Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

தேவனுடைய மைய எண்ணம் (Central thought of God)

Transcribed from a message spoken in April 2013, in Chennai

By Milton Rajendram

தேவனுடைய இருதயத்தை அறிதல்

தேவனுடைய மக்களாகிய நாம் தேவனுடைய வார்த்தையிலும், தேவனோடும், தேவனுடைய மக்களோடும் போதுமான நேரம் செலவிட வேண்டும். தேவனுடைய இருயத்தைத் தெரிந்துகொள்ள இது மிகவும் அவசியம். நாம் இன்னும் அவருடைய எண்ணங்களைப் பெறவில்லை அல்லது அவருடைய பார்வையை அடையவில்லையென்றால் அதற்காக நாம் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். நாம் எல்லாருமே இதைக்குறித்த உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையில் போதுமான நேரம் செலவழிப்பதற்கு என்ன காரணம்? போதுமான நேரம் செலவழித்து “இதிலே தேவனுடைய எண்ணம் என்ன? உண்மையிலே இதற்குள் தேவனுடைய ஞானம் என்ன? உண்மையிலே தேவன் என்ன நோக்கத்திற்காக, குறிக்கோளுக்காக, எதைச் செய்துமுடிப்பதற்காக இந்தப் பகுதியை எழுதி வைத்திருக்கிறார்,” என்று நாம் பொறுமையுடன் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இல்லையென்றால் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒருசில வசனங்களை மட்டும் நாம் படிப்போம். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில வசனங்கள் அந்த நேரத்தில் நமக்கு ஆறுதலாக இருக்கும். ஆனால், நாளடைவில் தேவனுடைய மனம், தேவனுடைய ஞானம், தேவனுடைய வழிகள், தேவனுடைய ஆலோசனைகள் ஆகியவைகளைப்பற்றிய அறிவு நமக்கு இருக்காது. “தேவனுடைய எண்ணம் என்ன? தேவனுடைய இருதயம் என்ன? தேவனுடைய வழி என்ன? தேவனுடைய ஆலோசனை என்ன? தேவனுடைய வல்லமை என்ன?”வென்று தெரிய வராது.

ஏனென்றால், வேதத்தை வாசிக்கும்போது அல்லது வாசித்ததை நம்முடைய வாழ்க்கையோடு நாம் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும். வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப்பார்க்காத தேவனுடைய வார்த்தை பெரும்பாலும் ஏட்டுச் சுரக்காயாகத்தான் இருக்கும்; அது கறிக்கு உதவாது; அது பிரசங்கிமார்களை உண்டுபண்ணும்;, உபதேசங்களை உண்டுபண்ணும், போதகர்களை உண்டுபண்ணும். ஆனால், அது வல்லமையில்லாத தேவனுடைய வார்த்தையாக முடிந்துவிடும். புறவினத்தார் கதாகாலச்சேபம் பண்ணுவதுபோல, கிறிஸ்தவர்கள் ஓர் அழகான பிரசங்கம் பண்ணிவிட்டு மக்களை அனுப்பிவிடலாம்.

தேவனுடைய வழிகளை அறிதல்

ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருநாளும் பிரசங்கம் பண்ணிவிட்டு மக்களை அனுப்பவில்லை. தேவனுக்குரிய ஒன்றை அவர்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டுதான் எப்போதும் திரும்பிப்போனார்களேதவிர தேவனுக்குரிய ஒன்றைப் பெறாமல் போகவேயில்லை. நாமும் மக்களை அப்படி ஒருநாளும் வெறுமையாய் அனுப்பக்கூடாது. அவர் மக்களை ஒருபோதும் வெறுமையாய் அனுப்பவில்லை. தேவனுடைய கோட்பாடுகளை நாம் அறிந்திருக்க வேண்டும்.

“கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும், உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்,” (சங். 25:4, 5) என்று தாவீது ஜெபிக்கிறார். “கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்” (சங். 25:9, 12) என்று தேவன் தம் வழிகளை யாருக்குக் காண்பிக்கிறார் என்று இந்த சங்கீதத்தில் எழுதியிருக்கிறது. “கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது” (வ. 14) என்றும் அதே சங்கீதத்தில் வாசிக்கிறோம். இதுபோல மோசே, “உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்,” என்று ஜெபித்தார் (யாத். 33:13).

