Preloader
சாட்சியின் கூடாரம்
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More
8 Mar 2025 : தேவ அறிவு Read More

கிறிஸ்துவின் அளவு

Translated from the original article, “The Measure of Christ”

By T.Austin-Sparks

"கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார்..." (கொலோ. 1:27). இந்த அற்புதமான சத்தியத்தின் உட்கருத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள இந்த வசனத்தை மிகக் கவனமாக வாசியுங்கள். "புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் இரகசியம் இன்னதென்று, தேவன்...தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்". கிறிஸ்து உங்களில் இருப்பதே மகிமையின் ஐசுவரியம்.

"இயேசு கிறிஸ்து உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா?" (2 கொரி. 13:5). அப்போஸ்தலனாகிய பவுல், "உங்களை நீங்களே அறியீர்களா?" என்ற கேள்வியைக் காரணம் இல்லாமல் கேட்கவில்லை. கிறிஸ்து உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று உங்களுக்குத் தெரியாதா?

"என் சிறு பிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்" (கலா. 4:19). கிறிஸ்து உங்களுக்குள் உருவாகும்வரை. இது இன்னும் அதிகமான படி.

"தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்" (ரோமர் 8:29). அற்புதமான வார்த்தைகள்! பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு இல்லாமல் இப்படிச் சொல்வதற்கு எந்த மனிதனுக்கும் தைரியம் வராது. பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாட்டினால்தான் இந்த வார்த்தைகள் இங்கு எழுதப்பட்டிருக்கின்றன.

"கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது... நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும், அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்...(எபே. 4:7, 13). கிறிஸ்துவினுடைய நிறைவின் அளவு.

இப்போது நாம் நம் முழுக் கவனத்தையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் குவிக்க விரும்புகிறோம். ஏனென்றால், இங்கு அவரே நம் கண்களுக்குமுன்பாக இருக்கிறார்: நம் குறிக்கோளாக இருக்கிறார். இங்கு நமக்குமுன்பாக இருப்பது ஒரு போதனையோ அல்லது சத்தியமோ இல்லை; சத்தியத்தைப்பற்றிய அறிவை நாம் இன்னும் அதிகமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல; ஊழியமும் இல்லை; நமக்குமுன்பாக இருப்பவர் கர்த்தரே.

தம் குமாரனாகிய கர்த்தராகிய இயேசு எல்லாவற்றையும் நிரப்பவேண்டும் என்பதே முதலிலிருந்து கடைசிவரை பிதாவின் நோக்கமாகும். ஒரு காரியத்தில் எந்த அளவுக்குக் கிறிஸ்து வெளியரங்கமாக்கப்படுகிறார் என்பதுதான் தேவனுடைய பார்வையில் அதற்கு எந்த அளவுக்கு மதிப்பு உண்டு என்பதைத் தீர்மானிக்கிறது. அதுதான் அளவுகோல். தேவனுடைய பார்வையில் எல்லாவற்றின் மதிப்பும் அதில் கிறிஸ்து எந்த அளவுக்கு வெளியரங்கமாக்கப்படுகிறார் என்பதையே சார்ந்திருக்கிறது. அந்தக் கண்ணோட்டத்தில்தான் தேவன் எல்லாவற்றின் முக்கியத்துவத்தையும் தீர்மானிக்கிறார்.

நாம் நம் கவனத்தைக் கிறிஸ்துவின்மேல் குவித்துவிட்டால், அதன்பின் ஒரு பெரிய வித்தியாசம் ஏற்படும். அப்போது கர்த்தராகிய இயேசுவை வெளியரங்கமாக்காத, வெளியாக்காத தேவையற்ற அநேகக் காரியங்கள் போய்விடும். பிதாவானவர் கர்த்தராகிய இயேசுவை மட்டுமே தம் கண்களுக்குமுன்பாக வைத்திருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிதாவின் கண்கள் முழுவதும் அவருடைய நேசகுமாரனால் மட்டுமே நிறைந்திருக்கிறது. தேவனுடைய பார்வையில், எல்லாவற்றின் மதிப்பும் அதில் எந்த அளவுக்கு அவருடைய குமாரன் வெளியரங்கமாக்கப்படுகிறார், வெளியாக்கப்படுகிறார், மகிமைப்படுத்தப்படுகிறார் என்பதைவைத்து மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. அதுவே அவருடைய இலக்கு; அதுவே அவருடைய குறிக்கோள்.

