சகோதரர் ஆண்ட்ரூ என்று எல்லாராலும் செல்லமாக அழைக்கப்படும் ஆண்ட்ரூ வான் டெர் பிஜ்ல் 1928 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் பிறந்த ஒரு கிறிஸ்தவ மிஷனரி ஆவார். இவர் பனிப்போரின் உச்சக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு வேதாகமங்களைக் கடத்தினார். எனவேதான் இவர் "தேவனின் கடத்தல்காரர்" என்ற புனைபெயர் பெற்றார். அதே பெயரில் அவர் எழுதிய புத்தகத்தில் அவர் தன் அனுபவங்களை எழுதினார். சுதந்திரம் குறைவாக உள்ள அல்லது இல்லாத நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களை ஆதரிப்பதற்காக அவர் "திறந்த கதவுகள்" என்ற அமைப்பையும் நிறுவினார். அது தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இன்று நாம் “தேவனின் கடத்தல்காரர்” என்ற செல்லப்பெயர் பெற்ற ஒரு மிஷனரியின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகப் பார்க்கப்போகிறோம். இவர் பனிப்போரின்போது கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு வேதாகமங்களையும், பிற கிறிஸ்தவ இலக்கியங்களையும் கடத்திய கடத்தல்காரர். எனவேதான் இவர் “தேவனின் கடத்தல்காரர்” (God’s smuggler) என்ற செல்லப்பெயர் பெற்றார். இவருடைய பெயர் ஆண்ட்ரூ வான் டெர் பிஜ்ல். மேற்கத்திய நாடுகளில் இவரை ‘சகோதரர் ஆண்ட்ரூ’ என்று அழைக்கிறார்கள். பிறப்பும், இளமைப்பருவமும்
இவரைப்பற்றித் தெரிந்துகொள்ள நாம் நெதெர்லாந்துக்குச் செல்ல வேண்டும். ஆண்ட்ரூ 1928ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி நெதெர்லாந்திலுள்ள அல்க்மார் என்ற ஒரு சிறிய நகரத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய அப்பா இரும்புப் பட்டறை வைத்திருந்த ஒரு கொல்லர். அதுதான் அவருடைய தொழில். ஏழ்மையான குடும்பம். அவருடைய அம்மா இயல்பாகச் செயல்படமுடியாத ஒரு நோயாளி. அவர்களுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். ஆண்ட்ரூ நான்காவது குழந்தை. அவருடைய பெற்றோர் கிறிஸ்தவர்கள். எனவே, அவர்கள் ஆலயத்துக்குத் தவறாமல் போய்வந்தார்கள். ஆனால், ஆண்ட்ரூ ஆலயத்துக்குப் போனது ஒரு தனிக் கதை.
அவருடைய அப்பா பட்டறையில் இரும்பு அடித்து அடித்து அவருடைய காது செவிடாகிவிட்டது. எனவே, அவர்கள் ஆலயத்துக்குச் சென்றபோதெல்லாம் முன்னால் இருந்த இருக்கையில்தான் உட்கார்ந்தார்கள். ஏனென்றால், அப்போதுதான் பிரசங்கியார் பேசுவதைக் கேட்கமுடியும். பின்னால் இருந்தால் எதுவும் கேட்காது. ஆனால், ஒரு சின்ன பிரச்சினை. என்னவென்றால், முன்னால் இருந்த இருக்கைகளில் மொத்தக் குடும்பமும் உட்காரப் போதுமான இடம் இல்லை. எனவே, அவருடைய அம்மா ஆண்ட்ரூவிடம், “நீ பின்னால்போய் உட்கார்,” என்று சொல்லிவிடுவார். ஆண்ட்ரூவுக்குப் பயங்கரக் கொண்டாட்டம். பின்னால்போய் உட்காருவதுபோல் பாசாங்குசெய்துவிட்டு, முதல் பாடல் பாடிக்கொண்டிருக்கும்போதே, ஆலயத்தைவிட்டு அருகிலிருக்கும் விளையாட்டுத்திடலுக்கோ அல்லது கால்வாய்க்கோ போய்விடுவார். அங்கு போய் விளையாடிவிட்டு அல்லது பனிச்சறுக்கு செய்துவிட்டு கடைசிப் பாடல் பாடிக்கொண்டிருக்கும்போது சரியாக ஆலயத்துக்கு வந்துவிடுவார். பிரசங்கியார் என்ன பிரசங்கம் செய்தார் என்று கேட்டுத் தெரிந்துகொள்வார். ஏனென்றால், வீட்டில் மத்தியானம் சாப்பிடும்போது பெற்றோர் கேட்டால் ஏதாவது சொல்ல வேண்டுமல்லவா? அதற்காகதான். ஆண்ட்ரூ இவ்வாறு செய்வது அவருடைய பெற்றோருக்குப் பல ஆண்டுகளாகத் தெரியவே தெரியாது. ஆண்ட்ரூ அவ்வளவு கில்லாடி, கெட்டிக்காரன். பல ஆண்டுகளாகத் தெரியாது என்பதைவிட, அவர் இளமைப் பருவத்தில் இப்படிச் செய்தது அவருடைய பெற்றோருக்குத் தெரியவே தெரியாது. எனவே, சரியாகச் சொல்வதானால், ஆண்ட்ரூ தன் இளமைப் பருவத்தில் ஆலயத்துக்குச் செல்லவில்லை. குறும்புத்தனம், சேட்டை, விளையாட்டுத்தனம், சாகசம் நிறைந்த இளமைப் பருவம்.
அவர் வளர்ந்தபோது அவருடைய குறும்புத்தனமும் கூடவே வளர்ந்தது. அவரிடம் ஒருவிதமான அசட்டுத் துணிச்சல் இருந்தது. அவர் தைரியசாலி. சில நேரங்களில் அது முரட்டுத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் தோன்றலாம். அவருடைய ஊரில் வாழ்ந்த வெட்ஸ்ட்ராஸ் என்ற ஒரு முதிய தம்பதியிடம் இவர் அதிகமான சேட்டைகள் செய்தார். அவர்கள் உண்மையான விசுவாசிகள். ஆனால், ஆண்ட்ரூ அவர்களை விரும்பவில்லை. ஆண்ட்ரூ சிறுவனாக இருந்தபோது “தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, எனக்காக ஜெபியுங்கள், நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,” போன்ற பக்தியான வாக்கியங்களை விரும்பவில்லை. என்ன காரணம் என்று தெரியாது. பிடிக்கவில்லை. இன்னொரு காரணத்துக்காகவும் ஆண்ட்ரூவுக்கு அந்தக் கிறிஸ்தவ தம்பதியைப் பிடிக்கவில்லை. அவர்கள் ஜெர்மனியைக்குறித்தும், வரப்போகிற போரைக்குறித்தும், அது ஏற்படுத்தப்போகிற அழிவைக்குறித்தும் அடிக்கடி பேசினார்கள். ஊரார் அனைவரும் அந்தக் குடும்பத்தை ஏளனமாய்ப் பார்த்தார்கள்; அவர்கள் சொன்னதை அசட்டைசெய்தார்கள். “இவர்கள் எல்லாவற்றையும் மிகைப்படுத்துகிறார்கள், அளவுக்கு அதிகமாக எதிர்வினையாற்றுகிறார்கள்,” என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், 1939இல் உலகப்போர் வெடித்தபோது, “ஜெர்மனியில் என்ன நடக்கிறது என்று இந்தக் குடும்பத்துக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது,” என்று அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
நெதெர்லாந்தும் போரில் குதித்தது என்ற வானொலிசெய்தியை ஆண்ட்ரூ வீட்டாரும் கேட்டார்கள். போர் தீவிரமடைந்ததால் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த வீரர்கள் உட்பட முழு இராணுவமும் போரில் தள்ளப்பட்டது. பொதுமக்களுடைய கார்களும்கூட இராணுவ வீரர்களுடைய போக்குவரத்துக்காகப் பறித்துக்கொள்ளப்பட்டன. போரின் காரணமாக நெதர்லாந்து நாட்டுக்குள்ளும், குறிப்பாக ஆண்ட்ரூ வாழ்ந்த நகரத்திற்குள்ளும் ஏராளமான அகதிகள் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் யூதர்கள். போர் தொடங்கிக் கொஞ்சக் காலத்தில் நெதர்லாந்து நாடே தன் நாட்டின் சில அணைகளைக் குண்டு வைத்துத் தகர்த்தது. இதனால் அணைகளுக்கு அருகிலிருந்த விவசாய நிலங்களும், வேறு சில பகுதிகளும் வெள்ளக்காடாயிற்று. ஜெர்மன் படைகள் தரைவழியாக நாட்டின்மேல் படையெடுக்கக்கூடும் என்று நெதர்லாந்து எதிர்பார்த்ததால், அவர்களுடைய படையெடுப்பைத் தடுக்கமுடியாவிட்டாலும், ஊடுருவலைத் தாமதப்படுவதற்காக அவர்கள் அப்படிச் செய்தார்கள்.
1940 மே மாதம், ஒருநாள் ஆண்ட்ரூவின் குடும்பத்தார் அனைவரும் வானொலிப்பெட்டியைச் சுற்றி அமர்ந்து செய்தி கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென வந்த வேறொரு சத்தத்தினால் வானொலிச் செய்தியைக் கேட்கமுடியவில்லை. ஏனெனில், அவர்களுடைய தலைக்குமேலே விமானங்கள் பறந்துபோயின. அன்றிரவு ஜெர்மன் விமானங்கள் பறந்து வந்து, அருகிலிருந்த பெரிய நகரமான ரோட்டர்டாமைக் குண்டுவீசி அழித்தது. அப்போது ஆண்ட்ரூவுக்குப் 12 வயது. அடுத்த நாள், நெதர்லாந்து சரணடைந்தது.
முதலில், ஜெர்மன் படையெடுப்போ, ஆக்கிரமிப்போ அவரை அதிகம் பாதிக்கவில்லை. அவருடைய ஊரிலும் ஜெர்மன் வீரர்கள் சிலர் இருந்தார்கள். ஆனால், அவருடைய ஊர் மிகவும் தொலைதூரத்தில் ஒதுக்குபுறமாக இருந்ததாலும், மிகச் சிறிய ஊர் என்பதாலும் ஜெர்மன் இராணுவம் மிகத் திறமையான இளமையான வீரர்களை அந்த ஊரில் நிறுத்தவில்லை. அங்கு இருந்த ஜெர்மன் லெப்டினன்ட் வயதானவர், கொஞ்சம் குண்டானவர். ஆண்ட்ரூ அவரிடம் தன் குறும்புத்தனத்தைக் காட்ட ஆரம்பித்தார். ஒவ்வொரு நாள் இரவும் அவர் பதுங்கிப் பதுங்கிச் சென்று பலவிதமான சேட்டைகளை மிகத் துணிச்சலாகச் செய்யத் தொடங்கினார். இதையறிந்த அவருடைய அம்மா மிகவும் கவலைப்பட்டார். ஆயினும், அவன் அப்படிச் செய்யட்டும் என்று அவர் விட்டுவிட்டார். பட்டாசுகளைக் கொண்டுபோய் லெப்டினன்ட் வீட்டு வாசலில் வெடித்தார். ஒருமுறை அவர் ஒரு செர்ரி வெடிகுண்டு பட்டாசை வாங்கிக்கொண்டு போய் அதை அந்த லெப்டினன்ட் வீட்டின்முன் பதுக்கிவைத்தார். அவருடைய காவலர்கள் அங்கு குண்டு இருப்பது தெரியாமல் அதை மிதித்ததும், அது பலத்த சத்தத்தோடு வெடித்தது. அது பல சிக்கல்களை ஏற்படுத்தியது. ஒருநாள் ஆண்ட்ரூ அந்த லெப்டினன்ட்டின் காரில் பெட்ரோல் டேங்கில் சர்க்கரையை அள்ளிப்போட்டார். இப்படி, ஒவ்வொரு நாளும் ஆண் ரூ ஏதாவது குறும்புத்தனமாகச் செய்துகொண்டேயிருந்தார்.
அவர் மிக வேகமாக ஓடுவார். ஓட்டப்பந்தய வீரர். எனவே, யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும் என்ற அசட்டுத் தைரியம். ஆனால், இந்த ஜெர்மானிய வீரர்களிடம் துப்பாக்கி இருக்கிறது என்ற எண்ணம் ஆண்ட்ரூவுக்கு எழவில்லை. எனவே, சிறுவனாக இருந்தபோது, அவருடைய செயல்கள் ஒரு பக்கம், முட்டாள்தனமானவை; இன்னொரு பக்கம், துணிச்சலானவை.
ஆனால், அவருடைய குறும்புத்தனம் நீண்டநாள் நீடிக்கவில்லை. ஏனென்றால், 1942இல் அத்தியாவசியப் பொருட்கள் அரசாங்கத்தின் மேற்பார்வையில் மக்களுக்கு அளவாகத்தான் கிடைத்தன. அரசாங்கம் ரேஷன் கடைகள்மூலமாகவே பொருட்களை வழங்கியது. ரேஷன் மிகவும் கடுமையாக இருந்தது. ஆண்ட்ரூ வின் வீட்டில் அப்போது மொத்தம் 6 பேர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ரேஷன் அவர்களுக்குப் போதாது. எனவே, அவர்கள் பசியும் பட்டினியுமாகத்தான் வாழ்ந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் ஆண்ட்ரூ ஒருவேளைகூட வயிறாரச் சாப்பிடவில்லை. தன் அம்மா தன் சாப்பாட்டைக்கூடத் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு அவர் பட்டினி கிடப்பதை ஆண்ட்ரூ கவனித்தார். அப்படியிருந்தும் பிள்ளைகளின் பசியைப் போக்க முடியவில்லை.
அது மட்டும் அல்ல; ஜெர்மன் இராணுவ அதிகாரிகள் எல்லா நகரங்களுக்கும் போய் ஆரோக்கியமான, நல்ல உடல்வாகுடையவர்களை போரில் தங்கள் நாட்டுக்காகப் போரிட வாரிக்கொண்டு போனார்கள். தங்களுக்காக யுத்தம் செய்ய அவர்கள் ஆட்களைத் தேடினார்கள். மக்கள் ஜெர்மன் லாரிகள் வருவதைப் பார்த்ததும், அவர்களுடைய கண்ணில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக காட்டுக்குள் ஓடி ஒழிந்தார்கள் அல்லது கால்வாய்களில்போய் மூழ்கினார்கள் அல்லது நீந்தினார்கள். தப்பித்துக்கொள்ள முடிந்ததெல்லாம் செய்தார்கள். ஜெர்மன் இராணுவம் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கூட்டிக்கொண்டுபோனதால், ஆண்ட்ரூவின் அப்பாவும் தப்பவில்லை. அந்த நேரத்தில் மின்சாரப் பற்றாக்குறை; நெருப்பு மூட்ட நிலக்கரிப் பற்றாக்குறை; எனவே, அவர்கள் தங்கள் கிராமத்தைச் சுற்றியிருந்த பழங்கால இலுப்பை மரங்களை வெட்டி விறகாக்கினார்கள். ஏற்கெனவே சரியான சாப்பாடு இல்லை. எனவே, அவர்கள் துலிப் என்ற செடியின் கிழங்கையும், மரப் பட்டைகளையும் சாப்பிட ஆரம்பித்தார்கள். போரினால் நிலைமை மோசமானது.