நம் வாழ்க்கையிலே நாம் பல்வேறு சிக்கலான சூழ்நிலைகள்வழியாகப் போகிறோம். இந்த உலகமும் பல்வேறு சிக்கல்கள்வழியாகப் போகும். இந்த உலகம் எப்படிப்பட்ட சிக்கல்கள்வழியாகப் போகும் என்றால் இந்தத் தலைமுறையிலே அவர்கள் உற்பத்திசெய்கிற சிக்கல்கள் இன்னும் ஒன்றிரண்டு தலைமுறைகள் கழித்து பல ஆயிரம் மடங்கு பொரிதாக்கப்பட்ட சிக்கல்களாக மாறும். இந்த உலகம் சிக்கல்களை எப்படித் தீர்க்கிறது என்று நான் சொல்லுகிறேன். இந்தத் தலைமுறையில் உள்ள ஒரு சிக்கலை அவர்கள் தீர்ப்பார்கள். ஆனால், அது அடுத்த தலைமுறையில் பத்து சிக்கல்களை உருவாக்கும். இதுதான் இந்த உலகத்தின் வழி. நாம் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு தேவனுடைய வழியைப் பின்பற்ற வேண்டும். எல்லாச் சிக்கல்களையும், பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குத் தேவனுடைய வழி என்று ஒன்று உண்டு. ஆனால், இந்த உலகம் தேவனுடைய வழியை நம்பாது, அதைப் புரிந்துகொள்ளாது, அதை எடுத்துக்கொள்ளாது.

“ஜென்மசுபாவமான மனிதன் தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்” (1 கொரி. 2:14). தேவனுடைய ஆவிக்குரியவைகள் என்றால் கிறிஸ்துவுக்குரியவை, நித்தியத்துக்குரியவை, பரத்துக்குரியவை. தேவனுடைய வழிகளை, தேவனுடைய ஞானத்தை, தேவனுடைய அறிவை, தேவனுடைய ஆலோசனைகளை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாது, அவனால் பெற்றுக்கொள்ளமுடியாது. அவைகள் அவனுக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். தேவனுடைய வழிகள் மிகவும் வீரியமுள்ளவைகள். அவைகளால் நம் வாழ்க்கையின் சிக்கல்களைத் தீர்க்கமுடியும் என்று அவர்களால் நம்ப முடியாது. இது மிக முக்கியமான காரியம். “ஆண்டவரே, உம் மனம், உம் எண்ணங்கள், உம் இருதயம், உம் வழிகள், உம் ஆலோசனைகளை எனக்குப் போதியும்,” என்று நாம் ஜெபிக்க வேண்டும். இவைகளை அறிந்துகொள்வதற்காகத்தான் நாம் வேதத்தை வாசிக்கிறோம்.

தேவனுடைய வழிகள் என்ன? நம் வாழ்க்கையின் சூழ்நிலைகளுக்காக இருந்தாலும் சரி, மற்றவர்களின் சூழ்நிலைகளுக்காக இருந்தாலும் சரி, இந்த உலகத்தின் வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்காக இருந்தாலும் சரி. அவர்கள் தேவனுடைய வழிகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் தேவனுடைய மக்களை ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்கள், எண்ணமாட்டார்கள், மதிக்கமாட்டார்கள். தேவனுடைய மக்களை அவர்கள் பைத்தியக்காரர்கள் என்று நினைப்பார்கள்.

ஆனாலும், இந்தச் சூழ்நிலையில் தேவன் என்ன செய்ய விரும்புகிறார் என்று நமக்குத் தெரியும். சில சமயங்களில், தேவனுடைய மக்களுக்கே தேவனுடைய வழிகள் என்னவென்று பொதுவாகத் தெரிவதில்லை.

