Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

எல்லாம் கிறிஸ்துவுக்குள் கூட்டிச்சேர்க்கப்படுதல்

Unedited transcript of a message spoken in November, 2013 in Chennai

By Milton Rajendram

நம்முடைய தேவனுக்கு ஒரு குறிக்கோள் உண்டு. அந்தக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகவே அவர் உலகம் தொடங்கினதுமுதல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

  1. முதலாவது, இந்தச் சிருஷ்டிப்பிலே, படைப்பிலே, தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை வெளிக்காண்பிக்க வேண்டும் என்பதே தேவனுடைய குறிக்கோள். அதாவது, இந்தச் சிருஷ்டிப்பின்மூலமாக அவர் தம் குமாரனாகிய கிறிஸ்துவை வெளிக்காண்பிக்க விரும்புகிறார்.

  2. இரண்டாவது, இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு தேவன் தம் ஜீவனை மனிதர்களுக்கு வழங்குகிறார். தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவர் இங்குதான் தொடங்குகிறார். படைப்பு முழுவதும் தம் குமாரனை வெளிக்காண்பிக்க வேண்டும் என்பது அவருடைய இலக்காக இருந்தபோதும், அவர் இதை எங்கோ ஓர் இடத்தில் தொடங்க வேண்டும் இல்லையா? இதை அவர் தம் ஜீவனைப் பெற்றுக்கொண்ட தம் பிள்ளைகளுக்குள் தொடங்குகிறார். அவர் தம் பிள்ளைகளுக்குள் தம் குமாரனாகிய கிறிஸ்துவை உருவாக்க, வெளிக்காண்பிக்க, விரும்புகிறார்.

  3. மூன்றாவது, அவர் தம் ஜீவனைத் தம் பிள்ளைகளுக்குத் தந்தபிறகு அந்த ஜீவன் அவர்களுக்குள்ளே வளர்ந்து, விருத்தியடைந்து, முதிர்ச்சியடைந்து, கனிகொடுக்கிறவரைக்கும், அவர்கள்மூலமாக கிறிஸ்து அவர்கள் வாழ்க்கையிலே வெளிக்காண்பிக்கப்படும்வரைக்கும், பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய வாழ்க்கையில் உண்மையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

1. தேவனுடைய குறிக்கோள்

தேவனுக்கு ஒரு குறிக்கோள் உண்டு என்பதே பல சமயங்களில் தேவனுடைய மக்களுக்கு ஒரு செய்தியாக இருக்கிறது. தேவன் இந்த உலகத்தைப் படைப்பதற்குமுன்பே ஒரு குறிக்கோளை வைத்திருந்தார். இதை நாம் தேவனுடைய ஆதிக் குறிக்கோள் என்று சொல்லலாம். அதுபோல, காலம் நிறைவேறுகிறபோது இந்தக் குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இதை நாம் அவருடைய இறுதிக் குறிக்கோள் என்று சொல்லலாம். இவைகளெல்லாம் வெவ்வேறு குறிக்கோள்கள் அல்ல.

தேவனுடைய தம் ஆதிக் குறிக்கோளை நிறைவேறுகிறவரை விடுவதில்லை. “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்” (யோபு 42:2). நிறைவேற்ற வேண்டும் என்று தொடங்கின அந்தக் குறிக்கோளை தேவன் நிறைவேற்றியே தீருவார். இந்த நோக்கத்தைத்தவிர வேறு எதிலும் அவருக்கு ஈடுபாடு இல்லை. “காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும், பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரராகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்” (எபே. 1:9-12).

கிறிஸ்துவே இலக்கு

இவை வாசிப்பதற்கு மிக எளிமையான வசனங்கள் இல்லை, கொஞ்சம் கடினமான வசனங்கள். இதில் சொல்லப்பட்டுள்ள எண்ணங்கள் ஆழமானவை. தேவன் ஒரு குறிக்கோளை வைத்திருக்கிறார் என்று இந்த வசனங்களில் பார்க்கிறோம். காலங்கள் நிறைவேறும்போது பரலோகத்திலும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய அனைத்தும் கிறிஸ்துவுக்குள் கூட்டிச்சேர்க்கப்படவேண்டும் என்பதே அந்தக் குறிக்கோள். மனிதன் தொடங்கி இந்தச் சிருஷ்டிப்பிலுள்ள, இந்தப் படைப்பிலுள்ள, எல்லாப் பொருட்களும் கிறிஸ்துவுக்குள் அல்லது கிறிஸ்துவைத் தலையாகக்கொண்டு அவருக்குள் கூட்டிச்சேர்க்கப்படவேண்டும் என்பது தேவனுடைய குறிக்கோள். இது எவ்வளவு அற்புதமான குறிக்கோள் என்று நமக்குத் தெரியவரும்போது நாம் மகிழ்ச்சியடைவோம். நாம் அப்போது “அல்லேலூயா” சொல்வோம். “ஓ! தேவன் இப்படிப்பட்ட குறிக்கோள் வைத்திருக்கிறாரா!” என்று நாம் வியப்போம். சகலமும் மனிதனில்தான் தொடங்கும். மனிதன், மனித வாழ்க்கை தொடங்கி இந்தச் சிருஷ்டிப்பிலுள்ள, இந்தப் படைப்பிலுள்ள, எல்லாப் பொருட்களும் கிறிஸ்துவைத் தலையாகக்கொண்டு அவருக்குள் இசைவாக, பொருத்தமாக, கூட்டிச்சேர்க்கப்படவேண்டும். காலங்கள் நிறைவேறும்போது இந்தச் சிருஷ்டிப்பிலே, படைப்பிலே, பிரபஞ்சத்திலே, தேவன் பார்க்கும்போது ஒன்றேவொன்றைத்தான் பார்ப்பார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மட்டும்தான். காலங்கள் நிறைவேறும்போது அல்லது யுகங்கள் நிறைவேறும்போது இந்தச் சிருஷ்டிப்பிலே, படைப்பிலே, பிரபஞ்சத்திலே ஒன்றேவொன்றுதான் காணப்படும், ஒரேவொருவர்தான் காணப்படுவார். அவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைத்தவிர இந்தப் பிரபஞ்சத்திலே, இந்தச் சிருஷ்டிப்பிலே, படைப்பிலே, தேவன் வேறு எதையும் காணவிரும்பவில்லை. பிதாவாகிய தேவனை மகிழ்ச்சியாக்குவது, அவருக்குக் களிப்பைத் தருவது, அவருக்குப் பூரிப்பைத் தருவது குமாரனாகிய கிறிஸ்து மட்டுமே.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று கரையேறும்போது இந்தச் சம்பவம் நடைபெறுகிறது. “அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன். இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத்தேயு 3:17) என்று பிதாவாகிய தேவன் பேசினார். பிதாவைப் பூரிப்பாக்குவது, மகிழ்ச்சியாக்குவது, களிப்பாக்குவது ஒன்றேவொன்றுதான். எங்கு அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து எந்தத் தங்குதடையுமின்றி வெளிப்படுகிறாரோ, வெளிக்காண்பிக்கப்படுகிறாரோ, அங்கு பிதாவாகிய தேவனுடைய மனம் பூரிப்படைகிறது. இந்த ஒன்றைத்தவிர தேவனைத் திருப்தியாக்குகிற வேறொன்றும் இல்லை.

