I. முன்னுரை
இந்தியாவில், குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த முன்னூறு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மிஷனரிகள் கர்த்தருக்காகவும், அவருடைய அரசை விரிவாக்குவதற்காகவும், அவருடைய சபையைக் கட்டுவதற்காகவும், அவருடைய நற்செய்தியை அறிவிப்பதற்காகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அவர்கள் ஆற்றிய மாபெரும் தொண்டுகளையும், அரிய பணிவிடைகளையும், செய்த தியாகங்களையும் அறியும்போது கிறிஸ்துவின் மேன்மையையும், மகத்துவத்தையும் புரிந்துகொள்ளலாம். மிஷனரிகள் இந்த மண்ணில் பிறர் தாகம் தீர்க்கத் தங்களை ஊற்றினார்கள், அவர்கள் தாங்கள் வாழ யாரையும் அட்டையைப்போல் உறிஞ்சவில்லை; அவர்கள் பிறர் வாழ்வில் ஒளியேற்ற தங்களை உடைத்தார்கள், உருக்கினார்கள், கொடுத்தார்கள், அவர்கள் பிறரை உடைக்கவுமில்லை, கெடுக்கவுமில்லை; அவர்களுடைய வரலாறு இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றது.
"...மேகம்போன்ற எ த்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்..." (எபிரேயர் 12:1) தெரியுமா? உண்மையை நிரூபிக்க சாட்சிகள் அவசியம்.
கிறிஸ்துவின் நற்செய்தி மிகவும் விலையுயர்ந்தது; ஆயினும், அவர்கள் அதை இலவசமாக அறிவித்ததால், அதன் உண்மையான மதிப்பை பெரும்பாலோர், அன்றுபோல் இன்றும், முழுமையாக உணர்வதில்லை, அங்கீகரிப்பதில்லை, பாராட்டுவதில்லை. நாம் இன்று அனுபவிக்கின்ற வசதியும், வாழ்வும், முக்கியமாக, தேவ காரியங்களைப்பற்றிய விசுவாசமும், அறிவும் நம் முன்னோடிகள், முற்பிதாக்கள், முன்னோர்கள், மிஷனரிகள் பெரிய விலை கொடுத்து வாங்கி நமக்கு வைத்துவிட்டுப்போயிருக்கும் சொத்துக்கள் என்பதை மறக்க வேண்டாம்.
கிறிஸ்தவர்களாகிய நாம் மிஷனரிகளின் வரலாற்றை அறியவேண்டியபடி அறியவேண்டியது காலத்தின் கட்டாயம். மிஷனரிகளின் வரலாறுகளும், அவர்களைப்பற்றிய நம் அறிவும் இன்று தமிழ்நாட்டில் வீசத் தொடங்கியிருக்கும் நச்சு மதக்காற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்நாட்டைக்குறித்து நாம் பல வகைகளில் பெருமைப்படுகிறோம்! "ஓ! இது திராவிட பூமி! அமைதிப் பூங்கா! முன்னேறிய மாநிலம்! வளர்ந்த மாநிலம்! இங்கு கல்வியறிவு அதிகம்! இங்கு மதவாதிகள் காலூன்ற ஒருபோதும் இடம் கிடைக்காது; ஒருவேளை, வேறு மாநிலங்களில் வேண்டுமானால் அவர்கள் கால்பதிக்கக்கூடும்; மிதிக்கவும்கூடும்; பின்னேறிய மாநிலங்களில்தான் அவர்களுக்குச் செல்வாக்கு; இங்கு அவர்கள் செல்லாக்காசு; இங்கு மதவாதம், மதஅரசியல் எடுபடாது; கிறிஸ்தவர்கள் சுதந்தரமாக வாழலாம்," என்று நாம் மார்தட்டிக்கொண்டிருந்தோம். இப்போது இந்தப் பெருமையில் பல ஓட்டைகள்.
இன்று தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகிறார்கள்; கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்படுகின்றன; கிறிஸ்தவப் போதகர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்; நற்செய்திக் கைப்பிரதிகள் தீக்கிரையாக்கப்படுகின்றன; கிறிஸ்தவக் கல்விநிலையங்களுக்கு எதிராகப் பொய் வழக்குகள் புனையப்படுகின்றன; ஆட்சி, அரசு, அதிகாரம் பல வேளைகளில் அமைதிகாக்கிறது. இன்று, தமிழ்நாட்டில் ஒருவகையான அச்சமும், நச்சு மதக்காற்றும் அசுர வேகத்தில் வீசத் தொடங்கியிருக்கின்றன.
என்ன செய்யலாம்?
நான் ஒரு ஜெர்மானிய டீட்ரிஷ் போன்ஹோபெரவோ, வேதாகமத்தின் யாகேலோ இல்லை. அதே நேரத்தில், "நடப்பது நடக்கட்டும், கர்த்தர் பார்த்துக்கொள்வார்." என்று கருதி கைகழுபவனோ, ஒதுங்கிப்போகிறவனோ, வேடிக்கை பார்ப்பவனோ, பொறுப்பைத் தட்டிக்கழிப்பவனோ இல்லை. ஆம், தேவன் இறையாண்மையுள்ளவர் என்பது நூறு விழுக்காடு உண்மை. ஆம், இயேசுவைக் காப்பாற்ற கெத்செமெனேயில் பேதுருக்கள் வாளை உருவத் தேவையில்லை; கீழே விழப்போகும் உடன்படிக்கைப்பெட்டியைத் தாங்க ஊசாக்கள் கைகளை நீட்டத் தேவையில்லை; தேவன் செய்யவேண்டியதை நாம் செய்ய முடியாது, செய்யக்கூடாது. சரி! ஆனால் நாம் செய்யவேண்டியதைத் தேவன் செய்ய மாட்டார்; எனவே, மோசேக்களே, உங்கள் கைகளில் இருக்கும் கோல்களை நீட்டுங்கள்; சிவந்த சமுத்திரம் எத்தனை பகுதிகளாகப் பிரியும் என்பது தேவனைப் பொறுத்தது. ஆசாரியர்களே, யோர்தானில் நில்லுங்கள்; யோர்தான் பின்னோக்கிச் செல்லுமா, வற்றிப்போகுமா என்பது தேவனைப் பொறுத்தது. சிறுவர்களே, உங்களிடம் இருக்கும் சில அப்பங்களையும், மீன்களையும் இயேசுவிடம் கொடுங்கள்; அவைகளைப் பலுகச்செய்து எத்தனைபேருக்கு உணவளிப்பது என்பது தேவனைப் பொறுத்தது. வேலைக்காரர்களே, கற்சாடியில் தண்ணீரை ஊற்றுங்கள், அது என்னவாக மாறும் என்பது அவரைப் பொறுத்தது. கிதியோன்களே, எக்காளம் ஊதுங்கள். யோசுவாக்களே, எரிகோ விழும்!
இதில் நான் என் பங்கைச் செய்கிறேன்; என் பணியைத் தொடர்கிறேன். நான் சொல்லப்போகும் காரியங்கள் அந்தரங்கத்தில் அமைதியாகச் சொல்லப்படவேண்டியவை அல்ல. மாறாக, மலைமேல் நின்று உலகுக்கு உரக்கச் சொல்லப்படவேண்டியவை. "காதுள்ளவன் கேட்கக்கடவன்."
இப்போது என்ன செய்யலாம்?
இதோ! இது தமிழ் மண்ணில், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடியில், முதன்முதலாக கிறிஸ்துவை விதைத்த ஒரு மிஷனரியின் வரலாறு! இது இன்று மறைக்கப்படுகிற, மறுக்கப்படுகிற, ஆனால், மறக்கமுடியாத ஒரு மாமனிதனின் வரலாறு. “நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி...சாட்சிகொடுக்கிறோம் " (யோவான் 3:11).
இவரைப்பற்றி நான் இரண்டு பாகங்களில் பேசப்போகிறேன். முதல் பாகம் அவர் தேவனுக்கும், தேவ மக்களுக்கும், தேவனுடைய அரசுக்கும், தேவனுடைய சபைக்கும் ஆற்றிய ஊழியம். இரண்டாவது பாகம் அவர் தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் ஆற்றிய பணிவிடை.
ஒளி வீசட்டும், இருள் விலகட்டும். ஜீவன் பாயட்டும், மரணத்தை விழுங்கட்டும்; சத்தியம் ஓங்கட்டும், அசத்தியம் அவமாகட்டும். நற்செய்தி பரவட்டும்! துர்ச்செய்தி அகலட்டும்.
II. வாழ்க்கைச் சுருக்கம்
பர்த்தலோமேயு சீகன்பால்க். இவர் தென்னிந்தியாவில் சீர்திருத்த சபையின் ஊழியத்தைத் தொடங்கிய முதல் லுத்தரன் மிஷனரி.
A. பிறப்பும், இளமைப் பருவமும்
சீகன்பால்க் 1682ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள புல்ஸ்னிட்ஸ் என்ற ஊரில் பிறந்தார். அவருடைய அப்பா பர்த்தலோமேயு, அம்மா கேத்தரின். அவருடைய அப்பா பர்த்தலோமேயு ஒரு மளிகைக்கடை நடத்தினார். சீகனுக்கு மொத்தம் நான்கு சகோதரிகள். இவர்தான் ஒரே பையன், கடைசிப் பையன். அவருடைய குடும்பத்தில் அவர் உட்பட அவருடைய பெற்றோர், அவருடைய சகோதரிகள், அனைவரும் அவ்வளவு ஆரோக்கியமானவர்கள் இல்லை. அனைவரும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார்கள். பலவீனமான குடும்பம். சீகனும் மிகவும் பலவீனமானவர். நோஞ்சான் குழந்தை. மிகவும் பலவீனமான, ஆரோக்கியம் குன்றிய இந்த சீகன்தான் நம் தமிழ் மண்ணில் 13 ஆண்டுகள் ஊழியம்செய்தார் என்பது வியப்பாக இருக்கிறது.
அவருடைய இளமைப் பருவம் முழுவதும் துன்பங்களும், துயரங்களும் அவரைத் தொடர்ந்து வந்தன. சீகன்பால்க் சிறுவனாக இருந்தபோதே அவருடைய பெற்றோர் இருவரும் இறந்துவிட்டார்கள். அவருடைய 10ஆவது வயதில், அவருடைய அம்மா கேத்தரின் காலமானார்; விசுவாச வீராங்கனையான அவருடைய தாய் மரணப் படுக்கையில் இருந்தபோது, அழுதுகொண்டிருந்த தன் சிறு பிள்ளைகளைத் தன்னிடம் அழைத்து, "உங்களுக்காக நான் ஒரு பெரிய பொக்கிஷத்தைச் சேர்த்து வைத்திருக்கிறேன். இந்தப் பரிசுத்த வேதாகமம்தான் அந்தப் பொக்கிஷம். வேதாகமத்தில் நீங்கள் அதைத் தேடுங்கள். இங்கு நீங்கள் அதைக் கண்டுபிடிப்பீர்கள். வேதாகமத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் நான் என் கண்ணீரால் நனைத்திருக்கிறேன்," என்று ஆறுதல் கூறியபின் மரித்தார். அவருடைய அம்மாவின் இந்த வார்த்தைகளை சீகன் தன் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் மறக்கவில்லை.
அவருடைய 12ஆவது வயதில் அவருடைய அப்பா பர்த்தலோமேயு காலமானார். அவருடைய அம்மா இறந்து 2 ஆண்டுகளுக்குப்பின், அவர்களுடைய ஊரில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் அவருடைய வீடும் தீப்பற்றியெரிந்தது. அப்போது வீட்டில் வியாதிப்படுக்கையில் இருந்த அவருடைய அப்பாவை எப்படிக் காப்பாற்றுவது என்று சிந்தித்தபோது, அவருடைய வீட்டில் அவர் அப்பா ஏற்கெனவே ஆயத்தமாக வைத்திருந்த பெட்டியில் வைத்து அவரை வெளியே தூக்கிக்கொண்டுபோய், திறந்த வெளியில் வைத்தார்கள். அங்கு, திறந்த வெளியில் அந்தப் பெட்டியில் அவர் இறந்தார்.
அவர் சிறுவனாக இருந்தபோதே, அவருடைய இரண்டு சகோதரிகள் காலமானார்கள். அவருடைய குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்களால் சீகன்பால்க்கின் இருதயம் நொறுங்கிப்போனது. மிகவும் வேதனைப்பட்ட சீகனுக்கு ஆவிக்குரிய புத்தகங்கள் மிகவும் ஆறுதலாக இருந்தன.
அவருடைய ஒரு சகோதரி அன்னாள் அவரை விசுவாசத்திலும் கிறிஸ்தவ முன்மாதிரியிலும் வளர்த்தார்.
கல்வியில் சிறந்து விளங்கிய சீகன்பால்க் சிறுவயதிலேயே ஆவிக்குரிய காரியங்களிலும் அதிக ஆர்வம் காட்டினார். அவர் வேதாகமத்தை முறையாகக் கற்பதற்கு அவருடைய அம்மாவின் கடைசி வார்த்தைகள் ஒரு தூண்டுதலாக இருந்தன.
