Transcribed from a message spoken in December, 2013 in Chennai
By Milton Rajendram
“ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும். நம்மைச்சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி. 12:1).
“சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன்: பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (எபி. 3:13, 14).
“இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்” (எபி. 3:1).
தேவன் நம்மை ஒரு பரம அழைப்புக்கு, ஒரு பரம நோக்கத்திற்காக, ஒரு பரம இலக்கிற்காக, அழைத்திருக்கிறார் என்று இந்த வசனங்களில் நாம் வாசிக்கிறோம். இந்த முழு வேதாகமத்திலும் உள்ள ஒரு காரியம் என்னவென்றால் நம் தேவன் ஒரு நித்தியக் குறிக்கோளோடும், ஒரு நித்திய இலக்கோடும், இந்தச் சிருஷ்டிப்பைச் சிருஷ்டித்தார். குறிப்பாக மனிதனை அவர் சிருஷ்டித்தார். தம் நித்திய நோக்கமும், குறிக்கோளும், இலக்கும் நிறைவேறுவதற்கென்றே தேவன் இந்த வரலாற்றிலே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் தம் நித்தியக் குறிக்கோளையும், நித்திய இலக்கையும்விட்டு வலதுபுறமோ இடதுபுறமோ சாய்வதில்லை.
இப்படிச் சொல்லும்போது இன்றைக்குத் தேவனுடைய மக்கள் இருக்கிற சூழ்நிலையை நான் மனதில்வைத்துத்தான் சொல்லுகிறேன். இன்றைக்கு நம் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் நமக்குத் தேவைகளும், நெருக்கங்களும் இருக்கின்றன. உண்மை. ஆனால், அதே நேரத்தில் நாம் தேவனுடைய நித்தியக் குறிக்கோளையும், நித்திய இலக்கையும்பற்றிப் பேசுகிறோம். அது இன்னொன்று. அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று நாம் நினைக்கலாம். என் அறிவின்படி, என் சிந்தனையின்படி, எனக்குத் தெரிந்தபடி தேவன் ஒரேவொரு வழியைத்தான் வைத்திருக்கிறார். அது என்னவென்றால் நம் வாழ்க்கையின் இலக்கைத் தேவனுடைய இலக்கோடு நாம் இணைத்துக்கொள்ள வேண்டும். நம் குறிக்கோளை தேவனுடைய குறிக்கோளோடு இசைவாக்கிக்கொள்வதையும், பொருத்தமாக்கிக்கொள்வதையும், ஒத்ததாக்கிக்கொள்வதையும்தவிர நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அல்லது நான் பயன்படுத்துகிற வார்த்தைகள் ‘பயனுள்ள, வீரியமுள்ள, கனியுள்ள, தேவனுக்குமுன்பாக மதிப்பும் பொருளும் உள்ள’ வாழ்க்கை வாழ்வதற்கு வேறு வழியே இல்லை.
இதை நான் மீண்டும் சொல்லுகிறேன். தேவன் ஒரு நித்தியக் குறிக்கோளோடும், நித்திய இலக்கோடும் இந்த மனித வரலாற்றிலே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
தேவனற்ற மக்களுக்கு குறிக்கோளும், இலக்கும் இல்லை அல்லது அவர்களுடைய குறிக்கோளும், இலக்கும் மிகவும் தாழ்வானது. ஆனால், தேவனுடைய மக்களைப்பற்றி என்னால் ஒன்று சொல்ல முடியும். நம் வாழ்க்கையின் குறிக்கோளும், இலக்கும் தேவனுடைய குறிக்கோளும், இலக்குமாக மாற வேண்டும். நம் வாழ்க்கையின் குறிக்கோள் தேவனுடைய குறிக்கோளோடு இசைவாக வேண்டும். நம் வாழ்க்கையின் இலக்கு தேவனுடைய இலக்கோடு இசைவாக, பொருத்தமாக, ஒத்ததாக இருக்க வேண்டும். நான் ஒன்றிரண்டு வசனங்களை வைத்து இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. இந்தக் கருத்து வேதம் முழுவதும் இழையோடுகிறது.
“நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்குமுன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமானார்” (அப். 7:2). தரிசனமாகி அவனை அழைத்தார். நம் எல்லாரையும் தேவன் அழைத்திருக்கிறார். ஆனால், இவைகளெல்லாம் தனித்தனி அழைப்புகள் என்று சொல்லமுடியாது. தேவன் ஒரு இலக்கை வைத்திருக்கிறார். அதே இலக்கை நோக்கி நாமும் ஆசையாய்ப் பின்தொடர்வதற்கென்று தேவன் நம் அனைவரையும் அழைத்திருக்கிறார். ஆபிரகாம் கல்தேயருடைய ஊரைவிட்டுப் புறப்படும்போது அவனுக்கு 70 வயதுக்குமேல் இருக்கும் என்று சொல்லுகிறார்கள். அதற்குமுன் அவன் ஒரு இலக்கோடு வாழ்ந்தான் என்று தீர்மானிக்க முடியாது. இந்த உலகத்தைப் பொறுத்தவரை அவனுக்கு ஒரு இலக்கு இருந்திருக்கலாம். ஆனால், அவன் கல்தேயார் ஊரில் வாழ்ந்தபோது நித்திய இலக்கோடு வாழ்ந்தான் என்று சொல்லமுடியாது.
என்றைக்கு மகிமையின் தேவன் ஒரு மனிதனுக்கு அல்லது ஒரு கூட்டம் மக்களுக்குத் தரிசனமாகிறாரோ அன்றைக்கு தேவனைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு இலக்கு இருக்கிறது. “அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்: எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்: எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” (ரோமர் 8:28-30).
