Adoniram Judson (August 9, 1788 – April 12, 1850) was an American missionary, who served in Burma for almost forty years. He labored there with his first wife Ann (née Hasseltine) (December 22, 1789 – October 24, 1826) and then also his second wife, Sarah (née Boardman, the widow of George Boardman who died while also serving in Burma) (November 4, 1803 – September 1, 1845).
Adoniram Judson translated the whole Bible into Burmese. He is remembered as the first significant missionary in Burma, as well as one of the first missionaries from America to travel overseas.
Their labors and their suffering are a striking testimony to their devotion to God.
இன்று நான் அடோனிராம் ஜட்சன் என்ற மிஷனரியைப்பற்றிப் பேசப்போகிறேன். இவரைப்பற்றித் தெரிந்துகொள்ள நாம் 1700களுக்குச் செல்ல வேண்டும். சரி, இப்போது நாம் அமெரிக்காவுக்குப் போவோம். அடோனிராம் ஜட்சன் 1788இல் அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் என்ற இடத்தில் பிறந்தார்.
அவருடைய குடும்பம் ஒரு கிறிஸ்தவக் குடும்பம். அவருடைய அப்பா ஒரு பாஸ்டர். மிகக் கண்டிப்பானவர். அவருடைய பெற்றோர் அவருக்குக் கிறிஸ்தவக் கோட்பாடுகளைச் சொல்லி வளர்த்தார்கள். அவர் இளம் வயதிலேயே அதிபுத்திசாலித்தனமானவர். ஒரு மேதாவி என்று சொல்லக்கூடிய அளவுக்குப் புத்திசாலி. ஒருமுறை அவருடைய அப்பா இரண்டு வாரங்கள் வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது அவருடைய அம்மா, "சரி, இவனுக்கு வாசிக்கக் கற்றுக்கொடுக்கலாமே!" என்று நினைத்து வாசிக்கச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். இரண்டு வாரங்களில் அவர் சரளமாக வாசிக்கக் கற்றுக்கொண்டார். இரண்டு வாரங்கள் கழித்து வீடு திரும்பிய அப்பாவுக்கு, மூன்று வயதே ஆன அடோனிராம் வேதாகமத்திலிருந்து ஒரு முழு அதிகாரத்தை வாசித்துக் காண்பித்தான்.
அவர் பள்ளிப்படிப்பை வெகு வேகமாக முடித்துவிட்டார். எல்லா மாணவர்களையும்போல் அவர் எல்லா வகுப்புகளிலும் படிக்கவில்லை. அவர் ஒவ்வொரு வகுப்பிலும் படிக்கவில்லை. அவருடைய புத்திசாலித்தனத்தினால் அவர் முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு எனத் தாவித்தாவி சென்றார். 16 வயதிலேயே அவர் பல்கலைக்கழகத்தில் நுழைந்துவிட்டார். பல்கலைக்கழகத்திலும் அவர் இப்படித் தாண்டித்தாண்டித்தான் சென்றார். படிப்பில் முதல் மாணவன். பல விருதுகளைப் பெற்றார். ஆனால், பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில், அவரைச் சுற்றியுள்ள நண்பர்களால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். அப்படிப்பட்ட நண்பர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜேக்கப் ஈம்ஸ். இவர் இயற்கையே கடவுள் என்ற கொள்கையுடையவர். அந்த நாட்களில் இந்தக் கொள்கை மிகவும் பிரபலமாக இருந்தது. அன்று அது ஒரு புதிய வழி என்றும், முற்போக்கான சிந்தனை என்றும் கருதப்பட்டது. அவர்கள் "நவீன" சிந்தனையாளர்கள் என்று கருதப்பட்டார்கள். அவர்கள் தங்கள் தத்துவத்தை நம்பினார்கள். இந்தக் கொள்கையுடையவர்கள் கிறிஸ்தவத்தை எதிர்த்தார்கள். கிறிஸ்தவமும், பிற மதங்களும் இயற்கையின் ஒழுங்கைக் கெடுத்துவிட்டன என்று அவர்கள் நினைத்தார்கள். ஜேக்கப் ஈம்ஸ் இதில் தீவிரமாக இருந்தான். அவனும் நல்ல அறிவாளியாகவும், அதிநவீன சிந்தனையாளனாகவும் இருந்ததால், அவனும் அடோனிராமும் நல்ல நண்பர்களாக மாறினார்கள். அவனுடைய தாக்கம் அடோனிராமில் அதிகமாக இருந்தது. அவர்கள் இருவரும் கிறிஸ்தவதுக்கு எதிரான கருத்துக்களில் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு வளர்ந்தார்கள்.
ஒருமுறை அவர் வீட்டிற்குச் சென்றபோது, தன் புதிய நம்பிக்கையையும், கொள்கையையும்குறித்துத் தன் பெற்றோரிடம் கூறினார். அவர் அவருடைய அப்பாவைப்போல் ஒரு பாஸ்டராக மாறுவார் என்று அவருடைய பெற்றோர் எதிர்ப்பார்த்தார்கள், நம்பினார்கள். அடோனிராம் தன் புதிய எண்ணப்போக்கைச் சொன்னதும் அவர்கள் உடைந்துபோனார்கள். அவர் தன் பெற்றோரிடம், "நான் பாஸ்டராகப்போவதில்லை, அதற்கு வாய்ப்பேயில்லை. உண்மையில், நான் கடவுளை நம்பவில்லை. நிச்சயமாக இயேசுவையோ, வேதாகமத்தையோ நம்பவில்லை. எனவே, நான் உங்கள் அடிச்சுவடுகளைப் பின்பற்றப்போவதில்லை," என்று உறுதியாகத் தெரிவித்தார். அவருடைய அணுகுமுறையும், புதிய சிந்தனையும், கிறிஸ்தவத்திற்கு எதிரான அவருடைய போக்கும் அவருடைய பெற்றோரின் இருதயத்தை உடைத்து நொறுங்கின. அவருடைய பெற்றோர் அவருக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்க ஆரம்பித்தார்கள்.
அவர் வெறுமனே முற்போக்கான சிந்தனையோடு நிறுத்த விரும்பவில்லை. முற்போக்கான வாழ்க்கைமுறையையும் அவர் விரும்பினார். அன்றைய நாட்களில் அறிவுஜீவிகள் சிக்கிக்கொண்ட வழக்கமான துறைகளில் அவர் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அவர் நாடகங்களுக்காக எழுத விரும்பினார். அதுவே அவருடைய இலக்கு. எனவே, அவர் நியூயார்க்கிற்குச் சென்று, நாடகங்களுக்காகக் கதைவசனம் எழுதி, அந்தத் துறையில் பேரும் புகழும் பெற வேண்டும் என்று விரும்பினார். தன் இலக்கை எட்ட அவர் தன் பெற்றோரிடம் கொஞ்சம் பணம் கேட்டார், அவர்கள் பணம் கொடுத்தார்கள், ஒரு குதிரையும் கொடுத்தார்கள். அவைகளை வாங்கிக்கொண்டு அவர் நியூயார்க்கிற்குப் புறப்பட்டார்.
நாடக உலகம் அவர் எதிர்பார்த்ததுபோலவோ, நினைத்ததுபோலவோ இருக்கவில்லை. நாடக உலகத்தைப்பற்றி அவர் இலட்சிய கனவுகள் வைத்திருந்தார். உயர்ந்த இலட்சியங்கள் வைத்திருந்தார். ஆனால், நேரில் பார்த்தபோது அது அப்படி இருக்கவில்லை. எனவே, ஐந்து வாரங்களுக்குப்பிறகு, அவர் வீட்டிற்குத் திரும்பிச்செல்ல முடிவுசெய்தார். மாசசூசெட்ஸுக்கு வீட்டிற்குச் செல்லும் வழியில், அவர் நெடுஞ்சாலையில் இருந்த ஒரு சாதாரணமான சத்திரத்தில் தங்கினார். அவர் அங்கு போனபோது அந்தச் சத்திரத்தில் தங்குவதற்கு இடம் காலியாக இல்லை. எல்லா அறைகளிலும் ஆட்கள் இருந்தார்கள். அந்த விடுதியின் சொந்தக்காரர் கொஞ்சம் தயக்கத்தோடு, "ஓர் அறை காலியாக இருக்கிறது. ஆனால், நாங்கள் அந்த அறையை யாருக்கும் கொடுப்பதில்லை. யாருக்கும் கொடுப்பதில்லை என்பதைவிட அந்த அறையில் யாரும் தங்க விரும்புவதில்லை என்பதுதான் உண்மை," என்றார். அடோனிராம் அதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அவர், "அந்த அறைக்குப் பக்கத்துக்கு அறையில் தங்கியிருப்பவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவர் எப்போதும் கத்திக்கொண்டு அழுகிறார். அடுத்த அறையில் இருப்பவர்களால் ஓய்வெடுக்கவோ, உறங்கவோ முடியாது. எனவே, யாரும் அந்த அறையில் தங்குவதில்லை, நிச்சயமாக நீங்கள் அங்கு தங்க விரும்பமாட்டீர்கள்," என்றார்.
அதற்கு அடோனிராம், "அந்த அறையில் தங்குவதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அடுத்த அறையில் யார் தங்கியிருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, என்னைப் பொறுத்தவரை, மரணம் ஒன்றுமில்லை. பரலோகம் நரகம் என்று ஒன்று கிடையாது. அதெல்லாம் முட்டாள்தனமான பேச்சு," என்று திமிரோடு பதில் சொன்னார். எனவே, விடுதிக்காரர் அந்த அறைய அடோனிராமுக்குக் கொடுத்தார். அடோனிராம் அன்றிரவு அந்த அறையில் தங்கினார்.
அன்றிரவு அவர் அந்த அறையில் படுத்துக்கொண்டிருந்தபோது, பக்கத்து அறையில் இருந்த மனிதனின் கூக்குரலையும், கதறலையும், அழுகையையும் அவர் கேட்டார்; அது தாங்கமுடியாத அளவுக்கு மோசமாக இருந்தது. அவரால் தூங்க முடியவில்லை. இரண்டு அறைகளுக்கும் இடையில் இருந்த சுவர் மிகவும் மெல்லியது. எனவே, அடுத்த அறையில் இருந்த சத்தம் மிகத் தெளிவாகக் கேட்டது. அவருடைய கதறல், முனகல், வேதனை, அழுகை, கூக்குரல் அனைத்தும் தெளிவாகக் கேட்டன. அடுத்த அறையில் இருந்தவன் தனக்குத்தானே பேசிக்கொள்வதையும் கேட்க முடிந்தது. அடோனிராம் பதற்றமடைந்தார். உலகத்தைப்பற்றி ஜேக்கப் ஈம்சும் அவரும் பேசிய எல்லாவற்றையும் அவர் ஒருமுகப்படுத்த முயன்றார். எனினும், அவருக்குள் இருந்த பதற்றம் நீங்கவில்லை. மிகவும் சங்கடப்பட்டார். உண்மையில், அவர் படுத்திருந்தபோது, "அடுத்த அறையில் அந்தப் படுக்கையில் இப்போது நான் படுத்துக்கொண்டு இறந்துகொண்டிருந்தால் எப்படியிருக்கும்? நான் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேனா?" என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.
அந்த இரவு முழுவதும் அவரால் கொஞ்சங்கூடத் தூங்கமுடியவில்லை. காலையில் விடுதியைவிட்டு வெளியேற கீழே சென்றார். விடுதியின் மேலாளரிடம், "அந்த அறையில் இருப்பவன் எப்படியிருக்கிறான்? இப்போது பரவாயில்லையா? என்று விசாரித்தார். அதற்கு அந்த மேலாளர், "இல்லை, அவன் இன்று அதிகாலையில் இறந்துவிட்டான். வலிக்கிறது. அவன் உங்களைப்போல் ஒரு வாலிபன்," என்று கூறினார். உடனே அடோனிராம் எந்தக் காரணமுமின்றி, "அவருடைய பெயர் என்ன?" என்று கேட்டார். அந்த விடுதிக்காரர், "அவனுடைய பெயர் ஜேக்கப் ஈம்ஸ்," என்று கூறினார். அடோனிராம் ஆடிப்போனார். "பக்கத்துக்கு அறையில் அழுதுகொண்டிருந்தது, பயத்தில் கத்திக்கொண்டிருந்தது, ஓலமிட்டு அலறிக்கொண்டிருந்தது என் நண்பனா? இந்நாள்வரை என் வாழ்வில் நான் மாதிரியாகக் கருதிய என் நண்பனா? என் சிந்தனைகளையும், உலகக் கண்ணோட்டத்தையும் உருவாக்கிக்கொள்ள யாரை நான் முன்மாதிரியாகக் கொண்டிருந்தேனோ அந்த நண்பனா?" என்று அங்கலாய்த்தார், நடுநடுங்கினார். அவர் தன் குதிரையில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தார். எங்கு போகிறோம் என்று தெரியாமலே சவாரி செய்தார். ஆனால், அவருடைய காதுகளில் "இறந்தான், இழந்தான், இழந்தான், இறந்தான்," என்ற வார்த்தைகள் ஒலித்துக்கொண்டேயிருந்தன.
