Preloader
சாட்சியின் கூடாரம்
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More
8 Mar 2025 : தேவ அறிவு Read More
பர்த்தலோமேயு சீகன்பால்க், பாகம் - 2 - முன்னோடிகள் / மெர்லின் இராஜேந்திரம்
00:00 / 00:00
An audio error has occurred, player will skip forward in 2 seconds.
  1. 1 பர்த்தலோமேயு சீகன்பால்க், பாகம் - 2 முன்னோடிகள் / மெர்லின் இராஜேந்திரம்

பர்த்தலொமேயு சீகன்பால்க்

முன்னுரை

பா்த்தலொமேயு சீகன்பால்க். முதல் பாகத்தில் அவர் தேவனுக்கும், தேவ மக்களுக்கும் ஆற்றிய ஊழியத்தைப்பற்றிப் பார்த்தோம். இது இரண்டாம் பாகம். இதில் அவர் தமிழுக்கும், தமிழனுக்கும் செய்த தொண்டைப்பற்றிப் பார்க்கப்போகிறோம்.

கிறிஸ்தவம் தமிழ் உலகுக்கு கணக்கற்ற தமிழ் அறிஞர்களை அள்ளிக் கொடுத்துள்ளது. அவர்களுடைய தமிழ்ப்பணி அளப்பரியது. அவர்கள் கிறிஸ்துவை அறிவிக்கவே இங்கு வந்தார்கள். இங்கு வந்தபின், தமிழ் கற்று, தமிழ்மேல் பற்றுக்கொண்டு, தமிழைப் பரப்பினார்கள், தமிழனை மீட்டார்கள்.

பாதி உண்மை பொய் என்றும், பாதி கீழ்ப்படிதல் கீழ்ப்படியாமை என்றும் சொல்வார்கள். அதுபோல, ஒருவன் ஒரு கிணற்றைத் தாண்டத் தீர்மானித்துவிட்டால் கிணற்றை முழுமையாகத் தாண்ட வேண்டும். 99 விழுக்காடு தாண்டிவிட்டு, ஒரேவொரு விழுக்காடு தாண்டாவிட்டாலும்கூடத் தாண்டுகிறவன் கிணற்றுக்குள்தான் விழுவான். அதுபோல தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஆற்றிய பணிவிடையைப்பற்றிய முழு உண்மையையும் அறிய வேண்டும். சிலர் அவர்களைப்பற்றிய சில தகவல்களை மேலோட்டமாகக் கேள்விப்பட்டு, அதன்பின் அவர்களையும், கிறிஸ்தவர்களையும், கிறிஸ்துவையும்பற்றி தவறான முடிவுக்கு வருவது பரிதாபம். நுனிப்புல் மேய்கிறவர்கள்; மாலைக்கண் நோயுற்றவர்கள். நிறைகுடம் தழும்பாது; குறைகுடம் கூத்தாடும். ஒருசில சேவல்கள் கூரைமேல் ஏறிநின்று உரக்கக் கூவுவதால் சூரியன் ஓடி ஒளிந்துவிடுமா என்ன? கையளவு மேகம் பகலவனை மறைத்துவிடுமா என்ன?

எனவே, நான் சொல்லப்போகும் காரியங்கள் அந்தரங்கத்தில் அமைதியாகச் சொல்லப்படவேண்டியவை அல்ல. மாறாக, மலைமேல் நின்று உலகுக்கு உரக்கச் சொல்லப்படவேண்டியவை. “காதுள்ளவன் கேட்கக்கடவன்.”

இதோ! இது தமிழ் மண்ணில், தரங்கம்பாடியில், கிறிஸ்துவை விதைத்த ஒரு மிஷனரி தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் செய்த மாபெரும் தொண்டின் வரலாறு! இதை இன்று சிலர் மறைக்கவும், மறக்கவும் விரும்பலாம்; ஆனால், இதை மறுக்கமுடியாது. “நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி…சாட்சிகொடுக்கிறோம்” (யோவான் 3:11).

ஒளி வீசட்டும், இருள் விலகட்டும். சத்தியம் ஓங்கட்டும், அசத்தியம் அவமாகட்டும்.

வாழ்க்கைச் சுருக்கம்

இவர் தென்னிந்தியாவில் சீர்திருத்த சபையின் பணியைத் தொடங்கிய முதல் லுத்தரன் மிஷனரி. இவர் ஒரு மிஷனரி மட்டும் அல்ல; இவர் ஒரு மொழியியலாளர், கல்வியாளர், சமூகச் சீர்திருத்தவாதி. இவருடைய வாழ்க்கையும், பணியும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை யாரும் மறுக்கமுடியாது.

ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள், போர்ச்சுகீசியர்கள் எனப் பல வெளிநாட்டினர் வியாபாரம் செய்வதற்காகவும், நற்செய்தி அறிவிப்பதற்காகவும் இந்தியாவுக்கு வந்தார்கள். ஆனால், வியாபாரம்செய்வதற்காக வந்தவர்களைவிட கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க வந்தவர்கள் இந்திய மொழிகளிலும், மக்களிலும், கலாசாரத்திலும், பழக்கவழக்கங்களிலும் அதிக ஆர்வம் காட்டினார்கள். உரோமன் கத்தோலிக்கச் சபையைச் சார்ந்த பிரான்சிஸ் சேவியர்போன்ற சிலர் இந்திய மொழியைக் கற்றுக்கொள்ளாமல் மொழிபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்தி ஊழியம் செய்தார்கள். இராபர்ட் டி நோபிலி, வீரமாமுனிவர் என்றழைக்கப்படும் பெஸ்கிபோன்றோர் தமிழ்மொழி பயின்று ஊழியம் செய்தார்கள். அவர்கள் ஆற்றிய பணியைத்தாண்டி சீர்த்திருத்தச் சபைகளைச்சார்ந்த சீகன்பால்க், கால்டுவெல், ஜி.யு.போப், எல்லிஸ்போன்ற மிஷனரிகள் நற்செய்தி அறிவித்ததோடு நின்றுவிடாமல், தமிழ் மொழியின் அருமையை அறிந்து, அதைக் கற்று, தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் வேதாகமத்தை அச்சிட்டார்கள்; அவர்கள் பல்வேறு தமிழ் இலக்கண நூல்கள், இலக்கிய நூல்கள், கட்டுரைகள், ஆய்வுகள் வெளிவரக் காரணமாயிருந்தார்கள்.

மொழி கற்றலின் ஆரம்ப முயற்சி

சீகன்பால்க் சீர்திருத்த சபையைச் சார்ந்தவர். எனவே, சீர்திருத்தச் சிந்தனையும், செயலும் அவரிடம் இயல்பாகவே இருந்தன. அடிப்படையில், ஒரு தனிமனிதனில் ஏற்படுகிற சீர்த்திருத்தம் ஒரு சமூகத்தில் ஏற்படும் சீர்திருத்தத்தின் ஆரம்பம் என்று அவருக்குத் தெரியும்.

அன்று தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றியிருந்த சாதிப் பிரச்சனை, ஒடுக்குமுறை, அடக்குமுறை, கல்வியின்மை, அறியாமை போன்றவைகளால் உள்ளூர்த் தமிழர்களின் வளர்ச்சி மேல்தட்டு மக்களால் நசுக்கப்பட்டிருந்ததை சீகன் பார்த்தார்.

அன்று அவர்களுக்கிடையே 96 ஜாதிகள் இருந்ததாகவும், 330 கோடி தெய்வங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். தமிழ் மொழியை மீட்டு, அதைப் பாமர மக்களிடம் கொண்டுசேர்த்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மாறும், முன்னேறும் என்ற சீரிய நோக்குடன் சீகன் சீர்த்திருத்தத்தை ஆரம்பிக்கக் களம் இறங்கினார்.

ஒரு மொழி என்பது வெறுமனே ஒரு தகவல் தொடர்பு ஊடகம் மட்டும் அல்ல. மொழியற்ற வாழ்க்கை நலமற்ற வாழ்க்கை. ஒரு பொருளை அறிவதற்கும், புரிவதற்கும், உணர்வதற்கும், ஆராய்வதற்கும் மொழி அவசியம். மொழி நாகரிகத்தின் அடையாளம். மொழி ஓர் இனத்தின் அடையாளம். மொழி ஒரு பண்பாட்டின் அடையாளம். ஒருவனுடைய சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் தாய்மொழிக்கு மட்டுமே உண்டு. ஒரு மொழி மக்களின் பயன்பாட்டில் இல்லையென்றால் அது செத்துவிடும் என்று சீகன் உணர்ந்தார்.

தமிழ் நாட்டில் நற்செய்தி அறிவிக்க வேண்டுமானால் தமிழ் மொழியைக் கற்றாக வேண்டும் என்று சீகன்பால்க்குக்குத் தெரியும். நற்செய்தியும் அறிவிக்க வேண்டும்; தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் மீட்கவும் வேண்டும். அவருடைய தமிழ் மொழி ஆர்வமும், நற்செய்தி அறிவிக்கும் தாகமும் சேர்ந்தே சென்றன. அந்தக் காலகட்டத்தில் தமிழ் மொழியை எழுதப் படிக்கத் தெரிந்த மக்களின் விழுக்காடு மிகமிகக் குறைவு. இன்று, 2024இல், தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் 87%. 320 ஆண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் இரண்டு விழுக்காடு மக்களே கல்வியறிவு பெற்றிருந்தார்கள் என்றும், அந்த 2 விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள் பிராமணர்கள் மட்டுமே என்றும் சீகன்பால்க்கின் நாளேட்டிலிருந்து நாம் அறிகிறோம்.

