வேத வாசிப்பு
மத். 7:11; லூக். 5:12-13; அப். 10:35; 17:22-31; ரோமர் 1:18-32; 2:14-16; 7:18-25; 8:2, 19-21; 13:1-7; 1 கொரி. 1:18; கலா. 1:4; எபே. 2:1-3; 2 தெசெ. 2:10; 2 தீமோ. 3:1-5; எபி. 3:12-13; யாக். 3:9; 1 பேதுரு 1:23-25; 2 பேதுரு 1:4; 2:19; 1 யோவான் 2:15-17; ஆதி. 4:16-22; 6:5-8; 9:6; 11:1-9; லேவி. 13:3, 45-46.
மனிதனுடைய நிலைமையை நாம் கொஞ்சம் விவரமாக பார்க்க வேண்டும். நம் நிலைமையை இரண்டு வகையில் பார்க்கலாம். இந்த இரண்டு வழிகளும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை.
ஆதாம் அறிவு மரத்தில் பங்குபெற்றபோது, தேவனோடு இருந்த உறவில் அவன் உடனடியாக மரித்துப்போனான். அதே நேரத்தில், அவனிலும் அவனுடைய உலகத்திலும் மரணம் செயல்பட ஆரம்பித்தது; பாவம் என்ற புற்றுநோய் அவனைத் தொற்றிக்கொண்டது. இதுதான் நம் நிலைமை. ஒன்று, நாம் தேவனைவிட்டுத் தூரமாகப் போய்விட்டோம். இரண்டு, ஆவிக்குரிய விதத்தில் நாம் மரித்துக்கொண்டுமிருக்கிறோம்.
நம்முடைய நிலைமையின் இந்த இரண்டு அம்சங்களையும் தொழுநோய் மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காண்பிக்கிறது. வேதாகமத்தில் தொழுநோயைப்பற்றி பல விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. தொழுநோயாளி அசுத்தன் என்று கருதப்பட்டான். எனவே, அவன் கூடாரத்தைவிட்டும், பாளயத்தைவிட்டும் தூரமாகத் துரத்தப்பட்டான். அதே நேரத்தில், அவன் அந்த நோயினால் செத்துக்கொண்டும் இருந்தான். இதுதான் நம் இன்றைய நிலையாகும். நாம் பாவிகள் என்பதால் நாம் துரத்தப்பட்டவர்கள். அதே நேரத்தில், நாம் செத்துக்கொண்டுமிருக்கிறோம்.
மரணத்துக்கு ஏதுவான இந்தப் பாவப் புற்றுநோய் இன்று விழுந்துபோன இந்த இனத்திலும், உலகத்திலும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று அநேக வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதை இன்று சமுதாயத்திலும், தனிமனிதனிலும் காண்கிறோம். இன்று நற்செய்தியைக் கேட்டு அநேக வாலிபர்கள்தான் மனந்திரும்பி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
அழிவின் ஆதிக்கம்
இயற்கையில் எத்தனையோ அதிசயமான காரியங்கள் இருந்தாலும்கூட, அது உருக்குலைந்து, பாழாய்க் கிடக்கிறது என்பதுதான் வெளிப்படையான உண்மை. மனிதனின் வீழ்ச்சியால் அது பாழானது. எனினும், ஒரு நாள் அது அழிவிலிருந்து விடுவிக்கப்படும்.
இந்த உலகத்தில் கொடுமை, தீமை, பொல்லாங்கு போன்றவை எவ்வளவு மூர்க்கமாகச் செயல்படுகின்றன என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. “வேதாகமம் சொல்வதுபோல மனிதனின் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதென்றால், மனித கலாச்சாரத்திலும், நாகரிகத்திலும் இருக்கிற ‘உயர்ந்த தன்மைக்கும்,’ ‘நல்ல காரியங்களுக்கும்,’ உலகம் முழுவதும் இருக்கிற ‘மதத்துக்கும்’ என்ன பொருள்? அவைகளெல்லாம் பொருளற்றவை என்று நீங்கள் சொல்லுகிறீர்களா?” என்று சிலர் கேட்கக்கூடும். இந்தக் கேள்விக்கான பதிலை நாம் இப்போது பார்ப்போம்.