இந்த நிகழ்ச்சியும், அனுபவமும் அவரை தேவனைநோக்கி உந்தித்தள்ளின. அவர் தேவனைத் தேடுவதற்கு இந்த அனுபவம் ஒரு தொடக்கமாக அமைந்தது. "நான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன். என்னுடைய உலகக் கண்ணோட்டமெல்லாம் வெறுமை, மாயை," என்று அவர் உணரத்தொடங்கினார். அவர் வீட்டிற்கு திரும்பிச் சென்றபோது, "நான் ஆன்டோவரில் உள்ள இறையியல் கல்லூரிக்குப் போய் இறையியல் படிக்க விரும்புகிறேன்," என்று தன் பெற்றோரிடம் கூறினார். இதைக் கேட்ட அவருடைய பெற்றோர் அதிர்ச்சியடைந்தார்கள். அவருடைய வாழ்க்கையில் ஏதோவொரு மிகப் பெரிய சம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அவர்கள் புரிந்துகொண்டார்கள். அடோனிராம் மிகவும் மாறியிருந்தார். ஆனால், அந்த நேரத்தில் அவர் இரட்சிக்கப்பட்டிருந்தார் என்று சொல்ல முடியாது. இறையியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் அவர் உண்மையிலேயே இரட்சிக்கப்பட்டார்.
அன்டோவரில் இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், நற்செய்தி அறிவிப்பதற்காக வெளிநாடுகளுக்கு மிஷனரியாகச் செல்வதைப்பற்றியும், பிற இடங்களுக்குச் செல்வதைப்பற்றியும், தொலைதூர நாடுகளுக்குச் செல்வதைப்பற்றியும் அவர் சிந்திக்கத் தொடங்கினார். ஒரு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி பர்மாவைப்பற்றி எழுதியிருந்த சில தகவல்கள் அவருக்குக் கிடைத்தன. இன்று மியான்மார் என்று அழைக்கப்படுவது அன்று பர்மா என்று அழைக்கப்பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் பர்மாவைப்பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது. மேலும் 1800களில் நற்செய்தி அறிவிக்க வெளிநாடுகளுக்குச் செல்வது, குறிப்பாக மிஷனரியாகத் தொலைதூர நாடுகளுக்குச் செல்வது, என்பது அசாதாரணமான ஒரு காரியம். அதுவரை அமெரிக்காவிலிருந்து யாரும் வெளிநாடுகளுக்கு மிஷனரியாகச் செல்லவில்லை. மிஷினரிகளை அனுப்புவதற்கு அதுவரை அமெரிக்காவில் மிஷன் அமைப்புபோன்ற எதுவும் இருந்ததில்லை.
அடோனிராமும், வேறு சில மாணவர்களும் சேர்ந்து நற்செய்தி அறிவிப்பதற்காக வெளிநாடுகளுக்கு மிஷினரிகளை அனுப்புவதற்கும், உதவுவதற்கும் நிதி சேர்க்க முயன்றார்கள். பல்கலைக்கழகத்திலேயே இதற்கான முயற்சிகளை எடுத்தார்கள். பர்மாவுக்குச் செல்ல வேண்டும் என்ற பலமான உணர்வு அடோனிராமுக்குள் எழுந்தது. ஆனால், பர்மாவைப்பற்றி அன்று யாருக்கும் எதுவும் தெரியாது. ஓர் இராணுவ அதிகாரி எழுதியிருந்த சில குறிப்புகளைத்தவிர பர்மாவைப்பற்றிய எந்தத் தகவலும் எங்கும் கிடைக்கவில்லை.
அவருடைய வருங்கால மனைவி ஆன் ஹாசெல்டைன் ஒரு சமூகவாதி. அவருடைய குடும்பம் பெரிய குடும்பம். அவர்கள் வாழ்ந்த வீடு மிகப் பெரிய வீடு. வசதியான குடும்பம். அவர் கடைசி மகள், விருந்துகளுக்கும், கேளிக்கைகளுக்கும் பலர் அவளை விரும்பி அழைத்தார்கள். அவள் பிறரிடம் மிகவும் சகஜமாகப் பழகக்கூடியவர். எனவே, மக்கள் அவளை மிகவும் விரும்பினார்கள். அந்த நாட்களில் எல்லோரையும்போல அவர்களும் ஆலயத்துக்குப் போய்வந்தார்கள், ஆராதனைகளில் கலந்துகொண்டார்கள். ஆனுக்குச் சுமார் 16 வயதிருக்கும். அப்போது ஒரு புதிய போதகர் வந்தார். அவர் வந்தபிறகுதான் அவர் தன் வாழ்க்கையில் முதல்முறையாகத் தன் விசுவாசத்தைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார். இந்தப் புதிய ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் மட்டும் அல்ல, வேறு பல இடங்களிலும் பேசினார். அந்தச் சபையில் ஒரு பெரிய எழுப்புதல் ஏற்பட்டது. உண்மையில், ஆனின் குடும்பத்தார் அனைவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆலயத்துக்குச் சென்றுவந்தபோதும், ஆராதனைகளில் கலந்துகொண்டபோதும், அவர்களில் யாரும் இரட்சிக்கப்படவில்லை என்பதை உணர்ந்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் அனைவரும் இரட்சிக்கப்பட்டார்கள்.
இரட்சிக்கப்பட்டவுடன், தன்னிடம் தேவனுக்குப் பிரியமில்லாத மோசமான பழக்கங்கள் நிறைய இருப்பதை அவள் உணர்ந்தாள். அவளுடைய அந்த இளம் வயதில் கிறிஸ்தவளாக வாழ்வதில் அவளுக்கு நிறையப் போராட்டங்கள் இருந்தன. எனினும், அவள் கிறிஸ்துவுக்குள் வளர்ந்தாள். தான் இதுவரை மிகவும் அற்பமான வாழ்க்கை வாழ்ந்திருப்பதை அவள் உணர்ந்தாள். ஏனென்றால், அதுவரை அவளுடைய எண்ணங்களெல்லாம் எப்படியிருந்தன தெரியுமா? அடுத்த நிகழ்ச்சிக்குப் போகும்போது எந்தத் தொப்பியை அணிய வேண்டும், தலைமுடியை எப்படி அலங்கரிக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், என்ன பொருட்கள் வாங்க வேண்டும், அடுத்த நிகழ்ச்சி எங்கே, அடுத்த விருந்து எங்கே என்பவைபோன்ற காரியங்களைச் சிந்திப்பதில்தான் அவள் தன் நேரத்தைச் செலவிட்டாள். வேறு காரியங்களைப்பற்றி அவள் சிந்திக்கவேயில்லை. எனவே, இரட்சிக்கப்பட்டபின் அவள் தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டாள். தான் முன்பு செய்த தகாத செயல்களை இனிச் செய்யப்போவதில்லை என்றும், இனிமேல் வித்தியாசமாக இருக்கப்போவதாகவும் தீர்மானித்தாள். ஆனால், அவள் தீர்மானித்தபடி நடக்க முடியவில்லை. அவள் தோற்றுப்போனாள். "மாம்ச சிந்தை தேவனுக்குவிரோதமான பகை" என்ற வசனத்தைப் புரிந்துகொண்டதாக அவள் தன் நாட்குறிப்பில் எழுதிவைத்திருந்தாள். இரட்சிக்கப்பட்டபிறகு, அவள் தன் வாழ்க்கையைப்பற்றி மிகவும் வித்தியாசமாகச் சிந்திக்க விரும்பினாள்; அவள் தன் வாழ்க்கையை வீணாக்க விரும்பவில்லை. எனவே, அவள் ஓர் ஆசிரியராக முடிவு செய்தாள். அந்த வகையில் குறைந்தபட்சம் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்று அவள் நினைத்தாள். அவளுடைய நாட்குறிப்பை வாசிக்கும்போது, அவள் எவ்வளவு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தாள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. "கிறிஸ்தவர்கள் எந்த அளவுக்கு அதிகமாகக் கிருபையை அனுபவிக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் பரிசுத்தத்திற்கும் பாவத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வார்கள்," என்று அவர் தன் 17ஆவது வயதில் தன் நாளேட்டில் எழுதினார்.
ஆன் குடும்பத்தார் விருந்தோம்பல் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர்கள், பேர்பெற்றவர்கள். அவர்கள் கொடுத்த விருந்தோம்பலில் ஒருநாள் அடோனிராம் கலந்துகொண்டார். ஆனும் அடோனிராமும் அப்போதுதான் ஒருவரையொருவர் முதன்முறையாகச் சந்தித்தார்கள். அப்போது அவருக்கு வயது 22, ஆனுக்கு வயது 21. அவர்கள் தங்கள் சந்திப்பின்போது விசுவாசத்துக்கடுத்த காரியங்களைப்பற்றிப் பேசத் தொடங்கினார்கள். அந்த நாட்களில் நற்செய்தி அறிவிக்கத் தொலைதூர நாடுகளுக்கு மிஷினரியாகச் செல்வது என்பது யாரும் .எண்ணிப்பார்க்காத ஒன்று. அப்படியிருந்தும், அடோனிராம் தான் ஒரு மிஷனரியாகச் செல்லவிருப்பதைச் சொன்னபோது ஆன் அதைப் புரிந்துகொண்டாள். அவருடைய பாரத்தை அவள் பகிர்ந்துகொண்டாள். இந்தச் சந்திப்புக்குப்பின் ஒரு மாதம் கழித்து, அடோனிராம் ஆனைத் தான் திருமணம் செய்ய விரும்புவதாக ஆனின் தந்தைக்குக் கடிதம் எழுதினார். அவர் பெண் கேட்டு எழுதிய கடிதம் ஓர் அசாதாரணமான கடிதம் என்று சொல்ல வேண்டும். யாராவது பெண் கேட்டு இப்படிக் கடிதம் எழுதுவார்களா என்று எனக்குத் தெரியாது. அப்படி என்ன எழுதினார் என்று கேட்கிறீர்களா? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் இதோ சில வரிகள்.
"அன்புள்ள ஐயா, வரப்போகிற வசந்த காலத்தின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் மகளை எனக்கு மனைவியாகத் தந்து அவளை நீங்கள் நிரந்தரமாகப் பிரிவதற்கு உங்களுக்குச் சம்மதமா? அதற்குப்பின் நீங்கள் அவளை இந்த உலகத்தில் காணமாட்டீர்கள். இதற்குச் சம்மதமா? அஞ்ஞானிகள் வாழும் நாட்டுக்குச் செல்வதற்கும், கப்பல் பயணத்தின் ஆபத்துக்களைச் சந்திப்பதற்கும், துன்பங்களையும், எல்லாவிதமான துயரங்களையும் அனுபவிப்பதற்கும், அழிவு, அவமானம், சித்திரவதை, ஏன் வன்முறையான மரணத்தைக்கூடச் சந்திக்க அவளை எனக்கு மணமுடிக்க உங்களுக்குச் சம்மதமா? அழிந்துகொண்டிருக்கும் ஆத்துமாக்களின்பொருட்டு, பரலோகத்தைவிட்டு இந்த உலகத்துக்கு வந்து உங்களுக்காகவும், அவளுக்காகவும், எனக்காகவும் மரித்த இயேசுவின் பொருட்டு, அழிவில்லாத ஆத்துமாக்களின்பொருட்டு, சீயோனின்பொருட்டு, தேவனுடைய மகிமையின்பொருட்டு நீங்கள் இதற்குச் சம்மதிக்கிறீர்களா?"