இந்த நிலைமையில் அயல் நாட்டைச் சேர்ந்த சீகன்பால்க் தமிழ் மொழியைக் கற்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. திறமையான தமிழாசிரியர் கிடைக்கவில்லை; அச்சுவடிவில் புத்தகம் இல்லை. கடைசியாக ஓர் ஆசிரியர் கிடைத்தார். அந்த ஆசிரியர் அவருடைய மாணவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கும் பாடம் நடத்தலாம் எனச் சொல்லி அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து அவரிடம் தமிழ் கற்க ஆரம்பித்தார். அவர் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தும் விதத்தை உற்றுக் கவனித்தார். அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டார். அவருக்குத் தமிழ் கற்பிக்க வந்த ஆசிரியருக்கு தமிழைத்தவிர வேறு மொழி தெரியாது.

அழகப்பன், முதலியப்பன் என்ற தமிழ் நண்பர்களின் உதவியோடு தரங்கம்பாடியின் கடற்கரை மணலில் கைவிரல்களால் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்களை எழுதிப் படிக்க ஆரம்பித்தார்.

அவர் தமிழை எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொண்டார். ஆனால், வார்த்தைகளின் பொருளைத் தெரிந்துகொள்ள உதவிசெய்ய அவருக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார். 46 வயதுடைய அலெப்பா என்ற ஓர் உதவியாளர் கிடைத்தார். அலெப்பாவுக்கு போர்ச்சுகீசு, ஜெர்மனி, டச்சு போன்ற பல மொழிகள் தெரியும். அவருடைய உதவியுடன் சீகன்பால்க் நிறையக் காரியங்களை அறிந்துகொண்டார்.

சீகன் தமிழ்நாட்டுக்குவந்தபின் முதல் மூன்று ஆண்டுகள் அவர் மற்றவர்களுடன் தமிழில் மட்டுமே பேசினார், தமிழ் நூல்கள் மட்டுமே வாசித்தார். அந்தக் காலகட்டத்தில் அவர் ஜெர்மானிய, இலத்தீன் நூல்களைப் படிக்கவில்லை. தமிழ் படித்துக்கொண்டிருந்த கால கட்டத்திலேயே அவர் தமிழிலிருந்து ஜெர்மனிக்கும், ஜெர்மனியிலிருந்து தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார்.

தமிழ் அகராதியும், மொழிபெயர்ப்பும்.

தன் மொழிபெயர்ப்பாளரான அலெப்பா, தன் தமிழ் நண்பர்களான அழகப்பன், முதலியப்பன் ஆகியவர்களின் உதவியோடு 5,000 தமிழ் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர் மனப்பாடம் செய்தார். அலெப்பா மொழிபெயர்ப்பாளர், அழகப்பன் கவிஞர், முதலியப்பன் எழுத்தாளர்.

தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்க அவர் தினமும் 9 மணி நேரம் செலவழித்தார். எட்டு மாதங்களில் அவர் தமிழைத் தன் தாய்மொழிபோல் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டார். அவர் படித்த முதல் தமிழ் நூல் தொல்காப்பியம். எத்தனை தமிழர்கள் தொல்காப்பியம் படித்திருப்பார்கள்? பள்ளி கல்லூரியில் ஒருவேளை தேர்வுக்காகச் சில பகுதிகளைப் படித்திருக்கலாம். இரண்டே ஆண்டுகளில் அவர் தான் கற்றதை வாசிக்கவும், பிறர் வாசிப்பதைக் கவனமாய்க் கேட்டு, தெருக்களிலும், சந்தைகளிலும், கடைகளிலும் சந்திக்கின்ற எல்லோரோடும் தமிழில் பேசி அதன்மூலம் தமிழில் தேர்ச்சி பெற்றார்.

சீகன் இங்கு வந்த இரண்டே ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான தமிழ் ஓலைச்சுவடிகளைச் சேகரித்தார். அன்று அது ஒரு பெரிய நூலகமாகவே இருந்திருக்கும். அவைகளில் ரோமன் கத்தோலிக்க சபையின் தூதுவர்கள் எழுதிய 21 புத்தகங்கள், உள்ளூர் புலவர்கள் எழுதிய 119 புத்தகங்கள், முகமதியர்கள் எழுதிய 11 புத்தகங்கள் அடங்கும். அவைகளை அவர் நல்ல காலம் ஜெர்மனிக்கு அனுப்பிவைத்தார். இங்கு இருந்திருந்தால் ஒருவேளை அழிந்திருக்கும் என்றுகூடச் சொல்லலாம். அவர் தன் உதவியாளர்களை அனுப்பி இந்தச் சுவடிகளைச் சேகரித்தார். இந்தச் சுவடிகளின் அருமை தெரியாதவர்கள் அவைகளை மலிவு விலைக்கு அவருக்குக் கொடுத்தார்கள். இந்த ஓலைச் சுவடிகள் பெரும்பாலும் தமிழ் கலாசாரத்தையும், மதங்களைப்பற்றியவை.

சீகன் பல ஜெர்மன் மொழி புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

சீகன்பால்க் இரண்டே வருடத்தில் 20,000 தமிழ் வார்த்தைகளைக்கொண்ட ஒரு தமிழ் அகராதியையும், தமிழ் இலக்கணப் புத்தகத்தையும் வெளியிட்டார்.

திருக்குறள், நன்னூல், அரிச்சந்திர புராணம், பஞ்சதந்திர கதைகள், சிதம்பரம் மாலை, நளன் கதை, தேவாரம் போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் சுவடிகளைப் படித்து நான்கு ஆண்டுகளில் 40 ஆயிரம் சொற்கள் கொண்ட இன்னொரு தமிழ் அகராதியை உருவாக்கினார்.

அவருடைய உழைப்பைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் அன்றைய காலகட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த நாட்களில் ஓலைச் சுவடிகள்தான் இருந்தன. ஓலைச் சுவடிகள் யாரோவொருவரிடம்தான் இருக்கும். இன்றுபோல் அன்று ஓலைச் சுவடிகளை நகல் எடுக்க முடியாது. மேலும் அவைகள் இலக்கியத் தமிழில் எழுதப்பட்டிருந்தன. உரைநடைத் தமிழ் பயன்படுத்தவில்லை. மெய் எழுத்துக்கள்மேல் புள்ளி கிடையாது. பாடம் என்றால் பாடம என்றிருக்கும். வார்த்தைகளுக்கிடையே இடைவெளி கிடையாது. எல்லா வார்த்தைகளும் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கும். பொருளைப் புரிந்துகொள்வது மிகக் கடினம். இரட்டைக்கொம்பு கிடையாது. இத்தனை சிரமங்கள் இருந்தும் அவர் தமிழ் படித்தார், தமிழ் எழுதினார், தமிழில் மொழிபெயர்த்தார், தமிழ் அகராதிகள் உருவாக்கினார்.

அவர் சாமான்யர்கள் சாதாரணமாகப் பேசின எளிய வார்த்தைகளையே தன் நூல்களிலும், மொழிபெயர்ப்புகளிலும் பயன்படுத்தினார். இலக்கியத் தமிழைப்பற்றி அவர் அதிகம் கவலைப்படவில்லை. ஆனாலும் அவர் இலக்கியத் தமிழில் 17000 வார்தைகள்கொண்ட ஓர் தமிழ் அகராதியை வெளியிட்டார்.

இவைகளெல்லாம் அவர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்த தொண்டா அல்லது தேவனுக்கு மட்டுமே ஆற்றிய அரும்பணியா? தான் உண்டு தன் வேலை உண்டு என்று அவர் இருந்திருக்கலாமே! வயிற்றுப் பிழைப்புக்காகவா அவர் வந்தார்? இதற்காகவா அவர் கடல் கடந்து வந்தார்? மக்களைச் சுரண்டவா அவர் வந்தார்? தன் நாட்டில் தனக்கு வாழ வழியில்லை என்று இங்கு வந்தாரா?

முதல் பள்ளிக்கூடம்.

ஐரோப்பியர்களின் வீடுகளிலும் தோட்டங்களிலும் வேலை செய்தவர்களின் குழந்தைகளின் பரிதாபமான நிலையைக் கண்டு சீகன் மனதுருகினார். எனவே, அவர்களுக்காகத் தரங்கம்பாடியில் அவர் ஒரு பள்ளியை நிறுவினார். முதன்முதலாக அந்தப் பள்ளியில் 13 குழந்தைகள் படித்தார்கள்.