தேவனுடைய மனதை அறிதல்

வேதத்திலிருந்து ஒரு சில வசனங்களை மேற்கோள்காட்டுவதால் அது தேவனுடைய வழிகளாகி விடாது. இதற்கு நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசில வசனங்களை நாம் மேற்கோள் காட்டி, அவைகளை ஒன்றோடொன்றாகக் கோர்த்துவிடுவதால் அது தேவனுடைய வழியாக மாறிவிட முடியாது. இதைப்பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “எந்தக் காரியத்தைக்குறித்தும் தேவனுடைய வார்த்தை என்ன சொல்லுகிறது என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்,” என்று சொல்லும்போது, அது கேட்பதற்கு மிகவும் ஆவிக்குரியதுபோல் தோன்றும். நாம் தேவனுடைய வார்த்தையின்படிதான் நடக்க வேண்டும். ஆனால், தேவனுடைய வார்த்தையிலிருந்து அங்கொரு வசனத்தை உருவி, இங்கொரு வசனத்ததை உருவி, தேவனுக்கு முற்றிலும் மாறுபட்ட, முரண்பட்ட, எதிரான ஒரு கருத்தை நாம் உருவாக்க முடியும். எது தேவனுடைய ஆவியானவருடைய நடத்துதல், எது மனிதனுடைய கற்பனை என்று இனங்காண்கிற ஒரு பயிற்சி மிகவும் அவசியம். இந்தப் பயிற்சி இல்லாததுதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம்.

தேவனுடைய நித்தியத் திட்டம்

தேவனுடைய வார்த்தை முழுவதும் ஒன்றேவொன்றைப்பற்றித்தான் பேசுகிறது. தேவனுடைய நித்தியத் திட்டம். தேவனுடைய நித்தியத் திட்டமாகிய அவருடைய குமாரனை இந்தப் பூமியில் முதன்மையும், தலைமையுமான ஓர் இடத்திற்குக் கொண்டுவருவது அல்லது அவருடைய குமாரனை இந்தப் பூமியிலே, இந்தப் பிரபஞ்சத்திலே, வெளிக்காண்பிப்பதைப்பற்றியே வேதாகமம் பேசுகிறது. தேவனுடைய இந்த ஒரேவொரு குறிக்கோளை, திட்டத்தைத் தேவன் மனித வரலாற்றில் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் இந்த முழு வேதாகமத்தின் அல்லது தேவனுடைய வார்த்தையின் கருப்பொருள். தேவனுடைய குறிக்கோள், நித்தியக் குறிக்கோள், என்ன? தேவனுடைய நித்தியத் திட்டம் என்ன? தேவன் தம் குமாரனை இந்தப் பிரபஞ்சத்திலே அல்லது இந்த உலகத்திலே ஒரு கூட்டம் மனிதர்கள்மூலமாக வெளிக்காண்பிக்க விரும்புகிறார். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை வெளிக்காண்பிப்பதற்காக மாற வேண்டும் என்பது தேவனுடைய குறிக்கோள், தேவனுடைய திட்டம். அவர் இதை நிறைவேற்றுவதற்காக இந்த மனித வரலாற்றில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய மக்களுடைய வாழ்க்கையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை வெளிக்காண்பிப்பது, தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை அறிவது, தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை வாழ்வது, தேவனுடைய வார்த்தையின் மைய எண்ணம்.

ஆதியாகமம் தொடங்கி திருவெளிப்பாடுவரை தேவனுடைய வார்த்தை அல்லது பரிசுத்த வேதாகமம் முழுவதும் தேவன் தம் நித்தியக் குறிக்கோளை, நித்தியத் திட்டத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதைப்பற்றித்தான் சொல்லுகிறது.