எப்படிப்பட்ட கடிதம் பாருங்கள். ஆனின் பெற்றோராகிய ஜாணும், ரெபெக்காவும் சம்மதித்தார்கள். அவர்கள் ஆனிடம், "முடிவு உன்னைப்பொறுத்தது, எங்களைப்பொறுத்ததல்ல," என்று சொன்னார்கள். ஆன் உண்மையாகவே அடோனிராமை நேசித்தார். ஆனால் அவர் அடோனிராமை நேசித்ததைவிட, தொலைதூர நாட்டுக்கு மிஷனரியாகச் சென்று நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற அவருடைய தரிசனத்தை அதிகமாக நேசித்தார். இது உண்மையிலேயே ஓர் அசாதாரணமான முடிவு. ஏனென்றால், அந்த நாட்களில் அமெரிக்காவிலிருந்து எந்தப் பெண்ணும் வெளிநாட்டுக்கு மிஷனரியாகச் சென்றதில்லை. அன்று, ஒரு பெண் மிஷனரியாக வெளிநாட்டுக்குச் செல்வது, குறிப்பாக பர்மாபோன்ற யாருக்கும் எதுவும் தெரியாத ஒரு நாட்டுக்குச் செல்வது பொருத்தமற்றது என்று மக்கள் கருதினார்கள். அந்த நாட்களில் அது "செவ்வாய்க் கிரகத்திற்குப்" போவதற்குச் சமானமாகக் கருதப்பட்டது. மக்கள் ஆன்மீது குற்றம்சாட்டினார்கள். "நீ ஒரு இலட்சியவாதி. உன் தலைக்குள் ஒன்றும் இல்லை. உன் தலை காலியாக இருக்கிறது. அடோனிராம்மேல் நீ கொண்டிருக்கும் காதல் உன் கண்ணை மறைக்கிறது. நீ காட்டுத்தனமானவள்," என்றெல்லாம் மக்கள் அவள்மேல் குற்றஞ்சுமத்தினார்கள். ஆனால், ஆன் பர்மாவுக்குச் செல்வதில் உறுதியாக இருந்தார். அவருடைய உறுதியான தீர்மானம் மேலும் சில வாலிபர்களின்மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
1812இல், ஆனும் அடோனிராமும் திருமணம்செய்துகொண்டார்கள். திருமணமாகி ஒரு சில நாட்களில், அவர்கள் இருவரும் எல்லாருக்கும் ஓர் உணர்ச்சிபூர்வமான பிரியாவிடை சொல்லிவிட்டு தங்கள் பயணத்தைக் தொடங்கினார்கள். ஐந்து ஆண்களும் மூன்று பெண்களும் அமெரிக்காவிலிருந்து மிஷனரிகளாகக் கிளம்பினார்கள். முதலில் இந்தியாவுக்குச் சென்று, பின்பு அங்கிருந்து அவர்கள் வெவ்வேறு நாடுகளுக்குச் செல்வது என்று தீர்மானித்திருந்தார்கள். எல்லாரிடமும் விடைபெற்றுச் செல்வது அவர்களுக்கு மிகக் கடினமாக இருந்தது. தேனிலவுக்குச் செல்ல வேண்டியவர்கள் மிஷனரிகளாகச் சென்றார்கள். அவள் தன் குடும்பத்தை நினைத்து அடிக்கடி அழுதாள். இனி தன் குடும்பத்தை ஒருபோதும் பார்க்கப்போவதில்லை என்ற எண்ணம் அவளை வாட்டியது. தன் வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது என்று அவளுக்குத் தெரியாது. பர்மாவில் கால் வைப்போமா வைக்கமாட்டோமா என்றுகூட அவர்களுக்குத் தெரியாது. அங்கு அரசாங்கம் எப்படி இருக்கும் என்று தெரியாது. தாங்கள் போகப்போகிற நாட்டைப்பற்றி எதுவும் தெரியாது. எங்கே போகப்போகிறோம், போய்ச்சேருவோமா சேர மாட்டோமா என்றுகூடத் தெரியாது. ஆனால், அவர்கள் தேவனுடைய இறையாண்மையை நம்பினார்கள், தேவனை முற்றிலும் விசுவாசித்தார்கள்.
1800களில் பர்மா மிகவும் வளமான நாடாக இருந்தது. மிகவும் வளமான நாடு என்று சொல்லமுடியாவிட்டாலும், அதன் அருகிலிருந்த வேறு பல நாடுகளோடு ஒப்பிடுகையில் வளமான நாடுதான். அந்த நாடு முழுக்க முழுக்க புத்த நாடு. ஒருவன் பர்மியனாக இருக்க வேண்டுமானால், அவன் புத்தமத்தைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும். அங்கு யாரும் வேறு எந்த மதத்திற்கும் மாற முடியாது. அதற்கு அனுமதி இல்லை. ஒரு சில வெளிநாட்டினர் மட்டுமே அதுவரை பர்மாவுக்கு வந்திருந்தார்கள் அல்லது பர்மாவழியாகச் சென்றிருந்தார்கள். பர்மாவுக்கு வந்த சில வெளிநாட்டினர் கொல்லப்பட்டார்கள். அங்கே வில்லியம் கேரியின் மகனான பெலிக்ஸ் கேரி என்ற ஒரு மிஷனரி இருந்தார். அவர் 1807இல் வந்தார். வில்லியம் கேரி இந்தியாவில் இருந்தார். அங்கிருந்துதான் நற்செய்தி பணியைச் செய்துகொண்டிருந்தார். எனவே, மிகச் சிலரே பர்மாவுக்குள் சென்றிருந்தார்கள். அடோனிராமும், ஆனும் பர்மாவுக்குச் செல்ல வேண்டாம் என்று வில்லியம் கேரி கடுமையாக அறிவுறுத்தினார். "நீங்கள் அங்கு போவது மிகவும் ஆபத்தானது, அவர்கள் மிருகத்தனமானவர்கள். அவர்கள் வெளிநாட்டுக்காரர்களை மிகக் கேவலமாக நடத்துவார்கள். அங்கு இருக்கும் அரசன் பயங்கரமான ஊழல்வாதி. பிறரை பயங்கரமாகச் சித்திரவதை செய்வார்கள். அவர்கள் கொடுக்கும் மரணதண்டனை மிகக் கொடூரமானது," என்று அவர்கள் எடுத்துரைத்தார்கள். ஆனால், அடோனிராமும் ஆனும் தேவன் தங்களைப் பர்மாவுக்கு அழைக்கிறார் என்று உறுதியாக உணர்ந்தார்கள்.
அவர்கள் திட்டமிட்டபடியே, கப்பல் பயணம் ஆரபித்தது. முதலாவது அவர்கள் இந்தியாவுக்குச் சென்றார்கள். அங்கு, நான் ஏற்கெனவே சொன்னதுபோல, அவர்கள் வில்லியம் கேரியைச் சந்தித்து, அவருடன் சிறிது காலம் தங்கினார்கள். அந்த நாட்களில், இன்று நாம் பயணிப்பதுபோல, வேகமாகப் பயணிக்க முடியாது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல வேண்டுமானால், கப்பலுக்காகப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். எனவே, அடுத்த கப்பலுக்காக, அவர்கள் இந்தியாவில் கொஞ்சக் காலம் காத்திருந்தார்கள். கடைசியாகக் கப்பல் கிடைத்தது. இந்தியாவிலிருந்து பர்மாவுக்குப் பயணம் தொடர்ந்தது.
கப்பல் பயணம் அவ்வளவு இனிமையாக இருக்கவில்லை. அந்த நேரத்தில் ஆன் கர்ப்பமாக இருந்தார், கப்பல் பயணத்தின்போது அவருக்குக் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை இறந்து பிறந்தது. ஆன் மிகவும் நோய்வாய்ப்பட்டாள். ஆனுக்கு உதவிசெய்ய அவர்கள் ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள். ஆனால், அந்தப் பெண் அவர்களுடைய கப்பல் பயணத்தின் ஆரம்பத்திலேயே இறந்துவிட்டார். இந்தக் கடினமான அனுபவங்களோடுதான் அவர்கள் பர்மாவுக்குள் நுழைந்தார்கள்.
அவர்கள் ரங்கூனுக்கு வந்துசேர்ந்தார்கள். அந்த இடத்தைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள் தங்கப்போகிற வீடு மூங்கில்களால் கட்டப்பட்டிருந்தது. வீடு தரையில் இல்லை. மாறாக, மூங்கில்களில் தொங்கிக்கொண்டிருந்தது. ஏனென்றால், அந்த இடத்தில் அடிக்கடி வெள்ளம் வருவதுண்டு. வெள்ளத்தில் வீடு மூழ்கிவிடாதவாறு, வீட்டைத் தூக்கிக்கட்டியிருந்தார்கள். மக்கள், வீட்டுக் கழிவுகளைக் கீழே தரையில் வீசிவிடுவார்கள். எனவே, கீழே எல்லா இடங்களிலும் எலிகள் ஓடிக்கொண்டிருந்தன. கழிவுப்பொருட்கள்மேல் ஈக்களும், எறும்புகளும் மேய்ந்துகொண்டிருந்தன. கழிவுநீர் ஓடுவதற்கு எந்த வடிகாலும் கிடையாது. எங்கும் துர்நாற்றம்.
அடோனிராம் வெளியே பார்த்தபோது, நகரத்தின் மையத்தில் இருந்த புத்தக் கோயிலான தங்கப் பகோடா பிரமாண்டமாகத் தெரிந்தது. இது புத்தரின் எட்டு முடிகளில் கட்டப்பட்டதாகக் கருதப்பட்டது. அடோனிராம் இதைப் பார்த்தபோது, "என் குரலைவிட வல்லமையான ஒரு குரல், ஒரு மெல்லிய அமர்ந்த குரல், இந்த ஆதிக்கத்தின் சுவடுகளை வெகு சீக்கிரத்தில் துடைத்தழித்துவிடும். இயேசு கிறிஸ்துவின் சபைகள் விரைவில் இந்தச் சிலைவழிபாட்டின் நினைவுச்சின்னங்களை அகற்றிவிடும்," என்றார்.
ஆன் இன்னும் உடல்நிலை சரியில்லாமல், மிகவும் பலவீனமாகத்தான் இருந்தார். அவர் படகிலிருந்து இறங்கவே உதவி தேவைப்பட்டது. படகிலிருந்து இறங்கி அவர் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார். நிற்பதற்கோ, நடப்பதற்கோ பலம் இல்லை. அந்த அளவுக்குக் களைத்துப்போயிருந்தார். உட்காரக்கூடப் பலம் இல்லை. குனிந்து உட்கார்ந்திருந்தார். அவர்கள் கப்பலிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தபோது நிறைய மக்கள் கூடிவிட்டார்கள். குழந்தைகள் அவர் பக்கம் வந்து அவருடைய தொப்பியைத் தொட்டுப்பார்த்துவிட்டு கீழே குதித்து ஓடிவிடுவார்கள். அவர்தான் பர்மாவுக்கு வந்த முதல் வெள்ளைக்காரப் பெண். அதுவரை அவர்கள் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைப் பார்த்ததில்லை.
அவர்கள் பெலிக்ஸ் கேரியின் வீட்டில் குடியேறினார்கள். பெலிக்ஸ் கேரி அப்போது அங்கு இருக்கவில்லை. அவர் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர் நாடு முழுவதும் தடுப்பூசிகள்போடுவதுபோன்ற மருத்துவ சேவைகளைச் செய்துகொண்டிருந்தார். மிஷன் ஹவுஸ் நகரத்திற்கு வெளிய பொது மரணதண்டனை நிறைவேற்றப்படும் இடத்தருகே இருந்தது. அவர்கள் வீட்டருகே பெரிய குப்பைக் கிடங்கும் இருந்தது. எனினும், அந்த வீடு அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. அவர்கள் அந்த வீட்டில் தங்கினார்கள்.
அவர்கள் பர்மாவுக்குச் சென்று அந்த வீட்டில் குடியேறியபிறகு, ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கவில்லை என்று சொல்லலாம். பர்மீய மொழியைப் பேச முடியாவிட்டால் தங்களால் ஒன்றும் செய்யமுடியாது, தங்கள் ஊழியம் பயனற்றதாகிவிடும் என்று அவர்களுக்குத் தெரிந்ததால், அவர்கள் உடனே அந்த மொழியைப் படிக்கத் தொடங்கினார்கள். ஆனால்,அது அவ்வளவு எளிதல்ல என்பதைப் புரிந்துகொண்டார்கள். ஆனும், அடோனிராமும் மொழிகளைக் கற்றுக்கொள்வதில் திறமைசாலிகள். அடோனிராமுக்கு இலத்தீன் மொழி சரளமாகத் தெரியும். ஆனால், அவ்வளவு திறமைசாலியான அடோனிராமுக்கு பர்மீய மொழியைக் கற்றுக்கொள்வது கடினமாக இருந்தது. பர்மீய மொழிக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த மொழியின் எழுத்துக்கள் முற்றிலும் வேறுபட்டவை. எனவே, அந்த மொழியைக் கற்றுக்கொள்வது மலைப்பாக இருந்தது. அந்த மொழியில் நிறுத்தற்குறிகள் கிடையாது. எனவே, ஒரு வார்த்தை எங்கு தொடங்குகிறது, எங்கு முடிகிறது என்றும் தெரியவில்லை. அந்த மொழியைப்பற்றி அவர் தெரிந்துகொள்ள ஆரம்பித்தபோது, அவருக்குச் சில ஓலைச்சுவடிகள் கிடைத்தன. அவைகளில் அந்த மொழியைப்பற்றிய சில தகவல்கள் கிறுக்கப்பட்டிருந்தன. அவ்வளவே. ஆகையால், அவர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் செலவழித்து அந்த மொழியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பர்மீய மொழியைக் கற்றுக்கொள்ள அவர் ஓர் ஆசிரியரின் உதவியை நாடினார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. அவர் ஒரு பொருளைச் சுட்டிக்காட்டி அதன் பெயரைச் சொல்லுவார். அடோனிராம் அந்தப் பெயரைக் கற்றுக்கொள்வார். ஆனும் அவருடன் சேர்ந்து மொழியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். கேரி ரங்கூனுக்குத் திரும்பி வந்து அடோனிராமையும், ஆனையும் பார்த்தபோது, பிரமிப்படைந்தார்.
