Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

சபை வரலாற்றைப்பற்றிய இந்த ஏழாம் பாகத்தில்  கி.பி 100முதல் கி.பி 312வரையிலான இரண்டாம் காலகட்டத்தில், கிறிஸ்தவர்கள் ஒவ்வொருநாளும் எப்படி வாழ்ந்தார்கள், சபைக் கூட்டங்கள் எப்படி இருந்தன, என்னென்ன கூட்டங்கள் நடத்தினார்கள், சபையின் நிர்வாக ஒழுங்கு எப்படி இருந்தது என்று பார்க்கப்போகிறோம். சுருக்கமாகச் சொல்வதானால், அவர்களுடைய சபை வாழ்க்கையைப் பார்க்கப்போகிறோம். சபை வரலாறு - 07 ஆதிக் கிறிஸ்தவர்களின் சபை வாழ்க்கை I. முன்னுரை II. தொடரும் வரலாறு  III. ஆதிச் சபை வாழ்க்கை 1. ஆராதனை 2. நிலத்தடி கல்லறைகள் IV. ஆராதனையின் பல்வேறு அம்சங்கள் 1. ஆதாரங்கள் V. புதிய ஏற்பாடு உருவான வரலாறு VI.  பேரரசில் மக்களின் கல்வியறிவு VII. ஆதிச் சபை வாழ்க்கை VIII. கிறிஸ்தவர்களின் குணங்கள் IX. ஆதிச் சபையின் நிர்வாக அமைப்புமுறை X. முடிவுரை


சபை வரலாறு - 07

ஆதிக் கிறிஸ்தவர்களின் சபை வாழ்க்கை

I.முன்னுரை

சபை வரலாற்றைப்பற்றிய தொடரின் ஏழாம் பாகத்துக்கு நான் உங்களை அன்புடன் வரவேற்கிறேன். முழுத் தொடரில் அப்போஸ்தலர் காலத்திலிருந்து சீர்திருத்த காலம்வரையிலான சபை வரலாற்றை நாம் பார்ப்போம். சபை வரலாற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கும், எளிதாக மனதில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாக

  1. கி.பி 30முதல் கி.பி 100வரை அப்போஸ்தலர் காலத்துச் சபை என்றும்,
  2. கி.பி 100முதல் கி.பி 312வரை (அதாவது கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனாகும்வரை) ஆதிச் சபை என்றும்,
  3. கி.பி 312முதல் கி.பி 1000வரை (அதாவது கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனானபிறகு) ஆரம்ப காலக் கிறிஸ்தவப் பேரரசு என்றும்,
  4. கி.பி 1000முதல் கி.பி 1500வரை (அதாவது சீர்திருத்தகாலம்வரை) பிந்தைய காலக் கிறிஸ்தவப் பேரரசு என்றும் நான்கு காலகட்டங்களாக நான் பிரித்துக்கொள்கிறேன்.

கிறிஸ்தவம் தழைத்து, கோலோச்சிய காலத்தை, நான் கிறிஸ்தவப் பேரரசின் காலம் என்கிறேன். சில மிஷனரிகளைப்பற்றிய காணொளிகளை நான் ஏற்கெனவே வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன். இவர்களெல்லாம் கி.பி.1500க்குப் பிந்தையவர்கள், அதாவது சீர்திருத்தக்காலத்துக்குப் பிந்தையவர்கள்.

ஆரம்பத்திலேயே நான் ஒன்றிரண்டு காரியங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு வருடத்தைக் குறிப்பிடும்போது அது மிகத் துல்லியமான வருடம் என்று நினைக்க வேண்டாம். இன்று ஒருவன் 1950ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிறந்தான் என்று சொல்வதுபோல், சபை வரலாற்றின் நாட்களையோ, மாதங்களையோ, வருடங்களையோ துல்லியமாகக் கூறமுடியாது. தோராயமாக, ஏறக்குறைய, கிட்டத்தட்ட என்றுதான் கூறமுடியும். எனவே, கி.பி 100 என்று சொல்லும்போது அது 90ஆகவும் இருக்கலாம், 105ஆகவும் இருக்கலாம். இதுவரை நாம் சபை வரலாற்றைப்பற்றி ஆறு பாகங்கள் பார்த்திருக்கிறோம்.

முதல் பாகம் சபை வரலாற்றைப்பற்றிய ஒரு முன்னுரை, ஓர் அறிமுகம். முதல் பாகத்தில் சபை வரலாறு என்றால் என்ன, சபை வரலாற்றைப் படிப்பதில் உள்ள சிக்கல்கள் என்ன, சபை வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் படிக்க வேண்டும், சபை வரலாற்றை அறிவதற்கான ஆதாரங்கள் என்ன, சபை வரலாற்றை ஏன் படிக்க வேண்டும் என்று பார்த்தோம். இரண்டாம் பாகம் ஆண்டவராகிய இயேசு பரமேறியதிலிருந்து அப்போஸ்தலனாகிய யோவான் மரித்த கி.பி 100வரையிலான அப்போஸ்தலர் காலச் சபை வரலாறு. இது சபை வரலாற்றின் முதல் கால கட்டம். மூன்றாம் பாகம் கி.பி. 100லிருந்து உரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் கி.பி 312இல் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட காலம்வரையிலான ஆதிச் சபை வரலாறு. இது சபை வரலாற்றின் இரண்டாம் காலகட்டம். அந்தக் கால கட்டத்தில் கிறிஸ்தவம் எப்படிப் பரவியது என்று மூன்றாம் பாகத்திலும், அதே கால கட்டத்தில், ஆதிச் சபைக்கு நேரிட்ட சித்திரவதையைப்பற்றி நான்காம் பாகத்திலும், அதே கால கட்டத்தில் ஆதிக் கிறிஸ்தவர்கள் எதை விசுவாசித்தார்கள், தங்கள் விசுவாசத்தை எப்படித் தற்காத்தார்கள் என்று ஐந்தாம் பாகத்திலும், அதே கால கட்டத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க சில சபைப் பிதாக்களையும், அவர்களுடைய நூல்களையும்பற்றி ஆறாம் பாகத்திலும் பார்த்தோம்.

II.தொடரும் வரலாறு

சபை வரலாற்றைப்பற்றிய இந்த ஏழாம் பாகத்திலும் அதே காலகட்டத்தில், அதாவது கி.பி 100முதல் கி.பி 312வரையிலான இரண்டாம் காலகட்டத்தில், கிறிஸ்தவர்கள் ஒவ்வொருநாளும் எப்படி வாழ்ந்தார்கள், சபைக் கூட்டங்கள் எப்படி இருந்தன, என்னென்ன கூட்டங்கள் நடத்தினார்கள், சபையின் நிர்வாக ஒழுங்கு எப்படி இருந்தது என்று பார்க்கப்போகிறோம். சுருக்கமாகச் சொல்வதானால், அவர்களுடைய சபை வாழ்க்கையைப் பார்க்கப்போகிறோம்.

ஆரம்பத்திலேயே நான் இன்னொன்றையும் தெளிவாக்க விரும்புகிறேன். அந்த நாட்களில் கிறிஸ்தவர்களின் சபை வாழ்க்கையைப்பற்றிச் சொல்லும்போது, எல்லா இடங்களிலும், எல்லாச் சபைகளிலும், எல்லாக் காலங்களிலும் எந்த மாற்றமுமின்றி எல்லாரும் ஒரேமாதிரி வாழ்ந்தார்கள் என்றோ, கூட்டங்கள் ஒரேமாதிரி இருந்தன என்றோ நான் சொல்ல முனையவில்லை. அன்று கிறிஸ்தவர்கள் பொதுவாக எப்படி வாழ்ந்தார்கள், பொதுவாக கிறிஸ்தவக் கூட்டங்கள் எப்படி இருந்தன என்று பொதுப்படையாகத்தான் சொல்ல முடியும். ஏனென்றால், இந்தக் கால கட்டத்தில் கிறிஸ்தவம் ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியாவின் மத்தியதரைக் கடலைச் சுற்றியிருந்த நிலப்பரப்புகளை உள்ளடக்கிய பரந்துவிரிந்த உரோமப் பேரரசுக்கு உள்ளேயும், வெளியும் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. பல்வேறு கண்டங்களையும், பல்வேறு நிலப்பரப்புகளையும், பல்வேறு புவியியலையும் உள்ளடக்கிய உரோமப் பேரரசில் பல்வேறு இனங்கள் இருந்தார்கள். ஒரு கட்டத்தில் கிரேக்கமும், பின்னர் இலத்தீனும் பேரரசெங்கும் ஒருங்கிணைக்கும் மொழியாக இருந்தபோதும், பல்வேறு இடங்களில் மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசினார்கள்.

எனவே, ஆதிக் கிறிஸ்தவர்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் வாழ்ந்தார்கள் என்று நான் சொல்லும்போது எந்த விதிவிலக்குமின்றி எல்லாரும் ஒரேமாதிரி வாழ்ந்தார்கள் என்று நினைக்க வேண்டாம். நான் பொதுப்படையாகப் பேசுகிறேன். கிறிஸ்தவர்களின் அன்றாட பொதுவான நடைமுறை, பொதுவான போக்கு, பொதுவான வாழ்க்கை எப்படி இருந்தது என்றுதான் சொல்ல முடியும். அவர்களிடையே பன்முகத்தன்மை இருந்தது என்பதை மறக்க வேண்டாம்.

III.ஆதிச் சபை வாழ்க்கை

1. ஆராதனை

சரி, முதலாவது ஆதிச் சபையின் வழிபாடுகள், ஆராதனைகள், எப்படி இருந்தன என்று பார்ப்போம்.

அவர்களுடைய ஆராதனையைப்பற்றி எல்லாருக்கும் பரவலாகத் தெரிந்த ஒரு தகவலை முதலாவது சொல்லுகிறேன். ஆதிச் சபைக் கிறிஸ்தவர்கள் அன்று பிரதானமாக, முக்கியமாக, வீடுகளில்தான் கூடினார்கள். அவர்கள் அன்று ஓரிடத்தில் ஒன்றாகக் கூடுவதற்கு வீடுகளைத்தவிர வேறு இடங்கள் இல்லை. பிரதானமாக வீடுகள்தான் இருந்தன.

“பவுல் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக்கொண்டுவந்தான். இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.” இது அப்போஸ்தலர் நடபடிகள் 19:9, 10. அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்துவில் திறன்னு என்பவரின் பள்ளியில் இரண்டு வருடம் சீடர்களுக்குக் கற்பித்தார் என்று இந்த வசனங்களின்மூலம் அறிகிறோம். “பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.” இது அப்போஸ்தலர் நடபடிகள் 28:30, 31. பவுல் உரோம் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்து, இரண்டு வருடம் சீடர்களுக்குக் கற்பித்தார் என்று இந்த வசனங்கள் கூறுகின்றன.

வசதி இருந்தபோது, வாய்ப்பு கிடைத்தபோது அவர்கள் பெரிய இடங்களிலும் கூடினார்கள் என்று இந்த வசனங்களிலிருந்து தெரிகிறது. ஆனால், ஆதிச் சபையார் அன்று பெரும்பாலும் பிரதானமாக வீடுகளில்தான் கூடினார்கள். கூடுவதற்கு வீடுகள்தான் இருந்தன, கிடைத்தன.

அவர்கள் அன்று பெரும்பாலும் வீடுகளில்தான் கூடினார்கள் என்றால் ஒன்று, முதல் சில நூறு ஆண்டுகளில் கிறிஸ்தவர்களின் கூடுகைகள் பெரும்பாலும் சிறியதாகவே இருந்தன என்று தெரிகிறது. நிறையப்பேர் இருந்திருந்தால் அவர்களால் வீடுகளில் கூடியிருக்க முடியாது. இரண்டு, நிறையப்பேர் ஒரே இடத்தில் கூடுவதற்கு ஏற்ற பெரிய கட்டிடங்கள் அன்று அவர்களிடம் இல்லை.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். வீடுகளில் கூடுவதுதான் சிறந்தது அல்லது ஆவிக்குரியது என்பதால் அவர்கள் வீடுகளில் கூடவில்லை. ஆதிச் சபை வளர்ந்து எண்ணிக்கை பெருகியபோது, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த வழிபாட்டு இடங்களைக் கட்டிக்கொள்ள அனுமதி கிடைத்தவுடன், பெரிய கட்டிடங்களையும், ஆலயங்களையும் கட்டத் தொடங்கினார்கள். அது வேறு. ஆனால், ஆதிச் சபையில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் கூடி வந்ததற்குக் காரணம் என்னவென்றால், அன்று அதுதான் நடைமுறையில் சாத்தியமாக இருந்தது.