இளம் வயதிலேயே அவரிடம் ஆத்தும பாரம் அதிகமாக இருந்தது. ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன், "ஐயோ, இந்த ஆத்துமா இப்போது எங்கு போகுமோ!" என்று சீகன் அங்கலாய்த்தார், பரிதபித்தார். அந்த அளவுக்கு ஆத்தும பாரம்!
B.ஆரம்பக் கல்வி
சீகன்பால்க் தன் சொந்த ஊராகிய புல்ஸ்னிட்சிலும், பின்னர் காமென்ஸ் என்ற ஊரிலிலும் ஆரம்பக் கல்வி பயின்றார். இன்று நம் ஊரில் பள்ளி கல்லூரிகளில் தமிழ் அல்லது ஆங்கிலம் நம் பயிற்றுமொழியாக இருப்பதுபோல், அவருடைய பயிற்றுமொழி இலத்தீன். ஆரம்பக் கல்வியை முடித்தபின் அவர் தன் 12 ஆவது வயதில் கோயர்லிட்ஸ் (Görlitz) என்ற ஊரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து, அங்கு 8 ஆண்டுகள் பயின்றார்.
பள்ளியின் பதிவேட்டில் அவருடைய பெயருக்கு நேரே என்ன எழுதியிருந்தார்கள் தெரியுமா? “உடலிலும், உள்ளத்திலும் உரமற்ற மாணவன்” என எழுதப்பட்டிருந்தது.
C. கல்லூரிப் படிப்பு
உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தபின் 1702ஆம் ஆண்டு சீகன்பால்க் பெர்லின் நகரத்தில் உயர்கல்விக்காகப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அவருடைய உடல் பெலவீனத்தால் அவர் தன் படிப்பைத் தொடரமுடியாமல், பாதியில் நிறுத்திவிட்டு வீடுதிரும்பினார். ஹாலேயில் படித்த நாட்களிலும் அவர் நோய்வாய்ப்பட்டார். தன் நோயையும், பலவீனத்தையும்குறித்து, “நான் எங்கு போனாலும் என் நேசச் சிலுவை என்னைப் பின்தொடர்கிறது,” என்று சீகன் கூறுவாராம். ஆயினும், "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்," என்று கர்த்தர் பவுலுக்குச் சொன்னதுபோல், சீகன் தன்மேல் தங்கிய, தன்னைத் தாங்கிய கிறிஸ்துவின் வல்லமையால் வாழ்ந்தார். எனவே, அவர் தன் பலவீனங்களை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவருடைய உடல் பலவீனம் அவர் இரக்கத்தோடும், மனத்தாழ்மையோடும் வாழ அவருக்குப் பெருந்துணை புரிந்தது.
இறையியல் படிப்பு
இறையியல் படிக்க அவர் அயராது உழைத்தார். பரிசுத்த வேதாகமத்தைச் சலிப்பின்றிப் படித்தார். கிரேக்கு, எபிரேயம், இலத்தீன் மொழிகளை அவர் நல்ல முறையில் கற்றுத்தேறினார். மற்றவர்களுக்குப் போதிக்கிற தான் ஆகாதவனாகிவிடாதவாறு தன்னைக் காத்துக்கொள்ள அவர் அனுதினமும் ஜெபித்தார்; அதற்கேற்றாற்போல் தன் வாழ்க்கையைச் சீரமைத்துக்கொண்டார்.
ஹாலே பல்கலைக்கழகத்தில் பிலிப் ஸ்பென்னர், ஆகஸ்ட் பிராங்கே (August Franகெ) என்பவர்களின் நூற்களால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். இந்த பிலிப் ஸ்பென்னர்தான் நவீன மிஷனரி இயக்கம் தோன்றக் காரணமாயிருந்த பக்தி இயக்கத்தின் தந்தை என்றழைக்கப்படுகிறார். பக்தி இயக்கம் 17ஆம் நூற்றாண்டில் ஸ்பென்னரால் ஜெர்மனியில் நிறுவப்பட்டது. பிராங்கேயின் முயற்சியால் ஹாலே பல்கலைக்கழகம் பக்திஇயக்கத்தின் மையமாகத் திகழ்ந்தது.
அவர் தன் 16ஆவது வயதில் Evangelical Mysticism என்ற அந்தப் பக்தி இயக்கத்தில் சேர்ந்தார். இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஒருவகையான பரவசநிலையைப் போதித்தார்கள், பின்பற்றினார்கள். பரவசநிலையின்மூலம் அவர்கள் தேவனைத் தொடர்புகொள்ளவும், ஆராதிக்கவும் முயன்றார்கள். சீகன் இந்த இயக்கத்தில் சேர்ந்தபோதும், வேதாகமத்தை விடாமல் தொடர்ந்து ஆழமாகப் படித்ததால், அந்த இயக்கத்தின் கொள்கைக்குள் அவர் முழுமையாக மூழ்கிவிடவில்லை. பரவசநிலைக்கும் வேதாகம அறிவுக்கும் இடையேயுள்ள இடைவெளியை அவர் தெளிவாகக் கண்டார்; இரண்டையும் அவர் சீர்தூக்கிப்பார்த்தார். குழப்பத்திலிருந்த அவர், வேதத்தை நன்கு கற்றிருந்ததால். பல மாதப் போராட்டத்திற்குப்பின்பு அதிலிருந்து விடுதலை பெற்றார்.
அவர் தனியாக அமர்ந்து வேதாகமத்தை அதிக நேரம் வாசித்தார், தியானித்தார். அதைக் கவனித்த அவருடைய பள்ளித் தோழர்கள் அவரைக் கேலிசெய்தார்கள். கிண்டலும், கேலியும்செய்த மாணவர்களுக்கிடையே பக்தியுள்ள ஒரு நல்ல நண்பன் அவருக்குக் கிடைத்தான். அவர்கள் இருவரும் ஒவ்வொருநாளும் சேர்ந்து ஜெபித்தார்கள், வேதம் வாசித்தார்கள். இதைப்பற்றி சீகன்பால்க் குறிப்பிடும்போது, "என் இருதயம் தெய்வீக சந்தோஷத்தால் நிறைந்திருப்பதால் உலகப்பிரகாரமான சிற்றின்பங்களைத் துறக்கவும், உலகத்தாரின் எதிர்ப்புகளைச் சகிக்கவும் முடிகிறது," என்று கூறினார்.
D. தூதுவ அழைப்பு
சீகன்பால்க் தன் 16ஆவது வயதில் இரட்சிக்கப்பட்டார். அவர் இரட்சிக்கப்பட்டபின் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, “புறவினத்தார் வாழும் நாட்டில் ஒரேவோர் ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாபோன்ற ஒரு கிறிஸ்தவ நாட்டில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்குச் சமம்,” என்று கேட்ட வார்த்தைகளின்மூலமாக தேவன் சீகன்பால்க்கை மிஷனரியாக அழைத்தார்.
அவர் இறையியல் படித்துக்கொண்டிருந்த நாட்களிலேயே தங்கள் சபைக்குப் போதகராக வருமாறு பல சபைகளிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. ஆனால், அந்த அழைப்புக்களை அவர் ஏற்க மறுத்துவிட்டார். ஏனென்றால், மிஷனரியாகச் செல்ல வேண்டும் என்று அவர் தன்னை ஏற்கெனவே அர்ப்பணித்திருந்தார்.
டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி
இங்கிலாந்தின் மகாராணி இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியை ஏற்படுத்தியதுபோல, டென்மார்க் மன்னர் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியை நிறுவினார். அவர் 1620 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தஞ்சை நாயக்கர் மன்னரோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார். அந்த ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் டேனிஷ் அரசு பிரதிநிதிகள் வந்து தங்கவும், வர்த்தகம் செய்யவும், ஒரு கோட்டை கட்டிக்கொள்ளவும் ஒப்புக்கொண்டார்கள். தரங்கம்பாடியில் இரண்டே ஆண்டுகளில் கி.பி 1622இல் ஒரு பிரமாண்டமான கோட்டை கட்டிமுடிக்கப்பட்டது. அந்தக் கோட்டை இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமைச் செயலகமாகச் செயல்பட்டது.
டென்மார்க்கின் பேரரசர் நான்காம் ஃப்ரெடெரிக், டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் காலனிக்குட்பட்ட இடங்களுக்குக் கிறிஸ்தவ மிஷனரிகளை அனுப்பி நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற பேரார்வம் கொண்டிருந்தார். நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற பாரமும், ஆர்வமும் அன்றைய மதவாதிகளுக்கோ, குருக்களுக்கோ ஏற்படவில்லை, மாறாக அந்தப் பார்வையும், பாரமும், பேரார்வமும், ஓர் அரசனுக்கு எழுந்தது; டென்மார்க் லுத்தரன் சபை அரசருடைய விருப்பத்தை வரவேற்கவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடைய ஒத்துழைப்பின்றி டென்மார்க்கில் மிஷனரிகளைத் தேட முடியாது. ஆகவே, மிஷனரிகளைத் தேர்ந்தெடுக்கும் பணி ஜெர்மனியில் நடைபெற்றது.
அப்போது, சீகன்பால்க் ஜெர்மனியில் ஹாலே நகரில் ஒரு கல்லூரியில் இறையியல் படித்துக்கொண்டிருந்தார். மிஷனரியாக வருமாறு மன்னர் சார்பில் அவருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அவர் அப்போதுதான் இறையியல் படிக்க ஆரம்பித்திருந்ததாலும், அவருடைய உடல்நிலை அவ்வளவு ஆரோக்கியமாக இல்லாததாலும், அவர் இன்னும் இளைஞனாக இருந்ததாலும், ஆரம்பத்தில் அவர் மன்னரின் மிஷனரி அழைப்பை ஏற்கத் தயங்கினார். மிஷனரியாகப் போக வேண்டும் என்பதே அவருடைய குறிக்கோள். அதுவே அவருடைய அழைப்பு. ஆனால், அந்தக் கட்டத்தில் மிஷனரியாகச் சென்றால், மிஷனரிப் பணியைச் செவ்வனே நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற ஐயத்தினால், அச்சத்தினால் அவர் முதலில் கொஞ்சம் தயங்கினார். ஆனால், அந்த அழைப்பைத் தேவனே தந்த அழைப்பாக எண்ணி அவர் ஏற்றுக்கொண்டார். சீகன்பால்க்கின் பெயரும், அவருடைய நண்பரான ஹென்றி புளுட்சோவின் பெயரும் டென்மார்க்கிலுள்ள கோப்பன்ஹாகனுக்கு அனுப்பப்பட்டது.
அந்த நாட்களில் ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள், "வெளிநாட்டிற்கு மிஷனரிகளை அனுப்புவது வீண்," என்றே நினைத்தார்கள். சீகன்பால்க்கையும், அவருடைய நண்பரையும் மிஷனரிகளாக அனுப்புவதைப் பெரும்பாலான ஐரோப்பியக் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ அமைப்புக்களும் விரும்பவில்லை, வரவேற்கவில்லை, ஆதரிக்கவில்லை, அங்கீகரிக்கவில்லை. "ஐரோப்பாவில் ஏற்கெனவே முளைத்திருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற போதுமான ஆட்கள் இல்லாதபோது, ஏன் வெளிநாட்டிற்குச் சென்று புதிய செடியை நட வேண்டும்?" என்று அன்று வாதாடியவர்கள் அநேகர்.
டென்மார்க் பேராயர் அவர்கள் இருவரையும் பிரதிஷ்டை செய்ய மறுத்துவிட்டார். அரசாணையின்படி இருவரும் லூத்தரன் பேராயரால் குருப்பட்டம் பண்ணப்பட்டார்கள். பின்னர் அரச குடும்பத்தினர் இவர்கள் இருவரையும் சிறப்பு விருந்தினராக அரச மாளிகைக்கு அழைத்தார்கள். மன்னரின் அழைப்பை ஏற்று இருவரும் டென்மார்க் சென்றார்கள். அந்த நாள்முதல் அவருக்கு அரச குடும்பத்துடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அவருடைய மரணம்வரை அந்த நட்பு தொடர்ந்தது. அவர்கள் இருவரையும் எந்த நாட்டுக்கு மிஷனரிகளாக அனுப்பலாம் என்று பலவாறு சிந்தித்தபின், இந்தியாவுக்கு அனுப்பலாம் என்று மன்னர் தீர்மானித்தார்.
E. கடற்பயணம் :
டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் ஆங்கிலேயர்களின் ஈஸ்ட் இந்தியா நிறுவனத்தைப்போல் பெரிய வெற்றியைப் பெறவில்லை. டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் இந்தியாவில் இயங்கிய முப்பத்து நான்கு ஆண்டுகளில் டென்மார்க் கப்பல்கள் ஏழுமுறை மட்டுமே ஆசிய நாடுகளிலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு டென்மார்க்கின் தலைநகரான கோப்பன்ஹாகனுக்குச் சென்றன.
டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உட்பட்ட காலனிகளில் நற்செய்தி அறிவிக்க டென்மார்க் அரசர் மிஷனரிகளை அனுப்புவதை டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியும் விரும்பவில்லை;ஆனால், அரசரை நேரடியாக எதிர்க்க முடியாததால், அவர்கள் அவருடைய நோக்கத்தைத் தடுக்க மறைமுகமாகக் காய்களை நகர்த்தினார்கள். அரசர் அனுப்பும் மிஷனரிகளை இந்தியாவில் இறங்கவிடாமல் இடையூறுசெய்ய அவர்கள் கங்கணம்கட்டினார்கள். “அவர்களைத் தரையிறங்க அனுமதிக்கக்கூடாது, அதையும் மீறி அவர்கள் தரையிறங்கினால் அவர்களை வரவேற்கக்கூடாது, தங்குவதற்கு இடம் கொடுக்கக்கூடாது, எங்காவது தங்கிவிட்டால் அவர்கள் வேலைசெய்வதற்கு ஒத்துழைக்கக்கூடாது,” என எப்படியாவது அவர்களை அங்கிருந்து விரட்டவேண்டும் என்று தரங்கம்பாடியில் வேலைசெய்யும் அதிகாரிகளுக்கு ஆலோசனை சொன்னார்கள்.
கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும் என்ற நாட்டமும், வேட்கையும் கொண்ட டென்மார்க் அரசர் இருவரையும் 1705ஆம் ஆண்டு, நவம்பர் 29 ஆம் நாள் இந்தியாவிற்குத் தரங்கம்பாடியிலுள்ள டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியில் வேலைசெய்கிறவர்கள் என்ற பெயரில் அனுப்பினார். பயணத்தின்போது கப்பல் அலைகளாலும், புயல்களாலும் அலைக்கழிக்கப்பட்டதையும், பயணத்தின்போது கப்பலில் இறந்தவர்களின் சடலங்கள் கடலில் வீசியெறியப்பட்டதையும் நேரடியாகக் கண்ட சீகன்பால்க் தன் கடற்பயணத்தை,”மரணக் கல்விக்கூடம்” (Academy of death ) என்று குறிப்பிட்டார்.
அவர்கள் பயணித்த கப்பலின் பெயர் சோபியா. சோஃபியா என்றால் ஞானம் என்று பொருள். தான் போகிற இடத்தில் தனக்கு ஞானம் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்த சீகன் கப்பல் பயணத்தின்போது ஞானத்தைப்பற்றித் தியானித்தார். அந்தத் தியானத்தின் தொகுப்பே”The General School of True Wisdom” என்னும் புத்தகம். இந்தப் புத்தகம் பின்னர் 1710ஆம் ஆண்டு டென்மார்க் இளவரசி சோஃபியாவின் உதவியால் வெளியிடப்பட்டது.
கப்பல் மாலுமிகளும், தலைவனும் அவர்களுடைய பயணத்தின் நோக்கத்தை அறிந்தபோது அவர்களைக் கேலி செய்தார்கள். ஆனால் சீகன்பால்க் மனந்தளரவில்லை. இருவரும் ஏழு மாதக் கப்பல் பயணத்திற்குப்பிறகு 1706ஆம் ஆண்டு, ஜூலை 9ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டின் கடற்பகுதியான தரங்கம்பாடியை வந்தடைந்தார்கள்.
F. தரங்கம்பாடி வருகை
தரங்கம்பாடி தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை ப் பகுதியில் சில நூற்றாண்டுகள் உலகமெங்கும் பிரசித்திபெற்ற ஒரு கடற்கரை நகரமாக விளங்கியது. டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி தரங்கம்பாடியைத் தன் வர்த்தக அமைப்பிற்குத் தளமாக அமைத்திருந்தார்கள்.
சீகனும் அவருடைய நண்பர் புளுட்சோவும் தடைகள் பல தாண்டி தரங்கம்பாடியை வந்தடைந்தார்கள். ஆனால், பயணத்தின் முடிவில் அவர்களுக்கு இன்னும் ஒரு பெரிய தடை காத்திருந்தது. கப்பல் கரைவரை வரமுடியாது. கப்பல் துறைமுகத்தில் நிற்கும். அவர்களைக் கப்பலிலிருந்து கரைக்கு அழைத்துவரப் படகுகளை அனுப்ப வேண்டும். ஆனால், படகுகள் அனுப்பப்படவில்லை. எனவே, கப்பல் தரங்கம்பாடிக்கு வந்தபின்னும் அவர்கள் கரைக்கு வரமுடியாமல் மூன்று நாட்கள் கப்பலிலேயே காத்திருக்க வேண்டியிருந்தது.
டென்மார்க்கின் பேரரசர் அவர்களை அனுப்பியிருந்ததால், அவர்கள் அரசரின் ஒற்றர்களாக, வேவுகாரர்களாக, இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தாலும், அவர்களை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற செய்தி தரங்கம்பாடியிலிருந்த டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின்ஆளுநருக்கு ஏற்கெனவே வந்திருந்ததாலும் அவர்களை வரவேற்க யாரும் வரவில்லை. அவர்களுடைய வருகையை டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் மட்டுமல்ல, அங்கிருந்த டேனிஷ் போதகர்களும் விரும்பவில்லை.
கடைசியாக சரக்குகளை இறக்க வந்த ஒரு படகில் ஏறி அவர்கள் கரைசேர்ந்தார்கள். அவர்கள் இருவரும் தமிழக மண்ணில் கால்பதித்த நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். 1706ஆம் ஆண்டு ஜூலை 9ம் நாள் காலை 10 மணிக்கு அவர்கள் தரங்கம்பாடியில் வந்திறங்கினார்கள். அப்போது அவருக்கு வயது 23.
தரங்கம்பாடி. மயிலாடுதுறை மாவட்டத்தில், காரைக்காலுக்கு வடக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. தரங்கம்பாடி என்றால் அலைகள் பாடும் இடம் என்று பொருள்.
அரசர் கொடுத்தனுப்பிய கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து அறிமுகம்செய்ய வேண்டும். அவர்களை அழைக்க ஆளுநர் படகோ, ஆட்களோ அனுப்பவில்லை என்பது மட்டும் அல்ல; அவர் அவர்களைச் சந்திக்கவும் மறுத்தார்; அவர்கள் இருவரும் ஆளுநர் ஹேசியசைச் (commander J.C.Hassius) சந்திக்கக் காலை 10மணிமுதல் மாலை 4மணிவரை அவருடைய அலுவலகத்தில் காத்திருந்தார்கள். காத்திருந்த நேரத்தையும் வீணாக்க விரும்பாத அவர்கள் ஜெபித்துக்கொண்டும், அப்போஸ்தலர் நடபடிகளை வாசித்துக்கொண்டுமிருந்தார்கள். இறுதியாக கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநரான ஹேசியஸ் அவர்களை வந்து சந்தித்தபோது, ஒன்றும் தெரியாதவர்போல், “நீங்கள் யார்? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். சீகன்பால்க் டென்மார்க் அரசனின் முத்திரையிட்ட கடிதத்தைக் காண்பித்தார். கடைசியாக அவர் வேண்டா வெறுப்போடு அவர்களை அழைத்துச் சென்றார்.
வேற்று நாடுகளுக்கு மிஷனரிகளை அனுப்புவதை டென்மார்க்கிலிருந்த கிறிஸ்தவர்கள் வரவேற்கவில்லை, கிறிஸ்தவ அமைப்புகள் ஏற்கவில்லை, லூத்தரன் சபை ஒப்புக்கொள்ளவில்லை, கிழக்கிந்திய கம்பெனி எதிர்த்தது, கப்பல் பயணத்தின்போது மாலுமிகளும், சிப்பந்திகளும் ஏளனம் செய்தார்கள்; தரங்கம்பாடி வந்தடைந்தபின் அங்கிருந்த ஆளுநர் வரவேற்கவில்லை, படகு அனுப்பவில்லை, அவர்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை. எத்தனை தடைகள்! அத்தனையும் தாண்டி அவர்கள் தமிழ்நாட்டின் தரங்கம்பாடியின் மண்ணில் கால்பதித்தார்கள். இது தேவனுடைய இறையாண்மை.
தரங்கம்பாடியில் தத்தளிப்பு
தரங்கம்பாடியின் சந்தைவழியாக நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, ஆளுநர் அவர்களைத் தன்னந்தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டார். மொழி தெரியாத ஓர் அந்நிய நாட்டில், அறிமுகமானவர்கள் ஒருவரும் இல்லாத ஒரு சூழ்நிலையில், அந்த வாலிபர்கள் இருவரும் அனாதைகளைப்போல் தெருவிலே நின்றார்கள். ஆனால், தேவன் அவர்களைக் கைவிடவில்லை.
தரங்கம்பாடியில் அந்தக் காலகட்டத்தில் பலதரப்பட்ட மக்கள் நிறையப்பேர் வாழ்ந்தார்கள். அங்கு போர்ச்சுகீசியர்கள் இருந்தார்கள், போர்ச்சுகீசிய மொழி பேசிய உள்ளூர்வாசிகள் இருந்தார்கள். இவர்கள் ஐரோப்பிய அப்பாக்களுக்கும், உள்ளூர் அம்மாக்களுக்கும் பிறந்தவர்கள். அவர்களுடைய தாய்மொழி தமிழ். ஆனால், இவர்களுடைய பிள்ளைகள் போர்ச்சுகீசு மொழிதான் பேசினார்கள். இவர்கள் அஞ்ஞானிகளே. முகமதியர்கள் இருந்தார்கள். அன்று அவர்கள் மூர் என்று அழைக்கப்பட்டார்கள். ரோமன் கத்தோலிக்கர்கள் இருந்தார்கள். உள்ளூர் தமிழர்கள் இருந்தார்கள். இப்படிப் பலதரப்பட்ட மக்கள் அங்கு வாழ்ந்தார்கள்.
தரங்கம்பாடியில் வந்திறங்கிய சீகனுக்கு எங்கே போவது, எங்கே தங்குவது என்று தெரியவில்லை. அவர்கள் போர்ச்சுகீசியர்களின் வீடுகளில் வேலைசெய்த வேலைக்காரர்கள் வசித்த இடத்தில் போய்த் தங்கினார்கள். பின்னர் அவர்களுடைய பரிதாபமான நிலையைக் கண்ட ஒருவர் அவர்கள்மேல் இரங்கி தன் வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்தார். நாட்கள் கடந்தன. காலப்போக்கில் அங்கு தங்கியிருந்த ஜெர்மானியர்கள் சீகனுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
சீகன்பால்க் வருவதற்குமுன்பே தரங்கம்பாடியில் சீயோன் ஆலயம் என்ற ஒரு கிறிஸ்தவ ஆலயம் இருந்தது. ஆனால், அது ஐரோப்பியக் கிறிஸ்தவர்களுக்கான ஆலயம். அந்த ஆலயத்தில் ஒரு பாதிரியாரும் இருந்தார். அவர் அங்கிருந்த டென்மார்க் அதிகாரிகளுக்கு வாரத்தில் இருமுறை பிரசங்கித்தார். அங்கு இருந்த பாதிரியார்கள் தரங்கம்பாடியில் நிரந்தரமாகத் தங்கவில்லை. டென்மார்க்கிலிருந்து தரங்கம்பாடிக்கு வியாபாரத்திற்காக வந்த கப்பலில் பாதிரியார்கள் வந்தார்கள்; அந்தக் கப்பல் திரும்பி டென்மார்க்குக்குச் சென்றபோது அவர்களும் திரும்பிச் சென்றார்கள். பாஸ்டர் ஜேக்கப் கிளெமெண்ட்டின் என்பவர் மட்டும் இரண்டாவது தடவையும் தரங்கம்பாடிக்கு வந்தார், 1730இல் மரிக்கும்வரை அவர் தரங்கம்பாடியில் இருந்தார்.
G. மொழி கற்றலின் ஆரம்ப முயற்சி
1. போர்ச்சுகீசிய மொழியைக் கற்றல். சீகனுக்கும், அவருடைய நண்பர் புளுட்சோவுக்கும் அன்றைய அலுவலக மொழியான டேனிய மொழியும் தெரியாது, உள்ளூர் தமிழும் தெரியாது, தரங்கம்பாடியில் வாழ்ந்தவர்கள் பேசிய போர்ச்சுகீசிய மொழியும் தெரியாது. அவர்கள் ஜெர்மானியர்கள்.
அவர்கள் தரங்கம்பாடிக்கு வந்த ஆறாவது நாளில் போர்ச்சுகீசிய மொழியைக் கற்க ஆரம்பித்தார்கள். அவர்கள் முதலாவது போர்ச்சுகீசிய மொழியைக் கற்க ஆரம்பித்ததற்கு ஒரு காரணம் உண்டு. ஒன்று, போர்ச்சுகீசிய மொழிக்கும் இலத்தீன் மொழிக்கும் கொஞ்சம் ஒற்றுமை இருப்பதுபோல் தோன்றியது. இரண்டு, அவர்கள் வருவதற்குமுன்பே தமிழ்நாட்டுக்கு வந்திருந்த போர்ச்சுகீசிய பாதிரியார்களின் வரவால் உள்ளூர் மக்களில் பலர் போர்ச்சுகீசிய மொழியைக் கற்றிருந்தார்கள். மூன்று, அங்கு இருந்த உள்ளூர்வாசிகள்உட்பட ஐரோப்பியர்கள் அனைவரும் போர்ச்சுகீசியமொழி பேசினார்கள். எனவே, அங்கிருந்த எல்லோரோடும் உறவாட போர்ச்சுகீசிய மொழி உதவும் என்பதால் அவர்கள் அதைக் கற்கத் தொடங்கினார்கள், முதலாவது அவர்கள் பேச்சுவழக்குப் போர்ச்சுகீசிய மொழியைக் கற்றார்கள். மிக விரைவில் அதைப் பேசவும் தொடங்கினார்கள்.
