Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

வேத வாசிப்பு 

யோவான் 1:16; 10:27; அப். 1;2; 2:42; 13:2; 16:6-7; 20:27; ரோமர் 6:4, 11; 8:12-17; 1 கொரி. 6:19; 2 கொரி. 2:17; 4:2; 5:7; 12:9; கலா. 5:16-26; எபே. 3:7, 16, 20; 4:20; 4:30; பிலி. 3:10; கொலோ. 3:15-16; எபி. 9;14; 1 யோவான் 4:17; ஆதி. 32:24-32

14-அன்றாட அனுபவத்தில் சிலுவையும் பரிசுத்த ஆவியானவரும்.pdf

அன்றாட அனுபவத்தில் சிலுவையும், பரிசுத்த ஆவியானவரும் - 14

பரிசுத்தமாக்கப்படுவதில் நம் உணர்வைக்கடந்த முன்னேற்றமும், நம் உணர்வுக்குட்பட்ட அனுபவமும் அடங்கியுள்ளன என்று நாம் பார்த்தோம். நடைமுறையில் இதற்கு என்ன பொருள்?

நற்செய்தியை நாம் எப்படி நீர்த்துப்போகச் செய்துவிட்டோமோ, அதுபோல கிறிஸ்தவ வாழ்க்கையின் தன்மையைப்பற்றிய புதிய ஏற்பாட்டின் வெளிப்பாட்டையும் நம் பின்புலம், நம் இயற்கையான மனநிலை, நம் தேவை ஆகியவைகளுக்குத் தக்கவாறு நாம் மாற்றி அமைத்துக்கொண்டோம். மேலும், உண்மையான சபையைப்போன்ற கேலிச்சித்திரங்களையும், பல அம்சங்களில், நாம் உருவாக்கியிருக்கிறோம். புதிய ஏற்பாட்டு உண்மையைப் பகுத்துணரவும், அதன் சமநிலையைப் பராமரிக்கவும், அதன் ஒவ்வோர் அம்சத்தையும் கனப்படுத்தவும் நாம் நாட வேண்டும். நம் சொந்த அபிப்பிராயங்களுக்கும், அனுபவத்துக்கும் பொருந்தாத பகுதிகளை விட்டுவிடுவதற்கோ, அவைகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கோ நாம் முயலக்கூடாது. பவுல் தேவனுடைய நற்செய்தி அறிவித்தபோது, தான் ஒருபோதும் எதையும் அரைகுறையாகச் சொல்லாமல் “தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் அறிவித்ததாகச்” சொல்கிறார்.

உணர்வைக்கடந்த முன்னேற்றம், உணர்வுக்குட்பட்ட அனுபவம்

நம் புதுப்பிறப்பில் பரிசுத்த ஆவியானவர் நம் ஆவிக்குள் நுழைகிறார். அந்தக் கணத்திலிருந்து கட்டுப்பாட்டை அவர் தம் கையில் எடுத்துக்கொண்டு, நம் முழு ஆள்த்துவத்தையும் ‘வென்று ஆள்வதற்கு’ நம் ஆவியிலிருந்து படிப்படியாக முன்னேறுகிறார். ஆவியானவர் நம்மை மறுவுருவாக்குகிற வேலை பெரும்பாலும் நம் உணர்வைக்கடந்து நடந்தாலுங்கூட, கிறிஸ்தவ வாழ்க்கை இதைவிட அதிகமானது. இதில் உண்மையான, நடைமுறைக்குரிய, உணர்வுக்குட்பட்ட அனுபவங்களும் அடங்கியுள்ளன. ஆவிக்குரிய உணர்வும் (விழிப்புணர்வும்), ஆவியானவர் உண்மையாகவே கட்டுப்படுத்துகிறார், வழிகாட்டுகிறார், ஆற்றலளிக்கிறார் என்ற அறிவும் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு பகுதி என்று புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கிறோம். இந்தக் காரியத்தை நாம் ஒதுக்கிவிட முடியாது. வேதவாக்கியங்கள்தான் எப்போதும் நம் நீதிபதியாக இருக்க வேண்டுமேதவிர, நம் அனுபவங்கள் நம் நீதிபதியாக இருக்கக்கூடாது.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய வாழ்க்கையில் இதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். அவர் தமக்குத் தேவையான வளங்களையும், கட்டளைகளையும் பிதாவிடமிருந்தே பெற்றுக்கொண்டார். அவர் தம் வாழ்க்கை முழுவதும் ஆவியானவரின் அரசாங்கத்தின்கீழ் வாழ்ந்தார் என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். அவருடைய வாழ்க்கையே நம் கிறிஸ்தவ வாழ்க்கையின் வரையறை. “அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்”. 

