சார்லஸ் ஹேடன் ஸ்பர்ஜன் (19 ஜூன் 1834 - 31 ஜனவரி 1892) : இவர் ஒரு பிரசங்கி, போதகர், மேய்ப்பர், கல்வியாளர், சீர்திருத்தவாதி, தூய்மையாளர், சமூகச் சிந்தனையாளர். இவர் கிறிஸ்தவர்களிடையே மிகவும் செல்வாக்குப் பெற்றவர், பிரபலமானவர். இவர் "பிரசங்கிகளின் இளவரசர்" என்று அழைக்கப்படுகிறார். இவருடைய கொடைகளும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் இவர் கொண்டிருந்த பக்தியும் அசாதாரணமானவை. எனவே, தேவனுக்கு மகிமையாக, இவருடைய உழைப்பும், ஊழியமும் மிகவும் பலனுள்ளவையாகவும், பயனுள்ளவையாகவும், பொருளுள்ளவையாகவும், கனிநிறைந்தவையாகவும் இருந்தன.
இவர் அன்றைய சீர்திருத்த காலத்தில், அறியொணாவாதத்தையும், நாத்திகத்தையும் எதிர்த்தார். புதிய இறையியல் என்றழைக்கப்பட்ட வேதகாமத்துக்கு எதிரான கருத்தை மும்முரமாக எதிர்த்தார்.
இவருடைய போதகர்கள் கல்லூரி, அநாதை இல்லங்கள், முதியோர் இல்லம், பள்ளிக்கூடம், சமுதாயத்தில் விளிம்புநிலை மக்களுக்கு இவர் ஆற்றிய தொண்டு ஆகியவைகள் மறக்கமுடியாதவை.
ஸ்பர்ஜன் 38 ஆண்டுகளாக இலண்டனில் உள்ள நியூ பார்க் ஸ்ட்ரீட் சபையின் சபையின் போதகராக இருந்தார். பின்னாட்களில் அது மெட்ரோபோலிட்டன் டபெர்னாகில் என்றழைக்கப்பட்டது. பிரசங்கங்கள், சுயவரலாறு, பொழிப்புரை, ஜெபத்தைப்பற்றிய புத்தகங்கள், பக்தி நூல்கள், பத்திரிகைகள், கவிதைகள், பாடல்கள் என அவருடைய படைப்புகள் நீண்டுகொண்டேபோகின்றன. இவருடைய பிரசங்கங்கள், புத்தகங்கள், அவர் வாழ்ந்த காலத்திலேயே பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. அவருடைய பிரசங்கம் கேட்போரைக் கட்டிப்போட்டது. இன்றும் கிறிஸ்தவர்கள் அவருடைய எழுத்துக்களை மிக உயர்வாகக் கருதுகின்றனர்.
“எங்களை யாரும் வேலைக்கு அமர்த்தவில்லை” என்று நாம் சாலையோரம் சும்மா நின்றுகொண்டிருந்தால், தங்களைச் சமர்ப்பணம்செய்து, தேவனுக்காகத் தங்களைப் பானபலியாக ஊற்றிய மிஷனரிகளின் உழைப்பையும், ஊழியத்தையும் நாம் அவமானப்படுத்துகிறோம் என்று பொருள். பாடுகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதே சீயோனில் சுகவாசிகளாக வாழ்பவர்களின் சோதனையாகும். சிலுவைப் பாதையைத் தவிர்த்து, மாற்றுப் பாதையில் பயணித்து, இறுதியில் கிரீடத்தை அணியமுடியுமானால், அவர்கள் மகிழ்ச்சியோடு சிலுவைப்பாதையைத் தவிர்த்துவிடுவார்கள். மிகவும் விலையுயர்ந்தவைகளெல்லாம் தீயிலும், தீயினாலும் சோதிக்கப்படுகின்றன உருக்கப்படுகின்றன; அப்படியிருக்க, நாம் மட்டும் அந்த உலைக்குத் தப்பிக்க வேண்டுமா? இரட்சிப்பின் அதிபதி உபத்திரவத்தினாலே பரிபூரணமாக்கப்பட்டார்; நாம் மட்டும் துன்பம் இல்லாமல் பரிபூரணமாக முடியுமா? குளிர்கிறது என்பதால் வீசும் காற்றை அடைத்துவைக்கக் கட்டளையிட முடியுமா? சுடுகிறது என்பதால் சூரியனை மறைந்துகொள்ளச் சொல்ல முடியுமா? ஆண்டவராகிய இயேசுவைவிட தேவன் நம்மை ஏன், எதற்காக சிறப்பாக, மென்மையாக, நடத்த வேண்டும்? முதல்மகன் பாடுகளின்வழியாகவும், உபத்திரவங்களின்வழியாகவும் சென்றிருக்கையில், இளைய சகோதரர்களாகிய நமக்கு விதிவிலக்கா? சிலுவை வீரன் விசாலமான வழியைத் தேர்ந்தெடுப்பது கோழைத்தனமான பெருமை. ஆரம்பத்திலேயே தெய்வீகச் சித்தத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, தேவனுடைய கிருபையால் நாடோறும் பலப்படுத்தப்பட்டு வளர்ந்துசெல்பவன், அதில் மகிழ்ச்சியடைபவன், சிம்சோன் சிங்கத்தில் உடலில் தேன் எடுத்ததுபோல, சிலுவையின்கீழே லீலி மலர்களைச் சேகரிப்பான். இவன் ஞானவான்.
இன்று நாம் “பிரசங்கிகளின் இளவரசன்” என்றழைக்கப்படும் சார்லஸ் ஹேடன் ஸ்பர்ஜன் என்ற பரிசுத்தவானின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கப்போகிறோம். இவரைப்பற்றி ஒருவேளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். தம் நற்செய்தியை அறிவிக்கவும், தம் மக்களைக் கிளர்ந்தெழுப்பவும் தேவனால் மிக வல்லமையாகப் பயன்படுத்தப்பட்ட ஊழியக்காரர்களில் இவரும் ஒருவர். இவர் தம் வாழ்நாளில் கோடிக்கணக்கான மக்களுக்குப் பிரசங்கித்தார். அவர் மரித்து 100 ஆண்டுகளுக்குப்பிறகும் அவர் தம் பிரசங்கங்களின்மூலம் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்.
என் வாழ்வில் என் தியானத்திற்காக நான் அவருடைய காலை, மாலை தியானப் புத்தகத்தை ஒரு வருடம் பயன்படுத்தினேன். அதன்பின் நான் அவரைப்பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினேன். அதன் விளைவே இந்தக் காணொளி.
சார்லஸ் ஸ்பர்ஜன் 1834ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி இங்கிலாந்தில் எஸ்செக்ஸ் மாநிலத்திலுள்ள கெல்வெடோன் என்ற ஊரில் பிறந்தார். அவருடைய அப்பா ஜாண் லூயிஸ், அம்மா எலிசா.
சார்லஸ் ஸ்பர்ஜன் இங்கிலாந்தில் மாபெரும் எழுப்புதலுக்குக் காரணமாக இருந்த ஜார்ஜ் விட்ஃபீல்ட், ஜாண் வெஸ்லிபோன்ற தேவ மனிதர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர். அவர்களுடைய காலத்தில் இங்கிலாந்தில் மாபெரும் எழுப்புதல் ஏற்பட்டது; உலர்ந்த எலும்புகள் உயிரடைந்தன; உயிரடைந்தவர்கள் உயிர்துடிப்புள்ளவர்களானார்கள். தேவன்மேல் கொண்ட அன்பினால் அவர்களுடைய இருதயங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. ஜார்ஜ் விட்ஃபீல்டும், ஜாண் வெஸ்லியும் நாட்டின் நாலா பக்கங்களிலும் பயணித்து திறந்த வெளியில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார்கள். மக்கள் ஆயிரக்கணக்கில் இரட்சிக்கப்பட்டார்கள்.
அவர்களுடைய காலத்துக்குப்பின் கிறிஸ்தவத்தின் தரம் தாழ்ந்தது; ஆவிக்குரிய அனல் குறைந்தது; ஆத்தும தாகம் தணிந்தது. கிறிஸ்தவம் வெறுமனே முன்புபோல ஒரு மதமாயிற்று; ஆங்கிலேயர்களுடைய வாழ்க்கையின் வெறும் பாரம்பரியமான சடங்காயிற்று. உயிரற்ற வெற்று உடலாயிற்று. ஒரேவொரு தலைமுறைக்குப்பின் கிறிஸ்தவத்தின் நிலைமை தலைகீழாயிற்று.
நாம் ஏற்கெனவே பார்த்த சில தேவ மனிதர்களுக்கு ஸ்பர்ஜனைத் தெரியும். ஜார்ஜ் முல்லர் ஸ்பர்ஜனின் நல்ல நண்பர். ஹட்சன் டெய்லர் ஸ்பர்ஜனின் பிரசங்கங்களால் மிகவும் உற்சாகமடைந்தார்; இருவரும் ஒருவருக்கொருவர் உற்சாகமாகவும், உந்துதலாகவும் இருந்தார்கள். டி.எல்.மூடி ஸ்பர்ஜனுக்கு மிகவும் நெருக்கமானவர். இருவரும் ஒருவருக்கொருவர் ஆசீர்வாதமாக இருந்தார்கள். ஆஸ்வால்ட் சேம்பெர்ஸ் ஸ்பர்ஜனின் பிரசங்கத்தைக் கேட்டு இரட்சிக்கப்பட்டார் என்று சொன்னேன். இப்படி இவர்களெல்லாரும் சமகாலத்தில் இங்கிலாந்தில் ஊழியம் செய்தார்கள். அது உண்மையாகவே வளமான காலம்!
ஸ்பர்ஜனின் தாத்தா, ஜேம்ஸ் ஸ்பர்ஜன், ஒரு ரெவெரெண்ட். அவருடைய அப்பா ஜாணும் ஓர் ஊழியக்காரரே . அவருடைய தாத்தா இங்கிலாந்தின் எஸ்செக்ஸ் மாநிலத்தின் ஸ்டேம்போன் என்ற ஊரில் போதகராக இருந்தார். அவர் நன்கு கற்றறிந்தவர், அனுபவம் வாய்ந்தவர்; அவர் பலவிதமான இறையியல்களையும், குறிப்பாக puritans என்றழைக்கப்படும் தூய்மையாளர்களின் புத்தகங்களையும் அதிகமாகப் படித்தார். (Puritans என்பவர்கள் மத ஒழுங்குகளிலும், தனிமனித ஒழுக்கத்திலும் நெறிதவறாத சீர்திருத்தவாதிகள்). அவர் அந்த ஊரில் ஊழியம்செய்வதற்குப்பதிலாக வேறு ஏதாவதொரு பெரிய நகரத்திற்குச் சென்று ஊழியம் செய்தால் இன்னும் அநேகருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அந்த ஊரார் நினைத்தார்கள். ஆனால், அவர் அந்த ஊரைவிட்டு வேறு எங்கும் செல்லவில்லை. அந்த மக்களை அவர் மிகவும் நேசித்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும், 55 ஆண்டுகளுக்கு மேலாக, அங்கு தேவனையும், தேவ மக்களையும் உண்மையும், உத்தமுமாகச் சேவித்தார். அவருடைய தாத்தாவின் சபையில் இருந்த ஒரு விசுவாசி, “அவருடைய பிரசங்கத்தைக் கேட்டால் கழுகுகள் செட்டைகளை விரித்துப் பறப்பதுபோல் பறக்கலாம்,” என்று சொன்னார்.
அவருடைய சிறு வயதிலேயே அவருடைய குடும்பம் கோல்செஸ்ட்டருக்குக் குடிபெயர்ந்தது. ஆயினும், ஸ்பர்ஜன் ஒரு வயதிலிருந்து ஆறு வயதுவரை தன் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் ஸ்டாம்போர்னில்தான் வளர்ந்தார். அவருடைய பெற்றோர் ஸ்பர்ஜனை அவருடைய தாத்தா பாட்டியிடம் ஏன் அனுப்பினார்கள் என்று தெரியாது. அது தேவனுடைய இறையாண்மை.
அவருடைய பாட்டியின் பெயர் சாராள். ஸ்பர்ஜன் பிற குழந்தைகளைப்போல் சாதாரணமானவன் இல்லை என்பதை அவருடைய தாத்தா, சிறுவயதிலேயே புரிந்துகொண்டார். எனவே, அவர் ஸ்பர்ஜனை கண்ணுங்கருத்துமாக வளர்த்தார்.
அந்தக் காலத்தில் வீட்டில் ஒவ்வொரு ஜன்னலுக்கும் வரி கட்ட வேண்டும். எனவே, பெரும்பாலும் மக்கள் ஜன்னல்களைச் செங்கற்களால் மூடிவிட்டார்கள். ஸ்பர்ஜனின் தாத்தா தன் புத்தகங்களையெல்லாம் ஓர் அறையில் வைத்திருந்தார். அந்த அறைக்கு ஜன்னல்கள் கிடையாது. இருட்டறை. ஸ்பர்ஜன் சிறு வயதிலேயே இந்த இருட்டறைக்குச் சென்று தன் தாத்தா வைத்திருந்த புத்தகங்களை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். சிறுவயதிலேயே ஸ்பர்ஜனுக்குப் புத்தகங்கள்மேல் ஓர் அலாதிப் பிரியம். நடக்கத் தெரிந்த, ஆனால் வாசிக்கத் தெரியாத வயதில், ஸ்பர்ஜன் தன் தாத்தாவின் நூலகத்திற்குத் தத்தித்தத்தி நடந்துசென்று அங்கு புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்தார். அங்கு இருந்த ஜாண் பன்யன் எழுதிய மோட்சப் பிரயாணம் என்ற புத்தகத்தை எடுத்துவைத்துக்கொண்டு, அதிலிருந்த படங்களைப் பார்த்து, கதையைப் புரிந்துகொள்ள முயன்றார். அவர் இந்தப் புத்தகத்தைத் தன் வாழ்நாளில் 100 முறையாவது வாசித்தாராம்.
அவருடைய 17 வயது அத்தை ஆன் அவரைத் தன் குழந்தையைப்போல் வளர்த்தார். அவர்தான் ஸ்பர்ஜனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்தார். ஐந்து வயது ஆவதற்குள் அவர் வேதாகமத்தையும், மோட்சப் பிரயாணம்போன்ற கடினமான புத்தகங்களையும் தெள்ளத்தெளிவாகவும், ஏற்றயிறக்கத்தோடும் வாசித்தார். அவர் வாசித்த அழகைக் கண்டவர்கள் ஆச்சரியத்துடன், “இவன் இவ்வளவு அழகாக வாசிக்கிறானே!” என்று வியந்தார்கள். சிறுவன் ஸ்பர்ஜனிடம் இருந்த இந்த அசாதாரணமான கொடையை அவருடைய தாத்தா சிறுவயதிலேயே இனங்கண்டார்.
இறையியல் சம்பந்தப்பட்ட காரியங்களில் சந்தேகங்களைத் தீர்க்கவும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு ஆலோசனை பெறவும் பல ஊழியக்காரர்கள் அவருடைய தாத்தாவைத் தேடி வந்தார்கள். அவர்களோடு உரையாடியபோது, அவர் தன் பேரன் ஸ்பர்ஜனையும் தன்னருகே உட்காரவைத்திருந்தார். எவ்வளவு நேரமானாலும் ஸ்பர்ஜன் அங்கேயே உட்கார்ந்து அவர்களுடைய உரையாடலை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தார். தாத்தா சென்ற இடமெல்லாம் ஸ்பர்ஜன் சென்றார். தாத்தா கலந்துகொண்ட எல்லாக் கூட்டங்களிலும் ஸ்பர்ஜனும் கலந்துகொண்டார். தன் தாத்தா பாட்டியிடமிருந்து, குறிப்பாக தாத்தாவிடமிருந்து, சார்லஸ் நிறையக் கற்றுக்கொண்டார். பஞ்சு தண்ணீரை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சுகொண்டார். எத்தனை ஊழியக்காரர்கள்! எத்தனை போதனைகள்! எவ்வளவு ஆலோசனைகள்!
ஐந்து வயது சிறுவர்கள் குட்டையில் குதித்துக்கொண்டிருப்பார்கள், குளத்தில் குளித்துக்கொண்டிருப்பார்கள், செல்லப்பிராணிகளோடு விளையாடிக்கொண்டிருப்பார்கள், தின்பண்டங்களுக்காகச் சண்டைபோட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால், அசாதாரணமான இந்தச் சிறுவன் ஊழியக்காரர்கள் பேசும் இறையியலைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்; அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆலோசனையைக் கவனித்துக்கொண்டிருக்கிறான், ஜாண் பன்யனின் மோட்சப் பயணத்தை முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
அவருடைய தாத்தாவின் சபையில் தாமஸ் ரோட்ஸ் என்று ஒரு விசுவாசி இருந்தார். ஆனால், அவர் கர்த்தரைவிட்டுப் பின்வாங்கிப்போய்க்கொண்டிருந்தார். சிறிய குடிமனைகளுக்கும், பெரிய மதுக்கடைகளுக்கும் சென்று குடிக்க ஆரம்பித்தார். குடித்தபின் குடிமக்களின் வழக்கமான ஆட்டம், பாட்டம் என்று வாழ்க்கை படுபாதாளத்தைநோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அந்த விசுவாசியைக்குறித்து அவருடைய தாத்தா மிகவும் வருத்தப்பட்டார், வேதனைப்பட்டார், துக்கப்பட்டார். சார்லசின் தாத்தா, “தேவனே, இந்த மனிதனை விட்டுவிடாதேயும்; உம்மிடம் திருப்பிக்கொண்டு வாரும்,” என்று பாரத்தோடு ஜெபித்தார்.
தாத்தா தன் பேரனை எப்போதும் பக்கத்தில்தானே வைத்திருப்பார். எனவே, சார்லஸ் தன் தாத்தாவின் ஜெபத்தைக் கேட்டார். தாத்தாவின் துக்கத்தைக் கண்ட சார்லஸ், “தாத்தா இந்த மனிதனோடு நேரடியாக இடைப்பட வேண்டும். நேரடியான அணுகுமுறையை எடுக்க வேண்டும்,” என்று நினைத்தார்.
எனவே, ஒரு பிற்பகல், சார்லஸ் மதுக்கடைக்குச் சென்றார். அவர் நேரே தாமஸ் ரோட்சிடம் சென்றார். அவருடைய கையில் மதுக்கிண்ணம். அவர் போதை மயக்கத்தில் பாடிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தார். ஐந்து வயது சார்லஸ் தன் பிஞ்சு விரல்களை தாமசைநோக்கி நீட்டி, கீச்சுக் குரலில், “மிஸ்டர் தாமஸ், உங்களுக்கு இங்கு என்ன வேலை? சபையின் விசுவாசியாகிய நீங்கள் இங்கு தேவபக்தியற்றவர்களுடன் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? நீங்கள் உங்கள் போதகரின் இதயத்தை உடைக்கிறீர்கள்; நான் உங்களைக்குறித்து வெட்கப்படுகிறேன், நான் என் போதகரின் இதயத்தை ஒருநாளும் உடைக்க மாட்டேன்,” என்று சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்காமல் நடந்தார். தாமஸ் ரோட்ஸ் உறைந்துபோனார்; அவர் கையில் வைத்திருந்த மதுக்கிண்ணம் அப்படியே அந்தரத்தில் இருந்தது. என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. சற்றுநேரத்தில் உணர்வடைந்து மதுக்கிண்ணத்தைக் கீழே வைத்தார். தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார், கர்த்தருக்குமுன்பாக தன் பாவத்தை ஒப்புக்கொண்டு, அறிக்கை செய்தார்; மன்னிப்பு வேண்டினார்; முழுமையாக மீட்கப்பட்டார்; அவருடைய வாழ்க்கை அதன்பின் முற்றிலும் மாறிற்று; சபையில் உதவிக்காரரானார்.
ஐந்து-ஆறு வயதிற்குப்பின் அவர் கோல்செஸ்டரில் தன் பெற்றோருடன் வாழ்ந்தார், வளர்ந்தார். ஸ்பர்ஜன்தான் வீட்டில் மூத்த பிள்ளை. எனவே, விளையாடும்போதும், ஜெபிக்கும்போதும், அவரே எல்லாரயையும் முன்னின்று நடத்தினார். சிறு வயதிலேயே தன் தம்பி தங்கைகளைக் கூட்டி வைத்துக்கொண்டு, வைக்கோற்போரின்மேல் நின்றுகொண்டு அவர்களுக்குப் பிரசங்கித்தார்.
தன் பெற்றோருடன் வாழ்ந்த நாட்களிலும் அவர் தன் அப்பா ஜாணின் ஆவிக்குரிய புத்தகங்களை எடுத்து வாசித்தார்.