கடைசியில், 1945இல், கனடா இராணுவம் நெதர்லாந்து நாட்டுக்குள் வந்தது. அப்போது போர் முடிந்துவிட்டது என்று அவர்கள் கேள்விப்பட்டார்கள், புரிந்துகொண்டார்கள். அடுத்த நாள், ஆண்ட்ரூ எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஓர் இராணுவ முகாமுக்கு ஓடிச்சென்று, “ஒரு மூட்டை ரொட்டி அல்லது ரொட்டித் துணிக்கைகள் அல்லது ஏதாவது தாருங்களேன்,” என்று கெஞ்சினார். அவர்கள் அவருக்கு ஒரு மூட்டை ரொட்டித் துண்டுகளைக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுமந்துகொண்டு தன் வீட்டுக்குத் திரும்பினார், அதைப் பார்த்த அவருடைய அம்மா ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
அப்போது ஆண்ட்ரூவுக்கு சுமார் 18 வயது இருக்கும். என்ன படிக்க வேண்டும்? என்ன வேலை செய்ய வேண்டும் என்ற எந்தக் குறிக்கோளும் இல்லாமல் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் மகன் தந்தையின் தொழிலைத் தொடர்வதுதான் வழக்கம். ஆனால், ஆண்ட்ரூவுக்குத் தன் அப்பாவின் கொல்லர் தொழிலைத் தொடர்ந்துசெய்வதில் கடுகளவு விருப்பம்கூட இல்லை. எனவே, அவர் வேறு பல வேலைகளை செய்தார். ஆனால், எந்த வேலையும் அவருக்குச் சரிப்பட்டு வரவில்லை. ஒருநாள் அவருடைய அப்பா, “நீ ஏதாவதொரு வேலையைத் தெரிந்தெடுத்து அந்த வேலையில் ஒட்டிக்கொள்ள வேண்டும். இப்படித் தாவிக்கொண்டேயிருக்கக்கூடாது. சும்மா வெட்டியாகத் திரிந்தது போதும்,” என்று அவரை எச்சரித்தார்.
##இராணுவத்தில் ஆண்ட்ரூ
ஆண்ட்ரூ என்ன வேலைக்குப் போவதென்று முடிவுசெய்தார். ஆனால், அவர் தெரிந்தெடுத்த வேலையை அவருடைய பெற்றோர் விரும்பவில்லை. அவர் இராணுவத்தில் சேர முடிவுசெய்தார். அந்த நேரத்தில், இரண்டாம் உலகப் போருக்குப்பிறகு, நெதர்லாந்தின் டச் கிழக்கிந்திய கம்பெனி தங்கள் ஆதிக்கத்தின்கீழ் இருந்த இந்தோனேசியாவில் எழுந்த கிளர்ச்சியை அடக்கவும், மக்களை ஒடுக்கவும் இராணுவத்தில் ஆட்களை சேர்க்க ஆரம்பித்தார்கள். ஆண்ட்ரூ எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இராணுவத்தில் மிக எளிதாகச் சேர்ந்துவிட்டார். அவர் இராணுவத்தில் பணிபுரிவதை விரும்பினார். இராணுவப் பயிற்சி, அங்கிருந்த ஒழுங்கு ஆகியவை அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தியது. அவரும் இராணுவத்தில் கச்சிதமாகப் பொருந்திவிட்டார். அவர் நல்ல ஓட்டப்பந்தய வீரராக இருந்ததால், அவரைச் சிறப்பு கமாண்டோ பிரிவில் சேர்த்துக்கொண்டார்கள். இராணுவத்தில் சிறப்பு கமாண்டோ பிரிவில் இருப்பதை அவர் பெரிய கௌரவமாகக் கருதினார். அதில் அவருக்குப் பெரிய பெருமிதம். தான் ஒரு பெரிய ஆள் என்று அவர் நினைக்க ஆரம்பித்தார். இராணுவச் சீருடை அணிந்துகொண்டு அவருடைய கிராமத்தில் நடந்துபோவதும், அப்போது மக்கள் அவரை வரவேற்பதும், பாராட்டுவதும் அவருக்குப் பிடித்திருந்தது. “நான் சிறப்பு கமாண்டோ பிரிவில் முக்கியமான ஆள். விரைவில் இதைவிட முக்கியமானப் பிரிவுக்குச் செல்வேன்,” என்று மக்களிடம் பேசுவதில் அவருக்கு அலாதி இன்பம். இதுவே தன் வாழ்வின் பொருளும், நோக்கமுமாகும் என்று அவர் நினைத்தார்.
ஊரிலிருந்த வெட்ஸ்ட்ராஸ் விசுவாசக் குடும்பத்தாரைத்தவிர வேறு எல்லாரும் ஆண்ட்ரூ வை வானளாவப் புகழ்ந்தார்கள். ஒருநாள் திரு.வெட்ஸ்ட்ராஸ் ஆண்ட்ரூவிடம், “நான் உனக்காக ஜெபிக்கிறேன். இராணுவத்தில் நீ சாதிக்கப்போகிற வீரசாகசங்கள் உண்மையாகவே உன்னைத் திருப்தியாக்கும் என்று நான் நினைக்கிறன். அதற்காக ஜெபிக்கிறேன்,” என்று சொன்னார். அதைக் கேட்டதும் ஆண்ட்ரூ, “இவர் சொல்வது விசித்திரமாக இருக்கிறது. நிச்சயமாக இராணுவ சேவையில் நான் திருப்தியாவேன். நான் விரைவில் ஊரைவிட்டு வெளியேறப் போகிறேன். இந்த உலகமெங்கும் பயணிப்பேன். எத்தனை சாகசங்கள் எனக்காகக் காத்திருக்கின்றன! இவைகள் என்னைத் திருப்திப்படுத்தாதா என்ன? இவர் என்ன நூதனமாகப் பேசுகிறார்,” என்று நினைத்தார்.
நவம்பர் 1946இல், ஒரு சிறப்பு கமாண்டோ பிரிவு நெதெர்லாந்திலிருந்து இந்தோனேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றது. ஆண்ட்ரூவும் அந்தப் படையுடன் இந்தோனேசியாவுக்குச் சென்றார். அவர் புறப்பட்டபோது அவருடைய அம்மா ஒரு வேதாகமத்தை அவரிடம் கொடுத்து, “ஆண்ட்ரூ, ஒவ்வொரு நாளும் இதைப் படி,” என்று சொன்னார். அவர் அதை வாங்கித் தன் பையில் ஒரு மூலையில் தூக்கியெறிந்தார். அதன்பின் அவர் அதை மறந்துவிட்டார்.
இந்தோனேசியாவில் அவருக்குப் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. தான் இராணுவ முகாமில் பெற்ற பயிற்சிக்கும் இந்தோனேசியாவில் களத்தில் செய்கிற வேலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவர் புரிந்துகொண்டார். இந்தோனேசியாவில் எல்லாம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை. இந்தச் சூழ்நிலைக்கு அவர் தயாராக இல்லை. முதலாவது, அவர் இராணுவ வீரர்களோடு போர்புரியவில்லை. சீருடையில் இல்லாத சாமான்ய பொதுமக்களை எதிர்த்துப் போரிட வேண்டியிருந்தது. கிராமங்களுக்குச் சென்று ஈவுயிரக்கமின்றி ஆண்கள் பெண்கள், பெரியோர் சிறியோர் என எல்லாரையும் கொன்றார்கள். இதைச் செய்தபோது அவர் உடைந்துபோனார், உறைந்துபோனார். இன்னொரு காரியம் என்னவென்றால், அவர்கள் போன இடங்களிலெல்லாம் கண்ணிவெடிகள் வைத்திருந்தார்கள். இவர்களுடைய முகாம்களுக்கு அருகிலும் கண்ணிவெடிகள். எனவே, இவர்கள் எப்போதும் மிக விழிப்புடன் இருக்கவேண்டியிருந்தது. தப்பித்தவறி ஒரு கண்ணிவெடியை மிதித்தால் மரணம் நிச்சயம் என்ற நிலைமை. எனவே, ஒவ்வொரு நாளும் வாழ்வா சாவா என்ற போராட்டம்.
ஒருமுறை தொடர்ந்து மூன்று வாரங்கள் கிராமங்களுக்குச் சென்று மக்களை அழித்தொழிக்கும் operation தொடர்ந்தது. அப்படி ஒரு சிறிய கிராமத்திற்குச் சென்றபோது ஓர் இராணுவ வீரர் ஒரு கண்ணிவெடியை மிதித்துவிட்டார். கண்ணிவெடிகள் வெடித்துச் சிதறின. பல வீரர்கள் காயமடைந்தார்கள். சோர்வு, கையறுநிலை! செய்வதறியாது திகைத்தார்கள். ஆனால், அதற்குப் பழிவாங்கும் விதமாக கிராமங்களுக்குள் சென்று வெறித்தனமாக மக்களைக் கொன்றுகுவித்தார்கள். அவர்கள் நுழைந்த கிராமத்தில் ஒருவரையும் உயிரோடு வைக்கவில்லை. தாங்கள் வந்த வேலை முடிந்தபிறகு, அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு எல்லாவற்றையும் நோட்டமிட்டார். எங்கும் மயான அமைதி, நிசப்தம், பிணங்கள், அழிவு! சுற்றிப் பார்த்தார். கொஞ்சச் தூரத்தில் புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையை அரவணைத்துக்கொண்டிருந்த ஒரு பெண் பிணமாகக் கிடந்தாள். தாயும் குழந்தையும் ஒரே தோட்டாவால் கொல்லப்பட்டிருந்தார்கள். அந்த அகோரக் காட்சி அவருக்குள் என்னவோ செய்தது. அவருடைய மனம் எரிந்தது. அவருடைய உள்ளம் உடைந்தது. தாங்க முடியவில்லை. அந்த நேரத்தில், அவர் தற்கொலைசெய்ய விரும்பினார். அவர் அந்தக் கிராமத்தின்வழியாக நடந்துபோனார். ஒரு சில போர்வீரர்கள் கண்ணிவெடியில் சிக்கிக் காயப்பட்டதற்காக, எந்த மேலதிகாரியின் கட்டளையும் இல்லாமல் தாங்கள் செய்த படுகொலையைப் பார்த்தார். அவரால் தாங்க முடியவில்லை, சகிக்க முடியவில்லை. ஆனால், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மாறாக, சாகவேண்டும் என்ற ஆசையோடு வாழ ஆரம்பித்தார்.
அவர் எதையும் அரைகுறையாகச் செய்யமாட்டார். ஒன்றைச் செய்யத் தீர்மானித்தால் அதை முழுமூச்சாய் செய்வார். அவரும், இன்னும் சில வீரர்களும், “பைத்தியக்காரன் என்று சொல்லும் அளவுக்கு முன்னெச்சரிக்கைகளைக் காற்றில் பறக்க விடுங்கள்” என்று விருதுவாக்கின்படி வாழ ஆரம்பித்தார்கள். இராணுவ வீரர்களோடு சேர்ந்து கிராமங்களுக்குச் சென்றபோது, வழக்கமான தலைக்கவசத்துக்குப்பதிலாக ஒரு மஞ்சள் நிற வைக்கோல் தொப்பியை அணிந்தார்கள். பிறர் தங்களை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும், எதிரி தங்களை எளிதில் சுடமுடியும் என்றும் அவர்களுக்குத் தெரியும். அது, “இதோ, நான் இங்கு இருக்கிறேன்,” என்று எதிரிக்கு அடையாளம் காட்டுவதுபோல் இருந்தது. மேலும், ஆண்ட்ரூ போர்முனையில் கிறுக்குத்தனமான செயல்களில் ஈடுபட்டார். அன்றைய பணி முடிந்ததும், குடித்து வெறித்து குடிபோதையில் நகரத்தில் தள்ளாடிதள்ளாடி நடந்துசென்றார். யாராவது ஒருவர் தன்னைச் சீக்கிரம் கொன்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து வாழந்தார். ஆனால், யாரும் அவரைக் கொல்லவில்லை.
அவர் தன் ஊரிலிருந்த நண்பர்களுக்கு இந்தக் காரியங்களைக்குறித்து கடிதம் எழுதினார். எல்லாவற்றையும் எழுதவில்லை; ஆனால், தன் குற்றவுணர்ச்சியைக்குறித்து அதிகமாக எழுதினார். சில நண்பர்கள் பதில் எழுதினார்கள். அவர்கள் அவருடைய உள்ளக்குமுறலையும், போராட்டத்தையும் புரிந்துகொள்ளவில்லை. “நீ இந்தக் கொலைகளைக்குறித்து கவலைப்படாதே. இது இராணுவ நடவடிக்கைளில் சாதாரணம். நீ இவைகளைப் பெரிதுபடுத்துகிறாய். நீ இவைகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு வேலையைத் தொடர்ந்து செய்,” என்று அவரை உற்சாகப்படுத்தி எழுதினார்கள்.
ஆனால், ஒரோவொருவர் சற்று வித்தியாசமாகப் பதில் எழுதினார். அது அவருடைய காதலி பீலே. ஆண்ட்ரூ நெதர்லாந்தில் இராணுவப் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணைச் சந்தித்தார். அவள் ஒரு நல்ல கிறிஸ்தவள். அவள் அவருக்குத் தெரிந்த வேறு பல பெயர்க் கிறிஸ்தவர்களைப்போல் வாழவில்லை. அவள் உண்மையாகவே கிறிஸ்துவால் வாழ விரும்பினாள். அவர் அவளுக்கும் தன் நிலைமையை விவரித்துக் கடிதம் எழுதினார். இந்தோனேசியாவில் நடந்த கொலைகள், கண்ணிவெடிகள், தன் குற்றவுணர்ச்சி, உள்ளத்தின் போராட்டம் ஆகியவைகளைப்பற்றிச் சுருக்கமாக எழுதினார். அவள், “நீ தேவனைத் தேடுவதே உன் நிலைமைக்குத் தீர்வு,” என்று பதில் எழுதினாள். ஆண்ட்ரூ அவளுடைய பதிலைப் பொருட்படுத்தவில்லை. “இதெல்லாம் ஒரு பதிலா? இவளுக்கு என் நிலைமை கொஞ்சங்கூடப் புரியவில்லை,” என்று நினைத்தார். எனவே, சீக்கிரத்தில் யாராவது ஒருவர் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்ற எதிர்பார்போடும், நம்பிக்கையோடும் முன்புபோலவே தொடர்ந்து தன்னால் முடிந்தவரை காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்தார்.