“அவருடைய தீர்மானத்தின்படி” (ரோமா; 8:28). “தமக்குள்ளே தீர்மானித்திருந்த” (எபே. 1;:10). “அநாதி தீர்மானத்தின்படியே:”(எபே. 3:9). “தம்முடைய தீர்மானத்தின்படியே” (3 தீமோ. 1:9).
தேவனுடைய மக்களை அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்கு ஒத்த சாயலாக்க வேண்டும் என்பது அவருடைய இலக்கு, குறிக்கோள். தேவனுடைய குறிக்கோள் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்தச் சிருஷ்டிப்பின்மூலமாக, இந்தப் படைப்பின்மூலமாக வெளிக்காண்பிக்க வேண்டும், வெளிக்காட்ட வேண்டும். இந்த முழுப் படைப்பும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை, அவருடைய குணத்தை, அவருடைய மகிமையை வெளிக்காண்பிக்க வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம்.
அவர் தம் குமாரனை இந்தப் படைப்பின்மூலமாகக் காண்பிக்கிறார் என்று ரோமர் 8:28-30 கூறுகின்றன. அவர் நம்மை முன்குறிக்கிறார், அழைக்கிறார், தெரிந்துகொள்கிறார், நீதிமான்களாக்குகிறார். மகிமைப்படுத்துகிறார் என்று அந்த வசனங்கள் சொல்லுகின்றன. எதற்கென்றால் அவருடைய குமாரனாகிய கிறிஸ்து அநேகக் குமாரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு அவர் இவைகளையெல்லாம் செய்கிறார். முதற்பேறானவருக்கு ஒத்தசாயலாகும்பொருட்டு அவர் இவைகளைச் செய்கிறார். எனவே, தேவன் அழைத்த அல்லது அவர் தெரிந்துகொண்ட அல்லது அவருடைய அழைப்புக்குப் பதில் கொடுத்த தம் மக்கள் எல்லாரையும் தம் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஒத்த சாயலாக்க வேண்டும் என்பது அவருடைய குறிக்கோள்.
இது அவர் தம் மக்களுடைய வாழ்க்கையில் என்றைக்கோ செய்கிற காரியம் அல்ல, இன்றைக்கு செய்துகொண்டிருக்கிறார்.
அதுபோல அவர் நம்மை அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஒத்த சாயலாக்குவதற்கென்று சிறப்பான சில நிகழ்ச்சிகளையும், நாட்களையும், சில கிழமைகளையும், மாதங்களையும் வைத்திருக்கவில்லை. 365 நாட்களிலும், வாரத்தின் 7 நாட்களிலும், 24 மணி நேரமும் பெரிய காரியங்களிலும், சிறிய காரியங்களிலும் எல்லாவற்றின்மூலமாகவும் தேவன் தம் இலக்கை நம் வாழ்க்கையில் நிறைவேற்ற செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
எபிரெயர் ஆசிரியரின் கூற்று என்னவென்றால் தேவன் நம்மை ஓர் இலக்குக்கென்று அழைத்திருக்கிறார். எனவே, அந்த இலக்கை நோக்கி நாம் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே பொறுமையோடே ஓடக்கடவோம். அவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார். நம் விசுவாசத்தைத் தொடக்குகிறவரும் அதைப் பரிபூரணப்படுத்துகிறவருமாகிய இயேசுவை நோக்கி ஓட வேண்டும் என்று சொல்லுகிறார். அதற்குமுன் பாரமான யாவற்றையும், பாவத்தையும் தள்ளிவிட்டு ஓட வேண்டும் என்று அவர் சொல்லுகிறார்.
தேவனுடைய மக்களுடைய வாழ்க்கை ஒரு முடிவுக்கு வரும்போது அது தேவனுடைய பார்வையில் மதிப்புள்ளதாக, அருமையானதாக, பொருள் நிறைந்ததாக, கனியுள்ளதாக, பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
இந்தப் பூமியில் மக்கள் ஏதாவது ஒன்றைப் பெருக்க வேண்டும் என்பதற்காக உழைக்கிறார்கள். அது பணமாக இருக்கலாம். வேறு ஏதாவதாகவும் இருக்கலாம். 100 ரூபாய் இருந்தால் 10000மாக மாற்றுவதற்கு அல்லது 10000 இருந்தால் அதை பல இலட்சங்களாக மாற்றுவதற்கு மக்கள் உழைக்கிறார்கள். ஒரு மனிதனிடத்தில் ஒரு ஏக்கர் நிலத்தைக் கொடுத்தால் அந்த நிலத்தை அவன் பண்படுத்தி, அவன் அதின் பலனைக் காண்கிறான். விளைச்சலை எடுக்க வேண்டும் என்பதற்காக, கனியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் உழைக்கிறார்கள். ஒருவேளை 10 வருடங்களுக்குமுன்பு பார்த்திருந்தால் அங்கு எந்த விளைச்சலும் இருந்திருக்காது. ஆனால், இப்போது அங்கு பார்க்கும்போது மிகப் பெரிய விளைச்சல் இருக்கிறது. இப்படி ஏதோவொன்றை உற்பத்திசெய்வதற்காக, வளர்ப்பதற்காக, உருவாக்குவதற்காக, பெருக்குவதற்காக அவர்கள் உழைக்கிறார்கள்.
