Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

இது சபை வரலாற்றைப்பற்றிய தொடரின் ஆறாம் பாகம். முழுத் தொடரில் அப்போஸ்தலர் காலத்திலிருந்து சீர்திருத்த காலம்வரையிலான சபை வரலாற்றை நாம் பார்ப்போம். சபை வரலாற்றை  நான்கு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் பாகம் சபை வரலாற்றைப்பற்றிய ஒரு முன்னுரை, ஓர் அறிமுகம். இரண்டாம் பாகம் ஆண்டவராகிய இயேசு பரமேறியதிலிருந்து அப்போஸ்தலனாகிய யோவான் மரித்த கி.பி 100வரையிலான அப்போஸ்தலர் காலச் சபை வரலாறு. மூன்றாம் பாகம் கி.பி. 100லிருந்து உரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் கி.பி 312இல் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட காலம்வரையிலான ஆதிச் சபை வரலாறு. அந்தக் கால கட்டத்தில் கிறிஸ்தவம் எப்படிப் பரவியது என்று மூன்றாம் பாகத்தில் பார்த்தோம். நான்காம் பாகத்தில், அப்போஸ்தலர் காலத்துக்குப்பிந்தைய, அதாவது உரோமப் பேரரசன் கான்ஸ்டைன்டீன் கிறிஸ்தவனாகி, தன் பேரரசைத் தீவிரமாகக் கிறிஸ்தவமயமாக்குவதற்கு முந்தைய, கி.பி. 100முதல் 312வரையிலான அதே கால கட்டத்தில், ஆதிச் சபைக்கு நேரிட்ட சித்திரவதையைப் பார்த்தோம். ஐந்தாம் பாகத்தில் கி.பி. 100முதல் 312வரையிலான அதே கால கட்டத்தில் ஆதிக் கிறிஸ்தவர்கள் எதை விசுவாசித்தார்கள் என்றும், தங்கள் விசுவாசத்தை எப்படித் தற்காத்தார்கள் என்றும் நாம் பார்த்தோம். சபை வரலாற்றைப்பற்றிய இந்த ஆறாம் பாகத்திலும் அதே காலகட்டத்தில், அதாவது கி,பி 100முதல் கி.பி 312வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த அம்புரோஸ், அத்தனேசியஸ், அதெனகோரஸ், அகுஸ்தீன், பசில், ஜான் கிறிஸ்சோஸ்டம், அலெக்ஸாந்திரியாவின் கிளெமெந்து, சிரில், சிப்ரியான், கிரகோரி, ஹிலாரி, ஜெரோம், ஐரேனியஸ், ஜஸ்டின், லாக்டான்டியஸ், லியோன், மினுசியஸ் பெலிக்ஸ், ஓரிஜென், தெர்துல்லியன், தியோடோரெட், பெர்னார்ட் போன்ற பல சபைப் பிதாக்களில் குறிப்பிடத்தக்க சிலரையும், அவர்களுடைய நூல்களையும்பற்றிப் பேசப்போகிறோம்.


சில முக்கியமான தலைவர்களும், அவர்களுடைய நூல்களும்

சபை வரலாறு, பாகம் 6

I. முன்னுரை

இது சபை வரலாற்றைப்பற்றிய தொடரின் ஆறாம் பாகம். முழுத் தொடரில் அப்போஸ்தலர் காலத்திலிருந்து சீர்திருத்த காலம்வரையிலான சபை வரலாற்றை நாம் பார்ப்போம். சபை வரலாற்றை நான்கு காலகட்டங்களாகப் பிரிக்கலாம் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். முதல் பாகம் சபை வரலாற்றைப்பற்றிய ஒரு முன்னுரை, ஓர் அறிமுகம். இரண்டாம் பாகம் ஆண்டவராகிய இயேசு பரமேறியதிலிருந்து அப்போஸ்தலனாகிய யோவான் மரித்த கி.பி 100வரையிலான அப்போஸ்தலர் காலச் சபை வரலாறு. மூன்றாம் பாகம் கி.பி. 100லிருந்து உரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் கி.பி 312இல் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட காலம்வரையிலான ஆதிச் சபை வரலாறு. அந்தக் கால கட்டத்தில் கிறிஸ்தவம் எப்படிப் பரவியது என்று மூன்றாம் பாகத்தில் பார்த்தோம். நான்காம் பாகத்தில், அப்போஸ்தலர் காலத்துக்குப்பிந்தைய, அதாவது உரோமப் பேரரசன் கான்ஸ்டைன்டீன் கிறிஸ்தவனாகி, தன் பேரரசைத் தீவிரமாகக் கிறிஸ்தவமயமாக்குவதற்கு முந்தைய, கி.பி. 100முதல் 312வரையிலான அதே கால கட்டத்தில், ஆதிச் சபைக்கு நேரிட்ட சித்திரவதையைப் பார்த்தோம். ஐந்தாம் பாகத்தில் கி.பி. 100முதல் 312வரையிலான அதே கால கட்டத்தில் ஆதிக் கிறிஸ்தவர்கள் எதை விசுவாசித்தார்கள் என்றும், தங்கள் விசுவாசத்தை எப்படித் தற்காத்தார்கள் என்றும் நாம் பார்த்தோம்.

சபை வரலாற்றைப்பற்றிய இந்த ஆறாம் பாகத்திலும் அதே காலகட்டத்தில், அதாவது கி,பி 100முதல் கி.பி 312வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க சில சபைப் பிதாக்களையும், அவர்களுடைய நூல்களையும்பற்றிப் பேசப்போகிறோம். இதைச் செய்வது கொஞ்சம் கடினம். ஏனென்றால், இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்த எல்லா சபைப் பிதாக்களையும்பற்றிப் பேச முடியாது. ஒரு சிலரைப்பற்றி மட்டுமே பேச முடியும். அம்புரோஸ், அத்தனேசியஸ், அதெனகோரஸ், அகுஸ்தீன், பசில், ஜான் கிறிஸ்சோஸ்டம், அலெக்ஸாந்திரியாவின் கிளெமெந்து, சிரில், சிப்ரியான், கிரகோரி, ஹிலாரி, ஜெரோம், ஐரேனியஸ், ஜஸ்டின், லாக்டான்டியஸ், லியோன், மினுசியஸ் பெலிக்ஸ், ஓரிஜென், தெர்துல்லியன், தியோடோரெட், பெர்னார்ட் என நிறைய சபைப் பிதாக்கள் இருக்கிறார்கள். யாரைப்பற்றிப் பேசுவது என்று தேர்ந்தெடுப்பது கடினம். நான் பேசப்போகிற ஒவ்வொரு நபரையும், அவர்களுடைய நூல்களையும், அவர்களைப்பற்றிய பாரம்பரியங்களையும் கருத்தாய் ஆராய்ந்து பலர் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். இதற்காகப் பலர் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார்கள். எனவே, நான் இங்கு சொல்லப்போவது அவர்களைப்பற்றிய ஓர் அறிமுகமே. ஆதிச் சபை வரலாற்றில் குறிப்பிடத்தக்க இவர்கள் என்ன எழுதினார்கள், எப்படிச் சிந்தித்தார்கள், நற்செய்தியைப் பரப்பவும், சபையைக் கட்டவும் இவர்கள் என்ன பங்காற்றினார்கள் என்பதைப்பற்றிய ஓர் உணர்வை உங்களுக்கு ஏற்படுத்த நான் முயல்கிறேன். அவ்வளவே.

பல விதங்களில் கொண்டாடப்படும் இந்தத் தலைவர்களின் விசுவாசம், தேவபக்தி, நற்பண்புகள், வைராக்கியம், நற்செய்தி அறிவித்த ஆர்வம், சபைகளைக் கட்டிக்காத்த விதம் ஆகியவைகளை நாம் நிச்சயமாகப் பாராட்டுகிறோம், மதிக்கிறோம், உயர்வாகக் கருதுகிறோம். இருப்பினும், ஒழுக்கத்தையும், உபதேசத்தையும், இன்னும் பிற காரியங்களையும் பொறுத்தவரை, இந்தப் பூமியில், தவறு செய்யாத மனிதனோ, சமூகமோ இல்லவே இல்லை. தவறா வரம்பெற்றவன் ஒருவனும் இல்லை. அறிவியலையும், மதத்தையும் பொறுத்தவரை எந்த மனிதனையும் நாம் குருட்டுத்தனமான நம்பவேண்டிய, பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை. இந்த உலகத்தில் எந்த மனிதனுடைய எழுத்துக்களையும் நாம் பார்க்கும் அதே விமரிசன ஆவியோடு சபைப் பிதாக்களின் எழுத்துக்களையும் நாம் பார்க்க வேண்டும். அவர்கள் சொன்ன, செய்த, எழுதிய எல்லாவற்றையும் நாம் "வேத சத்தியங்களாக" எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தெய்வீக அதிகாரத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், நாம் எல்லாவற்றையும் வேதாகமத்தின் வெளிச்சத்தில் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும், நிதானிக்க வேண்டும். ஆட்களையும், தோற்றங்களையும், பார்த்து நாம் ஏமாந்துவிடக்கூடாது. நித்தியமான சத்தியத்துக்கு மட்டுமே கொடுக்க வேண்டிய கனத்தையும், மரியாதையையும் நாம் பிழைகளுக்கும், தவறுகளுக்கும் கொடுக்கக்கூடாது.

II. ஆதிச் சபையில் பெண்கள்

சபைப் பிதாக்கள் சிலரைப்பற்றிப் பார்ப்போம். ஆனால், ஒரேவொரு சகோதரியைப்பற்றி மட்டுமே பார்ப்போம். இது ஒருவேளை சிலருக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கலாம். "ஆண்களைப்பற்றி அதிகம் பேசுகிறீர்கள். பெண்களைப்பற்றி அதிகம் பேசவில்லையே!" என்று சிலர் நினைக்கக்கூடும். தேவனுடைய அரசை நிறுவ சகோதர்களும், சகோதரிகளும் சேர்ந்தே வேலைசெய்கிறார்கள் என்றும், சகோதரிகளும் முக்கிய பங்காற்றுகிறார்கள் என்றும் நமக்குத் தெரியும். இதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், ஆதிச் சபையில் ஆயர், மூப்பர், போதகர், கண்காணிபோன்ற அலுவல்களில் சகோதரிகள் அதிகமாகப் பங்களிக்கவில்லை என்று தெரிகிறது. அதுபோல, வேதப்புரட்டுகளுக்கு எதிராக சகோதரிகள் குறிப்பிடத்தக்க விதத்தில் தன்விளக்கவாதிகளாக எழும்பவில்லை. எனினும், சபையின் அனுதின அலுவல்களில், சகோதரிகள் சபை வாழ்க்கையில் முக்கியமான பங்களித்தார்கள் என்பதில் எனக்கும், சபை வரலாற்று ஆசிரியர்களுக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. சகோதரிகள் ஒருவேளை சபையில் ஆதிக்கம், அதிகாரம், ஆட்சி செலுத்தாமல் போயிருக்கலாம்; ஆதிச் சபையில் குறிப்பிடத்தக்கவிதத்தில் சகோதரிகள் தன்விளக்கவாதிகளாகவோ, இறையியலாளர்களாகவோ, எழுத்தாளர்களாகவோ இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், அவர்களுடைய பங்களிப்பை ஒருவரும் ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

எனவே, கிட்டத்தட்ட பத்து சபைப்பிதாக்களைப்பற்றிப் பேசும்போது ஒரேவொரு சகோதரியைப்பற்றி மட்டுமே பேசப்போகிறேன். ஏற்கெனவே சொன்னபடி நான் இவர்களை உங்களுக்கு அறிமுகம்செய்கிறேன். அவ்வளவே. இவர்களை, நான் இவர்கள் வாழ்ந்த காலவரிசையின்படி எடுத்துக்கொள்கிறேன். சில விதிவிலக்குகள் இருக்கலாம். சரி, ஆதிச் சபை வரலாற்றில் முதல் மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த இவர்களைப்பற்றி நாம் பேசுவோம்.

II1. தலைவர்கள்

1. உரோமின் கிளெமெந்து

முதலாவது உரோமின் கிளெமெந்து. இரண்டு கிளெமெந்துகள் இருக்கிறார்கள். நாம் இப்போது உரோமின் கிளெமெந்துவைப்பற்றிப் பேசுவோம். இவர் ஏறக்குறைய கி.பி 30திலிருந்து கி.பி 100க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நற்செய்திகளிலும், நிருபங்களிலும் ஒரு சிலருடைய வாழ்க்கை வரலாறுகளே விவரமாகக் கூறப்பட்டிருக்கின்றன. அப்போஸ்தலனாகிய பவுல், பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில். “என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது,” (பிலிப்பியர் 4:3) என்று கூறுகிறார். பவுல் உரோமிலிருந்து எழுதுகிற இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படுகிறவர் உரோமின் கிளெமெந்துவாகத்தான் இருக்க முடியும் என்று நிச்சயமாக நம்பப்படுகிறது.

பல சபைப் பிதாக்கள் எழுதிய நூல்கள் இன்று நம்மிடம் இல்லை. ஆனால், கிளெமெந்து எழுதியவை இருக்கின்றன. அவைகளுள் அவர் கொரிந்தியர்களுக்கு எழுதிய கடிதம் அடங்கும். இந்த நிருபத்தில் மொத்தம் 64 அதிகாரங்கள் இருக்கின்றன. இவர் தன் முதல் நிருபத்தில் அப்போஸ்தல அதிகாரம் வழிவழியாகத் தொடர்கிறது என்ற கருத்தை வலியுறுத்துகிறார். உரோமன் கத்தோலிக்க சபையின் கணக்கின்படி இவர் உரோமின் நான்காவது ஆயர் என்று தெரிகிறது.

இவர் உரோமப் பேரரசன் டொமிஷியனின் ஆட்சியின்போது இரத்தசாட்சியாக மரித்தார்.

நாம் இப்போது கிளெமெந்துவின் எழுத்துக்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

கிளெமெந்துவின் கடிதங்கள்

கிளமெந்து கொரிந்தியர்களுக்கு எழுதிய நிருபத்தின் 42ஆம் அதிகாரத்தில் "தேவனால் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து தேவனிடமிருந்து கொண்டுவந்த நற்செய்தியை அறிவித்தார். இயேசு கிறிஸ்துவால் அனுப்பப்பட்ட அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து பெற்ற நற்செய்தியை நமக்குப் பிரசங்கித்தார்கள்; இந்த இரண்டு நியமனங்களும், தேவனுடைய சித்தத்தின்படி, ஒழுங்கான முறையில் செய்யப்பட்டன," என்று அவர் கூறுகிறார்.

இதை வாசிக்கும்போது அவருடைய எண்ணப்போக்கை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. தேவன் முதலாவது இயேசுவை இந்த உலகத்துக்கு அனுப்பினார். அவர்மூலம் நற்செய்தி வந்தது. இயேசு தம் அப்போஸ்தலர்களை அனுப்பினார்; அவர்கள்மூலம் நற்செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து அவர் என்ன சொல்லப்போகிறார் என்று இப்போது நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அப்போஸ்தலர்கள் ஆயர்களை அனுப்பினார்கள்; அவர்கள்மூலம் நற்செய்தி தொடர்ந்தது என்று அவர் சொல்லப்போகிறார். அவர் அப்படிதான் சொன்னார். அப்போஸ்தல அதிகாரம் இப்படியே வழிவழியாகத் தொடர்கிறது என்பது அவருடைய கருத்து. உரோமன் கத்தோலிக்க சபை தன அதிகாரத்தை எங்கிருந்து, எப்படி பெற்றது என்பதற்கு ஆதாரமாக அவர்கள் பிற்காலத்தில் கிளெமெந்துவின் வரிகளை மேற்கோள் காட்டினார்கள்.

அதே நிருபத்தின் 44ஆம் அதிகாரத்தில் "ஆயர் பதவியினிமித்தம் தகராறு ஏற்படும் என்பதை நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாக நம் அப்போஸ்தலர்களும் அறிந்திருந்தார்கள். அவர்களுக்கு இதைப்பற்றிய சரியான முன்னறிவு இருந்ததால், அவர்கள் தங்கள் காலத்திலேயே ஆயர்களையும், கண்காணிகளையும், மூப்பர்களையும் நியமித்து, தங்கள் காலத்துக்குப்பின் ஊழியத்தைத் தொடரவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்," என்று கூறுகிறார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "உண்மையான அப்போஸ்தலர்கள் யார் என்றும், அவர்கள் யாரோடு உறவு வைத்திருந்தார்கள்; யாரிடமிருந்து கற்றார்கள், பெற்றார்கள் என்றும் எங்களுக்குத் தெரியும்," என்ற கருத்தை கிளெமெந்து வலியுறுத்த முயல்கிறார் என்று அறிகிறோம். சபையின் ஆரம்ப நூற்றாண்டுகளில் இதுபோன்ற மனப்பாங்கும், கருத்தும் இருந்ததை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிற நாம் அப்போஸ்தலர்களின் வாரிசு என்ற எண்ணத்தைப் புரிந்துகொள்வது கடினம், ஏற்றுக்கொள்வது கடினமோ கடினம். இது பொருளற்றது என்று நாம் நினைக்கிறோம்.

ஆனால், இயேசு பரலோகத்திற்கு ஏறிசென்றபிறகு, முதல் சில நூற்றாண்டுகளில் அவர்கள் எப்படி நினைத்திருப்பார்கள்? "இதோ, பாருங்கள், நீங்கள் கிளெமெந்துவை நம்பலாம்; ஏனென்றால், அவர் பவுலிடமிருந்து கற்றவர். பவுல் யார்? பவுல் நேரடியாக இயேசுவிடமிருந்து நற்செய்தியைப் பெற்றார். எனவே, இப்போது கிளெமெந்துவிடமிருந்து வருகிறவரை நீங்கள் நம்பலாம்," என்பதுதான் அவர்களுடைய சிந்தனை. கிளெமெந்து தன நிருபத்தில் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறார்.

அதே நிருபத்திலிருந்து நான் இன்னொரு பகுதியைப் பகிர்ந்துகொள்ளுகிறேன். கிளெமெந்துவின் இருதயம் எனக்குத் தெரியாது. அவர் யாரோவொருவர் அல்ல. "ஆயர் பதவியை உருவாக்க வேண்டும், அதைக் கட்டிக்காக்க வேண்டும்," என்ற எந்த நிர்பந்தமும் கிளெமெந்துவுக்குக் கிடையாது. சரி, நான் அந்தப் பகுதியை வாசிக்கிறேன். இது அவருடைய ஜெபம்.

கிளெமெந்துவின் ஜெபம்

அவருடைய இந்த ஜெபம் எனக்கு மிகவும் பிடிக்கும். "எங்கள் ஆண்டவரே, நீர் எங்கள் உதவியாளராகவும் பாதுகாவலராகவும் இரும். ஆபத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் பெரும்பாலான உம் மக்களை விடுவித்துக் காத்தருளும். விழுந்தவர்களைத் தூக்கிவிடும். தேவையில் இருப்பவர்களுக்கு உதவும்; நோயுற்றோரைக் குணமாக்கும்; வழிதவறிச் செல்லும் உம் மக்களைத் திருப்பிக்கொண்டுவாரும்; பசித்தோருக்கு உணவருளும்; சிறைப்பட்டோரை விடுதலையாக்கும்; பலவீனமானவர்களை உயிர்ப்பியும்; அதைரியமுற்றோரை தைரியப்படுத்தும்; நீர் மட்டுமே ஒரே தேவன் என்பதையும், இயேசு கிறிஸ்து உம் மகன் என்பதையும், நாங்கள் உம் மக்கள், உம் மேய்ச்சலின் ஆடுகள், என்பதையும் எல்லா நாடுகளும் உணரட்டும்."

கிளெமெந்து சுமார் 100இல் இறந்தார் என்பதையும், அவர் அப்போஸ்தலனாகிய யோவான் உயிரோடிருந்த காலத்தில் ஊழியம்செய்தார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். கிளெமெந்துவின் ஜெபத்தைப் பாருங்கள். அதில் அவர் இயேசுவின்மேல் வைத்திருக்கும் ஆழமான அன்பும், விசுவாசமும், பக்தியும், சார்பும், அவருக்கும் இயேசுவுக்கும் இருக்கும் நெருக்கமான ஐக்கியமும் வெளிப்படையாகத் தெரிகிறது. "ஆதிக் கிறிஸ்தவர்கள் அனுபவித்த விசுவாசம், இந்த நவீன யுகத்தில் நாம் அனுபவிக்கிற விசுவாசத்திலிருந்து மாறுபட்டது," என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். அப்படியில்லை. வித்தியாசமே இல்லை என்று நான் சொல்லவில்லை; நான் அவைகளை மறைக்கவும் முயலவில்லை. ஆனால், ஆதிக் கிறிஸ்தவர்களின் விசுவாசத்திற்கும், நம் விசுவாசத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசங்களைவிட, அவைகளுக்கிடையேயுள்ள ஒற்றுமைகள் அதிகம் என்பதை நினைத்து நான் மகிழ்கிறேன்.

