Transcribed from a message spoken in April, 2013 in Chennai
By Milton Rajendram
தேவனுக்கு ஒரு நித்திய நோக்கம் உண்டு. தேவனுக்கு நித்தியமான ஒரு தரிசனம் உண்டு. கடந்த நித்தியம் தொடங்கி வருகின்ற நித்தியம்வரைக்கும் தேவன் தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்தப் பிரபஞ்சத்தில் வேலைசெய்து கொண்டிருக்கிறார்.
“தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்” (எபே. 1:12). நாம் கிறிஸ்துவினிடத்தில் வந்தது அல்லது நாம் இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்தது ஒரு விபத்தல்ல. அவர் தம் தரிசனத்தைப் பூமியில் நிறைவேற்றுவதற்காக ஏற்ற காலத்தில் அவர் தம் பிள்ளைகளைச் சந்திக்கிறார். அவர் பழைய ஏற்பாட்டில் சந்தித்த மனிதர்கள் அல்லது புதிய ஏற்பாட்டில் சந்தித்த மனிதர்கள் அல்லது இன்று அவர் சந்திக்கின்ற எல்லா மனிதர்களையும் அவர் தம் தரிசனத்தை நிறைவேற்றுவதற்காகச் சந்திக்கிறார். ஏதோ ஒரு பெரிய கூட்டத்திலே பத்தோடு பதினொன்று என்பதற்காக அல்ல. தேவன் நம்மை அப்படிப் பார்ப்பதேயில்லை. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தேவனுடைய பார்வையில் மிகவும் விலையேறப்பெற்றவர்கள், விசேஷித்தவர்கள்.
தேவனுடைய தரிசனத்தை அல்லது திட்டத்தை மனிதன் தன் மனதைவைத்து அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்வதில்லை. ஓர் எறும்பு மனிதனுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம். ஒருவேளை ஓர் எறும்பு தரையில் இருந்துகொண்டு, “சரி, இவன் தூங்கிக்கொண்டிருக்கிறான். பத்து நிமிடத்தில் கடகடவென்று ஏறி இவனுடைய தலைக்குப் போய்விடலாம். அதன்பின் அவனுடைய மனதில் என்ன இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவது மிகவும் எளிமையான காரியம்,” என்று நினைக்கக்கூடும்.
எப்படி ஓர் எறும்பு மனிதனை ஏறெடுத்துப்பார்த்து, மனிதனுடைய மனதில் என்ன இருக்கிறது என்று சொல்லமுடியாதோ, அதுபோல ஒருவன் லண்டன் பக்கிங்காம் அரண்மனைக்குமுன் நின்று, தலையை இங்கும் அங்கும் திருப்பிப் பார்த்துவிட்டு, “எனக்கு பக்கிங்காம் அரண்மனையைக்குறித்து எல்லாம் தெரியும்,” என்று சொல்ல முடியாது. அதனுடைய நீளம், அகலம், உயரம் எல்லாவற்றையும் சுற்றிப்பார்க்கும்போதுதான், “ஓ! இதுதான் இந்த அரண்மனையைக் கட்டியவரின் மனதில் இருந்த உருவமா?” என்று சொல்லத் தோன்றும்.
தேவன் தம் இருதயத்தில் என்ன தரிசனத்தை, என்ன திட்டத்தை, என்ன நோக்கத்தை, வைத்திருக்கிறார் என்பதைச் சாதாரண மனிதர்களாகிய நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். அவர் தெரியப்படுத்துவதை, வெளிப்படுத்துவதைப் புரிந்துகொள்வதற்கு அவர் நமக்கு ஆவியைக் கொடுத்திருக்கிறார். “தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்” (1 கொரி. 2:12). ஒளிபரப்புகிற முனையிலும் antenna வைத்திருக்கிறார்கள்; பெறக்கூடிய முனையிலும் antenna வைத்திருக்கிறார்கள். பெறக்கூடிய முனையில் வைத்திருக்கிற antenna ஒளிபரப்புகிற முனையில் வைத்திருக்கிற antennaவைப்போல் அவ்வளவு பெரியதல்ல. ஆனால், பெறக்கூடிய முனையில் வைத்திருப்பதும் antennaதான்.
