மனிதர்களின் விவகாரங்களிலும், நாடுகளின் விவகாரங்களிலும் தேவன் தம் இறையாண்மையின்படி எப்படி வேலைசெய்துகொண்டிருக்கிறார் என்பதைப்பற்றியல்ல, மாறாக தம் சொந்த மக்களிலும், மக்கள்மூலமாகவும் அவர் தம் நோக்கத்தை எப்படி நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார் என்பதைப்பற்றியே நாம் பார்க்கப்போகிறோம்.
இந்த வேறுபாட்டைப் பவுலின் வாழ்க்கையிலும், ஊழியத்திலும் நாம் மிகத் தெளிவாகக் காணலாம். பவுலின் முழு வாழ்க்கைச் சித்திரத்தையும் கர்த்தர் நமக்குத் தந்திருக்கிறார்; புதிய ஏற்பாட்டிலுள்ள பாதி புத்தகங்களை எழுதுவதற்குத் தேவன் பவுலையும், அவருடைய உடன்-ஊழியக்காரர் லூக்காவையும் பயன்படுத்தியிருக்கிறார்; தம் சபைக்கான தம் நோக்கத்தைப்பற்றிய புரிதலை, மற்றவர்களைவிட, பவுலுக்கு அவர் அதிகமாகக் கொடுத்திருக்கிறார்; ஆகையால், தேவன் கட்டிக்கொண்டிருக்கும் கட்டுமான வேலையைப்பற்றிய அவருடைய திட்டங்களையும், வழிமுறைகளையும் மிகத் தெளிவாக அறிந்துகொள்வதற்கு “கைதேர்ந்த கட்டிடக் கலைஞராகிய” பவுலிடம் நாம் கேட்க வேண்டும் (1 கொரி. 3:10).
மனிதர்கள் செய்த செயல்கள் வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளதால், அவைகள் சரியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற உண்மையை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, பவுல் பர்னபா ஆகிய இருவரின் ஊழியத்தை அந்தியோகியாவிலிருந்து பரிசுத்த ஆவியானவரே ஆரம்பித்தார் என்று பார்க்கிறோம். ஆனால், அப்போலோவைப்பற்றிச் சொல்லப்பட்டிருப்பவைகளைப் பார்க்கும்போது, அவர் நல்லவராகவே இருந்தபோதும், சுயாதீனமாக ஊழியஞ்செய்ய விரும்பினாரோ என்ற ஒரு சந்தேகம் எழுகிறது. அதுபோல, தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் பார்க்கும்போது, பெந்தெகொஸ்தேவுக்குப்பின் 25 ஆண்டுகள் கழித்து, எருசலேமில் யாக்கோபின் நிலைப்பாட்டையும், எருசலேம் சபையின் நிலைப்பாட்டையும்குறித்த ஒரு கேள்வி எழுகிறது (அப். 18:24-28; 21:18-20).
உள்ளூர் சபையும், தேவனுடைய இராஜ்ஜியத்தின் பரந்த வேலையும் ஆவிக்குரிய வகையில் ஒன்றோடொன்று தொடர்புடையவை; ஆயினும், அவை இயங்கும்வகையில் முற்றிலும் வித்தியாசமானவை. இதில் எந்தக் கலப்பும் இல்லை. உள்ளூர் சபை வாழ்க்கைக்கும், முன்னேற்றத்துக்கும், பரந்த வேலை தனக்கு நியமிக்கப்பட்ட ஊழியத்தை நிறைவேற்றுவதற்கும் இந்த வேறுபாடு அவசியம். பரந்த வேலை உள்ளூர் சபைகளிலிருந்து எழும்பி, அவைகளின் வளர்ச்சிக்கும், சாட்சிக்கும் உதவ வேண்டும். சபையே தேவனுடைய நோக்கத்தின் மையம்; இன்று நடப்பதுபோல, வேலை சபைக்கு ஒருபோதும் போட்டியாக மாறக்கூடாது. எல்லா வேலையும் அவருடைய சபையைக் கட்டுவதற்காகவும், அவருடைய இராஜ்ஜியத்தை விரிவாக்குவதற்காகவுமே இருக்கின்றன.
பவுலின் ஊழியம் இந்த வேறுபாட்டையும், உறவையும் தெளிவாக்குகிறது.
