அப்போஸ்தலர் காலச் சபைக்குப்பின் வருவது ஆதிச் சபை. இது கி.பி 100முதல் கி.பி 312 வரையிலான காலகட்டம். அதாவது இது அப்போஸ்தலனாகிய யோவான் மரித்ததுமுதல் உரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட காலம்வரையிலான வரலாறு. "விசுவாசத்தை வரையறுத்தலும், தற்காத்தலும்" என்ற இந்த ஐந்தாம் பாகத்தில், அதே கால கட்டத்தில், ஆதிச் சபையில், கிறிஸ்தவர்கள் எதை விசுவாசித்தார்கள், தங்கள் விசுவாசத்தை எப்படி வரையறுத்தார்கள், தங்கள் விசுவாசத்திற்காக எப்படிப் போராடினார்கள், வேதப்புரட்டுக்களை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை 1. முன்னுரை 2. இரண்டு எச்சரிக்கைகள் 3. விசுவாசத்தை வரையறுத்தல் 4. விசுவாசப் பிரமாணம் 5. வினையும், எதிர்வினையும் 6. வேதப்புரட்டுகள் 7. வேதப்புரட்டும் புதிய ஏற்பாடும் 8. வேதப்புரட்டாளர்கள் 9. வேதப்புரட்டுகளுக்குப் பதில் 10. தன்விளக்கவாதமும், தன்விளக்கவாதிகளும் 11. வழிகாட்டும் கோட்பாடுகள் ஆகிய குறிப்புகளில் விவரமாகப் பார்ப்போம்.
இது சபை வரலாற்றைப்பற்றிய தொடரின் ஐந்தாம் பாகம். முழுத் தொடரில் அப்போஸ்தலர் காலத்திலிருந்து சீர்திருத்த காலம்வரையிலான சபை வரலாற்றை நாம் பார்ப்போம். சபை வரலாற்றை நான்கு காலகட்டங்களாகப் பிரித்துக்கொள்கிறேன் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதாவது
முதல் பாகம், சபை வரலாற்றைப்பற்றிய ஒரு முன்னுரை, ஓர் அறிமுகம். இரண்டாம் பாகம், ஆண்டவராகிய இயேசு பரமேறியதிலிருந்து அப்போஸ்தலனாகிய யோவான் மரித்த கி.பி. 100வரையிலான அப்போஸ்தலர் காலச் சபை வரலாறு. மூன்றாம் பாகம், கி.பி. 100லிருந்து உரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் கி.பி 312இல் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட காலம்வரையிலான ஆதிச் சபை வரலாறு. அந்தக் கால கட்டத்தில் கிறிஸ்தவம் எப்படி பரவியது என்று மூன்றாம் பாகத்திலும், அதே கால கட்டத்தில், ஆதிச் சபைக்கு நேரிட்ட சித்திரவதையைப்பற்றி நான்காம் பாகத்திலும் பார்த்தோம். இந்த ஐந்தாம் பாகத்திலும் கி.பி. 100முதல் 312வரையிலான அதே கால கட்டத்தைத்தான் பார்க்கப்போகிறோம்; ஆனால் இந்த ஆதிக் கிறிஸ்தவர்கள் எதை விசுவாசித்தார்கள் என்றும், தங்கள் விசுவாசத்தை எப்படித் தற்காத்தார்கள் என்றும் நாம் பார்க்கப்போகிறோம்.
ஆரம்பத்திலேயே, நான் இரண்டு காரியங்களைத் தெளிவாக்க விரும்புகிறேன். 1. முதலாவது, ஆதிக் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை எப்படி வரையறுத்தார்கள், தற்காத்தார்கள் என்ற இந்தக் காரியத்தைப் சில ஆண்டுகள் படித்தால்தான் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும். அந்த அளவுக்கு இது முக்கியமான பாடம். சில ஆண்டுகள் படித்துத் தெளிவடைய வேண்டிய ஒரு காரியத்தை ஒன்றிரண்டு மணி நேரத்தில் சொல்வது மிகக் கடினம்; இது ஒரு சவால்.
இந்த இரண்டு குறிப்புக்களையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஆதிச் சபை ஆரம்பத்திலேயே தன் விசுவாசத்தை வரையறுக்கவும் தற்காத்துக்கொள்ளவும் வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஒருவன் கிறிஸ்தவன் என்ற பெயரைத் தரித்துக்கொள்வதாக இருந்தால் அவன் எவைகளை விசுவாசிக்க வேண்டும், எவைகளை விசுவாசிக்கக்கூடாது, என்று சபை கிறிஸ்தவ விசுவாசத்தை வரையறுக்க வேண்டியிருந்தது. கிறிஸ்தவ விசுவாசத்தை வரையறுப்பதில் “கண்டிப்பாக விசுவாசிக்க வேண்டியவை, கண்டிப்பாக விசுவாசிக்கக் கூடாதவை” என இரண்டு காரியங்கள் சம்பந்தப்பட்டிருந்தன.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மரித்தோலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று ஒரு கிறிஸ்தவன் கண்டிப்பாக விசுவாசிக்க வேண்டும். இதை விசுவாசிக்காதவன் கிறிஸ்தவனாக இருக்க முடியாது. இதை விசுவாசிக்கும் அதே நேரத்தில், இந்தப் பிரபஞ்சத்தில் அநேக தெய்வங்களும் தேவர்களும் இருப்பதாக ஒரு கிறிஸ்தவன் விசுவாசிக்கக் கூடாது. அப்படி விசுவாசிப்பவன் கிறிஸ்தவனாக இருக்க முடியாது. இவ்வாறு ஒரு கிறிஸ்தவனுடைய விசுவாசத்தில் அவன் விசுவாசிக்க வேண்டியவை, விசுவாசிக்கக் கூடாதவை என்று இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ஆகவே ஆரம்பத்திலேயே வேதவாக்கியங்களுக்கு ஏற்ப விசுவாசத்தை வரையறுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் சபையின்மேல் விழுந்தது. அப்போஸ்தலர்களின் காலத்திலேயே இந்தச் சிக்கல் ஆரம்பித்துவிட்டது என்று தெரிகிறது.
இந்த வசனங்களில், கிறிஸ்தவனாக விரும்பும் ஒருவனிடம், “நீ கிறிஸ்தவனாக விரும்பினால், கிறிஸ்து வேதவாக்கியங்களின்படி உன் பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்தார் என்று நாங்கள் விசுவாசிப்பதுபோல் நீங்களும் விசுவாசிக்க வேண்டும்,” என்று பவுல் அழுத்தந்திருத்தமாகச் சொல்வதுபோல் தோன்றுகிறது.
இந்த வசனங்களிலுள்ள சொற்றொடர்களும், இந்த வசனங்கள் சொல்லப்பட்டுள்ள விதமும், பவுல் அன்றைய கிறிஸ்தவர்களின் பொதுவான விசுவாச அறிக்கையை மேற்கோள் காட்டுகிறார் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது என்று வேதவல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்ற வசனங்களைப் பார்க்கும்போது, கிறிஸ்தவனாக விரும்புகிறவன் கட்டாயமாக விசுவாசிக்க வேண்டியவை என்ன, வேண்டாதவை என்ன, என்று அப்போஸ்தலர்களின் காலத்திலேயே விசுவாசத்தை, சத்தியத்தை, வரையறுத்திருந்தார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. கிறிஸ்தவனாக விரும்பும் ஒருவன் கிறிஸ்துவை எப்படி விசுவாசிக்க வேண்டும் என்று இந்த வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
இன்றுபோல் அன்றும் உண்மையான கிறிஸ்தவர்கள் கட்டாயம் விசுவாசிக்க வேண்டியவைகளும் கூடாதவைகளும் என்று இரு வகைகள் இருந்தன என்று தெரிகிறது.
ஆகையால், சபையின் ஆரம்ப காலத்திலேயே அவர்கள் விசுவாச அறிக்கையை உருவாக்கினார்கள். இந்த விசுவாச அறிக்கைதான் இன்று சில நேரங்களில், சில இடங்களில், விசுவாசப்பிரமாணம் என்றழைக்கப்படுகிறது. சபையின் அடிப்படை விசுவாசம் என்னவென்பதைச் சுருக்கமாக அறிந்துகொள்வதற்கு விசுவாச அறிக்கைகள் அன்று உதவின, இன்றும் உதவுகின்றன.
விசுவாச அறிக்கை என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மைகளை உறுதிமொழி வடிவில் எடுத்துரைக்கும் சுருக்கமான ஒரு தொகுப்பாகும். “விசுவாச அறிக்கைகள்” அந்தந்தக் காலத்தில் சபை சத்தியம் என விசுவாசித்ததை நிர்ணயிக்கும் அளவீடு என்று எடுத்துக்கொள்ளலாம். சபை வரலாற்றில் கிறிஸ்தவத்தின் சத்தியங்கள் தாக்குதலுக்கு ஆளானபோது, கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தைத் தற்காத்துக்கொள்வதற்காகவும், அவைகளைப் பிறருக்கு நேர்த்தியாக எடுத்துரைப்பதற்காகவும் “விசுவாச அறிக்கைகள்” உருவாக்கப்பட்டன.
அப்போஸ்தல விசுவாச அறிக்கை, நைசியா விசுவாச அறிக்கை, அத்தனேசியஸ் விசுவாச அறிக்கை என் மொத்தம் மூன்று முக்கிய விசுவாச அறிக்கைகள் உள்ளன.
சபையையும் விசுவாசிகளையும் ஆபத்துக்களிலிருந்து காப்பதற்காக உருவாக்கப்பட்ட முதல் “விசுவாச அறிக்கை” பின்னாட்களில் அப்போஸ்தலரின் விசுவாச அறிக்கை (Apostle’s Creed) என்றழைக்கப்பட்டது.
கி.பி 120வாக்கில் கோரைநாணலில் எழுதப்பட்ட ஒரு கிரேக்க கையெழுத்துப்படிவம் பின்னாட்களில் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஆதிக் கிறிஸ்தவர்களின் விசுவாச அறிக்கையைப்பற்றிப் பேசுவது வியப்பாக இருக்கிறது. அது மட்டுமல்ல, அது எகிப்தில் இருந்த சபைகள் உட்பட உரோமப் பேரரசிலிருந்த சபைகளிளெல்லாம் புழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆதிச் சபையின் கிறிஸ்தவர்கள் என்ன, எதை, விசுவாசித்தார்கள் என்று அந்தக் கையெழுத்துப்படிவம் கூறுகிறது. இதோ அந்த வரிகள்: “சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனையும், அவருடைய ஏக குமாரனாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும், பரிசுத்த ஆவியையும், சரீர உயிர்த்தெழுதலையும், பரிசுத்த ஒரே பொதுவான சபையையும் விசுவாசிக்கிறேன்.”
ஆதிக் கிறிஸ்தவர்களிடையே வரையறுக்கப்பட்ட விசுவாச அறிக்கை இருந்தது என்பதற்கு இது ஒரு நிரூபணம். உண்மையான கிறிஸ்தவன் தேவன் ஒருவர் உண்டென்றும், அவர் சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவன் என்றும், அவருடைய ஏக குமாரன் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றும், தன் உடல் ஒருநாள் உயிர்த்தெழும் என்றும் விசுவாசிக்கிறான். அவன் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறான்.
இங்கும் அங்கும் சில விசுவாச அறிக்கைகள் விசுவாசிகளிடையே பரவலாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அவைகளுள் அப்போஸ்தல விசுவாச அறிக்கை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது கிறிஸ்தவத்தின் பல அடிப்படைச் சத்தியங்களைச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. ஆதிச் சபையில் ஒரேவொரு நிலையான நிரந்தரமான விசுவாச அறிக்கை இருக்கவில்லை.
அப்போஸ்தலர்களே இந்த அப்போஸ்தல அறிக்கையை எழுதினார்கள் என்பது ஒரு பழங்கதை. ஆனால் அவர்கள் இதை எழுதவில்லை என்று வேதஅறிஞர்கள் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள். ஒருவேளை இந்த அப்போஸ்தல அறிக்கையில் 12 வரிகள், 12 வாக்கியங்கள், இருப்பதால் ஒவ்வொரு வரியையும் ஓர் அப்போஸ்தலர் எழுதியிருக்கலாம் என்று மக்கள் நம்பியிருக்கலாம்.
ஆயினும் அப்போஸ்தலர்களும் ஆதிக் கிறிஸ்தவர்களும் என்ன விசுவாசித்தார்கள், என்ன போதித்தார்கள், எதற்காக இரத்தசாட்சிகளாக மரித்தார்கள் என்பதின் சாரத்தை, சாராம்சத்தை, அப்போஸ்தல விசுவாச அறிக்கை மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறது. அப்போஸ்தல விசுவாச அறிக்கை ஒரே நாளில் உருவாகவில்லை; அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, உருவாகி, நாளடைவில், ஒரு குறிப்பிட்ட வடிவம் பெற்றது.
இது ஒருவேளை உரோம விசுவாச அறிக்கை என்று அழைக்கப்படுகிற பழைய உரோம அறிக்கையிலிருந்து (Old Roman Creed) வந்திருக்கலாம் என்று சொல்லப்படுவதுண்டு. அது என்ன பழைய உரோம விசுவாச அறிக்கை? உரோமில் இருந்த சபையில் ஞானஸ்நானம் பெறும்போது விசுவாசிகள் இந்த அறிக்கையைச் சொன்னதாகக் கூறுகிறார்கள். அதாவது ஞானஸ்நானம் பெற வந்தவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அந்தக் கேள்விகளுக்கான பதில்களே நாளடைவில் இப்படிப்பட்ட விசுவாச அறிக்கையாக மாறிற்று என்றும் கூறுகிறார்கள். எனவேதான் இதற்கு பழைய உரோம விசுவாச அறிக்கை என்று பெயர்.
ஞானஸ்நானம் பெற வந்தவரிடம், “சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறாயா?” “தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கிறாயா?” “அவர் பரிசுத்த ஆவியினால் கன்னி மரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார் என்று விசுவாசிக்கிறாயா?” “பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறாயா?” “பரிசுத்த சபையை விசுவாசிக்கிறாயா?” “சரீர உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிறாயா?” என்று கேள்விகள் கேட்டதாக 170 – 235இல் வாழ்ந்த உரோமின் ஹிப்போலைட்டஸ் எழுதியிருக்கிறார். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான் அப்போஸ்தல விசுவாச அறிக்கைக்கான அடித்தளமாக அமைந்திருக்கலாம். இவை வளர்ந்து, நாளடைவில், இரண்டாம் நூற்றாண்டில், அப்போஸ்தல விசுவாச அறிக்கையாக மாறியிருக்கலாம்.
அப்போஸ்தல விசுவாச அறிக்கையை நான் மூன்று பாகங்களாகப் பிரிக்கிறேன்.
“வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்: அவருடைய ஒரே குமாரனாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்து பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார்: மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்; பரமண்டலத்துக்கேறி, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்; அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறேன், பரிசுத்த கத்தோலிக்க (பொதுவாயிருக்கிற) சபையை விசுவாசிக்கிறேன். பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும் பாவ மன்னிப்பும், சரீர உயிர்த்தெழுதலும், நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன்.” இதுதான் அப்போஸ்தல விசுவாச அறிக்கை. இது கிறிஸ்தவத்தின் அடிப்படையான விசுவாசத்தின் ஓர் அற்புதமான சுருக்கமாகும்.
எனினும், அப்போஸ்தல விசுவாச அறிக்கையில் குறிப்பிடப்படாத முக்கியமான அம்சம் ஏதாவது இருக்கிறதா என்று சிந்தித்துப்பார்க்கும்போது, எடுத்துக்காட்டாக, விசுவாசத்தால் மட்டுமே நீதிப்படுத்தப்படுகிறோம் என்ற அடிப்படைச் சத்தியம் அதில் இடம்பெறவில்லை என்று தெரிகிறது. விசுவாசத்தால்தான் ஒருவன் நீதிமானாக்கப்படுகிறான் என்பது வேதத்தின் அடிப்படை சத்தியம். புதிய ஏற்பாடு அதைத் தெளிவாகப் போதிக்கிறது. பழைய ஏற்பாடும் அதைக் குறிப்பிடுகிறது. ஆனால் இது அப்போஸ்தல விசுவாச அறிக்கையில் காணப்படவில்லை. ஏன்? அநேகமாக, அப்போஸ்தல விசுவாச அறிக்கை உருவான காலத்தில் விசுவாசத்தால் நீதிப்படுத்தப்படுத்தல் என்ற சத்தியம் சர்ச்சைக்குரியதாக, கேள்விக்குரியதாக, இருக்கவில்லை; அன்று அது ஒரு பிரச்சினையாக இருந்திருக்காது. எனவே அது அப்போஸ்தல அறிக்கையில் இடம்பெறாமல் போயிருக்கலாம். அப்போஸ்தல அறிக்கை உருவான காலத்தில் தாக்குதலுக்கும் சர்ச்சைக்கும் உள்ளான சத்தியங்களைத் தற்காத்துக்கொள்ளவும் பறைசாற்றவும் அவர்கள் அப்போஸ்தல அறிக்கையைப் பயன்படுத்தினார்கள் என்பதைப் புரிந்துகொண்டால் “விசுவாசத்தால் நீதிமான் வாழ்வான்” என்பது ஏன் சேர்க்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இது ஓர் அற்புதமான விசுவாச அறிக்கை. இந்த விசுவாச அறிக்கை இன்றும் சில சபைகளில் ஆராதனையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அவர்கள் ஞாயிற்றுக்கிழமைதோறும் கூடிவருகையில் அனைவரும் சேர்ந்து அப்போஸ்தல விசுவாச அறிக்கையைச் சாற்றுகிறார்கள். இது ஒருவேளை ஒரு பாரம்பரியம்போல், சடங்குபோல், தோன்றலாம். ஆயினும் சபையார் அனைவரும் உணர்ந்து அறிக்கையிடும்போது, அதில் வீரியமுள்ளது.