தேவனுடைய திட்டத்தில் மனிதன்

இதற்காகவே அவர் இந்தப் படைப்பை, சிருஷ்டிப்பை உண்டாக்கினார். இந்தச் சிருஷ்டிப்பின், படைப்பின் மையமாக அவர் மனிதனை உண்டாக்கினார். சிருஷ்டிப்பு, படைப்பு என்று சொல்லும்போது கொஞ்சம் விளங்காமல் போகலாம். ஆனால், சிருஷ்டிப்பு அல்லது படைப்பு என்ற இடத்தில் ‘மனிதன்’ என்ற வார்த்தையைப் போட்டால் அது நன்றாக விளங்கிவிடும். காலங்கள் நிறைவேறும்போது எல்லா மனிதர்களும் கிறிஸ்துவைத் தலையாகக்கொண்டு இசைவாக, பொருத்தமாக, ஒத்து அவருக்குள் கூட்டிச்சேர்க்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய குறிக்கோள், தேவனுடைய நோக்கம். இதை நீங்கள் யோசித்துப்பார்க்க வேண்டும். இந்தப் படைப்பில் அல்லது எல்லா மனிதர்களிலும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை மட்டுமே பார்க்க வேண்டும் என்பது தேவனுடைய குறிக்கோள். அவர் கிறிஸ்துவை மட்டுமே பார்க்க விரும்புகிறார். இது தேவனுடைய குறிக்கோள். இது தேவனுடைய திட்டம். “ஓ! என்னில் பிதாவாகிய தேவன் கிறிஸ்துவைப் பார்க்கப் போகிறாரா?” கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். இதை நினைத்துப்பார்க்கும்போதே எவ்வளவு ஆச்சரியமாகவும், சில சமயங்களில் அதிர்ச்சியாகவுங்கூட இருக்கும். என்னில் தேவன் எதைப்பார்க்க விரும்புகிறார்? கிறிஸ்துவைப் பார்க்க விரும்புகிறார். இது அவருடைய குறிக்கோள், அவருடைய திட்டம், இது அவருடைய தீர்மானம். இந்தக் குறிக்கோள் என் புத்திக்கு அப்பாற்பட்டது. இந்தக் குறிக்கோளை அவர் எப்படி நிறைவேற்றப்போகிறார் என்பது இன்னும் திகைப்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு குறிக்கோளை தேவனால் நிறைவேற்ற முடியுமா? காலங்கள் நிறைவேறும்போது இந்தச் சிருஷ்டிப்பிலே, படைப்பிலே, எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும், எல்லா மனிதர்களிலும், தேவன் ஒன்றேவொன்றைத்தான் பார்க்கவிரும்புகிறார். அது கிறிஸ்து.

இது உண்மைதானா என்பதைப் பார்ப்பதற்கு நீங்கள் இன்னொரு வசனத்தை வாசியுங்கள். “அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றும் இல்லை; விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை; புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை; அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்” (கொலோ. 3:11). தேவன் இந்தப் படைப்பை, சிருஷ்டிப்பை, குறிப்பாக மனித இனத்தைப் படைக்கிறார். தேவன் இந்த மனித இனத்தைப் படைப்பதற்கு, சிருஷ்டிப்பதற்குக் காரணம் என்னவென்றால் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவை வெளிக்காண்பிப்பதற்கு அவருக்கு ஒரு பாத்திரம் வேண்டும். அந்தப் பாத்திரம்தான் மனிதன். மனிதன் சாப்பிட வேண்டும், உடுக்க வேண்டும், வாழ்க்கையில் பல இன்பங்களைப் பெற்று அனுபவிக்க வேண்டும். ஒரு குடும்பம் வேண்டும். இவைகளுக்காகத் தேவனுக்கு நன்றி. மனிதன் பிரதானமாக இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே அவனைப் படைத்தார் என்று வேதாகமம் சொல்லவில்லை. இந்தப் பரிசுத்த வேதாகமம் நமக்குக் காண்பிப்பது தேவன் மனிதனைப் படைத்ததின், சிருஷ்டித்ததின், உண்டாக்கினதின் நோக்கம் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை வெளிக்காண்பிப்பதற்கு அவருக்கு ஒரு பாத்திரம் வேண்டும். அப்படிப்பட்ட பாத்திரமாக மனிதனை அல்லது மனித இனத்தை அவர் படைத்தார்.

புதிய மனித இனம்

ஆனால், முதல் மனிதன் அல்லது அவன்மூலமாக முழு மனித இனமும் அவருடைய நித்தியத் திட்டத்தை, குறிக்கோளைத் தவறவிட்டுவிட்டது. எனவே, இந்தப் பழைய மனித இனத்தைக்கொண்டு அவருடைய குமாரனை வெளியாக்க முடியாது, அவருடைய குறிக்கோளை நிறைவேற்ற முடியாது. நாம் பழைய மனித இனத்தின் உறுப்பினர்களாக இருக்கும்வரைக்கும் தேவன் தம் குறிக்கோளை நம்மூலம் நிறைவேற்ற முடியாது. பழைய மனித இனத்தை எவ்வளவுதான் மேம்படுத்தினாலும், கல்விபுகட்டினாலும், மிக உயர்ந்த மதப்பழக்கவழக்கங்களை சொல்லிக்கொடுத்தாலும் பழைய மனித இனத்தைக்கொண்டு கிறிஸ்துவை வெளியாக்க முடியாது. எனவே, தேவனுடைய திட்டம் என்னவென்று கேட்டால் ஒரு புதிய மனித இனத்தை உண்டாக்குவது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனித உருவானது, அவருடைய மனித வாழ்க்கை, அவருடைய சிலுவை மரணம், உயிர்த்தெழுதல்மூலமாக அவர் பிரதானமாக எதைச் செய்துமுடித்தார் என்றால் ஒரு புதிய மனித இனத்தை அவர் சிருஷ்டித்தார் அல்லது படைத்தார்.

இயேசு கிறிஸ்து என்ன செய்தார்? பல காரியங்களைச் செய்தார். பார்வையற்றவர்களுக்குப் பார்வை அளித்தார். செவித்திறனற்றவர்களுடைய செவிகளைத் திறந்தார். முடவர்களை நடக்கச்செய்தார். பாவங்களை மன்னித்தார். உணவில்லாதவர்களுக்கு உணவளித்தார். அவர் எவ்வளவோ நன்மைகளைச் செய்தார் என்று நாம் நினைக்கலாம். ஆனால், புதிய ஏற்பாட்டிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்தது ஒன்றேவொன்றுதான். அவர் ஒரு புதிய சிருஷ்டிப்பை உண்டாக்கினார். “கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாமையும் ஒன்றுமில்லை. புது சிருஷ்டியே காரியம்,” (கலா. 6:15) என்று பவுல் சொல்லுகிறார். தேவனைப்பொறுத்தவரை, இந்த உலகத்தில் அவருடைய ஈடுபாடு, அவருடைய ஆர்வம், அவருடைய இருதயத்தின் கவனத்தை ஈர்ப்பது ஒன்றேவொன்றுதான். இந்தப் பூமியில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து புதிய சிருஷ்டிப்பு என்ற ஒன்றை உண்டாக்கியிருக்கிறார். அந்தப் புதிய சிருஷ்டிப்புக்கு வெளியே அவருக்கு எந்த ஆர்வமும், ஈடுபாடும், கவனமும், அக்கறையும் இல்லை. நாமெல்லாரும் நல்லவர்கள் என்பதால் தேவனுடைய கவனம் அல்லது அவருடைய ஆர்வம், ஈடுபாடு, அக்கறை நம்மேல் இருக்கவில்லை. தேவனுடைய ஆர்வமும், கவனமும், ஈடுபாடும், அக்கறையும் நம்மேல் இருப்பதற்கு ஒரு கனமான காரணம் உண்டு. அது என்னவென்றால் நாம் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிப்பாக இருக்கிறோம்.

இந்தப் புதிய சிருஷ்டிப்பிலே “ஆணென்றும் இல்லை பெண்ணென்றும் இல்லை; விருத்தசேதனம் உள்ளவன் என்றும் இல்லை, விருத்தசேதனம் இல்லாதவன் என்றும் இல்லை; யூதன் என்றும் இல்லை கிரேக்கன் என்றும் இல்லை; பண்பாடு அற்றவன் என்றும் இல்லை காட்டுமிராண்டி என்றும் இல்லை, கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்,” என்று பவுல் சொல்லுகிறார். பழைய சிருஷ்டிப்பில் எவைகளெல்லாம் முக்கியமான காரியங்கள் என்று கருதப்படுகின்றனவோ அவைகளெல்லாம் புதிய சிருஷ்டிப்பில் முக்கியமான காரியங்கள் இல்லை. புதிய சிருஷ்டிப்பில் ஒன்றேவொன்றுதான் இருக்கிறது. அது கிறிஸ்து. புதிய சிருஷ்டிப்பிலே கிறிஸ்துவே எல்லாமுமாயிருக்கிறார், கிறிஸ்துவே எல்லாரிலும் இருக்கிறார். எல்லாருக்கும் கிறிஸ்து எல்லாமுமாக வேண்டும். இதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தப் புதிய சிருஷ்டிப்பில் பங்குபெறுகிற எல்லாருக்குள்ளும் கிறிஸ்து இருக்கிறார். அந்தக் கிறிஸ்து எல்லாமுமாக இருக்கிறார்.