பர்மீய மொழியைக் கற்றுக்கொள்ள அவர் கடுமையாக உழைத்தார். அவருடைய உடல்நலம் பாதிக்கப்படும் அளவுக்கு அவர் பிரயாசப்பட்டார். ஆறு மாதங்களில் அவர் மொழியை நன்கு புரிந்துகொண்டார். பெலிக்ஸ் கேரியால் அதை நம்பமுடியவில்லை. பெலிக்ஸ் கேரி அவருடைய வாழக்கையில் பல சிரமங்களைச் சந்தித்தார். அவருடைய மனைவியும், இரண்டு குழந்தைகளும் ஒரு படகு விபத்தில் இறந்தார்கள். அவர் தன் பெரும்பாலான எல்லா உடைமைகளையும் இழந்தார். இந்த அசம்பாவிதங்களால் அவர் கடுமையான மனஅழுத்தத்திற்கு ஆளானார். இவைகளால் அவர் உடைந்துபோனார் என்று சொல்லலாம். எனவே, அவர் நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் போனபிறகு அடோனிராமும், ஆனும் மட்டுமே பர்மாவில் தனியாக இருந்தார்கள்.
ஆன் பர்மீய மொழியில் சீக்கிரம் பேசக் கற்றுக்கொண்டார். அவருடைய வீட்டில் வேலைசெய்த பணிப்பெண்களுடன் பழகியதால் அவர் சீக்கிரத்தில் மொழியைப் பேச ஆரம்பித்தார். அடோனிராம் அந்த மொழியின் இலக்கணத்தையும், இலக்கியத்தையும் முறையாகக் கற்றுக்கொள்வதில் ஈடுபட்டிருந்தார். கடுமையாக உழைத்தார். அவர் புத்தமதத்தின் நூல்களையும் படித்தார், இரண்டு ஆண்டுகளில் அவர்கள் இருவரும் பர்மீய மொழியில் தேறினார்கள்.
பர்மாவுக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக அடோனிராமும், ஆனும் உணர்ந்தார்கள். அதுவரை அந்த நாட்டில் ஒரு கிறிஸ்தவன்கூட இல்லை. அந்த நாட்டைப்பொறுத்தவரை அந்த நாட்டு மக்களிடம் நற்செய்தியைக்குறித்த அலட்சியப் போக்குதான் இருந்தது. உதாசீனம். மக்கள் அவர்களிடம், "எங்கள் மதம் எங்களுக்கு நல்லது, உங்கள் மதம் உங்களுக்கு நல்லது," என்று கூறினார்கள். எனவே, முழு வேதாகமத்தையும், முதலாவது புதிய ஏற்பாட்டை, பர்மீய மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்று அவர் நினைத்தார். மக்கள் தங்கள் சொந்த மொழியில் தேவனுடைய வார்த்தையை வாசிக்க வேண்டும், அதுவே அன்றைய அவரசரமான தேவை என்றும் அவர் உணர்ந்தார். அது அடுத்த தலைமுறை மிஷனரிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று அவர் நம்பினார்.
பர்மாவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு 1815ஆம் ஆண்டில் ஆன் ஆரோக்கியமான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார், அது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதுவரைத் தனியாக இருந்த அவர்களுக்கு, இப்போது ஒரு புதிய வரவு தாங்கள் ஒரு குடும்பம் என்ற உணர்வைத் தந்தது. மேலும், அவர்கள் பர்மாவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு, அமெரிக்காவிலிருந்து முதல் கடிதம் வந்தது. அந்த நாட்களில் தகவல் தொடர்பு அப்படித்தான் இருந்தது. அந்த நாட்டின் காலநிலை, மொழியைப் படிப்பதற்கு கடினமான உழைப்பு, உள்ளூர் மக்களைச் சந்திக்கத் தொடர்ந்து பயணம்போன்ற கடுமையான பிரயாசத்தினால் அவர்கள் இருவரும் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்களுடைய குழந்தையும் நோய்வாய்ப்பட்டது. குழந்தைக்குக் காய்ச்சல் வந்தது. குணமாகவில்லை. குழந்தை இறந்தது. அந்த நாட்களில் நுண்ணுயிர்எதிர்ப்புக்கான மருந்து மாத்திரைகள் இருக்கவில்லை. எட்டு மாதத்தில் குழந்தை இறந்தது. அவர்கள் இருவரும் உடைந்துபோனார்கள். கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.
ஆன் மக்களுடன் மிகவும் இனிமையாகப் பழகக்கூடியவர். சமூகத்தின் உயர் மட்டங்களில் இருந்தவர்கள் உட்பட எல்லாரிடமும் அவர் மிகவும் இனிமையாகப் பழகினார். வைஸ்ராயின் மனைவி அவருடைய நல்ல நண்பர். வைஸ்ராய் என்பவர் நம் முதலமைச்சர் போன்றவர். ஆனின் குழந்தையின் மரணத்தைக்குறித்துக் கேள்விப்பட்ட வைஸ்ராயின் மனைவி உடனடியாகப் பல யானைகளை மிஷன் இல்லத்திற்கு அனுப்பினார். அவர்களுடைய துக்கத்தைக் குறைக்க அடோனிராமையும் ஆனையும் ஒரு யானைமீது ஏற்றிக் கிராமப்புறங்களுக்குச் சென்றுவரச் சொன்னார். அவர்கள் இருவரும் அவருடைய எல்லாத் தயவுகளையும் ஏற்றுக்கொண்டார்கள். மேலும் அவர்கள் அவர்களுடைய கலாச்சாரத்தைப்பற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
அவர்கள் குழந்தை இறந்த சோகத்தை அவர்களால் தங்க முடியவில்லை. நீண்ட நாள் போராடினார்கள். ஆனால், தாங்கள் வேகமாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணமும், உந்துதலும் அவர்களுடைய வாழ்க்கையில் மேலோங்கிநின்றது. அவர்களிடம் நித்தியத்தின் பார்வையும், தரிசனமும் இருந்தன. கர்த்தர் ஒரு நாள் தங்கள் கண்ணீரைத் துடைப்பார் என்று அவர்கள் அறிந்திருந்ததால், அவர்கள் தங்கள் சோகத்தையும், வருத்தங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு தங்கள் பணிவிடையைத் தொடர்ந்தார்கள்.
அந்தக் காலத்தில் வங்காளம் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த வங்காளத்தில் சிட்டகாங்க் என்ற ஒரு பெரிய நகரம் இருந்தது. இந்த நகரத்தில் பர்மீய மொழி பேசும் சில கிறிஸ்தவர்கள் இருப்பதாக அடோனிராம் கேள்விப்பட்டிருந்தார். அடோனிராம் இந்த மக்களைச் சந்திக்க விரும்பினார். கிறிஸ்தவம் வெள்ளைக்காரர்களின் மதம், அது வெளிநாட்டவரின் மதம் என்ற தவறான எண்ணத்தை அவர் உடைக்க விரும்பியதால், பர்மீய மொழி பேசிய அந்தக் கிறிஸ்தவர்கள்ப் பர்மாவுக்கு வரும்படி அழைக்க விரும்பினார்.
எனவே, அவர்களை சந்திக்க அவர் டிசம்பர் 1817இல் புறப்பட்டார். இரண்டு வாரங்களில் போய்ச் சேர்ந்துவிடலாம். ஆனால், அந்த நாட்களில் கப்பல் பயணம் மிகவும் கடினமாக இருந்தது. பாதகமான நீரோட்டங்கள், காற்று, புயல் எல்லாம் சேர்ந்து இந்த இரண்டு வாரப் பயணம் ஒரு பேரழிவாக மாறியது. இரண்டு வாரப் பயணம் மூன்று மாதப் பயணமாக மாறிற்று. சிட்டகாங்கில் உள்ள துறைமுகத்திற்குள் கப்பல் செல்ல முடியவில்லை. எனவே, கப்பல் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டியதாயிற்று. கப்பலில் இருந்த உணவு, தண்ணீர் எல்லாம் காலியாகிவிட்டது. கப்பல் பணியாளர்களும், கப்பலில் இருந்த பயணிகளும் நோய்வாய்ப்பட்டார்கள். அடோனிராம் மோசமாக நோய்வாய்ப்பட்டார். கடைசியாக அவர்கள் எங்கோவொரு துறைமுகத்தில் கப்பலை நிறுத்தினார்கள். அடோனிராம் தென்னிந்தியாவுக்கு 480 கிலோமீட்டர் தரைவழியாகப் பயணித்தார். ஏனென்றால், அங்கிருந்துதான் ரங்கூனுக்குக் கப்பல் உண்டு என்று அவர் கேள்விப்பட்டார். அங்கு அவர் மூன்று மாதங்கள் காத்திருந்தார். மூன்று மாதங்களுக்குப்பின் அங்கிருந்து ஒரு கப்பல் ரங்கூனுக்குக் கிளம்பியது. எனவே இரண்டு வாரப் பயணம் ஆறு மாதங்களுக்கு மேலாக மாறிற்று.
இதற்கிடையில் கப்பல் சிட்டகாங்க் துறைமுகத்தை அடையவில்லை என்ற செய்தியை ஆன் கேள்விப்பட்டார். ஆனால், கப்பல் என்னவாயிற்று என்று அவருக்குத் தெரியாது. அவர், "இதன் பொருள் என்ன? கப்பல் சிட்டகாங்க்குக்குப் போய்ச்சேரவில்லையென்றால் அது வேறு எங்கு போயிற்று? வேறு துறைமுகத்துக்குச் சென்றதா? அல்லது கடலில் மூழ்கிவிட்டதா? அடோனிராம் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா?" என்று அவர் சிந்திக்க ஆரம்பித்தார். ரங்கூனில் உள்ள மிஷன் ஹவுஸில் காத்திருப்பதால் எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. இந்த நிச்சயமற்றநிலை மிகக் கொடுமையாக இருந்தது. இது மிகக் கனமான, கடுமையான சோதனையாக இருந்தது. "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், நான் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்," என்ற வசனத்தைத் தன்னால் வாழ முடியும் என்று அவர் தேவனிடம் வேண்டினார். ஆனால், அது மிகவும் கடினமாக இருந்தது. இந்த நேரத்தில் ஜார்ஜ், ஃபோபி ஹக் என்ற மற்றொரு மிஷனரி தம்பதியினர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் தங்களுடன் ஓர் அச்சு இயந்திரம் கொண்டு வந்தார்கள். அவர்கள் அடோனிராமும், ஆனும் எழுதியிருந்த கிறிஸ்தவத்தின் கொள்கைகள், நற்செய்திக் கட்டுரைகள் போன்ற பலவற்றை அச்சடித்தார்கள்.
இந்த நேரத்தில், பிரிட்டனுக்கும் பர்மாவுக்கும் இடையே போர்மூளக்கூடும் என்ற வதந்திகள் வந்துகொண்டிருந்தன. எனவே ஜார்ஜூம், ஃபோபி ஹக்கும், "போர் வரக்கூடும் என்ற வதந்தி இருப்பதால், நாம் நாட்டைவிட்டு வெளியேறுவது நல்லது," என்றார்கள். ரங்கூனிலிருந்து இந்தியாவிலுள்ள கல்கத்தாவுக்கு ஒரு கப்பல் புறப்பட ஆயத்தமாயிருக்கிறது என்று அவர்கள் கேள்விப்பட்டார்கள். பர்மாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். எனவே, ஜார்ஜூம், ஃபோபியும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தார்கள். ஆனைத் தங்களுடன் வருமாறு அவர்கள் கெஞ்சினார்கள். அவர்கள் அவளைத் தனியே விட்டுவிட்டுச் செல்ல விரும்பவில்லை. ஆனால், போவதா வேண்டாமா என்று ஆனினால் முடிவுசெய்யமுடியவில்லை. இருப்பதா போவதா என்று தெரியவில்லை. அடோனிராம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திரும்பிவரலாம். அவர் திரும்பிவரும்போது தான் அங்கு இல்லையென்றால் என்னவாகும்? ஒருவேளை அவர் இறந்துபோயிருந்தால் என்ன ஆகும்? அதன்பின் தான் என்ன செய்ய வேண்டும்? அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. ஜார்ஜும், ஃபோபியும் அவளை அங்கு தனியே விட்டுவிட மறுத்தார்கள். இந்த அயல் நாட்டில் ஒரு பெண்ணைத் தனியே விட்டுச் செல்வதை அவர்களால் நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை. அவர் தங்களோடு வரவேண்டும் என்று அவர்கள் அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். ஆன் மிகவும் தயக்கத்துடன் தன் பொருட்களை எடுத்துக்க்கொண்டு, என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல், டிக்கெட்டை முன்பதிவு செய்தார். அவர்கள் பொருட்களைக் கப்பலில் ஏற்றும்போது, ஆனின் இருதயத்தில் அமைதி இல்லை, அவர் கலக்கத்தில் இருந்தார். ஆனால், அவரால் கப்பலிலிருந்து இறங்க முடியாது. ஏனென்றால், கப்பல் இப்போது ஆற்றில் பயணித்துக்கொண்டிருந்தது. தான் அந்தக் கப்பலில் இருக்கக்கூடாது என்றும், கப்பலிலிருந்து இறங்க வேண்டும் என்று அவர் மிகவும் பலமாக உணர்ந்தார். கப்பல் ஆற்றிலிருந்து கடலுக்குள் நுழையும் நேரத்தில், அது ஒரு பக்கமாகச் சாய்ந்துகொண்டிருப்பதை கப்பல் சிப்பந்திகள் உணர்ந்தார்கள். சரக்குக்களைச் சரியாக ஏற்றாததால் அப்படியாயிற்று. எனவே, அவர்கள் அருகிலிருந்த துறைமுகத்திற்குள் சென்று, நங்கூரம்போட்டு, சரக்குகளை இறக்கி, அதன்பின் சரியாக ஏற்றத் தீர்மானித்தார்கள்.
