Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

C.S.Lewis (1898 – 1963), known to his friends as Jack, is best known as the author of The Chronicles of Narnia, but he is also noted for his other works of fiction, such as The Screwtape Letters and The Space Trilogy, and for his non-fiction Christian apologetics, including Mere Christianity, Miracles, and The Problem of Pain. Lewis was a close friend of JRR Tolkien, author of The Lord of the Rings. Both men served on the English faculty at Oxford University. Lewis fell away from his faith during adolescence but was converted at the age of 32, owing to the influence of Tolkien and other friends, and he became an “ordinary layman of the Church of England”. Lewis’s faith profoundly affected his work, and his wartime radio broadcasts brought him wide acclaim.


சி.எஸ்.லூயிஸ்

முன்னுரை

இன்று நாம் பார்க்கப்போகிற பரிசுத்தவான் Mere Christianity, Problem of Pain, Screwtape letters, Great Divorce என முப்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதிய எழுத்தாளர், The Chronicles of Narnia என்ற வெற்றித் திரைப்படத்தின் படத்தின் கதாசிரியர், இரண்டாம் உலகப்போரின்போது பிபிசி வானொலியில் ஒவ்வொருநாளும் உரையாற்றியவர், சிறந்த பேச்சாளர், நல்ல இலக்கியவாதி, தரமான இறையியலாளர். இவருடைய நூல்கள் முப்பதுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய எழுத்துக்கள் மேடை நிகழ்ச்சிகள், வானொலி, தொலைக்காட்சி, திரைவாயிலாகவும் பிரபலமடைந்தவை. இவருடைய மரணத்திற்குப்பிறகு இன்றும் இவருடைய புத்தகங்கள் தொடர்ந்து செல்வாக்கு பெற்றுள்ளன. இவர் கிறிஸ்தவத் தன்விளக்கம், கற்பனை இலக்கியம், இலக்கிய விமரிசனம் ஆகியவைகளுக்குப் புகழ் பெற்றவர்.

ஒரு நீண்ட அறிமுகம். இவருடைய பெயர் சி.எஸ்.லூயிஸ், கிளைவ் ஸ்டேபிள்ஸ் லூயிஸ் (Clive Staples Lewis). நீங்கள் இவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருவேளை கேள்விப்பட்டிருக்கலாம். தங்கள் குழந்தைப் பருவத்தில், நார்னியா கதைகளைப் படித்தவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். The Chronicles of Narnia என்பது குழந்தைகளுக்காக எழுதப்பட்ட புதினங்களின் ஒரு தொகுப்பு. இது குழந்தைகளுக்கான ஓர் உயர்ந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது. இந்தப் புதினங்கள் 41 மொழிகளில் 12 கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன.

பிறப்பு

சரி, ஆரம்பிப்போமா? இந்த சி.எஸ்.லூயிஸ் யார்? 20ஆம் நூற்றாண்டிலும், ஏன் 21ஆம் நூற்றாண்டிலும்கூட மிகவும் செல்வாக்குமிக்கவராகக் கருதப்படும் இவரின் பின்னணி என்ன? நார்னியாவையும், கிறிஸ்துவின்பால் பலரை ஈர்க்கும்வகையில் வேறு பல இலக்கியங்களையும் உருவாக்கிய சி.எஸ்.லூயிசைப்பற்றி அறிந்துகொள்ள நாம் ஒரு நூற்றாண்டு பின்னோக்கிப் பயணிக்கப்போகிறோம்.

கிளைவ் ஸ்டேபிள்ஸ் லூயிஸ் பிறந்த அயர்லாந்து நாட்டிலுள்ள பெல்ஃபாஸ்ட் நகரத்திலிருந்து நாம் நம் கதையைத் தொடங்குவோம். இவர் 1863ஆம் ஆண்டு, நவம்பர் 29ஆம் நாள் அயர்லாந்து நாட்டிலுள்ள பெல்ஃபாஸ்ட் நகரத்தில் பிறந்தார். இவருடைய அப்பா ஆல்பெர்ட் ஜேம்ஸ், அம்மா புளோரன்ஸ் அகஸ்டா; அகஸ்டாவின் அப்பா அயர்லாந்து சபைப் போதகரான தாமஸ் ஹாமில்டன், அகஸ்டாவின் கொள்ளுத் தாத்தா பிஷப் ஹக் ஹாமில்டன், கொள்ளுப்பாட்டி ஜான் ஸ்டேபிள்ஸ். லூயிஸின் பெற்றோர் இருவரும் உயர் கல்வி கற்றவர்கள். அப்பா ஆல்பெர்ட் வழக்கறிஞர், அம்மா புளோரன்ஸ் ஒரு கணிதவியலாளர். லூயிஸ் அவர்களுடைய இரண்டாவது மகன். அவர்களுடைய முதல் மகன் வாரன். இவர் லூயிஸைவிட மூன்று வயது மூத்தவர். அப்பா ஆல்பெர்டைவிட அம்மா ஃப்ளோரன்சுக்கு லூயிசை நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன். லூயிசின் அம்மாதான் அவருக்கு இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொடுத்தார். முழுமையாகக் கற்றார் என்று சொல்ல முடியாது. ஆனால், நல்ல அடித்தளம் போட்டார் என்று சொல்லலாம்.

பெயர் மாற்றம்

லூயிசுக்கு அப்போது வயது நான்கு. அவர்களுடைய செல்ல நாய்க்குட்டி ஜாக்ஸி ஒருநாள் குதிரைவண்டியில் அடிபட்டு இறந்துபோனது. அன்றிலிருந்து லூயிஸ் ஜாக்ஸி என்ற பெயரைத் தனக்குச் சூட்டிக்கொண்டார். எல்லாரும் தன்னை ஜாக்ஸி என்றே அழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். யாராவது லூயிஸ் என்று அவருடைய உண்மையான பெயரைச் சொல்லிக் கூப்பிட்டபோது அவர் பதில் கொடுக்கவில்லை. ஜாக்ஸி என்று கூப்பிட்டால் மட்டுமே அவர் பதில் கொடுத்தார். எனவே, அன்றுமுதல் ஜாக்சி என்ற பெயரே அவருக்கு ஒட்டிக்கொண்டது. நாளடைவில் ஜாக்சி ஜாக்  ஆகச் சுருங்கிவிட்டது. காலப்போக்கில் எல்லோரும் அவரை ஜாக் என்று அழைத்தார்கள், அறிந்தார்கள். கடைசிவரை அவர் ஜாக்தான்.

அந்த நாட்களில் அயர்லாந்தில் கத்தோலிக்கர்களுக்கும் புரொட்டஸ்டன்ட்டுக்காரர்களுக்கும் இடையே ஒருவிதமான பதற்றமும், உராய்வும், உரசலும் நிலவியது. ஜாக் குடும்பத்தார் கத்தோலிக்கர்கள் அல்ல. அவர்கள் பெயரளவில் புரொட்டஸ்டன்ட்ஸ். அவ்வளவுதான். அதாவது குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு அவர்கள் மதநம்பிக்கை உடையவர்கள் இல்லை. ஆனால், கத்தோலிக்கர்களை நம்பக்கூடாது என்று லூயிஸ் தன் இளமைப் பருவத்திலேயே உணர்ந்திருந்தார். இதற்குக் குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை.

இளமைப்பருவம்

லூயிசும், வார்னியும் மிக அற்புதமான குழந்தைப் பருவத்தை அனுபவித்தார்கள். அவர்கள் இருவருடைய பெருவிரல் கொஞ்சம் வளைந்து ஊனமாக இருக்கும். எனவே, மரம் ஏறுவதுபோன்ற சில வேலைகளை இருவராலும் எளிதாகச் செய்யமுடியவில்லை; செய்யமுடியாததைக்குறித்து வருத்தப்படாமல் செய்யமுடிந்ததில் அவர்கள் மகிழ்ந்தார்கள். இருவரும் மேல்மாடியில் இருந்த சிறிய அறையில், நம் ஊரில் நாம் சொல்லுகிற பரணில், உட்கார்ந்துகொண்டு கதைகள் எழுதினார்கள். கற்பனை உலகங்களை உருவாக்கினார்கள்; சிறுவனாக இருந்தபோது, லூயிஸ் மானுடவியல் விலங்குகளால் ஈர்க்கப்பட்டார்; பீட்ரிக்ஸ் பாட்டரின் கதைகளில் அவருக்கு அலாதிப் பிரியம். எனவே, அவர் விலங்குகளை மையமாக வைத்துக் கதைகள் எழுதினார். அவருடைய கதைகளில் எலிகள், பூனைகள் பேசும், சண்டை போடும். இவ்வாறு அவர் ஒரு தனி உலகத்தை உருவாக்கினார்.

அவருடைய அண்ணன் வார்னியும் தனக்கே உரித்தான வேறொரு உலகத்தை உருவாக்கினான். அவனுடைய உலகம் நீராவி இயந்திரங்கள், ரயில்கள், தண்டவாளங்கள். இருவரும் சேர்ந்து விலங்குகள் வாழ்கின்ற பாக்ஸென் என்ற கற்பனை உலகத்தை உருவாக்கினார்கள். அந்தக் கற்பனை உலகத்தில் ஒருவரைவொருவர் தொடர்புகொள்ள முடியும், வியாபாரம் நடக்கும், போக்குவரத்து உண்டு. மனித உலகத்தில் நடக்கின்ற காரியங்களைவிட அதிகமான காரியங்கள் அங்கு நடக்கும். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மாயாஜால உலகத்தை உருவாக்கினார்கள். தனிமையின் அழகில், பரந்துவிரிந்த வீட்டில், பெரிய தோட்டங்களிலும் புல்வெளிகளிலும் விடுதலையோடு சுற்றித்திரிந்து இருவரும் தங்கள் கற்பனையில் திளைத்தார்கள். அற்புதமான இளமைப்பருவம்.

விவரிக்கமுடியாத மகிழ்ச்சி

லூயிசின் ஏழாவது வயதில் அவருடைய குடும்பம் கிழக்கு பெல்ஃபாஸ்டின் ஸ்ட்ராண்ட்டவுன் பகுதியில் உள்ள “லிட்டில் லியா” என்ற வீட்டில் குடியேறினார்கள். லூயிஸின் அப்பா தன் அந்தஸ்துக்குப் பொருத்தமான ஒரு பெரிய வீட்டை விரும்பினார். இது தாழ்வாரங்களும், கூடங்களும் நிறைந்த வீடு. இந்த வீட்டில் நிறைய புத்தகங்கள் இருந்தன. இந்த வீடு லூயிசுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்கு முக்கியமான காரணம் புத்தகங்கள். புத்தகங்களைப் படித்தார், ஆராய்ந்தார். அவருடைய கற்பனைகள் சிறகுவிரித்துப் பறந்தன.

கூடங்களும், மாடங்களும், தோட்டங்களும், புல்வெளிகளும், நூல்களும் நிறைந்த அழகிய வீட்டில் எல்லாம் அற்புதமாக இருந்தபோதும் ஏதோவொன்று குறைவுபடுகிறது என்ற உணர்வும், எண்ணமும் இந்த இளம் வயதிலேயே அவருக்குள் எழுந்தது. எல்லாம் இருந்தும் ஏதோவொன்றுக்கான ஏக்கம் அவருடைய உள்ளத்தில் இருந்தது. இந்த எண்ணத்தை, உணர்வை அவரால் அப்போது விவரிக்கமுடியவில்லை. இனம்புரியாத, விவரிக்கமுடியாத ஒரு மகிழ்ச்சி அவ்வப்போது திடீரென்று தோன்றி, தோன்றிய வேகத்திலேயே மறைந்தது.

இந்த மகிழ்ச்சியை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொண்டு அதைக் கொண்டாட வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்த மகிழ்ச்சி புறம்பான எதையும் சார்ந்ததல்ல என்றும், இது தனக்குள் எங்கோ மறைந்திருக்கும் தீராத ஆசையைத் திருப்திப்படுத்துகிற ஒரு மகிழ்ச்சி என்றும் அவர் புரிந்துகொண்டார். இந்த மகிழ்ச்சியைத் தக்கவைக்க முயன்றபோதெல்லாம் அது நழுவிப்போவதை அவர் உணர்ந்தார். இது அவருடைய கதையின் மையக் கருவாக மட்டுமல்ல, அவருடைய வாழ்நாள் முழுவதும் எல்லா அம்சங்களிலும் எதிரொலிக்கும் கருப்பொருளாகவும் மாறியது. இனம்புரியாத, விவரிக்கமுடியாத மகிழ்ச்சி, பேரின்பம், பேரானந்தம்.

அம்மாவின் மரணம்

லூயிசுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, ஒரு நாள் இரவு அவருக்குப் பயங்கரமான பல்வலி ஏற்பட்டது. “அம்மா, அம்மா” என்று கூப்பிட்டடார். அம்மா வரவில்லை. முன்பு கூப்பிட்டதைவிட இன்னும் சத்தமாக “அம்மா, அம்மா” என்று கூப்பிட்டார். அம்மா இப்போதும் வரவில்லை. அம்மா ஏன் வரவில்லை என்று அவருக்குப் புரியவில்லை. கொஞ்ச நேரத்தில், நள்ளிரவில், அவருடைய அப்பா பதற்றத்தோடு அவருடைய அறைக்குள் வந்து, “அம்மாவுக்குப் புற்றுநோய். மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்,” என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார். இதைக் கேட்ட லூயிசுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, புரியவில்லை. பயந்தான். அடுத்தடுத்த நாட்களில் அந்நியர்கள் பலர் வீட்டுக்கு வந்துபோனார்கள். வந்துபோனவர்கள் கிசுகிசுவென்று பேசினார்கள். என்ன நடக்கிறது என்று லூயிசுக்குத் தெரியவில்லை. அவருடைய அம்மாவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தது. அந்த நாட்களில் நிலவிய வழக்கத்தின்படி, அவருடைய அம்மாவுக்கு வீட்டிலேயே அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. லூயிசும் அவருடைய அண்ணன் வார்னியும் எல்லாவற்றையும் தூரத்திலிருந்து உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். தங்கள் அம்மாவைத் தாங்கள் ஏற்கெனவே இழந்துவிட்டதைப்போல் உணர்ந்தார்கள்.

அவர்கள் அவ்வப்போது ஆலயத்துக்குப் போய்வந்தபோது போதகர், “நீங்கள் தேவனிடம் ஜெபித்தால், அவர் உங்கள் ஜெபத்துக்குப் பதிலளிப்பார்,” என்று சொன்னது அப்போது லூயிசுக்கு நினைவுவந்தது. லூயிஸ் ஜெபிக்க ஆரம்பித்தார். “தேவனே, என் அம்மாவைக் குணமாக்கும்,” என்று ஊக்கமாக, உறுதியாக, ஆர்வமாக தேவனிடம் ஜெபிக்க முயன்றார். தேவனைப்பற்றிய லூயிசின் அப்போதைய எண்ணம் என்ன தெரியுமா? “தேவன் ஒரு மந்திரவாதிபோன்றவர். நமக்குத் தேவைப்படும்போது வருவார்; வந்து நமக்குத் தேவையான அற்புதத்தைச் செய்வார்; போய்விடுவார். பின்பு நாம் அவரிடம் இன்னொன்றைக் கேட்கும்வரை மறைவாக இருப்பார். மீண்டும் கேட்கும்போது வருவார்; அற்புதம் செய்வார்; போய்விடுவார்.” இதுதான் தேவனைப்பற்றிய அவருடைய அன்றைய அபிப்பிராயம். நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். சரி, தொடர்வோம்.