தேவனும் ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறார். ஒன்றை வளர்ப்பதற்காக, பெருக்குவதற்காக, தேவன் உழைத்துக்கொண்டிருக்கிறார், வேலைசெய்துகொண்டிருக்கிறார். அவர் இன்றைக்குக் காண்கிற கிறிஸ்துவைவிட அதிகமான கிறிஸ்துவை உருவாக்க அல்லது காலங்கள் நிறைவேறும்போது அவர் பார்க்கிற கிறிஸ்து எப்படி இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அந்தக் கிறிஸ்துவை உருவாக்கச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். நாம் சொல்வதுபோல பூத்துக் குலுங்கி கனிகொடுக்கிற ஒரு தோட்டத்தைப்பார்த்தால் மக்கள் எப்படி மகிழ்ச்சியடைகிறார்களோ அதுபோல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையில் அல்லது காலங்கள் நிறைவேறும்போது பிதாவாகிய தேவன் அவருடைய மக்களில் பார்க்கிற கிறிஸ்துவின் அளவு, வளர்த்தி அல்லது பெருக்கம் மிகவும் அபரிமிதமாக இருக்க வேண்டும். இது தேவனுடைய நோக்கம்.
இதை இன்றைக்குத் தேவனுடைய மக்களுடைய தேவையோடு தொடர்புபடுத்துவது கடினம். இது தேவனுடைய மக்களின் பலவீனம். தம் மக்கள் தம்முடைய குறிக்கோளோடும், இலக்கோடும் தங்களை இசைத்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
“ஆகையால், நீங்கள் புசித்தாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” என்று பவுல் சொல்லுகிறார் (1 கொரி. 10:31). என்னைப் பொறுத்தவரை இந்த முழுப் புதிய ஏற்பாட்டிலும் இது மிகவும் ஆவிக்குரிய வசனம். எபேசியர் நிருபத்தில் மிகவும் ஆழமான சத்தியங்கள் இருக்கின்றன. இந்த வசனத்தை வாசித்தால் மிகவும் ஆவிக்குரிய வசனம்போல் தென்படுகிறதா?
தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் என்றால் என்ன பொருள்? “தேவனே, உம்முடைய மகிமைக்காகக் குடிக்கிறேன், உம்முடைய மகிமைக்காகச் சாப்பிடுகிறேன்,” என்று சொன்னவுடன் தேவன் மகிமைப்பட்டுவிடுவாரா? இது நம் சிறுபிள்ளைத்தனமான ஜெபங்களில் ஒன்று. தேவனை எப்படி மகிமைப்படுத்துவது? “ஆண்டவரே, நான் உம்மை மகிமைப்படுத்துகிறேன்,” என்று சொன்னவுடன் தேவன் பரலோகத்திலிருந்து மிகவும் அக்களித்து, “ஆஹா, என் மக்கள் என்னை மிகவும் மகிமைப்படுத்திவிட்டார்கள்,” என்று சொல்லிவிடுவாரா? அப்படியல்ல.
புசிப்பிலும், குடிப்பிலும் தேவனுடைய இலக்கு அல்லது தேவனுடைய குறிக்கோளாகிய அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவை நாம் வெளிப்படுத்த முடியும், வெளிக்காண்பிக்க முடியும், வாழ முடியும் அல்லது வாழாமல்விட முடியும். நம் வாழ்க்கையின் சாதாரணமான காரியங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் எடுத்துக்காட்டாக புசிப்பதும், குடிப்பதும் சொல்லப்பட்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஒரு நாளில் நாம் பலமுறை தண்ணீர் குடிக்கிறோம். பலதடவை சாப்பிடுகிறோம். குடிப்பதும், சாப்பிடுவதும் நம் வாழ்க்கையின் சாதாரணமான காரியங்கள். வாழ்க்கையின் சாதாரணமாக காரியங்களிலே தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து நமக்குள் உருவாக முடியுமா? முடியும். என்னுடைய கணிப்பு சாதாரணமான காரியங்களில்தான் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவை நமக்குள் உருவாக்குகிறார், வளர்க்கிறார், வெளிப்படச்செய்கிறார்.
ஆனால், இந்தச் சாதாரணமான காரியங்களையே நம் வாழ்க்கையின் இலக்காகவும் மாற்றிவிட முடியும். இதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். புசிப்பும் குடிப்பும் சாதாரணமான காரியம். இதில் நாம் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவை வாழ்கிறோமா, அவர் நமக்குள் வளர்கிறாரா, பெருகுகிறாரா, வெளியாகிறாரா, அவரை நாம் மற்றவர்களுக்குள் வழங்குகிறோமா என்பது ஒரு காரியம். இப்படிப்பட்ட காரியங்களைத் தேவன் நம் வாழ்க்கையில் நியமிக்கிறார். படிப்பது, வேலைக்குப் போவது என்று நம் வாழ்க்கையின் நேரங்கள் சாதாரணமான காரியங்களால் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, கிறிஸ்துவைக் காண்பதற்கு, கிறிஸ்துவை வாழ்வதற்கு, கிறிஸ்து நமக்குள் உருவாவதற்கு, வளர்வதற்கு, பெருகுவதற்கென்று நாம் காடும் மேடும் மலையும் தேடிப்போக வேண்டிய தில்லை. ஆசிரமங்களைத் தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லை. கிறிஸ்துவை நாம் காண்பதற்கும், வாழ்வதற்கும் சாதாரண காரியங்களால் நம் வாழ்க்கை நிறைந்திருக்கிறது.
