Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

வேத வாசிப்பு  

மத். 7:15; 16:16-17, 21; 20:28; யோவான் 1:29; அப். 2:32-33; ரோமர் 3:26; 4:25; 5:8; 6:1-11; 8:17; 1 கொரி. 1:23-25; 15:45-57; 2 கொரி. 5:19, 21; கலா. 2:20; 3:13; எபே. 1:20-23; 2:1-10; கொலோ. 1:18; 3:3-4; எபி. 2:19; 9:14, 22; 1 பேதுரு 2:24; 3:18; 1 யோவான் 4:1-6; வெளி. 3:21; 14:12; ஏசாயா 53:6

06-சிலுவையிலறையப்பட்டு, உயிர்த்தெழுந்து, மகிமைப்படுத்தப்பட்ட கிறிஸ்து.pdf

சிலுவையிலறையப்பட்டு, உயிர்த்தெழுந்து, மகிமைப்படுத்தப்பட்ட கிறிஸ்து - 06

தேவனுடைய அடித்தளத்தின் முக்கியமான பகுதிகள்

நாம் இப்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவைமரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் ஆகியவைகளைப்பற்றிப் பார்க்கப்போகிறோம். இந்த நிகழ்ச்சிகளுக்கு நான்கு நற்செய்திகளிலும் எவ்வளவு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும், இவைகளின் பொருளை விளக்குவதற்கு முழுப் புதிய ஏற்பாட்டிலும் எவ்வளவு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கவனித்தால் இவை எவ்வளவு முக்கியமானவை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இவை தேவனுடைய அடித்தளத்தின் மிக முக்கியமான பகுதிகளாகும்.

ஆவிகளைப் பகுத்துணர்தல்

கள்ளத்தீர்க்கதரிசிகள் மலிந்துகிடக்கும் இந்த நாட்களில் நாம் மிக விழிப்புடன் இருக்க வேண்டும். ஒருவன் இயேசு கிறிஸ்துவின் சிலுவை, மரணம், இரத்தம், உயிர்த்தெழுதல், பரமேறுதல், உயர்த்தப்படுத்தல், இரண்டாம் வருகை ஆகியவைகளை எவ்வளவு அதிகமாக அல்லது குறைவாகக் குறிப்பிடுகிறான் என்பதைவைத்து “சத்தியத்தின் ஆவி” எது, “அசத்தியத்தின் ஆவி” எது என்று நாம் எளிதாக இனங்காணலாம். கிறிஸ்துவாகிய நபரைக்குறித்து தவறான கருத்துக்களும், வேதப்புரட்டுக்களும் இருப்பதுபோல, அவருடைய சிலுவையையும், உயிர்தெழுதலையும்குறித்தும் புதிய ஏற்பாட்டுப் போதனைக்கு முற்றிலும் முரணான, புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விசுவாசத்துக்கு முரணான, இயேசுவின் விசுவாசத்திற்கு ஒவ்வாத, தேவனால் உண்மையாகவே மறுபடி பிறந்த தேவ மக்களின் விசுவாசத்துக்கு எதிரான ஏராளமான தவறான, பொய்யான கருத்துக்களும், வேதப்புரட்டுகளும் இருக்கின்றன. உண்மையான கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல. அது இந்த உலகத்தின் மதங்களைப்போலப் பூமியில் தோன்றவில்லை. இயேசு கிறிஸ்துவில் தேவன் வெளிப்படுவதே உண்மையான கிறிஸ்தவம். உண்மையான கிறிஸ்தவம் பரலோகத்திலிருந்து வந்தது.

சிலுவையின் அவசியம் சிலுவையில் என்ன நிகழ்ந்தது? ஏன் சிலுவை அவசியம்? ஏன் ‘சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவே’ கிறிஸ்தவ நற்செய்தியின் மையம்? பின்வரும் அதிகாரங்களில் நாம் இதை விவரமாகப் பார்ப்போம். இப்போதைக்கு இரண்டு முக்கியமான குறிப்புகளை மட்டும் நாம் சுருக்கமாகப் பார்ப்போம்.

1. நம் பாவத்தின் விளைவுக்கான தீர்வு

முதலாவது, நாம் செய்த செயலால் ஏற்பட்ட பிரச்சினையை அவர் தீர்த்தாக வேண்டும்.

நாம் கலகக்காரர்கள், குற்றம்செய்த பாவிகள், சட்டத்தை மீறியவர்கள். தேவன் தம் சட்டத்தை நிலைநிறுத்தவும் வேண்டும்; அதே நேரத்தில், அவருடைய சட்டங்களை மீறியவர்களுக்கு மன்னிப்பும் வழங்க வேண்டும். இது எப்படி சாத்தியம்? அவர் எப்படி ஒரே நேரத்தில் நீதிபரராகவும், பாவிகளை நீதிப்படுத்துகிறவராகவும் இருக்க முடியும்?

