Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

மூன்று கண்ணோட்டங்கள்

By மெர்லின் இராஜேந்திரம்

(அப். 21)

எருசலேம் மூப்பர்களின் ஆலோசனையை பவுல் ஏன் ஏற்றுக்கொண்டார் என்ற கேள்விக்கு எளிதாகப் பதில் சொல்ல முடியாது. முதலாவது, அவர்கள் கொடுத்தது ஆலோசனையோ, பரிந்துரையோ, அறிவுரையோ அல்ல, அவர்கள் கொடுத்தது கட்டளை. அந்தக் கட்டளைக்கு பவுல் ஏன் கீழ்ப்படிந்தார் என்பதை விளக்குவதோ அல்லது அவருடைய செயல் சரியா தவறா என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்வதோ அவ்வளவு எளிதல்ல. பவுலின் செயலைப் புரிந்துகொள்வது மிகக் கடினம்.

எந்தவொரு செயலையும் குறைந்தது மூன்று கண்ணோட்டங்களில் காணலாம். ஒன்று, சம்பந்தப்பட்ட நபரின் கண்ணோட்டம். இரண்டு, பிறருடைய கண்ணோட்டம். மூன்று, தேவனுடைய கண்ணோட்டம். மூவரின் கண்ணோட்டத்தையும் பார்ப்பதற்குமுன், இந்த நிகழ்ச்சியின் பின்புலத்தையும் நாம் கொஞ்சம் விவரமாகத் தெரிந்துகொள்ளவேண்டும். அது ஏற்கெனவே நமக்குத் தெரிந்திருந்தாலும் அதை இன்னொருமுறை திரும்பிப்பார்க்கலாம்.

பவுலும் அவருடைய கூட்டாளிகளும் எருசலேமிலிருந்த பரிசுத்தவான்களுக்காகப் புறவினச் சபைகளில் சேகரிக்கப்பட்ட காணிக்கையோடு பெந்தெகொஸ்தே பண்டிகைக்குமுன்பே எருசலேமுக்கு வருகிறார்கள். தங்கள் காணிக்கையை யூதக் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் அவர்களுக்குள் இருந்திருக்கும். நம் கிறிஸ்தவச் சகோதரர்கள் நம் ஊரில் இன்றைக்கும் ஜாதி பார்ப்பதுபோல், யூதர்கள் எப்போதும் தங்களை மிக உயர்வாகக் கருதினார்கள். எனவே, அவர்களுடைய சந்தேகம் நியாயமானதுதான். எருசலேமில் தனக்குப் பாடுகள் வரும் என்ற நிச்சயத்தோடுதான் பவுல் எருசலேமுக்கு வருகிறார். எருசலேம் வீதிகளில் நடந்தபோது தனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பவுல் எதிர்பார்த்திருப்பார். ஆனால், அது சகோதரர்களின் ஆலோசனையின்மூலம் வரும் என்று அவர் எதிரிபார்த்திருப்பாரா?

இந்தச் சூழ்நிலையில்தான் அவர் எருசலேம் மூப்பர்களைச் சந்திக்கிறார். அவர்கள் இவர்களை மனமுவந்து வரவேற்கிறார்கள். இவர்களுடைய காணிக்கையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள். பவுலின் ஊழியத்தில் புறவினத்தாரிடையே தேவன் செய்த மகத்தான செயல்களைக் கேள்விப்பட்டு கர்த்தரைத் துதிக்கிறார்கள், மகிமைப்படுத்துகிறார்கள். ஆயிரக்கணக்கான யூதர்கள் கிறிஸ்தவர்களாகியிருப்பதைக் கேள்விப்பட்டவுடன் பவுலுடைய உள்ளம் சிறகடித்துப் பறந்திருக்கும். ஏனென்றால், அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய மிகப் பெரிய பாரம். "எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது; நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது. மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே" (ரோமர் 9:1-3) என்று சொன்னவர் அவர். எனவே, இத்தனை நேர்மறையான காரியங்களைப் பார்த்து, கேட்டு அவர் மிகவும் மகிழ்ந்திருப்பார். அந்தக் கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஐக்கியம் தொடர்கிறது. திடீரென்று யாக்கோபு நியாயப்பிரமாணத்தைக்குறித்து வைராக்கியமாக இருந்த யூதக் கிறிஸ்தவர்களைக்குறித்த ஒரு குண்டைத் தூக்கிப்போடுகிறார்.