ஆன் உடனடியாக அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு கப்பலிலிருந்து இறங்கிவிட்டார். ஜார்ஜும், ஃபோபியும் அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள் அவரை இறங்கவிடாமல் தடுத்தார்கள். ஆனால், அவர் உறுதியாக இருந்தார். அந்தக் கப்பலில் அவருக்கு அமைதி இல்லை. தேவன் தன்னை இறங்குமாறு வழிநடத்துவதை அவர் உணர்ந்தார், அவர் தன் பொருட்களை எடுத்துக்கொண்டு இறங்கினார். தரைவழியாகவும், பின்பு படகிலும் பயணித்து மிகக் கடினமான பயணத்துக்குப்பின் அவர் ரங்கூனில் உள்ள மிஷன் வீட்டுக்குத் திரும்பிவந்து சேர்ந்தார். அங்கே, அவர் தேவனை முற்றிலும் நம்பி, தன்னையும், தனக்குரிய எல்லாவற்றையும் அவருக்குக் கையளிக்க முடிவுசெய்தார். அதன்பின், அவர், வழக்கம்போல், எழுதவும் மொழிபெயர்க்கவும் ஆரம்பித்தார். மூன்று நாட்களுக்குப்பிறகு, அடோனிராம் திடீரென்று வீட்டுக்கு வந்தார். அவர் சிட்டகாங்குக்குப் போகவேயில்லை. அந்தப் பயணம் வீணாயிற்று. ஆனால் அவர்கள் இருவரும் எல்லாவற்றிலும் தேவனை நம்பிவாழ்வதுபோன்ற பெரிய பாடங்களைக் கற்றுக்கொண்டார்கள்.
நற்செய்தி அறிவிக்க பர்மீய மொழியைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது; பர்மீய மக்களுடைய கலாச்சாரத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களுடைய கலாச்சாரத்தை அறிந்துகொள்ளாமல் அவர்களைப் புரிந்துகொள்ள முடியாது என்பதை அவர்கள் அறிந்தார்கள். எனவே, அவர்கள் மக்களுடைய கலாச்சாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். அந்தச் சமுதாயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முயன்றார்கள். புத்தமதத்தில் காரியங்கள் எப்படி நிறுவப்பட்டிருக்கின்றன என்றும், புத்தமதப் போதகர்களை மக்கள் எப்படி அணுகுகிறார்கள் என்றும் அவர்கள் கவனித்தபோது, சயாத் என்று அழைக்கப்படும் சிறிய இடங்கள் நாடு முழுவதும் பரவிக்கிடப்பதை அவர்கள் கண்டார்கள். இவை பெரும்பாலும் பிரதான வீதிகளில் இருந்தன. மக்கள் புத்தமத்தைப்பற்றிய போதனைகளைத் தெரிந்துகொள்ள பெரிய கோவிலுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இந்த சாலையோர குடிசைகளுக்குச் சென்றால் போதும். இந்தக் குடிசையின் முன்புறத்தில் மக்கள் உட்காரலாம். இது எப்போதும் திறந்திருக்கும். பயணிகள் நிழலுக்கு அங்கு ஒதுங்கி, தேநீர் அருந்தலாம். புத்தமதப் போதகர்களும் அங்கு இருப்பார்கள். மக்கள் அங்கு வந்து உட்கார்ந்து, பேசுவார்கள்.
அடோனிராமும் அப்படியே செய்ய முடிவுசெய்தார். அவர் நகரத்திலிருந்து பெரிய பொற்கோவிலான பகோடாவரை செல்லும் பிரதான சாலையான பகோடா சாலையில் ஒரு குடிசையைக் கட்டினார். அந்தக் குடிசையின் முற்பகுதி திறந்த வெளியாக இருந்தது. அவர் நாள் முழுவதும் அங்கே உட்கார்ந்து, அங்கு வந்த மக்களை வரவேற்று அவர்களோடு பேசினார். ஆன் அந்தக் குடிசையின் பின்புறத்தின் மூடிய பகுதியில் உட்கார்ந்து, அங்கு வந்த பெண்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களோடு இயேசு கிறிஸ்துவைப்பற்றிப் பேசினார். இது மிகவும் வெற்றியடைந்தது. ஏனென்றால், மக்களுக்கு இது மிகவும் பரிச்சயமான ஒன்று. விரைவில் அடோனிராம் ஒரு போதகர் என்று மக்கள் அறிந்துகொண்டார்கள்.
ஏப்ரல் 30, 1819. அவர்கள் பர்மாவுக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப்பிறகு, ஒரு நபர் அந்த ஜயாத்தில் நின்று, அடோனிராம் பேசுவதைக் கேட்டார். அவருடைய பெயர் மௌங் நாவ். இவர்தான் கிறிஸ்தவராக மாறிய முதல் பர்மியர். அவர் கிறிஸ்தவனாக மாறியதற்கு எந்தவிதமான உள்நோக்கமும் இருக்க முடியாது. தான் ஒரு கிறிஸ்தவனாக மாறினால் நிச்சயமாகச் சித்திரவதைக்குள்ளாக நேரிடும் என்று அவருக்குத் தெரியும். அடோனிராமும், ஆனும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆறு வருட கடின உழைப்பு, தொடர்ந்து மக்களைச் சந்தித்தல், மக்களுடன் பேசுதல், எழுதுதல் ஆகியவைகளுக்கு இப்போது பலன் கிடைத்தது. கர்த்தர் வேலைசெய்துகொண்டிருந்தார். இந்த வாலிபன் வேதவசனங்களை ஆழமாகத் தேட ஆரம்பித்தான். மத்தேயு ஐந்து, ஆறு, ஏழாம் அதிகாரங்களாகிய மலைப்பிரசங்கத்தை முதன்முதலாக வாசிக்கக் கேட்டபோது அவனுடைய உடல் நடுங்கியதாம். இந்தப் போதனை மிகவும் வித்தியாசமானது என்று அவன் கூறினான். புத்தமதத்தின்மூலம் உலகைப்பற்றிய அவனுடைய பார்வையிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்று அறிந்தான். ஒரு சில வாரங்களிலேயே, அவன் ஞானஸ்நானம் பெற்றான், இப்போது மூன்று பேர் கொண்ட இந்தச் சிறிய சபை முதன்முதலாக உட்கார்ந்து அப்பம் பிட்டார்கள்.
முன்னணிப் புத்தமதப் போதகர்கள் உட்பட அதிகமான மக்கள் ஜயாத்துக்கு வர ஆரம்பித்தார்கள். இது அங்கிருந்த அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது. அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள அதிகாரிகள் அங்கு வந்தார்கள். அங்கு நடப்பதைத் தெரிந்துகொண்ட அதிகாரிகள் ஆடோனிராமிடம் இலஞ்சம் கேட்டார்கள். அவரிடமிருந்து பணம் பறிப்பதிலேயே அதிகாரிகள் குறியாக இருந்தார்கள். அது ஒருவகையான துன்புறுத்தல். மேலும், கிறிஸ்தவர்கள் சித்திரவதைசெய்யப்படுகிறார்கள் என்ற வதந்திகள் பரவின. கிறிஸ்தவனாக மாறினால் சித்திரவதைசெய்யப்படுவார்கள், கொல்லப்படுவார்கள் என்று பயமுறுத்தப்பட்டார்கள். வெளிநாட்டவருடன் தங்களை இணைத்துக்கொள்பவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்று பயமுறுத்தினார்கள். இப்படிப்பட்ட சிக்கக்களினால் அடோனிராமின் ஜயாத்துக்கு இப்போது பார்வையாளர்கள் யாரும் வரவில்லை. ஆனாலும், இதற்குமுன்பே வேறு இரண்டுபேர் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
இப்போது பர்மாவில் மூன்று கிறிஸ்தவர்கள் மட்டுமே இருந்தார்கள். நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது, எல்லாப் பக்கங்களிலிருந்தும் பயமுறுத்தல்கள் வந்துகொண்டிருந்தன. எனவே, அடோனிராம் கொஞ்சம் ஆபத்தான ஒன்றைச் செய்ய முடிவுசெய்தார். அவர் அந்த நாட்டின் அரசனுடன் பேச விரும்பினார். அரசன் நற்செய்தியை ஆர்வமாகக் கேட்டால், நற்செய்தியை அறிவிக்க நாட்டில் பெரிய வழி திறக்கும் என்று அவர் நினைத்தார். ஆகவே, அடோனிராமும், ஜேம்ஸ் கோல்மன் என்ற மற்றொரு மிஷனரியும், மௌங் நாவும் அரசனைச் சந்திக்க 500 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து அவாவுக்குச் சென்றார்கள். அரசனுக்குக் கொடுக்க அவர்கள் பர்மிய மொழியில் பல்வேறு துண்டுப்பிரசுரங்களைக் கொண்டுசென்றார்கள். ஆனால், அரசன் அவர்கள் சொன்னதைக் கேட்டு, அவர்கள் கொடுத்த துண்டுப்பிரசுரங்களை வாங்கி தரையில் வீசி எறிந்தான். பர்மாவின் குடிமக்கள் எவரும் வெளிநாட்டு மதத்திற்கு மாற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஓர் ஆணை பிறப்பித்தான்.
அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் ரங்கூனுக்கு திரும்பி வந்தார்கள். அந்த நேரத்தில் மூன்று பர்மீயக் கிறிஸ்தவர்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்களைச் சந்தித்து, "இது மிகக் கடினமான நேரம். இப்போது நாம் வேறு எங்காவது செல்வதுதான் நல்லது. ஏனென்றால், நாம் இங்கு இருந்தால் பயமுறுத்தல்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். இங்கு இனிமேல் மக்கள் நாம் சொல்வதைக் கேட்க மாட்டார்கள்," என்று சொன்னார்கள். அடோனிராமை அங்கேயே தங்குமாறு இந்தப் புதிய விசுவாசிக்கள் கெஞ்சினார்கள். அவர்கள் இப்போதுதான் தங்கள் கிறிஸ்தவப் பயணத்தைத் தொடங்கியிருந்தார்கள். விசுவாசத்தில் இன்னும் குழந்தைகளே. அவர்களுடைய உற்றார், உறவினர், நண்பர், அண்டை அயலகத்தார் எனப் பலர் இயேசுவைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். ஆனால், பகிரங்கமாக அதை வெளியே சொல்ல மிகவும் பயந்தார்கள் என்று அவர்களுக்குத் தெரியும்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, அடோனிராமும், ஆனும் காலரா நோயினால் பாதிக்கப்பட்டார்கள். மேலும், அந்த நாட்டுக்கே உரித்தான வேறு பல நோய்களினாலும் பாதிக்கப்பட்டார்கள். அந்த நாட்களில், கடலில் பயணம் செய்து, உப்புக்காற்றைச் சுவாசித்தால் கடுமையான நோய்கள் குணமாகும் என்று மக்கள் நம்பினார்கள். ஆனின் நிலைமை நாளுக்குநாள் மோசமானதேயல்லாமல் முன்னேறவில்லை. அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், மிகவும் பலவீனமானார், நோய்வாய்ப்பட்டார். ஆகவே, உரிய சிகிச்சை பெற அவர் அமெரிக்காவுக்குச் செல்வதே சரி என்று அவர்கள் உணர்ந்தார்கள். ஏனென்றால், எந்த சிகிச்சையும் இல்லாமல் அவர் தொடர்ந்து பர்மாவில் இருந்தால் மரணம் வருவது நிச்சயம் என்று தெரிந்தது. ஆனால், கப்பல் பயணம் கடினமாக இருக்கும். மேலும், அடோனிராமைத் தனியாக விட்டுச்செல்வதும் கடினம்.
