Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

டுவைட் லைமன் மூடி (1837 - 1899): அமெரிக்கர், எளிமையான நற்செய்தியாளர், நலிந்தோரின் நண்பர், சிறுவர்களைக் கவர்ந்திழுந்த ஒரு காந்தம், ஞாயிறு பள்ளி ஆசான். "விசுவாசம் எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது... அன்பு எல்லாவற்றையும் எளிதாக்குகிறது" என்பது இவருடைய மிகப் பிரபலமான ஒரு மேற்கோள். நற்செய்தி அறிவிப்பதற்காகவும், ஞாயிறு பள்ளி நடத்துவதாகவும், மூடி Boot & Shoe என்ற தன் ஆதாயத் தொழிலைக் கைவிட்டார். அவர் அப்போதைய உள்நாட்டுப் போரில் YMCAமூலம் தொழிற்சங்க வீரர்களுடன் பணிபுரிந்தார். சிகாகோவில் அவர் பெரிய நற்செய்தி மையத்தை உருவாக்கினார். அது இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பிரபல பாடகர் ஐரா சாங்கியும், மூடியும் ஒன்றாகச் சேர்ந்து அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பல இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தார்கள். மூடி பெரும்பாலும் தேவனுடைய அன்பு, இரக்கம், மன்னிப்பு ஆகியவைகளை வலியுறுத்திப் பேசினார். அவர் தன் வசீகரமான பேச்சால் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்தார்.

{% endput %} {% put sidebarSection %} 

D.L.மூடி

இன்று நான் பேசப்போகிற பரிசுத்தவானைப்பற்றி உங்களில் பலர் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருடைய பெயர் டுவைட் லைமன் மூடி. ஆனால், டி.எல்.மூடி என்றால்தான் பலருக்குத் தெரியும். அவர் 1837இல் அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள நார்த்ஃபீல்ட் என்ற ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார்; அங்குதான் அவர் வாழ்ந்தார், வளர்ந்தார். அன்று அந்தக் கிராமத்தின் மக்கள் தொகை 2000. கஷ்டமான குழந்தைப் பருவம். மொத்தம் எட்டுக் குழந்தைகள். அவருக்கு நான்கு வயதாக இருந்தபோது அவருடைய அப்பா காலமானார். அவர் ஆறாவது குழந்தை. அவருடைய அப்பா இறந்த ஒரு மாதத்துக்குப்பின் அவருடைய அம்மா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதனால், எட்டுக் குழந்தைகளையும் அவருடைய அம்மா தன்னந்தனியாகக் கஷ்டப்பட்டு வளர்த்தார்.

அப்போதுதான் இரட்டைக் குழைந்தைகள் பிறந்திருந்ததால், அவருடைய அம்மா உடனடியாக வேலைக்குச் செல்லவில்லை; வேலைக்குச் செல்லவில்லை என்பதைவிட வேலைக்குச் செல்ல முடியவில்லை என்று சொல்வதுதான் சரி. மேலும், அவருடைய அப்பா நிறையக் கடன் சுமையை வைத்துவிட்டுப் போயிருந்தார். எந்த வருமானமும் இல்லை. வீட்டைப் பராமரிக்கப் போதுமான பணம் இல்லை. அப்பா வைத்து விட்டுப்போன கடன் பிரச்சினை வேறு. எனவே, அவருடைய அப்பாவை அடக்கம்செய்து முடித்தவுடன், கடன் கொடுத்தவர்கள் கடனை வசூலிக்க நேரே வீட்டுக்கு வந்தார்கள். அவர்களிடம் ஒன்றும் இல்லாததை அறிந்த அவர்கள் வீட்டில் இருந்த பண்டபாத்திரங்கள், தட்டுமுட்டுச் சாமான்கள் உட்பட எதையெல்லாம் எடுக்கமுடியுமோ, இவையெல்லாவற்றையும் வாரிக்கொண்டு போய்விட்டார்கள். வீடு துடைத்துவிட்டாற்போல் ஆயிற்று. காலி வீடு மட்டும்தான் மிச்சம். வெயிலுக்கும், மழைக்கும், பனிக்கும் ஒதுங்க கூரையும், சுவரும் மட்டும்தான் மிச்சம். தலை சாய்க்க ஓர் இடம் இருந்தது. அவ்வளவே. இப்படிப்பட்ட மிக ஏழ்மையான சூழ்நிலையில்தான் மூடி வளர்ந்தார். அமெரிக்காவில் குளிர்காலத்தில் வீட்டில் நெருப்பைக் கொளுத்தி அனல்மூட்ட வேண்டும். இல்லையென்றால் குளிரில் வாழ முடியாது. குளிர் வாட்டும். அவர்களுடைய வீட்டில் வறுமை கோரத்தாண்டவம் ஆடியதால்,. குளிர்காலத்தில் அனல்மூட்டுவதற்குத் தேவையான விறகுவாங்கக்கூட காசு கிடையாது. சாப்பாட்டுக்கு வழியில்லை. அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் இவர்கள்மேல் பரிதாபபட்டு ஏதாவது கொடுத்தால்தான் சாப்பாடு என்ற பரிதாபமான நிலைமை. அடுத்தவர்கள் கையை நோக்கியிருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் பள்ளிக்குச் செல்ல முடியுமா? படிக்க முடியுமா? பசி வந்தால் பத்தும் பறந்து போகுமே! வறுமையின் காரணமாக மூடியின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டது. அவர் ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை. அவருக்கு வாசிக்கத் தெரியும், ஆனால் சரளமாக வாசிக்கத் தெரியாது. குடும்பத்தின் வறுமையின் காரணமாக அவர் தன் இளம் வயதிலேயே வேலைக்குச் செல்லவேண்டியிருந்தது. துடுக்குடன் துள்ளித்திரிய வேண்டிய இளம் வயதில் துயரமான பாரங்களைச் சுமக்க ஆரம்பித்தார்.

ஆனால், இறப்போ, இழப்போ, ஏழ்மையோ எதுவும் மூடியைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை. மூடியைப்பற்றி "காளைமாட்டுக்கு மூக்கணாங்கயிறு போட்டு அதன் மூர்க்கத்தை அடக்குவதுபோல், "அந்தப் பையனுக்கு யாராலும் சேணம் கட்ட முடியாது," என்று மக்கள் சொன்னார்கள். ஏனென்றால் அவர் அவ்வளவு துடிப்பானவர், துடுக்கானவர். அவர் மிகவும் கடினமாக உழைத்தார், அவர் எந்தச் சிக்கலிலும், பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ளவில்லை. ஆனால், அவர் பிடிவாதமானவர், நினைத்ததைச் சாதிக்கவேண்டும் என்ற முனைப்புடையவர். அவர் தன் எதிர்காலத்தைக்குறித்து பெரிய கனவுகள் வைத்திருந்தார். தன்னால் ஒரு பெரிய ஆளாக முடியும், உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்று அவர் நம்பினார். அவருடைய சின்னஞ்சிறு நார்த்ஃபீல்ட் கிராமம் அவரைப்போன்ற ஒரு மனிதனுக்கு உண்மையாகவே சிறியதுதான். அவர் பெரிய நகரத்துக்குச் செல்ல விரும்பினார்.

அவர் சிறுவனாக இருந்தபோது தான் பிறந்த ஊராகிய நார்த்ஃபீல்ட்டைவிட்டு ஒருமுறைகூட வெளியே போனதேயில்லை. அவருடைய ஊருக்கு அருகில் போஸ்டன் என்ற ஒரு பெரிய நகரம் இருந்தது. அந்த நகரத்தில் அவருடைய மாமா ஒரு செருப்புக் கடை வைத்திருந்தார். மூடி தன் கிராமத்தைவிட்டு வெளியேறி நகரத்திற்குச் செல்ல விரும்பினார். அந்தத் தருணத்தில் ஒரு நாள் அவருடைய மாமா மூடியின் வீட்டுக்கு வந்தார். அவர் தன் மாமாவிடம், "மாமா, ஒங்க செருப்புக் கடையில் எனக்கு வேலை தருவீங்களா?" என்று கேட்டார். அதற்கு அவருடைய மாமா, 16 வயது டி.எல் மூடியைப் பார்த்து, “முடியாது. நீ என்ன செய்யப் போறேன்னு உனக்குத் தெரியாது. உனக்கு இதில் எந்த அனுபவமும் கிடையாது. நீ முரடன், பிடிவாதக்காரன். ஒன்ன நம்பி எந்தப் பொறுப்பையும் கொடுக்கமுடியாது,” என்று கூறினார். அவருடைய பதில் மூடிக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆயினும், தன் மாமாவின் பதிலை அவர் உச்சநீதிமன்றத்தின் மாற்றமுடியாத ஒரு பதிலாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் தன் ஊரைவிட்டு வெளியேறி, நகரத்துக்குப் போவது என்று தீர்மானித்துவிட்டார். தன் விருப்பத்தை அவர் தன் அம்மாவிடம் சொன்னார். அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவேளை ஒரு வேலையிருந்திருந்தால் ஒப்புக்கொண்டிருக்கலாம். அம்மா மறுத்தபோதும், ரயிலில் ஏறி பாஸ்டனுக்குச் செல்ல முடிவுசெய்தார். "மாமா வேலைதரத் தேவையில்லை, அவருடைய வேலை எனக்கு வேண்டாம். நானே வேலை தேடிக்கொள்வேன்," என்று முடிவுசெய்தார். அவரைப்பற்றி மிகவும் கவலைப்பட்ட அவருடைய அண்ணன் அவருக்கு 5 டாலர் கொடுத்து, "தயவுசெய்து பத்திரமா இருந்துக்க," என்று சொல்லி வழியனுப்பிவைத்தார். அவர் எங்கு போவாரோ, என்ன செய்வாரோ என்று குடும்பத்தார் அனைவரும் கவலைப்பட்டார்கள்.

அவர் ஊரைவிட்டுக் கிளம்பி பாஸ்டனில் இருந்த வேறொரு உறவினரின் வீட்டுக்குச் சென்றார். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வீட்டுக்கு வந்த மூடியைப் பார்த்து அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். "நான் உங்களோடு சில நாட்கள் தங்கப்போகிறேன்," என்று அவர் சொன்னபோது, அவருடைய உறவினர் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் சம்மதித்தார். தன் அண்ணன் கொடுத்த 5 டாலரைக்கொண்டு சில நாட்கள் சமாளிக்கலாம் என்றும், அதற்குள் ஏதாவது ஒரு வேலையைத் தேடிக்கொள்ளலாம் என்றும், அதன்பின் எல்லாம் சரியாகிவிடும் என்றும் அவர் நினைத்தார். ஆனால், அவர் நினைத்ததுபோல், எதிர்பார்த்ததுபோல், அவருக்கு உடனடியாக வேலை கிடைக்கவில்லை. யாரும் அவருக்கு வேலை கொடுக்கத் தயாராக இல்லை. ஏனென்றால், அவர் ஒரு கிராமத்தான். மேலும், அவருக்குக் கல்வியறிவும் கிடையாது. "இவன் தெளிவில்லாமல், தப்பும் தவறுமாகப் பேசுகிறான், உளறுகிறான்," என்று அவரைக்குறித்து மக்கள் நினைத்தார்கள். வேறு வழியில்லாததால், கடைசியாக, அவர் தன் மாமாவின் செருப்புக்கடைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. போனார், மிகவும் பணிவோடும், மன்னிப்புகேட்கும் தோரணையோடும், தன் மாமாவிடம் வேலைத்தருமாறு கெஞ்சினார், மன்றாடினார். அவருடைய மாமாவுக்குக் கடுங்கோபம். "உனக்குப் பொறுப்பு கிடையாது. நான் ஏற்கெனவே சொன்னேன்," என்று எரிச்சலடைந்தார். ஆனாலும், "வேலை இல்லை, போ," என்று அவரை விரட்ட முடியவில்லை. ஏனென்றால், ஒன்று, அவர் ஏற்கெனவே பாஸ்டனுக்கு வந்துவிட்டார், இரண்டு வேலை இல்லை, வேலையில்லாம் நகரத்தில் தாக்குப்பிடிக்க முடியாது. மூன்றாவது தங்கை மகன். தங்கையின் குடும்பச் சூழ்நிலை அவருக்கு நன்றாகத் தெரியும். இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, அவரை வேலைக்குச் சேர்த்துக்கொள்ள முடிவுசெய்தார். ஆம், சாமுவேல் மாமா மூடியை வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். ஆனால், வேலை கொடுப்பதற்குமுன், மூடியின் சட்டை காலரைப் பிடித்துக்கொண்டு, "இரவில் நீ தெருக்களில் சுற்றித்திரியக்கூடாது. நான் ஏற்பாடு செய்கிற விடுதியில்தான் நீ தங்கவேண்டும். உன்னுடைய எல்லா நண்பர்களையும் எனக்குச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், விடுமுறை நாட்களிலும், நீ சபைக்குச் செல்ல வேண்டும், அதன்பின் ஞாயிறு பள்ளியிலும் பங்கேற்க வேண்டும்," என்று பல நிபந்தனைகள் விதித்தார். 16 வயது வாலிபன் மூடி இந்த நிபந்தனைகளைக் கேட்டு பரவசமடையவில்லை. ஆனால், வேலை வேண்டுமானால், இந்த நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிவதைத்தவிர வேறு வழியில்லை என்று அவருக்குத் தெரியும். மாமாவின் நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிவதாக அவர் வாக்குறுதி அளித்தார். அவர் உண்மையில் நல்ல பையன். மாமாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை அவர் காப்பாற்றினார்.

அவர் பாஸ்டனில் இருந்த தன் மாமாவின் செருப்புக்கடையில் வேலைசெய்ய ஆரம்பித்தார். மிக அற்பமான ஆரம்பம். ஆனால், இந்த அற்பமான ஆரம்பம்தான் தன் ஒளிமயமான எதிர்காலத்தின் தொடக்கம் என்று அவர் உறுதியாக நம்பினார். இதுவே தன் வருங்காலக் கனவை நனவாக்கும் தொடக்கப்புள்ளி என்று அவர் திடமாக அறிந்திருந்தார். பணம் சம்பாதிக்க வேண்டும், சேமிக்க வேண்டும், கோடீஸ்வரனாக வேண்டும், பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவு.

மூடி காலணிகள் விற்பதில் கில்லாடி; கைதேர்ந்த விற்பனையாளர். ஒருநாள் ஒரு பெண்மணி அந்தக் கடைக்கு வந்தார். அவர் விரும்பிய ஷூ இருந்தது. ஆனால் அதன் அளவு சிறியது. எனவே, அந்தப் பெண்மணி அதை வாங்குவதற்குத் தயங்கினார். எனினும், மூடி விடுவதாக இல்லை. அவர் அந்த ஷூவை விற்பதில் குறியாக இருந்தார். அவர், “மேடம், இது மிக நல்ல ஷூ. உங்களுக்கும் இந்த ஷூ பிடித்திருக்கிறது. என்ன! உங்கள் கால் கொஞ்சம் பெரிது. இந்த ஷூ கொஞ்சம் சிறியது. அதனால் என்ன? இவ்வளவு நல்ல ஷூவை வாங்காமல் போகலாமா? சிறியது, பெரியது என்பதைபற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள்," என்று அந்தப் பெண்மணியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ஏறக்குறைய அவர் அதை விற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு திறமையாகப் பேசினார். ஆனால், அவருடைய இதுபோன்ற முறைமைகளை அவருடைய மாமா விரும்பவில்லை. ஆயினும், அந்தக் கடையில் வேலை செய்த மற்றவர்களைவிட மூடி அதிகமான காலணிகளை விற்றார்.

