Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

அப்போஸ்தலர் காலத்துச் சபை வரலாறு. அப்போஸ்தலர் காலத்துச் சபை என்றால் என்ன? சபையின் காலகட்டங்கள் என்ன? அப்போஸ்தலர் காலத்தின் அரசியல், மதப் பின்புலம் என்ன? அப்போஸ்தலர் காலத்துச் சபையின் முக்கியமான குணநலன்கள் என்ன? அப்போஸ்தலர் காலத்துச் சபையின் குறிப்பிடத்தக்க நபர்கள் யார்? அப்போஸ்தலர்களுடைய காலத்துக் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்?


அப்போஸ்தலர் காலச் சபை - 02

I. முன்னுரை

சபை வரலாற்றின் இரண்டாம் பாகத்துக்கு நான் உங்களை அன்புடன் வரவேற்கிறேன். முதல் பாகத்தில் சபை வரலாறு என்றால் என்ன, சபை வரலாற்றைப் படிப்பதில் உள்ள சிக்கல்கள் என்ன, சபை வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் படிக்க வேண்டும், சபை வரலாற்றை அறிவதற்கான ஆதாரங்கள் என்ன, சபை வரலாற்றை ஏன் படிக்க வேண்டும் என்று பார்த்தோம்.

II. தொடரும் வரலாறு

இந்த இரண்டாம் பாகத்தில் நாம் சபை வரலாற்றைத் தொடங்குவோம். சபை வரலாற்றை எங்கிருந்து ஆரம்பிக்கலாம்? பழைய ஏற்பாட்டிலிருந்து ஆரம்பிக்கலாமா அல்லது நடபடிகளிலிருந்து ஆரம்பிக்கலாமா? பழைய ஏற்பாட்டிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றால் பழைய ஏற்பாட்டில் சபை இருந்ததா என்ற கேள்வி எழும். பழைய ஏற்பாட்டிலும் சபை இருந்தது. இஸ்ரயேல் மக்களின் வரலாறுதான் சபை வரலாற்றின் ஆரம்பம். ஆயினும், அது அன்று புதிய ஏற்பாட்டில் காணப்படுவதுபோல் காணப்படவில்லை. மேலும் பழைய ஏற்பாட்டுச் சபை வரலாறு உங்களுக்குத் தெரியும்.

அதுபோல, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் மனிதனாகப் பிறந்து, பூரணமான மனித வாழ்க்கை வாழ்ந்து, மனுக்குலத்தின் பாவங்களைப் போக்கச் சிலுவையில் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, நாற்பது நாட்கள் தம் சீடர்களுக்குத் தரிசனமாகி, உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்கக் கட்டளை கொடுத்தபின் பரமேறிச் சென்ற வரலாறும் உங்களுக்குத் தெரியும்.

அப்படியானால், சபை வரலாற்றை எங்கிருந்து ஆரம்பிக்கலாம்? பெந்தெகொஸ்தே நாளில் 3000 பேர் இரட்சிக்கப்பட்டு, சபை தோன்றிய நாளிலிருந்து ஆரம்பிக்கலாமா? அதுதான் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

புதிய ஏற்பாட்டில் சில அப்போஸ்தலர்களுடைய, சில நற்செய்தியாளர்களுடைய, சில தனிப்பட்ட மனிதர்களுடைய வாழ்க்கையையும், ஊழியங்களையும்பற்றிய சில விவரங்கள் அங்கும் இங்கும் சொல்லப்பட்டுள்ளன. எல்லா அப்போஸ்தலர்களையும், எல்லா நற்செய்தியாளர்களையும்பற்றிய எல்லா விவரங்களும் அங்கு சொல்லப்படவில்லை. எனவே, இந்தப் பாகத்தில், புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்களைப்பற்றிச் சொல்லப்பட்டுள்ள விவரங்களைத் தேவைப்பட்டால் சுருக்கமாகவும், சொல்லப்படாத விவரங்களை விரிவாகவும் பார்ப்போம்.

III. அப்போஸ்தலிக்க சபை

இந்த இரண்டாம் பாகத்தில் நாம் அப்போஸ்தலர்கள் காலத்துச் சபை வரலாற்றைப் பார்க்கப்போகிறோம். அதாவது அப்போஸ்தலர்கள் வாழ்ந்த காலத்துச் சபை. எனவே, இதை அப்போஸ்தலர் சபை என்பதா அல்லது அப்போஸ்தலிக்க சபை என்பதா அல்லது அப்போஸ்தலர் காலச் சபை என்பதா என்று தெரியவில்லை. இந்தச் சொற்றொடர்களை நான் மாறி மாறிப் பயன்படுத்தினாலும் நான் எந்தக் காலத்தைக் குறிப்பிடுகிறேன் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அப்போஸ்தலர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த சபை.

யோவான்தான் கடைசியாக மரித்த அப்போஸ்தலன். எனவே, அப்போஸ்தலர் காலத்துச் சபை வரலாறு பெந்தெகொஸ்தே நாளிலிருந்து யோவான் மரித்த கி.பி 100வரையிலான காலத்துச் சபை வரலாறாகும். நான் இதைப் புதிய ஏற்பாட்டுச் சபை வரலாறு என்று சொல்லாமல் அப்போஸ்தலர் சபை வரலாறு என்று சொல்வதற்கு என்ன காரணம் என்றால் நடபடிகளில் கி.பி 60வரையிலான வரலாறு உள்ளது. அந்தக் காலகட்டத்தின் சபையைப்பற்றிய எல்லா விவரங்களும்கூட அங்கு இல்லை. புதிய ஏற்பாடு எழுதி முடிக்கப்பட்டபிறகும் கி.பி 100வரை அப்போஸ்தல சபை தொடர்ந்தது. எனவேதான், நான் புதிய ஏற்பாட்டுச் சபை வரலாறு என்று சொல்லாமல், அப்போஸ்தலிக்க சபை வரலாறு என்று சொல்லுகிறேன்.
ஆரம்பத்திலேயே நான் ஒன்றைத் தெளிவாக்க விரும்புகிறேன். காலங்கள் கிறிஸ்துவுக்குமுன், கிறிஸ்துவுக்குப்பின் எனப் பிரிக்கப்பட்டிருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியும். நான் ஒரு வருடத்தைக் குறிப்பிடும்போது அது மிகத் துல்லியமான வருடம் என்று நினைக்க வேண்டாம். இன்று ஒருவன் 1950ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிறந்தான் என்று சொல்வதுபோல், சபை வரலாற்றின் நாட்களையோ, மாதங்களையோ, வருடங்களையோ அறுதியாகக் கூறமுடியாது. தோராயமாக, ஏறக்குறைய, என்றுதான் கூறமுடியும். திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. எனவே, கி.பி 100வரை என்று சொல்லும்போது அது 90ஆகவும் இருக்கலாம், 100ஆகவும் இருக்கலாம்.

IV. சபையின் காலகட்டங்கள்

சபை வரலாற்றை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கும் , எளிதாக மனதில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாக அதைப் பல காலகட்டங்களாகப் பிரிக்க விரும்புகிறேன். இப்படித்தான் பிரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவரவர் தத்தம் வசதிக்கேற்ப பிரிக்கிறார்கள். என் வசதிக்காக

  1. கி.பி 30முதல் கி.பி 100வரை அப்போஸ்தலர் காலத்துச் சபை என்றும்,
  2. கி.பி 100முதல் கி.பி 312வரை (கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனாகும்வரை) ஆதிச் சபை என்றும்,
  3. கி.பி 312முதல் கி.பி 1000வரை (கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனானபிறகு) ஆரம்ப காலக் கிறிஸ்தவப் பேரரசு என்றும்,
  4. கி.பி 100முதல் கி.பி 1500வரை (சீர்திருத்தகாலம்வரை) பிந்தைய காலக் கிறிஸ்தவப் பேரரசு என்றும் நான் பிரித்துக்கொள்கிறேன்.

கிறிஸ்தவம் தழைத்தோங்கிய காலத்தை, கோலோச்சிய காலத்தை, நான் கிறிஸ்தவப் பேரரசின் காலம் என்கிறேன். நான் சில மிஷனரிகளைப்பற்றிய காணொளிகளை ஏற்கெனவே youtubeஇல் பதிவேற்றம் செய்துள்ளேன். இவர்களெல்லாம் கி.பி.1500க்குப் பிந்தையவர்கள், சீர்திருத்தக்காலத்துக்குப் பிந்தையவர்கள்.

V. அன்றைய பின்புலம்

அப்போஸ்தலர் காலத்தில் நற்செய்தி எப்படி பரவியது, அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவை எப்படி மக்களிடம் கொண்டுபோனார்கள், கிறிஸ்து மக்களுடைய உள்ளங்களை எப்படிக் கொள்ளைகொண்டார், சபைகள் எப்படி எழும்பின என்று அறியவேண்டுமானால், அன்றைய பின்புலத்தை, குறிப்பாக அரசியல் நிலைமையையும், மதச் சூழ்நிலையையும், நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் கிறிஸ்தவம் வெற்றிடத்தில் பரவவில்லை, சபைகள் அந்தரத்தில் தோன்றவில்லை, தேவதூதர்கள் வானத்திலிருந்து இறங்கிவந்து நற்செய்தியை அறிவிக்கவில்லை.

கிறிஸ்தவத்தை விதைக்கவும், கிறிஸ்தவம் செழித்து வளரவும் ஏற்ற, சாதகமான, பல காரணிகள் அங்கு இருந்தன. அவைகளை நாம் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. ரோமப் பேரரசின் மதச் சூழல்

ஆண்டவராகிய இயேசு வாழ்ந்த காலத்திலும், அவருடைய அப்போஸ்தலர்கள் வாழ்ந்த காலத்திலும் ரோமப் பேரரசு உலகின் வல்லரசாக ஆட்சிசெய்துகொண்டிருந்தது. அறியப்பட்ட உலகின் பெரும் பகுதி ரோமர்களின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. அசீரியப் பேரரசு, பாபிலோனியப் பேரரசு, மேதிய-பெர்சியப் பேரரசு, கிரேக்கப் பேரரசு ஆகிய பேரரசுகள் அழிந்து அப்போது ரோமப் பேரரசு கோலோச்சியது. ரோமப் பேரரசு என்பது பண்டைய ரோம குடியரசுக் காலத்துக்குப் பிந்தைய அரசு. குடியாட்சி முடியாட்சியாக மாறியிருந்தது. இதைப்பற்றி பிறகு பேசுவோம்.

ரோமப் பேரரசில் தொழில்நுட்பம், கல்வி, தொழில், சாலைவசதிகள் ஆகியவைகள் மேம்பட்டிருந்தன. நான் இவைகளைப்பற்றிப் பேசப்போவதில்லை. மாறாக, நமக்குத் தேவையான அன்றைய மதச் சூழலைப்பற்றி மட்டுமே பேசப்போகிறேன்.

அந்தக் காலகட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு மதங்களும் நாகரீகங்களும் இருந்தன. எடுத்துக்காட்டாக பாரசீகத்தில் சோராஸ்ட்ரியனிசமும், சீனாவில் கன்பியூசியனிசமும் தாவோயிசமும், இந்தியாவில் புத்தமதமும் இருந்தன.

ஆனால், ரோமப் பேரரசில் ஒரேவொரு மதமோ அல்லது தேசிய மதமோ இருக்கவில்லை. ரோமப் பேரரசு பல்வேறு மதங்களின் தாயகம். ரோமப் பேரரசில் அன்று பல்வேறு மதப் பழக்கங்களும், தத்துவக் கருத்துக்களும் வேரூன்றியிருந்தன. “இதுதான் ரோமப் பேரரசின் மதம்” என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. அரசு மதம், தேசிய மதம், என்று ஒன்று இல்லை. அரசின் எல்லையெங்கும் ஒரே மதத்தைத் திணிக்கும் எண்ணம் அப்போதைய இராயர்களுக்கு இல்லை. பிற்காலத்தில் அரசரைத் தெய்வமாக ஆராதிக்க வேண்டும் என்று இராயர்கள் ஆணைபிறப்பித்தார்கள். அது வேறு கதை. ஆனால், ஆரம்பத்தில், அது ஒரு மதச்சார்பற்ற அரசு. அதாவது யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம், பின்பற்றாமலும் போகலாம்.

இன்னொருபுறம் ரோமப் பேரரசு பன்முகத்தன்மைவாய்ந்தது. எல்லா மதங்களுக்கும், சித்தாந்தங்களுக்கும், தத்துவங்களுக்கும், பழக்கங்களுக்கும் அங்கு இடம் இருந்தது. அங்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, பல மதங்கள் வழக்கில் இருந்தன

ரோமப் பேரரசுக்குமுன் கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் ஆட்சிசெய்தான் என்பதை மறக்க வேண்டாம். நாடெங்கும் கிரேக்கக் கலாச்சாரம் பரவியிருந்தது. மக்கள் கிரேக்க மொழி பேசினார்கள்; கிரேக்கக் கடவுள்களை வழிபட்டார்கள். கிரேக்க தத்துவஞானி பிளாட்டோவின் பிளாட்டோனிசம் என்ற ஆன்மநேயவாதம், ஸ்டோயிஸிசம் என்ற ஒடுக்கவாதம், எபிகூரியனிசம் என்ற இன்பவாதம், சினிசிசம் என்ற ஏளனவாதம், நியோபிளாட்டோனிசம்போன்ற தத்துவ அமைப்புகள் ரோமப் பேரரசில் பரவியிருந்தன. எபிகூரியர்களையும் ஸ்தோயிக்கர்களையும்பற்றி நடபடிகள் 17ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். இந்த மதங்களும், வழிபாடுகளும், தத்துவங்களும், அமைப்புகளும் கிரேக்கப் பின்புலத்திலிருந்து வந்தவை.

இவைகளோடுகூட எகிப்து, சிரியா, பாரசீகம் போன்ற கிழக்கத்திய நாடுகளின் புதிர் மதங்களும் (mystery religions) அங்கு காலூன்றியிருந்தன.

வரலாற்றாசிரியரும், மிஷனரியுமான Kenneth Scott Latourette என்பவர் Christianity through the ages என்ற தன் புத்தகத்தில் இந்தப் புதிர் மதங்களைப்பற்றி சில சுவாரசியமான விவரங்களைச் சொல்லுகிறார். இந்தப் புதிர் மதங்கள் வணங்கிய டைநைசைஸ், ஓர்பீயஸ், ஆடஸ், அடானஸ், ஓசைரஸ் போன்ற தங்கள் இரட்சகர்-தெய்வங்கள் எதிரிகளால் கொல்லப்பட்டதாகவும், பின்பு உயிரோடு எழுந்ததாகவும் நம்பினார்கள் என்றும், இந்தத் தெய்வங்களுடைய அம்மாக்களும் தெய்வங்களாகக் கருதப்பட்டார்கள் என்றும் அவர் கூறுகிறார். இதை மனதில் வைத்துக்கொண்டு கிறிஸ்தவமும் இப்படிப்பட்ட ஒரு புதிர் மதம்தான் என்று இன்றும் சொல்வோர் உண்டு என்று அவர் குறிப்பிடுகிறார். இந்தப் புதிர் மதங்களுக்கும் கிறிஸ்தவத்துக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால், நிறைய வேற்றுமைகள் உள்ளன. தேவைப்பட்டால் அதை வேறொரு நேரத்தில் பார்ப்போம்.
இவ்வாறு முதல் நூற்றாண்டில் ரோமப் பேரரசில் கிரேக்க தெய்வங்கள், கிரேக்க தத்துவங்கள், கிழக்கத்திய புதிர் மதங்கள் என ஒரு பன்முகத்தன்மை இருந்தது. சுதந்திரமான அரசு,. பல்வேறு மதங்கள்! பல்வேறு நம்பிக்கைகள்! பல்வேறு நோக்கங்கள்! அவரவருக்கு அவரவர் கண்ணோட்டம்! இம்மையையும், மறுமையையும், இயற்கைக்குட்பட்டதையும், அப்பாற்பட்டதையும், காண்பதையும் காணஇயலாததையும் அவரவர் தத்தம் கண்ணோட்டத்தில் பார்த்தார்கள்.

ரோமப் பேரரசில் அதிகாரப்பூர்வமான மதங்கள், மதக் குழுக்கள், மதக்கோட்பாடுகள், கிரேக்க தத்துவங்கள், கிழக்கத்திய புதிர் மதங்கள் இருந்தன என்ற ஒரேவொரு விவரத்தைத்தான் நான் இதுவரை விளக்கினேன்.

