Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More


டேவிட் பிரைனெர்ட் (1718 - 1747), ஓர் அமெரிக்க மிஷனரி, அமெரிக்காவின் பூர்வீகக்குடிகளான செவ்விந்தியர்களிடையே ஊழியம்செய்தார். அவருடைய மிகக் குறுகிய வாழ்க்கை பாடுகள் நிறைந்த வாழ்க்கை. அவருடைய தெய்வீகக் குணமும், பக்தியும், வாழ்க்கையும் பல நற்செய்தியாளர்களையும், இறையியலாளர்களையும், பல தூதுவர்களையும் உருவாக்கியுள்ளது, பல கிறிஸ்தவர்களுக்கு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கியுள்ளது. வில்லியம் கேரி, அடோனிராம் ஜட்சன், ஹட்சன் டெய்லர், ஜான் வெஸ்லி போன்ற பல தூதுவர்கள் இவருடைய வாழ்க்கையால் கிளந்தெழுந்தார்கள்.

{% endput %} {% put sidebarSection %} 

டேவிட் பிரைனெர்ட்

அறிமுகம் - அறியப்படாதவர்

இன்று நாம் டேவிட் பிரைனெர்ட் என்ற ஒரு தேவ-மனிதனைப்பற்றிப் பார்க்கப்போகிறோம். எலியா, எரேமியா, ஏசாயா, பவுல், பேதுரு போன்றவர்களை எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் தெரியும். பர்னபா, சீலா போன்றவர்களைக் கொஞ்சப்பேருக்காவது தெரியும். ஆனால், கித்தியனாகிய ஈத்தா, சிப்பிராள் பூவாள், பெசெலெயேல், ரோதை, ஒநேசிமுஸ், பவுலின் உடன் வேலையாட்களாகிய உர்பான், ஸ்தாக்கி, எப்பாப்பிரோத்து, அர்கிப்பு, கிலெமெந்து, அரிஸ்தர் போன்றவர்களை எத்தனை பேருக்குத் தெரியும்? இவர்களும் தேவனுக்கு ஊழியம்செய்தவர்களே! ஆனால், இவர்கள் வெளிச்சத்துக்கு வராதவர்கள், அறியப்படாதவர்கள். அதுபோல டேவிட் பிரைனெர்ட் அதிகமாக அறியப்படாத ஒருவர்.

நான் இவரைப்பற்றிப் படித்தபோது, ஓர் உண்மையைத் தெரிந்துகொண்டேன். அது எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவருடைய மிகக் குறுகிய வாழ்க்கை ஏற்படுத்திய தாக்கத்தினால் பல மிஷனரிகள், பல பிரசங்கிமார்கள், பல இறையியலாளர்கள் உருவானார்கள். அமெரிக்க இறையியலாளரும், போதகருமான ஜோனதன் எட்வர்ட்சுக்கு இவர் தனிப்பட்ட விதத்தில் உற்சாகமாகவும், உந்துதலாகவும் இருந்தார். இதைக்குறித்து நாம் பின்னர் பேசுவோம். அவர் மட்டும் அல்ல. ஜாண் வெஸ்லி போன்றவர்களுக்கும் அவர் பெரும் ஊக்கமாக இருந்தார். தன் உடன் ஊழியக்காரர்கள் அனைவரும் டேவிட் பிரைனெருடைய நாட்குறிப்புகளையும், நாளேடுகளையும் படிக்குமாறு அவர் பரிந்துரைத்தார். வில்லியம் கேரி இந்தியாவுக்கு ஊழியம் செய்ய வந்தபோது பிரைனெருடைய நாட்குறிப்புகளையும், நாளேடுகளையும் தன்னோடு கொண்டுவந்தார். மியான்மரில் ஊழியம் செய்த அடோனிராம் ஜட்சன் பிரைனெருடைய வாழ்க்கையும், அனுபவங்களும் மியான்மரில் ஊழியம் செய்வதற்குத் தனக்குப் பேருதவியாக இருந்தன என்று கூறினார். ஹட்சன் டெய்லர்போன்ற பலரும்கூட அவருடைய வாழ்க்கையையும், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிவிடையையும் கண்டு வியந்தார்கள். பிரைனெர்ட் ஏற்படுத்திய தாக்கம் பரந்துவிரிந்தது. டேவிட் பிரைனெர்டின் வாழ்க்கை பலருடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் உங்களிலும் ஏற்படும் என்றும், அது உங்களுக்கும், பிறருக்கும் ஆசீர்வாதமாக மாறும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

பின்புலம்

அவருடைய வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு நாம் அமெரிக்காவின் அன்றைய ஒரு காலனியான கனெக்டிகட்டுக்குச் செல்ல வேண்டும். அது ஆங்கிலேயர்கள் அமெரிக்காவை ஆக்கிரமித்திருந்த காலம். இன்று அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. அன்று ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்திருந்த 13 காலனிகள் மட்டுமே இருந்தன. அது 1700களின் காலம். சரியாகச் சொல்வதானால் 1718. அது ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேறிக்கொண்டிருந்த காலம். அமெரிக்கா என்ற ஒரு நாடு இன்னும் உருவாகாத காலம்.

பிறப்பும், பெற்றோரும்

சரி, அவருடைய பிறப்பைப்பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். அவர் அமெரிக்காவில், கனெக்டிகட் என்ற மாநிலத்தில் ஹாத்தம் என்ற இடத்தில் 1718 ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி பிறந்தார். டேவிட் பிரைனெர்ட் அப்பாவின் பெயர் எசேக்கியா; அவருடைய அம்மா பெயர் டோரதி. அவர்கள் இருவரும் மிகவும் உறுதியான கிறிஸ்தவர்கள். அவருடைய அப்பா அந்த வட்டாரத்தில் மிகவும் பிரபலமானார். ஏனென்றால், அவர் அந்தப் பகுதியில் எல்லாருக்கும் ஒரு நல்ல ஆலோசகராக இருந்தார். அவர் சபையில் ஓர் உதவிக்காரராகவும், அதாவது ஒரு டீக்கனாகவும், இருந்தார். அவருடைய அம்மா ஒரு ரெவெரெண்டின் மகள். இப்படிப்பட்ட குடும்பத்தில் வேதாகமத்தைச் சொல்லிக் கொடுக்காமல் இருப்பார்களா என்ன? ஆம், அவர்களுடைய வாழ்க்கைக்கு, முழுக் குடும்பத்துக்கு, வேதாகமமே ஆதாரமாகவும், அடித்தளமாகவும் இருந்தது. கன்மலையின்மேல் கட்டப்பட்ட வீடு. மிகவும் கண்டிப்பான வீடு, ஒழுக்கமான வீடு. ஓய்வு நாளில் ஆவிக்குரியவைகளைத்தவிர வேறு எதையும் வாசிக்கவோ, தொடவோ பிள்ளைகள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வேதாகமத்தை மட்டுமே படிக்க வேண்டும்; அது கட்டாயம். புத்தகங்கள் படிக்க வேண்டுமானால், ஜாண் பன்யன் எழுதிய pilgrim’s progress (மோட்ச பிரயாணம்)போன்ற புத்தகங்களைப் படிக்கலாம். அம்மாவின் சமையலை ஒருவரும் ஒருநாளும் குறை சொல்லக்கூடாது; குறை சொன்னால், குறை சொன்னவர்களுக்கு அன்றைக்குச் சாப்பாடு கிடையாது.

குடும்பம்

அவர்களுடைய குடும்பம் மிகப் பெரிய குடும்பம். அவருடைய பெற்றோருக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். டேவிட் ஆறாவது குழந்தை. அவருக்கு நான்கு சகோதர்கள், நான்கு சகோதரிகள். இப்படிப்பட்ட வீட்டில் வளர்கிற குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? தான் மனச்சோர்வும், சலிப்பும் நிறைந்த ஒரு குழந்தையாக வளர்ந்ததாக டேவிட் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக, விளையாட்டில் அவருக்கு ஆர்வம் இருக்கவில்லை; அதில் அவருக்கு எந்த ஈடுபாடும் இல்லை. அவர் ஒரு கறார் பேர்வழி. காரியங்களை ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ளமாட்டார். அவருடைய இளமைப்பருவத்திலேயே தேவனுடைய அதிகாரத்தையும், தன் பாவத்தையும்பற்றிய ஆழமான, உண்மையான உணர்வு அவருக்குள் இருந்தது. அவர் சாவை நினைத்து மிகவும் அஞ்சி நடுங்கினார். சாவைப்பற்றி நினைத்தபோது தேவனையும், நியாயத்தீர்ப்புபோன்ற காரியங்களையும் நினைத்து இன்னும் அதிகமாகப் பயந்தார்.

இன்னல்கள் நிறைந்த இளமைப்பருவம்

அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சோகச் சம்பவங்களால் அவருடைய குழந்தைப் பருவம் சிதைந்தது. அவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, அவருடைய அப்பா எசேக்கியா தன் 46ஆவது வயதில் திடீரென்று காலமானார். சில ஆண்டுகளுக்குப்பிறகு, அவருடைய 14 வயதில், அவருடைய அம்மா காலமானார். 14 வயதில், அவர் ஓர் அனாதை. எனவே, அவர் தன் அக்கா வீட்டில் வளர்ந்தார்; அவருடைய அக்காவுக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. அவருக்கு அப்போது வயது 18தான்.

அந்த நேரத்தில், தான் கிறிஸ்தவனாக இருக்குமாறும், வாழுமாறும் தன்னைச் சுற்றியிருந்தவர்கள் தன்னைக் கட்டாயப்படுத்தியதாகவும், வற்புறுத்தியதாகவும் அவர் எழுதுகிறார். ஆனால், ஏதோவொன்று அவரைத் தடுத்தது. அவர் கிறிஸ்தவனாக இருக்கவும் இல்லை, கிறிஸ்தவனாக வாழவும் இல்லை. அவருடைய சிறு வயதில் அவருடைய பெற்றோர் அவருக்கு வேதாகமத்தைக் கற்றுக்கொடுத்தார்கள். போதனைகளையும், உபதேசங்களையும் கற்பித்தார்கள். உறுதியான அடித்தளம் போடப்பட்டிருந்தது. ஆனாலும், அவர் ஒரு விசுவாசி அல்ல. அவர் தன் நாளேட்டில் எழுதியிருப்பதுபோல், வாலிபப்பருவத்தைத் “தன் இளம் தோழர்களுடன் உல்லாசமாகக் கழிக்க முயன்றார்”. வாழ்வின் நோக்கம் அதில்தான் இருப்பதுபோல் நினைத்தார். ஆனால், உல்லாசமும், கேளிக்கையும் பதில் இல்லை என்ற எண்ணம் அவருக்குள் எப்போதும் இருந்துகொண்டேயிருந்தது. அவைகளில் திருப்தியடையாததால், அவர் அவைகளைவிட்டு வெளியேறினார்.

குடும்பப் பண்ணை

அவருக்குச் சுமார் 20 வயதாக இருந்தபோது, அவருடைய குடும்பச் சொத்துக்களைப் பாகம்பிரித்தபோது, குடும்பப் பண்ணை அவருடைய பங்காக அவருக்குக் கிடைத்தது. எனவே, அவர் தன் குடும்பப் பண்ணையில் விவசாயம்செய்ய ஆரம்பித்தார். ஆனால், அது தன் அழைப்போ, ஊழியமோ இல்லை என்று போகபோகத் தெரிந்துகொண்டார். பண்ணையில் ஒரு வருடம் பிரயாசப்பட்டபின், விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டார். எனவே, வேறு ஏதாவது செய்ய வேண்டும், அதுவும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று முடிவுசெய்தார். அந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

இறையியல் கல்லூரி

கல்லூரியில் சேர்ந்து இறையியல் படித்து, அவருடைய தாத்தா, அப்பா, சில அண்ணன்மார்களைப்போல் பாஸ்டராக முடிவுசெய்தார். அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற விரும்பினார். அந்த நாட்களில் பாஸ்டராக இருப்பது இது ஒரு நல்ல வேலையாகக் கருதப்பட்டது. மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் என்பதுபோல் பாஸ்டர் என்பது ஒரு தொழிலாகக் கருதப்பட்டது.

இறையியல் படித்து, தன் குடும்பத்தாரைப்போல், தானும் ஒரு பாஸ்டராக வேண்டும் என்று தீர்மானித்தபின், அதைச் செய்வதில் அவர் உறுதியாக இருந்தார். ஒன்றைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், இயல்பாகவே, அவர் அதை மிகவும் அர்ப்பணிப்போடும், ஆர்வத்தோடும், முனைப்போடும் செய்யக்கூடிய நபர். எனவே, அவர் அதில் மும்முரமாக மூழ்கிவிட்டார். வேதாகமத்தை அர்ப்பணிப்போடு முறையாக வாசிக்கவும், படிக்கவும் தொடங்கினார். மேலெழுந்தவாரியாக, ஏனோதானோவென்றல்ல. ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். அவர் ஒவ்வொரு வருடமும் வேதாகமத்தை இரண்டுமுறை படித்தார். தேவனுடைய வார்த்தையை ஊன்றிப் படிக்க முயன்றார்; நீண்ட நேரம் ஜெபித்தார்; அடிக்கடி உபவாசித்தார். இந்தப் பக்திமுயற்சிகளின் காரணமாக அவர் தன் சொந்த நீதியில் பெருமைப்பட ஆரம்பித்தார்; தன்னைக்குறித்து மிகவும் உயர்வாக நினைத்தார். பிற்காலத்தில் அவர் இந்த நேரத்தைப்பற்றியும், தன் சொந்த நீதியைப்பற்றியும் நினைத்துப்பார்த்து “அன்று என் பாத்திரத்தின் வெளிப்புறம் நன்றாக இருந்தது” என்று எழுதினார்.