ஸ்பர்ஜனின் அம்மா, எலிசா, தேவபக்தியும், தேவபயமும் உடையவர். அவர் தன் பிள்ளைகளின் இரட்சிப்புக்காக இடைவிடாது தனியாகவும், தன் பிள்ளைகளோடு சேர்ந்தும் ஜெபித்தார். அவர் தன் பிள்ளைகளுக்கு வேதத்தைப் போதித்தார், ஆத்துமாவின் அருமையையும், விலையேறப்பெற்ற தன்மையையும் விளக்கினார். ஸ்பர்ஜனின் அப்பா ஊழியத்தில் ஈடுபட்டிருந்ததால், வீட்டின் பெரும்பான்மையான பொறுப்புக்களை அவருடைய அம்மா ஏற்றுக்கொண்டார். ஒருமுறை அவருடைய அம்மா ஸ்பர்ஜனின் தோள்மேல் கையைவைத்து, “தேவனே, என் மகன் உமக்குமுன் ஜீவனுள்ளவனாகக் காணப்படுவானாக. தேவனே, என் பிள்ளைகள் தொடர்ந்து பாவத்தில் வாழ்ந்தால், அவர்கள் அறியாமையால் அப்படிச் செய்கிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கவில்லையென்றால், நியாயத்தீர்ப்பின் நாளில் நானே அவர்களுக்குவிரோதமாகச் சாட்சி சொல்ல நேரிடும்,” என்று ஜெபித்த ஜெபம் ஸ்பர்ஜனின் இருதயத்தைக் குத்திக் கிழித்தது.
ஸ்பர்ஜன் தன் பெற்றோருடன் வாழ்ந்தபோதும், விடுமுறைகளைக் கழிக்கத் தன் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றார். ஒரு விடுமுறையில் தாத்தா பாட்டி வீட்டில் அவர் ரிச்சர்ட் நீல் என்ற ஒரு மிஷனரியைச் சந்தித்தார், இவர் இந்தியாவிலும், ரஷ்யாவிலும் மிஷனரியாக ஊழியம் செய்தார். அது 1844. ஸ்பர்ஜனுக்கு வயது 11. ரிச்சர்ட் நீல் அங்கிருந்த நாட்களில் ஸ்பர்ஜனைக் கவனித்தார், அவரோடு சேர்ந்து ஜெபித்தார், அவருக்கு வேதாகமத்தைத் திறந்து காண்பித்தார். புறப்படுவதற்குமுன் ஜெபித்தார்கள். அப்போது, “இவன் ஒருநாள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பான். நான் இப்போது ஊழியம் செய்துகொண்டிருக்கும் ரோலாண்ட் ஹில்லிலும் பிரசங்கிப்பான்,” என்று உரைத்தார்.
அவர் படிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். விளையாடுவதைவிட படிப்பது அவருக்கு மிகவும் இன்பம். மட்டையைப் பிடித்து பந்து அடிப்பதைவிட புத்தகத்தை எடுத்துப் படிப்பது அவருக்கு எளிதாகவும், இன்பமாகவும் இருந்தது. ஸ்பர்ஜன் தன் 6 ஆவது வயதில் திருமதி குக் என்பவர் நடத்திய பள்ளியிலும், 10ஆவது வயதில் ஸ்டாக்வெல் ஹவுஸ் என்ற பள்ளியிலும், 14ஆவது வயதில் மெய்ட்ஸ்டோன் என்ற இடத்திலிருந்த All saints விவசாயப் பள்ளியிலும் படித்தார். அதன்பின் நியூ மார்க்கெட் அகாடெமியில் படித்தார்.
அவருடைய பள்ளிப் பருவத்தில் அவர்மேல் சிலர், பல ஆண்டுகள் இறையியல் படித்த இறையியலாளர்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைவிட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். குறிப்பாக நியூ மார்க்கெட் அகாடெமியில் இருந்த மேரி கிங் என்ற ஒரு சமையல்காரர் அவருக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் கிறிஸ்துவால் வாழ்ந்தார். கிறிஸ்துவைக் காண்பித்தார். கிறிஸ்துவைப் போதித்தார்.
“தேவன் ஒருவர் இருக்கிறார், அவர் அற்புதமானவர்,” என்ற ஆழமான உணர்வு பதின்ம வயது சார்லசிடம் இருந்தது. ஆனால், அவர் இன்னும் இரட்சிக்கப்படவில்லை; இயேசு கிறிஸ்து தன் பாவத்திற்காக மரித்தார் என்ற உண்மையை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த எண்ணம் அவருக்கு நெருடலாக இருந்தது. அவர் வேதாகமத்தில் இருந்த உண்மைகளை நன்றாகப் புரிந்துகொண்டார். சிறுவயதிலேயே அவருடைய தாத்தா, பாட்டி, பெற்றோர் அவருக்குள் நல்ல, ஆழமான அடித்தளம் போட்டிருந்தார்கள். எனினும், மோட்சப் பிரயாணம் என்ற புத்தகத்தில் ஜாண் பன்யன் குறிப்பிடுகிற கிறிஸ்தவன் தன் பாவச் சுமையைத் தானே சுமந்து செல்வதுபோல, தானேதான் தன் பாவத்தைச் சுமக்க வேண்டும் என்று ஸ்பர்ஜன் நினைத்தார். மோட்சப் பிரயாணத்தில் வரும் கிறிஸ்தவனோடு தன்னை ஒப்பிட்டுப்பார்ப்பது அவருக்கு எளிதாக இருந்தது. தன் பாவத்தைக்குறித்த ஆழமான உணர்வு அவருக்குள் இருந்தது. தன் பாவத்தின் அசிங்கத்தையும், அழுக்கையும், அருவருப்பையும் அவர் பார்த்தார். ஆனால், தன் பாவச் சுமையை எப்படி இறக்குவது என்று அவருக்குப் புரியவில்லை. பாவ பாரத்தைத் தூக்கிச் சுமக்கவும் முடியவில்லை; கீழே இறக்கி வைக்கவும் முடியவில்லை; பாவப்பரிகாரமாகக் கிறிஸ்துவை விசுவாசிக்கவும் முடியவில்லை. தவித்தார், தத்தளித்தார், தடுமாறினார். அதிலிருந்து விடுதலை பெற, இரட்சிப்பைப் பெற, ஆண்டவராகிய இயேசு கல்வாரியில் செய்துமுடித்த வேலையை அவர் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. காலப்போக்கில், இந்தப் போராட்டத்தினால் களைத்துப்போய் விரக்தியடைந்து, எல்லாவற்றையும் விட்டுவிடவும், தேவனை மறுதலிக்கவும் கூடத் தயாரானார். அவ்வளவு கடுமையான போராட்டம். தேவனையும் சார்ந்துகொள்ள முடியவில்லை; தன் சொந்த நீதியின்மேலும் சாய்ந்துகொள்ள முடியவில்லை.
அந்த நாட்களில் தொழில்மயமும், நகரமயமும் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தன. சமூகத்திலும், அறிவியலிலும், மதத்திலும், அரசியலிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. சுதந்திரச் சிந்தனையாளர்களின் கருத்துக்களை மக்கள் வரவேற்றார்கள். “தேவன் என்று ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்று ஒருவராலும் கண்டுபிடிக்க முடியாது. தேவன் என்று ஒருவர் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன?” என்ற அறியொணாவாதமும், (Agnosticism) “தேவன் என்று ஒருவர் இல்லை” என்ற நாத்திகமும் அப்போதுதான் பரவத் தொடங்கியிருந்தன. (Atheism). சார்லசும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த நச்சுக் காற்றினால் அவரும் பாதிக்கப்பட்டார். ஆனால், இந்தப் பொய்யான சூறாவளியில் சிக்கிக்கொள்ளாதவாறு ஏதோவொன்று அவரைத் தடுத்து நிறுத்தியது. அவருடைய பெற்றோர்களும், தாத்தா பாட்டியும் அவருடைய சிறுவயதில் அவருக்குள் போட்டிருந்த ஆழமான அடித்தளம் உறுதியாக இருந்ததால் அவர் நிலைகுலையாமல் தப்பித்தார் என்று சொல்லலாம்.
அவர் பல சபைகளுக்குப் போனார்; தேவன் ஏதாவது பேசிவிடமாட்டாரா என்ற ஏக்கம்; தான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு பிறந்துவிடாதா என்ற தவிப்பு. பாவ மன்னிப்பைப் பெற, இரட்சிக்கப்பட, தான் ஏதாவது செய்ய வேண்டும் என்றும், பாவ மன்னிப்பையும், இரட்சிப்பையும் பெற்றபின் அந்த நிச்சயத்தைத் தான் உணர வேண்டும் என்றும் அவர் விரும்பினார். அதை நாடினார், தேடினார்.
1849ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், குளிர்காலம். அவர் படித்துக்கொண்டிருந்த நியூ மார்க்கெட் உறைவிடப் பள்ளியில் ஒருவிதமான விஷக் காய்ச்சல் பரவத் தொடங்கியிருந்ததால், பள்ளிக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டது. சார்லஸ் வீட்டிற்கு வந்துவிட்டார். 1950ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி. கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை. அவர் வழக்கம்போல் ஆலயத்திற்குச் சென்று தேவனுடைய பேசுதலைக் கேட்க விரும்பினார். அவர் பெரிய இறையியலாளர்கள் பேசுவதையும், பிரபலமான போதகர்களின் பிரசங்கங்களையும் கேட்க விரும்பினார். ஆனால், அன்றைய பனிப்புயலின் காரணமாக, அவர் தான் வழக்கமாகச் செல்லும் ஆலயத்துக்குச் செல்ல முடியவில்லை; எனவே, கோல்செஸ்டர் நியூடௌனில் ஆர்டில்லரி தெருவிலிருந்து ஆலயத்திற்குச் செல்ல வேண்டியதாயிற்று. அது ஒரு சிறிய மெதடிஸ்ட் ஆலயம். அங்கு சுமார் 10 பேர் இருந்தார்கள். அவர் அங்கு போய் அமர்ந்தார்.
அன்று, பனிப்பொழிவின் காரணமாக, வழக்கமாக வரவேண்டிய போதகர் வரவில்லை. யாராவது பிரசங்கிக்க வேண்டும் அல்லவா? எனவே, மிகவும் ஒல்லியான ஓர் உள்ளூர்வாசி பிரசங்கிக்க சபைக்கு முன்னால் நின்றார். இவர் காலணிகள் தைப்பவர், காலணிகள் பழுதுபார்ப்பவர், படிப்பறிவற்ற பாமரன், உண்மையில் அவருக்கு ஒழுங்காக வாசிக்கக்கூட தெரியாது. அவர் ஏசாயா 45:22யை “பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை,” என்ற ஒரேவொரு வசனத்தை எடுத்துத் தட்டுத்தடுமாறி வாசித்தார். அவர் பிரசங்கிக்க ஆரம்பித்தார். “இந்த வசனம் நோக்கிப்பார் என்று சொல்கிறது. நோக்கிப்பார்ப்பதற்கு பெரிய பிரயத்தனம் தேவையில்லை. நோக்கிப்பார்ப்பதற்கு நீங்கள் உங்கள் கைகளையோ அல்லது கால்களையோ உயர்த்தத் தேவையில்லை; நோக்கிப்பார்ப்பதற்குக் கல்வி தேவையில்லை, கல்லூரிப் பட்டம் தேவையில்லை; இந்த உலகத்தின் வடிகட்டின அடிமுட்டாளால்கூட நோக்கிப்பார்க்க முடியும். ஆனால், ‘என்னை நோக்கிப்பாருங்கள்’ என்று இந்த வசனம் கூறுகிறது. இப்போது உங்களில் பலர் உங்களையே நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அப்படிச் செய்வதால் எந்தப் பயனும் இல்லை. என்னை நோக்கிப்பாருங்கள் என்று இந்த வசனம் கூறுகிறது. உங்களில் உங்களுக்கு எந்த ஆறுதலும் கிடைக்காது. நீங்கள் இயேசுவை நோக்கிப்பாருங்கள். அவர்தான் நம் தேவை. ’என்னை நோக்கிப்பாருங்கள், சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் என்னை நோக்கிப்பாருங்கள்; மரித்து, அடக்கம்பண்ணப்பட்ட என்னை நோக்கிப்பாருங்கள்; உயிர்த்தெழுந்த என்னை நோக்கிப்பாருங்கள்; பரமேறிச் சென்று, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் என்னை நோக்கிப்பாருங்கள்; பரிதாபமான பாவியே! என்னை நோக்கிப்பார் என்று இயேசு கூறுகிறார்,” என்று அவர் பிரசங்கித்தார்.
10 நிமிடங்கள் பிரசங்கித்துவிட்டு சிறிது நேரம் அங்கேயே அப்படியே நின்றார். அதற்குமேல் அவரால் பிரசங்கிக்க முடியவில்லை. அவர் அங்கிருந்த 10 பேரையும் பார்த்தார். பின்னால் உட்கார்ந்திருந்த 15 வயது ஸ்பர்ஜனைக் கவனித்தார். ஸ்பர்ஜன் பிரசங்கியாரின் பிரசங்கத்தைக் கேட்டு பரவசமடைந்ததுபோல் தெரியவில்லை. பிரசங்கியார் தன் கையைப் பின்வரிசையில் உட்கார்ந்திருந்த சார்லஸை நோக்கி நீட்டி, “வாலிபனே, நீ பிரச்சினையில் இருக்கிறாய். நோக்கிப்பார், நோக்கிப்பார், நோக்கிப்பார். நீ இந்த வசனத்துக்குக் கீழ்ப்படியவில்லையென்றால் நீ இன்றும் என்றும் பரிதாபமாகவே இருப்பாய்; நீ செய்ய வேண்டியது ஒன்றெவொன்றுதான். இயேசுவை நோக்கிப்பார்த்துப் பிழைத்திரு,” என்றார்.
அங்கு அப்போதே சார்லஸ் ஸ்பர்ஜன் இயேசுவை நோக்கிப்பார்த்தார். தான் அதுவரை தன்னைத்தானே நோக்கிப்பார்த்துக்கொண்டிருந்ததை அந்தக் கணத்தில் அவர் உணர்ந்தார். தான் அதுவரை தன் பாவத்தையும், தன் அவமானத்தையும், பாவத்திலிருந்து விடுதலைபெற தான் எடுக்கும் முயற்சிகளிலுமே கவனமாக இருந்ததையும், கர்த்தராகிய இயேசுவை ஒருபோதும் நோக்கிப்பார்க்கவில்லை என்பதையும் அவர் கண்டார், ஒப்புக்கொண்டார். இயேசுவை நோக்கிப்பார்த்துப் பிழைத்தார். கருமேகம் கலைந்தது; இருள் விலகியது; அடிமைச்சங்கிலி உடைந்தது. சார்லஸ் ஸ்பர்ஜன் அன்று காலை 10.30 மணிக்கு அந்த ஆலயத்திற்குள் ஓர் அவிசுவாசியாக நுழைந்தார். 12.30 மணிக்கு அந்த ஆலயத்தை விட்டு ஒரு புதிய மனிதனாக வெளியேறினார். என்னே மாற்றம்! என்னே மனமாற்றம்! அவர் இளமையில் மிகவும் ஒழுக்கமான, நல்ல பையன்தான். குறும்புக்காரன் இல்லை, வால்தனம் இல்லை. ஆனால், இன்றுதான் அவருடைய இரட்சிப்பின் நாள். ஸ்பர்ஜனில் ஏற்பட்ட அற்புதமான மாற்றத்தை அவருடைய குடும்பத்தார் தெளிவாய்க் கண்டார்கள். தங்கள் மூத்த மகன் இரட்சிக்கப்பட்டதை அவருடைய பெற்றோர் கொண்டாடினார்கள்.
இரட்சிக்கப்பட்டவுடன் ஸ்பர்ஜன், “மகா உன்னதமானவரே! ஆராய்ந்தறியமுடியாதவரே! என் இருதயத்தை அறிந்தவரே! எல்லாவற்றையும் ஆராய்கிறவரே! என்னை உமக்கு ஜீவபலியாக ஒப்புவிக்கிறேன். நான் உம்முடையவன். என்னை உமக்குக் கையளிக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் எனக்காக வாழாமல், உமக்காக வாழ என்னை அர்ப்பணிக்கிறேன். நான் உயிருள்ளவரை உம்மைச் சேவிப்பேன். உம்மை அனுபவித்து, உம்மைத் துதிப்பேன்,” என்று தன்னைத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்.
அவர் ஞானஸ்நானம் பெற்ற நாளில், ஞானஸ்நானம் பெறுவதற்குமுன் இரண்டு மணிநேரம் ஜெபித்தார், பின் எட்டு மைல் தூரம் நடந்து சென்று, ஞானஸ்நானம் பெற்றார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்போது அவருக்கு வயது 15.
தான் பெற்ற இரட்சிப்பைப் பிறரும் பெற வேண்டும் என்ற தணியாத் தாகம் அவருக்கு அப்போதே இருந்தது. ஒரு வாரத்தில் 33 வீடுகளில் கைப்பிரதி கொடுத்துவந்த ஒரு சகோதரி அந்த ஊழியத்தை நிறுத்தியதால், ஸ்பர்ஜன் அந்த ஊழியத்தைச் செய்ய ஆரம்பித்தார். கைப்பிரதி கொடுக்கும் ஊழியம் தொடர்ந்தது. நான்கு மாதங்கள் ஆயிற்று. சனிக்கிழமைதோறும் 70 பேரைச் சந்தித்து ஐக்கியம்கொண்டார். ஆம், கைப்பிரதிகளைக் கொடுப்பதோடு நின்றுவிடாமல், அவர்களோடு உட்கார்ந்து ஆவிக்குரிய காரியங்களைபற்றிப் பேசினார். ஒரேவொருவர் மனந்திருப்புவது தேவனுடைய பார்வையில் எவ்வளவு அருமையானது என்பதை அப்போதே அவர் உணர்ந்திருந்தார்.
ஸ்பர்ஜன் தான் படித்துக்கொண்டிருந்த நியூ மார்க்கெட் என்ற ஊரிலிருந்த சபையில் ஞாயிறு பள்ளி ஆசிரியராக ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அந்த நாட்களில் ஞாயிறு பள்ளி மிகவும் வித்தியாசமாக இருந்தது. வழக்கமான பள்ளிகளில் சேர்ந்து படிக்க வசதியில்லாத, தெருக்களில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளையெல்லாம் ஒன்றாகக் கூட்டிச்சேர்த்து வழக்கமான பாடங்கள் சொல்லிக்கொடுத்தார்கள். அங்கு அவர்களுக்கு நற்செய்தியும் அறிவித்தார்கள். அவர் முதலாவது ஒரேவொரு வகுப்பு நடத்தினார். நாளடைவில் அவர் முழு ஞாயிறு பள்ளிக்கும் பாடம் நடத்தினார், நற்செய்தி அறிவித்தார். அப்போது அவருக்கு வயது 16. குழந்தைகளுக்காக ஆரம்பித்த ஞாயிறு பள்ளிக்கு, விரைவில், ஊரிலிருந்த பெரியவர்களும் வர ஆரம்பித்தார்கள். அவர் தேவனுடைய வார்த்தையை மக்கள் உள்ளத்தில் பதியுமாறு எளிமையாகவும், தெளிவாகவும் பிரசங்கித்தார். இந்த வரம் ஸ்பர்ஜனிடம் அப்போதே வெளிப்டையாக வேலைசெய்தது. தேவன் தனக்கு அந்த வரத்தைத் தந்திருக்கிறார் என்று ஸ்பர்ஜனுக்கும் தெரியும். எனவே, அவர், “தேவனே, என்னை உம்முடைய உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனாக மாற்றும். என் காலத்திலும், என் தலைமுறையிலும் நான் உம்மைக் கனம்பண்ணுவேன், வாழ்நாள் முழுவதும் உமக்கு ஊழியம்செய்வதற்காக நான் என்னை அர்ப்பணிக்கிறேன,” என்று ஜெபித்து, ஒப்புக்கொடுத்தார். கர்த்தர் ஸ்பர்ஜனின் ஜெபத்தைக் கேட்டு, அவரை வல்லமையாய்ப் பயன்படுத்தினார்.
ஸ்பர்ஜன் நல்ல தரமான உயர் கல்வியைப் பெற வேண்டும் என்று அவருடைய அப்பா, ஜேம்ஸ், விரும்பினார். ஆனால், அவரிடம் அதற்குரிய வசதி இல்லை. எனவே, அவர் ஸ்பர்ஜனை கேம்பிரிட்ஜ் நகரத்தில் திரு.லீடிங் என்பவர் நடத்திய தனியார் உறைவிடப் பள்ளியில் சேர்ந்தார். கல்விக் கட்டணமும், விடுதிக் கட்டணமும் கட்ட பணம் இல்லாததால், அந்தப் பள்ளியிலேயே சில வகுப்புகளில் அவர் பாடங்கள் கற்பித்தார். அதனால் வந்த வருமானத்தில் தேவையான கட்டணங்களைக் கட்டினார்.
ஸ்பர்ஜன் ஒரு புத்தகத்தைப் படித்தால், அதிலுள்ள எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்ததுபோல் நினைவில் வைத்துக்கொள்வார். அப்படிப்பட்ட அசாத்திய நினைவாற்றல் அவரிடம் இருந்தது. “அவருடைய நினைவாற்றல் ஒரு நிழற்படக்கருவிபோன்றது. படித்ததையும், பார்த்ததையும் படம் எடுத்தாற்போல் அவர் நினைவில் பதித்துக்கொண்டார்; அவைகள் தேயவில்லை. அவர் பஞ்சைப்போல் எல்லாவற்றையும் உறிஞ்சிக்கொண்டார்; அவைகளைத் தக்கவைத்துக்கொண்டார்,” என்று அவருடைய சகோதரர் கூறினார். அந்த அளவுக்கு ஸ்பர்ஜன் மிகவும் கொடைபெற்றவர்.