இரண்டு அற்றங்கள்

ஆனால். இந்தப் பரிசுத்த வேதாகமத்திலே இன்னொன்றும் இருக்கிறது. நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு, யாக்கோபின் கடிதம் போன்றவைகளும் இருக்கின்றன. நீதிமொழிகளில் தேவனுடைய திட்டம், தேவனுடைய குறிக்கோள், அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை வெளிக்காண்பிப்பது, இதை தேவன் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுபோன்ற காரியங்கள் எழுதப்படவில்லை. அதில் எழுதப்பட்டிருக்கும் காரியங்களுக்கும், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்தப் பிரபஞ்சத்திலே வெளிக்காண்பிப்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்ற ஒரு கேள்வி வரும், சிலர் இரண்டு அற்றங்களுக்குப் போய்விடுவார்கள். ஒரு சாரார், “நீதிமொழிகளில் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவைப்பற்றி சொல்லியிருக்கிறது. அது ஞானத்தைப்பற்றிப் பேசுகிறது. ஞானத்தைச் சம்பாதி என்று சொல்லுகிறது. இந்த ஞானம் கிறிஸ்துவைக் குறிக்கிறது,” என்று சொல்லலாம். அதுபோல், “உன்னதப்பாட்டு கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள உறவைக் காண்பிக்கிறது. பிரசங்கி கிறிஸ்து இல்லாத, கிறிஸ்துவைப் புறக்கணித்த, ஒரு மனிதனுடைய வாழ்க்கை எப்படி முடிவடைகிறது என்று சொல்லுகிறது. இப்படி இந்தப் புத்தகங்களிலும் நாம் கிறிஸ்துவைப் பார்க்கலாம்,” என்று சொல்லுகிறார்கள். இது ஒரு பக்கம்.

இன்னொரு சாரார் தேவனுடைய வார்த்தையை ஒரு அறநெறிப் புத்தகம்போல் பயன்படுத்துவார்கள். திருக்குறளை அல்லது கன்;ஃபூசியசினுடைய போதனைகளைப் பயன்படு;த்துவதுபோல், ‘வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி, வாணிபத்தில் வெற்றிபெறுவது எப்படி, நல்ல குடும்ப வாழ்க்கை நடத்துவது எப்படி, உங்கள் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி’ என்று இதை ‘எப்படி’ புத்தகமாகப் பயன்படுத்தலாம். இந்த இரண்டுமே தவறு. வேதம் ‘வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?’ என்பதற்காக எழுதப்படவில்லை.

தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை நம் வாழ்க்கையின் மையமாகவும், முதன்மையாகவும் கொண்டு நாம் வாழ்வோம் என்றால் நம் வாழ்க்கை வெற்றியுள்ள வாழ்க்கையாகத்தான் முடிவுபெறும். ஆனால், அது துன்பமும் வேதனையும் இல்லாத வாழ்க்கையாக இருக்கும் என்ற அர்த்தம் அல்ல. நெருக்கமும், பாடுகளும், துன்பமும், வேதனையும், துக்கமும் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும். ஆனால், அது வெற்றியுள்ள வாழ்க்கையாக இருக்கும். இது கேட்பதற்கு முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால். இதுதான் தேவனுடைய வார்த்தை.

சுபிட்ச சுவிசேஷம்

சிலுவைமரணத்தையும், உயிர்த்தெழுதலையும் எப்படி ஒப்புரவாக்கமுடியும்? நம் வாழ்க்கையின் முடிவு உயிர்த்தெழுதலாக இருக்கும். ஆனால், அது சிலுவையினூடாய்ச் சென்ற உயிர்த்தெழுதலாகத்தான் இருக்கும். சிலுவையினூடாய்ச் செல்லாத உயிர்த்தெழுதல் தேவனுடைய வார்த்தைக்குப் புறம்பானது. இதற்கு “சுபிட்ச சுவிசேஷம்” என்று பெயர். **“தசமபாகம் கொடுங்கள், எப்பொழுதும் தேவனைத் துதித்துக்கொண்டேயிருங்கள். எப்போதும் நேர்மறையாகப் பேச வேண்டும்.”ான் இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே கோடீஸ்வரனாக மாறுவேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஒரு கடையை வாங்குவேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஒரு கார் வாங்குவேன்“** என்று சொல்லுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்” என்று சொல்லுகிற சுபிட்ச சுவிசேஷம். இன்றைக்கு மோசே இருந்தால் இவர்களை என்ன செய்வார் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். தேவன் நமக்கு இந்தப் பூமிக்குரிய நன்மைகளைத் தருகிறார். ஆனால் பூமிக்குரிய நன்மைகளைப் பெறுவதற்கு ஒரு யுக்தியாக அல்லது மந்திரம்போலப் பயன்படுத்துவதற்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் கொடுக்கப்படவில்லை.