அவருடைய அம்மா பயங்கரமான வலியில் வேதனைப்பட்டார். அறுவை சிகிச்சையினால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. புற்றுநோய் அவருடைய உடல்முழுவதும் பரவிற்று. அவர் 1908 ஆகஸ்ட் 23இல் நித்தியத்துக்குள் நுழைந்தார். அது அவருடைய கணவரின் பிறந்த நாள். லூயிஸ் தன் அம்மாவின் சுகத்துக்காக மிகவும் ஊக்கமாக ஜெபித்தார். அவர் கேட்டது கிடைக்கவில்லை; நினைத்தது நடக்கவில்லை. ஆனால், நாம் நினைப்பதுபோல், அவர் ஏமாற்றமடையவில்லை. “கேட்டேன்; கிடைக்கவில்லை. ஜெபித்தேன்; தரவில்லை. அவ்வளவுதான். பல காரியங்களை முயற்சி செய்யும்போது சில காரியங்கள் நடக்காமல் போவது இயல்புதானே!” என்று லூயிஸ் எடுத்துக்கொண்டார். அவர் சஞ்சலப்படவுமில்லை, சங்கடப்படவுமில்லை. அவரைப் பொறுத்தவரை தேவன் ஒரு நபர் இல்லை, அவர் நீதிபதி இல்லை. அவர் நேசிப்பதற்கோ, வலி வேதனையை உணர்வதற்கோ உரிய இயல்பு உடையவர் இல்லை.

அப்பாவின் நிலைமை

அவருடைய அப்பா ஆல்பெர்ட் துக்கத்தில் மூழ்கினார். லூயிசும், வார்னியும் துக்கத்தோடு போராடினார்கள். எனவே, ஆல்பெர்ட் அவர்களையும் கவனிக்க வேண்டியதாயிற்று. லூயிஸ், வார்னியின் துக்கம் அவர்களுடைய அப்பாவின் துக்கத்திலிருந்து வித்தியாசமானது. அவர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய அம்மா உயிரோடிருந்து புற்றுநோயில் போராடிக்கொண்டிருந்தபோதே தங்கள் அம்மாவை இழந்துவிட்டதுபோல்தான் உணர்ந்தார்கள். அம்மா வலியில் துடித்தது, வலியைப்போக்க மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை, முன்பின் தெரியாத ஆட்கள் வீட்டுக்கு வந்து போதல், அமைதியான கிசுகிசுக்கள் - அப்போதே அவர்கள் தங்கள் அம்மாவை இழந்துவிட்டார்கள்.

அவர்களுடைய அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வேதனைப்பட்டுக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அவர்களுடைய அப்பா பிள்ளைகள் இருவரையும் ஒழுங்காகக் கவனிக்கவில்லை. எனவே, அப்போதே இவர்கள் இருவரும் அப்பாவைவிட்டு விலகிப்போய்விட்டார்கள். அம்மாவை உயிரோடிருக்கும்போதே இழந்துவிட்டார்கள். அப்பாவைவிட்டு அப்போதே விலகிப்போய்விட்டார்கள். எனவே, அம்மாவின் இழப்பு அவர்களுக்குப் பேரிடியாக வரவில்லை.
ஆனால், அம்மாவின் இழப்பை அப்பா ஆல்பெர்டால்தான் தாங்கமுடியவில்லை. கோபம், எரிச்சல், ஆத்திரம், அதிகமாயிற்று. காரணமின்றி கோபப்பட்டார்; நியாயமின்றி ஆத்திரப்பட்டார்; சம்பந்தமின்றி பேசினார்; தன் பிள்ளைகள் இருவரிடமும் முரட்டுத்தனமாக நடந்தார்; இதனால் ஆல்பெர்ட் தன் மனைவியை மட்டுமல்ல, தன் இரண்டு பிள்ளைகளையும் இழந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆல்பெர்ட் மிகவும் தைரியமாக இந்த நிலைமையைக் கையாண்டிருக்க வேண்டும். ஆனால், அவர் உடைந்து நொறுங்கிப்போனார். எனவே, இருவரும், அம்மாவை மட்டும் இழக்கவில்லை. அவர்களுடைய கண்களுக்குமுன் அவர்களுடைய அப்பாவும் சுக்குநூறாக உடைந்துபோய்க்கொண்டிருந்தார்.

அண்ணன் தம்பியின் நெருக்கம்

வாழ்க்கையின் இறுக்கத்தைப் போக்கி, வாழ்க்கையை இலகுவாக்க வார்னியும், லூயிசும் ஒருவரையொருவர் சார்ந்துகொண்டார்கள். அவருடைய அம்மாவின் மறைவுக்குப்பின், “என் அம்மாவின் மரணத்தோடு என் வாழ்க்கையில் எல்லா நிம்மதியும், நிர்மலமான நிலைமையும் மறைந்துவிட்டன. அன்றிலிருந்து பாதுகாப்பு, அரவணைப்பு, வெதுவெதுப்பு, கதகதப்பு, இதுபோன்ற உணர்வுகளெல்லாம் காணாமல்போயின. இவைகள் இல்லாமல் வாழ முடியும் என்ற நிலைக்கு நான் இன்னும் வளரவில்லை. என் அம்மாவின் மரணத்தினால் நான் இழந்தவை இன்னும் அதிகம். நான் ஒரு சிறு பையன். என் அப்பாவின் நல்ல குணங்கள், அவருடைய பலவீனங்கள் ஆகிய’இரண்டு சேர்ந்து இந்த இரண்டு குறும்புக்காரப் பிள்ளைகளை வளர்க்க இயலவில்லை,” என்று எழுதினார்.

ஒரு நாள் வார்னி பரணிலிருந்து ஒரு பழைய துணியையும், வீட்டிலிருந்த மரப் படிக்கட்டுகளையும்வைத்து ஒரு கூடாரம் போட்டான். அப்பா ஆல்பெர்ட் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வானில் மின்னல் மின்னியது, இடி இடித்தது. “உங்களை மூட்டை கட்டி அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும்,” என்று சத்தம் போட்டார். லூயிஸ் சிறுவனாக இருந்ததால், அப்பாவின் இந்த மிரட்டல்களை உண்மை என்று நம்பினான். அன்றிரவு லூயிஸ் தூக்கத்திலிருந்து விழித்து, பக்கத்து படுக்கையிலிருந்து அண்ணன் மூச்சுவிடும் சத்தம் கேட்கிறதா என்று பார்த்தான். கேட்கவில்லை என்று தெரிந்தவுடன், “அப்பாவும், அவனும் என்னை விட்டுவிட்டு இரகசியமாக அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார்களோ!” என்று நினைக்க ஆரம்பித்தான். “… பழைய பாதுகாப்பு இப்போது இல்லை. வேடிக்கையும் விளையாட்டும் வினையாகிவிட்டன. முன்பு பெருங்கடல்; இப்போது தனித் தீவுகள்; பெரிய கண்டம் அட்லாண்டிஸ்போல் மூழ்கியது,” என்று லூயிஸ் எழுதினார்.

வைன்யார்ட் உறைவிடப் பள்ளி

தேவையின் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை, அவருடைய அம்மா இறந்த இரண்டு வாரங்களுக்குப்பிறகு ஆல்பெர்ட் லூயிசை இங்கிலாந்தில் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் வாட்ஃபோர்டில் உள்ள வைன்யார்ட் உறைவிடப் பள்ளியில் கொண்டுபோய்ச் சேர்த்தார். அப்போது அவருக்கு வயது ஒன்பது. ஒன்பது வயதுவரை அவர் தனியார் ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்டார். லூயிசின் அண்ணன் வார்னி மூன்று ஆண்டுகளுக்குமுன்பே அந்தப் பள்ளியில் சேர்ந்திருந்தான். லூயிசும், வார்னியும் இங்கிலாந்துக்குச் சேர்ந்துதான் சென்றிருக்க வேண்டும். ஆனால், இருவரும் இங்கிலாந்துக்குத் தனித்தனியாகப் பயணம் செய்தார்கள்; நீராவிக் கப்பலிலும், பின்பு இரயிலிலும் பயணித்து பள்ளிக்கூடம் சென்றடைந்தார். இந்த நாட்களில் இதை நினைத்துப் பார்க்க முடியுமா? 500 அடி தூரத்தில் இருக்கிற பள்ளிக்குக்கூடத் தன் பிள்ளைகளைத் தனியாக அனுப்பாத பெற்றோர்கள் வாழ்கிற காலம் இது. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குத் தனியாகக் கப்பலிலும், ரயிலிலும் 9 வயது சிறுவன் பயணிக்கிறான்.

லூயிசுக்கு 9 வயது, வார்னிக்கு 12 வயது. இருவரும் அயர்லாந்திதிலிருந்து இங்கிலாந்துக்குக் கப்பலில் தனியாகப் பயணித்தார்கள். இருவரும் வருத்தப்பட்டிருப்பார்கள், பயப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை. கடுகளவும் வருத்தப்படவில்லை. மாறாக, அவர்கள் அதை விரும்பினார்கள்; வரவேற்றார்கள். அவர்கள் அந்தச் சுதந்திரத்தை விரும்பினார்கள்.

ஆல்பெர்ட் இந்தப் பள்ளியில் தன் பிள்ளைகளைச் சேர்த்ததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்தப் பள்ளியில் சேர்வது சிம்ம சொப்பனம். படித்து முடிப்பதற்குள் மூச்சுத் திணறிவிடும். இந்த உறைவிடப் பள்ளியில் என்ன செய்யவேண்டும் என்று லூயிசுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கோடை விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த வார்னி பள்ளியைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசயில்லை. அந்த உறைவிடப் பள்ளியில் மொத்தம் 20 மாணவர்கள்தான் இருந்தார்கள். இதற்கான காரணத்தை லூயிஸ் சீக்கிரம் புரிந்துகொண்டான். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு கறார் பேர்வழி. மிகக் கண்டிப்பானவர். மாணவர்கள் அவருக்கு “பெருசு” என்ற பட்டப்பெயர் சூட்டி அழைத்தார்கள். பள்ளியின் பராமரிப்பு மிகவும் மோசமாக இருந்தது. பராமரிக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். பள்ளி ஏறக்குறைய மூடுவிழா நடத்தவேண்டிய நிலையில் இருந்தது. மாணவர்கள் தங்குமிடங்களுக்குத் திரைச்சீலைகள் இல்லை. அறைகள் மிகவும் குளிராக இருந்தன. தண்ணீர் இல்லை. வாரத்திற்கு ஒருமுறைதான் குளியல். வளரும் சிறுவர்களுக்குப் போதுமான சத்தான உணவு இல்லை. ஆனால், இவைகளையெல்லாம்விட மிக மோசமான சங்கதி என்னவென்றால் தலைமை ஆசிரியர் மாணவர்களைப் பயமுறுத்தினார்; வன்முறையைக் கையாண்டார். அவருக்கு ஆத்திரம் தலைக்கேறிவிடும். ஒரு மாணவனை அடிக்கத் தலைமை ஆசிரியர் தலைதெறிக்க ஓடும்போது வகுப்பறையில் இருக்கும் மயான அமைதியை லூயிஸ் விவரிக்கிறார். இந்த மாணவன் ஆசிரியனின் அடியை அமைதியாகப் பொறுத்துக்கொண்டான். ஆனால், இறுதியில், வலி தாங்கமுடியாமல் ஓவென்று கதறினான். அழுதான். இந்தக் காட்சியை லூயிஸ் மறக்கவேயில்லை.

இந்தப் பள்ளியில் லூயிஸ் பெரிதாக எதையும் கற்றுக்கொடுக்கவில்லை. இங்கு கற்பித்தவைகளை லூயிஸ் ஏற்கெனவே தன் வீட்டில் கற்றிருந்தார். எனவே, இங்கு அவர் புதிதாக எதையும் கற்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஸ்லேட்டில் ஒரே கணக்கைப் போட்டால்கூட யாரும் கவனிக்கப்போவதில்லை என்று லூயிஸ் புரிந்துகொண்டான். சிலேட்டில் ஏதோவொன்றை எழுதியிருக்க வேண்டும். யாரும் அதை சரிபார்க்கவில்லை. எனவே, அவர் ஒவ்வொரு நாளும் ஒரே கணக்கைச் செய்தார். இவ்வாறு, இந்தப் பள்ளியில் அவருடைய காலம் வீணாய்க் கழிந்தது.

இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. இதற்கிடையில் பள்ளித் தலைமையாசிரியரின் மனநிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். இந்தப் பள்ளியில் தங்கிப் படித்த காலத்தில் குறிப்பிடத்தக்க சங்கதி எதுவும் இல்லையென்றாலும், ஒரு நல்ல காரியம் ஏற்பட்டது. அது என்னவென்றால், லூயிஸ் ஆலயத்துக்குப் போக வேண்டியிருந்தது. அங்கு வேதாகமத்தையும், கிறிஸ்துவையும் கற்பித்தவர்கள் தாங்கள் போதித்தவைகளை உண்மையாகவே விசுவாசித்தார்கள் என்று லூயிஸ் உணர்ந்தான். அது லூயிசைக் கவர்ந்தது. இந்தக் கட்டத்தில், லூயிஸ் மிகச் சிரத்தையோடும், கடமை உணர்வோடும் ஜெபிக்கவும், வேதாகமத்தை வாசிக்கவும் ஆரம்பித்தான். மதத்தின் ஈர்ப்பையும், தாக்கத்தையும் உணர ஆரம்பித்தான்.

விடுமுறை நாட்களில் வீட்டுக்குப் போனபோதும் அப்பாவுடன் உறவு சரியாகவில்லை; இடைவெளி இன்னும் அதிகமாயிற்று. ஆல்பெர்ட் இன்னும் தன் துக்கத்துடன் போராடிக்கொண்டிருந்தார். மேலும், அவர் வழக்கம்போல் தத்தளித்துக்கொண்டிருந்தார். சஞ்சலம், தவிப்பு. அவர் தன் மகன்களுடன் நெருக்கமாக இருக்க விரும்பினார். சுமூகமற்ற உறவு. எனவே, விடுமுறை நாட்களில், அவருடைய அப்பா வேலைக்காக வெளியே சென்றபோது இருவரும் மிகவும் நிம்மதியாக இருந்தார்கள். வீட்டில் அவர்கள் மட்டுமே இருந்தார்கள்.