2. தமிழ் மொழியைக் கற்றல்.
தமிழ்நாட்டில் தமிழைக் கற்காமலே நற்செய்தி அறிவித்தவர்கள் உண்டு. உரோமன் கத்தோலிக்கச் சபையைச் சார்ந்த பிரான்சிஸ் சேவியர்போன்ற சிலர் இந்திய மொழியைக் கற்றுக்கொள்ளாமல் மொழிபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்தி ஊழியம் செய்தார்கள். இராபர்ட் டி நோபிலி, வீரமாமுனிவர் என்றழைக்கப்படும் பெஸ்கிபோன்றோர் தமிழ்மொழி பயின்று ஊழியம் செய்தார்கள்.
தமிழ் நாட்டில் நற்செய்தி அறிவிக்க வேண்டுமானால் தமிழ் மொழியைக் கற்றாக வேண்டும் என்று சீகன்பால்க்குக்குத் தெரியும்.
அழகப்பன், முதலியப்பன் என்ற தமிழ் நண்பர்களின் உதவியோடு தரங்கம்பாடியின் கடற்கரை மணலில் கைவிரல்களால் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்களை எழுதிப் படிக்க ஆரம்பித்தார்.
46 வயதுடைய அலெப்பா என்ற ஓர் உதவியாளர் கிடைத்தார். அலெப்பாவுக்கு போர்ச்சுகீசு, ஜெர்மன், டச்சு போன்ற பல மொழிகள் தெரியும். அவருடைய உதவியுடன் சீகன்பால்க் உள்ளூர் செய்திகளை அறிந்துகொண்டார்.
6. சீகனின் அன்றாட அலுவல்கள்
சீகனின் அன்றாட அலுவல்களை அறியும்போது அவருடைய வாழ்க்கையின் ஒழுங்கைக்கண்டு வியக்காமல் இருக்க முடியாது. அவர் காலை ஜெபத்திற்குப்பின் தன் வழக்கமான வேலையைத் தொடங்கினார். ஆறுமுதல் ஏழுவரை அங்கிருந்த மக்களுக்குத் தமிழில் ஞானோபதேச வகுப்பு நடத்தினார். ஏழுமுதல் எட்டுவரை தான் கற்றுக்கொண்ட தமிழ்ச்சொற்களையும், சொற்றொடர்களையும் மதிப்பாய்வுசெய்தார். எட்டுமுதல் பன்னிரெண்டுவரை தமிழ்ப் புத்தகங்களை மட்டுமே படித்தார். அவருடைய செயலாளர் ஒரு தமிழ்ப் புலவரின் வழிகாட்டுதலின்படி புதிய வார்த்தைகளை அவருக்கு விளக்கினார். அவருக்கு இதுவரை தெரியாத எல்லாப் புதிய வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் அவர் எழுதினார். பன்னிரெண்டுமுதல் ஒன்றுவரை மதிய உணவு. அவர் சாப்பிடும்போது ஒருவர் வேதாகமத்தை வசித்துக்கொண்டேயிருப்பார். ஒன்றுமுதல் இரண்டுவரை ஓய்வெடுத்தார். இரண்டுமுதல் மூன்றுவரை அவருடைய வீட்டில் மீண்டும் ஞானோபதேச வகுப்பு நடத்தினார். மூன்றுமுதல் ஐந்துவரை மீண்டும் தமிழ்ப் புத்தகங்கள் படித்தார். ஐந்துமுதல் ஆறுவரை அவரும் அவருடைய நண்பரும் கூடி ஜெபித்தார்கள். ஆறுமுதல் ஏழுவரை அன்றைய நிகழ்வுகளை இருவரும் ஒன்றாக விவாதித்தார்கள். விளக்கு ஒளியில் அதிக நேரம் படிக்க முடியாததால் ஒரு தமிழ் எழுத்தாளர் அவருக்காகத் தமிழில் படித்தார். எட்டுமுதல் ஒன்பதுவரை இரவு உணவு. அப்போதும் ஒருவர் அவருக்காக வேதாகமத்தை வாசித்தார். அதன்பிறகு குழந்தைகளைப் பரிசோதித்து, அவர்களுடன் உரையாடினார்.
இவ்வாறு, தொடர்ச்சியான பயிற்சியின்மூலம் அவர் தமிழில் தேறினார். இப்படித் தமிழ் கற்றவர்கள் எத்தனைபேர்? இது அவருடைய ஒருநாள் பயிற்சியல்ல. இதுதான் அவருடைய வாழ்க்கை.
H. நற்செய்திப்பணி ஆரம்பம்
தரிசனம் இல்லாதவர்கள் வழி விலகுவார்கள். தரிசனம் உள்ளவர்கள் நேர்பாதையில் பயணிப்பார்கள். சீகன்பால்க் தான் யார் என்பதையோ, தன் பணி என்னவென்பதையோ ஒருபோதும் மறக்கவில்லை. அவர் கிறிஸ்துவை அறிவிக்க நேரத்தையும், வாய்ப்பையும் தேடினார். தேவனுடைய நடத்துதலை நாடினார். தேவன் அவரை நடத்தினார். எத்தனையோ சவால்கள்! தடைகள்!
1706 நவம்பரில், தரங்கம்பாடியில் கால்பதித்த ஐந்தே மாதங்களில், போர்ச்சுகீசிய மொழியிலும், 1707 ஜனவரியில், ஏழே மாதங்களில், தமிழிலும் அவர் ஞானோபதேச வகுப்புகள் நடத்த ஆரம்பித்தார். அவர் தன் வீட்டுக்குமுன் ஒரு பெரிய பந்தல் போட்டு, அந்தப் பந்தலில் வாரத்தில் மூன்று நாட்கள் ஞானோபதேச வகுப்புகள் நடத்தினார். அந்த வகுப்புகளில் உள்ளூர்வாசிகள் கலந்துகொண்டார்கள். கூட்டம் முடிந்தபின் அவர் அங்கு வந்தவர்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்தார். அவர் தன் வீட்டிலும், சீயோன் ஆலயத்திலும் அங்கிருந்த ஐரோப்பியர்களுக்கு ஜெர்மன் மொழியில் பிரசங்கித்தார். அதன் விளைவாக அங்கிருந்த கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், அஞ்ஞானிகள் ஆகியவர்களுக்கிடையே ஓர் எழுப்புதல் ஏற்பட்டது; எதிர்ப்பும் எழுந்தது.
இந்தியாவில் சபையின் எதிர்காலத்தைக்குறித்து சீகன்பால்க்குக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 1707ஆம் ஆண்டு மே 12ஆம் நாள் போர்ச்சுகீசிய மொழி பேசிய ஐந்து தமிழர்கள் ஆண்டவராகிய இயேசுவைத் தங்கள் இரட்சகராக விசுவாசித்து, அறிக்கைசெய்து, ஞானஸ்நானம் பெற்றார்கள். ஞானஸ்நானம் பெற்ற இந்தியர்கள் ஐரோப்பியருடைய ஆலயங்களில் உட்காரத் தயங்கினார்கள். அவர்கள் தயங்கினார்கள் என்பதைவிட ஐரோப்பியர்கள் அவர்களைச் சகோதரர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. எனவே, அவர்களுக்கென ஒரு தனி ஆலயம் கட்டவேண்டிய தேவையை அவர் உணர்ந்தார். ஆனால், இந்தியர்களுக்கென ஒரு தனி ஆலயம் கட்டும் சீகன்பால்கின் திட்டத்தை தரங்கம்பாடியில் இருந்த ஆளுநர் ஆட்சேபித்தார். ஆலயம் கட்ட அவர் இடம் கொடுக்க மறுத்தார். டென்மார்க்கிலிருந்தும் அவருக்கு எந்த உதவியும் வரவில்லை.
எனினும், ஆலயம் கட்டும் எண்ணத்தை அவர் கைவிடவில்லை. ஆலயம் கட்ட இடம் தேடினார்; இடம் கிடைத்து; அந்த இடத்தில் ஆலயம் கட்டப்பட்டது. ஆலயம் கட்டப் பணம் குறைவுபட்டபோது அங்கிருந்த மிஷனரிகள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியைக் கொடுத்து உதவினார்கள். உள்ளூர் மக்களும் உதவினார்கள். ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. 1707ஆம் ஆண்டு ஆகஸ்டு 14ஆம் நாள் இந்தியக் கிறிஸ்தவர்களுக்கென்று ”புதிய எருசலேம் ஆலயம்” பிரதிஷ்டை செய்யப்பட்டது. சீகன்பால்க் 1708ஆம் ஆண்டு தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலயத்தில் முதன்முதலாகத் தமிழில் பிரசங்கித்தார். இது வரலாறு. இந்த ஆலயம் 1717இல் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆலயத்துக்கு அடிக்கல் போட்ட நாளில் சீகன் 1 கொரிந்தியர் 3:11யை ஆதாரமாகக்கொண்டு பிரசங்கித்தார். 1717 அக்டோபர் 11இல் அந்த ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று சீகன் எரேமியா 6:19-21இலிருந்து பிரசங்கித்தார். 1717இல் ஏறக்குறைய 30பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள். 1718இல் 50 பேர் சேர்க்கப்பட்டார்கள். அவருடைய பிரசங்கத்தைக் கேட்க மக்கள் அலைமோதினார்கள். ஆலயத்துக்கு வெளியே நின்றும் மக்கள் கேட்டார்கள். முதன்முதலாக செப்டம்பர் 5இல் புதிய எருசலேம் சபையில் ஞானஸ்நானமும் கொடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் விசுவாசிகளின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்தது. இந்த ஆலயம் மூன்று நூற்றாண்டுகளைத் தாண்டி இன்னும் இருக்கிறது.
சபையார் பாடுவதற்காக வேற்று மொழிகளிலிருந்து பல பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். அவர் ஐரோப்பிய இராகங்களுக்கு இசைந்த ஆவிக்குரிய பாடல்களையும், தமிழ் இராகங்களுக்கு ஏற்ற கீர்த்தனைகளையும் இயற்றினார். கிறிஸ்தவ விசுவாசத்தைப்பற்றிய ஒரு சிறிய வினா–விடை புத்தகம் எழுதினார்.
சபையில் ஜாதி வேற்றுமை இருக்கக்கூடாது என்பதில் அவர் மிகக் குறியாக இருந்தார்.
1708 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜோஹன் ஏர்ன்ஸ்ட் கிராண்ட்லெர், பொலிகார்பஸ் ஜோர்டன், ஜோஹன் ஜார்ஜ் போவிங் என்ற மூன்றுபேர்கொண்ட ஒரு மிஷனரி குழு சீகன்பால்க்குடன் சேர்ந்து ஊழியம்செய்ய டென்மார்க்கிலிருந்து தரங்கம்பாடிக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் 1709ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுடைய வருகையினால், ஒன்று, சீகனும், அவருடைய நண்பரும் மிகவும் ஆறுதலடைந்தார்கள். இரண்டு, டென்மார்க்கிலிருந்து வந்த கப்பலில் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வந்தன. மூன்று, ஐரோப்பாவிலிருந்த தேவ மக்கள் எழுதிய கடிதங்களும் வந்தன. "எங்களை யாரும் நினைக்கவில்லை. எங்களை எல்லாரும் மறந்துவிட்டார்கள்" என்று எண்ணியிருந்த அவர்களுக்கு அது புத்துயிர் அளித்தது. அவர்கள் அனுப்பிய உதவியுடன் அவர்கள் ஒரு வீட்டை வாங்கினார்கள். டென்மார்க்கிலும், ஜெர்மனியிலும் இருந்த தேவ மக்கள் அவர்களுக்கு உதவிசெய்தார்கள். அவர்களுடைய உதவியும், கடிதங்களும் "செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்" என்பதுபோல் இருந்தன.
அவர் தரங்கம்பாடியில் மட்டும் அல்ல, தரங்கம்பாடிக்கு அருகிலும் தூரத்திலும் இருந்த நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று நற்செய்தி அறிவித்தார். எல்லா மக்களோடும் மிகவும் இனிமையாகப் பழகினார். அதுபோல டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பனிக்கு உட்பட்ட இடங்களில் மட்டும் அல்ல. அவர்களுடைய ஆட்சி எல்லைக்கு வெளியேயும் சென்று நற்செய்தி அறிவித்தார்.
எடுத்துக்காட்டாக சென்னையிலும், கடலூரில் நற்செய்தி அறிவித்தார். சென்னைக்கும் கடலூருக்கும் சென்றபோது வழியிலிருந்த கிராமங்களில் நற்செய்தியை அறிவித்துக்கொண்டே சென்றார்.
அவர்களுக்கு உதவியாக வந்த மிஷனரியினரைத் தரங்கம்பாடியில் விட்டுவிட்டு சீகன்பால்க் தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னைபோன்ற பல இடங்களில் ஊழியம்செய்யப் புறப்பட்டார். 1709ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி தஞ்சாவூர் மண்டலத்தில் நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்டார்.
