Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More


டீட்ரிஷ் போன்ஹோஃபர் (1906 - 1945) - சிந்தனையாளர், போதகர், இறையியலாளர், நாசி எதிர்ப்பாளர், ஜெர்மனியில் உள்ள கன்ஃபெசிங் சர்ச்சின் முக்கிய நிறுவன உறுப்பினர்களில் ஒருவர், இரத்தசாட்சி.  அவருடைய எழுத்துக்களுக்கு இன்று மக்களிடையே பரவலாக வரவேற்பும், செல்வாக்கும் உண்டு. அவருடைய "The Cost of Discipleship" என்ற புத்தகம் தரமான இலக்கியமாகக் கருதப்படுகிறது. 

இறையியல்சார்ந்த அவருடைய எழுத்துக்கள் ஆழமானவை. அவர் ஹிட்லரின் கருணைக்கொலைத் திட்டத்தையும், யூதர்களின் இனப்படுகொலையையும் கடுமையாக எதிர்த்தார். நாஜி சர்வாதிகாரத்தைக் கடைசிவரைப் பகிரங்கமாக எதிர்த்தார். அவர் ஏப்ரல் 1943 இல் கெஸ்டபோவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடால்ஃப் ஹிட்லரைப் படுகொலை செய்வதற்கான ஜூலை 20 சதித்திட்டத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டபின்னர், அவர் மிக விரைவாக இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்துகொள்வதற்கு 3 வாரங்களுக்குமுன்பு ஏப்ரல் 9, 1945 அன்று அவர் தூக்கிலிடப்பட்டார்.

இன்று நாம் சர்ச்சைக்குரிய ஒரு நபரைப்பற்றிப் பார்க்கப்போகிறோம். இவருடைய பெயர் டீட்ரிஷ் போன்ஹோஃபர்.

இவரைப்பற்றிப் பேசுவதற்குமுன் நான் உங்களிடம் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன். நம் ஆண்டவராகிய இயேசு கெத்செமனேயில் இரத்த வியர்வை சிந்தி ஜெபித்துக்கொண்டிருந்த நேரத்தில் பேதுருவும், யாக்கோபும், யோவானும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், "நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?" என்று கேட்டார். நானும் இப்போது அதே கேள்வியைக் கேட்கிறேன். டீட்ரிஷ் போன்ஹோஃபரைப்பற்றித் தெரிந்துகொள்வதற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கக்கூடாதா?

சரி, முதல் உலகப் போரைப்பற்றியும், இரண்டாம் உலகப்போரைப்பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இரண்டாம் உலகப்போர் என்றதும் ஜெர்மனியின் நாசிப் படையும், அடால்ப் ஹிட்லரும் நினைவுக்கு வருவார்கள். டீட்ரிஷ் போன்ஹோஃபரின் வாழ்க்கை இரண்டாம் உலகப் போரோடு பின்னிப்பிணைந்திருக்கிறது.

பெப்ருவரி 4, 1906. டீட்ரிஷ் போன்ஹோஃபர் ஜெர்மனியில் ப்ரெஸ்லா என்ற இடத்தில் மிகவும் புகழ்பெற்ற, பண்பட்ட, பிரபலமான ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவர் பிறந்த ஊர் இன்று போலந்தில் இருக்கிறது. அவர் ஓர் இரட்டைக் குழந்தை. அவருடைய இரட்டைச் சகோதரியின் பெயர் சபீன். அவருடைய குடும்பத்தில் மொத்தம் 7 சகோதர சகோதரிகள். டீட்ரிஷ் ஆறாவது குழந்தை. டீட்ரிஷின் அப்பா பெயர் கார்ல் போன்ஹோஃபர். அவர் ஒரு மனநல மருத்துவரும், நரம்பியல் நிபுணருமாவார். ஒரு பல்கலைக்கழகத்தில் நரம்பியல் துறையில் அவர் ஒரு பிரபலமான பேராசிரியராகவும், ஒரு மருத்துவமனையின் இயக்குனராகவும் இருந்தார். அவருடைய அம்மா பவுலா போன்ஹோஃபர் உயர் கல்வி கற்றவர், பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர். ஆசிரியையாகப் பணியாற்றினார். அந்தக் காலத்தில் இது அசாதாரணம், அசாத்தியம். அவர் மிகவும் பிரபலமான இறையியலாளர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய தாத்தா கார்ல் வான் ஹேஸ் புகழ்வாய்ந்த இறையியலாளர், சபை வரலாற்றாசிரியர். எனவே, இப்படிப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகள் உயர் கல்வி பெறவில்லையென்றால்தான், ஒழுக்கமாக வளரவில்லையென்றால்தான் ஆச்சரியம்! ஆம், டீட்ரிஷும், சபீனும் மற்ற சகோதர சகோதரிகள் அனைவரும் ஆரம்பதிலிருந்தே தரமான கல்வியும், ஒழுக்கமும் பெற்று வளர்ந்தார்கள்.

அவருடைய மூத்த சகோதரர் கார்ல் போன்ஹோஃபர் ஒரு வேதியியலாளர். 1929 இல் அவரும் பால் ஹார்டெக் என்பவரும் இணைந்து ஹைட்ரஜனின் ஸ்பின் ஐசோமர்களைக் கண்டுபிடித்தார்கள்.

போஹேமியா நாட்டின் எல்லையில் கிளாட்ஸ் மலைகளுக்கு அருகில் அவர்களுக்கு ஓர் அழகான வீடு இருந்தது. அவர்களெல்லாரும் கோடைகாலத்தில் தங்கள் விடுமுறையைப் பெரும்பாலும் இந்த இடத்தில்தான் கழித்தார்கள். பச்சைப் பசேலென்ற புல்வெளி, அடர்ந்த காடு. இங்கு அவர்கள் ஓடியாடி பாடித்திருந்தார்கள். மிக அருமையான, இனிமையான குழந்தைப் பருவம்! எல்லாரும் தரமான, உயர்ந்த கல்வி கற்றார்கள்.

அவர்களுடைய இளமைப் பருவத்திலேயே அவர்களுடைய அம்மா பவுலா போன்ஹோஃபர் வாழ்கைக்குக்குத் தேவையான ஆரோக்கியமான இறையியல், முறையான மதக் கல்வி, நலமான கிறிஸ்தவப் பண்புகள்போன்ற நல்ல பாடங்களை அவர்களுக்குக் கற்பித்தார். உரத்தோடும், உறுதியோடும் அவர்கள் இவைகளைத் தங்கள் வாழ்வில் வாழ்வார்கள் என்று அவர் நம்பினார்; வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்கள் குடும்பம் ஒரு கிறிஸ்தவக் குடும்பம் அல்ல. டீட்ரிஷின் அப்பா கார்ல் போன்ஹோஃபர், தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லவில்லை. அவர் நல்ல பண்புகளை மதித்தார். தன் மனைவி குழந்தைகளுக்கு வேதகாமத்தைக் கற்பிப்பதில் அவர் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், அவர் கிறிஸ்துவை விசுவாசிக்கவில்லை. குடும்பமாக அவர்கள் ஆலயத்துக்கு மிகமிக அபூர்வமாகவே சென்றார்கள்; கூட்டங்களில் மிக அரிதாகவே கலந்துகொண்டார்கள்.

பிள்ளைகளுக்கு வீட்டிலேயே பாடங்கள் சொல்லிக்கொடுத்தார்கள். அதற்காக சில ஆசிரியைகள் அவர்களுடைய வீட்டுக்கு வந்துபோனார்கள். எட்டுக் குழந்தைகள் என்பதால், அவர்களைக் கவனிக்க வீட்டில் செவிலித்தாய்மார்கள், அதாவது நம்மூர் மொழியில் சொல்வதானால், ஆயாக்கள் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் விசுவாசிகள். விசுவாசிகளாகிய ஆசிரியைகள், விசுவாசிகளாகிய செவிலித்தாய்மார்கள் ஆகியோரின் தாக்கமும், அவர்களுடைய அம்மாவின் தாக்கமும் அவர்கள்மேல் அதிகமாக இருந்தது. சிறுவயதிலேயே வேதவாக்கியங்களின்மேல் திடமான அடித்தளம் போடப்பட்டது. டீட்ரிஷுக்கு எல்லாவற்றையும் துருவித்துருவி ஆராய்கின்ற ஆர்வமுள்ள மனம் இருந்தது. நான்கு வயதில், ஒரு நாள் மதிய உணவு சாப்பிட உட்கார்ந்தபோது, அவர் தன் அம்மாவிடம், "அம்மா, தேவன் மதிய உணவு சாப்பிடுவாரா?" என்று கேட்டாராம். அவரும் அவரது இரட்டைச் சகோதரி சபீனும் படுக்கையில் படுத்துக்கொண்டு நித்தியத்தைக் கற்பனை செய்கிற விளையாட்டு விளையாடுவார்களாம். அந்த விளையாட்டில் யார் முதலாவது தூங்குகிறாரோ அவர் தோற்றுப்போனவர் என்று கருதப்பட்டார். இப்படி இரவுநேர விளையாட்டுகள் விளையாடினார்கள்.

பள்ளியில் டீட்ரிஷ் உட்பட அவருடைய சகோதர சகோதரிகள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். போன்ஹோஃபர் குடும்பம் பெர்லினுக்குக் குடிபெயர்ந்தது. அவர் பெர்லினில் வளர்ந்தார். அங்கு அவர்கள் மிக வசதியான, சொகுசான பகுதியில் வீடு வாங்கினார்கள். சமுதாயத்தின் மேல்தட்டு மக்கள் வாழ்ந்த ஆடம்பரமான பகுதியில் வாங்கினார்கள். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வரலாற்றாசிரியர்கள்போன்ற உயர்குடி மக்கள் வாழ்ந்த இடம். அவர்கள் வீட்டில் ஒரு பெரிய விளையாட்டு மைதானம் இருந்தது, தோட்டங்கள் இருந்தன. அவர்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்தார்கள். எனவே, சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களின் குழந்தைகளோடு அவர்கள் விளையாடினார்கள். அவர் ஒரு சாதாரணமான குழந்தையைப்போல் வளரவில்லை. இது மிகவும் அசாதாரணமான வளர்ப்பு என்றுதான் சொல்லவேண்டும்.

டீட்ரிஷ் போன்ஹோஃபருக்கு எட்டு வயதாக இருந்தபோது, முதல் உலகப் போர் தொடங்கியது. ஜெர்மனி அந்தப் போரில் மாட்டிக்கொண்டிருந்தது. போர் தொடங்கிய நேரத்தில் அவர்கள் பொஹோமியா நாட்டின் எல்லையில் இருந்த அவர்களுடைய விடுமுறை இல்லத்தில் விடுமுறையை உல்லாசமாகக் கழித்துக்கொண்டிருந்தார்கள். போர் தொடங்கிய செய்தியைக் கேள்விப்பட்டவுடன் பிள்ளைகளைப் பெற்றோரிடம் பத்திரமாகச் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய செவிலித்தாய்மார்கள் எல்லாக் குழந்தைகளையும் அவசரமாகக் கூட்டிக்கொண்டு பெர்லினுக்குக் கிளம்பினார்கள். போர் செய்தியைக் கேள்விப்பட்ட பிள்ளைகள் விவரமில்லாமல் மகிழ்ச்சியுடன், "ஆஹா! போர் வந்துவிட்டது," என்று ஆர்ப்பரித்தார்கள். செவிலித்தாய்மார்கள் அவர்களுடைய செயலை உடனடியாகக் கண்டித்தார்கள். அன்றைய நிலவரப்படி போர் மூண்டவுடன் மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அதுதான் அன்றைய ஜெர்மானியர்களின் பொதுவான உணர்வு. போர் ஜெர்மனிக்குச் சாதகமாக இருக்கும் என்றும், இப்படிப்பட்ட உணர்வு மேன்மையானது என்றும், இது தங்கள் நாட்டுப்பற்றின் வெளிப்பாடு என்றும் அன்று ஜெர்மானியர்கள் நினைத்தார்கள்.

முதல் உலகப்போரில் ஜெர்மனி மும்முரமாக மூழ்கியது. மேலை நாடுகளில் குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட அனைவரும் இராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்பது சட்டம். அந்தச் சட்டத்தின்படி ஜெர்மனியின் இராணுவத்தில் சேர்வதற்கு அவருடைய இரண்டு சகோதரர்கள் அழைக்கப்பட்டார்கள். அதில் ஒருவருடைய பெயர் வால்டர் போன்ஹோஃபர். போரின்போது 1918இல் அவருக்குக் குண்டுக்காயங்கள் ஏற்பட்டன. பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது போன்ஹோஃபர் குடும்பத்துக்கு, குறிப்பாக அவருடைய அம்மா பவுலா போன்ஹோஃபருக்கு, பேரதிர்ச்சியாக இருந்தது. இது டீட்ரிஷையும் கடுமையாகப் பாதித்தது. அப்போது அவருக்கு வயது 12. டீட்ரிஷ் தன் வாழ்நாள் முழுவதும் தன் அண்ணன் வால்டர் பயன்படுத்திய வேதாகாமத்தைத்தான் வைத்திருந்தார் என்றால் அவருடைய இழப்பு அவருக்குள் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நீங்களே கற்பனைசெய்துகொள்ளுங்கள். அவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கள் மகன்கள் இராணுவத்தில் சேர்ந்து போருக்குச் செல்லாதவாறு தடுத்திருக்க முடியும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. எல்லா வாலிபர்களையும்போல் அவர்களும் இராணுவத்தில் சேர்ந்தார்கள். இந்த இழப்பை அவர்களால் தாங்க முடியவில்லை. பயங்கரமான சோகம் முழுக் குடும்பத்தையும் ஆக்கிரமித்தது. டீட்ரிஷின் ஆயுதப் போராட்டத்துக்கு எதிரான கருத்துக்களுக்கு இந்த அதிர்ச்சியான அனுபவம் ஒரு மூலகாரணமாக இருக்கக்கூடும்.