ஒரு நாள், வழக்கம்போல் ஓர் இடத்தில் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்கள். அந்தச் சண்டையில் ஒரு குண்டு அவருடைய தலையை உராய்ந்துகொண்டு சென்றது. இன்னொரு குண்டு அவருடைய கணுக்காலைத் துளைத்தது. முடிந்தவரை அவர் வேகமாக ஓடினார். ஓடும்போது கீழே குனிந்து பார்த்தார். அவருடைய பூட்ஸின் இரு பக்கங்களிலும் இரண்டு துளைகள் இருந்தன; குண்டு ஒரு பக்கம் பாய்ந்து அடுத்த பக்கம் வெளிவந்தது. இரத்தம் கொட்டியது. மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவர் நிலைகுலைந்து போனார். ஏனென்றால், இராணுவத்தில் அவர் பெரிய சாகசங்கள் செய்ய வேண்டும் என்று மனக்கோட்டை கட்டியிருந்தார். ஆனால், சாகசவீரன் இப்போது அடிபட்டு நடக்கமுடியாமல் மருத்துவமனையில் படுத்துக்கிடக்கிறார். சாகசவீரன், சாகசவிரும்பி இப்போது சாக விரும்பினார்; ஆனால் தற்கொலை செய்யவில்லை. யாரவது தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று நம்பினார். சுட்டார்கள்; ஆனால், உயிர் பிழைத்துக்கொண்டார். தோல்விமேல் தோல்வி. அவர் ஓர் ஓட்டப்பந்தய வீரன். ஆனால், அவரால் இனி ஒழுங்காக நடக்க முடியுமா என்பதே சந்தேகம். நொறுங்கிப்போன கணுக்கால். மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்தார். இந்தப் பூமியில் பெரிய சாகசம் எதுவும் கிடையாது என்றும், எதுவும் தன்னைத் திருப்திப்படுத்தாது என்றும் உணர ஆரம்பித்தார்.
அவர் மருத்துவமனையில் இருந்தபோது நடந்த இரண்டு சிறிய நிகழ்வுகள் அவருடைய வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிவிட்டன. முதல் நிகழ்வு ஒரு கடிதம். ஒருமுறை குடிபோதையில் அவர் தன் காதலிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அந்தக் கடிதத்தை அவர் தன் காதலிக்கு அனுப்பவில்லை. கடிதத்தில் அவர் அவளுடைய முகவரிகூட எழுதவில்லை. ஏனென்றால், அதை அவளுக்கு அனுப்பும் எண்ணம் அவருக்கு இல்லை. அந்தக் கடிதத்தில், அவர் தான் செய்த அனைத்தையும், தான் மிகவும் வெட்கப்படுகிற காரியங்களையும் எழுதினார். தன்னை அழுத்திக்கொண்டிருந்த எல்லாவற்றையும்குறித்தும், தன் சுமையை இறக்கிவைக்கும் விதத்தில் அவர் எழுதினார். அவர் செய்த குற்றமெல்லாம் அந்தச் சில காகிதத் துண்டுகளில் இருந்தன.
ஆண்ட்ரூ மருத்துவமனைக்குச் சென்றபிறகு, அவருடைய நண்பன் ஒருவன் அவருடைய அறையைச் சுத்தம்பண்ணினான். அப்போது முகவரி எழுதப்டாடாத அந்தக் கடிதத்தைப் பார்த்தான். அவருடைய காதலியின் பெயர் எழுதப்பட்டிருந்தது; ஆனால் முகவரி எழுதப்படவில்லை. அவன் அவளுடைய முகவரியைக் கண்டுபிடித்து, முகவரி எழுதி, கடிதத்தைத் தபாலில் சேர்த்துவிட்டான். அதன்பின் அவன் ஆண்ட்ரூ வைச் சந்தித்தபோது, “நீ எழுதி வைத்திருந்த கடிதத்தில் நான் உன் காதலியின் முகவரியை எழுதி அனுப்பிவிட்டேன்,” என்று சொன்னான். உடனே, ஆண்ட்ரூ வின் முகம் வெளுத்தது. அவனுடைய கழுத்தை நெரிந்துக் கொன்றுவிட வேண்டும்போல் இருந்தது. ஆனால், அப்படி ஒன்றும் செய்யவில்லை. ஆனால், இத்தோடு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று ஆண்ட்ரூ நினைத்தார். அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது என்று அவருக்குத் தெரியும். அந்தக் கடிதம் இப்போது அவருடைய அன்புக் காதலியின் கரங்களில் இருக்கிறது.
இரண்டாவது நிகழ்வு அந்த மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்கள் சம்பந்தப்பட்டது. அந்த மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்களில் பலர் விசுவாசிகள். அவர்கள் இந்த இராணுவ மருத்துவமனையில் தன்னார்வ செவிலியர்களாகப் பணியாற்றினார்கள். அவர்கள் அங்கு சம்பளத்துக்காக வேலைசெய்யவில்லை. அவர்களில் ஒருவர் ஆண்ட்ரூ வின் பையிலிருந்த சிறிய டச்சு வேதாகமத்தைப் பார்த்து, அதை எடுத்து அவருடைய படுக்கையில் தலையணையருகே வைத்திருந்தார். நாட்கள் கடந்தன; வாரங்கள் உருண்டோடின. “இந்தச் செவிலியர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்!” என்று ஆண்ட்ரூ கவனிக்க ஆரம்பித்தார். அவர்கள் நோயாளிகளிடம் பழகுகிற விதத்தையும், நோயாளிகளைக் கவனிக்கிற விதத்தையும், அவர்களுடைய அற்புதமான அணுகுமுறையையும் கவனித்தார். அவர்கள் அவரை மிக நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். அவர் தன்னை அவர்களோடு ஒப்பிட்டுப்பார்த்தார். அவர் தன் சோர்ந்த, கோபமான, கசப்பான மனநிலைக்கும் அந்தச் செவிலியர்களின் மனப்பாங்குக்கும் இடையேயுள்ள பெரிய வேறுபாட்டை உணர்ந்தார். ஒருநாள் அவர் ஒரு செவிலியரிடம், “இந்தப் பயங்கரமான இடத்தில், தேவனால் கைவிடப்பட்ட இந்த இடத்தில், நீங்கள் எப்படி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்தச் செவிலியர், மிகச் சாதாரணமாக, “கிறிஸ்துவின் அன்பு,” என்றுசொல்லி, ஆண்ட்ரூ வின் சிறிய வேதாகமத்தைச் சுட்டிக்காட்டி, “உன்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இங்கு கிடைக்கும்,” என்று சொன்னார்.
அதன்பிறகு ஆண்ட்ரூ தன் அம்மா தனக்குத் தந்த, இதுவரைத் தொட்டுக்கூடப் பார்க்காத வேதாகமத்தை, எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். ஆதியாகமம், முதல் அதிகாரம், முதல் வசனத்தைப் படித்தார்.
அடுத்த நாள் அவருடைய காதலியிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. மிகுந்த மனக்கிலேசத்தோடும், மனஅழுத்தத்தோடும், கலக்கத்தோடும், நடுக்கத்தோடும் அவர் அந்தக் கடிதத்தைத் திறந்தார். கடிதத்தைப் படிக்கத் துணிவில்லை. சமாளித்துக்கொண்டு அவர் கடிதத்தைப் படித்தார். கடிதத்தைப் படித்து முடித்தபின், “ஆ! அவள் என்னையும், என் நிலைமையையும், என் உடைந்த உள்ளத்தையும், இங்கு இருக்கும் சூழ்நிலையையும் புரிந்துகொண்டாள்!” என்று அவர் உணர்ந்தார். அவள் மிகவும் கனிவோடும், கரிசனையோடும், அக்கறையோடும் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தாள். “நீ மனிதனின் மனவேதனையையும், உடைந்த உள்ளத்தையும் தேவனுடைய அன்பின் வெளிச்சத்தில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நீ வேதாகமத்தைப் படிக்க வேண்டும். வேதாகமத்தைப் படிப்பதற்கு வசதியாக நான் இத்துடன் ஒரு கையேட்டையும் இணைத்துள்ளேன்,” என்று கடிதத்தை முடித்திருந்தாள்.
கையேட்டின் துணையோடு அவர் வேதாகமத்தைப் படிக்க ஆரம்பித்தார். அவர் வாசிக்கத் தொடங்கியதும், வேதாகமத்தால் கவர்ந்திழுக்கப்பட்டார். ஆனால், “வேதாகமம் தன்னை இந்த அளவுக்கு ஈர்க்கக் காரணம் என்ன?” என்று அவருக்குப் புரியவில்லை.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்தபின் அவர் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். ஊருக்குத் திரும்பிவந்தபிறகும் அவர் வேதாகமத்தைத் தொடர்ந்து படித்தார். அவர் அதில் மூழ்கிவிட்டார். சில நேரங்களில் அவர் படுக்கையில் படுத்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த அவருடைய அப்பா, “இது இயல்பானதுபோல் தெரியவில்லையே! உண்மையில் இது துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்ட அதிர்ச்சியின் விளைவாக இருக்குமோ!” என்று நினைத்தார். அது மட்டுமல்ல, விசுவாசிகளான அவருடைய நண்பர்கள் சிலர் அவரை வெவ்வேறு சபைகளுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். விசுவாச நண்பர்களோடும், தனியாகவும் அவர் வெவ்வேறு கூட்டங்களிலும், குழுக்களிலும் கலந்துகொள்ளத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் அவருடைய குடும்பத்தார் ஆண்ட்ரூ வின் இந்தப் பெரிய மாற்றத்தைக்குறித்து மிகவும் கவலைப்பட்டார்கள். ஆனால், அவர் உண்மையிலேயே ஏதோவொன்றைத் தேடிக்கொண்டிருந்தார். அவர் ஏதோவொன்றுக்காக ஏங்கினார், தவித்தார். வேதாகமத்தை வைத்துக்கொண்டு தியானித்தார். எதைத் தேடுகிறோம் என்று அவருக்குத் தெரியாது. ஒருநாள் இரவு! கடும் புயல் வீசியபோது, அவர் தன் சிறிய படுக்கையில் படுத்திருந்தார். தான் படித்த, கேட்ட அனைத்தையும்பற்றி அவர் யோசித்துக்கொண்டிருந்தார், எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்துப் பார்த்தார். உரத்த சத்தமாக தேவனை நோக்கி, “தேவனே, நான் செல்லவேண்டிய பாதையை எனக்குக் காண்பியும். நான் அந்தப் பாதையில் உம்மைப் பின்பற்றுவேன்,” என்று மிக எளிமையாக ஜெபித்தார்.
ஆண்ட்ரூவின் இருதயத்தில் இனம்புரியாத அமைதி, சமாதானம், இளைப்பாறுதல். தான் தேடியது கிடைத்துவிட்டது என்ற திருப்தி. தான் தேடிய சாகசங்கள் தேவையற்றவை, பொருளற்றவை என்ற வெளிச்சம் உள்ளத்தில் உதித்தது. அடுத்த நாள் காலையில், யாரிடமாவது இவைகளைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினார். ஆனால், என்ன சொல்ல வேண்டும் என்று அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. யாரைச் சந்தித்துப் பேசலாம் என்று சிந்தித்தபோது உடனடியாக வெட்ஸ்ட்ராஸ் தம்பதியார் அவருடைய நினைவுக்கு வந்தார்கள். நேரே அவர்கள் வீட்டுக்குப் போனார். தான் உணர்வதையும், நினைப்பதையும் அவர்களோடு பகிர்ந்துகொண்டார். அவர்கள் உடனே அதைப் புரிந்துகொண்டு, “நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாய். நீ மறுபடி பிறந்திருக்கிறாய். இதற்காக நீ கர்த்தருக்கு நன்றி சொல். தேவன் உன் ஜெபத்துக்குப் பதில் தந்தார்,” என்று சொன்னார்கள்.
அவருடைய புதிய வாழ்க்கை ஆரம்பமானது. ஆர்வம், ஆவல், உற்சாகம் கரைபுரண்டோடியது. அவர் பல்வேறு கூட்டங்களுக்குச் சென்றார். மிஷனரிகளைப்பற்றியும், மிஷனரியாகச் செல்வதைப்பற்றியும் அவர் சில கூட்டங்களில் கேள்விப்பட்டார். மிஷனரியாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது. அவர் அதை விரும்பினார். ஒரு கூட்டத்தில் அவருடைய ஆர்வத்தைக் கண்ட ஒருவர் அவரிடம், “நீ மிஷனரியாகச் செல்ல விரும்பினால், முதலாவது உன் வீட்டில், உன் ஊரில், மிஷனரியாக இருக்க வேண்டும். வீடுதான் மிகச் சிறந்த பயிற்சிக்களம். எனவே, உன் வீட்டில், உன் ஊரில், உன் மிஷனரி வேலையைத் தொடங்கு. அப்போது இதுதான் உண்மையிலேயே உன் அழைப்பா இல்லையா என்று தெரிய வரும்,” என்று சொன்னார். அவர் சொன்ன வார்த்தைகளை ஆண்ட்ரூ மிகச் சிரத்தையோடு எடுத்துக்கொண்டார்.
அவருடைய ஊருக்கு அருகில் இருந்த ஒரு சிறிய நகரத்தில் ஒரு சாக்லேட் தொழிற்சாலையில் அவர் வேலைக்குச் சேர்ந்தார். பிரசங்கியார் சொன்னபடி, தன் மிஷனரிப் பணியை இந்த சாக்லேட் தொழிற்சாலையிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று அவர் முடிவுசெய்தார். இதுதான் அவருடைய பணிக்களம். இந்தத் தொழிற்சாலையில் அவருக்குப் பேக்கிங் வேலை கிடைத்தது. தனக்கு என்ன வேலையென்றும், அங்கு வேலை செய்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் அறிந்தபோது அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். ஒன்று, அது அவ்வளவு பெரிய மதிப்புள்ள வேலை இல்லை. இரண்டாவது, அந்தத் தொழிற்சாலையில் அவரைத்தவிர மீதி எல்லாரும் பெண்கள். மூன்றாவது, அங்கு வேலைசெய்தவர்களைப்போன்ற முரட்டுத்தனமான, கரடுமுரடனான, பண்பற்ற பெண்களை அவர் அதற்குமுன் சந்தித்ததேயில்லை. இராணுவத்தில் இருந்த காலத்தில்கூட அவர் இப்படிப்பட்ட மக்களைப் பார்த்ததில்லை. இராணுவ வீரர்கள் சொல்லும் மலிவான, மட்டமான நகைச்சுவைகள் அவருக்குத் தெரியும். சில வேளைகளில் சிலர் கொடுமைப்படுத்தப்பட்டதும், கிண்டல், கேலி, பரிகாசம் ஆகியவைகளுக்குப் பஞ்சமே இருக்காது என்றும் அவருக்குத் தெரியும். ஆனால், இந்தத் தொழிற்சாலை அதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது என்று சொல்லும் அளவுக்கு மோசமாக இருந்தது. அவரைப் பெண்கள் கிண்டல் செய்தார்கள். மோசமான, தரங்கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள். கெட்ட வார்த்தைகளால் குளிப்பாட்டினார்கள். அவர் அதிர்ச்சியடைந்தார். என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தச் சூழ்நிலையில் தான் என்ன செய்யவேண்டும் என்று நாளடைவில் புரிந்துகொண்டார். இதுதான் அவருடைய மிஷனரிப் பணிக்களம், பயிற்சித்தளம். இதுதான் தான் இருக்க வேண்டிய இடம் என்று அவர் புரிந்துகொண்டார்.