இதுதான் கிளெமெந்து

2. ஹெர்மஸ்

இன்னொருவரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இவருடைய பெயர் ஹெர்மஸ். இவர் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை வாழ்ந்தார். இவருடைய "மேய்ப்பன்" என்ற புத்தகம் அப்போஸ்தலர்களின் எழுத்துக்களுக்குச் சமமாகக் கருதப்படுகிறது. இந்தப் புத்தகம் புதிய ஏற்பாட்டில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆதிச் சபையில் சிலர் வாதிட்டார்கள்.

மேலும், அவர் கிளெமெந்து வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்தார் என்றும், அவர் ஒரு முன்னாள் அடிமையாகவும், அநேகமாக யூதராகவும் இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.

அவருடைய “மேய்ப்பன்” என்ற புத்தகம் ஆதிச் சபையில் மிகவும் பிரபலமாக இருந்தது. இது பிற்காலத்தில் ஜான் பன்யன் எழுதிய "மோட்சப் பிரயாணி" என்ற புத்தகத்தின் முன்னோடி என்று சொன்னால் அது மிகையாகாது. இன்று கிறிஸ்தவர்கள் "அன்றன்றுள்ள அப்பம்", "அனுதின மன்னா" என்று தங்கள் பக்திவிருத்திக்காக காலை, மாலைகளில் சில புத்தகங்களைப் பயன்படுத்துவதுபோல அன்று ஆதிக் கிறிஸ்தவர்கள் "மேய்ப்பன்" என்ற புத்தகத்தைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. அது உண்மையாக இருக்கும் என்று நான் நினைக்கிறன். ஏனென்றால், அந்தப் புத்தகத்திலிருந்து நான் ஒரு பகுதியை உங்களுக்கு வாசித்துக் காட்டுகிறேன். அப்போது நீங்களே அதைப் புரிந்துகொள்வீர்கள்.

ஹெர்மசின் எழுத்துக்களை வாசிக்கும்போது அவர் ஒரு சட்டவாதிபோல் தோன்றுகிறது. தேவனுடைய மக்கள் தேவனோடு ஒருவிதமான சட்டப்பூர்வமான உறவை வைத்திருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட சட்டப்பூர்வமான உறவை அவர் ஊக்குவித்தார் என்றும் தெரிகிறது.

அவர் ஒரு யூதன் என்பதாலும், அன்று சபை அதிகமான சித்திரவதையை அனுபவித்ததாலும், ஒருவேளை அவர் ஒருவகையான சட்டவாதியாக மாறியிருக்கலாம். சித்திரவதைகளையும், துன்பங்களையும் அனுபவிக்கும்போது விசுவாசிகள் பெரும்பாலும் ஒருவகையான சட்டவாதிகளாக மாறிவிடுவது இயல்புதான். ஏனென்றால், அப்படிப்பட்ட காலங்களில் கிறிஸ்தவர்கள் மிகவும் சிரத்தையோடும், அர்ப்பணிப்போடும் இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால், சிரத்தையோடும், அர்ப்பணிப்போடும் வாழும்போது சட்டவாதியாக மாறுகிற ஆபத்தும் இருக்கிறது. சித்திரவதை அனுபவிக்கும்போது விசுவாசிகள் ஒருவரையொருவர் கொஞ்சம் சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்தார்கள். "இவன் உண்மையாகவே விசுவாசிதானா அல்லது உண்மையான விசுவாசிகளை அடையாளம்கண்டு, காட்டிக்கொடுப்பதற்காக சபைக்குள் ஊடுருவியிருக்கிறானா?" என்ற அச்சமும், ஐயமும் அவர்களுக்கு எழுந்தன. எனவே, அவர்கள் ஒருவரையொருவர் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியிருந்தது. ஏனென்றால், உண்மையான விசுவாசிகளைப் பாதுகாக்க வேண்டும்.

ஹெர்மஸின் "மேய்ப்பன்" புத்தகத்திலிருந்து நான் உங்களுக்கு ஒரு பத்தியை மேற்கோள் காட்டுகிறேன்.

"கர்த்தர் மிகவும் இரக்கமுள்ளர் என்பதால், அவர் தம் கைவேலையாகிய என்மேல் இரக்கப்பட்டு, நான் மனந்திரும்புவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பளித்தார். மனந்திரும்பும் பொறுப்பையும் அவர் எனக்களித்தார். வாய்ப்பையும், பொறுப்பையும் வாங்கியபின் அவர் என்னிடம், "இந்தப் பெரிய, பரிசுத்தமான அழைப்பைப் பெற்றபின், ஒருவன் பிசாசினால் சோதிக்கப்பட்டுப் பாவம் செய்தால், மனந்திரும்புவதற்கு அவனுக்கு ஒரேவொரு வாய்ப்பு மட்டுமே உண்டு. மனந்திரும்பியபின் அவன் பாவம் செய்து மீண்டும் மனந்திரும்பினால், அந்த மனிதனுடைய மனந்திரும்புதல் பயனற்றது; அவன் தன் எஞ்சிய காலத்தைச் சிரமத்தோடுதான் வாழ்வான்," என்று கூறினார். நான் அவரிடம், "உம்மிடமிருந்து நான் இவைகளை மிகத் துல்லியமாகக் கேட்டபோது மீண்டும் உயிரடைந்தேன். நான் இனிமேல் பாவம் செய்யவில்லையென்றால் நான் இரட்சிக்கப்படுவேன் என்று எனக்குத் தெரியும்," என்று சொன்னேன். அவர் என்னிடம், "நீ இரட்சிக்கப்படுவாய். இவைகளைச் செய்கிற எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்," என்று சொன்னார். நீ என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், உன் முந்தைய மீறுதல்கள் மன்னிக்கப்படும். ஆம், என் கட்டளைகளைக் கடைப்பிடித்து, பரிசுத்தமாக நடக்கிற எல்லாருடைய மீறுதல்களும் மன்னிக்கப்படும்."

நீங்கள் ஹெர்மசின் எழுத்துக்களைப் பகுப்பாய்வுசெய்ய விரும்பினால், அவரைப் புரிந்துகொள்ள விரும்பினால், நீங்கள் அவருடைய முழுப் புத்தகத்தையும் படிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் அவரைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்தச் சிறிய பத்தியைப் படிக்கும்போது ஹெர்மசைப்போன்ற ஒருவரை நாம் கொஞ்சம் புரிந்துகொள்ளலாம். இது அதற்கு ஒரு முன்சுவை. அவர் எப்படிப்பட்டவர் என்பதை விளக்க இது ஒரு குறுவடிவிலான படம். ஆதிச் சபையின் காலத்தில் விசுவாசிகளிடையே பரவலாக இருந்த ஒரு கண்ணோட்டத்தை இந்தப் பத்தியிலிருந்து அறியலாம்.

ஒருவன் விசுவாசியானபிறகு பாவஞ்செய்தால் அவன் மனந்திரும்புவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன என்று நாம் அறியலாம். அன்றைய அவர்களுடைய கண்ணோட்டம் என்ன? ஒருவன் கிறிஸ்துவிடம் வரும்போது, அவன் மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெறுகிறான். அதற்குப்பின், அவன் மோசமான பாவம் செய்தால், அவன் தான் பெற்ற நித்திய ஜீவனை இழந்துவிடுவான் என்றும், அவன் நரகத்துக்குப் போவான் என்றும், அவன் மீண்டும் சீர்பொருந்தப்பட வாய்ப்பே இல்லை என்றும் அவர்கள் நினைத்தார்கள். நான் மேற்கோள் காட்டிய பத்தியில் ஹெர்மஸ் சொல்லியிருப்பதையே அன்றைய கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்று விசுவாசியானபிறகு ஒருவன் பாவம் செய்தால், அதன்பிறகு அவன் மனந்திரும்புவதற்கு ஒரேவொரு வாய்ப்பு மட்டுமே உண்டு என்று அவர்கள் கருதினார்கள். எனவே, ஒருவன் இரண்டுமுறை மோசமாகப் பாவம் செய்தால் அவன் மனந்திரும்பி பாவ மன்னிப்பைப் பெற முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள், கூறினார்கள். அப்படிப்பட்டவன் நரகத்திற்குத்தான் போவான், மனந்திரும்ப வாய்ப்பே இல்லை என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். இதை நான் ஏன் சட்டவாதம் என்று சொல்லுகிறேன் என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் இப்படி நினைத்ததற்கு சில கலாச்சார, சமூக அழுத்தங்கள் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், ஆதிச் சபையில் இருந்த இந்த மனப்பாங்கு மிக ஆபத்தானது என்று நான் கருதுகிறேன். அவர்கள் சட்டவாதத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள்.

எச்சரிக்கை

ஆதிச் சபையில் இருந்த கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ எழுத்தாளர்களும், சபைப் பிதாக்களும் தவறா வரம்பெற்றவர்கள் என்றோ, அவர்கள் சொல்லுகிற, எழுதுகிற எல்லாமே முற்றிலும் உண்மை என்றோ நாம் நினைப்பது தவறு. "அவர்கள் ஆண்டவராகிய இயேசுவுக்கும், அப்போஸ்தலர்களுக்கும் மிக நெருக்கமானவர்கள்; அவர்கள் இயேசுவின் காலத்திலிருந்து 150 அல்லது 200 ஆண்டுகளுக்குள் வாழ்ந்தவர்கள்; எனவே, அவர்கள் போதித்தவைகளெல்லாம், எழுதியவைகளெல்லாம் சரி," என்று நாம் நினைக்கக்கூடாது. இந்தக் கருத்து உண்மையல்ல. என் அன்புச் சகோதர சகோதரிகளே, ஆண்டவராகிய இயேசுவின் நாட்களிலேயே, அப்போஸ்தலர்களின் காலத்திலேயே, மக்கள் காரியங்களைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள். எடுத்துக்காட்டாக, கொரிந்து சபையின் இலட்சணம் நமக்குத் தெரியும். கலாத்திய சபையின் தரம் நமக்குத் தெரியும். கொலோசெ சபையில் இருந்த பிரச்சினைகள் நமக்குத்'தெரியும். திருவெளிப்பாட்டில் ஏழு சபைகளில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன என்று ஆண்டவராகிய இயேசு விவரிக்கிறார். அப்போஸ்தலர்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் நிறுவிய சபைகளில் இத்தனை பிரச்சினைகள் இருந்ததென்றால், பல்வேறு காரியங்களில் சரிப்படுத்த வேண்டியிருந்ததென்றால், அவர்களுக்குப்பின் வந்த சபைப் பிதாக்கள், எழுத்தாளர்கள், எழுதிய சொன்ன, எழுதிய எல்லாவற்றையும் அவர்கள் சொன்னபடி எடுத்துக்கொள்ள முடியுமா? உபதேசங்களில் எவ்வளவோ திருத்தம் தேவைப்பட்டது.

நம்முடைய உண்மையான அதிகாரம் அவர்களுடைய எழுத்துக்களில் இல்லை; இன்னும் சொல்லப்போனால் யாருடைய எழுத்துக்களிலும் இல்லை. நம் உண்மையான அதிகாரம் மாறாக வேதவாக்கியங்களில் இருக்கிறது. ஆதிச் சபைப் பிதாக்கள் வேதாகமத்தை உண்மையாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் விளக்கம் அளித்திருந்தால் நாம் அவர்களுடைய பார்வையை மதிக்கிறோம், வரவேற்கிறோம், ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அவர்கள் சொன்ன, எழுதிய எல்லாம் எல்லா விதத்திலும் 100 விழுக்காடு உண்மை என்றோ, அவர்கள் சொன்ன எல்லாம் 100 விழுக்காடு சரியான பதில்கள் என்றோ நான் கூறவில்லை.

சில அப்போஸ்தலர்கள், குறைந்தபட்சம் அப்போஸ்தலனாகிய யோவான், வாழ்ந்தபோது ஹெர்மஸ் உயிருடன் இருந்திருக்கலாம். எனினும், "ஒருவன் மனந்திரும்பி, இயேசுவை விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றபிறகு ஒரு மோசமான பாவம் செய்தால் அவன் மனந்திரும்புவதற்கு ஒரேவொரு வாய்ப்பு மட்டுமே உண்டு என்பதும், அவன் இரண்டுமுறை பாவம் செய்தால் மனந்திரும்ப வாய்ப்பே இல்லை. எனவே, அவன் நரகத்திற்குதான் செல்வான்," என்பதும் வேதாகமத்தின் கருத்துக்கு முற்றிலும் முரணான கருத்து. ஆதிச் சபையில் இப்படிப்பட்ட ஒரு பழக்கம், ஒரு நம்பிக்கை, இருந்ததால் பலர் தாங்கள் இறக்கப் போகிறோம் என்று அறியும்வரை ஞானஸ்நானம் பெறுவதைத் தாமதப்படுத்தினார்கள். அன்று இது அவர்களுடைய ஒரு பொதுவான நடைமுறையாக இருந்திருக்கிறது. பெரும்பாலானவர்கள் இப்படிச் செய்தார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவர்களிடையே இப்படிப்பட்ட ஒரு பழக்கம் இருந்தது. ஞானஸ்நானம் பெற்றபிறகு ஒரேவொருமுறை மட்டும்தான் மனந்திரும்ப வாய்ப்பு உண்டு என்பதால் ஞானஸ்நானத்தை அவர்கள் கடைசிவரைத் தள்ளிப்போட்டார்கள். "நான் ஒரு விசுவாசி, நான் இயேசு கிறிஸ்து கூறுவதை விசுவாசிக்கிறேன். நான் அவர்மேல் விசுவாசம் வைத்துள்ளேன். ஆனால், நான் இப்போது ஞானஸ்நானம் பெறப்போவதில்லை. மரணத்திற்கு சற்றுமுன்பு நான் ஞானஸ்நானம் பெறுவேன். ஏனென்றால், ஞானஸ்நானம் பெற்றபின் நான் உடன்படிக்கையை மீறி, பாவஞ்செய்தால் மனந்திரும்ப வாய்ப்பில்லாமல் நான் நரகத்திற்குச் செல்ல விரும்பவில்லை," என்று சொல்வது வாடிக்கையாயிற்று.

சரி, ஹெர்மசைப்பற்றிப் பேசியது போதும். அடுத்து இன்னொருவரைப் பார்ப்போம். இவருடைய பெயர்

3. இக்னேஷியஸ்

அப்போஸ்தலர் நடபடிகள் 13ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி, பவுலும் பர்னபாவும் ஊழியம்செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தியோக்கியா சபையில் இக்னேஷியஸ் 40 ஆண்டுகள் ஆயராக ஊழியம்செய்தார் என்று கிரிஸ்சோஸ்டெம் கூறுகிறார். இவர் சபை விசுவாசிகளையெல்லாம் ஒரு தந்தையைப்போல் வழிநடத்தினார். சபை சித்திரவதைக்குள்ளான காலத்தில், இக்னேஷியஸ் முதியவராக இருந்தபோது, கி.பி 107 ஜனவரி 7ஆம் தேதி உரோமப் பேரரசன் டிராஜன் அந்தியோக்கியாவுக்கு வருகை தந்தபோது, இக்னேஷியசை அழைத்துப் பேசினான். இதோ அவர்களுடைய உரையாடல். உரையாடல் என்பதைவிட கேள்வி பதில் என்று சொல்லலாம். டிராஜன் இக்னேஷியசிடம், "என் கட்டளையை மீறி மக்களைக் கிறிஸ்தவத்திற்கு இழுக்கிற நீ யார்?” என்று கோபமாகக் கேட்டான். "நான் கிறிஸ்துவை என் இருதயத்தில் ஏற்றுக்கொண்டிருக்கிற அவருடைய ஓர் அடியான்." "எந்தக் கிறிஸ்துவைக் குறித்துப் பேசுகிறாய்? பொந்து பிலாத்துவினால் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றியா பேசுகிறாய்?" “ஆம், அவரேதான் என் இரட்சகர். அவர் தம் மரணத்தின்மூலம் நம் பாவத்தைச் சிலுவையில் சுமந்து என்னை மீட்டுக்கொண்டார்." "நீ மனிதர்களை வஞ்சிக்கும் பொல்லாத பிசாசு," என்று கூற, இக்னேஷியஸ், "நான் தீய ஆவி அல்ல, என் இதயத்தில் இயேசு கிறிஸ்து இருக்கிறார்," என்றார். அதற்கு டிராஜன், "இயேசு கிறிஸ்து உனக்குள் இருக்கிறாரா? பொந்து பிலாத்துவினால் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவா?" என்று நக்கலாகக் கேட்டான். இக்னேஷியஸ், "ஆம், அவர் என் பாவங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டார்," என்று கூறினார். இந்த உரையாடலுக்குப்பின், எந்த விசாரணையும் இல்லாமல், பேரரசன் இக்னேஷியசை உரோமுக்குக் கொண்டுபோய் ஆரவாரிக்கும் மக்கள் கூட்டம் புடைசூழ கொடிய காட்டு விலங்குகளுக்கு இரையாக வீசக் கட்டளையிட்டான்.

இக்னேஷியஸ் உரோம் நகருக்குச் செல்லும் வழியெங்கும் கிறிஸ்தவர்களைச் சந்தித்து உற்சாகப்படுத்தினார். போகும் வழியில் அவர் சபைகளுக்கு எழுதிய ஏழு நிருபங்கள் Apostolic Fathers என்ற புத்தகத்தில் உள்ளன.

அவர் எழுதிய ஒரு நிருபத்திலிருந்து இதோ சில வரிகள்: "உரோம் நகரில் வாழும் கிறிஸ்தவர்களே, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனையிலிருந்து என்னைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம். அந்த எண்ணத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பு எனக்குத் தீங்கு விளைவிக்குமோ என்று நான் அஞ்சுகிறேன். ஒருவேளை உங்கள் எண்ணம் ஈடேறினால், நான் தேவனைச் சேரும் நாள் தள்ளிப்போகும். நீங்கள் அமர்ந்திருந்தால், என் மரணத்திலும் நான் தேவனுடைய வார்த்தையாக மாறுவேன். ஆனால் உங்கள் அன்பினால் நீங்கள் என்னைக் கட்டிவைத்தால், நான் வெறுமனே ஒரு மனிதக் குரலாக மட்டுமே இருப்பேன். கிறிஸ்துவை நான் என் மரணத்திலும் பின்பற்ற விரும்புகிறேன். அப்போது என் பணிவிடை இன்னும் வல்லமையாக இருக்கும். உங்கள் முயற்சியால் ஒருவேளை நான் விடுவிக்கப்பட்டால், அது நான் கிறிஸ்துவை மறுதலித்ததாகக்கூடத் தோன்றலாம்." என்று அவர் எழுதுகிறார்.

அவருடைய பயணம் மரணஊர்வலம்போல் தோன்றவில்லை; மாறாக வெற்றி ஊர்வலம்போல இருந்தது என்று சொல்லலாம். ஏனென்றால், உரோமுக்குச் செல்லும் வழியில் இருந்த உள்ளூர் சபைகளின் தலைவர்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடினார், உறவாடினார், அவர்களுக்குப் போதித்தார், கற்பித்தார். அவருடைய காலத்தில் அவர் ஞானவாதத்தைக் கடுமையாக எதிர்த்தார். ஆயர் என்றால் யார், மூப்பர் என்றால் யார் என்று இரண்டுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை முதன்முதலாக விளக்கியவர் இக்னேஷியஸ் என்று சொல்லலாம். ஆயர் என்றால் மேற்பார்வையாளர், கண்காணி என்று பொருள். ஆதிச் சபையில் ஆயர்கள் அப்போஸ்தலர்களிடமிருந்து பெற்ற செய்திகளைத் தேவ மக்களுக்குப் போதித்தார்கள். இதுதான் அவர்களுடைய பொறுப்பு. அன்று, கிறிஸ்தவர்களிடம் புதிய ஏற்பாடு இல்லாதிருந்த காலத்தில் புதிய ஏற்பாட்டின் செய்தியை அவர்கள் கிறிஸ்தவர்களுக்குப் போதித்தார்கள். இதுதான் அவர்களுடைய பிரதானமான கடமை. முதல் நூற்றாண்டின் இறுதியில்,உள்ளூர் சபையின் தலைவர்கள், முன்னின்று நடத்தியவர்கள், ஆயர் என்றழைக்கப்பட்டார்கள்.

இன்று சபைகளில் ஒரு தலைமைப் போதகர், அதன்பின் உதவிப் போதகர்கள் என்று இருப்பதுபோல், அன்று சபையின் தலைமைப் போதகர் ஆயர் என்றழைக்கப்பட்டார். இதைத்தான் அன்று இக்னேஷியஸ் "சபை என்று ஒன்று இருந்தால் அங்கு ஆயர் என்று ஒருவர் இருக்க வேண்டும்," என்று சொன்னார். ஆயர் இல்லாமல் சபை இருக்க முடியாது என்பது அவருடைய கருத்து. இன்னும் சரியாகச் சொல்வதானால், "சபை என்று ஒன்று இருந்தால் தலைமைத்துவம் என்று ஒன்று வேண்டும். சரியான தலைமைத்துவம் இல்லாமல் சபை இருக்க முடியாது," என்பது அவருடைய கருத்து. எனவேதான், சபையில் ஓர் ஒழுங்கமைப்பும், அமைப்புமுறையும் அவசியம் என்று அவர் கூறினார். அவர் உரோமுக்குச் செல்லும் வழியில் சபைகளில் இந்தக் கருத்தை வலியுறுத்தினார், நிருபங்களிலும் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்.