பக்திமுயற்சிகள்

அது ஒரு குளிர்காலம்! ஒரு ஞாயிறு காலை! அவர் உடற்பயிற்சிக்காக நடந்துபோய்க்கொண்டிருந்தார். அப்போது வரப்போகிற ஒரு பயங்கரமான ஆபத்தையும், தேவனுடைய உக்கிரமான கோபத்தையும்பற்றிய ஆழமான உணர்வு திடீரென்று அவருக்குள் எழுந்தது. அவர் அதிர்ச்சியில் நிலைகுலைந்து நின்றுவிட்டார். தான் இதுவரை நீதியென்று நினைத்தவையெல்லாம் வெறுமனே சுயநீதிதான் என்றும், அது வெறும் அழுக்கடைந்த கந்தை என்றும் என்றும் உணர்ந்தார். முதன்முறை யாக, அவர் தன் உண்மையான இழிநிலையைக் கண்டார். அவர் தன் சொந்தப் பெருமையையும், பாவத்தையும் பார்த்தார். தன் அவலநிலையைக் கண்டு வருந்தினார், வேதனைப்பட்டார். அங்கு, அப்போதே தேவன் தன்னைப் பழிவாங்கிவிடுவாரோ என்று அவர் பயந்து நடுங்கினார், பதறினார்; இந்த அனுபவத்திற்குப்பின்னரும், அவருடைய வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை. அவர் முன்புபோல், இப்போதும் இன்னும் அதிக அர்ப்பணிப்போடு வார்த்தையைப் படிப்பதற்கும், ஜெபிப்பதற்கும், உபவாசிப்பதற்கும், வேறுபல பக்திமுயற்சிகளைச் சிரத்தையுடன் செய்வதற்கும் நேரம் செலவழித்தார். தேவனுக்குமுன் தன்னை நீதிமானாகக் காட்டுவதற்காக இவைகள் உதவும் என்று அவர் நினைத்தார். தேவன் இவைகளைப் பாராட்டுவார் என்றும், தன்மேல் இரங்குவார் என்றும் அவர் எதிர்பார்த்தார்.

அவர் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தார்; அப்போது தேவன் அவருக்குள் வேலைசெய்துகொண்டிருந்தார்; தேவன் தம்மை டேவிட் பிரைனெர்டுக்கு வெளிப்படுத்தினார். தான் பாவியாகிய மனிதன் என்பதை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டார். ஆனால், அந்த நேரத்தில் அவருக்குள் ஒரு பெரிய போராட்டம் வெடித்தது. அவர் தேவன்மேல் மிகவும் கோபம் கொண்டார். “என்னுடைய எல்லா நீதியும், நான் செய்துகொண்டிருக்கும் மதக் கடமைகளும், பக்திமுயற்சிகளும், நான் இதுவரை செய்த நற்கிரியைகளும் ஒன்றுமே இல்லையா? அவைகளுக்குப் பொருள் இல்லையா? மதிப்பு இல்லையா?” என்ற போராட்டம். தேவனுடைய கிருபையைப்பற்றிப் பேசுகிற, தேவனுடைய கிருபை ஓர் ஈவு என்று சொல்லுகிற எபேசியர் இரண்டாம் அதிகாரத்துடன் அவர் போராடினார். “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” என்பதை அவரால் ஏற்கமுடியவில்லை. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; தேவனுடைய கிருபை ஓர் ஈவு என்ற கருத்து அவருக்குப் பிடிக்கவில்லை. தன் விடாமுயற்சியும், தன் நீதியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று அவர் விரும்பினார். “பக்திமுயற்சிகளில் நான் பலரைவிட அதிகமாகப் பிரயாசப்பட்டிருக்கிறேன். தேவன் இவைகளைப் பார்க்கவும் மாட்டார்; அங்கீகரிக்கவும் மாட்டார், ஏற்றுக்கொள்ளவும் மாட்டார் என்றால் எப்படி. இது சாத்தியமில்லை!” என்ற ஒரு போராட்டம்! குழப்பம்! இந்தக் குழப்பத்துக்குப்பின் அவருடைய மனதில் ஒரு விரக்தி! மனந்தளர்ந்தார். அவரால் ஜெபிக்க முடியவில்லை, அவருடைய இருதயத்தின் பாவத்தை மட்டுமே அவரால் பார்க்க முடிந்தது. தேவனுக்கு எதிராகவும், அடைய முடியாத பரிசுத்தத்தைத் தேவன் தன்னிடம் எதிர்பார்க்கிறாரே என்ற கருத்துக்கு எதிராகவும் அவர் போராடினார். அவரால் அவருடைய சொந்த நீதியைத் தூக்கி எறியமுடியவில்லை.

இரட்சிப்பின் அனுபவம்

ஒரு நாள் ஒரு மாலைவேளையில் அவர் வெளியே நடந்துபோய்க்கொண்டிருந்தார். அழகான காடு. அந்தக் காட்டில் அவர் காலாற நடக்க ஆரம்பித்தார். எந்த மனிதனும் அந்தக் காட்டில் நிச்சயமாகக் கொஞ்ச நேரமாவது தனியாக விரும்புவான். அவ்வளவு நல்ல இடம். அவர் அங்கு கொஞ்ச நேரம் தனியாக இருக்க விரும்பினார். அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப்பற்றி அவர் பின்னாட்களில் தன் நாளேட்டில் எழுதுகிறார். அவர் அந்தக் காட்டுவழியாக நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, விவரிக்க முடியாத ஒரு மகிமை, ஓர் ஒளி, திடீரென்று தன்னைச் சூழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். ஆனால், அந்த மகிமையை, ஒளியை, தான் தன் ஊனக் கண்களால் காணவில்லை என்றும், மாறாக அது தனக்குள் வீசிய வெளிச்சம் என்று எழுதுகிறார். அவர் நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று அவருக்குத் தெளிவு பிறந்தது. அவர் தேவனுக்குரிய ஏதோவொன்றை, இதுவரை பார்த்திராத ஒன்றை, அப்போது பார்த்தார். அதற்குப்பின் அவர் தன் சொந்தப் பாவத்தையோ, நீதியையோ, பக்திமுயற்சிகளையோ, மதக்கடமைகளையோபற்றிச் சிந்திக்கவில்லை. அவர் தேவனிலும், தேவனுடைய இறையாண்மையிலும் களிகூர ஆரம்பித்தார். அவர் தேவனுடைய அருமையையும், அழகையும், தன்மேல் அவர் வைத்திருக்கும் அதீத அன்பையும் கண்டார். இதைப் பார்த்து பிரைனெர்ட் மிகவும் ஆச்சரியப்பட்டார். தேவன் இறையாண்மையுள்ளவராகவே இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவருடைய போராட்டங்கள், குழப்பங்கள், சஞ்சலங்கள் மறைந்தன. தேவன் தன்னுடைய செயல்களை அங்கீகரிக்கவில்லை என்ற எண்ணம் அடியோடு ஒழிந்தது. கர்த்தராகிய இயேசு இப்பேர்ப்பட்ட பாவியாகிய தன்னைச் சந்தித்ததையும், தன்னை நேசிப்பதையும் நினைத்து அவர் வியந்தார். பிரைனெர்ட் இருட்டும்வரை அந்தக் காட்டில் இருந்தார். அவர் காட்டிலிருந்து திரும்பி நாட்டுக்கு வந்தபோது தான் ஒரு புதிய உலகில், ஒரு புதிய மனிதனாக, இருப்பதாக உணர்ந்தார்.

அன்றைய அமெரிக்கா

அவர் தன் 21ஆவது வயதில் யேல் கல்லூரியில் சேர்ந்து இறையியல் படிக்க ஆரம்பித்தார். ஆம், பிரசங்கியாராக வேண்டும் என்ற இலக்கை அடைய தன் படிப்பைத் தொடங்கினார்.

அந்த நேரத்தில் அமெரிக்காவில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதைக் கொஞ்சம் புரிந்துகொள்ள முயல்வோம். அந்தக் காலத்தில் பாஸ்டராக இருப்பது மரியாதைக்குரிய வேலையாகக் கருதப்பட்டது. அது ஓர் உயர்ந்த, நல்ல தொழிலாகக் கருதப்பட்டது. மிகவும் பாதுகாப்பான வேலை, வசதியான வேலை. நல்ல சம்பளம். அவர்கள் நன்றாகக் படித்தவர்கள். நல்ல கல்வியறிவு உடையவர்கள். ஆனால், பெரும்பாலும் அவர்கள் இரட்சிக்கப்படாதவர்கள். அவர்களுக்கு இரட்சிப்பைப்பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் இரட்சிப்பைப்பற்றி ஒருபோதும் நினைத்ததேயில்லை. அரசியல்வாதிகளைப்போல், கல்வியாளர்களைப்போல் அவர்கள் உரையாற்றினார்கள். தனிப்பட்ட முறையில் அவர்களுக்குத் தேவனைத் தெரியாது. தேவனோடு அவர்களுக்கு எந்த உறவும் இல்லை.

இந்தக் காலகட்டத்தில், 1730களில். குறிப்பாக 1739ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது. 1740ஆம் ஆண்டு, ஜார்ஜ் விட்ஃபீல்ட் அமெரிக்காவுக்கு வந்து திறந்த வெளியில் பிரசங்கித்தார். முதன்முறையாக மக்கள் நற்செய்தியைக் கேட்டார்கள். நற்செய்தியைக் கேட்டு, அமெரிக்காவில் மக்கள் ஆயிரக்கணக்கில் இரட்சிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

இறையியல் கல்லூரி

சரி, இப்போது, நாம் மீண்டும் யேல் கல்லூரிக்குத் திரும்புவோம். பிரைனெர்ட் கல்லூரியில் சேர்ந்தபோது அவர் மிகவும் புதிய கிறிஸ்தவர். கல்லூரியில் ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் விசுவாசம் இல்லாததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இங்குதான் அவர் கிறிஸ்தவப் போதகராக மாற இறையியல் படிக்கப்போகிறார். ஆனால், இறையியல் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கோ, படிக்கும் மாணவர்களுக்கோ தேவன்மேல் விசுவாசம் இல்லை என்பதைக் கண்டபோது அவர் அதிர்ச்சியடைந்தார். கல்லூரியில் சேர்ந்த கொஞ்ச நாட்களில் அவருக்கு அம்மை நோய் வந்தது. எனவே, படிப்பை நிறுத்தவேண்டியிருந்தது. குணமானபின் மீண்டும் கல்லூரிக்கு வந்தார். கொஞ்சக் காலத்தில் மீண்டும் நோய்வாய்ப்பட்டார். இடைவிடாத இருமல்; மூச்சு முட்டல்; இருமும்போது சளியோடு இரத்தமும் வந்தது. எனவே, படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறினார்.

அவர் சற்று குணமடைந்தபின் மீண்டும் கல்லூரிக்குத் திரும்பிவந்தார். அப்போது கல்லூரியில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவர் கண்டார். கல்லூரியில் சூழ்நிலை மிகவும் வித்தியாசமாக இருந்தது. எப்படி இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன? அவர் நோய்வாய்ப்பட்டுச் சென்றிருந்த நேரத்தில் ஜார்ஜ் விட்ஃபீல்ட் யேல் கல்லூரிக்கு வந்திருந்தார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்ட பலர் இரட்சிக்கப்பட்டிருந்தார்கள். அதுதான் அந்த மாற்றத்திற்கான காரணம். மாணவர்களிடையே தேவனையும், தேவனுடைய வார்த்தையையும்குறித்த விழிப்புணர்வும், வைராக்கியமும் ஏற்பட்டிருந்தது. அனைவரும் உண்மையாகவே தேவனைப் பின்பற்ற விரும்பினார்கள். கல்லூரி முற்றிலும் வித்தியாசமான இடமாக மாறியிருந்தது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, ஆசிரியர்களிடையே குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை. மாற்றம் மாணவர்களிடையே ஏற்பட்டிருந்தது. ஆகையால், ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த மாற்றத்தை மூடிமறைக்க விரும்பினார்கள்; அந்த மாற்றத்தை அவர்கள் ஆதரிக்கவோ, வரவேற்கவோ இல்லை. அவர்கள் இது முறையற்றது என்று கருதினார்கள். இரட்சிக்கப்பட்ட மாணவர்கள், இரட்சிக்கப்படாத ஆசிரியர்களின் விசுவாசத்தைக் கேள்விகேட்க ஆரம்பித்தார்கள். மாணவர்கள் தங்கள் விசுவாசத்தைக் கேள்விகேட்பதை அவர்கள் விரும்பவில்லை. அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அந்த நேரத்தில் பல்கலைக்கழகத்தில் நடந்துகொண்டிருந்த அனைத்தையும் மூடிமறைக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் முடிவுசெய்தது. பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் பேசுவதற்கு ஒரு பேச்சாளரை அழைக்கப் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. அவர்கள் அழைத்த பேச்சாளர் யார் தெரியுமா? வேறு யாருமல்ல ஜோனதன் எட்வர்ட்ஸ். அவர்கள் உண்மையிலேயே என்ன எண்ணத்தோடு அவரை வரவழைத்தார்கள் என்று தெரியவில்லை. அங்கு நடப்பதை மூடி மறைக்க வேண்டுமானால் அவரையா அழைப்பது? ஜோனதன் எட்வர்ட்ஸ் வந்தார்; பேசினார்; எரிந்துகொண்டிருந்த தீயை அணைப்பதற்காக ஜோனதன் எட்வர்ட்ஸை அழைத்தார்கள். ஆனால், அவரோ இன்னும் கொஞ்சம் எண்ணையை ஊற்றி தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தார். ஆம்! பல்கலைக்கழகம் எதிர்பார்த்ததுபோல் அவர் பேசவில்லை. அவர் பரிசுத்த ஆவியானவரின் வேலையைப்பற்றியும், அவருடைய வேலை மற்ற வேலைகளிலிருந்து வேறுபட்டது என்பதைப்பற்றியும் பேசினார். யேல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே தேவன் வல்லமையாக வேலைசெய்துகொண்டிருக்கிறார் என்றும், பரிசுத்த ஆவியானவரின் வேலையை யாராலும் தடைசெய்ய முடியாது, தடை செய்யக்கூடாது என்றும் அவர் பேசினார். ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழகப் பணியார்களுக்கும் பெரிய ஏமாற்றம்.