இதுதான் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியபோது இருந்த மதச் சூழல், மதப் பின்புலம். கிறிஸ்தவம் வேகமாகப் பரவியதற்கு இது சாதகமாக அமைந்தது. நற்செய்தியை விதைப்பதற்கு பண்படுத்தப்பட்ட நிலம் அங்கு ஏற்கெனவே ஆயத்தமாயிருந்தது. ஆவியானவர் அங்கு ஏற்கெனவே வேலைசெய்துகொண்டிருந்தார். நற்செய்திக்குத் திறந்த வாசல். எந்தத் தடையும் இல்லை. புதிய வரவுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

2. ரோமப் பேரரசின் அமைதியும் நிலைத்தன்மையும்

இரண்டாவது, ரோமப் பேரரசு வட மேற்கில் பிரிட்டனிலிருந்து, ஐரோப்பா, கவுல், இல்லிரிக்கம் (தற்போதைய ருமேனியா, பல்கேரியா) மக்கதோனியா, கருங்கடலுக்கு அருகே ஆசியா மைனர், அர்மேனியா, மத்தியதரைக் கடலை ஒட்டிய போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி, அகாயா, ஆப்பிரிக்காவின் வடக்குக் கரையோரமிருந்த எகிப்து, சைரேன், மாவ்ரேடேனியா, கார்த்தேஜ்வரைக்கும் பரந்துவிரிந்திருந்தது. ஆம், ரோமப் பேரரசு ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியாவின் மத்தியதரைக்கடலைச் சுற்றியிருந்த பகுதிகள் என மூன்று கண்டங்களில் பரவியிருந்தது. மத்தியதரைக் கடல்தான் ரோமப் பேரரசின் மையமாகத் திகழ்ந்தது.

ரோமப் பேரரசின் பரந்துவிரிந்த நிலப்பரப்பில் ஒற்றுமையும், நிலைத்தன்மையும், அமைதியும் நிலவின. முதல் அரசன் அகஸ்டஸ் இரும்புக்கரம் கொண்டுதான் அரசாண்டான். அங்கு நிலவிய அமைதி அவன் படையெடுத்து வென்று, அடக்கியாண்டு பெற்ற அமைதிதான். அது ஒரு சர்வாதிகாரியின் அமைதிதான். ஆனாலும், நாட்டில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவின.

அரசின் உறுதித்தன்மையைக் குலைக்க உள்நாட்டுப் போர்களோ, அரசியல் சண்டைகளோ அதனால் ஏற்படும் இடையூறுகளோ இல்லை. அன்று ரோமப் பேரரசு ஓர் அமைதிப் பூங்கா. கி.பி 27முதல் 180வரையிலான காலகட்டம் ஒரு பொற்காலம். Pax Romana. ரோமப் பேரரசின் முதல் இரண்டு நூற்றாண்டுகள் அதற்கு முன்னர் கண்டிராத நிலைத்தன்மையையும் செழிப்பையும் உடைய காலம். எனவே, இது பாக்ஸ் ரோமானா, ரோம அமைதி, என்றழைக்கப்படுகிறது. இது நற்செய்தி பரவுவதற்கு ஏற்ற சூழலாக அமைந்தது.

3. நிலைநாட்டப்பட்ட சட்டம்

மூன்றாவது, ரோமப் பேரரசில் உறுதியான, பலமான, நிறுவப்பட்ட சட்ட அமைப்பு இருந்தது. அரசின் எல்லையெங்கும் பொதுவாக சட்டம் ஒழுங்கு சீராகப் பராமரிக்கப்பட்டது. பேரரசெங்கும் சட்டத்தின் ஆட்சியே நடைபெற்றது. சட்டங்கள் இயற்றவும் நடைமுறைப்படுத்தவும் செனட் சபை என்ற ஓர் அமைப்பு இருந்தது. செனட்டின் ஆலோசனையின்படியும், வழிகாட்டுதலின்படியும் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவத் தலைவர்களைக்கொண்ட அமைப்புகள்மூலம் மாநிலங்களை ஆட்சிசெய்தார்கள். மாநிலங்கள் பேரரசர்களால் நேரடியாக ஆளப்படவில்லை. ஆண்டு தோறும் செனட் சபையுடன் சேர்ந்து தேர்வு செய்யப்பட்ட நீதிபதிகளால் ஆளப்பட்டது. பெரும்பாலும் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டது. இதுவும் நற்செய்தி வேகமாகவும் எளிதாகவும் பரவுவதற்குக் காரணமாகும்.

4. ரோமப் பேரரசில் வியாபாரமும் கருத்துப் பரிமாற்றமும்

நான்காவது, ரோமப் பேரரசில் வாணிபம் பரவலாக நன்றாக நடைபெற்றது. ரோமப் பேரரசின் மாநிலங்கள் தங்களுக்கிடையே மட்டுமல்ல, தங்கள் எல்லைகளுக்கு வெளியே சீனா, இந்தியாபோன்ற நாடுகளுடன் வாணிபம் செய்தார்கள். சீனாவுடன் பட்டுப் பாதை வழியாகவும், இந்தியாவுடன் செங்கடலில் இருந்த எகிப்தியத் துறைமுகங்கள்வழியாகவும் வியாபாரம் நடைபெற்றது. வியாபாரத்திற்காக மக்கள் பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது, வெறுமனே பொருட்களை விற்பதோடும் வாங்குவதோடும் எல்லாம் முடிவதில்லை. கலாச்சாரம், கருத்துக்கள், நாகரீகம் ஆகியவைகளும் பரிமாறப்பட்டன, பகிர்ந்துகொள்ளப்பட்டன. சாதாரணமான கிறிஸ்தவர்கள் இவ்வாறு வியாபாரத்திற்காக இடம்விட்டு இடம் போனபோது கிறிஸ்தவத்தையும் கொண்டுபோனார்கள், பரப்பினார்கள். கிறிஸ்துவின் அன்பு அவர்களை நெருக்கி ஏவியது. தாங்கள் பெற்று அனுபவித்த கிறிஸ்துவைப் பிறரும் பெற்று அனுபவிக்க வேண்டும் என்ற வேட்கை அவர்களை விரட்டியது.

5. பொது மொழி

ஐந்தாவது, பொது மொழி. இன்று உலகம் முழுவதும் ஆங்கிலம் பொதுமொழியாக இருந்து ஆதிக்கம் செலுத்துவதுபோல, அன்றைய காலகட்டத்தில் கிரேக்க மொழி பொதுமொழியாக இருந்தது. இயேசு கிறிஸ்துவின் காலத்தில்கூட யூதர்கள் தங்கள் பொதுவாழ்க்கையில் எபிரேய மொழிக்குப்பதிலாக கிரேக்க மொழியைப் பயன்படுத்தினார்கள். அரசின் மேற்குப் பகுதியில் சில இடங்களில் இலத்தீன் பேசினார்கள். எனினும், பேரரசு எங்கும், குறிப்பாக முதல் நூற்றாண்டில், மக்கள் koine கிரேக்க மொழி பேசினார்கள். புதிய ஏற்பாடு koine கிரேக்க மொழியில்தான் எழுதப்பட்டிருக்கிறது. koine கிரேக்க மொழி என்றால் பொதுவான கிரேக்கு, பேச்சு நடை கிரேக்கு, என்று பொருள். இதற்கு முந்தைய கிரேக்க மொழியை attic or classical கிரேக்க மொழி என்பார்கள். அது இலக்கிய நடை. பேச்சுத் தமிழ் வேறு, எழுத்துத் தமிழ் வேறு, இலக்கியத் தமிழ் வேறு. பல்வேறு தமிழ் இருப்பதுபோல் பல்வேறு கிரேக்கு.

(இலக்கிய கிரேக்கு நடையில்தான் பேச வேண்டும், எழுத வேண்டும், என்ற நிர்பந்தம் இருந்திருந்தால் பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு போன்ற சாதாரணமான மீனவர்கள் எழுதியிருப்பார்களா? இலக்கிய நடையில்தான் பேச வேண்டும் என்றால் மீனவப் பெண்ணான மகதலேனா மரியாள் பிரான்ஸ் நாட்டில் நற்செய்தி அறிவித்திருக்க முடியுமா?)

எத்தனையோ நாடுகளையும், கலாச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும் உள்ளடக்கிய பரந்துவிரிந்த ரோமப் பேரரசின் எல்லையெங்கும் மக்கள் ஒரே மொழி பேசினார்கள். இது நற்செய்தி அறிவிப்பதற்கு மிக உகந்த சூழல். அப்போஸ்தலர்களுக்கும், நற்செய்தியாளர்களுக்கும், எல்லாருக்கும் கிரேக்க மொழி தெரியும்.

6. ரோமப் பேரரசின் பன்முகத்தன்மை

ஆறாவது, ரோமப் பேரரசு ஒரு மதச்சார்பற்ற அரசு, சகிப்புத்தன்மை கொண்ட அரசு, பன்முக அரசு. அரசு மதம் என்று ஒன்று கிடையாது. எல்லா மதங்களையும் அரசு ஏற்றுக்கொண்டது. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்காதவரை, சமுதாயத்தின் அமைதியைக் கலைக்காதவரை, ஒருவன் யாரை அல்லது எதை வணங்குகிறான், நம்புகிறான், என்பதைப்பற்றி அரசு கவலைப்படவில்லை. அந்தக் காலத்தில் மக்கள் அறிவுபூர்வமான, ஒழுக்கரீதியான, நிலையான வாழ்வைப்பற்றிய ஒரு நிச்சயத்தையுடைய ஒரு மதத்தை, ஒரு விசுவாசத்தை, ஒரு தத்துவத்தை, தேடிக்கொண்டிருந்தார்கள் - அறிவுபூர்வமான, ஒழுக்கரீதியான, ஆவிக்குரிய தேடல். கிரேக்கர்களும் ரோமர்களும் அநேகக் கடவுள்களை நம்பினார்கள்; சிலைகளை வணங்கினார்கள். அவர்களுடைய கடவுள்களுக்கும் ஒழுக்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. கிரேக்க மதங்களில் ஒழுக்கக்கேடு ஆழமாகப் புரையோடிக்கிடந்தது. எனவே, அவர்களுடைய மதச் சடங்குகள் பெரும்பாலும் ஒழுக்கமற்றவைகளாகவே இருந்தன. கொரிந்துவில் இருந்த அப்ரோடைட் என்ற தேவதையின் கோவிலும், எபேசுவில் இருந்த அர்த்தேமுஸ் என்ற தேவதையின் கோவிலும் இதற்கு எடுத்துக்காட்டுகள். எனவே, கிரேக்க ரோம கலாசாரத்தோடு சம்பந்தப்பட்ட மதத்தின் ஒழுக்கக்கேட்டையும், துன்மார்க்கத்தையும், குழப்பத்தையும், நாற்றத்தையும், அழுக்கையும் விரும்பாத அநேகர் வேறொரு சிறந்த, மேம்பட்ட, உயர்ந்த வாழ்க்கைமுறையை விரும்பினார்கள்; தங்கள் வாழ்க்கையைச் சீராக்கிக்கொள்ள அவர்களுக்குக் கிறிஸ்தவம் ஒரு வாய்க்காலாக அமைந்தது. தேவன் ஒருவரே என்றும், அவர் பரிசுத்தர் என்றும், அவரைப் பின்பற்றுபவர்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கற்றுக்கொண்டார்கள். இந்த வெளிப்பாடு அன்று கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே இருந்தது. இந்தச் சூழலில்தான் கிறிஸ்தவம் வந்தது, வளர்ந்தது. அவர்கள் கிறிஸ்தவத்துக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் என்று சொல்லலாம்.

7. மேம்பட்ட சாலைவசதிகள்

ஏழாவது, மேம்பட்ட சாலைவசதிகள். ரோம் தன் ஆளுகையின்கீழ் இருந்த நாடுகளை ஒன்றுசேர்த்து உலக வல்லரசாக மாறியது. அது தன் பேரரசின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்வதற்குத் தேவையான சாலைகளை அமைத்தது. ஒருவேளை அரசு தன் படைகளுக்காக இந்தச் சாலை வசதிகளை அமைத்திருக்கலாம். ஆனால், மக்களும் பயன்படுத்தினார்கள். எனவே, மக்கள் எளிதாகப் பயணித்தார்கள்! எங்கெல்லாம் நீர்வழிப் போக்குவரத்து சாத்தியமோ அங்கெல்லாம், முக்கியமாக மத்தியதரைக் கடலிலும், பேரரசின் முதன்மையான ஆறுகளிலும், அப்போக்குவரத்து தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. தரைவழிப் போக்குவரத்தும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. கி.மு 33இல் பெந்தெகொஸ்தே பண்டிகைக்காக எருசலேமுக்கு வந்திருந்த மக்கள் எங்கிருந்தெல்லாம் வந்தார்கள் என்ற பட்டியலைப் பாருங்கள்! பெந்தெகொஸ்தே நாளில் அறுப்பின் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக வானத்தின் கீழிருக்கிற சகல நாடுகளிலுமிருந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்போது எருசலேமில் இருந்தார்கள். பார்த்தர், மேதர், எலாமீத்தர்களும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து, லிபியா நாட்டினரும், ரோமாபுரியர், யூதர், யூதமார்க்கதமைந்தவர்கள், கிரேத்தர், அரபியர் எல்லாரும் எருசலேமுக்கு வந்திருந்தார்கள். மக்கள் எளிதில் பயணம்செய்வதற்கு ஏதுவாக நல்ல சாலைவசதிகளும், உள்கட்டமைப்பும் இருந்ததால் இது சாத்தியமாயிற்று. நல்ல வண்டி இருந்தால் மட்டுமே போதுமா? பயணிக்க நல்ல சாலை வேண்டுமே! நற்செய்தி தயார்! அறிவிக்க ஆட்கள் தயார்! பயணிக்கப் பாதை தயார்!

8. இளம் முடியாட்சி

எட்டாவது, இளம் முடியாட்சி. கிறிஸ்தவம் பரவத்தொடங்கிய வரலாற்றுச் சூழலைக் கவனியுங்கள். கி.மு 6ஆம் நூற்றாண்டில் குடியரசாக இருந்த ரோம அரசு சமீபத்தில்தான் பேரரசாக மாறியிருந்தது. மாநிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட பல உறுப்பினர்களைக்கொண்ட செனட் என்ற ஒரு சட்டமன்றக்குழுவால் நிர்வகிக்கப்பட்டன என்று ஏற்கெனவே சொன்னேன். பேரரசில் சுயாட்சிகொண்ட நகரங்களும் நாடுகளும் இருந்தன! கி.மு 40இல் ஜூலியஸ் இராயன் சர்வாதிகாரியானபோதுதான், ஆண்டவராகிய இயேசு பிறப்பதற்கு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குமுன்தான், குடியாட்சி முடியாட்சியாக மாறிற்று. ஜூலியஸ் இராயனும், அகுஸ்து இராயனும் கி.பி 14வரை ஆட்சிசெய்தார்கள். எனவே, கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்த நேரத்தில் குடியரசு பேரரசாக மாறி கொஞ்சக் காலமே ஆகியிருந்தது. கிறிஸ்தவம் மிக இளமையான முடியாட்சின்போது நுழைகிறது. இதுவும் கிறிஸ்தவம் வேகமாகப் பரவ சாதகமாக அமைந்தது.

9. யூதமதத்தின் பிரிவுகள்

ஒன்பதாவது, கிறிஸ்தவம் பிறந்து வளர்ந்த இடத்தைக் கவனியுங்கள். வேதாகமம் யூதேயா என்றைழைக்கும் பகுதியை ரோமர்கள் பாலஸ்தீனம் என்றழைத்தார்கள். ரோமப் பேரரசு இந்தப் பகுதியை ஆக்கிரமித்துத் தன் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தது. எனவே, பெரும்பாலான மக்கள் ரோம ஆட்சியைப் பகைத்தார்கள். ரோமர்கள்மேல் அவர்களுக்குக் கடுங்கோபம். யூதேயா ரோம ஆட்சிக்குட்பட்டிருந்தபோதும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் யூதேயாவில் ரோமப் படைகள் நிறுத்தப்படவில்லை. யூதேயாவுக்கு அருகிலிருந்த சிரியாவில்தான் ரோமப் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆங்காங்கு படைகளை நிறுத்துவதில் ரோமர்கள் கிரேக்க மன்னன் அலெக்சாந்தரின் கொள்கையையே பின்பற்றினார்கள் என்று தெரிகிறது. அவனுடைய கொள்கை என்ன? தாங்கள் தோற்கடித்த நாட்டுப் படைகளையே தங்கள் வேலையைச் செய்வதற்கு அவர்கள் பயன்படுத்தினார்கள். எனவே, ரோமர்கள் தாங்கள் முறியடித்த சிரியப் படைகளையோ அல்லது எகிப்தியப் படைகளையோதான் யூதேயாவில் நிறுத்தினார்கள். அவர்களை ரோமப் படை என்றும் சொல்லலாம். ஏனென்றால், அவர்கள் சிரியர்களோ, எகிப்தியர்களோ, ரோமப் பேரரசுக்காக வேலைசெய்தார்கள். ஆனால், அவர்கள் இனத்தால் ரோமர்கள் இல்லை.