முதல் உலகப் போர் முடிந்தது. அதில் ஜெர்மனி பயங்கரமான படுதோல்வியைச் சந்தித்தது. ஜெர்மனி நசுக்கப்பட்டது. முதல் உலகப்போரின் முடிவில் ஜெர்மனி பிற நாடுகளுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. குறிப்பாக வெர்சைல்ஸ் ஒப்பந்தம். ஏற்கெனவே போரில் தோற்றதை ஜெர்மானியர்கள் பெரிய அவமானமாகக் கருதினார்கள். அது ஒரு புறம். இன்னொரு புறம் இந்த வேர்சைல்ஸ் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தை அவர்கள் தாங்கள் பெற்ற தோல்வியைவிட பெரிய அவமானமாகக் கருதினார்கள். அதன் நிபந்தனைகள் அவ்வளவு கடுமையானவை. எப்போதும்போல, தோல்விக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டும் அல்லவா? முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்றதற்கு யாராவது பொறுப்பேற்க வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள். ஒருவேளை கம்யூனிஸ்டுகள் தங்கள் முதுகில் குத்திவிட்டார்களோ என்று அவர்கள் நினைத்தார்கள். அப்போது அரசராகவும், அதிபதியாகவும் இருந்த கைசர் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகினார். போருக்குப்பின் நாட்டில் மக்களிடையே கொந்தளிப்பு, அரசியல் குழப்பம், பொருளாதார நெருக்கடி எனப் பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டன. டீட்ரிஷ் அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். அவர் படித்துக்கொண்டிருந்த பள்ளியிலிருந்து அவர் தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினார். "தயவுசெய்து எனக்குப் பணம் அதிகமாக அனுப்ப முடியுமா? என்னிடம் இப்போது பணம் இல்லை. ஏனென்றால், இங்கு ஒரு ரொட்டித்துண்டு வாங்க பல ஆயிரம் மார்க் கொடுக்கவேண்டியிருக்கிறது," என்று எழுதினார். அந்த அளவுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

15 வயதிலேயே, தான் ஓர் இறையியலாளனாக வேண்டும் என்று போன்ஹோஃபர் முடிவுசெய்துவிட்டார். அவருடைய குடும்பத்தின் ஒத்துழைப்போடும், ஆதரவோடும் அவர் மொழி, இலக்கியம், கலை ஆகிய பாடங்களைக் கற்றுத் தேறினார். போன்ஹோஃபருக்கு நன்றாகப் பியானோ வாசிகத் தெரியும். எனவே, இசைத்துறையில் ஏதோவொரு வகையில் அவர் சிறந்து விளங்குவார் என்று அவருடைய பெற்றோர் நினைத்தார்கள். ஆனால், அவர் இறையியல் படித்து, இறையியலாளனாக விரும்பினார். அதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் ஓர் இசைக்கலைஞனாக வேண்டும் என்று அவருடைய பெற்றோர் விரும்பியதால் பெர்லினில் நடைபெற்ற ஒரு கச்சேரியில் கிரிஸ்டா என்ற ஒரு பிரபலமான பியானோ கலைஞரின்முன் அவருடைய பெற்றோர் டீட்ரிஷைப் பியானோ வாசிக்க ஏற்பாடுசெய்தார்கள். டீட்ரிஷின் திறமையைக்குறித்து கிரிஸ்டாவுக்கு உயர்ந்த அபிப்பிராயம் இல்லை. எனவே, டீட்ரிஷ் ஒரு திறமையான பியானோ கலைஞனாக மாறுவார் என்று அவரால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ஆகவே, இறுதியில், டீட்ரிஷ் விரும்புவதைச் செய்யட்டும் என்று அவருடைய பெற்றோர்கள் விட்டுவிட்டார்கள்.

தேவனைப்பற்றிய உண்மையான, தனிப்பட்ட அனுபவம் இருந்ததால் போன்ஹோஃபர் இறையியல் படிக்க விரும்பினார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை. அதுவல்ல காரணம். வேறு என்ன காரணம்? அன்றைய காலத்தில் கல்லூரியில் இறையியல் மிகவும் கவர்ச்சியான பாடமாக இருந்தது. பொறியியல், சட்டம், மருத்துவம் போன்ற பாடங்களைப்போல் இறையியலும் உயர்வாகக் கருதப்பட்டது. எனவே, அவர் இறையியல் படிக்க விரும்பினார். இறையியல் படிப்பதற்கு பெர்லின் உலகின் மிகச் சிறந்த ஓர் இடமாகக் கருதப்பட்டது. எனவே, அவர் அங்கிருந்த இறையியல் கல்லூரியில் சேர்ந்தார். டீட்ரிஷ் இறையியல் படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் ஒரு நற்செய்திக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் இரட்சண்ய சேனையின் நிறுவனராகிய வில்லியம் பூத்தின் மகன் பிராம்வெல் பூத் பேசினார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு இரட்சிக்கப்பட்டவர்களிடம் அவர் கண்ட மகிழ்ச்சியைக்குறித்து அவர் தன் சகோதரியிடம் பேசினார். போன்ஹோஃபர் முதன்முறையாக இதை அனுபவித்தார். இதற்குமுன் அவரைப்பொறுத்தவரை இறையியல் மற்ற பாடங்களைப்போல் ஒரு கல்விப் பாடமாக மட்டுமே இருந்தது. அந்தப் பாடத்தை அவர் விரும்பினார். ஆனால், அவர் இதுவரை மக்களுடைய வாழ்க்கையில் காணாத ஒருவித நிஜத்தை இப்போது அங்கு கண்கூடாகக் கண்டார்.

17வது வயதில் டீட்ரிஷ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்லூரிப் படிப்பை ஆரம்பித்தார். அவருடைய அப்பா, சகோதர சகோதரிகள் எல்லாரும் தங்கள் கல்லூரிப் படிப்பை டூபிங்கன் பல்கலைக்கழகத்தில்தான் ஆரம்பித்தார்கள். எல்லாரையும்போல் அவரும் அந்தக் கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் இறையியல் படித்தார். எல்லாவற்றையும் துருவித்துருவி ஆராயத் துடித்த அவருடைய மனதுக்கு அந்தக் கல்லூரிப் படிப்பு போதுமான தீனி போட்டது. ஒரு வருடத்திற்குப்பின், அவர் பெர்லின் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தன் இறையியலில் படிப்பைத் தொடர்ந்தார். அந்தப் பல்கலைக்கழகத்தில் அவர் உலகப் புகழ்பெற்ற, வான் ஹர்னாக், ரொனால்ட் சீபர்க் போன்ற சிறந்த இறையியலாளர்களுடைய வழிகாட்டுதலின்படி படித்தார், அவர்களுடன் சேர்ந்து பணிபுரிந்தார், பின்னர் அவர் சுவிஸ் இறையியலாளர் கார்ல் பார்ட்டின் செல்ல மாணவராகவும் திகழ்ந்தார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வான் ஹர்னாக்கின் வழிகாட்டுதலின்படி, அவர் 1927இல் தன் முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை எழுதினார்.

கல்லூரியில் நிறைய படிக்கவேண்டியிருந்தது. ஆனால், அவர் சளைக்கவில்லை, அயராமல் உழைத்தார். தன் திறமையை வெளிப்படுத்தினார். அது அவர் முனைவர் பட்டத்துக்காக ஆய்வுக் கட்டுரை எழுதிக்கொண்டிருந்த நேரம். அதே நேரத்தில், அவர் சபையில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி வகுப்புகளில் பாடம் கற்றுக்கொடுத்துக்கொண்டுமிருந்தார். அந்த நாட்களில் முனைவர் படத்துக்கான பாடத்திட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி வகுப்புகள் ஒரு பகுதியாக இருந்தன. அதன்மூலம் மாணவர்கள் நிறையக் கற்றார்கள். அவர் ஒரேவொரு வகுப்பு மட்டுமல்ல, பல வகுப்புகள் எடுத்தார். அப்போது அந்த வகுப்புகளில் இருந்த பிரகாசமான, கற்பதில் ஆர்வமுள்ள சில இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இன்னும் ஆழமாகவும், அதிகமாகவும் கற்பிப்பதற்காகவும், அவர்களோடு நெருக்கமாகக் கலந்துரையாடுவதற்காகவும் "வியாழன் வட்டம்" (Thursday circle ) என்ற ஒரு சிறுகுழுவை ஏற்படுத்தினார். இந்த அனுபவங்கள்மூலம் அவர் தன் வாழ்வின் போக்கைச் சீர்தூக்கிப்பார்த்தார். "இறையியலை வேலைக்கு உதவும் ஒரு கல்லூரிப் படிப்பாக மட்டும் பார்க்காமல், ஒருவேளை நான் ஒரு போதகராக வேண்டும் என்பதற்கான வழியாகப் பார்க்க வேண்டுமோ!" என்று அவர் எண்ணத் தொடங்கினார்.

டீட்ரிஷ் பாஸ்டராக விரும்புவதை அறிந்த அவருடைய பெற்றோர் அதிர்ச்சியடைந்தார்கள். தங்கள் மகன் டீட்ரிஷ் அதிபுத்திசாலி என்று அவர்களுக்குத் தெரியும். எனவே, அவன் தன் வாழ்க்கையை எங்கோவொரு மூலையிலுள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் வீணாக்குவதை அவர்கள் விரும்பவில்லை. 21 வயதிலேயே, அவர் இறையியலில் ஆய்வுக் கட்டுரையை முடித்து முனைவர் பட்டம் பெற்றார். ஆனால், பாஸ்டராக பிரதிஷ்டை பண்ணப்படுவதற்கு அவருக்கு இன்னும் வயாதாகவில்லையென்பதால், அவர் தொடர்ந்து படித்து, இரண்டாவது முனைவர் பட்டமும் வாங்கினார். 1928-1929 இல் போன்ஹோஃபர் பார்சிலோனாவில் (ஸ்பெயின்) ஜெர்மன் சுவிசேஷ சமூகத்தில் உதவிப் போதகராகப் பணியாற்றினார். 24 வயதில் பாஸ்டராக பிரதிஷ்டைப்பண்ணப்பட இன்னும் ஒரு வருடம் இருந்தது. எனவே, 1930இல் அமெரிக்காவில் நியூயார்க்கிலுள்ள யூனியன் இறையியல் கல்லூரியில் உதவித்தொகையோடு ஒரு வருடம் இறையியல் படிக்கச் சென்றார். 1930-1931 இல் அவர் ஐக்கிய இறையியல் செமினரியில் படித்தார்.

இது டீட்ரிஷுகுக்குக் கிடைத்த ஓர் அறிய வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. போன்ஹோஃபர் நியூயார்க் போய்ச் சேர்ந்தார். அவர் அமெரிக்காவுக்குச் சென்றபின் அந்த நேரத்தில் ஜெர்மனியில் என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை. செய்திகள் இன்றுபோல் அன்று வேகமாகப் பரவவில்லை. அவர் நியூயார்க்கிற்குப் படிக்கச் சென்ற நேரத்தில், ஜெர்மனியில் தேர்தல்கள் நடந்துகொண்டிருந்தன. அந்தத் தேர்தல் முடிவுகள் உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தன. முந்தைய தேர்தலில் 12 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய கட்சி நடந்து முடிந்த தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று, நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக மாறியது. அடால்ஃப் ஹிட்லர்தான் அந்தக் கட்சியின் தலைவர்.

அப்போது ஜெர்மனியில் நடந்துகொண்டிருந்த மாற்றங்களைப்பற்றி அமெரிக்காவின் நியூயார்க்கில் படித்துக்கொண்டிருந்த போன்ஹோஃபருக்கு எதுவும் தெரியாது. அவர் நியூயார்க்கில் கப்பலிலிருந்து இறங்கியதும், அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அமெரிக்காவில் அது ஆரவாரமான ஜாஸ் இசை யுகம். எங்கு பார்த்தாலும் அந்த இசையின் இரைச்சல்தான் கேட்கும். இது அவருடைய அனுபவத்திற்கு முற்றிலும் முரணான அனுபவம். பெர்லின் பழமைவாத பாரம்பரியத்திற்குப் பேர்பெற்றது. பெர்லின் அறிவுஜீவிகளின் கோட்டை என்று கருதப்பட்டது. மேலும், அவரை இறையியல் கல்லூரியில் அறிமுகம் செய்தபோது அவர் என்ன நினைத்தாராம் தெரியுமா? அந்தக் கல்லூரியில் தான் ஒரு மாணவனாக உட்கார்ந்து பாடம் படிப்பதற்குப்பதிலாக, தான் அங்கு ஓர் ஆசிரியனாக நின்று பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவர் நினைத்தாராம். அந்த இறையியல் கல்லூரி அவருடைய தரத்தின்படி இல்லை. அங்கு இறையியல் இல்லை என்றார். அவர் பெர்லினில் உலகப் புகழ்பெற்ற இறையியலாளர் வான் ஹர்னாக்கிடம் இறையியல் கற்றார். எனவே, நியூயார்க் வேதாகமக் கல்லூரியில் கற்பிக்கப்பட்ட இறையியலில் அவருக்குக் கொஞ்சங்கூட மதிப்போ, மரியாதையோ இல்லை. உண்மையில், அந்த இறையியல் கல்லூரியைப்பற்றி அவர் என்ன எழுதினார் தெரியுமா? "நியூயார்க் வேதாகமக் கல்லூரியில், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி, சிலுவை, பாவம், மன்னிப்பு, மரணம், வாழ்க்கை என்ற காரியங்களையெல்லாம் விட்டுவிட்டு, கிட்டத்தட்ட மீதி எல்லாவற்றையும் பிரசங்கிக்கிறார்கள்," என்று எழுதினார்.

நியூயார்க் வேதாகமக் கல்லூரியைப்பற்றி அவர் தாழ்வாக நினைத்தபோதும், தன் தகுதியைப்பற்றி அவர் உயர்வாக நினைத்தபோதும், அந்தக் கல்லூரி உண்மையில் போன்ஹோஃபரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதற்காகத் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், போன்ஹோஃபர் தன்னை ஒரு அதிமேதாவி என்றே கருதினார். ஆனால், இங்குதான் அவருடைய வாழ்க்கை மாறியது.

அந்த இறையியல் கல்லூரியில் ஃபிராங்க் ஃபிஷர் என்ற ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கன் அவருடன் படித்தார். அவர் நியூயார்க்கில் ஹார்லெம் என்ற இடத்தில் இருந்த ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கன் சபைக்கு போன்ஹோஃபரை அறிமுகப்படுத்தினார். அந்த சபையில் 14,000 ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கூடிவந்தார்கள். டீட்ரிஷ் அவர்களின் எளிமையையும், உண்மையான மகிழ்ச்சியையும் கண்டார். அது அவர்மேல் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அது மட்டும் அல்ல. முதன்முறையாக நற்செய்தி மிகவும் எளிமையான முறையில் பிரசங்கிக்கப்படுவதையும் அவர் கேட்டார். எனவே, அவர் இந்தச் சபைக்கு தவறாமல் சென்றார். அங்கிருந்தவர்களோடு நெருக்கமாகப் பழகினார். அவர்களை நன்றாகத் தெரிந்துகொண்டார். அங்கிருந்தவர்கள் அவரை எளிதில் அடையாளம்கண்டுகொண்டார்கள். ஏனென்றால், அந்தக் கருப்புநிற மக்கள் மத்தியில் ஒரோவொருவருக்கு மட்டும் மஞ்சள் நிற முடியும், நீல நிறக் கண்களும் இருந்தால் யார்தான் அவரைப் பார்க்காமல் இருக்க முடியும்? அவர் அந்தச் சபையின் இசையையும் மிகவும் விரும்பினார். கறுப்பர் இன மக்களின் ஆவிக்குரிய வரலாற்றுப் புத்தகங்களை வாங்கிப் படித்தார். அவைகளை வாசித்தபோது அவருக்குள் ஏதோவொன்று நடந்தது. என்ன நடந்தது என்று தெளிவாகச் சொல்ல முடியாது. ஆனால், ஏதோவொன்று அவருக்குள் நிகழ்ந்தது. அவர் அங்கு உண்மையாகவே மனந்திரும்பிய மக்களின் வாழ்க்கையைப் பார்த்தார். இன்னொரு சுவையான காரியம் என்னவென்றால், அந்த நேரத்தில், அமெரிக்காவில் இருந்த இனப் பிரச்சினையால் போன்ஹோஃபரும் மிகவும் பாதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்டார் என்பதைவிட அந்தப் பிரச்சினையின் கனபரிமாணத்தை அவர் உணர்ந்தார். அவர் அன்றைய கொடூரமான அநீதிகளைக் கண்டார். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதையும், அவர்கள் தீண்டத்தகாதவர்கள்போல் ஒதுக்கப்படுவதையும் கண்டார். அவர் ஜெர்மனியில் இருந்த தன் சகோதரனுக்கு அதைப்பற்றி கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், "இங்கு இருக்கும் இனப் பாகுபாட்டை என்னால் நம்பமுடியவில்லை. இங்கு இருப்பதுபோல் நம் ஜெர்மனியில் எதுவும் இல்லை. இங்கு இருக்கும் இனவேறுபாட்டை ஒப்பிடவே முடியாது," என்று எழுதினார். அடுத்த சில வருடங்களில் ஜெர்மனியில் என்ன நடந்தது என்று நமக்கு இப்போது தெரியும். எனவே, டீட்ரிஷ் அன்று ஜெர்மனியைப்பற்றி எழுதியது இன்று நமக்கு இப்போது முரண்பாடாகத் தோன்றுகிறது. .