“மனிதன் முன்னேறிக்கொண்டிருக்கிறான்; அவன் இன்னும் முன்னேறிக்கொண்டேயி ருப்பான்; அவன் தன்னைத்தானே செம்மைப்படுத்திக்கொள்வதற்கும், சரிசெய்துகொள்வதற்கும், முன்னேற்றிக்கொள்வதற்கும் எல்லையே இல்லை. பண்டைய நாகரிகமும், நவீன நாகரிகமும் இதற்குச் சான்று பகர்கின்றன. எடுத்துக்காட்டு, கல்வி. கல்வியின் உதவியோடு மனிதன் முன்னேறவில்லையா? ‘நாகரிகம்’ வெறுமனே கடந்துபோகிற மாயையும், மருட்சியும்தானா?” என்று சிலர் கேட்கிறார்கள். “உலகமும், அதின் இச்சையும் ஒழிந்துபோம்,” என்று யோவான் கூறுகிறார். பொருள் வளங்களும், வசதிகளும் அதிகரித்துவிட்டதால், அதாவது சிலருக்கு வாழ்க்கை வசதிகள் பெருகிவிட்டன என்பதால், மனிதன் உயர்ந்துவிட்டான் அல்லது சிறந்தவனாகிவிட்டான் என்று சொல்ல முடியாது. வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் ஒரு காரியம் தெரியும். அவனுடைய அரும்பெரும் சாதனைகளில் மற்றவர்களுடைய பாடுகளும், துன்பங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. வறியவர்கள் எளியவர்களைத் தங்களுடைய தன்னலத்துக்காகப் பயன்படுத்தித்தான் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். இதுதான் வரலாறு. எடுத்துக்காட்டாக, அடிமைகளைப் பயன்படுத்தித்தான் பிரமிடுகளைக் கட்டினார்கள். தொழிற்புரட்சிக்கும் மனித அவலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
மேற்கத்திய நாகரிகம் பல வேளைகளில் ‘கிறிஸ்தவம்’ என்று தவறாக அழைக்கப்படுகிறது. விழுந்துபோன உலகத்தில் ‘கிறிஸ்தவ நாகரிகம்’ என்றோ, ‘கிறிஸ்தவ நாடு’ என்றோ இருக்க முடியாது. மேற்கத்திய நாகரிகம் வெறுமனே ஒரு வெளிப்பகட்டு, பாசாங்கு, மாயத்தோற்றம்; அவ்வளவே. கடந்தகால காட்டுமிராண்டித்தனத்துக்குப்பதிலாக, இருபதாம் நூற்றாண்டும், இருபத்தோராம் நூற்றாண்டும் அதைவிடப் பயங்கரமான பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தி இருக்கின்றன. எல்லா நாகரிகங்களுக்கும் ஓர் இருண்ட பக்கம் உண்டு.
சரியான பாதையில் செல்வதற்குக் ‘கலாசாரத்தை’ ஒரு நண்பனாகவும், ‘நாகரிகத்தை’ ஒரு படியாகவும் கருதுகிற மனப்பாங்கு கிறிஸ்தவர்களிடையே இருக்கிறது. ஆனால், வரலாற்றைப் பார்க்கும்போது விலக்கப்பட்ட மரமாகிய நன்மை தீமையுடைய அறிவு மரத்தில் பங்குபெற்று, அவன் பெற்ற முன்னேற்றம் அல்லது அபிவிருத்தி பொய்யானது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஏனென்றால், அவன் ‘தேவன்’ இல்லாமல் ‘நித்திய ஜீவன்’ இல்லாமல் ‘முன்னேறியிருக்கிறான்’; அவன் பாவத்திற்கு அடிமையாகவும், சாத்தானின் கூட்டாளியாகவும் இருக்கிறான். தேவன் திட்டமிட்டிருந்த ‘முன்னேற்றம்’ இப்படிப்பட்டதல்ல. அவர் ஒருபோதும் இப்படி நினைக்கவில்லை.
பொதுவாகச் சொல்வதானால், மனிதன் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படாதவாறு ‘நாகரிகம்,’ ‘மதம்’ என்ற இரட்டைப்பிள்ளைகள் அவனுடைய இரட்சிப்புக்குத் தடைகளாகவே இருந்திருக்கின்றன என்பதே உண்மை. மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்தவம் எவ்வளவு காலம் இருந்திருக்கிறது என்று பாருங்கள். இருப்பினும், கொஞ்சப்பேர் மட்டுமே ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்துத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இன்று எல்லா மனிதர்களுக்கும் வாய்ப்பு இருப்பதுபோல, உண்மையான தேவனை அறிவதற்கு அவரைப்பற்றிய புறம்பான சாட்சியாக படைப்பும், உள்ளான சாட்சியாகிய மனச்சாட்சியும் கிழக்கத்திய நாடுகளுக்கும் உண்டு. ஆனால், கிழக்கத்திய நாடுகளும் அந்தச் சாட்சியைப் புறக்கணித்துவிட்டன, அலட்சியம்செய்துவிட்டன.