எல்லா விவரங்களிலும் கிறிஸ்துவை வாழ்தல்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிவது, வாழ்வது, வெளிக்காண்பிப்பது என்பது பெரிய விவரங்களிலே இருப்பதுபோல அது சிறிய விவரங்களிலும் இருக்கிறது என்பதையே நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு, யாக்கோபு எழுதின கடிதம் ஆகியவைளும் காண்பிக்கின்றன.

ஒருவன் உண்மையிலேயே இயேசு கிறிஸ்துவைக் காண்கிறான், அவரை வாழ்கிறான், அவரை வெளிக்காண்பிக்கிறான் என்றால் அது அவனுடைய வாழ்க்கையின் பெரிய விவரங்களில் மட்டுமல்ல சிறிய விவரங்களிலும் நடக்கும். “அது பெரிய விவரங்களின்மீது மட்டும்தான் தாக்கத்தை உண்டாக்கும். சிறிய விவரங்களின்மீதும் தாக்கத்தை உண்டாக்காது” என்பது தவறு. கோடிக்கணக்கான சிறிய விவரங்கள் உள்ளன.

பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு வசனம் சொல்லுகிறேன். அது மிகவும் ஆவிக்குரிய வசனம் என்று நினைத்துவிட வேண்டாம். பழைய ஏற்பாட்டில் ஏசாயா, எரேமியா தீர்க்கதரிசிகளின் புத்தகங்களில் மிக ஆழமான ஆவிக்குரிய கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால், நான் சொல்லப்போகிற வசனம் மிக ஆவிக்குரிய வசனம் கிடையாது. இஸ்ரயேல் மக்கள் பாளயம் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் நடுவில் தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் இருக்கிறது. ஆசாரிப்புக்கூடாரத்தைச் சுற்றிலும் பன்னிரண்டு கோத்திரங்களும் வரிசைவரிசையாகக் கூடாரமிட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் இயற்கைக் கடனைக் கழிப்பதற்காகப் பாயளத்துக்கு வெளியேதான் போக வேண்டும். பாளயத்துக்கு வெளியே போகும்போது கையிலே ஒரு கோல் வைத்திருக்க வேண்டும். இயற்கைக் கடனைக் கழித்துவிட்டு கோலால் மண்ணைப்போட்டு மூடிவிட வேண்டும் (உபா. 23:13) என்று தேவனுடைய வார்த்தையில் ஒரு வசனம் இருக்கிறது. இது பெரிய ஆவிக்குரிய வசனமா? “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுமூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்” (எபே. 3:20). இது ஆவிக்குரிய வசனமாகத் தோன்றலாம். அல்லது “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன். ஆயினும், பிழைத்திருக்கிறேன். இனி நான் அல்ல. கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலா. 2:20). இது ஆவிக்குரிய வசனமாகத் தோன்றலாம்.

“ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உன் மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு” என்பதில் கிறிஸ்துவை அவன் எப்படி வாழவேண்டுமோ, அதுபோல் இயற்கைக் கடனைக் கழித்தபின் குச்சியால் அதில் மண்ணைப்போட்டு மூடவேண்டும் என்பதிலும் அவன் கிறிஸ்துவை வாழவேண்டும். பெரிய விவரங்களிலும் நாம் கிறிஸ்துவை வாழ வேண்டும். சிறிய விவரங்களிலும் நாம் கிறிஸ்துவை வாழ வேண்டும்.