மேலும், முதல் நூற்றாண்டில் சில நூறுவீரர்களே யூதேயாவில் இருந்திருப்பார்கள். அப்படியானால், யூதேயாவை எப்படிக் கட்டி ஆண்டார்கள்? உள்ளூர்த் தலைவர்களோடு ஒருவிதமான ஒப்பந்தம் செய்துகொண்டு ஆட்சி நடத்தினார்கள். தேவைப்பட்டால், பலாத்காரம்செய்து தங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார்கள். கி.பி 50வாக்கில் யூதேயாவில் யூதர்களின் கலவரம் அதிகரிக்கத்தொடங்கியபின்தான் யூதேயாவில் உரோமப் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியது.

பொந்து பிலாத்து, ஏரோது மன்னன், இவர்களெல்லாம் யார்? பொந்து பிலாத்து எப்படி யூதேயாவின் தேசாதிபதியானான்?

ஏரோது, ரோமப் பேரரசின் தயவில், யூதேயாவை ஆண்ட ஓர் இதுமேய சிற்றரசன். யூதேயா தன்னாட்சி உரிமையுடைய ஓர் அரசு. இயேசு பெத்லெகேமில் பிறந்தபோது இவன்தான் யூதேயாவில் ஆட்சிசெய்துகொண்டிருந்தான். இவன்தான் பல குழந்தைகளைப் படுகொலைசெய்த பைத்தியக்காரன். சிற்றரசனாகிய ஏரோது மரித்தபின், உரோமப் பேரரசு அவன் ஆண்ட பகுதிகளை அவனுடைய மூன்று மகன்களுக்கும், ஒரு சகோதரிக்கும் பங்கிட்டுக் கொடுத்தது. அதன்படி அவனுடைய ஒரு மகன் ஆர்கேலேயஸ் யூதேயா, சமாரியா, இதுமேயா ஆகிய பகுதிகளையும், இன்னொரு மகன் அந்திப்பாஸ் கலிலேயா, பெரேயா பகுதிகளையும், வேறொரு மகன் பிலிப் யோர்தான் ஆற்றின் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள பகுதிகளையும், அவனுடைய சகோதரி சலோமி சில நகரங்களையும் ஆளத் தொடங்கினார்கள். ரோமப் பேரரசின் தயவில் ஆர்கேலேயஸ் 7 அல்லது 8 ஆண்டுகள் தொடர்ந்து யூதேயாவில் ஆட்சிசெய்தான். ஒருபுறம் அவனுடைய ஆட்சி கொடுமையானது, இன்னொருபுறம் திறமையற்றது. அவனுடைய அப்பா ஏரோதும் கொடுமையானவன்தான்; ஆனால், குறைந்தபட்சம் திறமையானவன். ஆர்கேலேயசின் ஆட்சியின்கீழ் வாழ்ந்த மக்கள் யூதேயாவை ரோமப் பேரரசின் நேரடி ஆளுகைக்கு உட்பட்ட ஒரு மாநிலமாக அறிவிக்குமாறு ரோமில் இருந்த அகுஸ்து இராயனுக்கு முறையிட்டார்கள். யூதேயா உரோமின் நேரடி ஆளுகையின்கீழ் இருக்கிற ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டால் உரோமப் பேரரசு உரோமிலிருந்து ஓர் ஆட்சியாளரை யூதேயாவுக்கு அனுப்பலாம் என்று சொன்னார்கள். யூதேயா உரோமப் பேரரசின் ஓர் இரண்டாந்தர மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இரண்டாந்தர மாநிலம் என்றால் அங்கு செனட் இருக்காது. வேறொரு மாநிலத்தில் இருக்கும் செனட்டுக்குக் கட்டுப்பட்டது. இந்த ஏற்பாட்டின்படி யூதேயா சிரியாவின் செனட்டுக்குக்கீழ் வந்தது. யூதேயா இப்போது உரோமப் பேரரசின் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டதால் பொந்து பிலாத்து உரோமப் பேரரசின் பிரதிநிதியாக யூதேயாவின் தேசாதிபதியாக நியமிக்கப்பட்டார். ரோமப் பேரரசர்கள் பாலஸ்தீனாவை நேரடியாக ஆட்சிசெய்யாமல் தங்களுடைய பிரதிநிதிகளைக் கொண்டு ஆண்டார்கள். இந்தப்பிரதிநிதிகளுக்கு முழு அதிகாரமும் அளிக்கப்பட்டது. பொதுஒழுங்கைப் பராமரிப்பதும், உரோமைப் பேரரசுக்குச் சேரவேண்டிய வரியை வசூலிப்பையும் இவர்களுடைய முக்கியப் பொறுப்பாகும். பொந்து பிலாத்து யூதேயாவின் தேசாதிபதியாக நியமிக்கப்பட்டவுடன் ஆர்கேலேயஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டான். திபேரி இராயனால் நியமிக்கப்பட்ட பொந்து பிலாத்து கி.பி 26முதல் கி.பி 36வரை பத்து ஆண்டுகள் பதவியில் இருந்தான்.

இயேசு கிறிஸ்துவின் காலத்தில், பாலஸ்தீனத்தில் யூதமதத்தைக்கட்டிக் காக்க, போற்றி வளர்க்க , மதத்தலைவர்கள் பலர் வாழ்ந்தார்கள்.

ரோமர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கிடையே சமூக வாழ்க்கைநிலையிலும், மதக் கொள்கைகளிலும், அரசியல் கருத்துக்களிலும் வித்தியாசமான பல்வேறு மதப்பிரிவுகள் இருந்தன. பரிசேயர்கள், சதுசேயர்கள், எசேனியர்கள். திருச்சட்டமே முக்கியம் என்று பறைசாற்றிய பரிசேயர்கள், மனித சுதந்திரமே அடிப்படை உண்மை என்று போதித்த சதுசேயர், கடுமையான துறவறவாழ்க்கையை மேற்கொண்ட எசேனியர்கள் என்ற பல்வேறு மதவாதிகளை நாம் பாலஸ்தீனத்தில் காண்கிறோம்.

i. சதுசேயர்கள்

சமூகரீதியாக சதுசேயர்கள் ஆதிக்கவாதிகள், பிரபுத்துவவாதிகள், மேல்தட்டுமக்கள், செல்வாக்குள்ளவர்கள், செல்வந்தர்கள், உயர்பதவிகளில் இருந்தவர்கள், பணக்கார வியாபாரிகள், நிலச்சுவான்தார்கள், ஆலயத்தின் ஆசாரியர்கள், சனகெரிப் சங்கத்தில் பெரும்பான்மை கொண்டவர்கள். அவர்கள் ஏறக்குறைய நம்மூர் அரசியல்வாதிகளைப்போல் செயல்பட்டார்கள்.

ii. பரிசேயர்கள்

இன்னொரு முக்கியமான குழு பரிசேயர்கள். பொதுவாக உழைக்கும் மக்களின் பிரதிநிதிகள், மக்களின் மரியாதையைப் பெற்றவர்கள், கிரேக்கக் கலாச்சாரத்தின் தாக்கத்திலிருந்து யூத மதத்தைப் பாதுகாப்பது அதன் ஆவிக்குரிய வாரிசுகளாகிய தங்களுடைய தலையாய கடமை என்று இவர்கள் கருதினார்கள். தோரா என்ற சட்டநூலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள், யூதச் சட்டத்திற்கு மாறுபாடான எதையும் எதிர்த்தவர்கள். சட்டங்களை நுணுக்கமாகக் கடைப்பிடித்தால்தான் யூதஇனம் நிலைத்து நிற்கும் என்று நம்பியவர்கள். யூத மதத்துக்குள் கிரேக்கக் கலாச்சாரம் நுழைவதை எதிர்த்துப் போரிட்ட மக்கபேயர்களுக்கு ஆதரவு அளித்தவர்கள். கி.மு 134-104இல் ஜாண் கிர்கான்ஸ் என்ற மன்னன் 50000 பரிசேயர்களைக் கொன்றான் என்று உங்களுக்குத் தெரியுமா? “சட்டங்களைக் குறையற அனுசரிக்க வேண்டும்’’ என்றுசொல்பவர்கள் பரிசேயர்கள். ஆனால்,”ஊரோடு ஒத்து வாழ்ந்தால்போதும்’’ என்பவர்கள் சதுசேயர்கள்.

iii. எசேனியர்கள்

இன்னொரு சாரார் இருந்தார்கள். அவர்கள் கொஞ்சப்பேர்தான். அவர்கள் துறவிகள், சந்நியாசிகள், பற்றற்றவர்கள். இவர்கள் எசேனியர்கள் என்றழைக்கப்பட்டார்கள். இவர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட பொதுவாழ்க்கையை மேற்கொண்டார்கள்; ஆழ்ந்த தியானத்தின்மூலம் பரலோக இராஜ்ஜியத்தின் மறைபொருளை அறிந்துகொள்ளமுற்பட்டார்கள். ‘மேசியாவின்’ வருகைக்காகத் தங்களையே தயார் செய்து கொண்டிருந்தார்கள். சடங்கு சம்பிரதாயங்களை அறவே நீக்கி, கடுமையான துறவறவாழ்க்கையைப் பின்பற்றினார்கள். இவர்கள் திருமணம் செய்யவில்லை; சொந்த உடைமை என்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை. மற்ற இரு மதவாதிகளைவிட இவர்கள் மோசேயின் சட்டங்களைப் பெரிதும் போற்றினார்கள். இவர்கள் மற்ற யூதரிடையே அதிகச் செல்வாக்குப் பெற்றதாகத் தெரியவில்லை.

சாக்கடல் அருகே கும்ரான் குகைகளில் 1950களில் கண்டெடுக்கப்பட்ட சுருள்கள் இவர்களால் எழுதப்பட்டவை. பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, இவர்களுடைய பெயர்கூடக் குறிப்பிடப்படவில்லை. எனினும் யோவான் ஸ்நானன் இவர்களிடையே வாழ்ந்திருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர். புதிய ஏற்பாட்டில் நேரடியான குறிப்புகள் இல்லை. ஆனால், மறைமுகமான குறிப்புக்கள் இருக்கின்றன. லூக்கா 22இல் சொல்லப்பட்டுள்ள தண்ணீர்குடம் சுமந்துசெல்பவன், நடபடிகள் 6இல் சொல்லப்பட்டுள்ள ஆசாரியர்கள் எசேனியர்களாகத்தான் இருக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

யூத மதத்தின் பல்வேறு பிரிவுகளைப்பற்றிச் சொல்லவேண்டிய அவசியம் என்ன? யூதமத்தில் எந்தப் பிரிவினையும் இல்லாமல், எல்லாரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் ஒருவேளை அவர்கள் கிறிஸ்தவத்தை எதிர்த்திருக்கக்கூடும். ஒற்றுமை இல்லாததால், கிறிஸ்துவின் நற்செய்தி பரவுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

10. மக்களின் எதிர்பார்ப்பு

பத்தாவது இன்னொரு முக்கியமான காரியம் என்னவென்றால், அந்தக் காலகட்டத்தில் மேசியா சீக்கிரம் வருவார் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். யோவான் 4ஆம் அதிகாரத்தில் சமாரியப்பெண் இயேசுவிடம், “கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்,” என்று கூறுகிறாள். இது ஆச்சரியமாக இல்லையா? இவள் யூதப் பெண் இல்லை. ஆனால், இவளுக்கு மேசியாவின் வருகையைப்பற்றித் தெரிந்திருக்கிறது. இதற்கு ஒரு காரணம் யோவான் ஸ்நானனின் ஊழியம் என்று சொல்லலாம். யோவான் ஸ்நானனின் ஊழியம் மேசியாவின் வருகையைப்பற்றியது. “கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணுங்கள்.” அதுதான் அவருடைய செய்தி. அவர் மேசியாவின் முன்னோடி. மக்களுடைய அரசியல் வாழ்க்கையிலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இருந்த பல்வேறு காரணிகள் அவர்கள் மேசியாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே, கிறிஸ்துவே மேசியா என்பதை அவர்களால் உடனே ஏற்றுக்கொள்ள முடிந்தது.

இத்தனை காரணிகளை அறியும்போது, “முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவம் எந்தத் தடையுமின்றி இவ்வளவு வேகமாக எப்படிப் பரவியது என்று இப்போது புரிகிறது,” என்று நீங்கள் சொல்வீர்கள். மக்கள் மேசியாவை வரவேற்கத் தயாராயிருந்தார்கள். கிறிஸ்தவத்தை முழுமூச்சாக எதிர்க்க யூதமதத்தில் ஒற்றுமை இல்லை. வியாபாரத்தின் விளைவாக கலாச்சாரம், கருத்துக்கள் பரிமாற்றம் நடைபெற்றது. ஒரே மொழி இருந்தது. மதச் சகிப்புத்தன்மை இருந்தது. பன்முகத்தன்மை இருந்தது. சட்டம் ஒழுங்கு நிலவியது. 

ஆனால், ஒரு முக்கியமான காரியத்தை நினைவில்கொள்ளுங்கள். இவையெல்லாம் இருந்தபோதும் கிறிஸ்தவம் இவ்வளவு வேகமாக இத்தனை நாடுகளில் பரவியதென்றால் அது தேவனுடைய இறையாண்மை, அது அவருடைய அற்புத செயல்.

இன்னொரு முக்கியமான காரணத்தையும் சொல்லுகிறேன்.

11. ஜெப ஆலயங்கள்

புதிய ஏற்பாட்டில், குறிப்பாக நடபடிகளில், ஜெப ஆலயம் என்ற வார்த்தையை நாம் பல இடங்களில் வாசிக்கிறோம். இயேசுவின் காலத்தில் பாலஸ்தீனத்தில் பல ஜெப ஆலயங்கள் இருந்தன. இஸ்ரயேல் மக்கள் பாபிலோனில் அடிமைப்பட்டிருந்தபோது, எருசலேமிலிருந்தும் ஆலயத்திலிருந்தும் வெகுதொலைவில் இருந்தார்கள். அப்போது ஒன்றாகக்கூடி ஜெபிக்கவும், மோசேயின் நியாயப்பிரமாணத்தையும், மத ஒழுங்குகளையும் வாசிக்கவும் ஆர்வம் எழுந்திருக்கலாம். எருசலேம் ஆலயத்தில் ஆராதிக்க இயலாததால், தேவனை ஆராதிக்க அவர்கள் அவ்வப்போது ஒன்றாகக்கூடி வரவேண்டிய தேவையை உணர்ந்திருக்கலாம். அப்படிக் கூடி ஜெபித்த இடங்கள் ஜெபஆலயங்கள் என்றழைக்கப்பட்டன.

இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிலிருந்து நாடு திரும்பியபோது எஸ்ரா இஸ்ரயேலரின் ஆசாரியனாகவும், போதகனாகவும், தலைவனாகவும் இருந்தார். இவருடைய காலத்தில் யூதேயாவில் ஜெப ஆலயங்களை உருவாக்கியிருக்கலாம்.

எருசலேமில் பெரிய தேவாலயம் இருந்தபோதும், யூதர்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் சிறிய ஜெபஆலயங்களும் இருந்தன. யூதர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதிகளில், அப்பகுதிப் பெரியோர்கள் ஒன்று சேர்ந்து ஜெபஆலயங்கள் அமைப்பது வழக்கம். தன் வேலைக்காரனுக்காக இயேசுவிடம் மன்றாடிய ரோம நூற்றுவர் தலைவன் தன் சொந்தப் பணத்தில் ஜெப ஆலயம் ஒன்றைக் கட்டியதுபோல், தாராள குணமுள்ளவர்கள் ஜெப ஆலயங்கள் அமைப்பதும் உண்டு. எருசலேமில் மாத்திரம் நானூறுக்கும் மேற்பட்ட ஜெபஆலயங்கள் இருந்ததாகச் சொல்லுகிறார்கள். இந்த ஜெபஆலயங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்தன, இது அவர்களுடைய வாழ்க்கையின் மையமாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். ஜெபஆலயங்கள் இல்லையென்றால் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை இல்லை என்று சொல்லும் அளவுக்கு இது அவர்களோடு பின்னிப்பிணைந்திருந்தது. எருசலேம் நகரமும், தேவாலயமும் கி.பி.70இல் ரோமப் படைகளால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டபிறகும், யூதர்கள் ஒரு பிரத்தியேகமான இனமாக இருந்ததற்கு இந்த ஜெபஆலயங்களே காரணம்.