முதல் விடுதி:அந்தக் குழந்தைகள் தங்குவதற்காக அவர் ஒரு விடுதியையும் நிறுவினார்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு, உடை, உறைவிடம், புத்தகங்கள் அனைத்தையும் இலவசமாகக் கொடுத்தார்கள். இப்படிப்பட்ட எண்ணம் அன்று வேறு யாருக்கும் எழவில்லையே! ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கல்வி அவசியம் என்ற தரிசனம் அன்று வேறு யாருக்கும் தோன்றவில்லையே! இது புரட்சி இல்லையா? இன்றும் இவைகள் இலவசமாகத்தான் கொடுக்கப்படுகின்றன இவ்வளவு முன்னேறியபிறகும் இலவசம் நிற்கவில்லை! அப்படியானால் அன்று நிலைமை எப்படியிருந்திருக்கும்! இன்று கொடுக்கப்படும் இலவசத்துக்கு எவ்வளவு விளம்பரம்! அன்று எந்த விளம்பரமும் இல்லாமல் தியாகத்தோடு செய்தார்களே!அந்தக் குழந்தைகளைக்குறித்து அவர் ஏன் கவலைப்பட வேண்டும்? அவருக்கு ஏன் இந்த அக்கறை? இதுதான் தேவ மக்களின் பண்பு. தேவ மக்கள் பிறரைக்குறித்துச் சிந்திப்பார்கள். பிறர்நலம் போற்றுவார்கள்.

ஜெர்மன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை.

ஐந்து ஆண்டுகளுக்குள் தமிழை முறையாகவும், நேர்த்தியாகவும் கற்றுக்கொண்ட சீகன்பால்க், தன் சீடர்கள் இருவருக்கும் தமிழை முறையாகக் கற்றுக்கொடுத்தார். அதோடு நின்றுவிடவில்லை; தன் சீடர்களை ஜெர்மனி நாட்டுக்கு அனுப்பி, தான் பயின்ற ஹாலே என்ற இடத்திலுள்ள ‘கிங் மார்ட்டின் லூதர்’ பல்கலைகழகத்தில் 1711ஆம் ஆண்டு தமிழ்த்துறையை நிறுவச் செய்தார்.

தமிழ்நாட்டில் தமிழைக் கற்காமலே நற்செய்தி அறிவித்தவர்கள் உண்டு. ஆனால், சீகன் தமிழைக் கற்றதோடு நிற்காமல், பேசியதோடு நிற்காமல், மொழிபெயர்த்ததோடு நிற்காமல், அயல் நாட்டில், ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழைக் கற்பிப்பதற்கும், ஆராய்ச்சிசெய்வதற்கும் வழிவகைசெய்தார் என்றால் அவருடைய தூரப்பார்வையை என்னவென்போம்!

இன்று தமிழர்களுக்கே தமிழின் அருமை பெருமை தெரியாது. தமிழ் பேசுவதிலோ, தமிழை வளர்ப்பதிலோ அவர்களுக்குப் பெரிய ஆர்வம் இல்லை. இப்படியிருக்க, ஜெர்மனியிலிருந்து கிறிஸ்துவின் மிஷனரியாக தமிழகம் வந்த ஒருவர் இங்கு தமிழைக் கற்றுத் தன் சொந்த நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் அந்த மொழியைக் கற்பிக்க ஏற்பாடுசெய்கிறார். யாருக்காக? யாருடைய இலாபத்திற்காக?

சீகனின் அன்றாட அலுவல்கள்

சீகனின் அன்றாட அலுவல்களை அறியும்போது அவருடைய வாழ்க்கையின் ஒழுங்கைக்கண்டு வியக்காமல் இருக்க முடியாது. அவர் காலை ஜெபத்திற்குப்பின் தன் வழக்கமான வேலையைத் தொடங்கினார். ஆறுமுதல் ஏழுவரை அங்கிருந்த மக்களுக்குத் தமிழில் ஞானோபதேச வகுப்பு நடத்தினார். ஏழுமுதல் எட்டுவரை தான் கற்றுக்கொண்ட தமிழ்ச்சொற்களையும், சொற்றொடர்களையும் மதிப்பாய்வுசெய்தார். எட்டுமுதல் பன்னிரெண்டுவரை தமிழ்ப் புத்தகங்களை மட்டுமே படித்தார். அவருடைய செயலாளர் புதிய வார்த்தைகளை ஒரு தமிழ்ப் புலவரின் வழிகாட்டுதலின்படி அவருக்கு விளக்கினார். அவருக்கு இதுவரை தெரியாத எல்லாப் புதிய வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் அவர் எழுதினார். பன்னிரெண்டுமுதல் ஒன்றுவரை மதிய உணவு. அவர் சாப்பிடும்போது ஒருவர் வேதாகமத்தை வசித்துக்கொண்டேயிருப்பார். ஒன்றுமுதல் இரண்டுவரை ஓய்வெடுத்தார். இரண்டுமுதல் மூன்றுவரை அவருடைய வீட்டில் மீண்டும் ஞானோபதேச வகுப்பு நடத்தினார். மூன்றுமுதல் ஐந்துவரை மீண்டும் தமிழ்ப் புத்தகங்கள் படித்தார். ஐந்துமுதல் ஆறுவரை அவரும் அவருடைய நண்பரும் கூடி ஜெபித்தார்கள். ஆறுமுதல் ஏழுவரை அன்றைய நிகழ்வுகளை இருவரும் ஒன்றாக விவாதித்தார்கள். விளக்கு ஒளியில் அதிக நேரம் படிக்க முடியாததால் ஒரு தமிழ் எழுத்தாளர் அவருக்காகத் தமிழில் படித்தார். எட்டுமுதல் ஒன்பதுவரை இரவு உணவு. அப்போதும் ஒருவர் அவருக்காக வேதாகமத்தை வாசித்தார். அதன்பிறகு குழந்தைகளைப் பரிசோதித்து, அவர்களுடன் உரையாடினார்.

இவ்வாறு, தொடர்ச்சியான பயிற்சியின்மூலம் அவர் தமிழில் தேறினார். இப்படித் தமிழ் கற்றவர்கள் எத்தனைபேர்? இது அவருடைய ஒருநாள் பயிற்சியல்ல. இதுதான் அவருடைய வாழ்க்கை.

நற்செய்திப்பணி ஆரம்பம்

உள்நாட்டில் இருந்த பிறமதத்தவர்கள் அவரைப் பயமுறுத்தினார்கள்; டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கருணையற்ற அதிகாரிகளும், ஹாலேயில் இருந்த ஆர்வமற்ற பாப்டிஸ்ட்களும் அவரை நேரடியாக எதிர்த்தார்கள்; கிறிஸ்தவப் போதகர் திருமணம்செய்வதும், புத்தகங்கள் வெளியிடுவதும், ஏழை மாணவர்களுக்குப் பொருளாதார உதவி வழங்குவதும் உலகப்பிரகாரமானவை என்று அவர்கள் கருதினார்கள்.

சீகனின் தீவிர முயற்சியால், தரங்கம்பாடியில் நடைபெற்றுக்கொண்டிருந்த பணியை ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் ஆதரித்தன; அவர்களின் உதவியால் தரங்கம்பாடியில் இருந்த மிஷனரிகளுக்கு வீடுகளும், மூன்று பள்ளிக்கூடங்களும் கட்டப்பட்டன. சென்னையிலும், கடலூரிலும் பள்ளிக்கூடங்கள் நிறுவினார்.

தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு

புதிய ஏற்பாடு

தான் அறிவிக்கும் கிறிஸ்துவை மக்கள் அவர்களுடைய மொழியால் மட்டுமே முழுமையாகவும், சரியாகவும் புரிந்துகொள்ள முடியும் என்று சீகன் நம்பினார்; எனவே, அவர்கள் புரிந்துகொண்ட கிறிஸ்துவைப்பற்றிய உண்மைகள் அவர்களுடைய மொழியிலேயே இருக்கவேண்டும் என்று சீகன் விரும்பினார். புதிய விசுவாசிகள் தாங்கள் அறிந்த கிறிஸ்துவைவிட்டுப் பின்வாங்காமலும், அவரை இன்னும் அதிகமாக அறியவும், அவரில் எப்போதும் நிலைத்திருக்கவும் வாய்வழிப் போதனைகள் மட்டும் போதாது, வேதாகமமும் அவர்களுடைய கைகளில் அவர்களுடைய மொழியிலே இருக்க வேண்டும் என்று சீகன்பால்க் எண்ணினார்.

எனவே, சீகன்பால்க் வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்கத் தீர்மானித்தார். ஸ்கிமிட்டின் கிரேக்க புதிய ஏற்பாடு, இலத்தீன் உல்காதே, மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு ஆகியவைகளை ஆதாரமாகக்கொண்டு, டேனிய, போர்ச்சுக்கீசிய வேதாகமங்களின் உதவியுடன் 1708, அக்டோபர் 16இல் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். 1711 மார்ச் 21இல் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து முடித்தார். இரண்டரை ஆண்டுகளுக்குள் இந்த மாபெரும் வேலையைச் செய்துமுடித்தார்.