அந்தத் தொழிற்சாலையில் ஒரு பெண் எழுத்தராக வேலை செய்தார். வாலிபப் பெண், அப்பாவி, மென்மையான பெண்மணி. அவளைப் பார்த்து ஆண்ட்ரூ வருந்தினார். ஒரு நாள் அவர் அவளிடம் சென்று, “நீ இங்கே வேலை செய்யக்கூடாது. இது உனக்கு ஏற்ற இடம் அல்ல,” என்று சொன்னார். அவள் ஒரு விசுவாசி என்று ஆண்ட்ரூ தெரிந்துகொண்டார். அவள் அந்தத் தொழிற்சாலையில் வேலைசெய்த எல்லாப் பெண்களுக்காகவும் ஜெபித்துக்கொண்டிருந்தாள். எனவே, இப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தார்கள். வேலை செய்த பெண்களுக்கு இடையே நடந்த உரையாடல்களை அவர் பல நேரங்களில் கேட்க நேரிட்டது. அதன்மூலம் அவர்களில் பலருடைய கடினமான, முரட்டுத்தனமான பின்னணியை அவர் அறிந்துகொண்டார். அவர் மெல்ல மெல்ல அவர்களுடைய தேவைகளையும், கஷ்டங்களையும், அவர்களுக்கு நேர்ந்தவைகளையும் அறிந்துகொண்டார். தான் கேட்டதையும், அறிந்துகொண்டதையும் அவர் அந்தப் பெண்ணிடம் சொன்னார். அந்தப் பெண் அவர்களுக்குப் பல வழிகளில் உதவ ஆரம்பித்தாள். அவள் அவர்களுக்காக ஜெபித்தாள், மற்ற பெண்களோடு பேசினாள். நாளடைவில் அவர்கள் இருவரும் அங்கு வேலை செய்த பெண்களுக்காகத் தொடர்ந்து ஜெபித்தார்கள், நடைமுறையில் உதவியும் செய்தார்கள். படிப்படியாக, சில மாதங்களில், இந்தத் தொழிற்சாலை மிகவும் வித்தியாசமான இடமாக மாறியது. அந்தப் பெண்களில் பலர் இரட்சிக்கப்பட்டார்கள். அங்கு சூழல் மாறிற்று.
சாக்லேட் தொழிற்சாலையில் வேலை நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோதும், அதுதான் தான் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டிய இடம் என்று ஆண்ட்ரூ ஒருபோதும் நினைக்கவில்லை. அது தன் பயிற்சிக்களம் என்று ஆண்ட்ரூ திட்டவட்டமாக அறிந்திருந்தார். தான் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்று அவர் உணர்ந்தார். ஒருபுறம் தான் ஒரு மிஷனரியாகப் போக வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இன்னும் இருந்தது. ஆனால், மிஷனரியாகப் போவதற்குத் தான் ஏற்ற நபர் இல்லை என்று அவர் நினைத்தார். ஏனெனில், ஜெர்மானியர்கள் படையெடுத்தபோது, அவர் தன் 12ஆவது வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்தவேண்டியிருந்தது. எனவே, மிஷனரியாகச் செல்வதற்குத் தேவையான குறைந்தபட்ச தகுதிகூட அவரிடம் இல்லை. அடிப்படையான ஆரம்பக்கல்வி மட்டுமே இருந்தது.. மேலும், குண்டடிபட்ட கணுக்கால் இன்னும் சரியாகவில்லை. அவர் எப்போதும் நொண்டிநொண்டிதான் நடந்தார். கொஞ்சத் தூரம் நடந்தாலும் பயங்கரமான வலி. உட்கார்ந்து, ஓய்வெடுத்து அதன்பின் நடந்து உட்கார்ந்துதான் நடக்க வேண்டியிருந்தது. தொழிற்சாலையில் வேலைபார்த்த பெண்கள் அவரைத் தாத்தா என்றழைத்தார்கள். இத்தனை பிரச்சினைகள் இருந்ததால், “நான் எப்படி ஒரு மிஷனரியாக முடியும். மிஷனரிப் பயிற்சிக்காகச் செல்லக்கூடியவர்களில் நான்தான் மிகவும் பயனற்றவனாக இருக்க முடியும்,” என்று அவர் நினைத்தார். மிஷனரிப் பயிற்சிக்காக வேதாகமக் கல்லூரிக்குச் செல்ல முடிவுசெய்த அவருடைய சில நண்பர்களை அவருக்குத் தெரியும். அவர்களோடு தன்னை ஒப்பிட்டுப்பார்த்து அவர் சிரித்தார். நிலைமை இப்படி இருந்தபோதும், தனக்குள் இப்படிப்பட்ட எண்ணங்கள் எழுந்தபோதும், தான் ஒரு மிஷனரியாகச் செல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார். ஏனென்றால், அதுதான் தான் செய்ய வேண்டிய காரியம் என்று தேவன் உணர்த்துவதாக நினைத்தார். ஆனால், அவர் தன்னை நம்பவில்லை. ஏனென்றால், “ஒருவேளை இது இன்னொரு சாகசம் என்று நான் நினைப்பதால் மிஷனரியாக விரும்புகிறேனோ!” என்று அவர் நினைத்தார். எனவே, என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை.
ஒரு நாள் அவர் தன் ஊருக்கு வெளியே ஒதுக்குபுறமான அழகான ஓர் இடத்துக்குச் சென்று ஜெபிக்க ஆரம்பித்தார். அக்கம்பக்கம் யாரும் இல்லாததால் அவர் உரத்தசத்தமாய் ஜெபித்தார். “தேவனே, நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர் என்று எனக்குச் சொல்வீரா?” என்று ஊக்கமாய் ஜெபித்தார். அப்போது, “ஆம், நான் சொல்வேன்,” என்று தேவன் சொல்வதுபோல் உணர்ந்தார். ஒவ்வொரு முறையும் அவர் இப்படிச் ஜெபித்தபோது தேவன் “ஆம்” என்றே பதில் சொன்னதுபோல் உணர்ந்தார். எனவே, ஆண்ட்ரூ, “ஆண்டவரே, நான் எங்கு போக வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ, நான் அங்கு போக ஆயத்தமாயிருக்கிறேன்,. அதற்கு அடையாளமாக நான் இப்போது எழுந்து நிற்பேன்,” என்று சொல்லி எழுந்து நின்று, “நான் உமக்குக் கீழ்ப்படிவேன் என்பதற்கு நிரூபணமாக நான் இப்போது ஓர் அடி எடுத்து வைப்பேன்,” என்று சொல்லி ஓர் அடி எடுத்து வைத்தார். “ஆண்டவரே, இது நான் உமக்குக் கீழ்ப்படிவேன் என்பதற்கு அடையாளம். நான் உமக்கு ஆமென் என்று சொல்வேன்,” என்று சொன்னார். அவர் நடக்கத் தொடங்கினார். அப்போது அவருடைய கணுக்காலில் ஏதோ உடைவதுபோன்ற சத்தம் கேட்டது. காலில் பயங்கரமான வலி ஏற்பட்டது. அவர் இன்னொரு அடி எடுத்து வைத்து வீட்டிற்கு நடையைத் தொடங்கினார். திடீரென்று தன் கணுக்கால் இயல்பான நிலைக்கு வந்துவிட்டதை அவர் உணர்ந்தார். அவர் தன் முழு எடையையும் கணுக்கால்மீது வைத்தார். அப்போதும் கணுக்கால் வலிக்கவில்லை. தான் தேவனுக்குக் கீழ்ப்படிந்து ஓர் அடி எடுத்து வைத்தபோது தேவன் தன் கணுக்காலைச் சுகமாக்கினார் என்று அவர் உணர்ந்தார்.
அவர் மிஷனரியாகச் செல்வதற்காக வேதாகமக் கல்லூரிக்குச் சென்று படிக்க முடிவு செய்தார். அவர் 1953இல் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரத்தில் இருந்த WEC Missionary பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். இந்தக் கல்லூரி இறையியலைப் போதித்ததோடு மட்டுமல்ல, பயிற்சிபெறுபவர்களிடம் உண்மையான விசுவாசத்தை உருவாக்கி, அவர்கள் விசுவாசத்தால் வாழவும் பயிற்சி அளித்தது.
ஆண்ட்ரூ வின் வாழ்வில் பல மாற்றங்கள் வேகமாக நடக்க ஆரம்பித்தன. குறிப்பாக அவர் “நான் ஒரு மிஷனரியாக விரும்புகிறேன்,” என்று சொல்லி வேதாகமக் கல்லூரியில் படிக்கச் செல்வதை அவருடைய காதலி விரும்பவில்லை. ஆண்ட்ரூ வேலைபார்த்துக்கொண்டிருக்கும் தொழிற்சாலையில் அவருக்குக் கிடைக்கவிருக்கும் பதவி உயர்வைப் பெற்று, தொடர்ந்து அவர் அங்கு வேலை செய்வார் என்று அவள் நம்பினாள். ஆனால், அவரோ இப்போது தான் ஒரு மிஷனரியாக விரும்புவதாகவும், அதற்காக ஸ்காட்லாந்தில் இருக்கும் வேதாகமக் கல்லூரிக்குச் செல்வதாகவும் பேசத் தொடங்கினார். அவள் ஸ்காட்லாந்தில் இருந்த இந்த வேதாகமக் கல்லூரியைப்பற்றி விசாரித்தாள். அது உண்மையில் எந்த ஸ்தாபனத்தோடோ அல்லது பல்கலைக்கழகத்தோடோ இணைக்கப்படவில்லை. எந்த ஸ்தாபனத்தோடும் இணைக்கப்படாததால் படித்து முடித்தபிறகு எங்கும் பஸ்டராகப் போக முடியாத; பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படாததால், எந்தப் பட்டமும் கிடைக்காது. எனவே, ஆண்ட்ரூ வேதாகமக் கல்லூரிக்குச் செல்லும் எண்ணத்தையோ அல்லது மிஷனரியாகச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தையோ அவள் வரவேற்கவில்லை. ஆண்ட்ரூ வின் பார்வையோ, தரிசனமோ அந்தப் பெண்ணிடம் இல்லை. எனவே, அவள் ஆண்ட்ரூ விடம், “நீ ஸ்காட்லாந்தில் உள்ள வேதாகமக் கல்லூரிக்குச் சென்றால், நீ ஒரு மிஷனரியாக விரும்பினால், இதுதான் நாம் கடைசியாகப் பேசுகின்ற, பார்க்கின்ற நேரம். என்னை நீ மறந்து விடு,” என்று சொன்னாள். அவளுடைய இந்த முடிவு ஆண்ட்ரூ வுக்கு பயங்கரமான ஓர் அடி. அவர் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அவள் அவருக்குப் பல வழிகளில் உதவியாக இருந்தாள். அவருடைய கிறிஸ்தவ வாழ்வில் அவரை இக்கட்டான நேரங்களில் ஊக்குவித்தாள். அவளைத் திருமணம்செய்து மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கையைப்பற்றி அவர் கோட்டை கட்டி வைத்திருந்தார். மனக் கோட்டை உடைந்தது. கனவு கலைந்தது. அவர் மிகவும் சங்கடப்பட்டார். ஆனால், தேவனுடைய அழைப்பா அல்லது காதலியா என்ற கேள்வி எழுந்தபோது தேவனுடைய அழைப்புக்கு உண்மையாக இருக்க முடிவுசெய்தார். தேவன் தன்னை அழைப்பதையும், தேவனுக்குக் கீழ்ப்படியும்போது அவர் தருகிற ஆசீர்வாதத்தையும் அவர் உறுதியாக நம்பினார், அறிந்திருந்தார். தேவன் தன்னை ஒரு மிஷனரியாக அழைக்கிறார் என்றும், அதற்காகத் தான் கிளாஸ்கோவுக்கு வேதாகமக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றும் அவருக்குத் தெரியும். எனவே, கனத்த இதயத்தோடு அவர் பிரிய முடிவெடுத்தார். தேவனுக்குக் கீழ்ப்படிவதற்காகப் பெரிய விலை கொடுக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டார்.
அவர் வேதாகமக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1955இல், அவர் படித்து முடிக்கும் நேரத்தில், ஒரு நாள், போலந்தின் வார்சாவில் நடக்கவிருந்த ஐந்தாவது உலக வாலிபர் பெருவிழாவைப்பற்றிய ஒரு பெரிய இரண்டு பக்க விளம்பரத்தை ஓர் இதழில் பார்த்தார். அது ஒரு கம்யூனிச நாடு. அங்கு நாடகவிருந்தது கம்யூனிச மாநாடு. கிழக்கு ஐரோப்பா முழுவதும் நடக்கவிருந்த இந்த வாலிபர் விழாக்கள் அப்போது ஒரு புதிய நிகழ்வு. யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்கள். எனவே, ஆண்ட்ரூ, “நான் ஒரு கிறிஸ்தவன், நான் கலந்துகொள்ளலாமா?” என்று கேட்டு அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ஒரு வாரத்திற்குள் அவருக்குப் பதில் வந்தது, அதில், “ஆம், எங்கள் வாலிபர் விழாவிற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். நாங்கள் உங்களை அன்போடு வரவேற்கிறோம்,” என்று பதில் எழுதியிருந்தார்கள்.
இது மிகவும் அலுவலகரீதியான, அதிகாரப்பூர்வமான அழைப்பு என்பதால் நிறைய ஏற்பாடுகள் செய்யவேண்டியிருந்தன. குறிப்பிட்ட இடங்களில்தான் தங்க வேண்டும்; குறிப்பிட்ட வண்டியில்தான் பயணிக்க வேண்டும் என்பதுபோன்ற நிறைய கட்டுப்பாடுகளும். அவர் வார்சாவுக்குச் சென்றார். 114 நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான வாலிபர்கள் இந்த மாபெரும் உலக வாலிபர் விழாவிற்கு வந்திருந்தார்கள். இந்த மாபெரும் கூட்டத்தைப் பார்த்து அவர் மலைத்தார்; திகைத்தார். எல்லா இடங்களிலும் மக்கள் கம்யூனிசத்தின் நன்மைகளைப் பறைசாற்றும் பதாகைகளுடன் ஊர்வலமாகப் போனதைப் பார்த்து அவர் மிரண்டுபோனார். “தேவன் இல்லை; அவர் இறந்துவிட்டார்” என்று முழங்கிய கடல்போல் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் அவர் மட்டுமே தேவனை விசுவாசித்த ஒரே விசுவாசி.
இது அரசுபூர்வமான ஏற்பாடு என்பதால், பல கட்டுப்பாடுகள் இருந்தன. எனினும், ஆலயம் எங்கிருக்கிறது என்று அறிய முனைந்தார். யாரும் அவரிடம் எதுவும் சொல்லவில்லை அல்லது யாருக்கும் எதுவும் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவில்லை. ஒரு கிறிஸ்தவப் புத்தகக் கடைஇருக்கும் இடத்தை ஒருவர் அவருக்குச் சொன்னார். அவர் அங்கு சென்று பார்த்தபோது, புத்தகக் கடை மூடியிருந்தது. அதன் உரிமையாளர் விடுமுறையில் சென்றுவிட்டதாகக் கேள்விப்பட்டார். ஒருநாள் அவர் ஊரைச் சுற்றிப்பார்க்கப் போனபோது, ஓர் ஆலயத்தைப் பார்த்தார். அது ஒரு பெரிய கட்டிடம். ஒரு ஞாயிற்றுக்கிழமை யாருக்கும் தெரியாமல் அந்த ஆலயத்துக்குப் போனார். அங்கு மக்கள் நிறையப் பேர் இருந்தார்கள். இருக்க இடம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மக்கள் கூட்டம். உண்மையாகவே அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். அவர் இதைக் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை. போலந்து ஒரு கம்யூனிச நாடு. எனவே, “கிறிஸ்தவர்களுக்கு முழுமையான சுதந்திரம் இருக்காது, நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும்,” என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் இங்கு ஒரு ஆலயம் இருக்கிறது; அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்டத்தின் முடிவில், அவர் போதகரிடம் பேசினார். போதகர், “ஆம், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் இங்கு சுதந்திரமாகத்தான் இருக்கிறோம். நாங்கள் கூட்டங்கள் நடத்தலாம்; மக்கள் வரலாம். ஆனால், நாங்கள் அரசாங்கத்தோடு கொஞ்சம் சமரசம் செய்யவேண்டும். நாங்கள் எங்கள் விருப்பப்படி பேசமுடியாது. கட்சி அங்கீகரிக்கும் விஷயங்களைமட்டும்தான் பேச வேண்டும். இப்படி நடந்தால், எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்றார். எனவே, “போலந்தில் சபை சுதந்திரமாக இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் கிறிஸ்தவர்கள் சுதந்திரமாக இல்லை. கட்சி எப்போதும் அவர்களைக் கண்காணித்துக்கொண்டேயிருக்கிறது,” என்று அவர் புரிந்துகொண்டார்.