சரி, நான் சொல்ல விரும்புகிற காரியத்துக்கு வருகிறேன். அப்போஸ்தல விசுவாச அறிக்கையின் நோக்கம் என்ன? ஒருவன் கிறிஸ்தவனாக இருக்கத் தீர்மானித்தால் அவன் சில சத்தியங்களை விசுவாசித்தாக வேண்டும், சில காரியங்களை விசுவாசிக்கக்கூடாது என்பதை அப்போஸ்தல அறிக்கையின்மூலம் தெரிவித்தார்கள். ஒருவன் எதை விசுவாசித்தாலும் கிறிஸ்தவனாக இருக்க முடியும் என்பது ஆதிச் சபையின் காலத்தில் சாத்தியம் இல்லை.
இந்த விசுவாச அறிக்கையில் கடைசியாக “பரிசுத்த கத்தோலிக்க சபை” என்று நான் சொன்னதைக் கவனித்தீர்களா? அப்போஸ்தல விசுவாச அறிக்கையைப் பார்ப்பதற்குமுன் சபை வரலாற்றின் இந்த அம்சத்தை, அதாவது “பரிசுத்த கத்தோலிக்க சபை” என்ற சொற்றொடரை, நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இன்று கத்தோலிக்க சபை என்று சொன்னவுடன் வத்திக்கானும், போப்பானவரும், உரோமன் கத்தோலிக்க சபையும்தான் நம் நினைவுக்கு வரும். இதைத் தவிர்க்க முடியாது. எனவேதான் இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அப்போஸ்தல விசுவாச அறிக்கையிலும், கி.பி 120இல் எழுதப்பட்டு எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட கிரேக்கப் படிவத்திலும், சொல்லப்படுகிற கத்தோலிக்க என்ற சொல் இன்றைய உரோமன் கத்தோலிக்க சபையைக் குறிக்கவில்லை. “கத்தோலிக்க” என்றால் உலகளாவிய, ஒன்றான, ஒற்றுமையான, பொதுவான, உலககெங்குமுள்ள என்ற பொருள். எனவே, “நான் பரிசுத்த கத்தோலிக்க சபையை விசுவாசிக்கிறேன்” என்றால், அடிப்படையில், “நான் பரிசுத்த, உலகளாவிய, பொதுவான, சபையை விசுவாசிக்கிறேன்” என்று பொருள்.
ஆதிக் கிறிஸ்தவர்கள் சபையைக் குறிக்க Catholic என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தினார்கள்? அப்போது சபையைத் தாக்கிய கள்ளப்போதனைகளை எதிர்ப்பதற்காக உரோமப் பேரரசெங்கும் பரவியிருந்த சபை “கத்தோலிக்க” என்ற பெயரைப் பயன்படுத்தியது. வேத சத்தியங்களை மட்டும் பின்பற்றிய சபைகள் ஒன்றாயிருந்து எதிரியைத் தாக்க இந்தப் பெயர் உதவும் என்று சபை நம்பியது. இரண்டாம் நூற்றாண்டில் கிழக்கில் அலெக்சாந்திரியாவிலும், மேற்கில் கார்த்தேஜிலும், ஆசியா மைனரில் அந்தியோக்கியாவிலும், ஐரோப்பாவில் உரோமிலும் இருந்த ஆதிச் சபை Catholic Church (ஒரே பொதுவான சபை) என்றே அழைக்கப்பட்டது.
உண்மையான விசுவாசிகள் அனைவரும் உலகெங்கும் பரவியிருக்கும் ஒரே சபையைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் உண்மை. எனவே, “கத்தோலிக்க” என்ற வார்த்தையின் உண்மையான பொருளை நாம் புரிந்துகொண்டால் அதனால் ஏற்படும் குழப்பத்தை நாம் தவிர்க்கலாம். கத்தோலிக்க சபை என்பது உரோமன் கத்தோலிக்க சபை இல்லை. பின்னாட்களில் உரோமில் இருந்த சபை வேதத்தை விட்டு விலகிப்போய் உரோமன் கத்தோலிக்க சபையாக உருமாறியது. எனவே உரோமன் கத்தோலிக்க சபையும், இங்கு சுட்டிக்காட்டப்படும் கத்தோலிக்க சபையும் ஒன்றல்ல.
உண்மையான விசுவாசிகள் எல்லாரும் உலகெங்கும் பரவியிருக்கும் கிறிஸ்துவின் உலகளாவிய (கத்தோலிக்க) சரீரமாகிய சபையின் அவயவங்கள். நாம் இந்த உலகத்தில் பல்வேறு கண்டங்களில், பல்வேறு நாடுகளில், நகரங்களில், கலாச்சாரங்களில் வாழ்ந்தாலும், நாம் பல்வேறு மொழிகளைப் பேசினாலும், நம் பின்புலங்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஆண்டவராகிய இயேசுவைச் சொந்த இரட்சகராகப் பெற்றுக்கொண்ட நாமனைவரும் கிறிஸ்துவின் உலகளாவிய (கத்தோலிக்க) சரீரமாகிய சபையின் அவயவங்கள். நாமனைவரும் கிறிஸ்து இயேசுவில் சகோதர சகோதரிகள். இது மாறாது. எனவே உலகளாவிய (கத்தோலிக்க) சபைக்குக் கிறிஸ்து தலை, நாம் அவயவங்கள். சரி, கத்தோலிக்க என்ற வார்த்தையை இப்போது நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள். இது போதும்.
ஆதிக் கிறிஸ்தவர்களின் விசுவாச அறிக்கையோடு தொடர்புடைய ஒரு காரியத்தை நாம் இப்போது பார்ப்போம்.
சுமார் 125இல் ஏதென்ஸில் வாழ்ந்த அரிஸ்டைட்ஸ் என்ற ஒரு பரிசுத்தவான் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைப்பற்றி உரோமப் பேரரசருக்கு விரிவாக எடுத்துரைத்து எழுதினார். ஏனென்றால் அன்று கிறிஸ்தவர்களைப்பற்றி நிறைய பொய்களும் வதந்திகளும் உலா வந்துகொண்டிருந்தன. கிறிஸ்தவர்கள்மேல் அநேகப் பொய்குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். எனவே apologists என்ற தன்விளக்கவாதிகள் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தையும் சத்தியத்தையும் காரணகாரியங்களோடும் பகுத்தறிவோடும் விளக்கினார்கள், விவாதித்தார்கள், எண்பித்தார்கள்.
அரிஸ்டைட்ஸ் இதைப்பற்றி அன்றைய அரசருக்கு எழுதினார். அப்போஸ்தலர்களால் பிரசங்கிக்கப்பட்ட ஒரு “சத்திய உபதேசம்” இருப்பதாகவும், அதையே தாங்களும் இன்னும் கடைப்பிடிப்பதாகவும் அவர் கூறினார்:
“கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே கிறிஸ்தவர்கள் தோன்றக் காரணம், ஆதாரம், ஆரம்பம். கிறிஸ்து மனுக்குலத்தின் இரட்சிப்புக்காக பரலோகத்திலிருந்து இறங்கி வந்த உன்னதமான தேவனுடைய குமாரன்; அவர் பரிசுத்த ஆவியால் அங்கீகரிக்கப்பட்டவர்; அவர் கன்னியிடம் பிறந்த, ஜெநிப்பிக்கப்பட்ட, மாசற்றவர்; அவர் மாம்சமாகி … சிலுவையில் மரணத்தை ருசித்து … மூன்று நாட்களுக்குப்பிறகு மீண்டும் உயிர்த்து, பரலோகத்திற்கு ஏறினார்,” என்று அரிஸ்டைட்ஸ் தன் நியாயவாதத்தை முன்வைத்தார்.
தன்விளக்கவாதிகளைப்பற்றி இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம் பார்ப்போம்.
அரிஸ்டைட்ஸ் எடுத்துரைத்த நியாயவாதத்தை நான் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் என்னவென்றால், அவர் தன் நியாயவாதத்தில் ஏறக்குறைய 1 கொரிந்தியர் 15ஆம் அதிகாரத்தை மேற்கோள் காட்டுவதுபோல் இருக்கிறது. ஆம், அவரும், பவுல் கூறுவதுபோல், கிறிஸ்தவர்கள் விசுவாசிக்க வேண்டிய அம்சங்களையே வலியுறுத்துகிறார்.
பின்னாட்களில் நைசீன் விசுவாச அறிக்கை, அத்தனேசியஸ் விசுவாச அறிக்கை எனப் பல விசுவாச அறிக்கைகள் வந்தன.
கி.பி. 325ஆம் ஆண்டு துருக்கியிலுள்ள நைசியா என்ற நகரில் கூடிய கிறிஸ்தவ ஆயர்களின் பொதுச்சங்கம் ஒரு தொகுப்பை வடிவமைத்து, அதிகாரபூர்வமாக ஓர் விசுவாசஅறிக்கை வெளியிட்டது. இதற்கு நைசீன் விசுவாச அறிக்கை என்று பெயர். அக்காலத்தில் சபையில் நிலவிய குழப்பமான உபதேசங்களைக் களைவதற்காக நைசியா பொதுச்சங்கம் கூடி ஆராய்ந்து பல முடிவுகளை எடுத்து முடிவில் வெளியிட்ட அறிக்கைதான் நைசீன் விசுவாச அறிக்கை.
அத்தனேசியஸ் விசுவாச அறிக்கையைப்பற்றியும் ஒருவேளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
ஆனால் ஆதிச் சபையில் அப்போஸ்தல அறிக்கைக்குமுன் அல்லது அதே கால கட்டத்தில் இன்னும் சில பொதுவான அடிப்படையான விசுவாச அறிக்கைகள் இருந்தன. அவைகளில் சிலவற்றை மட்டும் நான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.
212இல் வட ஆப்பிரிக்காவின் பெரிய நகரமான கார்த்தேஜில் தெர்த்துல்லியன் என்ற ஒரு சபைப் பிதா இருந்தார். இவர் ஓர் இறையியலாளர். விசுவாசச் சட்டத்தைப்பற்றி இவர் இவ்வாறு கூறுகிறார்.
“உண்மையாகவே விசுவாசக் கோட்பாடு முற்றிலும் ஒன்றே, ஒன்று மட்டுமே; அது நிலையானது, மாறாதது; விசுவாசக் கோட்பாடு பின்வருமாறு: சர்வ வல்லமையுள்ள ஒரே தேவனை விசுவாசித்தல் – இவர் முழுப் பிரபஞ்சத்தையும் படைத்தவர்; அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தல் – இவர் கன்னி மரியாளிடம் உற்பவித்துப் பிறந்தார்; பொந்து பிலாத்துவின் அதிகாரத்தின்கீழ் சிலுவையில் அறையப்பட்டார்; மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, பரலோகங்களுக்குச் சென்று, இப்போது பிதாவின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்; சரீர(மும், ஆவியும்) உயிர்த்தெழுதல்மூலம் உயிருள்ளவர்களையும் இறந்தவர்களையும் நியாயந்தீர்க்க அவர் வருவார்.” அப்போஸ்தல அறிக்கையைப்போல் இதுவும் ஒரு முக்கியமான விசுவாச அறிக்கை.
ஒரு கிறிஸ்தவன் எதை விசுவாசிக்க வேண்டும், எதை விசுவாசிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டது; ஓர் எல்லை நிர்ணயிக்கப்பட்டது என்ற ஒரேவொரு காரியத்தைத்தான் நான் இதுவரை வலியுறுத்திக்கொண்டிருக்கிறேன்.
நான் இந்த அம்சத்தை தேவைக்கு அதிகமாகப் பேசுவதாக நினைக்கவில்லை. விசுவாசத்தைப்பொறுத்தவரை ஆதிக் கிறிஸ்தவர்களிடையே ஒரு பொதுவான ஒருமைப்பாடு இருந்தது என்பதும், அப்போஸ்தலர்களின் அறிக்கையில் கூறப்பட்ட காரியங்களை அவர்கள் விசுவாசித்தார்கள் என்பதும் உங்கள் இருதயத்தில் ஆழமாகப் பதிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சில விஷயங்களைப்பற்றி அவர்களிடையே சர்ச்சைகள் இருந்தன. ஆனால் அப்போஸ்தலர்களின் அறிக்கையில் சொல்லப்பட்ட காரியங்களில் அவர்களிடையே ஒரு பொதுவான உண்மையான ஒருமை இருந்தது. இது அப்போஸ்தல அறிக்கையில் மட்டுமல்ல; இந்தக் கருத்துக்கள் வேறு பல அறிக்கைகளிலும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுள்ளதையும் நாம் காண்கிறோம். தெர்துல்லியன், நோவாஷியன் போன்றோரின் எழுத்துக்களிலும் மீண்டும் இதே கருத்தைக் பார்க்கிறோம். அப்போஸ்தலர்களின் போதனைகளிலும் மீண்டும் மீண்டும் நாம் பார்க்கிறோம்.
எனவே முதல் நூற்றாண்டுகளில் எல்லா இடங்களிலும் வரைமுறையற்ற, நெறிமுறையற்ற, ஒழுங்கற்ற விசுவாச அறிக்கை இருந்ததாக நாம் நினைக்கக்கூடாது. வெவ்வேறு இடங்களில் இருந்த கிறிஸ்தவர்கள் எதை விசுவாசித்தார்கள் என்று ஒருவருக்கொருவர் தெரியாது என்றும் நாம் நினைக்கக்கூடாது. அப்படியல்ல. அதுபோல ஒரு கிறிஸ்தவன் எதை வேண்டுமானாலும் விசுவாசிக்கலாம், அதே நேரத்தில் அவன் கிறிஸ்தவனாகவும் இருக்கலாம் என்ற நிலை இருந்ததாகவும் நாம் தவறாக நினைக்கக்கூடாது. அப்படியல்ல. கிறிஸ்தவர்களிடைய குறைந்தபட்சமாக வரையறுக்கப்பட்ட, நெறிமுறைப்படுத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட, விசுவாசம் இருந்தது.
உரோமப் பேரரசெங்கும் இருந்த எல்லாக் கிறிஸ்தவர்களும் இந்த விசுவாச அறிக்கைகளை முழுமனதோடு ஏற்றுக்கொண்டார்கள் என்று நான் சொல்லவில்லை. சபை வரலாற்றின் முதல் சில நூற்றாண்டுகளிலேயே சமயமுரண்பாடுகளும், வேதப்புரட்டுக்களும், சர்ச்சைகளும் தோன்றின. நிச்சயமாக அன்று முளைத்த எல்லா சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும், சமயமுரண்பாடுகளைப்பற்றி என்னால் பேச முடியாது. சில குறிப்பிட்ட சர்ச்சைகளைப் பார்ப்போம். ஆனால், அதற்குமுன் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பொய்ப் போதகர்களும், வேதப்புரட்டர்களும் சபைக்குப் பெரிய பிரச்சினையாக இருந்தபோதும், அவர்கள் தங்களை அறியாமலேயே சபைக்கு ஓர் உதவி செய்தார்கள் என்பதையும் நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன். எப்படியென்றால், பொய்ப் போதகங்களும், வேதப்புரட்டுக்களும் எழுந்தபோது, உண்மையாகவே வேதாகமம் அதைப்பற்றி என்ன சொல்கிறது, என்ன கற்பிக்கிறது, உண்மையான உபதேசம் என்ன என்பதை அறிய கிறிஸ்தவர்கள் வேதாகமத்தைக் கருத்தாய் ஆராய்ந்தார்கள். பொய்ப் போதகங்களுக்கும் உபதேசங்களுக்கும் கிறிஸ்தவர்கள் எதிர்வினை ஆற்றியதின் விளைவாகத்தான் கிறிஸ்தவ உபதேசங்கள் உருவாயின என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆம், கிறிஸ்தவ உபதேசங்கள் உருவானதற்கு எதிர்வினை என்னும் மூலக்கூறு ஒரு முக்கியமான காரணம். ஒரு சிக்கல் எழும்போது, அந்தச் சிக்கலைத் தீர்க்க ஒரு தவறான போதனை வருகிறது. தவறான போதனை வந்தவுடன் சபை சரியான போதனையை வரையறுக்கிறது. இதுதான் எதிர்வினை. “இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால், எழுந்திருக்கும் பிரச்சினையைக்குறித்த நம் புரிதலும் அறிவும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இல்லையென்றால், இதைத் தீர்க்க முடியாது, பொய்ப் போதகத்தைக் கண்டனம் பண்ணவும் முடியாது. எனவே நாம் நம் விசுவாசத்தை வரையறுக்க வேண்டும்,” என்ற எண்ணத்தில் வேதத்தை ஆராய்ந்தார்கள். அதன் விளைவுதான் விசுவாச அறிக்கைகள். இது சபை வரலாறு முழுவதும் தொடர்கிறது.
முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குள்ளேயே அநேகப் போலிப்போதனைகள் ஆரம்ப காலச் சபையை மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கின. அப்பொல்லினரியனிசம் (Apollinarianism), டொசெட்டிசிசம் (Docetism), நெஸ்டோரியனிசம் (Nestorianism), ஏரியனிசம் (Arianism) போன்ற பொய்ப்போதனைகள் முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குள் சபையைப் பயங்கரமாகத் தாக்கின. இவையனைத்தும் பெரும்பாலும் இயேசுவின் தன்மையோடு தொடர்புடையவை. இயேசுவின் தெய்வீகத் தன்மையையும், மனிதத் தன்மையையும் குறித்த சச்சரவுகள் வந்துகொண்டேயிருந்தன.
இதைக் கொஞ்சம் விவரமாகப் பார்ப்பதற்குமுன் heresy என்ற வார்த்தையை நாம் வரையறுக்க வேண்டும். இதை சமயபேதகம், சமயமுரண்பாடு, சமயத்திரிபு, வேதப்புரட்டு என்று மொழிபெயர்க்கலாம் அல்லது கொஞ்சம் எளிமைப்படுத்தி பொய்ப்போதகம், தவறான உபதேசம், என்றும் சொல்லலாம். தமிழ் வேதாகமத்தில் இந்த வார்த்தை மார்க்கபேதகம் (கலா. 5:20), வேதப்புரட்டு (2 பேதுரு 2:1) என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் வேதப்புரட்டு என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். இப்போது இந்த வார்த்தையின் பொருள் உங்களுக்குத் தெரியும். அது போதும். தொடர்வோம்.