கடல் பயணம் தன்னைக் குணமாக்கும் என்று நம்பி ஆன் அமெரிக்காவுக்குப் பயணம் செய்தார். மேலும், அமெரிக்கா சென்றபின் அங்கு கிடைக்கும் மருத்துவ வசதிகள் தனக்கு முழுமையான சுகத்தைத் தரும் என்றும், ஆரோக்கியத்தோடும், பலத்தோடும் மீண்டும் பர்மாவுக்குத் திரும்ப முடியும் என்றும் அவர் நினைத்தார். ஆனால், கடல் பயணத்தில் அவருடைய உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர் முதலாவது இங்கிலாந்து செல்லவேண்டியிருந்தது. பின்னர் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்குப் பயணத்தைத் தொடரவேண்டியிருந்தது. எனவே அது மிகவும் நீண்ட பயணமாயிற்று. அவர் இங்கிலாந்துக்கு வந்தபோதும் அவருடைய உடல்நிலை மிகவும் பலவீனமாகவும், மோசமாகவும் இருந்தது. அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும் அவரை நன்றாகக் கவனித்தார்கள். மக்கள் அவரைப்பற்றியும், அடோனிராமைப்பற்றியும், அவர்கள் பர்மாவில் ஊழியம் செய்வதைப்பற்றியும் கேள்விப்பட்டிருந்தார்கள். எல்லோரும் அவருக்கு உதவவும், தங்களாலான எல்லாவற்றையும் செய்ய முயன்றனர். ஆனால், அந்த நாட்களில் மிகச் சிறந்தது என்று அவர்கள் நினைத்ததுகூட அவருக்கு உதவவில்லை. அந்த நாட்களில், அவர்கள் சில நீலநிற மாத்திரைகள் கொடுத்தார்கள். அதில் பாதரசம் இருந்தது, பாதரசம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும், அது சோர்வைஉண்டாக்கும், மூளைக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் இன்று நமக்குத் தெரியும். மேலும், உடலில் எங்கு நோய் பாதித்திருக்கிறது என்று அவர்கள் நினைத்தார்களோ அந்த இடத்தில நரம்பைக் கீறி அதிலிருந்து இரத்தத்தை வெளியேற்றினார்கள். அதனால் நோய் குணமாகிவிடும் என்று அவர்கள் நம்பினார்கள். எனினும், ஆனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இப்படியிருந்தபோதும், அவர் கொஞ்சம் ஓய்வெடுத்தார். அது அவருக்கு உதவியாக இருந்தது. உடல்நிலை சரியில்லாதபோதும், அவர் சும்மா இருக்கவில்லை. அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். அவர் இந்த நேரத்தில் "பர்மாவில் நற்செய்தியின் நாளேடு" என்ற தலைப்பில் எழுதினார். நாட்டைப்பற்றியும், கலாசாரத்தைப்பற்றியும், மக்களைப்பற்றியும், அவர்கள் அங்கு செய்துகொண்டிருந்த வேலையைப்பற்றியும் அவர் எழுதினார். அந்தச் சிறிய நாளேடு மிகவும் உதவியாக இருந்தது, உண்மையில், இது பலருக்கு மிகவும் உத்வேகம் அளித்தது, இது இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் விநியோகிக்கப்பட்டது. மேலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்கச் செல்லலாம் என்ற எண்ணத்தை இது பலருக்கு ஏற்படுத்தியது. இந்தப் பயணம் ஆனுக்கு நல்ல சுகத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தார்கள். அதற்காகவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். ஆனால், அவர் நல்ல சுகம் பெறவில்லை. ஆனாலும், அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்பதைக்குறித்த ஒரு விழிப்புணர்வை அது ஏற்படுத்தியது.
இதற்கிடையில், ஆன் இல்லாதது அடோனிராமுக்குப் பேரிழப்பாக இருந்தது. ஆனிடமிருந்து இப்போதைக்குக் கடிதம் வரப்போவதில்லை என்று அவருக்குத் தெரியும். அந்த நாட்களில் மக்கள் எளிதாகத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதற்கு எந்த வழியும் இல்லை. ஆன் கடிதம் எழுதினாலும்கூட, அந்தக் கடிதம் வந்து சேர பல வருடங்கள் ஆகும். ஆன் அமெரிக்காவுக்குப் போனபிறகு, "ஆன் என்னைவிட்டு அமெரிக்காவுக்குப் போனது என் வலது கண்ணைப் பிடுங்கியதுபோலவும், என் வலது கையை வெட்டிவிட்டதுபோலவும் இருக்கிறது," என்று அடோனிராம் தன் நண்பர் ஒருவருக்குக் கடிதம் எழுதினார். ஆன் திரும்பி வருவார், தாங்கள் இருவரும் எங்காவது சேர்ந்து சென்று, அமைதியாக வாழலாம் என்று அவர் கனவு கண்டார். ஆனால், இந்தக் கனவு பலிக்காது என்று அவருக்குத் தெரியும். கொஞ்சக் காலமே இந்தப் பூமியில் வாழப் போகிறோம், பர்மிய மக்கள் ஒவ்வொரு நாளும் நித்தியமாக அழிந்துகொண்டிருக்கிறார்கள், எனவே, அவர் தன் மகிழ்ச்சியை, தங்கள் மகிழ்ச்சியை, தேவனுடைய அரசை விரிவுபடுத்திடுவதற்காகப் பலியாக்க வேண்டும் என்று அவர் அறிந்திருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு ஆன் ரங்கூனுக்குத் திரும்பிவந்தார். இருவரும் மிகவும் சந்தோசப்பட்டார்கள். ஆன் தன் மூட்டை முடிச்சுகளைத் திறப்பதற்குமுன் அவசரமாகத் தலைநகர் அவாவுக்குக் கிளம்பினார்கள். உடனடியாகக் கிளம்புவதற்கு ஒரு காரணம் இருந்தது. அரசரின் சகோதரர் நற்செய்தியைக் கேட்பதற்கு ஆர்வமாக இருந்தார். அவர் தன்னைச் சந்திக்க வருமாறு அடோனிராமுக்குக் கடிதம் எழுதியிருந்தார். எனவே, உடனடியாக அவர்கள் வேறொரு கப்பலில் ஏறினார்கள். இருவரும் இதில் பரவசமாக இருந்தார்கள். தலைநகரிலிருந்து ஊழியம் செய்வது நன்றாக இருக்கும் என்று இருவரும் நினைத்தார்கள். ஒரு பள்ளிக்கூடம் நிறுவுவது என்றும், இதனால், தாங்கள் மக்களுக்கு நன்மை செய்யக்கூடியவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் ஆன் நினைத்தார்.
ஆனால், இது மிகவும் ஓர் ஆபத்தான செயல். இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு அல்ல என்று பலர் கூறினார்கள். இந்த நேரத்தில், பர்மாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே போர் ஏற்படக்கூடிய ஆபத்து இருந்தது. போர் மேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்தன. மக்கள் வெளிநாட்டவர்மேல் கோபமாக இருந்தார்கள். ஆனால், தாங்கள் அமெரிக்கர்கள் என்பதால் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று அடோனிராமும், வேறு சில மிஷனரிகளும் நினைத்தார்கள். இவர்களைத்தவிர மற்ற மிஷனரிகள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். இவர்களும் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உற்சாகப்படுத்தினார்கள், வலியுறுத்தினார்கள். அங்கு இருப்பது நல்லதல்ல என்று சொன்னார்கள். வங்காளத்திற்குச் செல்ல கப்பல்கள் தயாராக இருந்தன. ஆனால், அடோனிராம், ஆன், டாக்டர்.பிரைஸ் நாட்டைவிட்டு வெளியேற மறுத்துவிட்டார்கள். தாங்கள் அங்கு தங்குவது அவசியம் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.
போர் ஆரம்பித்தது. அடோனிராமும், டாக்டர் பிரைசும் கைதுசெய்யப்பட்டார்கள். அமெரிக்கர்களாக இருந்தாலும் சரி, பிரிட்டிஷாக இருந்தாலும் சரி, எல்லாரையும் கைதுசெய்தார்கள். ஏனென்றால், அவர்கள் வெளிநாட்டுக்காரர்கள். 1824இல், அவர்கள் கைதுசெய்யப்பட்டு, பர்மீய சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆன் மட்டும் தனியாக இருந்தார். அவர் செயலில் இறங்கினார். இங்கிலாந்து, பிரிட்டன், பிரிட்டிஷ் என்ற எந்தக் குறிப்பும் இல்லாதபடிக்குத் தன்னிடம் இருந்த எல்லாக் கடிதங்களையும், குறிப்புகளையும், பத்திரிகைகளையும் ஆன் எரித்தார். அவர் நீதிமன்றத்துக்குச் சென்று நீதிபதிகளிடம் முறையிட்டார். அவர்கள் பிரிட்டிஷ் உளவாளிகள் என்று கருத்தப்பட்டதால்தான் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால், தாங்கள் பிரிட்டிஷ் இல்லை, தாங்கள் அமெரிக்கர்கள். நாங்கள் எப்படி பிரிட்டிஷ் உளவாளிகளாக இருக்க முடியும்? என்று ஆன் கேட்டார். ஆனால், அவருடைய பிரயாசமெல்லாம் வீணாயிற்று. அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மக்கள் அவரிடமிருந்து விலகினார்கள். அவர் சென்ற எல்லா இடங்களுக்கும் மௌங் ஈங் என்ற ஒரு பர்மீயர் அவரோடு சென்றார். அவர் ஒரு விசுவாசி. அடோனிராமும், டாக்டர் பிரைசும் அடைக்கப்பட்டிருந்த சிறையை அவர் கண்டுபிடித்தார்.
ஆன் தன்னால் முடிந்த அளவுக்கு நாட்டின் இளவரசிகளுக்கும், அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் எழுதிக்கொண்டேயிருந்தார். அரசியின் சகோதரிகள் அவருக்குப் பதில் எழுதினார்கள், "நீங்கள் எழுதியது எனக்குப் புரியவில்லை," என்று பதில் சொன்னார்கள். இதற்கு, "எனக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை," என்று பொருள். அந்தக் கலாச்சாரத்தில் இதுதான் அதன் பொருள். ஒரேவோர் ஆளுநர், அந்தப் பகுதியின் ஆளுநர் மட்டுமே, அவர்மேல் அனுதாபப்பட்டார். ஆனால், கைதிகளை விடுவிக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
கடைசியில், மௌங் இங்கின் உதவியோடு அடோனிராம் இருக்கும் சிறையை ஆன் கண்டுபிடித்தார். அந்தச் சிறைச்சாலை அவாவில் இருந்த அவர்களுடைய வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. அந்தச் சிறை ஒரு பயங்கரமான இடம். அங்கு சித்திரவதைகளுக்குப் பஞ்சம் இல்லை. பயங்கரமான அழுக்கடைந்த இடம். எல்லா வகையான கொடுமைகளும் நிறைந்த இடம். கைதிகளைக் கனமான சங்கிலிகளால் கட்டிவைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் மூங்கில் கம்பங்களில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டார்கள். அவர்களுடைய கழுத்தின் பின்புறம் தரையைத் தொட்டுக்கொண்டிருக்கும். அதனால், தூங்குவது சாத்தியமேயில்லை. ஒவ்வொரு இரவும் அருகிலிருந்த நெல்வயல்களிலிருந்து கொசுக்கள் படையெடுத்துவந்து சிறைச்சாலையை மூடிக்கொள்ளும். அது தாங்கமுடியாத தொல்லையாக இருந்தது. ஆன் சிறைச்சாலைக்குச் சென்றபோது, அடோனிராம் கண்ணீர் மல்க சிறை வாசலுக்கு ஊர்ந்துதான் வந்தார். ஆயினும், அங்கிருந்த காவலர்கள் அவரை விலக்கி விடுவார்கள்; அடோனிராமைப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள். ஆன் ஒவ்வொரு நாளும் சிறைச்சாலையில் இருந்த அடோனிராமுக்கும், டாக்டர் ப்ரைசுக்கும் சாப்பாடு கொண்டு போனார். முடிந்த அளவுக்கு அவர்களுக்குத் தேவையான வேறு சில பொருட்களையும் அவர் கொடுத்தார். சில சமயங்களில் சில நொடிகள் மட்டுமே தன் கணவனைப் பார்க்க காவலர்கள் அனுமதித்தார்கள். அதற்காக அவர் பட்ட அவமானங்களையும், நிந்தைகளையும், வசைச்சொற்களையும் விவரிக்க முடியாது. அத்தனையும் அவர் சுமந்தார். இதற்கிடையில் அவர்களுடைய விடுதலைக்காக அவர் மீண்டும் மீண்டும் அதிகாரிகளுக்கு விடாமல் எழுதிக்கொண்டேயிருந்தாள். அவர் பல வேளைகளில் ஆண்டவராகிய இயேசுவின் ஓர் உவமையில் நாம் பார்க்கிற அந்த ஏழை விதவையைப்போல் எல்லாருடைய கதவையும் தட்டிக்கொண்டேயிருந்தாள். அவர் செய்த இன்னொரு மிக முக்கியமான காரியம் என்னவென்றால், அடோனிராம் 10 ஆண்டுகளாக மொழிபெயர்த்துக்கொண்டிருந்த புதிய ஏற்பாட்டை ஒரு தலையணைக்குள் மறைத்துவைத்து அதை அடோனிராமிடம் கொடுத்துவிட்டார். தனக்கு எப்போது வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் நேரிடலாம் என்றும், அதனால் அது சிறைச்சாலையில் அடோனிராமிடம் இருப்பதுதான் பாதுகாப்பானது என்றும் அவர் உணர்ந்தார்.