அந்த ஆலயத்தில் இருந்தவர்கள் அவருக்கு இன்னொரு சபையின் முகவரியைக் கொடுத்தார்கள். அவர் அந்த ஆலயத்துக்குச் சென்றார். அந்த சபையில் எல்லாரும் வயதானவர்கள். வாலிபர்களோ, குழந்தைகளோ இல்லை. சரி, இந்தச் சபைக்குப் போவதால் எந்தப் பயனும் இல்லை என்பதால் அடுத்த வாரம் அவர் வேறொரு சபைக்குச் சென்றார். போன இடங்களிலெல்லாம் மக்கள் பல்வேறு சபைகளின் முகவரிகளைக் கொடுத்தார்கள். எல்லா இடங்களும் ஒரே மாதிரியே இருந்தன. சபைகள் இருந்தன. அங்கு வயதானவர்கள் இருந்தார்கள். வாலிபர்களோ, குழந்தைகளோ இல்லை. அரசியல் சார்ந்த விஷயங்களைப் பேசினார்கள். எல்லாரும் பேசுவதற்குப் பயப்பட்டார்கள். அவர்களை யாரோ எப்போதும் கவனித்துக்கொண்டேயிருந்தார்கள். அவர் போலந்தில் இருந்த கடைசி நாளில், பொழுது விடியும்முன்பே வெகு சீக்கிரமாக எழுந்தார். அவர் தான் போய்வந்த பல்வேறு சபைகளைப்பற்றியும், அங்கு சந்தித்த பல்வேறு மக்களைப்பற்றியும், அங்குள்ள நிலைமையைப்பற்றியும் சிந்தித்து, ஜெபித்தார்.
ஜெபித்து முடித்துவிட்டு அவர் வெளியே போனார். தெருவில் நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, கொஞ்சத்தூரத்தில் அணிவகுப்பு சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையைநோக்கிப் பார்த்தார். அந்தத் திசையில் திரளான வாலிபர்கள் அணிவகுத்து வருவதை பார்த்தார்.
வாலிபர்களின் திருவிழாவின் கடைசி நாளில் நிறைவாக அந்தப் பெருவிழாவில் கலந்துகொண்ட வாலிபர்கள் தெருக்களில் வெற்றி அணிவகுப்பு வந்துகொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான வாலிபர்கள் சிவப்பு நிற கழுத்துப்பட்டை அணிந்திருந்தார்கள்; எல்லாரும் ஒருமித்து கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். “மனிதனே அவனுடைய எஜமான்; எதிர்காலம் அவனுடைய கையில்,” என்று உரத்த குரலில் ஓங்கி முழங்கினார்கள். அணிவகுப்பைப் பார்ப்பதும், முழங்குவதைக் கேட்பதும் பிரமிப்பாக இருந்தது. “இந்த கம்யூனிஸ்ட்கள்தான் இந்த சகாப்தத்தின் புதிய நற்செய்தியாளர்களோ!” என்று அவர் வியந்தார். இந்த வாலிபர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களாகவே முன்வந்து கலந்துகொண்டார்கள். இந்த வாலிபர்கள் கம்யூனிசத்தின் பயன்களை உண்மையாகவே நம்பினார்கள். “தேவன் என்று ஒருவர் இல்லை; அவர் இருந்திருந்தால் இப்போது இல்லை; ஏனென்றால் அவர் ஏற்கெனவே செத்துவிட்டார். மனிதன்தான் அவனுடைய எஜமான்,” என்ற அவருடைய முழக்கங்கள் அவர்களுடைய மனப்பாங்கை வெளிப்படுத்தின. அவர்களைப்பொறுத்தவரை மனிதன்தான் அவனுக்குக் கடவுள்.
அந்த மாபெரும் அணிவகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தபோது,“நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை,” என்ற வசனம் அவருடைய நினைவுக்கு வந்தது. இந்த வசனம் வேதாகமத்தில் எங்கு இருக்கிறது என்று அப்போது அவருக்குத் தெரியாது. இது தேவன் தனக்குச் சொல்ல விரும்பியது என்று அவர் புரிந்துகொண்டார். பின்னர் அந்த வசனம் வேதாகமத்தில் எங்கு இருக்கிறது என்று தெரிந்துகொண்டார். அது மட்டும் அல்ல. இதுதான் தான் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்றும் அவர் புரிந்துகொண்டார். இதுதான் தன் மிஷன். வெளி உலகத்துக்குத் தங்கள் கதவுகளை அடைத்துக்கொள்கிற கம்யூனிச நாடுகளில்தான் தன் மிஷனரிப் பணியைச் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று அவர் புரிந்துகொண்டார். அங்குள்ள சபைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று அவர் உணர்ந்தார். சபைகள் ஆளும்கட்சியோடு சமரசம் செய்துகொள்வதையும், விசுவாசிகள் பயத்தோடு வாழ்வதையும் அவர் நேரடியாகப் பார்த்திருந்தார்.
ஆனால், “உலகெங்குமிருந்து ஏறக்குறைய 10 கோடி வாலிபர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்காகவும், கம்யூனிச சித்தாந்தத்தைப் பரப்புவதற்காகவும் முன்வந்திருக்கிறார்கள். இந்த உலக அமைப்பில், தனியொரு மனிதனாக நான் என்ன செய்ய முடியும்?” என்று அவர் நினைத்தார். அந்த நேரத்தில் பொதுவாக அனைவரும் கம்யூனிசத்தைத் தீவிரமாக ஆதரித்தார்கள், ஏற்றுக்கொண்டார்கள். “குறைந்த கல்வியும், அனுபவமும் உள்ள நான் என்ன செய்ய முடியும்?” என்று அவர் நினைத்தார். இப்படிப்பட்ட எண்ணம் வந்தபோது, அன்றொருநாள் காட்டில் தனியாக ஜெபித்தபோது தான் தேவனுக்குச் சொன்ன பதிலை அவர் நினைத்துப்பார்த்தார். “தேவன் என்ன செய்யச் சொன்னாலும் செய்வேன் என்று அவருக்குச் சொன்னேனே!” என்ற எண்ணம் தோன்றியது. “எத்தனை கோடிப்பேர் இருந்தாலும் சரி, அவர்களோடு தேவன் இல்லாதவரை, தேவனை உடைய ஒரேவொரு மனிதன்தான் பெரும்பான்மை,” என்று அவர் புரிந்துகொண்டார்.
அந்த நேரத்தில், இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலகமெங்கும் கம்யூனிசம் காட்டுத் தீபோல் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. முதலில், மேலோட்டமாகப் பார்த்தால் சுதந்திரம் இருந்ததுபோல் ஒரு தோற்றம். ஆனால், அடியில் பார்த்தால் அங்கு சுதந்திரம் இல்லை. கட்சியின் கொள்கைகளை ஏற்க மறுத்த, அவர்களோடு சமரசம்செய்துகொண்டு அரசியல் செய்திகளைப் பேச மறுத்த பாஸ்டர்கள் திடுதிப்பென்று காணாமற் போனார்கள். ஆம், அவர்களுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. யாரும் கம்யூனிச ஆட்சியைக் கேள்வி கேட்க முடியவில்லை. வேதாகமம் கிடைக்கவில்லை. கிறிஸ்தவப் புத்தக நிலையங்கள் மூடப்பட்டன. வேதாகமத்தை வைத்திருந்தவர்களும் பயந்து நடுங்கினார்கள். ஒருவன் ஒரு புத்தகக் கடைக்குச் சென்று வேதாகமம் வாங்கினால், அதன்பிறகு அவன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சபைக்குப் போகிறானா அல்லது வேறு எங்காவது போகிறானா என்று உன்னிப்பாகக் கவனித்தார்கள், கண்காணித்தார்கள். பல வேளைகளில் அவனைக் கைதுசெய்து விசாரித்தார்கள். பல வழிகளில் அவன் துன்புறுத்தப்பட்டான். கிறிஸ்தவர்கள் நாட்டுப்பற்றவர்கள் என்று அரசு கருதியது. கிறிஸ்தவன் நாட்டு முன்னேற்றத்திற்கு எதிரி, தடை என்று அரசு கருதியது. விசுவாசிகளுக்கு வேலை கிடைக்கவில்லை. கிறிஸ்தவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் மூளைச்சலவை செய்யப்பட்டார்கள். “தேவனை நம்பும் கிறிஸ்தவர்கள் முட்டாள்கள், அறிவிலிகள், படிப்பறிவில்லாதவர்கள். வயதான கிழவர்கள்தான் தேவனை நம்புகிறார்கள். அவர்கள் அடிப்படைவாதிகள்; முன்னேற்றத்தை விரும்பாதவர்கள், புரிந்துகொள்ளாதவர்கள், மதவாதிகள்,” என்று குழந்தைகளுக்குக் கற்பித்தார்கள். எனவே, வேதாகமத்தைப் படிக்கின்ற, சபைக்குப் போகின்ற, தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகின்ற பெற்றோருக்கு எதிராக அவர்களுடைய பிள்ளைகள் எழும்பினார்கள். கிறிஸ்தவப் பெற்றோரின் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். கிறிஸ்தவர்களுடைய வியாபாரங்கள் மூடப்பட்டன. கிறிஸ்தவர்கள் வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்டார்கள்.
அந்த நாட்களில் கம்யூனிசம் ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது, ஆழமாகக் காலூன்றியது. ஆண்ட்ரூ போலந்துக்குச் சென்றுவந்தபிறகு பல்வேறு நாடுகளுக்குச் சென்றுவந்தார். அவர் போய்வந்த கம்யூனிச நாடுகளில் சபைகளின் நிலைமையையும், கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களையும் பார்த்தார். அங்கு வேதாகமங்கள் கிடைப்பது மிகக் கடினம் என்பதை அவர் நேரில் கண்டார். அவர் செக்கோஸ்லோவாக்கியாவில் சென்றபோது, ஒரு சபையில் ஒரு பெண் தன் வேதாகமத்தைத் தன் தலைக்குமேல் தூக்கிவைத்துப் பிடித்துக்கொண்டிருந்தாள். அவள் ஏன் அப்படிச் செய்கிறாள் என்று ஆண்ட்ரூ வுக்குப் புரியவில்லை. ஆனால், கொஞ்ச நேரத்தில் புரிந்துகொண்டார். பின்வரிசையில் உட்கார்ந்திருந்தவர்கள் முடிந்தால் அதைப் பார்த்து வாசிக்கலாம் என்பதற்காக அவள் அப்படிச் செய்தாள். ஆம், ஒன்றிரண்டு பேரிடம் மட்டுமே வேதாகமம் இருந்தது. சபைகளில் போதகர்கள் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோதே அவர்களுடைய வேதாகமங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பல சபைகளில் போதகர்கள் வேதாகமம் இல்லாமலேதான் பிரசங்கித்தார்கள். ஒரு சபையில் ஒரோவொருவரிடம் மட்டுமே வேதாகமம் இருந்தது. கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் வேதாகமத்தின் பக்கங்களை ஆளுக்கு ஒரு புத்தகமாகக் கிழித்து வைத்துக்கொண்டு கையால் பிரதி எடுத்துக்கொண்டிருந்தார்கள். எனவே, கம்யூனிச நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு வேதாகமங்களைக் கொடுத்தாகவேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
அந்த ஆண்டின் பிற்பகுதியில், ஆண்ட்ரூ சித்திரவதைசெய்யப்படும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவளிக்க open doors என்ற ஓர் அமைப்பை நிறுவினார். இதன்மூலம் அவர்கள் வேதாகமங்களையும், கிறிஸ்தவ இலக்கியங்களையும் கம்யூனிச ஐரோப்பாவுக்குக் கடத்துவதில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
அவருடைய ஊரில் வாழ்ந்த வெட்ஸ்ட்ராஸ் குடும்பத்தார் ஆண்ட்ரூ வுக்குத் தங்கள் காரைக் கொடுத்தார்கள். அவர்கள் ஜெபித்துக்கொண்டிருந்தபோது தேவன் அந்தக் காரை ஆண்ட்ரூவுக்குக் கொடுக்கச் சொன்னார். அது மிகச் சிறிய கார், மிக மிக நல்ல கார் என்றும் சொல்ல முடியாது. அது ஒரு சிறிய நீலநிற பீட்டில் கார். இந்த சிறிய நீல பீட்டில் கார்மூலம் அவர் கம்யூனிச ஐரோப்பா முழுவதும் சென்று எல்லாச் சபைகளுக்கும் வேதாகமத்தை விநியோகிக்க முடிவுசெய்தார்.
அவருடைய பாரத்தை அறிந்த மக்கள் அவருக்குப் பெட்டி பெட்டியாக நூற்றுக்கணக்கான வேதாகமங்களைக் கொடுத்தார்கள். அத்தனை வேதாகமங்களை இந்தச் சிறிய காரில் எப்படிக் கொண்டுபோக முடியும்? இருக்கைகளுக்கு அடியில், தூங்குவதற்குப் பயன்படுத்தும் பையில் என எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஒளித்துவைத்தார். மீதியிருந்தவைகளை அவர் தன் சூட்கேஸில் வைத்துக்கொண்டார். நாடுகளின் எல்லைகளில் எந்த வழியில் போனால் குறைந்தபட்ச சோதனைச் சாவடிகள் இருக்கும் என்பதைக் கண்டுபிடித்து அந்த வழியாக நாட்டுக்குள் சென்றுவிடலாம் என்று அவர் நினைத்தார்.