புதிய உடன்படிக்கை-ஜீவப் பிரமாணம்

நாம் புதிய உடன்படிக்கையின் மக்கள். எனவே, தேவன் தம் பிரமாணங்களை நம் இருதயங்களில் எழுதியிருக்கிறார். பழைய ஏற்பாட்டில் இதுபோன்ற பல்லாயிரக்கணக்காக நியாயப்பிரமாணங்கள் உண்டு. நியாயப்பிரமாணத்தில் பல்லாயிரக்கணக்கான சட்டங்கள் உள்ளன. இன்றைக்கு இதுபோல பல்லாயிரக்கணக்கான சட்டங்கள் எழுதமுடியுமா? உன்னுடைய மேல்சட்டையும், கால்சட்டையையும் எப்படிப் போட வேண்டும், உன்னுடைய நகம் எப்படி இருக்க வேண்டும். உன்னுடைய செருப்பு எப்படி இருக்க வேண்டும், உன்னுடைய காலுறை எப்படி இருக்க வேண்டும், உன் நாற்றம் எப்படி இருக்கிறது. உன் செருப்பை நீ எப்படிப் போட வேண்டும்? இப்படி கட்டளை கொடுத்தால் எத்தனை ஆயிரம் வரும்? பல்லாயிரக்கணக்கான கட்டளை வரும். உடனே கிறிஸ்வர்களாகிய நாம் பதற்றமாகிவிடுவோம். சில கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாட்டில் வாழ்கிற பழைய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்கள். கட்டளைகளாகக் கொடுத்துத் தள்ளிவிடுவார்கள். மோசே கொடுத்தார் பத்துக் கட்டளைகள். இந்தப் புதிய ஏற்பாட்டுப் போதகர்கள் கொடுப்பதோ பத்துக்கோடி கட்டளைகள். மோசே கொடுத்த அந்தப் பத்துக் கட்டளைகளை மக்களால் சுமக்கமுடியவில்லை. இந்தப் பத்துக்கோடிக் கட்டளைகளை நம்மால் சுமக்க முடியாது என்பதுபோல் தோன்றலாம். ஆகவே, நாம் ஓர் இறுக்கமான வாழ்க்கை வாழ்வோம். “சரியாக நடக்கிறோமா? சரியாக உட்காருகிறோமா? காலை சரியாக நீட்டியிருக்கிறோமா?” என்று நாம் வாழவேண்டிய அவசியம் இல்லை.

புதிய உடன்படிக்கையின் பெரிய ஆசீர்வாதம் என்னவென்று கேட்டால் அவருடைய ஜீவனிலே அவருடைய பிரமாணத்தை தேவன் நம் இருதயத்தில் எழுதியிருக்கிறார். அவருடைய ஆவியை நமக்குத் தந்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நமக்குப் போதிக்கிறார். அவரை எப்படி பெரிய காரியங்களைப்பற்றிப் போதிக்கிறாரோ அதேபோல மிகச் சிறிய காரியங்களைப்பற்றியும் போதிக்கிறார். ஆனாலும், தேவனுடைய மக்கள் அதைக் கற்றுக்கொள்வதில்லை. பரிசுத்த ஆவியானவர் நேரடியாகப் போய்ச் சொல்லுவாரா? பரிசுத்த ஆவியானவர் போதிக்கிறவர். அவர்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தேவனுடைய வழிகள், பாதைகள், எண்ணங்கள் தெரியவில்லை.

தேவனுடைய மக்களோடு ஐக்கியம்

என்ன காரணம்? பரிசுத்த ஆவியானவர் போதிப்பதில்லையா? காரணம் என்னவென்று கேட்டால் பரிசுத்த ஆவியானவர் போதிப்பதற்கு அவர் தேவனுடைய வீடு என்று ஒன்றை வைத்திருக்கிறார். தேவனுடைய வீடு அல்லது தேவனுடைய குடும்பம் என்றால் தேவனுடைய மக்களோடு நமக்குள்ள ஐக்கியம். நாம் எப்படிப்பட்ட தேவனுடைய மக்களோடு ஐக்கியம் வைத்திருக்கிறோமோ அது பரிசுத்த ஆவியானவர் நமக்குப் போதிப்பதைக்கூடப் பாதிக்கும். ஏனென்றால், நாம் எப்படிப்பட்ட தேவனுடைய மக்களோடு ஐக்கியம்கொண்டு வாழ்கிறோமோ, அவர்கள் பரிசுத்த ஆவியினால் எந்த அளவுக்குப் போதிக்கப்பட்டு நடத்தப்படுகிறார்களோ அந்த அளவுக்குத்தான் நாமும் பரிசுத்த ஆவியினாலே போதிக்கப்படுவோம். அவர்கள் பரிசுத்த ஆவியினால் போதிக்கப்படுவதே “தசமபாகம் கொடுத்தால் பணக்காரனாகிவிடுவாய். ஞாயிற்றுக்கிழமை சபைக்கு வந்துவிட்டால் இந்த வாரம் முழுவதும் நீ மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை,”போன்ற சில அற்பமான காரியங்களாலும், கருத்துக்களாலும் நிறைந்தவர்களாயிருந்தால் அந்த சூழ்நிலைகளிலே வாழ்கிற மக்களும் அப்படித்தான் இருப்பார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய நிலைமைக்கு மிஞ்சி செய்யமுடியாது.