அவருடைய அற்புதமான தீர்வு என்ன தெரியுமா? அவர் நமக்கு மரணதண்டனை வழங்கினார்; அவர் நம்மை அவருடைய பிரசன்னத்திலிருந்து துரத்திவிட்டார். அவருடைய பரிசுத்தமும், நீதியும் இவைகளைக் கோருகின்றன. அதன்பின், தம் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவில் அவரே அந்தத் தண்டனையை ஏற்றுக்கொண்டார்;

“நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்”. “கிறிஸ்து நமக்காகச் சாபமாகி…நம்மை மீட்டுக்கொண்டார்”.  “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்”. “அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்”. “கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி, அநீதியுள்ளவர்களுக்குப்பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்”.


கிறிஸ்து நம் பதிலீடு

நாம் பாவத்தை மிகச் சாதாரணமாக, மேம்போக்காக, எடுத்துக்கொள்கிறோம். நாம் தேவனுடைய பரிசுத்தத்தையும், அவர் எந்த அளவுக்குப் பாவத்தை வெறுக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ளவில்லை. “தேவன் நம்மில் அன்புகூருகிறார்; எனவே, அவர் நம்மை மன்னித்து விட்டுவிடுவார். கடைசியாக, எல்லாரும் பரலோகத்துக்குப் போய்விடுவோம்,” என்று சில கள்ளத் தீர்க்கதரிசிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேதாகமம் அப்படிச் சொல்லவில்லை. இந்தக் கள்ளத் தீர்க்கதரிசிகள் சொல்வதற்கு முற்றிலும் முரணாகவே வேதாகமம் சொல்லுகிறது. பாவிகளுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டதால் மட்டுமே தேவனால் பாவிகளை மன்னிக்க முடியும், மன்னிப்பார். பாவிகளையும், பாவத்தையும் அவர் கண்டும் காணாதவர்போல் அப்படியே விட்டுவிட முடியாது. இயேசு கிறிஸ்து நமக்காக, நம் பதிலீடாக, மரிக்காதிருந்தால் ஒருவனும் பரலோகத்துக்குப் போகமுடியாது. அவர் “தேவ ஆட்டுக்குட்டியாக” மரிக்கவேண்டியிருந்தது. அவருடைய இரத்தம் சிந்துதல் இல்லாமல் நமக்குப் பாவமன்னிப்பு கிடையாது. நாம் என்னவாக இருக்கிறோமோ, நாம் என்ன செய்தோமோ அதன் விளைவுகளை அவர் சிலுவையில் சுமந்தார். நாம் அவருடைய நீதியில் அவரோடு ஒன்றாயிருக்குமாறு, அவர் நம் பாவத்தில் நம்மோடு ஒன்றாயிருந்தார்.

“அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்”.

ஆனால், தேவன் இயேசுவை நம் பாவங்களுக்காக ஒரு மூன்றாவது நபரைத் தண்டிப்பதுபோல் தண்டிக்கவில்லை என்பதை நினைவில்கொள்ள வேண்டும். நாம் யாருக்கு விரோதமாகப் பாவம் செய்தோமோ, அந்தத் தேவனே தம் நீதியான சட்டத்தை நிலைநிறுத்துவதற்காக, கிறிஸ்துவில் சிலுவையிலே, நம் பாவத்தின் விளைவுகளைச் சுமந்து, உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கினர். பிதா, குமாரன், ஆவியானவர் எல்லாரும் சிலுவையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆழமான பரம்புதிர் ஓர் அற்புதமான சத்தியம்.

இப்படிப்பட்ட அன்பையும், இரட்சிப்பையும் அசட்டைசெய்பவர்களுக்கு, புறக்கணிப்பவர்களுக்கு, என்ன நம்பிக்கை இருக்க முடியும்?

இதுதான் தேவன் தீர்க்கவேண்டிய முதல் பிரச்சினை.

2. நம் பாவமான நபருக்கான தீர்வு

இரண்டாவது, நாம் திராணியற்ற, குணப்படுத்தமுடியாத பாவிகள் என்ற முறையில் நாம் என்னவாக இருக்கிறோமோ, அந்தப் பிரச்சினையை அவர் தீர்க்க வேண்டியிருந்தது. மனுக்குலத்தைப் பாவம் துளைத்தெடுக்கிறது. நம்மால் அதை ஒன்றும் செய்யமுடியாது. இந்தக் காரியத்தில் தேவன் என்ன செய்ய வேண்டியிருந்தது? “கிறிஸ்து நமக்காக மரித்ததினால்” அவர் நம்மை மன்னித்துவிட்டு, அதன்பின் அவர் நம்மைப் பாவத்திற்கு அடிமைகளாகவே விட்டிருந்தால், அது தீர்வாக இருந்திருக்காது. பாவம் செய்வதால் வரும் பாவ உணர்ச்சியிலிருந்து மட்டும் நமக்கு இரட்சிப்பு கிடைத்தால் போதாது; பாவத்தின் வல்லமையிலிருந்தும் நமக்கு இரட்சிப்பு தேவை.