நற்செய்தி அறிவிக்க தஞ்சாவூர் அரசரின் ஆட்சிக்குட்பட்ட இடங்களுக்குச் செல்லப்போவதாக சீகன் சொன்னபோது அவருடைய உடன் ஊழியக்காரர்கள் பயந்து பின்வாங்கினார்கள். அது மிகவும் ஆபத்தானது என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால், சீகனோ,"தேவன் நம்மோடு இருந்தால், நமக்கு எந்தச் சேதமும் வராது; இந்த நாட்டில் நற்செய்தி அறிவிப்பதற்கு இன்னும் நேரம் வரவில்லையென்றால், தேவன் அதையும் நமக்குத் தெரிவிப்பார். ஆனால், என்னோடுகூட வரப் பயப்படுகிறவர்கள் வரவேண்டாம்," என்று கிதியோனைப்போல் கூறினார். ஒருவரும் மறுக்கவில்லை. அது மட்டும் அல்ல. போகுமிடமெங்கும் எல்லாரும் உண்மையையே பேச வேண்டும் என்று அவர் கூறினார். எடுத்துக்காட்டாக, "எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று யாராவது கேட்டால், "தரங்கம்பாடியிலிருந்து வருகிறோம்" என்றும், "எங்கு போகிறீர்கள்?" என்று கேட்டால், "எந்த ஊருக்குள் போகமுடியுமோ, அந்த ஊருக்கு" என்றும், "உங்கள் எஜமான் யார்?" என்று கேட்டால், "தரங்கம்பாடிலில் இருக்கும் ஓர் ஆசிரியர்" என்றும், "எதற்காக வந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டால், "சத்தியத்தைக் கேட்க விரும்பும் மக்களைத் தேடவும், அவர்களுக்குத் தேவனுடைய வார்த்தையை அறிவிக்கவும்," என்று சொல்லவேண்டும் என்று கூறினார்.
அவர்கள் புறப்பட்ட நேரத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு. எனவே, குளக்கரை ஓரமாகவே நடந்துசென்றார்கள். வழியில் பார்த்த ஒருவரும் அவர்களோடு பேசவில்லை; அவர்களும் பேசவில்லை. காலை ஆறு மணியிலிருந்து மத்தியானம்வரை நடந்தார்கள். மத்தியானத்தில் பெருமாலை என்ற ஒரு சிறிய நகரத்துக்குள் நுழைந்தார்கள். அரசு அதிகாரிகள், வரிவசூலிப்பவர்கள், பிராமணர்கள் என அங்கு நிறைய மக்கள் இருந்தார்கள். அவர் அவர்களோடு உரையாட ஆரம்பித்தார். தான் தரங்கம்பாடியிலிருந்து வருவதாகவும், தான் ஒரு பாதிரியார் என்றும் அவர் சொன்னார். அங்கிருந்த ஒரு பிராமணர், " உம்மை எனக்குத் தெரியும். என்னை நினைவிருக்கிறதா? நான் உம்மோடு அனந்தமங்கலத்தில் நீண்ட நேரம் பேசினேன்," என்றார். ஒரு வருவாய்த்துறை அதிகாரி, "நான் இரண்டு வாரங்களுக்குமுன் தரங்கம்பாடிக்கு வந்திருந்தேன். உம்மைப்பற்றிக் கேள்விப்பட்டேன்," என்றார். அனுமதிச் சீட்டு இல்லாமல் அவர் தஞ்சாவூர் ஆட்சி எல்லைக்குள் நுழைந்தது சட்டவிரோதம் என்றும், எனவே அவர் தரங்கம்பாடிக்குத் திரும்பிவிடுவது நல்லது என்றும் அதிகாரிகள் அறிவுரை சொன்னார்கள். அது மட்டும் அல்ல. “நீர் தரங்கம்பாடியில் மக்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றுவதாகவும், இங்கேயும் அதற்காகத்தான் வந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கக்கூடும். அது ஆபத்தாக முடியும். அதனால் நீர் உடனே தரங்கம்பாடி திரும்புவது நல்லது,” என்று அவர்கள் ஆலோசனை சொன்னார்கள். அதற்கு சீகன்பால்க், "நீங்கள் ஒரு பூச்சியைக்கூடக் கொல்லத் தயங்குவீர்கள். அப்படியிருக்க உங்களால் எனக்கு என்ன ஆபத்து நேரிடக்கூடும்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், "உம்மிடம் நிறையப் பணமோ, தங்கமோ இருப்பதாக மக்கள் நினைப்பதால் அதைப் பறிக்க முயலலாம். அப்போது ஆபத்து நேரிடக்கூடும்," என்றார்கள். அதற்கு சீகன், நான் இங்கு வந்திருப்பது மக்களுக்கோ, அதிகாரிகளுக்கோ எப்படித் தெரியும்?”என்று கேட்டார். அதற்கு அவர், "ஒரு மாடு எங்கள் எல்லைக்குள் நுழைந்தால் அது யாருக்கும் தெரியாது. ஏனென்றால், ஊர் முழுவதும் மாடு இருக்கிறது. ஆனால், எங்கள் எல்லைக்குள் ஒரு யானை நுழைந்தால் அது எல்லாருக்கும் உடனே தெரிந்துவிடும். அதுபோல் நீர் வந்திருப்பது எல்லாருக்கும் தெரியும். இங்கு இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல. தஞ்சாவூரிலிருக்கும் அரசருக்கும் தெரியும். எனவே, நீர் தரங்கம்பாடிக்குத் திரும்பிப்போய்விடும்," என்று கூறினார்கள். சீகன்பால்க் தனக்காக மட்டும் அல்ல, தன்னோடு வந்தவர்களுக்கும் எந்தத் தீங்கும் நேரிடக்கூடாது என்பதற்காக அன்றிரவே தரங்கம்பாடிக்குத் திரும்பினார்.
அவர் பல வழிகளில் நற்செய்தியை அறிவித்தார். எப்படியாகிலும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று அவர் பாடுபட்டார். வாய்ப்புகள் கிடைத்தபோது மக்களோடு அவர் நேரடியாக உரையாடினார். ஒருமுறை ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தன் மதத்தைப்பற்றியும், மத நம்பிக்கைகளைப்பற்றியும் மிக உயர்வாகப் பேசினார். அப்போது சீகன், "ஆம், காகத்தை மட்டுமே பார்த்தவன், அதுதான் உலகத்திலேயே மிகச் சிறந்த பறவை என்றும், அதுதான் மிக அழகாகப் பாடுகிறது என்றும் சொல்லுவான். அவன் நைட்டிங்கேல் பறவை பாடுவதைக் கேட்டதில்லையே! கேட்டால் எது அருமையாகப் பாடுகிறது என்று தெரியும். அவன் மயிலைப் பார்த்ததில்லையே! பார்த்தால் எது அழகு என்று தெரியும்," என்று பதில் சொன்னார்.
அவர் இன்னொரு வகையிலும் உள்ளூர் மக்களைத் தொடர்புகொண்டார். நேரடியாகச் சந்திக்க முடியாதபோது, அவர் கற்றவர்களுக்கும், பெரியவர்களுக்கும், மூத்தவர்களுக்கும் கடிதங்கள் எழுதினார். கடிதங்கள்மூலமாக அவர் கிறிஸ்துவை அறிவித்தார்; அவர்களிடம் கேள்விகள் கேட்டார்; அவர்களுடைய சந்தேகங்களுக்குப் பதிலளித்தார். நிறையப்பேர் பதில் எழுதினார்கள். சிலர் தங்கள் இந்து மதத்தைப் போற்றிப் பதில் எழுதினார்கள்; வேறு சிலர் ஏனோதானோவென்று பதிலளித்தார்கள்; இன்னும் சிலர் சீகன்பால்க் சொன்ன சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்; வேறு சிலர் அவரை வசைபாடினார்கள். ஒருவர் தன் பதில் கடிதத்தில் மொத்தம் 14 உலகங்கள் இருப்பதாகவும், 33 கோடி தேவர்கள் இருப்பதாகவும் பதில் எழுதினார்.
அவர் அஞ்ஞானிகளுடன் நடத்திய பேச்சுவார்தையைப்பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா? "அவர்களுடைய வாழ்க்கை இருளில் மூழ்கியிருக்கிறது; அவர்களுடைய போதனைகள் தவறானவை; ஆயினும், அவர்களுடனான உரையாடல் பல காரியங்களை நான் இன்னும் ஆழமாகவும், அதிகமாகவும் ஆராய்வதற்கு என்னைத் தூண்டின. நான் இறையியலும், தத்துவமும் கற்றிருந்தாலும், அவர்களுடன் உரையாடியபிறகு நான் இதுவரை நினைத்துக்கூடப் பார்க்காத பல பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது என்று உணர்கிறேன். அஞ்ஞானிகளை எவ்வாறு மனந்திரும்புதலுக்கு நேராக நடத்தவேண்டும் என்பதைப்பற்றி ஐரோப்பாவில் இருக்கும் பலர் எழுதியிருக்கிறார்கள். ஐரோப்பாவில் இருந்துகொண்டு இதைச் செய்வதில் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால், அவர்கள் அதை இங்கு வந்து செய்ய வேண்டும். 'அஞ்ஞானிகளே! நீங்கள் மனந்திரும்பவேண்டும்' என்று நாம் எடுத்துரைத்தால், அவர்கள் அதை எதிர்ப்பார்கள். மனந்திரும்ப வேண்டும் என்பதற்கு நாம் ஒரு காரணம் சொன்னால், மனந்திரும்ப வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கு அவர்கள் பத்துக் காரணங்கள் சொல்வார்கள். இவர்களுடன் உரையாடுவதற்கும், இவர்களுடைய அஞ்ஞானம் தவறு என்று இவர்களுக்கு உணர்த்துவதற்கும், கிறிஸ்தவமே மெய், சத்தியம், உண்மை என்ற நிலைப்பாட்டிற்கு அவர்களைக் கொண்டுவருவதற்கும் அதிகமான ஞானம் வேண்டும். தர்க்கவியலிலிருந்தும், தத்துவவியலிலிருந்தும் இந்த ஞானத்தைப் பெற முடியாது. தேவன் மட்டுமே இதைத் தரமுடியும். தேவனிடமிருந்து மட்டுமே இதைப் பெற முடியும். அவர்களுடன் உரையாடும்போது பேச வேண்டிய சரியான வாரத்தையைப் பெற நாம் தேவனுடன் ஐக்கியம்கொண்டு வாழ வேண்டும். அஞ்ஞானிகள் தங்கள் பிதாக்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் இல்லாமல் பரலோகத்தில் இருப்பதைவிட அவர்களோடு நரகத்தில் இருப்பதையே விரும்புகிறார்கள். மேலும் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக அவர்கள் உள்ளத்தில் இருக்கும் கசப்பும், பகைமையும் அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம். ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் உள்ளூர் மக்களைக் கொடூரமாக நடத்துவதாலும், அவர்களைக் கேவலமான நாய்களைப்போல் பார்ப்பதாலும், ஐரோப்பியக் கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கை தரக்குறைவாகவும், தாறுமாறாகவும் இருப்பதால் அவர்கள் இப்படி நினைக்கிறார்கள்.
ஒருமுறை நான் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஏறக்குறைய கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர், "கிறிஸ்தவர்களாகிய நீங்கள் பெருந்தீனிக்காரர்கள்; எப்போதும் சாப்பிட்டுக்கொண்டேயிருக்கிறீர்கள்; மது அருந்துகிறீர்கள்; நடனமாடுகிறீர்கள்; காதுகிழிய பாடல்களைக் கேட்கிறீர்கள்; மற்றவர்களைக் கெட்டவார்த்தைகளால் திட்டுகிறீர்கள்; சத்தியம்செய்கிறீர்கள்; தரங்கெட்ட வாழ்க்கை வாழ்கிறீர்கள். இப்படி வாழ்ந்தபிறகும் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அப்படியானால், எங்கள் மதம் பொய்யாக இருந்தாலும், கட்டுக்கதையாக இருந்தாலும், அமைதியான ஒழுங்கான, ஒழுக்கமான வாழ்க்கை வாழும் நாங்கள் நிச்சயமாக இரட்சிக்கப்படுவோம் என்று நம்புகிறோம் என்று சொன்னார்,” என்று கூறுகிறார்.
கிறிஸ்தவர்களாக மாறிய உள்ளூர்வாசிகளை ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் மரியாதையோடு நடத்தவில்லை. அவர்களைக் கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும், தேவனுடைய வேலை தொடர்ந்து நடந்தது.