எருசலேமில் வாழ்ந்த தேவனுடைய மக்களுக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் இருந்தார். புறவினத்தார் நடுவிலே அந்தியோக்கியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களாகிய தேவனுடைய மக்களுக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் இருந்தார். அந்தியோக்கியாவில் வாழ்ந்தவர்களும் தேவனுடைய மக்கள். தேவன் யூதர்களை ஏற்றுக்கொண்டதைப்போலவே புறவினத்தார்களையும் ஏற்றுக்கொண்டிருந்தார்.

அதுபோல “நியாயப்பிரமாணத்தினுடைய சட்டதிட்டங்களுக்கு நாம் உட்பட்டவர்களல்ல”என்றும் அவர் போதித்திருந்தார். ஆனால், எருசலேமில் வாழ்ந்த மக்களாகிய யூதர்கள், புறவினத்தாரைவிட உயர்ந்தவர்கள் என்றும், நியாயப்பிரமாணத்தினுடைய சட்டதிட்டங்களாகிய விருத்தசேதனம் செய்தல், ஓய்வுநாளைக் கடைப்பிடித்தல்போன்ற எல்லாச் சடங்குகளையும் பின்பற்றினார்கள். இரண்டு பேரும் தேவனுடைய மக்கள்தான். இரண்டுசாராரும் தேவனுடைய மக்கள்தான். ஆனால், ஒருசாரார் இன்னும் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருந்தார்கள். இன்னொரு சாரார் நியாயப்பிரமாணத்தை விட்டு வெளியே வந்துவிட்டார்கள். இதற்கு என்ன காரணம்? அவர்கள் வாழ்ந்த மக்களுடைய ஐக்கியம்தான் காரணம். பெருவாரியான தேவனுடைய மக்கள் எப்படிப்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்களோ, அப்படியே அங்கு வாழ்கிற எல்லா மக்களுடைய கருத்துக்களும் இருக்கும். ஆகவே, எப்படிப்பட்ட தேவனுடைய மக்களோடு நாம் ஐக்கியம் கொள்கிறோம் என்பதைப்பற்றி நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தேவனுடைய பார்வை

நான் இரண்டு காரியங்களைப்பற்றிப் பேசினேன். ஒன்று நாம் தேவனுடைய வார்த்தையை வாசிப்பது. தேவனுடைய வழிகள், தேவனுடைய எண்ணங்கள், தேவனுடைய இருதயம், தேவனுடைய போதனைகள் ஆகியவைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். வேதாகமத்தை வாசிக்கும்போது தேவனுடைய பார்வை வேண்டும். அதைத் தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து பெற வேண்டும். இல்லையென்றால் இன்னும் பத்து அல்லது இருபது வருடங்கள் கழித்து நாம் மிகவும் வருத்தப்படுவோம். வெறுமனே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசில வசனங்களை மட்டும் நாம் வாசிக்கலாம்.

தேவனுடைய மக்கள் எல்லாருக்கும் நாம் அடிக்கடி சொல்வதுதான். இந்த உலகத்திலே தேவனுடைய ஞானம், பரத்துக்குரிய ஞானம், உன்னதத்தின் ஞானம், இந்தப் பூமியில் எந்த மனிதனிடமிருந்தும் பெற முடியாத ஞானம், ஒன்று உண்டு. அதைத் தேவனிடத்திலிருந்து மட்டும்தான் பெற முடியும். யாக்கோபு இதைப் “பரத்திற்குரிய ஞானம்” என்று சொல்லுகிறார். பரத்திற்குரிய ஞானமானது தேவனிடத்திலிருந்து மட்டுமே பெறக்கூடிய ஞானம். இந்த உலகத்தின் மிகச் சிறந்த ஞானி அந்த ஞானத்தைப் பெற முடியாது. இந்த உலகத்தின் மிகச் சிறந்த தத்துவ ஞானி அதைப் பெற முடியாது. அது தேவனுடைய பிள்ளைகளுடைய சிலாக்கியம். ஒன்று.