ஏனென்றால், ஏற்கெனவே எருசலேமிலிருந்து வெகு தூரத்தில் வாழ்ந்த இஸ்ரயேலர்களுக்கு எருசலேம் ஆலயத்தின் ஆராதனையை ஈடுசெய்யும் முறையில் ஜெப ஆலயங்களின் ஆராதனை பயன்பட்டது. எருசலேம் ஆலயம் கி.பி. 70 இல்அழிக்கப்பட்டபிறகு, ஜெபஆலயங்கள் பெருகின. ஓய்வுநாளின் காலையிலும் மாலையிலும் கூட்டங்கள் நடைபெற்றன. சில ஆண்டுகளுக்குப்பிறகு திங்கள், வியாழன்போன்ற நாட்களிலும் கூட ஆரம்பித்தார்கள்.ஒவ்வொரு முறையும் தேவன்மேல் தங்களுக்கிருக்கும் அன்பையும் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தும் வசனங்களை வாசித்தார்கள்.

எருசலேம் தேவாலயத்தில் பல்வேறு பலிகள் செலுத்தப்பட்டன. ஆனால், ஜெப ஆலயங்களில் தேவனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஜெபஆலயங்களைப்பற்றிச் சொல்வதற்கு ஒரு முக்கியமாக காரணம் உண்டு. அது என்னவென்றால், கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்த நாட்களில் இந்த ஜெபஆலயங்களே சபையையும் யூதமதத்தையும் இணைக்கும் பாலமாக இருந்தன.

ஜெப ஆலயங்கள் தேவனை ஆராதிக்கும் இடங்களாகவும், மதக் கடமைகளைப் பயிற்றுவிக்கும் பள்ளியாகவும், நீதி விசாரிக்கும் மன்றமாகவும் பயன்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட ஒருவரேயன்றி விருப்பமுடைய எவரும் ஆராதனை நடத்தலாம். எனவேதான், ஆண்டவராகிய இயேசுவும் அவருடைய சீடர்களும் எங்கு போனாலும் சரி, அங்கிருந்த ஜெபஆலயங்களுக்குப் போவதை அவர்கள் தங்கள் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அது மட்டும் அல்ல, அங்கு போனபோது தேவனுடைய வார்த்தையை வாசித்து அதற்கு வியாக்கியானமும் செய்தார்கள். அப்போஸ்தலர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தார்கள்.

ஜெபஆலயங்கள் பரவியிருந்த விதத்தையும், புறவினத்தாரிடையேயும் யூதர்களிடையேயும் அது ஏற்படுத்தியிருந்த தாக்கத்தையும் பார்க்கும்போது, நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும், அதன் விளைவாக சபைகளை நிறுவுவதற்கும் பரிசுத்த ஆவியானவர் எவ்வளவு அற்புதமாக செயல்பட்டிருக்கிறார் என்பதைப் பாரக்கமுடிகிறது. ஜெபஆயலங்களைப் பரிசுத்த ஆவியானவர் ஆயத்தம்பண்ணியிருந்தார் என்றே சொல்ல வேண்டும். அங்கும் இங்கும் சிதறிப்போயிருந்த யூதர்கள் தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளை ஓரளவுக்கு அறிந்திருந்தார்கள் என்று சொல்லலாம். உண்மையான தேவனை அவர்களுக்குத் தெரியும். தேவனைப்பற்றிய அறிவு ஓரளவுக்கு அவர்களுக்கு இருந்தது. எனவே, அவர்கள் தாங்கள் இருந்த இடங்களில் அஞ்ஞானிகளிடையே மெய்யான தேவனை அறிவித்தார்கள். அதன் விளைவாக புறவினத்தார் பலர் மெய்யான தேவனை அறிந்துகொண்டார்கள்.

ஜெப ஆலயங்கள் நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுகிறதற்கு நம்மைக் கிறிஸ்துவிடம் அழைத்துச்செல்லும் வழித்துணையாக அமைந்த நியாயப்பிரமானத்துக்கு முக்கிய இடம் கொடுத்தன. எனவே, நற்செய்தி வேகமாகப் பரவுவதற்கும், கிறிஸ்தவர்கள் தேவனுக்கு உகந்தவர்களாக மாறுவதற்கும் இத்தகைய ஜெப ஆலயங்கள் ஏற்கெனவே தயாராக இருந்தன எனலாம்.

ரோமப் பேரரசின் ஓர் இரண்டாந்தரமான மாநிலத்திலிருந்து தொடங்கிய, ஒரு காலகட்டத்தில் அருவருக்கப்பட்ட, சட்டவிரோதமானதென்று அறிவிக்கப்பட்ட, சித்திரவதைக்குள்ளான கிறிஸ்தவம் மேற்கத்திய நாகரீகத்தில் மட்டும் அல்ல, உலக நாகரீத்திலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் மாபெரும் சக்தியாக மாறியது என்றால் நம்பமுடிகிறதா? அது தேவனுடைய இறையாண்மை. ஆண்டவராகிய இயேசு பரமேறிச் சென்றபின் இருந்தவர்கள் ஒரு சிறு கூட்டம் மக்கள், அற்பமானவர்கள், சித்திரவைக்குள்ளானவர்கள். எப்படி இது சாத்தியமாயிற்று? இதுதான் சபை வரலாறு, இதுதான் கிறிஸ்தவத்தின் வரலாறு. சீர்திருத்தக் காலம்வரை பேசுவோம்.

VI. அப்போஸ்தலிக்க சபையின் குணநலன்கள்

சரி, மீண்டும் அப்போஸ்தல சபைக்கு வருவோம். இந்தக் காலத்துச் சபையின் சில குணங்களை, பண்புகளை, குணநலன்களை நாம் இப்போது பார்ப்போம்.

1. அப்போஸ்தலர்களின் அதிகாரபூர்வமான இருப்பு

இயேசுவோடு வாழ்ந்த, இயேசுவால் அனுப்பப்பட்ட, இயேசுவிடமிருந்து நேரடியாகக் கற்ற அப்போஸ்தலர்கள் அங்கு இருந்தார்கள். அதனால் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் உறுதியான அடித்தளம் போடப்பட்டது. எபேசியர் 2:20யை வாசியுங்கள். “அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்.” இது மிக முக்கியமான ஒரு வசனம். இந்த வசனத்தை வாசிக்கும்போது இப்போது இதன் வரலாற்று முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும். அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் என்பவர்களின் அடித்தளம் போடப்பட்டாயிற்று. வீட்டைக் கட்டும்போது, அடித்தளத்தை இடித்து இடித்துக் கட்டவேண்டுமா? போடப்பட்டிருக்கும் அடித்தளம் நல்ல அடித்தளம். ஏற்கெனவே போடப்பட்ட அடித்தளமும், மூலைக்கல்லும் போதும். முதல் நூற்றாண்டிலேயே சபையைக் கட்டுவதற்குத் தேவையான சரியான அடித்தளம் போட்டாயிற்று. நம் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அவசியமான அடித்தளம் புதிய ஏற்பாட்டில் போடப்பட்டாயிற்று. இயேசு என்ற நபரைப்பற்றியும், அவருடைய வேலையைப்பற்றியும் அப்போஸ்தலர்கள் அதிகாரத்தோடு, அதிகாரபூர்வமாக எழுதிவைத்திருக்கிறார்கள்.

2. புதிய ஏற்பாடு

முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலர்கள் நற்செய்தியை அறிவித்ததோடு நிறுத்தவில்லை. அவர்கள் செய்த இன்னொரு முக்கியமான பணிவிடை என்னவென்றால் தங்களுடைய காலத்துக்குப்பின் சீடர்களை வழிநடத்தத் தலைவர்கள் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக தேவனுடைய பணியைத் தொடர தகுதியான, உண்மையும் உத்தமுமான தலைவர்களை நியமித்தார்கள். நியமிக்கப்பட்டவர்களும் ஆர்வமுடன் நற்செய்தி அறிவித்தார்கள், சபைகளை மேய்த்துப்பேணினார்கள்.

காலங்கள் உருண்டோடின. இயேசுவைப்பற்றிய நிகழ்வுகளும், அவருடைய போதனைகளும் இன்னும் எழுதப்படவில்லை. ஆங்காங்கே சபைகளில் நியமித்த தலைவர்கள் என்ன போதிக்கிறார்கள் என்று அவர்களால் கண்காணிக்க முடியவில்லை. இயேசுவின் போதனைகள் முழுமையாய்ச் சீடர்களைச் சென்றடைகிறதா என்றும் உறுதிப்படுத்தமுடியவில்லை. எனவே, அப்போஸ்தலர்கள் இயேசு என்ற நபரையும், அவர் செய்து முடித்த வேலையைப்பற்றியும், தாங்கள் விசுவாசிகளுக்குச் சொல்ல நினைத்ததையும் எழுதத் தீர்மானித்தார்கள். பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் அவர்கள் எல்லாவற்றையும் எழுதிவைத்தார்கள். அவர்கள் எழுதியவைதான் இன்று புதிய ஏற்பாடாக நம்மிடம் இருக்கிறது. எப்படி எழுதினார்கள்? ஏன் எழுதினார்கள்? அவர்கள் எழுதாமல் போயிருந்தால் என்னவாயிருக்கும்? எழுதிவைத்துவிட்டுபோனபிறகும் எத்தனை குளறுபடிகள்! மதத்தின் பெயரால் எத்தனை கொலைகள்! எவ்வளவு அழிவுகள்! எதையும் எழுதாமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனைசெய்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

இன்று நாம் கடிதம் எழுதும்போது இடத்தையும், தேதியையும் குறிப்பிட்டு எழுதுவதுபோல், அந்நாட்களில் எழுதவில்லை. கடிதத்தின் உள்ளடக்கத்தை வைத்துத்தான் வருடத்தைக் கணிக்கவேண்டியிருக்கிறது. எனவே, நற்செய்திகளும், நிருபங்களும் எழுதப்பட்ட காலத்தைத் திட்டவட்டமாக, உறுதியாக, சொல்லமுடியாது. கிட்டத்தட்ட, ஏறக்குறைய, சுமார் என்றுதான் சொல்ல முடியும். எனவே, நான் வருடங்களைச் சொல்லும்போதும் அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்.

கால வரிசையின்படி நான் சொல்லுகிறேன்.

கி.பி 45-யாக்கோபின் நிருபமும், பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபமும்தான் முதலாவது எழுதப்பட்டவை என்று அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். உலகெங்கும் சிதறுண்டு வாழும் இஸ்ரயேலின் பன்னிரெண்டு கோத்திரத்தாருக்கும் யாக்கோபு தன் நிருபத்தை கி.பி 45 இல் எழுதியிருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.

கி.பி. 49-யூதமயமாக்கும் கிறிஸ்தவர்களின் போதனையை முறியடிக்கக் கடுமையான முறையில் பவுல் கலாத்தியருக்கு நிருபம் எழுதுகிறார். இதை அவர் கி.பி. 49இல் எழுதியிருக்கலாம் என்பது பொதுவான கருத்து.

கி.பி 50-51-கிறிஸ்து எந்த நாளில் திரும்பிவருவார் எனத் தெரியாததால், அவருடைய வருகைக்காக எப்போதும் தயாராயிருக்குமாறு வேண்டி, பவுல் கொரிந்துவிலிருந்து கி.பி 50-51இல் தன் இரண்டாவது மிஷனரிப் பயணத்தின்போது தெசலோனிக்கேயருக்கு முதல் நிருபத்தை எழுதினார்.

கி.பி 50-51-ஆண்டவருடைய வருகை ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டது என்ற சிலருடைய தவறான கருத்தையும், இல்லை அது நெருங்கி வந்துவிட்டது என்ற வேறு சிலருடைய தவறான கருத்தையும் மாற்ற பவுல் தெசலோனிக்கேயருக்குத் தன் இரண்டாவது நிருபத்தை கி.பி 50-51இல் தன் இரண்டாவது மிஷனரிப் பயணத்தின்போது எழுதியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கி.பி. 54-கொரிந்துவில் இருந்த சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வகையில் பவுல் கொரிந்தியருக்குத் தன் முதல் நிருபத்தை கி.பி. 54இல் தன் மூன்றாவது மிஷனரிப் பயணத்தின்போது எழுதியிருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து.

கி.பி. 55-மனந்திரும்பிய கொரிந்தியர்களை ஆற்றும் நோக்கத்தோடும், தன் ஊழியத்தின் அதிகாரத்தை ஏற்காதவர்களை ஏற்கச்செய்யும் நோக்கத்தோடும் பவுல் கொரிந்தியர்களுக்குத் தன் இரண்டாவது நிருபத்தை கி.பி. 55இல் தன் மூன்றாவது மிஷனரிப் பயணத்தின்போது எழுதியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

கி.பி. 55-வேதாகமத்தின் மிக ஆழமான இறையியல் புத்தகமாகிய ரோமருக்கு எழுதிய நிருபத்தைப் பவுல் கொரிந்து நகரிலிருந்து கி.பி. 55இல் தன் மூன்றாவது மிஷனரிப் பயணத்தின்போது எழுதியிருக்க வேண்டும்.

கி.பி. 55-60- தம் சிலுவை மரணத்தால் இயேசு மக்களுக்கு மீட்பைக் கொண்டுவந்துவிட்டார் என்று கூறும் நற்செய்தியை மாற்கு கி.பி. 50களில் அல்லது 60களில் எழுதியிருக்க வேண்டும் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

கி.பி. 61-பவுல் கி.பி. 61ஆம் ஆண்டு ரோமச் சிறையிலிருந்து கொலோசே நகரிலிருந்த கிறிஸ்தவரும், செல்வந்தரும், தன் நண்பருமான பிலேமோன் தப்பியோடிய அடிமையாகிய ஒநேசிமுவை மன்னித்து, சகோதரனாக ஏற்றுக்கொள்ளுமாறு ஒரு கடிதத்தை எழுதினார்.

கி.பி. 60-கொலோசெயில் விரவிக்கிடந்த பாரம்பரியச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் தருதல் (கொலோ 2:16-17; 3:11), உடல் ஒறுத்தல் (கொலோ 2:21, 23), தேவதூதர் ஆராதனை (கொலோ 2:18; 2:23), மனித ஞானத்திலும், பாரம்பரியத்திலும் மிகுந்த நம்பிக்கை வைத்தல் (கொலோ 2:4,8) போன்ற ஞான உணர்வுக் கொள்கையைக் கண்டித்தும், கிறிஸ்தவ உண்மையை நிலைநிறுத்தவும் பவுல் சிறையிலிருந்து கி.பி. 60வாக்கில் கொலோசெயருக்கு நிருபத்தை எழுதியிருக்கலாம்.

கி.பி. 60-தேவனுடைய நித்தியத் திட்டம் மனுக்குலத்தை மட்டுமல்ல, படைப்பு அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் கூட்டிச்சேர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை வலியுறுத்தும் எபேசியருக்கு எழுதிய நிருபத்தைப் பவுல் கி.பி. 60வாக்கில் எழுதியிருக்கலாம் .

கி.பி 60-லூக்கா இயேசுவைப்பற்றி முறையாகவும், முழுமையாகவும், வரலாற்றுப் பின்ணணியோடும், எல்லாவற்றையும் உறுதிப்படுத்தும் வகையில் கி.பி 60இல் அந்தியோக்கியா, ரோம்போன்ற ஏதேனும் ஒரு நகரிலிருந்து இந்நற்செய்தியை எழுதியிருக்கலாம்.

கி.பி 60-நற்செய்திப் பணியும், ஆவியானவரின் துணையோடு தேவனுடைய மீட்பின் திட்டத்துக்குச் சாட்சி பகர்வதும் சபையின் கடமை என்று வலியுறுத்தி, லூக்கா நற்செய்தியின் தொடர்ச்சியும், இரண்டாம் பாகமுமாகிய, அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை லூக்கா கி.பி 60இல் ரோமிலிருந்து எழுதியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கி.பி. 61-தனக்கு உதவிசெய்த பிலிப்பியருக்கு நன்றி சொல்வதற்காகவும், அவர்கள் மகிழ்ச்சியோடும், மன உறுதியோடும் கிறிஸ்தவ விசுவாசத்தில் மிளிரவேண்டும் என்பதற்காகவும் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தை ரோமச் சிறையிலிருந்து கி.பி. 61இல் எழுதினார் என்பதே பாரம்பரியக் கருத்து.