கல்லூரியில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை கல்லூரியின் நிர்வாகிகள் ஏற்கவில்லை, வரவேற்கவில்லை. அங்கு ஏற்பட்ட எழுச்சியை, மாற்றத்தை, அடக்குவதற்காக பேசுமாறு அழைக்கப்பட்ட ஜோனதன் எட்வர்ட்ஸ் அதை அடக்குவதற்கு எதுவும் செய்யவில்லை. அடக்காமல் போயிருந்தால்கூட பரவாயில்லை என்று சொல்லலாம். அதைக் கொழுந்துவிட்டு எரியச்செய்துவிட்டுப் போய்விட்டார். எனவே, கல்லூரி நிர்வாகிகள் கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று முடிவுசெய்தார்கள். மாணவர்கள் தனித்தனியாக வெவ்வேறு கூட்டங்களில் கலந்துகொள்ளக் கூடாது, மாறாக எல்லா மாணவர்களும் கல்லூரிக் கூட்டங்களில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும், மாணவர்கள் ஆசிரியர்களின் விசுவாசத்தைக் கேள்விகேட்டக்கூடாது என்றும், இந்த ஒழுங்கை மீறுபவர்கள்மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் கல்லூரியைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்கள்.

கல்லூரியிலிருந்து வெளியேற்றம்

அந்த நேரத்தில் பிரைனெர்ட் மிகவும் பக்திவைராக்கியமாக இருந்தார். அவர் கல்லூரியில் இருந்த விசுவாசமுள்ள மாணவர்களையும், கல்லூரிக்கு வெளியேயிருந்த விசுவாசிகளையும் அடிக்கடி சந்தித்தார். அவர்கள் ஆவிக்குரிய காரியங்களைக்குறித்து அடிக்கடி பேச ஆரம்பித்தார்கள். அதனால் கல்லூரி நிர்வாகம் அவரைப் பிரச்சினைக்குரியவராகப் பார்க்கத் தொடங்கியது. ஒரு நாள், கல்லூரியில் நடந்த ஒரு ஜெபக்கூட்டத்துக்குப்பின், அவர் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த ஜெபக்கூட்டத்தை அவருடைய ஆசிரியர் ஒருவர் நடத்தினார். பிரைனெர்ட்டும் அவருடைய நண்பர்களும் மட்டுமே அந்த அரங்கத்தில் தனியாக இருந்தார்கள். அங்கு அவர்களைத்தவிர வேறு யாரும் இல்லை. அவருடைய நண்பர் ஒருவர் டேவிட்டிடம், “இன்று நம் ஜெபக்கூட்டத்தை வழிநடத்தினை ஆசிரியரைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார். பிரைனெர்ட் கொஞ்சம் அவசரப்பட்டு, “இந்த நாற்காலிக்கு இருக்கும் கிருபையைவிட அதிகமான கிருபை அவரிடம் இல்லை,” என்று பதில் கூறினார். அந்த அரங்கத்துக்கு வெளியே அப்போது தற்செயலாக நடந்துபோய்க்கொண்டிருந்த ஒருவருடைய காதில் இவருடைய விமரிசனம் விழுந்தது. அதை அவர் கல்லூரி நிர்வாகியிடம் சொல்ல, அவர் கல்லூரியின் ரெக்டர் தாமஸ் கிளாப் என்பவரிடம் போய்க் கூறினார். ரெக்டரைப் பார்க்குமாறு பிரைனெர்டை அழைத்தார்கள். அவர் போய்ப் பார்த்தார். அவருடைய விமரிசனத்திற்காக அவர் பல்கலைக்கழகத்தில் எல்லாருக்குமுன்பாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்குமாறு கோரினார்கள். எல்லாருக்குமுன்பாக மன்னிப்பு கேட்பதை அவர் தரக்குறைவாகவும், கேவலமாகவும் கருதினார். பிரைனெர்ட் தான் அப்படிக் கூறியிருக்கக்கூடாது, தன் விமரிசனம் தவறு என்று ஒப்புக்கொண்டார். ஆனால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பது அவசியமற்றது, நியாயமற்றது என்று அவர் கூறினார். அவர் தனியாக மன்னிப்புக் கேட்க ஆயத்தமாயிருந்தார். பல்கலைக் கழகத்தில் எல்லாருக்குமுன்பாக மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என்று அவர் நினைத்தார்.

ஏன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கச் சொன்னார்கள்? ஒருவேளை பிரைனெர்ட்தான் கல்லூரியில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்குக் காரணம் என்று கல்லூரி நிர்வாகம் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் மாணவர்கள்மேல் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குச் செல்வாக்கு உடையவர் என்று நினைத்திருக்கலாம்; அல்லது மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான போக்கு இருந்தால் கல்லூரி என்ன நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிப்பதற்காக இருக்கலாம். கல்லூரி நிர்வாகம் பிரைனெர்டை கல்லூரியைவிட்டு வெளியேற்றுவதாக அறிவித்தது. பிரைனெர்ட் யேல் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் அப்போது மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார். ஏறக்குறைய படித்து முடித்து பட்டம் வாங்கும் நேரம். ஆனால், இப்போது எல்லாம் முடிந்துவிட்டது.

கல்லூரியிலிருந்து தன்னை நீக்கியதற்குஎதிராக பிரைனெர்ட் முறையிட்டார். ஆனால் கல்லூரி தன் முடிவை மாற்றவில்லை. 1740களில் ஒருவர் ஒரு மதப்போதகராக நியமிக்கப்படவேண்டுமானால், அவர் யேல் அல்லது ஹார்வர்ட் அல்லது ஏதோவொரு ஐரோப்பியப் பல்கலைக்கழகத்திலிருந்து கண்டிப்பாக இறையியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்போது பிரைனெர்டை கல்லூரியிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள்; அவர் பட்டப்படிப்பை முடிக்கவில்லை; கல்லூரிக்குத் திரும்பிவர முடியாது; அவருடைய எதிர்காலக் கனவு, இலட்சியம், தவிடுபொடியானது. அவரால் இனி ஒருபோதும் ஒரு பாஸ்டராக முடியாது. தான் ஒரு பாஸ்டராக வேண்டும் என்பதுதான் தன்னைக்குறித்த தேவனுடைய திட்டம் என்று பிரைனெர்ட் நம்பினார். அதுதான் தன் அழைப்பு என்று அவர் நினைத்தார். அவருடைய முட்டாள்தனமான ஒரு விமரிசனம் எல்லாவற்றையும் நாசமாக்கியது. தான் தேவனுக்குத் துரோகம் செய்துவிட்டதாக அவர் நினைத்தார். அவர் மீண்டும் கல்லூரியில் முறையிட முயன்றார். இதற்கு ஜோனதன் எட்வர்ட்ஸ் உதவினார். மேலும் பலர் பல்கலைக்கழகத்தின் ரெக்டரிடம் நேரடியாக முறையிட்டார்கள்; ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. அவருடைய முறையீட்டை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை, நிராகரித்தார்கள்.

பிரைனெர்டுக்குள் நிறையக் கேள்விகள் எழுந்தன; குழப்பத்தில் சிக்கித் தவித்தார், தத்தளித்தார். இந்த நாட்களைக்குறித்து, இந்த நாட்களில் நடந்த சம்பவங்களைக்குறித்து, அவர் தன் நாட்குறிப்பில் விரிவாக எழுதினார். ஆனால், தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவர் இந்தப் பகுதிகளைத் தன் நாட்குறிப்பிலிருந்து அழித்துவிட்டார். அது வலியும், வேதனையும், நிறைந்த நாட்கள். தவிப்பும், தத்தளிப்பும் நிறைந்த நாட்கள், சந்தேகங்களும், சஞ்சலமும் நிறைந்த நாட்கள்.

பட்டம் இல்லை; படிப்பைத் தொடர வழியில்லை; பாஸ்டராகும் கனவு கலைந்தது; வாய்ப்புகள் வழுவிப்போயின; எங்கும் இருள்! என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் கல்லூரி நண்பர்கள் பட்டம் பெறப்போகும் நாளை நினைத்தபோது விவரிக்கமுடியாத, இனம்புரியாத, ஒருவகையான திகிலும், வெறுமையும் தனக்குள் எழுந்ததாகவும், அந்த நாளை எப்படிச் சமாளிப்பது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் தன் நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். “துக்கத்தில் மூழ்கிவிடுவேனோ! சோகத்தில் ஆழ்ந்துவிடுவேனோ! மனம் முறிந்துவிடுவேனோ!” என்று அஞ்சினார். அவர் பயப்பட்ட நாள் வந்தது. அந்த நாளை வெற்றிகரமாகக் கடந்தார். எந்தக் கலக்கமும் இல்லாமல் அந்த நாளைக் கடக்க உதவிய கர்த்தருக்கு நன்றி சொன்னார். அந்த நாளில், “கர்த்தாவே! உம் சித்தம் ஆகக்கடவது,”என்று சமாதானத்தோடு சொல்லி அமர்ந்திருந்தார். ## அமெரிக்கச் செவ்விந்தியர்களிடம் ஸ்காட்லாந்தில் ஒரு மிஷன் நிறுவனத்தார் அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளான செய்விந்தியர்களிடையே ஊழியம்செய்ய ஆட்களைத் தேடிக்கொண்டிருந்தார். அவர்கள் டேவிட் பிரைனெர்டைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவரைத் தொடர்புகொண்டு, அவரை அழைத்துப் பேசினார்கள். அவரும் மனமுவந்து ஒப்புக்கொண்டார்.

இது அவருடைய கற்பனைக்கும், கனவுக்கும் அப்பாற்பட்டது. இது அவர் கொஞ்சம்கூட நினைக்காத, எதிர்பார்க்காத ஒன்று. 1742ஆம் ஆண்டு இறுதிவாக்கில், அவர்கள் அமெரிக்காவில் கௌனமீக் என்ற இடத்திற்கு அருகில் வசிக்கும் செவ்விந்தியர்களுக்கு நற்செய்தி அறிவிக்க அவரை அனுப்பினார்கள். இது தேவன் தனக்குத் தந்த இரண்டாந்தரமான திட்டம் என்று ப்ரைனெர்ட் நினைக்கவில்லை. மாறாக, இதுவே தேவன் தனக்காக வைத்திருக்கும் முதல்தரமான திட்டம் என்றே அவர் எடுத்துக்கொண்டார். இந்த வாய்ப்பைப்பற்றி அவர் தன் நாளேட்டில் என்ன எழுதினார் தெரியுமா? “இதோ, அடியேன்! ஆண்டவரே, என்னை அனுப்பும், பூமியின் கடைசிமுனைகளுக்கும் என்னை அனுப்பும்; கரடுமுரடானவர்களிடம், கடினமானவர்களிடம், காட்டுமிராண்டிகளிடம், காட்டுவாசிகளிடம், பாலைவனத்தின் அஞ்ஞானிகளிடம் எங்கு வேண்டுமானாலும் என்னை அனுப்பும். இந்தப் பூமியில் சவுகரியம், வசதி, என்று கருதப்படுகிற எல்லாவற்றிலிருந்தும் என்னை விலக்கித் தூரமாக அனுப்பும். உமக்கு ஊழியம்செய்வதற்காக, உம் அரசை விரிவாக்குவதற்காக, தேவைப்பட்டால், நீர் என்னை மரணத்திற்குக்கூட அனுப்பலாம்,” என்று எழுதினார்.