மேற்கத்திய நாடுகளில் உள்ள பொய்யான கிறிஸ்தவமும், மானிட நாகரிகமும், கிழக்கத்திய நாடுகளில் உள்ள கிழக்கத்திய மதங்களும், கலாசாரமும் இலட்சக்கணக்கானோர் இயேசுவில் மட்டுமே உள்ள சத்தியத்தைக் கண்டுபிடிக்காதவாறு அவர்களுக்குத் தடைகளாக மாறிவிட்டன என்றே சொல்லலாம். நாகரிகம், காரியங்கள் உண்மையாக எப்படி இருக்கிறதோ அதைவிட சிறப்பாக இருக்கின்றன என்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது. பொய்யான மதம், உண்மையான விசுவாசமாகிய ‘இயேசுவின் விசுவாசத்திற்கு’ ஒரு மாற்றாக அமைந்துவிட்டது.
அப்படியானால் நாகரிகத்துக்கும், மதத்துக்கும் எந்த மதிப்பும் இல்லையா? இறுதியில் அவைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. ஏனென்றால், இந்த இரண்டும் மனிதனுடைய இரட்சிப்பின் தேவையை நிறைவேற்றப்போவதில்லை. ஆயினும், மனிதனுடைய நலனுக்காகவும், அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்ளாதவாறும் தேவன் தம் மேலதிகாரமுள்ள இறையாண்மையினாலும், இரக்கத்தினால் இந்த இரண்டிலும் உள்ள சில அம்சங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்., எடுத்துக்காட்டாக, சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதற்காக அரசாங்கங்கள் இருக்கின்றன.
மனிதன் தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்டான். அந்தச் சாயல் இன்னும் முழுமையாக அழிந்துபோய்விடவில்லை. ஏனென்றால், அழிவின் போக்கை எதிர்த்துச் செயல்படுகின்ற சக்திகளும், ஆற்றல்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு மனிதனிலும் மனச்சாட்சி வேலைசெய்கிறது; ஆகையால், சமுதாயத்தில் சட்டம் ஒழுங்கு தேவை என்ற உணர்வு மனிதர்களிடம் இருக்கிறது. எனவே, தேவன் தம் மீட்பின் நோக்கம் முற்றுப்பெறும்வரை அழிவையும், தீங்கையும் மட்டுப்படுத்த இவைகளையும் பயன்படுத்திக்கொள்கிறார். மனிதனுடைய அழிவை மட்டுப்படுத்த, தேவனுடைய இறையாண்மையின்படி, மனிதனுடைய ‘நல்ல சுபாவமும்’ நாகரிகம், மதம் ஆகியவைகளில் உள்ள பாராட்டத்தக்க அம்சங்களும் உதவிசெய்தாலும்கூட, மனிதனுடைய இரட்சிப்புக்கு அவைகள் எந்த வகையிலும் உதவாது. மனித இனத்தில் இன்னும் எஞ்சியிருக்கின்ற தேவனுடைய சாயலின் இந்தச் சுவடுகளும், தடங்களும் அவனுடைய உயர்ந்த தொடக்கத்தையும், அழைப்பையும், அற்புதமான ஆற்றயையுமே சுட்டிக்காட்டுகின்றன.
தேவன் தம் கட்டுப்படுத்தும் கரத்தை நீட்டாவிட்டால் அல்லது அற்புதமான முறையில் தலையிடாவிட்டால், தனிப்பட்ட மனிதனைப் பொறுத்தவரை அழிவின் போக்கைத் தடுக்கமுடியாது. பாவம் என்னும் புற்றுநோய் முடிவில் நம்மைக் கொன்றுவிடும். ஆனால், மூன்று குறிப்புகளைக் கவனியுங்கள்:
முக்கியமான மூன்று காரியங்கள்
முதலாவது, இந்த நோய் எப்போதும் வெளிப்படையாகத் தெரியாது. சிலரில் இந்த நோய் கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. பலரில் இந்த நோய் மறைந்திருக்கிறது; ஆனால், அந்த நோய் ‘நயமான பண்பு,’ ‘நல்ல நடைப்பாங்கு,’ ‘நாகரிகமான நடத்தை’ அல்லது தேவையுள்ள மக்கள்மேல் ’மனிதநேயம்’போன்ற மாயைகளாலும், பொய்யான தோற்றங்களாலும் மூடிமறைக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தச் இல்லை. அது மட்டுமல்ல. இதுதான் கிறிஸ்தவம் என்றும் தவறாகக் கருதப்படுகிறது. பாவம் என்ற புற்றுநோய் அங்கு நிச்சயமாக இருக்கிறது. ஆனால், மறைந்திருக்கிறது. எனவே, இவர்கள் தேவனுடைய குமாரனுக்கு எதிரானவர்கள் என்ற முறையில் ஆக்கினைத்தீர்ப்புக்கு உட்பட்டவர்கள் என்பது நிச்சயம். மேலும், இவர்கள் கிறிஸ்துவின் கோரிக்கைகளை எதிர்கொள்ளும்போது இவர்களுடைய உண்மையான நிறம் வெளுத்துவிடும்.