மால்வெர்ன் கல்லூரி

உறைவிடப்பள்ளி விரைவில் மூடப்பட்டது. எனவே, லூயிஸ் பெல்ஃபாஸ்டில் அவருடைய வீட்டுக்கு அருகே இருந்த காம்ப்பெல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆனால், மூச்சுக்கோளாறினால் சில மாதங்ககளில் அந்தப் பள்ளியிலிருந்து வெளியேறினார். ஆகையால், இங்கிலாந்தின் வொர்செஸ்டர்ஷையரில் உள்ள ஹெல்த்-ரிசார்ட் நகரமான மால்வெர்னில் செர்போர்க் ஹவுஸ் என்ற ஆயத்தப் பள்ளியில் சேர்ந்து படித்தார். லூயிஸ் தனது சுயவரலாற்றில் இந்தப் பள்ளியை “சார்ட்ரஸ்” என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு லூயிஸ் சிறுவனாக இருந்தபோது பல பள்ளிகளில் படித்தார். ஒவ்வொன்றும் அவருக்குள் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் சில தாக்கங்களையும், பாதிப்புகளையும் காரியங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

லூயிஸ் புத்திசாலி, திறமைசாலி, என்று இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும். புத்தகங்கள்மேல் லூயிசுக்குத் தீராப்பசி; அவர் அசாத்தியமான கற்பனைத் திறன் கொண்டவர் என்பது ஆரம்பத்திலிருந்தே தெளிவாகத் தெரிந்தது. லூயிஸ் “சார்ட்ரஸ்” பள்ளியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தபோது அங்கு விடுதியில் தங்கியிருந்தவர்களைக் கவனித்துக்கொள்ள ஒரு மூதாட்டி இருந்தார். அவர் அங்கிருந்த பிள்ளைகளை உண்மையாகவே ஒரு தாயைப்போல கவனித்தார். தாயை இழந்த லூயிஸ் இந்த மூதாட்டியோடு ஒட்டிக்கொண்டார். இருவரும் ஆவிகளின் உலகத்தோடு தொடர்புடைய பல காரியங்களைக்குறித்து உரையாடினார்கள். அந்த மூதாட்டிக்கு புராணங்களிலும், மாயாஜால மந்திரங்களிலும் அதிக ஈடுபாடு இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட லூயிஸ் தான் சிறுவயதில் கற்றிருந்த சிறிதளவு கிறிஸ்தவத்தை முற்றிலும் கைவிட்டு நாத்திகரானார். அவரும் ஐரோப்பிய புராணக்கதைகளையும், மாயமந்திரங்களையும், தந்திரங்களையும் அதிகமாகப் படித்தார். அவைகளின்மேல் அவருக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது.

இது ஒரு புறம். இன்னொரு புறம் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர். இவர் இன்னொரு ரகம். வாலிபன். முழுக்க முழுக்க உலகப்பிரகாரமான மனிதன். ஃபேஷன், நவநாகரிகம், நாடகம், திரையரங்கம், நடிகர் நடிகைகள் - இவைகளில் அவருக்குப் பயங்கர ஆர்வம். இவரும் லூயிஸ்மேல் ஒரு பாதிப்பை ஏற்படுத்தினார். பின்னாட்களில் லூயிஸ் இவைகளை நினைத்து, “அந்த நாட்களில் நான் ஒரு வகையான போலிப் பகட்டில் வாழ்ந்தேன். ஒய்யாரம், அர்பப்பெருமை ஆகியவைகளை நாடினேன்,” என்று எழுதுகிறார்.

அப்போது லூயிஸ் தன் பதின்பருவத்தில் இருந்தார். 1913 செப்டம்பரில் லூயிஸ் மால்வெர்ன் கல்லூரியில் சேர்ந்தார். இது உயர்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் அவருடைய அண்ணன் வார்னி ஏற்கெனவே படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு அங்கு நல்ல அனுபவங்கள் கிடைத்தன. லூயிஸ் அங்கு வருவதைக்குறித்து வார்னி பரவசமடைந்தான். ஆனால், லூயிஸ் வழக்கம்போல் திணறினார். இந்தமுறை இங்கு பிரச்சினை ஆசிரியர்கள் அல்ல, மாணவர்கள். இந்தப் பள்ளி ஆசிரியர்கள் மிக நல்லவர்கள். எல்லாரும் லூயிசின் புத்திசாலித்தனத்தைப் புரிந்துகொண்டு, அவரைப் புகழ்ந்தார்கள், உற்சாகப்படுத்தினார்கள். லூயிஸ் இலத்தீன், இலக்கிய கிரேக்கு மொழிகளில் புலமை பெற்றிருந்தார். ஆனால், விளையாட்டில் சிறந்து விளங்கவில்லை. எனவே, அவர் பள்ளி மாணவர்களிடையே பிரபலமாகவில்லை.

அங்கு மூத்த மாணவர்கள், இளைய மாணவர்களை மட்டமாக நடத்தினார்கள். அவர்களிடம் வேலை வாங்கினார்கள்; சில நேரங்களில் அவர்களைக் கொடுமைப்படுத்தினார்கள். லூயிஸ் புத்திசாலியாக இருந்தபோதும், அவருடைய அப்பாவித்தனத்தின் காரணமாக மூத்த மாணவர்கள் அவரைப் பிற மாணவர்களைவிட இன்னும் அதிகமாகத் துன்புறுத்தினார்கள். மாணவர்களின் தலைவன் ஒருவன் லூயிசின் வாழ்க்கையை நரகமாக்கினான். அவனுடைய காலணிகளை மெருகேற்றச் சொன்னான். அவனுடைய அறையைச் சுத்தம்செய்யச் சொன்னான். லூயிசை ஒரு துப்புரவுத் தொழிலாளியைப்போல் நடத்தினான். இதனால் லூயிஸ் வகுப்புகளுக்கு அடிக்கடித் தாமதமாகச் சென்றார். தன் பாடங்களை ஒழுங்காகப் படிக்கமுடியவில்லை. வீட்டுப் பாடங்களை முடிக்கமுடியவில்லை. சில விளையாட்டுகளில் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டியிருந்தது. லூயிசுக்கு விளையாட்டு பிடிக்காது. எனவே, இது அவருக்கு அலுப்பை உண்டாக்கிற்று. குறிப்பாக ரஃக்பை விளையாட்டுகளில் கலந்துகொள்வதையும், அதை மகிழ்ச்சியாகக் கண்டுகளிப்பதுபோலவும், முன்னேபின்னே தெரியாத ஓர் அணியை ஊக்குவிப்பதுபோல நடிப்பதையும் அவர் வெறுத்தார். இதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சோர்ந்துபோனார்; களைத்துப்போனார். படிக்கப் போதுமான நேரம் கிடைக்கவில்லை. தொடர்ந்து படிக்க முடியவில்லை; நரக வேதனை. மூத்த மாணவர்கள் லூயிசைக் குறிவைத்துக் கொடுமைப்படுத்தினார்கள். அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் வாழ்பவனுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

இந்தப் பள்ளியின் இன்னொரு முக்கியமான பாதிப்பு என்னவென்றால் லூயிசின் நாத்திக உணர்வு அவருக்குள் வளர்ந்துகொண்டேபோனது. இந்தக் கட்டத்தில், லூயிஸ் கிரேக்க தத்துவஞானி லுக்ரேடியசின் கருத்தை ஏற்றுக்கொண்டார். தேவன் இந்த உலகத்தைப் படடைத்திருந்தால், நாம் பார்ப்பதுபோல் இது இவ்வளவு பலவீனமாகவும், தவறாகவும் இருக்காது என்பது அந்தத் தத்துவவாதியின் வாதம். லூயிஸ் முழுப் பிரபஞ்சத்தையும் மிகவும் அவநம்பிக்கையோடும், எதிர்மறையாகவும் பார்க்கத்தொடங்கினார். லூயிஸ் தன் மகிழ்ச்சியை இழந்தார்.

லூயிசால் அங்கு தாக்குப்பிடிக்கமுடியவில்லை. தாங்கமுடியாத கொடுமை. “அப்பா, என்னை இந்தப் பள்ளியிலிருந்து கூட்டிகொண்டுபோய்விடுங்கள். வேறொரு பள்ளியில் சேருங்கள்,” என்று லூயிஸ் தன் அப்பாவிடம் கெஞ்சினான். ஆனால், அவனுடைய அப்பா அவனுக்குச் செவிகொடுக்கவில்லை. அவர் தன் பிள்ளைகளின் பேச்சைக் கேட்பவர் இல்லை.

வில்லியம் கர்க்பாட்ரிக்

ஆனால், தேவனுடைய ஆசீர்வாதமோ என்னவோ தெரியவில்லை. லூயிஸ் விரும்பியது நடந்தது. வார்னியும் அங்குதான் படித்துக்கொண்டிருந்தான். ஆனால், அவனுடைய அப்பா எதிர்பார்த்ததுபோல் வார்னியும் நன்றாகப் படிக்கவில்லை. வார்னி இராணுவக் கல்லூரியில் சேர்வதற்குத் தேவையான மதிப்பெண் வாங்காமல் தேர்வில் தோற்றுப்போகும் நிலையில் இருந்தான். அப்போதுதான் அந்தப் பள்ளியின் உண்மையான தரமின்மை அவருக்குத் தெரிந்தது. ஆல்பெர்டுக்குப் பயங்கர கோபம். அவர் வார்னியை அந்தப் பள்ளியிலிருந்து விலக்கி, வில்லியம் கர்க்பாட்ரிக் என்ற தனியார் ஆசிரியரிடம் சேர்த்தார். வார்னி அவரிடம் நன்றாகப் பயின்று இறுதித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றான்.

லூயிசும் மால்வெனை விட்டு வெளியேறும் நாள் விரைவில் வந்தது. பேராசிரியர் கர்க்பாட்ரிக்கின் பயிற்சினால் வார்னி நன்கு கற்றுத் தேறியதால், லூயிசும் அவரிடம் சிறப்பாகக் கற்பான் என்று அவருடைய அப்பா நினைத்தார். ஆனாலும், கொஞ்சம் தயக்கம். எனவே, அவர், “நான் உன்னை இந்தத் தனியார் ஆசிரியர், பேராசிரியர் கிர்க்பாட்ரிக்கிடம் அனுப்ப நினைக்கிறேன். ஆனால், அது உனக்கு மிகவும் மந்தமாக இருக்கும். நீ இந்த வயதான தம்பதியிடம் கிராமப்புறத்தில் தங்கிப் படிக்க வேண்டும். விளையாட்டுகள், வேடிக்கைகள் எதுவும் இருக்காது; அதற்கு வாய்ப்பே இல்லை. பழகுவதற்கு, பேசுவதற்கு உன்னைப்போன்ற சிறுவர்கள் இருக்க மாட்டார்கள். இருக்கக்கூடிய ஒன்றிரண்டு பெரியோர்கள் மட்டுமே பேச்சுத் துணை. இந்தச் சூழ்நிலைக்கு நீ தயாரா?” என்று கேட்டார். லூயிசுக்கு மிகவும் சந்தோசம். ஆனால், தான் பரவசப்படுவதுபோல் காட்டிக்கொள்ளக்கூடாது என்று தன்னை அடக்கிக்கொண்டான். ஆழ்ந்து சிந்திப்பதுபோல் பாசாங்கு செய்துவிட்டு, கடைசியில், “சமாளித்துக்கொள்வேன்,” என்று சொன்னான்.

பேராசிரியர் கர்க்பாட்ரிக் லூயிஸ்மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இவர் ஒரு தர்க்கவாதி, அதாவது மிகவும் தர்க்கரீதியாகப் பேசக்கூடியவர். இவர் எதையும் சும்மா பேசமாட்டார். சும்மா பேசுகிறவர்களையும் விடமாட்டார். லூயிஸ் இதை மிக விரைவில் புரிந்துகொண்டார். லூயிஸ் ரயில் நிலையத்தில் இறங்கினான். அவனை வரவேற்க பேராசிரியர் கர்க்பாட்ரிக் வந்திருந்தார். முதன்முறையாக அவரைப் பார்க்கிறான். வணக்கம் தெரிவித்தபின் மிகவும் கண்ணியமாகப் பேசவேண்டும் என்பதற்காக , “நான் எதிர்பார்த்ததைவிட சர்ரே நகரம் கொஞ்சம் காடுபோல காட்சியளிக்கிறது,” என்று பணிவோடு சொன்னான். உடனே கர்க்பாட்ரிக், “நிறுத்து. சர்ரே எப்படி இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்று நீ எதிர்பார்த்தாய்? காடு என்றால் என்னவென்று வரையறுக்க முடியுமா?” என்று கேட்டார். இந்த மனிதர் தன்னைக் கேலிசெய்யவில்லை, விளையாடவில்லை என்பதையும், உண்மையாகவே தான் என்ன நினைக்கிறேன் என்பதை அறிய விரும்புகிறார் என்பதையும் லூயிஸ் புரிந்துகொண்டார். இதுதான் அவர்களுடைய முதல் சந்திப்பு. பேச்சுவாக்கில் லூயிஸ் சொல்லிவிட்டான். உண்மையில் காடு என்றால் என்னவென்று லூயிசால் வரையறுக்கமுடியவில்லை. சர்ரேயின் புவியியலைப்பற்றியோ, தாவரங்களைப்பற்றியோ அவனுக்கு ஒன்றும் தெரியாது. அப்படியிருக்க, “சர்ரே காடுபோல் காட்சியளிக்கிறது” என்று எப்படிச் சொல்லலாம்? லூயிசின் விமரிசனம் பொருளற்றது. இதுதான் பேராசிரியர் கர்க்பாட்ரிக். இப்படிப்பட்ட மனிதனோடு பழகுவதும், பேசுவதும் பலருக்குக் கடினமாக இருந்திருக்கும். ஆனால், லூயிஸ் இந்தச் சவாலை விரும்பினார். இந்தத் திடஉணவை லூயிஸ் விரும்பினார். இந்தப் பகுத்தறிவு சிந்தனையையும், உரையாடலையும் லூயிஸ் உயர்வாகக் கருதினார். எனவே, பேராசிரியரை மதித்தார். லூயிசும் விரைவில் அதே பகுத்தறிவின் பாதையிலும், தர்க்கரீதியான வழியிலும் சிந்திக்கத் தொடங்கினார். கர்க்பாட்ரிக் ஒரு நாத்திகர். இப்போது லூயிசும் அந்தப் பாதையில் பெருமிதத்தோடு பயணிக்க ஆரம்பித்தார். அந்தப் பதின்ம வயதில், அவர் தன் சிந்தனையில் மிச்சம்மீதியிருந்த மதத்தின் எல்லாத் துணுக்குகளையும் தூக்கியெறிந்துவிட்டார்.

இது லூயிசின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு பெரிய முரண்பாடு என்று சொல்லலாம். ஏனென்றால், லூயிஸ் நம் காலத்தின் மிகச் சிறந்த கிறிஸ்தவ எழுத்தாளர்களில் ஒருவராக மாறியதற்கு இந்தப் பகுத்தறிவுச் சிந்தனைதான் முக்கியமான காரணம். அவருடைய இந்தப் பகுத்தறிவின் அணுகுமுறையே தேவ மக்கள் பல ஆவிக்குரிய சத்தியங்களை எளிமையாகப் புரிந்துகொள்ளப் பேருதவியாக மாறிற்று. இந்த நாத்திகப் பயிற்சி பிற்காலத்தில் நம் அனைவருக்கும் ஆசீர்வாதமாயிற்று.

