Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

வேத வாசிப்பு  

ரோமர் 6:14; 7:17, 20; 8:12, 13; 1 கொரி. 11:1, 28; 2 கொரி. 5:17; 13:5; கலா. 2:20; 5:16-25; எபே. 2:10, 15; 5:1; கொலோ. 1:29; 2:20-3:4; எபி. 12:6, 10; 2 பேதுரு 1:3-11; ஏசாயா 64:4

15-கிறிஸ்துவில் மறுபடைப்பு.pdf

சிலுவையின்மூலம் ஆவியானவரால் கிறிஸ்துவில் மறுபடைப்பு - 15

தேவனால் புறக்கணிக்கப்பட்ட இனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இனத்துக்குள் கொண்டுவரப்படுவதே இரட்சிப்பு என்று 8ஆம் அதிகாரத்தில் நாம் பார்த்தோம். இது தொடர்பாக கொலோசெயர் 3:9-10யையும், எபேசியர் 4:22-24யையும் நாம் பார்த்தோம்.

இந்த இரண்டு வசனங்களிலுள்ள “படைத்தார்” என்ற வார்த்தையைக் கவனியுங்கள். “படைக்கப்பட்ட…புதிய மனிதனைத் தரித்துக்கொள்ளுங்கள்” (கொலோசெயர் 3:10; எபேசியர் 4:24). கிறிஸ்தவர்கள் தேவனுடைய குமாரனின் சாயலில் மறுபடி படைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று பல வசனங்கள் கூறுகின்றன.

ஆனால், இந்த அற்புதம் நம் வாழ்க்கையில் எப்படி நடைபெறுகிறது? நாம் கிறிஸ்துவில் எப்படி மறுபடி படைக்கப்படுகிறோம்? நாம் எப்படி அவரைப்போல் ஆக்கப்படுகிறோம்?

முதலாவது, இந்தக் காரியத்தில் நமக்குக் கொஞ்சங்கூட உதவாத மூன்று காரியங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன். சொல்லப்போனால் இந்த மூன்று காரியங்கள் இதற்குத் தடைகளாகவும் இருக்கும், நம்மைத் தவறான வழியிலும் நடத்தும்.

1. தற்பரிசோதனை.

தற்பரிசோதனை என்றால் என்ன? நம் உள்ளத்தை, நம் பாவத்தன்மையை (அல்லது வெற்றியும், முன்னேற்றமும்போலத் தோன்றுபவைகளை) நாம் ஆய்வுசெய்வது அல்லது நம்மை நாமே பகுத்தாராய்வது அல்லது நம் உணர்ச்சிகளைச் சார்ந்திருப்பது அல்லது நம் உணர்ச்சிகளின்படி நடப்பது தற்பரிசோதனை. இது கடுமையான தவறு. இதன் விளைவாக ஒருபுறம் மனச்சோர்வும், மனஅழுத்தமும் ஏற்படும் அல்லது பொய்யான நிச்சயமும், பெருமையும் ஏற்படும் அல்லது தற்பரிசோதனை செய்பவன் வஞ்சிக்கப்படுவான். எல்லா நேரமும் நாம் நம் இருதயக் கண்களை ஆண்டவராகிய இயேசுவில் மட்டுமே பதிக்க வேண்டும். கிருபாசனத்தில் வீற்றிருக்கும் அவரையே வெளிநோக்கியும், மேல்நோக்கியும் பார்க்க வேண்டும். புறத்தூண்டுதலின்றி தானாய் மனதில் எழுகின்ற எந்த வகையான அகநிலையாக, உள்ளுணர்வுசார்ந்த நிலையாக, இருந்தாலும் சரி, அது நம்மைத் தவறான பாதையிலேயே நடத்தும். நாம் நம்மைப் பரிசோதித்துப்பார்க்கக் கூடாது என்று சொல்லவில்லை. “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள். உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள்,” என்று வேதாகமம் கூறுகிறது. ஆனால், நம்மைச் சேதப்படுத்தும் அளவுக்கு நம் ‘அனுபவத்திலும்’, நம் ‘உணர்ச்சியிலும்’ நம் ‘ஆவிக்குரிய நிலைமையிலும்’ நாம் மூழ்கிவிடக்கூடாது. அதாவது நாம் நம்மில் மூழ்கிவிடக்கூடாது. தற்பரிசோதனை என்று சொல்லும்போது நான் இதைத்தான் குறிக்கிறேன்.