ஒரு நாள், அவர் கடையின் பின்புறத்தில் இருந்த ஓர் அறையில் உட்கார்ந்து, கடைக்குப் புதிதாக வந்த சரக்குகளை எண்ணிச் சரிபார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு மனிதர் கடைக்குப் பின்புறம் இருந்த தெருவில் குறுக்கும்நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். அவர் அவ்வப்போது கொஞ்சம் முன்னால் நடந்து வந்து, நின்று, உள்ளே எட்டிப்பார்த்தார். அதன்பின் சில அடிகள் பின்னோக்கி நடந்தார். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் முன்னோக்கி நடந்து வந்து, நின்று, உள்ளே எட்டிப்பார்த்தார். கதவைத் திறப்பதுபோல் கதவருகே வந்தார்; ஆனால் கதவைத் திறக்காமல் கீழே இறங்கிவிட்டார். கொஞ்ச நேரத்தில் மீண்டும் கதவை நோக்கி வந்தார். ஆனால், கதவைத் திறக்கவில்லை. “யார் இவர்? இவர் என்ன செய்கிறார்? இவருக்கு என்ன ஆயிற்று? இவர் கதவைத் திறந்து உள்ளே வரவேண்டியதுதானே! இவருக்கு அதில் என்ன பிரச்சினை?" என்று மூடி நினைத்தார். மூடி அவரைக் கொஞ்சம் உற்றுக் கவனித்தார்; இன்னும் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தார். “அடடா, இவர் என் ஞாயிறு பள்ளி ஆசிரியர்!” என்று அவர் புரிந்துகொண்டார். "நான் ஏதாவது தப்பு செய்தேனோ?" என்று சிந்திக்க ஆரம்பித்தார். "கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் ஏதாவது தப்பு செய்தேனா? போன ஞாயிற்றுக்கிழமை நான் என்ன செய்தேன்? நான் என்ன சொன்னேன்?” என்று அவர் நினைத்துப்பார்க்க ஆரம்பித்தார். வேலைக்குச் சேர்வதற்குமுன் தன் மாமா சாமுவேலிடம் சொன்னதுபோல் மூடி தவறாமல் ஞாயிறு பள்ளிக்குச் சென்றுவந்தார். அவர் தன் வாக்குறுதியைக் காப்பாற்றினார். ஞாயிறு பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றுதான் மாமா சொல்லியிருந்தாரேதவிர ஞாயிறு பள்ளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவருடைய மாமா அவரிடம் ஒருபோதும் சொல்லவில்லை. ஞாயிற்றுக்கிழமை தனக்கு விடுமுறை என்பதால், ஞாயிறு பள்ளியில் தான் விரும்பியதைச் செய்யலாம் என்று அவர் நினைத்தார். "ஞாயிறு பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று மாமா சொன்னார். நானும் செல்வதாக வாக்குறுதி அளித்தேன். அதன்படி நான் போகிறேன். ஆனால், ஞாயிறு பள்ளியில் நான் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை அல்லது குறிப்பெழுத வேண்டிய தேவையில்லை. அதுபோன்ற எதுவும் செய்யத் தேவையில்லை," என்று அவர் நினைத்தார்; எனவே, அவர் ஞாயிறு வகுப்புகளில் தன் விருப்பப்படி நடந்தார். இப்போது ஞாயிறு பள்ளி ஆசிரியர் வெளியே முன்னும்பின்னும் நடந்துகொண்டிருப்பதைக் கண்டதும் அவருடைய மனச்சாட்சி குறுகுறுத்தது. கடைசியில், ஞாயிறு பள்ளி ஆசிரியரான எட் கிம்பால், ஒரு வழியாகக் கதவைத் திறந்துகொண்டு கடைக்குள் வந்தார். கடையின் வரவேற்பறையில் இருந்தவரிடம், "டுவைட் மூடி இருக்கிறாரா?” என்று கேட்டார். மூடி கடையின் பின்பக்கத்தில் காலணிகளைக் கணக்குப்பார்த்துக்கொண்டிருந்தார். வரவேற்பறையில் இருந்தவர் "மூடி இங்கு இல்லை" என்று சொல்லிவிடமாட்டாரா என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், வரபேற்பறையில் இருந்தவர், "ஓ, ஆமாம், அவன் பின்பக்கத்தில் இருக்கிறான்,” என்றார். எட் கிம்பால் பின்பக்கத்து அறைக்குச் சென்றார். மூடி மிகவும் சங்கடத்தோடு நெளிந்துகொண்டு, "ஐயா, உங்களுக்குக் காலணிகள் வேண்டுமா? இதோ பொறுங்கள்," என்றார். அதற்கு எட் கிம்பால், "இல்லை, இல்லை, நான் இங்கு காலணிகள் வாங்க வரவில்லை," என்றார். மேலும் அவர் மூடியின் வலது தோள்பட்டையில் தயக்கத்தோடு தன் கைகளை வைத்துக்கொண்டு, “என் ஞாயிறு பள்ளி வகுப்பைப்பற்றி உனக்கு நல்ல உயர்ந்த அபிப்பிராயம் கிடையாது என்று எனக்குத் தெரியும். அதுபோல உண்மையைச் சொல்வதென்றால், நீயும் என் ஞாயிறு பள்ளி வகுப்பில் இருப்பதைப்பற்றி நானும் பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை. ஆனால், நான் ஒன்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நீ இயேசுவை விசுவாசிக்கிறாயா? உனக்காகவும், உன் பாவங்களுக்காகவும் இயேசு மரித்தார் என்பதை நீ விசுவாசிக்கிறாயா?" என்று கேட்டார்.

அவர் இப்படிக் கேட்டது மூடிக்கு இன்னும் பெரிய சங்கடமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை சபைக்குப் போனபோது மட்டுமே மூடி தேவனைப்பற்றிக் கேள்விப்பட்டார். வேறு நாட்களில் அவர் தேவனைப்பற்றி ஒருபோதும் நினைத்ததேயில்லை. ஆனால், இதோ, இங்கே, இப்போது அவருடைய ஞாயிறு பள்ளி ஆசிரியர் அவர் வேலைபார்க்கும் இடத்தில் உட்கார்ந்திருக்கிறார். அவர் ஆண்டவராகிய இயேசுவைப்பற்றியும், அவருடைய மரணத்தையும், உயிர்தெழுதலையும்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அவர் தான் வைத்திருந்த வேதாகமத்தைத் திறந்து, ஒரு பகுதியை வாசித்தார். மூடிக்கு இவைகளெல்லாம் மிகவும் விசித்திரமாகவும், விநோதமாகவும் இருந்தன. தேவனைப்பற்றிய காரியங்கள் உண்மையானவை என்று மூடி உணர ஆரம்பித்தார். அவர் இப்படி உணர்ந்தது இதுவே முதல்முறை.

தேவனும், தேவனுடைய காரியங்களும் வெறுமனே ஞாயிற்றுக்கிழமைக்கும், ஞாயிறு பள்ளி வகுப்புக்கும், பாரம்பரியங்களுக்கும் மட்டும் உரியவையல்ல; அவை எல்லாருக்கும், என்றென்றைக்கும் நிஜம் என்று மூடி முதன்முதலாக உணர்ந்தார். அவர்களுடைய உரையாடல் கொஞ்ச நேரம்தான்.நீடித்தது. ஆயினும் அந்தச் சில நிமிடங்களில் எட் கிம்பால் மிகவும் நடுக்கமாகவும், பதட்டமாகவும் இருந்தார். தான் இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்று மூடி உணர்ந்தார். அவர் கிம்பாலிடம், “நான் நிச்சயமாக இயேசுவை விசுவாசிக்கிறேன். உங்களுக்குத் தெரியாதா? இனிமேல், நான் விசுவாசிப்பதின்படி வாழப் போகிறேன்," என்று சொன்னார். தான் அங்கு வந்தது, கதவைத் திறப்பதற்குமுன் நடந்துகொண்ட விதம், மூடியைச் சந்தித்தது, அவரிடம் பேசியது எல்லாமே எட் கிம்பாலுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. எல்லாம் வித்தியாசமாக இருந்தது. ஆனால், அன்று அவர் மூடியைப் பார்க்க வேண்டும் என்று ஆழத்தில் உணர்ந்தார். அன்று அவர் கூனிக்குறுகினார், சங்கடப்பட்டார்; புழுவைப்போல் நெளிந்தார். காணாமல்போன கழுதையைத் தேடிப்போன சவுல் வேற்று மனிதனானதுபோல், எட் கிம்பால் போனபிறகு மூடி ஒரு புதிய மனிதனாக மாறிவிட்டார். அந்தச் சந்திப்பில், அவர் தேவனை தனிப்பட்ட முறையில் அறிந்துகொண்டார்.

அந்தக் கணத்திலிருந்து டுவைட் மூடியின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. அந்த மாற்றத்தை அனைவரும் தெளிவாகக் கண்டார்கள். அவர் தன் புதிய வாழ்க்கையை, தான் சொல்வதைக் கேட்கத் தயாராக இருந்த அனைவரோடும் பகிர்ந்துகொள்ள மிகவும் ஆர்வமாகவும், ஆவலாகவும் இருந்தார். அவர் அப்போது மிகவும் பாரம்பரியமான ஒரு சபைக்குப் போய்க்கொண்டிருந்தார். அந்த சபையில் நன்கு கற்றவர்கள், உயர்கல்வி பெற்றவர்கள் மட்டுமே வேதாகமத்தையும், தேவனையும்பற்றிப் பேசினார்கள். அப்படியிருக்க கல்வியறிவு இல்லாத, 18 வயது வாலிபன், ஒரு கிராமத்தான் பேசமுடியுமா? அவர் ஜெபக்கூட்டங்களில் தன் சாட்சியைப் பகிர்ந்துகொள்வதற்கோ அல்லது வேதாகமத்திலிருந்து எதையாவது பேசுவதற்கோ அல்லது விசுவாசிகளை உற்சாகப்படுத்துவதற்கோ எழுந்தபோது, அங்கிருந்தவர்கள் அதை விரும்பவில்லை; அவர்கள் அவரை விசித்திரமாகப் பார்த்தார்கள். ஒருமுறை ஒரு ஜெபக்கூட்டத்தில் அவர் ஏதொவொன்றைப் பகிர்ந்துகொள்ள விரும்பினார். அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் உணர்ந்தார். நடப்பது நடக்கட்டும் என்று அவர் தைரியமாக எழுந்து, "எல்லோரும் சற்று கேளுங்கள். இரட்சிப்பு, தேவனுடைய இரட்சிப்பு, காலணிகள்போன்றது என்று உணர்கிறேன்!" என்று சொன்னார். அங்கிருந்த வயதான பெண்கள் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி. "இது மூர்க்கத்தனம், முரட்டுத்தனம், முட்டாள்தனம். இவன் என்ன பேசுகிறான்? என்ன பேசுகிறோம் என்று இவனுக்குத் தெரியுமா? இவனுக்குப் பைத்தியமா? யாராவது இவனை ஏன் உட்காரச் சொல்லக்கூடாது! இவனை அமைதியாக இருக்கக் சொல்லுங்கள்," என்றுபேசிக்கொண்டார்கள். ஆனால், டுவைட் மூடி தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். அவர், “ஆம், இரட்சிப்பு காலணிபோன்றது. காலணிகள் இறுக்கமாக இருந்தால், உங்கள் கால்களுக்கு அவைகள் சரியாகப் பொருந்தாது. அப்படித்தானே? உங்கள் கால்கள் மிகவும் பெரியதாக இருந்தால் அல்லது உங்கள் பெருமை மிகவும் பெரியதாக இருந்தால், தேவனுடைய இரட்சிப்பு அங்கு சரியாகப் பொருந்தாது," என்று சொன்னார். அவருடைய இதுபோன்ற விளக்கங்களையும், எடுத்துக்காட்டுக்களையும் மக்கள் விரும்பவில்லை. “தேவனுடைய காரியங்களை இவன் ஏன் காலணிகள்போன்ற சாதாரணமான பொதுவான காரியங்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறான்? இது மட்டுமீறிய செயல்," என்றார்கள். அங்கிருந்த வயதான ஒருவர் மூடியிடம், “தம்பி, நீ உன் வாயை மூடியைக்கொண்டு அமைதியாக இருந்தாலே போதும். அதுவே நீ தேவனுக்குச் செய்கிற பெரிய ஊழியம்," என்றார். அவர்கள் இப்படிப் பேசியதாலோ அல்லது நடந்துகொண்டதாலோ மூடி சோர்வடையவில்லை, மனந்தளரவில்லை. ஆனால், பிரச்சனை என்னவென்றால், அந்தச் சபையிலிருந்த விசுவாசிகள்தான் பெரும்பாலும் அவருடைய மாமாவின் கடையின் வாடிக்கையாளர்கள். எல்லா வயதான பெண்களும் சொன்னதுபோல் சாமுவேல் மாமா வாடிக்கையாளர்களை இழக்கத் தொடங்கினார், “ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஜெபக் கூட்டங்களிலும் உங்கள் மருமகன் இப்படி விசித்திரமான விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தால் நாங்கள் உங்கள் கடையில் காலணிகள் வாங்கமாட்டோம்; உங்கள் கடைக்கு வரமாட்டோம். நாங்கள் உங்கள் மருமகனைப் பார்க்க விரும்பவில்லை," என்று சபையிலிருந்தவர்கள் தீர்மானித்ததால், அவர் தன் வாடிக்கையாளர்களை இழக்க ஆரம்பித்தார். சாமுவேல் மாமாவுக்கு அவர்மேல் பயங்கர கோபம். மூடி நல்ல திறமையான விற்பனையாளராக இருந்தபோதும், தன் வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாத சாமுவேல் தன் மருமகனை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.

பரபாசை விடுதலைசெய்து இயேசுவை சிலுவையில் அறைந்த உலகம்தானே!