நான் ஒரு நீண்ட பட்டியல் வைத்திருக்கிறேன். ஆனால், எல்லா வேதப்புரட்டுக்களையும்பற்றி பேச நேரம் போதாது. நேரம் இருந்தாலும் எல்லாவற்றையும் பேசித் தீர்த்துவிடவும் முடியாது. ஆரம்ப காலச் சபை சந்தித்த சில முக்கியமான வேதப்புரட்டுகளை மட்டும் பார்ப்போம்.
Docetism என்றால் காட்சியளித்தல் அல்லது தோற்றமளித்தல் என்று பொருள். இந்தக் காட்சிவாதம் அப்போது பரவலாக இருந்த இன்னொரு வேதப்புரட்டாகிய ஞானவாதத்தின் மறுவடிவம் என்றுகூடச் சொல்லலாம்.
இரண்டாம் நுற்றாண்டில் முளைத்த இந்த வேதப்புரட்டின் சாராம்சம் என்ன? ஆண்டவராகிய இயேசுவின் உடல் மனிதர்களாகிய நமக்கிருக்கும் மாம்சமும் இரத்தமும் உடைய தசையுடலன்று, மாறாக நுண்ணியலாக்கமுடையது. இயேசு முழுமையான தேவன் என்று காட்சிவாதிகள் நம்பியதால், தெய்வீகக் கிறிஸ்து மாம்சத்தையும் இரத்தத்தையும் தொடும் அளவுக்கு ஒருபோதும் தரம்தாழ்ந்துவிட மாட்டார் என்று அவர்கள் நினைத்தார்கள். “இயேசு முழுமையான தேவன்; தேவன் இறக்க முடியாது; இறக்க மாட்டார்; அவர் எப்போதும் இருக்கிறார்; எனவே இயேசு இந்தப் பூமியில் மனிதன்போல் காட்சியளித்தார்; அவர் இறந்ததுபோல் காட்சியளித்தார்,” என்று அவர்கள் கூறினார்கள். பழைய ஏற்பாட்டில் தேவதூதர்கள் மனிதத் தோற்றத்தில் வந்து மனிதர்கள் மத்தியில் செயல்பட்டதுபோல், தேவனாகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது மனிதன்போலக் காட்சியளித்தார் என்பது இவர்களுடைய வாதம்.
கிறிஸ்து தம் வாழ்வில் இந்த உலகத்தில் மரணம் உட்பட தாம் அனுபவித்த அத்தனைத் துன்பங்களையும் மனிதனாகக் காட்சியளித்து மட்டுமே அனுபவித்தார் என்று இவர்கள் போதித்தார்கள். அதாவது பழைய ஏற்பாட்டில் தேவதூதர்கள் இந்த உலகத்தில் தேவனுடைய பணியைச் செய்ய மனிதரூபத்தில் வந்ததுபோல (ஆபிரகாமையும் லோத்தையும் சந்தித்துப் பேசி உணவருந்தியதுபோல) இயேசுவும் மனிதரூபத்தில் காட்சி தந்து துன்பங்களை அனுபவித்தார் என்பதுதான் இந்தப் போதனை. அத்துடன் இயேசு மனித உருவில் காட்சியளித்து அனுபவித்த துன்பங்கள் எல்லா மனிதர்களும் அனுபவிப்பதுபோன்ற துன்பங்கள் மட்டுமே என்றும் இந்தப் போதனை கூறியது. இந்த உலகத்தில் இயேசு கிறிஸ்து உண்மையாக பூரண மனிதனாக வாழவில்லை என்பதுதான் காட்சிவாதம்.
என் கருத்தைச் சொல்லட்டுமா? இயேசு மனிதனாகக் காட்சிமட்டுமே தந்திருந்தால் அவர் உலகத்தின் பாவங்களுக்காக மரிக்க முடியாது; அவருக்கு இரத்தம் இல்லையென்றால் மனுக்குலத்தின் இரட்சிப்புக்காக அவர் இரத்தம் சிந்த முடியாது. மனுக்குலத்தின் இரட்சிப்புக்காக அவர் தேவனாக மட்டும் இருந்தால் போதாது, அவர் மெய்யான மனிதனாகவும் இருக்க வேண்டும். வெறுமனே காட்சியளிக்கும் கிறிஸ்துவால் வெறும் காட்சியாகத் தோன்றும் இரட்சிப்பை மட்டுமே அளிக்க முடியும் என்று அன்றே சபைப் பிதாக்கள் கூறினார்கள்.
இயேசு கிறிஸ்துவின் இயல்பைப்பற்றிய காட்சிவாதம் என்ற வேதப்புரட்டு அவருடைய தெய்வீகத்தை மறுத்து எழவில்லை என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. காட்சிவாதம் இயேசுவின் மனுஷீகத்தை மறுத்தது, தெய்வீகத்தை மறுக்கவில்லை. இயேசு கிறிஸ்து தேவன் என்று விசுவாசிப்பதில் ஆரம்பகாலக் கிறிஸ்தவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருந்ததுபோல் தெரியவில்லை; அவர் ஒரு பூரணமான மனிதர் என்று விசுவாசிப்பதில்தான் அவர்களுக்குச் சிக்கல் எழுந்தது. இதுதான் Docetism என்ற காட்சிவாதம்.
அப்பொல்லினரியன் என்பவர் லவோதிக்கேயா சபையில் ஆயராக இருந்தவர். “இயேசு மனித இயல்புடன் பிறக்கவில்லை; அவர் மனித உருவத்தில் வந்தார்,” என்று இவர் போதித்தார். இவருடைய ஆதரவாளர்களாகிய அப்பொல்லினரியர்கள், “இயேசு சம அளவில் மனுஷீகமும் தெய்வீகமும் உடையவர் இல்லை; அவர் ஒரே இயல்புடைய ஒரு நபர்; அவருக்கு ஒரேவொரு இயல்பு மட்டுமே உண்டு; அவருடைய மனித இயல்பு அவருடைய தெய்வீக இயல்புக்குள் முழுவதும் மறைந்துவிட்டது, ஈர்த்துக்கொள்ளப்பட்டது, உட்கிரகித்துக்கொள்ளப்பட்டது; இயேசுவின் மனித இயல்பின் இரண்டு கூறுகளாகிய உடலையும், ஆத்துமாவையும் அவருடைய தெய்வீக இயல்பு மேற்கொண்டு ஆதிக்கம் செலுத்தியது,” என்று போதித்தார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசுவின் மனித மாம்சத்தில் ஒரு தெய்வீக மனம் வாழ்ந்ததாகவும், அவருக்கு மனித மனமும் மனித ஆவியும் இல்லை என்றும், அவருடைய தெய்வீகமே அவருடைய மனுஷீகத்தை எல்லா மட்டங்களிலும் கட்டுப்படுத்தியது அல்லது பரிசுத்தமாக்கியது என்றும் நினைத்தார்கள், வாதித்தார்கள். இயேசு கிறிஸ்து முழுமையற்ற மனுஷீகத்தையுடையவர் என்பது இவர்களுடைய வாதம், பிடிவாதம்.
அடிப்படையில் இயேசு உண்மையான மனிதர் இல்லை என்று அப்பொல்லினரியர்கள் நம்பினார்கள். ஆனால் இயேசு, பாவம் ஒன்றைத்தவிர, மீதி எல்லாவற்றிலும் பூரணமான மனித இயல்புடையவர் என்று வேதாகமம் திட்டவட்டமாகப் போதிக்கிறது.
ஒன்றைக் கவனியுங்கள். காட்சிவாதிகளைப்போல், அப்பொல்லினரியர்களுக்கும் இயேசு தேவன் என்று விசுவாசிப்பதில், அதாவது இயேசுவின் தெய்வீகத்தை விசுவாசிப்பதில், எந்தப் பிரச்சினையும் இல்லை; இயேசுவின் மனுஷீகத்தை விசுவாசிப்பதில்தான் அவர்களுக்குச் சிக்கல் எழுந்தது.
தேவன் பல நிலைகளில், பல விதங்களில், பல முறைகளில், தோன்றினார் என்பதும், அவரில் மூன்று ஆட்கள் இல்லை என்பதும் இவர்களுடைய வாதம்.
மோடலிசம் சில நேரங்களில் Sabellianism சபெல்லியனிசம் என்றும் அழைக்கப்படுகிறது. இதைக் கொஞ்சம் எளிமைப்படுத்தி சுருங்கச் சொல்வதானால் இது “Jesus only” doctrine, “இயேசு மட்டுமே” என்ற உபதேசம். நிலைவாதம் அடிப்படையில் ஒரேவொரு தேவன் இருக்கிறார் என்று கூறுகிறது; கிறிஸ்தவர்களும் யூதர்களும் ஒரே தேவனை விசுவாசிக்கிறார்கள். ஆனால் தேவன் மூன்று நபர்களாக இருக்கிறார் என்று கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கிறார்கள். இயேசு மட்டுமே என்று சொல்கிற நிலைவாதிகள், “இல்லை; தேவன் மூன்று நபர்களாக இல்லை; அவர் தம்மை மூன்று நிலைகளில் வெளிப்படுத்துகிறார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற பெயர்கள் அந்தந்த நிலைகளில் அவர் எடுத்துக்கொண்ட பெயர். ஒரே நபர் மகனாகவும், தந்தையாகவும், கணவனாகவும் இருப்பதுபோல தேவன் என்ற ஒரே நபர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று பாத்திரங்களாக இருக்கிறார். அவருடைய நிலைக்கு ஏற்ப பெயர் மாறுகிறது. எனவே தேவன் குமாரனாக இருக்கும்போது அவர் பிதாவாக இல்லை; திரித்துவத்தின் மூன்று நபர்களுக்கும் இடையே நிரந்தர வேறுபாடு இல்லை; அப்படி இருந்தால் மூன்று தெய்வங்கள் இருக்க நேரிடும்,” என்று இவர்கள் கூறினார்கள், கூறுகிறார்கள். ஏனென்றால் இயேசு மட்டுமே என்ற உபதேசம் இன்றுவரை தொடர்கிறது. இதுதான் நிலைவாதம், மோடலிசம்.
உரோமில் இருந்த சில சபைத் தலைவர்கள்கூட இரண்டாம் நூற்றாண்டின் இறுதிவரை இந்தக் கருத்தை வைத்திருந்தார்கள்.
இவர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்த யூதர்கள், யூதக் கிறிஸ்தவர்கள். இயேசு மோசேயின் சட்டங்களைப் பிழையறப் பின்பற்றிய நீதியுள்ள ஒரு மனிதர் என்றும், மோசேயைப்போல் அவர் ஒரு பெரிய தீக்கதரிசி என்றும் எபியோனியர்கள் கூறினார்கள். ஆரம்பகாலச் சபை ஏற்றுக்கொண்ட இயேசுவின் தெய்வீகம், கன்னிப் பிறப்பு, பதிலீடான பாவப்பரிகாரம் போன்ற கிறிஸ்தவத்தின் பல அடிப்படையான விசுவாசங்களை எபியோனியர்கள் முற்றிலும் நிராகரித்தார்கள். இயேசு யோசேப்பு, மரியாள் ஆகிய இருவருடைய இரத்தசம்பந்தமான மகன் என்றும், தீர்க்கதரிசனம் உரைத்தபடி மிருகங்களின் பலிகளை ஒழிக்க வந்தார், அதற்காக ஒரு தியாகியாக மரித்தார் என்றும் இவர்கள் கூறினார்கள். இவர்கள் இயேசுவைத் தேவனாக ஏற்கவில்லை.
ஆரம்பக் காலச் சபை வரலாற்றில் இயேசுவின் தெய்வீகத்தையும் மனுஷீகத்தையும்பற்றிய சர்ச்சைகள் முளைத்துக்கொண்டேயிருந்தன. தத்தெடுப்புவாதம் அதில் ஒன்று. இயேசு எல்லா வகையிலும் ஒரு சாதாரண மனிதர் என்றும், அவருடைய ஞானஸ்நானத்தில் அல்லது உயிர்த்தெழுதலில் அவர் ஒரு விசேஷமான விதத்தில் தேவனால் தத்தெடுக்கப்பட்டார் என்றும் இவர்கள் போதித்தார்கள். வார்த்தையாகிய தேவன் மாம்சத்தில் வந்தார் என்பதற்குப் பதிலாக ஒரு மனிதன் தேவனானார் என்று இவர்கள் போதித்தார்கள். இயேசு விசேஷமானவர் என்று தத்தெடுப்புவாதிகள் நம்பினார்கள்; ஆனால் அவர் மரியாளின் கருவில் கருத்தரித்தபோது அல்ல; மாறாக, பிறந்தபிறகு அல்லது ஞானஸ்நானம் பெற்றபோது, தேவன் மனிதனாகிய இயேசுவைத் தம் விசேஷமான மகனாகத் தத்தெடுத்து, அவருக்குக் கூடுதல் தெய்வீக வல்லமை வழங்கினார் என்று கூறினார்கள். இப்படி, இயேசு தேவன் இல்லை, மாறாக அவர் ஒரு விசேஷமான வேலைக்காகப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதர் என்பதே அவர்களுடைய வாதம். இயேசு யார் என்று வேதாகமம் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கூறுவதை இவர்கள் சாமர்த்தியமாகக் குறைக்கவும் மறைக்கவும் முயன்றார்கள்.
ஏரியஸ் என்பவர் 250-336இல் அலெக்சாந்திரியாவில் சபைத் தலைவராக இருந்தவர். பின்னாட்களில் ஏரியவாதத்தைப்பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம். இப்போது சுருக்கமாகப் பார்ப்போம். “இயேசு தேவனுடைய மகன், அவர் வார்த்தை, அவர் லோகோஸ், அவர் காலங்களுக்குமுன்பே தேவனால் படைக்கப்பட்டார், அவரே தேவனால் முதலாவது படைக்கப்பட்டவர், அவர் தேவன் இல்லை, அவர் நித்தியமானவர் இல்லை, அவர் தேவனைப்போல் பரிபூரணமானவர் இல்லை; முதலாவது தேவன் இயேசுவைப் படைத்தார். அதன்பின் அவர்மூலம் பிற அனைத்தையும் படைத்தார். இயேசு பிதாவுக்குக் கீழானவர், அவருக்கு ஆரம்பமும் முடிவும் உண்டு,” என்பதுதான் மிகப் பிரபலமான ஏரியவாதம் என்ற வேதப்புரட்டின் சாராம்சம்.
ஆரம்பகாலக் கிறிஸ்தவர்களிடையே எழுந்த மிக முக்கியமான விவாதங்களில் ஒன்று கிறிஸ்துவின் தெய்வீகத்தைப்பற்றியது. “இயேசு மாம்சத்தில் வந்த மெய்யான தேவனா அல்லது தேவனால் படைக்கப்பட்ட ஒருவரா? இயேசு தேவனா இல்லையா?” என்ற சச்சரவு இருந்துகொண்டடேயிருந்தது.
ஏரியஸ் தேவனுடைய குமாரனாகிய இயேசுவினுடைய தெய்வீகத்தை மறுத்தார்; இயேசு தேவனால் படைக்கப்பட்ட படைப்பின் முதல் செயல் என்றும், இயேசுவின் இயல்பு பிதாவாகிய தேவனுடைய இயல்பு போன்றதல்ல என்றும் அவர் கூறினார். “இயேசு சில தெய்வீகப் பண்புகளுடன் படைக்கப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட நபர்; அவர் நித்தியமானவர் அல்ல, அவர் தெய்வீகமானவர் அல்ல,” என்று அவர் கூறினார்.
ஏரியவாதம் சபைக்குப் பெரிய ஆபத்தாக இருந்தது. இதைப்பற்றி பின்னாட்களில் நாம் விரிவாகப் பேசுவோம். ஏனென்றால் கிறிஸ்தவப் பேரரசு என்ற தலைப்பின்கீழ் நாம் பார்க்கப்போகும் காலகட்டத்தில் ஏரியவாதத்தின் பிரச்சினை தீர்க்கப்பட்டது.
இயேசுவுக்கு இரண்டு இயல்புகள் இருந்திருக்க முடியாது என்றும், கடலில் விழும் ஒரேவொரு திராட்சைத் துளி கடலில் கரைந்து மறைந்துவிடுவதைப்போல் இயேசுவின் தெய்வீகம் அவருடைய மனுஷீகத்தைக் கரைத்துவிடுகிறது என்றும் இவர்கள் போதித்தார்கள். இது இதற்குமுன் தோன்றிய டொசெடிசிசம் என்ற காட்சிவாதத்தையும், அப்பொல்லினரியனிசத்தையும்போல் தோன்றினாலும், இது அதன் வரலாற்று சூழலில் அவைகளிலிருந்து சற்றே வித்தியாசமானது
இயேசுவுக்கு தெய்வீக இயல்பு என்ற ஒரேவொரு இயல்பு மட்டுமே உண்டு. தெய்வீக இயல்பும், மனுஷீக இயல்பும் இணைந்த ஓர் இயல்பு இருந்திருந்தால் அவருடைய மனுஷீக இயல்பு அவருடைய தெய்வீக இயல்பால் உறிஞ்சப்பட்டிருக்கும் என்பதே இவர்களுடைய வாதம்.