ஆராதனை

தேவனை ஆராதிப்பதென்றால் தேவன் செய்த நன்மைகளை அல்லது தேவன் எனக்கு என்னவாக இருக்கிறாரோ, கர்த்தர் எனக்கு என்னவாக இருக்கிறாரோ, அதை நாம் ஒரு சில வார்த்தைகளையோ அல்லது ஒரு சில வாக்கியங்களையோ சொல்லி அவரிடத்தில் பேசுவதுதான் நாம் தேவனுக்குச் செய்கிற ஆராதனை. நம் ஆராதனையில் மிக முக்கியமாக மேலோங்கிநிற்கிற ஒரு எண்ணம் என்னவென்று கேட்டால் கிறிஸ்து எப்படிப்பட்டவர், அவர் எவ்வளவு மகா மேன்மையும் மகத்துவமுமானவர், எவ்வளவு போதுமானவர், எவ்வளவு நிறைவானவர், எப்படி அவர் வற்றிப்போகாதவர், தீர்ந்துபோகாதவர், அவருக்குள் இல்லாத எதுவுமே இல்லை, அவருக்கு வெளியே தேவனுக்கோ மனிதனுக்கோ தேவையான எதுவும் இல்லை என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படிப்பட்ட அற்புதமான நபர் என்று நாம் காண்பதும், அவரிடத்தில் சொல்வதும்தான் அவருக்கு உகந்த ஆராதனை. தேவனை ஆராதிக்க வேண்டும் என்றால் தேவனுடைய குமாரன் எனக்கு என்னவாக இருக்கிறார், என் அனுபவத்தில், என் மதிப்பீட்டில், உண்மையில் தேவனுடைய குமாரன் எனக்கு என்னவாக இருக்கிறார் என்று சொல்வதுதான் தேவனுக்கு உகந்த ஆராதனை. தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்னவாக இருக்க முடியும் என்றால் எல்லாமுமாக இருக்க முடியும். இந்த எல்லாமுமாக என்பதில் எல்லாமும் அடங்கிவிடும். இயேசு கிறிஸ்துவை நம் வாழ்க்கையில் வெளிக்காண்பிப்பதற்கு என்னவெல்லாம் தேவையோ அவையனைத்தும் கிறிஸ்துவினிடத்தில் இருக்கிறது.

கிறிஸ்துவை வெளிக்காண்பித்தல்

இது முதலாவது குறிப்பு. கிறிஸ்துவை இந்தச் சிருஷ்டிப்பில் காண்பிப்பது தேவனுடைய குறிக்கோள். இதைத்தவிர தேவனுக்கு வேறு எந்தக் குறிக்கோளும் இல்லை. ஆதிமுதல் இறுதிவரை தேவனுடைய எல்லா அசைவுகளும், எல்லா இயக்கங்களும், எல்லாச் செயல்பாடுகளும், எல்லாக் கிரியைகளும் இந்தக் குறிக்கோளுக்காகத்தான் மனித வரலாற்றில் இருக்கின்றன.  மனித வரலாறு என்பது பேரரசர்களையும், ஆட்சியாளர்களையும்பற்றியது என்று நினைக்க வேண்டாம். என் வரலாறும் உங்கள் வரலாறும் சேர்ந்ததுதான் மனித வரலாறு. நமக்கு ஒரு வரலாறு உண்டு. நாம் குறைந்தபட்சம் நம் மனைவி, பிள்ளைகளுக்குமுன் கிறிஸ்துவை வாழ்கிறோம். குறைந்தபட்சம் நாம் நம் மனைவி பிள்ளைகளுக்காவது ஒரு வரலாற்றை விட்டுச்செல்லுகிறோம். நம் வரலாற்றில் என்றால் நாம் பிறந்ததுமுதல் நம் வாழ்வின் எல்லாப் படிகளிலும் தேவன் தம் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகவன்றி வேறு ஒன்றையும் அவர் செய்வதில்லை என்று பவுல் கூறுகிறார். ”தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரராகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்” *(எபே. 1:12). நாம் அவருடைய தீர்மானத்தின்படி அவருடைய சுதந்தரராகும்படிக்கு முன்குறிக்கப்பபட்டோம்.

தீர்மானம் என்ற இந்த வார்த்தைக்குக் குறிக்கோள் என்று பொருள். நம்முடைய இப்போதைய தமிழ் வேதாகமம் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்குமுன்பு ஹென்றி பாவரால் மொழிபெயர்க்கப்பட்டது. அவர் ஓர் ஆங்கிலோ இந்தியர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசியராக பணியாற்றினார். இந்த மொழிபெயர்ப்பு அவருடைய மொழிபெயர்ப்பு. நூறு ஆண்டுகளில் தமிழ்ச்சொற்களில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன.

அவர் எல்லாவற்றையும் தம் தீர்மானத்தின்படியே, தம் குறிக்கோளின்படியே, தம் நோக்கத்தின்படியே, செய்கிறார். சதுரங்கப்போட்டியில் விளையாடுபவன் எந்தக் காயை நகர்த்தினாலும் தன் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகத்தான் நகர்த்துவான். அவன் சில சமயங்களில் தோற்பதுபோல் தோன்றலாம். அவன் ஒருசில போர்வீரர்களை இழக்கலாம். அப்போது நாம் பதறவேண்டியது இல்லை. ஒரு நல்ல விளையாட்டுவீரன் ஒருசில காய்களை இழந்தாலும் அவனுக்கு ஒரு நித்திய குறிக்கோள், ஓர் இறுதி இலக்கு, நோக்கம், இருக்கும். அவன் சில காய்களைப் பலிகொடுத்தாலும் அவன் தன் நித்திய நோக்கத்தை மறக்க மாட்டான். அவன் ஒரு அசைவைச் செய்யும்போது இறுதி அசைவு எப்படி இருக்கும் என்று நம்மால் கணிக்கமுடியாது. இது ஒரு சாதாரண சதுரங்கப்போட்டி. அப்படியானால் வாழ்க்கையில்? நம் வாழ்க்கையில் பல அசைவுகள், பல இயக்கங்கள், பல செயல்பாடுகள் நடைபெறும். நாம் பார்க்கும்போது முறியடிக்கப்பட்டதுபோல், தோற்றதுபோல் தோன்றலாம். ஆனால், அப்படியல்ல.

தேவன் தம் ஆதிக்குறிக்கோளை, தம் இறுதிக்குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகவே நம் வாழ்க்கையிலே அசைவுகளையும், இயக்கங்களையும், செயல்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறார். அதைத்தவிர நல்ல விளையாட்டுவீரன் எந்த அசைவுகளையும் வீணாக்குவதில்லை. “சரி, ஒன்றிரண்டு காய்களை அப்படியும் இப்படியும் நகர்த்துவோமே” என்று அவன் காய்களை நகர்த்துவதில்லை. அதுபோல தேவன் வீணாக, பொருளற்றமுறையில் எந்த அசைவையும் செய்வதில்லை. நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? அல்லது நம் வாழ்க்கையில் தேவனுடைய குறிக்கோள் என்ன? கிறிஸ்துவை வெளிக்காண்பிப்பது. பழைய மனித இனத்தில் கிறிஸ்துவை வெளிக்காண்பிக்க முடியாது. அது விழுந்துபோன மனித இனம். எனவே, ஒரு புதிய மனித இனத்தைக் கிறிஸ்துவுக்குள் தேவன் சிருஷ்டிக்கிறார். அப்படியானால் என்ன பொருள்?