விரைவில், அவர் கேம்பிரிட்ஜில் இருந்த புனித அந்திரேயா சபையின் ஞாயிறு பள்ளியில் பிரசங்கிக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 16. அந்த ஞாயிறு பள்ளியின் பொறுப்பாளர் ஜேம்ஸ் வின்டர் 16 வயது வாலிபன் ஸ்பர்ஜனிடம் இருந்த பிரசங்கிக்கும் கொடையைக் காணத் தவறவில்லை. அவர் ஸ்பர்ஜனை அணுகி, “ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் பிரசங்கிக்க வருவாயா? வாலிபர் கூட்டத்தில் பிரசங்கிக்க வருவாயா?” என்று வருந்தி அழைத்தார். அதற்கு ஸ்பர்ஜன், “மன்னிக்கவும். என்னால் வர இயலாது. நான் ஒரு வாலிபன்,” என்று அழைப்பை ஏற்க மறுத்தார்.
ஆனால், எப்படியாவது ஸ்பர்ஜனை பிரசங்கிக்க வைக்க வேண்டும், கிராமப்புற ஊழியர்களில் பயன்படுத்த வேண்டும் என்று அந்தப் பொறுப்பாளர் தீர்மானித்தார். அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தார். ஒருநாள் அவர் ஸ்பர்ஜனிடம், “அருகிலிருக்கும் டெவெர்ஷாம் என்ற ஒரு கிராமத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் ஒரு வாலிபன் பிரசங்கிப்பான். நீ அவனோடு செல்ல வேண்டும்,” என்று கூறினார். ஸ்பர்ஜன் ஒப்புக்கொண்டார். இருவரும் புறப்பட்டார்கள். சில கிலோமீட்டர் தூரம் சென்றதும், பேச்சுவாக்கில், அந்த வாலிபன் ஸ்பர்ஜனிடம், “இன்று நீ அங்கு பிரசங்கிக்கப்போவதாக ஜேம்ஸ் கூறினார். நான் உனக்காக ஜெபிக்கிறேன். தேவன் உன்னையும், உன் பிரசங்கத்தைக் கேட்பவர்களையும் ஆசீர்வதிப்பார்,” என்றான். ஸ்பர்ஜன் அதிர்ச்சியுடன் திரும்பிப்பார்த்தார். “என்னது! நானா! இல்லை! நான் பிரசங்கிக்கப்போவதில்லை. நீதான் பிரசங்கிக்கப்போகிறாய்,” என்றார். அதற்கு அந்த வாலிபன், “என் வாழ்நாளில் நான் ஒருமுறைகூடப் பிரசங்கித்ததில்லை. எனக்குப் பிரசங்கிக்கத் தெரியாது. நீதான் பிரசங்கிப்பாய்,” என்றான். இது அந்தப் பொறுப்பாளரின் ஏற்பாடு. ஸ்பர்ஜன் மாட்டிக்கொண்டார். தப்பிக்க வழியில்லை. என்ன செய்வது? இதற்குமேல் வாக்குவாதம் செய்து பலனில்லை.
அவர்கள் அந்தக் கிராமத்தை வந்தடைந்தார்கள். வழியில் ஸ்பர்ஜன் தன் கண்களை வானதுக்குநேரே உயர்த்தி, “தேவனே! இன்று இரவு இந்த மக்களுடன் பேச உம் வார்த்தையைத் தாரும்,” என்று ஜெபித்தார். அது ஓர் அற்புதமான மாலை நேரம். அது ஓர் எளிய கிராமம், ஓர் எளிமையான கூடுகை, அங்கு கூடியிருந்த மக்கள் மிக எளிமையான விவசாயிகள். பத்து அல்லது பதினைத்துபேர் கூடியிருந்தார்கள். வீட்டுக்கூட்டம் என்றுகூடச் சொல்லலாம். “அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவர் விலையேறப்பெற்றவர்” என்று ஸ்பர்ஜன் தங்கு தடையின்றி, தயக்கமின்றி, தெளிவாக, எளிமையாகப் பிரசங்கித்தார். அந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.
கூட்டம் முடிவதற்குள், சபையில் இருந்த ஒரு மூதாட்டி, “கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார். உன் வயது என்ன?” என்று கேட்டார். ஸ்பர்ஜன், “கூட்டம் முடிவதற்குமுன் யாரும் இதுபோன்றவைகளைப் பேசக்கூடாது,” என்று சொல்லி, பாட்டுப் பாடி, ஜெபித்துக் கூட்டத்தை முடித்தார். அதன்பின் எல்லாரும் பேசத் தொடங்கினார்கள். அப்போது அந்த மூதாட்டி அதே கேள்வியைத் திரும்பவும் கேட்டார். அதற்கு ஸ்பர்ஜன், “Under sixty” என்றார். அதற்கு அந்த மூதாட்டி, “Yes, under sixteen,” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். மூதாட்டியும் வாய்விட்டுச் சிரித்தார்.
அவர் அந்த மக்கள்மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். எனவே, அவர் மீண்டும் அங்கு வந்து பிரசங்கிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்கள். ஆம், ஸ்பர்ஜன் தன் 16ஆவது வயதில் இவ்வாறு பிரசங்கிக்க ஆரம்பித்தார்; தொடர்ந்து பிரசங்கித்தார். சுற்றியிருந்த 13 கிராமங்களில் கிராமம் கிராமமாகச் சென்று கிராம ஊழியம் செய்தார். மழைக் காலத்தில் மழைச்சட்டை அணிந்துகொண்டு, இரவு நேரத்தில் கையில் விளக்கைப் பிடித்துக்கொண்டு, சில நேரங்களில் 10-12 கிலோமீட்டர் தூரம்கூட நடந்து சென்று, மாலை-இரவு நேரங்களில் கள்ளங்கபடில்லாத எளிய மக்களுக்கு அவர் மகிழ்ச்சியோடு உற்சாகமாக நற்செய்தி அறிவித்தார். அவர்கள் தேவனுடைய வார்த்தையை மனமுவந்து ஏற்றார்கள், அவர்களை முகமலர்ச்சியோடு வரவேற்றார்கள். இங்குதான் அவர் “குட்டிப் பிரசங்கியார்” என்று பேர் சூட்டப்பட்டார்.
1851ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் வாட்டர்பீச் என்ற ஒரு கிராமத்தில் இருந்த ஒரு சிறிய பாப்டிஸ்ட் சபையில் ஸ்பர்ஜன் பிரசங்கித்தார். அந்தச் சபையில் அப்போது நிரந்தரமான போதகர் இல்லாததால், அங்கிருந்த விசுவாசிகள், “நீங்கள் எங்கள் போதகராக இங்கு நிரந்தரமாகத் தங்கிவிடுங்களேன்!” என்று வேண்டினார்கள். தேவன் தன்னை ஊழியத்துக்கு அழைப்பதையும், அங்கு ஒரு தேவை இருப்பதையும் அறிந்த ஸ்பர்ஜன் அங்கு போதகரானார். தேவனுக்கும், அந்தக் கிராமத்து மக்களுக்கும் அவர் தன்னை அர்ப்பணித்தார். அப்போது அவருக்கு வயது 16. அவர் தன் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டார்.
இந்தக் கிராமத்தைப்பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். வாட்டர்பீச் கிராமத்துக்குப் பயங்கரமான கெட்ட பெயர் இருந்தது. அங்கு அவர்கள் மலிவான மதுவை சட்டவிரோதமாகத் தயாரித்தார்கள், விற்றார்கள், குடித்தார்கள். எனவே, வாட்டர்பீச் கிராமம் குற்றச்செயல்களின் இருப்பிடமாகவும், பிறப்பிடமாகவும் இருந்தது. குடிப்பழக்கத்தால் விளையும் அனைத்து வகையான சமூகப் பிரச்சனைகளும் அங்கு மலிந்து கிடந்தன. சண்டைகளுக்கும், கலவரங்களுக்கும், வன்முறைகளுக்கும் பஞ்சமேயில்லை.
16 வயதேயான ஸ்பர்ஜன் இப்படிப்பட்ட மக்களுக்கு ஊழியம் செய்யத் தன்னை அர்ப்பணித்தார். ஸ்பர்ஜனுக்கு அபாரமான நினைவாற்றல் உண்டு என்று நான் ஏற்கெனவே சொன்னேன். கிராமத்தில் இருந்த எல்லாருடைய பெயர்களும் அவருக்குத் தெரியும்; பெரியோர், சிறியோர் எல்லாரையும் பெயர்சொல்லி அழைக்கும் அளவுக்கு அவர்களைத் தெரியும்; ஒவ்வொருவரையும் தனித்தனியாகவும், குடும்பம் குடும்பமாகவும் தெரியும். எல்லோரோடும் அன்பாகவும், கனிவாகவும் பழகினார். ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்; குடும்பங்களில் போய்ச் சந்தித்தார். அவர்கள்மேல் அவர் அன்பும், கரிசனையும், அக்கறையும் காட்டினார்.
அவர் பிரசங்கித்தார். ஆரம்பத்தில் 40பேர்தான் சபைக்கு வந்தார்கள். சில மாதங்களுக்குப்பிறகு, 400ஆக உயர்ந்தது. நிறையப்பேர் வர ஆரம்பித்ததால், சபைக்குள் உட்காரப் போதுமான இடம் இல்லாததால், ஸ்பர்ஜன் அந்தச் சிறிய கட்டிடத்தின் அனைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்துவைத்தார். மக்கள் சபைக்கு வெளியே நின்று அவருடைய பிரசங்கத்தைக் கேட்டார்கள். அக்கிரமம் நிறைந்த அக்கிராமம் மிகக் குறுகிய காலத்தில் கிரமமான கிராமமாயிற்று. குடிகாரர்களும், கொடிய குணமுடையவர்களும் இரட்சிக்கப்பட்டார்கள், கிராமத்தில் இரட்சிப்பின் கொடி பறந்தது.
அந்தக் கிராமத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக்குறித்து ஸ்பர்ஜன் என்ன சொன்னார் தெரியுமா? “நான் இந்த ஊருக்கு வந்தபோது, கிராமத்தின் தெருக்களின்வழியாக நடந்தபோது, ஆண்கள் குடிபோதையில் தெருக்களில் விழுந்துகிடந்ததைக் கண்டேன். தெருக்களிலும், வீடுகளிலும் இடைவிடாத சண்டைசச்சரவுகள், மூர்க்கத்தனமான கோபம், கட்டுக்கடங்கா வன்முறை. ஆனால், இப்போது அதே தெருக்களில் நடக்கும்போது, மக்கள் தங்கள் வீடுகளில் தேவனைத் துதித்துப் பாடும் பாடல்களைக் கேட்கிறேன். எளிய குடிசைகளில் இரவில் மக்கள் குடும்பங்களாகக் கூடி ஜெபிப்பதையும், வேதாகமத்தை வாசிப்பதையும் பார்க்கிறேன்,” என்று கூறினார். அந்தக் கிராமத்தில் ஏற்பட்ட அபரிமிதமான, அற்புதமான மாற்றத்தைக் கண்டு ஸ்பர்ஜன் தேவனைத் துதித்தார். ஸ்பர்ஜன் நற்செய்தியின் வல்லமையை உணர்ந்தார். தேவனுடைய வார்த்தையின் அற்புதமான ஆற்றலை அனுபவித்தார்.
அவர் வேதாகமக் கல்லூரியில் படிப்பது நல்லது என்று அவருடைய அப்பாவும், நண்பர்களும் நினைத்தார்கள், அதற்கான ஏற்பாடுகளும் செய்தார்கள். ஆனால், தேவனே கதவுகளை அடைத்ததால், அவர் வேதாகமக் கல்லூரியில் சேர்ந்து படிக்கவில்லை.
ஒருநாள் வில்லியம் ஓல்னே என்பவர் இலண்டனிலிருந்து வாட்டர்பீச் சபைக்கு வந்தார். அவர் இலண்டனில் இருந்த நியூ பார்க் ஸ்ட்ரீட் சபையில் ஓர் உதவிக்காரர். பிரபலமான பிரசங்கியும், எழுத்தாளருமான பெஞ்சமின் கீச் இந்தச் சபையில் போதகராக ஊழியம் செய்தார்; வேத வல்லுனரும், முழு வேதகாமத்திற்கும் விளக்கவுரை எழுதிய ஜான் கில் இங்கு 51 வருடங்கள் ஊழியம் செய்தார்; வல்லமையான பிரசங்கியும், புகழ்பெற்ற பாடல்புத்தகத்தை உருவாக்கியவருமான ஜாண் ரிப்பன் இங்கு 63 ஆண்டுகள் ஊழியம் செய்தார். இவ்வளவு பெருமைக்குரிய சபையின் மூப்பர்களில் ஒருவர்தான் வில்லியம் ஓல்னே. அவர் ஸ்பர்ஜனைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவருடைய பிரசங்கத்தைக் கேட்கவும், அவரைப் பார்த்துப் பேசவும் வந்திருந்தார். ஏனென்றால், அந்தச் சபையில் சில மாதங்களாகப் போதகர் இல்லை. அவர்கள் தங்கள் சபைக்கு ஒரு நல்ல போதகரைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.
கூட்டம் முடிந்தபின் தங்கள் சபைக்குப் பிரசங்கிக்க வருமாறு அவர் ஸ்பர்ஜனை அழைத்தார். ஸ்பர்ஜன், “நீங்கள் தேடும் ஸ்பர்ஜன் ஒருவேளை வேறு நபராக இருக்கக்கூடும். ஏனென்றால், எனக்கு 19 வயதுதான் ஆகிறது. நீங்கள் ஒருவேளை வயதான ஒருவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கக்கூடும்,” என்று சொல்லி மறுத்தார். அதற்கு வில்லியம், “இல்லை, நான் உங்களைத்தான் தேடி வந்தேன்,” என்றார்.
1853ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 18ஆம் தேதி, தன் 19ஆவது வயதில், நியூ பார்க் ஸ்ட்ரீட் சபையில் பிரசங்கிக்க அவர் ஒப்புக்கொண்டார். அதற்கு முந்தைய நாளே அவர் இலண்டனுக்குச் சென்றுவிட்டார். இலண்டன் அவருக்கு மிகவும் வித்தியாசமாகத் தோன்றியது. வாட்டர்பீச் மிக அழகான சிறிய கிராமம். சின்னச்ச்சிறு குடிசைவீடுகள், ஏழைஎளிய மக்கள், பாமரத்தனமான விவசாயிகள். இலண்டனில் பெரிய தொழிற்சாலைகள், ஆடம்பரமான விடுதிகள். சபைக்குப் பக்கத்தில் ஒரு மதுபான ஆலை. அந்த ஆலையருகே ஆலைத் தொழிலாளர்களின் வரிசையான சிறு வீடுகள். அவர்கள் வறியவர்கள்; சமுதாயத்தில் தாழ்வானவர்கள்; வசதியில்லாதவர்கள். இன்னொரு புறம், பெரும் செல்வந்தர்களும் இருந்தார்கள். இவர்கள் தொழிற்சாலையின் உரிமையாளர்கள். அவர் தங்கியிருந்த விடுதியில் அவருடைய கிராமத்தான் தோற்றத்தைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அவரைக் கிண்டல்செய்தார்கள்.
அடுத்த நாள் சபைக்குச் சென்றார். தேம்ஸ் நதிக்கரையோரம் இருந்தது. சபையின் தோற்றம் மிகவும் பிரமாண்டமாக இருந்தது. அங்கு கோர்ட் சூட் போட்டுக்கொண்டு கொஞ்சப்பேர் உட்கார்ந்திருந்தார்கள். அந்தச் சபைக் கட்டிடத்தில் 1200 பேர் அமரலாம். ஆனால், அன்று சுமார் 100 பேர்தான் கூடியிருந்தார்கள். சபையார் ஸ்பர்ஜனை ஒரு நூதனப் பிறவியைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள். அதற்குக் காரணம் அவருடைய வயது. அவர் 19 வயது வாலிபன். “எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் ஊழியம் செய்த சபை. இந்தப் பொடியனைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தப் பொடிப்பையன் என்னத்தைப் பிரசங்கிக்கப் போகிறான்?” என்று அவர்கள் ஸ்பர்ஜனை விமரிசித்தார்கள். அவருடைய பிரசங்கத்தைக் கேட்டபின் அவர்களுடைய நாவுகள் அவர்களுடைய மேல்வாயோடு ஒட்டிக்கொண்டன.
அன்று காலை ஆராதனைக்கு வராதவர்களைத் தேடிப்போய்க் கண்டுபிடித்து, அவர்களை மாலை ஆராதனைக்கு வருமாறும், வந்து இந்தக் கிராமத்து வாலிபனின் பிரசங்கத்தைக் கேட்குமாறும் அவர்கள் வலிந்து அழைத்தார்கள். வராதவர்கள் வந்தார்கள், பொடியனின் பிரசங்கத்தைக் கேட்டார்கள், பிரமித்தார்கள், வாயடைத்துப்போனார்கள். அவர்கள் தங்கள் சபைக்கு நிரந்தரமான ஒரு போதகரைத் தேடும் படலத்தில் நிறையப்பேரை அழைத்துவந்தார்கள். ஆனால், ஒருமுறை பிரசங்கித்தவரை அடுத்தமுறை அவர்கள் அழைக்கவில்லை. நிராகரித்தார்கள். ஆனால், ஸ்பர்ஜனை அவர்கள் மீண்டும் அழைத்தார்கள். அவர் வந்தார், பிரசங்கித்தார்; சபை விசுவாசிகளும், உதவிக்காரர்களும், “நீங்கள் எங்கள் போதகராக வர வேண்டும்,” என்று அழைத்தார்கள்.
வாட்டர்பீச் விசுவாசிகளை விட்டுப் பிரிவது அவருக்கும், அங்கிருந்த விசுவாசிகளுக்கும் கடினமாக இருந்தது. அவர்களுக்குப் பேரிழப்பு. ஆயினும், இவ்வளவு கொடைபெற்ற ஸ்பர்ஜனை தங்கள் கிராமத்திற்குள் அடக்கக்கூடாது என்பதால் அவர்கள் கனத்த இதயத்தோடு அவரை வழியனுப்பினார்கள். அவர் வாட்டர்பீச் சபையில் இரண்டு ஆண்டுகள் ஊழியம் செய்தார்.
நியூ பார்க் ஸ்ட்ரீட் சபையில் அவர் மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாக ஊழியம் செய்ய ஒப்புக்கொண்டார். தகுதிகாண்பருவம். மூன்று மாதங்களுப்பின் சபை விசுவாசிகளும், அவரும் விரும்பினால் அங்கு தொடர்ந்து ஊழியம் செய்யலாம் என்று முடிவுசெய்தார்கள். அவருடைய வாலிபமும், முதிர்ச்சியும் கேள்விக்குள்ளானது. ஆனால், 1854ஆம் ஆண்டு நியூ பார்க் ஸ்ட்ரீட் சபையில் ஆரம்பித்த ஊழியம் அவருடைய வாழ்நாள் முழுவதும் நீடித்தது.
மூன்று மாதங்களுக்குப்பின் அவர் அந்தச் சபையின் போதகராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 19. இரட்சிக்கப்பட்டு 4 ஆண்டுகளே ஆயிருந்தன. சபையார் தன்னைப் போதகராகப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சொன்னபோது, தேவன் தன்னை ஏற்கெனவே பிரதிஷ்டை செய்துவிட்டார் என்று ஸ்பர்ஜன் சொன்னார். எக்ஸ்டெர் அரங்கத்தில் கூட்டம்
சபையில் காலை மாலைக் கூட்டங்களில் மக்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது. இடம் போதாததால் கட்டிடத்தை விரிவுபடுத்திக் கட்டத் தொடங்கினார்கள். அந்த நேரத்தில் எக்ஸ்டெர் என்ற ஓர் அரங்கத்தில் சபையாகக் கூடினார்கள். அந்த அரங்கத்தில் 4000 பேர் உட்காரலாம், 1000 பேர் நிற்கலாம். விரிவாக்கப் பணி முடிந்தபிறகும் புதிய கட்டிடத்தில் 1500பேர்தான் உட்கார முடிந்தது. எனவே, காலையில் சபைக் கட்டிடத்திலும், மாலையில் எக்ஸ்டெர் அரங்கத்திலும் தொடர்ந்து கூடினார்கள்.