1931இல் போன்ஹோஃபர் பெர்லினுக்குத் திரும்பிவந்தார். திரும்பியவுடன் அவர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் இறையியல் கற்பிக்கத் தொடங்கினார். இன்னொரு முக்கியமான காரியம் என்னவென்றால், அவர் தவறாமல் சபைக்குப் போகத் தொடங்கினார். திருவிருந்திலும் பங்குபெறத் தொடங்கினார். அவர் அமெரிக்காவுக்கு இறையியல் படிக்கச் செல்வதற்குமுன் இப்படிச் சபைக்குச் செல்லவுமில்லை, திருவிருந்தில் பங்குபெறவுமில்லை. இது அவர் இதுவரை செய்யாத ஒன்று. அவருடைய குடும்பத்தார் அவரில் ஏற்பட்டிருந்த இந்த மாற்றத்தைக் கவனிக்கத் தவறவில்லை. இது என்ன மாற்றம், ஏன் இந்த மாற்றம் என்று அவர்களால் திட்டவட்டமாகச் சொல்லமுடியவில்லை. அவருக்கு இறையியல், தத்துவம், இசை, கலைபோன்ற பல காரியங்களில் ஈடுபாடும், ஆர்வமும் உண்டு என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் அவரிடம் ஏதோவொரு காரியத்தில் திடமான, பலமான மாற்றம் ஏற்பட்டிருப்பதையும், இப்போது ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவருடைய மாணவர்களும் இந்த வித்தியாசத்தைக் கண்டார்கள். முன்பு அவர் அவர்களுக்கு சொற்பொழிவாற்றினார். ஆனால் இப்போது, அவர் அவர்களுக்குக் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், அவர்களைச் சீடராக்க விரும்பினார். அவர்கள் தேவனை அறிந்துகொள்வதற்கேதுவாக கேள்விகள் கேட்பதற்கு அவர் அவர்களை உற்சாகப்படுத்தினார்.

ஜனவரி 30, 1933 மதியம் 12 மணிக்கு அடால்ப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராகப் பதவியேற்றார். அதே நாளில், போன்ஹோஃபர் வானொலி நிலையத்தில் உரையாற்றவிருந்தார். கொடுங்கோல் ஆட்சியின் அடிப்படை அவலங்கள் என்பதுதான் அவர் ஆற்றவிருந்த சொற்பொழிவின் தலைப்பு. ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்குமுன்பே அவர் இந்த உரையை எழுதியிருந்தார் என்பதைக் கவனிக்க வேண்டும். ஹிட்லர் ஆட்சிக்கு வருவார் என்றோ, அந்த நாளில் அவர் பதவி ஏற்பார் என்றோ டீட்ரிஷுக்குத் தெரியாது. ஆனால் ஹிட்லரின் போக்கிலும், கொள்கையிலும் தவறும், முரண்பாடுகளும் இருப்பதை அவர் ஏற்கனவே உணர்ந்திருந்தார். ஹிட்லரின் பேச்சு, யோசனை, கட்சியை நடத்தும் விதம், ஆணவப் போக்கு போன்றவைகளை அவர் உன்னிப்பாகக் கவனித்தார். அவருடைய போக்கு மக்களைத் தவறான வழிக்குக் கொண்டுசெல்லும் என்றும், அவர் தலைவராக இருக்க மாட்டார், மாறாக, ஜெர்மானியர்களுக்குத் தவறான தலைவராக இருப்பார் என்றும் அவர் எழுதினார். அவர் führerராக மாட்டார். மாறாக Verführer வஞ்சகனாக இருப்பார் என்று அவர் உணர்ந்தார்.

துரதிர்ஷ்டவசமாக, அவருடைய உரை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்கு என்ன காரணம் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. நாசிப் படை தடைசெய்ததா அல்லது வானொலி நிலையத்தாரே உரையைப் பாதியில் நிறுத்தினார்களா அல்லது தொழில்நுட்பக் கோளாறா? என்ன காரணம் என்று தெரியாது. ஆனால், அவர் உரையாற்றிய அந்த நேரம் குறிப்பிடத்தத்தக்கது, கவனிக்கவேண்டியது. ஏனென்றால், அடால்ஃப் ஹிட்லருக்கு எதிராகப் பேசிய முதல் நபர் டீட்ரிஷ் போன்ஹோஃபர் ஆவார். அவருடைய அன்றைய வானொலி உரை ஒருவகையான தீர்க்கதரிசனம் என்றுகூடச் சொல்லலாம். நடக்கவிருக்கும் மாற்றங்களின் அளவையும், கொடூரத்தையும், அகோரத்தையும் அன்று ஜெர்மனியில் ஒருவராலும் ஊகிக்க முடியவில்லை. ஏனென்றால், அந்தக் கட்டத்தில், ஹிட்லர் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். ஜெர்மன் மக்கள் அவரைப் பெருவாரியாக ஆதரித்தார்கள். முதல் உலகப் போரில் ஜெர்மானியர்கள் இழந்த பெருமையை ஹிட்லர் மீட்டெடுப்பார் என்றும், நாட்டைத் தலைநிமிரச் செய்வார் என்றும் மக்கள் நினைத்தார்கள்.

டீட்ரிஷின் மூத்த சகோதரியான கிறிஸ்டெல் போன்ஹோஃபர், ஹான்ஸ் வான் டொனாண்யி என்ற ஒரு வழக்கறிஞரைத் திருமணம் செய்தார். ஹான்ஸ் வான் டொனாண்யி மிகப் பிரபலமான வழக்கறிஞர். அவர் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார். ஆகவே, அரசாங்கத்தைப்பற்றிய பல இரகசிய தகவல்கள் அவருக்குத் தெரிய வந்தன. "ஆரிய வகுப்பு" என்று அழைக்கப்படும் ஒரு காரியம் அரசு ஆவணங்களில் இடம்பெறப்போகிறது என்ற செய்தியை அவர் கேள்விப்பட்டார். மஞ்சள் நிற முடியும், நீல நிறக் கண்களுமுடைய ஜெர்மானியர்கள் ஆரியர்கள் என்றும், இந்த ஆர்ய இனம் உலகத்திலுள்ள மற்ற எல்லா இனங்களையும்விட உயர்ந்த இனம் என்றும் ஹிட்லர் நம்பினார். எனவே, அரசுப் பணிகளிலிருந்தும், பொதுத் துறை நிறுவனங்களிலிருந்தும் யூத இனத்தைச்சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதே இந்தத் திட்டம். சமுதாயத்தில் யூதர்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது, எல்லா இடங்களிலிருந்தும் அவர்களைத் துரத்த வேண்டும் என்பதே இந்த ஆர்ய சட்டம். ஹான்ஸ் வான் டொனாண்யி இந்தத் தகவலைப் போன்ஹோஃபர் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொண்டபோது அவர்களால் இதை நம்ப முடியவில்லை. "நாகரிகமான இந்த நாட்டில், கல்வித்தரம் உயர்ந்த இந்த நாட்டில், குறிப்பாக பெர்லினில், இதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? இதை நடைமுறைப்படுத்த முடியுமா?" என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது.

ஹிட்லர் ஆட்சியின் இந்த ஆரம்பக் கட்டத்தில், டீட்ரிஷ் ஒரு கட்டுரை எழுதினார். ஹிட்லர் தன் ஆர்ய சட்டத்தை நாடு முழுவதும் எல்லா நிறுவனங்களிலும், அலுவலங்களிலும் அமுல்படுத்துவார் என்று டீட்ரிஷ் உணர்ந்தார். ஜெபஆலயங்களில் யூதர்கள் வழிபாடுநடத்தக்கூடாது, யூதவம்சத்தார் குருக்களாகவோ, போதகர்களாகவோ இருக்கக்கூடாது, கல்லூரிகளிகளில், பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகப் பணியாற்றக்கூடாது, இறையியலாளர்களாக இருக்கக்கூடாது, எல்லாத் துறைகளிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும், அலுவலகங்களிலிருந்தும் ஹிட்லர் யூதவம்சத்தாரை வெளியேற்றப் போகிறார் என்று டீட்ரிஷ் ஏற்கெனவே அறிந்திருந்தார். ஹிட்லரின் இந்தக் கொடூரத் திட்டத்துக்கு எதிராக எல்லாச் சபைகளின் தலைவர்களும் ஒருமித்து எழ வேண்டும் என்று வலியுறுத்தி மிகத் தெளிவாகவும், அவசரமாகவும் அவர் இந்தக் கட்டுரையை எழுதினார். ஆனால், அவர்கள் அந்தக் கட்டுரையின் அவசியத்தையும், அவசரத்தையும் புரிந்துகொள்ளாமல் தவறவிட்டுவிட்டார்கள். பலர் போன்ஹோஃபர் சொன்னதை அசட்டைசெய்தார்கள். ஹிட்லர் மிக விரைவில் தன் திட்டங்களைச் செயல்படுத்த ஆரம்பித்தார். ஜெர்மனி முழுவதும் இருந்த யூத இனத்தைச் சார்ந்த போதகர்கள், பாஸ்டர்கள், ஊழியக்காரர்கள், சபைத் தலைவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள். "ஜெர்மானியர்களே, உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். யூதவம்சத்தாரிடம் பொருட்கள் வாங்காதீர்கள். அவர்களைப் புறக்கணியுங்கள்," என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் தெருக்களில் ஒட்டப்பட்டன. பரிதாபம் என்னவென்றால் அந்த நேரத்தில், மக்கள் இவைகளை வரவேற்றார்கள். ஹிட்லரின் பிரச்சாரம் வேலைசெய்ய ஆரம்பித்தது. அவர் தன் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்த ஆரம்பித்தார்.

டீட்ரிஷின் இரட்டைச் சகோதரி சபீன் சமீபத்தில்தான் ஜெர்ஹார்ட் லீப்ஹோல்ட்ஸ் என்ற யூதஇனத்தைச் சார்ந்த ஒரு வழக்கறிஞரைத் திருமணம் செய்திருந்தார். அவர் ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலைசெய்தார். வழக்கம்போல் ஒருநாள் அவர் கல்லூரிக்குச் சென்றார். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அன்று அவருடைய வகுப்புக்குமுன் நாசிப் போலீசார் நிறையப்பேர் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் கல்லூரிக்கு வந்தவர்களையெல்லாம் வெளியே விரட்டிக்கொண்டிருந்தார்கள். அவரால் அங்கு தொடர்ந்து வேலைசெய்ய முடியவில்லை. அவர்கள் அவரை வேலை செய்யவிடவில்லை. அவர் தன் வேலையை இழந்தார். ஒரேவொரு காரணம். அவர் ஒரு யூதன். யூத மாணவர்கள் தெருவில் நடந்துசென்றபோது, அவர்களுடன் சேர்ந்து ஒரே நடைமேடையில் நடப்பதை அவமானம் என நினைத்து ஜெர்மானியர்கள் நேர் எதிர் நடைபாதைக்குச் சென்றார்கள். யூதர்களுடன் அவர்கள் எதையும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. நடைபாதையைக்கூட. கற்பனை செய்யமுடியாத அளவுக்கு இந்த மாற்றங்கள் மிக வேகமாக நிகழ்ந்தன. இன்று இது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால், இவர்கள்மேல் பரிதாபப்பட்ட சில சகாக்களும், நண்பர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் இவர்களிடம், "நான் ஒரு ஜெர்மன் என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். நீங்கள் கல்லூரியைவிட்டுப் போய்விடுங்கள். இல்லையென்றால், உங்களுக்கு ஆபத்து," என்று எச்சரித்தார்கள். பொழுதுபோக்குப் பூங்காக்களில் யூதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. விழாக்களுக்கு அனுமதி கிடையாது. ஒதுக்கப்பட்டார்கள், ஒடுக்கப்பட்டார்கள்.விரைவில் ஊடகங்களிலிருந்தும், பத்திரிகைத்துறையிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்கள்.

இவைகளையெல்லாம் இன்று நாம் திரும்பிப்பார்க்கும்போது "எப்படி இப்படி நடந்து? எப்படி அந்த மக்கள் இப்படி நடந்துகொண்டார்கள்?" என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், அன்று ஜெர்மானியர்கள் இதை ஆதரித்தார்கள் என்பதுதான் அதிர்ச்சியாயிருக்கிறது. உண்மையில், அன்று அவர்கள் ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தார்கள். அதை அவர்கள் ஜெர்மானியர்களுக்கு எதிரானவர்களுக்கு எதிரான பேரணி என்றழைத்தார்கள். இந்த பேரணியில், அவர்கள் யூத எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியவர்களின் எல்லாப் புத்தகங்களையும் சேகரித்து அவைகளைச் சுட்டெரித்தார்கள். இது ஜெர்மனியைச் சுத்தப்படுத்தும் ஓர் அடையாளம் என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் சுட்டெரித்த புத்தகங்களில் HG வெல்ஸ், ஹெலன் கெல்லர், சிக்மண்ட் பிராய்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியவர்கள் எழுதிய புத்தகங்கள் அடங்கும்.

ஹிட்லர் தேவனை நம்பவில்லை. சபைகளையும், கிறிஸ்தவத் தலைவர்களையும் அவர் மிகக் கேவலமாகவும், இழிவாகவும் பார்த்தார். கிறிஸ்தவம் பலவீனமான, மழுப்பலான ஒரு மதம் என்று அவர் ஒருமுறை கூறினார். கிறிஸ்தவம் ஊக்குவித்த சாந்தத்தை அவர் வெறுத்தார். "எல்லா மதகுருமார்களையும், சபையின் தலைவர்களையும் ஓர் அறைக்குள் அடைத்துவைத்து அவர்களிடம் ஒரேவொரு கேள்வி கேட்டால் போதும், அவர்கள் ஒடுங்கி நடுங்குவார்கள்," என்று அவர் அடிக்கடி கூறுவாராம். அவர்களைக்குறித்து ஹிட்லர் அப்படித்தான் நினைத்தார். ஆனால், 1930இல், ஜெர்மனியில், அந்த நேரத்தில், எல்லாரும் கிறிஸ்தவர்களே. 100 விழுக்காடு கிறிஸ்தவர்கள். பெயரளவிலாவது அவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொன்னார்கள்.