ஆனால், தேவனுடைய மக்களுக்கும், உலக மக்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், உலக மக்களும் இந்தச் சாதாரண காரியங்களில்தான் ஈடுபடுகிறார்கள். நாமும் இந்தச் சாதாரணமான காரியங்களில்தான் ஈடுபடுகிறோம். புசிப்பது, குடிப்பது, படிப்பது, வேலைக்குப் போவது, சம்பாதிப்பது, வீடுகட்டுவது, திருமணம் செய்வது, துணிதுவைப்பது, காயவைப்பது, பெருக்குவது, கடைக்குப்போவது, காய்வெட்டுவது, சமைப்பது, பாத்திரம் கழுவுவதுபோன்றவைகளெல்லாம் நாம் நாள்தோறும் செய்கிற காரியங்கள். இந்த நீண்ட பட்டியலுக்கு எடுத்துக்காட்டாக நீங்கள் புசித்தாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் என்று 1 கொரிந்தியர் 1:31இல் சொல்லப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
கடைக்குப் போவதை கிறிஸ்து வளர்வதற்கென்று, தேவனுடைய மகிமைக்கென்று, செய்யுங்கள். சமைப்பதை நீங்கள் தேவனுடைய மகிமைக்கென்று, கிறிஸ்து உங்களுக்குள் உருவாகுவதற்கென்று செய்யுங்கள். எல்லாவற்றையும் தேவனுடைய குறிக்கோளாகிய, தேவனுடைய இலக்காகிய, கிறிஸ்து உங்களுக்குள் உருவாகுவதற்கென்று செய்யுங்கள்.
இந்தப் பட்டியல் மிக நீளமான பட்டியல். இந்தப் பட்டியலை நான் ஒவ்வொன்றாகச் சொல்ல விரும்புகிறேன். அதைச் சொல்வதற்கு நான் சோர்ந்துபோக மாட்டேன். “புசித்தலும், குடித்தலும்போன்ற பல காரியங்கள்” என்று சொல்லி நிறுத்திக்கொள்ளக்கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். இந்தச் சாதாரணமான காரியங்களெல்லாம் பயனற்றவை என்று நாம் நினைக்கிறோம். தேவனுடைய குறிக்கோளும், இலக்கும் அதாவது கிறிஸ்து நமக்குள் உருவாகிற அந்தக் காரியம் நடைபெறுவதற்கு நாம் வேறொரு நேரத்துக்கும், காலத்துக்கும், இடத்துக்கும், சம்பவத்துக்கும் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அது ஒருவேளை இந்த வாரம் நடைபெறுகிற உபவாச ஜெபமாக இருக்கலாம். இந்த மாதக் கடைசியில் நடைபெறப்போகிற முழு இரவு ஜெபமாக இருக்கலாம் அல்லது 3 நாள் பயிற்சியில் நடைபெறலாம் அல்லது ஒரு வார பயிற்சியில் நடைபெறலாம் என்று அது என்றைக்கோ நடைபெறப்போகிறது என்று நாம் காத்திருக்கிறோம். அப்படியல்ல. இது ஒரு பக்கம். தேவனுடைய மக்கள் சாதாரணமான இந்தக் காரியங்களில் கிறிஸ்து வாழ்வதையும், கிறிஸ்து உருவாவதையும், கிறிஸ்து வளர்வதையும், கிறிஸ்து வெளியாவதையும் காண்கிறார்கள்.
ஆனால், இன்னொரு பக்கம், உலக மக்கள் அதையே குறிக்கோளாகவும், இலக்காகவும் எடுத்துக்கொள்கிறார்கள். புசிப்பது, குடிப்பதுபோன்ற இந்த உலகத்துக்குரிய காரியங்களில் ஈடுபடும்போது அவர்கள் அவைகளையே வாழ்க்கையின் இலக்காக எடுத்துக்கொள்கிறார்கள். “அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு. அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்” (பிலிப்பியா; 3:19) என்று பவுல் கூறுகிறார். புசிப்பும் குடிப்பும்போன்ற சாதாரணமான காரியங்கள் தேவனுடைய குறிக்கோளும், இலக்கும் நிறைவேறுவதற்கும் பயன்படலாம் அல்லது இவைகள் நம் கடவுளாகவும், மகிமையாகவும் மாறிவிடலாம்.
எனவே, பவுல் சொல்லுகிறார். தேவன் நம்மை ஒரு பரம அழைப்புக்கு அழைத்திருக்கிறார். ஒரு பரம இலக்கு என்று ஒன்றிருக்கிறது. நம் இலக்கு ஒன்றேவொன்றுதான். எளிய வார்த்தைகளில் சொல்வதானால், தேவன் ஒருவேளை நாம் புதிய ஏற்பாட்டில் வாசிப்பதுபோல், ஒரு ஏக்கர் நிலத்தைக் கொடுத்து “நான் வரும்போது அந்த நிலத்தில் நீ எவ்வளவு அதிகமாக உற்பத்திசெய்திருப்பாய்” என்று பார்க்க விரும்பலாம். இது இலக்கு. ஒருவன் இரண்டு மடங்கு உற்பத்திசெய்கிறான். இன்னொருவன் ஐந்து மடங்கு உற்பத்திசெய்கிறான். வேறொருவன் எந்த உற்பத்தியுமே செய்யவில்லை. ஒருவேளை நான் இரட்சிக்கப்பட்ட நாளில் எனக்குள் கிறிஸ்து எந்த அளவில் இருந்தாரோ, நான் அவரிடத்தில் மகிமையில் போய்ச் சேருகிற நாளிலும் அந்த அளவில்தான் அவர் இருக்கிறார்.
இந்த உலக மக்கள் ஞானிகளாக இருக்கிறார்கள். அவர்கள் கைகளில் 1,00,000 ரூபாய் கொடுத்துப்பாருங்கள். 10 வருடங்கள் கழித்துப்பார்த்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்கியிருப்பார்கள்.