ஒருவன் "நான் கிறிஸ்தவனாக விரும்புகிறேன்," என்று சொன்னவுடன் அவர்கள் அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. கிறிஸ்தவனாக விரும்பிய எல்லாரையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்தவனாக விரும்பியவரிடம் அவர்கள் முதலாவது கேள்வி பதில்கள் அடங்கிய ஞானோபதேச பாடங்களைக் கொடுத்து படிக்கச் சொன்னார்கள். அதன்மூலம் அவர்கள் சத்தியத்தை அறிந்துகொண்டார்கள். சிலர் ஞானோபதேச பாடங்களைப் படித்தபிறகும், ஞானோபதேச வகுப்பில் கலந்துகொண்டபிறகும் எதையும் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவுக்கேற்ற எந்த மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படவில்லை. சத்தியத்தை அறிந்தபின் தேவனுக்குப் பயந்து வாழ்வதற்கும், அஞ்ஞானப் பழக்கங்களை விட்டுவிடுவதற்கும் தயாராக இருந்தவர்களுக்கு மட்டுமே அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். ஒருவன் உண்மையாகவே மனந்திரும்பி, கிறிஸ்துவை விசுவாசித்தபோதும், அவன், “நான் கிறிஸ்தவனாக விரும்புகிறேன்” என்று சொன்னபோதும், அவன் ஏன் கிறிஸ்தவனாக விரும்புகிறான் என்ற காரணத்தைத் திட்டவட்டமாக ஆராய்ந்தார்கள். ஒருவன் கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து அனுதினமும் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும் என்று கிறிஸ்தவ வாழ்க்கையின் தன்மையையும், தரத்தையும் அவர்கள் எடுத்துரைத்தார்கள். “நீ கிறிஸ்தவனானால் உன் இனத்தாரும், ஊராரும், நாட்டாரும், நண்பர்களும் கிண்டல் செய்வார்கள், சித்திரவதைசெய்வார்கள்,” என்று தெளிவாகச் சொன்னார்கள். இதைக் கேட்ட பலர் பின்வாங்கினார்கள். இவைகளுக்குப்பின்னரும் உறுதியாக நின்றவர்களுக்கு மட்டுமே அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். அப்படி ஞானஸ்நானம் பெற்றவர்கள் நிலைத்துநின்றார்கள். அவர்கள் வெறுமனே மக்களை மதம்மாற்ற வந்திருந்தால் ஆயிரக்கணக்கானவர்களைச் சேர்த்திருப்பார்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லை. களைகளைத் தோட்டத்துக்குள் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள். ஒருவனைப் படிப்படியாகக் கிறிஸ்துவுக்குள் நடத்தினார்கள். ஞனஸ்நானம் பெற்று கிறிஸ்தவனாவதற்குமுன்பே பலருக்குச் சித்திரவதைகள் ஆரம்பித்தன. உறவினர்கள், நண்பர்கள், ஜாதிக்காரர்கள் அவர்களைப் பயமுறுத்தினார்கள், கெஞ்சினார்கள். யாரும் கிறிஸ்தவனாகிவிடக்கூடாது என்பதற்காக உற்றார், உறவினர், ஊரார் என சம்பந்தப்பட்டவர்கள் எல்லாரும் எல்லா வழிகளிலும் முயன்றார்கள். சீகனும் அவருடைய நண்பரும் அவர்களுக்கு மத்தேயு 10ஆம் அதிகாரத்தை நினைப்பூட்டினார்கள். சிலர் உறுதியாக நின்றார்கள்; பலர் பின்வாங்கினார்கள். அவர்கள் ஞானஸ்நானம் பெற்றபின் அவர்களுடைய உற்றார் பெற்றோர் ஏறக்குறைய அவர்களைக் கைகழுவிவிட்டார்கள். உள்ளூர் விசுவாசிகளின் வாழ்க்கையைக்கண்ட ஐரோப்பிய வெள்ளைக்காரர்கள் வெட்கப்பட்டார்கள். வயதானவர்களைவிட வாலிபர்களைக் கிறிஸ்துவுக்கு நேராக நடத்துவது எளிது என்று சீகன் கருதினார். ஏனென்றால், வயதானவர்களுக்குப் படிப்பறிவு இல்லாததால் அவர்களால் சத்தியத்தை எளிதாகப் புரிந்துகொள்ளமுடியவில்லை. எனவேதான் அவர் குழந்தைகளை அதிகமாக நேசித்தார். அவர்களுக்கும், அவர்கள்மூலமாகவும் கிறிஸ்துவை எளிதாக அறிவிக்கலாம் என்று அவர் நம்பினார்.
அவர் சென்னைக்குச் சென்றிருந்தபோது திருப்பதியில் நடக்கவிருந்த ஒரு திருவிழாவைப்பற்றிக் கேள்விப்பட்டார். ஆகவே, அங்கு சென்று நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். புறப்பட்டார். பயணத்தின்போது வழியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. ஆயினும், அவர் ஐந்து நாட்கள் பல மைல்கள் நடந்தே திருப்பதிக்குச் சென்றார். போகும் வழியெல்லாம் நற்செய்தியை அறிவித்தார். செருப்பில்லாமல் வெறுங்காலால் நடந்ததால் கால்களில் கொப்பளம் ஏற்பட்டது. நடக்க முடியாததால் ஓர் இரவு ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தார். போகும் வழியில் பல இந்துக்கள் மகிழ்ச்சியோடு நற்செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், பிராமணர்கள் அவரையும், அவருடைய நற்செய்தியையும் எதிர்த்தார்கள். அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு, அவரை எதிர்த்தவர்கள் அவர் தங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டு அன்றிரவு அவரைக் கொல்ல முயன்றார்கள். ஆனால், கர்த்தர் அவரை அற்புதமாகப் பாதுகாத்தார்.
இன்றுபோல் அன்றும் பிராமணர்கள் மதத்தின்பெயரால் மக்களைப் பயமுறுத்திவைத்திருந்தார்கள்; தங்கள் பொய்புரட்டுகள்மூலம் தமிழர்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள். கடவுளின் பெயரால் தமிழர்களை அடக்கி ஆண்டுகொண்டிருந்தார்கள். அவர்களுடைய பொய் புரட்டுகளையும், மூடநம்பிக்கைகளையும், சித்தாந்தாங்களையும் சீகன்பால்க் கடுமையாக எதிர்த்தார். அதனால் அவர்கள் சீகன்பால்க்கை கொல்ல முயன்றார்கள்.
அங்கிருந்து அவர் சென்னை திரும்பினார். சென்னையில் இருந்தபோது அவர் நோய்வாய்ப்பட்டதால் உடனே அவர் தரங்கம்பாடிக்குத் திரும்பினார்.
அவர் எல்லாருக்கும் நற்செய்தி அறிவித்தார்; பிராமணர்களுக்கு நற்செய்தியை விவரித்தார்; தாழ்த்தப்பட்டோருக்கும் அறிவித்தார். போதுமான ஆவிக்குரிய வழிநடத்துதல் இல்லாத கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கும் விளக்கினார். கிடைத்த வாய்ப்புக்களையெல்லாம் அவர் பயன்படுத்தினார்.
ஒருமுறை ஒரு விதவை டேனிஷ் ஆளுநர் ஹேசியசிடம் நியாயம் கேட்டு முறையிட்டாள். ஹேசியஸ் அவளுக்குச் செவிசாய்க்கவில்லை. அவளுடைய கணவர் இராயப்பன் தலைமுடி சிங்காரிக்கும் தொழிலாளி. அவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவன். திடீரென ஒருநாள் அவர் மரித்துப்போனார். சொத்து விவகாரத்தில் அந்த விதவைக்கும் அவளுடைய உறவினர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அதை விசாரித்து நியாயம் வழங்குமாறு அவள் ஹேசியஸிடம் கேட்டபோது, அவர் அதை அலட்சியம் செய்தார். அவள் அங்கலாய்த்தாள், தவித்தாள். அதை அறிந்த சீகன்பால்க் தான் அறிந்த உண்மைகளை எழுதி அந்த விதவைக்கு நியாயம் வழங்குமாறு ஹேசியசுக்கு ஒரு கடிதம் எழுதினார். ஹேசியஸ் கடுங்கோபமடைந்தார். “நீர் அரசியலில் தலையிடுகிறீர்,” என்று ஆளுநர் சீகன்பால்க்மேல் நேரடியாகக் குற்றம்சாட்டினார்.
உள்நாட்டில் இருந்த பிறமதத்தவர்கள் அவரைப் பயமுறுத்தினார்கள்; டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கருணையற்ற அதிகாரிகளும், ஹாலேயில் இருந்த ஆர்வமற்ற பாப்டிஸ்ட்களும் அவரை நேரடியாக எதிர்த்தார்கள்; ஆனால், அவர் தன் தரிசனத்திலிருந்து பின்வாங்கவில்லை.
அவருடைய வருடச் சம்பளம் 300ரூபாய். சில நேரங்களில் டென்மார்க்கிலிருந்து இந்த உதவி வருவதற்குத் தாமதமானபோது, தரங்கம்பாடியிலிருந்த டேனிஷ் அதிகாரிகள் அவருக்குப் பணம் கொடுத்து உதவ மறுத்தார்கள். ஒருமுறை டென்மார்க் அரசர் அனுப்பிய 3000ரூபாய் பணப்பெட்டியுடன் கடலில் தவறி விழுந்தது. அதைத் தேடப்போனவர்கள் கடலில் மூழ்கி இறந்தார்கள். இன்னொருமுறை அரசர் அனுப்பிய பணத்தோடு வந்த கப்பல் பாறையில் மோதி சேதம் அடைந்து, டென்மார்க்குக்குத் திரும்பிச் சென்றது.
சீகனின் தீவிர முயற்சியால், தரங்கம்பாடியில் நடைபெற்றுக்கொண்டிருந்த பணியை ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் ஆதரித்தன; அவர்களின் உதவியால் தரங்கம்பாடியில் இருந்த மிஷனரிகளுக்கு வீடுகளும், மூன்று பள்ளிக்கூடங்களும் கட்டப்பட்டன. சென்னையிலும், கடலூரிலும் பள்ளிக்கூடங்கள் நிறுவினார்.
நான்கு மாத சிறைவாசம்:
சீகனின் நற்செய்திப் பணிக்கும், சமூக சேவைக்கும் டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநர் ஹேசியஸ் பெரிய இடையூறாக இருந்தார். வியாபாரம் மட்டுமே அவருடைய குறி. இந்தியர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால், தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்று அவர் கருதினார். ஆகவே, அவர் பிறமதத்தவர்களைச் சீகனுக்கு விரோதமாக ஏவிவிட்டார்.
அன்று பெரும்பாலான ஐரோப்பியர்கள் இந்தியர்களை அடிமைகளைப்போல் நடத்தினார்கள். பொறையாரில் இருந்த ஓர் ஐரோப்பியப் போதகர் தன் தாய்நாட்டுக்குத் திரும்பியபோது, தன் வீட்டில் வேலைசெய்த பெண்ணை உள்நாட்டில் இருந்த ஒரு பெண்ணிடம் விற்றுவிட்டுச் சென்றார். சீகனும், அவருடைய நண்பர் புளுட்ச்சோவும் இதைக் கடுமையாக எதிர்த்தார்கள்.
அவள் ஓர் விதவை. அந்த ஏழை விதவைக்காக இவர்கள் இருவரும் பரிந்துபேசினார்கள். இதனால் ஹேசியஸ் சீகன்மேல் கடுங்கோபம் கொண்டார். ஏற்கெனவே, தரங்கம்பாடியிலிருந்த டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலர்களும், அதிகாரிகளும் சீகன்பால்க்கையும், அவருடைய உடன்ஊழியக்காரர் புளுட்ச்சோவையும் மிகக் கேவலமாகப் பார்த்தார்கள், நடத்தினார்கள். எப்படியாவது அவர்களை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்பதே அந்த ஆளுநரின் நோக்கம். எனவே, அவர் இந்தப் பிரச்சினையை ஒரு சாக்காகப் பயன்படுத்த முடிவுசெய்தார்.
1708 நவம்பர் மாதம் ஒரு நாள் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சீகனின் வீட்டிற்குள் நுழைந்தார்கள்; ஜெபித்துக்கொண்டிருந்த அவரை முரட்டுத்தனமாகக் கைதுசெய்து ஆளுநர்முன் கொண்டுபோய் நிறுத்தினார்கள். அவர் அவர்கள்மேல் பொய்யான, அற்பமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர்களைச் சிறையில் அடைத்தார்; அவர்களை அடித்தார்கள்; “நாய்களே” என்று தரக்குறைவாகத் திட்டினார்கள்; வசைமொழிகளை வாரிக்கொட்டினார்கள். திடமனமும், தரிசனமும் கொண்ட சீகன்பால்கும், புளுட்சோவும் சூழ்நிலையைக்கண்டு சோர்ந்துபோகவில்லை.
ஓர் ஏழை விதவைக்காகப் பரிந்துபேசியதால் அவர்களுக்குக் கிடைத்த பரிசு நான்கு மாத சிறைவாசம். அவர் சிறையில் இருந்தபோது இரண்டு ஜெர்மன் வீரர்கள் சிறையின் ஜன்னல்வழியாக அவருக்குத் தாளும், பேனாவும், மையும் கொடுத்து உதவினார்கள். நான்கு மாத சிறைவாசத்தின்போது “The God pleasing State of a Christian”, “The God pleasing Profession of Teaching” என்னும் இரு சிறிய புத்தகங்களை அவர் எழுதினார். கடந்த காலங்களில் தேவனைச் சேவித்த பரிசுத்தவான்கள் அனுபவித்த பாடுகளைப்பற்றி அவர் தியானித்தார். அந்தத் தியானத்தின் விளைவே இந்த இரண்டு புத்தகங்கள்.