அவருடைய காரைப் பரிசோதிக்கும் நேரம் வந்தது. அவர் காரைவிட்டு இறங்கி ஓரமாகப் போய் நின்றார். காவலர்கள் வந்தார்கள். எந்தப் பிரச்சினையும் இருப்பதுபோல் ஆண்ட்ரூ காட்டிக்கொள்ளவில்லை. காவலர்கள் இருக்கைகளுக்குக் கீழே பார்த்தார்கள். அவருடைய முகாம் கியரைப் பிடித்துத் தரையில் குத்தினார்கள். அவருடைய தூங்கும் பையைத் திறந்து பார்த்தார்கள். காருக்குள் இருந்த எல்லாவற்றையும் எடுத்து வெளியே தரையில் தூக்கிப்போட்டார்கள். கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பதுபோல் பார்த்தார்கள். அவருடைய முகாம் அடுப்பு, காபி குடுவை என ஒன்றையும் விடாமல் துருவினார்கள். பிறகு இன்னொருவன் சூட்கேஸை எடுத்து காரின் பானட்டின்மீது வைத்துத் திறந்தான். தூரத்திலிருந்து பார்த்தாலே அங்கு வேதாகமங்கள் வரிசையாக இருப்பது தெரிகின்றன. காவலர்கள் விரக்தியில் சூட்கேஸைத் தூக்கி உள்ளே எறிந்துவிட்டு, “சரி, உன்னுடைய எல்லாப் பொருட்களையும் எடுத்து வை,” என்றார்கள். கர்த்தர் தன் ஜெபத்தைக்’கேட்டு அவர்களுடைய கண்களைக் குருடாக்கினார் என்று ஆண்ட்ரூ புரிந்துகொண்டார். பார்க்கும் கண்களை அங்கு இருந்த வேதாகமங்களைப் பார்க்காதவாறு தேவன் அவர்களுடைய கண்களைக் குருடாக்கினார். இது முதன்முறை. அடுத்த 20 வருடங்கள் அவர் இவ்வாறு கம்யூனிச நாடுகளுக்கெல்லாம் வேதாகமங்களைக் கடத்தினார், ஒருமுறைகூட ஒரு வேதாகமத்தைக்கூட ஒருவரும் பறிமுதல் செய்யவில்லை. அற்புதம். தேவன் மீண்டும் மீண்டும் அற்புதம் செய்துகொண்டேயிருந்தார். தேவன் தன் வேதாகமங்களைப் பாதுகாத்தார். அவர் கொண்டு சென்ற எல்லா வேதாகமங்களையும் ஒன்று தவறாமல் எல்லாருக்கும் விநியோகித்தார்.
நாட்டுக்குள் நுழைவதற்கு சோதனைச் சாவடிகள் ஒரு பெரிய சவாலாக இருந்தன. ஆனால், வேறு பல சவால்களும், சோதனைகளும் இருந்தன. சோதனைச் சாவடிகள் ஓர் ஆரம்பம். இன்னொரு சவால் என்னவென்றால், நாட்டில் யாரையும் நம்பமுடியவில்லை. யாரையும் நம்பி எதையும் சொல்லவோ, கேட்கவோ முடியாது. எடுத்துக்காட்டாக, ஒருவரைச் சந்திக்க வழி கேட்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். “நான் பாஸ்டர் ஜோவைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவருடைய முகவரி உங்களுக்குத் தெரியுமா?” என்று யாரிடமும் கேட்கமுடியாது. ஏனென்றால், நீங்கள் யாரிடம் அந்தப் பாஸ்ட்ரைப்பற்றி விசாரித்தீர்களோ, அவர் ஓர் இரகசியக் காவலராக இருக்கலாம். அவரும் ஒருவேளை அந்தப் பாஸ்டரைத் தேடிக்கொண்டிருக்கலாம். அந்த அளவுக்கு நாடுகள் ஆபத்தானவை. நீங்களாகவே வழியையும், ஆட்களையும் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். மிகவும் இரகசியமாகச் செயல்பட வேண்டும்.
ஆண்ட்ரூ ஒரு நாட்டில் மக்களைச் சந்திப்பதற்கு முன், “நான் உங்களைச் சந்தித்து சில வேதாகமங்கள் தர விரும்புகிறேன். உங்களை இந்த இடத்தில் இந்த நேரத்தில் சந்திக்க முடியுமா?” என்று கடிதமும் எழுத முடியாது. ஏனென்றால், எல்லாக் கடிதங்களும் தணிக்கைசெய்யப்பட்டு, அதன்பின்தான் பட்டுவாடா செய்யப்படும். எனவே, இடங்களைக் கண்டுபிடிப்பதும், சரியான ஆட்களைத் தொடர்புகொள்வதும், அடையாளம் காண்பதும் பெரிய பிரச்சினையாக இருந்தது.
டச் வேதாகமச் சங்கத்துக்கு ஐரோப்பா முழுவதும் இருந்த நிறைய விசுவாசிகளையும், அநேகப் போதகர்களையும், தலைவர்களையும் தெரியும். யூகோஸ்லாவியாவில் கிறிஸ்டியன் என்ற ஒருவர் இருந்தார். அவர் போதகரா அல்லது தலைவரா என்று தெரியவில்லை. யூகோஸ்லாவியாவில் இருந்த அவருடைய முகவரியை டச் வேதாகமச் சங்கம் ஆண்ட்ரூவிடம் கொடுத்து, “அவரைச் சந்தித்து இந்த வேதாகமங்களை அவரிடம் கொடுங்கள். அவரை எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் நம்பத்தக்கவர். அவரை நேரடியாக அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசுங்கள்,” என்று சொன்னார்கள். ஆண்ட்ரூ, “நான் ஒரு டச்சுக்காரன். நான் யூகோஸ்லாவியாவைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறேன். உங்கள் நாட்டுக்கு வரும்போது நான் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்,” என்று மிகவும் கவனமாக அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அவருடைய கடிதத்துக்கு கிறிஸ்டியனிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால், தான் எப்படியும் யூகோஸ்லாவியாவுக்குப் போக வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்று ஆண்ட்ரூ உணர்ந்தார். அவர் யூகோஸ்லாவியாவுக்குப் போனார். அந்தச் சகோதரன் வாழ்ந்த ஊருக்குப் போனார். இதற்கிடையில் கிறிஸ்டியன் வீடு மாறிவிட்டார். இது ஆண்ட்ரூ வுக்குத் தெரியாது. கிறிஸ்டியன் இருந்த வீட்டில் இப்போது வேறு ஆட்கள் குடியிருந்தார்கள். ஆண்ட்ரூ எழுதிய கடிதம் தற்போது அங்கு குடியிருப்பவர்கள் கையில் கிடைத்தது. அதில் இருந்த பெயரைப் பார்த்ததும் அது அங்கு முன்பு குடியிருந்தவரின் பெயர் என்பதைப் புரிந்துகொண்டார். எனவே, அவர் அதை தபால் நிலையத்திற்கு எடுத்துச்சென்று அவர்களிடம் விவரத்தைச் சொல்லி அவர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். தபால் நிலையத்தில் அதை உடனே கிறிஸ்டியனின் புதிய முகவரிக்கு அனுப்பாமல் அங்கேயே கிடப்பில் போட்டுவிட்டார்கள். கொஞ்ச நாட்களுக்குப்பிறகு ஒரு நல்லவன் கண்ணில் அந்தக் கடிதம் பட்டது. அவர் கிறிஸ்டியனின் புதிய முகவரியை எழுதி தபாலில் சேர்த்துவிட்டார். எனவே, பல வாரங்கள் கழித்து கிறிஸ்டியனின் கையில் கடிதம் வந்தடைந்தது. “இந்த நெதர்லாந்த்காரரை நம்பலாமா? நம்பலாம். சரி, ஆனால், நான் இப்போது என்ன செய்வது? இவரைச் சந்திக்க ஒரே வழி நான் பழைய வீட்டிற்குச் செல்ல வேண்டும். ஆனால், இந்தக் கடிதம் பல வாரங்கள் தாமதமாகி வந்திருக்கிறது. அவர் வீட்டுக்கு வந்து என்னைப்பற்றி விசாரித்துவிட்டு, என்னைக் காணாமல் ஏமாற்றத்தோடு திரும்பிப்போயிருப்பாரோ! ஆனால், இந்தக் கடிதத்தில் எந்தத் தேதியும், கிழமையும் இல்லை. எப்போது வருகிறார் என்று ஒன்றும் சொல்லவில்லை. சரி, இன்று நான் ரயிலைப் பிடித்து அங்கு போவேன்,” என்று முடிவுசெய்து பழைய வீட்டுக்குக் கிளம்பினார். அவர் தன் வீட்டை நோக்கி நடந்துபோய்க் கொண்டிருந்தபோது, “இது ஆபத்தானது. நான் இப்போது அந்த வீட்டில் குடியிருப்பவர்களிடம் போய் ‘ஒரு டச்சுக்காரர் என்னைத் தேடி வந்தாரா’ என்று கேட்க முடியாது. அப்படிக் கேட்டால், அவர்களுக்கு என்மேல் சந்தேம் வரும். அல்லது வீட்டுக்கு வெளியே காத்திருக்கலாமா? அப்படி நான் நின்றால் போகிற வருகிற எல்லாருக்கும் என்மேல் சந்தேகம் வரும்,” என்று நினைத்தார். இந்தக் காரியங்களெல்லாம் ஆண்ட்ரூவுக்கு தெரியாது. அவருடைய குட்டி நீல நிற கார் தெருவில் வந்து கொண்டிருந்தது. கிறிஸ்டியன் தனக்குள் நினைத்தபடி, தன் பழைய வீட்டின்முன் நின்றார்; குட்டி நீல நிற காரும் வந்து நின்றது. ஆண்ட்ரூ கிறிஸ்டியனைப் பார்த்தார், கிறிஸ்டியன் ஆண்ட்ரூ வைப் பார்த்தார். இருவரும் ஒரு வார்த்தை பேசாமலே ஒருவரையொருவர் உடனடியாகப் புரிந்துகொண்டார்கள். ஆண்ட்ரூ வை நம்பலாம் என்று கிறிஸ்டியன் அந்தக் கணத்தில் புரிந்துகொண்டார். ஏனென்றால், தேவனே இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறார் என்று கிறிஸ்டியன் நம்பினார். கிறிஸ்டியனின் துணையோடு ஆண்ட்ரூ அங்கு பல விசுவாசிகளைச் சந்தித்தார். கிறிஸ்டியனுக்குத் தெரிந்த பல்வேறு சபைகளின் பாஸ்டர்கள், விசுவாசிகள் எல்லாரையும் ஆண்ட்ரூ சந்திக்க கிறிஸ்டியன் ஏற்பாடு செய்தார். அவருக்கு உதவ ஒரு மொழிபெயர்பாளரையும் ஏற்பாடுசெய்தார். எனவே, அந்த நாட்டில் அவர் கொஞ்சம் வசதியாகப் பயணம் செய்தார். தான் சந்தித்த எல்லாருக்கும் நெதர்லாந்துப் பரிசுத்தவான்களின் அன்பையும், வாழ்த்துதலையும் தவறாமல் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் யூகோஸ்லாவியா அரசாங்கம் ஒரு தெளிவான உத்தியைப் பின்பற்றியது. அந்த அரசு கிறிஸ்தவக் குழந்தைகளையும், வாலிபர்களையும் குறிவவைத்துத் தாக்கத் தொடங்கினார்கள். உடல்ரீதியான தாக்குதல் அல்ல, உள்ள ரீதியான தாக்குதல். மூளைச்சலவை செய்யத் தொடங்கினார்கள். பள்ளி, கல்லூரிகளில் என எல்லா இடங்களிலும, “மதம் ஒரு விஷம்,” என்று அரசு கிறிஸ்தவத்துக்கு எதிராகத் தொடர்ந்து கற்பித்தது, பிரச்சாரம் செய்தது. பெற்றோர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுடைய பிள்ளைகளைத் தங்கள் பக்கம் இழுத்தால் போதும் என்ற உத்தியைக் கையாண்டார்கள். அவர்களுடைய உத்தி வேலைசெய்தது. பிள்ளைகள் அரசு பக்கம் சாய்ந்தார்கள். பெற்றோர்களுக்கு எதிராகத் திரும்பினார்கள். கிறிஸ்தவர்களாகிய தங்கள் பெற்றோர்கள் அடிமுட்டாள்கள் என்றும், மூடநம்பிக்கையுள்ளவர்கள் என்றும், படிப்பறிவில்லாதவர்களே இவைகளையெல்லாம் நம்புவார்கள் என்றும் கருதத் தொடங்கினார்கள். குடும்பங்கள் சிதைந்து சின்னாபின்னமாகின. அரசுக்கு வெற்றி. பிள்ளைகள் தங்கள் சொந்தப் பெற்றோர்களைக் காட்டிக்கொடுத்தார்கள். பெற்றோர்களால் தங்கள் பிள்ளைகளை நம்பமுடியவில்லை. ஏனென்றால், அவர்கள் அரசுக்கு ஆதரவாகச் செய்யப்பட்டார்கள்.
ஆண்ட்ரூ மக்கதோனியாவுக்குச் சென்றார். மக்கதோனியாவில் காரியங்கள் மிகவும் வித்தியாசமாகவும், கடினமாகவும் இருந்தன. அவரால் அநேக சபைகளுக்குச் செல்ல முடியவில்லை. ஒரு நாள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சில விசுவாசிகளுடன் அவர் பேசவேண்டியிருக்கும் என்று அவரிடம் சொன்னார்கள். அவர்கள் புறப்பட்டார்கள். போய்க்கொண்டிருந்தபோது ஒரு வயல்வெளியின் நடுவில் காரை நிறுத்தினார்கள். உடனே ஆண்ட்ரூ, “என்ன? நாம் ஏன் இங்கு நிற்கிறோம்?” என்று கேட்டார். அவரோடு சென்றவர்கள், “ஆம், இது தான் நாம் விசுவாசிகளைச் சந்திக்கும் இடம்,” என்று சொல்லி இருட்டும்வரை அங்கேயே காத்திருந்தார்கள். நன்றாக இருட்டியபிறகு, எல்லாத் திசைகளிலிருந்தும் சிறிய சிறிய விளக்கு வெளிச்சம் வருவதை அவர் பார்த்தார். பல்வேறு கிராமங்களிலிருந்த கிறிஸ்தவர்கள் இருட்டியபிறகு நடந்துவந்து மிகவும் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வயலில் கூடினார்கள். அங்குதான் அவர் அவர்களோடு பேசினார். அவர்கள் தேவனுடைய வார்த்தையை மிகவும் மகிழ்ச்சியோடு கேட்டார்கள். அவர்களிடம் வேதாகமம் இல்லை. 5, 6 கிராமங்களுக்குச் சேர்த்து ஒரேவொரு வேதாகமம் மட்டுமே பொதுவாக இருக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள். எனவே, அவர்கள் முடிந்தவரை அதைக் கையால் எழுதிப் பிரதி எடுத்தார்கள்.
பள்ளிகளில் கிறிஸ்தவக் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டார்கள். ஒருநாள் ஒரு சிறுமி விளையாட்டு மைதானத்தில் மதிய உணவு சாப்பிடும்போது, தன் பழக்கத்தின்படி, தேவனுக்கு நன்றி சொல்லிவிட்டுச் சாப்பிட்டாள். இதைப் பார்த்த ஓர் ஆசிரியர் நேராக அவளிடம் வந்து, அவளை எழுந்து நிற்கச் சொன்னார். “உன் உணவுக்காகத் தேவனுக்கு நன்றி சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்? நீ அரசுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், உனக்கு இந்த உணவைத் தந்தது உன் தேவன் அல்ல; மாறாக, இந்த அரசு. இன்னொருமுறை நீ இப்படிச் செய்தால், நான் உன்னைப்பற்றி அரசாங்கத்துக்குத் தெரிவித்துவிடுவேன்,” என்று கண்டித்தார், மிரட்டினார். ஆனால், அந்தச் சிறுமி அடுத்த நாளும் வழக்கம்போல் தேவனுக்கு நன்றி சொல்லிவிட்டுத்தான் சாப்பிட்டாள். அதனால், அவள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டாள். வேறு எந்தப் பள்ளியிலும் அவள் அனுமதிக்கப்படவில்லை.