நெஸ்டோரியஸ் என்பவர் மூன்றாம் நூற்றாண்டில் கான்ஸ்டான்டிநோபிலில் வாழ்ந்த ஒரு சபைப்பிதா. இயேசுவின் தாயாகிய மரியாளை ஆராதிக்கும் அளவுக்கு “மரியாள் தேவனைச் சுமந்தவள்” (theotokos) என்ற உபதேசம் அவருடைய காலத்தில் காலூன்றத் தொடங்கியிருந்தது. அதை மறுக்கும் வகையில், சொல்லப்போனால் அதைச் சமன்படுத்தும் வகையில், அவர் இயேசுவில் எப்படி தெய்வீக இயல்பு மனித இயல்பு என்ற இரண்டு இயல்புகள் ஒருசேர உள்ளன என்பதை தன் வார்த்தைகளில் விளக்கினார். அவருடைய எதிரிகளோ அதைச் சற்றுத் திரித்து, “இயேசு ஒரு நபர் அல்ல, அவரில் தேவன் மனிதன் என்ற இரண்டு நபர்கள் இருப்பதாக நெஸ்டோரியஸ் கூறுகிறார்,” என்று அவர்மேல் குற்றம்சாட்டினார்கள். நெஸ்டோரியஸின் சொல்லாடல் சற்று கருகலாக இருக்கலாம். இயேசுவின் நபரைப் பற்றி விளக்க முற்படுகிற எவரும் இப்படிப்பட்ட கருகலான வார்த்தைளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கமுடிவதில்லை. ஆனால் சற்று கவனக்குறைவாக ஒரு வார்த்தையை இப்படியோ அப்படியோ பயன்படுத்திவிட்டால், “கரணம் தப்பினால் மரணம்” என்பதுபோல் அது ஒரு வேதப்புரட்டாகிவிடும் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கை. ஆகவே அவருடைய எதிரிகள் அவர்மேல் வைத்தது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுதான்! இறுதியில் நெஸ்டோரியஸ் ஒரு வேதப்புரட்டர் என்று தீர்ப்பிடப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இந்தச் சம்பவம் உபதேசத்தைப் பற்றியது என்பதைவிட அரசியலைப் பற்றியது என்று கணிப்பதுதான் பொருத்தமாயிருக்கும். சபை வரலாற்றில் தொன்றுதொட்டு தேவபக்தியின் வேடத்தில் அரசியலுமிருக்கிறது என்பது பரிதாபமாகவும், நமக்கு எச்சரிக்கையாகவும் இருக்கிறது. கிழக்கத்திய சபைகள் நெஸ்டோரியனைக் கண்டனம்பண்ணாததால், அவைகளை நெஸ்டோரிய சபைகள் என்று அழைக்கத்தொடங்கினார்கள்.
“இயேசு கிறிஸ்து முழுமையான தெய்வீகம், முழுமையான மனுஷீகம் ஆகிய இரண்டு தன்மைகளைக்கொண்ட ஒரு நபர்,” என்பதே இயேசுவின் தன்மையைப்பற்றிய வேதாகமத்தின் அடிப்படை விசுவாசம். அவருடைய தன்மையை விவரிக்க பின்னாட்களில் உருவான ஒரு விசுவாச அறிக்கையை மேற்கோள்காட்டுவதானால், “இந்த இரண்டு தன்மைகளும் எந்தக் குழப்பமோ, எந்த மாற்றமோ, எந்தப் பிரிவினையோ, எந்தப் பிரிவோ இல்லாமால் இயேசு கிறிஸ்து என்ற நபரில் உள்ளன” என்று சொல்லலாம்.
ஆரம்பகாலச் சபை இயேசு கிறிஸ்துவைப்பற்றிய பல தவறான புரிதல்களையும், கிறிஸ்தவத்துக்கு எதிரான கருத்துக்களையும், வேதப்புரட்டுக்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது என்று இப்போது நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.
சிந்தனைக்கு ஒரு கேள்வி: ஒருவர் ஒரு வேதப்புரட்டை விசுவாசித்தால், அல்லது ஒரு வேதப்புரட்டை விசுவாசிக்கிற ஒரு கூட்டத்தோடு ஐக்கியமாயிருந்தால், அல்லது ஒரு வேதப்புரட்டைப் போதிக்கின்ற ஒரு தலைவரைப் பின்பற்றினால், அவர் இரட்சிக்கப்பட்டவரா அல்லது இரட்சிக்கப்படமுடியுமா? அவரை நாம் புதிய வானம் புதிய பூமியில் சந்திப்போமா? தேவன் அவரை ஏற்றுக்கொள்வாரா? அங்கீகரிப்பாரா?
இன்று, நாம் வேதாகமத்தின் சத்தியத்தைத் தெளிவாகவும் சரியாகவும் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், விசுவாசிக்கவும், நடைமுறைப்படுத்தவும் நம் சிந்தனை சொல் செயல் ஆகிய அனைத்தையும் செலவிட விரும்புகிறோம். ஆனால் நாம் இறையியலைப் புரிந்துகொள்கிற அளவின்படிதான் இரட்சிக்கப்படுகிறோமா, இரட்சிக்கப்படுவோமா? இவைகள் சவாலான கேள்விகள்! நீங்களே பதிலைத் தேடுமாறு விட்டுவிடுகிறேன்.
காட்சிவாதம், அப்பொல்லினரியவாதம், நிலைவாதம், எபியோனியர்கள், தத்தெடுப்புவாதம், ஏரியவாதம், ஓரியல்புவாதம், நெஸ்டோரியனிசம் எனப் பல வேதப்புரட்டுக்கள் வேதாகமம் வெளிப்படுத்தும் இயேசுவை வழங்காமல், வேறொரு விதமான இயேசுவைப் பிரசங்கித்தன, நம்பின. வேதப்புரட்டர்கள் வேதாகமம் முன்வைக்கும் உண்மையான இயேசுவை விசுவாசிக்குமாறு மக்களிடம் கூறவோ கோரவோ இல்லை; மாறாக, தாங்கள் கண்டுபிடித்த, உருவாக்கிய, ஒப்பனையான இயேசுவை மக்கள் விசுவாசிக்குமாறு கூறினார்கள், கோரினார்கள்.
வேதாகமம் முன்வைக்கும் இயேசுவால் மாத்திரமே, உண்மையான இயேசுவால் மாத்திரமே, இரட்சிப்பைக் கொடுக்க முடியும். ஆனால் இந்த வாதங்களிலோ, வாதிகளின் கூட்டத்திலோ, சிக்கிய சிலர் இயேசு யார் என்பதை ஒருவேளை கொஞ்சம் தவறாகப் புரிந்திருந்தாலும், அவர்கள் உண்மையான இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்திருக்கக்கூடும். இது சாத்தியமே!
எனவே, எல்லா வாதங்களையும், எல்லா வாதிகளையும் ஒரே அளவுகோலால் அளக்கமுடியாது, அளக்கக் கூடாது. சில வாதங்கள் பிழையானவைகள், சில வாதங்கள் ஆபத்தானவைகள், வேறு சில வாதங்கள் அழிவுக்கேதுவானவைகள். என் கணிப்பின்படி நெஸ்டோரியவாதம் பிழையானது, ஆனால் ஏரியவாதமோ அழிவுக்கேதுவானது. ஏரியவாதம் வேதகாமத்துக்கு முற்றிலும் முரணான வேறொரு இயேசுவை முன்வைக்கிறது. நெஸ்டோரியவாதம் மோசம்செய்யலாம், ஆனால் ஏரியவாதம் நிச்சயமாக நாசம்செய்யும்.
எனவே மீண்டும் கூறுகிறேன்; இந்த விவகாரங்கள் சிக்கலானவை, குழப்பமானவை. ஆனால் இந்தச் சிக்கல்களும், குழப்பங்களும் நாம் சத்தியத்தையும் வேதாகமத்தின் இயேசுவையும் ஆசையாய்த் தேடவும் நாடவும் நம்மை ஊக்குவிக்கின்றன; நம் கிறிஸ்தவ விசுவாசத்தின் சத்தியத்தை வேதாகமம் வரையறுக்கட்டும்.
பெலாஜியன் என்ற ஒரு துறவி இருந்தார். இவருடைய வாதம் என்ன? “மனிதன் ஆதாமிடமிருந்து பாவத்தைப் பெறவில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு புது ஆத்துமாவாகவே படைக்கப்படுகிறான். எனவே அவனுக்கும் ஆதாமின் பாவத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மனிதன் ஜென்ம பாவம் உடையவன் இல்லை; அவன் கர்மப் பாவம் மட்டுமே உடையவன்,” என்று இவர் போதித்தார். இதைக் கடுமையாக எதிர்த்தவர் புகழ்பெற்ற இறையியலாளர் அகஸ்டின். அகஸ்டின் வாழ்ந்த காலம் கி.பி.354-430.
இன்னும் இரண்டு வேதப்புரட்டுகளைப் பார்ப்போம். ஒன்று Gnosticism என்ற ஞானவாதம், இரண்டு மார்சியன் என்பவர் உருவாக்கிய மார்சியவாதம்.
ஆரம்பகாலச் சபைக்கு ஞானவாதம் பெரிய சவாலாக இருந்தது. ஞானவாதம் சபைக்கு உள்ளேயும் இருந்தது, வெளியேயும் இருந்தது. அதாவது கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் ஞானவாதிகளாக இருந்தார்கள்; தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களும் ஞானவாதிகளாக இருந்தார்கள்; அவர்கள் ஞானத்தையும் கிறிஸ்தவத்தையும் சேர்த்துக் குழப்பினார்கள். எனவே ஞானவாதம் வெளியேயிருந்தும் உள்ளேயிருந்தும் கிறிஸ்தவத்துக்கு ஒரு பெரிய அச்சுச்சுறுத்தலாக இருந்தது.
ஞானவாதம் gnosis என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. இதற்கு “அறிவு” என்று பொருள். என்னால் இயன்றவரை நான் ஞானவாதத்தை விளக்க முற்படுகிறேன். ஒன்று, உண்மையான புரிதல் உள்ளவர்களிடம் மட்டுமே ஒரு வகையான ஆழ்நிலை அறிவு இருக்கும் என்றும், இந்த அறிவு தங்களிடம் இருப்பதாகவும், இதுவே இரட்சிப்புக்கான இரகசியத் திறவுகோல் என்றும் இவர்கள் சொன்னார்கள். இரண்டு, பருப்பொருளான வஸ்துக்கள் அனைத்தும் தீங்கானவை; அவை மெய்யல்ல, அவை மாயை என்று இவர்கள் சொன்னார்கள். புத்தகம், நாற்காலி, உடல் போன்றவை பருப்பொருளான வஸ்துக்கள். எனவே அவை தீங்கானவை என்பது அவர்களுடைய வாதம்.
யூத மதத்தில் பரிசேயர், சதுசேயர், எசெனேயர் என பிரிவுகள் இருந்ததுபோலவும், கிறிஸ்தவத்திலும் பற்பல பிரிவுகள் இருப்பதுபோலவும், ஞானவாதத்திலும் பல பிரிவுகள், பல வித்தியாசமான குழுக்கள், இருந்தன. நான் ஞானவாதத்தைப்பற்றி பொதுவான முறையில் பேசுகிறேன்.
சரி, தொடர்வோம்.
மனிதர்கள் நித்திய ஆவிகள் என்றும், அவை மனிதனுடைய பருப்பொருளான உடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர்கள் நம்பினார்கள். அவர்களுடைய கூற்றின்படி, பருப்பொருளான உடல் மனித ஆவியின் சிறைச்சாலை; இந்த உடல் தீமையானது; எனவே, அது நம்பத்தக்கது இல்லை. அது மட்டுமல்ல, பருப்பொருளான உலகத்திலிருந்து தப்பித்து, இறுதியில் பருப்பொருட்களால் பாதிக்கப்படாத தூய ஆவியாக வாழ்வதுதான் இரட்சிப்பு என்பது அவர்களுடைய வாதம். ஆதியில் அனைத்து மெய்ப்பொருட்களும் ஆவிக்குரியவைகளாகவே இருந்தன. பருப்பொருளான உலகத்தைப் படைக்கும் எண்ணம் தேவனுக்கு இருக்கவில்லை. அவர் ஓர் ஆவிக்குரிய உலகத்தைத்தான் படைக்க விரும்பினார். எனவே ஆவிக்குரிய உயிரிகள் உருவாக்கப்பட்டார்கள் என்பது ஞானவாதம். இந்த ஆவிக்குரிய உயிரிகள் எப்படி உருவாக்கப்பட்டார்கள் என்பதில் ஞானவாதிகளுக்கிடையே பெரிய குழப்பம் உண்டு. தேவன் 360 ஆவிக்குரியவர்களை உருவாக்கினார் என்று சில ஞானவாதிகள் சொன்னார்கள். இவ்வாறு உருவாக்கப்பட்ட ஆவிக்குரியவர்களை eons என்றழைத்தார்கள். உருவாக்கப்பட்ட ஆவிக்குரிய ஒரு இயான் தேவனிடமிருந்து விலகி, வீழ்ந்து, தவறு செய்தான். இப்படி வீழ்ந்த, தவறிய இயான் இந்தப் பருப்பொருளான உலகத்தைப் படைத்தான். எனவே, உள்ளார்ந்தவிதத்தில் இந்த உலகம் தீமையானது, தீங்கானது, தாழ்வானது.
இந்த ஞானவாதத்தின்படி மனிதர்களுக்கு இரட்சிப்பு, விடுதலை, உயர்ந்த சிறப்பான அறிவில்தான் இருக்கிறது. இந்த அறிவு ஓர் ஆவிக்குரிய தூதரிடமிருந்து வருகிறது. இந்தத் தூதர் இந்த உலகத்துக்கு வந்து, நம்மை நம் கனவிலிருந்து தட்டி எழுப்ப வேண்டும்.
இந்தத் தூதர் இயேசு கிறிஸ்து என்று கிறிஸ்தவ ஞானவாதிகள் சொன்னார்கள். நான் தெரிந்தே கிறிஸ்தவ ஞானவாதிகள் என்ற பதத்தைப் பயன்படுத்துகிறேன். ஏனென்றால், ஒருவன் கிறிஸ்தவனாக இருந்துகொண்டே தேவனை அறிவது சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்றழைத்த சிலர் தேவனை அறிவது சாத்தியமில்லை என்றும் சொன்னார்கள் (அறியொணாவாதிகள்). இவர்கள் இந்தத் தூதர் இயேசு என்றும், அவர் நம் பரம ஆரம்பத்தை நமக்கு நினைப்பூட்டி நாம் இரட்சிப்படைய நமக்குத் தேவையான இரகசிய அறிவை வழங்கப் பூமிக்கு வந்தார் என்றும், இல்லையென்றால் ஆவிக்குரிய மண்டலத்துக்கு நம்மால் திரும்பிச்செல்ல முடியாது என்றும் சொன்னார்கள்.
“இது ஒரு பெரிய தத்துவம்போல் தெரிகிறதே! இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?” என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். நடைமுறை வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஞானவாதிகள் உறுதியான கருத்துடையவர்கள். குறிப்பாக இரண்டு முக்கியமான ஞானவாதங்கள் இருந்தன. இந்த உடல் நம் ஆவியைச் சிறைப்படுத்தியிருக்கும் ஒரு சிறைச்சாலை; எனவே உடலையும் அதன் இச்சைகளையும் அடக்கிக் கட்டுப்படுத்தி, உடல் ஆவியின்மேல் செலுத்தும் அதிகாரத்தைப் பலவீனப்படுத்துவதே மனிதனின் வேலை என்று பெரும்பாலான ஞானவாதிகள் சொன்னார்கள்.
ஆனால், வேறு சில ஞானவாதிகள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஆவி இயல்பாகவே நல்லது; அதை அழிக்கமுடியாது. உடல் இயல்பாகவே தீமையானது. எனவே தன் தீமைகளைச் செய்வதற்கும், இச்சைகளை நிறைவேற்றுவதற்கும் உடலை அதன் போக்கில் விட்டுவிடலாம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உடல் ஆவியைவிடத் தாழ்வானது, கீழானது. எனவே உடல் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், பாவம் செய்தாலும் ஒரு பொருட்டல்ல. ஆவி எப்போதும் நன்றாக இருக்கும் என்று நம்பினார்கள்.
இவ்வாறு, ஞானவாதத்தில் இரண்டு அற்றங்களில் வாழ்ந்த இரண்டு விசித்திரமான குழுக்கள் இருந்தன. ஓர் அற்றத்தில், சில ஞானவாதிகள் தங்களை மறுத்து, ஒறுத்து, வெறுத்து தீவிரமான துறவிகளைப்போல் வாழ்ந்தார்கள். இன்னோர் அற்றத்தில் அடுத்த சாரார், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதுபோல் புசித்துக் குடித்து வெறித்தார்கள். இவர்கள் தங்கள் உடல் இச்சித்த எதையும் மறுக்கவில்லை. இவர்கள் தங்கள் சிந்தனை, சொல், செயல் எதையும் பொருட்படுத்தாத சுதந்தரவாதிகள். “தேவனுக்கு ஆவி மட்டும்தான் முக்கியம். எனவே வேறொன்றைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்ல,” என்பது இவர்களுடைய வாதம்.
ஞானவாதம் இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்திற்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தலாக இருந்தது.