1856ஆம் ஆண்டு. மூடிக்கு அப்போது 19 வயது. பாஸ்டன் நகரமும் தனக்குப் பொருத்தமான பெரிய நகரம் இல்லை; இதுவும் தனக்குச் சிறிய நகரம்தான் என்று மூடி முடிவுசெய்தார். எனவே, அருகிலிருந்த மிகப் பெரிய நகரமாகிய சிகாகோவுக்குச் செல்லத் தீர்மானித்தார். இதைக்குறித்து அவர் தன் அம்மாவுக்கு, “அன்புள்ள அம்மா, என்னைபற்றிக் கவலைப்பட வேண்டாம். நம் ஊர் நார்த்ஃபீல்டிலிருந்து நான் 1000 மைல்கள் தூரத்தில் இருப்பதால் இது வெகு தூரம்போல் உங்களுக்குத் தோன்றலாம். நீங்கள் அப்படி நினைக்கவில்லையென்றால் இது ஒரு தூரமே இல்லை, ” என்று கடிதம் எழுதினார். டுவைட் மூடி சிகாகோவுக்குக் கிளம்பினார். இப்போது அவருக்கு வேலை தெரியும், காலணிகள் விற்பதில் அனுபவமும் இருக்கிறது. அங்கு அவர் காலணிகள் விற்கும் ஒரு பெரிய கடையில் வேலைக்குச் சேர்ந்தார். காலணிகள் விற்பதில் அவர் ஒரு கில்லாடி என்பதை அங்கிருந்தவர்கள் மிக விரைவில் கண்டுகொண்டார்கள்.அவருடைய திறமையை எல்லாரும் பாராட்டினார்கள். கொஞ்ச நாட்களுக்குப்பின் அவருடைய முதலாளி அவரைத் தனியாக அழைத்து, "உன் திறமையையும், உன் வியாபார நுணுக்கத்தையும் வைத்துக்கொண்டு நீ விரும்புவதுபோல், நீ எதிர்பார்ப்பதைவிட மிக விரைவில் கோடீஸ்வரனாகிவிடலாம்," என்று சொன்னார். மேலும் அந்த முதலாளி, "ஆனால், நீ கடினமாக உழைக்க வேண்டும்; நல்ல நண்பர்களைச் சம்பாதிக்க வேண்டும்; கேளிக்கைகளுக்கு அடிக்கடி செல்லாதே; முடிந்த அளவுக்குச் சேமிக்க வேண்டும்; இப்படிச் செய்தால் நீ சீக்கிரமாகக் கோடீஸ்வரனாகிவிடுவாய் என்று நான் நினைக்கிறன்," என்றும் கூறினார். அவருடைய இந்த வார்த்தைகளை ட்வைட் மூடி உளமார ஏற்றுக்கொண்டார். “என்னால் முடியும். இது என் கனவு. என்னால் பணம் சம்பாதிக்க முடியும். 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் நான் ஒருகோடீஸ்வரனாகிவிடுவேன்," என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். எனவே, அவர் மிகவும் கடினமாக உழைத்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில், அவர் சபைக்குப் போனார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, அவர் சிகாகோவில் வறியவர்கள் அதிகமாக வாழ்ந்த நார்த்வெல் என்ற குடிசைப்பகுதியின் தெருவின் வழியாக நடந்துபோய்க்கொண்டிருந்தார். ஒரு வாசலுக்கு வெளியே ஓர் அழுக்குப் பலகை தொங்கிக்கொண்டிருந்ததை அவர் கவனித்தார். அந்தப் பலகையில் "மிஷன்" என்று எழுதியிருந்தது. அதைப் பார்த்ததும் அவர் பரவசமடைந்தார். "நான் இந்த இடத்தைப் பார்த்ததேயில்லையே!" என்று அவர் நினைத்தார். அவர் அந்த வீட்டின் கதவைத் தட்டினார். முடி நரைத்த ஒரு முதியவர் தொங்கிய முகத்தோடு கதவைத் திறந்தார். மூடி அவரிடம், “இது என்ன இடம்? இது ஒரு "மிஷன்" என்று நான் நினைக்கிறன். சரியா?" என்று கேட்டார். அதற்கு அந்த நபர், "ஆம், இது ஒரு ஞாயிறு பள்ளி," என்றார். உடனே டுவைட் மூடி, “அப்படியா! ஞாயிறு பள்ளியா! அற்புதம்! சரி, நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? உங்கள் ஞாயிறு பள்ளிக்கு நான் உதவப்போகிறேன். நான் ஞாயிறு பள்ளி வகுப்புகள் நன்றாக நடத்துவேன். இனிமேல் நான் வந்து உங்களுக்கு உதவ ஆர்வமாக இருக்கிறேன்," என்றார். அதைக் கேட்டதும் அந்த மனிதர் மகிச்சியடைந்து, "அப்படியா! நீ இன்று இங்கு வந்ததற்கும், இனிமேல் ஞாயிறு வகுப்புக்கள் நடத்த முன்வருவதாகச் சொன்னதற்கும் நன்றி," என்று சொல்வார் என்று டுவைட் மூடி எதிர்பார்த்தார். ஆனால் அந்த மனிதர், "வேண்டாம். நன்றி," என்று சொன்னார். மூடி, “என்ன? ஆசிரியர்கள் வேண்டாமா? எனக்கு ஞாயிறு பள்ளி மிகவும் பிடிக்கும். ஏனென்றால் என் ஞாயிறு பள்ளி ஆசிரியர்தான் நான் இரட்சிக்கப்படுவதற்குக் காரணம். அவர்தான் என்னை மனந்திரும்புதலுக்கு நடத்தினார். அவர் என்மேல் அவ்வளவு அக்கறையும், கரிசனையும் காட்டினார். அவர்தான் என்னை ஆண்டவரிடம் கொண்டு வந்தார்," என்று சொன்னார். அதற்கு அந்த மனிதர், “வேண்டாம். நன்றி, உங்கள் பணிவிடை எனக்குத் தேவையில்லை. எங்களுக்கு ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் தேவையில்லை. ஏனென்றால், எங்களிடம் ஏற்கெனவே 16 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், போதுமான குழந்தைகள்தான் இல்லை," என்றார். அவரிடம், “என்னது குழந்தைகள் இல்லையா? இந்தப் பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் குழந்தைகள் இருக்கிறார்கள். எல்லா வீட்டு வாசல்களிலும் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள், தெருவில் குழந்தைகள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய பிரச்சினை என்ன?" என்றார். அதற்கு அந்த மனிதர், “அவர்கள் வரமாட்டார்கள். அவர்கள் வருவதில்லை. எங்களிடம் போதுமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குப் பஞ்சமில்லை. எனவே, இன்னொரு ஆசிரியருக்கு இங்கு அவசியம் இல்லை. பள்ளியில் சேர குழந்தைகள் தேவை," என்றார். இதைக் கேட்ட மூடி மிகவும் குழப்பமடைந்தார். அந்த நபர் தொடர்ந்து, "உனக்கு விருப்பமானால் அடுத்த வாரம் நீ இங்கு வரலாம். அப்படி வருவதாக இருந்தால் நீ உன் பள்ளியிலுள்ள மாணவ மாணவிகளை இங்கு அழைத்து வந்து, அவர்களுக்கு இங்கு ஞாயிறு பாடம் நடத்தலாம்," என்று கூறினார். மூடி, “இது ஒரு நல்ல ஏற்பாடு! சரி, அடுத்த வாரம் நான் என் வகுப்பிலுள்ளவர்களை இங்கு கூட்டிக்கொண்டு வருவேன். அப்போது உங்களுக்கு ஒரு புதிய ஞாயிறு பள்ளி ஆசிரியரும் கிடைப்பார்," என்று கூறினார்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை, அவர் அதிகாலையிலேயே எழுந்து தெருக்களின்வழியாக நடந்துபோய்க்கொண்டிருந்தார். அது ஏழைகள் வாழ்ந்த ஒரு குடிசைப்பகுதி. சின்னச்சின்ன வீடுகள் ஒன்றன்மேல் ஒன்றாக பெட்டிகள் அடுக்கிவைத்தாற்போன்று இருந்தன. எல்லா இடங்களிலும் குழந்தைகள் தெருவில் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தார்கள். யாரும் ஆலயத்திற்குச் செல்லவில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. அந்த நாட்களில், ஞாயிறு பள்ளிகள் இன்று இருக்கும் ஞாயிறு வகுப்புகள் போன்றவை இல்லை. அன்று ஞாயிறு பள்ளிகள் உண்மையான ஒரு பள்ளிக்கூடத்தைப்போலவே செயல்பட்டன. அந்த நாட்களில் வழக்கமான பள்ளிகளில் சேர வாய்ப்புக் கிடைக்காத ஏழைக் குழந்தைகள் ஞாயிறு பள்ளிகளில் சேர்ந்தார்கள். வாய்ப்பும், வசதியும் இல்லாத ஏழைக்குழந்தைகளைத் தேடிக்கண்டுபிடித்து, அவர்களைப் பள்ளியில் சேர்த்து உலகக் கல்வியும், வேதாகமக் கல்வியும் சொல்லிக் கொடுத்தார்கள். இந்த ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெரியவர்கள், சிறியவர்கள் யாரும் பெரும்பாலும் ஆலயத்துக்குச் செல்லவில்லை. எனவே, விளிம்புநிலையில் வாழ்ந்த இந்த மக்களுக்கு ஞாயிறு பள்ளி எல்லா வகையிலும் பேருதவியாக, சாட்சியாக, விளங்கியது.

மூடி தெருக்களில் விளையாடிக்கொண்டிருந்த சில குழந்தைகளுடன் பேசினார். அவர்கள் ஒருவருக்கொருவர் பந்துகளை வீசி விளையாடிக்கொண்டிருந்தார்கள். மூடி நடுவில் புகுந்து அவர்கள் வீசிக்கொண்டிருந்த பந்தைப் பிடித்தார். குழந்தைகள் வந்து, "பந்தைக் கொடுங்கள்!" என்று கேட்டார்கள். மூடி அவர்களிடம், “நீங்கள் என்னோடு வந்தால் உங்கள் வாழ்கையில் நீங்கள் இதுவரை அனுபவிக்காத மிகச் சிறந்த ஞாயிற்றுக்கிழமையை, நீங்கள் இதுவரை அனுபவிக்காத மிகச் சிறந்த நேரத்தை அனுபவிப்பீர்கள். இந்தச் சின்னப் பந்தை ஒரு பொருட்டாக நினைக்காதீர்கள். நீங்கள் என்னோடு வந்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களுக்கு இதுபோன்ற பந்து இனித் தேவைப்படாது. நான் உங்களுக்கு இன்னொரு வகையான பந்தைத் தருவேன் என்று நினைக்காதீர்கள்," என்று சொன்னார். வியர்த்துகொட்டிய, துர்நாற்றம்வீசிய, கூச்சலிட்டுக்கொண்டிருந்த 18 சிறுவர்கள் அவருக்குப் பின்னால் ஓடினார்கள். அவர் அவர்களை அழைத்துக்கொண்டு போய் 'மிஷன்' என்று எழுதியிருந்த வீட்டின் கதவைத் தட்டினார். வயதான ஒருவர் கதவைத் திறந்து வெளியே பார்த்தார். அங்கு மூடி நின்றுகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் 18 சிறுவர்கள் கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள். தங்கள் வாழ்வின் மிகச் சிறந்த ஞாயிற்றுக்கிழமையை, நேரத்தை, அனுபவிக்க அவர்கள் அத்தனைபேரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். ஞாயிறு பள்ளியில் மூடியின் ஊழியம் ஆரம்பமாயிற்று.

அன்று அவர் ஏற்கெனவே சொன்னதுபோல் ஞாயிறு பள்ளி வகுப்பு நடத்தவில்லை. அவர் அந்த முதியவரிடம், “இங்கு 16 ஆசிரியர்கள் இருப்பதாகச் சொன்னீர்கள். இதோ இங்கு இப்போது 18 சிறுவர்கள் இருக்கிறார்கள். இவர்களை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். நான் வெளியேபோய் இன்னும் நிறையபேரைக் கூட்டிக்கொண்டுவருகிறேன்," என்று சொல்லிவிட்டு சிறுவர்களை அழைத்துவர அவர் வெளியே கிளம்பினார். ஆம், அவர் இன்னும் அதிகமான சிறுவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தார். சிறுவர்களை வசீகரிக்கும் ஒரு தெய்வீகக் கொடை அவரிடம் இருந்தது. எனவே, குழந்தைகள் அவரிடம் திரண்டுவந்தார்கள்.

திங்கள்கிழமைமுதல் சனிக்கிழமைவரை, அவர் தன் வேலையில் கண்ணுங்கருத்துமாக இருந்தார். பணக்காரனாக வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தன் இலக்கை, குறிக்கோளை, அவர் ஒருபோதும் மறக்கவில்லை. அந்த எண்ணம் அவருடைய மனதில் ஆழமாக வேரூன்றியிருந்தது. திங்கள்கிழமைமுதல் சனிக்கிழமைவரை காலணிகள் விற்பதிலேயே குறியாக இருந்தார். அதைத்தவிர அவருக்கு வேறு எண்ணமே கிடையாது. விற்பனை, விற்பனை, விற்பனை. பணம், பணம், பணம். அவர் காலணிகள் விற்பதில் கைதேர்ந்தவராக இருந்ததால், மிக விரைவில் ஹென்டர்சன்ஸ் என்ற ஒரு பெரிய காலணி நிறுவனத்தார் அவரைத் தேடி வந்தார்கள். அந்த நிறுவனத்தின் முதலாளி ஹென்டர்சன் டுவைட் மூடியைச் சந்தித்து, “நீ மிகத் திறமையாகக் காலணிகள் விற்பதால் நான் உனக்குப் பதவி உயர்வு தரப்போகிறேன். இனிமேல் நீ ஒரேவொரு கடையில் வேலைசெய்யப்போவதில்லை. நீ அமெரிக்கா முழுவதும் பயணம்செய்து, எல்லா மாநிலங்களுக்கும் சென்று, நம்முடைய புதிய காலணிகளை விற்கப்போகிறாய். நீதான் எங்களுடைய முதல்தரமான விற்பனையாளர். இனி உனக்குச் சம்பளம் மட்டும் அல்ல, விற்பனைக்கேற்ப தரகும் உண்டு.” என்றார். மூடி தன் கற்பனைக் குதிரையை அவிழ்த்துவிட்டார். கணக்குப் போட்டார். "ஆஹா! இந்த வேகத்தில் போனால், கோடீஸ்வரனாக வேண்டும் என்ற என் கனவு சீக்கிரம் நிறைவேறிவிடும்," என்று நினைத்தார். "நான் கோடீஸ்வரனாக 10 வருடங்களாவது ஆகும் என்று நினைத்தேன். ஆனால், அதைவிடக் குறைவாகவே ஆகும் என்று தோன்றுகிறது. 10 ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை. நான் சேமிப்பிபேன். என் கனவு நனவாகும்," என்று சொல்லிக்கொண்டார்.

ஹென்டர்சன் வாக்குறுதியளித்ததோடு நிற்கவில்லை. அவர் தொடர்ந்து, "மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே நீ சிகாகோவுக்கு வரவேண்டியிருக்கும்." என்று கூறினார். உடனே மூடி, "என்னது!, மாதத்திற்கு ஒருமுறையா? ஏன் வாரத்திற்கு ஒருமுறை வரக்கூடாது?" என்று கேட்டார். அதற்கு ஹெண்டர்சன், “ஓ, இல்லை, இல்லை, முடியாது, முடியாது. வாரத்திற்கு ஒருமுறை முடியவே முடியாது. மாதத்திற்கு ஒருமுறை வருவதே பெரிய காரியம். சொல்லப்போனால் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வந்தால் போதும். வாரத்திற்கு ஒருமுறை வருவதற்கு வாய்ப்பே இல்லை," என்று கராறாகச் சொன்னார். மூடி, "ஆனால் நான் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்தாக வேண்டும்," என்றார். ஹெண்டர்சன், “ஏன்? நீ ஏன் ஞாயிற்றுக்கிழமை திரும்பிவந்தாக வேண்டும்? அப்படி என்ன வேலை?" என்று கேட்டார். அவர், "நான் ஞாயிறுபள்ளி வகுப்பில் பாடம் எடுக்கிறேன். எனவே, நான் இருக்க வேண்டும்," என்றார். அப்போது ஞாயிறு பள்ளியில் 300 குழந்தைகள் இருந்தார்கள். ஞாயிறு பள்ளியைக் கைகழுவிவிடவேண்டியிருக்கும் என்ற எண்ணம் அவருக்குச் சங்கடமாக இருந்தது. அவர் ஞாயிறு பள்ளியில் இருந்த சிறுவர்களை மிகவும் நேசித்தார். “இனிமேல் நான் உங்களை அடிக்கடிப் பார்க்கமாட்டேன்,” என்று சொல்லி அவர்களிடம் விடைபெற வேண்டும் என்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை. அந்த எண்ணமே அவருக்கு நெருடலாக இருந்தது. ஹென்டர்சனால் மூடியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர், “நீ என்ன சொல்கிறாய்? நீ பேசுவது உனக்கு நன்றாக இருக்கிறதா? இந்தப் பதவி உயர்வு, பணம் எல்லாவற்றையும் நீ தூக்கி எறியப்போகிறாயா? இந்தக் குப்பத்துப் பிள்ளைகளுக்காகவா? இந்த ஞாயிறுபள்ளி வகுப்பிற்காகவா?" என்று எரிச்சலுடன் கேட்டார். தான் செய்ய விரும்பியது மூடிக்கே கொஞ்சம் வேடிக்கையாகத்தான் தோன்றியது. ஆயினும், அந்தக் குழந்தைகளை விட்டுச்செல்ல அவருடைய மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்தக் காரியத்தைக்குறித்து அவர் பலரிடம் பேசினார். அவருடைய நண்பர் ஒருவர் ரயில்வேயில் வேலைசெய்துகொண்டிருந்தார். அந்த ரெயில்வே அதிகாரி அவருக்கு ஓர் ஆலோசனை கூறினார். "மூடி, நான் சொல்வதைக் கேள். என்னிடம் இலவச ரயில் பாஸ் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு எந்த டிரைனிலும் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். எனவே, நீ ஏன் கவலைப்படுகிறாய்? திங்கள்கிழமைமுதல் சனிக்கிழமைவரை நீ நாடு முழுவதும் உன் விற்பனை வேலையைச் செய்யலாம். இந்த ரயில் பாஸைப் பயன்படுத்தி ஞாயிற்றுக்கிழமை நீ சிகாகோவுக்குத் திரும்பி வரலாம். ஞாயிற்றுக்கிழமை வகுப்பில் பாடம் நடத்தலாம். வகுப்பு முடிந்ததும் நீ வேலைசெய்யும் இடத்துக்குத் திரும்பிப் போகலாம். இவ்வாறு நீ இரண்டையும் செய்யலாம். வேலையையும் செய்யலாம், வகுப்பும் நடத்தலாம். உன் பிரச்சினை தீர்ந்தது," என்றார். இதைக் கேட்டதும் மூடிக்குப் பெரிய நிம்மதி. "அப்பாடா! பிரச்சினை தீர்ந்தது. வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம், சீக்கிரம் கோடீஸ்வரனாகிவிடலாம். குப்பத்துப் பிள்ளைகளுக்குப் பாடமும் சொல்லிக்கொடுக்கலாம்."

எத்தனைபேரால் இந்த இரண்டையும் திறம்படச் செய்திருக்க முடியும் என்று எனக்குத் தெரியாது. அநேகமாக மூடிபோன்ற வெறியர்களால் மட்டுமே இந்த இரண்டையும் திறம்படச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறன். சிலர் வண்டியை மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுவதுபோல், மூடி தன் வாழ்க்கையை அசுர வேகத்தில் வாழ்ந்தார். திங்கள்முதல் சனிவரை வேலை, வேலை, வேலை. அலைச்சல். ஞாயிறு ரயில் பயணம். சிகாகோ வந்து ஞாயிறு வகுப்பு. பின் அன்றைக்கே திரும்பிச்செல்லுதல். இந்தப் பழக்கம், பைத்தியக்காரப் பழக்கம், அவருடைய வழக்கமாயிற்று. இது ஒருபுறம். இன்னொரு புறம், அவருடைய ஞாயிறு பள்ளி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து பெரிதாகிக்கொண்டே போயிற்று. அப்போது ஞாயிறு பள்ளியில் 1000 குழந்தைகள் இருந்தார்கள். எந்த அளவுக்கு அவருடைய ஞாயிறு பள்ளி பிரபலமாயிற்று என்றால், அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் அதைக் கேள்விப்பட்டு அவருடைய ஞாயிறு பள்ளிக்கு வருகைபுரிந்தார். மூடியும், அங்கிருந்த மற்ற ஆசிரியர்களும் சேர்ந்து சிகாகோ இதுவரை கண்டிராத அந்த மாபெரும் ஞாயிறு பள்ளியைத் திறம்பட நடத்திக்கொண்டிருந்தார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியவில்லை.