2. நிலத்தடி கல்லறைகள்

கிறிஸ்தவர்களின் கூடுகைகளைப்பற்றி இன்னொரு அம்சத்தைப் பார்க்க வேண்டும். உரோமிலும், வேறு பல நகரங்களிலும் அன்று நிலத்தடி கல்லறைகள் இருந்தன. நிலத்தடி கல்லறைகளைப்பற்றி நான்காம் பாகத்தில் பார்த்தோம். இந்தக் காலகட்டத்தில் இறந்தவர்களை உரோம் நகரத்திற்குள் அடக்கம்செய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அஞ்ஞானிகள் இறந்தவர்களை எரித்தார்கள். எனவே, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் எழவில்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை எரிக்கும் வழக்கத்தை ஏற்கவில்லை. அரசின் சட்டத்தின்படி உரோம் நகரக்குள்ளே அடக்கம் செய்யவும் முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் உரோம் நகருக்கு வெளியே குன்றுகளின் பக்கவோரங்களில் அல்லது பயன்பாட்டில் இல்லாத கற்சுரங்கங்களின் அருகே சுரங்கங்கள் தோண்டி இறந்தவர்களை அங்கு அடக்கம்செய்தார்கள். 170 கிலோமீட்டர் தூரத்துக்கு சுமார் 7,50,000 நிலத்தடி கல்லறைகள் அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. கேடாகோம்ப்ஸ் என்றழைக்கப்படும் இந்த நிலத்தடி கல்லறைகளில் எந்த இரகசியமும் இல்லை. ஏனென்றால், அரசு அதிகாரிகளுக்குத் தெரியாமல் இவ்வளவு நீளத்துக்குச் சுரங்கம் தோண்டமுடியுமா? 7,50,000 உடல்களைப் புதைக்கமுடியுமா? அது மட்டும் அல்ல. இந்த நிலத்தடி கல்லறைகளை, அரசரின் சட்டத்தின்படி, அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும்.

கிறிஸ்தவர்கள் அன்று இந்த நிலத்தடிக் கல்லறைகளில் சில நேரங்களில் இரகசியமாகத் தலைமறைவாகக் கூடினார்கள் என்று அறியாமையினால் சிலர் சொல்வதுண்டு. நம் உறவினரோ, நண்பரோ இறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து இன்று நாம் அவருடைய கல்லறைக்குப் போய்வருவதைபோல், அன்று தன் உறவினர் இறந்தநாளில் ஒருவேளை ஒருவரோ அல்லது ஒரு சிலரோ அவருடைய கல்லறைக்குச் சென்று அங்கு ஜெபித்திருக்கலாம், பாடல் பாடியிருக்கலாம், வேதம் வாசித்திருக்கலாம். இதை ஒருவேளை சிலர் கிறிஸ்தவர்களின் வழக்கமான கூடுகை என்று சிலர் தவறாக நினைத்திருக்கலாம். கிறிஸ்தவர்கள் அன்று தலைமறைவாக, இரகசியமாக, நிலத்தடிக் கல்லறைகளில் கூடிவரவில்லை.

IV.ஆராதனையின் பல்வேறு அம்சங்கள்

அவர்களுடைய ஆராதனையின் பல்வேறு அம்சங்களைப்பற்றித் தெரிந்துகொள்ள என்ன ஆதாரம் இருக்கிறது என்ற கேள்வி எழும். சில ஆதாரங்கள் உள்ளன.

1. ஆதாரங்கள்

a.நிலத்தடி கல்லறைப் படம்

சரி, அன்று கிறிஸ்தவர்கள் ஒன்றாகக் கூடிவந்தபோது என்ன செய்தார்கள்? இதை இன்னொரு விதமாகவும் கேட்கலாம். அவர்களுடைய வழிபாடு அல்லது ஆராதனை எப்படி இருந்தது? இன்று நாம் ஆராதிப்பதுபோல் அவர்கள் ஆராதித்தார்களா அல்லது வித்தியாசமாக ஆராதித்தார்களா?

இந்தப் படங்களைக் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனியுங்கள். இது கேடாகோம்ப்ஸ் நிலத்தடி கல்லறையைப்பற்றிய ஒரு படம். இந்தப் படத்தில் ஒருவர் எதையோ, நம் வார்த்தைகளில் சொல்வதானால், ஆராதிக்கிறார். இதைப் பார்க்கும்போது இது நிச்சயமாக கிறிஸ்தவ ஆராதனை என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இது இன்று நமக்கு மிகவும் பரிச்சயமான முறை. ஒருவர் தன் கைகளை வானத்துக்கு நேரே உயர்த்தி ஜெபிப்பதுபோல் தெரிகிறது. ஆனால், இந்த ஒரேவொரு படத்தை வைத்துக்கொண்டு, “அன்று கிறிஸ்தவர்கள் தேவனை ஆராதிப்பதற்காகக் கூடினார்கள் என்று சொல்ல முடியுமா?” என்ற கேள்வி கட்டாயம் எழும். அந்தக் கேள்வி நியாயமானதுதான். சரிதான், ஒரேவொரு படத்தை வைத்துக்கொண்டு நாம் அந்த முடிவுக்கு வர முடியாது.

b.பிளினியின் கடிதம்

வேறு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? ஆம், இருக்கிறது, கிறிஸ்தவர்கள் ஒன்றாகக் கூடியபோது என்ன செய்தார்கள் என்ற விவரங்கள் ஆசியா மைனரில் பித்தினியாவின் ஆளுநர் பிளினி 112ஆம் ஆண்டு எழுதிய ஒரு கடிதத்தில் உள்ளன. அந்தக் கடிதம் கிறிஸ்தவர்கள் எப்படிக் கூடினார்கள், கூடிவந்தபோது என்ன செய்தார்கள் என்பதை விவரிக்கிறது.

பவுலும், அவருடைய கூட்டாளிகளும் “பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்” என்று அப்போஸ்தலர் நடபடிகள் 16:7லும், “பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்கள்” என்று பேதுரு தன் முதல் நிருபம் 1:1லும் பித்தினியாவைப்பற்றி எழுதியிருப்பதை நாம் வாசிக்கிறோம்.

ஆளுநர் பிளினி கிறிஸ்தவர் இல்லை. இந்த ஆளுநர் ஓர் அஞ்ஞானி, கிறிஸ்தவர்களை சித்திரவதை செய்தவர். பித்தினியாவின் ஆளுநராக இருந்த இவர் கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகளை நன்றாக அறிந்திருந்தார். இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர் அன்றைய உரோமப் பேரரசன் ட்ரோஜனுக்கு எழுதிய கடிதத்தில் கிறிஸ்தவர்களின் கூடுகைகளைப்பற்றி எழுதியிருக்கிறார். இந்த ஆவணத்திலிருந்து நாம் பல காரியங்களை அறியலாம். இந்தப் பிளினி என்ன எழுதியிருக்கிறார்?

நண்பர்களின் சாட்சியைவிட, எதிரிகளின் சாட்சிக்கு அதிக பலம் உண்டு. இதோ! இவர் என்ன எழுதியிருக்கிறார் என்று பாருங்கள். “கிறிஸ்தவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் அதிகாலையில் ஓரிடத்தில் கூடிவந்து, கடவுளுக்குப் பாடுவதுபோல் கிறிஸ்துவுக்கு மாறிமாறிப் பாடுகிறார்கள். திருட்டு, மோசடி, நம்பிக்கைத்துரோகம், ஏமாற்றுதல், விபச்சாரம்போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று உறுதிமொழி எடுக்கிறார்கள். இதற்குப்பின் அவர்கள் கலைந்து சென்றுவிட்டு, திரும்பவும் கூடிவந்து, ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எளிமையான, அன்பின் விருந்தைச் சாப்பிடுகிறார்கள். நான் கிறிஸ்தவக் கூட்டத்தைச் சார்ந்த இரண்டு உதவிக்காரப் பெண்களைப் பிடித்து, சித்திரவதை செய்து அங்கு நடப்பதை அறிய முற்பட்டேன். அவர்கள் ஏதொவொருவிதமான மூடநம்பிக்கையைப் பின்பற்றுவதுபோல் தோன்றுகிறது,” என்று எழுதியிருக்கிறார்.

ஆதிக் கிறிஸ்தவர்களின் கூடுகைகளைப்பற்றி ஆளுநர் பிளினி எழுதியிருக்கும் இந்தக் கடிதம் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், அன்று கிறிஸ்தவர்கள் எப்படிக் கூடினார்கள், எங்கு கூடினார்கள், கூடி வந்தபோது என்ன செய்தார்கள் என்ற பல விவரங்கள் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளன.

  1. முதலாவது, கிறிஸ்தவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், கூடினார்கள் என்று கூறுகிறார். அநேகமாக இந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாகவும், நேரம் வேலைக்குப் போவதற்குமுன் அதிகாலை நேரமாகவும் இருக்கலாம். உரோமப் பேரரசில் அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளல்ல, அது வேலை நாள். எனவே, கிறிஸ்தவர்கள் கூடிவர வேண்டுமானால், வேலைக்குச் செல்வதற்குமுன் சீக்கிரமாகவே கூடிவர வேண்டியிருந்தது. இயேசு வாரத்தின் முதல் நாளில் விடியற்காலையில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கும், ஆதிக் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் கூடிவந்தார்கள் என்பதற்கும் தொடர்பு இருப்பது தெரிகிறது. ஒன்று, கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் கூடிவந்தார்கள் என்று பிளினி கூறுகிறார்.

  2. இரண்டாவது, அவர்கள் இயேசுவைத் தேவனாகப் பாவித்து, அங்கீகரித்து அவருக்குப் பாடல்கள் பாடியதாகவும் பிளினி கூறுகிறார். ஆம், அவர்கள் இயேசுவை ஆராதித்தார்கள். பாடல்கள் ஆராதனையின் இணைபிரியாத ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. பாடல்கள் சபை வழிபாட்டின் ஓர் அங்கமாக இருந்தன என்று பிளினி கூறுகிறார்.

  3. மூன்றாவது, அவர்கள் தேவபக்தியுள்ள, ஒழுக்கமான வாழ்க்கை, வாழத் தங்களை அர்ப்பணித்தார்கள் என்று பிளினி எழுதுகிறார்.

  4. நான்காவது, அவர் திருவிருந்தைப்பற்றி எழுதுகிறார். அவர் கர்த்தருடைய பந்தி என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் போயிருக்கலாம். ஆனால், அவர் அதைத்தான் குறிப்பிடுகிறார். கிறிஸ்தவர்களின் கூடுகைகளில் முதல் பகுதி, இரண்டாவது பகுதி என இரண்டு பகுதிகள் இருந்ததாகவும், முதல் பகுதி முடிந்தவுடன் ஓர் இடைவெளி இருந்ததாகவும், அதற்குப்பின் அவர்கள் கூடி திருவிருந்தில் பங்குபெற்றதாகவும் அவர் விவரிக்கிறார். ஆராதனையின் முதல் பகுதியில் அவிசுவாசிகள், அஞ்ஞானிகள், பார்வையாளர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஆதிச் சபையில் இதுதான் சபைகளின் பொதுவான பழக்கமாக இருந்தது. ஞானஸ்நானம் பெற்று, சபையின் உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்படாதவர்கள் முதல் பகுதி முடிந்தவுடன் கூட்டத்திலிருந்து வெளியேறினார்கள். அப்போது ஓர் இடைவெளி. அதற்குப்பிறகு இரண்டாவது பகுதி ஆரம்பம். ஞானஸ்நாம் பெற்று, சபையின் உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்தப் பகுதியில் கலந்துகொண்டார்கள். இதற்குப் பல காரணங்கள் இருந்தன.

ஆதிக் கிறிஸ்தவர்களின் இந்த அனுபவங்களைப்பற்றி பேசும்போது ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.

அவர்களுடைய இந்த முறைகளையும், அனுபவங்களையும் நாம் அறியும்போது, “ஆஹா! இது மிக அருமையாக இருக்கிறதே! இன்று நாம் கூடிவருவதுபோல்தான் அவர்களும் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில்தான் கூடிவந்திருக்கிறார்கள். தேவபக்தியுள்ள, ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதற்குத் தங்களை அர்பணித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்று பிரசங்கித்திருக்கிறார்கள். அதுபோல நாமும் இன்று கூட்டங்களில் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறோம். அவர்கள் இயேசுவைத் துதித்துப் பாடி, ஆராதித்திருக்கிறார்கள். நாம் செய்கிற காரியங்களையே அவர்களும் செய்திருக்கிறார்கள். அருமை! அற்புதம்! நாம் அவர்களுடைய அடிச்சுவடுகளில் சரியாக நடக்கிறோம். திருவிருந்தில் பங்குபெற்றிருக்கிறார்கள். நாமும் அப்படியே செய்கிறோம்,” என்று நாம் பரவசமடைகிறோம். “ஆதிக் கிறிஸ்தவர்களில் பழக்கங்களையே நாம் தொடர்கிறோம்,” என்று பெருமிதம்கொள்கிறோம். நல்லது.