இக்னேஷியஸ் கொல்லப்படுவதற்குமுன் எழுதிய வார்த்தைகள் இவை. "இப்போது நான் ஒரு சீடனாகத் தொடங்குகிறேன். கிறிஸ்துவை ஆதாயப்படுத்துவதற்காக நான் காணக்கூடிய அல்லது காணமுடியாத எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. நெருப்பும், சிலுவையும், காட்டு மிருகங்களின் கூட்டமும் வரட்டும்; எலும்புகள் முறிக்கப்படட்டும்; கைகால்கள் கிழிக்கப்படட்டும்; உடல் முழுவதும் நசுக்கப்படட்டும்; பிசாசின் எல்லாத் தீமைகளும் என்மேல் வரட்டும். அப்போது, நான் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுவேன்." "நானாக மனமுவந்து முன்வந்து என் தேவனுக்காக மரிக்கிறேன் என்று எல்லா மனிதர்களும் அறிந்துகொள்வீர்களாக. என்னை வனவிலங்குகளுக்கு வழங்குங்கள். ஏனென்றால், அவைகளின்மூலம் நான் என் தேவனை அடைவேன். நான் தேவனுடைய ஒரு கோதுமைமணி. எனக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட வனவிலங்குகளுக்கு நான் விருந்தாக மாறுவேனாக. அவைகள் நல்ல விருந்தைச் சுவைக்க வேண்டும். அவைகள் சிலரைத் தொடாமல் விட்டுவிட்டதுபோல என்னை விட்டுவிடக்கூடாது. அவைகள் என்னை ஆவலோடும், ஆர்வத்தோடும் கடித்துச் சுவைத்து விழுங்கட்டும். நான் தயாராக இருந்து அவைகள் தயாராக இல்லையென்றால் நான் அவைகளைக் கட்டாயப்படுத்துவேன். கோதுமைணியாகிய என்னை அவைகள் கடித்து அரைத்து மாவாக்கட்டும். அவை என் கல்லறையாகட்டும். என் உடலின் எந்தவொரு சிறு பாகத்தையும் விட்டுவைக்காமல் விழுங்கட்டும். நான் மரிக்கும்போது என்னை அடக்கம்செய்யவேண்டிய பாரம் யாருக்கும் வராதவாறு அவை என் கல்லறையாகட்டும். அப்போது நான் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடனாக இருப்பேன்." இதுதான் இக்னேஷியஸின் இருதயம்.

கி.பி. 107 டிசம்பர் மாதம் இருபதாம் தேதி இக்னேஷியஸ் உரோமுக்குக் கொண்டுபோகப்பட்டார். அன்றுதான் பொதுத்திடலில் அந்நகரின் பொதுமக்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காட்சிக்கான இறுதிநாள். பேரரசனின் உத்தரவுப்படி இக்னேஷியஸ் விளையாட்டுத் திடலுக்குக் கொண்டுவரப்பட்டார். அவரைக் கொல்வதற்காகக் கூண்டில் வைத்திருந்த சிங்கங்களின் உறுமலைக் கேட்டு “நான் என் ஆண்டவரின் கோதுமை; நான் அவருக்குத் தூய்மையான அப்பமாக்கப்படும்படி இம்மிருகங்களின் பற்களால் நான் நொறுக்கப்படுவேனாக,” என்று சொன்னார். இரண்டு பெரிய சிங்கங்களை அவர் மீது திறந்துவிட்டார்கள். அவைகள் அவரைக் கொன்று சில பெரிய எலும்புகளைத்தவிர அவர் உடல் முழுவதையும் விழுங்கிவிட்டன. அவருடைய மரணத்தைக் கண்ட சிலர், "இவர் ஒருவன் தன் ஆடைகளைக் களைந்துபோடுவதுபோல் உயிரைக் களைந்துபோடக் கூடியவரோ! என்று எண்ணத்தோன்றுகிறது," என்று சொன்னார்கள்.

"நமக்காக மரித்தவரை நான் தேடுகிறேன். நமக்காக எழுந்தவரை நான் வாஞ்சிக்கிறேன். மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள். தம் மாம்சத்தை நமக்காகக் கொடுத்து, தம் இரத்தத்தை நமக்காகச் சிந்தியவரின் விசுவாசத்திலும், அன்பிலும் பலப்படுங்கள், இயேசு கிறிஸ்துவே என் சாசனம்; அவருடைய சிலுவையும், மரணமும், உயிர்த்தெழுதலுமே என் விலையேற்றப்பெற்ற சாசனம்." என்று அவர் எழுதுகிறார்.

டிராஜனின் ஆட்சியின்போது இக்னேஷியஸ் இரத்தசாட்சியாக மரித்தார்.

4. ஹயராபோலிஸ் பாபியாஸ்

நாம் பார்க்கப்போகிற நான்காவது நபர் ஹயராபோலிஸ் பாபியாஸ்.

இவர் ஹயராபோலிஸைச் சேர்ந்தவர். இந்த நகரம் திருவெளிப்பாட்டில் இரண்டு, மூன்றாம் அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள ஏழு சபைகள் இருந்த சின்ன ஆசியாவில் இருக்கிறது. அப்போஸ்தலனாகிய யோவானுக்கு நெருக்கமான இவர் நம் ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகளை விளக்கி எழுதியுள்ளார். இவர் நான்கு நற்செய்திகளையும்பற்றிப் பேசினார். அது மட்டும் அல்ல, ஒவ்வொரு நற்செய்தியையும்பற்றி சில நுணுக்கமான தகவல்களையும் கூறினார். எடுத்துக்காட்டாக, மாற்கு எழுதிய நற்செய்திக்கு பேதுருவின் எழுத்துக்களே ஆதாரம் என்று குறிப்பிடுகிறார். எனவே, இன்று நாம் பயன்படுத்துகிற புதிய ஏற்பாட்டிலுள்ள நூல்கள் இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்போஸ்தலர்களுடைய காலத்திலேயே மக்களுடைய புழக்கத்தில் இருந்தன அல்லது அப்போதே அவர்கள் இந்த நூல்களைத் திரட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என்று தெரிகிறது.

இவர் சுமார் 130இல் மரித்தார். பாபியாசைப்பற்றிய ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இவர் சித்திரவதைக்குமுந்தைய ஆயிரவருட அரசாட்சியைப்பற்றிய உறுதியான கருத்துடையவர் என்று தெரிகிறது.

இதைப்பற்றி இவர் ஓரிடத்தில் விவரிக்கிறார்.

அவர் மேசியாவின் இராஜ்யத்தைப் பின்வருமாறு விவரிக்கிறார். "நாட்கள் வரும்; திராட்சைச் செடிகள் வளரும்; ஒவ்வொரு செடியிலும் பத்தாயிரம் கிளைகள் இருக்கும்; ஒவ்வொரு கிளையிலும் பத்தாயிரம் தளிர்கள் இருக்கும்; ஒவ்வொரு தளிரிலும் பத்தாயிரம் குருத்துகள் இருக்கும்; ஒவ்வொரு குருத்திலும் பத்தாயிரம் கொத்துக்கள் இருக்கும்; ஒவ்வொரு கொத்திலும் பத்தாயிரம் திராட்சைப்பழங்கள் இருக்கும்; ஒவ்வொரு திராட்சையையும் பிழியும்போது 750 லிட்டர் திராட்சைச்சாறு வரும். ஒரு பரிசுத்தவான் ஒரு திராட்சைக்குலையை எடுத்துப் பிழியும்போது, இன்னொரு திராட்சைக்குலை, 'என்னையும் எடுத்துப் பிழி. நான் அதைவிட அதிகமான சாறு தருவேன். என்மூலம் நீ ஆண்டவரை ஆசீர்வதிக்கலாம்,' என்று சொல்லும்," என்று விவரிக்கிறார். தேவனுடைய இராஜ்ஜியத்தின் பரிபூரணத்தை விவரிக்க அவர் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள ஏராளமான உருவகங்களைப் பயன்படுத்துகிறார். வேதாகமத்தில் பலர் ஆயிர வருட அரசாட்சியைப்பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் காணத்தக்க ஆயிர வருட அரசாட்சியைப்பற்றிப் பேசுகிற வேதாகமத்தில் குறிப்பிடப்படாத முதல் நபர் பாபியஸ்தான்.

5. போலிகார்ப்

ஐந்தாவது போலிகார்ப். அப்போஸ்தலனாகிய யோவானின் சீடராகிய இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் சிமிர்னாவின் ஆயராக இருந்தார். கி.பி 165 அல்லது 166ஆம் ஆண்டில் ஆண்டோனியஸ் பயஸ் என்ற உரோமப் பேரரசனின் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த சித்திரவத்தையின்போது கைதுசெய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, இரத்தசாட்சியாக மரித்தார்.

இவர் பிலிப்பியர்களுக்கு எழுதிய கடிதம் இன்றும் நம்மிடம் உள்ளது. இந்தக் கடிதத்திலிருந்து சில பத்திகளை நான் இன்னும் சில நிமிடங்களில் மேற்கோள் காட்டுவேன். அதற்குமுன் இன்னொரு சுவையான காரியத்தைச் சொல்லவிரும்புகிறேன். ஒருமுறை போலிகார்ப் வேதப்புரட்டர் மார்சியனை சந்திக்க நேர்ந்தது. போலிகார்ப் அவரைச் சந்தித்த விதமும், அவரிடம் பேசிய துணிச்சலும் மிகவும் பாராட்டுக்குரியவை. அவர்கள் இருவரும் ஒருநாள் தற்செயலாக சந்தித்தார்கள். மார்சியன் மிகவும் தலைக்கனம் உடையவர். அவர் தனக்குத்தான் எல்லாம் தெரியும், பிறருக்கு ஒன்றும் தெரியாது, அவர்கள் முட்டாள்கள் என்ற எண்ணம் உடையவர். அவர் போலிகார்ப்பிடம், "நான் யார் என்று உனக்குத் தெரியுமா?" என்று கர்வமாகக் கேட்டார். அதற்கு போலிகார்ப், "நீ சாத்தானின் தலைப்பிள்ளை என்று எனக்குத் தெரியுமே," என்று பதிலளித்தார்.

சரி, இப்போது அவர் பிலிப்பியர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம். இது அந்த நிருபத்தின் இரண்டாம் அதிகாரம். "சகோதரரே, நான் நீதியைக்குறித்து உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன். நான் எழுத வேண்டும் என்று தீர்மானித்ததால் நான் இதை உங்களுக்கு எழுதவில்லை; மாறாக, எழுதுமாறு நீங்கள் வேண்டிக்கொண்டதால் நான் எழுதுகிறேன். ஏனென்றால், நானோ அல்லது வேறு யாருமோ 2 பேதுரு 3:15இல் பேதுரு குறிப்பிடுவதுபோல் ஆசீர்வதிக்கப்பட்ட, மகிமைப்படுத்தப்பட்ட நமக்குப் பிரியமான பவுலின் ஞானத்தை எட்ட முடியாது. அவர் உங்களிடையே இருந்தபோது, அப்போது உயிரோடு இருந்த அப்போஸ்தலர்கள் முன்னிலையில் சத்திய வார்த்தையைத் துல்லியமாகவும் உறுதியாகவும் கற்பித்தார். அவர் உங்களிடையே இல்லாமல் தூரமாக இருந்தபோது, அவர் உங்களுக்குக் கடிதம் எழுதினார். அதை நீங்கள் கவனமாகப் படித்தால், அது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட விசுவாசத்தில் உங்களைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறை என்றும், அதற்குமுன் தேவன்மேலும், கிறிஸ்துவின்மேலும், நம் அயலார்மேலும் அன்பை எழுப்புகிற "நம் அனைவருக்கும் தாய்," ஒருவனுடைய உள்ளத்தில் இந்தக் கிருபைகள் இருந்தால், அவன் நீதியின் கட்டளையை நிறைவேற்றுகிறான். ஏனென்றால் அன்புள்ளவன் எல்லா பாவங்களுக்கும் தூரமானவன்."

போலிகார்ப் போன்ற மனிதர்கள் பவுலின் எழுத்துக்களில் வைத்திருந்த நம்பிக்கையைக் கண்டு நான் வியக்கிறேன். சபையில் ஆரம்பத்திலிருந்தே ஒரு தொடர்ச்சி இருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நிச்சயமாக நம் கிறிஸ்தவ விசுவாசம் இயேசு கிறிஸ்துவிலிருந்துதான் தொடங்குகிறது. ஒருவேளை புதிய ஏற்பாட்டில் அது யோவான் ஸ்நானனில் ஆரம்பித்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆயினும் இயேசுவே நற்செய்தியின் உண்மையான ஆரம்பம். அந்த நற்செய்தி பேதுரு, யோவான், எபிரேயர் நிருபத்தின் ஆசிரியர், பவுல் போன்ற அப்போஸ்தலர்கள்வழியாகத் தொடர்ந்தது. அவர்களோடு அது நின்றுவிடவில்லை. அவர்கள் தங்களிடமிருந்தவைகளை இக்னேஷியஸ், போலிகார்ப், பாபியாஸ் போன்ற தேவபக்தியுள்ள மனிதர்களிடம் கையளித்துவிட்டுச் சென்றார்கள். இந்த மனிதர்கள் அதை நாம் இப்போது பார்க்கபோகிற மனிதர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள்.

6. ஜஸ்டின் மார்டிர்

இவருடைய பெயர் ஜஸ்டின். இவர் இரத்தசாட்சியாக மரித்ததால் பிற்காலத்தில் ஜஸ்டின் என்ற பெயரோடு மார்ட்டிர் என்ற பெயரும் சேர்ந்துகொண்டது.

சபை வரலாற்றின் கடந்த ஐந்து பாகங்களிலும் நான் இவரைப்பற்றி சில வாக்கியங்களாவது பேசியிருக்கிறேன். இவர் பத்தோடு பதினொன்று, அத்தோடு இதொன்று என்கிற ரகம் இல்லை. இவர் ஒரு மிகச் சிறந்த தன்விளக்கவாதி, திறமைசாலி, சாமர்த்தியசாலி, புத்திசாலி.

ஜஸ்டின் சமாரியாவின் நகரமாகிய ஃபிளேவியா நெப்பாலிஸில் சுமார் 110இல் பிறந்தார். இவருடைய அப்பாவும், தாத்தாவும் உரோமராக அல்லது கிரேக்கராக இருந்திருக்கலாம். எனினும், இவர் தன்னை சமாரியன் என்றழைத்தார். புறமத பழக்கவழக்கங்களில் வளர்ந்ததாலும், சத்தியத்தின்மேல் தாகம் இருந்ததாலும், இவர் தத்துவத்தை ஆர்வமாகப் படித்தார். இவர் ஆரம்பத்தில் அஞ்ஞான தெய்வங்களை வழிபட்டு, கடவுளைத் தேடி அலைந்தார். உரோம், ஏதென்ஸ், அலெக்சாந்திரியா எனப் பல இடங்களுக்குச் சென்றார். சீனோ, அரிஸ்டாட்டில், பித்தகோரஸ் போன்ற கிரேக்க அறிஞர்களுடைய சீடர்களிடம் ஞானத்தைத் தேடினார். அவர் தேடிய ஞானம் இவர்களிடம் இல்லையென்று முடிவுசெய்து, பின்னர் பிளேட்டோவின் கருத்துகளைப் பின்பற்றத்தொடங்கினார்.

தத்துவஞானிகளோடு உரையாடத் தனக்கிருந்த ஆசையைப்பற்றி இவ்வாறு எழுதுகிறார். “கிரேக்க அறிஞர் சீனோவைப் பின்பற்றுகிற ஒரு சீடரிடம் நான் சரணடைந்தேன்; அவரோடு கணிசமான நேரத்தை செலவழித்தேன். ஆனால், அவருக்கு அவ்வளவு அதிகமாகத் தெரியவில்லை. எனவே, கடவுளைப்பற்றி இன்னும் அதிகமாக அறிய நான் அவரை விட்டுவிட்டு இன்னொருவரை அணுகினேன்," என்று கூறுகிறார்.

அதற்குப்பின் ஜஸ்டின் சத்தியத்தைவிட பணத்தில் அதிக அக்கறையுள்ள கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலைப் பின்பற்றிய ஒருவரிடம் சென்றார். இவரைப்பற்றி ஜஸ்டின் என்ன சொல்லுகிறார் தெரியுமா? “இந்த மனிதன் என்னை ஏற்றுக்கொண்ட ஒருசில நாட்களுக்குப்பிறகு எங்கள் கருத்துப்பரிமாற்றம் அவருக்குப் பயனுள்ளதாக இல்லையென்று கூறினார். அதனால் இவரும் ஒரு தத்துவஞானி இல்லையென்று முடிவுசெய்து அவரைவிட்டு விலகினேன்,” என்று ஜஸ்டின் சொல்கிறார்.

மிக நேர்த்தியான தத்துவத்தைக் கேட்க ஆவலாக இருந்த ஜஸ்டின், தன் சொந்த ஞானத்தைப்பற்றியே அதிகமாக நினைத்துக்கொண்டிருந்த மிகப் பிரபலமான பித்தகோரஸின் ஆதரவாளர் ஒருவரிடம் சென்றார். அவரைப்பற்றி ஜஸ்டின் என்ன சொன்னார் தெரியுமா? "உனக்கு இசையும் வானவியலும் வடிவியலும் தெரியுமா? முதலாவது இவைகளை அறிந்துகொள்ளாமல், மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் துணையான தெய்வீகக் காரியங்களை உணர்ந்துகொள்ள முடியாது என்று என் அறியாமையைச் சுட்டிக்காட்டி என்னை அனுப்பிவிட்டார்," என்று கூறுகிறார்.

கொஞ்சம் ஏமாற்றமடைந்தபோதும் ஜஸ்டின் புகழ்பெற்ற, கிரேக்க அறிஞர் பிளேட்டோவின் சீடர்களிடம் போனார். அவர்களைப்பற்றிய ஜஸ்டினின் மதிப்பீடு இதோ! “எங்கள் நகரத்தில் குடியேறிய, பிளேட்டோவைப் பின்பற்றுகிறவர்கள் மத்தியில் உயர்ந்த அந்தஸ்திலிருந்த ஓர் அறிவுக்கூர்மையுள்ள மனிதனோடு என்னால் இயன்ற அளவு நேரம் செலவழித்தேன். நான் படிப்படியாக முன்னேறினேன். வெகு சீக்கிரத்தில் நான் ஞானியாகிவிட்டதாக நினைத்துக்கொண்டேன். அதுதான் என் முட்டாள்தனம்,” என்று ஜஸ்டின் முடிக்கிறார்.

தத்துவஞானிகளோடு கலந்துறவாடி சத்தியத்தை தேடிய ஜஸ்டினின் முயற்சி வீணாயிற்று. ஒருநாள் ஜஸ்டின் எபேசுவில் ஒரு கடற்கரையோரம் நடந்துபோய்க்கொண்டிருந்தார். அப்போது ஒரு வயதான மனிதர் கிறிஸ்துவைப்பற்றியும் விசுவாசத்தைப்பற்றியும் ஜஸ்டினுக்கு விளக்கி, அவரைக் கர்த்தரிடம் வழிநடத்தினார். அன்றே ஜஸ்டின் கிறிஸ்துவை அறிந்துகொண்டார். அந்தப் பெரியவர் என்ன சொன்னார் தெரியுமா? “வெகு காலத்துக்கு முன்பாகவே, இன்று மிக உயர்வாகக் கருதப்படும் தத்துவஞானிகள் அனைவரையும்விட அதிக தொன்மையான சில நீதியுள்ளவர்கள், கடவுளுக்குப் பிரியமானவர்கள், இப்போது நடந்துகொண்டிருக்கிற நிகழ்ச்சிகளையும், எதிர்காலத்தில் நடக்கப்போகிற நிகழ்ச்சிகளையும் கடந்த காலத்திலேயே முன்னுரைத்தார்கள். இவர்கள் தீர்க்கதரிசிகள் என்றழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, சத்தியத்தைக் கண்டார்கள், அதைப் பிறருக்கும் அறிவித்தார்கள். அவர்கள் எடுத்துரைத்தவை இன்னும் இருக்கின்றன. இவைகளைப் படித்தாலே போதும். சத்தியத்தைத் தெளிவாக அறியலாம். உலகத்தின் ஆரம்பம், முடிவு எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம்," என்றார்.