இவ்வளவு பரபரப்பான அலுவல்களுக்கிடையே அவர் எம்மா என்ற ஒரு பெண்ணை விரும்பினார். திங்கள்கிழமைமுதல் சனிக்கிழமைவரை அவர் படுபயங்கரமாகப் பம்பரம்போல் பரபரப்பாக வேலைசெய்தார். ஞாயிற்றுக்கிழமை இன்னும் அதிகமான வேலை. நேரம் போதாது என்று சொல்லும் அளவுக்குக் கைநிறைய வேலை. ஆயினும், அவர் அதை நேசித்தார். இந்த இரண்டு வேலைகளையும் தன்னால் சாமர்த்தியமாகச் செய்யமுடியும் என்று அவர் நினைத்தார். அது மட்டுமின்றி, அந்த ஆண்டின் இறுதியில், ஹெண்டர்சன் அவரை அழைத்து, "உன்னுடைய விற்பனை சிகரத்தை எட்டிவிட்டது. இதற்குமேல் விற்பனையை அதிகரிக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு நீ உச்சத்தை எட்டிவிட்டாய். அடுத்த ஆண்டு, நான் உனக்குப் பதவி உயர்வு தரப்போகிறேன்; உன் சம்பளத்தையும் உயர்த்தப்போகிறேன். இந்த ஆண்டைப்போல் அடுத்த ஆண்டும் விற்பனையைத் தக்கவைத்துக்கொண்டால் நான் உனக்கு 5000 டாலர் ஊக்கத்தொகையாகத் தருவேன்," என்றார். அது பெரிய பணம். இதைக் கேட்டதும் கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தன் கனவு மின்னல் வேகத்தில் விரைவில் நிறைவேறிவிடும் என்று அவர் நினைத்தார். அதிக பட்சம் இன்னும் ஒரு வருடம் என்று நினைத்தார். கனவு நினைவாகும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. டுவைட் மூடிக்கு அப்போது வயது 22 வயதுதான். இளம் வயதிலேயே தான் கோடீஸ்வரனாவதை நினைத்து அவர் தனக்குள்தானே பெருமிதம் அடைந்தார்.

அவர் தான் வாழும் வாழ்க்கையை மிகவும் நேசித்தார். எல்லாம் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் போய்க்கொண்டிருந்தன. ஆனால், மூன்று வாரங்களுக்குப்பிறகு, ஒருநாள் ஹென்டர்சன் திடுதிப்பென்று இறந்துவிட்டார். அவர் இறந்தபிறகு, ஒரே இரவில் அவருடைய மொத்த வியாபாரமும் படுத்துவிட்டது, வியாபாரம் படுத்தது. மூடியின் கனவு கலைந்தது. பதவி உயர்வு பஞ்சாய்ப் பறந்தது. 5000 டாலர் ஊக்கத்தொகை, வந்த வேகத்தில் உருண்டோடியது. வாக்குறுதிகள் அனைத்தும் கானல்நீராகிவிட்டன; கரைந்துபோயின. அது மட்டுமல்ல, இப்போது மூடிக்கு வேலையும் இல்லாமல் போய்விட்டது. இப்போது அவரிடம் எதுவுமே இல்லை. இது அவருக்குப் பேரிடி, பெரிய அடி. அவர் திட்டங்கள் தீட்டியிருந்தார்; கணக்குப் போட்டிருந்தார். கனவுக் கோட்டை கட்டியிருந்தார். இப்போது எல்லாம் பாழாகிவிட்டன. ஆனாலும், மூடி எளிதில் உடைந்துவிடவில்லை, சோர்ந்துபோகவில்லை. ஆனால், உண்மையில் அவர் ஆடிப்போனார். கடைசியாக அவருக்கு வேறொரு வேலை கிடைத்தது. ஆனால், அது ஒரு காலணிக் கடையில் சாதாரணமான ஒரு வேலை. ஏணியின் உச்சியில் இருந்தவர் இப்போது ஏணி வைத்திருக்கும் தரைக்கு வந்துவிட்டார். இப்போது அவர் ஏணியின் கடைசிப் படியிலிருந்து மீண்டும் மேலே ஏற வேண்டும். அவர் அப்படித்தான் உணர்ந்தார். நீண்ட தூரம் ஏறிப்போக வேண்டும். எனினும், அவர் தன் இலக்கைக் கைவிடத் தயாராக இல்லை. "சரி, மீண்டும் ஆரம்பிபோம். இன்னும் ஓராண்டில் கோடீஸ்வரனாகிவிடலாம் என்று நினைத்தேன். இப்போது அது நடக்காது. ஆனால், பரவாயில்லை. மீண்டும் கடினமாக உழைத்தால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில், நான் என் இலக்கை அடைந்துவிடுவேன்," என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

ஒரு நாள் அவர் கடையில் இருந்தபோது, ஹிப்பர்ட் என்ற ஒரு முதியவர் அவரைப் பார்க்க வந்தார். அவர் டுவைட் மூடி பாடம் நடத்திய அந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி ஆசிரியர். அவர் உள்ளே வந்து உட்கார்ந்தார். மூடி அவரைப் பார்த்து, “ஐயா, உங்களுக்கு உடல்நிலை சரியில்லாததுபோல் தோன்றுகிறது. உங்களுக்கு ஏதாவது வேண்டுமா? நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு ஹிப்பர்ட், "எனக்குக் காலணிகள் வேண்டாம்," என்றார். அவர் இருமிக்கொண்டேயிருந்தார். அவர் இருமும்போது, தன் கையில் வைத்திருந்த கைக்குட்டையால் வாயைத் துடைத்தார். அப்போது அந்தக் கைக்குட்டையில் இரத்தம் இருப்பதை மூடி பார்த்தார். எட்டி ஹிப்பர்ட் உண்மையாகவே மிகவும் நோய்வாய்ப்பட்டிருப்பதை மூடி புரிந்துகொண்டார். ஹிப்பர்ட், “நான் மருத்துவமனையில் மருத்துவரைப் பார்த்துவிட்டுத்தான் இங்கு வருகிறேன். நான் நீண்ட காலம் வாழப்போவதில்லை என்று மருத்துவர்கள் சொன்னார்கள். என் குடும்பம் ஒரு கிராமத்தில் இருக்கிறது. என் கடைசிக் காலத்தில் நான் என் குடும்பத்தாரோடு போய்த் தங்கப் போகிறேன். நான் அங்கு அவர்களோடு இருக்கும்போது இறந்துவிடுவேன். இது எனக்குத் தெரியும். நான் இனி இங்கு திரும்பிவரமாட்டேன் என்றும் எனக்குத் தெரியும். ஒரு காரியம் என்னை மிகவும் வாதித்துக்கொண்டிருக்கிறது. என் ஞாயிறு பள்ளி வகுப்புக்களையும், அந்தப் பள்ளியில் படிக்கிற இளம் பெண்களையும்குறித்து நான் கவலைப்படுகிறேன். இந்த இளம் பெண்கள் பல ஆண்டுகளாக என் ஞாயிறு பள்ளி வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒருவர்கூட உண்மையிலேயே இதுவரை இரட்சிக்கப்படவில்லை. அவர்களில் ஒருவருக்கும்கூட உண்மையாகவே கர்த்தரைத் தெரியாது. நான் என் குடும்பத்தாரோடு வாழ என் கிராமத்துக்குச் செல்வதற்குமுன் இந்த இளம் பெண்கள் அனைவரையும் ஒவ்வொருவராகத் தனித்தனியாகச் சந்தித்து, கர்த்தரிடம் வருமாறும், அவரை விசுவாசிக்குமாறும் கெஞ்சிக்கேட்க விரும்புகிறேன்," என்று சொன்னார். மூடி அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். ஹிப்பர்ட் தொடர்ந்து, “அவர்களைச் சந்திக்க நீங்கள் என்னுடன் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் வந்து எனக்கு உதவ வேண்டும்,” என்றார். ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசுவது உண்மையில் மூடியின் பாணி அல்ல. ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்ற யோசனை அவருக்குச் சங்கடமாக இருந்தது. எனவே அவர், "அவர்களிடம் என்ன சொல்வதென்று எனக்குத் தெரியாதே, அவர்கள் வீடுகளுக்குச் செல்வதா..." என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. நிறையப்பேர் இருக்கும் ஒரு வகுப்பில் பாடம் சொல்லிக்கொடுப்பது ஒரு காரியம். ஆனால், அவர்கள் அனைவரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசுவது இன்னொரு காரியம். ஆயினும், அவர்களைச் சந்திக்க மூடி ஒப்புக்கொண்டார்.

ஆகவே, வேலை முடிந்தபிறகு, அவரும் ஹிப்பர்ட்டும் அந்த இளம் பெண்களின் வீட்டுக்குச் செல்லத் தொடங்கினார்கள். ஒவ்வொருவராகச் சந்தித்தார்கள். இது மூடிக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. இப்படி அவர்கள் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்றபோது, சில நேரங்களில் சில வீடுகளில் அவர்கள் தாக்கப்பட்டார்கள். ஆம், அந்த வீடுகளில் குடிபோதையில் இருந்த அப்பாக்கள் அவர்களைத் தாக்கினார்கள். வேறு சில வீடுகளில் அவர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், ஹிப்பர்ட் எல்லாரையும் சந்திப்பதில் குறியாக இருந்தார். விடாப்பிடியாக எல்லாரையும் சந்தித்தார்கள். அவர்களுடைய வீடுகளுக்குச் சென்றபோது, அவர்கள் நேரத்தை வீணாக விரும்பவில்லை. என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்தபோது, அவர்களை அமரச்செய்து, அவர்களுடன் நேரடியாகவும் தெளிவாகவும் பேசினார்கள். ஆனால், மூடியால் முழுமையாகக் கவனம் செலுத்தமுடியவில்லை. ஏனென்றால், அந்தப் பெண்களுடைய வீடுகளையும், வீடுகளின் அழுக்கான சுற்றுப்புறங்களையும் பார்த்தபோது அவரால் பேசுவதில் கவனம் செலுத்த முடியவில்லை. அந்தக் குடும்பங்களின் பரிதாபமான நிலையைக் கண்டு அவர் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தார். அவர்களைச் சந்தித்தபோது அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்குமாறு ஹிப்பெர்ட் மூடியிடம் கேட்டார். மூடி பதட்டமடைந்தார். ஆனாலும், அவர் ஒவ்வொருவருக்காகவும் ஜெபித்தார். அவர் ஜெபிக்கத் தொடங்கியபோது, தேவன் அங்கு இருப்பதையும், இதற்குமுன் உணர்ந்ததைவிட இப்போது மிக நெருக்கமாக இருப்பதையும் அவர் உணர்ந்தார். ஹிப்பர்ட்டின் ஞாயிறு பள்ளி வகுப்பில் இருந்த சிறுமிகள் ஏறக்குறைய அனைவரும் இரட்சிக்கப்பட்டார்கள். அவர்களுடைய சந்திப்பு பெரும்பாலும் கண்ணீரில்தான் முடிந்தது. கடைசியில் ஒருநாள் அவர்கள் அனைவரும் ஹிப்பர்ட்டுக்கு விடைகொடுத்தனுப்ப ரயில்நிலையத்தில் கூடினார்கள். அதுதான் அவர்கள் அவரைக் கடைசியாகப் பார்க்கும் நேரம் என்று அவர்கள் எல்லாருக்கும் தெரியும். பெக்கி என்ற பெண் முதன்முறையாக ஜெபித்தாள். “தேவனே! ஹிப்பர்ட்டுக்காக நன்றி. அவர் இயேசுவைப்பற்றி எங்களிடம் கூறினார். அவர் எங்களிடம் கூறியதை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம்," என்று ஜெபித்தாள். கனத்த இதயத்தோடும், கண்ணீரோடும் அவருக்குப் பிரியாவிடை கொடுத்தனுப்பினார்கள்.

புதிதாக இரட்சிக்கப்பட்ட அந்த இளம் பெண்களில் தேவன் வேலைசெய்துகொண்டிருந்தார். ஆனால், அதைவிட அதிகமாகத் தேவன் மூடியில் வேலைசெய்துகொண்டிருந்தார். மக்களுடைய வாழ்க்கையில் தேவன் எப்படி மனந்திரும்புதலை உருவாக்குகிறார் என்பதையும், அவர்களுடைய வாழ்க்கையை அவர் எப்படி மாற்றுகிறார் என்பதையும் மூடி மிக நெருக்கமாகப் பார்த்தார். மக்களுடைய வாழ்க்கையில் தேவன் வல்லமையாய் வேலைசெய்வதை மூடி பார்த்தார். மக்கள் முற்றிலும் மாற்றப்பட்டார்கள், இந்தப் பெண்கள் முற்றிலும் மாற்றப்பட்டார்கள். மதுவின் வாசனையும், குப்பைகூளங்களின் துர்நாற்றமும் நிறைந்த அந்த இடிந்த வீடுகளில் வாழ்ந்த பெண்கள் இரட்சிக்கப்பட்டதை அவர் கண்கூடாகக் கண்டார். அவர்கள் தங்கள் சூழ்நிலையை மறந்து தேவனைப் பெற்றுக்கொண்டார்கள். அந்த இளம் பெண்களையும், அவர்களுடைய அழுக்கடைந்த, இடிந்த வீடுகளையும், சுத்தமும் சுகாதாரமுமற்ற சூழலையும், இவைகளுக்கு அப்பாற்பட்டு அந்த இளம் பெண்கள் அனைவரும் இரட்சிக்கப்பட்டதையும் அவர் கண்கூடாகக் கண்டதும், அவருடைய உலகப்பிரகாரமான இலட்சியம், கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தணியாத வெறி, அந்தக் கனவு எல்லாம் மாயமாக மறைந்துபோயின. தான் அடையவிரும்பிய கனவு என்னவென்பதை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டார். அது தான் சிக்கவிருந்த ஒரு இராட்சசப் பொறி என்பதைப் புரிந்துகொண்டார்.

தான் தேவனுக்கும், பணத்துக்கும் ஊழியம்செய்ய முயல்வதை மூடி உணர்ந்தார். தான் இரண்டு எஜமான்களுக்குப் பணிவிடைசெய்வதையும், அதைத் தான் உளமார விரும்புவதையும் அவர் கண்டார். இந்த இரண்டும் சேர்ந்து ஒன்றாகப் போகமுடியாது என்பதையும் அவர் புரிந்துகொண்டார். காலணிகள் விற்பனைசெய்யும் வேலையை விட்டுவிட முடிவுசெய்தார். ஆனாலும், அவரைப்பொறுத்தவரை அதை விடுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஏனென்றால், அந்த வேலையும், அந்த வேலையினால் வரும் பணமும் அவருக்குக் கவர்ச்சியாக இருந்தன. அவருக்குப் பணத்தின்மேல் இன்னும் ஒரு பிடி, ஓர் ஈர்ப்பு இருந்தது. ஆனால், அவர் அந்த வேலையை விட்டார்; விட்டுவிட்டு ஒரு பழைய ஆலயத்தின் பின்புறத்தில் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து அதில் தங்கினார். அது ஒரு சிறிய அறை. படுக்கையறை என்றுகூடச் சொல்லமுடியாது. அவர் தேவனிடம், “ஆண்டவரே, நான் படிக்கவில்லை, நான் கல்வியறிவு பெற்றவன் அல்ல. என்னால் சரளமாக வாசிக்கக்கூட முடியாது, நான் ஐந்தாம் வகுப்பைக்ககூடத் தாண்டவில்லை. ஆனால், எனக்குக் காலணிகளை விற்கத் தெரியும். அது ஒன்றுதான் என்னால் செய்ய முடியும். எனவே, நீர் எனக்குத் தந்த அந்தத் தாலந்தையும் நான் உமக்குக் காணிக்கையாக்குகிறேன். ஏதோவொரு வகையில் நீர் என்னைப் பயன்படுத்தும்," என்று சொல்லி தன்னை அர்ப்பணித்தார். அவர் அந்தச் சிறிய அறையில் குடியேறினார். அதன்பின் அவர் ஒய்எம்சிஏவிலும் ஈடுபடத் தொடங்கினார்.