ஆனால், தேவனுடைய மக்களாகிய நாம் தேவன் நமக்குத் தந்திருக்கும் மாபெரும் பொக்கிஷமாகிய, சுதந்தரமாகிய, கிறிஸ்துவைப்பற்றிய காரியத்தில் அந்த அளவுக்கு ஞானிகளாக இருப்பதில்லை. கிறிஸ்து வளரக்கூடிய, பெருகக்கூடிய, விருத்தியடையக்கூடிய மாபெரும் சுதந்தரம் என்ற உணர்வு தேவனுடைய மக்களுக்கு இல்லை. படிப்பு சுதந்தரம் என்கிற உணர்வு தேவனுடைய மக்களுக்கு இருக்கிறது. பணம் ஒரு சுதந்தரம் என்கிற உணர்வு இருக்கிறது. இந்த உலக மக்கள் எவைகளையெல்லாம் நன்மைகள், ஆசீர்வாதங்கள் என்று கருதுகிறார்களோ அவைகளெல்லாம் சுதந்தரம், அவைகளைப் பெருக்க வேண்டும், விருத்தியாக்க வேண்டும், அதிகரிக்க வேண்டும், என்கிற உணர்வு, அறிவு, உந்துதல், வேகம் அவர்களுக்குள் இருக்கிறது. ஆனால், தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற நித்திய ஜீவன், பரிசுத்த ஆவியானவர், அவருடைய ஜீவனிலும் சுபாவத்திலும் பங்கடைந்திருப்பது என்று பல வார்த்தைகளில் நாம் சொல்லுகிற கிறிஸ்து, நாம் பெற்றிருக்கிற கிறிஸ்து, தேவன் நமக்குத் தந்திருக்கிற சுதந்தரம், சொத்து. பங்கு, இவர் நமக்குள் வளர வேண்டும், விருத்தியடைய வேண்டும், பெருக வேண்டும். எந்த அளவுக்குப் பெருக வேண்டும் என்றால் நாம் இன்னும் பலருக்குக் கொடுக்க முடியும் என்ற அளவுக்குப் பெருக வேண்டும். இந்த உணர்வும், அறிவும், உந்துதலும், நாட்டமும், தேட்டமும் தேவனுடைய மக்களுக்குக் குறைவாக இருக்கிறது.
எனவே, பவுல் சொல்லுகிறார். “ஆகிலும், எனக்கு இலாபமாயிருந்தவைகளெவைகளோ, அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்” (பிலி. 3:7). நம் இலக்கு என்று ஒன்று இருக்கும்போது, நாம் அதை அடையாமல்போகக்கூடாது. தேவன் தமக்கும் நமக்கும் இலக்கு என்று ஒன்றை நிர்ணயித்திருக்கும்போது அதை நாம் அடையாமல், எட்டாமல் விடக்கூடாது.
உடனே ஒரு கேள்வி வரும். அடையாமல், எட்டாமல் விட்டால் என்ன ஆகும்? ஒரு முதலீட்டைப் போட்டு ஒரு வியாபாரம் ஆரம்பித்து நாம் அந்த முதலீட்டை எடுக்காமல் போனால் அந்த வியாபாரம் என்ன ஆகும்? நஷ்டமாகும். இதை யாராவது விடுவார்களா? விடமாட்டாரகள். ஆனால், தேவன் ஒரு முதலீடு செய்து ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அதை எட்டாமல் போனால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது என்று நாம் நினைக்கிறோம். அது நமக்கும் தேவனுக்கும் நஷ்டம் என்று நாம் உணர்வதில்லை. இதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். இது தேவனுக்கும் நமக்கும் நஷ்டம்.
தேவன் ஒரு குறிக்கோளை, இலக்கை வைத்திருக்கிறார். அது பரம இலக்கு. அதை நாம் எட்ட வேண்டும் என்று நம்மை அவர் அழைத்திருக்கிறார். அது பரம அழைப்பு. “நான் அதை நோக்கி ஆசையாய்ப்பின்தொடர்கிறேன்.” அவர் சொல்லுகிறார். “இந்தப் பூமியிலும் நாம் மதிக்கத்தக்க பல காரியங்கள் இருக்கின்றன. ஆனால், நான் அவைகளை எடைபோட்டுப்பார்த்து, அவைகளை நான் நஷ்டமென்று விடுகிறேன். அவைகளை நான் குப்பையுமாகக் கருதுகிறேன்”.
ஆண்டவராகிய இயேசுவின் சீடர்கள் கேட்டதுபோல் நாமும் ஒரு கேள்வி கேட்கலாம். “சரி, நாங்கள் அந்த இலக்கை எட்டினோம் அல்லது எட்டுவதற்காக இந்த உலக வாழ்க்கையில் சில காரியங்களை நஷ்டமாக அல்லது குப்பையாக கருதினோம் என்றால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?” “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்பற்றினோமே! எங்களுக்கு என்ன கிடைக்கும்?” இன்றைக்குப் பெரும்பாலான பிரசங்கங்கள் எப்படி இருக்கின்றன? உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதற்கு இதோ எங்களிடம் பதில் இருக்கிறது என்பதுபோல் இருக்கின்றன. என்ன கிடைக்கும்? “நீங்கள் ஆசீர்வாதமாக இருப்பீர்கள், உங்கள் பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். நல்ல வேலை கிடைக்கும், நல்ல வருமானம் கிடைக்கும், நல்ல திருமணம் நடக்கும். நல்ல சொத்து கிடைக்கும், வண்டி கிடைக்கும், கார் கிடைக்கும். வெளிநாட்டுக்குப் போய்வருவீர்கள்.” போதுமா? ஆனால், ஆண்டவராகிய இயேசு அப்படிச் சொல்லவில்லை. “இப்பொழுது இம்மையிலே துன்பங்களோடேகூட…” (மாற்கு 10:30). இப்படிச் சொன்னால் இன்றைக்கு எத்தனைபேர் இயேசுகிறிஸ்துவின் சீடராக இருப்பார்கள்?