இரண்டு ஆண்டுகளில் ஒருவேளை ஒரு மொழியை நன்றாகக் கற்கலாம், பேசலாம்; ஆனால், அந்த மொழியில் மொழிபெயர்க்கக்கூடிய புலமை பெறவேண்டுமானால் எவ்வளவு உழைப்புத் தேவை. அதுவும் வேதாகமத்தை மொழிபெயர்ப்பது எவ்வளவு கடினம் என்பது அதில் ஈடுபட்டவர்களுக்குத்தான் தெரியும். அன்று இலக்கியத் தமிழ்தான் அதிகம். ஆனால், மொழிபெயர்க்க உரைநடைத் தமிழ் வேண்டும்; அதை உருவாக்க வேண்டும். அன்று மெய்யெழுத்தின்மேல் புள்ளி கிடையாது; இரட்டைக்கொம்பு கிடையாது; வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி கிடையாது; ஓலைச்சுவடிகள்தான் இருந்தன; அத்தனை தடைகளையும் தாண்டி அவர் வேதாகமத்தை மொழிபெயர்த்தார் என்றால் அது அதிசயமே.

அவர் தன்னந்தனியாகவே மொழிபெயர்த்தார். உதவிக்கு ஆள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்; ஆனால், உதவிக்கு ஆள் கிடைக்கவில்லை. எழுத்துப் பிழை இல்லாமல் ஒரு வாக்கியத்தை மொழிபெயர்க்கவோ, எழுதவோ ஓர் ஆள் கிடைக்கவில்லை. அவருடைய உதவியாளர் அலெப்பாவுக்குப் பல மொழிகள் தெரியும்; வார்த்தைகளுக்குப் பொருள் தெரியும்; ஆனால், அவருக்குத் தமிழ் இலக்கணம் தெரியாது; பிற மொழிகளின் இலக்கணமும் தெரியாது.

வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பது அவருக்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. இந்தியாவில் அதுவரை வேறு யாரும் வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கவில்லை. மேலும் மூலமொழியில் இருந்த சில வார்த்தைகளுக்கு நேரடியான கிறிஸ்தவ வார்த்தைகள் கிடைக்கவில்லை; எனவே, அவர் பிற மதப் புத்தகங்களிலிருந்த, சாமான்யர்களின் பேச்சுவழக்கிலிருந்த சில வார்த்தைகளைப் பயன்படுத்தினார். உரோமன் கத்தோலிக்க சபையார் ஏற்கெனவே தமிழ் ஆராதனை முறையில் சில பதங்களை மொழிபெயர்த்திருந்தார்கள். அவைகளையும் அவர் தன் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தினார். எடுத்துக்காட்டாக, உரோமன் கத்தோலிக்கர்கள் அந்நாட்களில் தேவன் என்ற பதத்தை “சர்வேசுவரன்” என்று மொழிபெயர்த்திருந்தார்கள். எனவே, சீகன்பால்க்கும் அந்த வார்த்தையையே பயன்படுத்தினார்.

ஒருவழியாக அவர் மொழிபெயர்த்து முடித்தார். ஆனால், மொழிபெயர்த்த வேதாகமத்தை அச்சேற்ற பல தடைகள். இந்திய வரலாற்றில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட தமிழ்மொழி புதிய ஏற்பாட்டை அச்சேற்ற அநேகத் தடைகள் ஏற்பட்டன.

தரங்கம்பாடியில் சீகனின் நற்செய்தி ஊழியத்தைப்பற்றி இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்த கிறிஸ்தவர்கள் கேள்விப்பட்டார்கள். அவருடைய ஊழியத்தை ஊக்குவிக்கும் வகையில் அவருடைய ஊழியங்களையும், மொழிப்பெயர்ப்புப் பணிகளையும் பாராட்டி இங்கிலாந்திலிருந்த Society for Promoting Christian Knowledge என்ற நிறுவனத்தார் 1712ஆம் ஆண்டு தரங்கம்பாடிக்கு ஓர் அச்சு இயந்திரத்தை அனுப்பினார்கள். அச்சு இயந்திரத்தை மட்டும் அல்ல; அதை இயக்கத் தெரிந்த ஜோனாஸ் பிங்கே என்பவரையும் கூடவே அனுப்பினார்கள். அவர் அப்போது இலண்டனில் இருந்த ஒரு ஜெர்மன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஆனால், அச்சு இயந்திரத்தைக் கொண்டுவந்த கப்பலை பிரெஞ்சுப் படைகள் பிரேஸில் அருகே கைப்பற்றின. ஜோனாஸ் பிங்கே போர்க்கைதியாகக் கொண்டுபோகப்பட்டார். சென்னை நகர ஆளுநர் பிரெஞ்சுப் படைகளுக்கு உரிய பணம் கொடுத்து, கப்பலை மீட்டார். பயணம் தொடர்ந்தது. ஆனால் ஜோனாஸ் ஒருவிதமான காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு நன்னம்பிக்கை முனையருகே இறந்தார். அச்சு இயந்திரமும், புத்தகங்களும், தாள்களும் 1712 ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்தடைந்தன.

முதன்முதலாக 1712இல் போர்ச்சுகீசிய மொழியில் அச்சிட்டார்கள். 1713இல் ஞானோபதேச புத்தகங்கள், பாடல் புத்தகம், தரங்கம்பாடிப் பள்ளிகளைப்பற்றிய அறிக்கைகள், கிறிஸ்துவின் பாடுகளைப்பற்றிய கையேடுகள் ஆகியவைகளை அச்சிட்டார்கள். அதன்பின் தமிழ் அச்சகத்தை நிறுவினார்கள். அதற்கு ஜெர்மனியில் இருந்த அவருடைய நண்பர்கள் உதவினார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியாவிட்டாலும்கூட, அவர்கள் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்துத் தரங்கம்பாடிக்கு அனுப்பினார்கள். அந்த எழுத்துக்களைக்கொண்டு முதன்முதலாகத் தமிழில் அப்போஸ்தலர்களின் விசுவாசப்பிரமாணத்தை அச்சிட்டார்கள். அவர்கள் அச்சு இயந்திரத்தை அனுப்பியபோது ஜோஹன் பெர்லின், ஜோஹன் காட்லீய்ப் அட்லெர், அவருடைய 14 வயதான இன்னொரு சகோதரன் ஆகிய மூவரையும் கூடவே அனுப்பினார்கள். பெர்லின் போர்ச்சுகீசிய அச்சகத்தையும், பள்ளியையும் கவனித்துக்கொண்டார்; ஜெர்மனியிலிருந்து அனுப்பிய எழுத்துருக்கள் பெரியதாக இருந்ததால், அட்லெர் சிறிய எழுத்துருக்களை வடிவமைக்கும் பணியை உடனடியாக மேற்கொண்டார்.

அச்சு இயந்திரம் இருக்கிறது; அச்செழுத்துக்கள் தயாராகிவிட்டன; அச்சடிக்கத் தாள் வேண்டுமே! தாளுக்கு எங்கே போவது? இறக்குமதிசெய்யலாமா? இறக்குமதிசெய்ய நிறையப் பணச் செலவாகும். சீகன்பால்க் தமிழை அச்சுத் தமிழாக்கிய நேரத்தில் இங்கு காகிதப் பற்றாக்குறை இருந்தது. அதைச் சமாளிப்பதற்காக அவர் பொறையாறில் காகிதப் பட்டறை ஒன்றை உருவாக்கினார்.

அச்சு இயந்திரம் தயார்; அச்சு எழுத்துக்கள் தயார்; மொழிபெயர்ப்பு தயார்; தாளும் இருக்கிறது. இப்போது இன்னொரு பிரச்சினை. அச்சு இயந்திரத்தை இயக்க வந்தவர் வழியில் இறந்துபோனாரே! அதை இயக்க ஆள் வேண்டுமே!

எனவே, அச்சுவேலை தெரிந்த ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. தரங்கம்பாடியில் இருந்த ஒரு டேனிஷ் போர்வீரனுக்கு அச்சுவேலை தெரியும் என்று கேள்விப்பட்டு, அவரைக் கண்டுபிடித்தார்கள். ஒருவழியாக 1713இல் புதிய ஏற்பாட்டை அச்சிலேற்றும் வேலையை ஆரம்பித்தார்கள். இவ்வளவு தடைகளையும் தாண்டி நான்கு நற்செய்திகளும், அப்போஸ்தலர் நடப்படிகளும் அடங்கிய தமிழ் புதிய ஏற்பாட்டின் முதல் பாகம் 1714இலும், மீதி புத்தகங்கள் அடங்கிய இரண்டாம் பாகம் 1715 ஜூலை 15இலும் அச்சடிக்கப்பட்டு வெளிவந்தன. புதிய ஏற்பாட்டை அச்சேற்றியபோது அதற்கு “வேதபொஷ்த்தகம்” என்று பெயர் கொடுத்தார்கள். இதுதான் இந்திய மொழியில் முதலாவது வெளியான அச்சு நூல். முதன் முதலாக தமிழ் நாட்காட்டியையும் வெளியிட்டு, தமிழுக்கு அணி சேர்த்த இவர் இலக்கிய நடையில் இருந்த தமிழை உரைநடைத் தமிழுக்கு மாற்றியவர் என்ற பெருமைக்கு உரியவர். இந்திய மக்கள் ஜாதிக்கொடுமையினால் தங்கள் சொந்த மதப்புத்தகங்களைக்கூடப் படிக்கமுடியாமல் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குப் புதிய ஏற்பாட்டைப் படிக்கக் கொடுத்தவர் சீகன்பால்க். இது புரட்சி இல்லையா?