எல்லா விவரங்களும்

இரண்டாவது, தேவன் நம் வாழ்க்கையின் பெரிய விவரங்களைப்போலவே சிறிய விவரங்களைக் குறித்தும் அக்கறை உள்ளவராக இருக்கிறார். அதற்காகத்தான் நீதிமொழிகள், உன்னதப்பாட்டு, பிரசங்கி, யாக்கோபின் நிருபம்போன்ற புத்தகங்களும் இருக்கின்றன.

பரிசுத்த வேதாகமம் ஒரு மேலாண்மைப் புத்தகமோ, அறிவியல் புத்தகமோ, வரலாற்றுப் புத்தகமோ அல்ல. ஆனால், ஒருவன் நேர்த்தியான, மகிழ்ச்சியான, வீரியமுள்ள வாழ்க்கை வாழ்வதற்குப் போதுமான நடைமுறை அறிவுரைகள் பரிசுத்த வேதாகமத்தில் உள்ளன. அது தவிர பரிசுத்த ஆவியானவர் நம் நடைமுறை வாழ்க்கையிலே அவைகளைப்பற்றிப் போதிக்கிறார்.

தேவனுடைய மக்கள் ஒரு வீரியமுள்ள, கனிநிறைந்த வாழ்க்கை வாழ்வது எப்படி என்று நமக்குக் கொஞ்சம் ஆலோசனைகள் இருந்தால் நல்லது. அவர்கள் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள். திருமணம் பண்ணியிருப்பார்கள். ஆனால், சண்டைபோடுவார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பார்கள். அபிஷேகம் பெற்றிருப்பார்கள். அந்நிய பாஷை பேசுவார்கள். கல்யாணம் முடிந்து அவர்கள் சண்டைபோடுவார்கள். பிரிந்துபோகப்போகிறோம் என்கிற அளவுக்குச் சண்டைபோடுவார்கள். இது எப்படிச் சாத்தியம்? அப்படியானால் நீங்கள் இரட்சிக்கப்பட்டது, பரிசுத்த வேதாகமத்தை வாசித்தது, ஜெபம் பண்ணுவது, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றதெல்லாம் என்ன?

தேவனுடைய மக்கள் எப்படி வீரியமாக, கனிநிறைந்தவர்களாக வாழ்வது? கனிநிறைந்தவர்களாக வாழ்வது என்றால் நம் பணம் மட்டுப்பட்டது, காலம் மிகவும் மட்டுப்பட்டது. எனவே, எல்லாவற்றையும் ஞானமாகச் செலவிட வேண்டும்? நாம் ஏன் நேரம்தவறாiமையைக்குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? நேரம் தவறாமை நமக்குக் கடவுளா? இல்லை. நேரம் தவறாமையை நாம் ஆராதிக்கின்றோமா? வகுப்புக்கு அல்லது அலுவலகத்துக்கு ஏன் சரியான நேரத்துக்குப் போக வேண்டும்? கொஞ்சம் தாமதமாகப் போனால் என்ன? நம்முடைய காலம் குறுகினது. நம்முடைய பணம் குறுகினது. நம்முடைய உழைப்பு குறுகினது. குறுகினது என்றால் மட்டுப்பட்டது. இவைகளெல்லாம் ஓர் எல்லைக்குட்பட்டது. அவைகளை நாம் வீணாக்கக்கூடாது, விரயமாக்கக்கூடாது. ஒரு காரியத்தை பத்து ரூபாயில் முடிக்கமுடியுமென்றால் அங்கும் இங்குமாகப் பணத்தை விரயமாக்கக்கூடாது. இதன் பொருள் நாம் கஞ்சனாக இருக்க வேண்டும் என்றல்ல. நேரம் மிகவும் மட்டுப்பட்டது. நாம் அதை வீரியமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேவனுடைய மக்கள் ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்.