கி.பி 62-தீமோத்தேயு தன் கடமைகளை எப்படி நிறைவேற்றவேண்டுமென்றும், தவறான போதனைகளை எப்படி எதிர்க்க வேண்டுமென்றும், சபையை எப்படி வழிநடத்த வேண்டுமென்றும் பவுல் தீமோத்தேயுவுக்கு முதல் நிருபத்தை மக்கதோனியாவிலிருந்து கி.பி 62இல் எழுதியிருக்கலாம்.

கி.பி 62-கிரேத்தா தீவில் ஊழியம்செய்துகொண்டிருந்த தீத்துவுக்கு அறிவுரைகள் கூறிப் பவுல் ஒரு நிருபத்தை கி.பி 62இல் எழுதியிருக்கலாம்.

கி.பி 63-தன் வாழ்வின் இறுதிக்கட்டம் நெருங்குவதை உணர்ந்து, தான் தேவனைச் சேவித்த விதத்தை நினைப்பூட்டி, தொடர்ந்து இயேசுவுக்குச் சாட்சி பகரவும், நற்செய்தி அறிவிக்கவும், முன்மாதிரியாக வாழவும் பவுல் தீமோத்தேயுவைப் பணித்து தீமோத்தேயுவுக்கு தன் இரண்டாவது நிருபத்தை ரோமச் சிறையிலிருந்து கி.பி 63இல் எழுதினார்.

கி.பி 63- சிறிய ஆசியாவில் இருந்த கிறிஸ்தவ சபைகளுக்குப் பேதுரு தன் முதல் நிருபத்தை கி.பி 63இல் எழுதியிருக்கலாம்.

கி.பி 63/64-பல போலிப் போதகர்கள் தோன்றி, உண்மையைத் திரித்து மக்களைத் தவறான வழியில் வாழத் தூண்டிய காலத்தில் பேதுரு தன் இரண்டாவது நிருபத்தை கி.பி 63/64இல் எழுதியிருக்கலாம்.

கி.பி 60-இயேசுவின் வாழ்க்கையையும், அவருடைய போதனைகளையும் தொகுத்தளிக்கும் மத்தேயு நற்செய்தியை மத்தேயு மத்திய தரைக் கடலை ஒட்டியிருக்கும் ஏதோவோர் இடத்திலிருந்து கி.பி 60வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம்.

கி.பி 60-இறையியல் கட்டுரையாகிய எபிரேயருக்கு எழுதிய நிருபத்தை பவுல் அல்லது அப்பொல்லோ கி.பி 60வாக்கில் எழுதியிருக்கலாம் என்பது பலருடைய கருத்து.

கி.பி 60-அப்போஸ்தலர்களின் போதனைகளை வலியுறுத்தியும், போலிப் போதகர்களின் போதனைகளைக் கண்டித்தும் யூதா கி.பி 60இல் தன் நிருபத்தை எழுதியிருக்கலாம்.

கி.பி.80-யோவான், கிறிஸ்துவை நேரடியாகக் கண்டிராத இரண்டாம் தலைமுறையினருக்கு அவரைப்பற்றிய நம்பத்தக்க சாட்சியை அளிப்பதற்காகவும் (20:29), முதல் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தோன்றிய சில தவறான கொள்கைகளை திருத்துவதற்காகவும் ஏறத்தாழ கி.பி.80இல் எபேசு நகரிலிருந்து தன் நற்செய்தி நூலை எழுதினார் என்பது கிறிஸ்தவ வரலாறு.

கி.பி.90-இயேசுவைப்பற்றிய தவறான கருத்துக்களைக் களையவும், கிறிஸ்தவ சமூகத்தின் ஆவிக்குரிய விழிப்புணர்வை ஆழப்படுத்தவும், அப்போஸ்தலனாகிய யோவான் தன் முதல் நிருபத்தை எபேசுவிலிருந்து கி.பி 90வாக்கில் எழுதினார்.

கி.பி.90-தவறான போதனையின் காரணமாகப் பிரிந்துசென்றவர்களைக்குறித்து எச்சரித்து யோவான் தன் இரண்டாவது நிருபத்தை எபேசுவிலிருந்து சுமார் கி.பி 90இல் எழுதினார்.

கி.பி.90-அப்போஸ்தலர் காலத்துச் சபையின் அதிகார அமைப்பைச் சுட்டிக்காட்டும் மூன்றாவது நிருபத்தை யோவான் காயுபுவுக்கு எபேசுவிலிருந்து சுமார் கி.பி 90இல் எழுதினார்.

கி.பி.90-சபை சித்திரவதைக்குள்ளான காலகட்டத்தில் பத்மு தீவுக்குக் கடத்தப்பட்டடிருந்த யோவான் திருவெளிப்பாட்டை கி.பி 90வாக்கில் எழுதினார்.

அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதியவை புதிய ஏற்பாடாக மாறின. அவர்கள் எழுதாமல் போயிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்.

3. மகிமையான சபை, மகிமையற்ற சபை

அப்போஸ்தலர் காலத்துச் சபை வாழ்க்கையைப் பாருங்கள். சில நேரங்களில் அங்கிருந்த சபை வாழ்க்கையைப் பார்த்து நாம் மலைக்கிறோம்; ஏனென்றால் அது அவ்வளவு பிரமாதமாக, அருமையாக, இருக்கிறது. அதைப் பார்க்கும்போது, “இதுதான் சபை வாழ்க்கையின் உச்சக்கட்டம். நான் அந்தச் சபையில் இருந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட சபை வாழ்க்கையை அனுபவித்திருக்க வேண்டும்,” என்று எண்ணத் தோன்றும். ஆம், சில நேரங்களில் சபை வாழ்க்கை மிகவும் மகிமையாக இருந்தது.

எடுத்துக்காட்டாக, “உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” என்று ரோமர் 1:8இல் பவுல் ரோம சபையைப்பற்றி சாட்சி சொல்லுகிறார் என்றால், அந்தச் சபையில் கிறிஸ்தவர்கள் எவ்வளவு மகிமையாக வாழ்ந்திருப்பார்கள்! “உங்கள் விசுவாசம் உலகெங்கும் பிரசித்தமாயிருக்கிறது, முழு உலகத்திலும் தெரிந்திருக்கிறது.” என்னே சாட்சி! என்னே அழகு! என்னே வல்லமை! இதுபோன்ற அற்புதமான கூற்றுகள் புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் உள்ளன.

திருவெளிப்பாட்டில் ஆண்டவராகிய இயேசு ஒரு சபையைப்பற்றி சொன்னது உங்களுக்கு நினைவிருக்கிறதா? பிலதெல்பியா சபை. அந்தச் சபையின் தூதனுக்கு ஆவியானவர் என்ன சொன்னார்? பிலதெல்பியா என்று ஓர் இடம் இருந்தது. அங்கு சபை இருந்தது. இது ஒரு வரலாற்றுச் சபை. அன்று அங்கு இருந்த அந்தச் சபையைப்பற்றி ஆவியானவர் என்ன சொன்னார்? திருவெளிப்பாடு 3:7-13வரை. “பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன். என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.” ஆவியானவர் இந்தச் சபையின் தூதனுக்கு இப்படிச் சொன்னார் என்பதை வாசிக்கும்போது, “பிலதெல்பியா சபையில் அந்த நேரத்தில் நானும் இருந்திருக்க வேண்டும்,” என்று நீங்கள் விரும்பவில்லையா? என்னே மகிமையான, மகத்துவமான சபை! தேவனிடமிருந்து ஒரு சிறு திருத்தமோ, கடிந்துகொள்ளுதலோ, கண்டனமோ, கண்டித்தலோ இல்லை. மாறாக அவர் பாராட்டுகிறார், புகழ்கிறார்; அவர்களுக்கு வாக்குறுதிகளை வழங்குகிறார். வெகுமதி தருவதாகச் சொல்லுகிறார். மகிமையான சபை வாழ்க்கைக்கு இது ஓர் அற்புதமான, வல்லமையான எடுத்துக்காட்டு.

ஆனால், எல்லாச் சபைகளும் ரோமச் சபையைப்போலவோ, பிலதெல்பியா சபையைப்போலவோ மகிமையான சபையாக இருக்கவில்லை. அதே அப்போஸ்தலர் காலத்துச் சபைகளில் மகிமையற்ற நிலைமையும் இருந்தது. நிச்சயமாக உடனடியாக கொரிந்து சபை உங்கள் நினைவுக்கு வரும். 1 கொரிந்தியர் 5:1-2யை வாசியுங்கள். “உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே. இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.” இதுவும் அப்போஸ்தலர் காலத்துச் சபைதான். இது அதிர்ச்சியாக இல்லையா? அப்போஸ்தலனாகிய பவுல் நிறுவிய சபை, அவருடைய கண்காணிப்பில் இருந்த சபையில் இப்படிப்பட்ட அருவருப்பான பாவம். அவர் அங்கு இருந்தபோது இப்படி நடக்கவில்லைதான். ஆனால், அவர் நிறுவிய சபை. அவருடைய கண்காணிப்பில் இருந்த சபை. அவிசுவாசிகள்கூடச் செய்யப் பயப்படும் பாவத்தை விசுவாசிகள் செய்தார்கள். அதைப் பிற விசுவாசிகள் வேடிக்கை பார்த்தார்கள். சபை அப்படிப்பட்டவர்களைக் கடிந்துகொண்டு, கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் “நாங்கள் மிகவும் அன்பானவர்கள், மன்னிக்கிறவர்கள், தயவுள்ளவர்கள்,” என்று நாடகமாடினார்கள். எனவே, அப்போஸ்தலர் காலத்துச் சபைகளில் பிரச்சினைகள் இருந்தன.

திருவெளிப்பாட்டில் மகிமையான ஒரு சபையைப் பார்த்தோம். இப்போது மகிமையற்ற இன்னொரு சபையைப் பார்ப்போம். திருவெளிப்பாடு 3:14-22. இந்தச் சபையின் ஆவிக்குரிய தரத்தைப் பாருங்கள். இது தரமா தரக்குறைவா என்று முடிவுசெய்யுங்கள். “லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.” அப்போஸ்தலர் காலத்தில் இருந்த ஒரு சீர்கெட்ட சபை. “நான் உன்னை வாந்திபண்ணிப் போடுவேன். சபையை அழித்துவிடுவேன். நான் உன்னோடு இருக்க மாட்டேன்”. பெருமை! சுயதிருப்தி! கடிந்துகொள்கிறார், கண்டனம்செய்கிறார், கண்டிக்கிறார்.

எனவே, அப்போஸ்தலர் காலத்துச் சபையில் எல்லாம் மகிமையாக இருக்கவில்லை. இன்னொரு பகுதியையும் நாம் வாசிப்போம். கலாத்தியர் 1:6-9. “உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.” கலாத்தியா பகுதியில் இருந்த சபைகளுக்குப் பவுல் எழுதுகிறார். இது பவுலின் தீர்க்கமான, உறுதியான கூற்று. கிறிஸ்தவர்கள் அவர் பிரசங்கித்த நற்செய்தியை விட்டுவிட்டு வேறொரு செய்திக்குத் தாவிவிட்டார்கள். அவருடைய காலத்திலேயே! அதிர்ச்சியா அல்லது ஆச்சரியமா!

புதிய ஏற்பாட்டை வாசிக்கும்போது பல நேரங்களில், “ஆ! நானும் அவர்களுடைய காலத்தில் அங்கு இருந்திருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும்!” என்று நினைக்கிறோம். உண்மைதான். கற்றுக்கொள்வதற்கு, பின்பற்றுவதற்கு, பற்றிக்கொள்வதற்கு நிறையக் காரியங்கள் இருக்கின்றன. ஆனால், அங்கு இன்னொரு பக்கமும் இருந்தது என்பதை மறக்க வேண்டாம். அங்கு எதிர்மறையான காரியங்கள் இல்லவே இல்லை என்று நாம் நினைத்தால் நாம் நம்மை வஞ்சித்துக்கொள்கிறோம் என்று பொருள். பரிசுத்த ஆவியானவரின் ஞானத்தைக்கொண்டு அவர்கள் இவைகளோடு இடைப்படவேண்டியிருந்தது.

4. ரோமப் பேரரசெங்கும் நற்செய்தி

அப்போஸ்தலர்களின் காலத்தில் முதல் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தில் தோன்றிய கிறிஸ்தவம் படிப்படியாக ரோமப் பேரரசு முழுவதும் பரவியது. அகுஸ்து இராயன் (கி.மு. 29 - கி.பி. 14) ரோமப் பேரரசை மேற்கே ஸ்பெயின், வடக்கே இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யப் பகுதிகள், கருங்கடல், தெற்கே இத்தாலி, சிசிலி, வட ஆப்பிரிக்கா, எகிப்து, கிழக்கே கிரிஸ், பெர்சியா, சிரியா, அர்மீனியா என மிகவும் விரிவுபடுத்தியிருந்தான்.

பாலஸ்தீனத்தில் அப்போஸ்தலர்கள் நற்செய்தி அறிவித்ததால் கிறிஸ்தவம் பரவியது. இத்தாலியில் கி.பி. முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவம் பரவியது. அதே காலக் கட்டத்தில் தெற்கு பிரான்சிலும் கிறிஸ்தவம் வளர்ந்தது. வட ஆப்பிரிக்காவில் ‘குறிப்பாக எகிப்தில்’ கிறிஸ்தவம் பரவியது. கிரேக்க நாட்டுப் பகுதிகளில் அப்போஸ்தலனாகிய பவுல் நற்செய்தி அறிவித்தார். அதுபோலவே, சிறிய ஆசியா என்றழைக்கப்படும் இன்றைய துருக்கி, சிரியா, ஈரான், ஈராக், ஜோர்தான், தெற்கு ரஷ்ய பகுதிகளிலும் கிறிஸ்தவம் பரவியது.

எந்த அளவுக்கு நற்செய்தி வேகமாகவும், விரிவாகவும் பரவியது என்றால் கொலோசெயர் 1:4-6இல் பவுல் “பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது.” என்று நற்செய்தி உலகமெங்கும் பரம்புகிறது என்று பவுல் குறிப்பிடுகிறார். அவர் மிகைப்படுத்தி சொல்லுகிறாரோ! இல்லை. கிறிஸ்துவின் நற்செய்தி அவ்வளவு வேகமாகப் பரவியது. ஏராளமான மக்கள் மனந்திரும்பி இயேசுவை விசுவாசித்தார்கள். ரோமப் பேரரசின் எல்லையெங்கும் சபைகள் எழும்பின. ரோமர் 15:18-19இல், ” புறவினத்தாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு…இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்,” என்று பவுல் கூறுகிறார். இது பவுல் என்ற தனியொரு மனிதனின் ஊழியம். இந்த ஊழியத்தில் வேறு யாருக்கும் பங்கு இருந்ததுபோல் தெரியவில்லை. பவுல் மட்டுமே எருசலேமிலிருந்து இல்லிரிக்கம்வரை நற்செய்தி அறிவித்தார். இதைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துபாருங்கள். நடபடிகள் புத்தகம் எழுதிமுடிப்பதற்குமுன்பே பவுல் இல்லிரிக்கம்வரை நற்செய்தி அறிவித்ததாகச் சொல்லுகிறார். அதாவது, இத்தாலி, ரோம், அதையும்தாண்டி. வரைபடத்தைப் பார்த்தால் இது உங்களுக்குப் புரியும். இல்லிரிக்கம் இத்தாலி தீபகற்பத்துக்கு மேலே இருக்கிறது. இல்லிரிக்கம் என்பது இன்றைய அல்பானியா. வரைபடத்தில் பாருங்கள். நடபடிகள் புத்தகத்தில் இதைப்பற்றி எந்த விவரமும் இல்லை. இதன் பொருள் என்னவென்றால் அப்போஸ்தலர் காலத்திய எல்லா விவரங்களும்கூட நடபடிகளிலோ, நிருபங்களிலோ இல்லை.