கர்த்தருடைய பந்திக்கு வரும்போது, நாம் அவர்களைப்போல் முதல் பகுதி, அதன்பின் ஓர் இடைவெளி, அதற்குப்பிறகு இரண்டாம் பகுதி என்று செய்வதில்லை. அவர்களுடைய பழக்கத்தையும், முறைகளையும் படிக்கும்போது, அறியும்போது, சிலர், “நாமும் அப்படித்தான் செய்ய வேண்டும்,” என்று சொல்லக்கூடும். இதுபோன்ற காரியங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு காரியத்தை உருவாக்குவதற்குமுன், “இது வேதாகமத்தில் திட்டவட்டமாகச் சொல்லப்பட்டிருக்கிறதா?” என்று ஆராய வேண்டும். வேதாகமத்தில் சொல்லப்படாதிருந்தும், நம் முற்பிதாக்கள் செய்தார்கள் என்பதற்காக நாம் அதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றத் தேவையில்லை. “நீங்கள் கூடிவரும்போது முதல் பகுதியில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். அதன்பின் ஞானஸ்நானம் பெற்று சபையின் உறுப்பினர்களாக இல்லாதவர்களை வெளியே அனுப்பிவிட்டு, சபையின் விசுவாசிகள் மட்டும் இரண்டாவது பகுதியில் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறவேண்டும்,” என்று வேதாகமத்தில் எங்கும் கட்டளையாகச் சொல்லப்படவில்லை. அதே நேரத்தில் இப்படி இரண்டு பகுதிகளாக ஆசரிக்கக்கூடாது என்றும் சொல்லப்படவில்லை. “இப்படிச் செய்” அல்லது “இப்படிச் செய்யாதே,” என்று வேதாகமத்தில் எந்தக் கட்டளையும் இல்லை.

இதுதான் கிறிஸ்டியன் லிபர்ட்டி என்று சொல்லப்படும் கிறிஸ்தவனின் சுதந்திரம். கிறிஸ்தவர்கள் கூடிவர வேண்டும், சேர்ந்து ஜெபிக்க வேண்டும், தேவனை ஆராதிக்க வேண்டும், கூடி வருகையில் தேவனைத் துதித்துப் பாட வேண்டும், தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்க வேண்டும், ஒருவரோடொருவர் ஐக்கியம்கொள்ள வேண்டும், கர்த்தருடைய பந்தியை ஆசரிக்க வேண்டும் என்று வேதாகமம் கோருகிறது, கூறுகிறது. ஆனால், இவைகளைக் கிறிஸ்தவர்கள் ஒரு நாளில் அல்லது ஒரு வாரத்தில் எத்தனை தடவை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற ஒழுங்குமுறை வரையறுக்கப்படவில்லை. எனவே, சிலர் இன்று, “ஆதிச் சபையில் கிறிஸ்தவர்கள் செய்ததுபோலவே நாங்களும் திருவிருந்தைக் கொண்டாடப்போகிறோம்,” என்று சொன்னால் அது தவறில்லை. ஆனால், “அவர்கள் செய்ததுபோலவேதான் நாமும் இன்று செய்ய வேண்டும்,” என்று வற்புறுத்துவது தவறு. “இப்படித்தான் செய்ய வேண்டும்” அல்லது “இப்படிச் செய்யக்கூடாது” என்ற கட்டளை இல்லை. எனவே, ஆதிக் கிறிஸ்தவர்கள் ஒரு குறிப்பிட்ட பயிற்சியைப் பின்பற்றினார்கள் என்பதற்காக நாம் அதைக் கண்ணைமூடிக்கொண்டு பின்பற்றவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டிய அவசியம் இல்லை. நாம் பின்பற்ற வேண்டியது வேதமும், வேதாகமத்தின் கட்டளையும். அதுவே நம்மை நியாயந்தீர்க்கும், வழிநடத்தும்.

  1. ஐந்தாவது, கிறிஸ்தவர்களின் விசுவாசம் மூட நம்பிக்கைகள் என்று தான் நினைத்ததாக பிளினி குறிப்பிடுகிறார். அவர் ஓர் அஞ்ஞானி. அவர் வேறு எப்படி நினைப்பார்?

c.ஜஸ்டின் மார்ட்டிரின் தன்விளக்க நூல்

கிறிஸ்தவர்களின் கூடுகைகளைப்பற்றி இரண்டாம் நூற்றாண்டில், சுமார் 150இல், வாழ்ந்த ஜஸ்டின் மார்ட்டிர் என்ற பரிசுத்தவான் தன் முதல் தன்விளக்கவாத நூலின் 157ஆவது பகுதிகளில் பின்வருமாறு கூறுகிறார். இது கொஞ்சம் நீண்ட பகுதி. ஆயினும், நாம் அவசியம் பார்க்க வேண்டிய பகுதி. ஞாயிறு என்று அழைக்கப்படும் நாளில், நகரங்களில் அல்லது நாட்டுப்புறங்களில் வசிக்கும் எல்லாக் கிறிஸ்தவர்களும் ஓரிடத்தில் ஒன்றாகக் கூடிவருவது வழக்கம். அப்போது, அப்போஸ்தலர்களுடைய வாழ்க்கையின் நினைவுக் குறிப்புகள் அல்லது தீர்க்கதரிசிகளின் எழுத்துக்கள், நேரம் அனுமதிக்கும்வரை, வாசிக்கப்படுகின்றன. வாசித்து முடித்தவுடன் சபைத் தலைவர் எழுந்து, வாசிக்கப்பட்ட வார்த்தைகளின்படி வாழ அறிவுறுத்துகிறார், வலியுறுத்துகிறார். அதன்பின் நாங்கள் அனைவரும் ஒன்றாக எழுந்து நின்று, ஜெபிக்கிறோம். நாங்கள் ஜெபித்துமுடிந்தபின், அப்பமும் திராட்சைரசமும் எல்லாருக்கும் வழங்கப்படுகிறது. தலைவர், நாங்கள் முன்பு ஜெபித்ததுபோல, தன் திறமைக்கு ஏற்ப ஜெபங்களையும், ஸ்தோத்திரங்களையும் ஏறெடுக்கிறார். கூடியிருக்கும் எல்லாரும் ஆமென் என்று கூறி ஜெபத்தையும், ஸ்தோத்திரங்களையும் ஆமோதிக்கிறார்கள். அதன்பின் அப்பமும், திராட்சைரசமும் கூடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. கூடுகையில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு அப்பமும், திராட்சைரசமும் மூப்பர்கள்மூலமாகக் கொடுத்தனுப்பப்படுகிறது. மேலும், வசதி படைத்தவர்கள், விருப்பம் உள்ளவர்கள், தங்கள் தங்கள் மனவிருப்பத்தின்படி (அவரவர் தாங்கள் தெரிந்துகொண்ட வகையின்படி ) காணிக்கை கொடுக்கிறார்கள். இவ்வாறு சேகரிக்கப்படும் பணம் தலைவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆதரவற்ற அனாதைகள், கைவிடப்பட்ட விதவைகள், நோயுற்று வறியவரானவர்கள், தேவையில் உள்ளவர்கள், கட்டுகளில் இருப்பவர்கள், எங்களிடையே தங்கியிருக்கும் அந்நியர்கள் அனைவரையும் தலைவர் கவனித்துக்கொள்கிறார். ஒரு வார்த்தையில் சொல்வதானால், தேவையுள்ள அனைவரையும் அவர்கள் கவனித்துக்கொள்கிறார்கள்.

ஞாயிறுதான் நாங்கள் அனைவரும் பொதுவாகக் கூடிவரும் நாள்; ஏனென்றால், முதலாம் நாளில்தான் தேவன் இருளிலும், பொருளிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, உலகைப் படைத்தார். நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவும் அந்த நாளில்தான் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். ஏனென்றால், சனிக்கிழமைக்கு முந்தைய நாளில் அவர் சிலுவையில் அறையப்பட்டார்; சனியின் (சனிக்கிழமை) நாளுக்கு மறுநாளில், அதாவது சூரியனின் நாளில் அவர் தம் அப்போஸ்தலர்களுக்கும், சீடர்களுக்கும் தரிசனமாகி, அவர்களுக்குப் போதித்தார். அவர்களுக்குப் போதித்தவைகளையே நாங்களும் உங்கள் பரிசீலனைக்காக உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.”

இது ஆச்சரியமாக இல்லையா? பதினெட்டு நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்று, ஆதிக் கிறிஸ்தவர்கள் எப்படிக் கூடினார்கள், கூடிவந்தபோது என்ன செய்தார்கள் என்பதைப் பார்ப்பது அற்புதம் இல்லையா? ஜஸ்டின் மார்ட்டிர் எழுதியிருப்பவைகளில் சில முக்கியமான விஷயங்கள் பளிச்சென்று தெரிகின்றன.

அவர் கூறுகிற “காலமும் நேரமும்” என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். காலமும் நேரமும் அனுமதிக்கும்வரை என்றால் நாம் ஏற்கெனவே பார்த்தபடி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளல்ல. அன்றைக்கும் அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். எனவே, அதிகாலையிலேயே கூடிவந்து தேவனை ஆராதித்தார்கள். எனவே, அவர்கள் காலத்தையும் நேரத்தையும் கருத்தில் கொள்ளவேண்டியிருந்தது. ஒருவேளை, அவர்கள் ஓய்வுநாளாகிய சனிக்கிழமை கூடி வந்திருந்தால் எந்தவித நேரக் கட்டுப்பாடும் இல்லாமல் கூடியிருக்கலாமோ! ஏனென்றால், உரோமப் பேரரசில் சனிக்கிழமை விடுமுறை நாள்.

1. ஞாயிற்றுக்கிழமை

முதலாவது ஆதிக் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடினார்கள். கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைதான் கூடினார்கள் என்பதை வேதாகமத்திலிருந்தும், வரலாற்றிலிருந்து ஐயம்திரிபுர நிரூபிக்கலாம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்கள் ஞாயிற்றுக்கிழமை கூடியதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். யூதமதத்திலிருந்தும், பிற மதங்களிலிருந்தும் தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக அவர்கள் ஞாயிற்றுக்கிழமை கூடிவந்திருக்கலாம். யூதர்கள் சனிக்கிழமை ஓய்வுநாளை ஆசரித்தார்கள் என்று நமக்குத் தெரியும். ஆண்டவராகிய இயேசு ஞாயிற்றுக்கிழமை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நமக்குத் தெரியும். எனவே, அந்த நாளைக் கனம்பண்ணி, அங்கீகரிக்கும்விதமாக அவர்கள் ஞாயிற்றுக்கிழமை கூடிவந்திருக்கலாம். ஜஸ்டின் மார்ட்டிர் இதைச் சுட்டிக்காட்டுகிறார். “இதனால்தான் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஞாயிற்றுக்கிழமை கூடிவருகிறோம்,” என்று அவர் குறிப்பிடுகிறார். இதற்குப் புதிய ஏற்பாட்டில் போதுமான ஆதாரங்கள் உள்ளன; சபை வரலாற்றிலும் தேவையான சான்றுகள் உள்ளன. இப்போது சில கிறிஸ்தவர்கள், “இல்லை, இல்லை, நாம் ஞாயிற்றுக்கிழமை கூடிவரக்கூடாது; மாறாக நாம் யூதர்களைப்போல் ஓய்வுநாளாகிய சனிக்கிழமை அல்லது வேறொரு நாளில்தான் கூடிவர வேண்டும்,” என்று சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நான் என்ன சொல்வோம்? கர்த்தருடைய பந்தியை ஆதிக் கிறிஸ்தவர்கள் எப்படிக் கடைப்பிடித்தார்கள் என்று நாம் பார்த்தோம். அதை இன்று நாம் எப்படிக் கையாளலாம் என்றும் பார்த்தோம். அதுபோலவே ஞாயிற்றுக்கிழமை கூடிவருவதையும் பார்க்கவேண்டும். விசுவாசிகள் ஞாயிற்றுக்கிழமைதான் கூடிவர வேண்டும் என்று வேதாகமத்தில் எந்தக் கட்டளையும் இல்லை. விசுவாசிகள் கூடிவர வேண்டும் என்ற கட்டளை இருக்கிறது. கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை கூடிவந்தார்கள் என்ற ஒரு மாதிரி, ஒப்பனை, நடபடிகளின் புத்தகத்தில் பல இடங்களில் காணப்படுகிறது. வேதாகமம் என்ன விவரிக்கிறது என்பதையும், என்ன கட்டளையிடுகிறது என்பதையும் நாம் வேறுபடுத்திப்பார்க்க வேண்டும். ஒன்று விவரம், இன்னொன்று கட்டளை. கட்டளையை மாற்ற நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், விவரங்களைப்பொறுத்தவரை கிறிஸ்தவர்களுக்குச் சுதந்திரம் உண்டு. எப்படியிருப்பினும், வேதாகமத்தில் காணப்படும் மாதிரியின்படியும், வரலாற்றின்படியும் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடினார்கள்.