அப்போது YMCA ஒரு கிறிஸ்தவ அமைப்பாக இருந்தது. வாலிபர்களின் கிறிஸ்தவ சங்கம், அது கிறிஸ்தவ வாலிபர்களின் குழு. அவர் YMCAயில் ஈடுபாடுகொள்ளத் தொடங்கினார். அவர் அதில் மீண்டும் முழு வேகத்தில் செயல்படத் தொடங்கினார். அவர் எதையும் அரைகுறையாகச் செய்யமாட்டார். அங்கு ஜெபக் கூட்டங்கள் நடத்தினார்; சிறு சிறு குழுக்களை ஏற்பாடு செய்து அதில் பேசினார்; ஞாயிறு பள்ளி நடத்தினார். ஞாயிறு பள்ளிகள் நடத்த ஆசிரியர்களைத் தேடினார்; கண்டுபிடித்த ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்தார். முழு நேரமும் அவர் இப்படியே வேலைசெய்துகொண்டிருந்தார். அப்போது அவர் அந்தச் சிறிய அறையில்தான் வாழ்ந்தார்.

எம்மாவுக்கும், அவருக்கும் ஏற்கெனவே நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது. எம்மா முதன்முறையாக மூடியைப் பார்க்க இந்தச் சிறிய அறைக்கு வந்தபோது, அந்த அறையைப்பார்த்ததும் அவர் கதறி அழுதார். ஏனென்றால் அந்த அறை அவ்வளவு மோசமாக இருந்தது. ஆனால், எம்மாவைப் பார்த்ததும் மூடி மகிழ்ச்சியடைந்தார். இந்தச் சிறிய அறையில் வாழ்ந்தபோது, மூடி தேவனுக்கான காரியங்களில் முழுமையாக மூழ்கிவிட்டார். எம்மா அவரைப் பார்த்து, "இந்தச் சிறிய அறையில் உங்களால் எப்படி வாழ முடிகிறது?” என்று கேட்டார். மூடியால் வாழ முடிந்தது. ஏனென்றால், தான் செய்துகொண்டிருக்கும் காரியங்கள் சரியாவை என்றும், அவைகளில் தேவன் இருக்கிறார் என்றும் அவர் அறிந்திருந்ததால், மூடியால் அந்த அறையில் வாழ முடிந்தது.

இந்த நேரத்தில் அவர் நிதி திரட்டவும் தொடங்கினார். ஏனென்றால், ஞாயிறு பள்ளியில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போயிற்று. அப்போது அவருடைய ஞாயிறு பள்ளியில் 1000 குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தார்கள். நீங்கள் இதைக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். அவர்களுக்கு ஒரு பெரிய இடம் தேவைப்பட்டது. எனவே, அவர் நிதி திரட்ட மக்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அவர் வியாபாரிகளைத் தொடர்புகொண்டார். நிதி திரட்டுவதற்கு அவருடைய விற்பனைத் திறமை அவருக்குக் கைகொடுத்தது. அந்தத் திறமையும், அனுபவமும் அவருக்குப் பேருதவியாக இருந்தன. நிதி திரட்டி பெரிய கட்டிடங்களை கட்டினார். இரட்சிக்கப்பட்ட அந்த இளம் பெண்களில் பலர் இப்போது வளர்ந்து வாலிபர்களாகியிருந்தார்கள். அவர்களில் பலருக்கு இப்போது வயது சுமார் 18 இருக்கும். எனினும், அவர்கள் ஞாயிறு பள்ளியை விட்டு வெளியேற விரும்பவில்லை. எனவே, அவர் ஒரு பெரிய சபை கட்டிடத்தையும் கட்டினார். அதன் பெயர் இல்லினாய்ஸ் ஸ்ட்ரீட் சர்ச். அது ஒரு பெரிய கட்டிடம். 3,000பேர் அமரக்கூடிய அளவுக்குப் பெரிய அரங்கம், அதுமட்டுமல்ல, ஞாயிறு பள்ளி நடத்துவதற்கு ஒரு பெரிய கூடமும் இருந்தது.

சபையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஞாயிறு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோயிற்று. மூடி கூட்டங்களில் பிரசங்கித்துக்கொண்டும், சிறு குழுக்களை ஏற்பாடுசெய்துகொண்டும், ஜெபக்கூட்டங்களை நடத்திக்கொண்டும், இடைவிடாது மக்களைச் சந்தித்துக்கொண்டுமிருந்தார். அந்த நாட்களில், மூடியைப்பற்றி மக்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? "இவர் வாலிபர், துடிப்பானவர், உணர்ச்சிகரமானவர், சுறுசுறுப்பானவர், உழைப்பாளி, ஆற்றல்மிக்கவர், நிறைய தவறுகளைச் செய்பவர்," என்று சொன்னார்கள். ஆம், அவர் தவறுகள் செய்தார் என்பது உண்மைதான். ஆனால் தவறுகளைப்பொறுத்தவரை ஒரு காரியம் இருந்தது. என்ன தெரியுமா? அவர் தான் செய்த ஒரு தவறை அடுத்தமுறை செய்யவில்லை. அதவாது ஒரே தவறை அவர் இரண்டுமுறை செய்யவில்லை. அதற்குக் காரணம் அவர் கற்றுக்கொள்ளக்கூடிய மனப்பாங்கு உடையவர்.

அவர் இவ்வளவு பரபரப்பாகச் செயல்பட்டதால், அவருடைய மனைவி எம்மா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அவர் சரியான நேரத்தில் உணரவில்லை. எம்மாவுக்கு ஆஸ்துமா நோய் இருந்தது. அந்த நாட்களில் அது மிகவும் ஆபத்தானநோயாகவே கருதப்பட்டது. மருத்துவர் மூடியிடம், “நீங்கள் சிகாகோ நகரத்தின்பரபரப்பிலிருந்து கொஞ்ச நாட்கள் ஒதுங்கியிருக்க வேண்டும். நீங்கள் உங்கள் மனைவியைக் கூட்டிக்கொண்டு கப்பலில் எங்காவது போய்வாருங்கள். அவருக்கு இப்போது கடற்காற்று அதிகமாகத் தேவை. அவர் கடற்காற்றை அதிகமாக சுவாசித்தால், ஆஸ்துமா கொஞ்சம் கொஞ்சமாக குணமடையும் என்று நம்புகிறேன்," என்று சொல்லியிருந்தார். எனவே, மூடி தன் ஊழியத்தைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, கடற்பயணம் மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இங்கிலாந்துக்குச் செல்லலாம் என்ற எண்ணம்தான் அவருக்கு மேலோங்கி நின்றது. ஏனென்றால், அவர் இங்கிலாந்தைப்பற்றி சில விஷயங்களைக் கேள்விப்பட்டிருந்தார். மேலும் அவர் அங்கிருந்த சிலரைப்பற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தார். அப்படி அவர் கேள்விப்பட்ட ஒருவர் ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர். அவர் ஆங்கிலேயர் அல்ல. அவர் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், ஒரு பைசாகூட இல்லாதிருந்தும், பெரிய அனாதை இல்லங்களையும், பெரிய கட்டிடங்களையும் கட்டியிருக்கிறார் என்று மூடி கேள்விப்பட்டிருந்தார். அவர் உண்மையிலேயே அந்த நபரைப் பார்க்க விரும்பினார். அவரிடம், "இதன் இரகசியம் என்ன? எப்படி நிதி திரட்டினீர்கள்?” என்று அறிய விரும்பினார். மேலும், இங்கிலாந்தில் ஒரு பெரிய பிரசங்கியார் இருக்கிறார் என்றும், அவர் இங்கிலாந்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் கேள்விப்பட்டார். அவரைச் சந்திக்கவும், அவருடைய இரகசியத்தை அறியவும் அவர் விரும்பினார்.

அவரும் எம்மாவும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார்கள். அங்கு அவர்கள் முதலாவது ஜெர்மன் நாட்டுக்காரரைச் சந்தித்தார்கள். அவர் வேறு யாருமல்ல. அவர் ஜார்ஜ் முல்லர். அனாதைகளின் அப்பா. அவர்கள் இங்கிலாந்தில் ஆஷ்லே டவுன்ஸில் இருந்த 1,000 அனாதைக் குழந்தைகள் தங்கியிருந்த பெரிய அனாதை இல்லங்களைப் பார்த்து, "முல்லர் அவர்களே, உங்களுடைய இரகசியம் என்ன? இதை எப்படிச் செய்தீர்கள்? இவையகளையெல்லாம் எப்படிக் கட்டினீர்கள்?” என்று கேட்டார். சாந்தமான, துல்லியமான ஜார்ஜ் முல்லர் அவர் சொன்னதைக் கேட்டு, அவருடைய வார்த்தைகளைத் தன் கையால் சற்று ஒதுக்கிவிட்டாற்போல், “ஓ, இந்தக் கட்டிடங்களைப்பற்றிக் கவலைப்படவேண்டாம். டுவைட் மூடி தேவனுக்காக என்ன செய்யலாம் என்பதல்ல காரியம்; இது அதைவிட மிக அதிகம். தேவன் டுவைட் மூடிக்கு என்ன செய்யலாம் என்பதே காரியம்," என்று சொன்னார்.

ஜார்ஜ் முல்லர் சொன்ன வார்த்தைகள் அவருடைய காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தன. அந்த ரீங்காரம் ஓய்வதற்குள் ஒருநாள் மாலை அவர் ஒரு கூட்டத்திற்குச் சென்றார். அங்கு சார்லஸ் ஸ்பர்ஜன் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். அந்தக் கூட்டத் தொடரில், ஸ்பர்ஜனின் பிரசங்கத்தைக் கேட்டு, மூடி மிகவும் மாறிவிட்டார். ஆனால் அதற்கும்மேலாக, அவர் ஒரு சிறிய ஜெபக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கு மற்ற இருவரைப்போல பிரபலமாகாத , அறியப்படாத, ஹென்றி வார்லி என்பவர் பேசினார். அவர் பேசினார் என்றுகூடச் சொல்லமுடியாது. அவர் பகிர்ந்துகொண்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம். வார்லி சொன்ன ஒரு வாக்கியம் டுவைட் மூடியின் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் விழுந்தது. "தன்னை முற்றிலுமாகவும், முழுமையாகவும் தேவனுக்கு அர்ப்பணித்த ஒரு மனிதனைக்கொண்டு தேவனால் என்ன செய்ய முடியும் என்பதை உலகம் இன்னும் பார்க்கவில்லை," என்பதே அந்த வாக்கியம். வார்லியின் இந்த வாக்கியம் அவருக்குள் ஆழமாக வேரூன்றிற்று. அதை அவர் மீண்டும் மீண்டும் சிந்தித்துப்பார்த்தார். "தேவன் பயன்படுத்த விரும்பும் மனிதன் படித்த மேதாவியாகவோ அல்லது அதிகமான சாதனைகள் புரிந்தவனாகவோ அல்லது நிறையைத் தாலந்துகளையுடையவனாகவோ அல்லது வேத அறிஞனாகவோ இருக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. மாறாக, அந்த நபர் தன்னைத் தேவனுக்கு முற்றிலுமாகவும், முழுமையாகவும் அர்பணித்தவனாக, ஒப்புக்கொடுத்தவனாக இருக்க வேண்டும் என்றுதானே சொன்னார்," என்று திரும்பத்திரும்ப சிந்தித்தார். ஆகவே, மூடி தேவனிடம், “கர்த்தாவே, நான் அந்த மனிதனாக இருக்க விரும்புகிறேன். என்னில் வேலைசெய்யும், என்னை மாற்றும். என்மூலம் நீர் வேலைசெய்வீராக. அதற்கேற்றாற்போல் நான் என்னை முற்றிலுமாகவும், முழுவதுமாகவும் கையளிக்கிறேன், ஒப்படைக்கிறேன்," என்று சொன்னார்.

சில மாதங்களுக்குப்பின் மூடி இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா திரும்வுக்குத் திரும்பினார். அப்போது அவருடைய மனப்பாங்கு முற்றிலும் மாறிற்று. ஆனால், இப்போது அவர் இன்னும் அதிக பரப்பாகிவிட்டார். இல்லினாய்ஸ்ஸ்ட்ரீட் சர்ச்சில் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பிரசங்கிக்க வேண்டும். ஞாயிறு பள்ளியில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்குப் பாடம் நடத்த வேண்டும். இப்போது அதையும் தாண்டி அமெரிக்காவின் பிற மாநிலங்களிலும் பேசுவதற்கு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று பிற மாநிலங்களிலும் பேசினார். இதனால் அவர் அடிக்கடி பயணம் செய்தார். அவருடைய மனைவி எம்மாவால் இவைகளைச் சமாளிக்க முடியவில்லை. ஏற்கெனவே, அவருக்கு ஆஸ்துமா நோய். இப்போது அவர்களுக்கு இரண்டு சிறிய குழந்தைகள் வேறு இருந்தார்கள். மூடி ஊழியத்துக்காக அடிக்கடி வெளியூர் சென்றதால் அவருடைய மனைவி எம்மாவும், இரண்டு குழந்தைகளும் வீட்டில் தனியாக இருந்தார்கள். அந்த நாட்களில் பயணம் செய்வது கடினம்.ஒன்று குதிரைவண்டியில் அல்லது குதிரையில் பயணம் செய்ய வேண்டும். அவர் பெரும்பாலும் கழுதையில்தான் பயணம் செய்தார். தேவையும், வசதியும் இருந்தால் கப்பலில் பயணம் செய்தார். அந்தக் காலத்தில் பயணம் செய்வது மிகவும் கடினமானதாகவும் ஆபத்தானதாகவும் இருந்தது.

ஒருமுறை ஊழியத்துக்காக அவர் ஒரு மாநிலத்துக்குச் சென்றிந்தபோது, அங்கு அவர் ஐரா சங்கி என்ற ஒரு பாடகரைக்குறித்துக் கேள்விப்பட்டார். அவர் மிகவும் பிரபலமான கிறிஸ்தவப் பாடகர். மூடி ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது அந்தக் கூட்டத்தில் அந்தப் பாடகர் பாடினார். பாடகாரின் குரலைக் கேட்டதும் அது ஐரா சங்கிதான் என்று மூடி புரிந்துகொண்டார். மூடி கூட்டத்தில் உட்கார்ந்திருக்கும்போது, "நான் இந்தப் பாடகரைச் சந்தித்துப் பேசப்போகிறேன். இது ஓர் அற்புதமான வாய்ப்பு. கூட்டங்களில் நான் பிரசங்கம் செய்வேன். இவர் பாடல்கள் பாடுவார். நாங்கள் இருவரும் சேர்ந்து இப்படி நற்செய்திக் கூட்டங்கள் நடத்தலாம். அப்போது நற்செய்தி அதிகமான மக்களைச் சென்றடைய முடியும்," என்று சிந்திக்கத் தொடங்கினார். கூட்டம் முடிந்தவுடன் மூடி ஐரா சங்கியிடம் விரைந்து சென்று, “உங்கள் குரலைக் கேட்டேன். நீங்கள் உண்மையிலேயே மிகவும் நன்றாகப் பாடுகிறீர்கள். நீங்கள் உங்கள் ஊரைவிட்டுக் கிளம்பி, என்னோடு சிகாகோவில் வந்து தங்கிவிடுங்கள். நாம் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து நாடு முழுவதும் நற்செய்திக் கூட்டங்கள் நடத்துவோம். நீங்கள் பாடுங்கள்; நான் பிரசங்கம் செய்வேன். இவ்வாறு செய்தால் நாம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கலாம்," என்றார். அதற்கு ஐரா, “ஹலோ, என் பெயர் ஐரா? உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டார். இதன் பொருள் என்னவென்றால், "நான் பிரபலமான ஆள். பிரபலமான பாடகர். என் பெயர் பலருக்குத் தெரியும். ஆனால், நீங்கள் யார் என்று தெரியாதே. நீங்கள் அவ்வளவு பிரபலமான ஆள் இல்லையே!" இதுதான் மூடியின் பாணி, முரட்டுத்தனமான வழி. இந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து அவர் எவ்வளவு ஊக்கமானவர் என்றும், உணர்ச்சிகாரணமானவர் என்றும் புரிந்துகொள்ளலாம். ஆனால், ஐராவும் அவருடைய மனைவியும் மூடி சொன்னதை ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ளாமல், இதைப்பற்றி ஜெபித்தார்கள். கர்த்தரே தன்னை அழைத்ததாக ஐரா உணர்ந்தார். எனவே, அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தைவிட்டு சிகாகோவிற்குக் குடிபெயர்ந்தார்கள். அதன்பின் இந்த இரண்டு குடும்பகளுக்குமிடையே அற்புதமான ஐக்கியம் மலர்ந்தது.