உணர்ச்சிகளா, பரிசுத்த ஆவியானவரா

நாம் உணர்ச்சிகளைப்பற்றியோ, பறம்புதிரான அனுபவத்தைப்பற்றியோ பேசவில்லை. மாறாக, ஆவிக்குரிய உணர்வுத்திறனைப்பற்றிப் பேசுகிறோம் என்ற காரியத்தில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். பரம்புதிர்வாதம் உணர்ச்சிகளின் மண்டலமாகிய ஆத்துமாவைச் சார்ந்தது. ஆனால், பரிசுத்த ஆவியானவரோ உணர்ச்சிகளைவிட மிக ஆழமாக நம் ஆவியில் வாசம்செய்கிறார். பரம்புதிரான உணர்ச்சிப்பிழம்பின் அனுபவங்களுக்கும், ஆவிக்குரியவிதத்தில் தேவனுக்கென்று உயிருள்ளவர்களாக இருப்பதும் எந்தச் சம்பந்தமும் இல்லை; இரண்டும் இருவேறு துருவங்கள்; இந்த இரண்டையும் மக்கள் அடிக்கடி குழப்பிக்கொள்கிறார்கள். பல அவிசுவாசிகளுக்கும் அனுபவங்கள் உண்டு; ஆனால், அவர்களுடைய அனுபவங்களுக்கும் கர்த்தருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. அவிசுவாசிகளைப்போல் கிறிஸ்தவர்களும்கூட இப்படிப்பட்ட அனுபவங்களைப் பெறலாம். அவிசுவாசிகளைப்போல, அந்த அனுபவங்கள் உண்மையாகவே தேவனுக்குரியவை என்று அவர்களும் குழம்பக்கூடும். நாம் பரிசுத்த ஆவியின் ஆலயங்களாக இருப்பதால் இதை நாம் தெளிவாகப் பகுத்துணர வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம்மில் இருந்தும், நாம் இதை உணரவில்லையென்றால் உண்மையாகவே அது விசித்திரம்தான்!

ஆயினும், ஒரு கிறிஸ்தவன் எந்த அளவுக்கு உண்மையாகவே பரிசுத்த ஆவியானவரையும், கிறிஸ்துவின் வல்லமை தன்மேல் தங்கியிருப்பதையும் அனுபவத்தில் அறிந்திருக்கிறானோ, அந்த அளவுக்குத்தான் அவன் சிலுவை, சுயவாழ்வுக்கு மரித்தல், அவருடைய பாடுகளில் ஐக்கியம் ஆகியவைகளின் பொருளையும் அறிய முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். சவுல் அரசன், யூதாஸ் ஆகியவர்களின் பரிதாபமான முடிவையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். இருவரும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவங்களைப் பெற்றிருந்தார்கள்; ஒருவனிடம் இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவங்கள் இருப்பதால் அது எதையும் நிரூபிக்கப் போவதில்லை. பிசாசினால் அற்புதங்கள் செய்ய முடியும். சுயத்தை மையமாகக் கொண்ட மனித இயல்பு சிலுவையின் பலவீனமாக்கும் வல்லமையை அறியும்போது மட்டுமே, நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பொருள். தன்னிடம் பலவீனம் இருக்கிறது என்று உணர்ந்தவன் உண்மையாகவே கர்த்தரைச் சார்ந்துகொள்வான். அதன் விளைவாக ஆவியானவருக்கு வழி பிறக்கும். பெந்தகொஸ்தேக்குமுன் கல்வாரி வருவதுபோல, நம் அனுபவத்தில் ஆவியானவருக்குமுன் சிலுவை வருகிறது. “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையில் அறையப்பட்டேன்… கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்” என்பதுதான் ஒழுங்கான வரிசை. முதலாவது, “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையில் அறையப்பட்டேன்.”  பின்பு, “கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்”.