2.ஆதிச் சபையில் வேதாகமம்

அடுத்து, அன்றைய கிறிஸ்தவர்கள் கூடிவந்தபோது அப்போஸ்தலர்களின் எழுத்துக்களையும், பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்களையும் படித்ததாக அவர் எழுதுகிறார். அன்று அவர்கள் கூடிவந்தபோது வேதவாக்கியங்களை வாசித்தார்கள் என்றும், இன்றைய பாஸ்டர்களைப்போல் அன்று சபைத் தலைவர்கள் பிரசங்கித்தார்கள் என்றும் தெரிகிறது. அவர்கள் பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களைப் படித்தார்கள். ஆனால், ஜஸ்டின் அப்போஸ்தலர்களின் எழுத்துக்களைப்பற்றியும் பேசுகிறார். நிச்சயமாக இதில் நற்செய்திகளும் அடங்கும் என்பது உறுதி. பவுல், பேதுரு, யாக்கோபு போன்றோர் எழுதிய நிருபங்கள் அன்று சுற்றில் இருந்தன. எல்லா நிருபங்களும் எல்லாச் சபைகளிலும் இருந்திருக்காது. ஏனென்றால், இன்று நம்மிடம் முழு வேதாகமம் இருப்பதுபோல் அவர்களிடம் வேதாகமம் இருக்கவில்லை என்பதை நான் சொல்லத் தேவையில்லை. ஆதியாகமம் முதல் திருவெளிப்பாடு வரையிலான அனைத்து புத்தகங்களும் அவர்களிடம் இல்லை. ஒருவேளை பழைய ஏற்பாடு ஒரு சிலரிடம் இருந்திருக்கலாம். ஆனால், முழுப் புதிய ஏற்பாடும் யாரிடமும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. பழைய ஏற்பாட்டு எபிரேயப் பிரதிகளும், புதிய ஏற்பாட்டின் சில புத்தகங்களின் கிரேக்கப் பிரதிகளும் சிலரிடம் இருந்திருக்கலாம். முழுமையான புதிய ஏற்பாடு இருந்திருக்காது. வெவ்வேறு சபைகளில் வெவ்வேறு புத்தகங்கள் இருந்திருக்கலாம்.

3. நேரம் அனுமதிக்கும்வரை

ஜஸ்டினின் இன்னொரு வார்தையைக் கவனியுங்கள். நேரம் அனுமதிக்கும்வரை வாசித்ததாகவும், பிரசங்கித்ததாகவும் ஜஸ்டின் கூறுகிறார். அன்று சபைத் தலைவர்கள் நீண்ட நேரம் பிரசங்கித்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அப்போஸ்தலர்களின் எழுத்துக்களையும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களையும் படிக்க வேண்டும், அதன் பிறகு சபைத் தலைவர் பிரசங்கிக்க வேண்டும். கேட்ட வசனங்களின் அடிப்படையில் சபைத் தலைவர் பிரசங்கிக்கிறார். விசுவாசிகள் அதன்படி நடக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார், வற்புறுத்துகிறார், கேட்ட சத்தியங்கள் அவர்களுடைய வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும் என்று சபைத் தலைவர் வேண்டுகிறார். நினைப்பூட்டுகிறார்.

4. எழுந்து நின்று ஜெபித்தார்கள்

அடுத்து, விசுவாசிகள் அனைவரும் எழுந்து நின்று ஜெபித்தார்கள் என்று கூறுகிறார். அதற்குப்பின் அவர்கள் கர்த்தருடைய பந்தியை ஆசரித்ததாகக் கூறுகிறார். இதில் சில சுவையான தகவல்கள் இருக்கின்றன என்பதைக் கவனித்தீர்களா? கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாத விசுவாசிகளுக்காகச் செய்யப்பட்டிருந்த ஏற்பாட்டைக் கவனித்தீர்களா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கர்த்தருடைய இராப்போஜனத்தில் பயன்படுத்தப்பட்ட சில அப்பத்துண்டுகளையும், கொஞ்சம் திராட்சை ரசத்தையும் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத சபையின் உறுப்பினர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். கூட்டத்தில் இறுதியாக காணிக்கை எடுக்கப்பட்டதையும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த விவரங்களை அறியும்போது, “இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் சபைக் கூட்டங்கள் இப்படித்தானே நடக்கின்றன!” என்று மகிழ்கிறோம். நிச்சயமாக நாம் இதைப் பாராட்டுகிறோம். ஆனால், உலகெங்கும் இப்படித்தான் நடக்கிறது என்று நான் சொல்லவில்லை. பெரும்பாலும் என்று சொல்லலாம். ஏனென்றால், உலகின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைதான் கூடுகிறார்கள். கூடிவரும்போது, அவர்கள் தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறார்கள். ஒருவர் தேவனுடைய வார்த்தையைப்பற்றிப் பேசுகிறார். குறிப்பாக தேவனுடைய வார்த்தையை நம் வாழ்வில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்று அவர் விரித்துரைக்கிறார். விசுவாசிகள் எழுந்து நின்று ஜெபிக்கிறார்கள். கர்த்தருடைய பந்தியில் பங்குபெறுகிறார்கள். சபை மக்களின் நன்மைக்காக காணிக்கை எடுக்கிறார்கள்.

இவ்வாறு அன்று விசுவாசிகள் எப்படிக் கூடினார்கள் என்றும், கூடியபோது என்ன செய்தார்கள் என்பதையும் அறிந்து நாம் தேவனைத் துதிக்கிறோம்.

5. பாடல்கள்

ஆனால், இன்று நாம் கூடிவரும்போது செய்கிற ஒரு காரியத்தை ஜஸ்டின் மார்ட்டிர் குறிப்பிடவில்லை என்பதைக் கவனித்தீர்களா? ஜஸ்டின் பாடல்கள் பாடுவதைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஒருவேளை ஜஸ்டின் பாடல்களைப்பற்றி எதுவும் குறிப்பிடாவிட்டாலும், ஆதிக் கிறிஸ்தவர்கள் கூடிவந்தபோது பாடல்கள் பாடினார்கள் என்பதற்கு பிற ஆதாரங்களும், சான்றுகளும் உள்ளன. ஜஸ்டினுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளினி தன் கடிதத்தில் கிறிஸ்தவர்கள் கூடிவந்தபோது பாடல்கள் பாடினார்கள் என்று எழுதுகிறார். ஆகவே, கிறிஸ்தவர்கள் கூடிவந்தபோது பாடல்கள் பாடவில்லை நாம் சொல்லவில்லை அல்லது ஜஸ்டினும் அப்படிச் சொல்வதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால், விசுவாசிகள் பரஸ்பர ஜெபத்திற்காக எழுந்து நின்றார்கள் என்று அவர் குறிப்பிடும்போது, அவர் பாடல்களையும் அதில் குறிப்பிடுகிறார் என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை பண்டைய காலத்தில் எழுந்து நின்று ஜெபிப்பதில் பாடல்களும் ஓர் அம்சமாக இருக்கலாம். அஞ்ஞானிகள் அல்லது கிறிஸ்தவர்கள் அல்லது யூதர்கள் தங்கள் ஆலயங்களில் தேவனைப் புகழ்வது இயல்பான ஒன்று. வெறுமனே வார்த்தைகளால் மட்டும் அல்ல; மெல்லிசை வார்த்தைகளால் அல்லது மந்திரங்களால் தேவனைப் புகழ்வது இயல்பானது. எனவே, பரஸ்பர ஜெபத்தைக் குறிப்பிடுகையில் ஜஸ்டின் பாடல்களையும் குறிப்பிடுகிறார் என்று நான் நினைக்கிறன்.

ஜஸ்டின் வேதம் வாசிப்பதைக் குறிப்பிடுகிறார். அந்நாட்களில் வேதாகமத்தின் பல பகுதிகளை வாசித்தார்கள். ஒவ்வொரு பகுதியையும் வாசித்து முடித்தவுடன் ஒரு பாடல் பாடினார்கள். குறிப்பாக சங்கீதத்தைப் பாடினார்கள். இப்படிப்பட்ட நடைமுறை அன்று இருந்தது. எனவே, ஜஸ்டின் இதைக் குறிப்பிடாவிட்டாலும், வேதத்தை வாசித்தார்கள் என்று சொல்லும்போதே பாடல்களும் பாடினார்கள் என்று புரிந்துகொள்ளலாம்.

பிளினியின் கடிதத்தையும், ஜஸ்டின் மார்ட்டிரின் ஆவணத்தையும் நான் மேற்கோள் காட்டினேன். இருவருடைய எழுத்துக்களும் வேதவாக்கியங்களை வலியுறுத்துகின்றன. ஆதிக் கிறிஸ்தவர்கள் கூடிவந்தபோது அப்போஸ்தலர்களின் எழுத்துக்களையும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களையும் வாசித்தார்கள் என்று ஜஸ்டின் குறிப்பிடுவதால், அவைகளுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று தெரிகிறது.

V.புதிய ஏற்பாடு உருவான வரலாறு

ஒரு கேள்வி எழும். அப்போஸ்தலர்களும், அவர்களுடைய கூட்டாளிகளும் நிறைய எழுதியிருப்பார்கள். அவைகளுள் எவைகளை வேதவாக்கியங்களாக கருத வேண்டும் என்பதை அவர்கள் எப்படி முடிவுசெய்தார்கள், புரிந்துகொண்டார்கள்? இந்த செயல்முறை the formation of the Canon என்றழைக்கப்படுகிறது. Canon என்றால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏட்டுத்தொகுதி, விதிமுறைக்கு உட்பட்ட நூல்கள், என்று பொருள். எந்தெந்தப் புத்தகங்களைப் புதிய ஏற்பாட்டில் சேர்க்க வேண்டும், எவைகளைச் சேர்க்கக்கூடாது என்று யார் எப்படி முடிவுசெய்தார்கள்? ஆதித் சபையின் காலத்தில் இது ஒரு சிக்கலாகவும், சர்ச்சையாகவும் இருந்தது. இதைக்குறித்து காரசாரமான விவாதம் ஏற்பட்டது. “அப்போஸ்தலர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். அவர்களுடைய கூட்டாளிகளும் எழுதியிருக்கிறார்கள். அவைகளெல்லாம் நம்மிடம் இருக்கின்றன. எவைகளை வேதவாக்கியங்களாகக் கருத வேண்டும், எவைகளை சேர்க்கக்கூடாது,” என்ற விவாதம் நடந்துகொண்டேயிருந்தது. அன்று கிறிஸ்தவர்களிடம் பழைய ஏற்பாடு மட்டும்தான் இருந்தது. அதுதான் வேதாகமம். ஆனால், அதே நேரத்தில், அப்போஸ்தலர்கள் எழுதிய அதிகாரபூர்வமான எழுத்துக்களை வேதவாக்கியங்களுக்கு இணையாக மதித்தார்கள். ஏனென்றால், சபையின் ஆராதனை ஒழுங்கிலும், சபை வரலாற்றைப்பற்றிய எழுத்துக்களிலும் அவை அதிகாரபூர்வமாக மேற்கோள்கட்டப்படுகின்றன. ஆயினும் இன்று நம்மிடம் 27 புத்தகங்கள் அடங்கிய புதிய ஏற்பாடு இருப்பதுபோல் அன்று அவர்களிடம் இருக்கவில்லை.

ஒரு புத்தகம் தேவனுடைய வார்த்தையா என்பதைப் பரிசோதிக்க அவர்கள் மூன்று முக்கியமான உரைகற்களைப் பயன்படுத்தினார்கள்.

புதிய ஏற்பாட்டிலுள்ள 27 புத்தகங்களில் 22 புத்தகங்களின் பெயர்களைக்கொண்ட முராடோரியன் கேனன் அல்லது முரடோரியன் ஃபிராக்மென்ட் என்று அழைக்கப்படுகிற ஒரு பழங்காலப் பட்டியல் இருக்கிறது. இது இத்தாலிய வரலாற்றாசிரியர் லுடோவிகோ முராடோரி என்பவரால் வடக்கு இத்தாலியில் உள்ள அம்ப்ரோசியன் நூலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, 1740 இல் வெளியிடப்பட்டது. இது 180இல் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதுவே நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான பட்டியல். முராடோரி கண்டுபிடித்த இந்தக் கையெழுத்துப் பிரதி இலத்தீன் மொழியில் எழுதப்பட்டிருந்தது. இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டு, பின்னர் இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இன்று புதிய ஏற்பாட்டில் இருக்கிற யாக்கோபு எழுதிய நிருபம், பேதுருவின் இரண்டாவது நிருபம் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

எந்தப் புத்தகங்கள் அப்போஸ்தல அதிகாரமுடையவை என்பதைக் கணிப்பதில் ஆதிச் சபை மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது. அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டது அல்லது அப்போஸ்தலர்களோடு தொடர்புடையது என்பதால் அவர்கள் ஒரு புத்தகத்தையோ, கடிதத்தையோ வேதாகமத்தில் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. முராடோரியன் பட்டியலில் நான்கு நற்செய்திகளும், நடபடிகளும், பவுலின் நிருபங்களும், யோவானின் நிருபங்களும் அடங்கும். இந்தப் புத்தகங்கள் கிறிஸ்துவாகிய நபர், சிலுவையில் அவருடைய பாவநிவிர்த்தி வேலைபற்றிய ஒரு ஒருங்கிணைந்த கோட்பாட்டு செய்தியை முன்வைக்கின்றன.

ஆரம்பத்தில் அவர்கள் பலருடைய எழுத்துக்களை சபையில் வாசித்தார்கள். காலப்போக்கில் சிலருடைய எழுத்துக்களை அவர்கள் அதிகாரபூர்வமான எழுத்துக்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி நிராகரிக்கப்பட்ட புத்தகங்களில் ஹெர்ம்ஸின் ஷெப்பர்ட் புத்தகம் அடங்கும். இந்தப் புத்தகத்தைப்பற்றி நாம் முந்தைய பாகத்தில் பார்த்தோம். அதுபோல பேதுரு எழுதிய இன்னொரு புத்தகமும் ஏற்கப்படவில்லை. அது தள்ளுபடி ஆகமம் என்று கூறப்படுகிறது. இந்தப் புத்தகங்களை சபையார் எல்லாரும் ஒன்றாகக் கூடிய நேரங்களில் வேதவாக்கியங்களாகக் கருதிப் படிக்கவில்லை. அவரவர் private devotion தனிப்பட்ட வேளைகளில் படிப்பதற்கு விட்டுவிட்டார்கள்.