இறுதியாக, ஓலைச் சுவடிகளின் பக்கம் தன் பார்வையைத் திருப்பிய சீகன்பால்க், தமிழ் ஓலைச் சுவடிகளையும் அச்சில் ஏற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனால், அம்முயற்சி முழுவடிவம் பெறவில்லை.

இன்று வேதாகமும், உரைநடைத் தமிழும், அனைத்துவகையான பாடங்களும் எளிய முறையில், ஏழைகளுக்கும் தாளில் கிடைக்கின்றன. இவ்வாறு தமிழ் வளர்ந்திருப்பதற்கு அடித்தளம் உரைநடையும், அதைத் தாளில் அச்சிட்டதுமேயாகும். அதைச் செய்தவர் சீகன்பால்க்.

பழைய ஏற்பாடு

இறையியல் கல்லூரி

சீகன் தரங்கம்பாடியில் தொடங்கிய பணிகள் தொடர்வதற்கு உள்ளூர் கிறிஸ்தவர்கள் தேவை என்றும், அவர்கள் அதற்குத் தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெளிவாக அறிந்திருந்தார். அந்தத் தொலைதூர‌ப் பார்வையுட‌ன், அந்த‌த் த‌ரிச‌ன‌த்துட‌ன், 1716ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் எட்டுப்பேரைக்கொண்டு ஒரு வேதாகமக் கல்லூரியை நிறுவினார். இதுவே இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட சீர்திருத்த‌ சபையின் முதல் இறையிய‌ல் கல்லூரியாகும். பரிசுத்த வேதாகமம் ஒரேவொரு சாதியினருக்கு மட்டும் உரியது அல்ல; அது அனைத்து தரப்பினருக்கும் உரியது என்று அவர் அதன்மூலம் நிரூபித்தார். இந்தியாவில் பிராமணர்கள் மட்டுமே வேதத்தைக் கற்கவும், கற்பிக்கவும் தகுதியானவர்கள் என்று இருந்த நிலையை மாற்றி தாழ்த்தப்பட்ட இனத்தாரும் வேதத்தைக் கற்கவும் கற்பிக்கவும் கிறிஸ்துவின் அதிகாரம் பெற்றவர்கள் என்பதை மொழி விடுதலைப்பணிமூலம் அவர் எடுத்துரைத்தார். இந்து ம‌த‌த்திலிருந்து கிறிஸ்த‌வ‌ரான‌ ஆரோன் என்ப‌வ‌ர் 1733ஆம் ஆண்டு த‌மிழ் லுத்த‌ர‌ன் திருச்ச‌பையின் முத‌ல் போத‌க‌ராகப் போத‌காபிஷேக‌ம் செய்ய‌ப்ப‌ட்டார்.

தமிழ் நூல்கள்

கிறிஸ்தவத் தூதுவர்கள் இந்தியாவில் வெறுமனே கிறிஸ்தவத்தைப் பரப்ப வந்தவர்கள் என்று எண்ணுவது மிகக் குறுகிய கண்ணோட்டம். கிறிஸ்தவத் தூதுவர்கள் வேதாகமத்தையும், வேதாகமத்தோடு தொடர்புடைய புத்தகங்ககளையும் மட்டுமே மொழிபெயர்த்து வெளியிட்டார்கள் என்பது மிகவும் மேம்போக்கான புரிதல், மேலோட்டமான முடிவு. கிறிஸ்தவத்தையும் தமிழையும் பிரிக்கமுடியாது. கிறிஸ்தவத் தூதுவர்கள் தமிழகத்திற்கு வராதிருந்தால் தமிழுக்கு இணையான மொழி வேறு இல்லையென்று உலகம் அறிந்திருக்காது. உலகின் முதல் மொழி தமிழ் மொழி என்ற உண்மையை உலகிற்குச் சொன்னவர் தேவநேய பாவாணர். ஆனால், உலகமெங்கும் தமிழைக் கொண்டுசென்றது தமிழகம் அல்ல, கிறிஸ்தவம். ஆம், இங்கு வந்த கிறிஸ்தவத் தூதுவர்கள் சென்ற இடமெல்லாம் கிறிஸ்தவத்தைப் பரப்பினார்களோ இல்லையோ, தமிழையும், தமிழ் இலக்கியங்களையும் படித் து, தமிழையும் பரப்பினார்கள். கிறிஸ்தவத் தூதுவர்கள் தமிழ் கற்றார்கள் என்பது மட்டும் அல்ல. தாங்கள் கற்ற தமிழைத் தங்கள் நாடுகளில் பரப்பினார்கள். அச்சு வரவில்லை என்றால் வேதாகமம் வந்திருக்காது, கிறிஸ்தவம் வளர்ந்திருக்காது என்பது ஒருபுறம் இருக்கட்டும். மற்றொருபுறம், அச்சு வரவில்லையென்றால் சங்க இலக்கியங்கள் அனைத்தும் காணாமல் போயிருக்கும், திருக்குறள் காணாமல் போயிருக்கும். அன்று ஏற்கெனவே அனல்வாதத்திலும், புனல்வாதத்திலும் நிறைய நூல்கள் எரிந்தும், அழிந்தும் போய்விட்டன. சீகன்பால்க்கின் பணியை இந்திய அரசாங்கம் அங்கீகரித்து 2006ஆம் ஆண்டு அவருடைய 300ஆவது ஆண்டு நினைவுநாளை கொண்டாடும் விதமாக தபால் தலை ஒன்றை வெளியிட்டு அவருக்குப் புகழாரம் சூட்டியது.

இன்று தமிழர்கள்கூட ஒழுங்கான தமிழ் பேசுவதில்லை, எழுதுவதில்லை. ஒரு வாக்கியத்தில் எத்தனை வடமொழிச் சொற்களையும், ஆங்கிலச் சொற்களையும் பயன்படுத்துகிறோம். பின்னாட்களில் தங்களைப்போல் தமிழ் கற்க விரும்பும் வெளிநாட்டினர் எளிமையாகத் தமிழ் கற்பதற்காக தமிழ் இலக்கண நூல்கள், அகராதிகள், சொற்களஞ்சியங்கள் எனப் பல நூல்கள் எழுதினார்கள். பேச்சுத் தமிழைக் கற்பதற்காகவும் நூல்கள், அகராதிகள் எழுதினார்கள்.

அவர் தமிழகத்தில் இருந்த முதல் இரண்டு ஆண்டுகளில் 161 தமிழ் புத்தகங்களைச் சேகரித்தார். அவைகளுள் 16 நூல்கள் சீகன்பால்க் எழுதிய தமிழ் நூல்கள். ஒவ்வொரு நாளும் எட்டரை மணி நேர தீவிர தமிழ் பயிற்சி மேற்கொண்டார்.

அன்றைய தமிழ் இலக்கியவாதிகள் சராசரி மனிதனின் சமயம், சமூகவியல், பண்பாடு, வாழ்வியல் முறைகள் ஆகியவைகளில் அதிக அக்கறை காட்டவில்லை. அவர்கள் கடவுள்களையும் , அரசர்களையும் போட்டிபோட்டுப் பாடினார்கள். இந்தச் சூழ்நிலையில் சீகன்பால்க் செய்தவை மகத்தானவை.

இலக்கிய நடையிலிருந்து உரைநடைக்கு விடுதலை

தமிழ் மொழியின் இலக்கியநடை ஓலைச்சுவடிகள் வடிவம், கற்றவர் மொழிபோன்ற அடிமைத்தனத்திலிருந்து சீகன் விடுதலையை ஏற்படுத்தினார்.

தமிழ்ப் பண்பாடு தழைக்கவேண்டுமானல் அதன் இலக்கியம் புறக்கணிக்கப்படக்கூடாது, இலக்கியம் பாதுகாக்கப்படவேண்டுமானால் அது அனைத்து மக்களையும் சென்றடையவேண்டும். அதற்கு மொழி பரிமாற்றம் அவசியம். அப்பரிமாற்றத்தைத் தமிழ், இலத்தீன், ஜெர்மன்போன்ற மொழிகளிடையே ஏற்படுத்தியவர் சீகன்பால்க். தமிழகத்தில் தமிழ் உரைநடையின் தந்தையெனச் சிறப்பிக்கப்படும் ஆறுமுக நாவலரும், தாண்டவராய முதலியாரும், தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பெருந்தொண்டு புரிந்தார்களென்றால் அவர்களுக்கு ஆணிவேராக இருந்தவர் சீகன்பால்க். சீகன்பால்க் தமிழ் இலக்கியங்களின் உச்சத்தைத் தொடவில்லை என்பது உண்மை. அவரைத் தொடர்ந்து வந்த கால்டுவெல், ஜி.யு.போப்போன்றவர்கள் திருக்குறள்போன்ற தமிழ் இலக்கியங்களைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து ஊரே அறியாத திருக்குறளை உலகறியச் செய்தார்கள். ஆனால், இதற்கு வித்திட்ட முன்னோடி சீகன்பால்க்.