1856ஆம் ஆண்டு ஸ்பர்ஜன் தன் 21ஆவது வயதில் சூசன்னா தாம்ப்ஸன் என்ற பெண்ணைத் திருமணம்செய்தார். அவர்களுடைய திருமணத்திற்குமுன் இருவரும் ஒரு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இது ஒரு சுவையான சம்பவம். இலண்டனில் ஒரு பெரிய அரங்கத்தில் ஒரு பிரசங்கியாருக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்பர்ஜன் அந்தக் கூட்டத்தில் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். அந்தக் கூட்டத்துக்கு அவர் சூசன்னாவை தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவுசெய்தார். இருவரும் நிகழ்ச்சிக்குப் போனார்கள். பெரிய அரங்கத்துக்குள் நுழைந்தார்கள். அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தார்கள். ஸ்பர்ஜன் பேச வேண்டும். சூசன்னா அங்கு இருப்பதை மறந்துவிட்டு ஸ்பர்ஜன் நேரே பேசுவதற்குப் போய்விட்டார். சூசன்னா தனியாக வாசலில் நின்றார். ஸ்பர்ஜன் அங்கிருந்த மக்களுடன் பேசிக்கொண்டே நடந்தார். அங்கு அப்போது பிரசங்கிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத்தவிர வேறு எண்ணம் அவருக்கு இல்லை. சூசனாவைப்பற்றிய கடுகளவு எண்ணம்கூட அவரிடம் இல்லை. சூசன்னாவால் கூட்டத்துக்குள் முண்டியடித்துச்செல்ல முடியவில்லை. அவருக்குத் தர்மசங்கடமாக இருந்தது. தன்னை இங்கு அழைத்து வந்து, தனியாக விட்டுவிட்டு, தான் இருப்பதே தெரியாமல், தன் பிரசங்கத்திலேயே குறியாக இருந்த ஸ்பர்ஜன்மேல் கடும்கோபம். அதற்குமேல் அங்கு இருப்பதில் எந்தப் பொருளும் இல்லை என்று முடிவுசெய்து, விருட்டென்று வெளியேறி, ஒரு வண்டியைப் பிடித்து வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டிற்கு வந்ததும், அவருடைய அம்மா, “என்ன, இவ்வளவு சீக்கிரமாகத் திரும்பிவந்துவிட்டாய்?” என்று ஆச்சரியமாகக் கேட்டார். சூசன்னா நடந்ததை விவரித்தார். அதைக் கேட்ட அவருடைய அம்மா, “நீ மிகவும் அசாதாரணமான ஒரு மனிதனைத் திருமணம் செய்யப்போகிறாய். தேவனுடைய ஊழியத்தில் இந்த மனிதனை ஒருபோதும் தடைசெய்யாதே. ஏனென்றால், இவர் தேவனுடைய வேலைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்,” என்று எடுத்துரைத்தார். சூசன்னா இந்த நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்டார். பின்னாட்களில் அவர், “ஸ்பர்ஜன் தேவனுடைய ஊழியக்காரர். அவர்மேல் எனக்கிருக்கும் உரிமையை நான் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்,” என்று கூறினார்.
இருவரும் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள்தான். ஸ்பர்ஜன் தலைசிறந்த தலைவர்; வீறுமிகு போதகர். தன் அர்ப்பணிப்பிலும், தேவனுக்குச் செய்யும் பணியிலும், தேவ மக்களுக்குச் செய்யும் சேவையிலும் தளராதவர், பின்வாங்காதவர். ஆயினும், அவர் மிகவும் இளகிய இதயம் கொண்டவர், மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவர். அவருக்குள் நிறைய போராட்டங்கள் இருந்தன. தன்னைச்சுற்றி நடந்த சம்பவங்களால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். அப்படிப்பட்ட நேரங்களில் சூசன்னா அவருக்குப் பாறைபோல் இருந்தார். சூசன்னா அவருக்கு எல்லா வகையிலும் உதவினார், தொடர்ந்து ஜெபித்தார். அவர் ஸ்பர்ஜனுக்கு ஆறுதலாகவும், தேறுதலாகவும் இருந்தார். ஸ்பர்ஜனின் ஊழியத்தில் சூசன்னாவுக்கும் பெரிய பங்கு உண்டு. சார்லஸ் ஊழியத்தில் பரபரப்பாக இருந்ததால் சூசன்னா பல வேளைகளில் தனியாக இருந்தார். போதகரின் நிச்சயதார்த்தத்தில் அவர் கற்றுக்கொண்ட அந்தப் பாடம் அவருடைய எதிர்கால வாழ்க்கைக்கு அவரைத் தயார்படுத்தியது.
இருவரும் ஒருவருக்கொருவர் இசைந்திருந்தார்கள். ஒருமுறை சூசன்னா உறங்கிக்கொண்டிருந்தார். ஸ்பர்ஜனும் உறங்கிக்கொண்டிருந்தார். ஆனால், ஸ்பர்ஜன் தூக்கத்தில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். சூசன்னா எழுந்து ஒரு பேனாவையும், தாளையும் எடுத்து, அவர் சொல்லிக்கொண்டிருந்ததை எழுதினார். அன்று சனிக்கிழமை. அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. காலையில் ஸ்பர்ஜன் எழுந்ததும் தான் எழுதி வைத்திருந்த குறிப்புகளை ஸ்பர்ஜனிடம் கொடுத்தார். அன்று அதுதான் பிரசங்கம்.
அவருடைய பிரசங்கத்தில் செயற்கைத்தன்மை கிடையாது, இயல்பாகப் பேசினார்.
ஒரு கட்டத்தில் எக்ஸ்டெர் அரங்கத்தில் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. அந்தச் சூழ்நிலையில், சர்ரே கார்டன் மியூசிக் அரங்கம் என்ற அதைவிடப் பெரிய இடத்தில் கூட்டம் நடத்தத் திட்டமிட்டார்கள். அதில் மூன்று அடுக்குகள் இருந்தன. மொத்தம் 10000 பேர் உட்காரலாம். அந்த நாட்களில் ஒலிபெருக்கி கிடையாது. ஓங்கி ஒலிக்கும் வெண்கலக்குரலில் அவர் கணீரென்று பேசினார். அமர்ந்திருப்பவர்கள் ஆடாமல் அசையாமல் கேட்டார்கள். வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள்
அந்தக் கலையரங்கத்தில் முதன்முதலாக 1856ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி மாலை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தார்கள். கலையரங்கத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே எல்லாரும் வந்துவிட்டார்கள். அரங்கத்திற்கு வெளியேயும் மக்கள் திரளாக நின்றுகொண்டிருந்தார்கள். அவருடைய பிரசங்கத்தைக் கேட்க மக்கள் நாலாதிசைகளிலிருந்தும் அங்கு திரண்டிருந்தார்கள். அப்போது ஸ்பர்ஜனுக்கு வயது 22. அவ்வளவு மக்களைப் பார்த்ததும் ஸ்பர்ஜன் உள்ளம் உருகினார். ஸ்பர்ஜன் ஜெபிக்க ஆரம்பித்தார்; ஆரம்பித்தபோது, மேல்தளத்தில் யாரோவொருவர் “தீ, தீ” என்று உரக்கக் கத்தினார். மக்கள் பீதியில் நாலாபக்கமும் ஓட ஆரம்பித்தார்கள். கீழ்தளத்தில் இருந்தவர்கள் வாசலைநோக்கி ஓடுவதை மேல்தளத்தில் இருந்தவர்கள் பார்த்தார்கள். “மேல் தளம் இடிக்கிறது. கட்டிடம் இடிந்து விழுகிறது” போன்ற குரல்கள் கேட்டன. இப்போது எல்லாரும் தப்பிப்பதற்காக வெளியே ஓட ஆரம்பித்தார்கள். படிகளில் முண்டியடித்துக்கொண்டு இறங்கினார்கள். ஒரு பக்கத்தில் இருந்த படிகள் உடைய ஆரம்பித்தன. குழப்பம், கூச்சல்! என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஸ்பர்ஜன் அமைதிப்படுத்த முயன்றார், அங்கலாய்த்தார், தவித்தார், கதறினார், மயங்கி விழுந்தார்.
ஒரு தளம் இடிந்து விழுந்தது. மக்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கீழே குதித்தார்கள். உண்மையாகவே தீ விபத்து ஏற்பட்டவில்லை. கூட்ட நெரிசலில், கீழே விழுந்தவர்கள் மிதிபட்டார்கள். 7 பேர் மிதிபட்டு இறந்தார்கள். 28பேர் படுகாயமடைந்தார்கள். ஸ்பர்ஜனின் உள்ளம் உடைந்தது. இந்தப் பாதிப்பிலிருந்து அவர் வாழ்நாள் முழுவதும் மீளவேயில்லை. ஏனென்றால், அவர் தன் வாழ்நாளெல்லாம் கூட்ட நெரிசலைக் கண்டபோது பதறினார்.
இந்த அசம்பாவிதத்துக்குப்பின் செய்தித்தாள்கள் அவரை ஈவுஇரக்கமின்றி சிதைத்துச் சின்னாபின்னமாக்கின. “செத்துக்கொண்டிருந்தவர்களும், காயப்பட்டவர்களும் உதவி கேட்டு கதறியபோதும் , அவர் உதவ முன்வராமல் பிரசங்க மேடையிலிருந்து பிரசங்கித்துக்கொண்டிருந்தார்,” என்று அவரைப்பற்றி அவதூறு பரப்பின. அவரைப்பற்றி எதிர்மறையான கட்டுரைகளை எழுதினார்கள். ஆனால், இந்த அசம்பாவிதலிலிருந்து ஸ்பர்ஜன் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டார். ஸ்பர்ஜனுக்கு அப்போது வயது 22தான்.
இந்த அசம்பாவிதத்திற்குப்பின் முன்பு இருந்ததைவிடப் பெரிய கட்டிடம் கட்டத் தீர்மானித்தார்கள். இது ஒரு பாடம். தனக்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்பதைப்பற்றியோ, தன் பெயருக்கு களங்கம் ஏற்படுவதைப்பற்றியோ கவலைப்படக்கூடாது என்பது அவர் கற்ற இன்னொரு முக்கியமான ஒரு பாடம். அது மட்டும் அல்ல. அதன்பின், இத்தனை திரளான மக்களுக்குப் பிரசங்கிப்பது எவ்வளவு பெரிய பாரம், பொறுப்பு, உத்தரவாதம் என்பதைப் புரிந்துகொண்டார்.
எனவே, அவருடைய பிரசங்கத்தைக் கேட்கத் திரண்டிருந்த மக்களுக்குப் பிரசங்கிப்பதற்குமுன் அவர் மிக உருக்கமாகவும், ஊக்கமாகவும் ஜெபித்தார். ஜெபித்து முடித்தபின் அவரால் பல வேளைகளில் எழுந்துநிற்க முடியவில்லை. மூப்பர்கள் அவரைத் தூக்கிக்கொண்டுபோய் பிரசங்க மேடையில் நிறுத்தினார்கள். அந்த அளவுக்குப் பொறுப்பின் சுமை, உத்தரவாதம், அவரை நசுக்கியது, அழுத்தியது, அமுக்கியது. அதே நேரத்தில், தன் பிரசங்கத்தைக் கேட்கும் ஆத்துமாக்களுக்காக, அவர்களுடைய இரட்சிப்புக்காகத் தவிப்போடு தேவனிடம் கதறினார். பிரசங்க மேடைக்குச் சென்றபின் தெளிவாகவும், வல்லமையாகவும் பிரசங்கித்தார். அது இடி முழக்கமா, இளம் தென்றலா, சுடும் நெருப்பா என்பது கேட்பவர்களைப் பொறுத்தது. உறுதியோடும், உரத்தோடும் பிரசங்கித்தார். பிரசங்கித்தபின் அவர் மீண்டும் தேவனுக்குமுன் சென்று ஒரு சிலரையாவது இரட்சிக்குமாறும், விதைக்கப்பட்ட விதைகள் பலனளிக்குமாறும் பாரத்தோடு வேண்டினார்.
கூட்டத்தின் முடிவில் ஸ்பர்ஜன் மக்களை முன்னால் வருமாறு அழைக்கவில்லை; அல்லது கையை உயர்த்தவோ, எழுந்து நிற்கவோ சொல்லவில்லை. மாறாக, “நீங்கள் தனியாக ஓர் அறைக்குச் சென்று, அமைதியாக அமர்ந்து தேவனிடம் பேசுங்கள்; வீட்டிற்குப் போய் தேவனைத் தேடுங்கள்,” என்று சொன்னார். பிரசங்கத்தின் பிற்பகுதியில் ஒவ்வொருவரும் இயேசுவை ஏற்றுக்கொள்ளுமாறும், தங்களைத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்குமாறும் உற்சாகப்படுத்தினார், மன்றாடினார்.
1857, அக்டோபர் 7. அவர் crystal palace என்ற இடத்தில 24,000 மக்களுக்குப் பேசினார். அவர் அந்தக் கூட்டத்தில் பேசுவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்குமுன் அங்கு போய் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். அப்போது எங்கு நின்று பேசினால் எல்லாரும் கேட்க முடியும் என்பதை, “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்ற வசனத்தைச் சொல்லி சரிபார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த அரங்கத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த ஒருவர் அதைக் கேட்டு மனந்திரும்பினார்.
செவ்வாய்க்கிழமைகளில் அவர் தன் வீட்டில் மக்களைச் சந்தித்தார். புதிதாக இரட்சிக்கப்பட்டவர்களும், ஆலோசனை தேவைப்பட்டவர்களும் அவரைச் சந்தித்துப் பேசினார்கள். மனந்திரும்பிய மக்களின் சாட்சிகளைக் கேட்டு அவர் கர்த்தரைத் துதித்தார். வந்தவர்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் கூறினார். தேவனுடைய இரட்சிப்பின் வழியை அவர்களுக்கு விவரித்தார். அவர்கள் உண்மையிலேயே இரட்சிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தினார். செவ்வாய்க்கிழமைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நாளடைவில் எல்லாரையும் ஸ்பர்ஜனால் சந்திக்க முடியாததால், ஸ்பர்ஜனைச் சந்திக்க விரும்பியவர்களும், சபையின் உறுப்பினராக விரும்பியவர்களும், முதலாவது அங்கிருந்த மூப்பர்களைச் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் அவர்களுடைய ஆவிக்குரிய நிலைமையைப் புரிந்துகொண்டார்கள். அதன்பின்தான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதைப்பற்றியும், சபையில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்வதைப்பற்றியும் முடிவெடுத்தார்கள்.
ஒருவன் தான் இன்னும் நரகத்தின் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, பரலோகப் பாதைக்குத் திரும்பிவிட்டதாகத் தப்பித்தவறிகூட நினைத்துவிடக்கூடாது என்பதில் ஸ்பர்ஜன் குறியாக இருந்தார். எனவே, இரட்சிக்கப்பட்டதாகச் சொன்னவர்களோடு பேசுவதற்கும், அதை நிதானிப்பதற்கும் அவர் தன் சபை விசுவாசிகளுக்குப் பயிற்சியளித்தார். ஞானஸ்நானம் பெறவும், சபையில் உறுப்பினராகவும் விரும்பியவர்களிடம் மூன்று முக்கியமான காரியங்களைத் தெளிவாக்கினார்கள்.
அவர்கள் தாங்கள் பாவி என்பதையும், தங்கள் பாவங்களையும் அறிந்திருக்க வேண்டும். தங்கள் சொந்தப் பாவங்கள் தங்களுக்குத் தெரியாவிட்டால் தாங்கள் பாவிகள் என்று எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? எப்படி மனந்திரும்புவார்கள்? பாவி என்ற உணர்வு இல்லையென்றால், அவர்கள் எப்படிச் சிலுவையில் மரித்து. இரத்தம் சிந்திய இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள முடியும்?
அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? எந்த மாற்றமும் ஏற்படவில்லையென்றால் அவர்களில் மனமாற்றம் ஏற்படவில்லை என்று பொருள். உண்மையாக மனந்திரும்பியிருந்தால், அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். அவர்கள் வித்தியாசமானவர்களாக மாறியிருப்பார்கள். அவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருப்பார்கள். பாவத்தின்மேல் வெற்றிபெற ஆரம்பித்திருப்பார்கள், புதிய பழக்கங்களை ஆரம்பித்திருப்பார்கள். அவர்களுடைய மனப்பாங்கு மாறத் தொடங்கியிருக்கும். தேவனுடைய வார்த்தையின்மேல் பசிதாகம் வந்திருக்கும். ஆத்தும பாரம் ஏற்பட்டிருக்கும்.
3.அவர்கள் கிருபை என்றால் என்னவென்று சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இரட்சிப்பு தங்கள் முயற்சியாலோ, பக்தியாலோ, சக்தியாலோ, புத்தியாலோ, நன்மையாலோ ஆனதல்ல என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது கர்த்தராகிய இயேசுவைப்பற்றும் விசுவாசத்தால் மட்டுமே.
இந்த மூன்று விஷயங்களை அவர்கள் வலியுறுத்தினார்கள். இந்த மூன்று காரியங்களில் தெளிவில்லாதவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை; சபையில் உறுப்பினர்களாகச் சேர்க்கவில்லை. உண்மையாகவே மறுபடி பிறந்தவர்களை மட்டுமே அவர்கள் சபையின் உறுப்பினர்களாகச் சேர்த்தார்கள். தெளிவில்லாதவர்கள் ஞாயிறு வகுப்புகளில் கலந்துகொண்டு தெளிவடைந்தார்கள். அதன்பின் ஞானஸ்நானம் பெற்றார்கள். சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
சபையில் இருந்த 6000விசுவாசிகளின் பெயர்கள் அவருக்குத் தெரியும். ஒவ்வொருவரையும் அவரை தனித்தனியாக அறிந்திருந்தார். அந்தச் சபையில் விசுவாசிகள் இதுவரை எந்தச் சபைக்கும் செல்லாதவர்கள், இதுவரை கிறிஸ்துவை அறியாதவர்கள். புதியவர்கள். சபையில் படித்தவர்கள், படிக்காதவர்கள், தலைவர்கள், சாமான்யர்கள், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள், என எல்லா வகையான மக்களும் இருந்தார்கள். ஆப்பிரிக்காவில் மிஷனரியாக ஊழியம் செய்த டாக்டர் டேவிட் லிவிங்ஸ்டன், “நான் ஆப்பிரிக்காவில் சிலருக்கு நற்செய்தியை அறிவிக்கிறேன். ஆனால், ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தேவனுடைய நற்செய்தியைத் தெளிவாகவும், வல்லமையாகவும் பிரசங்கிக்கிற சார்லஸ் ஸ்பர்ஜனைத் தேவன் எழுப்பியிருக்கிறார் என்பதை நினைக்கும்போதெல்லாம் நான் பரவசமாகிறேன்,” என்று சொன்னார்.
சபையில் விசுவாசிகளின் எண்ணிக்கை அதிகமானதால், இலண்டனில் ஊழியத்தை ஆரம்பித்து இரண்டு வருடங்களில், ஒரு புதிய கட்டிடம் கட்டத் தீர்மானித்தார்கள். நியூயிங்டன் பட்ஸ் என்ற இடத்தில் நிலம் வாங்கிக் கட்டிடம் கட்டத் தொடங்கினார்கள். கட்டிடம் கட்டிக்கொண்டிருக்கையில் கூட்டங்கள் தொடர்ந்து எக்ஸ்டெர் அரங்கத்தில் நடைபெற்றன. 1859ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அன்று ஸ்பர்ஜனும், அவருடைய அப்பாவும் பேசினார்கள்.
ஸ்பர்ஜனின் பிரசங்கம் ஒவ்வொரு வாரமும் ஒரு சிறு புத்தகமாக வெளியிடப்பட்டது. அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் என ஐரோப்பா முழுவதும் அவர் பிரசங்கித்தார். அவருடைய புத்தகங்கள் இங்கிலாந்தில் மட்டும் அல்ல, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துபோன்ற பல நாடுகளிலும் விற்பனையாயிற்று. இவ்வாறு, கட்டிடம் கட்டுவதற்குத் தேவையான பணம் சேர்க்கப்பட்டது. 6000 பேர் உட்காரக்கூடிய அளவுக்கு ஒரு பெரிய கட்டிடம் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. பிரசங்கத்தை எல்லாரும் தெளிவாகக் கேட்பதற்கும், பிரசங்கியாரை எல்லாரும் தெளிவாகப் பார்ப்பதற்கும் ஏற்றாற்போல் கட்டிடம் கட்டப்பட்டது. அசம்பாவிதம் ஏற்பட்டால், உடனே வெளியேறுவதற்கு வசதியாக விசாலமான வாசல்கள் இருந்தன. கூடும் அரங்கம், விரிவுரை அரங்கம், ஞாயிறு பள்ளி நடத்த வசதியான இடம், சமையலறை என கட்டிடம் விசாலமாக இருந்தது.
1861ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி மெட்ரோபொலிட்டன் டபெர்னாகில் கட்டி முடிக்கப்பட்டு முதல் கூட்டம் அங்கு நடைபெற்றது. அப்போது ஸ்பர்ஜனுக்கு வயது 26. “இந்தக் கட்டிடம் இருக்கும்வரை, இங்கு தேவனை ஆராதிக்க மக்கள் கூடும்வரை, ஆண்டவராகிய இயேசு மட்டுமே இதன் மையமாக இருப்பார். இயேசுவே நம் விசுவாசப்பிரமாணம். இயேசுவே நம் நற்செய்தியின் முழுமொத்தம், இயேசுவே முழு வேதவாக்கியங்களின் கருப்பொருள், இயேசுவே மாம்சத்தில் வெளிப்பட்ட சத்தியம், இயேசுவே வழி, சத்தியம், ஜீவன்,” என்று பிரசங்கித்தார். அவர் நித்தியத்துக்குள் நுழையும்வரை 31 ஆண்டுகள் இங்கு தேவனையும், தேவ மக்களையும் உண்மையும் உத்தமுமாய்ச் சேவித்தார்.
மெட்ரோபொலிட்டன் டபெர்னாகில் ஒரு பெரிய கட்டிடம். அதை ஞாயிற்றுக்கிழமை கூடுவதற்காக மட்டும் பயன்படுத்திவிட்டு, வாரத்தின் பிற நாட்களில் பூட்டிவைத்திருப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை. வாரம் முழுவதும் அதைப் பயன்படுத்த விரும்பினார்கள். இலண்டன் சமூகத்திற்கும் தங்களால் என்னென்ன வழிகளில் பங்காற்றலாம் என்று அவர்கள் சிந்தித்தார்கள்.