கர்த்தரின் அரசாங்கம்

“நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்”. எனவே, நம் அன்றாட வாழ்க்கையில் கர்த்தருடைய ஆளுகையும், அரசாட்சியும் பெரும்பாலும் நம் உணர்வறியாமலேயே நடைபெறுகிறது. நம் அனுதின வாழ்க்கையில் கர்த்தர் நம்மேல் அரசாட்சி செய்யவேண்டுமானால், பின்வரும் காரியங்களில் நாம் அவருடன் ஒத்துழைக்கவேண்டும். 1. வேதவாக்கியங்களைத் தொடர்ச்சியாகத் தியானிக்க வேண்டும்; 2. தேவனுடைய குடும்பத்திலுள்ள மற்றவர்களுடன் ஒழுங்கான ஐக்கியத்தை ஆசையாய் நாட வேண்டும்; 3. உள்ளான சமாதானத்தை அல்லது ஆவியானவரின் சாட்சியைப் பராமரிக்க வேண்டும்; விசுவாசத்திலும், கீழ்ப்படிதலிலும் நிலைத்திருக்கும்போது மட்டுமே இதை அறிய முடியும்; 4. சூழ்நிலைகளும், பொறுப்புகளும் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவைகளையெல்லாம் தேவன் தம் இறையாண்மையின்படியே அமைக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவர்களிடையே வேதாகமத்திற்கு ஒவ்வாத ஆபத்தான ஒரு கருத்து உண்டு. சில வேளைகளில் கிறிஸ்தவர்கள் ஒரு காரியத்தைக்குறித்து, “இதைச் செய்வதற்கு ஆவியானவர் என்னை நடத்துவதாக உணர்கிறேன்” என்றோ, “இதைச் செய்வதற்கு ஆவியானவர் என்னை நடத்துவதாக உணரவில்லை” என்றோ சொல்வதுண்டு. இதற்கு பெரும்பாலும் “நான் விரும்புகிறதைச் செய்கிறேன்” என்பதே பொருள். நிச்சயமாக நாம் எப்படியாவது மிக எளிதில் தவறான வழியில் போய்விடுவோம். இப்படிப்பட்ட உணர்ச்சிக்கும், உண்மையாகவே ஆவியானவரால் ஆளப்படுவதற்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. வேதவாக்கியங்களை நாம் மிக நெருக்கமாகப் பின்பற்றவேண்டும்.

ஆவியினால் நடத்தப்படுதல்

ஆவியினால் நடத்தப்படுவதைப்பற்றி காலத்தியர் 5:18யிலும் ஆவியினால் நடப்பதைப்பற்றி ரோமர் 8:14யிலும் நாம் வாசிக்கிறோம். இந்த வசனங்களின் இடஅமைப்பைப் பார்க்கும்போது, 1. பவுல் இங்கு வழிகாட்டுதலைப்பற்றிப் பேசாமல், நம் பாவத்தன்மைக்கு எதிராக நாம் கர்த்தருடன் ஒத்துழைப்பதைப்பற்றியே பேசுகிறார் என்றும், 2. புதிய ஏற்பாட்டில் “பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காகப் பிரித்துவிடுங்கள் என்று ஆவியானவர் திருவுளம்பற்றினார்” என்பதுபோன்ற குறிப்பிட்ட வழிகாட்டுதலைப்பற்றிய எல்லா வசனங்களும் குறிப்பிட்ட முக்கியமான நிகழ்ச்சிகளில் மட்டுமே காணப்படுகின்றன; அது நம் அனுதின வாழ்க்கையின் ஒரு பகுதியாக சொல்லப்படவில்லை என்றும் தெளிவாகத் தெரிகிறது. எனவே, நம் வாழ்வில் எல்லாவற்றையும்குறித்து ஆவியானவரால் நடத்தப்படுவதைப்பற்றிய உணர்வுக்குட்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தைக்குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் விசுவாசத்தோடு கீழ்ப்படிந்து, கர்த்தரை நெருக்கமாகப் பின்பற்றும்போது, உணர்வைக்கடந்தும் நாம் அவரால் நடத்தப்பட்டு, ஆளப்படுவோம்; இது அதைவிடப் பெரிய அற்புதம் இல்லையா! பெரும்பாலான வேளைகளில் ’தானியங்கி விமானி’தான் ஆகாய விமானத்தை ஓட்டும். திட்டவட்டமான வழிகாட்டுதல் தேவைப்படும்போது மட்டுமே விமானி தலையிடுகிறார். அதுபோல திட்டவட்டமான வழிகாட்டுதலும், வழிநடத்துதலும் தேவைப்படும்போது நாம் கர்த்தரை உறுதியாகச் சார்ந்துகொள்ளலாம்.