2. நித்திய ஜீவன்

இரண்டாவது, தேவன் இதை எப்படி ஆரம்பிக்கிறார்? இப்போது இரண்டாவது குறிப்புக்கு வருகிறேன். ஒரு புதிய மனித இனத்தை சிருஷ்டிப்பது என்றால் நாம் பழைய மனித இனத்துக்குரியவன் என்ற முறையிலே ஒரு மனித உயிர், ஒரு மனித வாழ்வு, எனக்குள் இருக்கிறது. தேவன் என்ன செய்கிறார்? தேவன் நம்மைப் புதிய மனித இனத்தின் புதிய மனிதர்களாக மாற்ற நமக்கு ஒரு புதிய ஜீவனைத் தருகிறார். இந்தப் புதிய ஜீவன் தேவனுடைய ஜீவன் அல்லது நித்திய ஜீவன் அல்லது தெய்வீக ஜீவன். இது மிகவும் முக்கியமான குறிப்பு. புதிய ஏற்பாட்டில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்துமுடித்த முக்கியமான வேலை என்னவென்றால் தேவன் தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு இன்றைக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். ஆண்டவராகிய இயேசுவை விசுவாசிக்கிறவர்களுக்கு அவர் தேவனுடைய ஜீவனைத் தருகிறார். நாமெல்லாரும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தபோது நம்முடைய பாவங்களை மன்னித்தார். ஆனால். பிரதானமாக, முக்கியமாக, முதன்மையாகச் செய்தது தேவன் தம் ஜீவனை நமக்குத் தந்திருக்கிறார்.

புதிய ஏற்பாட்டில் தேவன் எனக்கு என்ன தந்திருக்கிறார் என்றால் 100 காரியங்களைச் சொல்ல முடியும். “எனக்கு சுகம் தந்திருக்கிறார், சந்தோஷம் தந்திருக்கிறார், குடும்பம் தந்திருக்கிறார், படிப்பைத் தந்திருக்கிறார், வேலை தந்திருக்கிறார், வீடு தந்திருக்கிறார்” என்று இப்படி ஒரு பெரிய பட்டியல் தயாரிக்கலாம். ஆனால் நான் சொல்லுகிறேன். தேவன் ஒன்றேவொன்றைத்தான் தந்திருக்கிறார். இது உங்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம். இது அதிகம் என்று நீங்கள் நினைக்கலாம். “உங்களுக்கு ஜீவன் முக்கியமாக இருக்கலாம். எனக்கு சமாதானம்தான் முக்கியம். எனக்கு இளைப்பாறுதல்தான் முக்கியம்,” என்று நீங்கள் சொல்லலாம்.

ஒரு வசனத்தை வாசிப்போம். “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” (யோவான் 20:31). இவைகள் எழுதப்பட்டிருக்கிறது என்பது யோவான் 20 அதிகாரங்கள்கொண்ட தன் சுவிசேஷத்தை எழுதிமுடித்தபிறகு அதற்கு முடிவுரையாக ஒரு வாக்கியம் சொல்லுகிறார். “நான் இந்த சுவிசேஷத்தை எழுதியிருப்பதற்குக் காரணம் என்ன? யோவானாகிய நான் என் சுவிசேஷத்தை எழுதியிருப்பதற்குக் காரணம் என்ன?” நோக்கம் என்னவென்று எதைச் சொல்லுகிறார்? எதற்காக யோவான் தன் சுவிசேஷத்தை எழுதினதாகச் சொல்லுகிறார்? எதற்காக எழுதினார் என்றால் இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாம் விசுவாசிக்க வேண்டும் என்பதற்காக இந்த சுவிசேஷத்தை அவர் எழுதினார். ஒன்று. அடுத்ததாக இன்னொன்றையும் சொல்லுகிறார். விசுவாசித்து நித்திய ஜீவனை அடையும்படியாகவும். இரண்டு குறிக்கோள்களைச் சொல்லுகிறார்.

  1. முதலாவது இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
  2. இரண்டாவது இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசித்தால் என்ன நடைபெறும்? “எனக்கு அது கிடைக்கும். இது கிடைக்கும்,” என்று ஒரு பட்டியல் இடுவதுண்டு. ஆனால், யோவான் ஒன்றேவொன்றைத்தான் சொல்லுகிறார். இது இரண்டாவது குறிக்கோள். விசுவாசித்தால் நீங்கள் எதைப் பெறுவீர்கள்? நித்திய ஜீவனைப் பெறுவீர்கள், அடைவீர்கள்.

அப்படியானால் நாம் இப்படி முடிவெடுக்கலாமா? மக்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே யோவான் இந்த சுவிசேஷத்தை எழுதினார், இந்த சுவிசேஷத்தில் அவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய எல்லாவற்றையும் எழுதினார் என்று நாம் முடிவெடுக்கலாமா? கண்டிப்பாக முடிவெடுக்கலாம்.

சரி. ஒரேவொரு புத்தகத்தைவைத்து மட்டும் முடிவெடுக்கக்கூடாதென்றால் யோவான் 3 கடிதங்களையும் எழுதியிருக்கிறார். முதலாவது கடிதம் கொஞ்சம் நீளமான கடிதம்தான். அந்தக் கடிதத்தை எழுதிவிட்டு முடிவில் அவர் இப்படிச் சொல்லுகிறார்: “தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான். தேவனை விசுவாசியாதவனோ தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால் அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்” (1 யோவான் 5:10-12). யோவான் மிகவும் எளிமையாகச் சொல்லுகிறார்.

“தேவன் நமக்கு ஆயிரம் காரியங்களைத் தந்திருக்கிறார்,” என்று அவர் சொல்லவில்லை. “தேவன் நமக்கு ஆயிரம் ஆசீர்வாதங்களைத் தந்திருக்கிறார்,” என்று நாம் சொல்லலாம். ஆனால், யோவானைப் பொறுத்தவரை தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது என்பதே அந்தச் சாட்சியாம். தேவனுடைய குமாரனைப் பெற்றுக்கொள்ளும்போது நாம் எதைப் பெற்றுக்கொள்கிறோம்? நூறு ஆயிரம் காரியங்களைப் பெற்றுக்கொள்ளவில்லையா? இல்லை. பெற்றுக்கொள்ளலாம். ஆனால், தேவனைப் பொறுத்தவரை அது முதன்மையான காரியம் இல்லை. தேவனுடைய குமாரனை நாம் பெற்றுக்கொள்ளும்போது ஜீவனைப் பெற்றுக்கொள்ளுகிறோம். இப்போது முடிவுரை எழுதுகிறார். “உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவ குமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவ குமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்” (வ.13). தான் எழுதின கடிதத்துக்கு அவர் முடிவுரை சொல்லுகிறார். இவைகளை நான் எதற்காக எழுதியிருக்கிறேன்? யாருக்கு எழுதியிருக்கிறேன்? தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிறவர்களுக்கு எழுதியிருக்கிறேன். ஏன்? உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று நீங்கள் அறிய வேண்டும். அப்படியானால் தேவனுடைய மக்கள் பலருக்கு அது தெரியவில்லையோ? தேவனுடைய குமாரனுடைய நாமத்தை விசுவாசிப்பதால் அவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்பது அவர்களுக்குத் தெரியவில்லையோ? அந்தச் சந்தேகத்தை அவர் தெளிவாக்குகிறார். தேவனுடைய குமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு நான் இதை எழுதியிருப்பதற்குக் காரணம் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும்.

எதிர்கால நம்பிக்கையா, நிகழ்கால உடைமையா?

ஒரேவொரு கேள்விதான் இப்போது இருக்கிறது. நித்திய ஜீவன் என்பது நாம் எதிர்காலத்தில் பெறப்போவதா அல்லது நிகழ்காலத்தில் நாம் பெற்றிருப்பதா? நித்திய ஜீவன் என்பது எதிர்கால நம்பிக்கையா அல்லது நிகழ்கால உடைமையா? இப்போது கொண்டிருக்கிறோம். இது இப்போது நம் உடைமை. நித்திய ஜீவன் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் இது தேவன் நமக்கு நித்தியத்தில் தரப்போவது என்று நாம் நினைக்கலாம். அப்படியல்ல. யோவான் அப்படித்தான் எழுதுகிறார். “தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார்.” தருகிறார் அல்லது தரப்போகிறார் அல்லது தருவார் என்று அவர் எழுதவில்லை. தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். அது நிகழ்காலம். நிகழ்காலத்தில் நாம் அதைக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதற்கு இன்னொரு அம்சமும் உண்டு. எதிர்காலத்தைப்பற்றிய அம்சம்.