எனவே, ஹிட்லர் மிகவும் கவனமாக நடக்க வேண்டியிருந்தது. ஆனால், SS இன் தலைவராக இருந்த ஹிம்லர்போன்றவர்கள் ஹிட்லருக்கு ஆதரவாக இருந்தார்கள். SS என்பது நாசிக் கட்சியின் அரசியல் போர்வீரர்கள். இவர்கள் முதலாவது ஹிட்லரின் காவலர்களாக இருந்தார்கள். நாளடைவில் இவர்கள் நம்மூர் கறுப்புப் பூனைகளைப்போல் மாறினார்கள். எந்த வரம்பும் இல்லாமல் செயல்பட்ட ஒரு கொடூரக் கும்பல். அதுதான் SS. ஜெர்மனியிலிருந்து கிறிஸ்தவத்தை அழிக்க வேண்டும் என்பதும், கிறிஸ்தவ சபைகள் என்று ஓன்று இருந்தால் அவைகள் நாசிப் படைகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்பது அவருடைய ஒரு திட்டம்.

ஜெர்மானியர்கள் முதல் உலகப்போரில் தோற்றதைப் பெரிய அவமானமாகக் கருதினார்கள் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். 1929இல் ஜெர்மன் சபை என்ற ஒரு தந்திரமான இயக்கம் ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் ஜெர்மன் கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்பட்டார்கள். இவர்கள் தீவிரமான தேசீயவாதிகள். ஹிட்லர் இவர்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்தார். இவர்களை ஓர் அரிய வாய்ப்பாகக் கருதினார். கிறிஸ்தவர்களாகிய நாம் நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தைப் பயன்படுத்துகிறோமோ இல்லையோ ஹிட்லர் பயன்படுத்தினார். ஹிட்லர் இந்த ஜெர்மன் சபையைப் பகிரங்கமாக ஆதரித்தார்.

இந்த ஜெர்மன் சபையைப்பற்றித் தெரிந்துகொள்வது நம்மெல்லாருக்கும் ஒரு பெரிய பாடமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒருவன் ஜெர்மானியன் என்றால், அவன் கிறிஸ்தவன் என்றால், அவன் ஜெர்மன் சபையில்தான் இருக்க வேண்டும், இருக்க முடியும் என்று நிர்பந்தித்தார்கள். அது ஜெர்மன் சபை என்றழைக்கப்பட்டதுபோல், இன்று சபைகள் இந்தியச் சபை, தமிழ்நாட்டுச் சபை என்று இருந்தால் எப்படியிருக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள். அன்று ஜெர்மனியிலிருந்த பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஹிட்லரின் இந்தத் தந்திரமான முறைகளையும், மாற்றங்களையும், வழிகளையும் பார்க்கவில்லை, புரிந்துகொள்ளவில்லை. வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல், அன்று பல கிறிஸ்தவத் தலைவர்களும், இறையியலாளர்களும், பிரபலமான முன்னணிப் பிரசங்கிமார்களும் இந்த ஜெர்மன் சபையைப் பகிரங்கமாக ஆதரித்தார்கள்; அந்த இயக்கத்துக்குத் தோள்கொடுத்தார்கள். ஹிட்லர் இந்தக் காரியத்தை மிகத் தந்திரமாகக் கையாண்டார். யூதவம்சத்தைச் சேர்ந்த பாஸ்டர்களும், ஊழியக்காரர்களும் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். வேதாகமம் தேவன் தந்தது இல்லை என்றும், அது தேவனுடைய வார்த்தை இல்லை என்றும் பேசத் தொடங்கினார்கள். வேதாகமத்திலிருந்து பழைய ஏற்பாட்டை நீக்கிவிட வேண்டும் என்று சொன்னார்கள். விரைவில் புதிய ஏற்பாட்டின் சில பகுதிகளையும் நீக்கினார்கள். நாசி அரசாங்கமே ஒருவரை ஜெர்மன் சபையின் தலைவராக நியமித்தது. அப்படி நியமிக்கப்பட்ட ஒருவர், "மக்களின் குரலே கடவுளின் குரல்" என்று சொன்னார். நம் ஊரில் "மக்களின் குரலே மகேசனின் குரல்" என்று ஒருவர் சொன்னது நினைவிருக்கு வருகிறதா? அவர்கள் எல்லா உபதேசங்களையும் தலைகீழாக மாற்றினார்கள். பாவம், சிலுவை, இரத்தம், கிறிஸ்துவின் மரணம்போன்றவைகள் எதிர்மறையானவைகள் என்றும், இப்படி எதிர்மறையானவைகளை மையமாகக்கொண்ட கிறிஸ்தவத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, சுதந்திரம், விடுதலை, இனத்தைத் தூய்மைப்படுத்துதல்போன்ற நேர்மறையானவைகளை மையமாகக்கொண்ட கிறிஸ்தவத்தை ஊக்கப்படுத்தவேண்டும் என்றும் ஹிட்லர் கூறினார். அதை அவர் நடைமுறைப்படுத்தினார்.

ஜெர்மன் சபையில் இப்படித்தான் போதித்தார்கள். இது மட்டும் அல்ல. ஆரியர்களாகிய ஜெர்மானியர்கள்தான் தேவன் தெரிந்தெடுத்த இனம் என்றும், அடால்ஃப் ஹிட்லர்தான் உண்மையான இரட்சகர் என்றும் அவர்கள் போதித்தார்கள். பெயர்க் கிறிஸ்தவர்கள் இந்தப் போதனையினால் இழுத்துச்செல்லப்பட்டார்கள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கிறிஸ்தவர்களும் இந்த அதிரடி மாற்றங்களினால் அடித்துச்செல்லப்பட்டார்கள். வெகு சிலரே ஜெர்மனியில் மோதி, அலைக்கழித்துக்கொண்டிருந்த இந்தப் பேரலைக்கு எதிராக நின்றார்கள். வரப்போகும் பேராபத்தை உடனடியாக உணர்ந்த ஒரு சிலரில் டீட்ரிஷ் போன்ஹோஃபர் ஒருவர். அவர் இந்த மாற்றங்களை எதிர்த்தார். அவர் மட்டுமல்ல. மார்ட்டின் நிமிலா போன்ற சிலரும் இதில் இணைந்தார்கள். மார்ட்டின் நிமிலா ஹிட்லரின் மாற்றங்களை எதிர்த்த ஓர் இயக்கத்தின் தலைவராக இருந்தார். ஹிட்லர் சபையைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதையும், சபையில் தலையிடுவதையும் மார்ட்டின் நிமிலா தடுக்க விரும்பினார். ஹிட்லர் சபை விவகாரத்தில் மூக்கைத் துளைப்பதை அவர் விரும்பவில்லை. எனவே, அவர் பாஸ்டர்களின் எமெர்ஜென்சி லீக் என்ற ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். சபையின் பொறுப்புகளிருந்தும், சபையிலிருந்தும் வெளியேற்றப்பட்ட யூதர்களுக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கு மக்கள் ஒன்றுசேர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். ஹிட்லரின் ஆர்ய சட்ட த்தினால் பாதிக்கப்பட்ட போதகர்களுக்கும், பாதிரிமார்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் ஆதரவாக டீட்ரிஷ் போன்ஹோஃபர் ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்ய முயன்றார். ஆனால் மக்கள் அந்த வேலை நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை. வேலை நிறுத்தம் நடைபெறவில்லை.

ஆனால், பாஸ்டர்ஸ் எமெர்ஜென்சி லீக்கின் உதவியோடு ஹிட்லரின் நடவடிக்கைகளுக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் பங்குபெறுவதற்கு 6000 பேர் கையெழுத்துப்போட்டார்கள். இது ஜெர்மனியில் நடந்துகொண்டிருந்த மாற்றங்களை அறிந்தவர்கள் உண்மையாகவே இருந்தார்கள் என்பதையே காட்டுகிறது. ஆனால், அவைகளுக்கு எதிராக நிற்கவோ, குரல் கொடுக்கவோ, அவர்களால் முடியவில்லை என்று தெரிகிறது. இதுவே பின்னாட்களில் கன்ஃபெஸ்ஸிங் சர்ச் என்று பெயர் மாற்றம் பெற்றது. உண்மையான நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்; அதற்காக அவர்கள் உழைத்தார்கள்.

ஆனால், ஹிட்லர் ஒரு திட்டமும், அதை நிறைவேற்றுவதற்குத் தெளிவான அட்டவணையும் வைத்திருந்தார். நாட்கள் செல்லச்செல்ல சபைகளின்மேல் ஹிட்லரின் கட்டுப்பாடு அதிகமாயிற்று. இறையியல் கல்லூரிகள், வேதாகமக் கல்லூரிகள், குருமடங்கள்போன்ற எல்லாக் கல்லூரிகளும் ஜெர்மன் சபை போதித்த நேர்மறையான கிறிஸ்தவத்தையே போதிக்க வேண்டும் என்று வற்புத்தினார். இதைப் போதிக்காத கல்லூரிகளெல்லாம் சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப்பட்டன, மூடப்பட்டன.

"இது பேசிக்கொண்டிருக்க வேண்டிய நேரம் அல்ல, மாறாக செயலில் இறங்க வேண்டிய நேரம்," என்று கன்ஃபெஸ்ஸிங் சர்ச் நினைத்தது. எனவே, அவர்கள் நாடு முழுவதும் ஒதுக்குப்புறமாகவும், மறைவாகவும் வேதாகமக் கல்லூரிகளை ஆரம்பித்தார்கள். உண்மையான நற்செய்தியைப் போதிக்க வேண்டும் என்றும், கிறிஸ்தவன் என்றால் யார் என்று அடுத்த தலைமுறைக்குச் சொல்ல வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினார்கள். இதுதான் அவர்களுடைய பாரம். அந்த நேரத்தில் டீட்ரிஷ் லண்டனில் ஜெர்மானிய விசுவாசிகளின் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். ஜெர்மனியில் இரகசியமாக நடந்துகொண்டிருந்த ஒரு வேதாகமக் கல்லூரியைப் பொறுப்பேற்று நடத்துமாறு அவரை உடனே அழைத்தார்கள். இந்த வேதாகமக் கல்லூரி பொமரேனியன் எல்லையில் பின்கெனவால்டே என்ற ஒரு கிராமத்தில் ஒதுக்குப்புறமாக இருந்தது. ஒரு பழைய பள்ளிக்கூடக் கட்டிடத்தில் மாணவர்கள் கூடினார்கள். அவர்களுக்கு டீட்ரிஷ் கற்பித்தார். ஆம், சட்டவிரோதமாகத்தான் இந்த வேதாகமக் கல்லூரி நடத்தப்பட்டது. இப்பட்டிப்பட்ட வேதாகமக் கல்லூரியில் பயின்றவர்கள் பின்னர் பாஸ்டர்களானார்கள். அந்த நேரத்தில் ஜெர்மனியில் அரசியல் குழப்பம், கொந்தளிப்பு, பொருளாதார நெருக்கடி எனப் பல சிக்கல்கள் இருந்தபோதும் போன்ஹோஃபர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி , வேதாகமக் கல்லூரியில் படித்த வாலிபர்களை இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடர்களாக்கி, நல்ல தலைவர்களாக்கப் பெரும் பாடுபட்டார்.

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அவருக்கு வயது 29தான். அவரும் வாலிபன்தான். அவர் மிக ஆபத்தான. கடினமான வேலை செய்துகொண்டிருந்தார். ஒன்று வேதாகமக் கல்லூரி நடத்துவது சட்டவிரோதம். இரண்டாவது, வேதாகமக் கல்லூரி நடத்துவதற்குத் தேவையான வளங்களும் அவர்களிடம் இல்லை. எனவே, ஒளிந்து மறைந்துதான் வாழ்ந்தார்கள். அந்தக் கல்லூரி இருந்த ஊரார் ஹிட்லரை விரும்பவில்லை. எனவே, அவர்கள் போன்ஹோஃபருக்கும், அங்கிருந்த பிற மாணவர்களுக்கும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் உணவுக்கு அவர்கள் கஷ்டப்பட்டார்கள். ஒரு நாள் ஒரு விவசாயி ஒரு பன்றியைக்கொண்டுவந்து கதவில் கட்டிவிட்டுச் சென்று விட்டார். அதில் போன்ஹோஃபருக்கும், பிற மாணவர்களுக்கும் ஒரு துண்டுச் சீட்டு எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டார்.

23 மாணவர்களோடு அவர் அந்த வேதாகமக் கல்லூரியைத் தொடங்கினார். மத்தேயு 5, 6, 7 ஆகிய அதிகாரங்களில் உள்ள, நாம் சொல்லுகிற, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்கம் போன்ஹோஃபர்மேல் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரு கிறிஸ்தவனின் தனிப்பட்ட வாழ்க்கையும், கூட்டு வாழ்க்கையும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த அதிகாரங்கள் திறவுகோல் போன்றவை என்று அவர் உறுதியாக நம்பினார். இந்தக் காலத்தில் அவர் கற்றுக்கொண்டவைகளின் விளைவாக அவர் இரண்டு புத்தகங்கள் எழுதினார். 1. The cost of discipleship. இது ஒரு கிறிஸ்தவனின் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றியது. 2. Life Together. இது ஒரு கிறிஸ்தவனின் கூட்டு வாழ்க்கையைப்பற்றியது.

கிறிஸ்து ஒருவனை அழைக்கும்போது, "வா, வந்து மடி," என்பதற்காகவே அழைக்கிறார் என்று அவர் கருதினார். நாம் உண்மையாகவே கர்த்தருக்காக வாழ்பவர்கள் என்றால், எல்லா அம்சங்களிலும் நாமும் நமக்குரிய எல்லாம் அவருக்காகவே இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். நம் கல்வி, வேலை, தொழில், பணம், ஆசைகள், இலட்சியங்கள், எல்லாம் அவருக்காகவே இருக்க வேண்டும். அவைகளை அவருக்குக் கொடுக்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். இப்படித்தான் அவர் பின்கென்வால்டே மாணவர்களுக்குக் கற்பித்தார்.

அவர் அந்த மாணவர்களுக்கு, வழக்கமான முறையில், விரிவுரைகல்கள்மூலமாகவும், பிரசாங்கங்கள்மூலமாகவும் கற்பித்தார். ஆனால், அடிக்கடி கலகப்பான கலந்துரையாடல் நடந்தது. அவர் அவர்களுக்குக் கடுமையான தனிப்பட்ட ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்தார். இது மிக முக்கியம் என்று அவர் உணர்ந்தார். கிறிஸ்தவர்கள் ஒரு சமூகத்தில் ஒன்றாக வாழ்வது ஒரு சிலாக்கியம் மட்டும் அல்ல, அது அவசியம் என்றும் அவர் life together என்ற புத்தகத்தில் எழுதினார். அவரைப்பொறுத்தவரை ஒன்றாகக் கூடி வாழ்வதென்றால் கிறிஸ்துவிலும், கிறிஸ்துவின்மூலமாகவும் வாழ்வதாகும். அதுதான் ஒரே வழி.