இது மார்சியன் என்பவர் உருவாக்கிய வாதம். மார்சியனின் அப்பா இன்றைய துருக்கியில் கருங்கடலையொட்டிய பொந்துசிலுள்ள செனோப்பின் ஆயராக இருந்தார். மார்சியன் சிறு வயதிலிருந்தே கிறிஸ்தவத்தை அறிந்திருந்தார். ஒருவன் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தால் அவன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கிறிஸ்தவத்தை அறிந்துகொள்வான். ஆனால் மார்சியன் யூதமதத்தையும் பருப்பொருளான உலகத்தையும் ஆழமாக வெறுத்தார். அவர் பருப்பொருளான உலகத்தை வெறுப்பதற்குக் காரணம் ஞானவாதம் ஏற்படுத்திய பாதிப்பு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அவர் கி.பி 144இல் உரோமுக்குச் சென்றார். அங்கு அவர் தன் கருத்துக்களைப் பலரிடம் பகிர்ந்துகொண்டார். அவருடைய கருத்துக்களைக் கேட்டு பலர் அவரைப் பின்பற்றினார்கள். அவர் தன் சீடர்களைத் திரட்டி அவர்களுக்குப் போதிக்க ஆரம்பித்தார். உலகம் தீமையானது என்று மார்சியன் நம்பியதால், தீமையான உலகத்தைப் படைத்தவர் தீயவராக அல்லது அறியாமையுள்ளவராகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
இந்த உலகத்தைப் படைப்பதற்குமுன் இயான் எனும் ஆவிக்குரிய பிறவிகள் இருந்ததாக ஞானவாதிகள் சொன்னார்கள், நம்பினார்கள். மார்சியன் அப்படிச் சொல்லாமல், இயேசு பிதா என்றழைத்த தேவனும், பழைய ஏற்பாட்டுத் தேவனாகிய யெஹோவாவும் ஒரே தேவனல்ல, அவர்கள் இருவரும் வித்தியாசமானவர்கள் என்று கூறினார். பழைய ஏற்பாட்டு யெஹோவாதான் உலகத்தை உண்டாக்கினார்; ஆனால் இன்னொரு தேவன், அதாவது இயேசுவின் பிதாவாகிய தேவன், இருக்கிறார். இவர் பருப்பொருளான உலகத்தின் காரியங்களை மீட்டு, ஆவிக்குரிய உலகமாக உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் என்று மார்சியன் கூறினார். எனவே அவருடைய கூற்றின்படி யெஹோவா தேவன் அறியாமையுள்ளவராக இருக்கலாம் அல்லது தீயவராக இருக்கலாம். ஆனால் அவர்தான் இந்த உலகத்தை உருவாக்கி, மனிதர்களை அதில் வைத்தார். எனவே எபிரேய வேதாகமத்தின் பழைய ஏற்பாடு தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டதாக இருந்தாலும், அந்தத் தேவன் ஒரு மோசமான தேவன் என்று மார்சியன் நம்பினார். அவர் யெஹோவா தேவன்தானேதவிர, பிதாவாகிய மிக உயர்ந்த தேவன் இல்லை என்பது அவருடைய வாதம். யெஹோவா ஒரு கவனக்குறைவான, அநியாயமான தேவன், என்றும் மார்சியன் நம்பினார். ஏனென்றால் யெஹோவா ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் தம் மக்களாகத் தெரிந்தெடுத்தபின், உலகத்தின் பிற மக்களைப்பற்றி கவலைப்படாமல் அவர்களைக் கைவிட்டுவிட்டார். இது அநியாயம். மேலும் பழைய ஏற்பாட்டுத் தேவன் பழிவாங்கும் தேவன், பாதகமான தீர்ப்பளிக்கும் தேவன், மக்களைத் தண்டிக்கும் தேவன், என்றும் அவர் கூறினார். எனவே பழைய ஏற்பாட்டின் யெஹோவா தேவன் புதிய ஏற்பாட்டின் பிதாவாகிய தேவனிலிருந்து வித்தியாசமானவர்; புதிய ஏற்பாட்டின் பிதாவாகிய தேவன் அன்பின் தேவன் என்று அவர் கூறினார். அந்தத் தேவனே மிக உயர்ந்த தேவன். ஏனென்றால் அன்பின் தேவனே மிக உயர்ந்தவர். மேலும் வரவிருக்கும் உலகில் எந்தத் தீர்ப்பும் இருக்காது.
எனவே, மார்சியனும், அவருடைய சீடர்களும் எபிரேய வேத எழுத்துக்களாகிய பழைய ஏற்பாட்டை ஒதுக்கித்தள்ளினார்கள். பழைய ஏற்பாடு ஒரு சிறிய தேவனின் வார்த்தை; ஆகையால் அதை நாம் ஏன் படிக்க வேண்டும் அல்லது நம்ப வேண்டும் என்று அவர்கள் கேட்டார்கள். எனவே, “கிறிஸ்தவர்களாகிய நாம் எந்தெந்தப் புத்தகங்களை வேதமாகக் கருத வேண்டும் என்பதை நான் உங்களுக்குச் சொல்வேன்,” என்றார். அவர் பழைய ஏற்பாடு முழுவதையும் தூக்கி எறிந்ததோடு நிற்காமல், சில புதிய ஏற்பாட்டு புத்தகங்களையும் வேண்டாமென்று ஒதுக்கித்தள்ளினார். எடுத்துக்காட்டாக, பவுலின் கடிதங்களிலும், லூக்காவின் நற்செய்தியிலும் இருந்த பழைய ஏற்பாட்டு மேற்கோள்களையும் “இவைகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை, எனவே, இவைகளை நீக்கிவிட வேண்டும்,” என்று சொல்லி நீக்கிவிட்டார்.
மார்சியனின் சபைகள் நீண்டகாலமாக வெற்றிநடைபோட்டன என்றுதான் சொல்லவேண்டும். உண்மையில் சில நூற்றாண்டுகளாக நீடித்தது என்றுகூடச் சொல்லலாம். இன்று நாம் 27 புத்தகங்களைப் புதிய ஏற்பாடு என்று அழைப்பதுபோல், மார்சியன் முதன்முதலாக சில புத்தகங்களைத் தன் விருப்பம்போல் ஒன்றுசேர்த்து ஒரு புதிய ஏற்பாட்டை ஏற்படுத்த முயற்சிசெய்தார்.
தொடக்கத்தில் கிறிஸ்தவர்களிடம் பழைய ஏற்பாடு மட்டும்தான் இருந்தது. அதுதான் வேதாகமம். ஆனால், அதே நேரத்தில், முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலர்கள் எழுதிய அதிகாரபூர்வமான எழுத்துக்களை வேதவாக்கியங்களுக்கு இணையாக மதித்தார்கள். ஆயினும் இன்று நம்மிடம் 27 புத்தகங்கள் அடங்கிய புதிய ஏற்பாடு இருப்பதுபோல் அன்று அவர்களிடம் இருக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு பட்டியலை அவர்கள் வெளிப்டையாகத் தயாரிக்கவில்லை. மார்சியனின் தவறான புத்தகங்கள் அடங்கிய பட்டியல் வந்தபிறகுதான் கிறிஸ்தவர்கள் தங்களுடைய புத்தகங்கள் அடங்கிய பட்டியலை உருவாக்கினார்கள். மார்சியன், “பழைய ஏற்பாடு தவறு, அது வேண்டாம். யோவான் நற்செய்தி வேண்டாம், மத்தேயு நற்செய்தி வேண்டாம்,. எபிரேயர் நிருபம் வேண்டாம். லூக்கா நற்செய்தியிலுள்ள பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் வேண்டாம்,” என்று சொன்னபிறகுதான் சபை விழித்துக்கொண்டது. “ஆஹா! இது தவறு. இது தொடர விடக்கூடாது. நாம் உடனடியாக இதற்கு முடிவுகட்டியாக வேண்டும்,” என்று முடிவுசெய்து புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களின் பட்டியலைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள்.
வேதப்புரட்டர்கள் தங்களை அறியாமலே சபைக்கு உதவினார்கள் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அன்று விசுவாசிகள் இயல்பாகச் சத்தியம் என்று விசுவாசித்தவைகள் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படாமால் இருந்த நேரத்தில், தாக்குதலுக்கு உள்ளானபோதுதான், அவைகளை வரையறுக்க வேண்டும், வரைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. வேதப்புரட்டுகள் மறைமுகமாக இதற்கு உதவிசெய்தன என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் வேதப்புரட்டுக்கள் விசுவாச அறிக்கையை வரையறுக்க சபையை உந்தியது. எனவே இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், கிறிஸ்தவர்கள் இதுபோன்ற வேதப்புரட்டுக்களுக்கு மிக நேர்த்தியாகப் பதிலளித்தார்கள். இதன் விளைவாகத்தான் அதிகாரபூர்வமான புதிய ஏற்பாடு உருவானது. சபை மார்சியனைக் கண்டித்தது. அவருடைய பட்டியலைத் தள்ளியது.
புதிய ஏற்பாட்டு நூல்களாக எவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவாகத் தீர்மானிக்கப்படாமல் இருந்தபோது, கிறிஸ்தவ ஞானவாதிகள் தங்களுடைய சொந்த நூல்களையும் அதில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்கள். இதை எப்படித் தீர்மானிப்பது என்பது ஒரு பிரச்சனையாக இருந்தது. மெய்யான வேத நூல்களை நிராகரிக்க முயன்ற மார்ச்சியனுக்கு எதிராகவும் சபை போராட வேண்டியிருந்தது. ஒரு புத்தகம் தேவனுடைய வார்த்தையா என்பதைப் பரிசோதிக்க அவர்கள் மூன்று முக்கியமான உரைகற்களைப் பயன்படுத்தினார்கள்.
சில காலத்திற்குப்பின்பு தெர்த்துல்லியன் இதன் அடிப்படையில் புதிய ஏற்பாட்டைத் தொகுத்து அது பழைய ஏற்பாட்டிற்குச் சமமானது என்று அறிவித்தார். நான்காம் நூற்றாண்டின் இறுதியில் (கி.பி. 397இல்) எந்தெந்த நூல்கள் புதிய ஏற்பாட்டில் இருக்க வேண்டும் என்ற முடிவான தீர்மானத்திற்கு சபையால் வர முடிந்தது. கி.பி. 367இல் கிழக்கில் அலெக்சாந்திரியாவில் இருந்த சபையும், கி.பி.397ல் மேற்கில் கார்த்தேஜில் இருந்த சபையும் புதிய ஏற்பாட்டு நூல்கள் எவை என்ற முடிவான தீர்மானத்திற்கு வந்தன.
சரி, இப்போது நாம் சில வேதப்புரட்டர்களைப் பார்ப்போம். ஒரு சிலரை மட்டும் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இவர்களைப்பற்றி நான் விவரமாகப் பேசப்போவதில்லை. தேவைப்பட்டால் நீங்கள் கொஞ்சம் தேடிப்பாருங்கள். Heresy என்பதை வேதப்புரட்டு என்றும், heretics என்பதை வேதப்புரட்டர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். எளிமையாகச் சொல்வதானால் பொய்ய்ப்போதகர்கள், வேதத்தைத் திரித்தவர்கள், வேதாகமத்துக்கு முரணானவைகளை உபதேசித்தவர்கள், கூட்டியவர்கள், குறைத்தவர்கள்.
இவர் ஒரு சிறந்த இறையியலாளர். இவர் மிகவும் மதிப்புமிக்க கல்வி மையமாகத் திகழ்ந்த எகிப்திலுள்ள அலெக்சாந்திரியாவில் கற்பித்தார். இவர் கி.பி. 136இல் உரோமுக்குக் குடிபெயர்ந்து, அங்கு கற்பிக்கத் தொடங்கினார். அவர் விரைவில் உரோம சபையின் ஆயர் வேட்பாளராகவும் ஆனார். ஆனால் அவர் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதன் விளைவா அல்லது வேறு காரணமா என்று தெரியவில்லை, அதன்பின் அவர் ஞானவாதத்தின் ஒரு முக்கியமான தலைவராக மாறினார். அதனால் அவர் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருடைய போதனைகள் வேதப்புரட்டு என்று சபை புரிந்துகொண்டது. அவருடைய போதனைகளை சபை அங்கீகரிக்கவில்லை, ஆமோதிக்கவில்லை. அதன்பின் வாலண்டினியஸ் வேதாகமத்தை மறுபரிசீலனை செய்ய முயன்றார்; அதன் விளைவாக அவர் வேதாகமத்துக்குத் தவறான பொருள்விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார். வேதாகமத்தை எழுத்தின்படி எடுத்துக்கொள்ளக் கூடாது; எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கு எந்தப் பொருளும் இல்லை; அது வெறும் உருவகமே. எழுதப்பட்டிருக்கும் வார்த்தைக்கு மறைவான பொருள் உண்டு. அதைத்தான் தேட வேண்டும் என்று அவர் சொன்னார். அவர் கிறிஸ்தவத்துக்கும், புதிர்மதத்துக்கும் (mysticism), யூதமதத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்கி, எல்லாம் ஒன்று என்பதுபோல் போதித்தார். இப்படி, வாலண்டினியஸ் அந்தக் காலத்தில் ஒரு செல்வாக்குமிக்க, ஆனால் ஆபத்தான, இறையியலாளராக இருந்தார்.
இவர் உண்மையில் சபை மிகப் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகப் போராடினார். ஆனால் அவர் அளவுக்கு அதிகமாகப் போராடினார் என்று கூறலாம். கொஞ்சம் பொறுங்கள். புரிந்துகொள்வீர்கள்.
249-251இல் உரோமப் பேரரசனாக ஆட்சி செய்த “டேசியஸ்” கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்தினான். அரசு நியமித்த அதிகாரிகளின் முன்னிலையில் கிறிஸ்தவர்கள் உரோம தெய்வங்களுக்குப் பலி செலுத்தவேண்டும் என்றும், அவ்வாறு செய்ய மறுத்தால் சாவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவன் ஆணை பிறப்பித்தான். அரசனின் ஆணைக்குப் பணிந்து பலி செலுத்த மறுத்த கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டு இரத்தசாட்சிகளாக உயிர்துறந்தார்கள். இதைப்பற்றி சபை வரலாற்றின் நான்காம் பாகத்தில் பார்த்தோம். அப்போது உரோம ஆயராக இருந்த ஃபேபியன் என்பவரும் 250ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் கொல்லப்பட்டார். அரசனுக்கு அஞ்சித் தங்கள் உயிரைக் காப்பதற்காகப் பல கிறிஸ்தவர்கள் பலி செலுத்தினார்கள். அவர்கள் ஒருவேளை இராயனுக்குத் தூபம் காட்டியிருக்கலாம் அல்லது இயேசுவை மறுதலித்திருக்கலாம் அல்லது சபைத் தலைவர்களின் பெயரையும், அவர்களைக்குறித்த முழு விவரங்களையும் சொல்லியிருக்கலாம் அல்லது தங்களிடமிருந்த வேதப்பிரதிகளை எரிக்கக் கொடுத்திருக்கலாம். தங்கள் உயிரைக் காக்கும் எண்ணத்துடன் அரச ஆணைக்குப் பணிந்து உரோம தெய்வங்களுக்குப் பலிசெலுத்தி, கிறிஸ்தவத்தை மறுதலித்த கிறிஸ்தவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து மனந்திரும்பி மீண்டும் சபைக்கு வர விரும்பினார்கள். விசுவாசத்தை மறுதலித்த கிறிஸ்தவர்கள் மீண்டும் சபைக்கு வர விரும்பியபோது அவர்களை என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இது ஒரு சிக்கல்.
அவர்களை மீண்டும் சபையில் ஏற்பது குறித்து இருவிதமான கருத்துகள் எழுந்தன. சில கிறிஸ்தவர்கள் மிதமான போக்கைக் கடைப்பிடித்தார்கள். எனவே பின்வாங்கிப்போனவர்கள் மனந்திரும்பி திரும்பி வந்தால் அவர்களை ஏற்றுக்கொள்ளலாம் என்றார்கள். வேறு சிலர் மிகக் கடுமையையான போக்கைக் கடைப்பிடித்தார்கள். எந்தக் காரணத்திற்காகவும் அவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று அவர்கள் சொன்னார்கள். இறுதியில் சபை ஒரு நடுத்தர நிலையை எடுத்தது.
நோவாஷியனும் அவருடைய கூட்டாளிகளும் விசுவாசத்தை மறுதலித்தவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார்கள். “இயேசுவை மறுதலித்தவர்களைச் சபையில் மீண்டும் சேர்க்கக்கூடாது; விசுவாசத்தை மறுதலித்ததால் அவர்கள் நரகத்திற்குதான் செல்வார்கள்,” என்று அவர் கூறினார். “மனுஷர்முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர்முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்முன்பாக மறுதலிப்பேன்,” என்ற வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு அவர் இவ்வாறு வாதிட்டார். அவர்கள் மனந்திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை என்று வாதித்தார், சாதித்தார்.
“விசுவாசத்தை மறுதலித்தவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து உண்மையாகவே மனந்திரும்பினால் அவர்களை ஏற்றுக்கொள்ளலாம்,” என்று அன்றைய ஆயர் கொர்னேலியஸ் கூறினார். சிப்ரியன் என்னும் இறையியல் அறிஞரும் அவருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார்.
இன்னொரு சிக்கல் எழுந்தது. உரோம மன்னன் “டேசியஸ்” கிறிஸ்தவத்தைக் கடுமையாகத் துன்புறுத்தினால் அது தானாகவே அழிந்துபோகும் என்று நினைத்திருக்கலாம். அந்த எண்ணத்தில் அவன் ஆயர் ஃபேபியனை சிறையிலடைத்துக் கொன்றபின், அவருக்குப்பின் இன்னொரு ஆயர் பதவி ஏற்காமல் தடைசெய்தான். எனவே, அப்போது சபையில் தலைமை இல்லை. உரோமின் புதிய ஆயரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இதுதான் இரண்டாவது சிக்கல்.
இந்தச் சூழ்நிலையில் உரோமின் வடக்கேயிருந்து “கோத்” இனத்தவர்கள் பால்கன் பகுதியில் தாக்குதல் நடத்தினார்கள். அவர்களை எதிர்த்துப் போரிடுவதற்காக டேசியஸ் தன் படைகளோடு அங்கு புறப்பட்டான். அந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு கிறிஸ்தவர்கள் புதிய ஆயரைத் தெரிந்தெடுத்தார்கள். பதினான்கு மாதங்களாக ஆயர் பணியிடம் காலியாக இருந்தது. ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட மிகத் தகுதிவாய்ந்தவராகக் கருதப்பட்ட “மோசே” என்பவர் சபை சித்திரவதை செய்யப்பட்ட காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
அவருடைய மரணத்தைத் தொடர்ந்து, நோவாஷியன்தான் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் கிறிஸ்தவர்கள் கொர்னேலியசை ஆயராகத் தேர்ந்தெடுத்தார்கள். அவரும் தயக்கத்தோடு அப்பதவியை ஏற்றுக்கொண்டார். கொர்னேலியஸ் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த நோவாஷியன் மிகுந்த சினம் கொண்டார். தான் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற குறை ஒருபுறம் இருக்க, கிறிஸ்தவத்தை மறுதலித்தவர்களை மறுபடியும் சபையில் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறிய ஒருவர் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முறையல்ல என்று அவர் எண்ணினார்.
எனவே நோவாஷியன் “நானே ஆயர்” என்று கூறி, தன்னைத்தானே ஆயராக உயர்த்திக்கொண்டர். இவ்வாறு நோவாஷியன் என்னும் உரோம குரு, ஆயர் கொர்னேலியசுக்கு எதிரான எதிர்-ஆயராக மாறினார். சபையில் ஒரு பிளவு ஏற்பட்டது.
கொர்னேலியஸ் ஆயராக மாறியதைத் தொடர்ந்து நோவாஷியன் தன் நிலையை இன்னும் அதிகக் கடுமைப்படுத்தினார். கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை மறுதலிப்பது போன்ற ஒரு கொடிய பாவத்தைக் கட்டிக்கொண்டால் அவர்களுக்குப் பாவ மன்னிப்பே கிடையாது என்றும், அவர்கள் நரகத்துக்குத்தான் செல்வார்கள் என்றும் நோவாஷியன் கூறினார். இது “நோவாஷியவாதம்” என்று பெயர்பெறலாயிற்று.