மூன்று அடிப்படையான கோட்பாட்டின்படி புதிய ஏற்பட்டு உதயமாயிற்று.

  1. முதலாவது, புதிய ஏற்பாட்டில் அடங்க வேண்டிய நூல்கள் அப்போஸ்தலர்களால் அல்லது அவர்களோடு மிக நெருக்கமாக இருந்தவர்களால் எழுதப்பட்டவைகளாக இருக்க வேண்டும் என்று ஐரேனியஸ் கூறினார். அவைகளை மட்டுமே அப்போஸ்தல போதனைகளாகவும், வேதமாகவும் ஐரேனியஸ் கணித்தார். “லூக்கா எழுதிய நற்செய்தியும், நடபடிகளும் புதிய ஏற்பாட்டில் இருக்கின்றனவே. அவர் அப்போஸ்தலர் இல்லையே!” என்று சிலர் கேள்வி எழுப்பலாம். உண்மை, அவர் அப்போஸ்தலர் இல்லை. ஆனால், முதல் அளவுகோலின்படி, ஒருவர் அப்போஸ்தலராக இருக்க வேண்டும் அல்லது அவர்களோடு நெருக்கமானவர்களாக இருக்க வேண்டும். அதன்படி, அவர் அப்போஸ்தலனாகிய பவுலின் நேரடி அதிகாரத்தின்கீழ் இருந்தவர்.

  2. இரண்டாவது, அவர்களுடைய எழுத்துக்களின் உள்ளார்ந்த தன்மையையும், தகுதியையும் பார்த்தார்கள். அவை பழைய ஏற்பாட்டின் போதனைகளுக்கும், கிறிஸ்துவின் போதனைக்கும், கிறிஸ்துவைப்பற்றிய அப்போஸ்தலர்களின் போதனைகளுக்கும் ஒத்திருக்க வேண்டும். ஒரு நூலைப் படிக்கிறார்கள். அதைப் படித்துவிட்டு, “ஆம், இது தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டதுபோல்தான் தோன்றுகிறது! வேதமாகதத்தின் பிற நூல்களோடு இது பொருந்துகிறது!” என்று உறுதிசெய்ய வேண்டும்.

“இது ஆதிச் சபையில் நடந்த ஒரு சதி,” என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? “அன்று கிறிஸ்தவர்களிடம் நிறைய நூல்கள் இருந்தன. கிறிஸ்தவ ஞானவாதிகளின் நற்செய்திகளும், பிற நூல்களும் புதிய ஏற்பாட்டில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், அன்று அவர்கள் சதிசெய்து அவைகளை நீக்கிவிட்டார்கள். இவை உண்மையான கிறிஸ்தவ நூல்கள்” என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

இப்படிப் பேசுபவர்களிடம் நான் ஒரேவொரு கேள்வி கேட்கிறேன். “நண்பரே, எவைகளையெல்லாம் புதிய ஏற்பாட்டில் சேர்த்திருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லுகிறீர்களோ, அவைகளை நீங்கள் ஒருமுறையாவது வாசித்திருக்கிறீர்களா? தோமாவின் நற்செய்தியைப் படித்திருக்கிறீர்களா? அதைப் படித்தால், இயேசு ஒரு புதிய யுகத்தின் ஹிப்பிபோல் காட்சியளிப்பார். புதிய ஏற்பாட்டில் சேர்க்காமல் விலக்கப்பட்ட ஞானவாதிகளின் நற்செய்திகளையோ அல்லது இதுபோன்ற பிற எழுத்துக்களையோ படிக்கும்போது, இயேசுவுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதுபோல் தெரிகிறது. இந்த எழுத்துக்களையும், புதிய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களையும் வாசித்துப்பார்த்தால் அவைகளுக்கிடையேயுள்ள வித்தியாசம் நன்றாகத் தெரியும். எனவே, முதலாவது உரைகல் அது அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவர்களுடைய அதிகாரம் பெற்றிக்க வேண்டும்.

ஆதிச் சபையில் வேதவாக்கியங்களைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருப்பதால் அது சம்பந்தமாக நான் ஒரு காரியத்தைச் சொல்ல விரும்புகிறேன். அன்று பெரும்பாலும் எல்லாரிடமும் வேதாகமத்தின் நகல் இருக்கவில்லை. ஆனால், எல்லாச் சபைகளிலும் ஒன்றிரண்டு நகல்கள் பரவலாக இருந்தன. சபை சித்திரவதைக்குள்ளானபோது சித்திரவதையாளர்கள் வேதாகமங்களை அழித்தார்கள், எரித்தார்கள். கிறிஸ்தவர்களுக்கு வேதம் முக்கியம் என்பதை அறிந்திருந்த சபையின் எதிரிகள், கிறிஸ்தவர்களின் வேதச்சுருள்களை அல்லது கோடெக்ஸ்களை அல்லது புத்தகங்களை எரிப்பதே அவர்களைத் தாக்குவதற்கு மிகச் சிறந்த வழி என்று நம்பினார்கள். சபையின் எதிரிகள் வேதச்சுருள்களை எரித்தபிறகும் இத்தனை ஆயிரம் பழங்கால கையெழுத்துப் பிரதிகள் இன்று நம்மிடம் இருக்கிறதென்றால், அவர்கள் எத்தனை ஆயிரங்களை எரித்திருப்பார்கள் என்பதை நான் உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். ஆதிச் சபையில் வேதங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டன என்று உறுதியாகக் கூறலாம்.

சரி, தொடர்வோம்.

  1. இரண்டாவது உரைகல், நூல்கள் பழைய ஏற்பாட்டின் போதனைகளுக்கும், கிறிஸ்துவின் போதனைக்கும், கிறிஸ்துவைப்பற்றிய அப்போஸ்தலர்களின் போதனைகளுக்கும் ஒத்திருக்க வேண்டும் .

  2. மூன்றாவது, அது பரவலாகப் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட, புத்தகமாக இருக்க வேண்டும்.

புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களை ஆதிச் சபை உருவாக்கவில்லை என்ற உண்மையை நான் வலியுறுத்த விரும்புகிறேன். அன்று கிறிஸ்தவர்களிடைய பரவலாகப் புழக்கத்தில் இருந்த புத்தகங்களை ஆதிச் சபை அங்கீகரித்தது, உருவாக்கவில்லை. இது ஒரு முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், எந்த நூல்களை வேதாகமத்தில் சேர்க்கலாம், எதைச் சேர்க்கக்கூடாது என்பதை சபை தீர்மானித்ததால் வேதத்தைவிட சபைக்கு உயர்ந்த அதிகாரம் உண்டு என்று சிலர் கருதுகிறார்கள். இப்படி சிந்திப்பதே தவறு என்று நான் சொல்வேன். புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களை சபை உருவாக்கவில்லை. புழக்கத்தில் இருந்த புத்தகங்களை சபை பரிசீலித்து அங்கீகரித்தது. ஜஸ்டின் மார்ட்டிர் சொல்வதுபோல அந்தப் புத்தகங்கள் ஏற்கெனவே கிறிஸ்தவர்களிடையே வாசிக்கப்பட்டன, அங்கீகரிக்கப்பட்டன.

VI.பேரரசில் மக்களின் கல்வியறிவு

இன்னோர் அம்சத்தையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பண்டைய உரோமப் பேரரசில் மக்களின் எழுத்தறிவு மிகவும் குறைவாக இருந்தது அதாவது அவர்கள் ஏறக்குறைய எழுத்தறிவு அற்றவர்கள் என்று பலர் நினைக்கிறார்கள். இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட கணிப்பு என்று நான் நினைக்கிறன். நிச்சயமாக அவர்களுடைய கல்வியறிவு இன்றைய நம் கல்வியறிவு போன்றதல்ல என்பது உண்மை. ஆனால், அவர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒரு கூற்று. ஏனென்றால், உரோமப் பேரரசெங்கும் சுவர்களில் ஓவியங்கள் வரைந்து, அவைகளில் எழுதியிருக்கிறார்கள். யாருக்குமே எழுதப்படிக்கத் தெரியாது என்றால் அவர்கள் சுவர்களில் ஓவியங்கள் வரைந்து ஏன் எழுதினார்கள்? யாருக்குமே வாசிக்கத் தெரியாவிட்டால் ஏன் எழுத வேண்டும்? எனவே, யாருக்குமே எழுதப்படிக்கத் தெரியாது என்பது உண்மையல்ல. ஒருவேளை நிறையப்பேருக்கு வாசிக்கத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், கொஞ்சப்பேருக்காவது எழுதப்படிக்கத் தெரியும். உரோமப் பேரரசின் பல இடங்களில் சுவர்களில் இப்படி வரைந்து எழுதியிருக்கிறார்கள். பண்டைய உரோமப் பேரரசில் நாம் நினைப்பதைவிட அதிகமான மக்களுக்கு எழுதபடிக்கத் தெரியும்.

VII.ஆதிச் சபையில் ஜெபங்கள்

1. பொதுவான ஜெபம்

ஆதிச் சபையில் வேதயெழுத்துக்களைப்பற்றிப் பார்த்தோம். இப்போது ஆதிச் சபையில் ஜெபங்களைப்பற்றிப் பேசலாம். ஆதிச் சபையில் கிறிஸ்தவர்கள் கூடிவந்தபோது ஜெபித்த சில ஜெபங்களைப்பற்றிய பதிவேடும் நம்மிடம் இருக்கின்றன. அந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் தேவனை ஆராதிக்கக் கூடியபோது ஜெபித்த இந்த ஜெபங்கள் பொதுவான ஜெபத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். அப்படிப்பட்ட ஒரு ஜெபம் அப்போஸ்தலர் நடபடிகளில் காணப்படுகிறது. இது முதல் நூற்றாண்டில் அல்லது இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜெபிக்கப்பட்ட ஜெபமாக இருக்கலாம். இது அழகான ஜெபம். “கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,. உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும்.” இது அப்போஸ்தலர் நடபடிகள் 4:24-30. இது ஆதிச் சபையின் காலத்தில் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.

2. தனிப்பட்ட ஜெபம்

இன்னோர் எடுத்துக்காட்டு தருகிறேன். இது சபைப் பிதாக்களில் ஒருவரான ஓரிஜெனின் ஜெபம். இது ஓர் அழகான, அற்புதமான, அறிவூட்டத்தக்க ஜெபம். முந்தைய எடுத்துக்காட்டு கிறிஸ்தவர்கள் சபையாகக் கூடிவந்தபோது பொதுவாக ஜெபித்த ஜெபம். இது தனிப்பட்ட கிறிஸ்தவர்களின் ஜெபத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. “இயேசுவே, என் கால்கள் அழுக்காக இருக்கின்றன. என்னிடம் வாரும், ஓர் அடிமையைப்போல் வாரும். உம் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வந்து, என் கால்களைக் கழுவும். இப்படிக் கேட்பதால், நான் அதீத தைரியம் கொண்டவன் என்று எனக்குத் தெரியும். ஆனால், ’நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை,” என்ற உம் மிரட்டலை எண்ணி நடுங்குகிறேன். என் கால்களைக் கழுவும். ஏனென்றால் நான் உம் தோழமைக்காக ஏங்குகிறேன்.” என்னே அற்புதமான ஜெபம்! இந்த ஜெபம் எவ்வளவு ஆழமானது என்று பாருங்கள். ஒரிஜனைப்பற்றி முந்தைய பாகங்களில் நாம் பார்த்திருக்கிறோம். இந்த ஜெபத்தின் சாராம்சம் என்ன? “இயேசுவே! நான் உம்மை நேசிக்கிறேன். நீர் வந்து என் கால்களைக் கழுவும். நான் உம்மோடு நெருக்கமான ஐக்கியம்கொள்ள விரும்புகிறன். நான் உம் விசுவாசி. நான் உம்மை நேசிக்கிறேன். தயவாய் வாரும், என்னைக் கழுவும்.” இதுதான் இந்த ஜெபத்தின் சாராம்சம். ஆதிச் சபையின் தனிப்பட்ட ஜெபத்தின் அழகான சிந்தனை.

3. கர்த்தருடைய பந்தி

1. முதல் பகுதி

ஆதிக் கிறிஸ்தவர்களின் சபைக்கூட்டங்களைப்பற்றி பேசும்போது, ஒரு காரியத்தைப் பார்த்தோம். அவர்களுடைய ஞாயிறுக் கூட்டத்தில் இரண்டு பகுதிகள் இருந்தன என்று சொன்னேன். முதல் பகுதியில் பார்வையாளர்கள், அவிசுவாசிகள், ஞானஸ்நானம் பெறாதவர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். இந்தப் பகுதியில் கலந்துகொள்பவர்கள் நற்செய்தியைக் கேட்டு நாளடைவில் இரட்சிக்கப்படுவார்கள் என்று அவர்கள் நம்பினார்கள். இரண்டாவது பகுதியில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இரண்டாவது பகுதியில் அவர்கள் கர்த்தருடைய பந்தியை ஆசரித்தார்கள். ஆதிச் சபையில் இப்படித்தான் பரவலாக நடந்தது. நான் இதைப் பொதுவாகப் பேசுகிறேன். உலகெங்கும் அன்று சபைக் கூட்டங்கள் இப்படித்தான் நடந்தன என்று நான் சொல்லவில்லை.