ஆனால் கிறிஸ்தவனின் தனிப்பட்ட ஒழுக்கத்தையும், அது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பகுதி என்பதையும்பற்றிய அவருடைய கருத்துக்கு பல விமர்சனங்கள் உண்டு. உண்மையில், அவருடைய முன்னாள் ஆசிரியர், கார்ல் பார்ட், டீட்ரிக்கிடம், "நீ நடத்துவது துறவிகளின் மடம் அல்ல; ஒரு வேதாகமக் கல்லூரி. நீ உருவாக்குவது துறவிகள் அல்ல, சீடர்கள்," என்று சொன்னார். ஆனால், டீட்ரிஷைப் பொறுத்தவரை, ஒரு கிறிஸ்தவன் தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், அதாவது அந்தரங்கத்திலும், வெளியரங்கத்திலும், பொறுப்பான கீழ்ப்படிதல் வேண்டும். திட்டவட்டமானக் கீழ்ப்படிதல் வேண்டும் என்று அவர் நம்பினார்.

எனவே, அந்த வேதாகமக் கல்லூரியின் பொறுப்பையும் மாணவர்களே ஏற்று நடத்தினார்கள். ஒருமுறை ஒரு மாணவன் காலையில் சற்றுத் தாமதமாக எழுந்தான். எழுந்தவுடன், நேரே காலை ஜெபத்துக்கு ஓடினான். படுக்கையைச் சரி செய்யாமல், அப்படியே போட்டுவிட்டு ஓடினான். ஜெபத்தில் பாதியில் எழுந்து தன் அறைக்கு வந்தபோது, அங்கு போன்ஹோஃபர் அவனுடைய படுக்கையைச் சரிசெய்துகொண்டிருந்தார். போர்வையை மடித்துவைத்துக்கொண்டிருந்தார். அது நிச்சயமாகச் சங்கடமாக இருந்திருக்கும். ஆம், ஒவ்வொருவரும் தத்தம் வாழ்கைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் அவர்களுக்குக் கற்பித்தார்.

போன்ஹோஃபர் நற்செய்தியின் உண்மையான ஆழத்தை அந்த வாலிபர்களுக்குள் விதைத்தார். அப்போதுதான் அவர்கள் வெளியே சென்று இயேசுவின் உண்மையான சீடர்களை உருவாக்க முடியும் என்று உறுதியாக நம்பினார். அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த அந்த நேரத்தில் இது அவசியம் என்றும், அவசரம் என்றும் அவர் நினைத்தார். அது ஜெர்மனியில் சபைகள் தேவனுடைய நற்செய்தியின் சாரத்தைச் சமரசம் செய்த காலம். ஜெர்மன் சபை போதித்ததுதான் நற்செய்தி என்று மக்கள் நம்பத் தொடங்கினார்கள். அது உண்மை இல்லை, அது பொய் என்று அவர் மக்களுக்குச் சொல்ல விரும்பினார். எனவே, இந்த மாணவர்கள் வெளியே சென்று உண்மையான நற்செய்தியை அறிவித்து, உண்மையான சீடர்களை உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

அந்த மாணவர்களில் ஒருவர் அவருடைய மிக நெருங்கிய நண்பராகவும், அவருடைய நம்பிக்கைக்கு உரியவராகவும் மாறினார். அவருடைய பெயர் எபர்ஹார்ட் பெத்கே. இவர்தான் போன்ஹோஃபர் எழுதியவைகளையும், கடிதங்களையும் பிற்காலத்தில் புத்தகங்களாக அச்சிட்டார்.

இரண்டு ஆண்டுகளில், கெஸ்டபோ சட்டவிரோதமான எல்லா வேதாகமக் கல்லூரிகளையும் கண்டுபிடித்தது. அவை அனைத்தும் மூடப்பட்டன.ஆனால், அந்த இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய 100 மாணவர்கள் அந்த வேதாகமக் கல்லூரியில் பயின்று வெளியேறினார்கள். தங்களில் எத்தனைபேர் உண்மையாகவே பாஸ்டர்களாவோம் என்று அவர்களுக்குத் தெரியாது. அவருடைய சிறு மந்தையின் பாதிப்பேர் இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்டார்கள் அல்லது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு முகாம்களில் கொல்லப்பட்டார்கள். மீதிப்பேர் போர்க்களத்தில் முன்வரிசசையில் ஊழியம்செய்தார்கள்.

1938, நவம்பர் மாதம் ஒருநாள் ஒரு நள்ளிரவில் ஹிட்லர் ஒரு கட்டளை பிறப்பித்தார். நாடு முழுவதும் சென்று யூதர்களைக் கொல்லுமாறும், யூதர்களின் உடமைகளைக் குறிவைத்துத் தாக்கி அழிக்குமாறும் நாசிப் படைகளுக்கு அவர் கட்டளை பிறப்பித்தார், அதிகாரம் கொடுத்தார்.பழிவாங்கும் படலம் தீவிரமானது. நாசிப் படைகள் நாடு முழுவதும் சென்று யூதர்களையும், அவர்களுடைய உடமைகளையும் தேடிக் கண்டுபிடித்து தாக்கினார்கள். யூதர்களைக் கொன்றார்கள். அவருடைய வீடுகளை அடித்து நொறுக்கினார்கள், வணிக வளாகங்களைத் தீக்கிரையாக்கினார்கள். ஜெப ஆலயங்களையும், வீடுகளையும் சுட்டெரித்தார்கள். கற்பனைசெய்ய முடியாத அளவுக்கு அராஜகம், அட்டூழியம் அரங்கேறியது.

அன்று இரவு நடந்த அட்டூழியம், கொடுமை டீட்ரிஷ் போன்ஹோஃபரின் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தின் ஆரம்பம். அந்த அசம்பாவிதம் அவர்மேல் விவரிக்கமுடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உள்ளத்தில் அமைதி இல்லை. சிலர் இதை பரிசுத்த கோபம் என்று அழைத்தார்கள். அன்று அவர் தன் வேதாகமத்தில் ஒரு குறிப்பிட்ட சங்கீதத்தை அடிக்கோடிட்டிருந்தார். தேவ மக்களைத் தொடுவது என்பது தேவனைத் தொடுவதாகும் என்றும், தேவனுக்கு விரோதமாகத் தன் முட்டியை உயர்த்துவதாகும் என்றும் அவர் எழுதினார். அங்கு அப்போது நடந்துகொண்டிருப்பதை அவரால் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியவில்லை. அவரால் சும்மா இருக்க முடியவில்லை. அந்த அவலம் தொடர்வதை அவர் விரும்பவில்லை. அவரால் சகிக்க முடியவில்லை.

போர் தீவிரமடைந்தது. ஜெர்மனி ஏற்கெனவே ஐரோப்பாவின் சில பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. போர் இன்னும் தீவிரமாகும் என்று எல்லாருக்கும் தெரியும். இதன் பொருள் என்னவென்றால், குறிப்பிட்ட வயதுடைய எல்லா ஆண்களும் போருக்குச் சென்றாக வேண்டும். போன்ஹோஃபருக்கு அப்போது வயது 30. தன்னையும் போர்புரிய இராணுவத்திற்கு அழைப்பார்கள் என்று அவருக்குத் தெரியும். அவருடைய பெற்றோருக்கும் தெரியும்.

போன்ஹோஃபரை இராணுவத்திற்கு அழைக்கப்போகிறார்கள் என்ற தகவல் அவருடைய பெற்றோருக்குக் கிடைத்தது. ஹிட்லருடைய போரில் போன்ஹோஃபர் பங்கேற்க விரும்பவில்லை என்று அவருடைய பெற்றோருக்குத் தெரியும். ஹிட்லரின் நடவடிக்கைகளைப்பற்றியும், அவருடைய செயல்களைப்பற்றியும் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்ததைவிட போன்ஹோஃபருக்கு அதிகமாகத் தெரியும். எனவே, அவர் போரில் போரிட மறுத்தார். அவருடைய குடும்பத்தார் உடனே செயலில் இறங்கினார்கள். அவர்கள் ஐரோப்பாவில் இருந்த தங்களுக்குத் தெரிந்த எல்லாரையும் தொடர்புகொண்டார்கள். அமெரிக்காவில் நியூயார்க்கில் ஜெர்மன் அகதிகளிடையே பணிபுரியவும், கற்பிக்கவும் அவருக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கினார்கள். மிக வேகமாக அதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். அவரை இராணுவத்திற்கு அழைப்பதற்கு ஒரு வாரத்திற்குமுன் அவர் அமெரிக்காவுக்குச் செல்வதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன. அவரை இராணுவத்திற்கு அழைத்தபோது அவர் தன்னுடைய எல்லா ஆவணங்களையும் அதிகாரிகளிடம் காட்டினார். அவர்கள் அவரை விட்டுவிட்டார்கள்.

1939 ஜூன் மாதம் அவர் நியூயார்க் சென்றடைந்தார். கப்பலிலிருந்து இறங்கினார். இறங்கியவுடனேயே தான் ஒரு பயங்கரமான தவறு செய்துவிட்டதாக அவர் நினைத்தார். தான் அப்போது இருக்க வேண்டிய இடம் நியூயார்க் இல்லை என்று உணர்ந்தார். அவருடைய உள்ளத்தில் சமாதானம் இல்லை. இந்தச் சூழ்நிலையை அவர் சிந்தித்துப்பார்த்தபோது தேவனே இதை ஏற்பாடு செய்தார் என்று எண்ணத்தோன்றியது. ஏனென்றால், அவர் அமெரிக்கா செல்வதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் மிகச் சுமூகமாக, விரைவாக, நடந்தன. அமெரிக்காவில் வேலைசெய்வதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர் இப்போது அங்கு இருக்கிறார். அது மட்டும் அல்ல. இராணுவத்தில் சேர வேண்டாம், போரில் பங்கேற்க வேண்டாம். ஹிட்லரின் யுத்தத்திற்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தம் இல்லை. இவைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தார். தேவனுடைய கரமே இதைச் செய்தது என்று எண்ணத் தோன்றும். ஆனால், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டு, அவருடைய உள்ளத்தில் அமைதி இல்லை, சமாதானம் இல்லை. நாட்கள் செல்லச்செல்ல தான் தன் நேரத்தையும், நாட்களையும் அமெரிக்காவில் வீணாக்குவதை அவர் தெளிவாக உணர்ந்தார். கடந்து போகும் ஒவ்வொரு நாளும் தான் ஒரு வாய்ப்பை இழப்பதாக அவர் உணர்ந்தார். தான் ஜெர்மனிக்குத் திரும்ப வேண்டும் என்று அவருக்குத் தெரியும். திரும்ப முடிவுசெய்தார்.

அவருடைய நலனில் அக்கறைகொண்ட அவருடைய நலன்விரும்பிகள் அவருடைய முடிவை அறிந்து அதிர்ச்சியடைந்தார்கள். ஆண்டவராகிய இயேசு தம் மரணத்தைப்பற்றிச் சொன்னவுடன் பேதுரு சொன்னதுபோல, "நீ இப்போதுதான் இராணுவத்தில் சேராமல் தப்பித்துவந்திருக்கிறாய். அடுத்த கப்பலில் ஏறி ஜெர்மனிக்குத் திரும்பிவிடமாட்டாய் என்று நினைக்கிறோம்," என்று சொன்னார்கள். ஆனால், உண்மையாகவே அவர் அடுத்த கப்பலில் ஏறி ஜெர்மனிக்குத் திரும்ப விரும்பினார். தன் சகோதர சகோதரிகள் பாடுகளும், சித்திரவதைகளும் அனுபவித்துக்கொண்டிருக்கும்போது அவர்களோடு சேர்ந்து பாடு அனுபவிக்கவில்லையென்றால், போர் முடிந்தபிறகு, பாடுகளும், சித்திரவதைகளும் முடிந்தபிறகு நிலைமை சரியானபிறகு, அவர்களைக் கட்டியெழுப்ப, அவர்களுக்கு ஊழியம்செய்ய, தனக்கு எந்த உரிமையும் இல்லை என்று அவர் உணர்ந்தார். எனவே, அந்த நேரத்தில் அவர் அவர்களோடு ஜெர்மனியில் இருக்க விரும்பினார். அமெரிக்காவுக்கு வந்த 26 நாட்களில் அவர் ஜெர்மனிக்குத் திரும்பினார். அப்போதுதான் இரண்டாம் உலகப்போர் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜெர்மனியில் அப்போது நடந்துகொண்டிருந்த கொடுமைகளைப்பற்றி ஹான்ஸ் வோனுக்கு ஏற்கெனவே தெரியும். ஹான்ஸ் வோன் டீட்ரிஷ் போன்ஹோஃபரின் மைத்துனர். அவர் உயர் நீதிமன்றத்தில் வேலை பார்த்தார். நாசி அரசாங்கத்தின் பல இரகசியங்கள் அவருக்குத் தெரியும். போலந்தில் யூதர்களுக்கு எதிராக நடந்துகொண்டிருந்த கொடுமைகள் அவருக்குத் தெரியும். அங்கு ஓர் இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று அவர் உணர்ந்தார். அது வெறுமனே ஓர் இனப்படுகொலை இல்லை, இனஅழிப்பு. அது மட்டும் அல்ல. ஹிட்லர் செயல்படுத்தவிருந்த கருணைக்கொலை திட்டத்தைப்பற்றியும் அவர் கேள்விப்பட்டிருந்தார். இது என்ன திட்டம்? ஊனத்தோடு அல்லது குறைபாடுகளோடு பிறக்கும் குழந்தைகளைச் செவிலியர்கள் கொன்றுவிட வேண்டும் என்பதே அந்தத் திட்டம். எகிப்தின் பார்வோன் மன்னன் எபிரேய ஆண்பிள்ளைகளைக் கொல்லுமாறு செவிலியர்களுக்குக் கொடுத்த கட்டளை நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. ஹிட்லரின் இந்தத் திட்டத்தின்படி, ஒரு சில ஆண்டுகளில், 5000 குழந்தைகள் கொல்லப்பட்டார்கள்.

ஹான்ஸ் வோன் இதைப்பற்றிய ஓர் இரகசியக் கோப்பு தயாரித்தார். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் போர் முடிந்தபிறகு, நீதியின்முன் நிறுத்தி அவர்களுக்குத் தண்டனைபெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். எனவே, தான் இப்போது செய்கிற செயலில் பல ஆபத்துக்கள் உள்ளன என்று தெரிந்தும், அவர் அதற்குத் தேவையான சாட்சிகளையும், சான்றுகளையும், ஆதாரங்களையும் சேகரிக்கத் தொடங்கினார். இதை அவர் அவமானத்தின் நாளாகாமம் "The Chronicle of Shame" என்றழைத்தார். பிற்காலத்தில் இவை Zossen கோப்புகள் என்றழைக்கப்பட்டன.