பவுல் மனந்திரும்பி, 14 ஆண்டுகளுக்குப்பின், அந்தியோகியா சபையில் சில பொறுப்புக்களைச் சுமப்பதைப் பார்க்கிறோம். அதன்பின், அந்தியோகியா சபை பவுலையும், பர்னபாவையும் ஊழியத்துக்கு அனுப்புகிறது. பரந்த வேலைக்குச் சென்றபிறகும் அந்தியோகியா சபையோடு அவருக்கு நல்ல ஐக்கியம் இருந்தது; ஆனால், அவர் அதன்பிறகு அந்தியோகியாவுக்குத் திரும்பிவந்து அங்கு நிரந்தரமாகத் தங்கவில்லை. அவர் உள்ளூர் சபையின் பொறுப்பிலிருந்து விலகி, பரந்த வேலைக்குச் சென்றுவிட்டார். பவுலைப்போன்ற ஓர் ஊழியக்காரர், உள்ளூரில் நிரந்தரமாகத் தங்காதவரை, உள்ளூர் சபையில் எந்தப் பொறுப்பையும் சுமக்க முடியாது. அப்போஸ்தலர் நடபடிகளில் பார்க்கிற “ஊர் ஊராகச் சென்று நற்செய்தி அறிவிக்கும்” பிலிப்பு ஓர் ஊரில் நிரந்தரமாகத் தங்கி, அந்த ஊர் சபையில் பொறுப்புகளைச் சுமப்பதைப் பார்க்கிறோம். அநேக ஆண்டுகளுக்குப்பின் செசாரியாவில் அவருக்குக் குடும்பமும், வீடும் இருப்பதாக, அப்போஸ்தலர் நடபடிகள் 21இல் நாம் பார்க்கிறோம். “மூப்பர்கள்” ஒரே இடத்தில் வசிக்கின்ற உள்ளூர்வாசிகள்; “வேலையாட்கள்” வழக்கமாக, பயணம்செய்பவர்கள்; அவர்கள் உள்ளூர்க்காரர்கள் அல்ல. வேலையாட்கள், பிலிப்பு செய்ததுபோல, மூப்பர்களாக மாறலாம்; மூப்பர்கள், பவுலும் பர்னபாவும் செய்ததுபோல, வேலையாட்களாக மாறலாம். ஆனால், ஒருவர் ஒரே நேரத்தில் மூப்பனாகவும், வேலைக்காரனாகவும் இருக்க முடியாது. நாம் நம் அழைப்பைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். வேலையாட்கள் எங்கிருந்தாலும் சரி, அவர்கள் உள்ளூர் சபை வாழ்க்கையில், மூப்பர்கள் என்ற முறையில் அல்ல, மாறாக சகோதரர்கள் என்ற முறையில், நிச்சயமாகப் பங்குபெறலாம்.
பவுலோடு சேர்ந்து ஊழியம்செய்த எல்லா ஊழியக்காரர்களும், அவரைப்போல, உள்ளூர் சபையிலிருந்து வந்தவர்களே; எடுத்துக்காட்டு, தீமோத்தேயு லீஸ்திரா சபையிலிருந்து வந்தவர். கர்த்தர் இளையவர்களை மூத்த, முதிர்ந்த ஊழியக்காரர்களுடன் இணைத்துக்கட்டி எப்படிப் பயிற்றுவிக்கிறார் என்பதைக் கவனியுங்கள். மேலும், பவுலும் அவரோடுகூட இருந்தவர்களும், எங்கிருந்தாவது மாதாமாதம் உதவி கிடைக்கும் என்ற எந்த உத்தரவாதமுமின்றி, கர்த்தரை மட்டுமே சார்ந்து ஊழியம்செய்தார்கள்; தேவைப்பட்டால் தங்களுடைய தேவைகளுக்காக வேலை செய்வதற்கு அவர்கள் தயாராக இருந்தார்கள்.
பவுலும், அவருடைய கூட்டாளிகளும் கொரிந்துவிலும், எபேசுவிலும் தங்கியதுபோல, ஓர் ஊரிலோ அல்லது ஒரு மாவட்டத்திலோ, சில காலம் தங்க நேர்ந்தபோதும், அவர்கள் உள்ளூர் சபைகளின் பொறுப்புகளை ஒருபோதும் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளவில்லை. எபேசு சபையில் இருந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பவுல் தீமோத்தேயுவை அங்கு விட்டுச்சென்றார். கிரேத்தாவில் ஆரம்பித்த சபையைக் கட்டிமுடிப்பதற்காகப் பவுல் தீத்துவை அங்கு விட்டுச்சென்றார். ஆனால், அவர்கள் அந்த சபைகளின் மூப்பர்களாக மாறவில்லை.
உள்ளூர் சபைகள் தன்னைச் சார்ந்திருக்கக்கூடாது என்பதற்காகப் பவுல் தன் ஊழியத்தையும், உள்ளூர் சபைகளையும் தனித்தனியாக வைத்திருந்தார். எடுத்துக்காட்டாக, எபேசுவில் தன் வெளியரங்கமான ஊழியத்துக்காகப் பவுல் திறன்னு என்பவனுடைய அரங்கத்தை வாடகைக்கு அமர்த்தியிருந்தார். ஆனால், அதே நேரத்தில், அவர் அங்கு வீடுகளில் கூடிவந்த சபைகளைச் சந்தித்துக்கொண்டும் இருந்தார் (அப். 20:20).