ருமேனியாவில் மக்களோடு பேசுவது மிகச் சிரமமாகவும், சிக்கலாகவும் இருந்தது. உள்ளூர்க் கிறிஸ்தவர்கள்கூட ஒருவரையொருவர் நம்பவில்லை. அப்படியிருக்கையில் உள்ளூர்க் கிறிஸ்தவர்கள் ஒரு வெளியூர்காரனை நம்புவார்களா? ருமேனியாவில் உள்ளூர்க் கிறிஸ்தவர்கள் அரசின் சித்திரவைதையைத் தாங்க முடியாமல் ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்தார்கள். எல்லாருக்கும் எல்லார்மேலும் சந்தேகம். எனவே, யாரும் யாரோடும் பேச மாட்டார்கள். பயம். இது அந்தக் கம்யூனிச அரசின் உத்தி. இந்த உத்தியை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்கள். எனவே, அங்கு மக்கள் எல்லாரும் தனித்தனி குகைகளில் வாழ்வதுபோல் வாழ்ந்தார்கள். கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களை நம்பாததற்குக் காரணம் யார் உண்மையான கிறிஸ்தவன் என்று அவர்களால் இனங்காண முடியவில்லை. ஒருவன் தன்னைக் கிறிஸ்தவனாகக் காட்டிக்கொண்டு உண்மையான கிறிஸ்தவர்களைக் கண்டுபிடித்து அவர்களை அரசுக்குக் காட்டிக்கொடுத்தான். அந்த நேரத்தில் ருமேனியாவில் இதுதான் நடந்தது. எனவே, உண்மையான கிறிஸ்தவர்களை அடையாளம் காணவும், சிறைப்படுத்தவும் அரசு அதிகாரிகள் கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் சுற்றித்திரிந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் ஆண்ட்ரூ வால் கிறிஸ்தவர்களைக் கண்டுபிடித்து வேதாகமங்களைக் கொடுக்க முடியவில்லை. அவர் ஒருவரிடம் சென்று, “நான் என் காரில் வேதாகமங்கள் வைத்திருக்கிறேன். உங்களுக்கு வேண்டுமா?” என்று கேட்க முடியாது. ஒன்று அவர் சட்டவிரோதமாக வேதாகமங்களை விநியோகிக்கிறார். இரண்டாவது அவர் விசாரிக்கும் நபர் இரகசியக் காவலராகவோ, அரசின் ஒற்றராகவோ இருக்கலாம். இது உண்மையானால் இவர் மாட்டிக்கொள்வார். மூன்றாவது, அவர் விசாரிக்கும் நபர் உண்மையான கிறிஸ்தவராக இருந்தாலும், அவர் ஆண்ட்ரூ வை எப்படி நம்புவார்? இதுதான் அன்று ருமேனியாவின் நிலைமை.
ஒரு நாள் அவர் ருமேனியாவில் சில தலைவர்களையும், சில போதகர்களையும் சந்தித்தார். அவர்களெல்லாரும் ஒரு மேஜையைச்சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். ஒரு வயதான, பலவீனமான போதகர் இருந்தார். அவர்கள் இவரை நம்பவில்லை. மேலும் சந்தேகத்தைப் போக்க மொழி ஒரு தடையாக இருந்தது. அவர்களுக்கிடையே பொது மொழி இல்லை. மொழிபெயர்ப்பாளரும் இல்லை. எனவே, ஆண்ட்ரூ தான் யார் என்பதையும், தான் வந்திருக்கும் நோக்கத்தையும் தெரிவிக்க முடியவில்லை. “நான் யார் என்று சொல்லலாமா? என்னிடமிருக்கும் வேதாகமங்களை இவர்களிடம் கொடுக்கலாமா? இவர்கள் உண்மையாகவே போதகர்கள்தானா அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களா? அல்லது இவர்களை இங்கு யாராவது கண்காணித்துக்கொண்டிருக்கிறார்களா? என்ன செய்யலாம்?” என்று சிந்தித்துக்கொண்டிருக்கும்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர்கள் உட்கார்ந்திருந்த அந்தச் சிறிய அலுவலகத்தில் ஒரு சிறிய மேசையும், அதின்மேல் ஒரு ருமேனியா வேதாகமமும் இருப்பதைக் கண்டார். அவர் அதை எடுத்து, போதகரின்முன் வைத்தார். பின்னர் அவர் தன் டச்சு வேதாகமத்தை எடுத்தார். அவர் வேதாகமத்தின்மூலம் அவரோடு பேச முடிவுசெய்தார். அவரோடு பேசுவதற்கு அவர் ” சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள்,” என்ற 1 கொரிந்தியர் 16:20யைத் திறந்து காண்பித்தார். அவர் புத்தகம், அதிகாரம், வசனம் ஆகியவைகளை சொன்னார். போதகர் ருமேனியா வேதாகமத்தைத் திறந்து அந்த வசனத்தை வாசித்தார்.
போதகரின் முகம் மலர்ந்தது. போதகர் தன் ருமேனிய வேதாகமத்தைத் திறந்து, “தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்,” என்ற நீதிமொழிகள் 25:25யை வாசித்தார். ஆண்ட்ரூ உடனே “கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலுமுள்ள உம்முடைய அன்பையும் உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு, என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து, உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன்,” என்று பிலேமோன் 4-6யை வாசித்தார். போதகர் பரவசமடைந்தார். அவர் புன்னகையோடு, “சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்,” என்று அடுத்த வசனத்தைச் சுட்டிக்காட்டினார். எனவே, இந்தப் போதகரை நம்பலாம் என்று ஆண்ட்ரூ முடிவுசெய்தார். அவர் தன்னிடமிருந்த நூற்றுக்கணக்கான ருமேனியா வேதாகமங்களை அந்தப் பாஸ்டரிடம் கொடுத்தார். அந்தப் பாஸ்டரால் நம்பமுடியவில்லை. அதைப் பெற்ற கிறிஸ்தவர்களாலும் நம்பமுடியவில்லை. மேலும் இவைகள் இலவசம் என்று சொன்னபோது அவர்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. அவைகளை அவர்கள் தங்கள் மார்போடு சேர்த்து அனைத்துக்கொண்டார்கள். அந்த அளவுக்கு அவர்கள் கர்த்தருடைய வார்த்தையைப் படிக்க விரும்பினார்கள்.
ஆண்ட்ரூ நெதெர்லாந்துக்குத் திரும்பினார். அவர் முன்பு ஒரு சாக்லேட் தொழிற்சாலையில் வேலை பார்த்தார். அங்கு எழுத்தராக வேலை பார்த்த ஒரு விசுவாசப் பெண்ணை அவருக்குத் தெரியும். இருவரும் அங்கு பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார்கள். இருவரும் மீண்டும் ஒருவரையொருவர் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் இருவரும் தங்கள் அழைப்பைப் புரிந்திருந்தார்கள். இருவருடைய பாரமும் ஒன்றே. ஆனால், ஆண்ட்ரூ வின் மனைவியாக இருப்பதற்கு அவர் மிகப் பெரிய தியாகம் செய்ய வேண்டும். ஏனென்றால், ஆண்ட்ரூ வேதாகமங்களைக் கடத்திச் செல்லும்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவர் வெளியூருக்குப் போகும்போது என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளக்கூட வாய்ப்பு இல்லை. மாதக் கணக்கில் தொடர்புகொள்ள முடியாது. இது ஒரு புறம். இன்னொரு புறம், அவருக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம். வாழ்வா சாவா என்ற கேள்வி எப்போதும் தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருந்தது. அவ்வளவு ஆபத்தான வேலை. மூன்றாவது அவருக்கு எந்த வருமானமும் கிடையாது. எந்த ஊதியமும் இல்லாத மிக ஆபத்தான வேலை. நான்காவது, அவரைத் திருமணம் செய்தால், அவள் வாழ்வதற்கு ஒரேவொரு அழுக்கடைந்த அறை மட்டுமே கிடைக்கும். இதை அவரே சொன்னார். ஒருநாள் ஆண்ட்ரூ அந்தப் பெண்ணிடம் போய், “நான் உன்னைத் திருமணம் செய்ய விரும்புகிறேன். நீ சரி என்று சொன்னால் நீ ஒரு பைத்தியக்காரி என்று பொருள். ஆனால், நீ சரி என்று சொல்வாய் என்று நான் நம்புகிறேன்,” என்று முன்மொழிந்தார். அவள் முடிவுசெய்வதற்குள் உடனடியாக ஹங்கேரிக்கு வேதாகமங்களைக் கடத்தும் பணியில் ஈடுபட்டார். கடத்தல் ஆரம்பமானது. பல மாதங்கள். தொடர்புகொள்ள வழியே இல்லை. அவள் நிறையக் காரியங்களைபற்றிச் சிந்தித்துப்பார்த்தாள். ஆண்ட்ரூ வுக்கு சரி என்று சொல்வதா அல்லது இல்லை என்று சொல்வதா என்று சிந்தித்தாள். ஆண்ட்ரூ திரும்பிவந்தபோது அவள் அவருக்கு ஆம் என்று சொன்னாள்.
கம்யூனிச ஐரோப்பாவில் அவர்களுடைய தேனிலவு எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். அவர்களுடைய நிச்சயதார்த்த நாளில், கோரி ஆண்ட்ரூவிடம். “நம் வாழ்கைப் பயணம் எங்கு எப்படிப் போகும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எங்கு போனாலும் சரி, நாம் இருவரும் சேர்ந்து செல்வோம்,” என்றாள். இந்த வார்த்தைகள் அவளுடைய தியாக மனப்பாங்கின் வெளிப்பாடு. அவள் தன் வாழ்நாள் முழுவதும் இந்த வார்த்தைகளுக்கு உண்மையாக இருந்தாள். ஆண்ட்ரூ தன் கடத்தில் பயணத்தினால் பல மாதங்கள் வெளியே இருந்தார். மிகவும் ஆபத்தான வேலை. அவளுக்கு இது மிகவும் கடினமாக இருந்தது. சில நேரங்களில் அவளும் அவரோடு சேர்ந்து சென்றார். சில நேரங்களில் அவளால் சேர்ந்துபோக முடியவில்லை. மிகவும் கடினமான வாழ்க்கை. ஆனால், அவள் அவருடைய ஊழியத்தை மிகவும் உயர்வாக மதித்தாள். அவருடைய பாரத்தைப் பகிர்ந்துகொண்டாள்.
அவர் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தபோது ஒரு காரியத்தைக் கவனித்தார். கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த மொழியில் வேதாகமத்தைப் பார்த்தபோது பரவசமடைந்தார்கள். அவர்களுடைய மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. கம்யூனிச ஐரோப்பா முழுவதும் இப்படிப்பட்ட ஓர் இன்றியமையாத் தேவை இருப்பதையும், அதற்கு முடிவில்லை என்பதையும் அவர் உணர்ந்தார். தன் குட்டிக் காரில் தான் ஒருவன் மட்டும் இதைச் சாதிப்பது சாத்தியமில்லை என்றும் அவர் உணர்ந்தார். இந்த ஊழியத்தைச் செய்வதற்கு இன்னொரு குழுவோ அல்லாது குறைந்தபட்சம் இன்னொரு நபரோ இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் நினைத்தார். அவர் தன் மனைவியிடம் இதைச் சொன்னார். அவர் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். ஏனென்றால், அந்த நேரத்தில், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். ஆண்ட்ரூ கடத்தலில் குறியாக இருந்ததால், அவர் அடிக்கடி வெளியே போய்விட்டார். மனைவி இரண்டு பிள்ளைகளோடு பெரும்பாலும் வீட்டில் தனியாகத்தான் இருந்தார். பிள்ளைகளுடைய பிறந்த நாள்போன்ற எதிலும் அவர் பங்கெடுக்கவில்லை. எனவே, ஒரு பக்கம் அவருடைய வேலைப் பளுவைப் பகிர்ந்துகொள்ளலாம்; இன்னொரு பக்கம், கொஞ்சம் சுயநலம்தான், குடும்பத்தோடு இருக்கலாம். எனவே, இது மிக அற்புதமான யோசனை என்று அவர் நினைத்தார்.
நெதர்லாந்தில் அவர் பல்வேறு கூட்டங்களில் பேசினார். கம்யூனிச ஐரோப்பாவின் நிலைமையையும், தேவையையும் எடுத்துரைத்தார். அவருடைய பேச்சைக் கேட்ட பலர் அவரோடு சேர்ந்து பணியாற்ற மிகவும் ஆர்வத்தோடு முன்வந்தார்கள். முக்கியமாக வாலிபர்கள். “நான் வரலாமா? உங்களுடைய அடுத்த பயணத்தின்போது நான் வருகிறேன். நான் உங்களுடன் சேர்ந்து இந்த வேலையைச் செய்ய விரும்புகிறேன்,” என்று பல வாலிபர்கள் சொன்னார்கள். ஆனால், “சரி, நீ என்னோடு வரலாம். நான் உன்னைத் சேர்த்துக்கொள்கிறேன்,” என்று அவர் யாரிடமும் சொல்லவில்லை. அவரால் சொல்ல முடியவில்லை. அதற்குக் காரணம், சிலர் கம்யூனிச ஐரோப்பாவில் வேதாகமங்களை விநியோகிப்பதை ஒரு சாகசமாக நினைத்தார்கள். எனவே, அவர்களுக்கு வேண்டாம் என்று சொன்னார். சாகசம் ஒருவனை எங்கே கொண்டுபோய் விடும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். இன்னும் சிலர் இரும்புத்திரைக்குப்பின்னால் என்ன நடக்கிறது என்று அறிய விரும்பினார்கள். இன்னும் சிலர், “நாங்களும் கம்யூனிச ஐரோப்பாவில் ஊழியம் செய்தோம்,” என்று தங்களைபற்றிச் சொல்ல விரும்பினார்கள். அவர் இப்படிப்பட்டவர்களைத் தேடவில்லை, எதிர்பார்க்கவில்லை. அவர் உண்மையான வேலையாட்களைத் தேடினார். தேவனுடைய பாரத்தைத் தன் இருதயத்தில் சுமந்துகொண்டிருக்கிற, தனக்குத் தோள்கொடுக்கக்கூடியவரை, தேடினார்.
இறுதியாக, தேவன் ஹான்ஸ் என்ற ஒரு நபரை அவர்களுக்கு உதவியாக அனுப்பினார். ஆம், அவரைத் தங்களோடு சேர்த்துக்கொள்ளுமாறு ஆண்ட்ரூ, கோரி இருவரிடமும் தேவன் தனித்தனியாகப் பேசினார். உண்மையில் ஹான்ஸ் இந்த ஊழியத்துக்கு ஏற்ற நபர்தான் என்று இருவரும் நினைத்தார்கள். ஆனால், மேலோட்டமாகப் பார்த்தால் அவர் இதற்குப் பொருத்தமானவர் இல்லை என்று தோன்றும். ஏனென்றால், முதலாவது அவர் மிகவும் உயரமாவனர். அந்தக் குட்டிக் காரில் அவர் உட்காருவதற்குச் சிரமப்படுவார். இரண்டாவது, அவருடைய தோற்றமும் கொஞ்சம் விகாரமாக இருக்கும். மூன்றாவது, அவர் ஜெர்மன் மொழியைக் கடித்துக் குதறுவார். நான்காவது, அவருக்குக் கார் ஓட்டத் தெரியாது. யார்யாரோ அவருக்குக் கார் ஓட்டக் கற்றுக்கொடுக்க முயன்றார்கள். தோல்விதான் மிச்சம். ஐரோப்பா முழுவதும் காரில் சென்று வேதகமங்களை விநியோகிப்பதுதான் முக்கியமான வேலை. கார் ஒட்டவே தெரியாத ஒருவரை எப்படிச் சேர்த்துக்கொள்ள முடியும்? எனவே, மேலோட்டமாகப் பார்த்தால் அவர் இந்தப் பணிக்கு இலாயக்கற்றவர் என்று தோன்றும். இருப்பினும், தேவன் அவர்களுக்கு அந்தப் பெயரையே கொடுத்தார். அவர்கள் அவரிடம் பேசினார்கள். அவரும் சம்மதித்தார். ஹான்ஸ் அற்புதமாகக் கதை சொல்லக்கூடியவர் என்பதை மிக விரைவில் அவர்கள் கண்டறிந்தார்கள். ஓர் அறையில் 100 பேர் இருந்தாலும் அவர்களுக்குக் கதை சொல்லி, அவர்களை அவர் மயக்கிவிடுவார். அவர் விரைவில் கார் ஒட்டவும் கற்றுக்கொண்டார். அவருடைய வெளிப்படையான குறைகளையெல்லாம் வேறு பல நற்பண்புகளால் நிறைவாக்கினார். அவர் மிகவும் துணிச்சலானவர்; தேவனை முற்றுமுடிய நம்பினார்.