2. கிறிஸ்துவைப்போல் பாவனைசெய்தல்

நம் சொந்த முயற்சிகளால் நாம் கிறிஸ்துவைப்போல் மாற முடியாது, கிறிஸ்துவைக் “காப்பி” அடிக்க முடியாது. கிறிஸ்துவைப்போல் மாறுவதற்கு நம் சொந்த முயற்சிகளால் நாம் எதையும் சாதிக்கமுடியாது. வேதவாக்கியங்களில் கிறிஸ்துவின் முன்மாதிரிகள் நமக்குமுன் தெளிவாக இருக்கின்றன. நாம் “பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்ற” வேதாகமம் நமக்கு அழைப்பு விடுக்கிறது; ஆனால், அது நம் சொந்த முயற்சிகளால் நடக்காது. மாறாக, நமக்கு ஆற்றலளிக்கும் கிருபையால்தான் அது சாத்தியம். நாம் “நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறோம்” என்று வேதாகமம் சொல்லுகிறது. நம்மைக் கிறிஸ்துவைப்போல் மாற்றுவதற்கு நாம் கர்த்தரை நம்பி, அவருடன் முனைப்புடன் ஒத்துழைப்பதைத்தவிர வேறொன்றும் செய்ய முடியாது. அவர் நம்மை நம் ஆள்தத்துவத்தின் ஆழங்களில் மாற்றுவார் என்று நாம் அவரை நம்ப வேண்டும். உண்மையாகவே நாம் கர்த்தரைச் சார்ந்து, அவருடன் நேர்மறையாக ஒத்துழைக்க வேண்டும். நம் விருப்பங்கள் முற்றிலும் கர்த்தருக்காக இருக்க வேண்டும். நம் முழு இருதயத்தோடு நாம் அவருக்கு மாறுத்தரம் கொடுக்க வேண்டியது அவசியம். ஆனால், இது அவரைப்போல் இருக்க வேண்டும் என்பதற்காக நாம் செய்கிற மிகச் சிறந்த முயற்சியைவிட முற்றிலும் வேறுபட்டது.

3. சந்நியாசம்

இது நம்மைக் கடுமையாகத் தண்டித்து, நம் பாவத்தன்மையை ஏதோவொரு வகையில் ‘கொல்வதற்காக’ எடுக்கும் இன்னொரு வீண் முயற்சி. “இது நம்மை நாம் வெறுப்பதும், மறுப்பதும்தானே! வேதம் இதை வரவேற்கிறதே!” என்று சிலர் சொல்லக்கூடும். இந்த மறுத்தல் நாம் சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவைப் பின்பற்றும்போது நமக்கு நாம் சொல்லுகிற “இல்லை” என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நாம் செய்ய விரும்புகிற ஒன்றைச் செய்யாமல் போவதிலோ, சிரிப்பது பாவம் என்பதுபோல முகத்தை விறைப்பாக வைத்துக்கொள்வதிலோ, ஒருவிதமான பக்திமயமான முகபாவத்திலோ எந்தப் புண்ணியமும் இல்லை, எந்தப் பயனும் இல்லை. ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக எண்ணிலடங்கா மக்கள் இப்படி நினைத்து, இந்த உலகத்தில் இயல்பான இல்லற வாழ்க்கை வாழ்வதைவிட்டு ஒதுங்கி, ஒருவகையான துறவற வாழ்க்கையைச் சிரத்தையோடு பின்பற்றியிருக்கிறார்கள். ஆனால், உண்மையான சுய-ஒழுக்கம், சுய-கட்டுப்பாடு, தேவனுடைய சித்தத்துக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிகிற வாழ்க்கையாகும். இது ஆவியானவரின் கனி; இது நம்மில் இருக்கிற கிறிஸ்துவினுடைய ஜீவனின் வெளியாக்கம். இதை ஆவியானவர் மட்டுமே நம்மில் உருவாக்க முடியும். நாம் கர்த்தருடன் ஒத்துழைக்கும்போது இது நம்மில் உருவாகும். பேதுரு சொல்வதுபோல் உண்மையாகவே நாம், “நம் விசுவாசத்தோடே இச்சையடக்கத்தையும்” வேறு பல நற்பண்புகளையும் கூட்டுவதற்கு முயல வேண்டும். ஆனால், ஏதோவொரு வகையில் நாம் நம் “மாம்சத்தைச் சிலுவையில் அறைவதற்கு” முயல்வதால் எந்தப் பயனும் இல்லை. நாம் ஏற்கெனவே “சிலுவையில்” கிறிஸ்துவுடனேகூட மரித்தோம். மேலும், நாம் கிறிஸதுவைப்போல் வெறுமனே ஒப்பனை செய்துகொண்டிருக்கையில் ஆவிக்குரிய வகையில் நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்து நம்மை நாமே வஞ்சித்துக்கொள்ளக்கூடிய ஆபத்து இருக்கிறது.