கிறிஸ்துவின் அனைத்தும் அடங்கிய நிலை

கிறிஸ்து இல்லாமல் ஆவிக்குரிய ஊழியமோ, தரிசனமோ, அழைப்போ, மகிமையோ இருக்க முடியாது. ஊழியம், தரிசனம், அழைப்பு, மகிமை ஆகியவைகளெல்லாம் தனித்தனி காரியங்கள் இல்லை. அவைகள் கர்த்தராகிய இயேசு என்ற நபரில்தான் இருக்க முடியுமேதவிர, அவர் இல்லாமல் தனியாக இருக்க முடியாது.

இரட்சிப்பு என்பது ஒரு தனிப்பட்ட காரியம் என்று பலர் நினைக்கிறார்கள். அவர்கள் அதைத் தனியாகப் பிரித்துப்பார்க்கிறார்கள். இரட்சிப்பு என்பது இரட்சிக்கப்படுகிறவர்களின் நலனுக்காகக் கொடுக்கப்படுகிற ஒன்று என்று அநேகர் நினைக்கிறார்கள். அதுபோல பரிசுத்தமாக்கப்படுவதும் ஒரு தனிப்பட்ட காரியம் என்றே நினைக்கிறார்கள். இரட்சிப்பும், பரிசுத்தமாக்கப்படுவதும் நபர்களோடு சம்பந்தப்பட்ட காரியம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், கிறிஸ்துவே இரட்சிப்பு; கிறிஸ்துவே பரிசுத்தமாக்கப்படுதல். இரட்சிப்பாகவும், பரிசுத்தமாக்கப்படுத்தலாகவும் அவர் நமக்குள் இருக்கிறார்.

அழைப்பையும், ஊழியத்தையும் பொறுத்தவரையிலும் இதுவே உண்மை. அழைப்பையும், ஊழியத்தையும் நாம் பெரும்பாலும் மனிதர்களோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கிறோம். "ஊழியத்திற்காகவே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்" என்பது சத்தியத்தின் ஒரு பக்கம் மட்டுமே. இது ஆபத்தான கோஷம். ஏனென்றால், ஊழியம் செய்யும்போது பெரும்பாலும் ஊழியம்தான் நோக்கமாக இருக்கிறதேதவிர கர்த்தர் ஊழியத்தின் நோக்கமாக இல்லை. ஊழியம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் உங்களை எந்த அளவுக்கு உந்தித்தள்ள முடியும் என்றால் நீங்கள் கர்த்தரை விட்டுவிடுவீர்கள். கர்த்தரை விட்டுவிடக்கூடிய அளவுக்கு அந்த நோக்கம் உங்களைத் தூண்ட முடியும். “ஊழியம்” என்ற காரியத்தை நாம் கிறிஸ்து என்ற நபரிலிருந்து தனியாகப் பிரித்துவிட்டோம். கிறிஸ்துவை விட்டுவிட்டு, ஊழியத்தை இறுகப் பிடித்துக்கொண்டு அதில் முழுவதும் மூழ்கிவிட்டோம். கடைசியில் அது நம்மை உடைத்துவிடுகிறது. ஊழியம் கடினமாக மாறும்போது, ஊழியத்தைக் கைகழுவிவிடுகிறோம். இது நாம் ஊழியத்தைக் கிறிஸ்து என்ற நபரிலிருந்து தனியாகப் பிரித்துவிட்டோம் என்பதையும், ஊழியம் என்ற காரியம்தான் நம்மை ஆக்கிரமித்திருக்கிறதேதவிர கிறிஸ்து என்ற நபரால் நாம் ஆக்கிரமிக்கப்படவில்லை என்பதையுமே காண்பிக்கிறது.

மகிமைப்படுத்தப்படுவதைப் பொறுத்தவரையிலும் இதுவே உண்மை. மகிமைப்படுத்தப்படுவதைப்பற்றிய பாடல்களை நாம் விரும்புகிறோம். மகிமைப்படுத்தப்படுவதை நினைத்து நாம் களிகூருகிறோம். ஆனால், அது இப்போதே நமக்குள் ஆரம்பிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். மகிமைப்படுத்தப்படுதல் என்றால் என்ன? இயேசு கிறிஸ்து நம்மில் முழுமையாக வெளியரங்கமாவதே மகிமைப்படுத்தப்படுதலாகும். இரட்சிப்பையும், பரிசுத்தமாக்கப்படுவதையும், அழைப்பையும், ஊழியத்தையும் தேவன் கிறிஸ்துவுக்குள்தான், கிறிஸ்துவோடு உள்ள தொடர்பில்தான், மதிக்கிறார். கிறிஸ்து இல்லையென்றால் அவைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. ஏனென்றால், அவரே இரட்சிப்பு, அவரே பரிசுத்தமாக்கப்படுதல், அவரே மகிமைப்படுத்தப்படுதல். எல்லாம் அவரே.