பேராசிரியர் கர்க்கினிடம் தனியாகக் கல்வி கற்றதால் இரண்டு முக்கியமான காரியங்கள் நடந்தன. ஒன்று, பள்ளிப்பருவத்தில் இருந்த போலிப் பகட்டு இப்போது லூயிசிடம் இல்லை. அது மறைந்துவிட்டது. இரண்டாவது, அவர் புத்திசாலியாக இருந்தபோதும், ஆக்ஸ்போர்ட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஏனென்றால், இதற்கு முந்தைய தேர்வுகளில் அவர் தோற்றார். ஆனால், இப்போது அவர் தேர்ச்சிபெற்றார். ஆம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. கர்க்பாட்ரிக், “உங்கள் மகன் லூயிஸ் எதிர்காலத்தில் ஓர் எழுத்தாளனாகவும், கல்வியாளனாகவும், அறிஞனாகவும் மாறுவான். அவன் வேறு எதையும் செய்யமாட்டான்,” என்று லூயிசின் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். இது உண்மை என்று லூயிசுக்குத் தெரியும்.

ஆக்ஸ்ஃபோர்டில் கல்வி

ஒரு ஏப்ரலில், கல்வியாண்டின் தொடக்கத்தில், இரயில் ஆக்ஸ்ஃபோர்ட் நிலையத்தில் வந்து நின்றது. லூயிஸ் பரவசத்தோடு கீழே குதித்தார். பல ஆண்டுகளாகத் தன் மனதில் இருந்த கற்பனை நகரத்தை, கல்வியின் தலைநகரத்தை, பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தார். நிலையத்தைவிட்டு வெளியே வந்து, கடைகளைத் தாண்டி வேகமாக நடந்தார். எல்லாம் மிகச் சாதாரணமாக இருந்தன. அங்குமிங்கும் சில குடியிருப்புகள், சில சின்ன கடைகள். அது மிகச் சாதாரணமான ஒரு நகரம்போல் தோன்றியது. “எனக்குத் தெரிந்த ஆக்ஸ்ஃபோர்ட் நகரத்தில் கோபுரங்களும், தூபிகளும் அதிகமாக இருக்கும். ஆனால், இங்கு எல்லாம் மிகச் சாதாரணமாக இருக்கின்றன. ஒருவேளை, இந்த மலையைத் தாண்டியவுடன் அந்தப் பக்கத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் நகரம் இருக்குமோ!” என்று நினைத்தபடி நடந்தார். இப்போது அங்கு சிறிய கடைகள்கூட இல்லை. எந்தக் குடியிருப்பும் இல்லை. திறந்த வெளியில் வந்து நின்றார். அப்போதுதான் தான் ஆக்ஸ்ஃபோர்ட் நகரத்திற்கு எதிர்த்திசையில் வந்திருப்பதை உணர்ந்தார். எனவே, அவர் தான் வந்த வழியில் திரும்பி நடக்க ஆரம்பித்தார். அற்புதமான கோபுரங்களையும், ஆக்ஸ்போர்டின் வெள்ளைக் கோபுரங்களையும் கண்டார். இந்தச் சம்பவம் தன் முழு வாழ்கைக்குப் பொருத்தமான ஓர் உருவகம் என்று பின்னாட்களில் அவர் புரிந்துகொண்டார்.

முதல் உலகப் போர்

1917ஆம் வருடம். ஐரோப்பாவில் போர் மூண்டது. எனவே, வரப்போகிற நாட்கள் இயல்பாக இருக்காது என்று லூயிசுக்குத் தெரியும். லூயிசுக்கு அப்போது வயது 18. அவர் விரைவில் போருக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று அவருக்குத் தெரியும். ராணுவப் பயிற்சிக்குச் சென்றார். பயிற்சியின்போது அவர் பட்டி மூர் என்ற ஒருவரைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கினார்கள், நல்ல நண்பர்களானார்கள். லூயிசுக்கு அப்பா மட்டும் இருந்தார். பட்டி மூருக்கு அம்மா மட்டுமே இருந்தார். எனவே, தங்கள் இருவரில் ஒருவர் போரில் இறந்து, இன்னொருவர் உயிரோடு இருந்தால், உயிரோடு இருப்பவர் இரு பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று இருவரும் உறுதிமொழி செய்திருந்தார்கள்.

லூயிஸ் முதலாம் உலகப் போரில் பிரான்சிற்கு அனுப்பப்பட்டார். “என் உடல் போருக்குப் போகலாம். ஆனால், என் உள்ளம் அதில் இருக்க முடியாது. ஒரு வகையில், போர் மோசமாகவும், பயங்கரமாகவும் இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். ஆனால், அது என் மேநிலைப்பள்ளி அனுபவங்களைப்போல கொடுமையாக இருக்காது. போரில் என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். பள்ளியில் என்ன நடக்கும் என்று என்னால் எதிர்பாக்கமுடியவில்லை. மேலும், போரின் கொடுமையைப் பகிர்ந்துகொள்ள அருகே கூட்டாளிகள் இருப்பார்கள். ஆனால், பள்ளியில் அதுகூட இல்லை,” என்று அவர் எழுதுகிறார்.

பின்னாட்களில் அவர் போரைப்பற்றி, “பனிக்கட்டிகள் கரைந்து காலணிகளுக்குள் கசிந்துவிடும். காலணிகளோடு ஒட்டிக்கொள்ளும். காலணிகளைக் கழற்றமுடியாது. உறையவைக்கும் குளிர், சேறு, முள்வேலி, உறங்கிக்கொண்டே நடக்கவேண்டும், பாதி நொறுங்கிய வண்டுகள்போல ஆங்காங்கே இறந்து கிடக்கும் மனிதர்கள்,” என்று எழுதுகிறார். சிலர் பயங்கரமான கம்பிகள்மேல் அல்லது மரத்தின்மேல் அல்லது சுவர்களில் சாய்ந்தவாறு இறந்துகிடந்தார்கள். எல்லாம் எதிர்மறையாக இருக்கவில்லை. நேர்மறையான காரியங்களையும் அவர் குறிப்பிடுகிறார். அவருடைய படைப்பிரிவில் ஆக்ஸ்போர்டு ஆட்கள், அவரைப்போன்ற மாணவர்கள், விவசாயிகள், சட்ட வல்லுநர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் இருந்தார்கள். பொதுவாக அவர்கள் ஒருவரையொருவர் நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். அவர்களுடைய உரையாடல் நேர்த்தியாக இருந்தது.

போரின்போது ஒரு குண்டு லூயிசைத் தாக்கியிருந்தது. அவருடைய படைப்பிரிவில் இருந்த ஒருவர் குண்டடி காயம்பட்டு இறந்தார். காயம்பட்ட லூயிஸ் இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையிலிருந்து லூயிஸ் தன் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அப்பாவோடு அவருக்கு நெருக்கமான, இனிமையான உறவு இல்லையென்றாலும், தன் அப்பா வந்து தன்னைப் பார்க்கவேண்டுமென்று அவர் விரும்பினார். மருத்துவமனையில் தனிமையை உணர்ந்தார். பயந்தார் என்றுகூடச் சொல்லலாம். அம்மா இல்லை, அப்பாவின் கரிசனை இல்லை, தனிமை, பயம், தவிப்பு. அப்பாவைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம். ஆனால், ஆல்பெர்ட் ஒரு விசித்திரமான மனிதர். அவர் பிள்ளைகளைவிட தன் வேலையையும், பழக்கவழக்கத்தையும் அதிகமாக மதித்தார். அவர் லூயிசைப் பார்க்க வரவில்லை. தன் அப்பா வரமாட்டார் என்று லூயிசுக்குத் தெரியும். அவர் போரில் பிரான்சுக்குச் சென்றபோதும் அவர் வரவில்லை. லூயிஸ் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். அந்த சமயத்தில்தான் தன் நண்பன் பட்டி மூர் இறந்துவிட்டதையும் அவர் கேள்விப்பட்டார்.

தன் நண்பனுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி, லூயிஸ் பட்டி மூரின் அம்மாவைத் தேடிக்கண்டுபிடித்து, அவரையும், அவருடைய மகள் மவ்ரீனையும் தன் வாழ்நாள் முழுவதும் கவனிக்க முடிவு செய்தார்.

மீண்டும் ஆக்ஸ்ஃபோர்டில் கல்வி

லூயிஸ் ஆக்ஸ்போர்டுக்குத் திரும்பினார். அங்கு அப்போது மிகவும் வித்தியாசமான நிலைமை நிலவியது. போருக்குப்பின் ஏற்பட்ட பாதிப்பும், இழப்பும் பிரிட்டனில் அப்பட்டமாகத் தெரிந்தது. லூயிசின் கூட்டாளிகள் பலர் இப்போது ஆக்ஸ்போர்டில் இல்லை. அவர்கள் போரில் மாண்டார்கள். லூயிஸ் ஆக்ஸ்போர்டுக்குத் திரும்பி வந்த முதல் நாளில் அங்கிருந்த ஒரு வேலையாள் லூயிசை வாழ்த்தி வரவேற்றார். எதற்காகத் தெரியுமா? லூயிஸ் போரில் சாகாமல் உயிர் பிழைத்து மீண்டும் ஆக்ஸ்போர்டுக்கு வந்ததற்காக.

லூயிஸ் தத்துவம் படித்தார். அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனாகத் தேறினார். இது மிகவும் அசாதாரணமானது. ஆயினும், அவருக்கு உடனே வேலை கிடைக்கவில்லை. எனவே, அவர் ஆங்கில இலக்கியம் படிக்க ஆரம்பித்தார். இதனால் வேலை வாய்ப்புகள் அதிகமாகும் என்று அவர் நினைத்தார். மூன்று வருடப் படிப்பதை அவர் ஒரு வருடத்தில் படித்து முடித்தார். அதிலும் அவரே முதலிடம் பெற்றார். ஆனால், இவ்வளவு பெரிய தகுதிகள் இருந்தும், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.

இந்தக் காலகட்டத்திலும், அவரைச் சுற்றியிருந்த வேறு சில மனிதர்களும் லூயிசின்மேல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். பிரபல அயர்லாந்து நாட்டுக்கு கவிஞர் W.B யீட்ஸ் அப்போது ஆக்ஸ்போர்டில் படித்துக்கொண்டிருந்தார். நாம் அவரைக் கவிஞர் என்றழைக்கிறோம். ஆனால், லூயிஸ் அவரை அப்படிப் பார்க்கவில்லை. லூயிஸைப் பொறுத்தவரை அவர் ஒரு குடிகாரன், நன்றாகப் பேசக்கூடிய ஒரு அயர்லாந்துக்காரர். W.B Yeatsக்கும் அமானுஷ்யத்திலும், சாத்தானியத்திலும், மந்திரங்களிலும் ஆர்வம் இருந்தது. லூயிசும் W.B யீட்சும் அவருடைய அறையில் அடிக்கடிச் சந்தித்து உரையாடினார்கள். லூயிசுக்கும் ஏற்கெனவே மந்திரங்களிலும், ஆவி உலகத்திலும் ஈடுபாடு இருந்ததால் இருவரும் நெருங்கிப் பழகினார்கள்,

திருமதி மூர், மூரின் அண்ணன்

திருமதி மூரையும், அவருடைய மகளையும் கவனிக்க வேண்டியிருந்ததால், லூயிஸ் அவர்களுடைய வீட்டில் குடியேறினார். இன்னும் வேலை கிடைக்கவில்லை. வறுமையில் வாழ்ந்தார். எனவே, கையிலிருந்த பணத்தை வைத்துக்கொண்டு மிகச் சிக்கனமாகவும், எளிமையாகவும் வாழ்ந்தார். வாழ்நாள் முழுவதும் அவர் இப்படியே வாழ்ந்தார். வசதி வந்தபிறகும் அவர் தன் வாழ்க்கை முறையை மாற்றவில்லை. இதன் விளைவாக அவர் சாமான்ய மக்களுடன் நெருங்கிப் பழகினார். அந்த வீட்டில் அவர் வாழ்ந்த காலம் மிகக் கடினமாக இருந்தது. அவர் திருமதி மூரை அம்மாவைப்போல் கருதினார். ஆனால், அவர் லூயிசை ஒரு வேலைக்காரனைப்போல் நடத்தினார். அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். வீட்டு வேலைகள் அனைத்தையும் அவரே செய்தார். திருமதி மூர் ஓர் எஜமானிபோல் நடப்பதாக லூயிசுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நினைத்தார்கள். பின்னாட்களில் லூயிஸ் இங்கு வாழ்ந்த நாட்களைத் திரும்பிப்பார்த்து,. “அந்த நாட்கள் நான் என் கால்களைப் பூமியில் வைத்து நடப்பதற்கும், என்னைத் தாழ்மைப்படுத்துவதற்கும் பேருதவியாக இருந்தன,” என்று கூறினார். ஆக்ஸ்போர்டில் அவருக்குப் பாராட்டு மழை; அவர் திறமையான உரையாடலாளர், சிறந்த விவாதக்காரர், வியத்தகு கல்வியாளர். ஆனால், வீட்டிற்கு வந்தபின், ஒரு சாக்கு உருளைக்கிழங்குகளைப் படிக்கட்டுகளில் தூக்கிச்செல்ல வேண்டும், வீட்டைச் சுத்தம்செய்ய வேண்டும், நெருப்புப் போடும் இடத்தைச் சரிசெய்ய வேண்டும். இப்படி எல்லா வழிகளிலும் அவர் சிறுமைப்படுத்தப்பட்டார். இந்த அனுபவங்கள் இல்லையென்றால் ஒரு சராசரி மனிதனுடைய அன்றாட வாழ்க்கையின் யதார்த்தங்களை அவரால் இவ்வளவு கூர்மையாகப் புரிந்து கொள்ள முடிந்திருக்காது; மாறாக அவர் புத்தகங்களிலேயே வாழ்ந்திருப்பார், கற்பனையிலேயே வாழ்ந்திருப்பார், ஒரு சராசரி மனிதனுடன் நேர்த்தியாக உறவுகொண்டிருக்க முடியாது.

திருமதி மூருடன் ஏற்பட்ட ஓர் அனுபவத்தின் விளைவாக லூயிஸ் மாயமந்திரத்திலிருந்து விடுதலையானார். திருமதி மூரின் சகோதரர் ஒரு மனநல மருத்துவர். அவருக்கும் இந்த மாயமந்திரத்தில் ஈடுபாடு இருந்தது. ஒருநாள் அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். லூயிஸ் அவரை சுமார் இரண்டு வாரங்கள் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் பயங்கரமான வலிப்பு வந்து, அவர், “என்னை யாரோ நரகத்திற்கு இழுத்துக்கொண்டுபோகிறார்கள்,” என்று கத்தினார். இதைப் பார்த்த லூயிஸ் ஆடிப்போனார். இதோ! தன்னைப்போல் மாயமந்திரத்தினால் ஈர்க்கப்பட்ட ஒரு மனிதன் இவ்வளவு பரிதாபமாக இருப்பதைப் பார்த்து திகைத்தார். இது நிச்சயமாக மனநலம்சார்ந்த ஒரு நோய் என்று லூயிஸ் நிதானித்து அறிந்தார். ஆயினும், அவருடைய நிலைமையைப்பார்த்து அவர் சங்கடப்பட்டார். மாயமந்திரங்களைப் பின்தொடரும் எண்ணத்தைக் கைவிட ஆரம்பித்தார்.