தான் ஒரு சர்ச்சைக்குரிய நபராகிவிட்டதையும், தனக்குச் சதித்திட்டங்களில் பங்கிருப்பதாகப் பிறர் நினைக்கிறர்கள் என்பதும் டீட்ரிஷுக்குத் தெரியும். அவருடைய மைத்துனர் உயர் நீதிமன்றத்தில் வேலை செய்தார். அவர்மூலமாக ஹிட்லரின் சதியாலோசனைகளெல்லாம் அவருக்குத் தெரியவந்தன. இது ஒரு புறம். இன்னொரு புறம், ஹிட்லருக்கு மிக நெருக்கமான அந்தரங்க வட்டத்தில் அவருக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தவர்களையும், அவருடைய குடும்பத்தாதாரையும் போன்ஹோபர் ஆதரித்தார். ஹிட்லருக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் எதிர்ப்பாளர்கள் என்றழைக்கப்பட்டார்கள். போன்ஹோபர் அவர்களை ஆதரித்தார். அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று அவருக்குத் தெரியும்.

இந்தக் கட்டத்தில் டீட்ரிஷ் போன்ஹோஃபரின் வாழ்க்கையில் பல முரண்பாடுகள் இருப்பதாகப் பலர் கருதுகிறார்கள். தேவனுடைய வழியில் வாழ வேண்டும் என்பதில் இவ்வளவு தெளிவாக இருக்கும் ஒரு மனிதனால், இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடனாக இருக்க விரும்பும் ஒரு மனிதனால் ஹிட்லரைக் கொல்லவும், நாசிக் கட்சியை வீழ்த்தவும், அதன்மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் தீட்டப்படும் திட்டங்களுக்கும், சதிகளுக்கும் எப்படி ஆதரவளிக்க முடியும்? அது எப்படித் தெய்வீகமான காரியம் என்று சொல்ல முடியும்? இது பலர் எழுப்பும் கேள்வி. போன்ஹோஃபர் உண்மையில், உண்மையில் இந்தக் காரியத்தில் மிகவும் போராடினார். அவர் இதைப்பற்றி யோசித்தார். ஏனென்றால், முடிவெடுப்பது அவருக்கு எளிதானதாக இல்லை. "ஒரு பைத்தியக்கார ஓட்டுநர் தன் காரை கண்மூடித்தனமாக அப்பாவி மக்கள்மேல் ஏற்றிக் கொல்லுகிறான். ஒரு பைத்தியக்காரன் தன் வண்டியை அப்பாவிகள்மேல் வேகமாக ஓட்டிச்சென்று அவர்களைச் சாகடிக்கிறான். அப்பாவிகள்! நான் அந்தப் பைத்தியக்கார ஓட்டுநரின் அருகில் உட்கார்ந்திருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? நான் ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில் 'நடப்பது நடக்கட்டும்' என்று பேரழிவை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. 'சாகிறவர்கள் சாகட்டும். அவர்கள் செத்தபிறகு அவர்களை நான் அடக்கம்பண்ணுவேன்' என்றும், 'காயப்படுகிறவர்கள் காயப்படட்டும், நான் பின்னர் காயம்கட்டுவேன்' என்றும் சும்மா இருக்க முடியாது. நான் அந்தப் பைத்தியக்கார ஓட்டுனரின் கைகளிலிருந்து ஸ்டீயரிங்கைப் பிடுக்கப் போராட வேண்டும்,” என்று அவர் எழுதினார். தான் ஒரு பெரிய சிக்கலில் இருப்பதை போன்ஹோஃபர் அறிந்திருந்தார்.சும்மா இருப்பதா? செயலில் இறங்குவதா? தர்மசங்கடமான நிலைமை! அவர் அந்த ஓட்டுனருக்கு மிக அருகில் இருந்த ஒரு பயணி. தேவனுக்கும், தேவ மக்களுக்கும், யூதர்களுக்கும், விசுவாசிகளுக்கும், தன் நாட்டுக்கும் தான் கடமைப்பட்டவன் என்றும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய ஒரு குறிப்பிட்ட கடமை தனக்கு உண்டு என்றும் அவர் உணர்ந்தார். அந்த நேரத்தில் எல்லோரையும் விட அவர் அதிகமாக அறிந்திருந்தார். அதாவது, ஹிட்லர் என்ன செய்கிறார் என்பதைப்பற்றி சராசரி மனிதனைவிட அவருக்கு அதிகம் தெரியும். சித்திரவதை முகாம்களைப்பற்றியும், எரிவாயு அறைகளைப்பற்றியும் அவருக்குத் தெரியும். உடல் ஊனத்தோடும், குறைபாடுகளோடும் பிறக்கும் குழந்தைகளுக்கு நேர்ந்த கதி அவருக்குத் தெரியும். ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தபோது அவருடைய மனச்சாட்சியில் அமைதல் இல்லை. "தீமையைக் கண்டும் காணாததுபோல் மௌனமாக இருப்பது தீமையே. செயல்படாமல் சும்மா இருப்பதும் ஒரு செயலே. பேசாமல் அமைதியாக இருப்பதும் பேசுதலே." இதை அவர்தான் சொன்னாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவர்தான் சொன்னதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

காரியங்கள் மிக வேகமாக மாறிக்கொண்டிருந்தன. ஒருமுறை அவர் ஒரு சபையில் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தாரை அடித்து விரட்டினார்கள். ஆலயம் இடிக்கப்பட்டது. எந்த நிபந்தையுமின்றி ஹிட்லருக்கு விசுவாசமாயிருப்பேன் என்ற விசுவாசப்பிரமாணத்தில் கையெழுத்திட நீமோல்லா மறுத்துவிட்டார். ஆகையால், அவருடைய தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருடைய வீடு சோதனைசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, அவர் சித்திரவதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். டீட்ரிஷ் போன்ஹோஃபர் பயணம் செய்வதற்கும், பிரசங்கிப்பதற்கும், பேசுவதற்கும், எழுதுவதற்கும் தடைசெய்யப்பட்டார். விரைவில் இராணுவ சேவைக்கு வருமாறு தன்னை அழைப்பார்கள் என்றும், அதைத் தவிர்க்கமுடியாது என்றும் போன்ஹோஃபருக்குத் தெரியும். அப்போது அவருடைய மைத்துனர் ஹான்ஸ் வோன் ஓர் ஆலோசனை கொடுத்தார். அது ஒரு நல்ல தீர்வுபோல இருந்தது. ஹான்ஸ் வோன் ஏற்கனவே அப்வேர் (Abwehr)என்ற ஜெர்மன் இராணுவ உளவுத்துறையில் இருந்தார். இராணுவம் வேறு. இராணுவத்தின் உளவுத்துறை வேறு. ஜெர்மனியில் அப்போது GESTAVO தான் இனஅழிப்பில் ஈடுபட்டிருந்தது. உளவுத்துறை Gestapoவோடு நேரடியாக உறவுவைத்துக்கொள்ளவில்லை. இரண்டும் வெவ்வேறு தளங்களில் செயல்பட்டன. எனவே, போன்ஹோஃபர் உளவுத் துறையில் சேர்ந்தால், நேரடியான இனஅழிப்பில் பங்குபெறுவதையும், இராணுவத்தில் போர்புரிவதையும் தவிர்க்கலாம் என்று அவர் ஆலோசனை கூறினார். Gestapo வும், உளவுத்துறையும் தனித்தனியாக இயங்கின. எனவே இரண்டுக்கும் நேரடித் தொடர்பு இல்லை.

இதன் பொருள் என்னவென்றால், போன்ஹோஃபர் ஒரு சாதாரணக் குடிமகனாக இருக்கலாம். அதே நேரத்தில் Abwehr உளவுத் துறையில் ஒரு சிவிலியன் உளவாளியாகவும் வேலைசெய்யலாம். அவர் ஓர் இரட்டை முகவராகச் செயல்பட வேண்டும். Double Agent. எனவே, இப்போது அவருக்கு இரண்டு முகங்கள். வெளியே எல்லாருக்கும் தெரிந்த ஒரு முகம், மறைவாக இன்னொரு முகம். வெளியே அவர் ஒரு பாஸ்டர், ஒரு போதகர். அதுதான் அவருடைய உண்மையான முகம். அப்வேர் உளவுத்துறையில் பாணியாற்றுகிய போர்வையில் அவர் ஐரோப்பா முழுவதும் சுதந்தரமாகப் பயணம் செய்யலாம். அலுவலகரீதியாக அவர் ஒரு உளவாளி. ஜெர்மனிக்கு எதிரான நேசப் படைகளைப்பற்றிய தகவல்களைச் சேகரித்து, அதை ஜெர்மனிக்கு இராணுவ உளவுத்துறைக்கு அனுப்ப வேண்டும். இது அவருடைய அலுவல்.

அவர் ஐரோப்பாவுக்குச் சென்றார். நேச நாடுகளின் படைகளைப்பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக அல்ல. மாறாக, ஹிட்லரையும், அவருடைய நாசத்திட்டங்களையும்பற்றிச் சொல்வதாகவும், ஹிட்லரைக் கொல்லும் திட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காகவும், அதற்குத் தேவையான தகவல்களைக் கொடுப்பதற்காகவும், ஹிட்லர் இறந்தபிறகு புதிய அரசு அமைக்க ஆதரவு தருமாறும் அவர் கேட்டார். இதைத்தான் அவர் உண்மையாகச் செய்தார். எனவே, உளவாளி என்ற போர்வையில், அவர் சுதந்தரமாகப் பயணம் செய்தார், மக்களைச் சந்தித்தார், நாடு முழுவதும் சிதறியிருந்த அவருடைய பல மாணவர்களைச் சந்தித்தார், அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். இதைப்பற்றி அவர் தன் குடும்பத்தாருடனும், தன் நல்ல நண்பரான Eberhard Bethgeவுடனும் பேசினார், இது ஒரு நல்ல வழி என்று அவர்கள் உணர்ந்தார்கள். ஆகையால், அவர் இந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தார். அவர் இப்போது ஓர் இரட்டை முகவர். இது மிகவும் சிக்கலான ஒரு வேலை.

போன்ஹோஃபருக்கு இது மிகவும் தனிமையாக இருந்தது. தான் அப்வேஹ்ரில் தனிமரமாக நிற்பதுபோல் அவர் உணர்ந்தார். அவர் உளவுத்துறையில் சேர்ந்துவிட்டதை அறிந்த அவருக்குக் கொஞ்சம் நெருக்கமானவர்கள் அவர் தன் கொள்கைகளைச் சமரசம்செய்துகொண்டார் என்றும், கட்சி மாறிவிட்டார் என்றும், ஹிட்லர் பக்கம் சாய்ந்துவிட்டார் என்றும் நினைத்தார்கள். அவர் தன் விசுவாசத்தைக் கைவிட்டுவிட்டாரோ என்றுகூட அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர் இராணுவ சேவைக்குச் செல்லாததால், அவர் நாட்டுப்பற்றுடையவர் இல்லை என்றும், அவர் தன் தாய்நாட்டை ஆதரிக்கவில்லை என்றும் வேறு பலர் சொன்னார்கள். இவ்வாறு, எல்லாத் தரப்பிலிருந்தும் விமரிசனங்கள் வந்தன. அவரை அறிந்தவர்களும் விமரிசித்தார்கள், அறியாதவர்களும் விமரிசித்தார்கள். அவருடைய ஆசிரியரான கார்ல் பார்ட்கூட தன் முன்னாள் மாணவனை நினைத்து அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தார். ஆனால், போன்ஹோஃபரைப்பற்றி அவரால் எதையும் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை.

இரண்டாம் உலகப் போர் காட்டுத் தீபோல் மிக வேகமாகப் பரவியது. ஹிட்லருக்கு நெருக்கமான ஜெனரல்கள்உட்பட பலர் ஹிட்லரின் அகந்தையையும், ஆணவத்தையும், தன்னம்பிக்கையையும் கண்டார்கள். அவருக்கு மிக நெருக்கமான பலர் ஹிட்லர் பைத்தியம் பிடித்தவர் என்று உணர்ந்தார்கள். சாதாரணமானவர்களால் நினைத்துப்பார்க்க முடியாத காரியங்களைச் செய்யவும், சாதிக்கவும் ஹிட்லர் விரும்பினார். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அவர்கள் போரின் வேகத்தையும், ஜெர்மனியின் ஆரம்ப வெற்றிகளையும் பார்த்துத் திகைத்தார்கள். எனினும், இறுதியில் ஹிட்லரால் ஜெர்மனி அழியும் என்று அன்றே பல ஜெனெரல்கள் அறிந்திருந்தார்கள்.

ஹிட்லரைக் கொல்வதற்கான முதல் சதித்திட்டம் 1943இல் தீட்டப்பட்டது. இது ஆபரேஷன் ஃபிளாஷ் என்று அறியப்பட்டது. போன்ஹோஃபருக்கு இதில் நேரடியாகத் தொடர்பில்லை. எனினும், அதற்குத் தேவையான தகவல்களைப் பரிமாறிக்கொண்டதில் அவருக்குத் தொடர்பு உண்டு. அந்த நேரத்தில் Gestapoவுக்கு abwehr வைக்குறித்து கொஞ்சம் சந்தேகம் எழுந்தது. எனினும், தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக Gestapo நினைத்தது. ஹிட்லர் ஏதோவொரு நகரத்திற்கு விமானத்தில் பயணிக்கவிருந்தார். ஒரு ஜெனரல் இரட்டை முகவராக வேலைசெய்தார். நாசிப் படைக்காகவும் வேலைசெய்தார்; ஹிட்லருக்கு எதிரானவர்களுக்காகவும் வேலைசெய்தார். அந்த ஜெனரல் அந்த விமானத்தில் ஹிட்லருடன் பயணம்செய்த இன்னொரு ஜெனரலுக்கு விலையுயர்ந்த ஒரு பிராந்தி பாட்டில் அன்பளிப்பாகக் கொடுத்தார். ஜெனரல்கள் இப்படிப் பிராந்தி பாட்டில்களை பரிசாக வழங்குவது வழக்கம். அந்த பிராந்தி பாட்டிலின் உறை மிகவும் அழகாக இருந்தது. அந்தப் புட்டியில் வெடிகுண்டு இருந்தது. அவருக்கு இது தெரியாது. அவர் இந்தப் பிராந்தி பாட்டிலை வாங்கி விமானத்தில் சரக்குகள் வைக்கும் இடத்தில் வைத்தார். ஹிட்லரும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களும் விமானத்தில் ஏறினார்கள். விமானம் பறக்க ஆரம்பித்தது. பிராந்தி புட்டியில் இருந்த வெடிகுண்டு 30 நிமிடத்தில் வெடிக்குமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. எனவே, விமானம் வெடிக்கும்போது அது எந்த இடத்தில் பறந்துகொண்டிருக்கும் என்றும், விமானம் வெடித்துச் சிதறியதும் என்ன செய்யவேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் ஏற்கெனவே கணக்கிட்டிருந்தார்கள், திட்டமிட்டிருந்தார்கள். எதிர்ப்பாளர்களெல்லாம் உடனடியாக ஒன்றுகூட வேண்டும் என்றும், ஓர் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் ஏற்கெனவே முடிவுசெய்திருந்தார்கள். ஆனால், விமானத்திலிருந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை. விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. அவர்களுக்கு இப்போது ஒரு புதிய பிரச்சினை வந்தது. வெடிகுண்டு இருந்த பிராந்தி பாட்டிலை யாருக்கும் தெரியாமல் அகற்றியாக வேண்டும். இல்லையென்றால், யாராவது அதைக் கண்டுபிடித்தால், சதித்திட்டம் அம்பலமாகிடவிடும்; எதிர்ப்பாளர்களை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். யாருக்கும் தெரியாமல், யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராமல், அதை விமானத்திலிருந்து எடுக்க ஓர் இரட்டை முகவர் உதவினார். அவர்மூலமாக அதை அகற்றினார்கள். ஒரு வாரம் கழித்து ஹிட்லரைக் கொல்ல இன்னொரு முயற்சி நடந்தது. அதுவும் தோற்றது.