அதன்பின் ஏற்பட்ட சித்திரவத்தையின்போது நோவாஷியன் ஊரோமிலிருந்துத் தப்பி ஓடினார். தஞ்சம் புகுந்த இடத்தில் ஒரு சபையை நிறுவினார். அது நீண்ட காலம் நீடித்தது. சபையில் அவர் மிகக் கண்டிப்பாக இருந்தார்.
ஒருவன் எப்பேர்ப்பட்ட பாவத்தைச் செய்தாலும், அவன் மனந்திரும்ப வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவன் மனந்திரும்பி வரும்போது தேவன் அவனை ஏற்றுக்கொள்கிறார் என்ற குறைந்தபட்ச அறிவு இவ்வளவு பெரிய இறையியலாளருக்கு இல்லாமல் போனது பரிதாபம். உண்மையாக மனந்திரும்பினால், மக்கள் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதை அங்கீகரிக்க மறுப்பது அறிவீனம்.
இவர் 3ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்தியோக்கியாவின் ஆயராக இருந்தார். இவரைப்பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்வதானால் இரண்டு பிரச்சினைகளைச் சொல்லலாம். இவர் இன்றைய சிரியாவில் உள்ள அந்தியோக்கியாவின் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபிறகு மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தார். இவர் ஆயராக இருந்த அதே நேரத்தில் அரச குடும்பத்தின் பொருளாதார அலுவலராகவும் இருந்தார். எல்லா வழிகளிலும் இவர் செல்வத்தைத் சம்பாதித்தார். மதத்தையும், மதச்சடங்குகளையும் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளாகவே பார்த்தார். இலஞ்சம் வாங்குவதற்குத் தயங்கவே இல்லை. பெருமை, ஆடம்பரம் இவை இரண்டும்தான் இவருடைய அகராதியில் இருந்த சொற்கள். ஆயராக இருப்பதை இவர் ஓர் இலாபகரமான தொழிலாகக் கருதினார். இவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வசதியுள்ள விசுவாசிகளிடமிருந்து நன்கொடைகள் வாங்கினார். அவைகளைப் பொதுக் கணக்கில் சேர்க்காமல் தன் சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்தினார். இவருடைய பெருமையினாலும் ஆடம்பரத்தினாலும் அவிசுவாசிகள் கிறிஸ்தவத்தை வெறுத்தார்கள். பணம் எப்படிச் சம்பாதிக்க வேண்டும், சம்பாதித்தை எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்பதுதான் இவருடைய ஒரே குறி.
இது ஒரு புறம்; இன்னொரு புறம் இவர் தவறான போதனைகளைப் போதித்தார். இயேசு கிறிஸ்து உண்மையாகவே யார் என்பதை அவர் புரிந்துகொள்ளவேயில்லை. ஏனென்றால், “இயேசு ஒரு பெரிய தீர்க்கதரிசி,” என்று மட்டுமே இவர் கூறினார். மேலும் இவர் பிதா குமாரன் பரிசுத்த ஆவியாகிய திரித்துவதைப் புரிந்துகொள்ளவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. பிதா, ஞானம், வார்த்தை என்பதுதான் இவருடைய திரித்துவம். இவர் ஒரு குழப்பவாதி: இவரும் குழம்பினார், பிறரையும் குழப்பினார். இவர் தெய்வபக்தியுள்ளவரும் இல்லை, நல்லவரும் இல்லை. ஆனால் இவர் ஓர் ஆயர்.
எத்தனை சவால்கள்! எத்தனை சிக்கல்கள்! எத்தனை பிரச்சினைகள்! எத்தனை வகையான எதிர்ப்புகள்! சபை வரலாற்றின் நான்காம் பாகத்தில் நாம் பார்த்ததுபோல், ஒரு புறம், உரோம அரசிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுந்த சித்திரவதை; இந்தச் சித்திரவதையின் அநியாயத்தை அம்பலப்படுத்தி, வதைத்தவர்களை உணர்வடையச் செய்யவேண்டியிருந்தது; கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான வதந்திகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கவேண்டியிருந்தது. “கிறிஸ்தவம் உண்மையற்றது, அது தீங்கு விளைவிக்கிறது,” என்று சிலர் வாதிட்டார்கள். இன்னொரு புறம், பிளேட்டோ அரிஸ்டாட்டில் ஆகியவர்களின் அஞ்ஞான கிரேக்க தத்துவங்களும், எப்பிக்கூரியர் ஸ்தோயிக்கர் போன்ற நடைமுறையில் இருந்த தத்துவங்களும் கிறிஸ்தவத்தைத் தாக்கின. இன்னுமொரு புறம், யூதமதம், கிரேக்க உரோம அஞ்ஞான மதங்கள், கிழக்கிலிருந்து உரோமப் பேரரசுக்குள் நுழைந்திருந்த புதிர் மதங்கள் எனப் பிற மதங்களுக்கும், தேவ நம்பிக்கையற்றவர்களின் கருத்துக்களுக்கும் எதிராகப் போராடவேண்டியிருந்தது. எல்லாவற்றிக்கும் மேலாக , சபைக்குள் கிறிஸ்தவர்களிடையே கிறிஸ்தவத்திற்கு எதிராக எழுந்த தவறான போதனைகளையும் வேதப்புரட்டுக்களையும் இனங்கண்டு சத்தியத்தைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. உண்மையான கிறிஸ்தவத்தைத் திரித்து, 2 கொரிந்தியர் 11:4இல் பவுல் சொல்வதுபோல், சிலர் வேறொரு கிறிஸ்துவை, வேறொரு நற்செய்தியை, வேறொரு கிறிஸ்தவத்தை உருவாக்கினார்கள். சுருக்கமாக, நான்குமுனைத் தாக்குதல் என்று சொல்லலாம்.
ஆண்டவராகிய இயேசுவும் அவருடைய சீடர்களும் தாங்கள் போதித்த சத்தியத்தை மக்கள் விசுவாசிக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் காரணகாரியங்களோடு விளக்கினார்கள், ஏரணத்தோடு (logic) எடுத்துரைத்தார்கள்; சத்தியத்தை எதிர்த்தவர்களோடு தேவைக்கேற்ப தர்க்கித்தார்கள். பவுல் ஜெப ஆலயங்களிலும் சந்தைவெளிகளிலும் கிறிஸ்துவைப்பற்றி மக்களிடம் தர்க்கித்தார். இதுபோன்ற தர்க்கவாதமும், தன்விளக்கமும், சத்தியத்தைத் தற்காத்தலும் கிறிஸ்தவ வரலாறு முழுவதும் தொடர்கிறது.
நான்காம் பாகத்தில் நாம் பார்த்ததுபோல், கிறிஸ்தவர்கள் உரோமப் பேரரசில், பேரரசால், அநியாயமாகச் சித்திரவதை செய்யப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் இதை எப்படி எதிர்கொண்டார்கள்? நடபடிகளில் அப்போஸ்தலர்கள் தாக்கப்பட்டபோது, “கிறிஸ்தவம் உண்மையானது, சட்டபூர்வமானது, நியாயமானது, நேர்மையானது, ஒழுக்கமானது, அமைதியானது,” என்று சொன்னதுபோலவே, ஆதிச் சபையிலும் கிறிஸ்தவர்கள் சொன்னார்கள். “பேரரசில் ஏற்பட்ட எல்லாக் கலவரங்களையும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் அல்ல, கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள்தான் தொடங்கினார்கள்,” என்று தன்விளக்கவாதிகள் அழுத்தமாகக் கூறினார்கள். கிறிஸ்தவர்கள் ஒழுக்கமான, அமைதியான, பேரரசருக்கு விசுவாசமான சிறந்த குடிமக்கள் என்று தன்விளக்கவாதிகள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். “கிறிஸ்தவம் அரசுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் அல்ல; எனவே கிறிஸ்தவத்தைச் சட்டபூர்வமான சமயமாகக் கருத வேண்டும்,” என்று ஜஸ்டின் மார்டிர் ஆட்சியாளர்களுக்கு நிரூபிக்க முயன்றார். “பேரரசில் கிறிஸ்தவர்கள் அநியாயமாக வெறுக்கப்படுகிறார்கள், பழிவாங்கப்படுகிறார்கள். உண்மையில், கிறிஸ்தவர்கள் பேரரசின் ஒழுங்கைப் பாதுகாப்பதில் சிறந்த உதவியாளர்கள், நல்ல கூட்டாளிகள்” என்று அவர் வாதிட்டார். “தீயவன் தேவனிடமிருந்து ஒருபோதும் மறைந்துகொள்ள முடியாது. அவனவனுடைய செயல்களுக்கு ஏற்ப நித்திய தண்டனையோ அல்லது நித்திய இரட்சிப்போ நிச்சயமாக உண்டு,” என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார்.
கிறிஸ்தவத்தை ஆதரித்து எழுதிய தன் முதலாவது நூலில் ஜஸ்டின், கிறிஸ்தவத்திற்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகளை நிராகரித்து எழுதினார். கிறிஸ்தவர்களுடைய ஞாயிறு ஆராதனை முறையையும் ஜஸ்டின் இதில் விளக்கியிருக்கிறார். ஞாயிறன்று கிறிஸ்தவர்கள் கூடிப் பாடுவதும், ஜெபிப்பதும், தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதும், அதைக் கேட்பதும், அப்பம் பிட்குதலுமே அந்த நாட்களில் கிறிஸ்தவ ஆராதனை முறையாக இருந்ததை ஜஸ்டினின் நூலின்மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.
கிறிஸ்தவத்தையும் கிறிஸ்தவர்களையும் எதிர்த்தும் பழித்தும் அநேகர் பேசியும், குற்றஞ்சாட்டியும், எழுதியும் வந்ததால், “கிறிஸ்தவம் என்றால் என்ன?” என்று விளக்கி எழுதப்பட்ட பல நூல்கள் இக்காலத்தில் தோன்றின.
“கிறிஸ்தவர்கள்மேல் சொல்லப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ள வேண்டாம். வேண்டுமென்றே கிறிஸ்தவர்களைத் தண்டிக்க முயல வேண்டாம்; அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலொழிய அவர்களைத் தண்டிக்க வேண்டாம். ஆனால், கண்டுபிடிக்கப்பட்டபின், கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்தால் தண்டனை வழங்குங்கள்,” என்ற உரோமப் பேரரசன் டிராஜனின் கட்டளை மீறப்படுவதை ஆதிச் சபையின் தன்விளக்கவாதிகள் சுட்டிக்காட்டினார்கள்.
சித்திரவதைக்கு எதிராக தெர்த்துல்லியன் எழுதிய தன்விளக்கத்தைப் புரிந்துகொள்ள பல மணி நேரம் செலவிட வேண்டும். படித்துப் பாருங்கள். அப்போது நான் சொல்வதை நீங்கள் உணர்வீர்கள். எடுத்துக்காட்டாக, தெர்த்துல்லியன் டிராஜனின் ஆணையைப்பற்றி இப்படி எழுதுகிறார்: “ஓ! இது பரிதாபமான விடுதலை! இது விடுதலையா? ஓ அரச ஆணையே! நீ ஒரு சுயமுரண்பாடு! நிரபராதிகளைத் தேடக்கூடாது என்ற ஆணை! நிரபராதிகளைத் தேடத் தடை! ஆனால் நிரபராதிகளைக் குற்றவாளிகளாகத் தண்டிக்க வேண்டும் என்று அந்த ஆணை கூறுகிறதே! ஒரே நேரத்தில் இரக்கமும் கொடூரமும் நிறைந்த ஆணை! ஆணை நினைத்தால் கிறிஸ்தவர்கள் நிரபராதிகள்! தண்டிக்காமல் கடந்து செல்கிறது. ஆணை நினைத்தால், கிறிஸ்தவர்கள் குற்றவாளிகள். அது தண்டிக்கும். தீர்ப்பே! நீ உன்னை ஏன் ஏமாற்றுகிறாய்? ஆணையே! நீ ஏன் இந்த விளையாட்டை விளையாடுகிறாய்? தண்டிக்க வேண்டுமானால், விசாரிக்க வேண்டாமா? நீ ஏன் விசாரிக்கவில்லை? விசாரிக்காவிட்டால், நீ ஏன் மன்னிப்பதில்லை? ஆணையே! சொல், நாங்கள் நிரபராதிகளா அல்லது குற்றவாளிகளா?” தன்விளக்கவாதிகள் சித்திரவதையாளர்களுக்குத் தக்க மறுமொழி கொடுத்தார்கள்.
கிறிஸ்துவை விசுவாசிக்காத யூதமதத்தின் எதிர்ப்பை தன்விளக்கவாதிகள் எப்படி அணுகினார்கள் என்று சுருக்கமாகப் பார்ப்போம். இயேசுவே பழைய ஏற்பாட்டின் வாக்குறுதிகள் தீர்க்கதரிசனங்கள் அனைத்தின் நிறைவேற்றம் என்பதே அவர்களுடைய நிலைப்பாடு. “பழைய ஏற்பாட்டின் மனிதர்கள் இயேசுவையே சுட்டிக்காட்டுகின்றனர்; பழைய ஏற்பாட்டின் நிகழ்ச்சிகள், சடங்குகள், வார்த்தைகள் அனைத்தும் இயேசுவையே சுட்டிக்காட்டுகின்றன; எனவே இயேசு பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதல் என்பதே அவர்களுடைய வாதம். இயேசு கிறிஸ்து வந்தபின், அதாவது மெய் வந்தபின், நிழல் தன் பொருளை இழந்துவிடுகிறது; ஆனாலும், கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் பழைய ஏற்பாட்டிற்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள்; ஆனால் ஒருவன் பழைய ஏற்பாட்டின் எல்லாச் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்தாலும், அவன் தேவனுடைய நீதியை நிறைவேற்ற முடியாது. நீதியும், தேவனுடனான ஐக்கியமும், பாவ மன்னிப்பும் ஒருபோதும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் உண்டாவதில்லை; அவைகள் கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தின்மூலமாகவும், அவருடைய பாவநிவிர்த்தியின்மூலமாகவும் மட்டுமே கிடைக்கின்றன; அவைகளை, இம்மைக்கும் மறுமைக்கும் தேவையான நித்திய ஜீவனைத் தரும் தேவனுடைய ஆவியானவரால், அனுபவிக்கிறோம்,” என்பதே அவர்களுடைய அணுகுமுறை.
அன்று கோலோச்சிய கிரேக்க தத்துவத்தையும் அஞ்ஞான மதங்களையும் அடிப்படையாகக் கொண்ட உலகக் கண்ணோட்டத்தை தன்விளக்கவாதிகள் எப்படி எதிர்கொண்டார்கள் என்று நாம் கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம். ஆரம்பகால தன்விளக்கவாதிகள் கிரேக்க தத்துவங்களை பிரதானமாக மூன்று வழிகளில் அணுகினார்கள்.
“ஏதென்சுக்கும் எருசலேமுக்கும், கல்விக்கூடத்துக்கும் சபைக்கும் சம்பந்தம் ஏது?” என்று அவர் கேட்டார். இந்த இரண்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை அல்லது அதிகம் இல்லை என்பதுதான் அவருடைய அணுகுமுறை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தெர்த்துல்லியன் கிரேக்க தத்துவத்தை முற்றிலும் நிராகரித்தார். “ஒருவன் கிறிஸ்துவில் சத்தியத்தைக் கண்டறிந்தபிறகு, அவனுக்குத் தத்துவவாதிகள் தேவையில்லை; ஏனென்றால், தத்துவவாதிகளால் கிறிஸ்துவோடு எதையும் சேர்க்க முடியாது; முடியுமானால் அவர்கள் கிறிஸ்துவில் மட்டுமே காணப்படும் சத்தியத்தைக் குறைப்பார்கள், கரைப்பார்கள், திசைதிருப்புவார்கள்,” என்று அவர் கூறினார். “தேவன் கிறிஸ்துவில் வெளிப்படுத்தியுள்ளவைகளைத் தாண்டிய அனைத்து ஊகங்களும் கிறிஸ்துவில் உள்ள சத்தியத்திலிருந்து விசுவாசிகளை விலக்கிச் செல்லக்கூடும் என்பதால் அவை பயனற்றவை, ஆபத்தானவை,” என்று கூறி தெர்த்துல்லியன் கிரேக்க தத்துவங்களை நிராகரித்தார்.
கிறிஸ்தவமே உண்மையான தத்துவம் என்பது அவருடைய அணுகுமுறை. ஜஸ்டின் கிறிஸ்தவராக மாறுவதற்குமுன் தத்துவம் பயின்றிருந்தார். அவர் கிறிஸ்தவரானபிறகு அஞ்ஞான தத்துவத்தின் வெறுமையைக் கண்டார். எனவே கிறிஸ்தவமே சிறந்த வழி என்று கற்பித்தார். கிறிஸ்து எல்லாத் தத்துவங்களும் சேர்ந்து வழங்க முடிந்த மிகச் சிறந்த அனைத்தின் நிறைவேறுதல் என்று அவர் கற்பித்தார். அஞ்ஞானிகளோடு உரையாடுவதற்கு இவர் தத்துவத்தையும் தத்துவங்களில் உள்ளவைகளையும் ஒரு பாலம்போல் பயன்படுத்தினார். ஜஸ்டின் ட்ரைஃபோ என்பவரோடு நடத்திய உரையாடல் மிக முக்கியமானது. இவர் கிறிஸ்தவ விசுவாசத்தைத் தற்காக்க இரண்டு தன்விளக்கவாதப் புத்தகங்கள் எழுதினார்.