தேவன் ஆவியானவராக இருந்து காரியங்களை வெளிப்படுத்துகிறார். தேவன் வெளிப்படுத்துபவைகளைப் புரிந்துகொள்வதற்கு, அறிந்துகொள்வதற்கு, அதே ஆவியானவரை நமக்கும் தந்திருக்கிறார். ஆவியானவர் இல்லாமல் தேவனுடைய மனதை, தேவனுடைய இருதயத்தை, தேவனுடைய திட்டத்தை, நோக்கத்தை, தரிசனத்தை, புரிந்துகொள்வது கடினமான காரியம். நாம் தேவனுடைய ஆவியைப் பெற்றிருக்கிறோம். “நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல் தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியைப் பெற்றோம்.” “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை. காது கேட்கவுமில்லை. அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” (1 கொரி. 2:7). “ஆனால் தேவனோ அவைகளைத் தம் ஆவியினாலே வெளிப்படுத்தினார்.” மனிதனுடைய புத்திசாலித்தனத்தினாலே தேவனுடைய மனதை, தேவனுடைய இருதயத்தை, புரிந்துகொள்வது கடினம்.
இந்த 20ஆம் நூற்றாண்டில் எவ்வளவோ உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒளி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பரவுகிறது என்று இப்போது சொல்லுகிறார்கள். 19ஆம் நூற்றாண்டுவரை வாழ்ந்தவர்களுக்கு இப்படிப்பட்ட எண்ணம் உதிக்கக்கூட இல்லை.
அதுபோல, தேவனுடைய திட்டம் ஜென்மசுபாவமான மனிதர்களுடைய இருதயத்தில் உதிக்கக்கூட இல்லை. அதை இயற்கையான மனிதனால் அல்லது இயற்கையான மனதினால் புரிந்துகொள்ளவே முடியாது. தேவன் அவைகளைத் தம் ஆவியினால் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இதைத்தான் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் கூறுகிறார்: “இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.”
இதைப் பரிசுத்த ஆவியானவர் செய்வார். அவர் நம்மை தேவனுடைய நித்திய நோக்கத்தின் நீளம், அகலம், உயரம் ஆகியவைகளுக்குள் கொண்டுசெல்கிறார்.
எளிய வார்த்தையில் சொல்வதானால், “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்,” என்பதுதான் தேவனுடைய நித்திய நோக்கம் (ரோமர் 8:29). “அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28). என்ன நன்மை? அவருடைய முதல் குமாரனுடைய ஒத்தசாயலுக்கு பல குமாரர்களை ஆக்குவதுதான் நன்மை.
இதை நம்மிலும் செய்கிறார், நம்மைக்கொண்டும் செய்கிறார். நம்மை தேவனுடைய முதற்பேறான குமாரனுடைய சாயலுக்கு ஒத்தசாயலாக்குவது வரைபடத்தின் ஓர் அச்சு என்றால், மற்றவர்களைத் தேவனுடைய முதற்பேறான குமாரனுடைய சாயலுக்கு ஒத்தசாயலாக்குவதற்கு நம்மைப் பயன்படுத்துவது வரைபடத்தின் இன்னொரு அச்சு. அது நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பது. தம் பிள்ளைகளை முழு உலகத்துக்கும், மற்ற பிள்ளைகளுக்கும் ஆசீர்வாதமாக மாற்ற வேண்டும் என்பது தேவனுடைய எண்ணம்.
தேவன் ஆபிரகாமை அழைத்தார். “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி. 12). நீ மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பாய். இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தசாயலாக நாம் வளர்வது ஆசீர்வாதம். நாம் யார்யாரோடு தொடர்புகொள்ளுகிறோமோ அல்லது யார்யார் நம்மோடு தொடர்புகொள்ளுகிறார்களோ அவர்களும் இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தசாயலாக மாறுவது நாம் அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பது. நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறோமா என்பது நான் ஆசீர்வதிக்கப்படுகிறோமா என்பதற்கு ஒரு பரிசோதனை. இல்லையென்றால் நாம் முட்டாள்களின் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருப்போம். நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாறுகிறேனா என்பதுதான் கர்த்தர் என்னை ஆசீர்வதிக்கிறாரா இல்லையா என்பதற்கு லிட்மஸ் சோதனை.