இரட்சிப்பும், மகிமைப்படுதலும் மக்கள் தங்கள் நலனுக்காகப் பெற்றுக்கொள்ள வேண்டிய காரியங்கள் என்பதுபோல் சொல்லப்படுகின்றன. தாங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய ஏதோவொன்றிலிருந்து ஏதாவது அனுகூலம் பெற வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். இரட்சிப்பைப் பெரும்பாலும் இரட்சிப்புக்காகத்தான் பெற்றுக்கொள்கிறார்கள். தேவன் எந்த ஆத்துமாவையும் இரட்சிப்புக்காக இரட்சிக்கவில்லை. இரட்சிப்புதான் இறுதி நோக்கம் என்பதுபோல் தேவன் இரட்சிப்பின்பின்னால் ஓடவில்லை. மாறாக, இரட்சகராகிய தம் குமாரனின் மகிமைக்காக அவர் இரட்சிப்பைத் தேடுகிறார். குறிக்கோள் இரட்சிப்பல்ல. மாறாக இரட்சகர்தான் குறிக்கோள். தாங்கள் பெற்றிருக்கும் இரட்சிப்பு தங்கள் சொந்த அனுகூலத்துக்காகவே, தங்கள் சொந்த நலனுக்காகவே, என்று நினைத்து மக்கள் அதில் மகிழ்ந்தால், தேவனுடைய முழு நோக்கமும் முதல் படியிலேயே அவர்களுக்குத் தெரியாமல் போய்விடும். இது தேவனுடைய நோக்கத்திற்குத் தடையாகவும், தடங்கலாகவும் மாறிவிடுகிறது.

ஊழியக்காரர்கள் தங்கள் ஊழியத்தில் ஆழமான நிறைவையும், திருப்தியையும் காணாமல், "என்னால் ஒன்றும் செய்ய முடியாது," என்று கதறும் நிலைமைக்கு வரவேண்டும். அப்போது அவர்கள் இரட்சிப்பின் உண்மையான தன்மையையும், ஆத்துமாக்களின் இரட்சிப்பு முற்றிலும் தங்களுக்கு அப்பாற்பட்டது என்பதையும், அது தேவனுடைய செயல் என்பதையும் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அப்போதுதான் அவர்கள் ஆத்துமாக்களின் இரட்சிப்பில் தேவனுடைய நோக்கம் என்னவென்பதைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அவருடைய குமாரன் மகிமைப்பட வேண்டும் என்பதே இரட்சிப்பில் தேவனுடைய நோக்கம். இரட்சிப்பு என்பது ஒரு காரியம் அல்ல; அது கிறிஸ்து என்ற நபர் ஒரு மனிதனுக்குள் வருகிற வல்லமையான செயல்; அது கிறிஸ்துவின் வருகை. "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்" ( 1 யோவான் 5:12). "அவரைப் பெற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனைபேர்களும்..." (யோவான் 1:12).

பரிசுத்தமாக்கப்படுதல், ஊழியம் ஆகியவைகளைப் பொறுத்தவரையிலும் இதுவே உண்மை. நமக்குள் வாசம்பண்ணுகிற கிறிஸ்து உள்ளே வேலைசெய்வதால், நாம் வெளியே வேலைசெய்கிறோம். அவர் செய்கிற வேலையை நாம் செய்கிறோம். இந்தத் தளத்தில் செய்யப்படாத எந்த ஊழியமும் தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்ற முடியாது. ஏனென்றால், தேவனுடைய ஆவியால் கர்த்தராகிய இயேசுவால் மட்டுமே தேவனுடைய ஊழியத்தைச் செய்ய முடியும். உங்களால் ஒருபோதும் செய்யமுடியாத ஒரு வேலையைச் செய்வதற்குத் தேவன் உங்களை ஒரு வேலைக்காரனாக அழைத்திருக்கிறார். நீங்கள் உங்களால் செய்யமுடியாத வேலையைச் செய்யவேண்டிய ஒரு வேலைக்காரன். இதுவே உங்கள் அழைப்பு. ஊழியம் என்பது கர்த்தராகிய இயேசுவை வெளிக்கொண்டுவருவதாகும். இயேசுவை வெளியாக்குவதே, வெளிக்காட்டுவதே, ஊழியம். இதைச் செய்யாத ஊழியம் பரிசுத்த ஆவியானவரின் ஊழியம் இல்லை. மாறாக, அது தேவனுடைய நோக்கத்துக்கு முரணான மனிதனுடைய ஊழியம். அது அக்கினியால் பரிசோதிக்கப்பட்டு, மதிப்பற்றது என்று நிரூபிக்கப்படும்.