இதில் சம்பந்தப்பட்டிருக்கிற மூவரின் கண்ணோட்டத்தை இப்போது நாம் பார்ப்போம்.

1. பவுலின் கண்ணோட்டம்

யாக்கோபு அப்படிச் சொன்னவுடன், பவுல் என்ன நினைத்தார் என்றும், என்ன சொன்னார் என்றும் தெரியவில்லை. லூக்கா அதைப்பற்றி எதுவும் எங்கும் எழுதவில்லை. "இங்குள்ள யூதக் கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணத்தைக்குறித்து வைராக்கியமாக இருந்தால் எனக்கென்ன?" என்று பவுல் நினைத்தாரா? எருசலேமில் யூதர்களுக்கிடையே பவுலைப்பற்றிப் பல வதந்திகள் பரவியிருந்தன (வ. 21). அவரைப்பற்றிய வதந்திகள் பொய் என்று அங்கிருந்த மூப்பர்களுக்கும் தெரியும். எனவே, பவுல் யாக்கோபிடம், "நீங்கள் யூதக் கிறிஸ்தவர்களிடம் 'நானோ, பேதுருவோ, மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்களும் கடைப்பிடிக்கத் தேவையில்லை' என்று சொல்லிவிடுங்கள்," என்று சொல்லியிருக்கலாம். "என்னைப்பற்றிய வதந்திகள் பொய் என்று உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்களே அதை ஏன் யூதக் கிறிஸ்தவர்களுக்குத் தெளிவுபடுத்தக்கூடாது?" என்று கேட்டிருக்கலாம். தேவன் தன் ஊழியத்தை ஆசீர்வதித்த விவரங்களைப் பவுல் விவரமாகச் சொன்னபிறகும் அங்கிருந்த ஒருவர்கூடத் தன்னை ஆதரிக்காததால் வருத்தப்பட்டாரா? "இப்பொழுது செய்ய வேண்டியது என்ன என்று நீங்கள் ஏன் என்னிடத்தில் கேட்கிறீர்கள்? தேவனிடத்தில் கேளுங்கள்," என்று பதில் சொல்லியிருக்கலாம். "என்னைப்பற்றிய வதந்திக்கு நான்தான் பொறுப்பு என்று நீங்கள் நினைத்தால், அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்," என்று சொல்லியிருக்கலாம்.

"என்ன செய்யலாம்?" என்று அவர்கள் பவுலின் கருத்தைக் கேட்கவில்லை. "இப்போது என்ன செய்யலாம்?" என்று யாருடைய கருத்தையும் அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் ஏற்கெனவே கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். அவர் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் அவருக்குக் கட்டளை கொடுத்தார்கள். கட்டளை. வ. 23, 24. "நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குக் கட்டளை கொடுக்க நீங்கள் யார்?" என்று பவுல் கேட்டிருக்கலாம். யாக்கோபு சொன்னதைக் கேட்ட பவுல் அவரைக் கொஞ்சம் முறைத்துப் பார்த்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், தொடர்பேயில்லாமல், எட்டு ஆண்டுகளுக்குமுன் எருசலேமில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அவர் இங்கு நினைப்பூட்ட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? பவுலின் பார்வையின் பொருளைப் புரிந்துகொண்ட யாக்கோபு பதற்றத்துடன், "சகோதரனே, நாங்கள் சொல்வது புறவின கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாது. அவர்களை நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணுவது எங்கள் நோக்கமல்ல, இங்குள்ள யூதக் கிறிஸ்தவர்களின் பிரயோஜனத்துக்காக நீர் இதைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்," (வ. 25) என்று மழுப்புகிறார். அப். 15இல் நியாயப்பிரமாணம் "ஒருவராலும் சுமக்கமுடியாத நுகத்தடி" என்று அன்று சொன்னார்கள். இன்று அவர் அதைப் பவுலின்மேல் சுமத்துகிறார். பவுல் பலவாறு சிந்தித்திருப்பார்.