தமிழ் இலக்கியத்தில் கவிதை வேறு, உரைநடை வேறு, பேச்சுத் தமிழ் வேறு, மேடைத் தமிழ் வேறு. பேச்சுத்தமிழை மட்டும் அறிந்த தாழ்த்தப்பட்ட இனத்தவர் மேடைத்தமிழைக் கேட்கவோ, எழுத்துத்தமிழைப் படிக்கவோ, எழுதவோ வாய்ப்பில்லாமல் இருந்ததால், கல்வியறிவு அவர்களுக்குக் கானல் நீராக இருந்தது. தமிழ் மொழி அடிப்படையில் ஓர் இலக்கிய மொழி. ஓலைச்சுவடிகளில் உரைநடையைப் பயன்படுத்தமுடியாததால், இலக்கியத்தில் உரைநடையை அதிகமாகப் பயன்படுத்தவில்லை. இலக்கிய நடையை, இன்றுபோல் அன்றும், சாதாரண மக்கள் புரிந்துகொள்ளவில்லை. பாடல்கள், கவிதைகள், உருவகங்கள், உவமைகள் என்ற நிலையில் இருந்த இலக்கியத் தமிழை எளியோரும் புரிந்துகொள்ளுமாறு உரைநடைத் தமிழாக எளிமைப்படுத்திய பெருமை சீகன்பால்க்கைச் சாரும். அவருக்குமுன் ராபர்ட் டி நோபிலி எழுதியிருந்தார்; ஆனால், அது பெரும்பாலும் சமயச்சார்புடைய, வடசொல்லும், மேனாட்டு மொழியும் கலந்த ஒரு கொச்சை மொழியாக இருந்தது. எனவே, சீகன்பால்க்கின் உரைநடைத் தமிழைப் பெரும்பாலார் வரவேற்றார்கள். ஏனென்றால், உரைநடை பேச்சு வழக்குடன் தொடர்புடையது.

அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சீகன்பால்க் ஒரு தமிழ் இலக்கண நூலை உரைநடையில் எழுதினார். அவருடைய தமிழ்நடை எளிமையானது. அவர் தம்மைச் சுற்றியிருந்த சாதாரண மக்கள் பேசிய தமிழ் நடையிலேயே எழுதினார். எடுத்துக்காட்டாக, முடி என்பதற்கு மக்களுடைய வழக்கத்தில் இருந்த மயிர் என்ற பொதுவான வார்தையைப் பயன்படுத்தினார். ஆனால், பெஸ்கி பாமரமக்களின் வழக்கத்தில் இல்லாத ‘கேசம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். பெஸ்கி, சீகன்பால்க்கின் நடையை ஆதரிக்கவில்லை. ஏனென்றால், பெஸ்கி இலக்கியநடையை விரும்பினார். நோபிலி, பெஸ்கி போன்றோர் இயேசு சபையைச் சார்ந்தவர்கள். அவர்கள் பெரும்பாலும் கற்றவர்களையே இலக்காக வைத்துச் செயல்பட்டார்கள். அவர்கள் பாமரமக்களின் மொழியைக் கற்காமல் மேல்தட்டு மக்களின் மொழிக்கு ஏற்ப இலக்கியங்களைக் கற்றுப் பல்வேறு இலக்கியங்களை எழுதினார்கள்.

சீகன்பால்க் தமிழ் மொழியின் அன்றைய நிலையைப் புரிந்துகொண்டார். பிராமணர்கள் தாங்கள் உருவாக்கிய சமஸ்கிருத மொழியை இறைமொழியாக முன்வைப்பதற்காகவும், தமிழ் மொழியில் உள்ள சமயக்கருத்துக்களைப் பின்தள்ளுவதற்காகவும் தமிழையும், தமிழர்களையும் அவர்கள் தாழ்ந்தவர்களாகச் சித்திரித்தார்கள். அன்று பிராமணர்களே ஐரோப்பியர்களுக்கு நெருக்கமாக இருந்ததால் அவர்களுடைய ஆலோசனையின்படி ஐரோப்பியக் கிறிஸ்தவர்களில் அநேகர் தமிழையும், தமிழரையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் தமிழ் மொழியை ஏளனமாக எண்ணி ஒதுக்கினார்கள். தமிழரை அநாகரீகர்களாகக் கருதினார்கள், சீகன்பால்க்கும் அப்படியே நினைத்திருந்தார். அவர், தமிழுடனும் தமிழர்களுடனும் நெருங்கிய உறவு கொண்டபின்னரே அவருடைய அந்த எண்ணம் மாறியது.

இதைப்பற்றி சீகன்பால்க் பின்னாட்களில், “நானும் தமிழ் மொழி தரம்தாழ்ந்தது என்றும், தமிழரின் வாழ்க்கை தாறுமாறானது என்றும் முதலில் நினைத்தேன். தமிழ் மொழியைப் பயின்றேன். தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தேன். தமிழரோடு உரையாடினேன், உறவாடினேன். அதன்பின் என் எண்ணத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டேன். தமிழ் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று. தமிழ் இலக்கண விதிகள் மிகச் சிறந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. எழுத்தாணியால் பனை ஓலையில் அழகாக எழுதும் திறமை வாய்ந்தவர்கள் தமிழர்கள். பல கலைகளில் புலமை பெற்றவர்கள். வாணிபத்திலும், ஓவியத்திலும் தேர்ந்தவர்கள். அவர்களுடைய ஆட்சிச் சட்டமும், நீதி நெறியும் மக்கள் நல வாழ்க்கைக்கு அரணானவை, மனோதத்துவ வேதாந்தத்திலும் அவர்களுடைய நூல்கள் வியந்து போற்றுதற்குரியவை. வேதவரலாற்று நுட்பங்களை அவர்கள் உரிய முறையில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.” என்று கூறினார்.

இது ‘தமிழ் வாழ்க’ என முழங்குபவர்களும், தமிழாசிரியர்களும், ‘தமிழ் எங்கள் உயிர்’ என்று உரக்கச் சொல்பவர்களும் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளியில் படிக்கவைக்கும் காலம். ஆனால், ஜெர்மன் மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட சீகன்பால்க் தமிழ் மொழியின் அருமை அறிந்து, அதைக் கற்று, பாமரர்களுக்காக எளிமைப்படுத்தினார், மொழிபெயர்த்தார், தமிழ் இலக்கணமும், அகராதியும் இயற்றினார், இலக்கியநடை மொழியை உரைநடை மொழியாக மாற்றினார்; இன்று நாம் தமிழை உரைநடையில் பயிலவும், எழுதவும், பயிற்றுவிக்கவும் அடித்தளமிட்ட சீகன்பால்க்கின் சீரிய சீர்த்திருத்தப்பணி ஒரு மொழி விடுதலைப்பணியாகும் என்றால் அது மிகையாகாது.

ஓலையில் ஒடுங்கியிருந்த தமிழுக்கு விடுதலை

அக்காலத்தில் தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் ஓலையில்தான் எழுதப்பட்டிருந்தன. ஓலையில் எழுதும்போது எழுத்துக்களுக்குப் புள்ளி வைக்க முடியாது. ஏனென்றால், ஓலையில் எழுத்தாணியால் எழுதும்போது புள்ளி வைத்தால் ஓலையில் ஓட்டை விழுந்துவிடும். மேலும், இந்த ஓலைச்சுவடிகள் பிராமணர்களிடமும், அரசவையிலும்தான் அதிகம் இருந்தன. ஆகவே, ஓலைச்சுவடிகளில் உள்ள இலக்கியங்கள் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவில்லை. இவைகளைப் பாமரர்கள் பார்ப்பதே அரிது. பார்ப்பதே அரிது என்றால் அவைகளைப் படிக்கவும், எழுதவும் வாய்ப்பில்லை. மேலும், பெரும்பாலான ஓலைச்சுவடிகள் வானவியல், ஜோதிடம், எண்கணிதம் போன்றவைகளைப்பற்றியவை. எனவே, அவைகளைப் பிறருக்குச் சொல்லவுமில்லை, கொடுக்கவுமில்லை.

சீர்த்திருத்தசபை உருவாவதற்குமுன் வேதாகமம் சங்கிலியால் கட்டப்பட்டு, இறையியல் மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலை இருந்தது. அதுபோல் வேதாகமம் ஓலையில் இருந்திருந்தால் அது பிராணர்களிடம் மட்டுமே இருந்திருக்கும்; கிறிஸ்துவின் செய்தி அவர்களிடம் அடிமைப்பட்டிருந்திருக்கும்; வெளியே வந்திருக்காது. சீகன்பால்க் வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்த்து, அதைத் தாளில் அச்சிட்டதால் இயேசுவின் உபதேசங்கள் விடுதலையோடு பரவின; தமிழ்மொழியும் ஓலையிலிருந்து தாளுக்கு விடுதலைபெற்றது.