தேவனுக்குத் தம் பிள்ளைகளுடைய இந்தப் பூமிக்குரிய தேவைகளைக்குறித்து அக்கறையில்லை என்று நான் சொல்லவில்லை. இவைகளெல்லாம் தம் பிள்ளைகளுக்குத் தேவை என்று அவருக்குத் தெரியும். தெரிந்தது மட்டும் அல்ல. அவர்களுடைய குடும்பங்களிலே மகிழ்ச்சி, சந்தோஷம், சமாதானம், குதூகலம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். “நீதிமான்களின் கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு” (சங். 118:15). இவைகளையெல்லாம் தேவன் விரும்புகிறாரா? அதற்காகத் தேவன் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறாரா? செயல்படுகிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அப்படிப்பட்ட ஒரு உறுதிமொழியைக் கொடுத்திருக்கிறார். “இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரம பிதா அறிந்திருக்கிறார்” (மத். 6:32). இந்த முழு வேதாகமத்திலும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வசனம் இது. இந்த வசனத்தைப்போல் வேறு எந்த வசனமும் என்னை ஆற்றினதில்லை. ஆனால், நம்முடைய நாட்டமும், தேட்டமும் அதுவல்ல.
நம் வாழ்க்கையின் இலக்கு தேவனுடைய இலக்கோடு ஒன்றாக இருக்க வேண்டும், இசைவாக இருக்க வேண்டும் என்பது நம் வாஞ்சையும், விருப்பமுமாக இருக்க வேண்டும்.
இதை நான் மிகவும் பயத்தோடு சொல்லுகிறேன். உடனே, “படிக்கிறவர்களெல்லாம் படிப்பைவிட்டு விடுங்கள், வேலை பார்க்கிறவர்களெல்லாம் வேலையை விட்டுவிடுங்கள் அல்லது அரைகுறை மனதோடு வேலைபாருங்கள். நீங்கள் ஆசிரியர் வேலை பார்த்தால் எதையும் ஆயத்தம் செய்யாமல் எதையாவது போய் உளருங்கள்,” என்று நான் சொல்லவில்லை. “அது தேவனுடைய இலக்கு அல்ல. எனவே, இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்,” என்றும் நான் சொல்லவில்லை. தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் அல்லது “அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கிறவர்கள் அலுவலகத்துக்குப் போனவுடன் வேதாகமத்தைத் திறந்துவைத்துக்கொள்ளுங்கள் 10 மணியிலிருந்து 11 மணிவரை வேதம் வாசியுங்கள். 11 மணிக்கு டீ குடிக்கப் போங்கள். 11 மணியிலிருந்து 12 மணிவரை ஜெபம் பண்ணுங்கள்,” என்று நான் சொல்லவில்லை.
நீங்கள் ஆசிரியர் வேலை பார்த்தாலும் சரி, அரசு அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் சரி. நாம் எதைச் செய்தாலும் கிறிஸ்து நமக்குள் உருவாவதற்கு, தேவனுடைய மகிமைக்காக செய்ய முடியும் என்பதுதான் நான் வலியுறுத்துவது, நான் சொல்ல வருவது. இவைகளும் அவைகளும் ஒன்றுக்கொன்று முரணானது அல்ல. காலையில் 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை வேலை பார்க்கிறவன் கிறிஸ்து தனக்குள் உருவாவதற்கு முரணாகத் தன் நேரத்தைச் செலவிடுகிறானா? இல்லை. நாம் காலையிலிருந்து மாலைவரை கடைக்குப்போய் சாமான்களை வாங்கிவந்து சமைக்கிறோம். வீட்டு வேலைகளைச் செய்கிறோம். இவைகள் சாதாரணமான வேலைகள். இவைகள் கிறிஸ்துவுக்கு முரணானதா? இல்லை. அவைகள்மூலமாக கிறிஸ்து நமக்குள் உருவாக முடியும்.
நாம் தேவனுடைய இலக்கை நேர்கோட்டில் போய் எட்டுவதில்லை. ஒன்று சொல்லுகிறேன். தேவனுடைய இலக்கை நாம் எட்டினால் நம் வாழ்க்கையின் முடிவுக்கு நாம் வரும்போது, “நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது,” (2 தீமோ. 7, 8) என்று நம்மால் சொல்ல முடியும். “பரலோகத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒருவர் வீற்றிருக்கிறார். அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி இருபத்துநான்கு மூப்பர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் தலைகளிலிருந்த கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து தேவனை ஆராதித்தார்கள்” என்று பார்க்கிறோம் (வெளி. 4:10). அவர்கள் தலைகளில் கிரீடம் இருப்பதுபோல் நான் கற்பனை செய்யவில்லை. நாம் பரலோகத்துக்குப் போகும்போது நம் தலைகளில் கிரீடம் இருக்காது. ஆனால், கிரீடத்துக்கு ஒத்த ஏதொவொன்று நம் கட்டமைப்பில் இருக்கும். அது ஆவிக்குரியது. எந்தக் கிரீடத்தையும்விட அது உண்மையானது. ஒரு கிரீடத்தைத் தொட்டுப்பார்க்கலாம் என்றால் தொட்டுப்பார்க்க முடியாத இந்தக் கிரீடம் அதைவிடத் திடமான பொருளால் ஆனது. அவர்கள் அந்தக் கிரீடங்களைச் சிங்காசனத்துக்குமுன்பாக வைத்துத் தேவனை ஆராதிக்கிறார்கள். இன்றைக்கு நம்மிடத்தில் ஆராதனை மட்டும் இருக்கும். ஆனால், வைப்பதற்கு கிரீடம் இருக்காது. அது தேவனுக்கு மிகுந்த ஏமாற்றம். “ஆண்டவரே, என் ஆவி, ஆத்துமா, சரீரத்தைப் படைக்கிறேன். நீரே எங்கள் துதி கனம் மகிமையெல்லாம் பெறத்தக்கவர்,” என்று சொல்வதற்குமுன் அவருக்குப் படைப்பதற்கு நம்மிடம் கிரீடம் இருக்க வேண்டும்.