இந்த நேரத்தில், ஆன் கர்ப்பமாக இருந்தார். ஏழு மாதங்கள் அவர் இப்படிச் செய்தார். எல்லாருக்கும் எழுதிக்கொண்டேயிருந்தார், வீட்டில் சமைத்து, சிறைச்சாலைக்குச் சாப்பாடு கொண்டுபோனார், அடோனிராமைச் சந்திக்கச் சிறை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்தார். அடோனிராமின் விடுதலைக்காக அவமானங்களைச் சகித்தார், பட்டினி கிடந்தார், சுகத்தை இழந்தார். ஏழு மாதங்களுக்குமேல் அவரால் தொடர்ந்து செய்யமுடியவில்லை. பிரசவ காலம் வந்தது. எந்தத் துணையும் இல்லாமல், தனியாகவே, அவர் 1825இல் மரியா ஜட்சனைப் பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்து மூன்று வாரங்களுக்குப்பிறகு, உடல் கொஞ்சம் தேறியபிறகு, அவர் மீண்டும் சமைத்து எடுத்துக்கொண்டு அடோனிராமைப் பார்க்கச் சிறைச்சாலைக்குப் புறப்பட்டார். பிறந்து மூன்று வாரங்களே ஆன மரியாவைத் தன் உடலோடு கட்டிக்கொண்டார். அடோனிராம் தன் மனைவியையும், புதிதாகப் பிறந்த குழந்தையையும் சந்திக்கச் சிறை வாசலுக்கு ஊர்ந்துவந்தார். அவர் தன் மகளுக்கு ஒரு கவிதை எழுதினார். அது இன்பமும், துன்பமும் கலந்த ஓர் ஆழமான கவிதை. இதோ அந்தக் கவிதையின் ஒரு பகுதி.
“என் கண்ணே! நீ ஏன் உன் கண்ணைத் திறந்தாய்? என் அன்பே! நீ எதைக் காண உன் கண்களைத் திறந்தாய்? உன் துன்பத் தாயின் கூன் முதுகைக் காணவா? உன் தந்தையின் வேதனையைக் காணவா? உன்னதத்தில் தேவன் வீற்றிருக்கிறார், அவர் மகிமையான அரசர். உன் தாய் இந்தத் தேவனிடம் ஜெபிக்கிறார், தனியாக அமர்ந்து இந்தத் தேவனுடைய அன்பைப் பாடுகிறார். என் அன்பே, கிருபையுள்ள இந்தத் தேவனுக்கு நான் உன்னை ஒப்புக்கொடுக்கிறேன். தேவனே, திக்கற்ற அனாதைகளுக்கு, நீரே தந்தையும், நண்பருமாயிரும்”.
போர் பர்மாவுக்குப் பாதகமாகப் போய்க்கொண்டிருந்தது. அரசன் மிகவும் கோபமாக இருந்தான். எல்லா வெளிநாட்டுக் கைதிகளையும் கொலைசெய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆன் ஆளுநருக்குத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். அது பலனளித்தது. அந்த ஆளுநர் ஆனிடம், "அடோனிராமை என்னால் விடுதலைசெய்ய முடியாது. ஆனால், அவருடைய மரணதண்டனையை என்னால் நிறுத்த முடியும். நான் அதைச் செய்வேன்," என்று வாக்குறுதி அளித்தார். ஆளுநரை நம்பலாமா என்று ஆனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு நாள், ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவின்படி எல்லாக் கைதிகளையும் சிறையிலிருந்து வெளியே இழுத்துக்கொண்டுவந்து ஒன்றாகக் கட்டி, அவர்களை நகரத்திலிருந்து வெளியே இழுத்துச் சென்றார்கள். மிகக் கொடூரமாக இழுத்துச்செல்லப்பட்டார்கள். வெறும் கால்களாலும், பாதி பட்டினியிலும் எங்கோவோர் இடத்துக்கு அணிஅணியாக இழுத்துச் சென்றார்கள். ஆன் மீண்டும் ஆளுநரிடம் முறையிட்டார், அவர் அவளிடம், "நீங்களோ, நானோ உங்கள் கணவருக்காக இதற்குமேல் எதுவும் செய்ய முடியாது. இனி நீங்கள் உங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள்," என்று சொல்லிக் கைகழுவிவிட்டார். ஆளுநர் சொன்னதை ஆன் புறக்கணித்துவிட்டு, அடோனிராமைக் கொண்டுபோகும் இடத்துக்குத் தானும் போகத் தீர்மானித்தாள். அவர் கைதிகளைப் பின்தொடர முடிவுசெய்தார்.
அவருக்கு உண்மையும் உத்தமுமான ஒரு சமையல்காரர் இருந்தார். அவர் தானும் ஆனுடன் வருவதாகச் சொன்னார். மௌங் இங் என்ற விசுவாசி கைதிகளை எங்கு கொண்டுசெல்கிறார்கள் என்ற தகவல்களைச் சேகரித்தார். மிஷன் ஹவுஸைப் பாதுகாக்க அவர் அங்கு தங்கினார். அடோனிராம் தன்னுடன் எதையும் எடுத்துச்செல்லவில்லை. அப்படியானால், அவர் மொழிபெயர்த்துக்கொண்டிருந்த புதிய ஏற்பாடு என்னவாயிற்று? கைதிகளைச் சிறையிலிருந்து வெளியே கூட்டிகொண்டுபோனபிறகு மௌங் இங் சிறைக்குள் நுழைந்து அடோனிராம் வைத்திருந்த தலையணையை எடுத்துக்கொண்டுவந்தார். ஏனென்றால், அவர்கள் மொழிபெயர்த்துக்கொண்டிருந்த புதிய ஏற்பாடு அந்தத் தலையணைக்குள்தான் இருந்தது.
ஆன் குழந்தை மரியாவைத் தன் மார்பில் கட்டிக்கொண்டு, அவருடைய சமையல்காரரோடும், அவர்கள் தத்தெடுத்திருந்த இரண்டு பர்மீயக் குழந்தைகளோடும், அடோனிராமைக் கொண்டுபோன ஓங்-பென்-லா என்ற இடத்துக்கு நடக்க ஆரம்பித்தார்கள்.
அடோனிராம் அங்கு நடந்து சென்றார். எத்தனை கிலோமீட்டர் என்று தெரியவில்லை. ஆனால், நீண்ட தூரம். நடந்தே சென்றார். சுடு மணல். அனல் காற்று. வெறுங்காலால் நடந்து சென்றார். அவருடைய கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டன. தாங்கமுடியாத வலி, வேதனை. எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவர ஆசைப்பட்டதால் அவர் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாமா என்று சிந்தித்தார். சாலையின் ஓரத்திலிருந்த ஆற்றில் குதித்துவிடலாமா என்ற எண்ணம் எழுந்தது. அவ்வளவு கடினமாக இருந்தது. ஆனால், அவர் இந்தச் சோதனையிலிருந்து விடுபட்டு, தன்னைக்குறித்த தேவனுடைய நோக்கம் பர்மாவில் இன்னும் முடியவில்லை என்பதை உணர்ந்தார். தான் வாழ வேண்டுமென்று கர்த்தர் விரும்பினால், வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்று புரிந்துகொண்டார். அந்தப் பயணத்தில் பல கைதிகள் சோர்ந்துபோய் செத்துப்போனார்கள்.
அவர்கள் கடைசியாக அந்தக் கிராமத்திற்கு வந்துசேர்ந்தார்கள். அங்கு சொல்லும் அளவுக்குச் சிறை என்று ஒன்று இல்லை. திறந்த சிறைச்சாலை நான்கு பக்கம் இருந்தது. அதற்குக் கூரை கிடையாது. அவர்களை அதற்குமேல் சங்கிலியில் கட்டிவைக்கத் தேவைப்படவில்லை. ஏனென்றால், அவர்கள் மிகவும் களைத்துப்போயிருந்தார்கள். அடோனிராமால் உட்காரக்கூட முடியவில்லை. அவர்களால் நடக்க முடியவில்லை, அவர்களின் கால்கள் மிகவும் மோசமாக இருந்தன. உண்மையில், இதற்குப்பின் அவர் கொஞ்சம் நொண்டிநொண்டித்தான் நடந்தார். ஏனென்றால், இந்தப் பயணம் அவருக்கு நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. அநேகமாக எல்லாக் கைதிகளின் நிலைமையும் இதுதான்.
ஆனும் அங்கு வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும் அடோனிராம் மிகவும் அதிர்ச்சியடைந்தார். அவர் அழுதார், அழுதார், அழுதார். ஆன் அங்கு வருவார் என்று அடோனிராம் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை. அவர் ஆனிடம், "நீ ஏன் இங்கு வந்தாய்? நீ எங்களைத் தொடர்ந்து வரமாட்டாய் என்று நினைத்தேன். நீ திரும்பிப் போய்விடு. உன்னால் இந்த இடத்தில் வாழ முடியாது," என்று கூறினார். நிச்சயமாக அந்த இடம் அப்படிப்பட்ட இடம்தான். ஆனால், ஆன் அந்தக் கிராமத்தில் வாழ்ந்தார். ஒரு சிறிய அறை கிடைத்தது. அழுக்குத் தரை. அதற்குமேல் கொஞ்சம் வைக்கோல். ஆனும், அவரோடிருந்த குழந்தைகளும் அந்த அறையில் தங்கினார்கள். அங்கும் அவர் ஒவ்வொருநாளும் சமைத்து எடுத்துக்கொண்டுபோய் அடோனிராமைச் சந்தித்தார்.
இந்தச் சிரமங்களினால் ஆன் மிகவும் பலவீனமானார். இதன் விளைவாக அவர் நோய்வாய்ப்பட்டார். தாய்ப்பால் வற்றிற்று. குழந்தை மரியாள் அழுதாள். ஆனால், ஆனினால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரால் எழுந்திருக்கக்கூட முடியவில்லை. அடோனிராம் ஜெயிலர்களிடம் கெஞ்சினார், ஜெயிலர்களின் இருதயம் கொஞ்சம் இளகிற்று. அடோனிராம் தன் குழந்தையைப் பிடித்துக்கொண்டு வீடு வீடாக ஊர்ந்துசென்று குழந்தைக்கு ஒரு துளி பால் கொடுக்கும்படி கெஞ்சினார்.
போர் முடிந்தது. போரில் பிரிட்டன் வென்றது. பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்த அப்போது பர்மிய இராணுவத்திற்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார். அந்த வேலையைச் செய்ய ஒரோவொருவர் மட்டுமே இருந்தார். அவர் அடோனிராம் ஜட்சன். எனவே, அதிகாரிகள் அடோனிராமைத் தேடி வந்தார்கள். பேச்சுவார்த்தைகளின்போது அவர் அவர்களுக்கு மொழிபெயர்க்கவேண்டும். சிறையதிகாரிகள் இதைப் பணம் பறிப்பதற்கான ஒரு கடைசி வாய்ப்பாகக் கருதினார்கள். எனவே அவர்கள் ஆனை வெளியேபோகவிட மறுத்தார்கள். அதற்கு ஆன், "நான் இங்கு ஒரு கைதி இல்லை. நானே விரும்பி இங்கு தங்கியிருக்கிறேன். நீங்கள் என்னை இப்படி நடத்தக்கூடாது," என்று சொன்னார். ஆனால், அவர்கள் அவர் சொன்னதைக் கேட்கவில்லை. எனவே, சிறையைவிட்டு வெளியேற ஆன் தன்னிடம் இருந்த உணவுப்பொருட்கள் உட்பட எல்லாவற்றையும் கொடுக்கவேண்டியதாயிற்று.
அடோனிராமை வேறொரு இடத்துக்குக் கொண்டுபோனார்கள். அங்கு அவர் பல்வேறு அரசாங்க அதிகாரிகளுடன் ஆறு வாரங்கள் தங்கியிருந்து அவர்களுக்காக மொழிபெயர்க்கும் வேலைசெய்தார். அதன்பின், அனைத்து வெளிநாட்டினரும் முறையாக விடுவிக்கப்பட்டார்கள். இந்த விசாரணை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நீடித்தது. அவர்கள் இருவரும் தப்பிப்பிழைத்தது அதிசயமே. ஆனால், இருவரும் உடைந்துபோனார்கள், எலும்பும்தோலுமாகிவிட்டார்கள். அவர்கள் பழைய ஆட்கள் இல்லை. அடையாளம் காண முடியாத அளவுக்கு அவர்கள் மாறிவிட்டார்கள்.