கிறிஸ்தவம் ஓர் உபதேசம் இல்லை. கிறிஸ்தவம் சத்தியங்களை அறிகிற விஷயம் இல்லை. மாறாக, கிறிஸ்தவம் ஒரு நபரைப்பற்றிய அறிவாகும். இது கர்த்தராகிய இயேசுவை அறிகிற அறிவாகும். ஒருவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து அவனைக் கிறிஸ்தவனாக மாற்ற முடியாது. கிறிஸ்தவம் என்பது கிறிஸ்துவை உள்ளாக அறிவதாகும். அவர் நமக்குள் வசிக்கிறார் என்று அறிவதாகும்.

கிறிஸ்துவின் உலகளாவிய நிலை

தேவன் ஒரு நபரைத் தெரிந்தெடுத்திருக்கிறார்தெரிந்தெடுத்துதெய்வீகப் பரிபூரணம் எல்லாவற்றையும் அந்த நபருக்குள் கூட்டிச்சேர்த்திருக்கிறார். பிரிக்கமுடியாத அளவுக்கு எல்லாம் அவருடைய குமாரனுக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. நித்தியத்தின் சகல நிறைவையும்பிரபஞ்சத்தின் சகல நிறைவையும் தேவன் அந்த நபருக்குள் பொதிந்துவைத்திருக்கிறார். அந்த நபர் இல்லாமால்அந்த நபருக்கு வெளியேநாம் ஒரு துணிக்கையைக்கூடஒரு சிறிதளவைக்கூடஅனுபவிக்க முடியாது. இந்தப் படைப்பின் தனிச்சிறப்புகளை விரித்துரைக்கக்கூடியவை அவரில் இருக்கின்றன. கிறிஸ்துவின் நிறைவு முழு அளவில் வெளியாக வேண்டும் என்பதே தேவன் முன்குறித்த நோக்கமாகும் - "எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய அவருடைய சரீரமான சபை" (எபே. 1:23).

பிரபஞ்சத்தின் மூலைமுடுக்குகளும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிச் சத்தமாகப் பேசும். அப்போது எந்த இடத்திற்குப் போனாலும் அல்லது எந்த ஜீவனைத் தொட்டாலும் அங்கு கர்த்தராகிய இயேசுவின் வெளியாக்கத்தை நம்மால் காணாமல் இருக்க முடியாது.

"கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." இது பரலோகம். நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்தில் நடக்கிறீர்கள். முழுப் பிரபஞ்சத்தையும் அதுபோல நினைத்துப்பாருங்கள். பிரபஞ்சம் முழுவதும் அவருடைய குமாரனை வெளியாக்குவதை, அவருடைய குமாரனால் நிரம்பியிருப்பதை, நினைத்துப்பாருங்கள். எல்லாவற்றையும் கிறிஸ்து நிரப்புவார் என்பதும், எல்லாவற்றையும் பார்க்கும்போது அங்கு கிறிஸ்து நிரம்பியிருப்பதைக் காணமுடியும் என்பதுதான் தேவனுடைய எண்ணம். எல்லாம் அவருக்காகவே உண்டாக்கப்பட்டிருக்கின்றன. புதிய சிருஷ்டிப்பில் எல்லாம் அவருடைய பிரசன்னத்தைப்பற்றிப் பேசும், அவருடைய குணாம்சங்களின் ஓர் அம்சத்தைக் காண்பிக்கும். இப்போதுகூட ஒரு ஜீவனைத் தொடும்போது, அந்த ஜீவன் கர்த்தராகிய இயேசுவால் நிரம்பியிருப்பதையும், கர்த்தராகிய இயேசு அந்த ஜீவனின் நிறைவாக இருப்பதையும் காணும்போது எப்பேர்ப்பட்ட சந்தோஷம் பிறக்கிறது! இது என்னே ஆசீர்வாதம்!