தேவனுடைய ஜீவன் நித்திய ஜீவன்

நித்திய ஜீவன் என்றால் என்னவென்று ஒரேவொரு வார்த்தையில் சுருக்கமாகப் பதில் சொல்ல முடியுமா? நித்திய ஜீவன் என்றால் என்ன? இந்த நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டால் நாம் யுகம்யுகமாக வாழ்வோம் என்பது நித்திய ஜீவனா அல்லது நித்திய ஜீவன் என்பது வித்தியாசமானதா? நித்திய ஜீவன் என்றால் என்ன? நித்திய ஜீவன் என்பது தேவனுடைய ஜீவன். நித்திய ஜீவன் என்பது தேவனுடைய ஈடுபாடு நாம் யுகயுகமாக முடிவில்லாமல் கர்த்தரோடு வாழவேண்டும் என்பதல்ல. இதுவல்ல தேவனுடைய எண்ணம். நாம் யுகயுகமாகத் தேவனோடு வாழ்வோம். அது உண்மைதான். ஆனால், அதைவிட மிக முக்கியமானது என்னவென்றால் கிறிஸ்துவினுடைய குணத்தை, தேவனுடைய குணத்தை, உடையவர்களாக வாழ்வது, தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை வெளிக்காண்பிப்பது. அதற்கு தேவனுடைய ஜீவன் வல்லமையைத் தருகிறது. எனவே , நித்திய ஜீவன் என்பது நாம் யுகயுகமாய் முடிவில்லாமல் வாழ்கிறோம் என்பதல்ல பிரதானமான எண்ணம். நித்திய ஜீவன் என்பது தேவனுடைய ஜீவன். இதற்கு யோவான் எழுதின சுவிசேஷம் முழுவதும் சாட்சி பகரும். நித்திய ஜீவன் என்றால் தேவனுடைய ஜீவன். ஏனென்றால் நித்தியமானவர் தேவன் ஒருவரே. தேவன்தான் தொடக்கமும் முடிவும் இல்லாதவர். எனவே, நித்திய ஜீவனை உடையவர் தேவன். நித்திய ஜீவன் என்றால் தேவனுடைய ஜீவன்.

தேவன் தம் குறிக்கோளை எப்படி ஆரம்பிக்கிறார்? தேவன் தம் ஜீவனை இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்குள்ளும் தருகிறார். நாம் தேவனுடைய ஜீவனைப் பெறும்போது இதைப்பற்றிப் பல விஷயங்கள் சொல்லலாம். ஆனால். மிக முக்கியமான ஐந்து காரியங்களைச் சொல்லுகிறேன்.

தேவனுடைய ஜீவனில் கிறிஸ்துவின் தன்மை இருக்கிறது. தேவனுடைய ஜீவனில் கிறிஸ்துவின் குணம் இருக்கிறது. தேவனுடைய ஜீவனில் ஒரு புதிய திறன் இருக்கிறது. தேவனுடைய ஜீவனில் ஒரு புதிய ஆற்றல் இருக்கிறது. தேவனுடைய ஜீவனில் ஒரு புதிய வல்லமை இருக்கிறது. தேவனுடைய ஜீவனில் ஒரு புதிய உணர்வு இருக்கிறது. 

தேவனுடைய உணர்வு, தேவனுடைய தன்மை, தேவனுடைய குணம், தேவனுடைய வல்லமை, தேவனுடைய ஆற்றல், தேவனுடைய திறன்.

இவை அனைத்தும் தேவனுடைய ஜீவனில் அல்லது நித்திய ஜீவனில் இருக்கின்றன. இதற்கெல்லாம் ஆதாரமான வசனங்கள் இருக்கின்றன.

3. பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடு

மூன்றாவது. தேவனுடைய பிள்ளைகள் எல்லாருக்குள்ளும் இந்த நித்திய ஜீவன் இருக்கிறதா? இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற எல்லாருக்குள்ளும் இந்த நித்திய ஜீவன் இருக்கிறதா? இருக்கிறது. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், தேவனுடைய மக்கள் பலருடைய வாழ்க்கையிலே வெளிப்படும் கிறிஸ்துவின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. அறவே கிறிஸ்து அவர்கள் வாழ்க்கையில் வெளிப்படுவது இல்லை என்று நாம் சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் இரட்சிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனபிறகும் அவர்கள் வாழ்க்கையில் காண்பிக்கப்படுகிற கிறிஸ்துவின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. கிறிஸ்துவின் அளவு அவர்களுக்குள் ஏன் மிகவும் குறைவாக இருக்கிறது? என்ன காரணம்? என்னவென்றால் தேவன் தம் ஜீவனைத் தம் பிள்ளைகளுக்குள் தந்தபிறகு பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்க்கையில் செயல்பட ஆரம்பிக்கிறார்.

1. தெய்வீக ஜீவனை வளரச்செய்தல்

பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்க்கையில் செயல்படுவதின் மிக முக்கியமான நோக்கம் என்னவென்றால் தேவனுடைய ஜீவன் வளர்ந்து, விருத்தியடைந்து, பக்குவமடைந்து, கனிகொடுக்க வேண்டும் அல்லது கிறிஸ்துவின் முழு வளர்ச்சியை அது எட்ட வேண்டும் என்பதுதான் பரிசுத்த ஆவியானவரின் வேலை, நோக்கம். பரிசுத்த ஆவியானவரின் ஊழியம் அல்லது பணிவிடை, பிரதானமான ஊழியம், பணிவிடை என்னவென்றால் நமக்குள் தேவன் தந்திருக்கிற தெய்வீக ஜீவனை வளரச்செய்வது, முதிரச்செய்வது, பக்குவமடையச்செய்வது, கனிகொடுக்கச்செய்வது.

2. கிறிஸ்துவை நமக்குக் காண்பித்தல்

அதை அவர் எப்படிச் செய்கிறார் என்றால் வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளைப் பரிசுத்த ஆவியானவர் அமைக்கிறார். எல்லாச் சூழ்நிலைகளிலும் நாம் யாரைப் பார்க்க வேண்டும் என்று தேவன் அமைக்கிறார் என்றால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் இந்தச் சூழ்நிலைகளில் பார்க்க வேண்டும் என்பது பரிசுத்த ஆவியானவருடைய நோக்கம். “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை நடத்துவார்” (யோவான் 16:13). “அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்” (யோவான் 16:14). இது மிக முக்கியமான ஒரு வசனம். பரிசுத்த ஆவியானவரின் பிரதானமான பணி, பிரதானமான ஊழியம் என்னவென்றால் கிறிஸ்துவை நமக்குக் காண்பிப்பது அல்லது கிறிஸ்துவை மகிமைப்படுத்துவது.

தேவனுடைய ஜீவனில் கிறிஸ்துவின் பண்புகள், கிறிஸ்துவின் குணம், கிறிஸ்துவின் தன்மை, கிறிஸ்துவின் கட்டமைப்பு, கிறிஸ்துவின் எண்ணங்கள், உணர்ச்சிகள் எல்லாம் இந்த தெய்வீக ஜீவனில் அடங்கியிருக்கின்றன. நாம் அடிக்கடி ஓர் உவமையைச் சொல்வதுண்டு. ஒரு விதைக்குள் அந்த மரத்திற்குரிய எல்லாமும் அடங்கியிருக்கின்றன. இந்த மரம் எவ்வளவு பெரிதாக வளரும் என்பது அந்த விதைக்குள் இருக்கிறது. இந்த மரத்தின் இலைகள் எப்படி இருக்கும். பூக்கள் எப்படி இருக்கும், என்ன நிறம், என்ன வடிவம், என்ன மணம், அந்த மரத்தின் கனிகள், அதன் சுவை, இவை எல்லாம் அந்த விதையில் இருக்கின்றன. அதுபோல கிறிஸ்துவின் குணம், கிறிஸ்துவின் வழிகள், கிறிஸ்துவின் கட்டமைப்பு, தன்மை, பண்பு, ஆற்றல், திறன், வல்லமை, எண்ணங்கள், உணர்ச்சிகள் எல்லாம் நித்திய ஜீவனில் இருக்கின்றன.