ஜஸ்டின் தத்துவ ஞானத்தின்மூலம் தேவனைத் தேடினார். அவருடைய தேடல் தோற்றது. அந்த முதியவர் கூறிய கிறிஸ்துவின் நற்செய்தியைக் கேட்டு கிறிஸ்தவரானார். நற்செய்தியைக் கேட்டபோது, "என் உள்ளத்தில் அனல் மூண்டது. நான் முற்பிதாக்களையும், தீர்க்கதரிசிகளையும், அவர்கள் நேசித்த கிறிஸ்துவையும் நேசிக்க ஆரம்பித்தேன். வேத எழுத்துக்களைத் தியானித்தேன், படித்தேன். கிறிஸ்தவத் தத்துவம் மட்டுமே சத்தியம், பயனுள்ளது என்று கண்டறிந்தேன்," என்று ஜஸ்டின் கூறினார்.

தான் உண்மையென்று விசுவாசித்த கிறிஸ்தவத்தை உண்மையான தத்துவமாக தன் வாழ்நாள் முழுவதும் உலகுக்குக் கற்பிப்பதற்காக ஜஸ்டின் தன்னை அர்ப்பணித்தார். ஆம், அவர் தன் வாழ்நாள் முழுவதும் தத்துவஞானி என்ற அங்கியை அணிந்திருந்தார்.

இவர் சிறந்த தத்துவஞானி, கல்விமான். இவர் பல கிறிஸ்தவ நூல்களை இயற்றி மக்களுக்குக் கிறிஸ்தவ சமயத்தைத் தெளிவாகப் புரியவைத்தார். கிறிஸ்தவ விசுவாசம் மட்டுமே உண்மையாகவே பகுத்தறிவுசார்ந்தது என்று விளக்கினார். "மனுக்குலத்துக்குச் சத்தியத்தைப் போதிக்கவும், மக்களைப் பிசாசின் பிடியிலிருந்து மீட்கவும் யாஹ்வேவாகிய வார்த்தையானவர் மனிதனானார், மாம்சமானார்," என்று அவர் போதித்தார். கிறிஸ்தவம்சார்ந்த கோட்பாடுகளை விவாதத்தின்மூலம் மும்முரமாகப் பரப்பினார். இவருடைய விவேகமான வேகமான போதனையினால் பலர் கிறிஸ்தவர்களானார்கள்.

கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதை அநீதியானது என்று உரோமப் பேரரசர்களுக்குக் காண்பிக்க ஜஸ்டின் எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. ஜஸ்டின் மார்டிர் உரோமப் பேரரசன் அன்டோனியஸ் பயசுக்கு அனுப்பிய ஒரு மேல்முறையீட்டை நான் இங்கு தருகிறேன். "கிறிஸ்தவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீங்கள் ஆராய்ந்துபார்க்க வேண்டும். அவை உறுதிப்படுத்தப்பட்டால், கிறிஸ்தவர்களாகிய எங்களைத் தக்கவிதமாகத் தண்டிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் . . . ஆனால், நாங்கள் குற்றவாளிகள் என்று எவராலும் எங்களைத் தீர்க்க முடியாவிட்டால், பொய் வதந்திகளை நம்பி, நிதானம் தவறி, குற்றமற்ற எங்களுக்குத் தீங்கிழைப்பதை நிறுத்தாவிட்டால், உண்மையை அறிந்தும் நீங்கள் நீதியை நிலைநிறுத்தாவிட்டால், தேவனுக்குமுன்பாக நீங்கள் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது." ஆணித்தரமான, அழுத்தமான வரிகள்.

தேவனுடைய வார்த்தையின் திருத்தமான அறிவின்படி, அவர் புறமதத்தையும் கிரேக்க தத்துவஞானத்தையும் நிராகரித்தது, ஏதென்சில் அப்போஸ்தலனாகிய பவுல் எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளிடம் மெய்யான தேவனையும் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவையும்பற்றித் தைரியமாக பேசியதை நினைப்பூட்டுகிறது.

ஜஸ்டின் அதிகமாகப் பயணம் செய்தார். இறுதியில் உரோமில் நிரந்தரமாகத் தங்கினார். இயேசுவே கிறிஸ்து என்றும், கிறிஸ்தவம் வேத வாக்கியங்களின்படியானது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

ஜஸ்டின் மார்டிர் டிரைஃபோ என்ற ஒரு யூதரோடு நடத்திய உரையாடல் மிகப் பிரபலமானது. அந்த உரையாடலின் சாராம்சத்தை நான் குறிப்பிடுகிறேன். "புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டின் நிஜம்; எனவே யூதர்கள் பழைய ஏற்பாட்டைப் பின்பற்றுவதுபோல, குறிப்பாக பழைய ஏற்பாட்டு மதச் சடங்குகளை, புதிய ஏற்பாட்டில் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இயேசுவே பழைய ஏற்பாடு முன்னுரைத்த மேசியா, வார்த்தை; இந்த வார்த்தையும் பழைய ஏற்பாட்டுத் தேவனும் ஒருவரே. யூதச் சடங்குகளைப் பின்பற்றுவதால் அல்ல, கிறிஸ்துவிடம் மனந்திரும்புவதால் மட்டுமே ஒருவன் நீதிப்படுத்தப்படுகிறான். எனவே விசுவாசிக்கும் சபை விசுவாசியாத யூதமதத்தின் இடத்தை எடுத்துக்கொண்டது. யூத மதத்தில் கிறிஸ்துவுக்கு இடம் இல்லாதவரை கிறிஸ்துவைக்கொண்ட கிறிஸ்தவம் உயர்ந்தது," என்பது இவருடைய விளக்கம்.

ஜஸ்டினின் இலக்கியப் படைப்புகளில் கிறிஸ்தவத்துக்குத் தன்விளக்கம் அளித்து அவர் எழுதியவை குறிப்பிடத்தக்கவை. அவர் தன்னுடைய முதல் தன்விளக்க நூலில் வேதாகமத்திலிருந்து வரும் வெளிச்சத்தின்மூலம் புறமத தத்துவத்தின் படுமோசமான இருளை அகற்ற முயல்கிறார். கிறிஸ்துவின் வல்லமையான வார்த்தைகளுக்கும் கிரியைகளுக்கும் நேர்மாறாக தத்துவஞானிகளின் ஞானம் பொய்யானவை, பொருளற்றவை என்று அவர் தெரிவிக்கிறார்.

புறமத கடவுட்களை வணங்க மறுத்ததற்காக, இரண்டாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நாத்தீகர்களென குற்றம் சாட்டப்பட்டார்கள். “நாங்கள் நாத்தீகர்கள் அல்ல. நாங்கள் சர்வலோகத்தைப் படைத்தவரை வணங்குகிறோம் . இந்தக் காரியங்களைப் போதித்தவர் இயேசு கிறிஸ்து . . . அவர் உண்மையான கடவுளின் குமாரன்,' என்று ஜஸ்டின் எடுத்துரைத்தார். விக்கிரகாராதனையைக்குறித்து, “கடவுள் என்று அழைக்கப்படுகிற ஒன்றை அவர்கள் உருவாக்குகிறார்கள்; இது முட்டாள்தனம் மட்டுமல்ல, இது கடவுளை அவமதிக்கும் செயலுமாகும் . . . ஒழுக்கமற்றவர்கள் தாங்கள் வணங்குவதற்காக கடவுட்களை வடிவமைத்து உண்டுபண்ணுவது என்னே முட்டாள்தனம்!" என்று கூறினார்.

வேதாகமத்தின் பல வசனங்களை மேற்கோள்காட்டி உயிர்த்தெழுதல், கிறிஸ்தவ ஒழுக்கம், ஞானஸ்நானம், கிறிஸ்துவைப்பற்றிய தீர்க்கதரிசனம், இயேசுவின் போதனைகள்போன்ற மிக முக்கியமான உபதேசங்களில் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார். "அரசாங்கம் [கிறிஸ்துவின்] தோளின்மேலிருக்கும்,” என்று கூறும் ஏசாயாவை மேற்கோள் காட்டி, “மனித அரசாங்கத்தை நாம் ஆவலோடு நாடினால் நாம் நம் கிறிஸ்துவை மறுதலிக்கிறோம் என்று பொருள்" என்று கூறினார். கிறிஸ்தவர்களின் சோதனைகளையும் பொறுப்புகளையும்பற்றி கலந்தாராய்கிறார். தேவனுக்குச் சரியான சேவை செய்யவேண்டுமானால் அவருடைய சித்தத்தை அறிந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று வற்புறுத்துகிறார். “இந்தக் காரியங்களை அறிவிக்க ஆட்கள் அவரால் எல்லா நாடுகளுக்கும் அனுப்பப்பட வேண்டும்” என்று சொல்கிறார். இன்று நாம் புதிய ஏற்பாடு என்றழைக்கிற 27 புத்தகங்கள் புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படாத காலத்திலேயே இந்தப் புத்தகங்களை அன்றைய விசுவாசிகள் வேதவாக்கியங்களாகப் பயன்படுத்தினார்கள் என்று ஜஸ்டினின் நூல்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால், அவர் பல வசனங்களைத் தம் நூல்களில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

ஜஸ்டினின் இரண்டாவது ஆதார உரையில் உரோம ஆட்சி மன்றத்திடம் முறையிடுகிறார். இயேசு கிறிஸ்துவைப்பற்றிய திருத்தமான அறிவை அடைந்தபிறகு, சித்திரவதைசெய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் அனுபவங்களை எடுத்துரைத்து உரோமர்களிடம் ஜஸ்டின் முறையிடுகிறார். கிறிஸ்தவவர்களின் நடத்தையில் பிரதிபலித்த இயேசுவின் போதனையின் நேர்த்தியான ஒழுக்கம் உரோம அதிகாரிகளுக்கு மதிப்பற்றதாகத் தோன்றியது. கிறிஸ்துவின் சீடன் என்பதை ஒப்புக்கொண்டால் அதன் விளைவு சாவுதானா என்ற சந்தேகம் எழக்கூடும். இந்தப் பின்புலத்தில் தான் கேள்விப்பட்ட லூஷியஸ் என்ற ஒரு மனிதரை ஜஸ்டின் மேற்கோள் காட்டி, “ஒரு விபசாரக்காரனாகவோ, வேசிக்கள்ளனாகவோ, கொலைகாரனாகவோ, திருடனாகவோ, கொள்ளைக்காரனாகவோ அல்லது வேறு எந்தக் குற்றச்செயலுக்காக குற்றவாளியாகவோ தீர்க்கப்படாமல், கிறிஸ்தவன் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே நீங்கள் ஏன் இந்த மனிதனுக்கு தண்டனை கொடுத்திருக்கிறீர்கள்?” என்று வினவுகிறார்.

அந்தக் காலகட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தவறான எண்ணத்தின் அளவை ஜஸ்டினின் கூற்று காட்டுகிறது: “நான் குறிப்பிட்டிருக்கும் சிலரோ அல்லது ஒருவேளை ஆர்ப்பாட்டத்திலும் தற்புகழ்ச்சியிலும் பிரியப்படும் உறுப்பினர்களோ எனக்கு எதிராக சூழ்ச்சிசெய்து என்னைக் கழுமரத்தில் அறைவார்கள் என எதிர்பார்க்கிறேன். பொது மக்களின் ஆதரவைப் பெறவும், அவர்களைப் பிரியப்படுத்தவும் கிறிஸ்தவர்களை நாத்தீகர்களாகவும், தேவபக்தியற்றவர்களாகவும் குற்றம்சாட்டி, தாங்கள் புரிந்துகொள்ளாத விஷயங்களில் நமக்கு எதிராகப் பகிரங்கமாக சாட்சி கொடுப்பவர்கள் தத்துவஞானிகள் என்ற பெயருக்குத் தகுதியானவர்கள் அல்ல. ஏனென்றால், கிறிஸ்துவின் போதனைகளை வாசிக்காமலே நம்மை அவர்கள் தாக்கினால், அவர்கள் முற்றிலும் சீர்கெட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். இவர்கள் தாங்கள் புரிந்துகொள்ளாத விஷயங்களைப்பற்றி கலந்துபேசுவதிலிருந்தோ, சாட்சி கொடுப்பதிலிருந்தோ அநேகமாக விலகியிருக்கும் படிப்பறிவில்லாதவர்களைவிட மோசமானவர்கள்,' என்று கூறினார்.

அவருடைய மரணம்

வெறுப்பு வேதாந்திகளின் வன்மத்தினால் ஜஸ்டின் உரோம ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு மரண தீர்ப்பளிக்கப்பட்டார். சுமார் 165இல் உரோமில் அவர் தலை வெட்டப்பட்டு இரத்தசாட்சியாக மரித்தார். ஆகவேதான், அவர் ஜஸ்டின் மார்டிர் என அழைக்கப்படுகிறார்.

ஜஸ்டினின் எழுத்து நடையில் அவருடைய நாளிலிருந்த மற்ற கல்விமான்களின் மெருகும் சாதுரியமும் குறைவுபடலாம், ஆனால் சத்தியத்தின்மேலும், நீதியின்மேலும் அவருக்கிருந்த வைராக்கியம் தெளிவாகத் தெரிகிறது. ஜஸ்டினின் இலக்கிய படைப்புகள் வரலாற்றுப் பொருளடக்கத்துக்காகவும், வேதாகம மேற்கோள்களுக்காகவும் உயர்வாக மதிக்கப்படுகின்றன. அவை இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையையும், அனுபவங்களையும்பற்றிய உட்பார்வையை அளிக்கின்றன.

ஆயிரம் வருட அரசாட்சியைப்பற்றியும், உயிர்த்தெழுதலைப்பற்றியும் ஜஸ்டின் தெளிவாக அறிந்திருந்தார் என்று தெரிகிறது. கிறிஸ்தவர்கள் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்திருந்ததால் சித்திரவத்தையின்போது அந்த நம்பிக்கை அவர்களைத் தாங்கியது, பலப்படுத்தியது, சோதனைகளைச் சகிக்க உதவியது, மரணத்தைத் தைரியமாக எதிர்கொள்ள முடிந்தது. "மரித்த விசுவாசிகள் உயிர்த்தெழுவார்கள், ஆயிர வருடம் அரசாள்வார்கள்," என்று அவர் குறிப்பிடுகிறார். ஆயிர வருட அரசாட்சிக்குப்பின் மரித்த அனைவரும் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவின் நியாசனத்திற்குமுன் நிற்பார்கள் என்றும் கூறுகிறார். அதே நேரத்தில் சில கிறிஸ்தவர்கள் வேறுவிதமாக நினைத்தார்கள் என்றும் அவர் கூறுகிறார். இரண்டாம் நூற்றாண்டிலேயே ஆண்டவராகிய இயேசுவின் இரண்டாம் வருகையையும், ஆயிர வருட அரசாட்சியைப்பற்றியும் கிறிஸ்தவர்களிடையே ஒத்த கருத்து இருக்கவில்லை என்று தெரிகிறது.

"சில கிறிஸ்தவர்கள் சரீர உயிர்த்தெழுதலை விசுவாசிக்கவில்லை. ஒருவன் மரித்தவுடன் அவனுடைய ஆத்துமா பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நம்புகிறார்கள். இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று நினைக்கவேண்டாம்," என்று அவர் கூறுகிறார்.

துறவறத்தை இவர் அதிகம் வலியுறுத்தினார். எந்த அளவுக்கு என்றால், இவருடைய சீடர் டாற்ரியான் “திருமணம் செய்தால் விபச்சாரம்” என்று சொன்னார்.

7. லியோனின் ஐரேனியஸ்

ஆதிச் சபையில் நாம் பார்க்கவிரும்பும் அடுத்த நபர் இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த லியோனின் ஐரேனியஸ்.

ஐரேனியஸ் ஸ்மிர்னாவிலும், பிரான்சிலுள்ள கவுலிலும் ஆயராக இருந்தார். சபைப் பிதா போலிகார்ப்பின் சீடராகிய இவர் சமயப்புரட்டுக்களுக்கு எதிராகவும், தேவனுடைய ஒற்றுமை, தீமையின் தோற்றம் ஆகியவைகளைக்குறித்தும் எழுதினார். மிஷனரியும், தன்விளக்கவாதியுமாகிய இவர் ஞானவாதத்தைக் கடுமையாக எதிர்த்தார். லியோனின் ஆயராகவும் இருந்தார். லியோனில் ஆயராக இருந்தபோது இரத்தசாட்சியாக மரித்தார். அந்தியோக்கியாவின் இக்னேஷியஸ், ஜஸ்டின் மார்ட்டிர் போன்ற ஆதிச் சபைத் தலைவர்கள் ஞானவாதத்திற்கு ஒத்த தவறான போதனைகளுக்கு எதிராக வாதாடினார்கள். ஆனால் ஐரேனியஸ் ஞானவாதத்தை மிகக் கவனமாகவும், விரிவாகவும், வித்தியாசமாகவும் மறுத்தார். குறிப்பாக வாலண்டினஸ் கற்பித்த ஞானவாதத்தை மிகத் திறமையாக முறியடித்தார் என்று சொல்லலாம். சில கிறிஸ்தவர்கள் தாங்கள் அப்போஸ்தலர்களிடமிருந்து பெற்ற இரகசியமான போதனைகளைப் பின்பற்றுவதாகக் கூறினார்கள்; இந்தக் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஐரேனியஸ் பேசினார்.

ஐரேனியசின் ஒரு மேற்கோளை நான் உங்களுக்குப் படித்துக்காட்ட விரும்புகிறேன். "சத்தியத்தைக் காண விரும்புகிறவர்கள் அப்போஸ்தலர்களின் பாரம்பரியத்தை ஒவ்வொரு சபையிலும் தெளிவாகக் காணலாம், அப்போஸ்தலர்களால் நிறுவப்பட்டவர்களையும், அவர்களுடைய உபதேசத்தின் உண்மையான வாரிசுகளையும் நாம் நம் காலம்வரைத் திட்டவட்டமாகக் கணக்கிடலாம். இவர்களில் எவரும் சமயப்புரட்டாளர்களின் பைத்தியக்காரத்தனமான கருத்துக்களைக் கற்பிக்கவுமில்லை, சிந்திக்கவுமில்லை. அப்போஸ்தலர்கள் மறைவான பரம இரகசியங்களை அறிந்திருந்தால், அவர்கள் அதை பொதுமக்களுக்குப் போதிக்காமல் விட்டிருந்தாலும், சபைகளை நடத்த அவர்கள் நியமித்த தலைவர்களுக் நிச்சயமாக இரகசியமாகவாவது போதித்திருப்பார்கள், கையளித்திருப்பார்கள். ஏனென்றால், தாங்கள் விட்டுச் செல்லும் தலைவர்கள் சரியானவர்களாகவும், குறைசொல்ல முடியாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அவர்கள் நிச்சயமாக விரும்பினார்கள்," என்றும் கூறினார்.

மறைவான பெரிய பரம இரகசியங்கள் எதுவும் இல்லை என்றும், அப்படி இருந்திருந்தால் அப்போஸ்தலர்கள் அவைகளைச் சபைப் பிதாக்களிடம் ஒப்படைத்திருப்பார்கள் என்றும் ஐரேனியஸ் சொல்வது குறிப்பிடத்தக்கது. வேதத்துக்கு வெளியே, வேதத்தில் நமக்குக் கிடைக்காத, யாருக்கும் புரியாத ஆழமான சத்தியங்கள், பரம இரகசியங்கள் நிறைய இருக்கின்றன என்ற ஞானவாதத்திற்கு எதிராக ஐரேனியஸ் மிகத் தெளிவாக வாதிட்டார். அப்போஸ்தலர்கள் நியமித்த தலைவர்கள்மேல் இருந்த நம்பிக்கையைப்பற்றியும் ஐரேனியஸ் எழுதினார்.

ஐரேனியஸின் இன்னொரு மேற்கோளை நான் இங்கு தருகிறேன். இந்த மேற்கோளில் இவர் தன் முன்னோடியாகிய போலிகார்பைப்பற்றிக் குறிப்பிடுகிறார். போலிகார்ப் அப்போஸ்தலர்களிடமிருந்து மட்டும் கற்கவில்லை; கிறிஸ்துவைக் கண்ட மனிதர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டார். அவர்களால் போதிக்கப்பட்டார். இப்படிப்பட்ட போலிகார்ப் சிமிர்னாவில் உள்ள சபையில் ஆசியாவிற்கான ஆயராக அப்போஸ்தலர்களால் நியமிக்கப்பட்டார் என்று கூறுகிறார்.