தேவன் ஒரு நபரைப் பிரத்தியேகமாகத் தெரிந்தெடுத்து, எல்லாரும் பார்ப்பதற்கு வசதியாக அவரை அவர்களுடைய கண்களுக்குமுன்பாக வைத்திருக்கிறார். அந்த நபர் மனிதனாகிய கிறிஸ்து இயேசு.

சபையின் உலகளாவிய நிலை

ஆங்கிலத்தில் Aமுதல் Zவரை மொத்தம் 26 எழுத்துக்கள் உள்ளன. Aயில் ஆரம்பிக்கலாம், Zயில் முடிக்கலாம். Aக்குமுன் எதுவும் கிடையாது, Zக்குப்பின் எதுவும் கிடையாது. அதுபோல கிறிஸ்து இயேசுவே தேவனுடைய புதிய சிருஷ்டிப்பின் ஆதியும் அந்தமுமாவார்; தொடக்கமும் முடிவுமாவார். அவரே தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையேயுள்ள மற்ற எல்லாமுமாவார். A-Zக்கு வெளியே போகமுடியாததுபோல, அவருக்கு வெளியே போக முடியாது. கிறிஸ்து இயேசுவுக்கு வெளியே ஏதோ இருப்பதாக நாம் ஒருபோதும் நினைக்கக்கூடாது. அவரே இரட்சிப்பு, பரிசுத்தமாக்கப்படுத்தல், மீட்பு, மகிமைப்படுத்தப்படுதல், சமாதானம், ஞானம், அன்பு, பரலோகம். "இயேசு கிறிஸ்து உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா?" இந்தக் கிறிஸ்து உங்களில் இருக்கிறார். நீங்கள் இதன் சாத்தியக்கூறுகளையும், இது எந்த அளவுக்குப் போகமுடியும் என்பதைப் பார்க்கிறீர்களா?

தேவன் தம் பிரபஞ்சத்தை வெளியேயிருந்தல்ல, மாறாக உள்ளேயிருந்து மறுசாயலாக்குவார். எப்படி? பரிசுத்த ஆவியானவரால் விசுவாசிகளுக்குள் இயேசு கிறிஸ்துவை வைத்து, உள்ளேயிருந்து அவர்களை மறுசாயலாக்குவார். அந்த நேரத்திலிருந்து அவனுக்குள் இரண்டு வேலைகள் நடைபெறுகின்றன. ஒன்று, விசுவாசி பரிசுத்த ஆவியானவரால் அவருடைய சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்படுவான். இரண்டு, அவர் விசுவாசிகளுக்குள் உருவாக்கப்படுவார். இவ்வாறு அவர் தம் புதிய சிருஷ்டிப்பை உருவாக்கப்போகிறார்.

"கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்" (கொலோ. 1:27). "தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார்; அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்த சாட்சியம்; குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்" (1 யோவான் 5:11, 12).

"கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவனல்ல" (ரோமர் 8:9).

"கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்" (பிலி. 3: 20, 21).

"தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை...கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்" (கொலோ. 3:10, 11).

"எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபை" (எபே. 1:23).

அவருக்குள்ளாக வளர்தல்

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஊக்கமாக முயற்சிசெய்து அல்லது அயராது உழைத்து அல்லது சில கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தப் பிரயாசப்பட்டு அல்லது ஒரு குறிப்பிட்ட அளவை எட்ட வேண்டும் என்று அரும்பாடுபட்டு வாழும் வாழ்க்கை அல்ல. மாறாக, ஆரம்பத்திலிருந்து கடைசிவரை, முழுக்க முழுக்க, இது கர்த்தராகிய இயேசுவை உள்ளாக அறிகிற அறிவைப்பற்றிய விஷயமாகும். இதில் நாம் அவருக்கு மறுமொழி அளிப்பதும், அவர் தம் ஆவியானவரால் நமக்குள் கிரியைசெய்வதற்கு நாம் தொடர்ந்து விட்டுக்கொடுப்பதும், நம்மைத் தம் சாயலுக்கு ஒத்தசாயலாக்க வேண்டும் என்ற அவருடைய குறிக்கோளை நிறைவேற்ற நாம் அவருடன் ஒத்துழைப்பதும் அடங்கும்.