யோவான் நித்திய ஜீவனைப்பற்றி இந்த அளவுக்கு ஏன் உயர்த்திப் பேசுகிறார் என்றால் “நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்” (1 யோவான் 2:25). அவர் எத்தனை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்? “அவர் நமக்கு நாளொன்றுக்கு ஒரு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்,” என்று சிலர் சொல்வதுண்டு. நான் சிறுவனாக இருந்தபோது வேதாகமத்தை எப்படி வாசிக்க வேண்டும் என்று சொல்லித்தந்தார்கள். “இன்று தேவன் எனக்குத் தருகிற வாக்குத்தத்தம் என்ன?” என்று பார்க்கச்சொன்னார்கள். அதனால், ஒரு வாக்குத்தத்தத்தைப் பெறுகிறவரை வாசிப்பார்கள். ஒரு வாக்குத்தத்தம் கிடைத்தவுடன் வேதம் வாசிப்பதை நிறுத்திக்கொள்வார்கள். ஆனால், “தேவன் நமக்கு ஒரேவொரு வாக்குறுதியைத் தந்திருக்கிறார்,” என்று யோவான் சொல்லுகிறர். அது என்ன? நித்திய ஜீவன். ஆங்கிலத்தில் இது இன்னும் பலமாக இருக்கிறது. “இது மட்டுமே வாக்குறுதி. நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.”

3. கிறிஸ்துவை மகிமைப்படுத்துதல்

மூன்றாவது பரிசுத்த ஆவியானவர் என்ன செய்கிறார் என்றால் நம் வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் அவர் கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார். கிறிஸ்துவை மகிமைப்படுத்துவது என்றால் என்ன பொருள்? “ஆண்டவரே, உம்மை ஆராதிக்கிறேன், வணங்குகிறேன், ஸ்தோத்திரிக்கிறேன், அர்ச்சிக்கிறேன், உயர்த்துகிறேன், அல்லேலூயா,” என்று அடுக்குமொழிகளினால் சொன்னவுடன் தேவன் கவரப்பட்டுவிடுவாரா? “என்னை எப்படி கவிதை நயத்தோடு ஆராதித்தான்” என்று பாராட்டுவரா? தேவன் பட்டிமன்றம், கவிதைப்போட்டி நடத்துகிறாரா? அதற்காகச் சொற்களுக்கு அர்த்தம் இல்லை என்று நான் சொலவில்லை. சில சமயங்களில் ஒரு சில எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் தேவனிடத்தில் எடுத்துச் சொல்வதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் நமக்கு அவசியமாக இருக்கலாம். அவைகளைத் தேவன் உற்று நோக்குகிறார். ஆனால், அர்த்தமே இல்லாமல் அடுக்கு மொழிகளைப் பயன்படுத்துவது: “துதி, கனம், மகிமை எல்லாம் உமக்கே செலுத்துகிறேன்.” “உண்மையாகவா?” என்று ஆண்டவர் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம், “உண்மையிலேயே துதி கனம் மகிமை ஸ்தோத்திரம் எல்லாவற்றையும் எனக்குச் செலுத்தப்போகிறாயா?” என்று கேட்டால், “ஓ! நான் அப்படிச் சொல்லிவிட்டேனோ!” பழக்கத்தின் காரணமாக “என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு உள்ளமே! கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே! கர்த்தரை ஸ்தோத்திரி. அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே,” என்று சொல்வதைப்போல். இவைகளையெல்லாம் நாம் நம் பழக்கத்தின் காரணமாகச் சொல்லுகிறோம். அதுபோல அவரை எப்படி மகிமைப்படுத்துவது? “ஆண்டவரே, நான் உம்மை மகிமைப்படுத்துகிறேன்,” என்று சொன்னவுடன் அவர், “என் மகன் எவ்வளவாய் மகிமைப்படுத்திவிட்டான்,” என்று சொல்லிவிடுவாரா?

கிறிஸ்துவை மகிமைப்படுத்துவது என்றால் என்ன பொருள்? கிறிஸ்துவை வெளிக்காண்பிப்பது. பரிசுத்த ஆவியானவர் மட்டுமே கிறிஸ்துவை வெளிக்காண்பிக்க முடியும். தேவனுடைய ஜீவன் நமக்குள் இருக்கிறது. நாம் வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளின்வழியாகப் போகிறோம். பல நெருக்கங்கள், பல போராட்டங்கள், பல தேவைகள், இதுபோன்ற பல சந்தர்ப்பங்கள் நம் வாழ்க்கையில் வருகின்றன. இதற்குமேல் போகமுடியாது என்ற நிலைமை வருகிறது. அப்போது பரிசுத்த ஆவியானவர் என்ன செய்வார் என்றால் கிறிஸ்துவை நமக்கு வெளிக்காண்பிப்பார். எங்கிருந்து காண்பிப்பார்? நமக்குள் கிறிஸ்து இருக்கிறார். நாம் பெற்றிருக்கிற கிறிஸ்து எவ்வளவு மகா மேன்மையானவர், மகத்தானவர், நிறைவானவர், போதுமானவர், நம்பத்தக்கவர் என்பதை அவருடைய ஒரு அம்சத்தில் பரிசுத்த ஆவியானவர் நமக்குக் காண்பிப்பார். அந்தக் கிறிஸ்துவை அவர் காண்பிக்கும்போது நாம் அவரை விசுவாசிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பார். கிறிஸ்து எல்லாச் சூழ்நிலைக்கும் போதுமானவரா? கிறிஸ்து எல்லாச் சூழ்நிலைக்கும் போதுமானவர் என்று நாம் நினைப்போம். எதுவரைக்கும் என்றால் நம் வாழ்க்கையில் நம் தலைக்குமேல் வெள்ளம் போகாதவரை கிறிஸ்து எல்லாச் சூழ்நிலைக்கும் போதுமானவர் என்று நாம் நினைப்போம். ஆனால். இந்தச் சூழ்நிலை வரும்போது நாம் சொல்வோம். “இந்தச் சூழ்நிலைக்குக் கிறிஸ்து போதுமானவர் இல்லை.” ஒருவேளை இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் பயன்படுத்தாமல் போகலாம். நாம் இப்படிச் சொல்வோம். “என் நிலைமையில் நீங்கள் இருந்தால் நீங்கள் இப்படிச் சொல்லமாட்டீர்கள்.” இதன் பொருள் என்னவென்றால், “எல்லாச் சூழ்நிலைக்கும் கிறிஸ்து போதுமானவர். ஆனால், இந்தச் சூழ்நிலைக்கு முடியாது.” இது இயல்பு. வாழ்க்கையின் இயல்பு. ஆனால், உண்மையிலேயே தேவன் தம் குறிக்கோளை நம் வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டும் என்றால் “இந்தச் சூழ்நிலையில் எனக்கு என்ன தீர்வு கிடைக்கும், என்ன விடுதலை கிடைக்கும்,” என்று பார்க்கக்கூடாது. முதலாவது எதைப் பார்க்க வேண்டும் என்றால் “இந்தச் சூழ்நிலைக்கு, இந்த நிலைமைக்கு கிறிஸ்து எப்படிப்பட்டவராக இருக்கிறார்” என்று பார்க்க வேண்டும்.

வாழ்க்கைச் சூழ்நிலைகள்

“ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதி கண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது. அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்” (2 நாளா. 16:12). வியாதிப்பட்டிருக்கும்போது யாரைத் தேட வேண்டும்? “கர்த்தரைத் தேட வேண்டும்,” என்று சொல்வோம். ஆனால், நாம் யாரைத் தேடுவோம்? மருத்துவர்களைத் தேடுவோம். மருத்துவர்களைத் தேடக்கூடாதா? நமக்குத் தெரிந்த ஒருவர் வியாதியாயிருந்தால் நாம் அவரைப் பார்க்கும்போது, “அங்கு ஒரு மருத்துவர் இருக்கிறார், கைதேர்ந்தவர், போய்ப்பாருங்கள்,” என்று பலரும் பல ஆலோசனைகளைச் சொல்வார்கள். “இவரைப் பாருங்கள், அவரைப் பாருங்கள்” என்று ஆலோசனை சொல்வதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால். இவைகளெல்லாம் ஒரு எல்லைக்கு உட்பட்டு தவறில்லை. எப்போது பார்த்தாலும் மருந்து, மாத்திரை, மருத்துவம், மருத்துவமனையைப்பற்றியே பேச்சு அல்லது எப்போதும் உடலை எப்படி வைத்துக்கொள்வது என்பதைப்பற்றியே உரையாடல். அவன் தன் வியாதியில் கர்த்தரைத் தேடாமல் பரிகாரிகளையே தேடினான். பரிகாரி என்றால் மருத்துவன். “நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” (யாத். 15:26).