தமிழை ஓலையிலிருந்து தாளுக்குக் கொண்டுவர சீகன்பால்க் மிகவும் பாடுபட்டார். அந்நாட்களில் அநேக ஓலைச்சுவடிகள் நெருப்பில் (அனல்வாதம்) எரிந்து சாம்பலாயின; நீரில் (புனல்வாதம்) அடித்துச்செல்லப்பட்டன. எரியாத, நீரில் எதிர்நீச்சல் போட்டு கரையை அடைந்தவை மட்டுமே எஞ்சியிருந்தன. இன்று தமிழ் அழிக்கமுடியாத நிலைக்கு உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு மூலக்காரணம் சீகன்பால்க் தமிழைத் தாளில் அச்சு வடிவில் வெளியிட்டதாகும்.

கிறிஸ்துவின்மேல் இருந்த அவருடைய அன்பும், தமிழர்களைக் கிறிஸ்துவின் சீடர்களாக்க வேண்டும் என்ற பாரமும் தமிழ் மொழி விடுதலைக்கு வித்தாயின. பிராமணர்களின் அடிமைத்தனத்திலிருந்து பாமரர்களுக்கும் விடுதலை கிடைத்தது. இன்றைய நவீன பத்திரிகைகள், வார நாளிதழ்கள், நாளிதழ்கள் ஆகியவைகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருந்தது சீகனின் தமிழ் விடுதலைப்பணியாகும்.

தமிழ் மொழியைத் தமிழர்கள் முறையாகப் படிப்பதே கடினம் என்று நினைக்கிறார்கள். பாமரர்களின் தமிழ் வேறு; பிராணர்களின் தமிழ் வேறு. இன்றுவரை இந்த நிலை நீடிக்கிறது. பெஸ்கி மதுரையில் இருந்த ஒரு பிராமணரிடம் தமிழ் கற்றார். எனவே, அவருடைய மொழி வேறு. ஆனால், சீகன்பால்க் பாமரர்களிடையே ஒருவராக இருந்து, தம்மைத் தாழ்த்தித் தமிழ்க் கற்றார். பெஸ்கி மரியாளையும், யோசேப்பையும்பற்றித் தேம்பாவணிபோன்ற இலக்கியங்களை எழுதினார். ஆனால், அதுபோன்ற இலக்கியங்களைவிட பரிசுத்த வேதாகமம் தமிழில் அவசியம் என்பதை சீகன் உணர்ந்தார். ஆகவே, அவருடைய மொழி பாமரர்களுக்கு ஏற்றதாயிருந்தது. அவரவர் குலத்திற்கு, இனத்திற்கு ஏற்றார்போல மனிதர்களுக்குப் பெயர் இருந்ததை அறிந்த அவர், சில வார்த்தைகளின் ஓசையையும் வடிவத்தையும் மாற்றி, பாமரமக்களுக்கு ஏற்றார்போல் புதிய பெயர்களைக் கொடுத்துத் தமிழ்மொழிமூலம் சீகன்பால்க் சமூகவிடுதலையைக் கொண்டுவந்தார்.

சீகன்பால்கின் பிராமண எதிர்ப்பு உலகறிந்தது. அவரே இன்றைய தமிழகத்தின் பிராமண எதிர்ப்புக்கு விதை தூவியவர். மலபாரி பிராமணர்களுடன் அவர் நடத்திய விவாதங்களை “Conferences with Malabarian Brahmins” என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். கண்ணனூரிலிருந்து கன்னியாகுமரிவரை இருக்கிற பகுதிகளை சீகன்பால் மலபார் என்றழைத்தார்.

வழித்தோன்றலை உருவாக்காதவர்கள் சிறந்த தலைவர்கள் ஆவதில்லை.

சீகன்பால்க் வெறுமனே மொழிபெயர்ப்புப் பணியோடு நிறுத்திக்கொள்ளவில்லை.சீகன்பால்க் அநேக வழித்தோன்றல்களை உருவாக்கினார். வழித்தோன்றல்கள் உருவாவதற்கு ஏற்ப பல நூல்களை எழுதினார். ஜெர்மனியர்கள் அவருக்குப்பின் தமிழகத்திற்குத் தூதுவர்களாக வருவதற்கேற்ப தென்னிந்தியாவின் மதக் கொள்கைகள், பழக்கவழக்கங்கள், ஆசாரங்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவைகளைப்பற்றி ஒரு புத்தகம் ஜெர்மன் மொழியில் எழுதினார். இலத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம் எழுதினார். தமிழ்நாட்டுத் தெய்வங்களின் பரம்பரையைப்பற்றிய ஒரு புத்தகத்தையும் எழுதினார். இலத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம் (Grarmmatica Tamulica), தமிழ்–ஜெர்மன் அகராதி எனப் பல புத்தகங்கள் எழுதினார்

நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலகநீதி என்ற புத்தகங்களை ஒன்று சேர்த்து ‘நானாவித நூல்கள்’ என்ற புத்தகத்தையும் எழுதினார். கடவுள், மனிதன், சமயம், பண்பாடுபோன்ற தலைப்புகளில் அவருடைய நூல்கள் இருந்தன. நாள்காட்டியை உருவாக்கியிருக்கிறார் சீகன்பால்க். இவருக்குப்பின்பு தமிழகம் வந்த இராபர்ட் கால்ட்வெல், ஜி.யு. போப், எல்லிஸ் போன்றவர்கள் தமிழ்த்தொண்டை இன்னும் சிறப்பாகச் செய்ய சீகன்பால்க் அடித்தளம் அமைத்தார் என்றால் அது மிகையாகாது.

பள்ளிகள்

அந்த நாட்களில் திண்ணைப் பள்ளிக்கூடம்தான் இருந்தது. வசதி படைத்தவர்கள் ஆசிரியருக்குப் பணம் கொடுத்துக் கல்வி கற்றார்கள். அனைவருக்கும் கல்வி வேண்டும் என்ற தரிசனத்தோடு சீகன்பால்க் ஆண்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தனித்தனியே பள்ளிகளை ஆரம்பித்தார். திண்ணைப்பள்ளியின் மாதிரியைப் பின்பற்றிப் பாடத்திட்டங்களையும், பாடப்புத்தகங்களையும் எழுதினார். பல்வேறு நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை ஒரு நூலாக்கி வகுப்பறையில் பயன்படுத்தும் முறை இவர்மூலம் அறிமுகமானது. ஒடுக்கப்பட்ட மக்கள் நினைத்துக்கூடப்பார்க்காத கல்வி அவர்களுக்குக் கிடைத்தது. அன்று தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள காலமும், செலவும் அதிகம். ஆனால், சீகன்பால்க் அதை எளிமையாக்கினார்; அவருடைய அரிய பணியினால் இன்று அது நமக்கும் எளிமையாயிற்று.

அன்று எழுத்துக்களில் புள்ளி கிடையாது; வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி இருக்காது; எல்லா வார்த்தைகளும் சேர்ந்தே இருக்கும். ஆசானின் உதவியில்லாமல் ஒரு பாமரனால் அவைகளைப் படிக்கவோ, புரிந்துகொள்ளவோ இயலாது. ஓலைச்சுவடிகளை நகல் எடுக்க முடியாது. ஆனால், இன்று தாளில் உள்ள செய்திகளை எளிதில் நகல் எடுக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மொழியை முறையாகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியத்தை ஒடுக்கப்பட்ட மக்களும் பெற்று சமூக, சமய, அரசியல் விடுதலை பெற சீகன்பால்க் உதவினார் என்றால் மிகையாகாது.

கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் கிறிஸ்தவத் தூதுவர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள் என்பது உண்மை. ஆனால், இங்கு வந்தபின் இங்கிருந்த சமூக அவலத்தையும், மொழியின் இழி நிலையையும், மக்களின் அறியாமையையும், கல்வியின்மையையும் கண்கூடாகக் கண்டார்கள். அதை மாற்ற அவர்கள் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும், மொழிக்கும் ஆற்றிய தொண்டு மகத்தானது. தாங்கள் உண்டு, தங்கள் கிறிஸ்து உண்டு என்று அவர்கள் இருந்திருக்கலாம்; ஆனால், அப்படி இருக்கவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்று எழுபத்தைந்து ஆண்டுகள் ஆனபிறகும் அரசு இயந்திரங்களால் இன்னும் செய்ய முடியாத பல வேலைகளை 300 ஆண்டுகளுக்குமுன் ஒரு சிலராகச் செய்தார்கள். இது எவ்வளவு பெரிய காரியம் தெரியுமா? அவர்கள் மக்களுக்கும், மொழிக்கும், மண்ணுக்கும் செய்த பணிவிடை ஒரு மாபெரும் புரட்சி, மாபெரும் திருப்புமுனை. அவர்களுடைய தொழிற்புரட்சியையும் மறக்கமுடியாது.

பாலை ஊற்ற பாத்திரம் வேண்டும். கிறிஸ்துவ அறிவிக்க மொழி தெரிய வேண்டும். எனவே, மொழியைக் கற்றார்கள். கற்ற மொழியைக் கற்பித்தார்கள். தமிழ் அரிச்சுவடி, சொற்களஞ்சியம், இலக்கண நூல், மக்களின் சமூக வாழ்வியல் குறித்த செய்திகள் எனப் பல நூல்கள் எழுதினார்கள்.