"என் இளமைப் பருவத்திலிருந்தே நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் நீண்ட காலம் வாழ்ந்து, தன் பழுத்த வயதில் அற்புதமான இரத்தசாட்சியாக இந்த உலகத்தைவிட்டு வெளியேறினார். தான் அப்போஸ்தலர்களிடமிருந்து கற்றுக்கொண்டதை அவர் எப்போதும் போதித்தார், அது இன்றுவரை சபையில் நிலைத்திருக்கிறது, நீடித்திருக்கிறது. ஆசியாவில் உள்ள எல்லாச் சபைகளும் இதற்குச் சாட்சி. வாலண்டினஸ், மார்சியன்போன்ற பொய்யான, தவறான சிந்தனையாளர்களைவிட போலிகார்ப் மிகவும் நம்பத்தக்கவர், உண்மையுள்ளவர்." இது அவருடைய சாட்சி. அதாவது போலிகார்ப் போன்றவர்களை நம்பலாம், வாலண்டினஸ், மார்சியன் போன்றவர்களை நம்ப முடியாது என்று அவர் ஆணித்தரமாகக் கூறுகிறார். போலிகார்ப் போன்றவர்கள் நம்பத்தக்கவர்கள் என்று ஐரேனியஸ் சொல்வதற்குக் காரணம் அவர்கள் இயேசுவின் போதனைகளையும், அப்போஸ்தலர்களின் போதனைகளையும் உண்மையும் உத்தமுமாகப் பின்பற்றினார்கள், கடத்தினார்கள்.

180-250களுக்கிடையில் வாழ்ந்த சபைப் பிதாக்களில் முதல்வரான ஐரேனியஸ் 130இல் சின்ன ஆசியாவில் பிறந்தவர். ஐரேனியஸ் அப்போஸ்தலரான யோவானின் சீடராக இருந்த போலிகார்ப்பின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரேனியசுக்கு போலிகார்ப்பை நன்கு தெரிந்திருந்ததால், போலிகார்ப்மூலம் யோவானின் போதனைகளையும், ஆதிச் சபை நடவடிக்கைகளையும் அறிந்து வைத்திருக்க முடிந்தது. ஆகவே, இரண்டாம் நூற்றாண்டின் கடைசிக் காலத்தில் வாழ்ந்த ஐரேனியசிடம் யோவான், போலிகார்ப் ஆகியோரின் அறிவும், அனுபவமும் உட்பட 200 வருடகால அனுபவங்கள் இருந்தது. எனவே, அவர் ஞானவாதத்தைப் பின்பற்றியவர்களோடு தைரியமாக தர்க்கம் செய்தார். அவருடைய காலத்தில் ஐரேனியஸ் பாரம்பரியம் என்று அழைத்தவை ஆதிச் சபை கடைப்பிடித்த உண்மையான போதனைகளாகும். ஆனால், காலம் செல்லச் செல்ல உண்மைக்குப் புறம்பான, மனிதனால் உண்டாக்கப்பட்டவைகள் பாரம்பரியமாக மாறின.

கௌலில் (பிரான்ஸ்) ஆயராக இருந்த போதீனஸ் கொலை செய்யப்பட்டபோது ஐரேனியஸ் சபையின் ஆயராக நியமிக்கப்பட்டார். அவருடைய எழுத்துக்கள் சபைக்கு நல்ல பலனளித்தன. ஐந்து நூல்களாக ஐரேனியஸ் எழுதிய Against Heresies என்ற நூல் இன்றும் பதிப்பில் இருக்கின்றது. ஞானவாதப் போதனைகளிலிருந்து சபையைக் காப்பதற்காக எழுதப்பட்ட இந்நூலின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.

8. பெர்பெத்துவா, பெலிசிட்டாஸ்

ஆப்பிரிக்காவின் கார்தேஜில் இரத்தசாட்சியாக மரித்தவர்களில் பெர்பெத்துவா, பெலிசிட்டாஸ் என்ற இரண்டு பெண்கள் மிக முக்கியமானவர்கள். பெர்பெத்துவா நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். பெர்பெத்துவா, ஒரு கிறிஸ்தவ தாய்க்குப் பிறந்து, பின்னாளில் துனிசியாவில் இருந்த ஓர் உரோம அதிகாரிக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார். பெர்பெத்துவா கைதுசெய்யப்பட்டபோது அவருக்கு 22 வயது; பால்மறவா ஒரு குழந்தையின் தாய். இவருடைய பணிப்பெண்தான் பெலிசிட்டாஸ். இவர்கள் வாழ்ந்த காலம் மூன்றாம் நூற்றாண்டு. இவர்களுடைய காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையும், வேதகலாபனையும் அதிகமாக நிகழ்ந்தன. கிறிஸ்தவத்தைப் பின்பற்றியவர்கள் கொடிய விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டார்கள்.

பெலிசிட்டாஸ் அப்போது எட்டு மாதக் கர்ப்பிணி. காவலர்களிடம் பிடிபட்டாள். "கிறிஸ்துவை மறுதலி, உனக்கு விடுதலை. உன் குழந்தையுடன் நீ ஆனந்தமாய் வாழலாம்," என்று காவலர்கள் பயமுறுத்தினார்கள். கிறிஸ்துவை மறுதலித்து வாழ்வதை விட, கிறிஸ்துவுக்காய் உயிரை விடுவந்து சிறந்தது என்று விசுவாசத்தில் நிலைத்து நின்றார் பெலிசிட்டாஸ். கருவில் இருக்கும் குழந்தையோடு சாக விரும்பாமல், தேவனிடம் வேண்டி அந்த இரவே பெலிசிட்டால் குழந்தை பெற்றெடுத்தார் என்கிறார்கள்.

கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டதற்காக பெர்பெத்துவாவும், அவருடைய பணிப்பெண்ணான பெலிசிட்டாசும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இருவரும் 203ஆம் ஆண்டு இரத்தசாட்சிகளாக மரித்தார்கள். இவர்களைப்பற்றிய எல்லாப் படங்களும் ஏறக்குறைய அவர்களுடைய மரணத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

அப்போது உரோமை ஆண்ட செப்டிமஸ் செவேரஸ் என்ற கொடுங்கோலன் பெர்பெத்துவாவையும் பெலிசிட்டாசையும் இன்னும் அவர்களோடு இருந்த ஒரு சில கிறிஸ்தவப் பெண்களையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்தான். அந்நேரத்தில் கிறிஸ்துவை விசுவாசிக்காத பெர்பெத்துவாவின் தந்தை பெர்பெத்துவாவிடம் வந்து, “தயவுசெய்து நீ கிறிஸ்துவை மறுதலித்துவிடு, அரசன் உன்னை விடுதலை செய்துவிடுவான். இல்லையென்றால் நீ அழிந்துவிடுவாய்” என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவள், அருகே இருந்த ஒரு பாத்திரத்தைச் சுட்டிக்காட்டி, “இந்தப் பாத்திரம் இருக்கிறதே, இதைப் பாத்திரம் என்றுதான் அழைக்கவேண்டும், வேறு எப்பெயராலும் அழைக்க முடியாது. அதைப்போன்றுதான் நான் கிறிஸ்தவள் என்றே அழைக்கப்படவேண்டும். அதில்தான் எனக்கு பெருமை இருக்கிறது” என்று சொல்லி அவரை அங்கிருந்து அனுப்பி விட்டார்.

பெர்பெத்துவா தன் சிறை வாழ்க்கையை, "இது எனக்குச் சிறைக்கூடம் இல்லை. இது எனக்கு அரண்மனை. இங்கு நான் ஒவ்வொரு நாளும் கர்த்தரோடு பேசும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது," என்று விவரிக்கிறார். "நான் சிறையிலிருந்து விடுதலையாவேனா அல்லது கொல்லப்படுவேனா," என்று அவர் தேவனிடம் கேட்டபோது தேவன் அவளுக்கு ஒரு தரிசனத்தின்மூலம் பதிலளித்தார்.

அந்தத் தரிசனத்தில் தங்கமயமான ஓர் ஏணி விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே இருப்பதைக் கண்டார். உடனே அவர் அந்த ஏணியில் வேகவேகமாக ஏறினார். இடையே ஓரிடத்தில் கொடிய பாம்பொன்று இருப்பதையும் கண்டார். அந்த பாம்பைக் கண்டதும் அவர் பயந்து நடுங்கினார். இருந்தாலும், அவர் மனதிலே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்தப் பாம்போடு போராடி இறுதியில் வெற்றியும் கண்டார். பின்னர் அவர் தொடர்ந்து ஏறி, விண்ணகத்தை அடைந்தார். விண்ணகத்தில் தேவன் அவரை இன்முகத்தோடு வரவேற்றார்.

பெர்பெத்துவா இந்தத் தரிசனத்தைத் தனக்கு நற்செய்தி அறிவித்து, ஞானஸ்நானம் கொடுத்து, தன்னோடு சிறையில் அடைபட்டுக் கிடந்த சட்டைரஸ் என்பவரிடம் எடுத்துச் சொன்னபோது அவர் அவளிடம், “இந்தத் தரிசனம் கிறிஸ்துவுக்காக உயிர்துறக்கத் துணிந்திருக்கும் உனக்கு அவர் கொடுக்க இருக்கும் பரிசை எடுத்துக்கூறுகிறது” என்று சொன்னார்.

அரசன் பெர்பெத்துவாவையும் பெலிசிட்டாசையும் இன்னும் அவர்களோடு இருந்த ஒரு சில பெண்களையும் கொடிய விலங்குகளுக்கு முன்பாகத் தூக்கி எறிந்தான். ஆனால், அவை அவர்களை ஒன்றுமே செய்யவில்லை. இதைக் கண்டு அரசன் வியப்புற்றான். பின்னர் அவன் அவர்களை எரியும் தீப்பிழம்பில் தூக்கி எறிந்தான். அப்போதும் அந்தத் தீப்பிழம்பு அவர்களை ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் அந்தத் தீப்பிழம்பின் நடுவே தேவனைப் பாடி புகழ்ந்துகொண்டிருந்தார்கள். இதைக் கண்டு சினமுற்ற அரசன் அவர்களை வாளுக்கு இரையாக்கிக் கொன்றான். அவர்கள் தங்களுடைய வாழ்வினாலும் இறப்பினாலும் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து இறந்தார்கள்.

அவர்கள் இருவரும் இரத்தசாட்சிகளாக மரிப்பதற்கு முந்தின நாள் அவர்களோடு சிறையில் இருந்த அனைவரும் அன்பின் விருந்து சுவைத்தார்கள். கொலைக்களத்துக்கு இருவரும் சங்கீதங்கள் பாடிக்கொண்டே சென்றார்கள்.

9. அலெக்சாந்திரியா சபை: கிளெமெந்து

உரோமின் கிளெமெந்துவைப்பற்றி நாம் ஏற்கெனவே பார்த்தோம். இப்போது அலெக்சாந்திரியாவின் கிளெமெந்துவைப்பற்றிப் பார்ப்போம்.

உரோமப் பேரரசில் உரோமுக்குப்பிறகு அலெக்சாந்திரியா முக்கிய இடத்தை வகித்தது. உரோம் நகரம் உரோமப் பேரரசின் சட்ட நிர்வாகத் தலைநகரம் என்றால், அலெக்சாந்திரியா அதன் கலாச்சார, அறிவியல் தலைநகராகவும், ஒரு முக்கியமான துறைமுகமாகவும் விளங்கியது. இந்நகரில் ஒரு பெரும் யூத சமுதாயம் வாழ்ந்து வந்தது. அலெக்சாந்திரியாவில் கிறிஸ்தவம் எப்போது ஆரம்பித்தது என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. அப்பொல்லோ அங்கிருந்து வந்ததாக அறிகிறோம் (அப். 18:24-28). யூதர்கள் மத்தியில் கிறிஸ்தவம் தலைதூக்கியிருக்கலாம்.

அலெக்சாந்திரியாவின் முதல் பெரும் கிறிஸ்தவப் போதகர் கிளெமெந்து. இவருடைய எழுத்துக்களைக் காலம் அழித்துவிடவில்லை. இவர் சுமார் 150 வாக்கில் பிறந்து, சுமார் 213வாக்கில் இறந்தார் என்று கூறப்படுகிறது. இவர் ஏதென்ஸ் நகரத்தில் அஞ்ஞான பெற்றோருக்குப் பிறந்து, பின்பு கிறிஸ்தவரானார். கிறிஸ்தவரானபிறகு, இவர் கிறிஸ்தவ விசுவாசத்தைத் தெளிவாகப் போதிக்கும் சிறந்த ஆசிரியர்களைத் தேடினார்.

ஒழுக்கக்கேட்டின் காரணமாக அஞ்ஞான மதத்தை நிராகரித்த கிளமெந்து சத்தியத்தைத் தேடி கிரீஸ், ஆசியா மைனர், பாலஸ்தீனம், எகிப்து ஆகிய நாடுகளுக்குப் பயணித்தார். கிரீஸில் அவர் இறையியலாளர் அதனகோரசைச் சந்தித்தார். கிழக்கில் இருந்தபோது, டாற்றியன் என்ற அசீரியரிடமும், சிசேரியாவின் தியோபிலஸ் என்ற யூதனிடமும் கற்றார்.

கி.பி. 180இல், கிளெமெந்து அலெக்சாந்திரியாவை அடைந்தார். பென்டேனஸ் (Pantaenus) என்ற மனிதர் கிளெமந்துவை மிகவும் கவர்ந்தார். அலெக்சாந்திரியாவிலிருந்த பென்டேனஸ் ஸ்தோயிக்க தத்துவஞானியாக இருந்து கிறிஸ்துவை அறிந்துகொண்ட மனிதன். கிழக்கிற்கு இந்தியாவரை மிஷனரியாகப் போய்வந்த பென்டேனஸ் அலெக்சாந்திரியாவில் ஞானவாதத்தைவிட கிறிஸ்தவம் மேலானது என்று காட்ட ஒரு கிறிஸ்தவத் தத்துவக் கல்லூரியை நிறுவி நடத்தி வந்தார். அங்கு கிளெமெந்து ஒரு மாணவனாகச் சேர்ந்தார். கிளெமெந்து பென்டேனசுடன் இருந்து பென்டேனஸ் 190இல் இறந்தபிறகு அந்தக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஏற்றார்.

இறுதியில் கிளமெந்து அலெக்சாந்திரியாவின் ஆயரானார். அவர் கிறிஸ்தவத்தின் சத்தியத்தை அந்த நகரத்திலிருந்த படித்த பெருமக்களுக்குக் கற்பிக்க அரும்பாடுபட்டார். அந்த நேரத்தில் 10 இலட்சம் மக்கள் வாழ்ந்த அந்தப் பெருநகரத்தில் இவர் செல்வாக்குமிக்க மிகச் சிறந்த கிறிஸ்தவ ஆசிரியராகத் திகழ்ந்தார்.

கிளெமெந்துவின் மூன்று முக்கியமான படைப்புகள் முழுமையாக எஞ்சியிருக்கின்றன; அவை கூட்டாக ஒரு முத்தொகுப்பு என்று குறிப்பிடப்படுகின்றன.அவை: முதலாவது, “கிரேக்கர்களுக்கான போதனை” (The Protrepticus (Exhortation) என்ற நூல். கிரேக்கர்கள் கிறிஸ்துவை அறிந்து கொள்ளுவதற்காக கிளெமெந்து இதை எழுதினார். இதில் அவர் கிறிஸ்துவைத் தெய்வீக வார்த்தையாக விளக்கியுள்ளார். இரண்டாவது, “ஆசிரியர்” (The Paedagogus (Tutor) என்ற நூல். இது புதிதாக கிறிஸ்துவை அறிந்து கொண்டவர்களுக்கான நூல். கிறிஸ்தவன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற எளிமையான போதனையை இந்நூல் அளிக்கிறது. மூன்றாவது, “தரைவிரிப்புப் பை” ( The Stromata (Miscellanies)) என்ற தலைப்பைக் கொண்ட ஒரு விநோதமான நூல். கிரேக்க தத்துவத்தில் நல்ல அறிவைக் கொண்டிருந்த கிளமெந்து தன் நூல்களில் அதை நன்றாகப் பயன்படுத்தி கிரேக்கர்கள் கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் விதத்தில் கிறிஸ்தவ போதனை அளித்தார். தம் கிரேக்க தத்துவ அறிவைப் பயன்படுத்தி ஞானவாதப் போதனைகளுக்கெதிராக வாதாடி கிறிஸ்துவை கிரேக்கர்களுக்கு விளக்க கிளெமெந்துவின் நூல்கள் முயன்றன. சில வேளைகளில் கிளெமெந்துவின் எழுத்தக்களில் தத்துவம் அவர்மேல் தேவைக்கும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததை பார்க்க முடிகின்றது. கிரேக்க தத்துவங்களையெல்லாம்விட கிறிஸ்தவம் மேலானது என்பதை தத்துவத்தை நாடி அலைந்த கிரேக்கர்களுக்கு எளிதாக எடுத்துக்கூறக்கூடிய வல்லமை கிளெமெந்துவுக்குப்பின் அவருடைய சீடரான ஒரிஜெனுக்கு மட்டுமே இருந்தது என்று கூற வேண்டும்.

ஆரம்பகால கிறிஸ்தவப் பாடல்கள் கிளெமெந்துவின் எழுத்துக்களில் இருந்து வந்தவை. அவை சில நேரங்களில் இரட்சகராகிய கிறிஸ்துவின் பாடல் என்று அழைக்கப்படுகின்றன. அவருடைய பாடலின் சில வரிகளை நான் இங்கு மேற்கோள் காட்டுகிறேன். ஆதிச் சபையில் விசுவாசிகள் பாடிய பாடல்கள் எவ்வளவு தரமானவை என்பதைச் சுட்டிக்காட்டவே நான் இவைகளை இங்கு குறிப்பிடுகிறேன். அவையனைத்தும் தன்விளக்கங்களோ, விசுவாச அறிக்கைகளோ, இறையியல்களோ, கொள்கைப்பரப்புப் பாடல்களோ இல்லை. அவை மிக எளிமையானவை, தேவனைத் துதிக்கும் துதியின் வெளியாக்கங்கள்.

Bridle of colts untamed, Over our wills presiding; Wing of unwandering birds, Our flight securely guiding. Rudder of youth unbending, Firm against adverse shock; Shepherd, with wisdom tending Lambs of the royal flock: Thy simple children bring In one, that they may sing In solemn lays Their hymns of praise With guileless lips to Christ their King.

இது ஓர் அழகான கவிதை.

அவர் அஞ்ஞான மதங்களுக்கு எதிராகக் கடுமையாக எழுதினார். இதோ ஓர் எடுத்துக்காட்டு. “இரகசியங்கள் வெறும் பாரம்பரியங்களே, வீண் கண்டுபிடிப்பே; இந்த அசுத்தமான அசுத்தத்தோடும், இழிவான செயல்களோடும் மக்கள் வேசித்தன மதத்தை மதிக்கிறார்கள் என்றால் அது பிசாசின் தந்திரங்களில் ஒன்றாகும்.” பாரம்பரியங்களையும், அஞ்ஞான வழிபாடுகளையும் அவர் பிசாசின் தந்திரங்கள் என்று எழுதுகிறார்.

அவரைப்பற்றி நான் இன்னும் சில வார்த்தைகளை சொல்ல விரும்புகிறேன். அவருடைய ஒரு சிறிய ஜெபத்தை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

“எங்களுக்குப் போதிக்கும் போதகரே, எங்கள் பிதாவே, இஸ்ரயேலின் வழிகாட்டியே, பிதாவும், மகனும், ஒன்றானவரே, ஆண்டவரே, உம் சாயலுக்கு ஒத்த சாயலாய் மாறவும், நல்ல தேவனும், கடினமற்ற நீதிபதியுமாகிய தேவனாகிய உம்மை, எங்கள் பலத்தின்படி, காணவும் எங்களுக்கு இரங்கும். உம் சமாதானத்தில் வாழ்பவர்களும், உம் நகரத்தில் தங்கியிருப்பவர்களுமாகிய நாங்கள் இந்தப் பாவக்கடலில் சிக்கிக்கொள்ளாமல் இதைக் கடக்க, இரவுபகல் சொல்லமுடியாத ஞானமாகிய பரிசுத்த ஆவியானவரால் நாங்கள் அமைதலோடு வாழவும், தேவையான எல்லா வளங்களையும் எங்களுக்கு நீர் ஏராளமாக அருள்வீராக. அப்போது நாங்கள் அந்தப் பரிபூரண நாளில், எங்கள் பிதாவும், மகனும், மகனும் பிதாவும், போதகரும் ஆசிரியருமாகிய உமக்குப் பரிசுத்த ஆவியானவரோடு சேர்ந்து நித்திய துதியை ஏறெடுப்போம்." என்னே அற்புதமான ஜெபம்.

அவருடைய பாடல்களிலும், ஜெபங்களிலும், எழுத்துக்களிலும் இழையோடுகிற அவருடைய ஆவியை நான் கண்டு வியக்கிறேன்.

அப்போஸ்தலர்களுடைய காலத்துக்குப்பின் வாழ்ந்த சபைப் பிதாக்களைப்பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம். இவர்கள் அனைவரும் அப்போஸ்தலர்களைப்போல விவேகமும், ஞானமும், திறமையும் கொண்டவர்களாக இல்லாவிட்டாலும் ஒரு சிலர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடைய காலத்தில் சபை பல போலிப்போதனைகளை சந்தித்ததோடு மட்டுமின்றி, பலவீனமுமடைந்தது. சபைப்பிதாக்களின் வேத அறிவும் குறைவாக இருந்தபோது சபை வரலாறு சரிவைச் சந்தித்தது.