ஒரு சூழ்நிலை வரும்போது நாம் கர்த்தரையும் பார்க்கலாம் அல்லது அதற்கு உடனடி நிவாரணம் என்னவென்றும் பார்க்கலாம். ஒரு துன்பம் வரும்போது அந்தத் துன்பத்தையும் பார்க்கலாம் அல்லது அதில் கர்த்தரையும் பார்க்கலாம். பிலேயாமின் கழுதை. “கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று. கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்… கழுதை கர்த்தருடைய தூதனைக் கண்டு, சுவர் ஓரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடே நெருக்கிற்று. திரும்பவும் அவன் அதை அடித்தான்…கழுதை கர்த்தருடைய தூதனைக் கண்டு, பிலேயாமின்கீழ் படுத்துக்கொண்டது. பிலேயாம் கோபமூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான். உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார். அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்றுமுறை அடிக்கும்படிக்கு நான் உமக்கு என்ன செய்தேன்?” (எண். 22:23, 25, 27, 28). “அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம்பண்ணிக்கொண்டுவருகிறாய். என் கையில் ஒரு பட்டயம் மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன்,” என்றான். “கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட நாள் முதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி நான் எப்போதாகிலும் உமக்குச் செய்ததுண்டா?” என்றது (எண். 22:29, 30). கழுதை பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. உருவின பட்டயத்தோடே கர்த்தர் நிற்பதை கழுதை பார்க்கிறது. ஆனால், தீர்க்கதரிசி பார்க்கவில்லை. நம்முடைய நிலைமையும் அப்படித்தான். ஒரு நெருக்கம் அல்லது ஒரு போராட்டம் வரும்போது உடனே நாம் நெருக்கத்தையும் போராட்டத்தையும்தான் பார்க்கிறோம். கழுதை நெருக்குகிறது. இந்தப் போராட்டத்திலிருந்து விடுதலை பெற என்ன வழி? கழுதையை அடிப்போம்.

பரிசுத்த ஆவியானவர் ஒரு சூழ்நிலையைக் கொண்டுவரும்போது கிறிஸ்து இந்தச் சூழ்நிலைக்கு எப்படிப் போதுமானவர், தேவன் இந்தச் சூழ்நிலையில் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். நோய் வந்தவுடன் “இந்த நோயில் செத்துவிடுவோமோ!” என்று நினைத்துக்கொண்டிருக்கக்கூடாது. “கழுதையைப் போட்டு அடிக்கலாமா அல்லது மிகச் சிறந்த மருத்துவர் எங்கு இருக்கிறார்,” என்று தேடுவோம். நல்ல மருத்துவரைப் பார்க்கலாம். ஆனால், அதற்கும்மேலாக நீங்கள் கர்த்தரைப் பார்க்க வேண்டும்.

தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவருடைய குமாரனை எனக்குள் உருவாக்குவதற்கு, அவருடைய குமாரனை எனக்குக் காண்பிப்பதற்கு, உருவாக்குவதற்கு, நான் அவரை வாழ்வதற்கு. அவர் போதுமானவர், நிறைவானவர் என்பதை நிரூபிப்பதற்கு அல்லது என்மூலமாக கிறிஸ்துவை மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்கு தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

நம் வாழ்க்கை தேவனுக்கு ஒரு நல்ல பாத்திரம். நமக்குள் கிறிஸ்துவை உருவாக்குவது மட்டும் அல்ல. நமக்குள்ளிருந்து அவர் கிறிஸ்துவைப் பலருக்குக் கொடுக்க வேண்டும். கிறிஸ்துவைக் கொடுப்பது என்பது இந்த நோட்டுப் புத்தகத்தில் ஒரு செய்தியை எழுதிவைத்துக்கொண்டு இன்னொருவருடைய நோட்டுப் புத்தகத்துக்கு மாற்றிக்கொடுப்பதல்ல. இது பள்ளியில் அல்லது கல்லூரியில் ஆசிரியர் கொடுக்கிற குறிப்புகளைப்போன்றதல்ல. சில சமயங்களில் ஆசிரியர்கள் கொடுக்கிற குறிப்புகள் ஆசிரியரின் மனதுக்குள்ளும் போயிருக்காது. மாணவரின் மனதுக்குள்ளும் போயிருக்காது. அது இவருடைய புத்தகத்திலிருந்து மாணவனுடைய நோட்டுக்குப் போகிறது. அவ்வளவுதான். அதுபோலவே செய்திகளையும் கொடுக்கலாம். செய்திகொடுப்பவரின் நோட்டிலிருந்து செய்தி கேட்பவரின் நோட்டுக்குப் போவது. இருவரின் மனதிற்குள்ளும் போயிருக்காது. இருவரின் வாழ்க்கை வழியாக அது போயிருக்காது.

எனவே, அருமையான சகோதர சகோதரிகளே,

  1. முதலாவது, தேவனுடைய குறிக்கோள் இந்தச் சிருஷ்டிப்பின்மூலமாக, குறிப்பாக மனிதன்மூலமாக, அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவை வெளிக்காண்பிக்க வேண்டும். இதைத்தவிர தேவன் வலதுபுறம் இடதுபுறம் சாயமாட்டார். எதிர்மறையாக ஒன்று சொல்லுகிறேன். தேவனுடைய குறிக்கோள் மனிதனை மையமாகக் கொண்டதல்ல. “மனிதனுக்குப் பணம் கொடுக்க வேண்டும், சுகம் கொடுக்க வேண்டும், வேலை கொடுக்க வேண்டும், வீடு கொடுக்க வேண்டும், திருமணம் செய்துவைக்க வேண்டும், நல்ல வருமானத்தைக் கொடுக்க வேண்டும்,” என்பதல்ல தேவனுடைய நோக்கம். நீங்கள் புண்பட்டுவிட வேண்டாம்.

பொதுவாக இவ்வளவு செய்திகளைச் சொல்லிவிட்டு கடைசியில் இப்படிச் சொல்வார்கள். “ஆகவே, நீங்கள் உங்களைத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தால் தேவன் உங்களுக்கு வேலை தருவார், படிப்பு தருவார், வீடு தருவார்.” அப்படியெல்லாம் நான் வாக்குறுதி தரப்போவதில்லை. தேவன் வேலை தருவார். எப்போது வேலை தருவார் என்று நான் சொல்லிவிடுகிறேன். எப்போது தேவனுடைய குறிக்கோள், “இன்று பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய குறிக்கோளாகிய அவருடைய குமாரன் எனக்குள் உருவாக்கப்படுவதற்கு இந்தச் சூழ்நிலையில் என்ன செய்துகொண்டிருக்கிறார்” என்று நான் புரிந்துகொள்கிறேனோ, என்றைக்கு நான் பார்க்கிறேனோ அன்றைக்குத் தேவன் தாராளமாக வேலை கொடுப்பார். எனவே, தேவனுடைய குறிக்கோள் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவை மையமாகக் கொண்டது. மனிதனுடைய தேவைகளை மையமாகக் கொண்டது அல்ல. எதிர்மறையாகவும் நான் ஒரு குறிப்பைச் சொல்லவிரும்புகிறேன். நாம் எப்படி கிறிஸ்துவை வெளிக்காண்பிக்க முடியாது என்றால் கொஞ்சம் மதப் பழக்கங்களால் அல்லது நம் பக்தியால் நாம் கிறிஸ்துவை வெளிக்காண்பிக்க முடியாது. “அவர் அதிகமாக தேவனை ஆராதிப்பாராம்.”