டீட்ரிஷ் Abwehrஇல் இருந்ததால், ஹிட்லரையும், அவருடைய அசைவுகளையும்பற்றிய தகவல்கள் அவருக்குத் தெரியும். இந்தத் தகவல்களை அவர் பன்னாட்டுப் படைகளிடம் பகிர்ந்துகொண்டார். இது ஒரு புறம். இன்னொரு புறம் யூதர்களும், யூதவம்சத்தினரும் நாட்டைவிட்டுப் பத்திரமாக வெளியேறவும் அவர் உதவத் தொடங்கினார். உண்மையில், அவர் ஏற்கெனவே, இதைச் செய்துகொண்டிருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், யூதர்களைத் திருமணம்செய்திருந்த தன் சகோதரி சபீனையும், ஜெர்ஹார்டையும் டீட்ரிஷே காரில் ஏற்றிக்கொண்டு, எல்லையைக் கடந்துபோய் விட்டுவிட்டு வந்தார். அவர்கள் இருவரும் அப்போது லண்டனில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது காரியங்களெல்லாம் மிகவும் கடினமாகிவிட்டது. யூதர்களைப் பாதுகாப்பதே கடினமாக இருக்கும்போது, அவர்களை நாட்டைவிட்டு வெளியே கூட்டிக்கொண்டுபோவது என்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒரு காரியம். Gestapo Abwehrஇன் நடவடிக்கைகளைச் சந்தேகிக்க ஆரம்பித்தது. அங்கு இருந்தவர்களைச் சந்தேகிக்க ஆரம்பித்தது. அவர்களுடைய வேலையைக் கண்காணிக்கத் தொடங்கினார்கள். வெளிநாட்டுப் பண பரிமாற்றத்தில் முறைகேடுகள் இருப்பதை கெஸ்டபோ கண்டுபிடித்தார்கள். இந்தப் பண பரிமாற்றத்திற்கும் யூதர்களை ஐரோப்பாவின் வேறு பகுதிகளில் குடியமர்த்துவதற்கும் தொடர்பு இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். இதற்கு மூலகாரணமாக ஒருவரைக் கைதுசெய்தார்கள், அவர் போன்ஹோஃபரின் நல்ல நண்பர். "இனி எல்லாம் தெரிந்துவிடும். முந்தியோ பிந்தியோ இனி எல்லாம் வெளியரங்கமாகிவிடும். கெஸ்டபோவின் விசாரணையை, சிறைச்சாலையை, சித்திரவதையை தாக்குப்பிடிக்க முடியாது; எதிர்பாளர்களைப்பற்றிய எல்லா விவரங்களையும் அவர்கள் தெரிந்துகொள்வார்கள்," என்று எதிர்பாளர்களுக்குத் தெரியும்.

1943, ஏப்ரல் ஐந்தாம் தேதி போன்ஹோஃபர் வான்ஸ் ஹான் டொஹனனில்லுக்கு போன் பண்ணினார். அடுத்த முனையில் அறிமுகமில்லாத ஒரு குரல் பதில் அளித்தது. அவருக்குப் புரிந்துவிட்டது. உடனே அவர் அழைப்பைத் துண்டித்துவிட்டார். கைதுநடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன என்பதை அவர் புரிந்துகொண்டார். மிக நிதானத்தோடு நடக்க ஆரம்பித்தார். அவர் தன் சகோதரியின் வீட்டுக்குச் சென்றார். அவருடைய சகோதரி தடபுடலாக ஒரு பெரிய விருந்தை ஆயத்தம்பண்ணினார். அந்த விருந்தை அவர் விரும்பிச் சாப்பிட்டார். வீட்டுக்குத் திரும்பினார். தன்னிடமிருந்த கோப்புக்களையும், ஆவணங்களையும் ஒழுங்குபடுத்தத் தொடங்கினார். கெஸ்டபோ ஆட்கள் தன் வீட்டுக்கு வருவார்கள், தன் வீட்டையும், அறையையும் சோதனைசெய்வார்கள் என்று அவருக்குத் தெரியும். சில ஆவணங்களை அழித்தார்; சில ஆவணங்களைத் தன்னோடு வைத்துக்கொண்டார். கெஸ்டபோவுக்குச் சில ஆவணங்களை எழுதினார். காத்திருந்தார். கருப்பு நிற மெர்சிடிஸ் கார் வந்தது; போன்ஹோஃபரைக் கூட்டிச்சென்றது. இப்போது அந்த விவரங்களுக்குள் செல்ல நேரம் இல்லை.

இந்த நேரத்தில் போன்ஹோஃபருக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது. அவர் மரியா என்ற ஓர் அற்புதமான பெண்ணைச் சந்தித்தார். அவர் ஒரு சிறந்த கணிதவியலாளர். இருவரும் முதன்முதலாகச் சந்தித்தபோதே ஒருவரையொருவர் விரும்ப ஆரம்பித்தார்கள்.மரியாவின் அம்மாவுக்கு இந்தத் திருமணத்தில் கொஞ்சங்கூட விருப்பம் இல்லை. ஓர் இரட்டை முகவரை, கெஸ்டபோ சந்தேகக் கண்ணோடு பார்க்கும் ஒருவரை, தன் மகள் திருமணம் செய்ய விரும்புகிறாள் என்பதை அவரால் ஏற்கமுடியவில்லை. இது பாதுகாப்பானதில்லை என்று அவர் உணர்ந்தார். ஆனால், எப்படியோ சில நாட்கள் கழித்து, இது நல்லதுதான் என்று அவர் உணர்ந்தார். எனவே, அவர் ஒப்புக்கொண்டார். நிச்சயதார்த்தத்தை அவர் ஆசீர்வதித்தார். தன் அம்மா இந்த நிச்சயதார்த்தத்தை ஒப்புக்கொள்வதற்குமுன் மரியா என்ன சொன்னார் தெரியுமா? "அம்மா, நான் உங்களை சமாதானப்படுத்தவோ, சம்மதிக்கவைக்கவோ முயற்சிக்கப்போவதில்லை. உங்கள் ஆசீர்வாதத்தை மட்டுமே நான் விரும்புகிறேன்," என்று சொன்னார்.

மரியாவின் அம்மா அதைத்தான் செய்தார். நிச்சயதார்த்தமாகி மூன்று மாதங்களுக்குப்பிறகு, டீட்ரிஷ் போன்ஹோஃபர் கைது செய்யப்பட்டார். மரியா தனியாக நின்றார். போன்ஹோஃபர் எங்கு இருக்கிறார் என்று மரியாவுக்குத் தெரியாது. உண்மையில் யாருக்கும் தெரியாது. அவரும், போன்ஹோஃபர் குடும்பத்தாரும் அரசாங்கத்தில் இருந்த தங்களுக்குத் தெரிந்த ஆட்கள்மூலம் போன்ஹோஃபர் இருந்த சிறையைக் கண்டுபிடித்தார்கள். அந்த நேரத்தில் சிறையில் இருந்த போன்ஹோஃபருக்கு மரியா பெரிய ஆதரவாகவும், ஆறுதலாகவும் மாறினார். இருவரும் கடிதங்களைப் பரிமாறினார்கள். சிறைச்சாலைக்குச் சென்று அவரைச் சந்தித்தார். மரியா போன்ஹோஃபரின் பெற்றோருடன் தங்கினார். அவர் போன்ஹோஃபருக்காகவும் வேலை செய்தார்; அவருடைய பெற்றோருக்கும் பெரிய ஆதரவாகவும், ஆறுதலாகவும் இருந்தார்.

போன்ஹோஃபர் இருந்த சிறை கெஸ்டபோ விசாரணைசெய்த சிறைகளைப்போல் அவ்வளவு மோசமாக இல்லை. ஆனாலும், கொடுமையாகத்தான் இருந்தது. அவரிடம் ஒன்றோவொன்றுதான் இருந்தது. வேதாகமம். அவர் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த கண்டிப்பான ஒழுங்கையும், ஒழுக்கத்தையும் சிறையிலிலும் கடைப்பிடித்தார். ஒவ்வொரு நாளும் காலையில் வேதம் வாசிப்பதற்கும், தியானிப்பதற்கும், ஜெபிப்பதற்கும் அவர் தவறாமல் நேரம் செலவழித்தார். இதை அவர் மிகக் கண்டிப்பான பழக்கமாகக் கொண்டிருந்தார். சிறையில் கைதியாக இருக்கும் போன்ஹோஃபர் ஒரு பெரிய ஆள், பெரிய புள்ளி, என்று சிறைக்காவலர்கள் விரைவில் தெரிந்துகொண்டார்கள். எனவே, அவர்கள் அவருக்குக் கொஞ்சம் அதிகமான சலுகைகள் கொடுத்தார்கள். அதிகமான கடிதங்கள், அதிகமான சந்திப்பு. டீட்ரிஷ் இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார். அவர் தன் குடும்பத்தாருக்கு, மரியாவுக்கு, சிதறிக்கிடந்த சகோதர சகோதரிகளுக்கு நிறைய எழுதினார். எல்லாரையும் உற்சாகப்படுத்தி கடிதம் எழுதினார்.

அந்த நேரத்தில் கெஸ்டபோ தங்களுடைய சதித்திட்டத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று எதிர்ப்பாளர்களுக்குத் தெரியும். வெளி நாட்டுப் பணப் பரிமாற்றத்தில் நடந்த முறைகேடுகளுக்காகவே இந்தக் கைது நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவர்கள் யூதவம்சத்தார் நாட்டைவிட்டு வெளியேறவும், வெளியேறியவர்களுக்கு உதவினார்கள் என்பதற்காகவே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கொலைசெய்யும் சதித்திட்டத்தைப்பற்றி கெஸ்டபோவுக்கு எதுவும் அப்போது தெரியாது. எனவே, சிறையில் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த எதிர்ப்பாளர்கள், ஹிட்லர் சீக்கிரத்தில் கொல்லப்படுவார் என்றும், தாங்கள் விடுதலையாவோம் என்றும், போர் சீக்கிரம் முடிவுக்கு வரும் என்றும் நம்பினார்கள்.

அவர்கள் ஒருவரோடு ஒருவர் குறியீடுகளைப் பயன்படுத்திப் பேசினார்கள், எழுதினார்கள். போன்ஹோஃபர் குடும்பத்தார் இதைத் திறமையாகச் செய்தார்கள். அவர்கள் நண்பர்களிடமிருந்தும், உறவினர்களிடமிருந்தும் நிறையப் புத்தகங்களை இரவல் வாங்கினார்கள். புத்தகத்தின் கடைசிப்பக்கத்தில் குறியீடுகளைப் பயன்படுத்தி, சூத்திரங்கள் எழுதி அனுப்பினார்கள். ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட எழுத்தின்கீழ் ஒரு புள்ளியோ, அடிக்கோடோ இருக்கும். இன்னும் சில பக்கங்களுக்குப்பின் இன்னொரு புள்ளியோ, அடிக்கோடோ இருக்கும். வேறொரு பக்கத்தில் இன்னொரு எழுத்தின்கீழ் புள்ளி இருக்கும். இப்படி புள்ளிகள் அல்லது அடிக்கோடுகள் இருக்கும் எழுத்துக்களைச் சேர்த்தால் ஒரு வாக்கியம் வரும். முழுப் புத்தகத்திலும் இப்படி ஒன்றிரண்டு வாக்கியங்கள் மட்டுமே இருக்கும். இதன்மூலம் கெஸ்டபோவுக்கு என்ன தெரியும், என்ன தெரியாது போன்ற தகவல்களைப் பரிமாறிக்கொண்டார்கள். வேறு பல செய்திகளையும் அவர்கள் தெரிந்துகொண்டார்கள். சிறையில் என்ன கேட்டார்கள், தாங்கள் என்ன சொன்னோம் போன்ற தகவல்களையும் பரிமாறிக்கொண்டார்கள்.

சிறையிலும் போன்ஹோஃபர் ஒரு பாஸ்டர்போல கைதிகளுக்கு ஊழியம்செய்தார். சிறைக்காவலர்களை அவர் உற்சாகப்படுத்தினார். உண்மையில் சிறைச்சாலையில் அவர் பாடத்திட்டங்கள், அட்டவணைகள் வைத்து ஒரு வேதாகமக் கல்லூரியே நடத்தினார் என்று வேடிக்கையாகச் சொன்னார்கள். அங்கு கைதிகளுக்கும், காவலர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். எல்லாருக்காகவும் ஜெபித்தார். இவைகளுக்கிடையில் எழுதுவதிலும், வாசிப்பதிலும் மும்முரமாக இருந்தார்.

அவர் மரியாவுக்கு எழுதிய கடிதங்களில் நம்பிக்கையும், நேர்மறையான நோக்கும் நிரம்பிவழிந்தன. சிறையிலிருந்து விடுதலையானபின் தாங்கள் வாழப்போகிற வாழ்க்கையைப்பற்றியும், தேனிலவுக்கான திட்டத்தைப்பற்றியும் அவர்கள் பேசினார்கள்.