தேவனுடைய தரிசனம் சமம் தேவனுடைய நோக்கம், தேவனுடைய திட்டம். எல்லா மனிதர்களும் தேவனுடைய சாயலிலே உண்டாக்கப்பட்டார்கள். ஒருவேளை அந்த சாயல் இன்று உடைந்திருக்கலாம். ஆனாலும், அவர்களுக்குள் தேவனுடைய சாயல் இருக்கிறது. நன்மை செய்ய வேண்டும் அல்லது நல்லவனாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் தேவனுடைய சாயலிலிருந்து வருகிறது. அவர்களுக்கு உண்மையிலேயே நாம் கிறிஸ்துவைக் காண்பிக்கும்போது, கிறிஸ்துவைக் கொடுக்கும்போது, கிறிஸ்துவை வழங்கும்போது அவர்கள் பசி தாகத்தோடு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள். சொல்லப்போனால் இதைத்தவிர தேவனுடைய தரிசனம், தேவனுடைய திட்டம், தேவனுடைய நோக்கம் வேறொன்றுமில்லை.
நம்மைக் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக்குவதும், ஒரு கூட்டம் மக்களை கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக்குவதற்கு அல்லது அவர்களுக்குள் கிறிஸ்துவை வளர்ப்பதற்கு, கொண்டுசெல்வதற்கு, உருவாக்குவதற்கு நம்மை அவர் பயன்படுத்துவதுமே தேவனுடைய நித்திய இலக்கு, நித்திய நோக்கம், நித்தியத் தரிசனம். இந்தக் கண்ணோட்டத்தில் நாம் முழு வேதாகமத்தையும், புதிய ஏற்பாட்டையும் வாசித்தால் நாம் தேவனுடைய மனதையும், தேவனுடைய இருதயத்தையும் பார்க்க முடியும்.
சபை என்பது இதுவேதவிர வேறல்ல. கிறிஸ்து நமக்குள் வளர்வது. நாம் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தசாயலாகுவது. கிறிஸ்து என்ற அச்சு நமக்குள் இருக்கிறார். கிறிஸ்து வெளியே இருக்கிற அச்சு அல்ல. அவர் உள்ளே இருக்கிற அச்சு. புறம்பான அச்சு நம்மெல்லாருக்கும் தெரியும். புறம்பே இருக்கிற அச்சுக்குள் எதையாவது ஊற்றினால் அது அந்த அச்சின் சாயலுக்கு ஒத்தசாயலாகிவிடும். புறம்பேயிருந்து ஓர் அழுத்தத்தைக் கொடுத்து அதை அச்சின் வடிவத்துக்கு ஒத்ததாக மாற்றிவிடலாம். ஆனால், நமக்குள் இருக்கும் தேவனுடைய ஜீவன் உள்ளான அச்சு. இந்த அச்சு எப்படி வேலை செய்யுமென்றால் உள்ளேயிருந்து வெளியே ஓர் அழுத்தத்தைக் கொடுக்கும். அதன் விளைவாக, உள்ளே இருக்கிற கிறிஸ்து என்ற அச்சின் அழுத்தம் இருக்கும்போது, நம்முடைய எல்லாப் பகுதிகளிலும், அதாவது நம்முடைய எண்ணங்கள், தீர்மானங்கள், உணர்ச்சிகள், ஆசைகள், நடை, உடை, பாவனை, சுவைகள், மனப்பாங்குகள் எல்லாமே கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தசாயலாகும். இது ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டிருக்கிற ஒரு செயல். இதைப் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே செய்கிறார்.
ஒரு கூட்டம் மனிதர்கள்மூலமாக இயேசுகிறிஸ்துவை வெளியாக்க வேண்டும். ஒரு கூட்டம் மனிதர்களுக்குள் இயேசுகிறிஸ்துவை வைத்து வெளியாக்குவதுதான் தேவனுடைய திட்டம்.
மனிதர்கள் சுற்றி இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து நடுவில் இருக்கிறார் என்பதல்ல. நான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபோது, நான் ஒரு பாத்திரம் என்றும், என் இருதயத்தில் ஒரு சிங்காசனம் இருக்கிறது என்றும், அதில் ராஜாவாக இயேசுகிறிஸ்து அமர்ந்திருக்கிறார் என்றும் நினைத்தேன். அப்படியல்ல. அவர் நமக்குள் இருப்பது நம்மோடு ஒன்றாக இணைந்துதான் தம்மை வெளியாக்க முடியுமேதவிர இரண்டாக இருந்து வெளிப்படுத்த முடியாது. அதற்கு அவர் தருகிற உவமைகள், அவர் திராட்சைச்செடி நாம் கிளைகள். செடி ஒரு குறிப்பிட்ட இடத்தில் முடிந்து கிளைகள் இங்கு ஆரம்பிக்கின்றன என்று நாம் பிரிக்கமுடியாது. செடியும் கிளைகளும் ஒன்று. செடிதான் கிளைகள். கிளைதான் செடி. செடியும் கிளைகளும் ஒரே ஜீவனால் ஒரே கனியைத் தருகின்றன. இதுதான் இயேசுகிறிஸ்துவுக்கும் நமக்கும் உள்ள உறவு. நாம் கிறிஸ்துவோடு ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறோம்.