போதகர்களையும், பிரசங்கிகளையும், சபைத் தலைவர்களையும் பயிற்றுவிக்க அவர் போதகர்கள் கல்லூரியை நிறுவினார். கல்லூரியில் பயிற்சி பெற மூன்று நிபந்தனைகள்: 1. அவர்கள் உண்மையாகவே மறுபடி பிறந்திருக்க வேண்டும், 2. ஊழிய அழைப்பைப் பெற்றிருக்க வேண்டும், 3. இரண்டு ஆண்டுகள் ஊழியம் செய்திருக்க வேண்டும். அவர்களுடைய பணிவிடை இன்னும் பொருளுள்ளதாகவும், பலனுள்ளதாகவும் இருக்க அவர் உதவ விரும்பினார். இரண்டு வருடப் பயிற்சி. ஆனால், இரண்டு வருடப் பயிற்சிக்குப்பின் தேர்வுகள் கிடையாது, பட்டமளிப்பு விழா கிடையாது, எந்தப் பட்டமும் கிடையாது. அந்தக் கல்லூரியில் அதிகமான இறையியல் கற்றுக்கொடுக்கவில்லை. அவர் நடைமுறைக்குறிய காரியங்களைக் கற்பித்தார்.
அங்கு பயிற்சி பெற்றவர்கள் ஸ்பர்ஜனின் பிரசங்கங்களைக் கேட்பதற்கும், அவருடைய ஆலோசணையைப் பெறுவதற்கும், சபையில் ஊழியம் செய்வதற்கும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. கல்லூரிக்கு ரோகஸ் என்பவர் முதல்வராக இருந்தார். இந்தக் கல்லூரியில் பயிற்சி பெற வந்தவர்களில் பெரும்பாலோர் மிகவும் ஏழ்மையான பின்புலத்தைச் சார்ந்தவர்கள். எனவே, பயிற்சிபெற வந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்கள். இவர்களுக்கும் ஸ்பர்ஜனுக்கும் தனிப்பட்ட முறையில் அற்புதமான உறவு இருந்தது. வாரத்திற்கு இருமுறை அவர் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினார். அவருடைய விரிவுரைகள், அறிவுரைகள் இப்போது இணையத்தில் கிடைக்கின்றன. அவைகளை வாசிக்கும்போது, அவருடைய நகைச்சுவை, அறிவுக்கூர்மை, தெளிவு, பாரம் ஆகியவை தெளிவாகத் தெரிகின்றன. இங்கு பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கானவர்கள் இலண்டன் முழுவதும் சென்று நற்செய்தி அறிவித்து, ஆத்துமாக்களை ஆதாயம்செய்தார்கள். சபைகள் இல்லாத இடங்களில் சபைகளை நிறுவினார்கள். அமெரிக்கா, டர்கஸ் ஹயாட்டி தீவுகள், சீனா, ஸ்பெயின், கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துபோன்ற பல நாடுகளுக்குச் சென்று ஊழியம் செய்தார்கள். 1892இல் அவர் இறக்கும்போது, போதகர்களின் கல்லூரியில் 863பேர் பயிற்சிபெற்றிருந்தார்கள்.
போதகர்கள் கல்லூரியில் நேரடியாகச் சேர்ந்து படிக்கச் முடியாதவர்களுக்காக மாலை வகுப்புகள் நடத்தினார்கள்.
1870இல் மெட்ரோபொலிட்டன் டபெர்னாகில்லுக்குப் பின்புறம் போதர்களுக்கான கல்லூரி தனியாகக் கட்டப்பட்டது. அதுவரை 12 ஆண்டுகள் மெட்ரோபொலிட்டன் டபெர்னாகில்தான் வகுப்புகள் நடைபெற்றன.
மெட்ரோபொலிட்டன் டபெர்னாகில் சுறுசுறுப்பாகச் செயல்படும் தேனீக்கள் நிறைந்த ஒரு தேன்கூடுபோல் பரபரப்பாயிற்று. ஏற்கெனவே, ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது. போதகர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. சபை இருந்த பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இருந்தன. வேலையாட்கள் அந்தத் தொழிற்சாலைகளில் நீண்ட நேரம் வேலைசெய்யவேண்டியிருந்தது. ஆயினும், அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம்தான் கிடைத்தது. உணவு, உடை, உறைவிடம் எல்லாம் கேள்விக்குறியாகவே இருந்தன. நல்ல சாப்பாடு கிடையாது; தரமான கல்வி கிடையாது. எங்கும் வறுமை. வறுமையிலிருந்து விடுதலைபெற வழி தெரியவில்லை. அடிப்படைக் கல்வியறிவு இல்லாததால் அவர்களுக்கு வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை. அவர்களால் தங்கள் குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்க முடியவில்லை. இந்தச் சுழற்சியை உடைத்தெறிய ஸ்பர்ஜன் முடிவுசெய்தார். கல்வியறிவின்மையே இதற்கு அடிப்படை காரணம் என்பதை அறிந்த அவர் அவர்களுக்குக் கல்விபுகட்ட முடிவுசெய்தார். ஸ்பர்ஜன் அவர்களுக்காக மாலை வகுப்புகளைத் தொடங்கினார். வேலைமுடிந்தபின் அவர்கள் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டார்கள். அங்கு அவர் அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்கு நடைமுறைக்குறிய காரியங்களை மட்டுமே கற்பிப்பார். தேர்வுகள் கிடையாது, பட்டங்கள் கிடையாது, சான்றிதழ்கள் கிடையாது. அவர்கள் படிப்பதற்கு அவர் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார். கற்றுக்கொடுத்தார்; நூற்றுக்கணக்கானவர்கள் வகுப்புகளில் உற்சாகமாகக் கலந்துகொண்டார்கள். அவர்கள் எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டார்கள். அடிப்படைக் கூட்டல் கழித்தல் எனக் கணிதம் கற்றார்கள். நல்ல வேலை கிடைத்தது; வருமானம் கூடியது; வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உணவும், கல்வியும் கொடுக்க முடிந்தது. இந்தச் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம் இலண்டன் நகரம் முழுவதும் பிரதிபலித்தது. இந்த வகுப்புகள் மெட்ரோபொலிட்டன் டபெர்னாகில்தான் நடைபெற்றன.
ஸ்பர்ஜன் இலண்டனில் தன் ஊழியத்தை ஆரம்பித்தபோது, திருமதி லாவினியா பார்ட்லெட் என்ற ஒரு மூதாட்டி குழந்தைகளுக்கு ஞாயிறு பள்ளியில் வேதாகமத்தைக் கற்பித்துக்கொண்டிருந்தார். அவர் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பதில் மிகவும் திறமையானவர். ஆரம்பத்தில் 3 குழந்தைகள் இருந்தார்கள். 10 வருடங்களில் எண்ணிக்கை 500ராக உயர்ந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 700றாயிற்று. அவர் இறக்கும்போது அவருடைய ஞாயிறு பள்ளியின்மூலம் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தேவனை அறிந்துகொண்டார்கள். ஞாயிறு பள்ளியில் 100 ஆசிரியர்கள் இருந்தார்கள்.
சபையில் Maternal Society Ladies என்ற சகோதரிகளின் குழு கர்பிணிப் பெண்களுக்கு உதவினார்கள்; அவர்களைச் சந்தித்துப் பேசினார்கள்; பரிசுப்பொருட்கள் தயாரித்து அல்லது சேகரித்து அவர்களுக்குக் கொடுத்தார்கள். அதன்மூலம் அவர்களுக்கு நற்செய்தி அறிவித்தார்கள்.
Flower Society என்ற குழுவினர் அழகான மலர்கொத்துக்களைத் தயாரித்து மருத்துவமனைகளில் நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்குக் கொடுத்து, ஜெபித்து, நற்செய்தி அறிவித்தார்கள். இவ்வாறு 66 வகையான ஊழியங்களைச் செய்தார்கள்.
மாலைக் கூட்டத்துக்குப் புதியவர்கள் நிறையப்பேர் வந்ததால் உட்காருவதற்கு இடம் போதவில்லை. எனவே, சபை விசுவாசிகள் மாலைக்கூட்டத்துக்கு வருவதற்குப்பதிலாக, வெளியே போய் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சபைக் கட்டிடத்தில் சபைகளின் வருடாந்தரக் கூட்டங்கள், போதகர்களின் கருத்தரங்குகள்போன்ற பல கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. தன் வருமானத்தையெல்லாம் ஊழியத்துக்காகவே செலவிட்டார். அவர் மனிதர்களை அடிமைகளாக விற்பதையும், வாங்குவதையும் எதிர்த்துப் பிரசங்கித்தார். இதனால் அவருடைய புத்தகங்களின் விற்பனை அமெரிக்காவில் சரிந்தது. நிதி நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அவர் தன் குதிரை வண்டியைக்கூட விற்கும் நிலை ஏற்பட்டது.
ஸ்பர்ஜன் Sword and Trowel என்ற ஒரு மாத இதழைத் தொடங்க விரும்பினார். ஆனால், அவருடைய சில நண்பர்களும், நலன் விரும்பிகளும், “பிரசங்க ஊழியம், எழுத்து ஊழியம் ஆகிய இரண்டையும் சிறப்பாகச் செய்தவர்கள் அரிதிலும் அரிது. எனவே, நீங்கள் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துவது நல்லது. எழுத வேண்டும் என்று விரும்பினால் எழுதுங்கள் அல்லது இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த விரும்பினால் பிரசங்கியுங்கள். ஒரே நேரத்தில் நீங்கள் இந்த இரண்டையும் சிறப்பாகச் செய்ய முடியாது என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று எச்சரித்தார்கள். ஆனால், ஸ்பர்ஜன் அவர்களுடைய கருத்தை ஏற்கவில்லை. 1865ஆம் ஆண்டு அவர் Sword and Trowel வாளும், கரண்டியும் என்ற ஒரு மாத இதழைத் தொடங்கினார். நாம் கர்த்தருக்காக யுத்தம் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்க வாளையும், நாம் கர்த்தருக்காகக் கட்ட வேண்டும் என்பதையும் குறிக்கக் கரண்டியையும் பயன்படுத்தியிருக்கலாம் என்று நான் நினைக்கிறன். வாளும், கரண்டியும். இந்த மாத இதழில் அவருடைய பரந்துவிரிந்த, ஆழமமான மனதைக் காண முடிகிறது. இதில் அவர் நம்புதற்கரிய பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதினார்; புத்தகங்களுக்கு மதிப்புரைகள் எழுதினார்; ஊழியர்களின் செய்திகளையும், ஊழியங்களின் விவரங்களையும் வெளியிட்டார்; சீர்திருத்தவாதிகளின் வாழ்க்கை வரலாறுகளை எழுதினார்.
மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளைப் படித்து மக்கள் நிறைய கற்றுக்கொண்டார்கள், ஆசீர்வதிக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் அவர் பல புத்தகங்களும் எழுதிக்கொண்டிருந்தார். 150 சங்கீதங்களுக்கும் பொழிப்புரை எழுதத் தொடங்கியிருந்தார். அதை எழுதி முடிக்க 20 ஆண்டுகள் ஆயின. அவருடைய சங்கீதங்களின் பொழிப்புரை அவருடைய மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாகும், இது தாவீதின் கருவூலம், பொக்கிஷம் treasury of David என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் அவர் பொருட்செறிவுள்ள ஆறு புத்தகங்களைப் படித்தார். படித்த அத்தனை புத்தகங்களையும் நினைவில் வைத்திருந்தார். பல ஆண்டுகளுக்குப்பிறகு, அவர் சில கவிதைகளும் எழுதினார். நல்ல, தரமான, ஆரோக்கியமான போதனைகளும், உபதேசங்களும் விசுவாசிகளுக்கு எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதில் ஸ்பர்ஜன் உறுதியாக இருந்தார். அந்த நாட்களில் புத்தகங்களின் விலை மிக அதிகம். பலரால் அவ்வளவு விலைகொடுத்துப் புத்தகங்கள் வாங்க முடியவில்லை.
சீர்திருத்தவாதிகளின் காலத்தில் கோல்போர்ட்டர்கள் என்றழைக்கப்படும் நடைபாதை வியாபாரிகள் இருந்தார்கள். இவர்கள் சிறிய தள்ளுவண்டிகளில் வேதாகமங்களையும், ஆவிக்குரிய புத்தகங்களையும், கைப்பிரதிகளையும் வைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சென்று விற்றார்கள். ஒருமுறை ஸ்பர்ஜன் ஸ்காட்லாந்துக்குச் சென்றிருந்தபோது இந்த நடைபாதை வியாபாரிகளையும், அவர்களுடைய வேலையையும் பார்த்தார். இதை அவர் இலண்டனிலும் நடைமுறைப்படுத்தத் தீர்மானித்தார். இதற்காக அவர் பல வாலிபர்களை இந்தப் பணியில் அமர்த்தினார். சிறிய தள்ளுவண்டிகளை ஏற்பாடு செய்தார்கள். அவ்ர்களைப் பல பகுதிகளுக்கு, கிராமங்களுக்கு, அனுப்பினார்கள். வேதாகமங்கள், ஆவிக்குரிய புத்தகங்கள், அவருடைய சில பிரசங்கங்கள்போன்றவைகளைக் கொடுத்தனுப்பினார்கள். அவர்கள் அவைகளைத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டுபோய் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று விற்றார்கள். இவ்வாறு, நல்ல போதனைகள் மக்களை எளிதாகச் சென்றடைந்தன.
முதலாவது இரண்டு வாலிபர்கள் மட்டுமே இந்த ஊழியத்தைச் செய்ய முன்வந்தார்கள். மூன்று வருடங்களில் 15 பேர். 1878இல் மொத்தம் 94 வாலிபர்கள் நடைபாதை வியாபாரிகளாகப் பணிபுரிந்தார்கள். புத்தகங்களை விற்றதோடு மட்டும் அவர்கள் நிறுத்தவில்லை. அவர்கள் மக்களைச் சந்தித்தார்கள்; அந்தப் பகுதிகளையும், மக்களையும் தனிப்பட்ட விதத்தில் அறிந்துகொண்டார்கள். அவர்களுடைய கஷ்டநஷ்டங்களை, இன்பதுன்பங்களை, அறிந்துகொண்டார்கள். அந்த அளவுக்கு நெருக்கமானார்கள். கோல்போர்ட்டர்கள் அவர்களுடைய சிரமங்களை, பிரச்சினைகளை, அறிந்தபோது அவர்கள் வாசிப்பதற்குச் சில புத்தகங்களைப் பரிந்துரைத்தார்கள். நோயுற்றோருக்காக ஜெபித்தார்கள்; கிராமங்களில் ஜெபக்கூட்டங்கள் நடத்தினார்கள், தெருப் பிரசங்கங்கள் செய்தார்கள்; கிராமத்து மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்; கிராமங்களில் ஆவிக்குரிய சூழலை உருவாக்கினார்கள்.
இந்த நடைபாதை ஊழியத்தை அற்பமாக எண்ணக்கூடாது. அந்த நாட்களில் நாத்திகக் கொள்கைகள் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தன. நாத்திகக் கொள்கைப் புத்தகங்களும், மாம்சப்பிரகாரமான புத்தகங்களும் நிறைய விற்பனையாகிக்கொண்டிருந்தன. கிராமங்களிலும்கூட அவைகள் மிக எளிதாகக் கிடைத்தன. இந்தச் சூழ்நிலையில்தான் நடைபாதை வியாபாரிகள் ஆவிக்குரிய வியாபாரத்தைத் தொடங்கினார்கள். என்னே ஆசீர்வாதம்! அநேகர் கர்த்தரை அறிந்துகொண்டார்கள்.
ஒருமுறை ஸ்பர்ஜன் இலண்டனில் agricultural hall என்ற ஒரு பெரிய அரங்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார். அவர் பிரசங்கித்த அரங்கத்தின் புகைப்படம் இதோ. எப்படி பிரசங்கித்திருப்பார் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். எவ்வளவு ஆத்தும பாரம் இருந்திருக்கும்! எவ்வளவு உண்மையும் உத்தமுமாய் இதைச் செய்திருப்பார்! இத்தாலி, ஸ்காட்லாந்து, ஜெர்மனி எனப் பல நாடுகளில் அவர் ஊழியம் செய்தார். அவருடைய பிரசங்கத்தின்மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள்.
மெட்ரோபொலிட்டன் டபெர்னாகில் ஆரம்பித்து 5 அல்லது 6 ஆண்டுகள் ஆகியிருக்கும். “தேவனே, எங்களுக்குப் புதிய, வித்தியாசமான வேலைகளையும், அதற்கான வளங்களையும் தாரும்,” என்று 1866 ஆம் ஆண்டில் ஸ்பர்ஜனும், சபையாரும் ஜெபித்தார்கள். அந்த வாரக் கடைசியில், திருமதி ஹெலியாட் என்ற ஒரு மூதாட்டியிடமிருந்து ஸ்பர்ஜனுக்கு ஒரு கடிதம் வந்தது. “நீங்கள் அநாதை இல்லம் ஆரம்பிக்கவும், அந்தக் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கவும், நான் உங்களுக்கு 20,000 பவுண்டுகள் தர விரும்புகிறேன்,” என்று அவர் எழுதியிருந்தார். 20000 பவுண்டுகள் என்பது கிட்டத்தட்ட 60 இலட்சம் ரூபாய். ஸ்பர்ஜன் அவரைப் பார்க்கச் சென்றார். ஸ்பர்ஜன் அவரிடம், “நீங்கள் தருகிற 200 பவுண்டுகளுக்கு மிகவும் நன்றி,” என்று சொன்னார். அவர் பேசி முடிப்பதற்குள் அந்த மூதாட்டி, “நிறுத்துங்கள். நான் 200 என்று சொல்லவில்லை, 20,000 என்றல்லவா சொன்னேன்,” என்றார். ஸ்பர்ஜனால் நம்பமுடியவில்லை. “நீங்கள் தெரியாமல் ஒருவேளை இரண்டு பூஜ்ஜியங்களைத் தவறுதலாகப் போட்டிருக்கக்கூடும் என்று நான் நினைத்தேன்,” என்றார். அந்த மூதாட்டி, “இல்லை, நான் சரியாகத்தான் எழுதினேன். 20,000 பவுண்டுகள் தருகிறேன். நீங்கள் அநாதை இல்லங்களை நிறுவுங்கள்,” என்றார். “இந்தப் பணத்தை என் நல்ல நண்பரும், சகோதரருமான ஜார்ஜ் முல்லருக்குக் கொடுத்தால் நலமாயிருக்கும். அவர் பிரிஸ்டலில் ஏற்கெனவே பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் அனாதை இல்லங்களை வைத்திருக்கிறார், உங்கள் பணம் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்,” என்று ஸ்பர்ஜன் எடுத்துரைத்தார். அதற்கு அந்த மூதாட்டி, “இல்லை, நான் உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் ஆண்களுக்கான ஓர் அனாதை இல்லத்தைத் தொடங்குங்கள்,” என்றார். ஸ்பர்ஜன், தேவனே தன் ஜெபத்துக்குப் பதில் அளித்ததாக நினைத்து அதை ஏற்றுக்கொண்டார்.
ஸ்டாக்வெல் என்ற இடத்தில் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கி அநாதை இல்லம் கட்டத் தொடங்கினார். பெரிய அரங்கம்போல் கட்டாமல், தனித்தனி வீடுகளாக அனாதை இல்லங்களைக் கட்டினார். வெள்ளையர்கள், கறுப்பர்கள், யூதர்கள், கத்தோலிக்கர்கள், ப்ரொடெஸ்டென்ட்காரர்கள் என எந்தப் பாகுபாடுமின்றி எல்லாரும் சேர்க்கப்பட்டார்கள். எல்லாரும் கிறிஸ்தவ அன்போடு அரவணைக்கப்பட்டார்கள். அனாதை இல்லங்களில் சிறுவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், குடும்பச் சூழல் போன்றவைகள் மட்டும் வழங்கப்படவில்லை. ஸ்பர்ஜன் அவர்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்தார். அவர் அவர்களுக்கு நீச்சல் பயிற்சிகளைக் கொடுத்தார். அந்த நேரத்தில் இது’மிகவும் அசாதாரணமானது. இந்த அனாதை இல்லத்தில் இருந்த பல சிறுவர்கள் வளர்ந்து பெரியவர்களானபிறகு, போதகர் கல்லூரியில் பயின்றார்கள். பயிற்சி பெற்றபின் இலண்டனில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஊழியம் செய்தார்கள்.
ஸ்பர்ஜன் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரசங்கத்தை வெளியிட்டார். தன் எழுத்துக்களையும், பிரசங்கங்களையும் தொகுத்துப் புத்தகமாக எழுதினார். மாத இதழில் அவருடைய பங்களிப்பு அதிகம். ஒவ்வொரு வாரமும் சராசரியாக 500 கடிதங்கள் எழுதினார். இவையனைத்தையும் நீங்கள் கற்பனை செய்துபாருங்கள். நம்பமுடிகிறதா?
காலப்போக்கில் முதிய பெண்களுக்கு ஓர் அனாதை இல்லம், சிறிய பெண்குழந்தைகளுக்கு ஒரு விடுதி, ஒரு முதியோர் இல்லம், ஒரு பள்ளிக்கூடம் என அவருடைய உழைப்பும், ஊழியமும் நீண்டுகொண்டே போனது. வசதியில்லாதவர்கள் அன்று படிக்கவில்லை, படிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தார். அந்தப் பள்ளியில் 400 பேர் படித்தார்கள். விசுவாசிகள் நிறைய உதவினார்கள். இவையெல்லாவற்றிற்கும் ஸ்பர்ஜன் ஒரு பெரிய விலைகொடுத்தார்.