ஆக்ஸ்ஃபோர்டில் ஆசிரியர்

1925இல், அவருடைய 27ஆவது வயதில், லூயிஸ் ஆக்ஸ்போர்டில் உள்ள மோர்லேண்ட் கல்லூரியில் ஒரு பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த செய்தியைக் கேட்ட அவருடைய அப்பா அழுதார். அவர் முழங்காலில் நின்று தேவனுக்கு நன்றி கூறினார். ஆல்பெர்ட்டைப் பொறுத்தவரை இது அசாதாரணமான நடவடிக்கை. ஏனென்றால், அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லை. லூயிசுக்கு இப்போது நிரந்தர வேலை இருந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். இந்த ஆண்டுகளில், அவர் நிறைய விரிவுரை செய்ய வேண்டியிருந்தது. தனித்தனியே மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டியிருந்தது. பல நேரங்களில் முழு வகுப்புக்கும் பாடம் நடத்த வேண்டியிருந்தது. அவர் தத்துவம் கற்பித்ததால், தான் கற்பித்த காரியங்களில் தன் நிலைப்பாடு என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டியிருந்தது. பள்ளியில் படித்த காலத்தில் அவருக்குள் எழுந்த மகிழ்ச்சியின் உணர்வு இப்போது மீண்டும் உதித்தது. இந்த உணர்வு என்னவென்று அவர் புரிந்துகொள்ள முயன்றார். இந்த ஆழ்ந்த ஏக்கம் மீண்டும் அவருக்குள் எழுந்தது.

தேவனின் தொடர்ச்சியான வேலை

###புத்தகத்தின்மூலம் ஒருநாள் லூயிஸ் இரயில் பயணத்துக்காக நிலையத்தில் காத்திருந்தபோது புத்தகக் கடைக்குச் சென்று ஜார்ஜ் மெக்டொனால் என்பவர் எழுதிய “வீண்கனவு” என்ற ஒரு சிறு புத்தகத்தை வாங்கிப் படித்தார். இது கிறிஸ்துவைப்பற்றிய புத்தகம்தான். ஆனால், புத்தகத்தின் பெயரைப்பார்த்தால் அப்படித் தெரியாது. புத்தகத்தை மேலோட்டமாகப் படித்தாலும் கிறிஸ்துவைப் பார்க்கமுடியாது. இந்தப் புத்தகம் உருவகமாக எழுதப்பட்ட புத்தகம். லூயிஸ் அதைப் படித்தார். அந்தப் புத்தகத்தில் ஏதோவொன்று இருந்தது. அது அவருக்குள் அவ்வப்போது தோன்றி மறைந்த மகிழ்ச்சியைத் தூண்டியது. அவர், ஏதோவொரு வகையில் முதன்முறையாக பரிசுத்தத்தைச் சந்தித்ததுபோல் உணர்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் கே.செஸ்டர்டனின் பிற கிறிஸ்தவப் புத்தகங்களையும், ஜார்ஜ் ஹெர்பர்ட், ஜான் டோன் ஆகியவர்களின் கவிதைகளையும் படித்தார்.

நாத்திகனின் உரையாடலின்மூலம்

1926இல், லூயிஸ் ஆக்ஸ்போர்டில் ஒரு முரட்டு நாத்திகனுடன் உரையாடினார். ஆனால் அவர்கூட வேதாகமத்தின் நான்கு நற்செய்திகள் வரலாற்றுப்பூர்வமானவை என்று ஒப்புக்கொண்டார். இது லூயிசுக்கு அதிர்ச்சியாகவும், உறுத்துதலாகவும் இருந்தது. ஏனென்றால், வேதாகமத்தின் நற்செய்திகள் வரலாற்றுப்பூர்வமானவை என்று ஒப்புக்கொண்டால், அவை கூறும் இயேசுவை ஒதுக்கித்தள்ள முடியாதே! கிர்க்பாட்ரிக்கிடம் கற்றபடி, ஒருவன் எதை நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, அவன் நேர்மையாக, நாணயமாக, யோக்கியமானவனாக இருக்க வேண்டும், எல்லாவற்றிலும் காரண காரியங்களை அலசிப்பாக்க வேண்டும், விவேகத்தோடு சிந்திக்க வேண்டும், காரியங்களைத் திறனாய்வு செய்ய வேண்டும், முரண்பாடின்றி ஒரே சீராக யோசிக்க வேண்டும், முகத்தாட்சணியம் கூடாது , தான் விரும்பாவிட்டாலும் உண்மையை உண்மையென்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார்.

இந்த நேரத்தில் நீங்கள் லூயிசிடம், “நீர் யார்? உம் நிலைப்பாடு என்ன?” என்று கேட்டிருந்தால், “நான் ஒரு உலகத்தான். உலகத்தை ஆதாயப்படுத்த விரும்புகிறவன், உலகத்தை அனுபவிக்க விரும்புகிறவன்,” என்று சொல்லியிருப்பார். ஆம், லூயிஸ் ஓர் உலகவாதி. அவர் இந்த உலகத்தையும், உலக விஷயங்களையும் மட்டுமே நம்பினார். “மதங்களெல்லாம் மனிதர்களுக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட புராணக்கதைகள்,” என்று அவருடைய வாதம். நாத்திகனைப் பொறுத்தவரை மதம் அவனுக்குப் பாதுகாப்பானதல்ல. எல்லா நாத்திகர்களைப்போல் லூயிசும் தேவனைத் தம் எதிரியாகக் கருதினார்.

பல்கலைக்கழக நண்பர்களின்மூலம்

ஆனால், தேவன் லூயிசின் வாழ்க்கையில் தொடர்ந்து வேலைசெய்துகொண்டிருந்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் சந்தித்த பலர் கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் பல இலக்கியங்களை எழுதியிருந்தார்கள். பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நடந்தபோது மூலைமுடுக்குகளிலும், தாழ்வாரங்களிலும் திறந்து வைக்கப்பட்டிருந்த வேதாகமம் அவருடைய கண்ணில் பட்டது. அவருடைய பல நண்பர்கள் கிறிஸ்தவர்கள் அல்லது கிறிஸ்துவைத் தேடிக்கொண்டிருந்தார்கள். எல்லாப் பக்கங்களிலுமிருந்து தான் தாக்கப்படுவதை லூயிஸ் உணர்ந்தார்.

அமைதியான நேரங்களில், சிந்திக்க நேரம் கிடைத்தபோது, தேவன் தன்னை நெருங்கிக்கொண்டிருப்பதை லூயிஸ் உணர்ந்தார். அவர் எவ்வளவுதான் முயன்றபோதும், பிரபஞ்சத்தின் தேவனை அவரால் புறக்கணிக்க முடியவில்லை. ஆனால், லூயிஸ் தேவனை விரும்பவில்லை; தேவன் தன் வாழ்வில் தலையிடுவதையும், குறுக்கிடுவதையும் கடுகளவும் விரும்பவில்லை, வரவேற்கவில்லை. “என் விருப்பம் இல்லாமல் அவர் எப்படி என் வாழ்வில் குறுக்கிடலாம்?” என்பது அவருடைய கேள்வி. தேவன் தன் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதை அவர் வெறுத்தார். “என் வாழ்க்கை என் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்,” என்று அவர் சொன்னார்.

பேருந்துப் பயணத்தில்

1929, ஒருநாள் லூயிஸ் ஆக்ஸ்போர்ட் நகரப் பேருந்தில் வீட்டிற்குப் போய்க்கொண்டிருந்தார். “இதற்குமேலும் என் வாழ்வில் தேவனுக்குக் கதவைத் திறக்காமல் இருப்பது நல்லதல்ல,” என்று அவர் உணர்ந்தார். தேவன் தன் வாழ்வில் நுழைந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் தான் கதவைப் பலமாக மூடிக்கொண்டிருப்பது லூயிசுக்குத் தெரிந்தது. இந்தப் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் உணர்ந்தார். “நான் கதவைத் திறக்க வேண்டும், என் ஆளுகையைத் தளர்த்த வேண்டும்,” என்று உணர்ந்ததாக அவர் எழுதுகிறார். இதைச் செய்ய யாரும் தன்னைக் கட்டாயப்படுத்தியதாகவோ, இதைச் செய்தால் ஏதாவது வெகுமதி கிடைக்கும் என்றோ அவர் உணரவில்லை. சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவும், சத்தியத்தைவிட்டுப் பின்வாங்காமல் இருக்கவும் அவர் முடிவு செய்தார். பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும்போதே, “தேவன் தேவனே,” என்று மிக எளிமையாக முடிவுசெய்தார்.

நாத்திகர் ஆத்திகரானார்

இந்தத் தருணத்திற்குப்பிறகு, தேவன் தன் வாழ்க்கையில் எப்படி இடைப்பட்ட ஆரம்பித்தார் என்று லூயிஸ் விவரிக்கிறார். இந்த அனுபவத்துக்குப்பிறகும் தேவன் தன் எதிரி என்றே அவர் நினைத்தார். தன் வாழ்க்கையின் சில அம்சங்களாவது தன் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆயினும், கடைசியில் ஓர் இரவு தன் அறையில் தனியாக இருந்தபோது, “தேவனே நான் என்னை உமக்குக் கையளிக்கிறேன் என்று என்னை நான் ஒப்புக்கொடுத்தேன்; தேவனை தேவன் என்று ஏற்றுக்கொண்டேன்; முழங்கால்படியிட்டு ஜெபித்தேன். ஒருவேளை அந்த இரவில், இங்கிலாந்து முழுவதும் மிகச் சோர்வோடும், தயக்கத்தோடும், விருப்பமில்லாமலும் தேவனை விசுவாசித்த நபர் நானாகத்தான் இருக்கும். இப்போது மிகவும் பிரகாசமாகவும் வெளிப்படையாகவும் தெரிபவை அப்போது அப்படித் தெரியவில்லை. என் நிபந்தனைகளின்படி என்னை ஏற்றுக்கொண்ட தெய்வீகத் தாழ்மையை என்னவென்பேன்! ஊதாரி மகன்கூடக் குறைந்தபட்சம் தன் சொந்தக் கால்களால் நடந்து வீட்டிற்கு வந்தான். ஆனால் உதைத்துக்கொண்டு, போராடிக்கொண்டு, மனக்கசப்புடன் இருக்கும் ஒருவனுக்கு, தப்பித்துக்கொள்வதற்கு வாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கும் ஓர் ஊதாரிக்கு, உயரமான கதவுகளைத் திறக்கும் அன்பை யாரால் பாராட்டாமல் இருக்க முடியும்?” என்று அவர் எழுதுகிறார்.

லூயிஸ் இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தேவன் ஒருவர் இருக்கிறார் என்று ஒப்புக்கொண்டார். தேவன் தேவன்தான். எனவே, இப்போது லூயிஸ் ஒரு நாத்திகர் என்று சொல்லமுடியாது. அவ்வளவுதான். ஆனால், இயேசு கிறிஸ்துவைப்பற்றிய காரியம் என்ன?

ஆத்திகர் கிறிஸ்தவரானார்

இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. இலையுதிர்காலம். ஓர் இரவு, லூயிஸ் தன் ஆக்ஸ்போர்டு நண்பர்களைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். எல்லாரும் அவருடைய அறையில் அமர்ந்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டபின், எல்லாரும் கல்லூரி அருகே இருந்த மைதானத்தில் பேசிக்கொண்டே நடந்தார்கள். ஒருவர் ஆங்கிலப் பேராசிரியர், தத்துவ மேதை, J. R. R. Tolkien, மற்றொருவர் ஆக்ஸ்போர்டில் மற்றொரு ஆங்கிலக் கல்வியாளர் Hugo Dyson. இரவு முழுவதும் புராணக் கதைகளைப்பற்றி விவாதித்தார்கள். பின்பு நற்செய்தி, கிறிஸ்தவம், அன்பு, நட்பு, கவிதை, புத்தகம் எனப் பல காரியங்களைப் பேசினார்கள். இயேசுவைப்பற்றியும் பேசினார்கள்.

டோல்கீன் நல்ல கிறிஸ்தவர். இவர்தான் ஹாபிட், லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் (Lord of the Rings) தொடர்கதைகளை எழுதியவர். இவைகள் திரைப்படங்களாக வந்து உலகெங்கும் பெரிய வரவேற்பைப் பெற்றன. உரையாடலின்போது டோல்கீன் லூயிசிடம், “ஆம், கிறிஸ்தவத்துக்கும் புராணத்துக்கும் சில ஒற்றுமைகள் உண்டு என்பதை மறுக்கமுடியாது. ஆனால், இரண்டுக்கும் இடையேயுள்ள மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால், கிறிஸ்தவம் உண்மை. புராணம் வெறும் கட்டுக்கதை. லூயிஸ், உன் பதில்களும் எதிர்வினைகளும் சீராக இல்லை, முன்னுக்குப்பின் முரணாக இருக்கின்றன. கிறிஸ்தவத்தைக்குறித்த உன்னுடைய பார்வை பாரபட்சமானது. உன் பதில்களிலிருந்து இது தெரிகிறது,” என்று கூறினார். டோல்கீன் சொன்னவைகளை லூயிஸ் ஒப்புக்கொண்டார். லூயிஸ் அதிகாலையிலே அந்த நடைபாதையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். இந்த உரையாடல் லூயிசின் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

ஓரிரு நாட்களில் தேவன் மீண்டும் லூயிசை வேறொரு சங்கடமான முறையில் சந்தித்தார். திருமதி மூரும், அவருடைய மகளும் மிருகக்காட்சிசாலைக்குச் செல்ல விரும்பினார்கள். இராணுவத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த வார்னியும் அப்போது வீட்டுக்கு வந்திருந்தான். அவனும் அவர்களுடன்தான் வாழ்ந்துகொண்டிருந்தான். எல்லாரும் சேர்ந்து ஒன்றாகச் செல்லத் திட்டமிட்டிருந்தார்கள். அன்று கொஞ்சம் பனிமூட்டமாக இருந்தது. பெண்கள் இருவரும் கொஞ்சம் பிரச்சினை பண்ணினார்கள். மிருகக்காட்சிசாலைக்கு செல்லும் யோசனையை ஏறக்குறைய கைவிட்டார்கள். எப்படியோ ஒரு சமரசத்திற்கு வந்தார்கள். இரு பெண்களும் காரில் வருவதாகவும், வார்னி மோட்டார் சைக்கிளை ஓட்டுவதாகவும், லூயிஸ் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் இணைத்திருக்கும் இருக்கையில் அமர்ந்து வருவதாகவும் முடிவுசெய்தார்கள். இது லூயிசுக்குச் சங்கடமாக இருந்தது. இன்னொருவர் தன்னை ஓட்டுவது அவருக்குப் பிடிக்கவில்லை. மேலும், லூயிஸ் அதில் நசுக்கிக்கொண்டு உட்கார வேண்டியிருந்தது. அரைமனத்தோடு ஒப்புக்கொண்டு போனார். கண்கவர் காட்சிகளைக் கண்டுகளித்துக்கொண்டே போகையில், தேவன் மீண்டும் லூயிசிடம் பேசத் தொடங்கினார். தான் இயேசு கிறிஸ்துவைப்பற்றி ஒரு திட்டவட்டமான தீர்மானம் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை லூயிஸ் உணர்ந்தார். கடந்த இரண்டு வருடங்களாகத் தன் வாழ்க்கையில் பலர் ஏற்படுத்திய பல்வேறு தாக்கங்களை அவர் சிந்தித்தார். அவர்கள் மிருகக்காட்சிசாலையை அடைவதற்குள், லூயிஸ் இயேசுவைத் தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து இரட்சிக்கப்பட்டார். அவர் தன் வாழ்க்கையைத் தேவனிடம் ஒப்படைத்தார். அது அப்படியொன்றும் உணர்ச்சிகரமான நேரம் அல்ல. ஆனால், அவர் மிகவும் தெளிவாக இருந்தார். வீட்டைவிட்டுப் புறப்படும்போது நாத்திகராக இருந்த லூயிஸ், மிருகக்காட்சிசாலையை அடையும்போது ஆத்திகரானார். அவர் கிறிஸ்தவரானார்.