இராஜ்ஜியத்தின் பரந்த வேலையில் ஒரு தனிநபர் தலைமையேற்று நடத்துவதற்குப் பெரும் பங்கு உண்டு. ஒரு படைத்தளபதி யுத்தகளத்தில் தன் வீரர்களை வழிநடத்துவதுபோல, பவுல் ஆவிக்குரிய தளத்தில் தன் கூட்டாளிகளை நடத்தினார்; அவருடைய கூட்டாளிகள் அவருடைய தலைமையை, கர்த்தரில், ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், உள்ளூர் சபையில் இப்படிப்பட்ட தனிநபர் தலைமை இருக்க முடியாது. ஏனென்றால், கிறிஸ்து ஜீவனுள்ள தலையாக அங்கு இருக்கிறார். இது மிக முக்கியமான ஒரு வேறுபாடு.
| சபையின் உள்ளூர் வெளியாக்கம் | இராஜ்ஜியத்தின் பரந்த வேலை |
1 | அவருடைய தலைமையின்கீழ்: ஜீவனுள்ள சரீரத்தின் ஜீவனுள்ள தலையே அங்கீகரிக்கப்பட்ட, உண்மையான அதிகாரம் (எபே. 4:15-16; வெளி. 1:3) | அவருடைய இயக்கத்தின்கீழ்: பவுலையும், பர்னபாவையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் (அப். 13:1-4; 16:6-10). |
2 | உள்ளூர்த் தலைவர்களின்கீழ் மட்டுமே: உள்ளூர்ச் சபைகளைப் பராமரிப்பதற்காக அங்கு பரிசுத்த ஆவியானவரால் எழுப்பப்பட்டவர்கள் (அப். 14:23; 20:28; பிலி. 1:1). | பொதுவாக, பொறுப்பு ஐக்கியம்கொண்டு இயங்குகிற ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறது: இவர்கள் உள்ளூர் சபைகளிலிருந்து எழுப்புகிறார்கள்; ஆனால், அதன்பின், கர்த்தருடைய ஆளுகையின்கீழ் இயங்குகிறார்கள் (அப். 14:4; 16:1-3; 18:1-4; 20:34; ரோமர் 16:7; கொலோ. 4:12-13; மாற்கு 6:7; லூக்கா 9:1-2; 10:1-2). |
3 | ஆராதனை, ஜெபம், ஐக்கியம், போதனை, பரஸ்பரமான பேணிவளர்தல் ஆகியவைகளுக்காக : பிதாவின் குடும்பத்தில் கூட்டாகச் சேர்ந்து வாழ்தல் (1 கொரி. 14:26-40; எபே. 4:1-16; 5:18-21). | உள்ளூர் சபைகளை நிறுவவும், கட்டவும், கஷ்டமான நேரங்களில் சபைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளாமல், அவைகளுக்கு உதவுவதுமே அடிப்படையான நோக்கம் (அப். 14:21-23; 1 தெச. 1:1; 2:5-7; 1 தீமோ. 1:3; தீத்து 1:5). |
4 | அந்தந்த இடங்களில் விசுவாசிகளின் செயல்பாடுகள்: ஐக்கியம்கொண்டு செயல்படும்போது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு, எல்லாருடைய பொறுப்பல்ல. எடுத்துக்காட்டு, நற்செய்திப் பணிகள் (அப். 9:36; ரோமர் 12:8; 1 கொரி. 12:5-6, 28). | பல்வேறு வேலைகள் சாத்தியம்:அடிப்படையான நோக்கத்தோடுகூட தேவனுடைய இறையாண்மையின்படி மேலும் பல வேலைகள் சாத்தியமே. எடுத்துக்காட்டாக, தேவையுள்ளவர்களுக்குத் தேவனுடைய அன்பைக் காண்பிக்கும் வேலைகள் (அப். 10:38; 1 கொரி. 12:6). |
5 | பரந்த வேலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது: பரந்த வேலைக்காகச் ஜெபிப்பதும், கொடுப்பதும் உள்ளூர் சபையின் பொறுப்பு. (எபே. 6:18-20; பிலி. 4:14-16). | உள்ளூர் சபைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது: உள்ளூர் சபைகளின் விசுவாசிகளின் செயல்பாடுகளிலிருந்தும் இது வேறுபட்டது (அப். 19:8-10; 20:17-38). |