்குதிரை, எண்ணெய், இப்படி கூடாரத்தைக் கட்டுவதற்கான பொருட்களை அவர்கள் கொண்டுவந்தார்கள். தங்கள் வீடுகளிலிருந்து கொண்டு வந்தார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் புரிந்துகொண்ட, அறிந்த, அனுபவித்த, கிறிஸ்துவைக் கொண்டுவர வேண்டும். கொண்டுவந்து கட்டவேண்டும். எல்லாம் ஒன்றுசேர்க்கப்படுகின்றன. பிதாவானவர் அவருடைய குமாரனின் அம்சங்களைப் பார்ப்பார், பூரிப்படைவார். இதுதான் பூமியில் இயேசுவின் சாட்சி. இதுவே கிறிஸ்து நம்மிடையே கூடாரமடிப்பதாகும். ஒவ்வொருவரும் தன்தன் அந்தரங்க, தனிப்பட்ட வாழ்க்கையில் இயேசுவைப் பார்க்க வேண்டும், அறிய வேண்டும், அனுபவிக்க வேண்டும், அவருடைய குமாரனுடைய மதிப்பை, அழகை, அருமையை சபைக்குக் கொண்டுவர வேண்டும். சந்தைக்குக் காய்கறிகளைக் கொண்டுபோகும்போது சுத்தமாகக் கழுவி, அடுக்கிக் கொண்டுபோகிறோம். சந்தையில்போய் காய்கறிகளை விளைவிப்பதில்லை. சமைத்த சாப்பாட்டைக் கொண்டுபோகிறோம். அங்கு போய் சமைப்பதில்லை. சாலொமோன் ஆலயம் கட்டுகிறபோது “அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது” (1 இரா. 6:7). நாம் அனுவித்த, அறிந்த, பார்த்த கிறிஸ்துவைக் கொண்டுவந்து பாடலாகப் பாடுகிறோம், ஜெபங்களாக ஏறெடுக்கிறோம், சாட்சிகளாகப் பகிர்ந்துகொள்கிறோம், சத்தியமாகச் சொல்லிக்கொடுக்கிறோம். இப்படிச் செய்யும்போது நாம் தேவனுடைய வீட்டின் கூட்டுப் பிரதி நிதித்துவமாக மாறுகிறோம்.
ஒரு கற்பனை. இஸ்ரயேல் சபையார் தங்கள்; கூடாரங்களுக்குச் சென்று வாசஸ்தலத்துக்குத் தேவையான பொருட்களைத் தேடிப்பார்த்திருப்பார்கள். அவர்களுடைய இருதயம் ஏற்கெனவே கிளர்ந்தெழுந்துவிட்டது. தேடிப்பிடித்து. கொண்டுவந்து எல்லாரும் சேர்ந்து வேலைசெய்திருப்பார்கள். அவரவர் தங்கள் தங்கள் பொருட்களை மட்டும் வைத்து வேலை செய்யவில்லை. மற்றவர்கள் கொண்டு வந்த பொருட்களையும் சேர்த்துவைத்து வேலை செய்தார்கள். ஒருவன் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கொண்டுவந்திருக்கலாம். அதற்குப்பின் அவன் இ;ன்னொருவன் கொண்டுவந்த பொருளை வெட்டித் தைத்து வேறு வேலை செய்திருக்கக்கூடும். அவனவன் தன்தன் பொருளையும், வேலையைப்பற்றியும் மட்டும் கவலைப்படவில்லை. எல்லாருக்கும் எல்லாரும் தேவைப்பட்டார்கள். பலர் பலவிதமான பொருட்களைக் கொண்டுவந்தார்கள். எல்லாரும் எல்லாவற்றையும் கொண்டுவரவில்லை. எல்லாரும் பங்களித்தார்கள். வேலைசெய்தார்கள்.
கர்த்தருடைய கூடாரத்தைக் கட்டுவதற்கு பெசலியேல், அகோலியாப் ஆகிய இருவரும் விசேஷித்த வரம்பெற்றவர்கள், விசேஷித்த ஆவியையுடையவர்கள், விசேஷித்த ஞானமுடையவர்கள். ஆனாலும், அவர்கள் இருவரும் மட்டுமே கூடாரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் கொண்டுவரவில்லை, எல்லா வேலையையும் செய்யவில்லை. அவர்கள் இருவரும் ஒருங்கிணைத்தார்கள் என்று சொல்லலாம். சகோதரிகள் துணிகளைத் தைக்காமல், நூற்காமல் இருந்திருந்தால் அவர்கள் இருவர் மட்டும் என்ன செய்திருக்க முடியும்? அன்புள்ள இருதயமும், அனலுள்ள ஆவியும் கொண்ட மக்கள் தேவனுக்குத் தேவை. பரிசுத்த ஆவியானவர் அப்படிப்பட்ட மக்களைத் தேடிக்கொண்டிருக்கிறார். தம்முடன் ஒத்துழைக்கிற ஆவியுடைய மக்கள் அவருக்கு வேண்டும்.
இடிப்பது எளிது, கட்டுவது கடினம். கிழிப்பது எளிது, தைப்பது கடினம். சிதறடிப்பது எளிது, சேர்ப்பது கடினம். இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் சேர்ந்து கட்டினார்கள். குறிப்பாக பெண்கள் தைத்தார்கள், எம்பிராய்டரி வேலை செய்தார்கள். கட்டுகிற வேலை அதிகமாக இருக்கிறது. நூற்கிற வேலை, தைக்கிற வேலை இன்னும் அதிகமாக இருக்கிறது. எல்லாருக்கும் வேலை இருக்கிறது. “என்னை யாரும் வேலைக்கு அமர்த்தவில்லை,” என்று சாலையோரம் நிற்கவேண்டிய தேவையில்லை. அப்படிச் செய்தால் நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டியிருக்கும். நம் சாட்சியைப் பலப்படுத்த என்னனென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நம் தனிப்பட்ட பொறுப்பை நிறைவேற்றும்போது மட்டுமே பரிசுத்த ஆவியானவர் செயல்பட முடியும், சாட்சியைக் கட்டமுடியும். கூடாரத்தை நிறுவ முடியும். இப்படிச் செய்தால் தேவனுடைய நோக்கமாகிய அவருடைய குமாரனும் நம் கர்த்தருமாகிய இயேசுவை வெளியரங்கமாக்குகிற, மகிமைப்படுத்துகிற கூடாரமாகிய சபையைக் கட்ட முடியும். தேவன்தாமே இதைச் செய்து முடிப்பாராக. ஆமென்.