இதில் இன்னோர் அம்சம் என்னவென்றால், கர்த்தருடைய பந்தியை அவர்கள் ஒரு வகையில் யூதர்கள் அனுசரித்த பஸ்காவின் தொடர்ச்சியாகத்தான் பார்த்தார்கள். யூதர்கள் தாங்கள் எகிப்திலிருந்து விடுதலையானதை நினைவுகூரும் வகையில் பஸ்காவை ஆசரித்தார்கள். கிறிஸ்தவர்கள் அதை நினைவுகூரும் வகையில் பந்தியை ஆசரிக்கவில்லை. மாறாக, ஆண்டவராகிய இயேசு சொன்னபடி, அவர் சிலுவையில் இரத்தத்தைச் சிந்தி வாங்கித்தந்த விடுதலையை நினைவுகூர்ந்தார்கள். யாத்திராகாமத்தில் விவரிக்கப்பட்டுள்ள பாஸ்காவை ஆசரிக்க இயேசு தம் சீடர்களுடன் கூடிவந்திருந்தபோது நடந்த நிகழ்ச்சி நற்செய்திகளில் கூறப்பட்டுள்ளன. அவருடைய கடைசி இராப்போஜனம் பஸ்காவின் ஆவிக்குரிய நிஜம். “அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது,” என்றார். எனவே, இயேசு பஸ்காவுக்கு விளக்கமளித்தார். ஒரு விசுவாசி கர்த்தருடைய இராப்போஜனத்தில், பந்தியில், பங்குபெறுவதில் ஒரு முக்கிய பகுதி இருந்தது. அது ஒப்புரவாகுதலின் நேரம். தாங்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும், ஒருவரோடு ஒருவர் இணக்கமாக இருக்க வேண்டும் என்று ஆதிக் கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். எனவே, அவர்களுக்கிடையே சண்டை சச்சரவு ஏற்பட்டிருந்தால், பந்தியில் பங்குபெறுவதற்குமுன் அவர்கள் மனந்திரும்பி, ஒருவரோடொருவர் ஒப்புரவானார்கள். ஒப்புரவாகாமல் அவர்கள் பந்தியில் பங்குபெறவில்லை. ஆதிக் கிறிஸ்தவர்கள் இதைத் திட்டவட்டமாகச் செய்தார்கள்.

2. பந்திக்குமுன் பாவ அறிக்கையும், ஒப்புரவாகுதலும்

ஆதிக் கிறிஸ்தவர்கள் பாவத்தை ஒரு தனி மனிதனின் தனிப்பட்ட விவகாரமாகப் பார்க்கவில்லை. பாவம் சபையின் ஒற்றுமையையும், வீரியத்தையும் அழிக்கும் என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். ஒருவன் பிறருக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கலாம் அல்லது அவனுடைய தனிப்பட்ட ஒழுக்கம் மோசமாக இருக்கலாம் அல்லது போதைப் பழக்கத்தில் சிக்கியிருக்கலாம் அல்லது திருடியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி, அவன் மனந்திரும்ப வேண்டும். உபவாசித்து ஜெபிக்க வேண்டும். தன் பாவத்தைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும். சபையின் தலைவர்களுக்குமுன் அல்லது மூப்பர்களுக்குமுன் நிற்க வேண்டும். அவனுடைய இருதயம் உண்மையாகவே மாறியிருக்கிறது என்பதற்கான நிரூபணம் இல்லாதவரை அவன் கர்த்தருடைய பந்தியில் பங்குபெற அவனுக்கு அனுமதியில்லை.

3. டிடாகே

ஆதிச் சபையில் விசுவாசிகளுக்குக் கர்த்தருடைய போதனைகளைப் போதிக்க டிடாகே என்ற ஒரு புத்தகம் இருந்தது. கர்த்தருடைய பந்தியில் பங்குபெறுவதற்குமுன் எல்லாரும் ஒருவரோடொருவர் எப்படி ஒப்புரவாக வேண்டும் என்று இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்திலிருந்து நான் சில பத்திகளை உங்களுக்கு வாசித்துக்காட்ட விரும்புகிறேன். இந்தப் பகுதிகள் மிகவும் பரவசமாக இருக்கின்றன. இது இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகம். “கர்த்தருடைய நாளில், நீங்கள் ஒன்றுகூடியிருக்கும்போது, அப்பம் பிட்டு, கர்த்தருடைய பந்தியைக் கொண்டாடுங்கள். ஆனால், முதலாவது நீங்கள் உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள்; இதனால் உங்கள் பலி பரிசுத்தமாக இருக்கும். உங்களில் ஒருவனுக்குத் தன் அயலானோடு பிணக்கு இருந்தால், அவர்கள் இருவரும் ஒப்புரவாகாதவரை பந்தியில் பங்குபெறக்கூடாது. உங்கள் பலி தீட்டுப்படக்கூடாது. இதைக்குறித்து கர்த்தர், ‘சூரியன் உதிக்கிற திசைதொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்,’ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல்கியா 1:11).

இந்தப் பகுதிகளை வாசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இல்லையா? கர்த்தருடைய பந்தியை எவ்வளவு சிரத்தையோடு அவர்கள் அணுகியிருக்கிறார்கள்! அவர்களுடைய தரிசனத்தையும், முயற்சியையும் நான் வெகுவாய்ப் பாராட்டுகிறேன். ஒருவன் தன் குற்றத்தை உணர்ந்து, மனந்திரும்பி, அறிக்கைசெய்து, ஒப்புரவாகாதவரைப் பந்தியில் பங்கில்லை. ஆச்சரியம்!

4. வீடுகளில் பந்தி

இன்னொரு முக்கியமான அம்சம். ஞாயிறு ஆராதனையில் கர்த்தருடைய பந்தி முடிந்ததும் மீதியிருந்த அப்பத்தை அவரவர் தத்தம் வீடுகளுக்குக் கொண்டுசென்றார்கள். இரன்டு காரணங்களுக்காக. ஒன்று கூட்டத்தில் கலந்துகொண்டு பந்தியில் பங்குபெற முடியாதவர்களுக்குக் கொடுப்பதற்கு. இன்னொரு சுவையான காரியமும் நடந்தது. வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய திருவிருந்தை ஆசரித்தார்கள் என்றும் நான் படித்திருக்கிறேன். “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்,” என்று கர்த்தர் கற்பித்ததை அவர்கள் இவ்வாறு ஆசரித்தார்கள் என்று தெரிகிறது. இந்த வரிகளுக்கு இப்படி ஒரு பொருள் இருக்கிறது என்று தெரியுமா?

4. சபையின் வாரநாள் கூட்டங்கள்

மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில், சுமார் 250 வாக்கில், உரோமில் வாழ்ந்த ஹிப்போலிட்டஸ் என்ற ஒரு சபைப் பிதா எழுதிய அப்போஸ்தலர்களின் பாரம்பரியம் என்ற புத்தகத்திலிருந்து நான் ஒரு மேற்கோள் தருகிறேன். இந்தப் புத்தகத்தில் அவர் கிறிஸ்தவர்கள் வாரத்தில் ஒரேவொரு நாள் மட்டுமல்ல, வேறு சில நாட்களிலும் சபையாகக் கூடினார்கள் என்றும், அந்தக் கூடுகைகள் எப்படி இருந்தன என்றும் கூறுகிறார். இதற்கு நான் எந்த விளக்கமும் கூறத் தேவையில்லை. அந்த அளவுக்கு அவை அவ்வளவு தெளிவாக இருக்கின்றன. சரி, இதோ அவருடைய மேற்கோள்.

“எல்லா விசுவாசிகளும் - ஆண்களோ, பெண்களோ - அதிகாலையில் தூங்கி எழுந்ததும், வேறு எந்த வேலையைச் செய்வதற்குமுன்பு, தங்கள் கைகளைக் கழுவிவிட்டு, தேவனைநோக்கி ஜெபிப்பார்களாக. அதற்குப்பின் அவர்கள் தங்கள் வேலைகளைத் தொடரலாம். அன்றைய நாளில் வாசித்த, போதித்த, தேவனுடைய வார்த்தையில் ஏதேனும் அறிவுறுத்தல் இருந்தால், கேட்ட வசனத்தின்மூலம் தேவன் பேசுவதைக் கேட்பதற்கும், சபையாரின் ஜெபத்தினால் அன்றைய தீமைக்கு விலக்கிக்காத்துக்கொள்வதற்கு உதவவும் ஒவ்வொருவரும் அந்த அறிவுறுத்துதலுக்கு அடிபணிய வேண்டும். வாசிக்கத் தெரிந்த தேவபக்தியுள்ள ஒருவன் தேவனுடைய வார்த்தையைப் போதிக்கும் இடத்திற்குச் செல்லவில்லை என்றால், அவன் அதை ஒரு பெரிய இழப்பாக எண்ண வேண்டும்.

வரம்பெற்ற ஒரு போதகன் வந்து போதித்தால், போதிக்கும் இடத்திற்குச் செல்ல நீங்கள் யாரும் தாமதிக்க வேண்டாம். ஏனென்றால், கலந்துகொள்ளும் அனைவருக்கும் பயனுள்ள விஷயங்களைச் சொல்ல போதகனுக்குக் கிருபை வழங்கப்படும், நீங்கள் புதிய காரியங்களைக் கேட்பீர்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்மூலம் உங்களுக்குப் போதிக்கும் காரியங்களின்மூலம் நீங்கள் பயனடைவீர்கள். நீங்கள் கேட்பவைகளின்மூலம் உங்கள் விசுவாசம் பலப்படும்; உங்கள் வீட்டில் உங்களுடைய கடமை என்னவென்று அந்த இடத்தில் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்; ஆகவே, பரிசுத்த ஆவியானவர் நிறைந்திருக்கும் சபைக்குச் செல்ல அனைவரும் வைராக்கியமாக இருக்க வேண்டும்.”

5. வீட்டில் காலைத் தியானம்

அவருடைய மேற்கோளை மீண்டும் தொடர்வோம். அதற்குமுன் நான் இங்கே ஒரு கணம் நிறுத்துகிறேன். ஹிப்போலிட்டஸ் என்ன சொல்லுகிறார்? ஒவ்வொரு விசுவாசியும் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் வேறு எதையும் செய்வதற்குமுன் தங்களைக் கழுவிச் சுத்திகரித்துக்கொண்டு ஜெபித்ததாகக் கூறுகிறார். நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கும் daily devotion, கர்த்தரோடு காலை நேரம், அமைதியான தியான நேரம், ஜெப வேளை என்ற பழக்கம் அவர்களிடம் இருந்ததாகத் தெரிகிறது. இன்னொன்றைக் கவனித்தீர்களா? தேவ மக்கள் பொதுவாகக் கூடும் இடத்தில் தேவனுடைய வார்த்தை போதிக்கப்பட்டால், ஒவ்வொருவரும் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார். உங்கள் சபையில் காலை பக்தி ஆராதனை இருந்தால், நீங்கள் அங்கு சென்று தேவனுடைய வார்த்தையைக் கேளுங்கள் என்று அவர் கூறுகிறார். இதைக் கேட்கும்போது “ஆஹா! இன்று நாம் செய்வதுபோலவே அன்று அவர்களும் செய்திருக்கிறார்களே! காலையில் எழுந்தவுடன் நாம் ஜெபிப்பதுபோல, வேதம் வாசிப்பதுபோல, தியானிப்பதுபோல அவர்களும் செய்திருக்கிறார்களே!” என்று பரவசமடையலாம். உண்மைதான். இன்னொன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று நம் எல்லாரிடமும் வேதாகமம் இருப்பதுபோல அன்று எல்லாரிடமும் வேதாகமம் இருக்கவில்லை. அன்று அது அரிது. எனவே, “சபையில் காலையில் பக்தி ஆராதனை இருந்தால், நீங்கள் அங்கு போங்கள். போய் அங்கு தேவனுடைய வார்த்தையைக் கேளுங்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்கப் போகிறீர்கள் என்று உங்கள் உள்ளத்தில் முடிவுசெய்துகொண்டு அந்த இடத்திற்குச் செல்லுங்கள். தேவன் உங்களோடு பேசுவார்,” என்று கூறுகிறார். எனவே, ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்ல, வாரத்தின் வேறு நாட்களிலும் அவர்கள் கூடினார்கள் என்று தெரிகிறது. அவர் தொடர்ந்து, “சபையில் ஜெபிப்பவரால் அந்த நாளின் தீமையை மேற்கொள்ள முடியும் என்றும், போதகர் போதிக்கும் இடத்திற்குச் சென்று போதிக்கப்படுவதைக் கேட்க முடிந்தவர்கள் அந்த இடத்திற்குச் செல்லவில்லையென்றால், அதை ஒரு பெரிய தீமையாகக் கருத வேண்டும்,” என்று அவர் குறிப்பிடுகிறார். இவ்வாறு, ஒரு நாளின் தொடக்கத்தில் வேதத்தை வாசித்து, ஜெபித்து, அந்த நாளைத் தொடங்குவதின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார்.