சரிபார்க்க வேண்டிய நான்கு காரியங்கள்

வழிகாட்டுதலில் பின்வரும் நான்கு காரியங்களைச் சரிபார்க்குமாறு உங்களுக்கு ஆலோசனையாகச் சொல்லுகிறேன். இந்த நான்கும் சேர்ந்து இருக்கின்றன. 1. அது எப்போதும் வேதவாக்கியங்களுக்கு ஒத்ததாக இருக்க வேண்டும். நாம் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்துவிட்டு, அங்கு ஏற்கெனவே தெளிவாகச் சொல்லப்பட்டுள்ள ஒரு காரியத்தைப்பற்றி மீண்டும் கர்த்தரிடத்தில் போய் விசாரிப்பது வீண். நாம் அவருடைய வார்த்தையைப் புறக்கணித்தால், அதற்குமேல் அவருடைய வழிகாட்டுதலைப் பெற முடியும் என்று எதிர்பார்க்க வேண்டாம்; 2. அதில் ஏதோவொரு வகையில் சிலுவை சம்பந்தப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, அது வழக்கமாக நாம் இயற்கையாக என்ன செய்ய விரும்புகிறோமோ அதற்கு எதிராகச் செயல்படும்; 3. அதில் நம் உணர்ச்சிகளைவிட நம் விசுவாசமும், கீழ்ப்படிதலும், நம் விருப்பத்தின் மறுமொழியும் சம்பந்தப்பட்டிருக்கும்; 4. கர்த்தர் எவர்களுடைய ஐக்கியத்தில் நம்மை வைத்திருக்கிறாரோ அவர்களுக்கும் அது அவருடைய நடத்துதலாகவே தென்படும். நம் வழிகாட்டுதலில் இந்த நான்கில் ஏதாவது ஒன்று குறைந்தாலும்கூட, நிச்சயமாகச் சொல்லமுடியாவிட்டாலும், பெரும்பாலும் அது தவறாகத்தான் இருக்கும்.

நாம் தேவனுடைய குடும்பமாகச் சேர்ந்து வாழ்கிற இந்த வாழ்க்கையில், கர்த்தரை ஜீவிக்கும் தலையாகக்கொண்டு உண்மையாகவே நாம் நம்மை அவருக்கு ஒப்படைக்காதவரை கர்த்தருடைய மனதை நாம் புரிந்துகொள்ள முடியாது.

பரிசுத்த ஆவியானவரின் வேலை

பிதாவின் சித்தத்தைச் செய்வதற்குப் பரிசுத்த ஆவியானவரே நமக்குத் திறமையைத் தருகிறார். தேவனுடைய குடும்பத்தில் நம் குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு, அவரே தம் விருப்பப்படி நமக்குக் கொடைகளைத் தருகிறார்; நம் ஒவ்வொருவரையும் தகுதிப்படுத்துகிறார். அவருடைய சரீரமாகிய சபையில் நாம் நம் பொறுப்பை நிறைவற்றுவதற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி, நம்மை ஆயத்தம்பண்ணுமாறு நாம் கர்த்தரைத் தேட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் “இயேசுவின் ஆவி… இயேசு கிறிஸ்துவின் ஆவி … தேவனுடைய குமாரனின் ஆவி” என்பதை நினைவில்கொள்ளுங்கள். திருப்திப்படுத்தவேண்டிய தனிப்பட்ட சொந்த நலன் எதுவும் அவருக்குக் கிடையாது; மற்றவர்களுக்கு வழங்குவதற்கு அவரிடம் தனிப்பட்ட சொந்தக் கொடைகள் எதுவும் கிடையாது. அவர் கிறிஸ்துவின் ஆராய்ந்தறிய முடியாத ஐசுவரியங்களைத் தன் சபைக்குப் பரிமாறுவதற்ககாக மட்டுமே வந்திருக்கிறார். நாம் அவரைத் துக்கப்படுத்தவோ, தடுக்கவோ வேண்டாம். அதற்குப்பதிலாக, “எப்போதும் ஆவியினால் நிறைந்திருங்கள்”. 

யோவான் 4:14யில் ஆண்டவராகிய இயேசு பரிசுத்த ஆவியானவரை நம் எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்கிற, நமக்குள் பொங்கிவருகிற நீரூற்றுக்கு ஒப்பிடுகிறார். யோவான் 7:37-39இல் அவர் பரிசுத்த ஆவியானவரை நமக்குள்ளிருந்து வெளியே பாய்ந்தோடி, நம்மைப் பிறருக்கு ஆசீர்வாதமாக மாற்றுகிற ஒரு நதிக்கு ஒப்பிடுகிறார். தாகமுள்ள இந்த உலகத்தில் நாம் புத்துயிரடைந்து, புதிதாக்கப்படவும் முடியும்; தேவ நதி பாய்வதற்கான வாய்க்கால்களாகவும் முடியும். கிறிஸ்துவின் நிறைவைக் கொடுக்கவே பரிசுத்த ஆவியானவர் வந்திருக்கிறார். “அவருடைய பரிபூரணத்தால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்”. ஆமென்!

வேத வாசிப்பு 

யோவான் 1:16; 10:27; அப். 1;2; 2:42; 13:2; 16:6-7; 20:27; ரோமர் 6:4, 11; 8:12-17; 1 கொரி. 6:19; 2 கொரி. 2:17; 4:2; 5:7; 12:9; கலா. 5:16-26; எபே. 3:7, 16, 20; 4:20; 4:30; பிலி. 3:10; கொலோ. 3:15-16; எபி. 9;14; 1 யோவான் 4:17; ஆதி. 32:24-32