ஒருமுறை அவர்கள் தங்கள் காரில் வேதகமங்களைக் கடத்திச் சென்றார்கள். அப்போது ஓர் இடத்தில காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள். வழக்கமான சோதனைச் சாவடியில் அல்ல. அதைத் தாண்டி போய்க்கொண்டிருந்தபோது, ஓர் இடத்தில் நிறுத்தி தங்களிடமிருந்த முகாம் அடுப்பில் தேநீர் தயாரித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு தற்செயலாக வந்த காவலர்கள் அவர்களிடம் வந்து, “நாங்கள் உங்கள் காரைச் சோதனைசெய்யப்போகிறோம்,” என்றார்கள். காரின் முன் இருக்கையில் வேதாகமங்கள் வைத்திருந்தார்கள். உடனே ஹான்ஸ் ஆண்ட்ரூ விடம், “நாம் ஜெபிப்போம். நீங்கள் இத்தனை வருடங்களாக ஜெபித்த அதே ஜெபத்தை இப்போது ஜெபிப்போம். தேவனே, நீர் பார்வையற்றவர்களுக்குப் பார்வை அளித்தீர். இப்போது பார்க்கும் இந்தக் கண்களைக் குருடாக்கும்,” என்று ஜெபித்தார்கள். உண்மையாகவே, ஆண்ட்ரூ வுக்கு வியர்த்துக்கொட்டியது. கர்த்தர் தம் வார்த்தையைப் பாதுகாப்பார் என்று ஹான்ஸ் உறுதியாக நம்பினார். தேவன் அப்படியே செய்தார்.
இன்னொரு புறம், அவர்கள் வேறு சில நாடுகளிக்குச் சென்றபோது, அவர்களிடம் வேதாகமங்கள் இருந்தும், உண்மையான தலைவர்களையும், ஊழியக்காரர்களையும் சந்தித்தபோதும், அவர்களுக்கு அந்த வேதாகமங்களைக் கொடுக்கமுடியவில்லை. ஏனென்றால், அந்தத் தலைவர்கள், “எங்களுக்கு வேதாகமம் வேண்டாம்,” என்று சொன்னார்கள். ரஷ்யாபோன்ற நாடுகளில் கிறிஸ்தவப் போதகர்கள், தலைவர்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள், காணாமல் போனார்கள். எனவே, உயிரோடு வெளியே வந்தபின், மீண்டும் ஒரு வேதாகமத்தைக் கையில் ஏந்த வேண்டும் என்று நினைக்கவே அவர்களுக்குப் பயமாக இருந்தது. வெளியே இருந்தவர்கள் நினைத்துப்பார்க்க முடியாத கொடுமைகளை அவர்கள் அனுபவித்தார்கள். எனவே அவர்கள் வேதாகமத்தை வாங்க மறுத்துவிட்டார்கள். “எங்களால் மீண்டும் அந்தச் சித்திரவதையை அனுபவிக்க முடியாது,” என்று தடுத்துவிட்டார்கள். எனவே, ஆண்ட்ரூ வேதாகமங்களை விநியோகிப்பதோடு நிற்காமல், இப்படிப்பட்ட மக்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும் செய்தார். அவர்களுடைய நிலைமையை அவர் நன்றாகப் புரிந்துகொண்டார். எனவே, இந்த நெரிந்த நாணல்களை நிமிர்த்தவும் பாடுபட்டார். நிச்சயமாக, நாம் அவர்களைப்பற்றி எந்தத் தீர்ப்பும் அளிக்கக் கூடாது. அவர்கள் பட்ட பாடுகளை நாம் பட்டிருந்தால் அவர்களைப் பற்றிப் பேச நமக்கு உரிமை உண்டு. மூன்று நாட்களோ அல்லது மூன்று வேளையோ ஒரே சாப்பாட்டைச் சாப்பிடாதவர்கள் நாற்பது வருடங்கள் ஒரே மன்னாவைச் சாப்பிட்டதால், ஒருநாள் இறைச்சி வேண்டும் என்று கேட்ட இஸ்ரயேல் மக்களைக் குறைகூறுபவர்கள் நிறைய உண்டு.
ஆண்ட்ரூ , கோரி, ஹான்ஸ் என்ற மூன்றுபேர் அடங்கிய குழு வளர ஆரம்பித்தது. வேறு சில இளம் தம்பதிகள் அவர்களோடு இணைந்தார்கள். அவர்கள் தங்கள் ஊழியத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார்கள். கம்யூனிச ஐரோப்பாவைத் தாண்டி அவர்கள் சீனாவுக்குச் சென்றார்கள். சீனாவில் நிலைமை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. சீனாவில் ஆரம்ப நாட்களில் அவர்கள் தாங்கள் தங்கியிருந்த விடுதி அறைகளில் துண்டுப் பிரசுரங்களையும், வேறு சில பொருட்களையும் வைத்தார்கள். சில நேரங்களில் பூங்காவில் நீண்ட பெஞ்சுகளில் துண்டுப் பிரசுரங்களை வைத்தார்கள். வேடிக்கை என்னவென்றால், மக்கள் அவைகளை எடுத்துக்கொண்டு வந்து அவர்களிடமே திருப்பிக்கொடுத்தார்கள். தெருவில் நடந்துசென்றவர்களை நிறுத்தி, ஆண்ட்ரூ அவர்களுக்கு வேதகாமத்தைக் கொடுத்தார். அவர்கள் அதைப் பார்த்துவிட்டு, அவரிடமே திருப்பிக்கொடுத்தார்கள். அந்த நேரத்தில் அவரால் சீன மக்களுக்கு எதையும் கொடுக்க முடியவில்லை. சீனர்களிடம் ஒருவிதமான அலட்சியப்போக்கு இருந்தது. இது அவர் கம்யூனிச ஐரோப்பாவில் பார்த்த நிலைமைக்கு முற்றிலும் மாறாக இருந்தது. சீனாவில் அனைவரும் மிகவும் திருப்தியாக இருப்பதுபோல் தோன்றியது. எனவேதான், அவர்கள் வேறு எதையும் தேடவில்லை. அவர் சீனாவில் இருந்த பல்வேறு வேதாகமக் கல்லூரிகளுக்கும், ஆலயங்களுக்கும் சென்றார். அவைகளெல்லாம் கிறிஸ்தவ இடங்களோ, கிறிஸ்தவர்களின் இடங்களோ, கிறிஸ்துவின் இடங்களோ இல்லை என்று கண்டுகொண்டார். எல்லாம் கட்சிக் கூட்டங்கள். கட்சி உறுப்பினர்கள் கிறிஸ்துவின் பெயரில் கட்சிக் கூட்டங்கள் நடத்தினார்கள், கட்சிக் கொள்கைகளைப் பேசினார்கள். அடிப்படையில், அவை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கான இடங்களாக இருந்தன. அதற்கு வேதாகமக் கல்லூரி அல்லது ஆலயம் என்ற பெயர். அவ்வளவே. எனவே, அவர் சீனாவில் வேறுவிதமாக செயல்பட வேண்டியிருந்தது.
இந்தப் பின்புலத்தில்தான் அவர்கள் ஒரே இரவில் சீனாவுக்குக் கப்பலில் 10 இலட்சம் சீன வேதாகமங்களைக் கடத்தினார்கள்.
கப்பலில் 10 இலட்சம் சீன வேதாகமங்களை ஏற்றிக்கொண்டு சீனாவின் ஒரு மாநிலத்தில் ஓர் ஒதுக்குப்புறமான கடற்கரையில் அவைகளை இறக்கியதுதான் அவருடைய மிகப் பெரிய நடவடிக்கையாகும். அசாத்திய துணிச்சல். அது ஒரு பெரிய சாகசம். ஒதுக்குப்புறமாக கப்பலை நிறுத்தினார்கள். கப்பலிலிருந்து அவைகளைப் பரிசல்போன்ற மரக்கலங்களில் மிதக்கவைத்து கடற்கரைக்குக் கொண்டுபோனார்கள். நூற்றுக்கணக்கான விசுவாசிகள் முந்தைய நாள் இரவே அங்கு கூடியிருந்தார்கள். கரைக்கு வந்த வேதாகமங்களை அவர்கள் வாரிக்கொண்டுபோனார்கள். காவல்துறை இதையறிந்து அங்கு வருவதற்குள் ஏறக்குறைய எல்லாரும் போய்விட்டார்கள். கடற்கரையில் கிடந்த சில வேதாகமங்களைக் காவலர்கள் எடுத்துகொண்டுபோனார்கள்.
வருடங்கள் உருண்டோடின. தன்னந்தனியாக ஆண்ட்ரூ என்ற ஒரு தனி மனிதன் ஒரு சிறிய நீலநிறக் காரில் கம்யூனிச நாடுகளுக்கு அவரவர் மொழிகளில் வேதாகமங்களைக் கடத்த ஆரம்பித்தார். அந்த ஊழியம் இன்று Open Doors என்ற அமைப்பாக உருவாகியுள்ளது. இப்போது கம்யூனிச ஐரோப்பா அடைக்கப்பட்ட நாடல்ல. இப்போது அது மிகவும் திறந்த நாடு. கிறிஸ்தவர்கள் விடுதலையோடு வாழ்கிறார்கள். வேதாகமங்களுக்குப் பஞ்சமில்லை. இப்போதைய கம்யூனிச ஐரோப்பா 1950களிலும், 1969களிலும் இருந்ததுபோல் இல்லை. முற்றிலும் மாறிவிட்டது. எனவே, அவர்கள் இப்போது தங்கள் கவனத்தை வேறொரு அடைபட்ட பகுதிக்கு மாற்றிவிட்டார்கள். ஆம், அவர்கள் இப்போது இஸ்லாமிய உலகில் கவனம் செலுத்துகிறார்கள். அங்கு வேதாகமங்கள் கிடைப்பது, வாங்குவது மிகவும் கடினம். அங்கு போதகர்களும், கிறிஸ்தவத் தலைவர்கலும் சில சமயங்களில் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமல் போய்விடுகிறார்கள், காணாமல் போய்விடுகிறார்கள். மாயமாக மறைந்துவிடுகிறார்கள். ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன, கிறிஸ்தவ கூட்டங்கள் சோதனையிடப்படுகின்றன. நற்செய்தி அறிவித்தால் அல்லது வேதாகமத்தை வீட்டில் வைத்திருந்தால் அவர்கள்மேல் வேறு குற்றங்களைச் சுமத்தி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். எனவே, ஆண்ட்ரூ கம்யூனிச ஐரோப்பாவுக்கும், சீனாவுக்கும் வேதாகமங்களைக் கடத்திய நாட்களில் இருந்த அதே நிலைமை இப்போது வேறொரு இடத்தில் நிலவுகிறது. ஆண்ட்ரூ அனுபவித்தவைகள் இன்றும் நடக்கின்றன.
ஐரோப்பாவில் கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு, ஆண்ட்ரூ தன் கவனத்தை மத்திய கிழக்கு நாடுகளுக்கும், முஸ்லீம் உலகில் இருக்கும் சபைகளை வலுப்படுத்தவும் உழைத்தார். 1970களில் அவர் லெபனானுக்குப் பலமுறை சென்றுவந்தார். 1990களில், அவர் மீண்டும் பலமுறை மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம்செய்தார். லெபனான், இஸ்ரேல் பகுதிகளில் இருந்த அரபிக் கிறிஸ்தவர்களும், லெபனான் சபைகளும் மேற்கத்திய உலகில் உள்ள சபை பெரும்பாலும் தங்களைப் புறக்கணிப்பதாக உணர்ந்ததாகவும், வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு சக கிறிஸ்தவரின் வருகையால் தாங்கள் மிகவும் மகிழ்வதாகவும் அவர்கள் கூறியதாக light force என்ற தன் புத்தகத்தில் கூறுகிறார். காசா பகுதியில் ஒரு கிறிஸ்தவப் புத்தகக் கடையைத் திறக்க அரபாத் ஆண்ட்ரூவுக்கு அனுமதி வழங்கினார். அந்தப் பயணத்தின்போது ஆண்ட்ரூ காசாவின் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவத்தைப்பற்றி உரையாற்றினார். 2010களில் பாக்கிஸ்தானுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தார். அங்கு அவர் தலிபான் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார்.
ஆண்ட்ரூ 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தன் 94ஆவது வயதில் தன் ஓட்டத்தை முடித்தார். அவர் 1931இல் திருமணம் செய்தார். அவருடைய மனைவி கோரி 2018இல் நித்தியத்துக்குள் நுழைந்தார். அவர்கள் நெதர்லாந்தில் தொடர்ந்து வாழ்ந்தார்கள். அவர்களுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். அவர் இறக்கும்போது, Open Doors 60 நாடுகளில் செயல்பட்டுக்கொண்டிருந்தது. ஆண்டுதோறும் 300,000 வேதாகமங்களையும், 15 இலட்சம் கிறிஸ்தவ புத்தகங்களையும் விநியோகிக்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக குரல்கொடுக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணம், உதவி, சமூக மேம்பாடு, ஆலோசனை வழங்குவதில் open Doors மும்முரமாக இயங்குகிறார்கள்.
1 கொரிந்தியர் 12ஆம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவின் சரீரத்தைபற்றிப் பேசுகிற சில வசனங்களைச் சொல்லி முடித்துக்கொள்கிறேன். “ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்,” என்று அவர் கூறுகிறார். உலகெங்கும் இருக்கும் எல்லாப் பரிசுத்தவான்களாலுமானதுதான் கிறிஸ்துவின் சரீரம். சுதந்திரமும், சமாதானமும் இல்லாமல் உலகெங்கும் எத்தனை பரிசுத்தவான்கள் துன்பப்படுகிறார்கள், பாடநுபவிக்கிறார்கள் என்று நினைத்துப்பாருங்கள். அதுபோல நாம் அனுபவிக்கின்ற சுத்தந்திரமும், அமைதலும் நீண்ட நாள் நீடிக்கும் என்று நினைக்க வேண்டாம். நாமெல்லாரும் தேவனுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான நேரம் வந்துகொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறன். திறந்த வாசல்கள் அடைபடுமுன் கிளர்ந்தெழுவோம். ஆமென்.