மூடி ஒரு டைனமோபோலச் செயல்பட்டார். சில வருடங்கள் உருண்டோடின. சிறுவயதிலிருந்தே அவர் துருதுருவென்று செயல்பட்டார். அதே ஆற்றலுடன், அவர் இப்போது நிறைய வேலைகள் செய்துகொண்டிருந்தார். அவர் மிகுந்த ஆர்வத்தோடும், ஈடுபாடோடும் பிரசங்கித்தார். "உண்மையில், அவர் பிரசங்கபீடத்தில் பிரசங்கிக்கவில்லை; மாறாக, ஒரு குதிரையைப்போல் துள்ளிப்பாய்ந்துகொண்டிருந்தார்," என்று அவரைக்குறித்து மக்கள் சொன்னார்கள். அவ்வளவு ஆற்றல். மூடியைப்பற்றிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அவருடைய பிரசங்கம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அந்த நாட்களில், பிரசங்கித்தவர்களெல்லாம் மெத்தப் படித்தவர்கள். ஆனால், மூடி படிக்காதவர். அவர் சாமான்யர்களைப்போல் இயல்பாகப் பேசினார். பேசும்போது அவர் அடிக்கடி வேடிக்கையான கதைகள் சொன்னார். மக்கள் உண்மையாகவே அவருடைய பேச்சை மிகவும் இரசித்தார்கள். அது மட்டும் அல்ல. அவர் முழுமூச்சுடன், முழு பலத்தோடு பேசினார். அவருடைய பேசுதல் மக்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒருமுறை அவருடைய கூட்டத்தில் ஒவ்வோர் இரவும் இரண்டு வயதான பெண்கள் முன் வரிசையில் அமர்ந்திருப்பதை அவர் கவனித்தார். அவர்கள் இருவரும் கூட்டம் முழுவதும் ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தின் முடிவில் அவர்கள் அவரிடம் வந்து, "நாங்கள் உங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தோம்," என்று சொன்னார்கள். அதற்கு அவர், "நன்றி," என்று சொன்னார். ஒவ்வொரு நாளும் இப்படியே நடந்தது. அவர்கள் முழு நேரமும் முன் வரிசையில் உட்கார்ந்து ஜெபித்தார்கள். கூட்டத்தின் முடிவில் வழக்கம்போல் அந்த இரு பெண்களும் அவரிடம், "நாங்கள் உங்களுக்காக ஜெபித்தோம்," என்று கூறினார்கள். அவரும் பதிலுக்கு நன்றி என்று சொன்னார். இப்படியே சில நாட்கள் கடந்தன. சில நாட்களுக்குப்பின், மூடி அந்த இரண்டு வயதான பெண்களிடம் சென்று, “நீங்கள் ஏன் எனக்காக ஜெபிக்கிறீர்கள்? இங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் நற்செய்தியைக் கேட்டு மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசுவை விசுவாசிக்குமாறு ஏன் அவர்களுக்காக ஜெபிக்கக்கூடாது?” என்று வினவினார். அதற்கு அந்த வயதான பெண்மணிகளில் ஒருவர், “ஏனென்றால், உங்களுக்குத்தான் வல்லமை தேவை. உங்களுக்குத்தான் பரிசுத்த ஆவியானவரின் சிறப்பான அபிஷேகம் தேவை,” என்று சொன்னார்கள். அதைக் கேட்டதும் மூடியின் மனதில்,, "“மன்னிக்கவும், என்னிடம் வல்லமை இருக்கிறது. எனக்கு நிறைய அனுபவம் உண்டு. நான் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். மேலும் நான் ஒரு நல்ல பேச்சாளர்," என்ற எண்ணம்தான் முதன்முதலாக எழுந்தது. ஆனால், இந்த வார்த்தைகள் அவருடைய இருதயத்திலிருந்து வாய்க்கு வருவதற்குமுன் அந்த எண்ணத்தை அவர் நிறுத்திக்கொண்டார். தன்னிடம் வல்லமை இல்லை என்பதை உணர்ந்து, அவர்களுக்குமுன் முழங்கால்படியிட்டு, அந்த இரு பெண்களிடம், “இப்போது எனக்காக ஜெபிப்பீர்களா?” என்று கேட்டார். அவர்கள் அவருக்காக ஜெபித்தார்கள். "கர்த்தாவே! இவரை நீர் நிரப்பும். இவருக்கு நீர் ஞானத்தையும், பரிசுத்த ஆவியானவரையும் அருளும்," என்று வேண்டினார்கள்.

அவர்கள் இருவரும் ஜெபித்துமுடித்தபின், முழங்காற்படியிட்டிருந்த மூடி எழுந்தார். அதுமுதல் அவர் உண்மையாகவே மாறிவிட்டார். அதுவரை தான் தன் சொந்தத் திறமைகளை நம்பியிருந்ததையும், தன் சொந்த திறன்களைகளையும், தாலந்துகளையும் பற்றிப்பிடித்துக்கொண்டிருந்ததையும் அவர் தெளிவாக உணர்ந்தார். அதற்குப்பிறகு அவரால் அதுவரை செயல்பட்டதுபோல் செய்யமுடியவில்லை. தான் செய்யும் வேலை தன்னுடைய வேலையில்லை, அது கர்த்தருடையது என்பதைக் கண்டார். இந்த அனுபவத்திற்குப்பிறகு, மூடியின் பிரசங்கங்கள் முற்றிலும் மாறிவிட்டன. அவர் இதற்குமுன் பேசியதுபோலவே இதற்குப்பிறகும் பேசினார். ஆனால், பிரசங்கித்த மூடி வேறு மனிதனாக மாறியிருந்தார். கர்த்தர் வேலைசெய்ய ஆரம்பித்ததால், அவருடைய பிரசங்கத்தைக் கேட்ட இன்னும் ஏராளமானோர் இரட்சிக்கப்பட்டார்கள்.

1871ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை மூடி வழக்கம்போல் இல்லினாய்ஸ் ஸ்ட்ரீட் சர்ச்சில் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பிரசங்கித்தார்; அதன்பின்னர் ஞாயிறுபள்ளிக்கு விரைந்தார். ஞாயிறு பள்ளியில் பாடம் நடத்திமுடித்தபின், அங்கிருந்த ஆசிரியர்களைச் சந்தித்தார்; இரவு உணவை வேகமாகச் சாப்பிட்டார்; அன்று மாலையில் இல்லினாய்ஸ் ஸ்ட்ரீட் சர்ச்சில் மாலை ஆராதனையில் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பேசத் தயாராக இருந்தார். பேச ஆரம்பித்தார். பேசும் போது, அவருடைய கவனம் சிதறிற்று. சபையாருடைய கவனமும் சிதறியிருந்ததை அவர் கவனிக்கத் தவறவில்லை. சபையார் அங்குமிங்கும் ஒருவரையொருவர் திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அவர் பேசுவதை உற்றுக் கவனிக்கவில்லை. தொடர்ந்து பேசுவது அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. வெளியே தீயணைப்பு வண்டியின் அபாய ஒலிச் சத்தம் கேட்டது. தொடர்ந்து என்ன பேசுவது என்று மறந்துவிட்டதால் சட்டென்று, திடுதிப்பென்று, அவர் பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டார். வழக்கமாகப் பிரசங்கித்து முடித்தபின் பலிபீட அழைப்பு விடுப்பார். ஜெபிக்க விரும்புபவர்களை முன்னேவருமாறு அழைப்பார். அன்று அவர் அதையும் செய்ய மறந்துவிட்டார், அதுவும் மிகவும் அசாதாரணமான செயல். “எனக்கு என்ன ஆச்சு? என்ன நடக்கிறது? நான் ஏன் இப்படி இருக்கிறேன்?” என்று அவர் சிந்தித்தார். அவர் அங்கிருந்த ஐரா சங்கியிடம், "சரி, பரவாயில்லை. எப்படியும் அடுத்த ஞாயிறு இருக்கவே இருக்கிறது, அதிகம் கவலைப்படத் தேவையில்லை," என்று சொன்னார். அன்று இரவு அவர்கள் கட்டிடத்தைவிட்டு வெளியே வந்தபோது வானத்தில் ஒரு விசித்திரமான சிவப்பு நிற ஒளி இருந்தது. அது நெருப்புபோல் தோன்றியது. சிகாகோவில் ஒரு நதி இருந்ததால், அந்த நெருப்பு வெகு தொலைவில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் அன்று நள்ளிரவில், யாரோவொருவர் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. திடுதிப்பென்று எழுந்தார்கள். அன்றிரவு படுக்கைக்குச் செல்வதற்குமுன் தூரத்தில் தெரிந்த தீ மளமளவென்று மிக வேகமாகப் பரவி, சிகாகோ நகரத்துக்குள் வந்துவிட்டதால் நகரம் முழுவதையும் காலிசெய்யவேண்டியதாயிற்று.

மூடி குழந்தைகளையும், எம்மாவையும் வேகமாகத் தட்டி எழுப்பினார். அவர்கள் வெளியே ஓடும்போது வீட்டிலிருந்த சில பொருட்களை எடுத்துக்கொண்டு ஓட முயன்றார்கள். அந்த நாட்களில், கார்கள் கிடையாது என்பதை நினைவில்வைத்துக்கொள்ளுங்கள். நகரத்தை விட்டு வெளியேற மக்கள் குதிரைகளையும், குதிரைவண்டிகளையுமே சார்ந்திருந்தார்கள். மிக விரைவில், அவர்கள் வீட்டைவிட்டு தெருவுக்கு வேகமாக ஓடினார்கள். எங்கு பார்த்தாலும் புகைக்காடு. அவர்களால் எதையும் பார்க்க முடியவில்லை. எல்லாப் பக்கங்களிலும் மக்கள் ஓடினார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் பார்த்த தீப்பிழம்பு அவர்களை நெருங்கிவிட்டதைக் கண்டார்கள். மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பிணவாசனை காற்றில் மிதந்தது. உடல்கள் எரிவதைக் கண்டார்கள். மூடி ஒரு வண்டியில் ஏறினார். தப்பித்தோம் பிழைத்தோம் என்று பதறியபடி வெளியேறினார்கள். கட்டியிருந்த துணி மட்டும்தான் மிச்சம்.

தீயை அணைக்கச் சில நாட்கள் ஆயிற்று. கடும் போராட்டத்துக்குப்பின் தீ அணைக்கப்பட்டது. தீ அணைக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு மக்கள் மீண்டும் நகருக்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். மூடியும் நகரத்துக்குத் திரும்பினார். அவர் தெருக்களின்வழியாக நடந்து வந்தார். அவர் தன் வீட்டிற்கு வந்தார். இல்லை, அவருடைய வீடு இருந்த இடத்துக்கு வந்தார். ஆனால் அங்கு வீடு இல்லை. அது இப்போது இடிந்து விழுந்து எரிந்து சாம்பலாகியிருந்தது. அங்கு எதுவும் இல்லை. அங்கு அவர் வீடு இருந்ததற்கான சுவடுகூட இல்லை. எதுவும் மிச்சமில்லை. பின்னர் கொஞ்சத்தூரம் நடந்து சென்றார். ஏனென்றால், அந்தத் தெருவின் முனையில்தான் இல்லினாய்ஸ் ஸ்ட்ரீட் சர்ச் இருந்தது. சபை இருந்த இடத்துக்குச் சென்றார்; பார்த்தார். மூவாயிரம்பேர் அமரக்கூடிய அந்த பெரிய அரங்கம் இப்போது இடிபாடுகளின் குவியலாக இருந்தது. ஞாயிறு பள்ளி நடத்தும் அரங்கம் இருந்தது. எப்படி? அங்கே கொஞ்சம் குழாய்கள் ஒட்டிக்கொண்டிருந்தன. எல்லாமே நாசமாயிற்று. எதுவும் மிச்சமில்லை. அந்தத் தீவிபத்தினால் சிகாகோ நகரம் முழுவதும் இடிபாடுகளின் குவியலாக மாறிற்று. சங்கியும், அவருடைய குடும்பத்தாரும் தங்கள் உடைமைகள் எல்லாவற்றையும் இழந்தார்கள். உயிர் மட்டும்தான் மிச்சம். அவர்கள் உடைந்துபோனார்கள். வேறு வழியில்லாமல், உறவினர்களுடன் தங்குவதற்காக அவர்கள் பென்சில்வேனியாவுக்குப் புறப்பட்டார்கள். மூடியும், எம்மாவும் எல்லாவற்றையும் இழந்தார்கள். உயிர் மட்டும்தான் மிச்சம். ஆனால், மூடி உடைந்துவிடவில்லை, உறைந்துவிடவில்லை. இது அவருக்குப் பெரிய அடி. அவர் தேவனுக்காக உருவாக்கியிருந்த அனைத்தும் இப்போது குப்பைக் குவியலாயிற்று. தேவனுடைய வேலையெல்லாம் எரிந்து சாம்பலானதுபோல் இருந்தது.

அவர் முழங்கால்படியிட்டு, ஜெபிக்க முயன்றார். ஆனால், அவரால் ஜெபிக்க முடியவில்லை. ஆனால், அவர் விடுவதாக இல்லை; ஜெபித்தார். அவர் ஜெபிக்க ஆரம்பித்ததும், ""நான் ஏன் இப்படி நினைக்கிறன்? கர்த்தருடைய வேலையெல்லாம் எரிந்து சாம்பலானதுபோல் இருக்கிறதே என்று நான் ஏன் நினைக்கிறன்? இந்தக் கட்டிடங்களா தேவனுடைய வேலை? இல்லை! மக்கள்தான் தேவனுடைய வேலை!" என்ற உணர்வு அவருக்குள் எழுந்தது. முழங்காலிலிருந்து எழுந்து, " நான் உயிருடன் இருக்கிறேன்! நான் உயிருடன் இருக்கிறேன், எங்கள் குழந்தைகள் உயிருடன் இருக்கிறார்கள், விசுவாசிகள் உயிருடன் இருக்கிறார், ஞாயிறு பள்ளி மாணவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். எல்லாரும் வீடுகளையும், கட்டிடங்களையும்தானே இழந்தோம். ஆனால், வீடுகளும், கட்டிடங்களும் தேவனுடைய வேலை இல்லையே! அவை ஒருபோதும் தேவனுடைய வேலையாகாது," என்று முழங்கினார். இந்தப் புதிய புரிதலோடும், புதுப்பிக்கப்பட்ட வீரியத்தோடும் அவர் குதித்தெழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்காக போர்வைகள், உடைகள், உணவுகள் ஏற்பாடுசெய்தார்; அவர்களுடைய தேவைகளை நிறைவுசெய்யத் தொடங்கினார். அது மட்டும் அல்ல. அந்த நெருப்பு சிகாகோ நகரம் முழுவதையும் சுட்டெரித்துச் சாம்பலாக்கியிருந்தது. நிறையப்பேர் எல்லாவற்றையும் இழந்தார்கள். பலர் மரித்தார்கள். சிலர் மரணத்தைப் பார்த்தார்கள். வேறு சிலர் முதன்முறையாக தங்கள் சொந்த மரணத்தை எதிர்கொண்டார்கள். எனவே, பலர் அப்போது நற்செய்தியைக் கேட்க விரும்பினார்கள். இந்த நேரத்தில் தேவன் மூடியை வல்லமையாய்ப் பயன்படுத்தினார்.

அன்று அமெரிக்காவில் அவர் மிகவும் முக்கியமானவராகக் கருதப்பட்டதால், இங்கிலாந்திலும் அவரைபற்றிக் கேள்விப்பட்டார்கள். ஒருமுறை மூன்று ஆங்கிலேய நண்பர்கள் அவரை இங்கிலாந்துக்கு வருமாறு அழைத்தார்கள். அந்த மூன்று நண்பர்களும் ஒருவேளை வியாபாரிகளாக இருக்கக்கூடும். அவர் இங்கிலாந்துக்குச் செல்வதற்குத் தேவையான பணம் அனுப்புவதாக அவர்கள் சொன்னார்கள். அவர்கள் இங்கிலாந்தில், இலண்டனில், மாபெரும் நற்செய்திக் கூட்டங்கள் ஏற்பாடுசெய்யத் திட்டமிட்டிருந்தார்கள். எனவே, மூடி இந்த வாய்ப்பிற்காகவும், அவர்கள் செய்திருந்த ஏற்பாடுகளையும், திட்டங்களையும் அறிந்துகொள்வதற்காகம் ஆவலோடு காத்திருந்தார். ஆனால் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அனுப்புவதாகச் சொன்ன பணம் வரவில்லை; ஏற்பாடுகள் செய்தார்களா இல்லையா என்று தெரியாது. இங்கிலாந்துக்குச் செல்ல வேண்டுமா வேண்டாமா என்று தெரியாது. இந்தச் சூழ்நிலையில், சங்கி, “நாம் இங்கிலாந்துக்குச் செல்வதை அவர்கள் விரும்பவில்லை என்று இதன்மூலம் வெளிப்டையாகத் தெரிகிறது. இதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்," என்றார். ஆனால், மூடி அப்படி நினைக்கவில்லை. "இல்லை, இல்லை, நாம் இங்கிலாந்துக்கும், வேல்சுக்கும் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்," என்று சொன்னார். அதற்கு சங்கி, “நீங்கள் சொல்வது அபத்தமானது. நம்மிடம் போதுமான பணம் இல்லை. எப்படியோ இருக்கிற எல்லாவற்றையும் தட்டிச் சுரண்டினால், இங்கிலாந்துக்குப் போவதற்குத் தேவையான பணத்தை நாம் ஏற்பாடுசெய்யலாம். ஆனால், நாம் அங்கு போய் என்ன செய்யப்போகிறோம்? இது உண்மையில் நடைமுறையில் சாத்தியமில்லை," என்று பதிலளித்தார். ஆனால், அந்த மூன்று நண்பர்களிடமிருந்து எந்தப் பதிலும் வராதிருந்தும், தாங்கள் இங்கிலாந்துக்குச் செல்ல வேண்டும் என்று மூடி ஆழமாக உணர்ந்தார். சில மாதங்களுக்குப்பிறகு அவர்கள் போதுமான பணத்தை ஏற்பாடு செய்தபின், அந்த மூன்று பேருக்கும், "நாங்கள் இந்தக் கப்பலில், இந்தத் தேதியில், வருகிறோம். நாங்கள் இந்தத் துறைமுகத்தில் இறங்குகிறோம். நாங்கள், ஒருவேளை, இந்தப் பட்டணத்தில் தங்குகிறோம்," என்று எல்லா விவரங்களையும் ஒரு கடிதமாக எழுதினார்.