சிலுவை என்றால் என்னவென்று நம் அன்றாட வாழ்க்கையிலும், அனுபவத்திலும் நமக்கு விளக்கிக்காண்பிப்பதன்மூலம் கர்த்தர் இந்த அற்புதத்தைச் செய்கிறார். நாம் இதை உணரும்போது சேதப்படுத்தும் தற்பரிசோதனையிலிருந்தும், நம் “மாம்சத்தைச் சிலுவையில் அறைவதற்கு” நாம் எடுக்கும் வீண் முயற்சிகளிலிருந்தும், கிறிஸ்துவைப்போல் இருக்க வெறுமனே பாவனை செய்வதிலிருந்தும் நாம் காப்பாற்றப்படுவோம். இது நம் வாழ்க்கையிலிருந்து எல்லா இறுக்கத்தையும் எடுத்துவிடும். அவருடைய வார்த்தையினால் ஆளப்பட்டு, அவருடைய ஆவியானவருக்கு மாறுத்தரம் கொடுக்க வேண்டியது நம் வேலை. எப்போதெல்லாம் நாம் சுயநலவாதியாக இருக்கிறோமோ அல்லது நம் நடத்தையில் கிறிஸ்துவின் குணத்துக்கு முரணாக நடக்கிறோமோ அல்லது நாம் நம் சொந்த வழியில் நடக்கிறோமோ, அப்போதெல்லாம், “நாம் மரித்தோம்; நம் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது” என்ற உண்மையை அவர் நமக்கு நினைப்பூட்டி, நாம் அவருக்குக் கீழ்ப்படியுமாறும், ஒத்துழைக்குமாறும் கோருவார்.

பின்வரும் காரியங்களை நாம் கண்டுணர்ந்து, அவைகளை ஒப்புக்கொள்ள வேண்டும். 1. நம்மில், அதாவது நம் இரத்தத்தில், “பாவம் வாழ்கிறது”. இது பகுத்தாராயமுடியாத அளவுக்கு ஆழமானது; கலப்படமான நம் உள்நோக்கங்களும் இதில் அடங்கும். இதை ‘சுயத்தை மையமாகக் கொண்ட மனிதத்தன்மை’ என்றழைக்கலாம். இது போக வேண்டும். இது சாக வேண்டும். 2. ஆகையால், “அவருடைய பரிசுத்தத்தில் பங்குபெறுவதற்காக” நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தேவையற்றவைகளிலிருந்து முற்றிலும் விடுதலையாக்கப்பட்டு, மருவுருவாக்கப்படுவதற்கு எவை தேவையென்று கர்த்தர் கருதுகிறாரோ, அதன்படி ‘சிலுவையின்வழியாக’ அதாவது இப்படிப்பட்ட அனுபவங்களின்வழியாக நாம் கடந்துபோக வேண்டும். சுயத்தை மையமாகக்கொண்ட மனிதத்தன்மை சிலுவையின்வழியாக ஒருபோதும் கடந்துபோக முடியாது. பரலோகத்தில் சுயநலம் இல்லை. சிலுவை ஒரு வடிகட்டிபோல் செயல்படுகிறது என்று சொல்லலாம். நாம் இருக்கிறபடியே நம்மை விட்டுச்செல்ல பரிசுத்த ஆவியானவர் விரும்பவில்லை. எனவே, நடைமுறைக்குரிய அன்றாட வாழ்க்கையில் அவர் சிலுவையைப் பிரயோகிக்கிறார். நம் இருதயத்தில் மிக ஆழமாக வேர்கொண்டிருக்கிற சுயநலத்தை வடிகட்டி அழிப்பதற்கு, அவர் நம் ஒவ்வொருவரையும் அறிந்திருப்பதின்படி, நம்மைப் பரீட்சிக்கக்கூடிய சூழ்நிலைகளுக்குள் நம்மைக் கொண்டுவருகிறார். ஆண்டவராகிய இயேசுவின் ஜீவனும், குணமும் நம்மில் வளர்வதற்கு அவர் தளத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். இந்த நோக்கத்திற்காகவே அவர் நம்மைத் தம் கரத்தில் எடுத்துக்கொள்கிறார். சுயநலம் தன்னைப் பல்வேறு வழிகளில் காண்பிக்கிறது. ஆத்திரம், பிடிவாதம், பெருமைபோன்ற வெளிப்படையான காரியங்களில் மட்டும் அல்ல, சுய-பரிதாபம், பொய்யான தாழ்மை, ஏக்கம்போன்ற காரியங்களிலும் அது தெரிகிறது. நம் துல்லியமான நிலைமையும், அதற்குத் தேவையான சிகிச்சையும் கர்த்தருக்குத் தெரியும். இதை யோசேப்பு, மோசே, தாவீது, பேதுரு, பவுல் போன்றவர்களின் முழு வாழ்க்கைச் சித்திரத்தில் நாம் பார்க்கலாம். “கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ, அவனை அவர் சிட்சிக்கிறார்”.