கிறிஸ்தவர் தன்விளக்கவாதியானார்

தன் பதினேழாவது வயதில், லூயிஸ் தன் நண்பன் ஆர்தர் கிரீவ்சுக்கு “நான் எந்த மதத்தையும் நம்பவில்லை. மதங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. கிறிஸ்தவத்தை ஒரு தத்துவமாகக்கூடக் கருதமுடியாது,” என்று எழுதினார். பதினைந்து ஆண்டுகளுக்குப்பிறகு, லூயிஸ் அதே ஆர்தருக்கு, “கிறிஸ்தவம் என்பது தேவன் மனுவுருவாதல், சிலுவைமரணம், உயிர்த்தெழுதல் ஆகிய ’உண்மையான நிகழ்வுகள்’மூலம் தம்மை வெளிப்படுத்துகிறார்” என்று எழுதினார். “ஷேக்ஸ்பியர் நாடகத்தின் கதாநாயகனாகிய ஹேம்லட்டால் எப்படித் தன்னை எழுதிய ஷேக்ஸ்பியரை அறிய இயலாதோ அதுபோல தேவனால் படைக்கப்பட்ட என்னால் எப்படித் தேவனை அறிய இயலும்?” என்று நாத்திக வீரவசனம் பேசியவர், ஆத்திகனாக மாறியபின் “ஹேம்லெட்டால் ஷேக்ஸ்பியரை அறியமுடியாவிட்டாலும், ஷேக்ஸ்பியர் தன்னை ஒரு கதாபாத்திரமாக எழுதி நாடகத்தில் உலவவிட்டு அந்தப் பாத்திரம் ஹேம்லட்டிடம் தன்னை வெளிப்படுத்துவதாகச் செய்வது ஒன்றும் பெரிய காரியமில்லையே; அதைத்தான் தேவன் மனிதனாக வந்து செய்துகாட்டினார்,” என்று சொன்ன ஆத்திகவாதி. “நான் வெறுமனே தேவன் ஒருவர் இருக்கிறார் என்று நம்பிக்கையையும் தாண்டி, கிறிஸ்துவை விசுவாசிக்க ஆரம்பித்துவிட்டேன்,” என்று எழுதினார்.

சிறுவயதிலிருந்தே அவருடைய வாழ்க்கையில் அவ்வப்போது தோன்றி மறைந்த அந்தப் பேரின்பம், அந்த மகிழ்ச்சி, பேரானந்தம் அவருக்குள் வந்தது! இப்போது அவர் அதைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார். அது அவர் உள்ளத்தில் உதித்தது. அவரே விளக்கியதுபோல, அடர்ந்த காட்டில் வழிதடுமாறி அலையும்போது, சற்றுத் தொலைவில் நமக்குமுன்னால் ஒரு வழிகாட்டும் பலகை இருந்தால், அது எவ்வளவு நிம்மதியாக இருக்கும்! நாம் அதை வியந்து பார்ப்போம். பலகை காட்டிய வழியில் பயணிக்கும்போது, கொஞ்ச நேரத்தில் அதுதான் சரியான பாதை என்று உறுதியானவுடன், வழிகாட்டிய பலகையை மறந்துவிடுகிறோம். அதை அங்கு நாட்டியவருக்கு நன்றி சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடக்க ஆரம்பிப்போம். அதைத் திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். அந்தப் பலகை வெள்ளியால் செய்யப்பட்டிருந்தாலும் சரி, எழுத்துக்கள் தங்கத்தால் எழுதப்பட்டிருந்தாலும் சரி, பாதையில் தொடர்ந்து பயணிப்போம். ஆம், தான் பயணிக்கும் பாதை சரியான பாதை என்று லூயிசுக்கு நிச்சயமாகத் தெரியும். தான் மகிழ்ச்சியின் ஊற்றைநோக்கிச் செல்வதும் அவருக்குத் தெரியும். ஆம், லூயிசின் கிறிஸ்தவப் பயணம் தொடங்கியது.

எழுத்துப் பணி

லூயிசுக்கு இப்போது வயது 30 இருக்கலாம். அவர் கிறிஸ்தவ நூல்கள் எழுதத் தொடங்கினார். முதலாவது, அவர் தன் மனமாற்றத்தைக் கருப்பொருளாக வைத்து Pilgrim’s regress என்ற நூலை உருவகமாக எழுதினார். இதைத் தொடர்ந்து, அவர் The Space Trilogy என்ற அறிவியல் புனைகதை, Out of the Silent Planet, Mere Christianity, Problem of Pain, Screwtape letters, Great Divorce, Ministering Angels, The Allegory of Love: A Study in Medieval Tradition, The Abolition of Man, Miracles, The Four Loves, எனப் பல நூல்கள் இயற்றினார்.

கிறிஸ்தவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது கண்மூடித்தனமாகச் செய்யவேண்டிய பக்திச் செயல் அல்ல. மாறாக ஆராய்ந்து உய்த்துத் தெளிந்தபின் ஏற்றுக்கொள்ளவேண்டிய பகுத்தறிவுக்கு உட்பட்டதே என்பதை அவரை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளலாம். அதைத்தான் அவரும் வலியுறுத்தினார். லூயிசின் புத்தகங்கள் வாசிக்க சற்றுக் கடினமான பழைய ஆங்கில நடையுடன் இருந்தாலும் அவை வாசித்தே தீரவேண்டிய அருமையான தத்துவார்த்தமான கிறிஸ்தவ நூல்கள்.

தாழ்மை என்பது ஒருவன் தன்னைக்குறித்து மட்டமாக நினைப்பதல்ல; ஒருவன் தன்னைப்பற்றி குறைவாக நினைப்பதே தாழ்மை என்று அவர் நினைத்தார். நாம் விட்டுச் செல்லும் பல விஷயங்களைவிட, மேலான, மிகவும் மேலான பல நமக்காக் காத்துக்கொண்டிருக்கின்றன. தேவன் தம்மைத்தவிர நமக்குத் தர சமாதானம், மகிழ்ச்சி என்று தனியாக வேறு எதுவும் இல்லை. ஏனெனில் தேவன் தம்மையே நமக்குத் தருகிறார். இந்த அண்டசராசரமும் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றால், எந்த அர்த்தமும் இல்லை என்பதைக் கண்டறியவேண்டிய அவசியமும் இல்லை!

ஆக்ஸ்ஃபோர்டில் இலக்கிய மன்றம்

லூயிஸ் ஆக்ஸ்போர்டில் பணிபுரிந்த வேறு பல ஆசிரியர்களோடும், எழுத்தாளர்களோடும், நண்பர்களோடும் சேர்ந்து இங்க்லிங்ஸ் என்ற ஒரு முறைசாரா இலக்கிய விவாதக் குழுவைத் தொடங்கினார். இது 1930களின் முற்பகுதியிலிருந்து 1949இன் பிற்பகுதிவரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்கள் இயங்கியது. இந்தக் குழுவில் ஜே.ஆர்.ஆர். டோல்கீன், சி.எஸ். லூயிஸ், மிகவும் பிரபலமான சார்லஸ் வில்லியம்ஸ், இலண்டன்வாசி ஓவன் பார்ஃபீல்ட், லூயிசின் அண்ணன் வார்னி போன்ற பல எழுத்தாளர்களும், பேராசிரியர்களும் பங்குபெற்றார்கள். இந்த இலக்கிய ஆர்வலர்கள் புனைகதைகள் தொடர்பான நூல்களை உயர்வாக மதித்தார்கள்; கற்பனைக் கதைகள் எழுதுவதை ஊக்கப்படுத்தினார்கள், ஒவ்வொருவருடைய எழுதும் திறமையைக் கூர்மையாக்கினார்கள், எழுதிய எழுத்துக்களை விமரிசித்தார்கள். ஒருவர் தான் எழுதிய ஒரு அதிகாரத்தை இந்தக் குழுவில் வாசித்துவிட்டுத் தப்பிக்கமுடியாது. விமரிசனங்களும், கேள்விக்கணைகளும் பறக்கும். எடுத்துக்காட்டாக, டோல்கீன் நார்னியா கதையை ரசிக்கவில்லை. “இது என்ன ஒழுங்கீனமான இடம்! குள்ளர்கள், பல வடிவத்தின் மனிதர்கள், பேசும் நாய்கள், - இவைகளெல்லாம் ஒரே இடத்திலா?” என்று டோல்கீன் கிண்டலடித்தார். ஆனால், லூயிஸ் டோல்கீனின் ஹாபிட் கதையை இரசித்தார், மதித்தார். எல்லாரும் ஒருவரைவொருவர் உற்சாகப்படுத்தினார்கள். டோல்கீன் the Lord of the Rings கதையை எழுதிமுடிக்க லூயிஸ் உற்சாகப்படுத்தினார், உதவினார்.

இரண்டாம் உலகப்போர்

இந்த நேரத்தில் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். ஏற்கெனவே முதல் உலகப் போரைச் சந்தித்த தலைமுறையினர் இப்போது இரண்டாம் உலகப் போருக்குள் தள்ளப்பட்டார்கள்.

போரினால் லூயிசின் பணி முற்றிலும் மாறியது. எல்லா மாணவர்களும் ஆசிரியர்களும் ஆக்ஸ்போர்டைவிட்டு வெளியேறி போருக்குச் சென்றார்கள். லூயிஸ் ஊர்க்காவல் படையில் சேர்ந்தார். போரின்போது போர் விமானிகளைச் சந்தித்து அவர்களோடு பேசுகிற வேலை லூயிசுக்கு கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் நாட்டிற்குள் பயணம் செய்வது கடினம், ஆபத்தானது. லூயிஸ் நாடெங்கும் பயணம்செய்தார். பிரிட்டனின் மிகச் சிறந்த, பிரகாசமான வாலிபர்கள் பயத்தில் உறைந்திருந்தார்கள். இந்த விமானிகள் ஒரு நாளில் சராசரியாக 13முறை விமானம் ஓட்டவேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் தங்களின் கடைசி நாளாக இருக்கலாம் என்ற கொடூரமான உண்மை அவர்களுக்குத் தெரியும். இவர்களைத் தட்டியெழுப்ப, உற்சாகப்படுத்த வேண்டிய பொறுப்பு லூயிஸ் தலைமேல் விழுந்தது. அவர்களுக்கு உரையாற்ற வேண்டும். அவர்களுக்குப் புரிந்த மொழியில் பேச வேண்டும் என்று அவர் சீக்கிரம் கற்றுக்கொண்டார். ஆக்ஸ்போர்டில் பல ஆண்டுகள் பேராசிரியராக விரிவுரையாற்றியிருந்தும், பயிற்சிகள் பெற்றிருந்தும் பல்வேறு பின்புலத்திலிருந்து வந்த பலதரப்பட்ட வாலிபர்களுக்கு உரையாற்ற ஆக்ஸ்போர்ட் கல்வி போதுமானதல்ல என்று அவர் சீக்கிரத்தில் புரிந்துகொண்டார். லூயிஸ் முதன்முறை அவர்களுக்கு உரையாற்றியபோது, மோசமாகப் பேசினார். ஆனால், அவர் எதையும் விரைவாகக் கற்றுக்கொள்பவர். அவர்கள் எப்படிச் சிந்தித்தார்கள், எதை நம்பினார்கள் என்பதை அறிய அவர்களோடு நெருங்கிப் பழகினார். விளக்கப்படங்களைத் தெளிவாக விளக்குவதற்கும், தன் மொழி நடையை மாற்றுவதற்கும் அவர் பயிற்சிசெய்தார்.

இது அவருடைய அடுத்த பணிக்கான ஆயத்தம் என்று அப்போது லூயிசுக்குத் தெரியாது. லூயிசின் problem of pain என்ற புத்தகம் பிரிட்டன் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அவருடைய பெயர் பிரபலமாயிற்று. அந்தப் புத்தகம் பிபிசியின் மதஒலிபரப்புத் துறையைச் சேர்ந்த ரெவரெண்ட் வெல்ச் உட்பட பலரின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் பிபிசி வானொலியில் தொடர்ந்து பேச வருமாறு லூயிசை அழைத்தார்கள்.

  1. அது போரின் மிக முக்கியமான நேரம். ஒவ்வொரு இரவும் பிரிட்டனின் பொதுமக்கள்மேல் ஜெர்மனி குண்டுமழை பொழிந்தது. ஒரு குண்டு பிபிசி நேரடி ஒலிபரப்பின்போது விழுந்தது.

லூயிசுக்கு வானொலியில் உரையாற்றிய முன்அனுபவம் இல்லை; ஆயினும், அவர் பேச ஒப்புக்கொண்டார். 15 நிமிடங்கள்தான் பேச வேண்டும். இந்தப் பதினைந்து நிமிட உரை எவ்வளவு வெற்றிகரமாக மாறும் என்று அவருக்குத் தெரியாது. எல்லாருக்கும் ஏற்றாற்போல் பேச வேண்டும். அவருடைய உரை ஹோம் சர்வீஸ் சேனலில் பதிவு செய்யப்பட்டது. போர் முனையில் இருந்த இராணுவ வீரர்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. நாடு முழுவதும் எல்லா வீடுகளுக்கும், உணவகங்களிலும் ஒலிபரப்பப்பட்டது. அன்று அது ஒரு தனி உலகம், வித்தியாசமான உலகம். பிபிசி போன்ற ஒரு முக்கிய ஒலிபரப்பு நிலையம் லூயிசை அணுகி கிறிஸ்தவத்தையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும்பற்றிப் பேசச் சொல்லுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? பேச அழைத்தார்கள். லூயிஸ் பேசினார். அந்த நேரத்தில் பிரிட்டனுக்கு அதுதான் தேவைப்பட்டது.

பிபிசி வானொலியில் உரை

லூயிஸ் மிக விரைவாகக் கற்றுக்கொண்டார். அவர் தான் பேசும் பாணியை வானொலிக்கு ஏற்றவாறு மாற்றினார். அவர் ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ ஸ்தாபனத்தாருக்கு உரையாற்றவில்லை; அவர் எல்லாருக்கும் ஏற்றாற்போல் கிறிஸ்தவத்தையும், கிறிஸ்துவையும் வழங்கினார். அதுபோல் அவர் எல்லாரையும் கிறிஸ்துவிற்கு நேராக நடத்தினார். இதில் அவர் உறுதியாக இருந்தார். “நான் ஓர் இறையியலாளர் அல்ல, நான் உங்களைப்போல் ஒரு சாதாரண விசுவாசி. நான் சமீபத்தில்தான் கிறிஸ்துவைக் கண்டேன்,” என்று மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.

அவருடைய இந்த உரைகள் விரைவில் சிறிய புத்தகங்களாக வெளியிடப்பட்டன. பின்னர் அவை ஒன்றாகத் தொகுக்கப்பட்டு பெரிய புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தின் பெயர் mere Christianity.