அந்தக் காலத்தில் பயணம் செய்வது மிகக் கடினம். ஆனால், அவர்கள் கப்பல் ஏறி இங்கிலாந்து சென்றடைந்தார்கள். அவர்கள் ஒரு மிகச் சாதாரணமான விடுதியில் தங்கினார்கள். அந்த விடுதியில் ஒரு கடிதம் அவர்களுக்காகக் காத்திருந்தது. “எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கிறோம்," என்று எழுதப்பட்டிருக்கும் என்று நினைத்து மூடி மிகுந்த உற்சாகத்தோடு கடிதத்தைத் திறந்து பார்த்தார். கடிதத்தைத் திறந்துபார்த்ததும் அவருடைய முகம் சுருங்கிப்போனது. உண்மையில் அது ஒரு கடிதம் அல்ல. அது ஒரு தந்தி. மூன்று நண்பர்கள் அவரை இங்கிலாந்துக்கு அழைக்க ஏற்பாடுகள் செய்வதாகச் சொன்னார்கள் இல்லையா? முதல் நண்பர் ஒன்பது மாதங்களுக்குமுன்பு இறந்துவிட்டார். இரண்டாவது நண்பர் ஆறு மாதங்களுக்குமுன்பு இறந்துவிட்டார், மூன்றாவது கடைசி நண்பர் நான்கு மாதங்களுக்குமுன்பு இறந்துவிட்டார்! மூன்று நண்பர்களும் இறந்துவிட்டார்கள். எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. அவர்கள் வருவதுகூட யாருக்கும் தெரியாது. அவர்கள் அங்கு இருப்பதும் யாருக்கும் தெரியாது. இலண்டனில் கூட்டங்கள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. மூன்று நண்பர்களும் பணம் அனுப்பாததும், கடிதம் எழுதாததும் ஆச்சரியமில்லை.

ஆகவே, மூடியும் சங்கியும் அந்த விடுதியில் தங்களுடைய அறையில் உட்கார்ந்துகொண்டு, “நாம் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறோம்? என்ன செய்யப்போகிறோம்? நாம் என்ன நம்பிக்கையோடு இங்கு வந்தோம்?எத்தனை மாதங்கள் ஆயத்தம்செய்தோம்! எத்தனை மாதங்கள் கப்பலில் பயணம் செய்தோம்! இதோ இங்கு சும்மா உட்கார்ந்துகொண்டிருக்கிறோம். அது மட்டும் அல்ல. இந்த விடுதியில் நம்மால் ஒருவாரம்கூடத் தங்க முடியாது,” என்று பேசிக்கொண்டார்கள். எம்மா அவருடைய ஆடைகளை சுருக்கம்நீக்கி, அடுக்கிவைத்தபோது, ஒரு கசங்கிய கடிதத்தைக் கண்டு, அதை எடுத்து மூடியிடம் கொடுத்து, “என்ன இது?” என்று கேட்டார். மூடி அதைப் பார்த்து, "ஓ, ஆமாம், கொஞ்ச நேரத்திற்கு,முன்தான் யாரோவொருவர் அதைக் கொடுத்தார். நான் அதை மறந்துவிட்டேன்," என்று சொல்லிவிட்டு அதைத் திறந்துபார்த்தார். அதை ஜார்ஜ் பென்னட் என்ற ஒருவர் எழுதியிருந்தார். அவர் இங்கிலாந்தின் வடக்கில் உள்ள யார்க் நகரில் இருந்த YMCAஇல் ஒரு முக்கியமானவர். அந்தக் கடிதத்தில் அவர், "நீங்கள் இங்கிலாந்துக்கு வருகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். அப்படி வரும்போது, இந்தப் பக்கம் வந்தால், தயவுசெய்து யார்க் நகரிலுள்ள எங்கள் YMCAக்கு வாருங்கள்," என்று எழுதியிருந்தார்.

உடனடியாக மூடி, “நாம் இங்கு இருப்பது தேவனுடைய சித்தம்! தேவனுடைய சித்தத்தின்படிதாம் நாம் இங்கு வந்திருக்கிறோம். நாம் யார்க் நகருக்குப் போகிறோம்," என்று சங்கியிடம் கூறினார். அவர் பென்னட்டுக்கு, "நாங்கள் நாளைக்கு வருகிறோம், நாங்கள் அங்கு இருப்போம்," என்று ஒரு தந்தி அனுப்பினார். பென்னட் ஒரு வேதியியலாளர். அவர் களைத்துப்போன, பலவீனமான, பயந்த, வயதான ஒரு மனிதர். இந்தத் தந்தி கிடைத்ததும் அவர் பதறினார். “என்னது? நாளைக்கு வருகிறார்களா? நான் தயாராக இல்லையே!” என்று நினைத்தார். ஆனால், "உங்கள் வருகைக்கு நன்றி. ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்," என்று பதில் தந்தி அனுப்பினார்.

அவர்கள் இருவரும் யார்க் நகருக்குப் புறப்பட்டார்கள். அவர்களைப் பார்த்ததும் பென்னட் புழுவைப்போல் நெளிய ஆரம்பித்தார். மிகவும் சங்கடப்பட்டார். மூடியும் சங்கியும் ஒரு பெரிய அரங்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பிரசங்கிப்பார்கள் என்று அவர் கேள்விப்பட்டிருந்தார். அவர் தன் மருந்துக்கடையின் மேல்மாடியில் இருந்த தன் சிறிய அறையை அவர்களுக்குக் காண்பித்தார். அதுதான் ஒய்.எம்.சி.ஏ அலுவலகம். அங்குதான் அவர் கூட்டத்தை ஏற்பட்டு செய்திருந்தார். முதல் நாள் எட்டுபேர் மட்டுமே வந்தார்கள். பென்னட் மிகவும் வெட்கப்பட்டார்! அவர் அவர்களுக்குமுன் நிற்க மிகவும் கூனிக்குறுகினார். அவர்களுடைய கண்களுக்குத் தெரியாமல் மறைந்துபோனால் நலமாயிருக்கும் என்று விரும்பினார். ஆனால், மூடியும் சங்கியும் மனம் தளரவில்லை. உண்மையில், அங்கு மூவாயிரம்பேர் இருந்தால் எப்படிப் பாடுவாரோ அப்படி சங்கி பாடினார். அதுபோல மூடியும்  அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் பிரசங்கித்தார். அடுத்தநாள் 12 பேர் வந்தார்கள். அதுதான் தாங்கள் பிரசங்கிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிற இடம் என்று அறிந்த மூடி அதே ஆர்வத்தொடும், பாரத்தோடும் அந்தப் 12 பேருக்கும் பிரசங்கித்தார்.

சில வாரங்களுக்குப்பிறகு, இந்த இரண்டு அமெரிக்கர்களைப்பற்றி மக்கள் கேள்விப்படத் தொடங்கினார்கள். குறிப்பாக, சங்கி பாடுவதை அவர்கள் கேட்டிருக்கலாம். சீக்கிரத்தில் மக்கள் அதிகமாக வர ஆரம்பித்ததால் அந்த அறையில் எல்லாரும் உட்கார முடியவில்லை. எனவே, அவர்கள் வெளியே பெரிய கூட்டங்களை நடத்தத் தொடங்கினார்கள். யார்க் நகரத்தில் அவர்கள் நடத்திய கூட்டங்களின்மூலமாக ஆயிரக்கணக்கான மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள்.

ஆனால், இங்கிலாந்தில் அவர்கள் அவ்வளவு சுலபமாக ஊழியம் செய்யமுடியவில்லை. மிகக் கடுமையான தடைகளையும், விமரிசனங்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மூடியைக்குறித்து அங்கிருந்தவர்கள் என்னென்ன சொன்னார்கள் தெரியுமா? அவர்கள் மூடியை விரும்பவே இல்லை. முதலாவது, அவர் படிக்காதவர். இரண்டாவது, அவர் அமெரிக்கர்; அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஆங்கிலம்தான் பேசுவார்கள் என்றாலும் அமெரிக்க உச்சரிப்பும், இங்கிலாந்து உச்சரிப்பும் மிகவும் வித்தியாசமானவை. இருவருடைய ஆங்கிலமும் வித்தியாசமானவை. மூன்றாவது, மூடி படிக்காததால், அவருடைய ஆங்கில இலக்கணம் மோசமாக இருந்தது. படிக்காத ஒருவன் தமிழ் பேசினால் எப்படி இருக்குமோ, அப்படி அவர் ஆங்கிலம் பேசினார். அது மட்டுமல்ல, அவர் ஒரு காலணி விற்பனையாளராக இருந்தார் என்றும் பெரிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடிப்பதுபோல் கண்டுபிடித்தார்கள்! செய்தித்தாள்கள் அவரைப்பற்றி இப்படிக் கேவலமாக எழுதின. அவர்கள் மூடியையும், சங்கியையும் கேலிசெய்து கேவலமான கட்டுரைகள் எழுதினார்கள். அவருடைய மோசமான இலக்கணத்தையும், முட்டாள்தனமான பேசுதலையும், அவர் பேசும் விதத்தையும் குறித்து மட்டமாக எழுதினார்கள். அவரும், அவருடைய பேசுதலும் ஆங்கிலேயர்களின் முறைமைக்கு முரணானவை என்று குறிப்பிட்டார்கள்.

மூடி கொஞ்சம் மனந்தளர்ந்தார் என்பது உண்மைதான். ஆனால் ஒரு மனிதர் அவரிடம் வந்து இதைப்பற்றி நேரடியாகச் சொன்னதும் அவர் மீண்டும் இயல்பான நிலைக்கு வந்துவிட்டார். வந்தவர் யார் தெரியுமா? அவர் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியாகவோ அல்லது சுமை சுசுமப்பவராகவோ இருக்கலாம். அப்படிப்பட்ட ஒருவர். அவர் வந்து மூடியிடம், "இவ்வளவு மோசமான இலக்கணத்தோடு கர்த்தருக்காகப் பேசலாமா? கேவலமாக இல்லையா?" என்று கேட்டார். அதற்கு மூடி மிக எளிமையாகப் பதிலளித்தார். “ஆமாம் ஐயா. நான் மோசமான இலக்கணத்தோடுதான் பேசுகிறேன். தவறு செய்கிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், பாருங்கள் நண்பரே, உங்களுக்கு நல்ல இலக்கணம் தெரியும். இலக்கணச் சுத்தத்தோடு உங்களால் பேச முடியும். அதைக்கொண்டு நீங்கள் கர்த்தரை ஏன் சேவிக்கக்கூடாது? ஏன் இதுவரை சேவிக்கவில்லை?" என்று கேட்டார். இதுதான் மூடி.

இத்தனை ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதும், தேவன் அவரைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தார். “தன்னை முற்றிலுமாகவும், முழுமையாகவும் கர்த்தருக்கு ஒப்புவித்த ஒரு மனிதனைக்கொண்டு தேவன் என்ன செய்ய முடியும் என்பதை உலகம் இன்னும் பார்க்கவில்லை,” என்ற ஹென்றி வார்லியின் வரிகளை அவர் ஒருபோதும் மறக்கவில்லை. அந்த வார்த்தைகளை அவர் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். தான் ஒரு சாதாரணமான மனிதன் என்றும், தேவன் தன்னிலும், தன்மூலமாகவும் வேலைசெய்கிறார் என்றும் மூடி நன்றாக அறிந்திருந்தார்.

தேவன் மூடியின் அர்ப்பணிப்பைக் கனம்பண்ணினார். இங்கிலாந்தில், யார்க் என்ற இடத்தில் எட்டுப்பேருடன் கூட்டத்தைத் தொடங்கி, ஸ்காட்லாந்தில் பெரிய கூட்டத்தில் அவர் தன் பயணத்தை முடித்தார். கிளாஸ்கோவில் 30,000 பேர் கூடிய கூட்டத்தில் பேசினார். எடின்பர்கில் கூட்டம் ஏற்பாடுசெய்தபோது, மக்களைத் தங்கவைக்கப் போதுமான இடம் இல்லாததால், பெரிய பெரிய கூடாரங்களைப் போட்டார்கள். பின்னர் லிவர்பூலிலும், அதன்பின் மீண்டும் யார்க்கிலும் கூட்டங்களில் பேசினார். இலண்டனுக்குச் சென்றார். கூட்டங்களில் பேசினார். அவர் பேசுவதைக் கேட்கப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். உண்மையில், இங்கிலாந்து அந்த நாட்களில் கர்த்தருக்காகக் கிளர்ந்தெழுந்ததுபோல் அதற்குமுன் ஒருபோதும் கிளர்ந்தெழுந்ததில்லை என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அநேகமாக அதற்குமுன் ஒருவேளை ஜாண் வெஸ்லியின் காலத்தில் இதுபோன்ற எழுப்புதல் நடந்திருக்கலாம். மூடியின் பிரசங்கத்தைக் கேட்ட அநேகர் கர்த்தரை அறிந்துகொண்டார்கள், இரட்சிக்கப்பட்டார்கள். குழந்தைகளுக்காகக் சிறப்புக் கூட்டங்களையும் நடத்தினார். லிவர்பூலில், ஒருமுறை அவர் குழந்தைகளுக்கு ஞாயிறு பள்ளி வகுப்பும், சிறப்புக் கூட்டங்களுக்கும் நடத்தியபோது அதில் 14000 குழந்தைகள் கலந்துகொண்டார்கள்.