உரோம அரசன் பயசுக்கு எழுதிய முதல் தன்விளக்கவாத உரையில் “கிறிஸ்தவர்கள் அரசின் சிறந்த குடிமக்கள். அவர்கள் அரசுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை; ஆகவே கிறிஸ்தவம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சமயமாக இருக்க வேண்டும். கிறிஸ்தவம் பிற மதங்களைவிட மேலானது,” என்று கூறினார். கிறிஸ்தவம் எதையும் சீர்குலைக்கவில்லை என்பதை விளக்க கிறிஸ்தவ வழிபாட்டை விவரித்தார். ஜஸ்டின் தன் முதல் ஆதாரஉரையில், வேதாகமத்திலிருந்து வரும் வெளிச்சத்தின்மூலம் அஞ்ஞான தத்துவத்தின் கொடிய இருளை அகற்ற முயன்றார். “லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல,” என்று கொலோசெயர் 2:8இல் பவுல் கூறுவதுபோல், தத்துவஞானிகளின் ஞானம் கிறிஸ்துவின் வல்லமையான வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் நேர்எதிரானவை, பொய்யானவை, பொருளற்றவை என்று ஜஸ்டின் தெரிவித்தார். வெறுக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் சார்பாக வாதாடி அவர்களோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.
அவர் தன் இரண்டாவது ஆதாரஉரையில் கிறிஸ்தவ விசுவாசம் மட்டுமே பகுத்தறிவுக்குப் பொருத்தமான உண்மையான விசுவாசம் என்று வாதிட்டார். தத்துவங்கள் கூறுகிற, தேடுகிற, நிஜ உலகத்துக்குப் பொருத்தமான ஒரே உண்மையான, அறிவார்ந்த, விசுவாசம் கிறிஸ்தவம் மட்டுமே என்று அவர் விவரிக்கிறார். தத்துவத்தைவிட கிறிஸ்தவம் உலகை நேர்த்தியாக விளக்குகிறது என்று ஆதாரங்களோடு வாதித்தார்.
“பிளேட்டோ எப்படித் தேவனைத் தேட முடியும்?” என்று கிளெமென்ட் கேட்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சத்தியம் எங்கு கிடைத்தாலும் சரி, அது தேவனிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று அவர் எண்ணத் தொடங்கினார். அவருடைய நாட்களில் பிளேட்டோ உயர்வாகக் கருதப்பட்ட தத்துவஞானி. எனவே அவர் தேவனுடைய சத்தியத்தை பிளேட்டோவின் தத்துவத்திலும் தேட முயன்றார்.
தேவனே சத்தியம், தேவனிடமிருந்தே சத்தியம் வருகிறது, என்பதை இன்று நாம் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், ஒன்று சத்தியமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டுமானால் முதலாவது எது தேவனுடைய சத்தியம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, ஒன்றைச் சத்தியம் என்று சொல்வதற்குமுன் அதைக் கருத்தாய் ஆராய வேண்டும். இன்னும் ஆழமாகச் சென்று சத்தியத்தின் தரம் என்ன, சத்தியத்தை வரையறுப்பவர் யார், சத்தியத்தை எப்படிப் பரீட்சிக்கிறோம் என்றெல்லாம் பார்க்க வேண்டும்.
ஆனால் கிளெமென்ட் பிளேட்டோவின் கருத்துகளையும் சத்தியமாகக் கருதினார்; கிரேக்க தத்துவத்தை சத்தியத்தின் தரமாகக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தினார். எனவே கிளெமென்ட்டின் இறையியல் பல சந்தர்ப்பங்களில் வேதாகமத்தின் போதனைபோல் இல்லாமல் பிளேட்டோவின் தத்துவம்போல தோன்றியது.
அஞ்ஞான தத்துவங்களுக்கு எதிராக ஆதிச் சபையார் இந்த மூன்று முக்கியமான அணுகுமுறைகளை எடுத்தார்கள். தெர்த்துல்லியன் கிறிஸ்தவ வெளிப்பாட்டிற்கு ஆதரவாக கிரேக்க தத்துவத்தை நிராகரித்தார். ஜஸ்டின் கிறிஸ்தவ வெளிப்பாட்டின் கட்டுப்பாட்டின்கீழ் கிரேக்க தத்துவத்தைப் பயன்படுத்தினார். கிளெமென்ட் கிரேக்கத் தத்துவத்தை கிறிஸ்தவ வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் அதிகாரமாகப் பயன்படுத்தினார்.
சத்தியத்தை அறிவதற்கு அடிப்படையான இரண்டு ஆதாரங்களே உள்ளன: ஒன்று பாறை, மற்றொன்று மணல். வேதாகமம் சொல்வதுபோல், வீட்டைக் கட்டுவதற்கு இந்த இரண்டில் ஒரு அடித்தளத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். ஆம், ஒன்று தேவன், தேவனுடைய வார்த்தை. மற்றொன்று, நம் சொந்த ஞானம், அறிவியல், பாரம்பரியம், சமூகம், உள்ளுணர்வு, ஆன்மீகம், கலாச்சாரம், அனுபவம். இவையனைத்தும் நாம் நம்மைச் சார்ந்திருக்கிறோம், நம்மை நம்புகிறோம் என்பதின் பல்வேறு வழிகளே. இவைகளைக்கொண்டு எது சரி எது தவறு என்று நாம் முடிவுசெய்கிறோம்.
தேவனா, மனிதனா? தேவனுடைய வார்த்தையா, மனிதனுடைய வார்த்தையா? எது சத்தியத்தின் இறுதியான ஆதாரம்? அன்றும் இன்றும் இதுவே கேள்வி.
நாம் தொடர்வதற்குமுன் Apology, apologist என்ற வார்த்தைகளை வரையறுத்தாக வேண்டும். apology என்றால் மன்னிப்பு என்ற பொருள் உண்டு. ஆனால் apologetics என்றால் “வாதவிளக்கம்” அல்லது “தற்காப்புசெய்தல்” என்று பொருள். இது ஒரு தன்விளக்கம், தற்காப்பு. இன்றுபோல் அன்றும் தேவன் இருக்கிறார் என்பதைச் சந்தேகித்தார்கள்; வேதாகமத்தின் தேவன்மேல் வைக்கும் விசுவாசத்தைத் தாக்கினார்கள்; வேதாகமம் தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதையும், அதன் பிழையில்லாத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கினார்கள்; பொய்ப்போதகர்கள் வேதாகமத்துக்கு ஒவ்வாத தவறான கோட்பாடுகளை ஊக்குவித்தார்கள்; கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படைச் சத்தியங்களை மறுதலித்தார்கள். இப்படிப்பட்ட இயக்கங்களையும் நபர்களையும் எதிர்த்துப் போராடுவதும், கிறிஸ்தவ சத்தியத்தையும் விசுவாசத்தையும் பாதுகாப்பதுமே கிறிஸ்தவ தன்விளக்கத்தின் நோக்கமாகும்.
கிறிஸ்தவத் தற்காப்பில் இரண்டு முதன்மையான முறைகள் உள்ளன. முதலாவது, கிறிஸ்தவ சத்தியங்கள் உண்மை என்பதற்கான ஆதாரங்களை முன்வைப்பது. இது தற்காப்பு. இரண்டாவது, கிறிஸ்தவத்திற்கு எதிரான நிலைப்பாட்டின் கருத்துக்களையும் அனுமானங்களையும் எதிர்கொள்வது. இது தாக்குதல்.
அதுபோல, Apologist என்றால் மன்னிப்புக் கேட்பவர் என்ற பொருள் இல்லை. Apologist என்றால் தங்கள் நியாயங்களை எடுத்துரைப்பவர்கள், காரண காரியங்களை முன்வைத்து வாதிடுபவர்கள், சட்டத்துறையில் பயன்படுத்துவதுபோல் வழக்காடுபவர்கள், தங்கள் சத்தியத்தைத் தற்காப்பவர்கள். ஆனால் இது பட்டிமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் நடத்தி வெற்றி பெறுகிற காரியம் போன்றதல்ல. இது தேவனுடைய தரத்தின்படி, மக்களிடம் என்ன இல்லை அல்லது என்ன குறைவுபடுகிறது அல்லது எது தவறு, எது பொய், என்று சுட்டிக்காட்டி, சத்தியத்தை எடுத்துரைப்பதாகும். கிறிஸ்தவத் தற்காப்புவாதிகள் “நாங்கள் சரி,” என்று சொல்லவில்லை; மாறாக, “தேவன் சரி. எனவே நீங்கள் தேவனோடு உடன்படவேண்டும்; அப்போதுதான் நீங்கள் சரியாவீர்கள்,” என்று எடுத்துரைத்தார்கள்.
புரிந்துகொள்வதற்கு வசதியாக இவர்களை நாம் தற்காப்புவாதிகள் அல்லது தன்விளக்கவாதிகள் என்றழைப்போம்.
இவர்கள் அரசின் தடைகளை அகற்றுவதற்கு அரசருக்கும் அரசுக்கும் எழுதினார்கள்; சட்ட அந்தஸ்தைக் கோரினார்கள்; கிரேக்க இலக்கியத்தின் தாக்குதல்களை முறியடிப்பதற்கு பொதுவெளியில் எழுதினார்கள்; சமுதாயத்திலிருந்த படித்தவர்கள் செல்வாக்குடையவர்கள் வட்டத்தில் விவாதங்கள் நடத்தினார்கள். வேதப்புரட்டாளர்களின் புரட்டுக்களைத் தோற்கடிக்க விசுவாசிகளுக்கும் சபைகளுக்கும் எழுதினார்கள்.
சில முக்கியமான தன்விளக்கவாதிகளையும், அவர்களுடைய விளக்கங்களையும் இப்போது நாம் பார்ப்போம். இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் வேதத்தின் சத்தியங்களைப்பற்றி விநோதமாகச் சிந்திக்கத் தொடங்கிய ஞானவாதமும், வேதத்தை உதாசீனம் செய்து எல்லைமீறிய உணர்ச்சிகளுக்குத் தூபம் போட்ட மொன்டனிசமும் சபைக்குப் பெரும் ஆபத்தாக மாறின. இவைகளை முறியடித்து விசுவாசத்தைத் தற்காப்பதில் ஐரேனியஸ், தெர்த்துல்லியன், சிப்பிரியான், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த கிளெமெண்ட், ஓரிஜென்போன்ற சபைப் பிதாக்கள் முக்கிய பங்காற்றினார்கள்.
மெய்யான தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதையும், அவருடைய தன்மையையும் வலியுறுத்தி இவர் தன்விளக்கவாதத்தை உரோமப் பேரரசன் ஹாட்ரியனுக்கு நேரடியாக எழுதினார். இவர் தன் தன்விளக்கவாதத்தில் பொய்யான தெய்வங்களைப்பற்றியும் கிரேக்க தெய்வங்களின் வழிபாடு எவ்வளவு சீர்கெட்டது என்பதைப்பற்றியும் விவரித்தார். அவர் தன் நியாயவாதங்களை எடுத்துரைத்து, கிறிஸ்தவர்களைச் சித்திரவதைசெய்வதை நிறுத்துமாறு அரசனுக்கு வேண்டுகோள் விடுத்தார். இவர் ஆரம்பகாலச் சபையில் இருந்த குறிப்பிடத்தக்க ஒரு தன்விளக்கவாதி.
சபை வரலாற்றின் கடந்த நான்கு பாகங்களிலும் நான் இவரைப்பற்றி சில வாக்கியங்கள் பேசியிருக்கிறேன். வரும் நாட்களில் இவரைப்பற்றி விரிவாகப் பார்ப்போம். இவர் ஆரம்பத்தில் அஞ்ஞான தெய்வங்களை வழிபட்டு, கடவுளைத் தேடி அலைந்தார். தத்துவத்தில் ஆர்வம் கொண்டு அதையும் படித்தார். உரோம், ஏதென்ஸ், அலெக்சாந்திரியா எனப் பல இடங்களுக்குப் பயணம் செய்தார். எபேசுவில் ஒருநாள் கடற்கரையோரம் நடந்துபோய்க்கொண்டிருதபோது ஒரு வயதான மனிதர் கிறிஸ்துவைப்பற்றியும் விசுவாசத்தைப்பற்றியும் ஜஸ்டினுக்கு விளக்கி, அவரைக் கர்த்தரிடம் வழிநடத்தினார். அன்றே ஜஸ்டின் கிறிஸ்துவை அறிந்துகொண்டார்.
அவர் தன் வாழ்நாள் முழுவதும் தான் உண்மையென்று விசுவாசித்த கிறிஸ்தவத்தை உண்மையான தத்துவமாக உலகுக்குக் கற்பிப்பதற்காகத் தன்னை அர்ப்பணித்தார். ஆம், அவர் தன் வாழ்நாள் முழுவதும் தத்துவஞானியின் அங்கியை அணிந்திருந்தார்.
“கிறிஸ்தவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீங்கள் ஆராய்ந்துபார்க்க வேண்டும். அவை உறுதிப்படுத்தப்பட்டால், கிறிஸ்தவர்களாகிய எங்களைத் தக்கவிதமாகத் தண்டிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் . . . ஆனால், நாங்கள் குற்றவாளிகள் என்று எவராலும் எங்களைத் தீர்க்க முடியாவிட்டால், பொய் வதந்திகளை நம்பி, நிதானம் தவறி, குற்றமற்ற எங்களுக்குத் தீங்கிழைப்பதை நிறுத்தாவிட்டால், உண்மையை அறிந்தும் நீங்கள் நீதியை நிலைநிறுத்தாவிட்டால், தேவனுக்குமுன்பாக நீங்கள் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது.”
இது ஜஸ்டின் மார்டிர் உரோமப் பேரரசன் அன்டோனினஸ் பயசுக்கு அனுப்பிய ஒரு மேல்முறையீடு. கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதை அநீதியானது என்று உரோமப் பேரரசர்களுக்குக் காண்பிக்க ஜஸ்டின் எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. தேவனுடைய வார்த்தையின் திருத்தமான அறிவின்படி, அவர் புறமதத்தையும் கிரேக்க தத்துவஞானத்தையும் நிராகரித்தது, ஏதென்சில் அப்போஸ்தலனாகிய பவுல் எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளிடம் மெய்யான தேவனையும் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவையும்பற்றித் தைரியமாக பேசியதை நினைப்பூட்டுகிறது.
ஜஸ்டின் அதிகமாகப் பயணம் செய்தார். இறுதியில் உரோமில் நிரந்தரமாகத் தங்கினார். இயேசுவே கிறிஸ்து என்றும், கிறிஸ்தவம் வேத எழுத்துகளின்படியானது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
ஜஸ்டின் மார்டிர் கற்றறிந்த டிரைஃபோ என்ற ஒரு யூதரோடு நடத்திய உரையாடல் மிகப் பிரபலமானது. புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டின் நிஜம்; எனவே யூதர்கள் பழைய ஏற்பாட்டைப் பின்பற்றுவதுபோல, குறிப்பாக பழைய ஏற்பாட்டு மதச் சடங்குகளை, புதிய ஏற்பாட்டில் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் வாதிட்டார். ஏனென்றால் இயேசுவே பழைய ஏற்பாடு முன்னுரைத்த மேசியா, வார்த்தை; இந்த வார்த்தையும் பழைய ஏற்பாட்டுத் தேவனும் ஒருவரே என்று அவர் எடுத்துரைத்தார். மேலும் யூதச் சடங்குகளைப் பின்பற்றுவதால் அல்ல, கிறிஸ்துவிடம் மனந்திரும்புவதால் மட்டுமே ஒருவன் நீதிப்படுத்தப்படுகிறான். எனவே விசுவாசிக்கும் சபை விசுவாசியாத யூதமதத்தின் இடத்தை எடுத்துக்கொண்டது என்பதும், யூத மதத்தில் கிறிஸ்துவுக்கு இடம் இல்லாதவரை கிறிஸ்துவைக்கொண்ட கிறிஸ்தவம் உயர்ந்தது என்பது இவருடைய விளக்கம்.
உரோமப் பேரரசில் உரோம் நகரத்தைப்போல் வட ஆப்பிரிக்காவில் கார்த்தேஜ் நகரம் மிக முக்கியமான இடத்தை வகித்தது. சபை வரலாற்றில் முத்திரை பதித்த தெர்த்துல்லியன், சிப்பிரியான, அகஸ்தீன் போன்றோர் இந்த நகரத்துச் சபையிலிருந்து வந்தவர்கள்.
தெர்த்துல்லியன் கார்த்தேஜில் கி.பி. 155-160இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் கர்த்தரை அறியாதவர்கள். எனவே இவர் அஞ்ஞானக் கலாச்சாரத்தையும் கார்த்தேஜ் நகர மக்களின் வாழ்க்கை முறையையும் பின்பற்றி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார். கிரேக்கமொழியில் படித்த அவர் உரோமக் கலாச்சாரத்தையும் படித்தார்.
தொழிலின்படி இவர் ஒரு வழக்கறிஞர். எனவே இவருடைய வழக்கறிஞர் கல்வி இறையியல் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் வளர்த்துக்கொள்ளவும், இறையியல் தர்க்கங்களில் ஈடுபடவும் இவருக்குத் துணைபுரிந்தது. தன் 30வது வயதில் கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்த இவர் தன் பிரமிக்கத்தக்க வரங்களையும் திறமைகளையும் கிறிஸ்தவத்திற்காகப் போராடுவதற்காகப் பயன்படுத்தினார். இவருடைய காலத்தில் மேலோங்கிநின்ற ஞானவாதம்உட்பட பல்வேறு வேதப்புரட்டுகளுக்கு எதிராக இவர் எழுதினார். இவரே “திரித்துவம்”என்ற வார்த்தையைத் தன் எழுத்துக்களில் முதன் முதலாகப் பயன்படுத்தியவர். ஆனாலும் இவர் திரித்துவதைத் தெளிவாகப் புரிந்துகொண்டதுபோல் தெரியவில்லை. தன் வாதங்களால் உரோமப் பேரரசின் உயர் அதிகாரிகளை எதிர்த்துத் தாக்கிய இவருடைய தைரியம் அளப்பரியது. இவருடைய எழுத்தாக்கங்கள் எண்ணில் அடங்காதவை. இவருடைய முப்பது நூல்கள் இன்னும் கிடைக்கின்றன. கி. பி. 197இல் இவர் எழுதிய தற்காப்புவிளக்க நூல் இவருடைய மிகச் சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. இந்நூலில், கிறிஸ்தவத்திற்காக வாதாடிய எவரும் இதுவரை சிந்தித்திராத வகையில் பல வாதங்களை ஒரு வழக்கறிஞருக்கே உரிய திறமையுடன் எழுத்தில் வடித்திருக்கிறார்.