அவர்களுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் எதிர்ப்பு வந்தது. தரங்கம்பாடியிலிருந்த ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் எதிர்த்தார்கள்; உள்ளூர் இந்துக்கள் எதிர்த்தார்கள்; ஆளுநர் ஹேசியஸ் எதிர்த்தார். ஐரோப்பியக் கிறிஸ்தவர்களும், ஆளுநரும் அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும்; ஆனால் உதவ வேண்டியவர்கள், உபத்திரவப்படுத்தினார்கள்; வரவேற்கவேண்டியவர்கள் வெறுத்தார்கள்; மதிக்க வேண்டியவர்கள் மிதித்தார்கள். எனவே, அவர் தன் நலனுக்காக மட்டும் அல்ல, புதிய கிறிஸ்தவர்களின் நலனுக்காகவும் டென்மார்க் அரசருக்கு முறையிடவேண்டியதாயிற்று. அவர் தனக்கு ஏற்பட்ட துன்பங்களைப்பற்றி கவலைப்படவில்லை. புதிய விசுவாசிகளைப்பற்றியே அவர் கவலைப்பட்டார். தன் நிலைமையைப்பார்த்து விசுவாசிகள் பின்வாங்கிப்போய்விடக்கூடுமோ என்று அவர் பயந்தார். ஏனென்றால், இரண்டு ஆண்டுகளில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை நூறாயிற்று.
தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு
புதிய ஏற்பாடு
தான் அறிவிக்கும் கிறிஸ்துவை மக்கள் அவர்களுடைய சொந்த மொழியால் மட்டுமே முழுமையாகவும், சரியாகவும் புரிந்துகொள்ள முடியும் என்று சீகன் நம்பினார்; புதிய விசுவாசிகள் தாங்கள் அறிந்த கிறிஸ்துவைவிட்டுப் பின்வாங்காமலும், அவரை இன்னும் அதிகமாக அறியவும், அவரில் எப்போதும் நிலைத்திருக்கவும் வாய்வழிப் போதனைகள் மட்டும் போதாது, வேதாகமமும் அவர்களுடைய கைகளில் அவர்களுடைய மொழியிலே இருக்க வேண்டும் என்று சீகன்பால்க் எண்ணினார், விரும்பினார்.
எனவே, சீகன்பால்க் வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்கத் தீர்மானித்தார். ஸ்கிமிட்டின் கிரேக்க புதிய ஏற்பாடு, இலத்தீன் உல்காதே, மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு ஆகியவைகளை ஆதாரமாகக்கொண்டு, டேனிய, போர்ச்சுக்கீசிய வேதாகமங்களின் உதவியுடன் 1708, அக்டோபர் 16இல் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். 1711 மார்ச் 21இல் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து முடித்தார். இரண்டரை ஆண்டுகளுக்குள் இந்த மாபெரும் வேலையைச் செய்துமுடித்தார்.
இரண்டு ஆண்டுகளில் ஒருவேளை ஒரு மொழியை நன்றாகக் கற்கலாம், பேசலாம்; ஆனால், அந்த மொழியில் மொழிபெயர்க்கக்கூடிய புலமை பெறவேண்டுமானால் எவ்வளவு உழைப்புத் தேவை. அதுவும் வேதாகமத்தை மொழிபெயர்ப்பது எவ்வளவு கடினம் என்பது அதில் ஈடுபட்டவர்களுக்குத்தான் தெரியும். அன்று இலக்கியத் தமிழ்தான் அதிகம். ஆனால், மொழிபெயர்க்க உரைநடைத் தமிழ் வேண்டும்; அதை உருவாக்க வேண்டும். அன்று மெய்யெழுத்தின்மேல் புள்ளி கிடையாது; இரட்டைக்கொம்பு கிடையாது; வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி கிடையாது; ஓலைச்சுவடிகள்தான் இருந்தன; அத்தனை தடைகளையும் தாண்டி அவர் வேதாகமத்தை மொழிபெயர்த்தார் என்றால் அது அதிசயமே.
அவர் தன்னந்தனியாகவே மொழிபெயர்த்தார். உதவிக்கு ஆள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்; ஆனால், உதவிக்கு ஆள் கிடைக்கவில்லை. எழுத்துப் பிழை இல்லாமல் ஒரு வாக்கியத்தை மொழிபெயர்க்கவோ, எழுதவோ ஓர் ஆள் கிடைக்கவில்லை. அவருடைய உதவியாளர் அலெப்பாவுக்குப் பல மொழிகள் தெரியும்; வார்த்தைகளுக்குப் பொருள் தெரியும்; ஆனால், அவருக்குத் தமிழ் இலக்கணம் தெரியாது; பிற மொழிகளின் இலக்கணமும் தெரியாது.
வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பது அவருக்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. இந்தியாவில் அதுவரை வேறு யாரும் வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கவில்லை. மேலும் மூலமொழியில் இருந்த சில வார்த்தைகளுக்கு நேரடியான கிறிஸ்தவ வார்த்தைகள் கிடைக்கவில்லை; எனவே, அவர் பிற மதப் புத்தகங்களிலிருந்த, சாமான்யர்களின் பேச்சுவழக்கிலிருந்த சில வார்த்தைகளைப் பயன்படுத்தினார். உரோமன் கத்தோலிக்க சபையார் ஏற்கெனவே தமிழ் ஆராதனை முறையில் சில பதங்களை மொழிபெயர்த்திருந்தார்கள். அவைகளையும் அவர் தன் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தினார். எடுத்துக்காட்டாக, உரோமன் கத்தோலிக்கர்கள் அந்நாட்களில் தேவன் என்ற பதத்தை “சர்வேசுவரன்” என்று மொழிபெயர்த்திருந்தார்கள். எனவே, சீகன்பால்க்கும் அந்த வார்த்தையையே பயன்படுத்தினார்.
ஒருவழியாக அவர் மொழிபெயர்த்து முடித்தார். ஆனால், மொழிபெயர்த்த வேதாகமத்தை அச்சேற்ற பல தடைகள். இந்திய வரலாற்றில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட தமிழ்மொழி புதிய ஏற்பாட்டை அச்சேற்ற அநேகத் தடைகள் ஏற்பட்டன.
தரங்கம்பாடியில் சீகனின் நற்செய்தி ஊழியத்தைப்பற்றி இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்த கிறிஸ்தவர்கள் கேள்விப்பட்டார்கள். அவருடைய ஊழியத்தை ஊக்குவிக்கும் வகையில் அவருடைய ஊழியங்களையும், மொழிப்பெயர்ப்புப் பணிகளையும் பாராட்டி இங்கிலாந்திலிருந்த Society for Promoting Christian Knowledge என்ற நிறுவனத்தார் 1712ஆம் ஆண்டு தரங்கம்பாடிக்கு ஓர் அச்சு இயந்திரத்தை அனுப்பினார்கள். அச்சு இயந்திரத்தை மட்டும் அல்ல; அதை இயக்கத் தெரிந்த ஜோனாஸ் பிங்கே என்பவரையும் கூடவே அனுப்பினார்கள். அவர் அப்போது இலண்டனில் இருந்த ஒரு ஜெர்மன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஆனால், அச்சு இயந்திரத்தைக் கொண்டுவந்த கப்பலை பிரெஞ்சுப் படைகள் பிரேஸில் அருகே கைப்பற்றின. ஜோனாஸ் பிங்கே போர்க்கைதியாகக் கொண்டுபோகப்பட்டார். சென்னை நகர ஆளுநர் பிரெஞ்சுப் படைகளுக்கு உரிய பணம் கொடுத்து, கப்பலை மீட்டார். பயணம் தொடர்ந்தது. ஆனால் ஜோனாஸ் ஒருவிதமான காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு நன்னம்பிக்கை முனையருகே இறந்தார். அச்சு இயந்திரமும், புத்தகங்களும், தாள்களும் 1712 ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்தடைந்தன.
அச்சு இயந்திரம் இருக்கிறது; அச்செழுத்துக்கள் தயாராகிவிட்டன; அச்சடிக்கத் தாள் வேண்டுமே! தாளுக்கு எங்கே போவது? இறக்குமதிசெய்யலாமா? இறக்குமதிசெய்ய நிறையப் பணச் செலவாகும். சீகன்பால்க் தமிழை அச்சுத் தமிழாக்கிய நேரத்தில் இங்கு காகிதப் பற்றாக்குறை இருந்தது. அதைச் சமாளிப்பதற்காக அவர் பொறையாறில் காகிதப் பட்டறை ஒன்றை உருவாக்கினார்.
அச்சு இயந்திரம் தயார்; அச்சு எழுத்துக்கள் தயார்; மொழிபெயர்ப்பு தயார்; தாளும் இருக்கிறது. இப்போது இன்னொரு பிரச்சினை. அச்சு இயந்திரத்தை இயக்க வந்தவர் வழியில் இறந்துபோனாரே! அதை இயக்க ஆள் வேண்டுமே!
எனவே, அச்சுவேலை தெரிந்த ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. தரங்கம்பாடியில் இருந்த ஒரு டேனிஷ் போர்வீரனுக்கு அச்சுவேலை தெரியும் என்று கேள்விப்பட்டு, அவரைக் கண்டுபிடித்தார்கள். ஒருவழியாக 1713இல் புதிய ஏற்பாட்டை அச்சிலேற்றும் வேலையை ஆரம்பித்தார்கள். இவ்வளவு தடைகளையும் தாண்டி நான்கு நற்செய்திகளும், அப்போஸ்தலர் நடபடிகளும் அடங்கிய தமிழ் புதிய ஏற்பாட்டின் முதல் பாகம் 1714இலும், மீதி புத்தகங்கள் அடங்கிய இரண்டாம் பாகம் 1715 ஜூலை 15இலும் அச்சடிக்கப்பட்டு வெளிவந்தன. புதிய ஏற்பாட்டை அச்சேற்றியபோது அதற்கு “வேதபொஷ்த்தகம்" என்று பெயர் கொடுத்தார்கள். இதுதான் இந்திய மொழியில் முதலாவது வெளியான அச்சு நூல்.
அச்சு இயந்திரம் வந்தபின் அவர் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஜெர்மன் வீரர்களுக்காக ஒரு நூலகத்தை நிறுவினார்; அந்த நூலகத்தில் வேதாகமம், பாடல் புத்தகம், தியானப் புத்தகம்போன்ற பல ஆவிக்குரிய புத்தகங்களை வைத்தார். ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீசு, ஸ்பானிய மொழி வேதாகமங்கள், தியானப் புத்தகங்கள் தரங்கம்பாடியில் அச்சடிக்கப்பட்டு, அங்கிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.
முதன்முதலாக 1712இல் போர்ச்சுகீசிய மொழியில் அச்சிட்டார்கள். 1713இல் ஞானோபதேச புத்தகங்கள், பாடல் புத்தகம், தரங்கம்பாடிப் பள்ளிகளைப்பற்றிய அறிக்கைகள், கிறிஸ்துவின் பாடுகளைப்பற்றிய கையேடுகள் ஆகியவைகளை அச்சிட்டார்கள். அதன்பின் தமிழ் அச்சகத்தை நிறுவினார்கள். அதற்கு ஜெர்மனியில் இருந்த அவருடைய நண்பர்கள் உதவினார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியாவிட்டாலும்கூட, அவர்கள் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்துத் தரங்கம்பாடிக்கு அனுப்பினார்கள். அந்த எழுத்துக்களைக்கொண்டு முதன்முதலாகத் தமிழில் அப்போஸ்தலர்களின் விசுவாசப்பிரமாணத்தை அச்சிட்டார்கள். அவர்கள் அச்சு இயந்திரத்தை அனுப்பியபோது ஜோஹன் பெர்லின், ஜோஹன் காட்லீய்ப் அட்லெர், அவருடைய 14 வயதான இன்னொரு சகோதரன் ஆகிய மூவரையும் கூடவே அனுப்பினார்கள். பெர்லின் போர்ச்சுகீசிய அச்சகத்தையும், பள்ளியையும் கவனித்துக்கொண்டார்; ஜெர்மனியிலிருந்து அனுப்பிய எழுத்துருக்கள் பெரியதாக இருந்ததால், அட்லெர் சிறிய எழுத்துருக்களை வடிவமைக்கும் பணியை உடனடியாக மேற்கொண்டார்.
பழைய ஏற்பாடு
தரங்கம்பாடியில் நடக்கும் பணிகளைப்பற்றிய அறிக்கையைச் சமர்பிப்பதற்காகவும், தங்கள் பணிகளுக்கு இருக்கும் தடைகளை அகற்றக் கோருவதற்காகவும் புளுட்ச்சோ 1711இல் ஐரோப்பாவுக்குச் சென்றார். ஆனால், அவர் திரும்பிவரவில்லை. அங்கு அவர் ஒரு சபையின் பாஸ்டராகி தங்கிவிட்டார்.