ஒரு விசுவாசி காலையில் எழுந்தவுடன் தேவனுடைய வார்த்தையில் நேரம் செலவிட்டு, தேவனோடு கலந்துறவாடுவதால் ஏற்படும் ஆவிக்குரிய பலன்களை இவர் வலியுறுத்துகிறார். சில சிக்கல்கள் சபைகளில் தலைமுறைதோறும் இருந்திருக்கின்றன என்று தெரிகிறது. “போதிக்கும் இடத்திற்கு யாரும் தாமதமாக வரக்கூடாது,’ என்று ஹிப்போலிட்டஸ் கூறுகிறார். எல்லாத் தலைமுறைகளிலும் இந்த விவகாரம் இருந்திருக்கிறது. மேலும்,”சபையில் ஒரு வரம்பெற்ற போதகர் போதிக்கும்போது நீங்கள் இதுவரை ஒருபோதும் நினைத்திராத விஷயங்களைப் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குப் போதிப்பார். அவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் கேட்கும் விஷயங்களால் உங்கள் விசுவாசம் பலப்படும். நீங்கள் வீட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அந்த இடத்தில் போதகர் போதிப்பார். ஆகவே, பரிசுத்த ஆவியானவர் விடுதலையோடு உலாவும் இடமாகிய சபைக்கு வருவதற்கு நீங்கள் எப்போதும் ஆர்வமாக இருக்க வேண்டும். சபையில் போதிக்காத நாட்களில் நீங்கள் வீட்டில் இருந்துகொண்டே ஒரு பரிசுத்த புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படியுங்கள் அல்லது தீர்க்கதரிசிகளின் புத்தகத்தை வாசியுங்கள்.”

மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உரோமப் பேரரசின் பல பகுதிகளில் சபையார் ஏறக்குறைய எல்லா நாட்களும் கூடாவிட்டாலும், பெரும்பாலான நாட்களில் காலை வழிபாட்டுக்காக ஓரிடத்தில் கூடிவந்தார்கள் என்று தெரிகிறது. காலை வழிபாட்டுக்குச் சபைக்குப் போக முடியாவிட்டால் வீட்டிலேயே அந்தப் பக்திமுயற்சியை நிறைவேற்ற வேண்டும் என்று ஹிப்போலிட்டஸ் கூறுகிறார். ஓருவன் வீட்டிலேயே morning devotion செய்ய வேண்டுமானால், அவர்களிடம் அப்படியானால் ஏதோவொரு வகையில் ஆவிக்குரிய புத்தகங்கள் இருந்திருக்கின்றன. இல்லையா? இல்லையென்றால் அவர்கள் எதை வாசித்திருப்பார்கள்? இது இன்னொன்றையும் நிரூபிக்கிறது. அன்றைய காலகட்டத்தில் அவர்களுடைய எழுத்தறிவு நாம் நினைப்பதைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது என்பதையும் இது நிரூபிக்கிறது. இந்த விவரங்களை அறியும்போது பரவசமாக இருக்கிறது. ஏனென்றால், இவைகளெல்லாம் நம் விசுவாசத்தோடு தொடர்புடைய ஆவிக்குரிய பயிற்சிகளோடு வெகுவாய் ஒத்திருக்கின்றன. ஆதிச் சபையின் ஆவிக்குரிய எல்லாப் பயிற்சிகளும் நம் இன்றைய பயிற்சிகளோடு 100 விழுக்காடு பொருந்தும் என்று நாம் நினைப்பது தவறு. நிச்சயமாக அப்படி இல்லை. அவர்களுக்கும் நமக்குமிடைய பல நூறாண்டுகள் இடைவெளி இருக்கின்றன. மொழி, கலாச்சாரம், பொருளாதார நிலை, புவியில்போன்ற பல காரணிகளால் நாம் பிரிந்திருக்கிறோம். அவர்களுக்கும் நமக்கும் பல வித்தியாசங்கள் இருப்பினும், இந்த வித்தியாசங்களை பார்ப்பதைவிட, ஒற்றுமைகளை அதிகமாகப் பார்க்க வேண்டும். வித்தியாசங்களையும், வேற்றுமைகளையும்விட, ஒற்றுமைகள் அதிகம் இருப்பதாக நான் நினைக்கிறன். ஒரு தொடர்ச்சி, நிலைத்ததன்மை அங்கு இருக்கிறது.

ஒருவருக்கொருவர் சேவை செய்தார்கள், ஊக்குவித்தார்கள், கண்டித்தார்கள், ஆறுதல் கொடுத்தார்கள் மற்றும் தவறுகளை திருத்தினார்கள். அவர்கள் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் ஒருவரோடு ஒருவர் செலவு செய்தார்கள். அதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் முழுமையாய் அறிந்திரிந்தார்கள்.

6. ஞானஸ்நான ஆராதனை

அடுத்து, ஆதிச் சபையில், இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஞானஸ்நானத்தைக்குறித்து பார்ப்போம். அன்று ஞானஸ்நானம் பெறுகிறவர்கள், “சாத்தானையும், அவனுடைய அனைத்து செயல்களையும் விட்டுவிடுகிறேன். இயேசுவை என் இரட்சகராக விசுவாசிக்கிறேன்,” என்று அறிக்கைசெய்தபின் அவர்களைத் தண்ணீரில் முழுக்கி ஞானஸ்நானம் கொடுத்தார்கள். ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து வெளியே வரும்போது வெள்ளை அங்கி அணிந்துகொண்டார்கள். புதிதாக ஞானஸ்நானம் பெற்றவர்களை எண்ணெயால் அபிஷேகம் செய்தார்கள். அதைத்தொடர்ந்து முதன்முறையாக அவர்கள் கர்த்தருடைய பந்தியில் பங்குபெற்றார்கள்.

இதைப்பற்றிய விவரங்கள் ஹிப்போலிட்டஸின் எழுத்துக்களில் உள்ளன. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த பழக்கத்தை அவர் தன் புத்தகத்தில் விவரிக்கிறார். உரோமில் கிறிஸ்தவத்தைத் தழுவியவர்களுக்கு எப்படி ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்ற விவரம் அங்கு உள்ளது. அவர் எழுதியிருப்பதை நான் முழுவதும் மொழிபெயர்க்கப்போவதில்லை. விவரங்களைச் சுருக்கமாகக் கூறுகிறேன். ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், ஒருவனை ஞானஸ்நானத்திற்கு ஆயத்தம்பண்ண எவ்வளவு நாட்கள் எடுத்தார்கள், என்ன சூழலில் ஒருவனை ஆயத்தம் செய்தார்கள் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

7. மறைக்கல்வி

ஒருவன், “நான் கிறிஸ்தவனாக விரும்புகிறேன்,” என்று சொன்னவுடன் அவர்கள் அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. கிறிஸ்தவனாக விரும்பிய எல்லாரையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவன் உண்மையாகவே மனந்திரும்பி, கிறிஸ்துவை விசுவாசித்தபோதும், அவன், “நான் கிறிஸ்தவனாக விரும்புகிறேன்”என்று சொன்னபோதும், அவன் ஏன் கிறிஸ்தவனாக விரும்புகிறான் என்ற காரணத்தைத் திட்டவட்டமாக ஆராய்ந்தார்கள். ஒருவன் கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து அனுதினமும் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும் என்று கிறிஸ்தவ வாழ்க்கையின் தன்மையையும், தரத்தையும் அவர்கள் எடுத்துரைத்தார்கள். ஞானஸ்நானத்திற்குமுன் ஒருவனை குறைந்தது மூன்று வருடங்களாவது ஆயத்தம் செய்தார்கள். மூன்று வருடங்கள் போதித்தபின், ஞானஸ்நானம் கொடுப்பதற்கு ஒரு சில நாட்களுக்குமுன் அவர்கள் உபாவாசித்து ஜெபிக்க வேண்டும். ஞானஸ்நானத்திற்கு முந்தைய நாள் இரவு ஓர் இருட்டறையில் விழித்திருந்து ஜெபிக்க வேண்டும்.

முதலாவது புதிய விசுவாசிகளுக்கு மறைக்கல்வி வகுப்பு மூன்று ஆண்டுகள் நடத்தினார்கள். மறைக்கல்வி என்றால் போதித்தல் அல்லது பயிற்றுவித்தல் என்று பொருள். கிறிஸ்தவத்தின் உபதேசங்களையும், பழக்க்கங்களையும், பயிற்சிகளையும் கற்பிக்கும் முறைமை. கிறிஸ்துவைப்பற்றிய அடிப்படைச் சத்தியங்களை ஒவ்வொருவரும் அறியவேண்டும், புரிந்துகொள்ள வேண்டும், விசுவாசிக்க வேண்டும், அதன்படி வாழ வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். இது அடிப்படை சீடத்துவப் பயிற்சி. கிறிஸ்தவப் போதனைகளை ஏற்றுத் தனதாக்கிக்கொள்ளுதல்.

இந்த வகுப்புகள் ஒவ்வொரு நாளும் நடைபெறவில்லை, வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள். கிறிஸ்தவனாக விரும்பியவர்களிடம் அவர்கள் கேள்வி பதில்கள் அடங்கிய ஞானோபதேச பாடங்களைக் கொடுத்து படிக்கச் சொன்னார்கள். அதன்மூலம் அவர்கள் சத்தியத்தை அறிந்துகொண்டார்கள். வகுப்பில் கற்றதற்கு ஏற்ப அவர்களுடைய வாழ்க்கை ஒத்திருக்கிறதா என்று சோதித்தார்கள். சத்தியத்தை அறிந்தபின் தேவனுக்குப் பயந்து வாழ்வதற்கும், அஞ்ஞானப் பழக்கங்களை விட்டுவிடுவதற்கும் தயாராக இருந்தவர்களுக்கு மட்டுமே அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். இந்த இரண்டு கட்டங்களையும் ஒருவன் தாண்ட வேண்டும். சில இடங்களில் இந்த ஞானோபதேச வகுப்புகள் ஐந்து ஆண்டுகள் நடைபெற்றதாகவும் நான் வாசித்திருக்கிறேன். மூன்று வருடமோ, ஐந்து வருடமோ - ஞானஸ்நானத்திற்குமுன் நீண்டகால வகுப்பு நடந்தது. வாழ்க்கையும் கிறிஸ்துவின் போதனைகளுக்கு ஏற்றாற்போல் இருக்கிறது என்றால், “நல்லது. உனக்கு ஞானஸ்நானம் கொடுக்கலாம். அதற்குமுன் நீ உபவாசித்து ஜெபிக்க வேண்டும்,” என்று சொன்னார்கள். ஒன்றிரண்டு நாட்கள் உபவாசம். ஞானஸ்நானத்திற்கு முந்தைய நாள் இருட்டறையில் விழிப்பு ஜெபம். ஞானஸ்நானம் பெறும் நாளில் கைகளில் விளக்குகள் ஏந்திக்கொண்டு ஞானஸ்நானம் பெறுபவர் ஞானஸ்நானத் தொட்டிக்குள் இறங்குவார். ஹிப்போலிட்டஸ் கூறியிருப்பதுபோல், ஞானஸ்நானம் பெறுகிறவர், தான் சாத்தானையும் அவனுடைய செயல்களையும் விட மனதாயிருப்பதற்கு அடையாளமாக மேற்கு நோக்கித் திரும்புவார். அதன்பின் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு அடையாளமாக கிழக்கு நோக்கித் திரும்புவார். எருசலேம் உரோமுக்குக் கிழக்கே இருப்பதால், கிழக்கை நோக்கித் திரும்பும்போது இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தைநோக்கித் திரும்புகிறார்கள் என்று பொருள். முதலாவது மேற்குத் திசையை நோக்கித் திரும்பி சாத்தானை விட்டுவிட வேண்டும். பின்னர் கிழக்கு நோக்கித் திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின் அவருடைய தலைமுதல் கால்வரை மீண்டும் மீண்டும் எண்ணெய் அபிஷேகம் செய்யப்படும், அபிஷேகம் செய்யப்பட்டவுடன், அவர்கள் தண்ணீரில் முழங்கால்வரை இறங்குவார்கள். சபையின் மூப்பர்களில் ஒருவர் அவருடைய தலையைத் தண்ணீரில் அழுத்துவார் அல்லது சில சமயங்களில் அவர்கள் தண்ணீருக்குள் இருக்கும்போது அவர்கள் தலைக்குமேல் தண்ணீரை ஊற்றுவார்கள். தொட்டியிலிருந்து அவர்கள் வெளியே வந்ததும் அந்த நபருக்கு ஒரு புதிய வெள்ளை அங்கி வழங்கப்படும். ஞானஸ்நானம் பெறும்போது பிற விசுவாசிகள் பாடுவார்கள். ஒருவகையான எதிர்பார்ப்பும் உற்சாகமும் அங்கு நிறைந்திருக்கும். இன்னொரு விஷயம். மூப்பர்கள் அவருடைய தலையின்மேல் கைவைத்து ஜெபித்தார்கள். அதன்பின் அவர் முதன்முறையாக திருவிருந்தில் பங்குபெறுவார், ஞானஸ்நானம் பெறாதவர்கள் திருவிருந்தில் பங்குபெற அனுமதிக்கப்படவில்லை.