நாமெல்லாரும் பிறந்ததிலிருந்து இதுவரை வளர்ந்திருக்கிறோம், வளர்ந்துகொண்டேயிருக்கிறோம். நாம் எப்படி வளர்ந்தோம்? சும்மா உட்கார்ந்துகொண்டு, "நான் வளர வேண்டும், நான் வளர வேண்டும்" என்று யோசித்துக்கொண்டேயிருந்ததால் நாம் வளரவில்லை அல்லது "சரி, இன்றைக்குக் கொஞ்சம் வளர்வோம்; நாளைக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக வளர்வோம்," என்று தீர்மானித்ததால் நாம் வளரவில்லை. அல்லது நம் பரிமாணங்களை அதிகரிப்பதற்காக நாம் கஷ்டப்பட்டு வேதனையோடு உழைத்ததால் நாம் வளரவில்லை. இப்படிப்பட்ட காரணங்களால் நாம் வளரவில்லை. மாறாக, நாம் இயல்பாகவே வளர்ந்தோம் ஆனால் நாம் இயல்பாக வளர்ந்தபோது வளர்ச்சியின் சட்டங்களுக்கு மறுமொழி கொடுக்கவேண்டியிருந்தது. அதுபோல ஆவிக்குரிய மண்டலத்திலுள்ள வளர்ச்சியின் சட்டங்களை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஆவிக்குரிய வளர்ச்சியின் சட்டங்களுக்கு நேர்த்தியான மறுமொழி கொடுக்கவில்லையென்றால் அல்லது அவைகளை மீறினால் ஆவிக்குரிய வளர்ச்சி ஏற்படாது. மாறாக, வளர்ச்சி தடைபடும்; அதனால் பலவீனமும், இழப்பும் ஏற்படும்.

சிலருடைய ஆவிக்குரிய வளர்ச்சி மிகவும் மெதுவாகவும், வேறு சிலருடைய வளர்ச்சி மிகவும் வேகமாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன? சிலர் தங்கள் கேள்விகளால் தேவனை உதைக்கிறார்கள். அவர்கள் அவருடன் வாக்குவாதம்செய்கிறார்கள். அவர்கள் காரியங்களையும், நிகழ்ச்சிகளையும் பிடித்துக்கொண்டு, "இதன் பொருள் என்ன? இதுதான் இதன் பொருளா? நான் இதைச் செய்ய வேண்டுமா, வேண்டாமா? இது தேவையா, தேவையில்லையா? நான் இதைச் செய்யலாமா செய்யக்கூடாதா?" என்று கேள்வி கேட்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இருப்பினும், தாங்கள் தேவனுடைய சித்தத்தை மட்டுமே விரும்புவதாகவும் இவர்கள் உரத்த சத்தமாகக் கூறுகிறார்கள். ஆனால், இவர்களுக்குள் ஒரு பெரிய போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது என்றும், இவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கும் பல காரணங்கள் இருக்கின்றன என்றும் இவர்களுடைய நடத்தையும், பேச்சும் உறுதிப்படுத்துகின்றன.

வேறு சிலர் காரியங்களையும், நிகழ்ச்சிகளையும் பிடித்துக்கொள்ளாமல் உத்தமமான ஆவியோடும், தூய்மையான இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் போகிறார்கள். அவர்கள் கர்த்தருடன் வாக்குவாதம்செய்வதில்லை; அவர்கள் வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்துக்கு எதிரான எந்தக் கருத்துமாறுபாடும் இல்லை. எனவே, காலத்தை வீணாக்காமல் தேவன் அவர்களை வளர்ச்சியைநோக்கி நடத்திச்செல்கிறார். ஏனென்றால், அவர்கள் தங்களைத் தேவனுக்கு முழுமையாக விட்டுக்கொடுக்கிறார்கள்; தங்கள் முழுஇருதயத்தோடு கீழ்ப்படிகிறார்கள்; தேவனுடைய சித்தத்துக்குச் சரணடைகிறார்கள். அவர்கள் கர்த்தர்மேல் வாஞ்சையும் விருப்பமும் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய வாழ்க்கையில் எந்தப் பலவீனமும் இல்லை. "என்ன நடந்தாலும் சரி; அவர் தம் சித்தத்தை நிறைவேற்ற அவருக்கு முழுச் சுதந்திரம் உண்டு," என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள்.