"நீங்கள் சொன்ன காரியம் உங்கள் பிரச்சினை. அதை எப்படிக் கையாளுவது என்பது உங்கள் பொறுப்பு," என்று சொல்லியிருக்கலாம். "சில சூழ்நிலைகளில் நான் நியாயப்பிரமாணத்துக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். ஆனால், அது விசுவாசியாத யூதர்களை ஆதாயம்பண்ணவேண்டும் என்பதற்காகவே. விசுவாசிக்கும் யூதர்களைப் பிரியப்படுத்துவதற்காக அல்ல," என்று தன் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கலாம். "உங்கள் சொல்படி நான் நடந்தால், நான் நியாயப்பிரமாணத்திற்கு ஒத்துப்போய்விட்டேன் என்று புறவின சபைகள் நினைக்கக்கூடும். நான் அதற்கு வாய்ப்பளிக்க விரும்பவில்லை," என்று சொல்லி மறுத்திருக்கலாம். ஆனால், அவர் என்ன நினைத்தார், என்ன பேசினார் என்று எதுவும் தெரியவில்லை.

2. பிறருடைய கண்ணோட்டம்

அவர் சுத்திகரிக்க ஒப்புக்கொண்டது சரியா, தவறா என்பது பிறருடைய கண்ணோட்டம். அந்த நாளில், அந்தக் கட்டத்தில், அந்தச் சூழ்நிலையின் முழு விவரமும் தெரியாமல் எந்த முடிவுக்கும் வரமுடியாது. இருவர் தொலைபேசியில் உரையாடுகிறார்கள். ஒருவர் பேசுவதை மட்டுமே நான் கேட்கிறேன். மறுமுனையில் பேசுகிறவர் என்ன பேசுகிறார் என்று தெரியாமல், நான் எந்த முடிவுக்கும் வர முடியாது. இந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட விவரங்களைவிட சொல்லப்படாத விவரங்கள் அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நமக்குத் தெரிந்த விவரங்களைவைத்து அவருடைய செயல் சரி என்றும் சொல்லலாம், தவறு என்றும் சொல்லலாம். இரண்டுக்கும் சம வாய்ப்புக்கள் இருக்கின்றன.

நியாயப்பிரமாணத்தால் யாரும் நீதிமானாவதில்லை என்றும், இரட்சிப்புக்கு விருத்தசேதனம் தேவையில்லை என்றும் பவுல் வலியுறுத்தினார். ஆனால், யூதர்கள் தங்கள் முறைமைகளைக் கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தவில்லை. யூதக் கிறிஸ்தவர்களின் பாரம்பரியங்களும், கலாசாரமும், பழக்கவழக்கங்களும் சத்தியத்துக்கு முரணாக இல்லாதவரை, அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை புறவின விசுவாசிகள்மேல் திணிக்காதவரை அவர் அவைகளை மறுக்கவில்லை. எடுத்துக்காட்டாக, தீமோத்தேயுவைத் தன்னோடு கூட்டிகொண்டுபோவதற்காக யூதர்கள் நிமித்தம் அவர் தீமோத்தேயுவுக்கு விருத்தசேதனம் செய்தார் (அப். 16:1-3). "யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்" (1 கொரி. 9:20) என்று சொன்னவர் இதுபோன்று பல இக்கட்டுகளைச் சந்தித்திருப்பாரோ!