ஆன் நடந்த எல்லாவற்றையும் சிந்தித்துப்பார்த்தார். "நாங்கள் செய்தது சரியா? எங்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு நண்பர்கள் சொன்னபோது வெளியேறியிருக்கவேண்டுமோ! பிடிவாதமாகத் தங்கியது தவறோ! நாங்கள் ஏன் அவர்களுடைய ஆலோசனையைக் கேட்கவில்லை? ஒருவேளை நாங்களும் அவர்களுடன் வெளியேறியிருக்கவேண்டுமோ!" என்றெல்லாம் சிந்தித்துப்பார்த்தார். ஆனால், அந்த நேரத்தில் தங்களுக்குச் சரி என்று தோன்றியதை நல்ல மனசாட்சியுடன் செய்ததாக அவர்கள் உணர்ந்தார்கள். எரேமியா 10ஆம் அதிகாரத்தில், "மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும்..." என்று எழுதியிருக்கிறபடி அவர்கள் இருவரும் உணர்ந்தார்கள். ஆனால், இந்தக் கடுமையான இரண்டு ஆண்டுகளின் துன்பங்கள் வீணாகிவிடக்கூடாது என்று ஆன் தேவனிடம் ஜெபித்தார். அவர் ஒரு கடிதத்தில் எழுதியதுபோல, இந்த நேரத்தில் அவருக்குப் பிடித்த குறிக்கோள், "பூமியில், நாங்கள் தேவனைச் சேவிக்கிறோம், பரலோகத்தில், அவரைப் புகழ்கிறோம்."
இப்போது நாடு பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்ததால், அவர்களுக்கு நிறைய சுதந்திரம் இருந்தது. தங்களுக்குமுன்னால் இருந்த புதிய வாய்ப்புகள்குறித்து அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார்கள். அவர்கள் உடனடியாக மீண்டும் வேலை செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் மிஷன் ஹவுசில் குடியேற முடிவு செய்தார்கள். அவர்கள் அங்கு வந்து குடியேறியவுடனே, அடோனிராமுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இப்போது, அங்கு ஒரு புதிய அரசாங்கம் இருந்தது. சூழ்நிலைகள் மாறியிருந்தன. அரசரிடமும், அரச குடும்பத்தினருடனும் பேசுவதற்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும், நாடு முழுவதும் பயணம் செய்ய அதிக சுதந்திரம் கிடைக்கலாம் என்றும் அவர் நினைத்தார். இவைகளுக்கு மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகலாம். அதன்பின் வீட்டுக்குத் திரும்பலாம் என்று அவர் நினைத்தார்.
வழக்கம்போல், பயணம் எப்படியிருக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்லமுடியவில்லை. நவம்பர் மாதத்தில் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர் ஜூலை மாதம் புறப்பட்டார். ஆனால், அவர் நவம்பர் மாதம் திரும்பிவரவில்லை. 1826 நவம்பர் 24ஆம் தேதி அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் "திருமதி ஜட்சன் இறந்துவிட்டார்," என்று எழுதியிருந்தது. ஆன் ஒரு மாதத்திற்குமுன்பே இறந்துவிட்டார். முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட துன்பங்களினால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். ஏழு மாதங்களுக்குப்பிறகு, அடோனிராம் ஜனவரி மாதம் திரும்பிவந்தபோது, அவருடைய மகளுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. அடோனிராம் ஆனின் கல்லறைக்குச் சென்று அழுதார், அழுதார், "அவளுடைய கணவரின் இரத்தம் வடியும் இதயத்திலிருந்து அவள் பிரிந்துவிட்டாள். ஆனால், எல்லையற்ற ஞானமும் அன்பும், என்றும்போல், கோலோச்சுகிறது. எல்லாம் சரி என்று விசுவாசம் தீர்மானிக்கிறது, நித்தியம் விசுவாசத்தின் முடிவை விரைவில் உறுதிப்படுத்தும்," என்று எழுதினார். ஊட்டச்சத்து குறைபாடுகளினால் குழந்தை மரியா ஆறு மாதங்களுக்குப்பிறகு இறந்துவிட்டாள். அடோனிராம் மாளாத் துயரத்தில் மூழ்கினார். அவர் உடைந்துபோனார்.
அப்போது, ஜார்ஜ், சாரா போர்ட்மேன் என்ற இரண்டு மிஷனரிகள் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் அடோனிராமை ஆறுதல்படுத்த முயன்றார்கள். ஆனால், அவரைச் சமாதானப்படுத்தமுடியவில்லை. இருப்பினும், உள்ள உறுதியுடன் அவர் தன் நற்செய்திப் பணியைத் தொடர்ந்தார். அவர் வேதாகமத்தைத் தொடர்ந்து மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார், தொடர்ந்து எழுதினார். ஆனால், அவர் மக்களிடமிருந்து விலகிக் காட்டில் தனியாக வசித்தார். அடோனிராமிற்கு இது மிகவும் இருண்ட நேரம். அவர் மகிழ்ச்சியாக இல்லை. தேவனுடைய பிரசன்னத்தைத் தான் உணரவில்லை என்று அவர் எழுதினார். அவர் தன்னை ஆராய்ந்துப்பார்க்க முயன்றார். அவர் எல்லாவற்றையும் கைவிட விரும்பினார். ஒரு மிஷனரியாக இருப்பதில், பெருமைப்படுவதாக இருந்தால் அதையும் விட்டுவிடத் தயாராக இருந்தார். அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இது அவருடைய ஆத்மாவுக்கு மிகவும் இருண்ட நேரம். ஆனால், அவர் தன் விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். நித்திய தேவன்மேல் நிலையான நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கையே அவருடைய ஆத்துமாவுக்கு நங்கூரம்.
அவர் இந்த இருண்ட நேரத்தைத் தாண்டி வந்தார். "ஜீவ கிரீடம் நம் தலையில் சூட்டப்படும்போது, நாம் இனிமேல் இறக்க மாட்டோம் என்று உறுதியாக அறிந்திருக்கும்போது, நம்மில் அன்புகூர்ந்து, தம் இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவினவரைப் புகழ்ந்து பாடும் பாடல்களால் பரலோகத்தை அழகாக்குவோம்," என்று எழுதினார்.
எட்டு ஆண்டுகள் கடந்தன. ஜார்ஜ் போர்டுமேன் இறந்துவிட்டார். அவருடைய மனைவி சாராவும் அவர்களுடைய குழந்தையும் தனியாக இருந்தார்கள். சாராளை உடனடியாக அமெரிக்காவுக்குத் திரும்புமாறு சொன்னார்கள். ஏனென்றால், ஒரு பெண் ஒரு கைக்குழந்தையோடு அந்நிய நாட்டில் தங்குவது பாதுகாப்பானது இல்லை என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், சாரா நாடுதிரும்ப மறுத்துவிட்டார். அவர் தன் கணவரின் வேலையைத் தொடர விரும்பினார். அவர் கரேன் மக்களிடையே மலைப்பாங்கான ஒரு நகரத்தில் ஒரு பள்ளியை நடத்திக்கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் அங்கிருந்த எல்லாக் கிராமங்களுக்கும் சென்றார்கள். சந்தித்த, விசாரித்த எல்லாரிடமும் ஆண்டவராகிய இயேசுவைப்பற்றிப் பேசினார்கள். தன கணவர் விட்டுச்சென்ற இந்தப் பணியை சாரா தனியாகத் தொடர்ந்து செய்தார். அவர் தன் சின்னக் குழந்தையைத் தன் முதுகில் சுமந்துகொண்டு காடு, மலை, ஆறு என எல்லாவற்றையும் தாண்டி எல்லாக் கிராமங்களுக்கும் சென்று தன் ஊழியத்தைத் தொடர்ந்தார். அவர் மக்களிடம் பேசினார். மக்களுடைய பேச்சுமொழியைக் கற்றுக்கொண்டார். பள்ளியில் கற்பித்தார். அவர் நன்றாகக் கற்பித்தார், எந்த அளவுக்கு அவர் நன்றாகக் கற்பித்தார் என்றால், பிற்காலத்தில் ஒரு பள்ளியை நிறுவுவதற்கு, பாடம் கற்பிப்பதற்கு சாரா போர்ட்மேன் முறை பரிந்துரைக்கப்பட்டது.
சாரா மூன்று வருடங்கள் இவ்வாறு தனியாக ஊழியம் செய்தார். மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு அவரும் அடோனிராமும் ஒருவரையொருவர் சந்தித்தபோது, இருவரும் தங்களுடைய துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள் இருவருக்கும் ஊழியத்தையும், வாழ்க்கையையும்குறித்த ஒரே தரிசனம் இருந்ததால், இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் பலதரப்பட்ட மக்களுக்கிடையே, குறிப்பாக, பர்மாவின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கிடையேயும், கரேன் மக்களுக்கிடையேயும், பிற பழங்குடியினரிடையேயும் தங்கள் பணியைத் தொடர்ந்தார்கள்.
சாராளும் மரித்தார். அடோனிராம் மீண்டும் தனி ஆளானார். அடோனிராம் முழு வேதாகமத்தையும் மொழிபெயர்த்து முடித்தார், இந்த மொழிபெயர்ப்பு இன்றைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது அவருடைய 21 வருட கடின உழைப்பின் பலன். அவர் இந்த மொழிபெயர்க்கும் பணியில் தன்னை ஊற்றினார், ஏனென்றால், மிக உன்னதமான தேவனினின் வார்த்தையை, அந்தத் தேவனைப்பற்றிய வெளிப்பாட்டை, அவர்களுடைய சொந்த மொழியில் ஒரு முழு நாட்டுக்கும் கொடுக்கும் வேலை மிகக் கனமான வேலை என்று அவருக்குத் தெரியும்.
அடோனிராம் பின்னர் மீண்டும் திருமணம் செய்தார். உண்மையில் அவருடைய மனைவி எமிலிதான் அவருடைய முழுக் கதையையும் பிறருக்குத் தெரிவித்தார், ஏனென்றால், அடோனிராம் மக்களுக்குமுன் அபூர்வமாகவே பேசினார். குறிப்பாக அந்த இரண்டு ஆண்டுகளின் பாடுகளைப்பற்றி அவர் பேசவேயில்லை. அந்த இரண்டு ஆண்டுகளின் சித்திரவதை அவ்வளவு கொடுமையாக இருந்ததால், அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீளவேயில்லை என்று சொல்லலாம். அதைப்பற்றி அவரால் பேசக்கூட முடியவில்லை. அவர் ஒருமுறை அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, அவர் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப்பற்றியும், பர்மாவில் என்னென்ன நடந்தன என்பதைப்பற்றியும் அவர் பேசுவார் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் அதைப்பற்றி ஒன்றும் பேசவில்லை. மாறாக, அவர் தேவனுடைய அன்பைப்பற்றிப் பேசினார். அடோனிராமின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவருக்கு வயதாகவில்லை. ஆனால், அவருடைய பிற்காலத்தில் அவரால் கிசுகிசுவென்றுதான் பேசமுடிந்தது. அப்படிப் பேசும்போதுகூட அவர் இரத்தவாந்தி எடுத்தார். பழுதடைந்த அவருடைய கால்கள் முழுமையாகக் குணமடையவில்லை. அவருடைய கணுக்கால் சிதைந்துபோயிருந்தது. அவரால் ஒருபோதும் சரியாக நடக்க முடியவில்லை.
உடல்நலத்துக்குச் சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு அவர் ஜூன் 1850 இல் ஒரு கப்பல் பயணத்தை மேற்கொண்டார். ஆனால், அந்தப் பயணத்தில் அவர் இறந்துவிட்டார். அப்போது அவருக்கு 61 வயது. அவர் சொன்ன கடைசி வாக்கியங்களில் ஒன்று, "மிகக் கடினமாக இறக்கின்றவர்கள் மிகச் சிலர்." அவருடைய உடல் வங்காள விரிகுடாவில் வீசப்பட்டது. நான்கு மாதங்களுக்குப்பிறகு எமிலி இதைத் தெரிந்துகொண்டார்.
அடோனிராமும், ஆனும் அவர்களுடைய வாழ்நாளில் அவர்களுடைய உழைப்பின் பலனை அதிகமாகக் காணவில்லை. ஆனால், தேவன் பர்மிய மக்களிடையே வல்லமையாய் செயலாற்றினார். முதலாவது, ஒரோவொருவர் மட்டுமே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். பின்னர், பல ஆண்டுகளாக சுமார் 10 அல்லது 18பேர் இருந்திருக்கலாம். ஆனால், அடோனிராம் இறந்த சிறிது காலத்திலேயே, அவருடைய 38 ஆண்டு ஊழியத்தின் பலனாக சுமார் 210,000 பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.
அடோனிராமும், ஆனும் தம் சபையைக் கட்டியெழுப்ப தேவன் சபைக்கு அருளிய இரண்டு கொடைகள். தேவனுடைய சபையைக் கட்டியெழுப்ப இருவரும் தங்கள் உடல்களைத் தேவனுக்குப் பிரியமும், பரிசுத்தமுமான ஜீவனுள்ள பலியாக ஒப்புக்கொடுத்தார்கள். அவர்கள் அதை மீண்டும் மீண்டும் செய்தார்கள். ஆன் எழுதிய மிக, மிக எளிமையான, ஆனால் வாழக் கடினமாக ஒரு வாக்கியதோடு முடிக்கப்போகிறேன். அதை அவர் வாழ்ந்தார், மிகத் தெளிவாக வாழ்ந்தார்.
"இன்னும் கொஞ்சக் காலம். பின் நாங்கள் நித்தியத்தில் இருப்போம். அங்கு போவதற்குமுன், இங்கு கிறிஸ்துவுக்காக முடிந்ததைச் செய்வோம்."