நற்செய்திப் பணியின் தொடர்ச்சியாகக் கல்விப் பணியை முன்னெடுத்தார்கள். அவர்கள் நடத்திய இலவசப் பள்ளிக்கூடங்கள், அங்கு பின்பற்றப்பட்ட கால அட்டவணை, கற்பிக்கப்பட்ட பாடத்திட்டங்கள், ஆண்களுக்கான பள்ளிகள், பெண்களுக்கான பள்ளிகள் எனப் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் கிறிஸ்தவத் தூதுவர்கள் மேற்கொண்ட கல்விப்பணிகள் மகத்தானவை. இப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியுடன் சமயக் கல்வியும், டேனிஷ், போர்ச்சுகீசு மொழியும் கற்பிக்கப்பட்டன. கல்வி மறுக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்டிருந்த மக்களுக்கும் கல்வி வழங்குவதில் அக்கறை காட்டினார்கள். ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கக்கூடிய பள்ளிகள், தங்கும் விடுதிகளுடன்கூடிய பள்ளிகள், மாணவர்களுக்கு இலவச உணவு, உடை, மருத்துவ உதவிகள் வழங்கும் திட்டம் எனப் பல பணிகளை மேற்கொண்டார்கள்.

பிற்காலத்தில் தமிழகத்தில் நற்செய்தி அறிவிக்க வரக்கூடியவர்களுக்கு உதவவும், அவர்களைத் தயார்படுத்தவும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் தமிழை ஒரு பாடமாகப் பயிற்றுவிக்க அவர்கள் முயற்சியை மேற்கொண்டார்கள்.

கிறிஸ்தவத் தூதுவர்கள் தமிழக மருத்துவம், நோய் தீர்க்கும் மூலிகை ஆகியவைகளைக்குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள்.ஏனென்றால், இங்கு தூதுவர்களாக வந்தவர்கள் பலர் இளம் வயதிலேயே மரித்தார்கள். இங்கு நிலவிய தட்பவெப்ப நிலை, உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை ஆகியவை அவர்களுக்குப் புதிது. எனவே, பல ர் உடல்நலம் குன்றி இளமையிலேயே மரித்தார்கள். இந்தப் பிரச்சினைத் தீர்க்க அவர்கள் நோய் தீர்க்கும் மூலிகைகளைத் தேடினார்கள்; தமிழ் மருத்துவத்தைக்குறித்த சுவடிகளைச் சேகரித்தார்கள். தங்களுக்குத் தெரிந்த மருத்துவத்தைக்குறித்த அறிவை தாங்கள் நடத்திய பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குக் கற்பித்தார்கள்.

முடிவுரை

சீகன்பால்க் இந்தியாவுக்கு வந்த காலத்தில் தமிழ்மொழியைக் கார்மேகம் சூழ்ந்திருந்தது. தமிழ் மொழி இலக்கியம் தேக்கத்தில் ஆழ்ந்திருந்தது. அதனால் தமிழகத்தின் அரசியல், பொருளாதாரம், சமுதாயம் அனைத்தும் வளர்ச்சியில் குன்றிப்போயிருந்தன. சீகன்பால்க்போன்ற கிறிஸ்தவத் தூதுவர்களின் வரவால் தமிழ் மொழி இருளிலிருந்து ஒளிக்கு வந்தது. வடமொழியின் துணையின்றி தமிழ்மொழியால் தனித்து இயங்கமுடியாது என்ற கூற்றைப் பொய்யாக்கியவர் சீகன்பால்க். தமிழ்மொழியின் தனித்துவத்தையும், அதன் மதிப்புவாய்ந்த இலக்கியங்களைத் தமிழர்கள் மட்டும் அல்ல, மேலை நாட்டவர்களும் அறியும்படி அதைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு அடித்தளமாக இருந்தவர் சீகன்பால்க். இவருடைய முயற்சியால் அழிந்துபோகவிருந்த பல்வேறு ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு ஜெர்மன் இலக்கியநடையான உரைநடை முறையில் நிறுத்தல் குறிகளோடு எழுதப்பட்டு, பதிப்பிக்கப்பட்டு, அச்சிடப்பட்டன. இவருடைய மொழி விடுதலைப் பணியால் உரைநடை இலக்கியத்துக்குப் புதிய உந்து சக்தி கிடைத்தது. நிலவியல், அறிவியல், வரலாறு, சிறுகதைகள், முதலிய துறைகள் தமிழில் இடம் பெற்றன.

முதல் இந்திய சீர்திருத்தத் தூதுவரும், முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளருமான பர்த்தலோமேயு சீகன்பால்க் தமிழ் மொழியில் முழு வேதாகமத்தையும் ஆர்வத்தோடு மொழிபெயர்த்துக்கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராதமுறையில் அவர் காலமானார். 1719, 23 பெப்ரவரி, தன் 36ஆவது வயதில், மனைவியையும், இரண்டு மகன்களையும் விட்டுவிட்டு தரங்கம்பாடியில் தன் பூமிக்குரிய பயணத்தை முடித்தார். அவருடைய உடல் தரங்கம்பாடியில் அவர் கட்டிய “புதிய எருசலேம்” ஆலயத்தில் பலிபீடத்தின்முன்பாக அடக்கம்செய்யப்பட்டது.

இவர் இந்தியாவுக்கு வந்த முதல் சீர்திருத்தத் தூதுவர்;.அரசின் உரிமைபெற்ற முதல் தூதுவர்; முதன்முதலாக இந்தியாவில் சீர்திருத்த சபை நற்செய்தியைப் பரப்பியவர். இந்தியாவில் முதல் காகித ஆலை நிறுவியவர். புதிய ஏற்பாட்டை முதன்முதல் தமிழில் மொழிபெயர்த்தவர். புதிய ஏற்பாட்டை முதன்முதல் தமிழில் அச்சிட்டவர். தமிழ் நாட்காட்டியை முதன்முதல் அச்சிட்டு வெளியிட்டவர். ஜெர்மன் ஞானப்பாடல்களை முதன்முதல் தமிழில் அச்சிட்டவர். தமிழ் நூல்களை முதன்முதல் ஜெர்மன் மொழியில் அச்சிட்டவர். தமிழ் உரைநடையை முதன்முதல் அறிமுகப்படுத்தியவர். முதன்முதல் பெண்களுக்குப் பள்ளி ஆரம்பித்தவர். முதன்முதல் ஏழைப்பிள்ளைகளுக்காகக் காப்பகத்தை ஆரம்பித்தவர். முதன்முதல் பெண்களுக்காகத் தையல்பள்ளி ஆரம்பித்தவர். முதன்முதல் இலவச மதிய உணவு வழங்குவதைத் தொடங்கியவர். முதன்முதல் பள்ளிப்பிள்ளைகளுக்கு பாடநூலை அச்சிட்டவர். முதன்முதல் தமிழ் புரொட்டஸ்டண்ட் ஆலயத்தைக் கட்டியவர். முதன்முதல் தமிழ் மொழியில் பிரசங்கம் செய்தவர். முதன்முதல் இறையியல் கல்லூரியை நிறுவியவர். முதன்முதல் பல சமய உரையாடலை ஆரம்பித்தவர்.. முதன்முதல் தமிழ் அகராதியை உருவாக்கியவர். முதன்முதல் தென்னிந்தியக் கடவுள்களின் வரலாற்றை எழுதியவர். முதன்முதல் மிஷனரி பணியில் பன்னாட்டு உறவை உருவாக்கியவர். முதன்முதல் ஜெர்மனியில் தமிழைக் கற்றுக்கொடுக்கப் பரிந்துரைத்தவர்.

எருசலேம் இலவசப் பள்ளிக்கூடத்தைத் தொடக்கியவர்; தரங்கம்பாடியில் 1712ம் ஆண்டு அச்சகத்தை நிறுவியவர்; தமிழ் மொழியைக் கடமைப்பாட்டுடன் கற்றுத் தமிழ் இலக்கண நூற்களை இலத்தீன், ஜெர்மானிய மொழிகளில் எழுதியவர்; தமிழ் மொழியின் சிறப்பினையும் தமிழக மக்களின் இலக்கிய இலக்கண மேன்மையும், வாழ்வியல் கூறுகளையும் ஐரோப்பாவில் விரிவாக அளித்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

இந்தியாவுக்குக் கிறிஸ்தவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்போருக்கு இது பதிலாக அமையட்டும்.

சீகன்பால்கின் மேற்கோளோடு நான் முடிக்கப்போகிறேன்.:“நான் கொஞ்சக்காலம்தான் இந்தப் பூமியில் வாழ்வேன் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். எனவே,என் இலக்கை நோக்கி நான் வேகமாக ஓடினேன். என் உடல்நலத்தில் கவனம்செலுத்துமாறு பலர் கடிதங்கள்வாயிலாகவும்,இன்னும் பலர் நேரடியாகவும் வலியுறுத்தினார்கள்,நினைப்பூட்டினார்கள்; எனினும்,நீண்ட காலம் மோசமான வாழ்க்கை வாழ்வதைவிட,குறுகிய காலம் நல்ல வாழ்க்கை வாழ்வது சிறந்தது என்று நான் நினைத்தேன்.”