போருக்குப்பின் லூயிஸ் மிகவும் பிரபலமானார். அவர் வானொலியில் ஆற்றிய உரையினால் மட்டுமல்ல, வானொலி உரை புத்தகமாக வெளியிடப்பட்டதால் மட்டுமல்ல, போரின்போது அவர் எழுதி வெளியிட்ட ஸ்க்ரூடேப் கடிதங்கள் என்ற இன்னொரு புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது ஒரு தனித்துவமான புத்தகம். இதுபோன்ற புத்தகம் இதற்குமுன் வெளிவரவில்லை. உண்மையில், இன்னும் வரவில்லை என்றுகூடச் சொல்லலாம். இது அசுத்த ஆவிகள் ஒருவருக்கொருவர் எழுதுகிற கற்பனைக் கடிதங்களின் ஒரு தொகுப்பு. ஒருவன் மனந்திரும்பி கிறிஸ்தவனாக மாறுவதை எப்படித் தடுக்க வேண்டும் என்றும், ஒருவேளை அவன் கிறிஸ்தவனாகிவிட்டால், அவன் தேவனுடனான உறவை வளர்த்துக்கொள்வதைத் தடுப்பது எப்படி என்றும் ஒரு மூத்த பிசாசு ஓர் இளைய பிசாசுக்கு அறிவுரை கூறுகிற புத்தகம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை அவர் ஒரு பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது இந்தப் புத்தகத்தைப்பற்றிய எண்ணம் அவருக்கு வந்தது. பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவருடைய மனம் பிரசங்கத்தில் கவனம் வைக்காமல் அலைந்துகொண்டிருந்தது.

இந்தப் புத்தகம் வெளிவந்தபின் லூயிஸ் அமெரிக்காவிலும் மிகவும் பிரபலமானார். இதன் விளைவாக அவருடைய பிற புத்தகங்களும் அமெரிக்காவில் வெளியிடப்பட்டன. லூயிஸ் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு மேற்கத்திய நாடுகளில் பிரபலமானார். லூயிஸ் தனக்குள் இதை எதிர்த்துப் போராடினார். “இது சரியில்லை,” என்ற எண்ணம் அவருக்குள் ஆழமாக இருந்தது. அவர் விரைவில் ஓர் அறக்கட்டளையை நிறுவினார். புத்தக விற்பனையினால் வந்த நிதியனைத்தையும் அந்த அறக்கட்டளையின் கணக்கில் வைத்து, பிறருக்கு மிகவும் தாராளமாகக் கொடுத்தார். போருக்குப்பிறகு நிறைய விதவைகள் இருந்தார்கள், குடும்பத் தலைவனை இழந்த ஏராளமான குடும்பங்கள் இருந்தன. அவர்களுக்கு எல்லா நிதியையும் வாரிக்கொடுத்தார்.

ஜாய் டேவிட்மேன்

காலங்கள் உருண்டோடுகின்றன. 1952. லூயிசுக்கு இப்போது வயது 50க்குமேல் இருக்கும். இன்னும் திருமணமாகவில்லை. அவரும், அவருடைய அண்ணன் வார்னியும் சேர்ந்து வாங்கிய kilns என்று அழைக்கப்பட்ட ஒரு வீட்டில் லூயிஸ் வாழ்ந்தார். திருமதி மூரும், அவருடைய மகளும் இங்குதான் வாழ்ந்தார்கள். திருமதி மூர் இறந்துவிட்டார். அவருடைய மகள் திருமணமாகி வேறு வீட்டுக்குச் சென்றுவிட்டார். எனவே, லூயிசும் வார்னியும் மட்டுமே அங்கு வசித்தார்கள்.

லூயிசுக்குப் பலர் கடிதங்கள் எழுதினார்கள். ஒருநாள் ஓர் அமெரிக்கப் பெண்ணிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அவருடைய பெயர் ஜாய் டேவிட்மேன். அவர் ஒரு யூதப் பெண். அவர் லூயிசின் சில கருத்துக்களை ஆட்சேபித்து கடிதம் எழுதியிருந்தார். லூயிஸ் அவருடைய ஆட்சேபணைகளுக்கு விரிவாகப் பதில் எழுதினார். ஜாய் டேவிட்மேனின் சந்தேகங்கள், கேள்விகள், ஆட்சேபணைகள் எல்லாம் சுக்குநூறாகப் போயின. அதற்குமேல் பேசுவதற்கோ, வாதாடுவதற்கோ ஒன்றுமே இல்லை.

இந்த ஜாய் டேவிட்மேன் ஒரு யூதப்பெண் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். இவர் ஒரு நாத்திகர், கல்வியாளர், எழுத்தாளர், ஆரம்ப நாட்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும், தொண்டராகவும் இருந்தார். திருமணமானவர்; ஆனால், அவருடைய திருமண வாழ்வில் பெரும் புயல் வீசிக்கொண்டிருந்தது. எனவே, இவர் தன் வாழ்க்கையின் பொருளைத் தேடிக்கொண்டிருந்தார். வாழ்க்கை, திருமணம், மதம், கிறிஸ்தவம் தொடர்பான சில புத்தகங்களைப் படித்து கொஞ்சம் தெளிவடைந்தார். இறுதியில், அவர் கிறிஸ்துவிடம் திரும்பி கிறிஸ்தவரானார்.

அவருடைய திருமணம் முறிந்துகொண்டிருந்தது. அவருடைய கணவர் தொடர்ச்சியாக அவருக்குத் துரோகம் செய்து வந்தார். அவர் ஒரு குடிகாரர், முரடர், வன்முறையாளர். இப்படிப்பட்ட ஒரு கணவனோடு வீட்டில் தங்குவது பாதுகாப்பானது அல்ல என்று அவர் முடிவுசெய்தார். மேலும் அவருடைய உடல்நிலை அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை. அவருக்கு இரண்டு குழந்தைகள். எனவே, அவர் அமெரிக்காவிலிருந்து வெளியேறி இலண்டனில் வாழும் தன் நண்பர்களுடன் இருக்க முடிவுசெய்தார். அப்போது ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருந்தார், ஆராய்ச்சியும் செய்துகொண்டிருந்தார்.

அவர் இலண்டனுக்குச் சென்றார். அங்கு, “நம் உரையாடலைத் தொடர்வதற்கும், என் புத்தகத்தையும், ஆராய்ச்சியையும்பற்றிப் பேசுவதற்கும் நான் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்,” என்று லூயிசுக்கு ஒரு செய்தி அனுப்பினார். இருவரும் சந்தித்துப் பேசினார்கள்.

ஜாய் இலண்டனில் தங்கியிருந்தபோது, “நான் உன்னை விவாகரத்து செய்ய விரும்புகிறேன். அதற்கான ஆவணங்களை அனுப்பியுள்ளேன்,” என்று அவருடைய கணவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ஆவணங்களில் உரிய கையெழுத்திட்டு அனுப்பினார். இதற்குப்பிறகு ஜாய் இங்கிலாந்தில் தொடர்ந்து தங்க அரசாங்கத்துக்கு விண்ணப்பித்தார்.

இதற்கிடையில் அவர் லூயிசைப் பலமுறை சந்தித்தார். அவர்கள் நன்றாகப் பழகினார்கள். அவர்கள் இருவரும் பல காரியங்களில் ஒரே மாதிரியான எண்ணமும், கருத்தும் கொண்டவர்கள் என்று போகப்போகத் தெரிந்தது. கடைசி நிமிடத்தில், ஜாயின் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஏனென்றால், அவர் அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டராக இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தார்கள். இப்போது ஜாய் இருதலைக்கொள்ளி எறும்புபோல் மாட்டிக்கொண்டார். அவருடைய இரண்டு பையன்கள் அமெரிக்காவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. தங்களுடைய மோசமான அப்பாவுடன் வாழவேண்டும் என்ற எண்ணத்தை அவர்களால் தாங்கமுடியவில்லை. ஆனால், அதைத்தவிர வேறு என்ன வழி?

இந்தக் காலகட்டத்தில், ஜாயும் லூயிசும் மிகவும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டார்கள். அவர் தன் அறக்கட்டளையின் நிதியிலிருந்து அவர்களுக்கு ஆதரவளித்தார். பிள்ளைகளின் படிப்புக்கும் அவர் உதவிசெய்தார். லூயிஸ் இதுபோல் அவர்களுக்கு நிறைய உதவிகளை மிகவும் தாராளமாகச் செய்தார். லூயிஸ் மிகவும் தாராளகுணமுடையவர். எங்கோவொரு தேவை இருக்கிறது என்று தெரிந்தால், அந்தத் தேவைக்கு ஓடோடிச் சென்று உதவுவார். அது உண்மையில் பெரும்பாலானவர்களின் வழக்கத்திற்கு மாறானது. பணம், பொருள்போன்ற வளங்களைப் பிறருக்குக் கொடுப்பதைத்தவிர, அதைப்பற்றி வேறு எந்தக் கருத்தும், சிந்தனையும் அவரிடம் இருக்கவில்லை.

லூயிஸ் ஜாய்க்கு ஓர் அசாதாரணமான உதவிசெய்ய முடிவுசெய்தார். ஒருநாள் அவர் ஜாயிடம், “நீங்கள் இந்த நாட்டில் தங்குவதற்கு ஒரு வழி இருக்கிறது. நான் உங்களைத் திருமணம்செய்துகொண்டால் நீங்கள் இங்கு தங்கலாம். உங்களைவிட நான் 14 வயது மூத்தவன் என்று எனக்குத் தெரியும். நீங்கள் ஒரு நல்ல வாலிபனைத் திருமணம்செய்ய முடியும். உண்மையில் இந்தக் கருத்தையும், என்னைத் திருமணம்செய்வதையும் நீங்கள் விரும்புகிறீர்களா என்று எனக்குத் தெரியாது. நீங்கள் விரும்பாவிட்டாலும் நீங்கள் இங்கு தங்கவேண்டும் என்பதற்காக நம் திருமணத்தைச் சட்டத்தின்படி பதிவுசெய்வோம். பின்பு, நீங்கள் அதை ரத்துசெய்யலாம் அல்லது ரத்துசெய்யலாம்,” என்றார்.

இது லூயிசின் ஞானமான முடிவுபோல் தோன்றினாலும், திருமணத்தைப்பற்றிய அவருடைய கண்ணோட்டம் தவறு என்று நிரூபித்தது. தான் ஜாயை உண்மையாகவே நேசிக்கிறேனா? எந்த அளவுக்கு நேசிக்கிறேன்? ஜாய் உண்மையாகவே தன்னை விரும்புகிறாளா, நேசிக்கிறாளா என்று லூயிசுக்குத் தெரியவில்லை. இருவரும் 1956இல் நாட்டின் சட்டப்படி பதிவுத் திருமணம் செய்தார்கள். ஜாய் தன் இரண்டு பையன்களுடன் தொடர்ந்து இங்கிலாந்தில் தாங்கினார். திருமணத்திற்குப் பிறகுதான் இருவருக்குமிடையே உண்மையான காதல் மலர்ந்தது.

அவருடைய இரண்டு பிள்ளைகள் லூயிசை அதிகமாக நேசித்தார்கள்; அவருடன் அதிக நேரம் செலவிட்டார்கள். இளையவன் டக்ளஸ்தான் லூயிசின் மரணத்திற்குப்பிறகு அவருடைய எழுத்துக்களைத் தொகுத்து வழங்கினார். இதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஒரு நாள் ஜாயின் கால் திடீரென்று வளைந்ததுபோல் இருந்தது. கீழே விழுந்தார்; பரிசோதனையில் அவருடைய தொடை எலும்பின் ஒரு பகுதி நொறுங்கியிருந்தது தெரியவந்தது. அத்தோடு நின்றிருந்தால்கூட பரவாயில்லை. அவருடைய முழு உடலிலும் எலும்புப் புற்றுநோய் பரவியிருப்பது கூடுதல் பரிசோதனையில் தெரியவந்தது. லூயிஸ் உடைந்துபோனார், துக்கத்தில் அமிழ்ந்தார், வேதனையில் அமைதியானார். ஜாயின் நிலைமை நாளுக்குநாள் மிக வேகமாக மோசமானது. படுத்த படுக்கையானார். இந்த நெருக்கடிதான் லூயிஸ் ஜாயை எவ்வளவு உண்மையாக நேசித்தார் என்பதை உணர வைத்தது. அவர் இப்போது ஜாயை முறையாக, தேவனுடைய அன்பின் ஆசீர்வாதத்தின்படி, தேவ பிரமாணத்தின்படி, திருமணம் செய்ய விரும்பினார். திருமணத்தை நடத்த உடனே மருத்துவமனைக்கு வருமாறு தன் மரியாதைக்குரிய ஒரு ரெவெரெண்ட் நண்பரை அழைத்தார். அவருடைய ஒரு சில நண்பர்கள் மருத்துவமனையில் ஒரு சிறிய அறையில் கூடினார்கள். இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது லூயிஸ், “சுகத்திலும், சுகவீனத்திலும், நோயிலும் ஆரோக்கியத்திலும் நான் உன்னைப் பாதுகாத்துப் பராமரித்துப் போஷித்துக் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதியளிக்கிறேன்,” என்று உறுதியளித்தார். மருத்துவமனையில் திருமணம், வாக்குறுதி.

ஜாய் விரைவில் குணமடைய வேண்டும் என்று வந்திருந்தவர்கள் ஊக்கமாக ஜெபித்தார்கள். ஆனால், மருத்துவர்களுக்குக் கடுகளவு நம்பிக்கைகூட இல்லை. அவர் வீட்டில் சமாதானத்தோடு கண்ணைமூடட்டும் என்று எண்ணத்தோடு அவர்கள் ஜாயை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பினார்கள்.

லூயிஸ் kilnsஇல் ஜாய்க்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்தார். ஜாய் எதைப்பற்றியும் கவலைப்படக்கூடாது என்பதில் அவர் மிகக் கவனமாக இருந்தார். இரண்டு பையன்களையும் தன் சொந்தப் பிள்ளைகளைப்போல் பார்த்துக்கொண்டார்.

ஆச்சரியம் என்னவென்றால், ஜாய் குணமடையத் தொடங்கினார். மருத்துவர்கள் முன்னறிவித்தபடி, அவர் சுயநினைவை இழக்கவில்லை. மாறாக, நல்ல உணர்வடைந்தார், பலமடைந்தார். விரைவில், படுக்கையைவிட்டு எழுந்தார், ஒரு கம்பின் துணையோடு நடக்க ஆரம்பித்தார். விரைவில் தோட்டத்தைச் சுற்றிவர ஆரம்பித்தார். பின்னர் லூயிசும் வார்னியும் பல ஆண்டுகளுக்குமுன்பு செய்திருக்க வேண்டிய பல வீட்டுக் காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினார். வீட்டிலிருந்த அனைவருக்கும் சிறந்த உணவைச் சமைக்க ஆரம்பித்தார். இது அற்புதம் இல்லையென்றால் வேறு எது அற்புதம்! இது அற்புதமே என்று லூயிஸ் உணர்ந்தார். மருத்துவர்கள் ஜாயைப் பரிசோதித்துப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள் நினைத்ததுபோல் நிலைமை மோசமடையாமல், அவருடைய எலும்புகள் மிகவும் பலமாக இருந்தன. ஜாய் இன்னும் கொஞ்சகாலம் உயிரோடு இருப்பார் என்பதை அறிந்து லூயிஸ் மகிழ்ச்சியடைந்தார்.