ஆனால், முக்கியமான எல்லாச் சத்தியங்களையும்போல, இதையும் கிறிஸ்தவர்கள் தவறாகப் புரிந்துகொள்ள முடியும் அல்லது அளவுக்கு அதிகமாக ஒரே போக்கில் கொண்டுசெல்லவும் முடியும். எனவே, இரண்டு காரியங்களை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

  1. தேவன் நம் ஒவ்வொருவருக்கும் தந்திருக்கும் தனித்தன்மை சேதமின்றி பாதுகாப்பாக இருக்கிறது. நம் தனித்தன்மைக்கு எந்தச் சேதமும் இல்லை. நம் சுயநலம்தான் அழிக்கப்படுகிறது. நாம் எப்போதும் நாமாகவே இருப்போம். ஏனென்றால், நம் தேவன் நம்மைப் படைத்தவரும், மறுபடி-படைத்தவருமாவார். நாம் மெய்யாகவே மனிதர்கள். ஒழுக்கப்பொறுப்புள்ள மனிதர்கள் என்ற முறையில் அவர் எப்போதும் நம்மோடு இடைப்படுகிறார். நம்மிலிருந்து சுயநலம் அகற்றப்பட வேண்டும். அகற்றப்படும். அதனால், நாம் நாமாக இல்லாமல் போய்விடுவதில்லை. இங்கு வேதாகமத்தின் சமநிலையைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். கிறிஸ்து நம்மை அகற்றிவிட்டு அந்த இடத்தை அவர் எடுத்துக்கொள்வதில்லை. நாம் வெற்றிடங்களாக மாறிவிடுவதில்லை. “கிறிஸ்து என்னில் வாழ்கிறார்,” என்று பவுல் சொல்லுகிறார். இது ‘புதிய பவுல்’, மறுபடி படைக்கப்பட்ட பவுல். இந்தப் பவுலில்தான் கிறிஸ்து வாழ்கிறார். “சிலுவையில் அறையப்பட்ட” பவுலில் அல்ல. இருந்தபோதும், இது உண்மையாகவே பவுல்தான். பாவத்தின் காரணமாக நாமெல்லாரும் கேலிச்சித்திரங்களைப்போல்தான் இருக்கிறோம். ஒருநாள், தேவன் கருதினபடி, கிறிஸ்துவில் நாம் மெய்யாகவே நாமாகவே இருப்போம்.

  2. தேவனே எல்லாவற்றையும் செய்வார் என எதிர்பார்த்து நாம் எதுவும் செய்யாமல் மந்தமாக இருக்கக்கூடாது. அவர் செய்யமாட்டார். எடுத்துக்காட்டாக ஜெபம், வேதவாசிப்பு, மற்ற பரிசுத்தவான்களுடன் ஐக்கியம்போன்றவைகளின்மூலம் அவருடன் சுறுசுறுப்புடன் ஒத்துழைக்க வேண்டும். நாம் பணியாள்போல் பணிபுரிவதற்கும், கர்த்தருக்காகக் காத்திருப்பதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், காத்திருத்தல் என்பது எப்போதும் எதிர்நோக்கியிருக்கிற ஒரு மனப்பாங்கு என்று வேதாகமத்தில் பார்க்கிறோம். ஏனென்றால், அவருக்காகக் காத்திருப்பவர்களுக்காக அவர் கிரியைசெய்கிறார். அவர் நெடுங்காலம் நம்மைக் காத்திருக்கச் செய்வதுபோல் தோன்றுவது, நம் இருதயங்களை உறுதியாகப் பிடிப்பதற்காகவும், நமக்கு அவரையும், அவருடைய வழிகளையும் இன்னும் கொஞ்சம் தெளிவாகவும். ஆழமாகவும் கற்பிப்பதற்காகவுமே.

வேத வாசிப்பு  

ரோமர் 6:14; 7:17, 20; 8:12, 13; 1 கொரி. 11:1, 28; 2 கொரி. 5:17; 13:5; கலா. 2:20; 5:16-25; எபே. 2:10, 15; 5:1; கொலோ. 1:29; 2:20-3:4; எபி. 12:6, 10; 2 பேதுரு 1:3-11; ஏசாயா 64:4