இந்த விருப்பத்தை தேவன் ஆதிமுதல் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். “ஒரு கூட்டம் மக்களோடு, மனிதர்களோடு, நான் இணைந்து அதன்மூலம் நான் என்னை வெளியாக்க விரும்புகிறேன்.” அதுதான் தேவன் மோசேக்குக் கொடுத்த கூடாரம். இஸ்ரயேல் மக்கள் சுற்றிலும் பாளயம் இறங்கியிருக்கிறார்கள். “நடுவில் எனக்கு ஒரு கூடாரம் அமைப்பாயாக.” ஏனெனில், தேவன் மனிதர்கள் மத்தியில் தம்மை வெளியாக்க விரும்புகிறார். மனிதர்களுக்குள்ளிருந்து, மனிதர்கள்மூலமாய், மனிதர்களுக்கு அவர் தம்மை வெளியாக்க விரும்புகிறார்.
தேவனுடைய மகிமை என்றால் 1000 வாட் மின்விளக்கு என்று நாம் கற்பனை செய்யக்கூடாது. இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது தேவனுடைய மகிமை. எங்கெல்லாம் தேவனுடைய நற்பண்புகள்–தேவனுடைய அன்பு, பரிசுத்தம், நீதி, ஒளி, சந்தோஷம், சமாதானம், இளைப்பாறுதல் வெளியாக்கப்படுகிறதோ–அது தேவனுடைய மகிமை.
தேவன் கூடாரத்தைக் கொடுத்தபோது கூடாரத்தின் எல்லா விவரங்களையும் அவர் மோசேக்கு விளக்கிக்காண்பிக்கிறார். இந்தக் கூடாரம் இயேசுகிறிஸ்துவுக்கு அடையாளமாக இருக்கிறது. ஏனென்றால், “அவர் கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார்,” என்று யோவான் 1:14 கூறுகிறது. ‘வாசம்பண்ணினார்’ என்பதற்கான கிரேக்க வார்த்தையை ‘கூடாரமிட்டார்’ என்று மொழிபெயர்ப்பது சரியாக இருக்கும்.
மோசேக்குக் காண்பித்த கூடாரம் ஓர் அடையாளம். உண்மையான கூடாரம் இயேசுகிறிஸ்து. கூடாரத்தின் ஒவ்வொரு விவரமும் இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு விவரத்தோடும் பொருந்தும். கூடாரத்தில் இருந்த உடன்படிக்கைப்பெட்டி இயேசுகிறிஸ்து; உடன்படிக்கைப்பெட்டிக்குள் இருந்த பொற்பாத்திரம் அது பிதாவின் தெய்வீக சுபாவம்’ உள்ளே இருந்த மன்னா இயேசுகிறிஸ்து நமக்கு உணவாக இருக்கிறார் என்பதற்கு அடையாளம்; உடன்படிக்கைப்பெட்டிக்குள் இருந்த கற்பலகைகள் இயேசுகிறிஸ்து நமக்கு ஜீவப் பிரமாணமாக இருக்கிறார் என்பதற்கு அடையாளம்; உள்ளே இருந்த துளிர்த்த கோல் இயேசுகிறிஸ்து மரணத்தினூடாய்ச் சென்று உயிர்த்தெழுந்து நமக்கு ஜீவனாக இருக்கிறார் என்பதற்கு அடையாளம். கூடாரத்தின் ஒவ்வொரு விவரத்தையும் நாம் இயேசு கிறிஸ்துவின் விவரத்தோடு பொருத்திப்பார்க்க முடியும். கூடாரம் அடையாளம். இயேசுகிறிஸ்து நிஜம்.