உண்மையில், இந்த நேரத்தில் லூயிசின் உடல்நிலைதான் மோசமாக இருந்தது. அவருக்கு சிறுநீரகக் கோளாறும், முதுமையின் காரணமாக எலும்புகள் மெலிதாகும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயும் இருந்தன. இருவருக்கும் வாழ்க்கையில் ஒத்த கருத்துக்கள் மட்டுமல்ல, ஒத்த நோயும் இருப்பதை நினைத்து சிரித்தார். இருவரும் ஒரே பாரத்தைச் சுமந்தார்கள். தான் பலவீனமாகவும், ஜாய் பலமாகவும் இருப்பதுபோல் லூயிஸ் உணர்ந்தார். தாங்கள் சேர்ந்து வாழும் ஒவ்வொரு மணித்துளியையும் இந்தப் பலவீனமான ஜோடி நேசித்தார்கள், பாராட்டினார்கள். வாழ்க்கை எவ்வளவு தற்காலிகமானது என்பது அவர்களுக்குத் தெரியும். பூமியில் தேவன் தங்களுக்குக் கூடுதலாகத் தந்திருக்கும் நேரத்திற்காக அவருக்கு நன்றி சொன்னார்கள்.

ஜாய்க்கு விரைவில் மீண்டும் புற்றுநோய் திரும்பியது. வந்த வேகத்தில், ஜாயின் வாழ்க்கை மறைந்தது. இது லூயிஸை உலுக்கியது. மீண்டும் அவர் ஆழ்ந்த துயரத்தில் அமிழ்ந்தார். ஆனால், இந்த முறை அவரிடம் விசுவாசம் இருந்தது. அவருடைய விசுவாசம் பலமாக இருந்தது. “நாம் சிற்றின்பத்தைக்கூட புறக்கணிக்க முடியும். ஆனால் வலி ‘நான் இருக்கிறேன். என்னைக் கவனி’ என்று வலியுறுத்திக்கொண்டேயிருக்கிறது. தேவன் நம் சிற்றின்பங்களில் நம்மிடம் கிசுகிசுக்கிறார், நம் மனச்சாட்சியில் பேசுகிறார், ஆனால் நம் வலிகளில் கதறுகிறார். வலி காதுகேளாத உலகத்தைத் தட்டியெழுப்புகிற அவருடைய மெகாஃபோன், ஒலிபெருக்கி” என்று லூயிஸ் எழுதுகிறார்.

ஜாய் மறைந்தவுடன், லூயிஸ் A Grief Observed என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். இது அவருடைய சொந்தப் பயணம், இது அவருடைய தனிப்பட்ட அந்தரங்க வாழ்வின் வலி. துக்கத்தை அவர் எப்படி ஏற்றுக்கொண்டார் என்ற கதை. இந்தப் புத்தகத்தின் முடிவில், “ஜாய் நித்தியத்துக்குள் நுழைந்த அந்த நேரத்தில், அந்தத் தருணத்தில், அந்த நொடியில், அந்தக் கணத்தில், புன்னகை பூத்தாள்,” என்று எழுதுகிறார். அந்தப் புன்னகை நித்தியத்தைப்பார்த்த புன்னகை, அந்தப் புன்னகை பூமியைவிட்டு நித்தியத்தைப்பார்த்த புன்னகை, அந்தப் புன்னகை உயிரின் வாழ்வின் ஆதாரத்தையும், ஊற்றையும் பார்த்த புன்னகை என்பதை லூயிஸ் புரிந்துகொண்டார். ஜாய் 1960 இல் இறந்தபோது, அவர்களுக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் மட்டுமே ஆகியிருந்தது.

லூயிஸின் கடைசிக் காலம்

லூயிஸ் அதன்பின் தன் வழக்கமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். அந்த வீட்டில் இப்போது மீண்டும் லூயிசும், வார்னியும் மட்டுமே இருந்தார்கள். அவர்களுடைய அப்பாவும் பல ஆண்டுகளுக்குமுன் இறந்துவிட்டார். இரண்டு பையன்களும் பெரியவர்களாக வளர்ந்துவிட்டார்கள். லூயிஸ் தன் பணியைத் தொடர்ந்தார். தொடர்ந்து எழுதினார். வந்த கடிதங்களுக்கெல்லாம் பதிலளித்தார். அவருக்கு இப்போது ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்தன. வார்னியின் உதவியோடும், ஒரு செயலாளரின் உதவியோடும் அனைவருக்கும் பதிலளிக்க முயன்றார். இந்தக் கடைசி தசாப்தத்திலும், அவர் தொய்வில்லாமல் தொடர்ந்து எழுதினார். இப்போதுதான் அவர் நார்னியா கதைகளை எழுதினார். அவருடைய இரண்டு வளர்ப்புப்பிள்ளைகளும், இரண்டாம் உலகப் போரின்போது அவருடைய வீட்டில் தங்கியிருந்த குழந்தைகளுமே இந்தக் கற்பனைக் கதைக்கான காரணம், கருப்பொருள் என்றுகூடச் சொல்லலாம். இன்னொரு வகையில் நார்னியாவைப்பற்றிய படங்கள் அவருக்குள் மிக நீண்ட காலமாக இருந்தன; ஆனால் அவைகளை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது அவருடைய வளர்ப்புப் பிள்ளைகள் அதற்கு வடிவம் கொடுத்தார்கள் என்று சொல்லலாம். ஒரு மான்குட்டி சில பொட்டலங்களை எடுத்துக்கொண்டு பனியில் தத்தித்தத்திப் போவதையும், விளக்குத்தண்டின்கீழ் நின்று ஆசுவாசப்படுவதையும்பற்றி அவர் பேசுகிறார். பின்னர் நிலம் எப்படி நின்றது என்பதைப்பற்றியும் அவர் பேசுகிறார்.

லூயிஸ் தன் நண்பர்களைச் சந்தித்தார்; அவர்களோடு உரையாடினார். யாராவது தன்னைச் சாப்பிட வருமாறு அழைத்தால் அதை அழைப்பை அவர் நிராகரிக்கவில்லை.

அவருடைய உடல்நிலை மேலும் மோசமாகிக்கொண்டே வந்தது. அவருக்கு இப்போது 60 வயது. ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக வீட்டின் படிக்கட்டுகளில் ஏற முடியவில்லை. இக்காலத்தில் வார்னிதான் லூயிசைக் கவனித்துக்கொண்டிருந்தார். நவம்பர் 1963. ஒருநாள் மாலையில் வார்னியிடம், “நான் செய்ய நினைத்த அனைத்தையும் செய்து முடித்துவிட்டேன். நான் செல்லத் தயாராக இருக்கிறேன்,” என்றார்.

நவம்பர் 22, 1963 வெள்ளிக்கிழமை. வழக்கத்தின்படி வந்திருந்த கடிதங்களுக்குப் பதில் எழுதினார்.

மதிய உணவுக்குப்பிறகு, லூயிஸ் நாற்காலியில் உட்கார்ந்தபடி உறங்கினார். “படுக்கையில் மிகவும் வசதியாகத் தூங்கலாமே!” என்று வார்னி கூறினார். கீழே, “இசை அறை” லூயிசின் படுக்கையறையாக மாற்றப்பட்டிருந்தது. வார்னி 4 மணிக்கு அவருக்குக் கொஞ்சம் தேநீர் கொடுத்தார். லூயிஸ் களைத்திருந்தபோதும், நன்றாக இருந்தார். 5:30 மணிக்கு ஏதோ கீழே விழும் சத்தம் கேட்டது. வார்னி படுக்கையறைக்கு ஓடினார். லூயிஸ் கட்டிலின்கீழே சுயநினைவில்லாமல் விழுந்துகிடந்தார். மூன்று, நான்கு நிமிடங்களில் லூயிஸ் நித்தியத்துக்குள் நுழைந்தார்.

அன்று லூயிஸ் இறந்த செய்தி பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. ஏனென்றால் அன்று மதியம் அமெரிக்காவில் டெக்சாஸின் டல்லாஸில் ஜான் எஃப். கென்னடி படுகொலை செய்யப்பட்டார். பிரேவ் நியூ வேர்ல்ட் எழுதிய ஆல்டஸ் ஹக்ஸ்லியும் அன்றுதான் இறந்தார். இந்த மூன்று மரணங்களை மையமாக வைத்து பீட்டர் க்ரீஃப்டின் பிட்வீன் ஹெவன் அண்ட் ஹெல் என்ற ஒரு கற்பனையான உரையாடலை எழுதியிருக்கிறார்.

நவம்பர் 26, 1963 இல், ஹோலி டிரினிட்டி தேவாலயத்தில் லூயிஸின் இறுதிச் சடங்கு நடைபெற்றது, அங்கு அவர் அடிக்கடி கலந்து கொண்டார். அவர் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, வார்னி அவருடன் அடக்கம் செய்யப்பட்டார்.

புகழ்பெற்ற கிறிஸ்தவ தன்விளக்கவாதியும் புனைக்கதாசிரியருமான சி.எஸ். லூயிஸின் கடைசி மாதங்கள், அவர் ஆர்வத்துடன் போராடிய விசுவாசத்தின் படத்தை நமக்குக் காட்டுகின்றன. தேவனுடைய கரங்களில் நித்திய ஜீவனின் வாக்குறுதி.

அவருடைய கவிதையிலும் உரைநடையிலும் மேலோங்கிநின்ற பெரு மகிழ்ச்சி, பேரானந்தம் -தீராத ஏக்கத்தின் கதறல்-அவர் எப்படி இறந்தார் என்பதில் தெரிகிறது . குறிப்பாக அந்த வாரத்தின் அமைதியான ஓய்வில், அவர் தன் உடலின் உபத்திரவங்களைப் பொறுமையுடனும் நல்ல நகைச்சுவையுடனும் சகித்ததில், இந்தப் பூமிக்குரிய பயணம் வரப்போகிற ஒரு பெருங்கதையின் அடுத்த அத்தியாயத்திற்கான முன்னுரை என்ற முழு விசுவாசத்தில், தெய்வீக அன்பின் ஆழமான முத்திரையால் நிரப்பப்பட்ட ஒரு புதிய, அற்புதமான உண்மையில் தெரிகிறது.

ஒருநாள் லூயிசின் நண்பர் ஒருவர் அவரிடம் வந்து, “இத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் மரணத்திற்குப்பிறகு இந்தப் புத்தகங்களையும், அதனால் வரும் வருமானத்தையும் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். “என் மரணத்திற்குப்பிறகா?” என்று புன்னகைத்துவிட்டு, “ஐந்து வருடங்களுக்குப்பிறகு நான் எழுதிய எதையும் யாரும் படிக்க மாட்டார்கள்,” என்று சொன்னார். நிச்சயமாக சி.எஸ்.லூயிஸ் ஒரு தீர்க்கதரிசி அல்ல. ஏனென்றால், நார்னியா தொடர்கள் மட்டும் உலகம் முழுவதும் இதுவரை 10 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அவருடைய பிற நூல்கள் இன்றும் மிகவும் பிரபலமாக உள்ளன. அவை கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை அம்சங்களை மிகவும் எளிமையாக, பகுத்தறிவோடு தெளிவுபடுத்துகின்றன. அவருடைய படைப்புக்களில் கொஞ்சம் கற்பனையும், கொஞ்சம் நகைச்சுவையும் கலந்திருக்கும். இது ஓர் அரிய கலவை.

லூயிஸ் எல்லா அம்சங்களிலும் பரிபூரமாணவர் என்று நான் சொல்லவில்லை. அவரும் அப்படி நினைக்கவில்லை. எடுத்துக்காட்டாக, அவருக்குப் பேரும் புகழும் பெருகியபோது அதை மேற்கொள்ள அவர் போராடினார். அவருடைய சில கருத்துக்கள் கேள்விக்குரியவை. அவர் தன் எல்லைகளை அறிந்திருந்தார். அவர் எதையும் கற்றுக்கொள்ள ஆயத்தமாக இருந்தார். அவர் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று சாதிக்கவில்லை. “நான் மெத்தப்படித்த ஒரு மேதாவிபோல் பேசவில்லை. அப்படிப் பேச எனக்கு எந்த உரிமையும் இல்லை. என் மனதில் எழுந்த எண்ணங்களையும், கருத்துக்களையும் உங்கள்முன் வைக்கிறேன். இவைகள் எனக்கு உதவியாக இருந்தன; உங்களுக்கும் ஒருவேளை உதவியாக இருக்கும் என்று தோன்றுகிறது. நான் தவறாக இருக்கலாம். இவையனைத்தையும் ஞானவான்களின் திருத்தத்திற்கு சமர்ப்பிக்கிறேன்,” என்று அவர் எழுதினார்.

சிஎஸ் லூயிஸ் தேவனுடைய ஓர் ஊழியர். அவர் தேவன் தனக்குத் தந்த எழுதும் கொடையையும், பேசும் கொடையையும் தேவனுடைய அரசை விரிவாக்குவதற்காகவும், தேவனுடைய மகிமைக்காகவும் உத்தமமாகப் பயன்படுத்தினார். லூயிஸ் தன் தலைமுறைக்குப் பேசினார், சேவித்தார்.

இவ்வளவு பேரும் புகழும் பெற்ற லூயிசுக்கு பிரமாண்டமான அடக்க ஆராதனை நடந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை. அவர் நித்தியத்துக்குள் நுழைந்த நாளில்தான் அமெரிக்க அதிபர் ஜே.எஃப்.கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார். உலகெங்கும் அதுவே அன்று பேச்சு. எனவே, லூயிஸின் மறைவு மறைவாகவே இருந்தது. நித்தியத்தின் வெளிச்சத்தில் இது நிச்சயமாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

லூயிஸ் இப்போது தன் பேரின்பத்தில், அவரை சிலுவைக்கு நடத்திய பேரின்பத்தில், இயேசுவைக் கர்த்தராகப் பார்ப்பதற்கு நடத்திய பேரின்பத்தில், நிலைத்திருப்பதை நாம் கற்பனை செய்யலாம். Chronicles of Narnia புத்தகத்தின் முடிவு உங்களுக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறன். நம்மைப் பொறுத்தவரை அந்த முடிவு எல்லாக் கதைகளின் முடிவாகத் தோன்றலாம். ஆனால், லூயிசைப் பொறுத்தவரை அது உண்மையான கதையின் ஆரம்பம். இந்த உலகத்தில் அவருடைய முழு வாழ்க்கையும், அனைத்து சாகசங்களும் ஒரு புத்தகத்தின் அட்டைப் படமும், தலைப்புக்களுமேயாகும். இப்போது, கடைசியாக, நித்தியத்தில் ஒரு மாபெரும் கதையின் முதல் அத்தியாயத்தைத் தொடங்கிவிட்டார்; இது பூமியில் இதுவரை யாரும் படிக்காத அத்தியாயம், இது என்றென்றும் தொடரும் அத்தியாயம், இது இதற்குமுந்தைய எல்லாக் கதைகளையும்விட மிகச் சிறந்த கதையின் அத்தியாயம்.