இந்த மனித வாழ்க்கையில் தேவனுடைய குறிக்கோளுக்கென்று, தேவனுடைய மகிமைக்கென்று, நாம் வாழ்கிற வாழ்க்கையின் விளைவாக நம்மிலும், நம்மூலம் பிறருக்குள்ளும் உருவாக்கப்படும் கிறிஸ்துதான் அந்தக் கிரீடம். கிரீடத்திற்கு இதைத்தவிர வேறு எந்த வியாக்கியானமும், பொருள் விளக்கமும் கொடுக்க முடியாது. தேவனோடும், தேவனுடைய குறிக்கோளோடும், இலக்கோடு;ம் நம் முழு வாழ்க்கையையும் இசைத்துக்கொள்ளும்போது நமக்குள்ளும் நம்மூலம் பிறருக்குள்ளும் உருவாக்கப்படும் கிறிஸ்துதான் நாம் தேவனுக்குப் படைக்கின்ற கிரீடம், தேவனுக்குப் படைக்கின்ற பலி. இப்படிப்பட்ட பலி, “ஆண்டவரே, இந்தப் பூமிக்குரிய வாழ்க்கையிலேயே இவையெல்லாவற்றையும் குப்பையும் நட்டமுமென்று கருதி, இதோ நான் பெற்றுக்கொண்ட கிறிஸ்து.” இதற்குப் பெயர் பரிசுத்தவான்களின் சுதந்தரம். நாம் இதைத் தேவனுக்குப் படைக்கும்போது தேவன் அகமகிழ்வார்.
இந்தப் பூமியில் என்ன கிடைக்கும் என்று நான் இதுவரை சொல்லவில்லை. சொல்லமாட்டேன். அதில் எனக்கு ஈடுபாடு இல்லை. “நீங்கள் நன்றாக இருப்பீர்கள். உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், நல்ல வருமானம் கிடைக்கும், உங்கள் பிள்ளைகள் சுபிட்சமாக இருப்பார்கள், உங்கள் வீடு சமாதானமும், மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிறைந்ததாக இருக்கும்,” என்று நான் சொல்ல விரும்பவில்லை. இவைகளெல்லாம் எனக்குக் குறைவாக இருந்தாலும் எனக்கு அது ஒரு பொருட்டல்ல.
நாம் நேர்கோட்டில் சென்று இந்த இலக்கைத் தொடுவதில்லை. நான் ஐந்து குறிப்புகளைத் தருகிறேன். இந்த இலக்கை எட்டுவதற்கு ஐந்து தடைகள் இருக்கின்றன.
தேவன் ஒரு இலக்குக்கு நம்மை அழைத்திருக்கிறார். சில இடங்களில் அங்கும் இங்குமாக சில மைல்கற்கள் இருக்கும். ஒரு மைல் கல்லை அடைந்தவுடன் இலக்கை எட்டியாயிற்று என்ற எண்ணம் வந்துவிடும். இந்த மைல்கற்கள் நாம் பெற்ற வெற்றிகளாக இருக்கலாம். ஒரு மைல்கல்லைப் பார்த்தவுடனேயே இலக்கை எட்டிவிட்டோம் என்ற எண்ணம் வந்துவிடலாம். எனவே, இந்த இலக்கை எட்டுவதற்கு நமக்கு முதல் தடை நாம் பெற்ற வெற்றிகள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எருசலேமுக்குப் போக வேண்டும் என்ற இலக்கை வைத்திருந்தார். அதற்குமுன்பாக பேதுரு அவருக்கு நல்ல ஆலோசனை கொடுக்கிறார். “ஆண்டவரே நாம் இங்கே இருக்கிறது நல்லது” (மத். 17:4). ஏனென்றால் அது எப்பேர்ப்பட்ட ஆவிக்குரிய அனுபவம்!
தேவனுடைய குறிக்கோளை எட்டுவதற்காகப் போய்க்கொண்டிருக்கிறோம், அதை ஆசையாய்ப் பின்தொடர்கிறோம். இடையில் தோல்விகள் வரும். தோல்விகள் நமக்கு வெளியே இருந்து வருவதில்லை. நமக்குள்ளிருந்து வரும். இதே பேதுரு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கிறார். அது தோல்வி. ஒரு தோல்விக்குப்பின் நமக்கு என்ன எண்ணம் வரும் என்றால் இனிமேல் தொடர்ந்து ஆசையாய்ப் பின்தொடர்ந்து அந்த இலக்கை, குறிக்கோளை, எட்டமுடியாது என்ற எண்ணம் வரும். ஒரு தோல்விக்குப்பிறகே இந்த எண்ணம் வரும். ஒருவேளை தோல்விகள் அடுத்தடுத்து வரும் என்றால் சொல்லவே வேண்டாம். “நான் இந்தக் குறிக்கோளையும், இலக்கையும் நோக்கிப் போவதற்கு தகுதியானவனே இல்லை. கர்த்தர் யோசிக்காமல் என்னை இந்தப் பரம அழைப்புக்கு அழைத்துவிட்டார். என்னை அழைப்பதற்குமுன் அவர் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும்,” என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுவோம்.
தேவனுடைய பகைவன் நமக்கு நிறைய எதிர்ப்புகளைக் கொண்டுவருவான். அந்த எதிர்ப்புகள் மனிதர்கள்மூலமாக வரும்.