10. ஓரிஜென் (Origen)

அடுத்து நாம் அலெக்சாந்திரியாவின் ஒரிஜென் என்பவரைப்பற்றிப் பார்க்கப்போகிறோம். ஆதிச் சபை வரலாற்றில் ஓரிஜென் மிகவும் சுவாரஸ்யமான நபர். அவர் ஓர் எழுத்தாளர். அவர் வேதப்புரட்டுகளுக்கு எதிராக எழுதினார். இவருடைய அப்பா லியோனிதாஸ் 202ஆம் ஆண்டு இரத்தசாட்சியாக மரித்தார். சபை வரலாற்றில் ஒரிஜென் திறமைவாய்ந்த ஒரு தலைவர். அவர் மிகத் திறமையாகப் போதித்தார், எழுதினார். கிறிஸ்தவ விசுவாசத்திற்காக இரத்தசாட்சியாக மரித்த ஒருவருடைய மகனாக அலெக்சாந்திரியாவில் பிறந்த ஓரிஜென் ஆவிக்குரிய சூழல் நிறைந்த ஒரு குடும்பத்தில் வளர்ந்தார். இவர் நாம் சற்றுமுன் பார்த்த அலெக்சாந்திரியாவின் கிளெமெந்துவின் சீடர். இவர் வேதாகமத்தின் உருவக விளக்கத்தை ஆதரித்தார். இவர் ஒரு துறவியைப்போல் வாழ்ந்தார்.

கிளெமெந்துவின் மாணவாக இருந்து கல்வி கற்ற ஓரிஜென் தன் 18ஆவது வயதில் ஒரு கல்விக்கூடத்தின் தலைமை ஆசிரியரானார். சித்திரவதைகள் நிறைந்த அந்தக் காலகட்டத்திலும் எல்லோராலும் பாராட்டப்படும் அளவுக்கு அவருக்கு மதிப்பு உயர்ந்திருந்தது. ஓரிஜெனை தலைமை ஆசிரியராக நியமித்த தெமெத்திரியஸ் கருத்து வேறுபாடுகளால் ஓரிஜெனுக்கு எதிரியாக மாறினார். இருந்தாலும் ஓரிஜெனின் கல்விக்கூடம் அநேக மாணவர்களைக் கவர்ந்திழுத்தது. கிழக்கத்திய சபையின் பல நல்ல ஆயர்கள் இந்தப் பள்ளியிலிருந்து வந்தார்கள்.

ஓரிஜென் பல நாடுகளுக்கும் போய் சிறந்த ஞானிகளிடம் பயில விரும்பினார். உரோம், எருசலேம், அந்தியோகியா, கிரீஸ், அரேபியா போன்ற நாடுகளுக்கெல்லாம் ஓரிஜென் போனார். அவர் வெகு விரைவிலேயே இறையியல் போதனைகளில் ஆலோசனை சொல்லக்கூடிய திறமைசாலியாக கிழக்கத்திய சபையால் மதிக்கப்பட்டார். 231இல் பாலஸ்தீன செசரியாவின் சபை ஓரிஜெனைப் போதகராகப் பிரதிஷ்டை செய்து நியமித்தது. இது ஓரிஜெனின் எதிரியாக இருந்த தெமெத்திரியசுக்கு அதிக ஆத்திரமூட்டியது. தெமெத்திரியஸ் ஓரிஜெனை அலெக்சாந்திரியா சபையிலிருந்து ஒழுங்குக் கட்டுப்பாடுமூலம் நீக்கினார். ஓரிஜென் பாலஸ்தீன செசாரியாவிலேயே தங்கி எழுதுவதிலும், போதிப்பதிலும், பிரசங்கிப்பதிலும், பயணிப்பதிலும் கவனம் செலுத்தி தன் இறுதிக்காலத்தைக் கழித்தார்.

ஓரிஜென் வேதத்தை அதிகமாக நேசித்தார். தன் வாழ்வில் தீவிரமான பல கட்டுப்பாடுகளைப் பின்பற்றினார். சுவையான உணவைத் துறந்தார். வெறும் தரையில் உறங்குவதை வழக்கமாகக் கொண்டார். மிகக் கடுமையாக உழைத்து அநேக நூல்களை எழுதினார். ஜெரோம் ஓரிஜெனைப்பற்றிக் கூறும்போது, "எந்தவொரு மனிதனும் தன் வாழ்நாளில் வாசித்துத் தீர்க்கமுடியாத அளவுக்கு நூல்களை அவர் எழுதினார்," என்று கூறியுள்ளார். சிலர் ஓரிஜென் 6000 கட்டுரைகளையும், கடிதங்களையும் எழுதியிருப்பார் என்று கூறுகிறார்கள்.

ஓரிஜென் பழைய ஏற்பாட்டு நூலொன்றைத் தயாரித்தார். இதில் பழைய ஏற்பாட்டு எபிரேய வசனங்க‍ளுக்கு பக்கத்தில் அவ்வசனங்களை கிரேக்க மொழியில் தந்து மேலும் நான்கு பழைய ஏற்பாட்டு கிரேக்க மொழிபெயர்ப்புகளையும் தந்திருந்தார். இது ஹெக்செப்லா (Hexapla) என்று அழைக்கப்பட்டது. இது எந்த அளவுக்கு ஓரிஜெனுக்கு ‍வேதமொழிகளில் புலமை இருந்தது என்பதை விளக்குகிறது. அத்தோடு பழைய புதிய ஏற்பாட்டு நூல்களின் ஒவ்வொரு நூலுக்கும் விளக்கவுரை எழுதியதோடு பல பிரசங்கங்களையும் எழுத்தில் தந்திருக்கிறார் ஓரிஜென்.

ஓரிஜென் முதல் கோட்பாடுகள் (First Principles) என்ற பெயரில் சபை வரலாறு கண்ட முதலாவது முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலை எழுதினார். பொதுவான ஜெபத்தைப்பற்றிய ஒரு நூலையும், இயேசு கற்பித்த ஜெபத்தைப்பற்றிய மிகப் பழமையான ஒரு விளக்கவுரையையும், இரத்த சாட்சியாக மரிப்பவர்களுக்கான ஆறுதல் என்ற நூலையும் எழுதினார்.

தன் வாழ்நாளில் ஓரிஜென் முரண்பாடுகள் கொண்ட ஒரு மனிதர் என்றுகூடச் சொல்லலாம். ஒருபுறம் தாழ்மையும், நற்பண்புகளும் கொண்டவர், வேதத்திலும், தத்துவத்திலும் ஆழமான ஞானமுள்ளவர். இன்னொருபுறம் தன் கருத்துக்களாலும், எழுத்துக்களாலும் மிகக் கடுமையான வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியவர்.

வேதம் மட்டுமே கர்த்தரின் ஆவியால் அருளப்பட்டது என்றும், தத்துவஞானியான பிளேட்டோவோ அல்லது வேறு எவருடைய நூல்களோ வேதத்திற்கு இணையானது இல்லை என்றும் ஓரிஜென் சொன்னார். வேதத்தின் அடிப்படையில் மட்டுமே விசுவாசி சிந்திக்க வேண்டும் என்றும் சொன்னார். ஆனால், ஓரிஜெனுடைய எழுத்துக்களில் பிளேட்டோவின் தத்துவம் நிறையத் தெரிகிறது.

வேத வசனங்களை விளக்கும்போது அதற்கு எப்போதும் மூன்றுவிதமான பொருள்கள் உண்டு என்றார் ஓரிஜென். முதலாவது சரீரம் (எழுத்துபூர்வமான பொருள்). இரண்டாவது ஆத்துமா (ஒழுக்கம் அல்லது நடத்தைபற்றிய பொருள்), மூன்றாவது ஆவி (ஆவிக்குரிய பொருள்) என்று மூன்று பொருள்கள் உண்டு என்று கூறினார். ஓரிஜெனின் இந்த விளக்கத்தை அந்த நாள்களில் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அது மனிதனுக்கு ஆவி ஆத்துமா சரீரம் என்ற மூன்று பகுதிகள் உண்டு என்ற பார்வை குறைந்த காலம்.

வேத வசனங்களில் ஆழமான அர்த்தத்தைப் பார்க்க முயன்ற ஓரிஜெனின் வேதவிளக்கமுறை அலகோரிக்கல் (Allegorical) என்று அழைக்கப்படுகிறது. அதாவது, உருவகப்படுத்தல் என்று பொருள். இது என்னவென்று நாம் விளங்கிக் கொள்வது அவசியம். உருவகம் என்பது இரண்டு அர்த்தங்களைக் கொண்ட ஒரு கதை. கதையின் முதலாவது அர்த்தம் நேரடியான, வெளிப்படையான அர்த்தம். இரண்டாவது அர்த்தம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அர்த்தம். ஓரிஜென் வேத வசனங்களுக்கும் அதில் காணப்படும் கதைகளுக்கும் இந்த முறையிலேயே விளக்கம் கொடுத்தார். வேத வசனத்தின் எழுத்துப்பூர்வமான அர்த்தத்தை ஓரிஜென் நிராகரிக்கவில்லை; ஆனால், இந்த மாதிரியான ஆவிக்குரிய அர்த்தமே மிகவும் முக்கியமானது என்று கருதினார்.

ஒரிஜென் நல்ல காரியத்தைச் செய்ய முயன்று சிக்கலில் சிக்கிய ஒரு நல்ல மனிதர். இவர் தன் காலத்தில் தன் கலாச்சாரத்தில் இருந்த பிரபலமான கருத்துக்களைவைத்து நற்செய்தியையும், வேதாகமத்தின் கோட்பாடுகளையும் விளக்க முயன்றார். ஓரிஜென் இயேசுவையும், வேதாகமத்தையும், சபையையும் அதிகமாக நேசித்தார். ஆனால் அவர் பிளாட்டோவின் புதிய தத்துவங்களையும் நேசித்தார். அவர் தன்னைக் கிறிஸ்துவுக்கு முற்றிலும் விற்றுப்போட்ட ஒரு மனிதர். அவருடைய அர்ப்பணமோ, சமர்ப்பணமோ கேள்விக்கும், சந்தேகத்துக்கும் அப்பாற்பட்டது.

அவர் தன் இள வயதிலேயே கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சியாக மரிக்க விரும்பினார்; அதற்கு அவர் ஆயத்தமாக இருந்தார். உரோம அரசு கிறிஸ்தவர்களைத் தேடித்தேடி கைதுசெய்தபோது, இவர் வீட்டிலிருந்து வெளியே ஓடி சித்திரவதையாளர்களிடம் தன்னை ஒப்படைக்க விரும்பினார். இவருடைய அம்மா இவருடைய ஆடைகளை ஒளித்துவைத்ததால் இவர் வெளியே செல்ல முடியவில்லை. இல்லையென்றால், வாலிபத்திலேயே இரத்தசாட்சியாக மரித்திருப்பார். முதிர்வயதிலும் அவர் இரத்தசாட்சியாகவே மரித்தார்.

ஆனால், சபை வரலாற்றாசிரியர் யூசிபியசின் கூற்றின்படி, "தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு" என்று மத்தேயு 19:12இல் இயேசு சொன்னதற்குக் கீழ்ப்படிந்து ஓரிஜென் விரைகளை அகற்றும் அளவுக்குச் சென்றார் என்று தெரிகிறது. அவர் இதைச் செய்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஏனென்றால், அவர் வேத வாக்கியங்களுக்கு ஆவிக்குரிய பொருள் சொன்னார். இதை அந்நாளில் அநேகர் எதிர்த்தார்கள். வேதத்தில் சொல்லப்பட்டுள்ளவைகளை எழுத்தின்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பலர் சாதித்தார்கள். அந்தக் கருத்து சரியல்ல என்றுஅவர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் அவர் இப்படிச் செய்தார்.

ஏனென்றால், "உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுள்ளவனாய், எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்," என்று மத்தேயு 18:8, 9இல் இயேசு சொன்னபடி கீழ்ப்படிந்து கையையும், காலையும் வெட்டி எறிவதாலோ, கண்ணைப் பிடுங்குவதாலோ ஒருவன் பாவம் செய்வதைத் தவிர்க்கமுடியுமா? இப்படிச் செய்வதால் ஒருவன் பாலியல் இச்சையைத் தவிர்க்க முடியுமா? பாவத்தின் வேர் கண்ணிலோ, கையிலோ, பாலுறுப்பிலோ இல்லை. பாவத்தின் உண்மையான வேர் இருதயத்தில் இருக்கிறது. அது நம் மனதில் உள்ளது.

உடலின் பாகங்களைத் துண்டிப்பதைவிட மனதில் விருத்தசேதனம்பண்ணவேண்டும். இதுதான் ஆழமான தீர்வு. அவருடைய அர்ப்பணிப்பை சந்தேகிக்க முடியாது என்பதை நிரூபிக்கவே நான் அதைச் சொல்கிறேன். அவர் மிகவும் உறுதியான மனிதர்.

250ஆம் ஆண்டு, உரோம அரசன் டேசியஸ் காலத்தில் நிகழ்ந்த சித்திரவத்தையின்போது அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மிகக் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார், அவர் அதிலிருந்து மீளவே இல்லை. சில ஆண்டுகளுக்குப்பிறகு இரத்தசாட்சியாக மரித்தார்.

இத்தகைய அர்ப்பணிப்புள்ள மனிதரை, இயேசுவின்மேல் தணியாத் தாகமும், அன்பும் கொண்டவரை அவருடைய சொந்த ஆயர் ஏற்றுக்கொள்ளவில்லை; அவர் ஒரிஜெனின் இறையியலை நிராகரித்தார். நைசாவின் கிரிகரிஉட்பட அவருடைய பழமைவாத நண்பர்கள்கூட அவருடைய போதனையை ஏற்றுக்கொள்ளவில்லை. பிளாட்டோவின் புதிய தத்துவத்தின் தாக்கம் அவருடைய விளக்கத்தில் இருப்பதாக அவர்கள் எண்ணினார்கள். பிளாட்டோவின் தத்துவத்தின்படி பௌதிகப் பொருள்கள் ஆவிக்குரிய நிஜத்தின் அடையாளங்கள். எனவே, அடையாளமாகிய பொருள்களுக்கு எழுத்தின்படி ஒரு பொருள் உண்டு; அதற்கு ஆவிக்குரிய பொருளும் உண்டு என்று ஓரிஜென், அகஸ்டின்போன்ற பல கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். இது உண்மை. வேதாகமத்திற்கு நேரடியான பொருள் இருக்கிறது; அதே நேரத்தில் ஆவிக்குரிய பொருளும் இருக்கிறது. ஆவிக்குரியவர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியும் என்று ஒரிஜென் சொன்னார். ஆனால், அந்நாட்களில் பலர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

எபிரேயருக்கு எழுதிய நிருபம் சாயல், ஒப்பனை, நிழல், ஒத்தது, மாதிரி என்று சொல்லுகிறது. ஆசாரிப்புக்கூடாரம், மன்னா, கன்மலை, கன்மலைத் தண்ணீர், மேகத்தூண், ஆட்டுக்குட்டி, பலிகள், பண்டிகைகள், விருத்தசேதனம் - எல்லாம் அடையாளங்கள் என்று இன்று நமக்குத் தெரியும்.

இவர் வேதாகமத்தின் எழுத்தின்படியான பொருளை மறுக்கவில்லை. ஆனால், எழுத்தின்படி பொருள் கூறமுடியாதவைகளுக்கு ஆவிக்குரிய பொருள் கூறினார். இதைப் பலர் ஏற்கவில்லை. வேதாகமத்தின் தெளிவான, நேரடியான பொருளை அவர் மறுக்கவில்லை. அதை அவர் முழுமனதுடன் ஏற்றார். ஆனால், எழுத்தின்படியான பொருளைவிட ஆவிக்குரிய பொருள் அதிக முக்கியத்துவம்வாய்ந்தது என்று அவர் கூறினார்.

ஓரிஜெனின் முக்கியமான பிரச்சனை அதுவல்ல. ஒவ்வொரு மனித ஆத்துமாவும் தாயின் கருவில் உருவாவதற்குமுன்னரே தேவனால் படைக்கப்படுவதாக ஓரிஜென் நம்பினார். இது அவருடைய முன்னோடிகளில் ஒருவரான யூத தத்துவஞானி பிலோவின் கருத்து என்று தெரிகிறது.

கிறிஸ்தவத்தில் "இறுதியாக எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படுவார்கள்" என்ற கூற்றை ஆதரிக்கும் குழுக்கள் உள்ளன. தேவன் முழு உலகத்தையும் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொள்வார் என்ற கொள்கையை ஒரிஜென் ஆதரித்தார் என்று சொல்வதுண்டு. அன்பின் தேவனோடு எல்லாரும் ஒன்றாகிவிடுவார்கள் என்பது இவர்களுடைய கருத்து. இதற்குச் சாதகமாக இவர்கள் பல வசனங்களை மேற்கோள்காட்டுவதுண்டு. 1 தீமோத்தேயு 4:10இல் சொல்லப்பட்டுள்ள "அவர் எல்லாருக்கும் இரட்சகர்", 1 கொரிந்தியர் 5:22இல் சொல்லப்பட்டுள்ள "எல்லாரிலும் எல்லாமும்" போன்ற வசனங்களை இவர்கள் குறிப்பிடுகிறார்கள். 1 கொரிந்தியர் 15:28இல் சொல்லப்பட்டுள்ள "சகலத்திலும் சகலமும்" போன்ற வசனங்கள் இவர்களுடைய ஆதாரம். ஒரிஜென் சில சமயங்களில் உலகளாவிய இரட்சிப்பின் இந்த இறுதி நிலையை நம்பியதாகக் கூறப்படுகிறது. வேறு சிலர் அவர் இதை உறுதியாகச் சொல்லவில்லை என்று கூறுகிறார்கள்.

ஒரிஜென் திரித்துவதை ஒரு படிநிலையாகக் கருதினார்; பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் மூவரும் சமமானவர்கள் இல்லை என்பது அவருடைய கருத்து.

எப்படியிருந்தாலும், சபை வரலாற்றை ஆராயும்போது இவரைப்போன்ற பலரை நாம் மீண்டும் மீண்டும் சந்திப்போம். ஓரிஜென் மிக நல்ல மனிதர். அவருடைய அர்பணிப்பையோ, தியாகத்தையோ, யாரும் சந்தேகிக்க முடியாது, குறை சொல்ல முடியாது. அவர் இயேசுவை உண்மையாகவே அதிகமாக நேசித்தார். அவர் உண்மையாகவே இயேசுவின் தாசன்.

ஆனால், ஓரிஜென்போன்ற நல்ல மனிதர்கள் வேதாகமத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை ஊக்குவிக்கும்போது அது அதிகமான சேதத்தை ஏற்படுத்தும். எனவே, சில வழிகளில் நல்ல மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், கெட்டவர்கள் வேதாகமத்துக்கு முரணான கருத்துக்களை முன்வைத்தால் மக்கள் அவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நல்லவர்கள் மோசமான கருத்துக்களை முன்வைக்கும்போது மக்கள் அவைகளை எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடும். ஏனென்றால், அவர்கள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கமுடியும் என்று மக்கள் நினைப்பார்கள். இது நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம். நல்லவர்கள் தவறாகச் சொல்லக்கூடும் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

உரோமப் பேரரசில் உரோம் நகரைப்போல் ஆப்பிரிக்காவில் எகிப்திலிருந்த அலெக்சாந்திரியா நகரம் முக்கிய இடத்தை வகித்தது. அலெக்சாந்திரியாவில் இருந்த சபையின் சில முக்கியத் தலைவர்களைப்பற்றிப் பார்த்தோம். இனி வடமேற்கு ஆப்பிரிக்காவில் முக்கிய இடத்தை வகித்த கார்த்தேஜ் நகரத்தில் இருந்த சபையைப்பற்றியும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். வடஆப்பிரிக்காவில் எப்போது கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியாது. ஆனால், சபை வரலாற்றைப் படிக்கும்போது, கி.பி. 180இல் திடீரென ஒரு வல்லமையான சபை கார்த்தேஜில் வளர்ந்து கொண்டிருப்பது தெரிகிறது. அங்கிருந்த கிறிஸ்தவர்கள் அக்காலத்தில் தங்களுடைய விசுவாசத்திற்காகப் பல பாடுகளையும், துன்பங்களையும் அனுபவித்தார்கள். தெர்த்துல்லியன், சிப்ரியான், அகஸ்தீன் ஆகியோர் இந்தச் சபையிலிருந்து வந்து வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள். கார்த்தேஜிலிருந்துதான் முதன்முறையாக இலத்தீனில் கிறிஸ்தவ இலக்கியம் உருவானது. அழகான, பெரிய கார்த்தேஜ் நகரம் இலத்தீன் கலாச்சாரத்தின் மையமாக விளங்கியது.