அமெரிக்கச் செவ்விந்தியர்கள்

அவர் செவ்விந்தியர்களிடையே ஊழியம்செய்வதற்காகப் புறப்பட்டார். செவ்விந்தியர்களே அமெரிக்காவின் பூர்வீகக்குடிகள். அந்த நேரத்தில் அமெரிக்காவின் நிலைமையை, குறிப்பாக செவ்விந்தியர்களின் நிலைமையையும், அங்கு குடியேறிக்கொண்டிருந்த ஐரோப்பியர்கள் உருவாக்கிக்கொண்டிருந்த குடியேற்றங்களின் நிலைமையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஐரோப்பியர்கள் உருவாக்கிக்கொண்டிருந்த பகுதிகள் காலனிகள் என்று அழைக்கப்பட்டன. குடியேறிய ஐரோப்பியர்கள் படிப்படியாக பூர்வீகக் குடிகளாகிய செவ்விந்தியர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். ஐரோப்பிய வியாபாரிகள் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளுக்கு ஏற்பட்ட மற்ற காரியங்களைப் பார்க்கும்போது, இது ஒரு பெரிய விவகாரமாகத் தோன்றாமல் போகலாம். ஐரோப்பிய வியாபாரிகள் ஈவுஇரக்கமற்ற முறையில் நடந்தார்கள் என்பது உண்மை. அவர்கள் இலாபத்தில் மட்டுமே குறியாக இருந்தார்கள் என்பதும் உண்மை. ஆனால், அவர்கள் 1700களின் முற்பகுதியிலேயே பூர்வீகக் குடிகளுக்கு மதுவை அறிமுகப்படுத்திவிட்டார்கள். ஒருவேளை மதுவை விலைக்கு விற்றிருந்தால் அவர்கள் வாங்குவதற்குத் தயங்கியிருக்கலாம் அல்லது கஷடப்பட்டிருக்கலாம். இந்த வியாபாரிகள் அவர்களுக்கு மதுவை இலவசமாக வழங்கினார்கள். இது உண்மையில் ஈவுஇரக்கமற்ற செயல். ஒரு சமுதாயத்தை அழிக்க இதைவிட வேறு என்ன வழி வேண்டும்? மதுவைக் கொடுத்து, பூர்வீகக் குடிகளின் தலைவர்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். மதுவைக் கொடுத்து, அவர்களைக் கெடுத்து, அவர்களிடமிருந்து நிறைய சலுகைகளைப் பெற முடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். நாளடைவில் பூர்வீகக்குடிகள் மதுவுக்கு அடிமைகளானார்கள். இந்தப் பழங்குடியினர் எந்த அளவுக்கு மதுவுக்கு அடிமைகளானார்கள் என்றால், மதுவுக்காக அவர்கள் எதையும் செய்யத் துணிந்தார்கள், எதையும் விற்கத் தயாரானார்கள். எதற்காக? மலிவான ப்ராந்திக்காக, தரக்குறைவான ரம்முக்காக. இந்த ஐரோப்பிய வியாபாரிகள் மலிவான சரக்குகளை விற்று கொள்ளை இலாபம் சம்பாதித்தார்கள். இவர்கள் மோசமான மதுவைக் கொடுத்தார்கள். அவர்களிடமிருந்து எருமைமாட்டுத் தோல்கள்போன்ற பொருட்களை மலிவு விலைக்கு வாங்கி, அவைகளைப் பெரு நகரங்களில் அதிக விலைக்கு விற்றார்கள். போதைப்பழக்கம் கொஞ்சம்கொஞ்சமாகப் பழங்குடியினரை அழித்துக்கொண்டிருந்தது. அதனால், ஏற்கெனவே, அவர்களிடையே பல பிரச்சினைகள் எழ ஆரம்பித்தன. பெருமளவில் வன்முறை வெடிக்க ஆரம்பித்தது. குடும்பங்களிலும், பூர்வீகக்குடிகளிடையேயும் வன்முறைகள் பரவலாக நடக்கத் தொடங்கின. குற்றச் செயல்கள் பெருகின. அவர்கள் பெரும்பாலும் வேட்டையாடி வாழ்ந்தார்கள். மதுவுக்கு அடிமையான ஆண்கள் வேட்டைக்குச் செல்லவில்லை, குடும்பத்தைப் பராமரிக்கவில்லை, பிள்ளைகளைக் கவனிக்கவில்லை; அவர்கள் குடிபோதையில் எங்கோ படுத்துகிடந்தார்கள். இன்னொரு ரம் பாட்டில் வாங்குவதற்காகத் தாங்கள் போட்டிருந்த துணிகளைக்கூட விற்றார்கள். குழந்தைகள் கைவிடப்பட்டார்கள், அவர்களைக் கவனிக்க ஆள் இல்லை; கல்வி இல்லை; உணவு இல்லை; கவனிப்பு இல்லை. அவர்களுடைய கலாச்சாரம் செத்தது. வயல்களில் விவசாயம் இல்லை; மக்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

பூர்வீகக் குடிகளிடம் ஒருவிதமான கடவுள் நம்பிக்கை இருந்தது. ஒருவிதமான மதம், வழிபாடு, சடங்குகள், சம்பிரதாயங்கள் நிறைய இருந்தன. சில சடங்குகள் பயங்கரமானவை. வாய்களைக் கீறி, கன்னங்களில் கம்பிகளைக் குத்தினார்கள். உடலில் கொக்கிகளை மாட்டிக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் உடல்களைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கினார்கள். களைத்துப்போய் மயங்கிவிழும்வரை முரட்டுத்தனமாக நடனமாடினார்கள். கடவுளைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காகப் பாலைவனத்துக்குச் சென்று பட்டினி கிடந்தார்கள். அங்கு அவர்கள் கடவுளுக்குப் பலி செலுத்தினார்கள்.

செவ்விந்தியர்களுக்கு நற்செய்தி

இப்படிப்பட்ட மக்களுக்கு அவர் நற்செய்தி அறிவிக்க வேண்டும். டேவிட் பிரைனெர்ட் அங்கு சென்றார். அதுவரை யாரும் நுழையாத தொலைதூரப்பகுதிகளுக்குச் சென்றார். அங்கு சாலைகள் கிடையாது; தங்குவதற்கு வீடுகள் கிடையாது; நகர்ப்புற மக்கள் அனுபவித்த எந்த வசதிகளும் கிடையாது.

பிரைனெர்ட் அங்கு பெரும் பாடுபட்டார்; உண்மையில் போராடினார் என்றுதான் சொல்லவேண்டும். உடலிலும், உள்ளத்திலும் போராட்டம். இந்த மக்களிடையே தான் பட்ட பாடுகளையும், தன் போராட்டத்தையும் அவர் தன் நாட்குறிப்பில் மிகவும் விவரமாக எழுதியிருக்கிறார். எந்த வகையிலும் தான் இந்த ஊழியத்துக்கு இலாயக்கில்லாதவன் என்று அவர் நினைத்தார். அவருக்குக் காசநோய் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. இளம் வயதில் அவருக்கு இருமல், சளி, மூச்சுமுட்டுதல் போன்ற பிரச்சினைகள் இருந்தன என்று நான் ஏற்கனவே சொன்னேன். இருமித் துப்பியபோது இரத்தமும் வந்தது. எனவே, அப்போதே அவருக்குக் காசநோய் ஆரம்பித்துவிட்டது. இப்போது அது மோசமாகிட்டது. மிகவும் பலவீனமடைந்தார். இரவு நேரங்களில் ஆடைகள் ஈரமாகி, குளித்துவிட்டு வருவதுபோல், வியர்வையில் நனைந்தார். காய்ச்சலில் அவரால் நகரக்கூட முடியவில்லை. சில நேரங்களில் இரத்த வாந்தி எடுத்தார். பலவீனமான, நோய்வாய்ப்பட்ட உடல். இந்த நிலையில் எங்கோவொரு தொலைதூரத்தில் எந்த வசதியும் இல்லாத ஒரு பகுதியில் தான் தங்குவதற்கு அவரே ஒரு குடிசையைக் கட்டவேண்டியிருந்தது. அவர் கொஞ்ச நாட்கள் ஒரு டச்சு வணிகரின் வீட்டின் ஒரு மூலையில் இரண்டு மரப் பலகைகளில் வைக்கோலைப் பரப்பி அதன்மேல்தான் தூங்கினார். கையில் கிடைத்த மக்காச்சோளம்போன்றவைகளை வேகவைத்துச் சாப்பிட்டு வாழ்ந்தார். பூர்வீக அமெரிக்கக் குடிகள் அனுபவித்த அதே வறுமையை அவரும் அனுபவித்தார். ரொட்டி வாங்க வேண்டுமானால், அவர் சில மைல்கள் குதிரையில் சவாரி செய்ய வேண்டியிருந்தது. சவாரி செய்து போய் ரொட்டி வாங்கினால், பெரும்பாலும் அந்த ரொட்டி பூசாணம்பூத்துப்போயிருக்கும். சாப்பிட முடியாது. சில வேளைகளில் அவருடைய குதிரைகள் திருடப்பட்டன. ஒருமுறை அவர் வனாந்தரத்தில் சவாரிசெய்துகொண்டிருந்தபோது அவருடைய குதிரைக்குக் கால் முறிந்துபோனது. என்ன செய்வது? போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருந்தது. குதிரையை விட்டுவிட்டு மீதமுள்ள 30 மைல்கள் அவர் நடந்துசென்றார். பல இரவுகளில் அவர் காடுகளில் தங்க வேண்டியிருந்தது. உறைபனியிலிருந்தும், பனியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இரவு முழுவதும் அவர் கடும் பாடுபட்டார். காசநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட ஒருவர் தங்கக்கூடிய இடமா இது? செய்யக்கூடிய வேலையா இது?

நோயிலும் நற்செய்திப்பணி

ஒருபுறம் உடலில் நோய். இன்னொரு புறம் உள்ளத்தில் மனஅழுத்தம்; இந்தப் பிரச்சினையோடு அவர் போராடினார். சில நேரங்களில் அவர் முற்றிலும் சோர்வாகவும், வெறுமையாகவும் உணர்ந்தார். சில நேரங்களில் அவர் விசுவாசத்தில் தடுமாறினார். இந்தப் போராட்டத்தைப்பற்றி அவர் தன் நாட்குறிப்பில், “கிட்டத்தட்ட தேவனுக்காக வாழ வேண்டும் என்ற நம்பிக்கையைக் கைவிடுவதற்கு நான் தயாராக இருந்தேன். அது எவ்வளவு இருள் நிறைந்தது! அதை என்னால் தாங்கமுடியவில்லை. சங்கீதம் 65இல் கூறப்பட்டுள்ள ‘அக்கிரமங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டன,’ என்ற வரிகள் என் ஆத்துமாவின் கதறுதலை எதிரொலிக்கிறது,” என்று எழுதுகிறார். அவர் தனிமையில் வாடினார். ஐக்கியம்கொள்வதற்கு அவருடன் ஒரு கிறிஸ்தவன்கூட இல்லை. அவரால் யாரிடமும் பேச முடியவில்லை. பேச்சுத்துணைக்குக்கூட ஒருவன் இல்லை. ஏனென்றால் அவர் இன்னும் செவ்விந்தியர்களின் மொழியைக் கற்கவில்லை. அவர்களுடைய மொழியைக் கற்பதிலும் அவருக்குப் போராட்டம். எல்லாப் பக்கங்களிலும் போராட்டம். போராட்டம் நிறைந்த வாழ்க்கை. டச்சு வணிகருடைய வீட்டில் தங்கியிருந்தபோதும் அவரால் அங்கு தங்கியிருந்தவர்களுடன் உரையாட முடியவில்லை. ஏனென்றால், அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. தன் பாரங்களைப் பகிர்ந்துகொள்ள ஒருவர்கூட இல்லை.

உள்ள, உடல் போராட்டம்

செய்விந்தியர்கள் அவரை மிகவும் கண்ணியமாக நடத்தினார்கள். ஆனால், அவருடைய நற்செய்தியில் அவர்கள் அக்கறை காட்டவில்லை. அவர்களிடையே அவர் கடுமையாகப் பிரயாசப்பட்டார். ஆனால், அவர் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எனவே, அவர் அவர்களை நேசிக்கப் போராடினார். எத்தனை போராட்டங்கள்! உடலில் நோயால் போராட்டம்! உள்ளத்தில் மனஅழுத்தத்தால் போராட்டம்! மொழியைக் கற்பதில் போராட்டம்! நற்செய்தி அறிவிப்பதில் போராட்டம்! ஐக்கியம்கொள்வதில் போராட்டம்! பேச்சுத்துணையின்றி போராட்டம்! பட்ட பிரயாசத்திற்குப் பலன் இல்லையே என்ற போராட்டம்! அந்த மக்கள்முன் நின்று, ஜீவனுள்ள தேவனைப்பற்றிக் கூறுவதற்குத் தனக்குத் தகுதியில்லை என்று அவர் உணர்ந்தார். சில நேரங்களில் அவர்களைச் சந்தித்தபோது அவர்களுடன் பேச வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருக்கவில்லை என்று அவர் எழுதுகிறார். அவர்களுடைய ஆத்தும இரட்சிப்பைப்பற்றி தான் அதிகமாகப் பாரம்கொள்ளவில்லை என்றும் கூறுகிறார். ஒருவிதமான விரக்தி! தேவன் தன் மனப்பாங்கை மாற்றி, உண்மையாகவே அவர்களை நேசிக்குமாறு தன்னை மாற்றுமாறு அவர் உருக்கமாகவும், ஊக்கமாகவும் ஜெபித்தார். தேவன் அவருடைய ஜெபத்திற்குப் பதில் அளித்தார்.