இரண்டாவது, நான் ஏற்கனவே சொன்னதுபோல, தேவனுடைய சாயலில் சிறிதளவு இன்னும் மனிதனிடம் இருக்கக்கூடும். மனிதனிடம் நன்மைத்தனம் கொஞ்சம் மங்கலாகத் தோன்றலாம். ஆனால், அவனுக்குள் ஏதோவொரு ‘தெய்வீகப்பொறி’ இருப்பதுபோலவும், அதை மீண்டும் கொளுந்துவிட்டு எரியச்செய்தால் போதும், அவன் இரட்சிக்கப்பட்டுவிடுவான் என்பதுபோலவும் சிலர் நம்பச்சொல்லுகிறார்கள். அவனுக்குள் அப்படி எதுவும் இல்லை. தேவனுடைய கிருபை இல்லையென்றால், மறுபடியும் பிறத்தல் என்ற அற்புதம் நிகழவில்லையென்றால், மீட்கப்பட முடியாத அளவுக்கு நாம் என்றென்றைக்கும் கதிகெட்டவர்களே.
மூன்றாவது, தேவனுடைய பிரசன்னத்தைப்பற்றிய கொஞ்சம் விழிப்புணர்வு அவருடைய படைப்பில் இன்னும் இருக்கிறது. எப்படியென்றால் ஏதோவொரு வகையான பரமன் (ஆதிமூலம், பரமாத்மா) இருக்கிறார் என்பதை பெரும்பாலான இனங்கள் எப்போதுமே நம்பியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, சிலர் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்; ஆறுதல் அடைந்திருக்கிறார்கள்; ஜெபங்களுக்குப் பதில் பெற்றிருக்கிறார்கள். இப்படிப்பட்ட அனுபவங்கள் சிலருக்கு உண்டு. இவைகளெல்லாம் தேவனால்தாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட அனுபவங்கள் இருப்பதால் அவர்கள் இரட்சிக்கப்படவேண்டிய தேவையில்லை என்பதல்ல பொருள். தேவன் படைத்தவர் என்ற முறையில் தம் படைப்பில் இரக்கமுள்ளவராக இருக்கிறார் என்பதால் பாவிகள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அதில் ஆறுதல் அடைய முடியாது. நமக்கு ஓர் இரட்சகர் தேவை. தேவனுடைய குமாரனை அலட்சியம் செய்துவிட்டு, தேவனுடைய அன்பை மட்டும் சார்ந்திருந்தால் நாம் பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
கடைசியாக, நம்முடைய அவல நிலையைப் பார்க்கும்போது, நம்மால் தேவனை நெருங்கவோ, அடையவோ முடியாது என்றே தோன்றுகிறது. அதுதான் உண்மை. ஆனால், தேவன் நம்மிடம் வர முடியும்; தேவனால் நம்மை அடைய முடியும். உண்மையில், அவர் அதற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறார்; அதைத்தான் தேடுகிறார்.
வேத வாசிப்பு
மத். 7:11; லூக். 5:12-13; அப். 10:35; 17:22-31; ரோமர் 1:18-32; 2:14-16; 7:18-25; 8:2, 19-21; 13:1-7; 1 கொரி. 1:18; கலா. 1:4; எபே. 2:1-3; 2 தெசெ. 2:10; 2 தீமோ. 3:1-5; எபி. 3:12-13; யாக். 3:9; 1 பேதுரு 1:23-25; 2 பேதுரு 1:4; 2:19; 1 யோவான் 2:15-17; ஆதி. 4:16-22; 6:5-8; 9:6; 11:1-9; லேவி. 13:3, 45-46.