யூதர்கள் தங்கள் இனத்தையும் மதத்தையும் பிரித்துப்பார்க்கத் தவறினார்கள். எருசலேம் சபை மூப்பர்கள் யூதச் சமுதாயத்திற்கும், சபையில் நியாயப்பிரமணத்தைக்குறித்து வைராக்கியமுள்ள விசுவாசிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது (15:5; கலா. 2:11, 12). ஜெப ஆலயங்களில் பவுல் பிரசங்கித்தபோது பலமுறை அவரை அடித்து வெளியே விரட்டினார்கள் (2 கொரி. 11:24). அவர்களுக்கு இவர்கள் மறைமுகமாக ஆதரவு அளித்திருக்கலாம் என்று நான் நினைக்கிறன். இப்போது அவர்கள் பவுலை ஒரு மூலைக்குத் தள்ளிவிட்டார்கள் என்றே நான் நினைக்கிறன். காவல்நிலையத்துக்கு நல்லெண்ணத்தோடு வருகிற ஒருவனை அவர்கள் கைதுசெய்து தனிச் சிறையில் அடைத்து, வெற்றுத் தாளில் கையெழுத்துப்போட மிரட்டினால் அவன் என்ன செய்ய முடியும்? இப்போது அவர் ஓர் இக்கட்டான நிலைமைக்குள் மாட்டிக்கொண்டார். சகோதர்களுக்கிடையிலும், சபைகளுக்கிடையிலும் இணக்கத்தையும், இசைவையும் ஏற்படுத்தவே பவுல் எருசலேமுக்கு வருகிறார். ஆனால், அவருடைய வருகையால் அங்கு குழப்பம் ஏற்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் அவர் வர வேண்டாம் என்று அவருக்கு ஏற்கெனவே சொல்லி அனுப்பியிருக்கலாம்! பவுலை அவர்கள் சரியாகச் சிக்கவைக்கிறார்கள்.

''கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்" (ரோமர் 12:18) என்பதை நடைமுறைப்படுத்தினாரோ?

அவர் இப்போது அவர்களுடைய கட்டளைக்கு இணங்கவில்லையென்றால் சபையில் குழப்பத்தையும், பிரிவினையையும் உருவாக்குகிறார் என்று மேலும் குற்றம்சாட்டுவார்கள். இணங்கினால், அவர் தன்னைத்தானே மறுதலிக்கிறார் என்று குற்றஞ்சுமத்துவார்கள். என்ன செய்வது?

வேறு வழியில்லாததால் ஒப்புக்கொண்டாரா? மறுத்திருந்தால் அவருடைய நிலைப்பாடு தெளிவடைந்திருக்குமா? மறுத்திருந்தால் ஒருவேளை அவரைப்பற்றிய வதந்திகள் இன்னும் அதிகமாக வலுப்பட்டிருக்கும். முன்னிலைமையைவிட பின்னிலைமை இன்னும் கேடுகெட்டிருக்கும். பிரச்சினையும், சர்ச்சையும் அதிகமாயிருக்கும் என்றே நான் நினைக்கிறேன். அவர் இணங்கியதால் விசுவாசித்த யூதர்களோ, விசுவாசியாத யூதர்களோ, புறவினத்தாரோ அவர்மேல் எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. அவரைக் கைது செய்ததற்கு அது காரணம் இல்லை.

என்னதான் புரிந்துகொள்ள முயன்றாலும், பவுலின் செயலை நியாயப்படுத்த முயன்றாலும் அவர் பலி கொடுக்க ஆகும் செலவைத் தான் ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், பலிசெலுத்துதல் விருத்தசேதனத்தைப்போன்ற, ஓய்வுநாளைப்போன்ற, போஜனபானத்தைப்போன்ற காரியம் இல்லை.

லூக்கா இந்த நிகழ்ச்சியை அதிகமாக விவரிக்கவில்லை. பவுலைக் கைதுசெய்வதற்குமுன் நடந்த சில நிகழ்ச்சிகளை லூக்கா எழுதுகிறார்.

பவுலின் பதில்: "அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காக வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்" (21:26).