அவருடைய 38ஆவது பிறந்த நாளில் ஒரு புத்தகத்தில் ஒரு குறியீடு இருந்தது. அந்தக் குறியீட்டின் வாக்கியம் என்னவென்றால், கெஸ்டபோ அப்வேரின் நிர்வாகத்தைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. அதனால் அந்த இரகசிய எதிர்ப்பின் தலைவர் பதவி விலகிவிட்டார் என்ற குறியீடு வாசகம் கூறியது. அப்படியானால் ஹிட்லரைக் கொலைசெய்யும் திட்டம் புதியவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அந்த முயற்சி மிக விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று டீட்ரிஷ் நினைத்தார். அவர்கள் எந்த நேரத்திலும் விடுதலையாகலாம் என்ற நம்பிக்கை இருந்தது. புதியவர் ஒருவர் அப்வேரின் தலைவராக பொறுப்பேற்றார். அவர் ஹிட்லரையும், வேறு சில மிகமிக முக்கியமானவர்களையும் சந்திக்கவிருந்தார். அவர் வெடிகுண்டைத் தன கைப்பையில் மறைத்துவைத்துக்கொண்டு போக வேண்டும். எல்லாம் நேர்தியாகத் திட்டமிடப்பட்டது. அவர் ஹிட்லரைச் சந்திக்கச் சென்றார். காத்திருந்தார். அவரை உள்ளே அழைத்தார்கள். அவர் தன் கைப்பையோடு உள்ளே போனார். வெடிகுண்டை வெடிக்கச்செய்வதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. வெடி குண்டு இன்னும் 10 நிமிடத்தில் வெடிக்கும் என்று அவருக்குத் தெரியும். ஒரு பெரிய மேஜையைச் சுற்றி ஹிட்லரும் அவருடைய ஆட்களும் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். வெடிகுண்டு இருந்த பையை அவர் மேஜையின்கீழ் வைத்தார். குண்டு வெடிப்பதற்கு மூன்று நிமிடங்களுக்குமுன் அவர் அந்த அறையிலிருந்து சாக்குச்சொல்லிவிட்டு வெளியேறினார். கட்டிடத்திலிருந்து ஓடக்கூடாது, வேகமாக நடக்கக்கூடாது என்று அவர் ஏற்கெனவே முடிவுசெய்திருந்தார். அவர் திரும்பிப்பார்த்தார். பெரிய வெடிச்சத்தம் கேட்டது. அதுதான் இராணுவத் தலைமையகம்போல் செயல்பட்டது. ஜன்னல்கள்வழியாக நீலநிற தீப்பிழம்புகள் தெரிந்தன. அவர்கள் கூடி இருந்த அறையின் கூரை இடிந்து விழுவதை அவர் கண்டார். அழுகைக்குரலைக் கேட்டார். ஹிட்லரும், தளபதிகளும் நின்று பேசிக்கொண்டிருந்த கர்வாலி மர மேஜை சுக்குநூறாக உடைந்துகிடந்தது. கண்ணாடிகள் உடைந்தன. அங்கு இறந்த உடல்கள், காயப்பட்டவர்கள். தீ எரிந்துகொண்டிருந்தது. ஆனால், ஹிட்லருக்குக் காயம்கூட ஏற்படவில்லை. கைப்பையை யாரோவொருவர் தெரிந்தோ தெரியாமலோ இடம்மாற்றி வைத்திருக்கக்கூடும். அந்த மேஜையின் நடுவில் தூண்போல இருந்த பெரிய கர்வாலி மரம் ஹிட்லரைப் பாதுகாத்திருக்கக்கூடும். இதன்பிறகு தான் தப்பித்தது தெய்வாதீனம் என்றும், தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற விதி தன்னைப் பாதுகாத்தது என்றும் ஹிட்லர் நம்பினார்.

அந்தச் சதித்திட்டத்தில் தொடர்புடைய எல்லாரையும் வேட்டையாடப்போவதாக ஹிட்லர் சபதமேற்றிருக்கிறார் என்று அந்த இரவு வானொலியில் செய்தி ஒலிபரப்பானதை சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த எதிர்ப்பாளர்கள் கேட்டார்கள். அந்தச் செய்தியைக் கேட்ட பல எதிர்ப்பாளர்கள் தாங்களாகவே உயிரை மாய்த்துக்கொண்டார்கள். ஏனென்றால், விசாரணை என்று வந்தால், நிறையச் சொல்லவேண்டிவரும், அதனால் நிறைப்பேருக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற பயத்தில் அவர்கள் தங்கள் உயிரைப் பறித்துக்கொண்டார்கள்.

டீட்ரிஷ் போன்ஹோஃபர் இப்போது விசாரனைச் சிறைக்கு மாற்றப்பட்டார். அந்தச் சிறையைப்பற்றி நமக்கு அதிகமாகத் தெரியாது. ஆனால், அந்தச் சிறையிலிருந்த வேறு சில கைதிகளிடமிருந்து அந்தச் சிறையைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். அவர்கள் இந்தச் சிறையை நரகத்தின் வாயில் என்று வர்ணித்தார்கள். டீட்ரிஷைச் சந்தித்த சிலரும், அங்கு வேலைசெய்த சில காவலர்களும் அந்தச் சிறையைப்பற்றிச் சொன்னார்கள். அங்கிருந்த காவர்களில் பெரும்பாலோர் டீட்ரிஷின் அன்பினால் ஈர்க்கப்பட்டவர்கள். நரகம்போன்ற அந்த விசாரனைச் சிறையில் அந்தக் காவலர்கள் போன்ஹோஃபரைத் 'தூய்மையான, மேன்மையான ஆத்துமா' என்றழைத்தார்கள். அவர்கள் அவரில் அத்தகைய சாந்தத்தையும், அமைதியையும் கண்டார்கள். அவர் தன் அறையைவிட்டு வெளியே வரும்போது ஒரு பெரிய பிரபு தன் அரண்மனையைவிட்டு சாந்தத்தோடும், சமாதானத்தோடும் வருவதுபோல் இருக்கும் என்று அவர்களில் பலர் சொன்னார்கள். அவர் ஒரு பயங்கரமான, கொடூரமான சிறையில் இருந்ததுபோல் இருக்கவில்லை. அவர் எப்போதும்போல் தன் உடன் கைதிகளைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டேயிருந்தார். துண்டுத் தாள்களில் குறிப்புகளும், வசனங்களும் எழுதி கைதிகளின் அறைகளுக்கு அனுப்பிக்கொண்டேயிருந்தார்.

அப்படியிருந்தும், இந்த நேரத்தில் போன்ஹோஃபர் உண்மையில் தனக்குள் போராடினார். அவர் எழுதிய கவிதைகளை வாசிக்கும்போது இது தெரிகிறது. தனக்குள் இருந்த பயத்தைப்பற்றியும், தனிமையைப்பற்றியும் அவர் எழுதினார். நான் யார்? நான் எப்படி வாழ வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்றெல்லாம் அந்தக் கவிதைகளில் கேள்வி எழுப்புகிறார். தன்னைக்குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும், தன்னை அவர்கள் எப்படி விமரிசிக்கிறார்கள் என்றும் தனக்குத் தெரியும் என்றும் அதில் அவர் எழுதுகிறார். இப்படி ஒரு போராட்டம் நடந்தபோதும் அவருக்குள் ஓர் அமைதல் இருந்தது. எனினும் சில நேரங்களில் பய உணர்ச்சியும் இருந்ததைக் குறிப்பிடுகிறார். நான் யார் என்று அவர் ஒரு கவிதை எழுதினார். அந்தக் கவிதையில் பிறர் தன்னை எப்படிப் பார்க்கிறார்கள், அவர் தன்னை எப்படிப் பார்க்கிறார், உண்மையாகவே அவர் எப்படி உணர்கிறார் என்பதைப்பற்றியெல்லாம் அவர் எழுதுகிறார். அந்தக் கவிதையின் கடைசி வரிகள் என்ன தெரியுமா? "நான் யார்? என் அந்தரங்கமான கேள்விகளை அவர்கள் பரிகாசம்செய்கிறார்கள். நான் யாராக இருந்தாலும், தேவனே, நான் யாரென்று நீரறிவீர். நான் உம்முடையவன்," என்று அந்தக் கவிதையை முடிக்கிறார்.

அந்த நேரத்தில் பன்னாட்டுப் படைகள் பெர்லினின்மீது வான்வெளித் தாக்குதல்களை ஆரம்பித்திருந்தார்கள். கெஸ்டபோவின் சிறைச்சாலை குண்டுவீசி தகர்க்கப்பட்டது. தாக்குதல் ஆரம்பித்தவுடன் அங்கிருந்த கைதிகள் சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். போன்ஹோஃபர் வேறொரு சிறைக்கு மாற்றப்பட்டார். பசி பட்டினி, நடுங்கும் குளிர் ஆகியவைகளுக்கிடையில் கைதிகள் தாக்குப்பிடித்துக்கொண்டிருந்தார்கள். அமெரிக்கப் படையின் துப்பாக்கிச் சத்தத்தை கைதிகள் கேட்டார்கள். வெளியுலகத்தில் உண்மையாகவே என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டாலும், அவர்கள் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டார்கள். எனவே, போர் சீக்கிரத்தில் முடிந்துவிடும், அமெரிக்கர்கள் உள்ளே வருவார்கள், தங்களை விடுவிப்பார்கள், தாங்கள் சுதந்தரமாக வெளியேறுவோம் என்ற நம்பிக்கையோடு அவர்கள் காத்திருந்தார்கள்.

டீட்ரிஷ் இருந்த சிறையில் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகள், ரஷ்யர்கள்போன்ற மிகப் பெரிய புள்ளிகள் இருந்தார்கள். அவர்களில் 16பேரைத் தனியாகப் பிரித்தெடுத்தார்கள். அதில் போன்ஹோஃர் ஒருவர். அவர்களை வேறு எங்கோ கூட்டிச் சென்றார்கள். அந்த இடத்தைப்பற்றிச் சில விவரங்கள் உள்ளன. ஏனென்றால், அதில் இருந்த ஒரு பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரி போன்ஹோஃபரைச் சந்தித்ததாக எழுதியிருக்கிறார்.

அது ஈஸ்டர் பண்டிகை நாள்; ஞாயிற்றுக்கிழமை காலை. பிளாசென்பெர்க் என்ற ஓர் ஒதுக்குப்புறமான கிராமத்தில் ஒரு பழைய கட்டிடத்தில் அவர்களை அடைத்துவைத்திருந்தார்கள். போன்ஹோஃபர் ஒரு பாஸ்டர் என்று அவர்களுக்குத் தெரியும். எனவே, அன்றைக்கு பேசுமாறு அவர்கள் அவரிடம் கேட்டார்கள். 1 பேதுரு முதல் அதிகாரத்திலிருந்து அவர் பேசினார். "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது," என்ற வார்த்தைகளிலிருந்து அவர் பேசியது தங்கள் இருதயங்களைத் தொட்டதாக அந்த அதிகாரி எழுதினார். எல்லோருக்காகவும் ஜெபித்தார். கதவு திறக்கப்பட்டது. சாதாரண உடையில் இருந்த இரண்டு கெஸ்டபோ அதிகாரிகள் உள்ளே வந்தார்கள். போன்ஹோஃபரின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்கள். இதன் பொருள் என்னவென்று அங்கிருந்த மற்றவர்களுக்குத் தெரியும். போவதற்குமுன் அவர் பிரிட்டிஷ் கேப்டனைக் கூப்பிட்டு லண்டனில் இருக்கும் தன் நண்பர் பிஷப் பெல்லை விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார். அவரிடம் மேலும், "இது அடால்ப் ஹிட்லரின் நேரடி உத்தரவின்படி முடிவு, ஆனால், இது என் வாழ்க்கையின் ஆரம்பம்" என்று சொன்னார்.

மறுநாள் காலை இராணுவ நீதிமன்றத்தில் டீட்ரிஷ் போன்ஹோஃபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. தூக்குமேடைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு பணிபுரியும் மருத்துவர் கூடவே சென்றார். இதோ! ஒரு மனிதன், முழங்கால்படியிட்டு தன் தேவனை நோக்கிக் கடைசியாக ஒருமுறை ஊக்கமாகச் ஜெபிப்பதைப் பார்க்கிறார். தூக்குமேடையின் படிகளில் நிதானத்தோடு ஏறுகிறார். அந்த மருத்துவருக்கு அவர் யாரென்று தெரியாது. அவர் ஒரு கைதி. அவ்வளவுதான்.ஆனால், பின்னர், "தேவனுடைய சித்தத்துக்கு முற்றிலும் அடிபணிந்த இதுபோன்ற ஒருவனை நான் ஒருபோதும் பார்த்ததில்லை," என்று அவரைப்பற்றி அந்த மருத்துவர் எழுதினார். தூக்குக்கயிறு கழுத்தில் மாட்டப்பட்டது. அடுத்த நொடியில் போன்ஹோஃபர் தான் சேவித்த தேவனுடன் இருந்தார். அப்போது அவருக்கு வயது 39. மூன்று வாரங்களுக்குப்பிறகு, ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். அதற்குப்பின் ஒரு வாரத்திற்குள் ஐரோப்பாவில் போர் முடிந்தது.

அவருடைய மரணத்திற்கும், போர் முடிவுக்கும் இடைவெளி மூன்றே வாரங்கள். இது மிகப் பெரிய அவலம் என்று அநேகர் நினைக்கக்கூடும். போர் முடிவதற்குச் சில வாரங்களுக்குமுன் மரண தண்டனையா? அமெரிக்கர்களின் துப்பாக்கிச் சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். கடைசி நிமிடத்தில் ஏன் அவர் தூக்கிலிடப்பட்ட வேண்டும்? போன்ஹோஃபர் இதை ஓர் அவலமாகக் கருதுவாரா என்று எனக்குத் தெரியாது. எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்காக இழப்பதை அவர் ஒரு சிலாக்கியமாகக் கருதினார். அவர் உண்மையான வாழ்க்கை வாழ்ந்தார், தன் அழைப்புக்கு உண்மையாக இருந்தார். தேவன் தனக்குத் தந்த கொடைகளையும், தனக்கிருந்த செல்வாக்கையும் அவர் பயன்படுத்தினார். எதற்காக? ஒட்டுமொத்த சபைகளின் சமரசத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்காக, தேவ மக்களுக்காக, யூத மக்களுக்காக, சகவிசுவாசிகளுக்காக, அவர்களுடன் சேர்ந்து நிற்பதற்காக, அவர்களுக்கு உறுதியான அடித்தளம் போடுவதற்காக, தூய்மையான நற்செய்தியின் சத்தியத்தைப் போதித்து அவர்களை சீடர்களாக்குவதற்காக, உற்சாகப்படுத்துவதற்காகப் பயன்படுத்தினார்.

போன்ஹோஃபர் எழுதிய சில வரிகளைச் சொல்லி நான் முடிக்க விரும்புகிறேன். அவர் எழுதின வரிகள் என்பதைவிட அவர் வாழ்ந்த வரிகள் என்றே சொல்லுவேன்.

"விலையுயர்ந்த கிருபையே ஒருவன் மீண்டும் மீண்டும் தேடவேண்டிய நற்செய்தி; மீண்டும் மீண்டும் கேட்கவேண்டிய வரம்; மீண்டும் மீண்டும் தட்டவேண்டிய கதவு. அத்தகைய கிருபை விலையுயர்ந்தது, ஏனென்றால், அது தன்னைப் பின்பற்றுமாறு நம்மை அழைக்கிறது. அது கிருபை; ஏனென்றால், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும்படி அது நம்மை அழைக்கிறது. அது விலையுயர்ந்தது; ஏனென்றால், ஒருவன் இதற்காகத் தன் உயிரைக்கொடுக்க வேண்டும். அது கிருபை; ஏனென்றால், இதுதான் ஒரு மனிதனுக்கு பொருளுள்ள, உண்மையான ஒரே வாழ்க்கையை வழங்குகிறது. அது விலையுயர்ந்தது; ஏனென்றால், அது பாவத்தைக் கண்டனம்செய்கிறது. அது கிருபை; ஏனென்றால், அது பாவியை நீதிபடுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இது விலையுயர்ந்தது; ஏனென்றால், அதற்காகத் தேவன் தம் மகனின் ஜீவனைக் கொடுக்கவேண்டியிருந்தது. "நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்." தேவன் இவ்வளவு பெரிய விலை கொடுக்கவேண்டியிருந்ததென்றால் அது நமக்கு மலிவாக இருக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அது கிருபை; ஏனென்றால், நமக்காகத் தம் மகனின் ஜீவனைக் கொடுப்பதை அவர் பொருட்டாகக் கருதாமல், நமக்காக ஒப்புக்கொடுத்தார். தேவன் மனுவுருவானது விலையேறப்பெற்ற கிருபை.