நாம் ஏதோவொரு விதத்தில் மரித்து, பின்பு ஒரு புதிய, அழிவில்லாத, பாவம்செய்ய ஆற்றலற்ற உயிரோடு எழுந்து வாழத் தொடங்கினால் எப்படியிருக்கும்? இதுதான் தீர்வாக இருக்க முடியும். தேவன் பிரச்சினையைச் சிலுவையின்மூலம் இப்படித்தான் தீர்த்தார். விழுந்துபோன இந்த இனத்தைத் தேவன் தம் குமாரனின் மரணத்தில் மரணத்திற்குள்ளாக்கி, அவருடைய உயிர்த்தெழுதலில் அவர் ஒரு புதிய தொடக்கத்தை உண்டாக்கினார்.

இந்தப் பாவ இனத்துக்கு அவர் ஒரு முடிவுகட்டினார். விழுந்துபோன இந்த இனத்துக்கு எந்த எதிர்காலமும் கிடையாது. இந்த உண்மையை நாம் ஒப்புக்கொள்ள விரும்பாமல் போகலாம். ஏனென்றால், இது ஒரு கசப்பான உண்மை. ஆனால், இதுதான் உண்மை.

கிறிஸ்து நம் பதிலாள்

இயேசு தம்மை நம்மோடு அடையாளப்படுத்தி, சிலுவையில் மரித்தார். தேவனுடைய கண்ணோட்டத்தில், அவர் மரித்தபோது, நாமெல்லாரும் அவரில் மரித்தோம். நமக்குப்பதிலாக, நம் பதிலாளாக, “அநீதியுள்ளவர்களுக்குப்பதிலாக நீதியுள்ளவர்” மரித்ததால், நாம் மன்னிப்பைப் பெறுவது சாத்தியமாயிற்று. அவர் நம் பிரதிநிதியாக மரித்ததால், தன்மையின்படி நாம் என்னவாக இருக்கிறோமோ, அதிலிருந்து நாம் விடுதலை பெறுவது சாத்தியமாயிற்று. பவுல் தன்னைப்பற்றி, “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்..கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்,” என்றும், கிறிஸ்தவர்களைப்பற்றி, “நீங்கள் மரித்தீர்கள்; உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது,” என்றும் கூறுகிறார். சிலுவையின் இந்த இரண்டு அம்சங்களும் பிரிக்கமுடியாதவாறு எப்போதும் சேர்ந்தே இருக்கின்றன. கிறிஸ்து நமக்காக மரித்தார் என்பது மட்டும் அல்ல, நாமும் கிறிஸ்துவுடனேகூட மரித்தோம் என்பதும் உண்மை. கிறிஸ்துவின் மரணத்திலும், உயிர்தெழுதலிலும் நாம் அவருடன் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறோம். அவர் மரித்து, அதன்பின் “தமக்குள்ளாக ஒரு புதிய மனிதனைப் படைக்க,” ஒரு புதிய இனத்தின் தொடக்கமாக உயிர்த்தெழுந்தார்.

இப்போது, அவர் உயிர்த்தெழுந்து, மகிமைப்படுத்தப்பட்டவராக, “மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டப்பட்டவராக,” பிதாவானவர் மனிதனுக்காகத் தீட்டியிருந்த திட்டங்களையெல்லாம் செய்துமுடித்தவராக வீற்றிருக்கிறார். இப்போது அவர் வானம் பூமி நரகம் ஆகியவைகளின் எல்லாத் “துரைத்தனத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும்மேலாய்” வெற்றிவாகை சூடியவராக, உயிர்த்தெழுந்த கர்த்தரும் இரட்சகருமாக, பிரபஞ்சத்தின் சிங்காசனத்தில், பிதாவின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவரே அவருடைய சபையின் உயிருள்ள தலையாக அமர்ந்திருக்கிறார்; அவருடைய சபை அவருடைய உயிர்த்தெழுதலையும், உயர்த்தப்படுதலையும் அனுபவிக்குமாறு, பிதாவானவர் வாக்குத்தத்தம் செய்த கொடையாகிய பரிசுத்த ஆவியானவர்மூலம் அவர் சபைக்குத் தம் ஜீவனைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். நாம் “தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன்சசுதந்தரருமாமே”. இவ்வாறு, கிறிஸ்தவர்கள் இப்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவைமரணம், உயிர்த்தெழுதல், உயர்த்தப்படுத்தல் ஆகியவைகளில் அவரோடு ஒன்றாக இருக்கிறார்கள்; அவருடைய இரண்டாம் வருகையில் அவருடைய ஆளுகையிலும் அவருடன் ஒன்றாக இருப்பார்கள்.

” தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” (ரோமர் 8:32). “…எல்லாம் உங்களுடையதே…நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்” (1 கொரி. 3:21-23).

வேத வாசிப்பு  

மத். 7:15; 16:16-17, 21; 20:28; யோவான் 1:29; அப். 2:32-33; ரோமர் 3:26; 4:25; 5:8; 6:1-11; 8:17; 1 கொரி. 1:23-25; 15:45-57; 2 கொரி. 5:19, 21; கலா. 2:20; 3:13; எபே. 1:20-23; 2:1-10; கொலோ. 1:18; 3:3-4; எபி. 2:19; 9:14, 22; 1 பேதுரு 2:24; 3:18; 1 யோவான் 4:1-6; வெளி. 3:21; 14:12; ஏசாயா 53:6