பவுலைப்போல் வேறு எத்தனைபேர் இப்படி எங்கெல்லாம் போய் நற்செய்தி அறிவித்தார்கள், சபைகளை நிறுவினார்கள் என்ற விவரங்கள் அங்கு இல்லை. பிறருடைய ஊழியங்களைப்பற்றிய விவரங்கள் இல்லை என்பது மட்டும் இல்லை. பவுல் என்ற ஒரேவொரு மனிதன் ரோமப் பேரரசெங்கும் எப்படி நற்செய்தியை அறிவித்தான் என்பதைக்கூட நடபடிகள் முழுமையாகத் தரவில்லை. அவர் இல்லிரிக்கம் சென்று நற்செய்தி அறிவித்ததைப்பற்றிய எந்த விவரமும் இல்லை. முதல் நூற்றாண்டின் இறுதியில் ரோமப் பேரரசெங்கும் கிறிஸ்தவம் பரவியது. விசுவாசம் வேரூன்றியது. சபைகள் எழும்பின.

பெந்தெகொஸ்தே நாளில் அறுப்பின் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக உலகமெங்குமிருந்து யூதர்களும், யூதமதத்துக்கு மாறியவர்களும் எருசலேமுக்கு வந்திருந்தார்கள். வானத்தின் கீழிருக்கிற சகல நாடுகளிலுமிருந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்போது எருசலேமில் இருந்தார்கள். பார்த்தர், மேதர், எலாமீத்தர்கள், மெசொப்பொத்தாமியா, யூதேயா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து, லிபியா நாட்டினர், ரோமாபுரியர், யூதர், யூதமார்க்கத்தமைந்தவர்கள், கிரேத்தர், அரபியர் என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. அந்த நாளில் ஆவியானவர் பொழிந்தருளப்பட, தெய்வீக சமுதாயமாகிய சபையை தேவன் இந்தப் பூமியில் வெளியரங்கமாக நிறுவினார். விசுவாசித்தவர்கள் உடனே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குச் சாட்சிபகர ஆரம்பித்தார்கள். இவர்கள் நற்செய்தி அறிவிக்காதிருந்தால் மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டிருப்பார்கள்? ஏனென்றால், இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார் (அப். 2:47). எருசலேமுக்கு வந்திருந்தபோது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிப்போனபின், அங்கு இந்தப் புதிய ஜீவனுக்கு சாட்சிபகர்ந்தார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

பொதுவாக சபை வரலாற்றைப்பற்றிப் பேசும்போது பெயர் தெரியாத, முகம் தெரியாத கிறிஸ்தவர்களின் பங்களிப்பை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்கள் கிறிஸ்துவுக்கு உண்மையும், உத்தமுமாக வாழ்ந்தார்கள். அவர்கள் தனிப்பட்ட விதத்தில் தங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும், அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கும் நற்செய்தி அறிவித்தார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. பிரபலமான சபைத் தலைவர்களும், சபைப் பிதாக்களும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்காகவும், சபைகளை விரிவாக்குவதற்காகவும், சபைகளின் சாட்சிக்காகவும் எவ்வளவு பாடுபட்டார்களோ, அதே அளவுக்கு சாதாரண விசுவாசிகளும் பாடுபட்டார்கள் என்பதை தேவன் அறிவார்; தேவன் அவர்களுடைய பங்களிப்பை அங்கீகரிக்கிறார் என்று நான் உறுதியாக விசுவாசிக்கிறேன்.

5. கிறிஸ்தவம் அரசால் அங்கீகரிக்கப்படாத தனி மதம்

அதுவரை யூத மதத்தின் ஒரு பிரிவாகக் கருதப்பட்ட கிறிஸ்தவம், யூதமத்திலிருந்து பிரிந்து, ஆனால் அரசால் அங்கீகரிக்கப்படாத ஒரு தனி மதமாக மாறியது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத எந்த மதமும் ரோமாபுரியில் அனுமதிக்கப்படவில்லை. ரோமப் பேரரசில் இருந்த மதங்களை அரசால் அங்கீகரிக்கப்பட்டவை, அங்கீகரிக்கப்படாதவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். எந்த மதத்தின் நம்பிக்கையைக்குறித்தும் அரசு கவலைப்படவில்லை. எந்த மதமாவது சமுதாயத்தின் அமைதிக்கு ஊறு விளைவிக்கலாம், அரசின் நிலைத்தன்மைக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று அரசு நினைத்தால், சந்தேகித்தால் அதை அங்கீகரிக்கவில்லை, அனுமதிக்கவில்லை.

யூதமதம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. கிறிஸ்தவம் இன்னொரு மதமாகக் கருத்தப்படாமல், யூதமதத்தின் ஒரு பிரிவாகக் கருதப்பட்டது.

இயேசு ஒரு யூதன் என்று எல்லாருக்கும் தெரியும். அவருடைய சீடர்கள் அனைவரும் ஏறக்குறைய யூதர்கள். இயேசுவின் ஊழியம் பெரும்பாலும் யூதர்களுக்கிடையேதான் இருந்தது. இயேசுவைப் பின்பற்றியவர்கள் பெரும்பாலோர் யூதர்கள். அவர் பூமியில் வாழ்ந்தபோது புறவினத்தாரோடு அவ்வளவு நெருக்கமாகப் பழகவில்லை. அவர் பரமேறிச் சென்றபோது, பூமியில் விட்டுச்சென்ற,பெந்தெகோஸ்தே நாளில் மேலறையில் கூடியிருந்த 120பேரும் யூதர்கள். பெந்தேகோஸ்தே நாளில் இரட்சிக்கப்பட்ட 3000பேரும் பெரும்பாலும் யூதர்களே. முதல் 7, 8 ஆண்டுகளில் சபையில் முழுக்க முழுக்க யூதர்களே இருந்தார்கள்.எனவே, ரோம அரசாங்கத்தின் பார்வையில் அது ‘அனுமதிக்கப்பட்ட’ அல்லது ‘அங்கீகரிக்கப்பட்ட’ மதம்.

முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் தங்கள் குடையின்கீழ் வாழ்ந்து சட்டத்தின் பாதுகாப்பை அனுபவிப்பதை யூதர்கள் விரும்பவில்லை.

அது நியாயமான கோபம்தான். ஓர் எடுத்துக்காட்டு சொல்லுகிறேன். ஒரு நாடு கிறிஸ்தவத்தை அங்கீகரிக்கிறது என்றும், கிறிஸ்தவத்தின் கூறுகளையுடைய மற்ற மதக்குழுக்களை அங்கீகரிக்கவில்லையென்றும் வைத்துக்கொள்வோம். அப்போது அந்த நாட்டில் வாழும் யெஹோவாவின் சாட்சிகள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொன்னால், அந்த நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா? ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், யெஹோவாவின் சாட்சிகளைக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாகக் கருதுவதில்லை. அதுபோலவே அன்று, யூதர்கள் கிறிஸ்தவர்கள் தங்கள் பெயரைப் பயன்படுத்துவதையும், அதனால் வரும் பலன்களை அனுபவிப்பதையும் விரும்பவில்லை.

எனவே, ரோமப் பேரரசு தன்னைத் தனி மதமாக அங்கீகரிக்கக் கிறிஸ்தவம் தன் நிலையை, தகுதியை, நிலைநாட்டவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்த நிலை வந்தபோது, ரோமப் பேரரசு கிறிஸ்தவத்தைச் சட்டவிரோதமான மதமாக அறிவித்தது.

அடிப்படையில் யூத சபையாக இருந்தது எப்படி அடிப்படையில் புறவினத்தார் சபையாக மாறியது? யூதத் தன்மையிலிருந்து சபை எப்படி விடுதலைபெற்றது? சகல நாடுகளைச் சார்ந்தவர்களையும் சீடர்களாக்க வேண்டும் என்ற இயேசுவின் கட்டளையே இதற்கு உள்ளார்ந்த காரணம்.

கி.பி 70இல் எருசலேமும், தேவாலயமும் அழிக்கப்பட்டபின் கிறிஸ்தவத்துக்கும், யூதமதத்துக்கும் இடையே இருந்த பிளவு இன்னும் ஆழமாயிற்று, அதிகமாயிற்று. அந்தப் பேரழிவில் வெகு சில கிறிஸ்தவர்களே கொல்லப்பட்டார்கள். லூக்கா 21இல், “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்,” என்று இயேசு சொன்னபடி, எருசலேமை ரோமப் படைகள் சூழ்ந்துகொண்டிருந்தபோது அவர்கள் எருசலேமைவிட்டு வெளியேறிவிட்டார்கள். யூதக் கிளர்ச்சியின்போது எருசலேமிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே இடைவெளி அதிகமானதற்கு எருசலேமும் தேவாலயமும் அழிக்கப்பட்டது முக்கியமான காரணியாகும். கி.பி 70குப்பிறகு கிறிஸ்தவர்கள் யூதர்களின் ஜெபஆலயங்களில் அனுமதிக்கப்படவில்லை. யூதர்கள் கிறிஸ்தவர்களைத் துரோகிகளாகக் கருதினார்கள்.

முதலாவது சபை முழுக்கமுழுக்க யூதமயம். நாட்கள் செல்லச்செல்ல யூதர்கள் பெரும்பான்மை, புறவினத்தார் சிறுபான்மை. நாட்கள் நகர்கின்றன. புறவினத்தார் பெரும்பான்மை, யூதர்கள் சிறுபான்மை. நாளடைவில் முழுக்கமுழுக்கப் புறவினத்தார். இதற்கு என்ன காரணம்? யூதத் தன்மை நிறைந்த சபை புறவினத்தார் சபையாக மாறியது என்று நான் சொல்லும்போது அது யூதர்களுக்கு எதிரான சபையாக மாறியது என்று நினைக்க வேண்டாம். அந்தக் காலகட்டத்தில் உலகத்தில் யூதர்களைவிட புறவினத்தார் அதிகமாக இருந்தார்கள். எனவே, புறவினத்தார் அதிகமாகச் சபையில் சேர்ந்தார்கள். இது தேவனுடைய திட்டத்தின் ஒரு பகுதி. ரோமர் 9-11இல் பவுல் இதற்கு இறையியல் விளக்கம் கொடுக்கிறார். யூதர்களைச் சிறுமைப்படுத்தவும், அதன் விளைவாக அவர்களுக்கும் ஒரு வைராக்கியத்தை உருவாக்கவும் தேவன் இப்படிச் செய்தார் என்று அவர் விவரிக்கிறார். இது தேவனுடைய வேலை, இது அவருடைய கிருபையின் விளைவு. ஒருவன் யூதன் என்பதால் தேவன் அவனைத் தெரிந்தெடுக்கவில்லை என்று அவர் எண்பிக்கிறார்.

நற்செய்தி சமாரியர்களுக்கும், புறவினத்தாருக்கும் சென்றது. இது தேவனுடைய இறையாண்மை, தேவனுடைய ஏற்பாடு. நடபடிகள் 10இல் இதைப் பார்க்கிறோம். தேவனுக்குப் பயந்து, இயேசுவை விசுவாசிக்கிற அனைவரையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார் என்று அங்கு சொல்லப்பட்டுள்ளது. யூதனென்றும், கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை. அதன்பின் அந்தியோகியா சபை புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தது. அப்போதிருந்து சபை குறிப்பிடத்தக்க விதத்தில் புறவினத்தார் வாழ்ந்த இடங்களில் விரிவடைந்தது. புறவினத்தார் அதிகமாக இயேசுவை விசுவாசித்தார்கள்.

பவுல் தான் போன இடங்களிலெல்லாம் இருந்த ஜெப ஆலயங்களில் முதலாவது நற்செய்தியைப் பிரசங்கித்தார். அதன்பின் புறவினத்தாருக்கு அறிவித்தார். சிறிய ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் யூதர்கள் இல்லாத இடங்களில் பல சபைகள் எழும்பின. புறவினத்தார் கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு முதலாவது யூதர்களாக மாற வேண்டியதில்லை என்று எருசலேம் ஆலோசனைச் சங்கத்தில் முடிவுசெய்தார்கள். அதுபோல யூதர்கள் தங்கள் யூத மதத்தையோ அல்லது யூதப் பழக்கங்களையோ கைவிடவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படவில்லை. கிறிஸ்தவனாக மாறுவதற்கு அது தேவையில்லை என்று மாத்திரம் சொன்னார்கள். யூதக் கிறிஸ்தவர்களும் புறவினக் கிறிஸ்தவர்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உத்தமமாக இருப்பதால் இசைந்து வாழ முடியும் என்று எபேசியர் 2, ரோமர் 14, 15 போன்ற அதிகாரங்கள் கூறுகின்றன. கிறிஸ்தவம் யூதப் பாரம்பரியத்தையும், புறவினத்தாருடைய பாரம்பரியத்தையும் கடந்தது. கிறிஸ்தவர்கள் ஒரு புதிய இனம். இது அவர்களுடைய பூமிக்குரிய இனத்தையும், மொழியையும், கலாச்சாரத்தையும்விட முக்கியம். கிறிஸ்தவனின் அடையாளம் கிறிஸ்து. அவனுடைய மொழியோ, இனமோ, கலாச்சாரமா, நாடோ, நகரமோ இல்லை என்று சபைகள் புரிந்துகொண்டன. மற்ற அடையாளங்களை இழக்கத் தொடங்கினார்கள்.

6. யூதக் கிறிஸ்தவர்கள், கிரேக்க யூதக் கிறிஸ்தவர்கள்,கிறிஸ்தவர்களல்லாத யூதர்கள், புறவினத்தார்

இவர்களுடைய மனப்பாங்கை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கிறிஸ்தவர்களல்லாத யூதர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக, குறிப்பாக யூதக் கிறிஸ்தவர்களுக்கு எதிராக, மனப்பாங்கு கொண்டிருந்தார்கள். யூதக் கிறிஸ்தவர்கள் யூத மதத்துக்கு எதிரானவர்கள் என்றும், துரோகிகள் என்றும், கிறிஸ்தவர்களல்லாத யூதர்கள் நினைத்தார்கள். ஆனால், யூதக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களல்லாத யூதர்களையும், புறவினத்தாரையும் நேசித்தார்கள். அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க முயன்றார்கள். புறவினக் கிறிஸ்தவர்கள் யூதக் கிறிஸ்தவர்களை நேசித்தார்கள், கிறிஸ்தவர்களல்லாத யூதர்களை மதித்தார்கள். யூத மதத்தில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகளும், நிறைவேறுதல்களுக்கும் தாங்கள் தான் வாரிசுகள் என்று அவர்கள் நினைத்தார்கள். புறவினத்தார் சபைகள் யூத சபைகளுக்கு உதவின.

நாம் ஒரு முக்கியமான காரியத்தைக் கவனிக்க வேண்டும்; யூதர்களும் புறவினத்தார்களும் ஒன்றாக இருந்த ஒரு சமுதாயம் ஏற்கெனவே அங்கு இருக்கிறது. கிறிஸ்து இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் ஏற்கெனவே அவர்களை ஆயத்தம்பண்ணி வைத்திருந்தார். சபையின் ஆரம்ப காலத்தில் இந்தச் சமுதாய மக்கள்தான் கிறிஸ்து இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு விசுவாசிகளானார்கள்.

ஆரம்பத்திலிருந்தே எபிரேய யூதர்களுக்கும், கிரேக்க யூதர்களுக்குமிடையே உராய்வுகளும், உரசல்களும் இருந்தன என்று நடபடிகள் 6ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம். ஒரு பதற்றம் இருந்தது. எனவே, கிரேக்க யூதர்களின் விவகாரங்களைக் கவனிக்க கிரேக்க யூதர்கள் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். எனவே, சபையில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் உண்டு என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

ஆறு காரணிகள்

  1. இயேசுவால் நேரடியாக ஏற்படுத்தப்பட்ட, அனுப்பப்பட்ட , அதிகாரம்பெற்ற அப்போஸ்தலர்களின் இருப்பு முதல் நூற்றாண்டில் மக்களுக்கு நம்பிக்கையையும், நிச்சயத்தையும் ஏற்படுத்தியது.
  2. அப்போஸ்தலர்கள் எழுதிய புதிய ஏற்பாடு
  3. சில நேரங்களில் சபை வாழ்க்கை மகிமையாகவும், வேறு சில நேரங்களில் மகிமையற்றதாகவும் இருந்தது.
  4. ரோமப் பேரரசு முழுவதும் நற்செய்தி வேகமாகப் பரவியது; சபைகள் எழும்பின.
  5. கிறிஸ்தவம் யூத மதத்தின் ஒரு பிரிவு என்ற நிலை மாறியது; அதனால், கிறிஸ்தவம் அரசின் அங்கீகாரத்தை இழந்தது.
  6. கிறிஸ்தவர்களுக்கும் பிறருக்குமிடையே உராய்வு

VII. குறிப்பிடத்தக்க சிலர்

அப்போஸ்தல சபையைப்பற்றிப் பேசும்போது எல்லாரையும்பற்றி விவரமாகப் பேசமுடியாவிட்டாலும், சிலரைப்பற்றிப் பேசாமல் இருக்க முடியாது.