ஸ்பர்ஜன் இன்னும் வாலிபன்தான். எனினும், ஊழியத்தின் பாரம் தாங்கமுடியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நரம்புத்தளர்ச்சி நோயினால் அவதிப்பட்டார். ஒருமுறை அவர் திரளான மக்களுக்குப் பிரசங்கித்தபிறகு, இரண்டு நாட்கள் தொடர்ந்து தூங்கினார்; எழுந்திருக்கவில்லை; வெள்ளிக்கிழமை தூங்கி ஞாயிற்றுக்கிழமை எழுந்தார். அந்த அளவுக்குச் சோர்ந்தார், களைத்தார், வாடினார். அது ஒலி பெருக்கி இல்லாத காலம். இது இருபது பேருக்குப் பிரசங்கிப்பதற்கு ஒலி பெருக்கி பயன்படுத்தும் காலம்.
1860ஆம் ஆண்டிலிருந்து ஸ்பர்ஜனும், அவருடைய மனைவி சூசன்னாவும் பலவிதமான நோய்களினால் துன்பப்பட்டார்கள். பலவீனம், சோர்வு, தளர்ச்சி. ஒருமுறை சூசன்னாவுக்கு அறுவைசிகிச்சை செய்யவேண்டியிருந்தது. குளோரோபார்ம் மயக்க மருந்தைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் சிம்சன் அறுவை சிகிச்சை செய்தார். ஆனால், அறுவை சிகிச்சை வெற்றிபெறவில்லை. அதன்பின் அவர் நடக்க முடியாமல் படுத்த படுக்கையானார். Invalid.
இந்த நிலைமையிலும் ஸ்பர்ஜன் தன் ஊழியத்தில் எந்தத் தொய்வும் இல்லாமல் தொடர்ந்தார். ஆனால், நாளடைவில் அவரும் படுக்கையில் விழுந்தார். கொஞ்ச நாட்களுக்குப்பின் சற்று தேறிவரும்போது பெரியம்மை நோய் அவரைக் கிடத்திவிட்டது. தாங்கொணா மூட்டுவலி. Gout. படுக்கையில் திரும்பிப் படுக்க முடியாது, நடக்க முடியாது. இங்கிலாந்தின் குளிர் அவருடைய மூட்டு வலியை அதிகமாக்கிற்று. இருவரும் படுத்த படுக்கையானார்கள். உபத்திரவம் என்னும் குகையில் புடமிடப்பட்டார்கள். இந்தச் சூழ்நிலையில் அவருடைய இரட்டைப் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி ஞானஸ்நானம் பெற்றார்கள். இருவரும் தங்கள் அப்பாவின் ஊழியத்தில் உதவினார்கள். ஊழியம் செய்ய ஆரம்பித்த காலத்தில் இருவருக்கும், “கிறிஸ்துவைப் பிரசங்கி. கிறிஸ்துவை உயர்த்து” என்று ஸ்பர்ஜன் அறிவுரை கூறினார்.
இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததிலிருந்தே சூசன்னாவுக்கு உடல் நலம் நன்றாக இல்லை. அவர் ஸ்பர்ஜனோடு சேர்ந்து ஊழியத்துக்குச் செல்ல விரும்பினார். ஆனால், உடல் ஒத்துழைக்கவில்லை. பெரும்பாலும் அவரால் ஸ்பர்ஜனோடு சேர்ந்து செல்ல முடியவில்லை.
ஒரு நாள், “ஸ்பர்ஜனின் அறிவுரைகள்” என்ற புத்தகத்தை வாசித்து முடித்தபின், “இது மிகவும் நடைமுறைக்குறிய, பயனுள்ள புத்தகம். இதை நிறையப்பேர் படித்தால், இங்கிலாந்திலுள்ள மற்ற போதகர்களும் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,” என்று சொன்னார். இந்தப் புத்தகம் ஸ்பர்ஜன் போதகர் கல்லூரி மாணவர்களுக்குக் கூறிய அறிவுரைகளின் தொகுப்பு. ஸ்பர்ஜன், “சரி, அதை நீயே ஏன் செய்யக்கூடாது? இதையெல்லாம் ஏன் நீயே அனுப்பக்கூடாது?” என்று சொன்னார். சூசன்னா தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறதென்று பார்த்தார். 100 பிரதிகள் வாங்குவதற்கு போதுமான பணம் அவரிடம் இருந்தது. 100 பிரதிகள் வாங்கி 100 போதகர்களுக்கு அனுப்பினார். புத்தகங்களைப் பெற்ற போதகர்கள் நன்றி சொல்லி கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதங்களிலிலிருந்து போதகர்களின் நிலைமையை அவர் கொஞ்சம் புரிந்துகொண்டார். அதைத் தொடர்ந்து அவர் ஸ்பர்ஜன் எழுதிய சங்கீதங்களின் விரிவுரையை அநேகப் போதகர்களுக்கு அனுப்பினார். தெற்கு வேல்ஸ், வடக்கு வேல்ஸ் பகுதிகளிலிருந்த 1500 போதகர்களுக்கு பிரதிகள் அனுப்பினார்.
அந்த நாட்களில் போதகர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தாங்கள் ஊழியம்செய்த சபையையே சார்ந்திருந்தார்கள். இந்தப் புத்தகங்களைப் பெற்ற போதகர்களில் பலர் தங்கள் குடும்பத்தோடு கிராமங்களில் வாழ்ந்தார்கள். கிராமத்தில் வாழ்ந்த மக்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். அவர்களால் போதகரை ஆதரிக்க முடியவில்லை. போதிய வருமானம் இல்லாததால் போதகர்களால் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியோ, ஆரோக்கியமான உணவோ கொடுக்க முடியவில்லை. வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கே திண்டாட்டம் என்றால், அவர்களால் புத்தகங்கள் வாங்க முடியுமா? அதற்கெல்லாம் பணமே கிடையாது. அதைச் சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாது. எனவே, சூசன்னாவின் அருமையான யோசனை எல்லாருடைய பாராட்டையும் பெற்றது. இங்கிலாந்து முழுவதிலுமிருந்து போதகர்கள் நன்றி நிறைந்த இருதயத்தோடு அவருக்குக் கடிதங்கள் எழுதினார்கள். “நீங்கள் அனுப்பிய புத்தகங்களை நாங்கள் கண்ணீரோடு பெற்றுக்கொண்டோம். நாங்கள் குடும்பமாக அமர்ந்து வந்த புத்தகங்களைத் திறந்துபார்த்தோம். நீங்கள் எங்களுக்கு அனுப்பிய புத்தகம் எங்களுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். எங்களால் பணம் கொடுத்து புத்தகம் வாங்க முடியாது. நீங்கள் அனுப்பியிராவிட்டால், நாங்கள் ஒருபோதும் பணம் கொடுத்து புத்தகம் வாங்கிப் படித்திருக்க மாட்டோம்,” என்று பதில் எழுதினார்கள். ஒரு வருடத்தில், அவர் பல்வேறு போதகர்களுக்கு 3000 பிரதிகளை அனுப்பினார்.
சூசன்னாவின் ஊழியத்தைப்பற்றிக் கேள்விப்பட்டவர்கள் அந்த ஊழியத்தைத் தொடர்ந்துசெய்ய அவருக்கு பணம், பொருட்கள், பல்வேறு நன்கொடைகள் வழங்கி எல்லா வழிகளிலும் உதவினார்கள். நாளடைவில் நாடு முழுவதும் இருந்த போதகர்கள் குடும்பங்களுக்கு பணமும், போர்வைகளும், குழந்தைகளுக்கான பிரத்தியேக உடைகளும், பிற தேவையான பொருட்களும் அனுப்பினார்கள். தன் மனைவியின் இந்த ஊழியத்தைப்பற்றி, “என் மனைவி தெய்வ பலத்தால் மட்டுமே இந்த ஊழியத்தைச் செய்கிறார். இதைச் செய்யுமாறு கர்த்தரே அவரை நடத்தினார். தன் உடல் பலவீனத்தை ஒரு பொருட்டாய்க் கருதாமல் இந்த ஊழியத்தைச் செய்யும்போது அவர் அடையும் மகிழ்ச்சியில் நானும் சேர்ந்து மகிழ்கிறேன். பாடுகள், இன்னல்கள், இயலாமையின் மத்தியிலும் தேவன் ஒருவனைப் பயன்படுத்த முடியும், அவர்களும் தேவனைப் பயனுள்ள வகையில் சேவிக்க முடியும் என்பதற்கு என் மனைவி ஓர் எடுத்துக்காட்டு. தன் தேவைகளை மறந்து தேவ மக்களின் தேவைகளை நினைப்பதும், அவைகளை நிவிர்த்தியாக்க முனைவதும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதற்குச் சிறந்த வழி. பிறருக்காகத் தங்களைத் தியாகம் செய்வது தங்கள் துக்கங்களையும், துயரங்களையும் மறப்பதற்குச் சிறந்த மருந்து,” என்று ஸ்பர்ஜன் கூறினார்.
சூசன்னா இதைப்பற்றி, “இந்த ஊழியத்தைச் செய்ய எனக்கு உதவுகிற அநேக நண்பர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டவள். இதனால் நான் இருவகையான ஆசீர்வாதங்களைப் பெறுகிறேன். ஒரு பக்கம் நான் பிறரிடமிருந்து பெறுகிறேன்; இன்னொரு பக்கம் நான் பிறருக்குக் கொடுக்கிறேன். என் இயலாமையிலும் நான் இந்த ஊழியத்தைச் செய்வதால் பெருமகிழ்ச்சியடைகிறேன். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது,” என்று கூறினார்.
21 நாடுகளில் உள்ள தேவ மக்களுக்கு ஸ்பர்ஜனின் பிரசங்கங்களையும், புத்தகங்களையும், தொடர்ந்து அனுப்பினார்கள். போதகர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் தொடர்ந்து உதவினார்கள். பத்து ஆண்டுகள் இந்த ஊழியத்தைச் செய்தபின், ஸ்பர்ஜன் மரித்து நான்கு ஆண்டுகளுக்குப்பின், அதைப்பற்றிய எல்லா விவரங்களையும் சூசன் சபைக்குத் தெரிவித்தார். வரவு செலவு, அனுப்பிய புத்தகங்கள். போதகர்களின் போராட்டங்கள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் அவர் தன் அறிக்கையில் எடுத்துரைத்தார். அன்று அவர் தன் தனிமை வாழக்கையைப்பற்றிக் கொஞ்சம் சொன்னார். இரண்டு பயணிகள் வாழ்க்கைப்பாதையில் ஒருமித்துப் பயணித்தார்கள். அவர்களுடைய இதயங்கள் ஒன்றாய்ப் பின்னிப்பிணைந்திருந்தன. அவர்கள் கடந்த நதிகள் எத்தனை! ஏறிய மலைகள் எத்தனை! இறங்கிய பள்ளத்தாக்குகள் எத்தனை! சந்தித்த பிரச்சினைகள் எத்தனை! எதிர்கொண்ட ஆபத்துகள் எத்தனை! இவைகளினூடாய் நடத்திய கர்த்தரைத் துதித்துப் பாடிப் பயணித்தார்கள். ஒருநாள் ஒருவர் எடுத்துக்கொள்ளப்பட்டார். விடப்பட்டவர் தன்னந்தனியாய்ப் பயணித்தார் என்று தன் வாழ்க்கையை விவரித்தார்.
ஸ்பர்ஜன் அடிக்கடி கடுமையாக மனச்சோர்வடைந்தார். ஒருவேளை அவருடைய மனச்சோர்வு நோயின் விளைவாகக்கூட இருக்கலாம். ஊழியத்தின் பாரம் எப்போதும் அவரை அழுத்தியதால் ஏற்பட்ட மனஅழுத்தமாகவும் இருக்கலாம். அவர் தன் உடல்நலக்குறைவோடு போராடினார்; உடல்சோர்வு, மனச்சோர்வு, மனஅழுத்தம், வாட்டம், தொய்வு - கடுமையான போராட்டம். Bright’s disease. சிறுநீரகக் கோளாறு. Gout என்ற மூட்டு வலி. ஊழியத்தின் பாரத்தால் அமிழ்ந்தார்; விசுவாசிகளின் பிரச்சினைகளால் வாடினார். எனவே, அவருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். குறிப்பாக இங்கிலாந்தின் குளிர்காலத்தில், வருடத்தில் ஆறு வாரங்கள், அவர் பிரான்சின் தெற்கேயுள்ள மென்டோன் என்ற இடத்திற்குச் சென்று ஓய்வெடுத்தார். சற்று குணமடைந்தபின் மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பிவந்து ஊழியத்தைத் தொடர்ந்தார்.
ஊழியத்தின் பாரமும், உழைப்பின் சுமையும் அவரை அழுத்தியது. எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் அவரிடம் வந்து தங்கள் சுமைகளை அவர்மேல் இறக்கிவைத்துவிட்டுச் சென்றார்கள். தங்கள் பாரங்களையும், பிரச்சினைகளையும் அவரிடம் கொட்டினார்கள். அவர்கள் இறக்கிவைத்த பாரங்களை அவரால் தன் மனைவி உட்பட வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. இந்தக் கட்டத்தில் சூசன்னா மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். எனவே, அவர் சூசன்னாவின்மேல் இன்னும் கூடுதலான சுமையைச் சுமத்த விரும்பவில்லை. எல்லாருடைய பாரங்களையும் அவர் தன்னந்தனியாகவே சுமந்தார். மோட்சப் பிரயாணம் என்ற புத்தகத்தில் வருகிற கிறிஸ்தவன் விரக்தியின் கோட்டையில் இருப்பதுபோல தான் இருப்பதாக அவர் நினைத்தார். இந்தக் காலக் கட்டத்தில் அவருடைய பிரசங்கம் மிகவும் வளமாக இருந்தது. எனவே, பெரும் சோதனைகளையும், பல சிரமங்களையும் அனுபவித்துக்கொண்டிருந்தவர்கள் இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டார்கள். ஏனெனில், அவருடைய பிரசங்கம் போராடிக்கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. அவருடைய பிரசங்கத்தைக் கேட்ட மக்கள் உற்சாகமடைந்து, உயிர்மீட்சியடைந்து, வாழ்வின் பாடுகளையும் உபத்திரவங்களை எதிர்கொள்ளப் பலமடைந்து சென்றார்கள்.
ஸ்பர்ஜன் ஒரு நாள் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். வியாதி, வலி, வேதனை, மனச்சோர்வு, மனஅழுத்தம். சவாரி செய்துகொண்டிருக்கும்போது தேவன் அவரிடம், “என் கிருபை உனக்குப் போதும்,” என்று சொன்னார். அவர் இந்த வசனத்தை மீண்டும் படித்தார். இந்த வசனத்தைக் கர்த்தரே தனக்குத் தந்தார் என்று ஸ்பர்ஜன் உணர்ந்தார். அவர் அதை மீண்டும் படித்தபோது தேவன் “என்” என்ற வார்த்தையை அழுத்திச் சொன்னதுபோல் இருந்தது. “என் கிருபை”. அதை உணர்ந்து ஸ்பர்ஜன் புன்னகைத்தார். இதை அவர் சில சகோதரர்களுடன் பகிர்ந்துகொண்டார். “தேவனுடைய கிருபை எனக்குப் போதும். அவருடைய கிருபை எனக்குப் போதாது என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம்! எவ்வளவு அவநம்பிக்கை! ஓ! சகோதரர்களே, பெரிய விசுவாசிகளாக இருங்கள்; அற்ப விசுவாசம் நம் ஆத்துமாவைப் பரலோகத்துக்குக் கொண்டுசேர்க்கும்; ஆனால், பெரிய விசுவாசம் பரலோகத்தை நம் ஆத்துமாவுக்குக் கொண்டுவரும்,” என்று சொல்லி முடித்தார்.
1870ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த டி.எல்.மூடி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். இதை அறிந்த ஸ்பர்ஜன் அவருக்குக் கடிதம் எழுதி, metropolitan tabernacleலில் பிரசங்கிக்க வருமாறு அழைத்தார். அதற்கு மூடி, “அன்புள்ள ஐயா, உங்கள் கூடாரத்தில் பிரசங்கிக்க வருமாறு நீங்கள் என்னை அழைத்ததை நான் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். ஆனால், உங்கள் shoesகளுக்கு polish போடுவதை நான் அதைவிடப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். நான் அங்கு வந்து metropolitan tabernacleலில் பிரசங்கிப்பது என்ற கேள்விக்கு இடமேயில்லை. உங்கள்பிரசங்கத்தைக் கேட்டு ஒருவன் மனந்திரும்பவில்லையென்றால், மரித்தோரிலிருந்து ஒருவன் உயிர்த்தெழுந்து வந்தாலும் அவன் விசுவாசிக்க மாட்டான். இப்படிக்கு உங்கள் அன்புக்குரிய மூடி, அன்புடன்,” என்று பதில் எழுதினார்.
அமெரிக்காவில் இருந்த சில பிரசங்கிமார்கள் இங்கிலாந்தில் இருந்த சில பிரசங்கிமார்களைக் குறித்துக் கேள்விப்பட்டு, இங்கிலாந்து பிரசங்கிமார்களின் பிரசங்கத்தைத் கேட்க வேண்டும் என்ற ஒரேவொரு நோக்கத்தோடு அவர்கள் இங்கிலாந்துக்கு வந்தார்கள். இந்தக் குழுவினர் முதலாவது டாக்டர் ஜோசப் பார்க்கரின் பிரசங்கத்தைக் கேட்டார்கள். மிக அற்புதமான கட்டிடம். 2000 பேர் அமர்ந்திருந்தார்கள். ஜோசப் பார்க்கரின் பணியவைக்கும் அழுத்தமான குரல், சாதுரியமான பேச்சுத்திறமை, காந்தம்போல் இழுக்கும் இறையியல் ஆகியவைகளைக் கேட்டு அவர்கள் அதிர்ந்தார்கள். அவருடைய பிரசங்கத்தைக் கேட்டபின் “ஜோசப் பார்க்கர் எவ்வளவு அற்புதமான பிரசங்கியார்,” என்று வியந்தார்கள்.
அன்று மாலை, அவர்கள் ஸ்பர்ஜனின் பிரசங்கத்தைக் கேட்க metropolitan tabernacleளுக்குச் சென்றார்கள். அங்கு 5000 பேர் கூடியிருந்தார்கள். சபைக் கட்டிடம் அழகாக இருந்தது. ஸ்பர்ஜனின் குரல் பார்க்கரின் குரலைவிட மிகச் சிறப்பாகவும், அழுத்தமாகவும், துடிப்போடும் இருந்தது. அவருடைய பிரசங்கத்தில் நகைச்சுவையும், தெளிவும் இருந்தன. பிரசங்கம் கேட்டபின் அவர்கள், “இயேசு கிறிஸ்து எவ்வளவு அற்புதமான இரட்சகர்!” என்று வியந்தார்கள். ஆம், இதுதான் ஸ்பர்ஜன்; அவர் எப்போதும் சிலுவைக்குப்பின்னால் மறைந்துகொண்டார். மற்றவர்களிடமிருந்து ஸ்பர்ஜனை வேறுபடுத்திக் காட்டுவது ஜெபம். அவர் அவருடைய காலத்தில் வாழந்த வேறு சிலரைப்போல் பல மணிநேரம் ஜெபித்தார் என்பதல்ல காரியம். அவர் தேவனோடு உறவாடிய, உரையாடிய விதம் வித்தியாசமானது. அது அவருடைய ஜெபங்களில் பளிச்சென்று தெரிந்தது.
ஒருமுறை ஒருவர் மூடியிடம், “நீங்கள் ஸ்பர்ஜனின் பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு மூடி, “ஆம், அவர் பிரசங்கிப்பதை நான் கேட்டிருக்கிறேன், ஆனால், அதைவிடச் சிறப்பாக அவர் ஜெபிப்பதை நான் கேட்டிருக்கிறேன்,” என்று பதிலளித்தார். பலர் ஸ்பர்ஜனைக்குறித்து இப்படித்தான் சொன்னார்கள். ஜெபம் என்பது நாடக நிகழ்ச்சி, பாடல் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி என்பதுபோல் பிறருக்குமுன்பாக நடத்தும் ஒரு நிகழ்ச்சி அல்ல என்று ஸ்பர்ஜன் உறுதியாக நம்பினார். தேவனுக்குமுன்பாக ஏறெடுக்கப்படும் ஒரு பாவியின் உண்மையான கூக்குரல், கதறல், திறமையான சொற்பொழிவைப் பலமடங்கு எல்லையற்றது, வீரியமுள்ளது என்று அவர் கூறினார்.
ஸ்பர்ஜனையும் அவருடைய ஜெபத்தையும் பிரிக்க முடியாது. ஒரு புத்தகத்தை வாசிப்பதற்குமுன்னும், வாசித்துமுடித்தபின்னும், ஒரு கடிதம் எழுதுவதற்குமுன்னும், எழுதிமுடித்தபின்னும், ஒருமுறை அவரும் அவருடைய நண்பர் ஆர்ச் ப்ரௌனும் இரயிலில் பயணம் செய்தபோது, இரயிலில் முழங்காலில் நின்று ஜெபித்தார். ஒருமுறை அவரும் அவருடைய நண்பர் சர்ரே என்பவரும் காட்டுவழியாகப் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் போய்க்கொண்டிருந்தார்கள். ஸ்பர்ஜன் தன் நண்பரிடம், “கர்த்தர் நமக்குத் தந்திருக்கும் சிரிப்பு என்ற கொடைக்காக நன்றி சொல்வோம்,” என்று சொல்லி அங்கு முழங்காலில் நின்று ஜெபித்தார். ஜெபம் அவருடைய மூச்சுபோல் இருந்தது.