இந்த ஆராதனையைப்பற்றி எனக்கு வேதனையான கருத்து உண்டு. உலகத்தில் மைக்கைப் பிடித்துக்கொண்டு பாடுவனுக்கும், ஆராதனை என்ற பெயரால் மைக்கைப் பிடித்துக்கொண்டு பாடுபவனுக்கும் என்னைப்பொறுத்தவரை அதிகமான வித்தியாசம் இல்லை. அவனும் புகழுக்காகவே பாடுகிறான். இவனும் புகழுக்காகவே பாடுகிறான். அது மனதை அப்படி மென்மையாகத் தொடுகிறது. இதுவும் மனதை அப்படி மென்மையாகத் தொடுகிறது. இதன்மூலமாக ஒருவன் கிறிஸ்துவை வெளியாக்க முடியாது.

  1. இரண்டாவது, தேவன் தம்முடைய குறிக்கோளை எப்படி நிறைவேற்றுகிறார்? இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற மக்களுக்குள் தேவனுடைய ஜீவனை பங்களிக்கிறார். அதன்மூலமாக அவருடைய குறிக்கோளை அதாவது கிறிஸ்துவை வெளிக்காண்பிக்கிற அந்த வேலையை அவர் ஆரம்பிக்கிறார். தேவனுடைய ஜீவனை நான் பெற்றிருக்கிறேன். தேவனைப்பற்றிய உணர்வுகள் ஒரு மனிதனுக்கு எழும்போது அவன் கிறிஸ்துவை வெளியாக்க ஆரம்பிக்கிறான். நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலைகளிலே பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவைக் கொண்டுவருகிறார். கிறிஸ்துவைக் காண்பிக்கிறார். கிறிஸ்துவை நாம் நம் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் காண்கிறவரை… கோழிக்குஞ்சு முட்டையிலிருந்து வெளிவரும்வரை காத்திருக்க வேண்டும். இதில் பல ஆவிக்குரிய பாடங்கள் இருக்கின்றன. ஒருவருக்கு ஒரு தேவை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பரிசுத்த ஆவியானவர் அங்கு வேலைசெய்துகொண்டிருக்கிறார். முட்டைத் தோட்டை உடைத்துக் கொண்டு வெளியே வருவதற்கு அவர் போராடிக்கொண்டிருக்கிறார். நாம் காலத்துக்குமுன்பே போய் முட்டைத் தோட்டை உடைத்துவிட்டால் என்ன நடக்கும்? வாழ்நாள் முழுவதும் அந்தக் கோழிக்குஞ்சு நொண்டிநொண்டி நடக்கும், செத்தும் போகலாம். ஆவிக்குரிய நொண்டுதல் இருந்து கொண்டேயிருக்கும். முட்டைத்தோட்டுக்குள் இருந்து போராடும்போதெல்லாம். “யாராவது வந்து என்னை வெளியே கொண்டுவரமாட்டார்களா?” என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். “ஐயோ வலிக்குதே! யாராவது வாருங்களேன்! சீக்கிரமாக வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்!” என்று கதறுவோம்.

  2. எனவே, பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவை உருவாக்குவதற்காகச் செயல்படுகிறார். “என் சிறு பிள்ளைகளே, கிறிஸ்து உங்களில் உருவாகுமளவும் நான் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்.” (கலா. 4:19). கிறிஸ்துவை உண்டாக்குவதற்காக அவர் சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறார். நாம் கழுதையை அடிப்பது அல்லது தீர்க்கதரிசிகளைத் தேடுவது, வேலைக்காக. திருமணத்திற்காக…இவைகள் தேவனுடைய பார்வையில் அற்ப காரியங்கள். ஆனால், இவைகளுக்காகத் தேவனைத் தேடினால் கிடைக்காது. எதற்காகக் காணிக்கை கொடுக்கிறீர்கள்? பணக்காரனாவதற்கு சுருக்கு வழி என்ன? நீங்கள் தசமபாகம் கொடுங்கள். மல்கியா 3:10யை மேற்கோள் காட்டி, “என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலெ கொண்டு வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல். 3:10) என்று நேர்மறையாகவும் சொல்லுகிறார்கள். எதிர்மறையாகவும் பயமுறுத்துகிறார்கள். இது தவறு. பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன செய்கிறார் என்பதைப் பார்க்கத் தவறிவிட்டு, சுருக்கு வழி சொல்லிக்கொடுக்கிறோம். “நீ கர்த்தருக்குக் கொடுத்தால் கர்த்தர் உனக்குத் தருவார்” என்று.

இது எப்படியென்றால் தண்ணீர் ஊற்றினால் செடியிலிருந்து கனி வந்துவிடும் என்பதுபோல். தண்ணீர் ஊற்றினால் கனி வந்துவிடுமா? அந்த மண்ணைப் பண்படுத்த வேண்டும். விதை போட வேண்டும். உரமிட வேண்டும், களை பிடுங்க வேண்டும், பூச்சுபொட்டு வராமல் பார்க்க வேண்டும். வேலி அடைக்க வேண்டும், தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்போது அதிலிருந்து கனி வரும். அதை விட்டு விட்டு “நீங்கள் தண்ணீர் மாத்திரம் ஊற்றிக்கொண்டிருந்தால் போதும்” என்று சொல்வது தவறு. அதாவது நீ தசமபாகம் மட்டும் கொடுத்தால் போதும் என்பதுபோல் பேசுகிறார்கள். அப்படியானால் நீ படிக்க வேண்டாம். தேவனுடைய பிள்ளைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டாம்.

“என் வாழ்க்கைச் சூழ்நிலையில் என் முட்டைத்தோட்டை உடைத்து கர்த்தர் அதை மாற்ற வேண்டும். என் கழுதையை நான் சரிசெய்து நான் போக வேண்டிய இடத்துக்கு நான் போக வேண்டும். என் கால் வேதனையை சரியாக்கி என்னை நன்றாக நடக்கச்செய்ய வேண்டும்” என்பதெல்லாம் பூமிக்குரிய சிந்தனை. பரத்துக்குரிய சிந்தனை என்னவென்றால் பரிசுத்த ஆவியானவர் எப்படிப்பட்ட கிறிஸ்துவை இந்தச் சூழ்நிலையில் எனக்குத் தர விரும்புகிறார். எந்தக் கிறிஸ்து எனக்குக் குறைவுபடுகிறார்.

கிறிஸ்து உருவாக்கப்படுதல்

எந்தச் சூழ்நிலையிலும் தேவன் கிறிஸ்துவை நமக்குள் உருவாக்குவார். உருவாக்குவது எதற்காகவென்றால் பிற்காலத்தில் அதே சூழ்நிலையில் வரப்போகிற இன்னொரு மனிதனுக்கு அந்தக் கிறிஸ்துவைக் கொடுப்பதற்கு. நமக்குள் உருவாக்கப்படாத கிறிஸ்துவை நாம் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது. ஏட்டுக் கிறிஸ்து. கிறிஸ்துவிடம் எந்தக் குறையும் இல்லை. நாம் பெற்ற கிறிஸ்து ஏட்டுக் கிறிஸ்து. நாம் வழங்குகிற கிறிஸ்துவும் ஏட்டுக்கிறிஸ்து.

“பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே” (எபி. 3:1). நம் அழைப்பு எப்படிப்பட்டது? இந்த உலகத்தில் மற்ற மனிதர்களுக்கு இல்லாத சில நன்மைகளை நான் பெற்று அனுபவித்துவிட வேண்டும் என்பது நம் அழைப்பல்ல. நம் அழைப்பு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை நம் வாழ்க்கையிலே வெளியாக்குவது. அவருடைய குமாரனைக் காண்பது. அவருடைய குமாரன் வாழ்வது. அவருடைய குமாரன் நமக்குள் உருவாக்கப்படுவது. அவருடைய குமாரனை நாம் வெளிக்காண்பிப்பது. அவருடைய குமாரனைப் பிறருக்கு வழங்குவது. இப்படிப்பட்ட உயர்ந்த அழைப்பு நமக்கு இருக்கும்போது “இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வோம்” (எபி. 2:4). இது பாவிகளுக்கு அல்ல. தேவனுடைய மக்களுக்கு. நாம் பெற்றிருக்கிற இரட்சிப்பு எவ்வளவு பெரிதான இரட்சிப்பு! எவ்வளவு பெரிதான அழைப்பு! எவ்வளவு பெரிதான குறிக்கோள்! அது நம் வாழ்க்கையில் நிறைவேற நாம் தேவனோடு ஒத்துழைப்போமாக.