அப்போஸ்தலர்களின் வாழ்க்கையையும் ஊழியத்தையும்பற்றிய சில விவரங்களைப் புதிய ஏற்பாட்டில் பார்க்கிறோம். அப்போஸ்தலர் நடபடிகளின் ஆரம்பத்தில் எருசலேமிலும், சமாரியாவிலும், புறவினத்தாரிடையிலும் பேதுருவின் ஊழியத்தைப் பார்க்கிறோம். நடபடிகளின் மையப் பகுதிக்கு வரும்போது பேதுரு எருசலேமிலிருந்து வெளியே போகிறார். அதன்பின் நடபடிகள் பவுலையும், அவருடைய ஊழியத்தையும்பற்றிப் பேசுகிறது. நடபடிகளின் கடைசியில் பவுல் கைதுசெய்யப்பட்டு ரோமுக்கு அனுப்பப்படுகிறார். அங்கு அவர் வழக்கு விசாரணைக்காகக் காத்திருக்கிறார்.

மற்ற அப்போஸ்தலர்களைப்பற்றியும், வேறு சிலரைப்பற்றியும் வேதாகமத்தில் அங்கும் இங்கும் சில குறிப்புகள் உள்ளன. ஆனால், வரலாறு தொடர்ந்தது. வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளதைவிட அதிகமான காரியங்கள் நடந்தன. ஆனால், அவைகள் எழுதப்படவில்லை அல்லது எழுதப்பட்டிருந்து, நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். நான் இப்போது சொல்லப்போகும் தகவல்கள் வரலாறும், பாரம்பரியமும் கலந்த ஒரு கலவை.

1. பேதுரு

முதலாவது பேதுருவைப்பற்றிப் பேசுவோம். நடபடிகள் 2ஆம் அதிகாரத்தில் பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு நற்செய்தியை அறிவிக்கிறார். யூதர்களுக்குக் கதவு திறக்கிறது. எருசலேமில் சபை பிறந்தது. 8ஆம் அதிகாரத்தில் சமாரியர்களுக்கும், 10ஆம் அதிகாரத்தில் கொர்நேலியு வீட்டாருக்கும் நற்செய்தியை அறிவித்தபின் புறவினத்தார்களுக்கும் கதவு திறக்கிறது.

ரோமன் கத்தோலிக்க சபை இந்த நிகழ்ச்சிகளில் பேதுருவின் பங்கையும், இயேசு மத்தேயு 16இல் பேதுருவுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் பயன்படுத்தி போப் என்ற ஓர் அதிகாரஅமைப்பை உருவாக்கிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. பேதுரு ஒரு போப்போல் செயல்பட்டார் என்பதற்கோ, தன் அதிகாரத்தை இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டுச் சென்றார் என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றோ, வேதாகமக் குறிப்போ இல்லவே இல்லை.

பேதுரு எருசலேமைவிட்டுப் போகிறார். ஆசியா கண்டத்தின் தற்கால துருக்கி, ஆர்மேனியாவின் மேட்டு நிலங்களை உள்ளடக்கிய மூவலந்தீவுப் பகுதியாகிய சிறிய ஆசியாவிலிருந்த சபைகளோடு அவருக்கு ஒருவிதமான உறவு இருந்தது. ஏனென்றால், அந்தப் பகுதிகளில் இருந்த சபைகளுக்குத்தான் அவர் தன் முதல் நிருபத்தை எழுதினார். ரோமில் ஏதோவொரு வகையில் ஊழியம் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால், ரோமன் கத்தோலிக்க சபை ரோமில் பேதுருவின் ஊழியத்தை அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்திவிட்டது என்பது என் கருத்து. அதில் கடுகளவு உண்மையும், மலையளவு பொய்யும் உண்டு. ரோமச் சபையை பேதுரு நிறுவவில்லை. பேதுரு எருசலேமைவிட்டுப் போவதற்குமுன்பே ரோமில் சபை இருந்தது.

பேதுரு, கத்தோலிக்க சபை சொல்வதுபோல் முதல் போப் இல்லை. வரப்போகிற நாட்களில் போப், போப் ஆதிக்கம், போப் ஆட்சிமுறை, ஆயர்கள் ஆகியவர்களைப்பற்றிப் பேசுவோம். பேதுரு ரோம் நகரில் கி.பி 67இல் நீரோவின் சித்திரவதையின்போது சிலுவையில் தலைகீழாக அறைந்து கொல்லப்பட்டார் என்று பாரம்பரியம் கூறுகிறது.

2. பவுல்

இரண்டாவது பவுல். அப்போஸ்தலர் காலத்து மிக வல்லமையான மிஷனரி, உலகத்தைக் கலக்கிய நற்செய்தியாளர், சிறப்பான அந்தஸ்துள்ள அப்போஸ்தலர், குறிப்பிடத்தக்க இறையியலாளர், ஏராளமான சபைகளை நிறுவியவர். பவுல் ரோமில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். வழக்கு விசாரணைக்கு வருவதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். அதன்பின் ரோம அதிகாரிகளுக்குமுன் அவர் சாட்சிபகர்ந்தார் என்றும், வீட்டுக் காவலிலிருந்து விடுதலையானார் என்றும், தன் நான்காவது மிஷனரிப் பயணத்தை மேற்கொண்டார் என்றும், அப்போது தான் ஏற்கெனவே நிறுவியிருந்த சபைகளுக்குச் சென்றார் என்றும், அப்போதுதான் அவர் 1 தீமோத்தேயு, தீத்து நிருபங்ககளை எழுதினார் என்றும் பாரம்பரியம் திட்டவட்டமாகக் கூறுகிறது. இந்தப் பயணத்தின்போது அவர் ஸ்பெயினுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தாரா என்ற ஒரு கேள்வி எழுவதுண்டு. ஸ்பெயினுக்குச் சென்று நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற வாஞ்சை தனக்கிருப்பதாக பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் குறிப்பிடுகிறார். பவுல் ஸ்பெயினுக்கு சென்றார் என்று முதலாம் கிளமெண்ட் உறுதியாகக் கூறுகிறார். இதைப்பற்றிய திடமான சான்று இல்லை. ஆனால், அவர் ரோமில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு, சிறைக்கிடங்கில் அடைக்கப்பட்டார். அப்போதுதான் அவர் 2 தீமோத்தேயு நிருபத்தை எழுதினார். கி.பி 60வாக்கில் அவருடைய விசுவாசத்திற்காக நீரோ மன்னனால் ரோமுக்கு வெளியே சிரச்சேதம் செய்யப்பட்டார் என்று வரலாறும் பாரம்பரியமும் கூறுகின்றன.

3. யோவான்

அப்போஸ்தலனாகிய யோவானைக்குறித்தும் பாரம்பரியமான சில விவரங்களை அறியமுடிகிறது. அவருடைய கிறிஸ்தவ விசுவாசத்தினிமித்தம் அவர் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் போடப்பட்டார் என்றும், ஆனால் அவருக்கு எந்தச் சேதமும் ஏற்படாததால், அவர் பத்மு தீவுக்கு நாடுகடத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார் என்றும், பின்பு விடுதலையாகி, எபேசு சபையில் மூப்பராக இருந்தார் என்றும் பாரம்பரியமும், வரலாறும் கூறுகின்றன.

பத்மு தீவில்தான் அவர் திருவெளிப்பாட்டை எழுதினார். அவர் எபேசுவில் மூப்பராக இருந்தபோது பிற்காலத்தில் தலைவர்களாக மாறிய பாபியஸ், பொலிகார்ப் போன்றவர்கள்மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இவர்களைப்பற்றி நாம் பின்னர் பேசுவோம்.

எபேசுவில் இருந்துகொண்டு அருகிலிருந்த சபைகளை வழிநடத்தினார். அந்த நேரத்தில்தான் எபேசுவிலும், சுற்றியிருந்த வேறு சில சபைகளிலும் ஊடுருவியிருந்த Gnosticism என்ற ஞானவாதத்தோடு இடைப்படுவதற்காக அவர் தன் மூன்று நிருபங்களையும் எழுதினார்.

முதல் மூன்று நூற்றாண்டுகளில் ஆரம்பகாலச் சபைக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது ஞானவாதம். ஞானவாதிகள் ஆவி நல்லது என்றும், உடல் கெட்டது என்றும் நம்பினார்கள். எனவே, அவர்கள் உடலில் செய்யப்படும் எதையும், பாவங்கள் உட்பட, ஒரு பொருட்டாகக் கருதவில்லை. ஆவி உலகில் மட்டுமே உண்மை இருக்கிறது என்பது அவர்களுடைய வாதம்.

எனவே, தேவன் இயேசு என்ற பெயரில் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதையோ, அவர் ஆள்தன்மையுடையவர் என்பதையோ அவர்கள் விசுவாசிக்கவில்லை. அவருடைய உடல் உண்மையானதல்ல, அது ஒருவகையான ஆவிக்குரிய உடல். அந்த உடலும்கூட அவரைச் சிலுவையில் அறைவதற்குமுன் மறைந்துவிட்டது என்று அவர்கள் நம்பினார்கள். அவர்கள் இயேசுவின் முழுமையான தேவத்துவதையும், பூரணமான மனிதத்துவதையும் நம்பவில்லை. மேலும், ஒருவனுடைய உயர்ந்த, மேலான, அறிவினால்தான் அவன் இரட்சிக்கப்பட முடியும் என்றும் அவர்கள் நம்பினார்கள். தாங்கள் அப்படிப்பட்ட வெளிப்பாட்டை உடையவர்கள் என்று அவர்கள் மார்தட்டிக்கொண்டார்கள்.

யோவான் தன் மூன்று நிருபங்களிலும் இந்தப் பிரச்சினையைப்பற்றிப் பேசுகிறார்.

கி.பி 98இல் ரோமப் பேரரசின் அரசனாக அறியணையேறிய ட்ராஜன் ஆட்சிகாலம்வரை யோவான் உயிரோடிருந்தார். அவருடைய கடைசி காலத்தில் அவரைக் கூட்டங்களுக்குத் தூக்கிக்கொண்டுவருவார்களாம். அப்போது அவர், “பிள்ளைகளே, ஒருவரிலொருவர் அன்புகூருங்கள்” என்ற வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார் என்றும் 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெரோம் என்ற ஒரு சபைப்பிதா யோவானைப்பற்றி கூறுகிறார்.

கடைசியாக இறந்த அப்போஸ்தலனாகிய யோவான்தான் இயேசுவின் போதனைகளுக்கும், அப்போஸ்தல சபையின் அசல் போதனைகளுக்கும், வாழ்க்கைக்கும் கடைசி இணைப்பாக இருந்தார்.

4. வேறு பல அப்போஸ்தலர்களும், தலைவர்களும் இருந்தார்கள்.

அவர்களைப்பற்றி ஓரளவுக்கு உறுதியான தகவல்களும், வழிவழியாக வந்த வேறு சில தகவல்களும் இருக்கின்றன.

ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்டார். அப்போஸ்தலனாகிய யோவானின் சகோதரன் யாக்கோபு யூதேயாவின் சிற்றரசன் ஏரோது அகிரிப்பாவால் கி.பி 44இல் கொல்லப்பட்டார். அவருடைய மரணத்தின் விவரம் நடபடிகள் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அப்போஸ்தலனாகிய பிலிப்பு மத்திய ஆசியாவின் நிலப்பகுதிகளான ஃபிரீஜியாவிலும், சித்தியாவிலும், அன்று கான்ஸ்டான்டிநோபில் என்றும், இன்று இஸ்தான்புல் என்றும் அழைக்கப்படுகிற பசான்றியத்திலும், இன்று பூமிக்கேல் என்றழைக்கப்படுகிற அன்றைய ஹையராப்போலிசிலும் ஊழியம் செய்தார். ரோமானிய பேரரசர் டைட்டஸின் ஆணையின்படி ஹையராப்போலிசில் கைதுசெய்யப்பட்டு, சாட்டையால் அடிக்கப்பட்டு, பின்பு சிலுவையிலறையப்பட்டு கொல்லப்பட்டார்.

அப்போஸ்தலனாகிய மத்தேயு பிற நாடுகளுக்குச் செல்வதற்குமுன், யூதேயாவில் உள்ள யூதர்களிடையே நற்செய்தியைப் பிரசங்கித்ததாக சபைப் பிதாக்களான ஐரேனியசும், அலெக்ஸாண்ட்ரியாவின் கிளெமென்டும் கூறுகிறார்கள். எந்தெந்த நாடுகளுக்குச் சென்றார் என்று திட்டவட்டமாகக் கூறமுடியாவிட்டாலும் எத்தியோப்பியாவில் நற்செய்தியைப் பிரசங்கித்தார் என்று உறுதியாகக் கூற முடிகிறது. எத்தியோப்பாவில் இரத்தசாட்சியாக மரித்தார்.

அப்போஸ்தலனாகிய யாக்கோபு , அல்பேயுவின் குமாரன் தெற்கு பாலஸ்தீனத்தில் நற்செய்தியைப் பிரசங்கித்தார். வடஆப்ரிக்காவில் கல்லெறிந்து கொல்லப்பட்டார். அவர் எகிப்துக்கு செல்லும்போது அவர் ஆஸ்ட்ராசினில் சிலுவையில் அறையப்பட்டதாகவும் ஊகங்கள் உள்ளன.

அப்போஸ்தலனாகிய ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு அரேபியா, மெசொப்பொத்தேமியா, சிரியா, பாலஸ்தீனத்தில் நற்செய்தி அறிவித்தார். அவர் ஆர்மீனியாவில் இரத்தசாட்சியாக மரித்தார்.

அப்போஸ்தலனாகிய கானானியனாகிய சீமோன் எகிப்து, லிபியா, அப்காசியா, யூதேயாவில் கிறிஸ்துவின் போதனைகளை போதித்தார். அவர் காகசஸில் இரத்தசாட்சியாக மரித்தார் என்று நம்பப்படுகிறது . அவருடைய உடல் வாளால் அறுக்கப்பட்டது.

தோமா இந்தியாவில், சென்னையில், ஈட்டியெறிந்து கொல்லப்பட்டார். இந்தியாவில் இருக்கும் பல சபைகள் இதற்குச் சான்றுபகர்கின்றன. இது வெறுமனே பாரம்பரியம் அல்ல. இதில் வரலாறும் கலந்திருக்கிறது.

அப்போஸ்தலனாகிய பார்த்தொலொமேயு பிலிப்புடன் சேர்ந்து சிறிய ஆசியா நகரங்களிலும், இந்தியாவிலும், ஆர்மீனியாவிலும் நற்செய்தி அறிவித்தார். ஆர்மேனிய மன்னர் ஆஸ்டியஜஸின் உத்தரவின் பேரில் அவர் பிடிபட்டார், பின்னர், தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார், ஆனால் அவர் தொடர்ந்து பிரசங்கம் செய்தார். பின்னர், அவர் தலையை வெட்டிக் கொன்றார்கள்.

இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு கல்லெறிந்து கொல்லப்பட்டார். மத்தியாஸ் எருசலேமில் சிரச்சேதம்செய்யப்பட்டார் , அப்போஸ்தலனாகிய அந்திரேயா கருங்கடலருகே வாழ்ந்த புறவினத்தாருக்கு நற்செய்தியைக் கொண்டுசென்றார். கி.பி 62இல் பட்றாஸ் நகரில் சாய்ந்த சிலுவையில், அவருடைய கைகளையும் கால்களையும் கயிறுகளால் கட்டி அறைந்து கொன்றார்கள்.

ததேயு இன்றைய சிரியாவிலுள்ள ஒதேஸாவில் சிலுவையிலறைந்து கொல்லப்பட்டார், லூக்கா கிரீஸ் நாட்டில் ஏதென்ஸில் வேறொரு மதத்தைச் சார்ந்த ஒரு மதகுருவால் தூக்கில்போடப்பட்டார்.

மாற்கு அலெக்ஸாண்ட்ரியாவில் தெருவில் இழுத்துச்செல்லப்பட்டு கொல்லப்பட்டார்.