நசரேய விரதம் இருப்பவர்கள் ஏழு நாட்கள் சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். அந்த ஏழு நாட்களும் அவர்கள் தேவாலயத்துக்குள் செல்ல அனுமதி இல்லை. பவுல் தன் சுத்திகரிப்பை ஒன்றிரண்டு நாட்களில் முடிக்கிறார். யூதர்கள் புறவினத்தாரிடையே சென்று வந்தபின் தேவாலயத்துக்குள் செல்ல வேண்டுமானால் சாதாரணமாகச் சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். அந்த சுத்திகரிப்பைப் பவுல் செய்கிறார். வ. 27 அந்த ஏழு நாட்களும் நிறைவேறி வருகையில்...ஏழு நாட்களின் முடிவில்தான் பாவநிவாரண பலி செலுத்தப்படும். எனவே, பலி செலுத்தப்படுவதற்குமுன்பே விசுவாசியாத யூதர்கள் அவரைப் பிடித்தார்கள். தேவனே சரியான நேரத்தில் தலையிட்டு பவுலைக் காப்பாற்றினார் என்று நான் நம்புகிறேன். இன்னொரு காரியம். பவுலின் செயல் கலகத்தைத் தடுக்கும் என்று மூப்பர்கள் நினைத்தார்கள். ஆனால், அதுதான் கலகத்துக்குக் காரணம். அவருடைய செயலால் யூத விசுவாசிகள் சமாதானமானார்களா என்று தெரியவில்லை. ஆனால் யூத அவிசுவாசிகள் கோபமடைந்தார்கள்.

தம்மைப்பற்றிய எதிர்மறையான கருத்துக்களை சரிசெய்வதற்கு அவர் முன்வருகிறார். பிறருடைய கருத்துக்கு மதிப்பளிக்கிறார். சபையில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகத் தன்னை விட்டுக்கொடுக்கிறார். தேவனுடைய திட்டம் இந்தச் செயலால் வேகமடைகிறது. பவுல் ரோமுக்குச் செல்வதற்கு இந்த நிகழ்ச்சி காரணமாயிருந்தது.

1 கொரிந்தியர் 9:22யில் எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன் என்பது அவிசுவாசிகளை ஆதாயம்பண்ணுவதற்காகதானேதவிர விசுவாசிகளைச் சாந்தப்படுத்துவதற்காக அல்ல.

ரோமர் 14இல் பலவீனரைத் தாங்க வேண்டும் என்பதும் ஓய்வுநாள், போஜனம்போன்ற காரியங்களில்தான் என்று நான் நினைக்கிறன். பலி செலுத்துவது அடிப்படை விசுவாசத்தையே தகர்ப்பதுபோன்றது.

சத்தியத்தைவிட சமாதானம் முக்கியமா? தேவனுக்குக் கீழ்ப்படிவதைவிட மனிதர்களுடன் ஒத்துப்போவது முக்கியம் என்று நினைத்தாரா?

3. தேவனுடைய கண்ணோட்டம்

பவுலின் செயலைத் தேவன் எப்படிக் கண்ணோக்கினார்? அவருடைய செயல் சரியா தவறா என்ற தளத்தில்தான் நானும் நெடுங்காலமாகச் சிந்தித்தேன். நான் சொன்னதுபோல், நான் பவுலைப் புரிந்துகொள்ள முயன்றேன். அவருடைய செயலின் நியாயத்தைப் பார்த்தேன். "சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை" (கலா. 2:5) என்று சொன்னவர் இப்போது இங்கு இணங்குகிறார் என்றால் நமக்குத் தெரியாத விவரங்கள் அங்கு இருக்கின்றன.

தேவன் இந்தச் செயலை எப்படிப் பார்க்கிறார் என்று தெரிந்தவுடன் என் வாதப்பிரதிவாதங்களை நான் திரும்பப் பெற்றுக்கொண்டேன். கலவரம் ஏற்படுகிறது. பவுல் கைதாகிறார். அதன்பின் கர்த்தர் அவருக்குத் தோன்றுகிறார். கர்த்தர் பவுலைக் கடிந்துகொள்ளவில்லை, கண்டனம் செய்யவில்லை, கண்டிக்கவில்லை. மாறாக, "அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமில் சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்" (அப். 23:11; 9:15).

தேவனுடைய கண்ணோட்டத்தைப் பார்த்தபிறகு என் கண்ணோட்டம் செல்லுபடியாகாது. தேவனுடைய கண்ணோட்டமே இந்த நிகழ்ச்சியின் முற்றுப்புள்ளி.