இவர் எழுதிய De Praescriptione என்ற நூல் முரண்பாடுகளை ஏற்படுத்திய ஒரு நூல். இவர் இதை கிறிஸ்தவத்திற்கு எதிரான ஞானவாதத்திற்கும் பிற வேதப்புரட்டாளர்களுக்கும் எதிராகவே எழுதினார். ஆயினும் அவருடைய வாதங்கள் எல்லைமீறிப்போனதால், அவரை அறியாமல், கிறிஸ்தவ சபைக்கு அது ஆபத்தாக மாறிற்று. இவருடைய இந்த நூலே “வேதாகமமும் சபைப் பாரம்பரியங்களும் சம அதிகாரம் கொண்டவை” என்ற உரோமன் கத்தோலிக்க சபைப் போதனைக்கு வழிவகுத்தது என்று சொல்லலாம்.
இவர் உரோம நீதிபதிகளுக்கு எழுதிய கடிதங்களில் கிறிஸ்தவத்திற்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக அஞ்ஞானிகள் கட்டவிழ்த்துவிட்ட நிந்தைகளைச் சாடுகிறார். மத சுதந்திரம் ஒரு மனிதனின் பிரிக்கமுடியாத அடிப்படை உரிமை என்று வாதிடுகிறார். கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்குமுன்பு அவர்களுக்கு நியாயமான விசாரணை கோருகிறார்.
கிறிஸ்தவ விசுவாசத்தை விளக்கியும் ஆதரித்தும் இவர் தன் முதலாவது ஆக்கத்தை உரோமப் பேரரசன் அன்டோனியஸ் பயசுக்கும், செனட்டுக்கும் உரோம மக்களுக்கும் அனுப்பினார். இவர் எழுதிய இரண்டாவது சுருக்கமான ஆக்கத்தை உரோம செனட்டுக்கு மட்டும் எழுதி அனுப்பினார்.
கிறிஸ்தவர்கள் கூடி வரும்போது கர்த்தருடைய பந்தியில் பச்சிளம் குழந்தைகளைப் பலியிடுகிறார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டை முதன்முதலில் மறுத்து எழுதியவர் தெர்த்துல்லியன். கிறிஸ்தவத்தில் இல்லை, மாறாக பிறமதங்களில்தான் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன என்று இவர் சுட்டிக்காட்டினார். பிளினியின் வாக்குமூலத்தின்மூலம் கிறிஸ்தவர்கள் எவ்வளவு ஒழுக்கமானவர்கள் என்று இவர் நிரூபித்தார். கிளாடியேட்டர்களின் உடல்களை மிருகங்களுக்கு உணவாகக் கொடுப்பது அஞ்ஞானிகளின் மனிதாபிமானமற்ற பழக்கவழக்கம் என்று எடுத்துக்காண்பித்தார். கிறிஸ்தவர்கள் ஒரே தேவனை ஆராதிப்பதால் அவர்கள் அஞ்ஞான தெய்வங்களைப் புண்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமே இல்லை என்று ஆணித்தரமாக விளம்பினார். கிறிஸ்தவர்கள் பேரரசர்களை வழிபடும் மூடத்தனமான வழிபாட்டில் ஈடுபடுவதில்லை, ஆனால் அவர்களுக்காக ஜெபிக்கிறார்கள் என்று கூறினார்.
207 அல்லது 208 இல் மார்ஷியனுக்குஎதிராக ஐந்து புத்தகங்கள் எழுதினார். இவர் ஒரு துறவிபோல் வாழ்ந்தார், கி.பி 250இல் மரித்தார்.
இவர் உரோம இறையியலாளர் ஜஸ்டின் மார்டிரின் சீடர். இவர் நான்கு நற்செய்திகளையும் ஒப்பிட்டு, இசைவான, தொடர்ச்சியான, ஒரு புத்தகமாக உருவாக்கினார். இது ஒரு முக்கியமான வேலை. தேவன் ஒருவரே என்பதில் இவர் உறுதியாக இருந்தார். தேவன் வார்த்தை என்றும், தேவன் தம் வார்த்தையால் உலகங்களைப் படைத்தார் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் இயேசு கிறிஸ்துவில் மட்டுமே மீட்பு உண்டென்றும் போதித்தார்.
டாரியன் கிரேக்கர்களின் பலதெய்வ இறையியலை கிறிஸ்தவத்தின் ஏக தெய்வத்தின் இறையியலோடு ஒப்பிட்டு, கிறிஸ்தவத்தின் மேன்மையைப் பறைசாற்றினார். கிரேக்க தத்துவத்தில் மதிப்புள்ள ஏதாவது இருந்தால், அவை யூதக் கிறிஸ்தவ பாரம்பரியத்திலிருந்து வந்தவைகளே என்று அவர் எடுத்துரைத்தார்.
இவர் 180-250களில் வாழ்ந்த சபைப்பிதாக்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் 130இல் சிமிர்னாவில் பிறந்தார். இவர் அப்போஸ்தலரான யோவானின் சீடரான பொலிகார்ப்பின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரேனியசுக்கு பொலிகார்ப்பை நன்கு தெரிந்திருந்ததால், பொலிகார்ப்மூலம் யோவானின் போதனைகளையும் ஆதிச் சபை நடவடிக்கைகளையும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் அறிந்திருந்தார். ஆகவே இரண்டாம் நூற்றாண்டின் கடைசிக் காலப்பகுதியில் ஐரேனியசுக்குச் சபையின் 200 வருடகால அனுபவங்கள் நன்றாகத் தெரியும். அதனால் அவர் ஞானவாதத்துக்கு எதிராக எழுதினார், பேசினார், வாதிட்டார். இன்றைய பிரான்சிலுள்ள கௌலில் ஆயராக இருந்த போதீனஸ் கொலைசெய்யப்பட்டபோது ஐரேனியஸ் சபையின் ஆயராக நியமிக்கப்பட்டார். இவருடைய எழுத்துக்கள் சபைக்குத் தூணாக இருந்தன. ஐரேனியஸ் எழுதிய Against Heresies என்ற நூல் இன்றும் பதிப்பில் இருக்கிறது. ஞானவாதத்திலிருந்து சபையைக் காப்பாற்ற எழுதப்பட்ட இந்நூலின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. “கிறிஸ்தவம் வேதத்துக்குரியது, வேதத்தின்படியானது,” என்று மிகத் தெளிவாக வரையறுத்தார். இவர் நான்கு நற்செய்திகளையும் நேர்த்தியாக வலியுறுத்தினார். இவர் ஆயர்களின் நிர்வாகத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.
இவர்கள் அனைவரையும்பற்றி வரப்போகிற பாகங்களில் இன்னும் அதிகமாகப் பார்ப்போம். இது ஒரு முன்சுவை. இவர்களுடைய சூழ்நிலை எப்படி இருந்தாலும், இவர்களில் குறைகள் பல இருந்தாலும், இவர்கள் தங்கள் காலத்தில் கிறிஸ்தவத்திற்காக வாதாடினார்கள், வழக்காடினார்கள், விசுவாசத்திற்காகப் போராடினார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே இவர்களை நான் இங்கு குறிப்பிடுகிறேன். முடிவாக, கிறிஸ்தவம் ஒரு சட்டபூர்வமான, பாதுகாப்பான, சமயம் என்று நிரூபிக்க தற்காப்புவாதிகள் மிகக் கடினமாகப் பிரயாசப்பட்டார்கள் என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன். “கிறிஸ்தவர்களாகிய எங்களைப் பார்த்து நீங்கள் பயப்படத் தேவையில்லை என்று உ ரோமர்கள் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று அவர்கள் விரும்பினர்கள். “நாங்கள் உரோமப் பேரரசில் நல்ல குடிமக்கள்,” என்று சொன்னார்கள்.
இவர்கள், 1. “கிறிஸ்தவம் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம்,” என்றும், 2. “கிறிஸ்தவம் பகுத்தறிவுக்கு இசைந்தது, உண்மையான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது,” என்றும், 3. “கிறிஸ்தவம் சமுதாயத்தின் நன்மைக்கும் முன்னேற்றத்துக்கும் பங்களிக்கிறது,” என்றும் வலியுறுத்தி எழுதினார்கள் – பேரரசர்களுக்கு எழுதினார்கள், கல்வியாளர்களுக்கு எழுதினார்கள், உயர் பதவியில் இருந்தவர்களுக்கு எழுதினார்கள். இவர்கள் எழுதியதைப் பேரரசர்கள் எப்போதாவது படித்தார்களா என்று தெரியாது. ஆனால் அவர்கள் பேரரசர்களுக்கு எழுதினார்கள். அவர்கள் அஞ்ஞானிகளுக்கு எழுதினார்கள். அவர்கள் யூதர்களுக்குக் கிறிஸ்தவத்தை விளக்கினார்கள்.
சில நேரங்களில் தற்காப்புவாதிகள் நிலைமையைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள், தவறு செய்தார்கள் என்பதை மறுக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் தங்கள் சொந்த கலாச்சாரக் கட்டமைப்பிலிருந்து வாதாடினார்கள். எடுத்துக்காட்டாக, உரோமின் கிளெமென்ட் உயிர்த்தெழுதலை ஃபீனிக்ஸ் பறவையின் கதையுடன் ஒப்பிட்டு நிரூபிக்க முயன்றார். ஃபீனிக்ஸ் பறவையைப்பற்றிய கதை ஒரு புராணக் கதை. அது 500 வருடங்களுக்கு ஒருமுறை சாம்பலிலிருந்து மீண்டும் பிறக்கும் என்று கூறப்பட்டது. அன்று அந்தக் கலாச்சாரத்தில் வாழ்ந்த எல்லா மக்களுக்கும் இந்தக் கதை தெரியும். உயிர்த்தெழுதலை விளக்குவதற்கு அதைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம்.
எனவே தற்காப்புவாதிகள் எல்லாக் காரியங்களிலும் எல்லா நேரங்களிலும் சரியாக இருந்தார்கள் என்று நான் கூறவில்லை, கூற முயலவுமில்லை. ஆயினும், முக்கியமாக, கிறிஸ்தவத்தைப் பாதுகாக்க அவர்கள் பெரும் பங்கு வகித்தார்கள் என்பதை மறுக்க முடியாது.
தற்காப்புவாதிகள் எழுதியவைகளில் இருந்த குறிப்பிடத்தக்க ஓர் ஆபத்தைச் சுட்டிக்காட்டவேண்டும். அது என்னவென்றால், ஒரு விதத்தில் கிறிஸ்தவம் ஒன்றும் புதிதல்ல என்பதுபோல் அவர்கள் சொல்வதாகத் தோன்றியது. அதாவது, கிறிஸ்தவத்திற்கு ஆதரவாக அவர்கள் சில சமயங்களில் பிளேட்டோ போன்ற கிரேக்க தத்துவஞானிகளின் வார்த்தைகளை வேதவாக்கியங்கள்போல் மேற்கோள்காட்டினார்கள். கிறிஸ்தவத்தை விளக்குவதற்கும், தற்காப்பதற்கும் அஞ்ஞான தத்துவத்தின் வார்த்தைகளையும், கருத்துக்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள், வரவேற்றார்கள். இதனால் ஏற்பட்ட எதிர்பாராத விளைவு என்னவென்றால், சபையில் அஞ்ஞான சிந்தனை மிகப் பலமான செல்வாக்கைப் பெற்றது. தற்காப்புவாதிகள் இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் விரும்பினார்களோ விரும்பவில்லையோ, எதிர்பார்த்தார்களோ எதிர்பார்க்கவில்லையோ, அவர்களுடைய இந்தச் செயலால் அப்படிப்பட்ட ஒரு எதிர்மறையான விளைவு ஏற்பட்டது. இது இப்போதும் சபைக்கு ஒரு சவாலாக இருக்கிறது.
நாம் உலகத்தில்தான் இருக்க வேண்டும், ஆனால் உலகத்தாராக இருக்கக் கூடாது என்று நம் ஆண்டவராகிய இயேசு கூறினார். சில நேரங்களில் உலகத்திலுள்ள எல்லாத் தாக்கங்களிலிருந்தும் முற்றிலும் விலகிச்சென்று, ஒதுங்கிப்போய் நமக்காக மட்டும் நாம் வாழ்வது எளிது. ஆனால், நாம் அப்படி ஒதுங்கிப்போய் விட்டால் நாம் “உலகத்தில்தான் இருக்க வேண்டும்” என்பதற்குப்பதிலாக உலகத்தில் இல்லாமல் போய்விடுவோமே! அதே நேரத்தில் நாம் உலகத்தில் இருந்தால், உலகத்தின் தாக்கத்திலிருந்து விலகி இருப்பது எளிதல்ல. உலகத்தில் இருக்கும்போது நம்மைச் சுற்றியுள்ள உலகின் செல்வாக்கு, கலாச்சாரம், சிந்தனை, பலம் ஆகியவை நம்மைத் தாக்கும், பாதிக்கும். தற்காப்புவாதிகள் இதை எப்போதும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் மட்டுமல்ல, இன்று நாமும் அதைச் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. ஆனால் நாம் அதைப் புரிந்துகொள்ள முயல்கிறோம்.
விசுவாசத்தை வரையறுக்கவும் தற்காக்கவும் ஆதிச் சபை எடுத்த பிரயாசங்களிலிருந்து நாம் சில வழிகாட்டும் கோட்பாடுகளைக் கற்றுக்கொள்ளலாம்.
ஒன்று, தற்காப்புவாதிகள் அஞ்ஞானிகளைப் பல வழிகளில் அணுகினார்கள். அதுபோல, நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பல்வேறு வழிகளில் அணுகலாம். எது எந்தக் கலாச்சாரத்திற்குச் சிறந்தது என்பதைச் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். நாம் வாழும் உலகத்தை நாம் நிதானித்தறிந்து, பலனளிக்கும் பாணியில் நாம் கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும்.
இரண்டு, தேவனே இறுதியானவர். தேவனுடைய வார்த்தையே இறுதியானது. மனிதன் அல்ல, தேவனே சர்வஞானி. நாம் நம் சொந்த ஞானத்தை நம்பினால், கூடிய விரைவில் தவறுவோம். இது உறுதி. மனிதர்கள் எப்பேர்ப்பட்ட பெரிய தலைவர்களாக இருந்தாலும், தேவனுடைய வார்த்தையே தேவனுடைய அதிகாரபூர்வமான வெளிப்பாடு. எனவே வேதாகமம்தான் நம் முதன்மையான அதிகாரம், நம் செயல்பாட்டு அதிகாரம், நம் போதுமான அதிகாரம்.
மூன்று, தற்காப்புவாதம் தேவனுடைய வார்த்தையிலிருந்து வர வேண்டும். தேவனுடைய வார்த்தையே வாதப்பிரதிவாதத்தின் விதிமுறைகளைத் தீர்மானிக்க வேண்டும். அவிசுவாசிகளின் கேள்விகளுக்கு நாம் நிச்சயமாகப் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர்களுடைய நிலைப்பாட்டிலிருந்தோ, அனுமானங்களிலிருந்தோ நாம் அதைச் செய்ய முடியாது; ஏனென்றால், அப்படிச் செய்தால் நாம் ஆரம்பத்திலேயே விவாதத்தில் சரணடைந்துவிட்டோம் என்றாகிவிடும். நாம் அவர்களைத் தேவனுடைய வார்த்தைக்குநேராக வழிநடத்துவதற்குப்பதிலாக, நாம் அவிசுவாசிகளின் தவறுக்குள் விழுந்துவிடுவோம். ஓர் எடுத்துக்காட்டு, ஆதிச் சபையின் தன்விளக்கவாதிகள் பிளேட்டோவின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். பிளேட்டோ மோசமானவர் என்று நான் சொல்லவில்லை. ஆனால் பிளேட்டோ தவறாவரம் பெற்றவர் இல்லை. இதுபோல, மனிதர்களுடைய கருத்துக்களால் நாம் பாதிக்கப்படுகிறோம், ஏமாற்றப்படுகிறோம். எனவே எல்லாக் காலத்திலும், எல்லாக் காரியங்களிலும், நாம் விவேகமுள்ளவர்களாகவும், மிக முக்கியமாகத் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாகவும், இருக்க வேண்டும்
வேதத்தின் அடிப்படைப் போதனைகளுக்கு ஆபத்துவந்தபோது, போலிப்போதனைகள் சபையைத் தாக்கியபோது, சபை அமைதியாக வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொள்ளாமல், அந்தத் தவறான போதனைகளை ஆராய்ந்து அவைகளின் பொய்ரூபத்தை அம்பலப்படுத்தி, மெய்யான சத்தியத்தை விளக்கி, சபையைப் பாதுகாத்தது. சபை அப்படிச் செய்ததால்தான் இன்று அருமையான விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப்போதனைகளும் நமக்குப் பேருதவியாக இருக்கின்றன. இந்த விசுவாச அறிக்கைகள் கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளைத் துல்லியமாக விளக்குகின்றன. இந்த அடிப்படைப் போதனைகளில் போதுமான அளவுக்குத் தெளிவான அறிவும் விசுவாசமும் தேவ மக்களுக்கு எவ்வளவு அவசியம், அவசரம், என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நல்லது, நான் இத்துடன் இந்தப் பாகத்தை முடித்துக்கொள்கிறேன். இந்தப் பாகத்தைப் உள்வாங்கிக்கொள்வது அவ்வளவு எளிதல்ல என்று எனக்குத் தெரியும். ஆனால் இது நம் வரலாறு, இது நம் குடும்ப வரலாறு, இது தேவனுடைய நித்திய நோக்கத்தின் வரலாறு. எனவே இந்த வரலாற்றை நாம் அறிந்ததாக வேண்டும். சபை வரலாற்றை அறிய நீங்கள் என்னோடு சேர்ந்து பயணிப்பதை நான் வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். அடுத்த பாகத்தில் கிறிஸ்தவப் பேரரசின் முந்தைய காலத்தைப் பார்க்கலாம். அதுவரை நீங்கள் இந்த வாதங்களைச் சிந்தியுங்கள், தன்விளக்கவாதிகளைப் படியுங்கள். ஆமென்.