அழைப்பின் உறுதி

அந்த நேரத்தில், 1744இல், பாஸ்டராகும் ஒரு வாய்ப்பு பிரைனெர்டைத் தேடி வந்தது. இது பிரத்தியேகமாக அவருக்காகவே ஏற்பாடுசெய்ததுபோல் இருந்துது. பாஸ்டராக வருமாறு இரண்டு இடங்களிலிருந்து அவருக்கு அழைப்புகள் வந்தன. ஒன்று அவருடைய குடும்பத்தார் வாழ்ந்த இடத்துக்கு , அதாவது அவருடைய வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு சபையிலிருந்தும், மற்றொன்று லாங் ஐலேண்டில் உள்ள நியூயார்க்கில் ஓர் அழகான இடத்திலிருந்தும் வந்தன. அவர் இரண்டையும் மறுத்துவிட்டார். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், பூர்வீக அமெரிக்கக்குடிகளுக்கு நற்செய்தி அறிவிப்பதுதான் தன் அழைப்பு என்று அவர் அப்போது மிகவும் தெளிவாக உணர்ந்தார். எனவே, அவர் அவர்களோடு அங்கு தங்க முடிவுசெய்தார். பாஸ்டராக வேண்டும் என்பதுதான் அவருடைய ஆரம்பகாலக் கனவு, இலட்சியம். கனவு நனவாகும் வாய்ப்பு அவரைத் தட்டியது. ஆனாலும், அவர் அந்த வாய்ப்பை மறுத்தார். அமெரிக்காவில் எந்த வசதியும் இல்லாமல், கஷ்டப்பட்டு பூர்வீகக்குடிகளிடையே வாழ்வதற்குப்பதிலாக எங்காவது வசதிவாய்ப்புகளோடு நற்செய்தியை அறிவிக்கச் சென்றிருக்கலாம். உறைபனியிலும், பனியிலும் கஷ்டப்படுவதற்குப்பதிலாக, ஒரு நல்ல வீட்டில் நெருப்புமூட்டி சுகமாக வாழ்ந்திருக்கலாம். பாஸ்டரானால் நிரந்தரமான, மதிப்புவாய்ந்த, நல்ல வருமானமுள்ள வேலையும் கிடைத்ததுபோல் ஆகியிருக்கும். ஆயினும், அவர் இரண்டையும் நிராகரித்தார்.

பூர்வீகக் குடிகளுடன் பழக போராட்டம்

இப்படிப்பட்ட இந்தக் கடினமான நேரத்திலும் பிரைனெர்ட் சும்மா இருக்கவில்லை. அவர் அமெரிக்கப் பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவினார்; அவர்களுடைய மொழியையும், கலாச்சாரத்தையும் கற்கவும், அவர்களோடு பழகவும், அந்நியோன்னியமாக உறவுகொள்ளவும் மிகவும் கடினமாக முயன்றார். அவர் தன் பலவீனத்தையும், தகுதியின்மையையும் நன்றாக அறிந்திருந்தார்; எனவே, அவர் எப்போதும் ஊக்கமாக ஜெபித்தார். உறக்கத்தை மறக்கும் அளவுக்கும், வெறுக்கும் அளவுக்கும் அவர் உருக்கமாக ஜெபித்தார், தேவனைப்பற்றித் தியானித்தார். இரவில் உறங்க வேண்டுமே என்று வருந்தினார். அந்த அளவுக்கு ஜெபத்தையும், தியானத்தையும் அவர் விரும்பினார். இரவில் தூங்கி தன் நேரத்தை வீணாக்கவேண்டியிருக்கிறதே என்று அவர் மிகவும் வருந்தினார். தயக்கத்துடனே இரவு வேளைகளில் உறங்கியதாக அவர் தன் நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். “நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்,” என்று பவுல் சொல்வதுபோல, காலத்தை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதைப்பற்றி அவர் விவரமாகத் தன் நாட்குறிப்பில் எழுதுகிறார். காய்ச்சல், மூச்சுத்திணறல், இரத்தவாந்திபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு பலவீனப்பட்டு, தேவனுக்காக எதுவும் செய்யமுடியாமல்போன நாட்களுக்காக அவர் மிகவும் வருந்தினார்; அந்த நாட்களில் அவர் தவித்தார். நாட்கள் வீணாகிறதே என்று அவர் வாடினார். அப்படிப்பட்ட நாட்களில் அவருடைய மனச்சோர்வு இன்னும் அதிகமாயிற்று; தான் கனியற்றவனாகவும், வீரியமற்றவனாகவும் இருப்பதை எண்ணித் துக்கித்தார். தேவன் தனக்குப் போதுமான கிருபையை வழங்கவில்லையே என்று நினைத்து வாடினார், வதங்கினார். தேவன் தன்மேல் கிருபை பொழிந்திருக்கிறார் என்பதை அவரால் ஏற்கமுடியவில்லை; போராடினார். இத்தனை போராட்டங்களுக்கிடையிலும், ஒவ்வொரு கணத்தையும், நொடியையும், நிமிடத்தையும் கர்த்தருக்காக நன்றாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்; அதற்காக அவர் பாடுபட்டார். அப்படிப்பட்ட ஆழ்ந்த ஆவல் அவர் இருதயத்தில் எப்போதும் இருந்தது.

டெலாவேர் செவ்விந்தியர்களுக்கு நற்செய்தி

ஒரு வருடம் கழித்து, பிரைனெர்ட்டை வேறு ஓர் இடத்துக்குப் போகுமாறு சொன்னார்கள். அமெரிக்காவில் டெலாவேர் ஆற்றோரம் இருக்கும் ஃபோர்க்ஸ் என்ற இடத்திற்கு அவர் மாற்றப்பட்டார். அங்கும் அவர் பல்வேறு பழங்குடியினரிடையே தன் ஊழியத்தைத் தொடர்ந்தார். அந்த ஆற்றோரம் லென்னி லெனாப் என்ற பழங்குடியினர் வாழ்ந்தார்கள். அதுதான் அவர்களுடைய பூர்வீகம், தாயகம். அவர் இந்தப் பழங்குடியினரோடு தங்கி ஊழியம்செய்தார். இங்கும் அவருடைய ஊழியத்துக்குப் பெரிய பலன் கிடைக்கவில்லை. சோர்ந்துபோனார். நிறையக் கஷ்டங்களை அனுபவித்தார். இந்த இடத்துக்குச் சென்றபோது அவர் தன் ஊழியத்தை ஆரம்பத்திலிருந்து தொடங்கவேண்டியிருந்தது. புதிய மக்கள், புதிய இடம், புதிய மொழி. அவர்களுடைய மொழியைக் கற்காமல் எப்படி அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க முடியும்? இதற்கு முந்தைய இடத்தில் பெரும்பாடு பட்டு அவர்களுடைய மொழியையும், கலாச்சாரத்தையும் கற்றார். அதையெல்லாம் விட்டுவிட்டு, இப்போது, வேறொரு புதிய இடத்துக்கு வந்து, ஒரு புதிய மொழியைக் கற்கவேண்டும் என்பது அவருக்குக் கடினமாகவும், வருத்தமாகவும் இருந்தது. தன் முந்தைய முயற்சிகளெல்லாம் வீணாயிற்றே என்று நினைத்து வருந்தினார். எனவே, எல்லாவற்றையும் கைகழுவிவிட்டுச் சென்றுவிடலாமா என்றுகூட நினைத்தார். அந்த அளவுக்கு மனம் சோர்ந்துபோனார். தன்னை இங்கு ஊழியத்துக்காக அனுப்பிய மிஷன் நிறுவனத்துக்குத் தான் ஒரு பாரமாகிவிட்டதாக நினைத்து மிகவும் வருந்தினார். வாழ்க்கை முழுவதும் தோல்வி. இதுவரை பட்ட தோல்விகளோடு இன்னொரு தோல்வி. தான் இந்த ஊழியத்துக்கு இலாயக்கானவன்தானா என்று சந்தேகப்பட ஆரம்பித்தார். ஆனால், தாக்குப்பிடித்து ஊழியத்தைத் தொடருமாறு அவருக்குள் ஏதோவொன்று அவரை உந்திக்கொண்டேயிருந்தது. எனவே, அவர் ஊழியத்தைத் தொடர்ந்தார். “காரண காரியங்களை அலசிப்பார்க்கும் கண்களுக்கு இந்தப் பழங்குடியினரின் இரட்சிப்பு நடுநிசி காரிருளைப்போல் இருக்கலாம். ஆனால், இவர்களுக்கிடையே தேவன் மகிமையான ஏதொவொன்றைச் செய்யாமல் விடமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் எழுதினார்.

செவ்விந்தியர்கள் வாழ்ந்த பல்வேறு குடியிருப்புகளுக்குச் சென்று அவர்களிடையே பேசுவது எப்படி இருந்தது என்பதை நான் கொஞ்சம் விவரமாகச் சொல்ல விரும்புகிறேன். அந்த விவரங்களை உண்மையில், அவருடைய சகோதரர் ஜாண் சொன்னார். பிரைனெர்ட் இந்தக் காரியங்களைப்பற்றி அபூர்வமாகவே எழுதியிருக்கிறார். அவருக்கு இந்தக் காரியங்கள் பழகிவிட்டதால் அவைகளை அவர் மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.

செவ்விந்தியர்களின் நிலைமை

செவ்விந்தியர்கள் நீளமான வீடுகளைக் கட்டியிருந்தார்கள். இந்த வீடுகளில் அநேகக் குடும்பங்கள் வாழ்ந்தன. பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்கள் வாழ்ந்தன. நிறையக் கூட்டுக் குடும்பங்கள் வாழ்வதற்கேற்ற வகையில் நீளமான பெரிய வீடுகள். இப்படிப்பட்ட வீடுகளில்தான் பிரைனெர்ட் அவர்களிடம் பேசினார். வீடுகள் என்று சொன்னவுடன் நாம் இன்று வாழ்வதுபோன்ற வீடுகளைக் கற்பனை செய்ய வேண்டாம். அவைகளை ஒதுங்கும் இடம் அல்லது மறைவிடம் என்று சொல்லலாம். அவ்வளவே. இந்தத் தங்குமிடங்கள் பெரும்பாலும் அசுத்தமாகவும், அழுக்காகவும் இருந்தன. அங்கு எப்போதும் புகை நிறைந்திருக்கும். இந்த வீடுகளில் கூடியிருந்த மக்களிடம் பிரைனெர்ட் பேசமுயன்றார். சிலர் குடிபோதையில் படுத்திருப்பார்கள்; சிலர் அவர் பேசுவதைக் கேட்டு கேலி செய்வார்கள்; நாய்கள் குரைத்துக்கொண்டிருக்கும்; குழந்தைகள் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருப்பார்கள்; விளையாடிக்கொண்டிருப்பார்கள்; சில குழந்தைகள் அழுதுகொண்டிருக்கும்; சிலர் சமைத்துக்கொண்டிருப்பார்கள்; வீடு முழுவதும் புகையால் நிரம்பியிருக்கும். அவர் ஏற்கனவே காச நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்; சுவாசிக்க மிகவும் கஷ்டப்பட்டார். இந்தச் சூழலில்தான் அவர் பேசினார். எப்படியாவது அவர்களுக்கு நற்செய்தி சொல்ல வேண்டும் என்று துடித்தார். சிலர் அவர் பேசியதைக் கேட்டார்கள்.

மொழிபெயர்ப்பாளரின் இரட்சிப்பு

அவர் அப்போது ஒரு மொழிபெயர்ப்பாளர்மூலம் அவர்களோடு பேசினார். ஏனென்றால், அவர்களுடைய மொழியை அவர் இன்னும் போதுமான அளவுக்குக் கற்கவில்லை, எனவே, அவர் பேசியதை மோசஸ் டாடாமி என்பவர் அவர்களுக்கு மொழிபெயர்த்துப் பேசினார். இதில் வருந்தத்தக்க காரியம் என்னவென்றால் அவருடைய மொழிபெயர்ப்பாளர் மோசஸ் டாடாமி இரட்சிக்கப்படாதவர். பிரைனெர்ட் சொன்ன எல்லாவற்றையும் அவர் கேட்டார். அவர்கள் இருவரும் ஒரு குடியிருப்பிலிருந்து இன்னொரு குடியிருப்புக்குப் போகும்போதும் வரும்போதும் பேசிக்கொண்டே போனார்கள். போன இடங்களிலெல்லாம் பிரைனெர்ட் பேசினார். அவர் பேசிய எல்லாவற்றையும் அவருடைய மொழிபெயர்ப்பாளர் கேட்டார். கேட்டு செவ்விந்தியர்களுக்கு மொழிபெயர்த்தார். அவர் நற்செய்தியைக் கேட்டார்; அவர் கிறிஸ்துவைப்பற்றிய காரியங்களைப் புரிந்துகொண்டார்; அவர் பிரைனெர்டிடமிருந்து ஏராளமானவைகளைப் பெற்றார்; ஆனால், அவைகளைக் கேட்டபிறகும் அவரிடம் எந்த அசைவும் ஏற்படவில்லை. பிரைனெர்ட் இதிலும் போராடினார். எத்தனை போராட்டம்! பிரைனெர்ட் தன் மொழிபெயர்ப்பாளருக்காக அதிகமாக ஜெபித்தார். ஆனால், அவருடைய மொழிபெயர்ப்பாளர் இரட்சிக்கப்படவில்லை. ஒருநாள், பிரைனெர்ட் ஒரு கூட்டத்தில் பேசியபிறகு, அவருடைய மொழிபெயர்ப்பாளர் அவருடைய பேச்சினால் மிகவும் தொடப்பட்டார். திடீரென்று, இந்த மனிதன் தன் நித்தியத்தைக்குறித்து அக்கறைப்பட ஆரம்பித்தார். எந்த அளவுக்கு நித்தியத்தைக்குறித்து சிந்திக்க ஆரம்பித்தார் என்றால் அவரால் உண்மையில் சரியாகத் தூங்கவோ, சாப்பிடவோ முடியவில்லை. “நான் என்ன செய்ய வேண்டும்? இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? நான் எப்படி இரட்சிக்கப்படப்போகிறேன்?” என்று அவர் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார். ஆம், தேவன் அவரைச் சந்தித்தார். பிரைனெர்ட் ஆச்சரியப்பட்டார். அவன் எல்லாவற்றையும் மிகவும் அலட்சியமாகப் பார்க்கக்கூடியவன். அவன் தன் வாழ்க்கையையும், வாழ்க்கை முறையையும்பற்றி கவலைப்படாதவன். ஆனால், இப்போது அவன் தன் பாவத்தைத் தெளிவாகப் பார்த்தான். தான் ஒரு குடிகாரன் என்பதையும், தான் செய்த திருட்டுக்களையும், தான் ஈடுபட்டிருக்கும் வன்முறைகளையும் நினைத்துப்பார்த்தான். அவனுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அவன் திடீரென்று மாறிவிட்டான். அவனுடைய வாழ்க்கையில் திடுதிப்பென்று ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு பிரைனார்ட் முதலில் அதிர்ச்சியடைந்தார், அவர் அதை சந்தேகித்தார். எனவே, அவர் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தார். அந்த மாற்றம் வெறும் உணர்ச்சிபூர்வமானதாக இருக்கக்கூடாது என்று அவர் விரும்பினார். எனவே, இந்த மனிதன் உண்மையிலேயே மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டிருக்கிறானா என்று உறுதிப்படுத்த விரும்பினார். இந்த மனிதன் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டிருந்தான். அவனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றத்தை அவரால் பார்க்க முடிந்தது.