கூடாரத்தின் விவரங்களை மட்டும் அவர் காட்டவில்லை. யாத்திராகமம் 31ஆம் அதிகாரத்தைப் பாருங்கள். “நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருனுடைய மகனான ஊரியின் குமாரன் பெசலேயைப் பேர்சொல்லி அழைத்து, விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும், வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும், இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும் மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனைத் தேவ ஆவியினால் நிரப்பினேன். மேலும் தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாதின் அகோலிபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமின்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன். நான் உனக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்” (யாத். 31:2-6). மோசேக்கு அந்தக் கூடாரத்தின் ஒரு மாதிரியைக் காண்பித்தது மட்டுமல்ல, அகோலியாப், பெசலேய் ஆகிய இருவரையும் கொடுத்து அவர்களை ஞானம் புத்தி அறிவு ஆகியவைகளால் நிரப்புவதாகச் சொன்னார்.
இந்த விவரங்கள் அடங்கிய ஒரு புத்தகம் பெலிஸ்தருடைய கைகளில் கிடைத்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். உடன்படிக்கைப்பெட்டியைக் கட்டுவது எப்படி என்றும், கூடாரத்தை உண்டாக்குவது எப்படி என்றும் அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் அதை வாசித்துப் பார்த்து, “தேவனை எப்படிக் கீழே இறக்கிக்கொண்டுவருவது என்று இப்போதே நமக்குத் தெரியும், வழிமுறை இதில் சொல்லப்பட்டிருக்கிறது. இதன்படி நாம் ஒரு உடன்படிக்கைப்பெட்டியை உண்டாக்கிவிடுவோம்,” என்று செய்திருப்பார்கள். “வேதத்தில் கொடுக்கப்பட்ட மாதிரியின்படியே அப்படியே பிசகில்லாமல் நாங்கள் உடன்படிக்கைப்பெட்டியை உண்டாக்கிவிட்டோம். தேவனுடைய மகிமை இறங்குவதுதான் பாக்கி. மக்கள் அதைப் பார்க்கக்கூடாமல் முகத்தை மூடுவதுதான் பாக்கி,” என்று சொல்லலாம். தேவனுடைய மகிமை இறங்காது. சரியான மரம், சரியான நூல், சரியான துணி, சரியான அளவு, சரியான நிறம். எல்லாவற்றையும் நாம் சரியாகப் பார்த்துப்பார்த்துச் செய்தாலும் அதனுடைய நிஜம் கட்டுமானப் பொருள் அல்ல. அதைக் கட்டுகிறவன் தேவனால் நியமிக்கப்பட்டவன். தேவனுடைய ஆவியானவர் அதை ஆரம்பிக்க வேண்டும். தேவனுடைய ஆவியானவர் அதற்கான ஞானத்தையும், புத்தியையம், அறிவையும் தர வேண்டும். தேவனுடைய ஆவியானவருடைய பலத்தினால் அது செய்யப்பட வேண்டும். தேவன் மட்டுமே அதில் மகிமையடைய வேண்டும். மனிதன் சுயநலவாதியாக அதில் ஒரு பங்குதாரராக மாறக்கூடாது. “தேவனுக்கே மகிமை. நான் கரங்களை வைத்தேன். சாத்தான் ஓடினான். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆனால், தேவனுடைய மகிமை வெளியரங்கமாவதற்குக் கருவியாக இருந்தது நான்தான். தேவனே, நீர் பார்த்துக்கொள்ளும். உதவிபெற்ற மனிதனே, நீயும் பார்த்துக்கொள்,” என்று சொன்னால் அதின் பொருள் என்ன? அவர்மேல் ஓர் அடையாளத்தைப் போட்டுவிட்டோம் என்று பொருள். “என்மூலமாக பிசாசு துரத்தப்பட்ட மனிதன், என் உதவிபெற்ற மனிதன்,” என்ற எண்ணம் அங்கு இருக்கிறதே! இது தொன்றுதொட்டு மக்கள் பயன்படுத்துகிற முறைமை.