11. தெர்த்துல்லியன் (கி.பி 160-225)

தெர்த்துல்லியன் கார்த்தேஜில் கி.பி. 155-160இல் பிறந்திருக்கலாம். அவருடைய பெற்றோர் கர்த்தரை அறியாதவர்கள். எனவே, தெர்த்துல்லியன் புறவினத்தாரின் கலாச்சாரத்தையும், கார்த்தேஜ் நகர மக்களின் வாழ்க்கை முறையையும் பின்பற்றி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார். தன் படிப்பை கிரேக்கமொழியில் தொடர்ந்த தெர்த்துல்லியன் உரோமக் கலாச்சாரத்தையும் படித்தார்.

தொழிலின்படி இவர் ஒரு வழக்கறிஞர். இவருடைய வழக்கறிஞர் கல்வி இறையியல் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் வளர்த்துக்கொள்ளவும், இறையியல் தர்க்கங்களில் ஈடுபடவும் இவருக்குத் துணைபுரிந்தது. அவர் சபையில் எத்தகைய பணிபுரிந்தார் என்பதில் கருத்து வேறுபாடுக‍ள் நிலவுகின்றன. அவர் சபை மூப்பராக இருந்தார் என்று ஜெரோம் எழுத, அவர் உபதேசியாராக மட்டுமே பணிபுரிந்தார் என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.

இவருடைய காலத்தில் மேலோங்கிநின்ற ஞானவாதம்உட்பட பல்வேறு வேதப்புரட்டுகளுக்கு எதிராக இவர் எழுதினார். இவரே “திரித்துவம்”என்ற வார்த்தையைத் தன் எழுத்துக்களில் முதன் முதலாகப் பயன்படுத்தியவர். ஆனாலும், இவர் திரித்துவதைத் தெளிவாகப் புரிந்துகொண்டதுபோல் தெரியவில்லை. கார்த்தேஜின் சபையும், அலெக்சாந்திரியா சபையும் பெரும்பாலும் எதிரும் புதிருமாகவே செயல்பட்டன. கார்த்தேஜ் சபை கிரேக்க தத்துவத்தை நிராகரித்துக் கிறிஸ்தவப் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அலெக்சாந்திரியா சபையோ தத்துவத்தில் ஆர்வம் கொண்டு இறையியல் சிந்தனைகளைத் தத்துவங்கள்மூலம் விளக்குவதில் ஆர்வம் காட்டியது.

தெர்த்துல்லியனின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவருடைய ஆற்றல், எதையும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஆகியவைகளைக் கண்டு நாம் வியக்கிறோம். தன் 30ஆவது வயதில் இயேசுவை விசுவாசித்த இவர் தன் பிரமிக்கத்தக்க வரங்களையும், திறமைகளையும் கிறிஸ்தவ விசுவாசத்திற்காகப் போராடுவதற்காகப் பயன்படுத்தினார். உரோமப் பேரரசின் உயர் அதிகாரிகளை எதிர்த்துத் தாக்கிய தெர்த்துல்லியனின் தைரியம் அளப்பரியது. அவருடைய எழுத்தாக்கங்கள் எண்ணிலடங்காதவை. அவைகளில் முப்பது ஆக்கங்களும், வேறு சிலவும் நம்மை வந்தடைந்துள்ளன. கி. பி. 197இல் அவர் எழுதிய Apologyயே அவர் எழுதிய அனைத்திலும் சிறப்பானது. இந்நூலில், கிறிஸ்தவத்திற்காக வாதாடிய எவரும் இதுவரை சிந்தித்திராத வகையில் பல வாதங்களை ஒரு வழக்கறிஞருக்கே உரிய திறமையுடன் தெர்த்துல்லியன் எழுத்தில் வடித்திருந்தார்.

இவர் எழுதிய De Praescriptione என்ற நூல் முரண்பாடுகளை ஏற்படுத்திய ஒரு நூல். இவர் இதை கிறிஸ்தவத்திற்கு எதிரான ஞானவாதத்திற்கும், பிற வேதப்புரட்டாளர்களுக்கும் எதிராகவே எழுதினார். ஆயினும், அவருடைய வாதங்கள் எல்லைமீறிப்போனதால், அவரை அறியாமல், கிறிஸ்தவ சபைக்கு அது ஆபத்தாக மாறிற்று. இந்நூலில் தெர்த்துல்லியன், சத்தியம் சபையிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று வாதாடினார். ஆகவே, அவரைப் பொறுத்தவரையில் வேத விரோதிகளுடன் சத்தியத்தைப்பற்றிய வாதப்பிரதிவாதங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்‍லை. சபை மட்டுமே சத்தியத்தை அறிந்திருப்பதால், அது மட்டுமே சரியான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது என்றார். இதுவே பின்பு சபை தவறான போக்கில் போவதற்கும் வழி வகுத்தது. சபைப் பாரம்பரியம் எப்போதும் வேதத்திற்குச் சமமானது என்று இவர் சொன்னார். இந்த விஷயத்தில் இவர் ஐரேனியசின் சிந்தனைப்போக்கில் போக ஆரம்பித்தார். இதிலிருந்தே உரோமன் கத்தோலிக்க மதத்தின் போதனையான வேதமும், சபைப் பாரம்பரியங்களும் சம அதிகாரம் கொண்டவை என்ற போதனைக்கு வழிவகுக்கப்பட்டது என்று சொல்லலாம்.

இவர் உரோம நீதிபதிகளுக்கு எழுதிய கடிதங்களில் கிறிஸ்தவத்திற்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக அஞ்ஞானிகள் கட்டவிழ்த்துவிட்ட நிந்தைகளைச் சாடுகிறார். மதச் சுதந்திரம் ஒரு மனிதனின் பிரிக்கமுடியாத அடிப்படை உரிமை என்று வாதிடுகிறார். கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்குமுன்பு அவர்களுக்கு நியாயமான விசாரணை கோருகிறார்.

கிறிஸ்தவ விசுவாசத்தை விளக்கியும் ஆதரித்தும் இவர் தன் முதலாவது ஆக்கத்தை உரோமப் பேரரசன் அன்டோனியஸ் பயசுக்கும், செனட்டுக்கும் உரோம மக்களுக்கும் அனுப்பினார். இவர் எழுதிய இரண்டாவது சுருக்கமான ஆக்கத்தை உரோம செனட்டுக்கு மட்டும் எழுதி அனுப்பினார்.

கிறிஸ்தவர்கள் கூடி வரும்போது கர்த்தருடைய பந்தியில் பச்சிளம் குழந்தைகளைப் பலியிடுகிறார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டை முதன்முதலில் மறுத்து எழுதியவர் தெர்த்துல்லியன். கிறிஸ்தவத்தில் இல்லை, மாறாக பிறமதங்களில்தான் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன என்று இவர் சுட்டிக்காட்டினார். பிளினியின் வாக்குமூலத்தின்மூலம் கிறிஸ்தவர்கள் எவ்வளவு ஒழுக்கமானவர்கள் என்று இவர் நிரூபித்தார். கிளாடியேட்டர்களின் உடல்களை மிருகங்களுக்கு உணவாகக் கொடுப்பது அஞ்ஞானிகளின் மனிதாபிமானமற்ற பழக்கவழக்கம் என்று எடுத்துக்காண்பித்தார். கிறிஸ்தவர்கள் ஒரே தேவனை ஆராதிப்பதால் அவர்கள் அஞ்ஞான தெய்வங்களைப் புண்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமே இல்லை என்று ஆணித்தரமாக விளம்பினார். கிறிஸ்தவர்கள் பேரரசர்களை வழிபடும் மூடத்தனமான வழிபாட்டில் ஈடுபடுவதில்லை, ஆனால் அவர்களுக்காக ஜெபிக்கிறார்கள் என்று கூறினார்.

207 அல்லது 208 இல் மார்ஷியனுக்குஎதிராக ஐந்து புத்தகங்கள் எழுதினார். இவர் ஒரு துறவிபோல் வாழ்ந்தார், கி.பி 250இல் மரித்தார்.

பாவத்தைகுறித்த ஐரேனியசின் கருத்தையே தெர்த்துல்லியன் கொண்டிருந்தார். ஆயினும், மனிதஇனத்தைப் பாதித்துள்ள பாவத்தைக்குறித்து தெர்த்துல்லியன் ஐரேனியசைவிட ஆழமாகச் சிந்தித்தார். பாவத்தைக்குறித்து தெர்த்துல்லியன் சொன்ன கருத்துக்களே பின்னாட்களில் கிருபையையும், பாவத்தையும்பற்றி அகுஸ்தீன் இன்னும் அதிகத் தெளிவாக எழுதுவதற்கு வழிவகுத்தது. பாவத்தையும், கிருபையையும் குறித்த காரியத்தில் தெர்த்துல்லியன் அகுஸ்தீன் அளவுக்குத் தெளிவாக இருந்தார் என்று சொல்ல முடியாது. அவர் கிருபை இயற்கைக்கு எதிரானது என்று விசுவாசித்தார்; ஆனால், கிருபை கிரியைக்கு எதிரானதல்ல என்றும் நம்பினார். எனவே, இரட்சிப்பு கிரியைகளினால் கிடைக்கின்றது என்ற போதனைக்கு ஓரளவாவது வழிவகுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

திரித்துவத்தைப்பற்றி அவர் சொன்ன போதனைகளைச் சபையும் விரைவில் கிறிஸ்தவப் போதனையாக ஏற்றுக்கொண்டது. திரித்துவத்தைப்பற்றிய அடிப்படைப் போதனைகளை தெர்த்துல்லியன் முறையாக விளக்க முயன்றபோதும், குமாரன் நித்தியத்திலிருந்தே பிதாவின் குமாரனாகத் தனித்துவத்தோடு இருந்ததை தெர்த்துல்லியன் ஏற்றுக்கொள்ளவில்லை. உலகம் உருவாக்கப்படுவதற்கு சில காலத்துக்குமுன்புதான் குமாரன் இத் தன்மையை அடைந்தார் என்றும், அதற்குமுன்பு அவர் பிதாவில் தனித்தன்மையோடு இருக்கவில்லை என்றும் விளக்கினார். இந்தக் காரியத்தில் அவர் ஒரிஜென் அளவுக்குத் தெளிவு பெற்றிருக்கவில்லை. திரித்துவத்தை விளக்கியதுபோலவே கிறிஸ்துவைப்பற்றியும் தெர்த்துல்லியன் விளக்கினார். கிறிஸ்து முழுமையான கர்த்தராகவும், பூரணமான மனிதனாகவும் இந்த உலகத்‍தில் ஒரே தோற்றத்தில் இருந்தார் என்று தெர்த்துல்லியன் விளக்கினார். திரித்துவத்தையும், கிறிஸ்துவின்பிறப்பையும்பற்றிய தெர்த்துல்லியனின் போதனைகளை மேற்கிலிருந்த இலத்தீன் பேசிய சபை சில மாற்றங்களுடன் ஏற்றுக்கொண்டது. இதனால் நான்காம் நூற்றாண்டில் ஏரியன் திரித்துவத்தைப்பற்றிய தவறான போதனைகளைக் கொண்டுவந்தபோது அதை சபையால் தீவிரமாக எதிர்த்து நிற்க முடிந்தது.

கிறிஸ்தவர்கள் போர்ப்படைகளில் சேர்வதை தெர்த்துல்லியன் ஆதரிக்கவில்லை. அத்தோடு மறுமணம் செய்வதையும் எதிர்த்தார். அவர் சுகபோகங்களைத் துறந்த ஒரு துறவிபோல் வாழ்வதில் நாட்டம் காட்டினார். திரையரங்குகளுக்கும், களியாட்டக்கூட்டங்களுக்கும் போவதைக் கடுமையாக எதிர்த்தார். கடுமையான தோற்றமும், சோகம் சொட்டும் முகமும் கொண்ட தெர்த்துல்லியன் பின்பு மொன்டனிசத்தைப் பின்பற்றியதில் ஆச்சரியமில்லை. தெர்த்துல்லியன் பெரிய திறமைசாலி, ஞானவான். ஆனால், தெர்த்துல்லியனின் மொன்டனிசக் கொள்கைகளினால் அவருக்குப்பின் வந்த சபைப் பிதாக்கள் அவரைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கினார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் அவரை ஒரு வேதவிரோதியாகவே பார்த்தார்கள். தெர்த்துல்லியன் கி. பி 225இல் சமாதானத்தோடு மரித்தார்.

12. ஹிப்போலிட்டஸ்

நாம் பார்க்கபோகிற அடுத்த நபர் ஹிப்போலிட்டஸ். இவருடைய ஆரம்பகால வாழ்க்கையைப்பற்றி அதிகம் தெரியாது. இவர் கிரேக்க தத்துவத்தையும், கிழக்கத்திய புதிர் மதங்களையும் நன்கு அறிந்திருப்பதால், இவர் உரோமப் பேரரசின் கிழக்குப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இவர் உரோமில் ஊழியம் செய்வதைப் பார்க்கிறோம். ஏனென்றால், 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் உரோமில் இருக்கிறார். அந்த நேரத்தில் அவர் உரோம் சபையில் ஒரு மூப்பராக இருந்தார். 212இல் ஓரிஜென் உரோமுக்குச் சென்றிருந்தபோது, ஹிப்போலிட்டஸின் பிரசங்கத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டார். அந்த நேரத்தில் உரோமில் உண்மையான ஆயர் ஹிப்போலிட்டசா அல்லது போன்டியனா என்ற ஒரு குழப்பம் நிலவியது.

உரோமச் சபையில் மூப்பராக இருந்துகொண்டே உரோமச் சபையின் ஆயருடைய போதனைகளைத் தவறென சுட்டிக்காட்டி, தன்னை உரோமச் சபையின் ஆயராகவும் அறிவித்துச் செயல்பட்டவர்தான் ஹிப்போலிட்டஸ். இவர் உரோமச் சபையின் ஆயரான கலிஸ்துசின் சில கொள்கைகளை எதிர்த்தார். கலிஸ்துஸ் ஒரே தேவன் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் போதனையைத் திரித்து ஒரே தேவன் மூன்று வடிவங்களில் உள்ளார் என்று சொன்னார் என்றும், இரண்டு மூன்றுமுறை திருமணம் செய்தவர்களை ஆயர்களாக நியமித்தார் என்றும், அடிமைகளுக்கும் சுதந்திர மக்களுக்கும் இடையே நிகழும் திருமணத்தைச் செல்லுபடியாகாது என்று அறிவிக்கவில்லை என்றும், பரத்தைமைத்தொழிலில் ஈடுபட்டோரை மன்னித்துச் சபையில் ஏற்றுக்கொண்டது தவறு என்றும் ஹிப்போலிட்டஸ் குற்றஞ்சாட்டினர் என்று இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

ஹிப்போலிட்டஸ் மிகப்பெரும் அறிவாளி, மிகவும் புகழ்பெற்ற இறையியலாளர், சட்டங்களை நுணுக்கமாகக் கடைப்பிடிப்பவர், கண்டிப்பானவர். ஏறத்தாழ 170ஆம் ஆண்டு பிறந்த இவர், உரோம் நகரின் பிரபல இறையியல் கல்லூரியின் தலைவராக இருந்தார் அப்போஸ்தலனாகிய யோவானின் மாணவராகிய போலிக்கார்ப்பின் மாணவர்களுள் ஒருவரான ஐரேனியசின் மாணவர்தான் இந்த ஹிப்போலிட்டஸ்.

இவர் கிரேக்க மொழியில் நிறைய எழுதியுள்ளார். ஆயர் கலிஸ்துசின் மரணத்திற்குப்பின் பதவியேற்ற ஆயர் போன்டியனுடனும் இவர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை.

235ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போக்கு வலுத்தபோது, அவர்கள் இருவரும் நற்செய்தியைப் பிரசங்கித்ததற்காக குற்றவாளிகளாகக் கைதுசெய்யப்பட்டு சர்தீனியா தீவின் சுரங்கங்களில் வேலை செய்ய அனுப்பப்பட்டார்கள். இது மரண தண்டனைக்கு ஒப்பானதாகும். இந்த நேரத்தில் உரோமச் சபைக்கு வேறொரு ஆயரைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழிவகுக்கும்பொருட்டு போன்டியன் தன் பதவியைத் துறந்தார். போன்டியனுடன் ஒப்புரவான ஹிப்போலிட்டஸ், சபையுடன் சமாதானமாகி, அந்தேருசுடன் ஒப்புரவானார். இறையியலில் புலமை வாய்ந்த ஹிப்போலிட்டஸ், சர்தீனியா தீவில் போன்டியனுடன் 235ஆம் ஆண்டு இரத்தசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

ஹிப்போலிட்டஸ் 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மிக முக்கியமான இறையியலாளர். அவர் புத்தகங்கள், விளக்கஉரைகள், பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதினார். அவர் எழுதிய அப்போஸ்தலப் பாரம்பரியம் என்ற புத்தகம் மிக முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. இது அன்றைய சபை வாழ்க்கையையும், அவர்களுடைய பழக்கங்களையும் விவரித்து 215ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு கையேடு என்று சொல்லலாம். 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உரோமில் இருந்த சபை வாழ்க்கையைப்பற்றிய விவரங்கள் இந்தப் புத்தகத்தில் காணப்படுகின்றன. சபை ஆராதனைகள், ஞானஸ்நானம், கர்த்தருடைய பந்தி, கிறிஸ்தவர்கள் அனுசரித்த பிற ஒழுங்குகள் அனைத்தும் அப்போஸ்தலப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஹிப்போலிட்டஸ் பல வகையான நீண்ட ஜெபங்களையும் அங்கு குறிப்பிடுகிறார். நான் ஒரேவொரு ஜெபத்தைச் சுட்டிக்காட்டுகிறேன்.

"இது நாங்கள் எங்கள் சபை ஆராதனைகளில் ஜெபிக்கும் சில ஜெபங்கள். நாங்கள் பரிந்துரைத்துள்ள இதே வார்த்தைகளைத்தான் எல்லாரும் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஒவ்வொருவரும் தத்தம் திறமைக்கு ஏற்ப ஜெபிக்கலாம். ஒவ்வொருவரும் ஓர் உயர்ந்த தளத்தில் ஜெபிக்க முடிந்தால், அது மிகச் சிறப்பாக இருக்கும். அப்படி முடியாவிட்டாலும், ஒருவனால் மிதமாகத்தான் ஜெபிக்கவும், துதிக்கவும் முடிந்தால் , யாரும் அவனைத் தடுக்க வேண்டாம். அவன் ஆரோக்கியமான விசுவாசத்தோடு ஜெபிக்கட்டும்." ஜெபத்தில் சொற்பொழிவாற்றுவதைவிட உண்மையாக ஜெபிப்பது சிறந்தது என்பதே ஹிப்போலிட்டஸ் கூறும் செய்தி.

13. சிப்பிரியான்

நல்லது, கடைசியாக நாம் சிப்பிரியான் என்ற ஒரு பரிசுத்தவானைப்பற்றிப் பார்க்கப்போகிறோம். ஆதிச் சபையில் சிப்ரியான் குறிப்பிடத்தக்கவர். தெர்த்துல்லியனின் காலத்திலும், அவருக்குப்பிறகும் வடமேற்கு ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது. உரோமப் பேரரசர்களான டேசியசும் (கி. பி. 249-51), வலேரியனும் (கி. பி. 253-60), கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பயங்கரத் துன்பங்களைக் கட்டவிழ்த்துவிட்ட காலத்தில் கிறிஸ்தவம் வடமேற்கு ஆப்பிரிக்காவில் பலமாக நிலைத்துவிட்டது. இக்காலத்தில் சிப்ரியான் கார்த்தேஜின் சபை ஆயராக இருந்தார்.

சிப்ரியான் வடஆப்பிரிக்காவில் கி. பி. 200ஆம் ஆண்டளவில் கார்தேஜில் ஓர் உயர்குடியில் பிறந்த செல்வந்தர். அவர் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்குமுன்பு வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். அவர் சிறந்த பேச்சாளர், பேச்சுக்கலையைக் கற்பிக்கும் பேராசிரியராகவும் இருந்தார். அவர் அஞ்ஞான இலக்கியத்தில் ஆழ்ந்த தேர்ச்சி பெற்றிருந்தார். அஞ்ஞான மதங்களில் நம்பிக்கையிழந்து சத்தியத்தையும், சமாதானத்தையும் தேடிய சிப்ரியானுக்கு செசிலியஸ் என்ற மூத்த போதகரோடு ஏற்பட்ட நட்பு அவரைக் கிறிஸ்துவுக்கு நேராக நடத்தியது. அவர் கி.பி. 246இல் கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டார். உடனடியாக தன் செல்வங்களையெல்லாம் வறுமையில் வாடியவர்களுக்கு வாரிவழங்கினார். கிறிஸ்துவை விசுவாசித்த இரண்டு மூன்று வருடங்களுக்குள்ளாகவே அவருடைய கனிவு, நன்னடத்தை, சாந்தம்போன்ற பல நல்ல குணங்களினால் அவர் கார்த்தேஜின் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிப்ரியானை மிகவும் கவர்ந்தவர் தெர்த்துல்லியனே. சிப்ரியான் தெர்த்துலியனைத் தன் தலைவன் என்று அழைத்ததோடு அவருடைய நூல்களை ஒவ்வொரு நாளும் வாசித்தார். வேதத்தை எழுத்துப்பூர்வமாக விளங்கிக்கொள்வதில் சிப்ரியான் ஒரிஜெனைவிட அதிக அக்கறை கொண்டிருந்தார். அவர் பழைய ஏற்பாட்டைப் புதிய ஏற்பாட்டின் அ‍டிப்படையில் விளக்க முயன்றார். புதிய ஏற்பாட்டு சபைத் தலைவர்களை பழைய ஏற்பாட்டு ஆசாரியர்களுக்கும், திருவிருந்தை பழைய ஏற்பாட்டுப் பலிகளுக்கும் ஒப்பிட்டார். திருவிருந்தின்மூலம் கிறிஸ்து ஒவ்வொருமுறையும் பலியிடப்படுகிறார் என்று சிப்ரியான் போதிக்கவில்லை. ஆனால், திருவிருந்தின்போது கிறிஸ்து தம் மக்களைப் பிதாவின்முன் சமர்ப்பிக்கிறார் என்று போதித்தார். அத்தோடு அவர் திருவிருந்தின்மூலம் இறந்துபோன விசுவாசிகளும் ஏதோ ஒருவிதத்தில் பயனடைவதாக விளக்கினார். உரோமன் கத்தோலிக்க மதத்தின் போதனைகளுக்கு இக்காலத்திலேயே தொடர்ந்து வித்திடப்பட்டு வந்துள்ளதைக் கவனிக்க முடிகின்றது.