இணைந்து ஊழியம்

இப்போது அவர்கள் இருவரும் இணைந்து ஊழியம்செய்ய ஆரம்பித்தார்கள். அதன்பின் ஏற்பட்ட மாற்றத்தை என்னவென்போம்! பிரைனெர்ட் பிரசங்கித்தார். டாடாமி முன்புபோல் வெறுமனே மொழிபெயர்க்காமல், பிரைனெர்ட் பிரசங்கித்த வார்த்தைகளை எடுத்துக்கொண்டு, அவர் செவ்விந்தியர்களுக்கு மீண்டும் பிரசங்கித்தார். சில நேரங்களில் பிரைனெர்ட் பிரசங்கித்து முடித்தபிறகு, டாடாமி அங்கு இன்னும் இரண்டு மூன்று மணிநேரம் தங்கியிருந்து, பிரைனெர்ட் பிரசங்கித்த அனைத்தையும் மீண்டும் ஒருமுறை அவர்களுக்குப் பிரசங்கித்தார். தேவனுக்குச் செவிகொடுக்குமாறு அவர் அவர்களிடம் மன்றாடினார். என்ன ஒரு மாற்றம்! ஜீவன் பாய்ந்தோடியது.

க்ராஸ்வீக்சங் செவ்விந்தியர்கள்

1745இல் க்ராஸ்வீக்சங் என்ற தொலைதூரப் பகுதியில் வேறு சில பழங்குடியினர் இருப்பதாகப் பிரைனெர்ட் கேள்விப்பட்டார். அவர் இருந்த இடத்திலிருந்து 130 கிலோமீட்டர் தூரம். குதிரையிலும், நடந்தும் செல்ல வேண்டும். மிகவும் கடினமான பயணம். ஒன்று தூரம், இரண்டாவது சாலைகள் கிடையாது; மூன்று நடக்க வேண்டும்; நான்காவது இது உடல்ரீதியாகவும் மிகவும் கடினமான பயணம். அவருடைய அப்போதைய நிலைமையில் பிரைனெர்டுக்கு அது மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால், அவருக்குக் காசநோய் இருந்தது. ஆயினும், அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற தாகத்தோடு இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார். 130 கிலோமீட்டர் பயணம் செய்து அந்தத் தொலைதூரக் கிராமத்தைச் சென்றடைந்தார்கள். அங்கு அவர்கள் சில குடியிருப்புக்களைக் கண்டார்கள். ஆனால், எல்லாக் குடியிருப்புகளும் காலியாக இருந்தன. ஆட்களே இல்லை. அதைக் கண்டு அவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள். இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் மட்டுமே இருந்தன. சுமார் நான்கு பெண்கள், சில குழந்தைகள் இருந்தார்கள். ஆண்களே இல்லை. ஒருவேளை ஆண்களெல்லாம் வேட்டைக்குச் சென்றுவிட்டார்களோ! தெரியாது. எனினும் பிரைனெர்ட் மனந்தளரவில்லை. ஏனென்றால், கொஞ்சப்பேராவது இருந்தார்களே! அவர் அங்கு இருந்த அந்த நான்கு பெண்களுடனும், அவர்களுடைய குழந்தைகளுடனும் பேசினார். அவர்கள் அவர் சொன்னதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் அவர் சொன்ன கிறிஸ்துவின் நற்செய்தியைக் கேட்டு பரவசமடைந்தார்கள். பின்னர், கிணற்றோரம் ஆண்டவராகிய இயேசுவிடம் உரையாடியபின் ஒரு சமாரியப் பெண் ஊருக்குள் போய் மற்றவர்களிடம் அவரைப்பற்றிச் சொன்னதுபோல, இந்தப் பெண்கள் சென்று மற்றவர்களிடம் போய், “இந்த வெள்ளைக்காரன் சொல்கிறதை நீங்கள் கேட்க வேண்டும்,” என்று கூறினார்கள். 10, 20 மைல் சுற்றளவில் இருந்த மற்ற குடியிருப்புகளிலிருந்த செவ்விந்தியர்களும் அவர் பேசுவதைக் கேட்க வரத் தொடங்கினார்கள். எனவே, அடுத்த நாள், இன்னும் சிலபேர் வந்தார்கள். மறுநாள் இன்னும் சிலர் வந்தார்கள். விரைவில் ஏழு அல்லது எட்டுபேரோடு ஆரம்பித்த கூட்டம், இப்போது 30தாக மாற்றிற்று. அவர் மீண்டும் பேச வேண்டுமென்று அவர்கள் கோரினார்கள். அவர்கள் அவர் பேசுவதைக் கேட்க விரும்பினார்கள்.

பிரைனெர்ட் மீண்டும் மீண்டும் பிரசங்கித்தார். தேவன் வேலைசெய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்ட செவ்விந்தியர்கள் அழ ஆரம்பித்தார்கள். அவர்கள் தங்கள் ஆத்துமத்தின் பரிதாபமான நிலையைக் கண்டு கதறினார்கள். பெந்தெகொஸ்தே நாளில் ஒரு பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போன்ற ஒரு முழக்கம் சீடர்கள் இருந்த வீட்டை நிரப்பினதுபோல, தேவனுடைய வல்லமை, ஒரு பலமான காற்றுபோல், அந்த மக்கள்மேல் இறங்கியதுபோல் இருந்ததாக பிரைனெர்ட் தன் நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். வயதானவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும்கூடக் கதறினார்கள். ஏழு வயதுக் குழந்தைகளும்கூட. அவர்கள் தங்களுடைய இருதயம் எவ்வளவு அழுக்கானது, மோசமானது என்று அறிக்கைசெய்து அழுதார்கள். தங்களுக்கு இயேசுகிறிஸ்து வேண்டும் என்று அறிக்கைசெய்தார்கள். தவிப்போடும், தாகத்தோடும் கிறிஸ்துவைத் தேடினார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ள வேண்டும் என்று துடித்தார்கள். பிரைனெர்ட் பிரமித்தார், வியந்தார், மலைத்தார். தங்கள் பாவத்தின் பயங்கரத்தைக் கண்டு பயந்த அந்த மக்கள், தேவன் தங்களைப் பழிவாங்கிவிடுவாரோ என்றும் அஞ்சி நடுங்கினார்கள். எனவே, தேவனுடைய இரக்கத்தை மன்றாடினார்கள். பிரைனெர்ட் நரகத்தைப்பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவர் பயமுறுத்தும் வார்த்தைகள் எதுவும் பேசவில்லை. உண்மையில், அவர் 1 யோவான் முதல் அதிகாரத்திலிருந்து தேவனுடைய அன்பைப்பற்றிப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். எனினும், இந்த மக்கள் தங்கள் பாவத்தின் கோரத்தை, அகோரத்தை, கண்டார்கள். அதன் அருவருப்பைக் கண்டு பயந்தார்கள். தங்களுக்கு இரட்சிப்பு நிச்சயமாகத் தேவையென்று தவிப்போடு கதறினார்கள். தேவன் அவர்களில் வேலைசெய்கிறார் என்று டேவிட் பிரைனெர்ட் திட்டவட்டமாகத் தெரிந்துகொண்டார். தான் வெறும் ஒரு பார்வையாளன் மட்டுமே என்று அவருக்குத் தெரியும். மணவாளனுடைய தோழனைப்போல் ஒதுங்கி நின்றார்.

மந்திரவாதியின் மனமாற்றம்

டேவிட் பிரைனெர்ட் டெலாவேர் ஆற்றோரம் இருந்த ஃபோர்க்ஸ் குடியிருப்பில் லென்னி லெனாப் என்ற பழங்குடியினருக்குப் பிரசங்கித்தபோது, மிகவும் செல்வாக்குள்ள ஒரு மனிதன் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டான். அவன் ஒரு பெருங் குடிகாரன், வன்முறையாளன். அவன் பிரைனெர்ட் பேசுவதைக் கேட்டான். அவன் அந்தக் கூட்டத்தில், அவருடைய பிரங்கத்தைக் கேட்டபிறகும், ஒருநாள் இன்னொரு பழங்குடி வாலிபனைக் கொலைசெய்துவிட்டான். தான் செய்த கொலையை நினைத்து அவன் உண்மையாகவே திகிலடைந்தான். அவன் செய்த கொலை அவனை வாட்டியது, வருத்தியது, வதைத்தது. அதற்குப்பின் அவன் பிரைனெர்டின் கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்துவிட்டான். பிரைனெர்ட் அவனைத் தேடி, அவனுடன் தனிப்பட்ட முறையில் பேசினார்; கிறிஸ்துவின் மன்னிப்பைப்பற்றியும், அவன் செய்த கொலையைக் கர்த்தர் மன்னிப்பார் என்றும், அந்த முழு நிச்சயத்தோடு அவன் கர்த்தராகிய இயேசுவிடம் தைரியமாக வரலாம் என்றும் எடுத்துரைத்தார். ஆனால், அவன் அவருக்குச் செவி கொடுக்க மறுத்தான், தன் இருதயத்தைக் கடினமாக்கினான்; நற்செய்தியை ஒதுக்கித்தள்ளினான். அவன்தான் உள்ளூர் மந்திரவாதி என்றும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த மதச் சடங்குளை நடத்துகிற மாயவித்தைக்காரன் என்றும் பிரைனெர்ட் தெரிந்துகொண்டார். அவன் மிகவும் செல்வாக்குள்ளவன். சமாரியாவில் இருந்த சீமோன் என்பவனைப்போல். அந்த மாயவித்தைக்காரனாகிய சீமோன் தன்னைப் பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு மக்களைப் பிரமிக்கச்செய்தான். அதுபோல, இந்தப் பழங்குடியினர் அவன்தான் மிகப் பெரிய சக்தி என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். எனவே, பிரைனெர்ட் உண்மையில் அவனோடு போராடினார். அந்த மனிதனுக்கு ஒரு பெரிய தேவை இருக்கிறது; அவனுடைய தேவையைப் பூர்த்திசெய்கிறவரும் இருக்கிறார். ஆனால், அவன் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். அது மட்டும் அல்ல. அவன் செல்வாக்குள்ளவனாக இருந்ததால் அவன் இவர்களுக்கு எதிராகப் பழங்குடியினரைத் தூண்டுவிட்டான். பழங்குடியினரிடையே அவனுக்கிருந்த செல்வாக்கினிமித்தமும், அவன் உருவாக்கிக்கொண்டிருந்த பிரச்சினைகளினிமித்தமும் அவன் அந்த இடத்தைக் காலிபண்ணிவிட்டு, வேறு எங்காவது போனால் நன்றாக இருக்கும் என்று பிரைனெர்ட் நினைத்தார்.

ஆனால், தேவனுடைய திட்டமோ வேறு. தேவன் உண்மையாகவே இந்த மனிதனுக்குள் வேலைசெய்துகொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு கூட்டத்துக்குப்பின், தேவனுடைய பார்வையில் பாவம் எவ்வளவு அருவருப்பானது, தான் எவ்வளவு பெரிய பாவி என்ற உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது. தேவன் தன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்போகிறார் என்றும், தன்னை இரட்சிக்கத் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்றும், தேவனே இறுதித் தீர்ப்பை வழங்கும் நீதிபதி என்றும் அவன் உணர்ந்தான். அவன் பிரைனெர்டிடம் வந்து, “இயேசு கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லுங்கள்,” என்று கெஞ்சினான். கடைசியாக, நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு, இந்த மனிதன் கிறிஸ்துவிடம் திரும்பினான், இரட்சிக்கப்பட்டான், முற்றிலும் மாறினான். அந்த நேரத்தில், இந்த மனிதன் தன்னைப்பற்றி என்ன சொன்னான் தெரியுமா? “தேவனுடைய வார்த்தை என் இதயத்தைத் தொட்ட தருணத்தில், என் மந்திரசக்தி அனைத்தும் என்னை விட்டு வெளியேறியது, நான் விரும்பியிருந்தாலும்கூட என்னால் எதுவும் செய்திருக்க முடியாது,” என்று கூறினான்.