பாகாலின் தீர்க்கதரிசிகள் இந்த முறையைப் பயன்படுத்தினார்கள். ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள். காளைகளை வெட்டி பலிபீடத்தில் வைத்தார்கள். பாட்டுப் பாடினார்கள். கொட்டு அடித்தார்கள். சுற்றிச்சுற்றி வந்து பாட்டுப் பாடினார்கள். அக்கினி இறங்கவில்லை. எலியா சாயங்காலம் வருகிறார். சுற்றி தண்ணீர் ஊற்றுகிறார். வேதாகமத்தில் எழுதி வைத்திருக்கிற அவருடைய ஜெபத்தை நாம் படித்தால் ஒரு நிமிடத்தில் படித்து முடித்துவிடலாம். ஒரு நிமிட ஜெபமா அல்லது காலையிலிருந்து சாயங்காலம்வரை ஜெபமா? எங்கே தவறு செய்தோம்? எல்லாம் சரியாகத்தான் செய்திருக்கிறோம். பலிபீடத்தைச் சரியாகத்தானே கட்டியிருக்கிறோம்.
எலிசா தேவனுடைய இருதயத்தைத் தன்னுடைய இருதயமாக்கிக்கொண்டான். மோசே தேவனுடைய இருதயத்தைத் தன்னுடைய இருதயமாக்கிக்கொண்டான். அகோலியா, பெசலேய் ஆகிய இருவரும் தேவனுடைய இருதயத்தைத் தங்களுடைய இருதயமாக்கிக்கொண்டார்கள். அதைத்தான் தேவன் பார்க்கிறார்.
பவுல் பிசாசைத் துரத்தியபோது பிசாசுகள் புறப்பட்டு ஓடின. ஸ்கேவாவின் குமாரர்கள் துரத்தினபோது ஓடவில்லை. ஏனென்றால், பவுல் இயேசுவின் இருதயத்தைத் தன் இருதயமாக்கியிருந்தார். “எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.” ஸ்கேவாவின் குமாரர்களுக்குப் புறம்பான காரியத்தில்தான் ஈடுபாடு. இயேசுகிறிஸ்துவின் இருதயத்தில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை.
சபை என்றால் என்ன? “சரியானபடி மூப்பர்கள் இருக்கிறார்கள். சரியானபடி கூட்டம் எப்படி நடக்க வேண்டும் என்று தெரிந்துவிட்டது. வேதாகமத்தை எப்படிப் படிக்க வேண்டும் என்ற சொல்லிவிட்டோம். நேர்த்தியான சபை என்பதற்கு உள்ளூர் என்ற தளம். அப்புறம் அந்தியோக்கியாவிலுள்ள சபை என்று பெயர். இப்போது எல்லாவற்றையும் வேதத்தின்படி, முறைமையின்படி சரியாகச் செய்தாயிற்று. ஒன்றேவொன்றுதான் பாக்கி. இயேசுகிறிஸ்து இறங்கிவந்து சாட்சி கொடுக்க வேண்டும். ஆசீர்வதிக்க வேண்டும்,” என்று மக்கள் காத்திருக்கிறார்கள். நடக்குமா?
திருவெளிப்பாடு 2ஆம் அதிகாரத்தில் ஆவியானவர் ஏழு சபைகளுக்கு நிருபம் எழுதுகிறார். அதில் எபேசு சபைக்கு எழுதும்போது, “உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டதையும், நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்,” என்று பல நேர்மறையான காரியங்களைக் கூறிவிட்டு ஒரு காரியம் சொல்லுகிறார். “ஆனாலும் நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு” (வெளி. 2:2-4). “ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்” (வ. 5). விளக்குத்தண்டு என்பது தேவனுடைய பிரசன்னம், கர்த்தருடைய பிரசன்னம், பரிசுத்த ஆவியானவருடைய பிரசன்னம். 1 கொரிந்தியர் 14:25: “அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.” “நான் உங்கள் மத்தியிலே வரும்போது தேவனுடைய அன்பை, தேவனுடைய சமாதானத்தை, தேவனுடைய மகிழ்ச்சியை, தேவனுடைய இளைப்பாறுதலை அநுபவித்தேன்,” என்று புதிதாக வந்த ஒருவன் சொன்னால் இதுதான் தேவனுடைய பிரசன்னம்.