ஒருமுறை அவரும் அவருடைய நண்பரும் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அவருடைய நண்பர், “அநாதை விடுதியைக் கட்டுபவருக்கு நாளைக்கு 1000 பவுண்டு கொடுக்க வேண்டும்,” என்று நினைப்பூட்டினார். அதற்கு ஸ்பர்ஜன், “நான் அதை ஏற்கெனவே தேவனிடத்தில் சொல்லிவிட்டேன். தேவன் பார்த்துக்கொள்வார்,” என்றார். அப்போது அவருக்கு ஒரு தந்தி வந்தது. திறந்து வாசித்தார். அதில், “ஒருவர் சபைக்கு வந்து 1000 பவுண்டுகள் கொடுத்துவிட்டுச் சென்றார்,” என்று எழுதியிருந்தது. தான் ஒன்றுமில்லை, தான் வெறுமையான ஒரு பாத்திரம் என்று ஸ்பர்ஜன் அறிந்திருந்தார்.
ஸ்பர்ஜனின் வாழ்க்கையில் எந்த அடைப்புக்குறியும் கிடையாது. ஜெபம் அவருடைய வாழ்க்கையின் நாடி நரம்புகளில் ஓடியது. தன்னைப் பொறுத்தவரை, கர்த்தர் எப்போதும் தன்னோடு இருக்கிறார் என்று அவர் நம்பினார், அப்படியே வாழ்ந்தார்.
1860களில் இங்கிலாந்தில் ஒரு நாசூக்கான மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. மறைவான மாற்றம் அல்ல, தந்திரமான மாற்றம்; நேர்மறையான மாற்றம் அல்ல, எதிர்மறையான மாற்றம். 1858 ஆம் ஆண்டு சார்லஸ் டார்வினும், ஆல்பிரட் ருஸ்ஸல் வாலேசும் இணைந்து The origin of the species என்ற பரிணாமக் கோட்பாட்டு நூலை வெளியிட்டார்கள். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று உயிரினங்களின் தோற்றம்குறித்து டார்வின் அதில் விரிவாக விளக்கினார். அதுதான் பரிணாமக் கோட்பாடு முதன்முதலாக முன்மொழியப்பட்ட நேரம். பரிணாமக் கொள்கையைக் குறித்து மக்கள் பரபரப்பாகப் பேசத் தொடங்கினார்கள். மக்களிடையே ஒரு சலசலப்பு, ஒரு கலக்கம், ஒரு கிளர்ச்சி, ஒரு குழப்பம். ஒருவகையான அதிர்வலைகள் எழுந்தன.
அதே நேரத்தில், பல இறையியலாளர்கள் மத்தியில், இன்னொரு வகையான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது. இதை அவர்கள் முன்னேற்றம், புதிய இறையியல், என்றழைத்தார்கள். ஒரு பக்கம், பரிணாமக் கொள்கையினால் ஒரு மாற்றம், கலக்கம். மறு பக்கம், இறையியலாளர்களிடையேயும் ஒரு மாற்றம். இவர்கள் இந்த மாற்றத்தை புதிய இறையியல் என்றழைத்தார்கள். கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை இதுவரைப் பார்த்த கண்ணோட்டத்திலிருந்து விலகி வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினார்கள். “வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள அற்புதங்கள் உண்மையிலேயே அற்புதங்கள்தானா அல்லது வெறும் அடையாளங்களா? அல்லது உருவகங்களா? இந்தப் புத்தகத்தை எழுதியவர் இவரா அல்லது அவரா அல்லது வேறு யாராவது எழுதினார்களா? இது உண்மையில் இந்தத் தேதியில், இந்த இடத்தில்தான் எழுதப்பட்டதா அல்லது வேறொரு தேதியில் வேறோர் இடத்தில் எழுதப்பட்டதா? வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளவையெல்லாம் உண்மையா?” இப்படி அவர்கள் வேதாகமத்தைச் சந்தேகிக்க ஆரம்பித்தார்கள். வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள பல அம்சங்களைக் கேள்விக்குள்ளாக்கினார்கள். இந்தச் சிந்தனை ஓட்டத்தை அந்த நாட்களில் பலர் நவீனம் என்றும், புதியது என்றும் சொன்னார்கள். இன்னும் சிலர் இதைப் புத்திதெளிதல், ஞானமடைதல் என்றெல்லாம் சொன்னார்கள். இதை அறிவொளிக் காலம் என்றும் சொன்னார்கள். இந்தப் புதிய கல்விச் சிந்தனையை பல பல்கலைக் கழகங்களிலும் பாடமாகக் கற்பிக்கத் தொடங்கியிருந்தார்கள்.
ஒருபுறம், பல்கலைக்கழகங்களில் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டைக் கற்பிக்க ஆரம்பித்தார்கள். இன்னொரு புறம், ஊழியங்களும், இறையியல் பயிற்சிக் கல்லூரிகளும், வேதாகமக் கல்லூரிகளும் இந்தப் புதிய இறையியலை அல்லது தாங்கள் புதிய சிந்தனை என்று கருதியதைக் கற்பிக்கத் தொடங்கின. முன்னணி ஊழியர்களும், போதகர்களும் இதைப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். ஸ்பர்ஜன் இதைக் கடுமையாக எதிர்த்தார்.
அந்த நேரத்தில் அவர் இங்கிலாந்தின் பாப்டிஸ்ட் யூனியனின் ஒரு முக்கியமான உறுப்பினராக இருந்தார். அவர்களுடைய வளர்ச்சிக்கு அவர் நிறையப் பங்களித்தார். ஆனால், அவர்கள் டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு எதிராகத் தெளிவான, உறுதியான நிலைப்பாட்டை எடுக்காததால், ஸ்பர்ஜன் இங்கிலாந்தின் பாப்டிஸ்ட் யூனியனிலிருந்து விலகினார். பாப்டிஸ்ட் சபையில் அன்று பல போதகர்கள் இந்தக் கொள்கையை மறைமுகமாக ஆதரித்தார்கள்; சிலர் வெளியரங்கமாகப் போதித்தார்கள். அவர் வெளியேறியதும் முன்பு நண்பர்களாகவும், சகோதர்களாகவும் இருந்த பல போதகர்கள் அவரைப் பகிரங்கமாகத் தாக்கிப் பேசினார்கள், எழுதினார்கள். எதிர்ப்பு வலுத்தது. “நீங்கள் அளவுக்கு மீறி நடந்துகொள்கிறீர்கள். எங்கள் சிந்தனை வளர்கிறது; நாங்கள் முன்னேறுகிறோம். இது புதிய வெளிச்சம். நீங்கள் உங்கள் பழைய புரிதலையும், பாரம்பரிய முறைகளையும், பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது ஞானமல்ல,” என்று ஸ்பர்ஜனைப் பார்த்து நகைத்தார்கள். அவரைப் பழைமைவாதி என்று கிண்டல்செய்தார்கள். ஆனால், ஸ்பர்ஜன் தன் நிலைப்பாட்டில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். “வேதாகமத்தின் மாறாத்தன்மையை மறுக்க ஆரம்பித்தால், சபையில் இரட்சிக்கப்படாதவர்களும் வந்துவிடுவார்கள்; எது மாறும், எது மாறாது என்று சொல்லமுடியாத அளவுக்கு நிறைய கேள்விகள் எழும். சபைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையும்; ஜெபக் கூட்டங்கள் உயிரற்ற வெற்றுக்கூடுகளாகிவிடும்; ஒருவன் மறுபடி பிறந்திருக்கிறான் என்பதற்கும், புதிய பிறப்பால் அவன் மாறியிருக்கிறான் என்பதற்கும் தெளிவான சான்றுகள் இல்லாமல் போய்விடும் அல்லது குறைந்துவிடும். பிரசங்கம் வல்லமையற்றதாகிவிடும்,” என்று ஸ்பர்ஜன் நம்பினார், எழுதினார். தேவனுடைய வார்த்தை தவறாதது என்ற ஸ்பர்ஜனின் நிலைப்பாட்டை காலமும் உறுதிப்படுத்துகிறது.
புதிய சிந்தனை என்றழைக்கப்பட்ட கொள்கைக்கு எதிராக அவர் கட்டுரைகள் எழுதினார். எதிர்ப்புகள் வலுத்தன. அநாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் இதுவரை உதவியவர்கள் தங்கள் உதவிகளை நிறுத்தினார்கள். இழப்புகள் ஏற்பட்டபோதும், நட்டங்கள் வந்தபோதும் அவர் தன் நிலைப்பாட்டிலிருந்து தடம்புரளவில்லை. பிறரைப் பிரியப்படுத்துவதற்காக அவர் சத்தியத்தைச் சமரசம் செய்யவில்லை அல்லது சத்தியத்தின் தரத்தைக் குறைக்கவில்லை. புதிய சிந்தனையைப்பற்றி “சத்தியத்தின் சாவு” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். தான் மனிதர்களுக்கு அல்ல, தேவனுடைய வார்த்தைக்கு எதிரான போதனைக்குத்தான் எதிரி என்று விளக்கியபிறகும், அவரைத் தூற்றுவதையும், தாக்குவதையும் பலர் நிறுத்தவில்லை.
ஸ்பர்ஜனுக்கு அப்போது 50 வயதிருக்கும். அவருடைய உடல்நிலை மோசமாகிக்கொண்டேபோனது. சில நேரங்களில் அவர் வலியால் துடித்தார். படுத்தால், படுக்கையில் நகர முடியவில்லை; சில சமயங்களில் படுக்கையில் திரும்பக்கூட முடியவில்லை; முழங்காலை முடக்க முடியவில்லை. முட்டிக்குமுட்டி வலி. பேனாவைப் பிடித்து எழுத முடியவில்லை. அவர் எழுதிய கடிதங்களில் அவருடைய கையெழுத்தைப் பார்த்தால் அது தெளிவாகத் தெரிகிறது.
அவர் கர்த்தர்மேல் வைத்திருந்த வைராக்கியம் கடைசிவரைக் கடுகளவுகூடக் குறையவில்லை. ஒரு நாள் ஒரு ஜெபக்கூட்டம் நடைபெற்றது. அவர் அதில் கலந்துகொண்டார். இந்த ஜெபக் கூட்டத்தில் சபையின் உதவிக்காரர்களும், ஊழியக்காரர்களும் கலந்துகொண்டார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளின் இரட்சிப்புக்காக’ஊக்கமாகச் ஜெபித்தார்கள். தங்கள் பிள்ளைகள் தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், உண்மையாகவே மறுபடி பிறக்க வேண்டும் என்றும் அவர்கள் பாரத்தோடு ஜெபித்தார்கள். தன் மகனின் இரட்சிப்புக்காக ஜெபித்த ஓர் ஊழியக்காரருடைய ஜெபத்தினால் ஸ்பர்ஜன் ஈர்க்கப்பட்டார். ஜெபக் கூட்டத்திற்குப்பிறகு, ஸ்பர்ஜன் அந்த ஊழியக்காரருடைய மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
“அன்புள்ள ஆர்தர் லேசெல், கொஞ்ச நேரத்திற்குமுன் நான் ஒரு ஜெபக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதில் அநேக ஊழியக்காரர்கள் கலந்துகொண்டார்கள். இந்த ஜெபக் கூட்டத்தின் பொருள்”எங்கள் குழந்தைகள்“. இந்த ஊழியக்காரர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக ஜெபித்த ஜெபம் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அவர்கள் தங்கள் பிள்ளைகளின் இரட்சிப்புக்காகத் தேவனிடம் ஜெபிக்கையில் என் நெஞ்சமும் அந்த வாஞ்சையினால் வெடிக்கும் அளவுக்குப் பாரமாக இருந்தது. ஜெபித்து முடித்தபின் அவர்களுடைய பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெற்றோரின் ஜெபத்தை நினைப்பூட்டி எழுத நினைத்தேன். எனவே எழுதுகிறேன். அன்புள்ள ஆர்தர், உனக்காகத் திறப்பின் வாசலிலே நின்று ஜெபிக்கும் பெற்றோர் இருப்பதால் நீ மிகவும் பாக்கியவான். உன் பெயர் பரலோகத்தில் அறியப்பட்டிருக்கிறது. உன் வழக்கு தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக விசாரிக்கப்படுகிறது.
உனக்காக நீ ஜெபிக்கவில்லையா? இதுவரை ஜெபிக்கவில்லையென்றால், நீ ஏன் இப்போது ஜெபிக்கக்கூடாது? பிறர் உன் ஆத்துமாவை மதிக்கும்போது, நீ அதைப் புறக்கணிப்பது சரியா? நீயாகவே தேவனைத் தேடாவிட்டால், உன் அப்பாவின் கதறல்களோ, கெஞ்சல்களோ, போராட்டங்களோ உன்னை இரட்சிக்காது. இது உனக்குத் தெரியும். உன் அன்பான பெற்றோர்களுக்கு நீ துக்கத்தை ஏற்படுத்த நினைக்கமாட்டாய். ஆனால், நீ இரட்சிக்கப்படாதவரை அவர்களுக்கு நீ துக்கத்தைத்தான் ஏற்படுத்துகிறாய். நீ இரட்சிக்கப்படும்வரை அவர்கள் ஓய்ந்திருக்கமுடியாது. நீ எவ்வளவு இனிமையானவனாக, கனிவானவனாக இருந்தாலும், நித்திய இரட்சிப்பைப் பெற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீ விசுவாசிக்காதவரை அவர்கள் உன்னைப்பற்றி ஒருபோதும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.
இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற எவரும் அழியாத நித்திய ஜீவனைப் பெறுவான்.
நீ பரலோகத்தையும் நரகத்தையும்பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஏனென்றால் இந்த இரண்டில் ஒன்றில்தான் நீ நித்தியத்தைக் கழிக்கப்போகிறாய். என்னை நீ பரலோகத்தில் சந்திக்கலாம். இப்போதே கிருபாசனத்தண்டை சேரு. தேவனை நாடு. அன்புடன் ஸ்பர்ஜன்
இந்தக் கடிதத்தைப் படித்த ஆர்தர் உடனே வீட்டின் மாடிக்கு ஓடினான். அங்கு அவன் தன் வாழ்வைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தான். அவருக்கு எவ்வளவோ அலுவல்கள் இருந்தபோதும் ஒரு ஆத்துமா மனந்திரும்பி கர்த்தரிடம் வருவதை அவர் மிகப் பெரிதாகக் கருதினார். அதுதான் ஸ்பர்ஜனின் இருதயம். பூமியில் ஒருநாள் தன் நேரம் முடிவடையும் என்றும், அந்த நேரம் நெருங்குகிறது என்றும் அவருக்குத் தெரியும். ஒவ்வோர் ஆத்துமாவையும் அவர் அவ்வளவாய் மதித்தார்! ஆத்துமத்தின் விலையேறப்பெற்ற தன்மையை அவர் அறிந்திருந்தார். ஒருவரும் கெட்டுப்போவதை அவர் விரும்பவில்லை. எல்லா வகைகளிலும் அவர் பாடுபட்டார்.
ஒருபுறம் அவர் சிறுநீரக நோயினால் அவதிப்பட்டார். இன்னொருபுறம் மூட்டுவலியினால் கைகால்கள் வீங்கி நடக்க முடியவில்லை. நரம்புத்தளர்ச்சி நோய் இன்னொருபுறம். 1879ஆம் ஆண்டு அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அதைத்தொடர்ந்து 5 மாதங்கள் அவரால் பிரசங்கிக்க முடியவில்லை. அவருடைய மனைவி சூசன்னாவும் நோயினால் அவதிப்பட்டார். பேனாவைப் பிடித்து எழுத முடியாத அளவுக்கு ஸ்பர்ஜனுக்கு மூட்டு வலி. அந்த நாட்களில் பேனாவை மையில் தொட்டுத்தான் எழுத வேண்டும். அப்படியிருந்தும் வாரத்திற்கு 500 கடிதங்கள் எழுதினார். 1884இல் இன்னும் அதிக நோய்வாய்ப்பட்டு பிரான்சில் வழக்கம்போல் மென்டோனில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அங்கிருந்து சபையாருக்கு, “அன்பான சபை மக்களே, நான் படுத்த படுக்கையாக இருக்கிறேன். என் உடலின் ஒவ்வொரு பாகமும் வலியால் வேதனைப்படுகிறது. கொஞ்சம் திரும்பினாலுங்கூட வலியும், வேதனையும் கொடிதாயிருக்கிறது,” என்று எழுதினார்.
சபையில் புதியவர்கள் நிறைய வந்துகொண்டிருந்ததால், ஏற்கெனவே அங்கு இருந்தவர்கள் வேறு இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவிக்குமாறும், சபைகளைக் கட்டுமாறும் அவர் ஊக்குவித்தார். 250பேர் வெளியேறி பெட்காம் என்ற இடத்தில் ஒரு சபையை ஆரம்பித்தார்கள். போதகர் கல்லூரியில் ஏறக்குறைய 900 பேர் பயிற்சி பெற்று பல்வேறு இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தார்கள். அவர்கள்மூலம் ஏறக்குறைய 30000 பேர் இரட்சிக்கப்பட்டார்கள். வேதாகமக் கல்லூரியில் படித்த இரண்டு பேர் ஒரே வருடத்தில் 1100 கூட்டங்கள் நடத்தினார்கள். ஸ்பர்ஜன் மென்டோனில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த காலத்திலும் சபை விசுவாசிகளுடைய ஊழியத்தினிமித்தம் 400 புதிய விசுவாசிகள் சபையில் சேர்க்கப்பட்டார்கள்.
ஸ்பர்ஜன் ஒருமுறை ஸ்காட்லாந்தில் பிரசங்கித்தபோது மலைச்சாரலில் திறந்த வெளியில் 15000 மக்கள் தேவனுடைய வார்தையைக் கேட்டார்கள்.
ஸ்பர்ஜன் ஒருமுறை பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது ஒரு குழந்தை அழுதது. அப்போது ஸ்பர்ஜன் அந்தக் குழந்தையின் இரட்சிப்புக்காக ஜெபித்தார். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி, இரட்சிக்கப்பட்டு கர்த்தருடைய ஊழியக்காரனானான். ஒருநாள் அவன் ஸ்பர்ஜனைச் சந்தித்தபோது, “நான்தான் அந்தக் குழந்தை,” என்றான். அதற்கு அவர், “ஆம், அது 1852ஆம் ஆண்டு. அப்போது நான் இன்னொரு குழந்தைக்காகவும் ஜெபித்தேன். அவனையும் கண்டுபிடி,” என்றார். தேவன் நம் ஜெபங்களுக்குப் பதில் தருவார் என்று அவர் உறுதியாக நம்பினார்.
ஒருநாள் ஸ்பர்ஜன் இலண்டனில் ஒரு சாலையைக் கடக்க ஓரமாக நின்றுகொண்டிருந்தார். அவரருகே பார்வையற்ற ஒருவரும் நின்றுகொண்டிருந்தார். அவர், “நான் இந்த சாலையைக் கடக்க உதவ முடியுமா?” என்று ஸ்பர்ஜனிடம் கேட்டார். அதற்கு ஸ்பர்ஜன், “எனக்குப் பயமாக இருக்கிறது,” என்று சொன்னபோது, பார்வையற்றவர், “உங்களுக்குப் பார்வை தெரியும் அல்லவா! எனவே, நான் உங்களை நம்புகிறேன்,” என்றார். “ஆம், தேவனை நம்புகிறவர்கள் வெட்கப்படமாட்டார்கள்,” என்று அவர் புரிந்துகொண்டார்.
இங்கிலாந்தில் சீர்திருத்தக் காலத்தில் தூய்மைவாதிகள் என்றழைக்கப்படும் puritans இருந்தார்கள். “வேதம் போதும். வேதாகமம் அதிகாரமுள்ளது; தேவனுடைய வார்த்தை மாறாது,” என்ற நம்பிக்கையுடைய அவர்கள் சபைகளும், விசுவாசிகளும் வேதாகமத்தின்படி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஸ்பர்ஜன் இந்தத் தூய்மைவாதிகளின் எழுத்துக்களால் இழுக்கப்பட்டார். ஸ்பர்ஜன் இந்த உலகத்தில் கடைசி தூய்மைவாதி என்று சிலர் சொல்வதுண்டு.
தன் அம்மாவில் அடக்க ஆராதனையில்கூடக் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர் சுகவீனமாக இருந்தார். 1888ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாடிப்படியிலிருந்து விழுந்து இரண்டு பற்களை இழந்தார். 1890ஆண்டு சபையில் 5328 விசுவாசிகளும், 127 ஊழியக்காரர்களும் இருந்தார்கள். இலண்டனில் 23 இடங்களில் சபைகள், 27 ஞாயிறு பள்ளி வகுப்புகள் இருந்தன. 600 ஆசிரியர்கள், 800 மாணவ மாணவிகள் இருந்தார்கள். ஸ்பர்ஜன் எழுதிய காலை மாலை தியானப்புத்தகதை வாசிக்காதோர் யாருண்டு? அவருடைய “தாவீதின் கருவூலம்” என்ற தியானப் புத்தகம் ஒரு பாக்கியம். ” எல்லாம் கிருபையே” என்ற புத்தகத்தால் .இரட்சிக்கப்பட்டோர் பலர் உண்டு. “ஸ்பர்ஜனின் அறிவுரைகள்” போதகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
1855ஆம் ஆண்டிலிருந்து ஸ்பர்ஜனின் பிரசங்கங்கள் வாராவாரம் 10 இலட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு உலகெங்கும் அனுப்பப்பட்டது. ஆண்டின் இறுதியில் அந்தச் செய்திகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டன. அவருடைய 3561 பிரசங்கங்கள் அடங்கிய 63 புத்தகங்கள் உள்ளன. நாளடைவில் இந்தச் செய்திகள் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. அவருடைய மரணத்திற்குப்பிறகும் 25 ஆண்டுகள் இவ்வாறு வாராவாரம் அனுப்புவதற்குப் போதுமான செய்திகள் இருந்தன. ஏனென்றால், அவர் வாரத்திற்கு மூன்றுமுறை பிரசங்கித்தார்.