பிரைனெர்ட் பழங்குடியினர் வாழ்ந்த இன்னொரு குடியிருப்புக்குச் சென்று, நற்செய்தி அறிவித்தார். அங்கு சென்ற கொஞ்ச நேரத்தில் ஒரு வயதான மந்திரவாதி வந்து, பிரைனெர்டை மிரட்டினான். “நான் உன்னைத் சபித்துவிடுவேன்; உன்மேல் சாபங்களை வரவழைப்பேன்; என் மந்திர சக்தியால் உன்னை மயக்கிவிடுவேன், தொலைத்துவிடுவேன்,” என்றெல்லாம் அந்த மந்திரவாதி அவரை மிரட்டினான். நாம் ஏற்கெனவே பார்த்த முன்னாள் மந்திரவாதியும், இந்நாள் விசுவாசியுமான புதிய சகோதரனுடன் பிரைனெர்ட் அங்கு வந்திருந்தார். அப்போதுதான் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டிருந்த அந்தப் புதிய விசுவாசி, அந்தக் குடியிருப்பின் இந்த வயதான மந்திரவாதியின் மிரட்டலைக் கேட்டு முன்னுக்கு வந்து, அந்த முதியவரிடம், ““நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள். நானும் முன்பு ஒரு கைதேர்ந்த மந்திரவாதிதான். . ஆனால், தேவனுடைய வார்த்தை. என் நெஞ்சைத் தொட்டது. அப்போது என் மந்திரவாதம் என்னைவிட்டு ஓடிப்போயிற்று. உனக்கும் அப்படியே நடக்கும்,” என்று சொன்னான்.

இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்தன. மந்திரவாதிகள், சூனியக்காரர்கள், மாயவித்தைக்காரர்கள் எனப் பலர் இரட்சிக்கப்பட்டார்கள். அவர்களெல்லாம் அடியோடு மாறிவிட்டார்கள். படிப்படியாக, கொஞ்சம்கொஞ்சமாக அல்ல; திடுதிப்பென்று, முற்றிலும் மாறினார்கள். அவர்கள் தங்கள் மாயவித்தைகளையும், மந்திர தந்திரங்களையும் உடனடியாகக் கைவிட்டார்கள், தூக்கியெறிந்தார்கள். மது அருந்துவதை வெறுத்தார்கள்; அக்கம்பக்கத்தில் வாழ்ந்துகொண்டிருந்த ஐரோப்பிய வணிகர்கள், வெள்ளையர்கள், பூர்வீகக் குடிகளிடையே ஏற்பட்ட இந்த மாற்றங்களைக்குறித்துக் கேள்விப்பட்டார்கள். எனவே, அங்கு என்ன நடக்கிறது என்று அவர்கள் பார்க்க விரும்பினார்கள், அந்த இடங்களுக்கு வந்தார்கள். உண்மையில், இந்தச் செவ்விந்தியர்கள் வெள்ளையர்களுக்கு கிறிஸ்துவின் சாட்சிகளாக மாறினார்கள். விரைவில் பிரைனெர்ட்டின் நற்செய்தி அறிவிக்கும் கூட்டங்களில் வெள்ளையர்களும், செவ்விந்தியர்களும் கூடினார்கள். பிரைனெர்ட்டின் பிரசங்கத்தைக் கேட்ட எல்லா மக்களின் கண்களிலிருந்தும் கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த ஐரோப்பிய வெள்ளையர்கள் வெறும் பெயர்க் கிறிஸ்தவர்கள்.அவர்களில் ஒரு சிலர் மட்டுமே விசுவாசிகள். அவர்கள் இந்தச் செவ்விந்தியர்களிடையே நடக்கும் காரியங்களைக் கண்டபோது பரவசமடைந்தார்கள். இந்த உலகத்தில் எந்த நம்பிக்கையுமின்றி, தேவன்மேல் எந்த விசுவாசமுமின்றி வாழ்ந்த இந்தச் செவ்விந்தியர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் தேவனிடம் கொண்டுவரப்பட்டதை நினைத்து அவர்கள் மெய்சிலிர்தத்தார்கள்.

செவ்விந்தியர்களின் வாழ்வில் மாற்றம்

விரைவில், மொத்தம் 113பேர் விசுவாசிகளானார்கள். புதிய விசுவாசிகள்; புதிதாய்ப் பிறந்த குழந்தைகள். அவர்கள் கிறிஸ்துவில் குழந்தைகள் என்று பிரைனெர்ட்டுக்குத் தெரியும். அவர்களை இப்போது வளர்க்க வேண்டும். பிரைனெர்ட் அவர்களைக் கிறிஸ்துவின் சீடர்களாக்க விரும்பினார். புதிய விசுவாசிகள் அத்தனைபேரும் எழுத்தறிவோ, படிப்பறிவோ இல்லாதவர்கள். அவர்களுடைய மொழியில் வேதாகமம் இல்லை. அவர்களுக்குக் கிறிஸ்துவையும், வேதாகமத்தையும் கற்பிக்க வேண்டும், அவர்களுக்கு ஒரு வலுவான அடித்தளம் போட வேண்டும். அவர் அவர்களைத் தவறாமல் முறையாக அவர்களுடைய வீடுகளில் போய்ச் சந்தித்துப் பேசினார். எல்லா வகையிலும் அவர் அவர்களுக்குக் கற்பித்தார். தான் கற்பித்ததைத் திரும்பச் சொல்லச்சொன்னார்; அவைகளை மனப்பாடம் செய்யவைத்தார்; இவ்வாறு அவர்களுடைய வாழ்க்கையில் வலுவான அடித்தளத்தைப் போட்டார். நற்செய்தி அவர்களுடைய உறுதியான அடித்தளமாக இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். அவர் அவர்களைப் பல்வேறு குடியிருப்புகளுக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதை ஊக்கப்படுத்தினார். ஆம், ஒரு பழங்குடியின மக்கள் இன்னொரு பழங்குடியின மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார்கள். சில நேரங்களில் பிரைனெர்ட் மக்களைச் சந்தித்துப் பேசியபிறகு களைத்துப்போய், சோர்வுடன் ஓய்வு எடுக்கச் சென்றுவிடுவார். அவர் தன் கூடாரத்துக்குத் திரும்பிச் சென்றுவிடுவார். ஆனால், இந்த செவ்விந்தியர்கள் அவர் போனபிறகும் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் பல மணிநேரங்கள் அவர்கள் தொடர்ந்து ஜெபித்தார்கள். அவர்களிடம் அப்படி ஒரு மாற்றம்.

கிரான்பெர்ரி குடியேற்றம்

பிரைனெர்ட் அவர்களுக்கு நற்செய்தி அறிவித்ததோடு நிறுத்தவில்லை. அவர் அவர்களுக்கு நடைமுறைக்குரிய உதவியும் வழங்கினார். தங்கள் குடியிருப்புக்களைவிட்டு வெளியேற விரும்பிய பழங்குடியினரையெல்லாம் அவர் கிரான்பெர்ரி என்ற ஒரு புதிய இடத்திற்கு கூட்டிச்சென்று, அவர்களை அங்கு குடியமர்த்தினார். வந்த அத்தனைபேரையும் அழைத்துச் சென்றார். கிரான்பெர்ரி என்ற இடம் அவர்கள் இருந்த கிராஸ்வீக்சங் என்ற இடத்துக்கு அருகில்தான் இருந்தது. வெகு தொலைவில் இல்லை. பொதுவாகச் செவ்விந்தியர்களின் குடியிருப்பு அங்கும் இங்குமாகப் பரவிக்கிடந்தன, சிதறிக்கிடந்தன. நம் ஊர்களில் மலைப்பிரதேசங்களில் மலைவாழ் மக்கள் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடப்பதுபோல. அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் வசிக்கவில்லை. அவர்களை கிரான்பெர்ரியில் குடியமர்த்தியபின், அவர்களுக்காகக் கொஞ்சம் நிலத்தை விலைக்கு வாங்கினார். நல்ல விவசாய நிலம். செவ்விந்தியர்கள் பலர் வந்து இந்த இடத்தைச்சுற்றி வசித்தார்கள். இந்த இடம் அவர்களுடைய சமூகத்தின் ஒரு மையமாக மாறியது. வயல்களில் விவசாயம் செய்யவும், தன்னிறைவோடு, ஒரே சமூகமாக ஒன்றிணைந்து வாழவும் அவர் உதவினார். அவர்களுடைய குழந்தைகளுக்குக் கல்வி கற்பதற்காக அவர் ஒரு பள்ளியை நிறுவினார். இத்தனைப் பிரயாசங்கள்! சவால் நிறைந்த ஊழியம்! உடல்ரீதியாக மிகவும் சிரமப்பட்டார். காசநோயால் கஷ்டப்பட்டார் என்பதை மறக்க வேண்டாம்.

ஊழியத்தைத் தொடர ஏற்பாடு

தான் இறந்துகொண்டிருப்பது பிரைனெர்டுக்கு மிக மிகத் தெளிவாகத் தெரியும். தான் உடலிலும், உள்ளத்திலும் மிகவும் பலவீனமானவன் என்ற எண்ணமும், உணர்வும் எப்போதும் அவரிடம் இருந்தன. இதனால், அவர் மரணத்தைப்பற்றி அடிக்கடி சிந்தித்தார், மரணத்திற்காக ஏங்கவும் செய்தார். தன் கர்த்தரைக் காண அவர் ஆவலாக இருந்தார். இந்தப் பூமியில் தனக்கு மிகக் கொஞ்சக் காலமே உண்டு என்ற உணர்வோடு அவர் வாழ்ந்தார். எனவே, அவர் இருக்கும் நேரத்தை தேவனுடைய மகிமைக்காகப் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தார். “நான் என் பரலோகப் பயணத்தில் ஒருபோதும் நோக்கமின்றி அலைந்துதிரியக்கூடாது,” என்று அடிக்கடி ஜெபித்தார். அவருடைய உடல்நிலை இப்போது மிக மோசமாயிற்று. அதற்குமேல் தன் பணியைத் தொடர முடியாது என்று அவருக்குத் தெரிந்தது. அவர் தன் இளைய சகோதரன் ஜாணை வரவழைத்து, தான் விட்டுச்செல்லும் ஊழியத்தைத் தொடருமாறு பணித்தார். அந்த மக்களை அவர் நிர்க்கதியாக விட்டுச்செல்ல விரும்பவில்லை. அவர்களைக் கண்ணுங்கருத்துமாகக் கவனிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர்களைக் கிறிஸ்துவுக்குள் வளர்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

ஒவ்வொரு நாளும் மக்கள் அவரைத் தேடி வந்துகொண்டேயிருந்தார்கள்.பல்வேறு குடியிருப்புகளிலிருந்தும் மக்கள் திரள்திரளாக வந்தார்கள். அவர்களைத் திக்கற்றவர்களாக விட்டுச்செல்வதை நினைத்து அவர் கலங்கினார். அந்த மக்களுக்காக யாராவது ஒருவர் தன்னைப் பானபலியாக ஊற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த மனிதனை அவர் தேடினார். எனவே, அவர் தன் சகோதரன் ஜாணுக்குப் பல கடிதங்கள் எழுதினார். தேவனுக்காகவும், தேவ மக்களுக்காகவும் செலவுபண்ணவும், செலவுபண்ணப்படவும் ஆயத்தமாக இருக்குமாறு அவரை ஊக்குவித்தார். ஜாண் தன் மூத்த சகோதரனால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் அங்கு வந்து அவர்களைக் கவனித்துக்கொள்ள ஒப்புக்கொண்டார். ஜாண் பிரைனெர்ட் அங்கு வந்து அந்த மக்களிடையே 34 ஆண்டுகள் ஊழியம்செய்தார்.

பிரியாவிடை

ஜாண் வருவது உறுதியானதும் டேவிட் கிரான்பெர்ரியில் உள்ள தன் மக்களிடம் துக்கத்தோடு விடைபெற்றார். பிரியாவிடை, ஆனால், அது பிரியும் விடை. தான் இந்த உலகத்தில் நீண்ட காலம் இருக்கப்போவதில்லை என்றும், தன் மக்களை மீண்டும் இங்கு பார்க்கபோவதில்லை என்றும் அவருக்குத் தெரியும். பவுல் எபேசியர்களிடம் பிரியாவிடை பெற்றபோது அவர்கள் அவருடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுததுபோல, அந்த மக்கள் டேவிட்டைக் கட்டிப்பிடித்து அழுதார்கள். அவர்கள் சிந்திய கண்ணீர் கொஞ்சம் நஞ்சமல்ல.

இதோ பிரைனெர்ட் பிரியாவிடைபெற்று வெளியேறுகிறார்; குதிரையில் பயணம். அவரால் கொஞ்சதூரம் மட்டுமே குதிரையில் பயணிக்க முடிந்தது. நியூ ஹேவனில் இருந்த தன் குடும்பத்தாரிடம் செல்லவேண்டும் என்று அவர் தீர்மானித்திருந்தார். ஆனால், அவருடைய பலவீனத்தினிமித்தம் அவ்வளவு தூரம் செல்ல முடியவில்லை. எனவே, அவர் உடனடியாக அருகிலிருந்த ஜோனதன் டிக்கின்சனின் வீட்டிற்குச் சென்றார். அங்கு கொஞ்சம் ஓய்வெடுத்தபின், அங்கிருந்து கிளம்பி ஜோனாதன் எட்வர்ட்ஸின் வீட்டைச் சென்றடைந்தார். அதற்குமேல் செல்ல அவரிடம் பலம் இல்லை.