பெயர் சரியாக இருக்கிறதா? தளம் சரியாக இருக்கிறதா? மூப்பர்கள் சரியாக இருக்கிறார்களா? வேதாகமத்தின்படி நியமித்திருக்கிறோமா? பாடல்கள் உபதேசத்தின்படி சரியாக இருக்கிறதா? இவைகள் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. இவைகளை சரியாகப் பண்ணக்கூடாது என்று நான் சொல்லவில்லை. இவைகளைச் சரியாகப் பண்ணவேண்டும். இப்போது மோசே வந்து, “முன்மாதிரியெல்லாம் முக்கியம் இல்லை. கூடாரத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம்,” என்று சொன்னால் தேவன் மகிமைப்படுவாரா? கூடாரத்துக்கு விவரங்கள் உண்டு. ஆனால், விவரங்களின்படி மட்டுமே கட்டின கூடாரம் என்பதால் அது தேவனை வெளியாக்கிவிடாது, வெளியரங்கமாக்கிவிடாது. முறைமை வெறுமனே மேலெழுந்தவாரியானது. கர்த்தர் அங்கு இருக்கிறாரா? பரிசுத்த ஆவியானவர் அங்கு இருக்கிறாரா? புதிய ஏற்பாட்டில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இப்படி கூறுகிறார்: “பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.” அந்திப்பலி 1, பலி 2, பலி 3, பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.
சபை என்பது நாம் ஒருவரோடொருவர் கொள்ளும் உறவிலே நான் சிறிதளவேனும் கிறிஸ்துவைப் பகிர்ந்துகொடுக்கிறேனா? நான் என் சகோதரனோடு கொண்டுள்ள இந்த உறவினாலே கிறிஸ்து அவனுக்குள் பெருக முடிகிறதா? எந்தப் பகுதியில் கிறிஸ்து குறைவுபடுகிறாரோ அந்தப் பகுதியில் நான் கிறிஸ்துவை வழங்குகிறேனா? எந்த அளவுக்கு சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துவை வழங்குகிறார்களோ அந்த அளவுக்கு அது சபை. எங்கு கடித்துக்குதறுதலும், பட்சித்தலும் இருக்கிறதோ அது சபை அல்ல. சகோதர சகோதரிகளிடம் குறை இருக்கலாம். வெளியே இருக்கிற குறைகளைப் பார்த்து நாம் சரிசெய்துகொண்டிருக்க வேண்டாம். இதற்கு அடிப்படையான கிறிஸ்து எங்கு குறைவுபடுகிறார்? அந்தக் கிறிஸ்துவை ஒருவருக்கொருவர் வழங்க நாம் தேவனிடம் ஞானத்தைப் பெற வேண்டும். கிறிஸ்துவை எப்படி வழங்குவது என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
சபை என்றால் சகோதர சகோதரிகள் ஒருவரோடொருவர் கொண்டுள்ள உறவு. “நான் மற்ற சகோதர சகோதரிகளோடு எப்படி உறவுகொள்வது, அப்படி உறவுகொள்வதால் அவர்களுக்கு உம்மை எப்படி வழங்குவது என்று எனக்குக் கற்றுத்தாரும்,” என்று நாம் ஜெபிக்க வேண்டும். மற்றவர்களுக்கு கிறிஸ்துவை வழங்குவது எப்படி என்று நமக்குத் தெரியாது.
முதலாவது, தேவனுடைய நித்திய தரிசனம் அவருடைய குமாரனை ஒரு கூட்டம் மக்களுக்குள் உருவாக்கி அவரை வெளியாக்குவது. இதைத்தவிர வேறெதிலும் அவருக்கு ஈடுபாடு இல்லை.
இரண்டாவது, தேவன் ஒவ்வொரு காலத்திலும் ஒரு முறையை, அமைப்பை, யுக்தியைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அதே அமைப்பை, முறையை, யுக்தியைப் பயன்படுத்துவதால் தேவன் அதை ஆசீர்வதித்துத்தான் ஆகவேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. இன்று பரிசுத்த ஆவியானவர் அதை ஆரம்பிக்கிறாரா? பரிசுத்த ஆவியானவர் அதில் பாரப்படுகிறாரா? பரிசுத்த ஆவியானவர் பலப்படுத்துகிறாரா? இது தேவனை மகிமைப்படுத்துமா?
மூன்றாவது, சபை என்பது நாம் ஒருவரோடொருவர் கொண்டுள்ள உறவு. இந்த உறவின் நடைமுறை விளைவுகள் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். நாம் எல்லாரும் ஒருவரிடம் ஒருவர் நீடிய சாந்தத்தோடு இருக்க வேண்டும். “உறவுகொள்வது எப்படி என்று அவருக்குத் தெரியவேமாட்டேன் என்கிறது.” நமக்கும் தெரியாது. பொறுமையோடு இருப்போம்.