1891ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி metropolitan tabernaacle பிரசங்க மேடையில் கடைசிமுறையாகப் பிரசங்கித்தார். ஏறக்குறைய 2 கோடி மக்களுக்கு நற்செய்தி அறிவித்த அந்த வெண்கலக் குரல் அதற்குப்பின் அந்தப் பிரசங்க மேடையில் ஒலிக்கவில்லை. அடுத்த மூன்று மாதங்கள் அவர் படுத்த படுக்கையானார். கேள்விப்பட்ட இங்கிலாந்து இளவரசர், மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினார்கள், எல்லாரும் அவரை விசாரித்தார்கள். நாளேடுகள் அவருடைய உடலநலத்தைக்குறித்த செய்திகளை ஒவ்வொருநாளும் வெளியிட்டன.
1891, அக்டோபர் 26. இங்கிலாந்தில் உறைபனி காலம் வந்துவிட்டதால் அவர் பிரான்சில் இருக்கும் மெண்டோவுக்குச் சென்றார். அவருடைய மனைவி சூசன்னா, அவருடைய சகோதரர் ஜேம்ஸ், ஜேம்சின் மனைவி, நெல்லி, அவருடைய செயலாளர் ஜோசப் ஹரால்டு ஆக மொத்தம் ஐந்துபேர் புறப்பட்டார்கள். அவருடைய மனைவி சூசன்னா ஸ்பர்ஜனோடு இப்போதுதான் முதன்முறையாக மென்டோவுக்குச் செல்கிறார். ஸ்பர்ஜன் ஓய்வெடுப்பதற்காக மெண்டோவுக்குச் சென்றபோது, அவருடைய நோயின் நிமித்தமாகவோ அல்லது நீண்ட காலமாக படுக்கையில் இருந்ததாலோ சூசன்னாவால் ஒருமுறைகூட கூடச்செல்லமுடியவில்லை. தேவனுடைய இறையாண்மையின்படி, அந்த நாட்கள் பூமியில் ஸ்பர்ஜனுடைய இறுதி நாட்கள் என்று தெரியாமலே, அவருடைய கடைசிப் பயணத்தில் அவரோடு சேர்ந்து செல்ல, தேவன் சூன்னாவைப் பலப்படுத்தினார். அந்த மூன்று மாதங்கள் தங்களுடைய “பூமிக்குரிய ஏதேன்”னின் நாட்கள் என்று சூசன்னா கூறினார். “அவர் தேவனுடைய மகிமையும், அவருடைய பிரசன்னமும் நிறைந்த பரிபூரணமும், மேன்மையான இடத்துக்குச் செல்வதற்குமுன் நாங்கள் இந்தப் பூமியில் பூரண மகிழ்ச்சியை அனுபவித்தோம்,” என்று சூசன் கூறுகிறார்.
அங்கு இருந்தபோது மத்தேயு நற்செய்திக்கு வியாக்கியனத்தை எழுதி முடிக்கத் தீர்மானித்தார்.
வழக்கம்போல் அவர்கள் மென்டோவில் இருந்த பியூ-ரிவாஜ் விடுதியில் தங்கினார்கள். அங்கு தங்கியிருந்த நாட்களில் அவரும், அவருடைய மனைவியும் முடிந்தபோதெல்லாம் வெளியே போய் வந்தார்கள். “அதை அவர் விரும்பினார்; அதில் அவர் களிகூர்ந்தார்,” என்று சூசன் கூறுகிறார்.
1892, ஜனவரி 20. கடைசிமுறையாக அவர்கள் இருவரும் வெளியே போய்வந்தார்கள். அவர் தன் வாழ்நாள் முழுவதும் கீல்வாதம் நோயினால் அவதிப்பட்டார் என்று ஏற்கெனவே சொன்னேன். அன்று மாலை அவருடைய தலையில் ஒரு பெரிய வலி ஏற்பட்டது. வழக்கத்துக்கு மாறாகச் சீக்கிரமாகப் படுக்கைக்குச் சென்றுவிட்டார். படுக்கைக்குச் செல்வதற்குமுன் தன் செயலாளரிடம், “என் வேலை முடிந்துவிட்டது,” என்று சொல்லிச் சென்றார். அதன்பின் அவர் சுயநினைவிழந்தார்.
ஸ்பர்ஜனுக்கு அவ்வப்போது நினைவு திரும்பியது. அவர் குணமடைந்துவிடுவார் என்று அவர்கள் நம்பினார்கள், எதிர்பார்த்தார்கள். அந்த நாட்கள் அவர்களுக்கு வலியும், வேதனையும் நிறைந்த நாட்கள். ஸ்பர்ஜனுடைய உடல்நிலை மிகவும் மோசமானது. ஜனவரி 28ஆம் தேதி ஸ்பர்ஜன் முழுநினைவிழந்தார். அவருடைய மனைவி, சகோதரன், செயலர் உட்பட அவரோடு சென்றிருந்த அனைவரும் அவருடைய படுக்கையைச்சுற்றி முழங்கால்படியிட்டார்கள். அவருடைய மனைவி சூசன்னா தன் துக்கத்திலும் தேவன் தனக்குக் கொடுத்த விலையேறப்பெற்ற கணவனுக்காக, இத்தனை ஆண்டுகள் அவரோடு வாழ்ந்த வாழ்க்கைக்காக, சில கோடி மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க அவரைப் பயன்படுத்தியதற்காக, தேவன் நடத்திய அற்புதமான வழிகளுக்காகத் தேவனைத் துதித்துத் தன் கணவனைத் தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபித்தார். 1892ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி இரவு 11.30மணிக்கு ஸ்பர்ஜன் நித்தியத்துக்குள் நுழைந்தார். சபையார் எதிர்பாராத, “நம் அன்புக்குரிய போதகர் ஞாயிறு இரவு 11.30மணிக்குப் பரலோகத்துக்குள் நுழைந்துவிட்டார்,” என்று அவருடைய செயலாளர் ஹெரால்ட் சபைக்குத் தந்தி அனுப்பினார்கள்.
அடுத்த நாள் இலண்டனின் எல்லா நாளேடுகளிலும் ஸ்பர்ஜனின் மரணமே தலைப்புச் செய்தி. வேறு பல நாடுகளிலும் பிரபலமான ஏடுகளில் அவருடைய மரணச் செய்தி வெளியானது.
மென்டோனில் அடக்கம்பண்ணலாமா அல்லது அநாதை இல்லத்தில் அடக்கம் பண்ணலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், ஒருமுறை ஸ்பர்ஜன் ஒரு நண்பரோடு நார்வுட் கல்லறைத்தோட்டத்துக்குச் சென்றிருந்தார். அங்கு ஒரு மூலையில் ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டித் தன்னை அங்கு அடக்கம்பண்ணச் சொல்லியிருந்தார். அவரை, அந்தக் கல்லறைத்தோட்டத்தில்தான், ஆனால் வேறோர் இடத்தில் அடக்கம்பண்ணினார்கள்.
ஒரு பத்திரிகையாளர் அவருடைய இதழில், “மரித்தபிறகும், அவருடைய முகத்தில் உரமும், உறுதியும் தெரிகின்றன. அதில் துன்பத்தில் சுவடுகூட இல்லை. கிருபையின் நிறைவும், சமாதானமும் நிறைந்திருக்கிறது,” என்று எழுதினார்.
பெப்ரவரி 11ஆம் தேதி நார்வுட் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்படும்வரை, மென்டோவில் இரண்டு நினைவுக் கூட்டங்கள், இலண்டனில் ஆறு நினைவுக் கூட்டங்கள், நடைபெற்றன.
மென்டோவில் Scotch Presbyterian Church இல் நடந்த கூட்டத்தில் reverend J.E Somerville “இஸ்ரயேலில் ஓர் இளவரசனும், ஒரு பெரிய மனிதனுமாகிய சார்லஸ் ஸ்பர்ஜன் வீழ்ந்தான். அவர் metropolitan Tabernacleலுக்கு மட்டும் அல்ல, இலண்டனுக்கு மட்டும் அல்ல, இங்கிலாந்துக்கு மட்டும் அல்ல, ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகுக்கும் சொந்தம். அவருடைய சுறுசுறுப்பான வாழ்க்கை இங்கு ஓய்ந்தது; அவருடைய மென்மையான, அற்புதமான குரல் இனி மனிதர்களிடம் கெஞ்சாது; அவருடைய பேனா இனி ஆலோசனை வழங்காது, மகிழாது. உழைப்பாளி ஓய்ந்திருக்கிறார். போர்வீரரின் வாள் சும்மா கிடக்கிறது; கொத்தனாரின் கரண்டி கீழே கிடக்கிறது. ஏனென்றால், அவருடைய எஜமான் அவரை”வா” என்று அழைத்தார்,” என்று பேசினார்.
அவருடைய உடல் மென்டோவிலிருந்து பேரிசுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து இங்கிலீஷ் கால்வாய் வழியாக இலண்டனுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு விக்டோரியா இரயில் நிலையத்தில் வைக்கப்பட்டு, பின் அங்கிருந்து போதகர் கல்லூரிக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அவருடைய அடக்கப்பெட்டியின்மேல் ஸ்பர்ஜனின் வேதாகமத்தில் ஒரு வசனம் பளிச்சென்று தெரியும்படி திறந்து வைக்கப்பட்டிருந்தது. ஏசாயா 45:22: “பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.”
அடக்கப்பெட்டியைச் சுற்றிலும் குருத்தோலைகள் வைக்கப்பட்டிருந்தன. எல்லாக் குருத்தோலைகளிலும் அவருடைய மனைவியின் விருப்பப்படி, “கிறிஸ்துவுடன், இது அதிக நன்மையானது. என் கணவரே, நாம் உம்மைத் தொடர்வேன். உம் இளவயது மனைவியின் சாகாத அன்பு,” என்று எழுதிவைத்திருந்தார்கள். ஸ்பர்ஜனின் மனைவியால் அவருடைய அடக்கத்தில் கலந்துகொள்ளமுடியவில்லை. அந்த அளவுக்கு அவர் படுத்த படுக்கையில் இருந்தார். Invalid. செயலிழந்தவர், இயலாதவர்.
ஒரு நினைவுக் கூட்டத்தில் 60,000 பேர் கலந்துகொண்டார்கள். இங்கிலாந்திலிருந்த எல்லாச் சபைகளின் பஸ்டர்கள், இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், இங்கிலாந்து மாகாராணியின் பிரதிநிதிகள் என இலண்டன் மாநகரமே அடக்க ஆராதனையில் கலந்துகொண்டார்கள்.
ஸ்பர்ஜன் மரிப்பதற்குச் சில வருடங்களுக்குமுன் ஒருநாள், “இவர்களெல்லாம் எதற்காகக் காத்திருக்கிறார்கள்?” “உனக்குத் தெரியாதா? அவருடைய அடக்கம் இன்றைக்கு” “யார்?” “ஸ்பர்ஜன்.” “யார்? metropolitan tabernacleலில் பிரசங்கித்த மனிதனா?” “ஆம்; அவருடைய அடக்கம்தான்.” இது மிக விரைவில் நடக்கும். அமைதியான கல்லறைக்கு என் சவப்பெட்டி எடுத்துச் செல்லப்படுவதை நீங்கள் காணும்போது, நீங்கள் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட்டவரோ, இரட்சிக்கப்படாதவரோ இதைச் சொல்வீர்கள். “நித்தியக் காரியங்களைத் தள்ளிப்போடாதீர்கள், உதாசீனப்படுத்தாதீர்கள் என்று ஸ்பர்ஜன் எளிமையாகவும், தெளிவாகவும் வலியுறுத்தினாரே. கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கும்படி வேண்டினாரே! இப்போது அவர் போய்விட்டார், நாம் அழிந்தால் அதற்கு அவர் பொறுப்பல்ல. நம் இரத்தப்பழிக்கு அவர் நீங்கலாகிவிட்டார்’ என்று நீங்கள் சொல்வீர்கள்” என்று சொன்னார். அந்த நாள் வந்தது.
அவருடைய இறுதி ஊர்வலத்தில் மூன்றரை கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் நின்றார்கள். மெட்ரோபொலிட்டன் டபெர்னாகிலிருந்து கல்லறைத்தோட்டம்வரையிலான ஒன்பது கிலோமீட்டர் தூரத்திலும் வீதியின் இருமருங்கிலும் திரளான மக்கள் கூடிநின்றார்கள். அவருக்கு அப்போது வயது 57. பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளும், பொதுமக்களும் அவரை வழியனுப்ப metropolitan tabernacleளில் கூடினார்கள். அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாகக் கடைகள் மூடப்பட்டன; இறுதி ஊர்வலம் நகரத்தின் வழியாகச் சென்றபோது ஆலயங்களின் மணிகள் ஓங்கி ஒலித்தன. கடைகள் மூடப்பட்டன. கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன. பொதுமக்கள் தங்கள் வீடுகளை அடைத்துவிட்டுத் தெருவுக்கு வந்தார்கள். அன்று இலண்டனில் துக்க உடை உடுத்தாதவர்கள் குறைவு. வீடுகளின் ஜன்னல்களிலும், கதவுகளிலும் ஸ்பர்ஜனின் மேற்கோள்களை எழுதித் தொங்கவிட்டார்கள். அவரை வழியனுப்பும் வாசகங்கள் எழுதி வைத்தார்கள். அடக்க ஊர்வலம் ஸ்டாக்வெல் அநாதை இல்லத்தைக் கடக்கும்போது அங்கிருந்த அனாதைக் குழந்தைகள் பார்ப்பதற்கும், பாடுவதற்கும் வசதியாக ஒரு மேடை அமைத்திருந்தார்கள். இறுதி ஊர்வலம் அருகில் வந்தது. குழந்தைகள் பாடுவதற்குப் பதிலாகக் கதறி அழுதார்கள்.
கல்லறைத் தோட்டத்தில் ஆராதனையின்போது, metropolitan tabernacle இருந்த திசையிலிருந்து ஒரு புறா பறந்து வந்து பெட்டியினருகே நின்றதாகவும், அருகிலிருந்த இன்னொரு கல்லறையின்மேல் ஒரு ராபின் பறவை பாடிக்கொண்டிருந்ததாகவும் சொல்வதுண்டு.
ஸ்பர்ஜனின் அன்பு நண்பர் டாக்டர் பிரவுன் கல்லறையில் பேசினார். நார்வுட் என்ற இடத்தில் இருந்த கல்லறைத்தோட்டத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் மரித்து 11 ஆண்டுகளுக்குப்பிறகு அவருடைய மனைவி சூசன்னாவும் அங்கு அடக்கம் செய்யப்பட்டார்.
“பிரியமான தலைவரே, உண்மையுள்ள போதகரே, பிரசங்கிகளின் இளவரசரே, அன்புச் சகோதரரே, அருமையான ஸ்பர்ஜனே - நாங்கள் உமக்குப் பிரியாவிடை கொடுத்து அனுப்பப்போவதில்லை; மாறாக, கொஞ்ச நேரத்திற்குக் ‘குட்நைட்’ மட்டுமே சொல்லப்போகிறோம். மீட்கப்பட்டவர்கள் உயிர்த்தெழும்பும் விடியற்காலையில் நீர் எழுந்திருப்பீர். எனவே, சொல்லப்போனால் நாங்கள் அல்ல, நீர்தான் எங்களுக்குக் ‘குட்நைட்’ சொல்ல வேண்டும். ஏனென்றால், நாங்கள்தான் இங்கு இருளில் தடவித்திரிகின்றோம். நீர் தேவனுடைய பரிசுத்த ஒளியில் இருக்கிறீர். எங்கள் இரவும், அதனோடு தொடர்புடைய எங்கள் அழுகையும், அதி விரைவில் நீங்கிவிடும். அப்போது, உம் பாடலோடு எங்கள் பாடலும் சேர்ந்து மேகமும், முடிவும் இல்லாத அந்த நாளை வாழ்த்தி வரவேற்கும்; ஏனென்றால், அங்கே இராக்காலம் இராது. களத்தில் கடினமாக உழைத்த உழைப்பாளியே, உம் உழைப்பு முடிந்தது. நீர் உழுத நிலங்கள் நேர் நிலங்கள். நீர் உம் ஊழியத்தின், உழைப்பின் போக்கிலிருந்து திரும்பவோ, திசைதிரும்பவோ இல்லை. அழுகையோடு, பொறுமையாக விதைத்தீர்; கெம்பீரத்தோடு அறுவடை செய்தீர். நீர் அறுத்த கதிர்க்கட்டுகளால் பரலோகம் ஏற்கெனவே வளமாகவும், செழிப்பாகவும் இருக்கிறது; நீர் நித்தியத்தில் கழிக்கும் வரப்போகிற ஆண்டுகளில் பரலோகம் இன்னும் செழிப்பாகும். தேவனுடைய வெற்றிவீரரே, உம் நீண்ட, நெடிய, நாணயமான, நேர்மையான போர் முடிந்தது; உம் கையோடு ஒட்டிக்கொண்டிருந்த வாள் கடைசியாக தரையில் வீழ்ந்தது. வாள் பிடித்த கையில் இப்போது ஒரு குருத்தோலை. போர்க்களத்தின் மும்முரத்தில் பொங்கியெழும் எண்ண அலைகளால் அடிக்கடிக் களைத்துப்போன உம் புருவத்தை தலைக்கவசம் இனி அழுத்தாது. நம் பெரிய தளபதி உமக்குத் தந்திருக்கும் வெற்றி மாலை உம் வெகுமதியை ஏற்கனவே நிரூபித்துவிட்டது. இங்கே, இந்தக் கல்லறையில் கொஞ்சகாலம் , உம் உடல், புழுதி, ஓய்வெடுக்கட்டும். உம் நேசர் விரைவில் வருவார்; அவருடைய சத்தத்தைக் கேட்டு, பூமியின் இந்தப் படுக்கையிலிருந்து மகிமையடைந்த உடலோடு எழுந்து, மகிமைக்குள் நுழைவீர். அப்போது ஆவி, ஆத்துமா, உடல் ஆகியவை தேவனின் மீட்பைப் பறைசாற்றும். அதுவரை, அன்பரே, உறங்கும். உமக்காக நாங்கள் தேவனைத் துதிக்கிறோம். நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தால், நாங்களும் உம்மோடு சேர்ந்து தேவனைத் துதிப்போம் என்று நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம். ஆமென்.”
ஸ்பர்ஜன் வாலிபனாக இருந்தபோது, ஒருமுறை ஒரு கூட்டத்திற்குப்பிறகு மாலையில் தன் குதிரையில் நகரத்தின் வழியாகப் போய்க்கொண்டிருந்தார். அது குளிர்காலம்! மாலை நேரம்! எனவே, அப்போதே இருட்ட ஆரம்பித்திருந்தது. சவாரி போய்க்கொண்டிருக்கும்போது அவருக்கு முன்னால் இலண்டன் பெருநகரம் தெரிகிறது. அவர் சவாரிசெய்யும்போது சாலையின் இருமருங்கிலும் விளக்குகள், சிறிய விளக்குகள், ஒவ்வொன்றாக எரிவதைக் கண்டார். யாரோவொருவர் அந்த விளக்குகளையெல்லாம் ஒவ்வொன்றாக ஏற்றிவைப்பதை அவர் பார்த்தார். ஏற்றி வைப்பவர் கையில் ஒரு பெரிய பந்தம்போன்ற ஒன்று இருந்தது. ஆனால், ஆள் தெரியவில்லை. ஏனென்றால் இருட்டாக இருந்தது. இருட்டில் விளக்கைப் பார்க்கலாம், விளக்கிலிருந்து வரும் வெளிச்சத்தைப் பார்க்கலாம். ஆனால், விளக்கேற்றுபவனைப் பார்க்கமுடியாது. ஸ்பர்ஜன் இதைப்பற்றி எழுதினார். “அந்த விளக்குகளைக் கொளுத்தியவர் யார் என்று எனக்குத் தெரியாது. அவருடைய பெயர், ஊர், வயது, இருப்பிடம் எதுவும் தெரியாது. நித்திய ஜீவன் என்ற புனிதச் சுடரால் ஒவ்வோர் ஆத்துமாவையும் ஒளிரச் செய்வதில் என் வாழ்நாள் செலவழிய வேண்டும் என்று நான் எவ்வளவாய் வாஞ்சிக்கிறேன். என்னால் முடிந்தவரை, என் வேலையைச் செய்யும்போது, கண்ணுக்குத் தெரியாமல் இருப்பேன். என் வேலையைச் செய்து முடித்தபின் மேலேயிருக்கும் நித்திய மகிமைக்குள் மறைந்துவிடுவேன்.” என்று சொன்னார்.