ஜோனதன் எட்வர்ட்ஸ் டேவிட் பிரைனெர்டைக் கவனித்துக்கொள்ள விரும்பினார். பிரைனெர்டின் நோய் ஜோனதன் எட்வர்ட்சுக்குத் தெரியும். பிரைனெர்டின் வாழ்வில் கர்த்தர் எவ்வளவு வேலை செய்திருந்தார் என்பதை ஒரேவொரு நிகழ்ச்சியிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். க்ராஸ்வீக்சங்கில் மக்களிடமிருந்து அவர் பிரியாவிடை பெற்றுச் சென்றபோது, அவரை வழியில் சந்தித்தவர்களெல்லாம் அவருடைய ஊழியத்தைப்பற்றி விசாரித்தார்கள். அந்தப் பழங்குடியினரைப்பற்றி கேட்டபோதெல்லாம் அவர் அழுதார். அந்த அளவுக்கு அவர் அவர்கள்மேல் அன்பு வைத்திருந்தார். ஒரு வார்த்தை பேசாமல் கண்ணீர்விட்டு அழுதார். அவருடைய இருதயத்தில் தேவன் செய்த என்னே மாற்றம்!

கடைசி நாட்கள்

எட்வர்ட்ஸ் குடும்பத்தார் விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்றவர்கள். மக்களைத் தங்கள் வீட்டுக்கு வரவழைத்து அவர்களுக்கு உணவு கொடுத்ததோடு அவர்கள் தங்கள் விருந்தோம்பலை நிறுத்தவில்லை. ஜோனதன் எட்வர்ட்ஸ் நோயுற்ற மக்களையும் தன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்து அவர்களைக் கண்ணுங்கருத்துமாகப் பரமாரித்தார். அது அவருடைய குணம். எனவே, தன் வீட்டுக்கு வந்த நோய்வாய்ப்பட்ட டேவிட் பிரைனெர்ட்டையும் அவர் அப்படியே கவனித்துக்கொண்டார். டேவிட் பிரைனெர்ட் தன் கடைசி நாட்களை ஜோனதன் எட்வர்ட்ஸ் வீட்டில் கழித்தார். எட்வர்ட்சுக்கு ஜெருஷா என்ற 17 வயது மகள் இருந்தாள். அவள்தான் பிரைனெர்டை அவருடைய கடைசிக் காலத்தில் ஐந்து மாதங்களுக்கும்மேலாகக் கவனித்துக்கொண்டாள். அவள் அவரை மிகவும் மகிழ்ச்சியோடு கவனித்தாள். அவளுடைய அப்பா அவளுடைய பணிவிடையைப்பற்றி, “அவள் மிகவும் மகிழ்ச்சியோடு, அர்ப்பணிப்போடு அவரைக் கவனித்துக்கொண்டாள். ஏனென்றால், அவரை இயேசு கிறிஸ்துவின் ஒரு சிறந்த ஊழியராக அவள் பார்த்தாள்,” என்று எழுதுகிறார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததாக இன்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அதற்கான ஆதாரங்கள் ஒன்றும் இல்லை. பிரைனெர்ட் அவளைப்பற்றி மிக உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருந்தார். அவள்மேல் அவர் அளவுகடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். ஒருநாள் அவர் ஜோனதன் எட்வர்ட்சிடம், “தேவனின் பொருட்டுப் பிறருக்கு நன்மைசெய்வதற்காகத் தன்னைத்தானே வெறுத்த உங்கள் மகளைப்போல் ஒரு வாலிபப்பெண்ணை நான் என் வாழ்க்கையில் இதுவரை பார்த்ததில்லை. அவள் ஒரு மேன்மையான பரிசுத்தவதி,” என்று கூறினார்.

வழக்கம்போல் பலர் எட்வர்ட்ஸ் வீட்டுக்கு வந்துபோனார்கள். வந்தவர்களெல்லாம் பிரைனெர்டுடன் கொஞ்ச நேரம் செலவளித்தார்கள். டேவிட் பிரைனெர்டுடன் பேசிவிட்டு வெளியே வந்தபின், அவர்கள் எல்லோருக்குள்ளும் அவருடைய தாக்கம் இருந்தது. மரணப் படுக்கையிலும் அவருடைய ஆர்வம் குறையவில்லை. அவர் மிகவும் பலவீனமடைந்தார். படுத்த படுக்கையானார்; படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியவில்லை. ஆனாலும், அவருடைய ஜெபம் நிற்கவில்லை. அவருடைய ஜெபம் பலருடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உண்மையில் பிரைனெர்டின் ஜெப வாழ்க்கையைக் கண்ட ஜோனதன் எட்வர்ட்ஸ் மிகவும் உற்சாகமடைந்தார். சில நேரங்களில், எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவதற்குமுன் டேவிட் பிரைனெர்ட் ஜெபித்தார். அந்த நேரங்களில் அவருடைய தெளிவு, தேவனை முகமுகமாய்க் காண வேண்டும் என்ற அவருடைய ஆவல், பரலோக எதிர்காலத்தைப் பற்றிய அவருடைய எதிர்பார்ப்பு ஆகியவைகளைக் கண்டு ஜோனதன் ஆச்சரியப்பட்டார். அவருடைய சாந்தம், நிச்சயம், உறுதிப்பாடு ஆகியவைகளால் அவர் ஈர்க்கப்பட்டார்.

ஒருநாள் எட்வர்ட்சின் இளைய மகள் பிரைனெர்டுடன் சேர்ந்து வாசிக்க வேதாகமத்தை எடுத்துக்கொண்டு அவருடைய அறைக்கு வந்தாள். அவள் வேதாகமத்தோடு அறைக்குள் வருவதைப் பார்த்த பிரைனெர்ட், “ஆ! என் அன்பான புத்தகம்! என் அருமையான, அழகான புத்தகம்! இந்தப் புத்தகம் திறக்கப்படுவதை நான் விரைவில் காண்பேன்; இதிலுள்ள பரம இரகசியங்கள், தேவனுடைய இறையாண்மையின் பரம இரகசியங்கள் அனைத்தும் வெளியாக்கப்படுவதை நான் விரைவில் காண்பேன்,” என்று பரசவசத்தோடு கூறினார்.

இந்த நேரத்திலும், அவர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்தார், இது இன்னொரு வகையான மனச்சோர்வு. அவர் சீக்கிரம் மரிக்க விரும்பினார். ஆனால், இன்னும் உயிரோடிருக்கிறார். எனவே, உயிரோடிருக்கப் பொறுமையில்லாமல், மரிக்க வேண்டும் என்று அவசரப்படுவதால் தான் தேவனை கனவீனப்படுத்துவிடக்கூடும் என்று அவர் பயந்தார். தாங்கமுடியாத வலி. வலியால் துடித்தார். உங்களுக்குக் காசநோயைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்தால், இதைப் புரிந்துகொள்ளலாம். காசநோயால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரலை பாக்டீரியாக்கள் சாப்பிட்டுக்கொண்டேயிருக்கும். எலும்பும் தோலுமாகிவிடுவார்கள். மூச்சுவிட முடியாது. சுவாசிப்பது கடினமாகிவிடும். எனவே, இந்தச் சிந்தனைகள் வந்தபோது அவர் பயந்தார். தன் எண்ணங்களால் தான் தேவனை அவமதிக்கக்க்கூடும் என்று கவலைப்பட்டார். ஏனென்றால், அதற்குமேல் ஒரு நிமிடம் கூடுதலான வலியை அவரால் தாங்க முடியவில்லை.

இறுதியாக, 1747ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்பதாம் தேதி வெள்ளிக்கிழமை, அந்த மகிமையான நாள் வந்தது, பிரைனெர்ட் மிகவும் ஏங்கிக்கொண்டிருந்த, ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அந்த நாள் வந்தது. அவர் தேவனைக் காணும் நாள் வந்தது. இதோ! அவருடைய சில கடைசி வார்த்தைகள்: “அவர் வருவார், அவர் தாமதிக்கமாட்டார்; நான் விரைவில் அவருடைய தூதர்களோடு சேர்ந்து தேவனை மகிமைப்படுத்துவேன்.” அன்று காலை 6 மணிக்கு அவருடைய பாடுகள் முடிவடைந்தன. அவர் கர்த்தரிடம் சென்றுவிட்டார். அப்போது அவருக்கு வயது என்ன தெரியுமா? வெறும் 29. அதிர்ச்சியாக இருக்கிறதா?

அவருடைய அடக்க ஆராதனையில் ஜோனதன் எட்வர்ட்ஸ் பிரசங்கித்தார். நான்கு மாதங்களுக்குப்பிறகு, சோகமே உருவான ஜோனதன் எட்வர்ட்ஸ் மற்றொரு அடக்க ஆராதனையில் மீண்டும் பிரசங்கித்தார். இந்த முறை அவர் தன் அன்பு மகள் ஜெருஷாவின் அடக்க ஆராதனையில் பிரசங்கித்தார். பிரைனெர்டை கவனித்துக்கொண்டதன் விளைவாக அவளும் நோய்வாய்ப்பட்டாள். அந்த நோயினால் அவள் இறந்தாள். ஜோனதன் எட்வர்ட்ஸ் ஜெருஷாவைத் தன் குடும்பத்தின் மலர் என்றும், அந்த மலர் தன் 18 வருட பூமிக்குரிய வாழ்க்கையில் தேவனுக்கு உண்மையும் உத்தமுமாக மணம் வீசி சேவை செய்தது என்றும் பேசினார். அவர்களுடைய குடும்பத்துக்குச் சொந்தமான ஓர் இடத்தில் பிரைனெர்டுடைய கல்லறையருகே ஜெருஷாவை அடக்கம்செய்தார்கள்.

டேவிட் பிரைனெர்ட் எட்டு ஆண்டுகள் மட்டுமே கிறிஸ்தவராக இருந்தார். அதில் நான்கு ஆண்டுகள் மிஷனரியாக ஊழியம் செய்தார். உடலில் பலவீனம், நோயோடு போராட்டம். உள்ளத்தில் பலவீனம், கடுமையான போராட்டம். கடுமையான மன அழுத்தத்துடன் போராடினார். அவர் மரணத்திற்காக ஏங்குவதைப்பற்றித் தன் நாட்குறிப்பில் 22 இடங்களில் எழுதியிருக்கிறார். அதுவே தன் துன்பத்திலிருந்தும், விரக்தியிலிருந்தும் விடுதலை பெறுவதற்கான வழி என்று அவர் கருதினார். ஆயினும்கூட அவர், “இதோ! என் கர்த்தர் உயிரோடிருக்கிறார்! என் கன்மலையாகிய அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்,” என்று மிகுந்த நம்பிக்கையோடும், உறுதியோடும், நிச்சயத்தோடும் கூறுகிறார்.

இவர் யேல் பல்கலைக்கழகத்தில் இறையியல் படித்து முடித்திருந்தால், பட்டம் பெற்றிருந்தால், எங்கோ ஒரு சபையில் ஒரு மதப்போதகராகியிருப்பார். பத்தோடு பதினொன்றாக இருந்து மறைந்திருப்பார். ஒருவேளை யாருக்கும் தெரியாமல் போயிருக்கும். ஆனால், தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது என்பது எவ்வளவு அற்புதம்! தேவனுடைய மக்கள் தோற்றாலும்கூட, வீழ்ந்தாலும்கூட, தவறினாலும்கூட அவர் வல்லமையுடன் செயல்பட முடியும், செயல்படுகிறார்.

ஜோனதன் எட்வர்ட்ஸ் பின்னாட்களில் டேவிட் பிரைனார்டின் நாளிதழ்களையும், நாட்குறிப்புகளை வெளியிட்டார். அதற்கு முன்னுரையாக, “உண்மையான மதத்தையும், நற்பண்பையும் உலகிற்குப் பிரதிநிதித்துவப்படுத்தவும், பரிந்துரைக்கவும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று உபதேசம், மற்றொன்று எடுத்துக்காட்டு, சாட்சி. டேவிட் பிரைனார்டின் மிகக் குறுகிய வாழ்க்கை நமக்கு உண்மையான சாட்சியாக விளங்கட்டும்; பாடுகளிலும் உபத்திரவங்களிலும், சோதனைகளிலும் நிலைத்திருப்பதற்கு அவருடைய வாழ்க்கை நமக்குச் சாட்சியாக இருக்கட்டும். இந்தப் பாடுகள், சோதனைகள், நம் ஆத்துமாவில் இருந்தாலும் சரி, நம் ஆத்துமாவுக்கு வெளியே இருந்தாலும் சரி. நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் அவசரஉணர்வோடு, தேவனுடைய ஊழியத்தில் ஈடுபடவும், செலவிடவும் உற்சாகப்படுத்த நமக்குச் சாட்சியாக, எடுத்துக்காட்டாக இருக்கட்டும்,” என்று எழுதினார்.

டேவிட் பிரைனெர்ட் தன் நாட்குறிப்பில் எழுதிய ஒன்றைச்சொல்லி நாம் முடிக்கப் போகிறோம். அமெரிக்காவில் செவ்விந்தியர்களிடைய தேவன் மகத்தான வேலைகள் செய்வதற்குமுன் 1744இல் அவர் இதைத் தன் நாட்குறிப்பில் எழுதினார். “நான் தேவனுக்கேற்ப பரிசுத்தமாக்கப்படுவதும், தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுசேர்க்கப்படுவதுமே என் ஆசை; அது நிறைவேறும் என்ற நம்பிக்கையே என் மகிழ்ச்சி.” ஆமென்.