அப்போஸ்தலர்களைத்தவிர வேறு பல நற்செய்தியாளர்களும், வியாபாரத்திற்காகவும் வேறு பல காரணங்களுக்குக்கவும் பல நாடுகளுக்கும் சென்ற சாதாரணமான கிறிஸ்தவர்களும் ,சென்ற இடங்களிலெல்லாம் இயேசுவை அறிவித்தார்கள். இதனால், கிறிஸ்தவம் மேற்கில் ரோமப் பேரரசு முழுவதிலும், சிரியா, மெசபதோமியா, அரேபியா, இறுதியில் ஆர்மீனியா, கிழக்கில் பாரசீகப் பேரரசுவரை மிக வேகமாகப் பரவியது. பவுலின் வழக்கமான அணுகுமுறையின்படி, நற்செய்தி அறிவிக்கும் பணி முக்கிய நகரங்களில் ஆரம்பித்து, அங்கிருந்து சுற்றியுள்ள நாடுகளுக்கும் பரவியது. காலப்போக்கில், எருசலேம், ரோம், சிரியாவில் அந்தியோக்கியா, சிறிய ஆசியாவில் எபேசு, பின்னாட்களில் கான்ஸ்டான்டிநோபில் என்று பெயரிடப்பட்ட பைசாண்டியம், எகிப்தில் அலெக்சாண்ட்ரியா, வட ஆப்பிரிக்காவில் கார்த்தேஜ் போன்ற இடங்கள் கிறிஸ்தவத்தின் முக்கியமான மையங்களாக மாறின. ஆரம்ப காலக் கிறிஸ்தவர்கள் அனைவரும் என்ன நேர்ந்தாலும் நற்செய்தியை அறிவிப்பதில் குறியாகவும், ஆர்வமாகவும், உறுதியாகவும் இருந்தார்கள். அப்போஸ்தலனாகிய யோவான் ஒருவரைத்தவிர மீதி அனைவரும் இரத்தசாட்சிகளாக மரித்தார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் விசுவாசத்தினிமித்தம் கொல்லப்பட்டார்கள். உயிரைக் கொடுத்தாவது இயேசுவின் நற்செய்தியைப் பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு அவர்கள் வெளியூர்களுக்குப் பயணித்தார்கள்.

நான் இப்போது ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். அப்போஸ்தலர்கள், நற்செய்தியாளர்கள், சாதாரணமான கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஏன் இப்படி நற்செய்தி அறிவித்தார்கள்? ஏன் இப்படி வாழ்ந்தார்கள்? பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள், ஊர், நாடு, மொழி, கலாச்சாரம் அனைத்தையும் விட்டுவிட்டு இவர்கள் ஏன் இவ்வளவு தூரம் போனார்கள்? நாம் வழக்கமாகப் படுத்துறங்கும் படுக்கையில் படுக்காமல் ஒரேவொரு நாள் வேறொரு படுக்கையில் படுத்தால் நம்மால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. இப்படியிருக்க புதிய நாடு, புதிய கலாச்சாரம், புதிய இடம், புதிய மக்கள், புதிய பழக்கவழக்கங்கள் கொண்ட இடங்களுக்கு அப்போஸ்தலர்களும், நற்செய்தியாளர்களும், கிறிஸ்தவர்களும் ஏன் போனார்கள்? ஏன் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; ஏன் கல்லெறியுண்டார்கள்; ஏன் வாளால் அறுப்புண்டார்கள்; ஏன் பரீட்சைபார்க்கப்பட்டார்கள்; ஏன் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டார்கள்; ஏன் பட்டயத்தினாலே வெட்டப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்கள்; ஏன் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார்கள்; ஏன் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள்; ஏன் குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; ஏன் சிதறுண்டு அலைந்தார்கள். ஏன் உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; ஏன் இந்தப் பூமியில் பரதேசிகளைப்போல் வாழந்தார்கள். ஏன் இவர்கள் தங்கள் உயிரைக்கொடுக்க ஆயத்தமாயிருந்தார்கள்? ஏன் இவர்கள் தங்கள் உயிரையும் கொடுத்தார்கள்? ஒருவன் தன் உயிரைக் கொடுப்பது விளையாட்டுக் காரியமா? வேடிக்கையா? ஏன் துன்பங்களைச் சகித்தார்கள்? பொறுத்தார்கள்? அவர்கள் இவைகளைத் தவிர்த்திருக்கலாமே! தங்கள் சொந்த வீட்டின், நாட்டின் பாதுகாப்பையும், வசதிகளையும்விட சிறந்த, மேலான, உயர்ந்த, மேன்மையான ஏதோவொன்று அவர்களை உந்தித்தள்ளியது, முடுக்கிவிட்டது, ஏவியது. அது யார்? இயேசு. அது என்ன? இயேசுவின் கட்டளை. ஒருவனுடைய வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றக்கூடிய பரம இராஜ்ஜியத்தின் நற்செய்தியை அறிவிக்கவும், அனுபவிக்கவும் வேண்டும் என்ற வேட்கையே காரணம். இவ்வளவு தைரியமும், வைராக்கியமும் எப்படி, எங்கிருந்து வந்தன? ஒரேவொரு குறிக்கோள், ஒரேவொரு இலக்கு. இரட்சகரைப்பற்றிய நற்செய்தியைப் பரப்ப வேண்டும் என்ற தணியாத் தாகம். உலகம் கிறிஸ்துவமயமாக்கப்பட்டது. அவர்கள் வரலாற்றின் போக்கை மாற்றினார்கள்; பழங்காலப் போர்வையை அழித்தார்கள்; ஒரே தேவன்மேல் விசுவாசத்தை வைத்தார்கள்; பிறரும் விசுவாசிக்கத் தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். இனி வரும் பலன்மேல் நோக்கமாயிருந்தார்கள்; உயிரா அல்லது உயிரைத் தந்தவரா என்ற கேள்வி எழுந்தபோது உயிரைத் தந்தவரையே தெரிந்தெடுத்தார்கள். இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவங்களுக்காக மரித்தார், மரித்தோலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று தாங்கள் அனுபவித்ததை, புரிந்துகொண்டதை பிறரும் அனுபவிக்கவும், புரிந்துகொள்ளவும் வேண்டும் என்ற பசியும்தாகமுமே காரணம். பூமியையே புரட்டிப்போடும் இந்தச் செய்தியை அறிவிக்க அவருடைய ஆவியானவர் அவர்களை பலப்படுத்தினார், உந்தித்தள்ளினார். பாடுகளும், துன்பங்களும், வலிகளும், இழப்புகளும் இருந்தபோதும் அவர்கள் நற்செய்தியை அறிவிப்பதில் உறுதியாக இருந்தார்கள்.

நான் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு ஒரு காரணம் உண்டு. ஏனென்றால், அன்று அவர்களிடம் இருந்த தரிசனமும், உந்துதலும் இன்றைய சபைக்கு இருந்தால், இயேசு கிறிஸ்துவுக்காகத் தன்னையும், தன்னிடம் இருப்பதையும், தன்னால் முடிந்த அனைத்தையும் பலிபீடத்தில் கிடத்த ஆயத்தமாயிருந்தால், ஆர்வமாகயிருந்தால் நாம் வாழும் இந்த உலகம் எப்படி மாறிவிடும் என்று கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள்.

துன்பப்படுவதற்குத் தயாராக இருந்தால் நாம் நம் செளகரியத்தைவிட, வசதிகளைவிட, கிறிஸ்துவை அதிகமாக நேசிக்கிறோம் என்று பொருள். அதற்குரிய வெகுமதியைத் தேவன் ஏற்ற காலத்தில் தருவார். வெகுமதி ஒன்றும் இல்லையென்றாலும், கிறிஸ்துவுக்காகத் துன்பப்பட அவர் முற்றிலும் தகுதியானவர்.

சபை சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது என்று நானும் நினைக்கிறேன். ஆனால், அதைவிட முக்கியமான காரணம் என்னவென்றால், சபை கிறிஸ்துவின்மேலுள்ள ஆதி அன்பை இழந்துவிட்டது; உலக அன்பை மேற்கொள்ளக்கூடிய ஆற்றலுள்ள, உலகத்தை அசைக்கும் ஆற்றலுள்ள நற்செய்தியாகிய சத்தியத்தின்மேலுள்ள பரவசத்தையும், வியப்பையும் சபை இழந்துவிட்டது. உலகத்தைக் கலக்கக்கூடிய, உள்ளத்தை உடைத்து, உருக்கக்கூடிய, ஒரு மனிதனை மாற்றக்கூடிய அற்புதமான, ஆச்சரியமான நற்செய்தியின் வீரியத்தை, அழகை, மெருகை, மேன்மையை, மகத்துவத்தை நாம் பார்க்கத் தவறிவிட்டோம், பரவசமடைய மறுத்துவிட்டோம். உலகையும், ஒரு மனிதனையும் மாற்றக்கூடிய வல்லமை நற்செய்திக்கு மட்டுமே உண்டு என்ற உண்மையை நாம் மீண்டும் பார்க்க வேண்டும். நற்செய்தியின் பரவசத்தையும், புதுமையையும் நாம் மீட்டுப்பெற வேண்டும். ஆதி அப்போஸ்தலர்களைப்போல் நற்செய்தி அறிவிக்க அது நமக்குப் புத்துணர்ச்சியூட்டி, புதுவலுவளிப்பதாக.

VIII. அப்போஸ்தலர்களின் காலத்தில் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை

அப்போஸ்தலர்களின் காலத்தில் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? தாங்கள் விசுவாசிப்பவர் யார் என்றும், தங்கள் விசுவாசத்தின் அடித்தளம் எது என்றும், தங்கள் வேர் யூதமதம் என்றும் அவர்களுக்குத் தெரியும். இயேசுவோடு வாழ்ந்த அப்போஸ்தலர்கள் அங்கு அப்போது இருந்தார்கள். அவர்களுடைய இருப்பு அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் அன்று வீடுகளில் கூடிவந்தார்கள். இதற்குக் காரணம், கிறிஸ்தவம் அன்று ஒரு தனி மதமாக அங்கீகரிக்கப்படவில்லை, அனுமதிக்கப்படவில்லை, ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இரகசிய சபை. இந்தச் சூழலில்தான் கிறிஸ்தவம் பரவியது, வளர்ந்தது. இந்த நிலைமை இன்று நமக்கு ஏற்பட்டால்தான் உண்மையான விசுவாசிகள் யார் என்றும், அவர்களுடைய விசுவாசம் எப்படிப்பட்டது என்றும் தெரியும். அவர்கள் வீடுகளில் கூடி வந்ததால் ஒரு வீட்டில் 50பேருக்குமேல் கூடிவந்திருக்க முடியாது. நிறைய விசுவாசிகள் இருந்த நகரத்தில் நிறைய வீடுகளில் கூடிவந்திருப்பார்கள்.

கர்த்தருடைய பந்தியாகிய திருவிருந்து அவர்களுடைய வழக்கமான சாப்பாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. கர்த்தருடைய பந்தியில் அவர்கள் ஒருவரோடொருவர் ஒப்புரவாவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். விசுவாசிகளுக்கிடையே தகராறோ, கருத்துவேறுபாடோ இருந்தால், கர்த்தருடைய பந்தி அடங்கிய அன்பின் விருந்தில் பங்குபெறுவதற்காகக் கூடிவந்தபோது அவர்கள் அவைகளைத் தீர்த்துக்கொண்டார்கள்.

ரோமப் படைகள் எருசலேமின்மேல் படையெடுத்தபோது எருசலேமில் 55000 யூதர்கள் வாழ்ந்தார்கள் என்றும், 40 இலட்சம் யூதர்கள் யூதேயாவுக்கு வெளியேதான் வாழ்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக அவர்கள் ஒரு நாளில் இரண்டுமுறை சாப்பிட்டார்கள். ரொட்டிதான் அவர்களுடைய முக்கியமான உணவு. அன்று, பொதுவாக, உலக ஒழுக்கத்தின் தரம் உயர்வாக இருந்தது என்று சொல்ல முடியாது. அன்று தனி மனித உயிரைப் பொதுவாக மக்கள் பெரிதாக மதிக்கவில்லை. கிறிஸ்தவம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவால் மட்டுமே மக்கள் தனி மனித உயிரை மதித்தார்கள், பாதுகாத்தார்கள், அந்தக் காலத்தில் அலெக்சாந்திரியாவில் வேலைசெய்துகொண்டிருந்த ஹிலாரியன் என்பவன் கி,பி 120இல் தன் மனைவி ஆலீசுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், வீட்டுக்குப் பணம் அனுப்புவதைப்பற்றிச் சொல்லுகிறார், வீட்டில் இருப்பவர்களை விசாரிக்கிறார். அதன்பிறகு, “பிறக்கப்போகும் குழந்தை ஆண் குழந்தை என்றால் இருக்கட்டும். பெண் குழந்தையென்றால், கொன்றுவிடு,” என்று எழுதுகிறான். மனிதன் தேவனுடைய சாயலிலும், ரூபத்திலும் படைக்கப்பட்டவன் என்பதை அறிந்த கிறிஸ்தவர்கள் மட்டுமே மனித உயிரை மதித்தார்கள். கிறிஸ்தவம் ஏற்படுத்திய தாக்கத்தினால்தான் மக்கள் மனித உயிரை மதிக்க ஆரம்பித்தார்கள்.

IX. முடிவுரை

சபை வரலாற்றில் அப்போஸ்தலர் காலத்து சபை மிகவும் முக்கியம். அது பூரணமானதல்ல. ஆயினும், அது அப்போஸ்தலர்களால் வழிநடத்தப்பட்டது. எதிர்காலச் சந்ததி பயன்பெறுவதற்கும், தொடர்ந்து கட்டுவதற்கும் தேவையான ஆவிக்குரிய வாழ்க்கை, ஒருமைப்பாடு, சகிப்புத்தன்மை, அன்பு ஆகியவைகளுக்கான இன்றியமையாத அடித்தளத்தை அப்போஸ்தல சபை வழங்குகிறது.

அப்போஸ்தலர்களின் வாழ்க்கையிலிருந்தும், ஊழியத்திலிருந்தும் நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? அவர்கள் என்ன செய்தார்கள்? இவ்வளவு குறுகிய காலத்தில், மிகக் கொஞ்சப்பேர் நற்செய்தியை உலகத்தின் இத்தனை நாடுகளுக்குக் கொண்டுசென்றார்களே! அவர்களிடம் எப்படிப்பட்ட மனப்பாங்கு இருந்தது? அவர்களை எது இப்படி நெருக்கி ஏவியது? உந்தித்தள்ளியது? உங்கள் வாழ்க்கையிலும், ஊழியத்தில் நீங்கள் எப்படி இவைகளை நடைமுறைப்படுத்தப்போகிறீர்கள்?

இரண்டாவது யூதமதத்தின் மூலக்கூறுகள் அதிகமாக இருந்த சபை புறவினத்தார் நிறைந்த சபையாக மாறியதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? கலாச்சாரச் சிக்கல்களையும், இனப் பிரச்சினைகளையும், ஜாதி வேற்றுமைகளையும் சபை எப்படிக் கையாள வேண்டும்? இந்த மாற்றத்தின்போது அவர்கள் சந்தித்த சவால்கள், சிக்கல்கள், பிரச்சினைகள் என்ன? இந்த மாற்றத்தை அவர்கள் எப்படிக் கடந்தார்கள்? அவர்களுக்கு வழிகாட்டின பொதுவான கோட்பாடுகள் என்ன? மோசமான மனப்பாங்குகளையும், பட்சபாதங்களையும் அவர்கள் எப்படி ஜெயித்தார்கள்? இவைகளிலிருந்து நீங்கள் என்ன கோட்பாடுகளைக் கற்றுக்கொள்ளப்போகிறீர்கள்? அவைகளை நீங்கள் எப்படி உங்கள் சூழ்நிலைக்குப் பிரயோகிக்கப்போகிறீர்கள்?

சரி, இந்தப் பாகத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். அப்போஸ்தல காலச் சபையில் அப்போஸ்தலர்களின்மூலமாகவும், நற்செய்தியாளர்களின்மூலமாகவும், சாதாரண விசுவாசிகளின்மூலமாகவும் தேவன் செய்த செயல்களை நினைத்து நான் பரவசமடைகிறேன். நம் காலத்திலும், வாழ்க்கையிலும், நாம் வாழும் நாட்டிலும் தேவன் அதே காரியங்களைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். உங்கள் அழைப்பை முழுமையாக வாழுமாறு நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன்.