இவையெல்லாம் கர்த்தர் இயேசுவை நாம் எந்த அளவுக்குப் பாராட்டுகிறோம், மதிக்கிறோம் என்பதைச் சார்ந்திருக்கிறது. நாம் அவருடைய உண்மையான மதிப்பை அறிந்து, அவர் நமக்காகப் பிதாவானவருக்கு என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ அதைப் பார்த்து, விசுவாசத்தால் அவரைச் சொந்தமாக்கிக்கொள்ளும்போது, நாம் எந்தச் சிரமமும் இல்லாமல் நேர்த்தியாக வளர்கிறோம். "கர்த்தரைக் கண்டு, அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம் (உள்ளிருந்து மாற்றப்படுகிறோம்)" (2 கொரி. 3:18).

ஆவிக்குரிய காரியங்களைக் கர்த்தராகிய இயேசு என்ற நபரிலிருந்து தனித்தனியாகப் பிரித்துப்பார்ப்பதுதான் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான தடையாகும். அவருடைய உண்மையான மதிப்பு நமக்குத் தெரிந்தால், எல்லா மகிமையும், கனமும், துதியும் அவரையே சாரும் என்ற வாஞ்சையும், விருப்பமும் இருந்தால், "ஒரு காரியத்தைச் செய்யலாமா செய்யக்கூடாதா, இப்படி நடக்கலாமா நடக்கக்கூடாது" என்று அறிந்துகொள்ள வேதவாக்கியங்களைச் சுற்றிச்சுற்றி வரமாட்டோம்; அதற்காகத் தேவனுடன் நாம் வாக்குவாதம் செய்யவும் மாட்டோம். மாறாக எல்லா மகிமையும், கனமும், துதியும், புகழ்ச்சியும் அவருக்குப் போக வேண்டும் என்பதற்காக நாம் உடனடியாக விட்டுக்கொடுப்போம்.

கிறிஸ்தவ வாழ்க்கையின் அம்சங்களைத் தனித்தனியாகப் பிரித்து, அவைகளை ஏதோவொரு காரியமாகக் கருதுவதுதான் பெரும்பாலும் பிரச்சினைக்குக் காரணம். பிரச்சினை அதில்தான் இருக்கிறது.

கர்த்தராகிய இயேசுவை மிக உயர்வாகக் கருதும்போது, உயர்வாக மதிக்கும்போது, உயர்வாகப் பாராட்டும்போது நம் ஆவிக்குரிய வளர்ச்சியிலுள்ள எல்லாச் சிரமங்களும் நீங்கிவிடுகின்றன. யாருடைய இருதயத்தில் கிறிஸ்து மிக அதிகமாக இருக்கிறாரோ, அந்த இருதயத்தில் கிறிஸ்து மிக அதிகமாக மகிமைப்படுகிறார். நம் ஆவிக்குரிய வளர்ச்சி நம் நேசருக்குள் பொதிந்துவைக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலும் கர்த்தராகிய இயேசுவுக்குரிய இடத்தை அவருக்குக் கொடுத்து, அவர் நம்மை ஆக்கிரமிக்கும்போது வளர்ச்சி இயல்பாகவே ஏற்படும். அவரே ஆதியாக இருக்கிறார், அவரே எல்லாமாக இருக்கிறார், எல்லாவற்றிலும் இருக்கிறார். முடிவாகச் சொல்வதானால், இது கிறிஸ்துவின் அளவைப்பற்றிய காரியம். எல்லாம் கர்த்தராகிய இயேசுவுக்குள் பொதிந்துவைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும்.

எல்லாமே நாம் கர்த்தரை நம் இருதயங்களில் அறிகிற அறிவைப்பற்றிய காரியமாகும். அப்போது, நம்மிலும் நம்மூலமாகவும் கர்த்தருக்குத் திறந்த வழி கிடைக்கும்.

உங்களுடைய கவனத்தையெல்லாம் அவர்மேல் குவித்துவிடுங்கள்; அவரே எல்லாம் என்பதைப் பாருங்கள்.

அவருடைய குமாரனுடைய சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்படுவதற்காகவே, "கிறிஸ்துவினுடைய அளவின்" நிறைவான வளர்ச்சியை எட்டுவதற்காகவே, "கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராவதற்காகவே" நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்; இதுவே தேவனுடைய சுவிசேஷம் (எபே. 4:11).