அவர் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய 22 வயது மகன் வில்லியம் அவருடன் இருந்தார். கடல் பயணம் ஒத்துக்கொள்ளாததால் மூடி தன் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். குமட்டல், தலைவலி போன்ற பிரச்சினைகள். அவருடைய மகன் வில்லியம் மூச்சிரைக்க அவருடைய அறைக்குள் ஓடிவந்தார். "வாங்க, சீக்கிரம் வாங்க, வெளியே போவோம்," என்று பதட்டத்துடன் கூறினார். என்ன நடக்கிறது என்று மூடிக்குத் தெரியாது. கொஞ்ச நேரத்துக்குமுன் ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது. ஏதோ விபத்து நடந்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. ஆனால், என்ன நடந்தது என்று அவருக்குத் திட்டவட்டமாகத் தெரியாது. வில்லியம் தொடர்ந்து, "நாம் உடனடியாகக் கப்பலின் மேல்தளத்திற்குப் போக வேண்டும்," என்று அவரை அவசரப்படுத்தினார். பிற பயணிகளும் தங்கள் தங்கள் அறைகளைவிட்டு மேல்தளத்துக்குநேராக வேகமாக ஓடினார்கள். அவர் கப்பலின் மேல்தளத்தைச் சென்றடைந்தபோது, கப்பலின் மாலுமி அங்கு பேசிக்கொண்டிருந்தார். "கப்பலில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டிருக்கிறது. என்ஜின் அறையில் ஏதோவொன்று வெடித்துவிட்டது. அந்த வெடிவிபத்தின் காரணமாக கப்பலின் அடித்தட்டில் கசிவு ஏற்பட்டுவிட்டது, கப்பல் மெதுவாக மூழ்கிக்கொண்டிருக்கிறது. கப்பலையும், பயணிகளையும் காப்பாற்ற நாங்கள் எங்களாலான எல்லா முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறோம். நீங்கள் அனைவரும் சாப்பாட்டு அறைக்குச் சென்று காத்திருங்கள். கப்பல் ஆபத்தில் இருக்கிறது என்பதைப் பிறருக்கு அறிவிக்கும் அடையாளமாக நாங்கள் தீப்பந்தங்களை எரியப்போகிறோம். அருகிலிருக்கும் கப்பல்கள் உடனடியாக வந்து நமக்கு உதவுவார்கள், நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்," என்ற நம்பிக்கை வார்த்தைகளைக் கூறினார். ஆனால், பயணிகள் பதறினார்கள், கலங்கினார்கள், தவித்தார்கள், தத்தளித்தார்கள், கப்பல் 25 மணி நேரத்தில் மூழ்கிவிடும் என்று தெரியவந்தது. ஒரு பக்கம், எங்கோவிருந்து எப்படியாவது உதவி வரும் என்ற நம்பிக்கை. இன்னொரு புறம், 24 மணி நேரத்தில் உதவி வர வாய்ப்பில்லை என்ற பயம். விபத்தின் காரணமாக இப்போது கப்பல் ஓடாமல் நின்றுவிட்டதால், மூடியின் உடல்நிலை சீராயிற்று. அவர் சரியாகிவிட்டார். வாந்தி, தலைச்சுற்றல் எல்லாம் நின்றுவிட்டது. இப்போது தன் கண்களுக்குமுன்பாகச் செய்வதறியாது திகைத்துநிற்கும் பயணிகளைப் பார்க்கிறார். மாலுமியின் அனுமதியுடன், அவர் பேசத் தொடங்கினார். நித்தியத்தைக்குறித்தும், மரணத்தைக்குறித்தும் அவர் பேசினார். எல்லாரும் சேர்ந்து பாடல்களும், கீர்த்தனைகளும் பாடினார்கள். அந்தக் கட்டத்தில், அந்த நாளில், மூடி தங்களிடையே இருந்ததைக்குறித்து அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். மாலுமி தீப்பந்தங்களை வீசிக்கொண்டேயிருந்தார். ஒரு கப்பல் அந்த அபாய அடையாளத்தைக் கண்டு, அவர்களை நோக்கி வரத் தொடங்கியது. அருகில் வந்ததும், அவர்கள் மீட்புப் படகுகளை அனுப்பிப் பயணிகளை மீட்க முயன்றார்கள். ஆனால், மீட்புப் படகுகளை இறக்கவோ, அனுப்பவோ முடியவில்லை. ஏனென்றால், கடல் கொந்தளிப்பு அவ்வளவு அதிகமாக இருந்தது. அது மட்டுமல்ல, இரவு நேரம், கும்மிருட்டு. பெரும் புயல் காற்றும் சேர்ந்துகொண்டது. எவ்வளவோ பிரயாசப்பட்டும் அவர்களால் மீட்புப் படகுகளை அனுப்ப முடியவில்லை. மரணம் நெருங்கிவருவதை எல்லாரும் உணர்ந்தார்கள். மூடி தன் மனைவி, மகன், மகள் எல்லாரையும் விட்டுப் பிரிந்துசெல்வதைப்பற்றி எண்ணினார். தேவன் என்ன செய்ய விரும்புகிறார் என்று அவருக்குத் தெரியவில்லை. இதுதான் முடிவாக இருக்குமா என்று அவருக்குத் தெரியவில்லை. சிகாகோவியில் நடக்கவிருந்த உலகக் கண்காட்சியில் பிரசங்கிக்க அவர் ஏற்கெனவே ஏற்பாடுசெய்திருந்தார். அந்தக் கண்காட்சி இதுவரை அங்கு யாரும் பார்த்திராத அளவுக்குப் பிரமாண்டமான கண்காட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே, தான் போகும் இடம் பரலோகமா அல்லது சிகாகோவா என்று அவருக்குத் தெரியவில்லை. ஆனால், உள்ளத்தில் இனம்புரியாத அமைதி இருந்தது. "உம் சித்தம் ஆகக்கடவது" என்ற வார்த்தைகளில் அவருக்கு அமைதி கிடைத்தது. அந்த வார்த்தைகளில் அவர் சமாதானமடைந்தார்.

பயணிகள் அவரிடம் வந்து, "நாம் என்ன செய்யலாம்? இதோ, நமக்கான மீட்பு நம் அருகில், மிக அருகில், இருக்கிறது. ஆனால் அவர்களால் அந்த மீட்புப் படகுகளை அனுப்ப முடியவில்லை. என்ன செய்யலாம்?" என்று பதட்டத்தோடு கேட்டார்கள். மூடி பயணிகளிடம், "எல்லாரும் முழங்கால்படியிடுங்கள். நாம் ஜெபிக்கப்போகிறோம். 'தேவனே, இந்தக் கடலைக் கண்ணாடிபோல ஆக்கும்' என்று நாம் வேண்டுவோம்," என்றார். எல்லாரும் முழங்கால்படியிட்டு அப்படியே ஜெபித்தார்கள். அடுத்த நாள் காலை விடிந்தவுடன், அவர்கள் கீழே எட்டிப் பார்த்தார்கள். உண்மையாகவே கடல் முகம்பார்க்கும் கண்ணாடிபோல் தெளிவாக இருந்தது. ஆம், கர்த்தர் அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டார். அருகிலிருந்த கப்பலிலிருந்து உடனடியாக மீட்புப்படகுகளை அனுப்பினார்கள். எல்லாரும் துரிதமாக வெளியேற்றப்பட்டார்கள், மீட்கப்பட்டார்கள், காப்பாற்றப்பட்டார்கள். சரியான நேரத்தில் எல்லாம் கைகூடிற்று. ஏனென்றால், அப்போது பயணிகள் கூடியிருந்த சாப்பாடு அறையும் கொஞ்சம்கொஞ்சமாகச் சாயத்தொடங்கியிருந்தது. தன் ஊழியம் இன்னும் முடிவடையவில்லை என்றும், தன் ஊழியத்தின் வேகம் குறைய வேண்டிய தேவையில்லை என்றும் மூடி அறிந்துகொண்டார்.

சிகாகோவை வந்தடைந்தார்கள். அந்தக் கப்பலில் மரணவாசலைத் தொட்டுவிட்டுத் திரும்பியபின், அவர் சிகாகோவில் உலகக் கண்காட்சியில் பிரசங்கித்தார். அது மிகப் பெரிய, பிரமாண்டமான கண்காட்சி. அவர் ஒரு பிரபலமான சர்க்கஸ் நிறுவனத்தை அணுகி, அவர்களிடம், "உங்கள் சர்க்கஸ் கூடாரத்தை வாடகைக்குத் தருவீர்களா?" என்று கேட்டார். அதற்கு அந்த நபர், “எங்கள் கூடாரத்தில் 20,000 பேர் உட்காரலாம். இவ்வளவு பெரிய கூடாரத்தை நீங்கள் ஏன் வாடகைக்குக் கேட்கிறீர்கள்?” என்று கேட்க, மூடி, "நாங்கள் நற்செய்திக் கூட்டம் நடத்தப்போகிறோம்," என்று கூறினார். அதற்கு அந்த நபர் கிண்டலாகவும், சத்தமாகவும் நகைத்துக்கொண்டு, “உங்கள் நற்செய்திக் கூட்டத்தில் 20000பேர் கலந்துகொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அத்தனைபேர் நற்செய்தியைக் கேட்க வருவார்களா?” என்றார். மூடி, "ஆம், வருவார்கள்," என்றார். அந்த மனிதர் மீண்டும் சிரித்தார், அவர், "சரி, அது உங்கள் பாடு, வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி," என்று சொல்லி சர்க்கஸ் கூடாரத்தை வாடகைக்குக் கொடுக்க முடிவுசெய்தார். மூடி அதை வாடகைக்கு வாங்கினார். காலைதோறும் மூடி அதில் நற்செய்தி கூட்டங்கள் நடத்தினார். மாலைநேரத்தில் சர்க்கஸ்காரர்கள் சர்க்கஸ் நடத்தினார்கள். இதுதான் ஏற்பாடு. ஒவ்வொருநாளும் கூடாரத்தில் நற்செய்திக் கூட்டத்தில் மக்கள் திரளாகக் கூடினார்கள். சர்க்கஸ் மாஸ்டர் அதிர்ச்சியடைந்தார். ஒவ்வொரு நாளும் கூடாரம் நிரம்பிவழிந்தது. உட்காருவதற்குப் போதுமான இடமில்லாததால் மக்கள் நடக்கும் வழிகளில் நின்றுகொண்டிருந்தார்கள். சர்க்கஸ் மாஸ்டரால் நம்பவே முடியவில்லை. மாலையில், அவ்வளவு பெரிய சர்க்கஸ் கூடாரத்தில் சர்க்கஸ் பார்க்க அவ்வளவு மக்கள் வரவேயில்லை. அவர் மூடியிடம், “நீங்கள் எங்கள் சர்க்கஸில் சேர்ந்துவிடுகிறீர்களா?" என்று வேடிக்கையாகக் கேட்டார். மூடியும் வேடிக்கையாகப் பதிலளித்தார்.

அவர் குழந்தைகளை மிகவும் நேசித்தார். ஞாயிறு பள்ளியில் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்பதோடு அவர் திருப்தியடையவில்லை. அதில் அவருக்கு மகிழ்ச்சிதான். ஆனால், திருப்தியாகிவிடவில்லை. குழந்தைகளுக்காக இன்னும் ஏதாவது செய்யவேண்டும் என்று அவர் விரும்பினார். எனவே, அவர் குழைந்தைகளுக்காகப் பள்ளிகளைக் கட்ட முடிவு செய்தார். பணம் செலவுசெய்து வழக்கமான பள்ளி , கல்லூரிகளுக்குச் செல்ல இயலாத ஏழைக் குழந்தைகளுக்காகப் பிரத்தியேகமாக அவர் நான்கு பள்ளிகளைக் கட்டினார். இந்தப் பள்ளிகளில் பிற பாடங்களோடு வேதாகமத்தையும் கற்பித்தார்கள். இந்தப் பள்ளிகள் இன்றைக்கும் இருக்கின்றன. அவர் பிறந்து வளர்ந்த ஊராகிய நார்த்ஃபீல்ட்டில் ஆண்களுக்கு ஒரு கல்லூரியும், பெண்களுக்கு ஒரு கல்லூரியும் இருக்கின்றன. இவைகளெல்லாம் மூடியின் ஊழியமே. அவர் முதியவராவதற்குள், ஏறக்குறைய 5,000 குழந்தைகள் இந்தப் பள்ளிகளில் படித்துமுடித்தார்கள். அவர் ஊழியம் செய்த நாட்களில் மக்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள், அவரை ஏளனம்செய்தார்கள்; "இவர் படிக்காதவர், பேசத் தெரியாதவர், இலக்கணம் தெரியாதவர்" என்றெல்லாம் தரக்குறைவாகப் பேசினார்கள். ஆனால், இந்தப் படிக்காதவர்தான் குழைந்தைகள் படிப்பதற்காகப் பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் கட்டினார்.

அப்போது அவருக்கு ஏறக்குறைய 50 வயது இருக்கும். அப்போதே அவருடைய உடல்நிலை சரியில்லாமல் போயிற்று. இடைவிடாத பயணமும், இடைவிடாத பிரசங்கமும் அவருடைய உடல்நலத்தைக் கடுமையாகப் பாதித்தன. மருத்துவர் அவரிடம், “நீங்கள் ஒரு வாரத்தில் எத்தனைமுறை பிரசங்கம்செய்கிறீர்கள்? மூன்றுமுறையா, நான்குமுறையா?" என்று கேட்டார். மூடி அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “மூன்று நான்குமுறையா? இல்லை. ஒரு வாரத்தில் சராசரியாக 15 முறை நான் பிரசங்கிக்கிறேன்!” என்று கூறினார். அதற்கு மருத்துவர், “இது முட்டாள்தனம். இப்படியே தொடர்ந்தால், நீங்கள் சீக்கிரமாகப் பிரசங்க மேடையில் பிரசங்கித்துக்கொண்டிருக்கும்போதே இறந்துவிடுவீர்கள். அதுதான் நடக்கப்போகிறது. வேண்டுமானால் பாருங்கள்," என்று பதில் சொன்னார். அதற்கு மூடி, “நல்லது. அப்படி நடந்தால் அது நல்லது," என்று அமைதியாகப் பதிலளித்தார். அவர் தன் வேகத்தைக் கடுகளவும் குறைக்க விரும்பவில்லை. ஆனால், இப்போது பெரியவர்களாக வளர்ந்துவிட்ட அவருடைய பிள்ளைகளும், அவருடைய மனைவி எம்மாவும் அவர் தன் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். "ஒருவேளை என் வேகத்தை நான் கொஞ்சம் குறைத்து மெதுவாகச் செயல்பட வேண்டுமோ! நான் என் பயணத்தையும், பிரசங்கத்தையும் கொஞ்சம் குறைக்க வேண்டுமோ!" என்ற எண்ணம் மூடிக்கும் வந்தது. .

மூடியின் கடைசி நற்செய்திக் கூட்டம் அமெரிக்காவில் கன்சாஸில் நடைபெற்றது. அங்கு அவர் பல்லாயிரக்கணக்கான மக்களிடையே பேசினார். கூட்டங்கள் முடிந்து வீடு திரும்பியபோது, அவர் மிகவும் சோர்வாக இருந்தார். அவருடைய மனைவி எம்மா அவரை மிகுந்த கரிசனையோடும், அக்கறையோடும் விழுந்துவிழுந்து கவனித்தார். ஆனால், மூடி தன் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. இந்தப் பூமியில் தன் நேரம் முடியப்போகிறது என்று அவருக்குத் தெரியும். பூமியில் தன் பணிவிடை ஓட்டம் முடிந்துவிட்டது என்பதை அவர் அறிந்திருந்தார். உடல்நிலை சரியில்லாமல், படுத்த படுக்கையில், இதுதான் தன் கடைசி சில மணிநேரங்கள் என்று மூடிக்குத் தெரியும். அவர் தன் குடும்பத்தாரிடம், “இதுவே என் வெற்றி. இதுவே எனக்கு முடிசூட்டும் நாள். இதுவே நான் பல வருடங்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள்,” என்றார். இந்த வார்த்தைகளோடு, தன் முழுஇருதயத்தோடு தன்னையும், தன் வாழ்க்கையையும், தன் தாலந்துகளையும் முற்றிலுமாகவும் முழுமையாகவும் தேவனுக்கு அர்பணித்திருந்த படிப்பறிவற்ற ஒரு காலணி விற்பனையாளர் நித்தியத்திற்குள் நுழைந்தார்.

டுவைட் மூடி தன் காலத்தில் தன் தலைமுறைக்கு ஊழியம் செய்தார். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் 10 கோடி மக்கள் அவருடைய பிரசங்கத்தைக் கேட்டிருப்பார்கள் என்று சொல்லுகிறார்கள். இவர்களில், ஏராளமான குழந்தைகள் அடங்குவர். தேவனுக்குத் தன்னை முற்றிலுமாகவும், முழுமையாகவும் அர்ப்பணிக்கும் ஒரு மனிதன்மூலமாகத் தேவன் என்ன செய்ய முடியும் என்பதைக் குறைந்தபட்சம் மூடியின்மூலம் தேவன் இந்த உலகதுக்குக் கொஞ்சம் திரைநீக்கிக் காண்பித்தார் என்று சொல்லலாம்.

இவரைப்போன்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது, கேட்கும்போது, அவர்களுக்கும் நமக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் இடையே இருப்பதுபோன்ற தூரம், இடைவெளி இருப்பதாகப் பல வேளைகளில் நாம் நினைக்கக்கூடும். எத்தனை ஏணி வைத்தாலும் எட்டாதுபோல் தோன்றலாம். இலண்டனில் அல்லது சிகாகோவில் அல்லது சென்னையில் 20,000 அல்லது 30,000 பேருக்கு முன்னால் நின்று பிரசங்கிப்பதை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். நமக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தோன்றலாம். ஆனால் டுவைட் மூடியின் ஒரு மேற்கோளைச் சொல்லி நான் முடிக்கப்போகிறேன்.

அநேகர் கிறிஸ்துவின் சேவையில் சேர்க்கப்படவில்லை, தேவனுக்காக ஊழியம் செய்யும் சிலாக்கியத்தைப் பலர் இழந்துவிட்டார்கள். ஏனென்றால், அவர்கள் பெரிய காரியங்களை சாதிக்க முயல்கிறார்கள். நாம் சின்னச்சிறு செயல்களை செய்யத் தயாராக இருப்போமாக. ஒன்றைச் செய்வதற்குத் தேவன்தாம் ஆதாரம் என்றால், ஒன்றைச் செய்யச் சொன்னவர் அவர்தாம் என்றால், செய்யும் செயல் மிகச் சிறியதாக இருந்தாலும் அது சிறியதல்ல, எதுவும் சிறியதல்ல, என்பதை நினைவில் கொள்வோமாக." ஆமென்.