சபைத் தலைவர்களைப்பற்றிய சிப்ரியானின் போதனைகள் பின்பு சபைத்தலைமை மோசமான நிலைக்குப் போகக் காரணமாக இருந்தன என்று சொல்வதுண்டு. சிப்ரியானின் விளக்கத்தில் அப்போஸ்தலர்களுக்கும், ஆயர்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இருக்கவில்லை. சபையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் ஆயர்களுக்கு அப்போஸ்தல அதிகாரம் உண்டு என்பது சிப்ரியானின் கருத்து. ஆயர்கள் மட்டுமே திருமுழுக்கும், திருவிருந்தும் அளிப்பதற்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட அசாதாரண வல்லமையும், அதிகாரமும் உடையவர்கள் என்பது சிப்ரியானின் எண்ணமாகும். இக்காலத்தில் திருமுழுக்கு, திருவிருந்து போன்ற மதச்சடங்குகளைக் குறிக்க Sacrament என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டது. சிப்ரியானின் போதனைகள் ஆயர்களை அப்போஸ்தல அதிகாரம் உள்ளவர்களாக மாற்றியது. அத்தோடு உரோமில் இருந்த ஆயருக்கு விசேஷ முக்கியத்துவமும், சலுகையும் அளிக்கப்பட வேண்டும் என்றும் சிப்ரியான் கருதினார். பேதுருதான் உரோமின் முதல் ஆயராக இருந்தார் என்று இவர் நம்பியதே இதற்குக் காரணம். இருந்தாலும், உரோம ஆயர் மற்ற ஆயர்களின்மேல் அதிகாரம் கொண்டவர் என்றோ அல்லது சகல அதிகாரம் கொண்ட தெய்வீகத் தன்மையுடையவர் என்றோ சிப்ரியான் கருதவில்லை. சபைத்தலைவர்கள்பற்றிய சிப்ரியானின் போதனைகள் பின்னாட்களில் சபையை ஆயர்களின் சபையாக மாற்றத் துணைபுரிந்தன என்றால் மிகையாகாது. எல்லா ஆயர்களும் சமம் என்று சிப்ரியான் கூறியிருந்தாலும், பின்பு அது கைவிடப்பட்டு உரோம ஆயரே எல்லோருக்கும் தலைவர் என்ற கொள்கை உறுதிபெறத் தொடங்கியது.

சபையைப்பற்றி விளக்கும்போது, சபையை விட்டு விலகுவது பாவம் என்று சிப்பிரியான் குறிப்பிட்டார். சபைக்கு வெளியே இரட்சிப்புக்கு வழியில்லை என்பது சிப்ரியானின் போதனை.

258இல் வலேரியனின் கொடுமைகள் ஆரம்பித்த காலத்தில் சிப்ரியான் கார்த்தேஜிலிருந்து 40 மைல்களுக்கு அப்பால் தலைகொய்யப்பட்டு இரத்தசாட்சியாக மரித்தார்.

அவர் கிறிஸ்துவை விசுவாசித்து உண்மையாக ஏற்றுக்கொண்டபோது, கிறிஸ்தவ ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது அவருக்குக் கடினமாக இருந்தது. தன் சொந்த பலத்தாலோ, சித்தத்தாலோ அல்ல, தேவனுடைய பலத்தால் மட்டுமே கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முடியும் என்று அவருடைய ஞானஸ்நானத்தின்போது அவர் கண்டுகொண்டார். தன் சொந்த பலத்தால் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முயல்வதற்கு சிப்பிரியான் நல்ல எடுத்துக்காட்டு. ஏனென்றால், அவர், "நான் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும்," என்றுதான் அதுவரை அவர் நினைத்தார்; அப்படியே அவர் வாழ்ந்தார். ஆனால் உண்மையில், கிறிஸ்தவ வாழ்க்கை தேவனுடைய பலத்தைச் சார்ந்திருப்பது என்று கற்றுக்கொண்டார்.

அவருடைய ஒரு மேற்கோளை நான் இங்கு குறிப்பிடுகிறேன்: "பரலோகத்திலிருந்து ஆவியானவர் எனக்குள் ஊதியதினால், நான் மறுபடி பிறந்தேன். என்னை ஒரு புதிய மனிதனாக மாற்றினார். பின்னர், ஆச்சரியமான முறையில், சந்தேகமாகத் தோன்றிய காரியங்கள் உடனடியாக நிச்சயமான காரியங்களாகத் தொடங்கின. மறைந்திருந்த காரியங்கள் வெளிப்படத் தொடங்கின; இருண்ட காரியங்கள் ஒளிரத் தொடங்கின; கடினமாகத் தோன்றியவைகளைச் செய்துமுடிக்க வழிகள் பிறந்தன; சாத்தியமற்றவைவை என்று நான் நினைத்தவை சாத்தியமாகத் தொடங்கின." இது சிப்பிரியான்.

தன் சொந்த பலத்தால் காரியங்களைச் செய்வதற்குப்பதிலாக, தேவனுடைய பலத்தாலும், வல்லமையாலும் காரியங்களைச் செய்வது எவ்வளவு வித்தியாசமானது என்று சிப்பிரியான் குறிப்பிடுகிறார். ஒரு புதிய விசுவாசியின் வைராக்கியத்தோடும், வாஞ்சையோடும் சிப்ரியான் விரைவில் கிறிஸ்தவ வேதஎழுத்துக்களில் தேர்ச்சி பெற்றார், கிறிஸ்தவ இறையியலாளர்களின் எழுத்துக்களை ஆழமாகப் படித்தார். அவர் கிறிஸ்தவனான இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு, அவர் கார்தேஜின் ஆயராக நியமிக்கப்பட்டார். கார்த்தேஜின் ஆயராவதில் அவருக்கு அப்படியொன்றும் ஆர்வமில்லை. அவருடைய எதிர்ப்பையும் மீறி அவர் கார்தேஜின் ஆயராக நியமிக்கப்பட்டார். அவர் ஆயராக நியமிக்கப்பட்ட நேரத்தில் சபை கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளானது. அவர் அங்கிருந்து தப்பித்துச் செல்ல வேண்டியிருந்தது. அவர் திரும்பி வந்தபோது, சபையில் விசுவாசத்தைக் கெடுத்து, சோர்வுண்டாக்கும் நிறைய காரியங்களைக் கண்டார். சில கிறிஸ்தவர்கள் அஞ்ஞான தெய்வங்களுக்குப் பலிசெலுத்தி விசுவாசத்தைவிட்டு வழிவிலகிச் சென்றிந்தார்கள். வேறு சிலர், கிறிஸ்துவின்மேல் வைத்திருந்த விசுவாசத்தை விடாதபோதும், அவர்கள் கிறிஸ்தவ நூல்களையும், வேதஎழுத்துக்களையும் உரோம அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள். இன்னும் சிலர் சபையின் ஐக்கியத்தைவிட்டு விலகி ஒருவிதமான சமய வெறிபிடித்தவர்களின் கூட்டத்தில் சேர்ந்திருந்தார்கள். பல கிறிஸ்தவர்கள் பேரரசின் கட்டளைக்கு அடிபணிந்தார்கள், பின்வாங்கினார்கள், விசுவாசத்தை மறுதலித்தார்கள், வேதகாமத்தைத் தூக்கியெறிந்தார்கள், அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைத்துப் பிற விசுவாசிகளைக் காட்டிக்கொடுத்தார்கள். அநேகக் காரியங்களில் சமரசம் செய்தார்கள். சித்திரவதையைத் தாங்கமுடியாமல் இவைகளைச் செய்தார்கள். சிப்ரியான் இந்தச் சிக்கலைச் சமாளிக்க வேண்டியிருந்தது. பின்வாங்கிப்போனவர்களை என்ன செய்வது? சிப்பிரியான் கையாண்ட மிதமான போக்கை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். அவர் இந்தப் பிரிச்சினையை மிக விவேகமாகக் கையாண்டார் என்று நான் கருதுகிறேன். இந்தச் சிக்கல்களை அவர் மிகப் புத்திசாலித்தனமாக கையாண்டதால் சபை வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறார் என்று நான் கருதுகிறேன்.

நோவாஷியன் என்று ஒருவர் இருந்தார். விசுவாசத்தை மறுதலித்துப் பின்வாங்கிப்போனவர்கள் சபைக்குத் திரும்பிவந்தால் அவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று அவருடைய கூட்டத்தார் சாதித்தார்கள். சித்திரவத்தையின்போது ஒருவன் இயேசுவை மறுதலித்தால், அவனுடைய கதி அவ்வளவுதான். அவனுக்கு வேறு எந்தப் பரிகாரமும் கிடையாது என்பது அவர்களுடைய வாதம்.

ஆனால், சிப்ரியான் அவர்களை ஏற்றுக்கொண்டார். அவர் அவர்களை ஏற்றுக்கொண்டாலும், எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் அவர்களை வரவேற்கவில்லை. ஒருவன் இயேசுவை மறுதலித்தால் அது ஒரு பெரிய காரியம் இல்லை என்பதுபோல் அவர் செயல்படவில்லை. சித்திரவதையின்போது கிறிஸ்துவை மறுதலித்தவர்கள் சபைக்குத் திரும்ப வந்தபோது, "நீங்கள் கிறிஸ்துவையும், விசுவாசத்தையும், வேதாகமத்தையும் மறுதலித்ததற்காக உண்மையாகவே மனந்திரும்பினால் நீங்கள் மீண்டும் சபைக்கு வரலாம். நாங்கள் உங்களை ஒரு புதிய விசுவாசியாக ஏற்றுக்கொள்வோம்," என்று சொன்னார். புதிதாக வரும் விசுவாசிகளுக்கு எப்படி ஞானோபதேச வகுப்புகள் நடத்தினார்கள் என்றும், ஆரம்ப அடிப்படைக் கல்வி எப்படி அளித்தார்கள் என்றும் சபை வரலாற்றின் மூன்றாம் பாகத்தில் நாம் பார்த்தோம். இந்த ஞானோபதேச வகுப்புகள் மூன்று வருடங்கள்முதல் ஆறு வருடங்கள் வரை நீடித்தன. அவை சீடத்துவத்தைப்பற்றிய வகுப்புகள். விசுவாசத்தைவிட்டு வழுவியவர்கள் மீண்டும் சபைக்கு வந்தபோது, "நீங்கள் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் சீடத்துவ வகுப்புகளில் கலந்துகொண்டு உங்கள் விசுவாசத்தைப் புதுப்பிக்க வேண்டும். அதன்பின் நாங்கள் உங்களை எங்கள் மந்தையில் சேர்த்துக்கொள்வோம். ஆனால், நீங்கள் ஒரு புதிய விசுவாசியாக உங்கள் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்," என்று சொன்னார்கள்.

தேவ மக்களின் இரட்சிப்புக்கு சபை அவசியம் என்று சிப்ரியான் உறுதியாக நம்பினார். மேலும் சபையில் உறுதியான தலைமைத்துவம் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சிப்ரியானின் ஒரு சிறிய மேற்கோளை நான் இங்கு குறிப்பிடுகிறேன். "எங்கள் தேவனே, உம்மைத் துன்புறுத்துவதையும், கோபப்படுத்துவதையும் தொடர்ந்துகொண்டிருக்கிற சித்திரவதையாளர்களின் இருதயங்களை மிருதுவாக்குவீராக, அவர்கள் இந்தப் பைத்தியக்காரத்தனத்தை விட்டுத் திரும்புவார்களாக. அவர்களுடைய இருதயங்களில் நிறைந்திருக்கும் பாவத்தின் இருளை நீக்கும், மனந்திரும்புதலின் ஒளி அவர்களுடைய உள்ளத்தில் பரவட்டும். அவர்கள் ஆயர்களின் இரத்தத்தைச் சிந்துவதற்குப்பதிலாக அவர்கள் இவர்களுக்காக ஏறெடுக்கும் ஜெபங்களை, விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொள்வார்களாக."

சித்திரவதையாளர்கள்மேல் அவர் வைத்திருந்த அன்பைப் பாருங்கள். இதிலிருந்து அவர் சித்திரவதையாளர்களையும், சித்திரவதையின்போது விசுவாசத்தை மரித்தலித்தவர்களையும் எப்படிப் பார்த்தார் என்று தெளிவாகத் தெரிகிறது.

இந்த நேரத்தில் அவர் சபையின் ஒற்றுமை என்ற தலைப்பில் ஒரு பிரபலமான புத்தகம் எழுதினார். ஒரு நகரத்தில் அல்லது பிராந்தியத்தில் ஒரேவொரு உண்மையான சபையும், ஒரேவொரு உண்மையான ஆயரும்தான் இருக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அறிந்தோ அறியாமலோ உரோமன் கத்தோலிக்க சபையின் தோற்றத்திற்கான அடித்தளத்தை சில வழிகளில் சிப்பிரியான் அமைத்தார் என்று சொல்லலாம். ஏனென்றால், உண்மையான ஆயரின் அதிகாரம் அப்போஸ்தலராகிய பேதுருவிடமிருந்து நேரடியாக வந்தது என்று அவர் வலியுறுத்தினார். இந்தக் காரணத்தினால் நிறையப்பேர் சிப்ரியானை எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். சபையில் செல்வாக்குடைய அவருடைய இந்தப் போக்கும், கருத்தும் சபையில் பெரும்பாலும் எதிர்மறையான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே சபை வரலாற்றில் சிப்பிரியான் ஒரு சர்ச்சைக்குரிய நபர். ஏனெனில், அவர் மிகவும் வலுவான மையப்படுத்தப்பட்ட சபையின் அதிகாரத்தையும், ஆட்சியையும் ஆதரித்தார். இதன் காரணமாக, சபையில் பல நூற்றாண்டுகளாக நிலவிய ஊழலுக்கும், கொடுங்கோன்மைக்கும் இவர்தான் அடித்தளம் அமைத்தார் என்று பலர் நினைக்கிறார்கள். சிப்ரியான் வலுவான தலைமையை ஆதரித்தார். அவர் தேவபக்தியுள்ள மனிதர். அவர் ஒரு வேலைக்காரனின் இருதயம்கொண்ட பலமான தலைவர். ஆனால், அவருக்குப்பின் வந்தவர்கள் வலுவான தலைமையை விரும்பினார்கள். வேலைக்காரனின் இருதயத்தை விரும்பவில்லை. அவர்கள் பலத்துடன் ஆட்சி செய்ய விரும்பியிருக்கலாம். உரோமப் பேரரசன் வலேரியனின் காலத்தில் ஏற்பட்ட சித்திரவத்தையின்போது 258ஆம் ஆண்டில், சிப்பிரியானைக் கைதுசெய்து ஆளுநர்முன் நிறுத்தினார்கள். அரசனுக்குத் தூபம்காட்டுமாறு சிப்பிரியானை வற்புறுத்தினார்கள். அவர் மறுத்தார். சிப்பிரியான் சொன்ன வார்த்தைகளை நான் சொல்லப்போவதில்லை. அவரை விசாரித்த அஞ்ஞான ஆளுநர் அவரைப்பற்றிச் சொன்ன வார்த்தைகளை நான் இங்கு கூறுகிறேன்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வழக்கின் சுருக்கம் இதோ! இது கிறிஸ்தவர்களுக்கு எதிராக வழக்காடிய வழக்கறிஞரின் கூற்று. கிறிஸ்தவர்களைக் கிறிஸ்தவர்கள் பாராட்டுவது புதிதல்ல. ஆனால், இங்கு கிறிஸ்தவர்களை எதிர்த்தவர் கிறிஸ்தவர்களைப்பற்றி என்ன கூறுகிறார் என்று கவனியுங்கள். ஒரு கிறிஸ்தவனைப்பற்றி ஓர் அஞ்ஞான ஆளுநரின் வார்த்தைகளைக் கவனியுங்கள். சிப்பிரியானுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்குமுன், கிறிஸ்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிய இந்த ஆளுநரின் வார்த்தைகள் ஒரு சான்று.

ஆளுநர், 'நீ சிப்பிரியான் என்று அழைக்கப்படும் தாசியஸ்தானா?' 'ஆம், நான்தான்.' 'நீ தூய்மையற்ற ஓர் இயக்கத்தின் தலைவராக உன்னைக் காட்டிக் கொண்டாயா?' "ஆம்," "பேரரசரை வழிபடுமாறு உனக்குக் கட்டளையிடுகிறேன்." "மாட்டேன்." "உன்னைக்குறித்து கொஞ்சம் சிந்தித்துப் பார்." "சிந்திக்க அவசியம் இல்லை." இதற்குப்பின் ஆளுநர் மரண தண்டனை விதித்தார். அதற்குமுன் அவர் சொன்ன வார்த்தைகள்.

"நீண்ட காலமாக நீ ஒரு புனிதமற்ற மனநிலையில் வாழ்ந்திருக்கிறாய். உன் இழிவான சதித்திட்டத்தில் பலரை உறுப்பினர்களாகச் சேர்த்திருக்கிறாய். நீ உன்னை உரோமக் கடவுள்களுக்கும், அவர்களுடைய புனித சடங்குகளுக்கும் எதிரியாக மாற்றிக்கொண்டாய். புனித வணக்கத்துக்குரிய எங்கள் பேரரசர்கள் அகுஸ்துஸ் வலேரியன், கலியெனஸ், இராயன் வலேரியன் ஆகியோரால் உன்னை அவர்களுடைய வழிக்குக் கொண்டுவரமுடியவில்லை. பேரரசர்களை வழிபட வைக்கமுடியவில்லை. ஆகையால், நீ மிகவும் உப்புச்சப்பற்ற குற்றங்களின் சூத்திரதாரியாகவும், அவைகளின் தலைவன் என்று நீயே ஒப்புக்கொண்டதாலும், இந்தக் குற்றச்செயலில் ஈடுபட நீ உன்னோடு சேர்த்துக்கொண்ட மக்களுக்கு நீ ஓர் எச்சரிக்கையாக இருப்பதற்காகவும், எல்லாரும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கவும் உன் மரணம் இரத்தத்தால் உறுதிப்படுத்தப்படும்."

சிப்பிரியானுக்கு எதிராகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கவனியுங்கள். சதி, சட்டவிரோதமான கூடுகை, உரோமக் கடவுள்களுக்கு விரோதமான வெறுப்பு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகள்தான் முன்வைக்கப்பட்டன. அவர் தலை வெட்டப்பட்டு இரத்தசாட்சியாக மரித்தார்.

IV. முடிவுரை

சில முக்கியமான நபர்களைப்பற்றி மட்டுமே நாம் பார்த்தோம். நீங்கள் கொஞ்சம் தேடிப்பார்த்தால் ஆதிச் சபையின் காலத்தில் வாழ்ந்த இவர்களைப்பற்றியும், வேறு தலைவர்களைப்பற்றியும் நீங்கள் நிறைய அறிந்துகொள்ளலாம். சபை வரலாற்றை நாம் தொடர்வோம். தேவன் தம் நித்திய நோக்கத்தை இந்தப் பூமியில் தம் சபையின்மூலம் நிறைவேற்ற எல்லாக் காலங்களிலும் தலைவர்களை எழுப்பிக்கொண்டேயிருக்கிறார். அப்படிப்பட்ட சில தலைவர்களை நாம் பார்த்தோம். சிலர் நேர்மையானவர்கள். வேறு சிலர் அவ்வளவு நேர்மையானவர்கள் இல்லை. வேலையாட்கள் மாறலாம், மாறுவார்கள் ஆனால், தேவனுடைய வேலை மாறுவதில்லை. வேலையாட்கள் மறைவார்கள், தேவனுடைய வேலை மறைவதில்லை. அது தொடர்கிறது. தொடரும். ஆமென்