எல்லாவிதமான தடைகளையும் தாண்டி தரங்கம்பாடி ஊழியம் வளர்ந்தது. 1712இல் சபையில் ஏறக்குறைய 200 விசுவாசிகள் இருந்தார்கள்; ஆரம்பித்திருந்த பள்ளியில் 50 குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தார்கள். இது நல்ல வளர்ச்சி என்று நாம் நினைக்கக்கூடும். எனினும், இது அவர்கள் எதிர்பார்த்ததைவிட, விரும்பியதைவிட, குறைவு. எனவே, தானே ஒருமுறை ஐரோப்பாவுக்குச் சென்றுவந்தால் நலமாக இருக்கும் என்று சீகன் நினைத்தார். ஏனென்றால், அப்போது ஐரோப்பாவிலிருந்து அவருக்கு எந்தத் தகவலும் வரவில்லை.
சீகன்பால்க் ஜெர்மனிக்குச் செல்வதற்குமுன் அவருக்கும் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் ஹேசியசுக்கும் இடையே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. எனவே, சீகன்பால்க் தரங்கம்பாடியில் பத்து வருடம் ஊழியம்செய்தபின், தரங்கம்பாடி ஊழியத்தைக் கிரண்டல்லரிடம் ஒப்படைத்துவிட்டு சமாதானத்தோடு ஜெர்மனிக்குப் புறப்பட்டார். தரங்கம்பாடியிலிருந்த விசுவாசிகளும், அவிசுவாசிகளும் கண்ணீரோடு அவரை வழியனுப்பினார்கள். பிரடெரிக் 1V என்ற கப்பலில் 1714 அக்டோபர் 31இல் அவர் பயணத்தை ஆரம்பித்தார். அவர் மலையப்பன் என்ற ஒரு தமிழ் வாலிபனையும் தன்னோடு அழைத்துச் சென்றார். கப்பல் பயணத்தின்போது மலையப்பனின் உதவியோடு அவர் பழைய ஏற்பாட்டில் யோசுவா புத்தகம்வரை தமிழில் மொழிபெயர்த்தார்.
அவர் நார்வே, டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்துபோன்ற பல நாடுகளுக்குச் சென்று தரங்கம்பாடியில் நடைபெறும் ஊழியத்தைப்பற்றி எடுத்துரைத்தார். ஐரோப்பாவில் 1715 நவம்பர் மாதம் மரியா டோரோதியா சல்ஸ்மான் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இருவரும் 1716 ஆகஸ்ட்டில் இந்தியாவுக்குத் திரும்பினார்கள்.
சீகன்பால்க் இந்தியா திரும்பிய வருடத்தில் ஆளுநர் ஹேசியஸ் நாடு திரும்பினார். அவருக்குப் பதிலாக புருன் என்பவர் ஆளுநராகப் பதவியேற்றார். அவர் சீகன்பாலுக்கு ஆதவராக இருந்தார்.
இறையியல் கல்லூரி
சீகன் தரங்கம்பாடியில் தொடங்கிய பணிகள் தொடர்வதற்கு உள்ளூர் கிறிஸ்தவர்கள் தேவை என்றும், அவர்கள் அதற்குத் தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெளிவாக அறிந்திருந்தார். அந்தத் தொலைதூரப் பார்வையுடன், அந்தத் தரிசனத்துடன், 1716ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் எட்டுப்பேரைக்கொண்டு ஒரு வேதாகமக் கல்லூரியை நிறுவினார். இதுவே இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட சீர்திருத்த சபையின் முதல் இறையியல் கல்லூரியாகும். பரிசுத்த வேதாகமம் ஒரேவொரு சாதியினருக்கு மட்டும் உரியது அல்ல; அது அனைத்து தரப்பினருக்கும் உரியது என்று அவர் அதன்மூலம் நிரூபித்தார். இந்தியாவில் பிராமணர்கள் மட்டுமே வேதத்தைக் கற்கவும், கற்பிக்கவும் தகுதியானவர்கள் என்று இருந்த நிலையை மாற்றி தாழ்த்தப்பட்ட இனத்தாரும் வேதத்தைக் கற்கவும் கற்பிக்கவும் கிறிஸ்துவின் அதிகாரம் பெற்றவர்கள் என்பதை மொழி விடுதலைப்பணிமூலம் அவர் எடுத்துரைத்தார். இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவரான ஆரோன் என்பவர் 1733ஆம் ஆண்டு தமிழ் லுத்தரன் திருச்சபையின் முதல் போதகராகப் போதகாபிஷேகம் செய்யப்பட்டார்.
தமிழ் நூல்கள்
சீர்த்திருத்தசபை உருவாவதற்குமுன் வேதாகமம் சங்கிலியால் கட்டப்பட்டு, இறையியல் மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலை இருந்தது. அதுபோல் வேதாகமம் ஓலையில் இருந்திருந்தால் அது பிராணர்களிடம் மட்டுமே இருந்திருக்கும்; கிறிஸ்துவின் செய்தி அவர்களிடம் அடிமைப்பட்டிருந்திருக்கும்; வெளியே வந்திருக்காது. சீகன்பால்க் வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்த்து, அதைத் தாளில் அச்சிட்டதால் இயேசுவின் உபதேசங்கள் விடுதலையோடு பரவின; தமிழ்மொழியும் ஓலையிலிருந்து தாளுக்கு விடுதலைபெற்றது.
வழித்தோன்றலை உருவாக்காதவர்கள் சிறந்த தலைவர்கள் ஆவதில்லை.
சீகன்பால்க் வெறுமனே மொழிபெயர்ப்புப் பணியோடு நிறுத்திக்கொள்ளவில்லை.சீகன்பால்க் அநேக வழித்தோன்றல்களை உருவாக்கினார். வழித்தோன்றல்கள் உருவாவதற்கு ஏற்ப பல நூல்களை எழுதினார். ஜெர்மனியர்கள் அவருக்குப்பின் தமிழகத்திற்கு மிஷனரிகளாக வருவதற்கேற்ப தென்னிந்தியாவின் மதக் கொள்கைகள், பழக்கவழக்கங்கள், ஆசாரங்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவைகளைப்பற்றி ஒரு புத்தகம் ஜெர்மன் மொழியில் எழுதினார் தமிழ்நாட்டுத் தெய்வங்களின் பரம்பரையைப்பற்றிய ஒரு புத்தகத்தையும் எழுதினார்.
பள்ளிகள்
பாலை ஊற்ற பாத்திரம் வேண்டும். கிறிஸ்துவ அறிவிக்க மொழி தெரிய வேண்டும். எனவே, மொழியைக் கற்றார்கள். கற்ற மொழியைக் கற்பித்தார்கள்.
நற்செய்திப் பணியின் தொடர்ச்சியாகக் கல்விப் பணியை முன்னெடுத்தார்கள்.
முடிவுரை
முதல் இந்திய சீர்திருத்த மிஷனரியும், முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளருமான பர்த்தலோமேயு சீகன்பால்க் தமிழ் மொழியில் முழு வேதாகமத்தையும் ஆர்வத்தோடு மொழிபெயர்த்துக்கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராதமுறையில் காலமானார். 1719, 23 பெப்ரவரி, தன் 36ஆவது வயதில், தரங்கம்பாடியில் தன் பூமிக்குரிய பயணத்தை முடித்தார். அவருடைய உடல் தரங்கம்பாடியில் அவர் கட்டிய “புதிய எருசலேம்” ஆலயத்தில் பலிபீடத்தின்முன்பாக அடக்கம்செய்யப்பட்டது.
புதிய ஆலயத்தில் முதன்முதலாக பிரசங்கித்தவர் சீகன். அங்கு முதன்முதலாக அடக்கம்பண்ணப்பட்டவரும் அவரே. 1718இல் அவருடைய உடல்நலம் நலிவடைந்தது. டிசம்பர் மாதம் கொஞ்சம் சீரடைந்தது. கிறிஸ்துமஸ் நாளிலும், புதுவருடப் பிறப்பிலும் அவர் பிரசங்கித்தார். அதுதான் அவருடைய கடைசிப் பிரசங்கம். 1719 பெப்ரவரி 10. அவர் தன் உடன் ஊழியக்காரர் கிரண்ட்லரை அழைத்து எல்லாவற்றையும் ஒப்படைத்தார். திருவிருந்து எடுக்க வேண்டும் என்று விரும்பினார். அன்றிரவு அவர் உடல்நிலைமை மிகவும் மோசமாயிற்று. அவருடைய மனைவி யோவான் 14-17ஆம் அதிகாரங்களையும், உரோமர் 8யையும், 2 கொரிந்தியர் 5யையும் வாசித்தார். அடுத்த நாள் காலையில் க்ராண்ட்லெர் வந்தார். கண்ணீரோடு திருவிருந்து கொடுத்தார். மத்தியானத்தில் சபையார் அனைவரும் வந்தார்கள். அவர்களுக்கு ஆசீர் கூறி விடைபெற்றார்.
சீகன்பால்க் தன் மரணத்தைச் சந்தித்த விதத்தை அவருக்கு நெருக்கமாயிருந்த ஆர்னோ லேமன் என்பவர் பின்வருமாறு விவரிக்கிறார். ”தன் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டதை உணர்ந்த சீகன்பால்க் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் 1719 பிப்ரவரி 10ஆம் தேதி ஒழுங்குசெய்ய முற்பட்டார். தன் கைவசமுள்ள ஊழியத்தின் பத்திரங்கள், பணம், கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் தன் நண்பரிடம் ஒப்படைத்தார். தன் குடும்பக் காரியங்களையும் ஒழுங்குசெய்தார். பின்பு இந்தியக் கிறிஸ்தவ நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்கும்படி ஆலோசனை கூறினார். 1719 பிப்ரவரி 23ஆம் தேதி, அதிகாலையில் எழுந்து தன் மனைவி, குழந்தைகளோடு குடும்ப ஜெபம் செய்தார். காலை 9 மணிக்குத் தன் மரண வேளை மிகவும் நெருங்கிவிட்டதை அவர் உணர்ந்தார். அவருடைய நண்பர் க்ரண்ட்லர் ஜெபித்தார். சீகன்பால்க் தேவனிடம் செல்வதற்கு அதிக வாஞ்சையாயிருந்தார். தேவன்தாமே என் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் இரத்தத்தினாலே சுத்திக்கரித்து, கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரத்தினாலே என்னை அலங்கரித்து அவருடைய இராஜ்யத்திற்குள் சேர்த்துக் கொள்வாராக,” எனச் சொல்லிவிட்டு அவருக்கு மிகவும் பிரியமான “இயேசு என் நம்பிக்கை” என்ற ஜெர்மனிய கீர்த்தனையைப் பாடும்படி சைகை காட்டினார். பின்பு தன் படுக்கையை விட்டு எழுந்து சென்று நாற்காலியில் அமர்ந்தார். அவருடைய உயிர் பிரிந்தது."
இவர் இந்தியாவுக்கு வந்த முதல் சீர்திருத்த மிஷனரி; டென்மார்க் அரசின் உரிமைபெற்ற முதல் மிஷனரி; முதன்முதலாக இந்தியாவில் சீர்திருத்த சபை நற்செய்தியைப் பரப்பியவர். இந்தியாவில் முதல் காகித ஆலை நிறுவியவர். புதிய ஏற்பாட்டை முதன்முதல் தமிழில் மொழிபெயர்த்தவர். புதிய ஏற்பாட்டை முதன்முதல் தமிழில் அச்சிட்டவர். ஜெர்மன் ஞானப்பாடல்களை முதன்முதல் தமிழில் அச்சிட்டவர். முதன்முதல் தமிழ் புரொட்டஸ்டண்ட் ஆலயத்தைக் கட்டியவர். முதன்முதல் தமிழ் மொழியில் பிரசங்கம் செய்தவர். முதன்முதல் இறையியல் கல்லூரியை நிறுவியவர். முதன்முதல் பல சமய உரையாடலை ஆரம்பித்தவர் முதன்முதல் தென்னிந்தியக் கடவுள்களின் வரலாற்றை எழுதியவர். முதன்முதல் மிஷனரி பணியில் பன்னாட்டு உறவை உருவாக்கியவர்.
லுத்தரன் சபையை முதன் முதலில் ஆசியாவில், அதாவது இந்தியாவின் தமிழகத்துத் தரங்கம்பாடியில் அமைத்தவர் பார்த்தலோமேயு சீகன்பால்க் ஆவார்.
சீகன் "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக," என்ற பிரதான கட்டளைக்கும், இதற்கு ஒப்பான "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக," என்ற இரண்டாம் கட்டளைக்கும் கீழ்ப்படிந்தவர்.
"...துவக்கம் அற்பமாயிருந்தாலும்...முடிவு சம்பூரணமாயிருக்கும்" (யோபு 8:7). "அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டை பண்ணலாம்?" (சகரியா 4:10).
சீகன்பால்கின் மேற்கோளோடு நான் முடிக்கப்போகிறேன்.:“நான் கொஞ்சக்காலம்தான் இந்தப் பூமியில் வாழ்வேன் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். எனவே,என் இலக்கை நோக்கி நான் வேகமாக ஓடினேன். என் உடல்நலத்தில் கவனம்செலுத்துமாறு பலர் கடிதங்கள்வாயிலாகவும்,இன்னும் பலர் நேரடியாகவும் வலியுறுத்தினார்கள்,நினைப்பூட்டினார்கள்; எனினும்,நீண்ட காலம் மோசமான வாழ்க்கை வாழ்வதைவிட,குறுகிய காலம் நல்ல வாழ்க்கை வாழ்வது சிறந்தது என்று நான் நினைத்தேன்.”