அந்த இலக்குக்குப்பதிலாக ஏறக்குறைய அந்த அளவுக்கு மதிப்புடையதுபோன்ற இன்னொரு இலக்கு வரும். எடுத்துக்காட்டு அனாதை இல்லம் கட்டுதல். நாம் அனாதைகளையும், விதவைகளையும் விசாரிப்பது தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தி என்று யாக்கோபு தன் நிருபத்தில் எழுதுகிறார் (யாக். 1:27). ஆனால், அந்த இலக்குக்கு மாற்றாக இன்னொரு இலக்கை நாம் வைக்க முடியும். இது திசைதிருப்பம் அல்லது “கர்த்தர் எனக்கு இந்த வேலையைக் கொடுத்திருக்கிறார். இந்த வேலையை நான் உத்தமமாகச் செய்ய வேண்டும்” என்று 24 மணி நேரமும் வேலையைச் செய்வது. இது சாத்தியம்.
அதாவது சிதறல். ஒரேவொரு இலக்கு இருக்காது. அங்கு ஒன்று இங்கு ஒன்று என பலவிதமான சிறுசிறு இலக்குகளை நாம் வைத்திருப்போம்.
தேவனுடைய மக்களுக்கு இப்படிப்பட்ட தடைகள் இருக்கின்றன. மூன்று எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன். 1. முதலாவது ஆபிரகாமின் வாழ்க்கை. நீங்கள் ஆபிரகாமின் வாழ்க்கையை இரண்டு மணி நேரத்தில் வாசித்து முடித்துவிடலாம். வெற்றி, தோல்வி, எதிர்ப்பு, திசைதிருப்பம், சிதறடிக்கப்படுதல் இந்த ஐந்தும் அவனுடைய வாழ்க்கையில் இருக்கும்.
இன்னும் சிறந்த எடுத்துக்காட்டு இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து கானானுக்கு வரும்போது அவர்களும் இந்த இலக்கை எட்டுவதற்கு வெற்றிகள், தோல்விகள், எதிர்ப்புகள். திசைதிருப்பங்கள், சிதறடிக்கப்படுதல் இருந்தன. இஸ்ரயேல் மக்கள் சிறையிருப்புக்குப்போய் மீண்டும் திரும்பி வந்து எருசலேமையும் தேவாலயத்தையும் எடுத்துக்கட்டுவதிலும் வெற்றிகள், தோல்விகள், எதிர்ப்புகள், திசைதிருப்பங்கள், சிதறடிக்கப்படுதல் இருக்கின்றன.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் தோல்விகளைப் பார்க்க முடியாது. அவரைச்சுற்றியிருந்தவர்களின் வாழ்க்கையில் அதைப் பார்க்கலாம். ஆனால், மற்ற நான்கு காரியங்களைப் பார்க்கலாம். இந்த நான்கையும் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். ஆபிரகாமின் வாழ்க்கை. இஸ்ரவேல் மக்களுடைய கானான் பயணம். அவர்கள் பாபிலோனிலிருந்து மீண்டும் எருசலேமுக்கு வந்து எருசலேமைக் கட்டுவது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை. இதைப் பார்க்கும்போது அவர்கள் இந்த ஐந்து தடைகளையும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று தெரியும்.
தேவனுடைய மக்களுடைய வாழ்க்கை குறிக்கோளும், இலக்கும் உள்ள வாழ்க்கையாக இருக்க வேண்டும். அப்போது நாம் நம் வாழ்க்கையின் எல்லைக்கு வரும்போது தேவனுக்கென்று, அவர் அகமகிழ்வதற்கென்று அவருக்குக் கொடுப்பதற்கு நம்மிடத்தில் ஒரு கிரீடம் உண்டாயிருக்கும்.
இன்று உங்கள் நிலைமைக்கு இதுதான் தீர்வு. எனக்குத் தெரிந்து நம் வாழ்க்கையின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரேவொரு தீர்வுதான் உண்டு. அது என்னவென்றால் தேவனுடைய இலக்கோடும், தேவனுடைய குறிக்கோளோடும் நம் வாழ்க்கையை, நம் குறிக்கோளை, இலக்கை இணைத்துக்கொள்ள வேண்டும். அதைத்தவிர நம் வாழ்க்கையின் தேவைகளுக்கும், நம் வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கும் வேறு எந்தத் தீர்வும் இல்லை. அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி. ஆனால், உங்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், ஊக்கமூட்டுவதற்காகவும் சொல்லுகிறேன். கண்டிப்பாக தேவனுடைய குறிக்கோளை நோக்கி, தேவனுடைய இலக்கை நோக்கிச் செல்லும்போது இப்படிப்பட்ட தடைகள் நமக்கு உண்டு. சில வெற்றிகள் நம் இலக்கை நோக்கிச் செல்வதைத் தடுக்கும். சில தோல்விகள் நம் வாழ்க்கையில் இருக்கும். எதிர்ப்புகள் உண்டு. திசைதிருப்பங்கள் உண்டு அல்லது நம் கவனம் சிதறடிக்கப்படும். ஆனால், இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு, நாம் தேவனுடைய இலக்கை ஆசையாய்ப் பின்தொடர்ந்தால் நிச்சயமாக அவருடைய வருகையில் நம் மகிமை பெரிதாக இருக்கும். நம் வாழ்க்கை தேவனை மகிமைப்படுத்துகிற வாழ்க்கையாக இருக்கும். அது மட்டும் அல்ல. இந்தப் பூமியிலும்கூட வெறுமனே இந்தப் பூமிக்குரிய நன்மைகள் நிறைந்த அல்லது நன்மைகளை மற்றவர்களுக்கு வழங்குகிற வாழ்க்கையாக மட்டும் அல்ல அதைவிடப் பலருக்குக் கிறிஸ்துவைக் கொடுக்கிற வாழ்க்கையாக நம் வாழ்க்கையைத் தேவன் ஆசீர்வதிப்பார்.