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், புதிதாக ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளுக்கு பாலும் தேனும் கொடுக்கப்பட்டதாக நான் படித்திருக்கிறேன். இதற்கு “ஞானஸ்நானம் பெற்றவன் இப்போது வாக்குறுதிசெய்யப்பட்ட தேசத்தைச் சேர்ந்தவன், பாலும் தேனும் உள்ள தேசத்தைச் சேர்ந்தவன்,” என்று பொருள். இவை வேதாகமத்தில் கட்டளையிடப்பட்ட பழக்கங்கள் அல்ல. ஆனால், சில பொருளுள்ள நல்ல பழக்கங்கள், பயனுள்ளவை. இவைகள் கட்டளையிடப்படவில்லை, ஆனால் ஆதிச் சபை இப்படி செய்தது. அது ஒழுங்குக்கிரமமாக இருந்தால், நமக்குப் பிரியமாக இருந்தால், பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டால், இந்த பழக்கவழக்கங்களில் சிலவற்றை நாமே பின்பற்றலாம்.

புதிய ஏற்பாட்டில் ஒருவன் விசுவாசித்தவுடனே ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று வாசிக்கிறோம். புதிய ஏற்பாட்டின் காலத்தில் அவர்கள் வீடுகளில்தான் கூடினார்கள். இன்று நாம் வீடுகளில் கூடுவதில்லையே! எனவே, சில காரியங்கள் காலப்போக்கில் மாறியிருக்கின்றன. ஹிப்போலிட்ஸ், தெர்த்துல்லியன்போன்றோரின் எழுத்துகளிலிருந்து இதை நான் அறியலாம்.

நவீன சபைகளில் பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு தேவனையும், வேதாகமத்தையும்பற்றிய தெளிவான, போதுமான புரிதலும், அறிவும் இல்லாதது மிகப் பெரிய பலவீனம் என்று நான் கருதுகிறேன். இந்த அறிவு குறைவாக உள்ளதால்தான் இன்றைய கிறிஸ்தவர்களின் வாழ்க்கைத் தரமும், வாழ்க்கைப்பாணியும் தேவனுக்கு ஏற்றாற்போல் இல்லை. புதிய விசுவாசிகளுக்குத் தேவ அறிவைப் போதிக்க மறைக்கல்வி அவசியம் என்பது என் கருத்து. இல்லையென்றால் கிறிஸ்தவர்களால் இந்த உலகத்தில் தேவன் விரும்பும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. எப்படிப்பட்ட மறைக்கல்வியை வழங்கபோகிறோம் என்பது சபையைப்பொறுத்தது.

8. சிறப்பான நாட்கள்

இதுவரை நாம் ஆதிச் சபையில் வழக்கமான ஞாயிறு ஆராதனை, வாரநாள் ஆராதனை, வேதாகமத்தின் முக்கியத்துவம், ஞானஸ்நானம் ஆகியவகளைப்பற்றிப் பேசினோம். இன்று கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ், பெரிய வெள்ளி, ஈஸ்டர்போன்ற பண்டிகைகளை, சிறப்பான நாட்களைக் கொண்டாடுவதைபோல் அன்று அவர்கள் கொண்டாடினார்களா என்று இப்போது பேசலாம். சிறப்பான நாட்கள். பண்டிகைகள்.

ஆதிச் சபையில் அவர்கள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினார்கள். ஆனால், இதைப்பற்றி அவர்களுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடு இருந்தது. இது Quartodeciman controversy என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சொற்றொடரை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை, வைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.

எருசலேமிலும், ஆசியா மைனரிலும் இருந்த கிறிஸ்தவர்கள் யூதர்களின் முதல் மாதமாகிய நிசான் மாதத்தின் 14ஆம் தேதிக்குப்பின், அதாவது பாஸ்காவிற்குப்பின், மூன்றாம் நாளில் ஈஸ்டர் கொண்டாடினார்கள். “இயேசு யூதர்களின் பஸ்காநாளில் சிலுவையில் அறையப்பட்டார்; மூன்று நாட்களுக்குப்பிறகு அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்; எனவே நாங்கள் பாஸ்கா பண்டிகைக்கு மூன்று நாட்களுக்குப்பிறகு ஈஸ்டர் கொண்டாடுவோம்,” என்பது அவர்களுடைய கருத்து. அவர்கள் ஈஸ்டர் பண்டிகையை யூதர்களின் பஸ்காவின் நாட்காட்டியோடு இணைத்துப்பார்த்தார்கள்.

“இது என்ன பெரிய விஷயம்?” என்று ஒருவேளை சிலர் நினைக்கக்கூடும். பஸ்கா பண்டிகை நிசாம் மாதத்தின் 14ஆம் தேதி என்றால், அது திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, என வாரத்தின் எந்தக் கிழமையிலும் வரலாம். இன்று நாம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம். அந்த நாள் திங்கள், செவ்வாய் என எந்தக் கிழமையிலும் வரலாம். அப்படித்தான் அவர்கள் கொண்டாடினார்கள். ஆனால், உரோமிலும், உரோம் நகரைச் சுற்றியுமிருந்த சபைகள், “இல்லை, இது முறையல்ல. நாம் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாட வேண்டும்; இயேசு ஞாயிற்றுக்கிழமைதான் உயிர்த்தெழுந்தார். எனவே, அவர் உயிர்த்தெழுந்த நாள்தான் ஈஸ்டர்,” என்று சொன்னார்கள்.

எடுத்துக்காட்டாக உரோமின் ஆயர் விக்டர். இது இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்தது. எல்லாச் சபைகளும் ஞாயிற்றுக்கிழமைதான் ஈஸ்டர் கொண்டாட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். யூதர்களின் பாஸ்காவிற்குப்பிறகு வருகிற முதல் ஞாயிற்றுக்கிழமைதான் ஈஸ்டர் என்று அவர் கூறினார். யூதர்களின் பஸ்கா எந்தக் கிழமை வந்தாலும் சரி, அந்த வாரத்தில் அதற்குப்பின் வருகிற ஞாயிற்றுக்கிழமைதான் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் கொண்டாட வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். ஈஸ்டர் பண்டிகையை வேறு விதமாகக் கொண்டாடுகிற கிறிஸ்தவர்களைச் சபையைவிட்டு வெளியேற்றிவிடுவதாக விக்டர் பயமுறுத்தினார். ஆனால், எருசலேமிலும், துருக்கி உட்பட ஆசியா மைனரிலும் இருந்த சபைகள் தங்கள் வழக்கத்தை மாற்றவில்லை. இது அன்றைய சபையில் இருந்த ஒரு சர்ச்சை.

ஈஸ்டர் பண்டிகையை எப்போது கொண்டாட வேண்டும்? இதுதான் சர்ச்சை. ஈஸ்டர் பண்டிகையை ஞாயிற்றுக்கிழமையுடன் இணைக்க வேண்டுமா அல்லது பஸ்காவுடன் இணைக்க வேண்டுமா? இதில் நாம் சில காரியங்களைக் கவனிக்க வேண்டும். உரோமின் ஆயர்கள் சிலராவது உலகெங்கும் இருந்த சபையின்மேல் தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக நினைத்தார்கள் என்று இது காட்டுகிறது. இதைக்குறித்து நாம் பின்னாட்களில் பேசுவோம். சில சபைகள் தாங்கள் உரோம ஆயரின் அதிகாரத்தின்கீழ் இருப்பதாக நினைக்கவில்லை என்பதையும் இது காட்டுகிறது. ஏனென்றால், உரோம ஆயர் விக்டர், “ஞாயிற்றுக்கிழமைதான் ஈஸ்டர் கொண்டாட வேண்டும்,” என்று சொன்னபோது எருசலேமிலும், ஆசியா மைனரிலும் இருந்த சபைகள், “நன்றி. இல்லை. நாங்கள் எங்கள் விருப்பப்படி செய்வோம்,” என்றார்கள். கி. பி. 325 இல் நைசியா ஆலோசனைச் சங்கத்தில் இந்தச் சர்ச்சை முடிவுக்கு வந்தது. அது வேறு விஷயம். வசந்த காலத்தில் முதல் முழு நிலவுக்குப்பிறகு வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதுதான் இன்றுவரை கிறிஸ்தவத்தில் நடைமுறையில் உள்ளது.

இந்த சர்ச்சை பல காரியங்களை நமக்கு உணர்த்துகிறது. அன்று கிறிஸ்தவர்கள் இந்த சிறப்பு நாட்களை எப்படிக் கொண்டாடினார்கள் என்பது ஒரு புறம். இன்னொரு புறம், உரோமச் சபையும், உரோம் ஆயரும் எப்படி அதிகாரத்தைப் பறிக்க முயன்றார்கள் என்பதையும் இது நமக்குக் காட்டுகிறது. உரோம் ஆயர் தன்னை சர்வ அதிகாரமுள்ளவராக நினைக்க ஆரம்பித்தார். வேறு சில சபைகள் அப்படி நினைக்கவில்லை. அவருடைய அதிகாரத்தை அங்கீகரிக்கவில்லை.

நாளையும் கிழமையையும் முடிவுசெய்வதில் சர்ச்சை இருந்தபோதும் ஈஸ்டர் பண்டிகைக்குமுன் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் உபவாசித்தார்கள். முதலாவது அவர்கள் ஒரு நாள் உபவாசித்தார்கள். பின்னர் அவர்கள் அதை 40 மணிநேரமாக நீட்டித்தார்கள். அவர்கள் இதைத் தவக்காலமாக மாற்றி பல்வேறு வகையான உபவாசங்களையும், தவசுகளையும் உருவாக்கினார்கள். தவக்காலம் இப்படித்தான் ஆரம்பித்தது.

இன்னும் சிலர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பான நாள் என்றும், அது சிறிய அளவு ஈஸ்டர் என்றும் கூறினார்கள்.

ஞாயிற்றுக்கிழமையை மகிழ்ச்சியோடு வரவேற்று, மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் என்றும் , அவர் தங்களுக்குள் வாழ்கிறார் என்றும் அவர்கள் விசுவாசித்தார்கள். எனவே, ஈஸ்டர் ஞாயிறுக்குமுன் சில கிறிஸ்தவர்கள் உபவாசித்ததுபோல, “தேவன் ஞாயிறன்று நம்மிடையே செய்யவிரும்பும் அற்புதமான செயலுக்காக நான் என்னை ஆவிக்குரிய வகையில் தயார்படுத்தப்போகிறேன்,” என்று சொல்வதுபோல் பல கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பு உபவாசித்தார்கள்.

ஈஸ்டர் பண்டிகை, பெந்தெகொஸ்தே பண்டிகைபோல், இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தை நினைவுகூரும் வகையில் ஜனவரி 6 அல்லது சில நேரங்களில் ஜனவரி 10 அன்று Feast of epiphany கொண்டாடினார்கள். கிரேக்க மொழியில் இதற்கு வெளியரங்கம் என்று பொருள். இந்தப் பண்டிகையைப்பற்றி நிறைய பாரம்பரியங்கள் உள்ளன. இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் இதைப் பல்வேறு வகைகளில் கொண்டாடினார்கள். 300களின் பிற்பகுதிவரை கிறிஸ்தவர்கள் பரவலாகக் கிறிஸ்துமஸ் கொண்டாடவில்லை. அவர்கள் முதலாவது ஈஸ்டர், பின்னர் பெந்தெகொஸ்தே, அதன்பின் ஜனவரி மாதம் வெளியரங்கப் பண்டிகைகள் கொண்டாடினார்கள்.

9. ஆராதனைகளில் பார்வையாளர்கள்

ஒரு புதியவர் ஆதிச் சபையின் ஞாயிறு ஆராதனையில் கலந்துகொள்ளும்போது, ஆராதனையின் முதல் பகுதியில் அவர் பங்குபெறலாம், இரண்டாவது பகுதியில் திருவிருந்தில் பங்குபெற அவருக்கு அனுமதி கிடையாது, அவர் வெளியேறிவிட வேண்டும் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். ஒரு புறமதத்தான், பார்வையாளனாக, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்போது, அது அவனை நிச்சயமாகப் பாதித்திருக்கும், அவனுக்கு விசித்திரமாகத் தோன்றியிருக்கும், அவனுக்குள் பல கேள்விகள் எழுந்திருக்கும். “சரி, இங்கே என்ன நடக்கிறது அல்லது என்ன நடக்கப்போகிறது? ஏன் என்னை வெளியே போகச்சொல்லுகிறார்கள்? ஏதோ பலி என்று சொல்லுகிறார்கள். பலி கொடுப்பதற்கு மிருகம் எங்கே இருக்கிறது? இரத்தம் உடல் என்று சொல்லுகிறார்கள். இரத்தம் எங்கு இருக்கிறது. கொல்லப்பட்ட மிருகம் எங்கு இருக்கிறது? மிருகமோ, இரத்தமோ இங்கு இருப்பதாகத் தெரியவில்லையே! ஏதோவொரு புத்தகத்தைப் பார்த்துப் பாடுகிறார்கள், ஜெபிக்கிறார்கள், வாசிக்கிறார்கள். இது என்ன புத்தகம்? சபையின் தலைவர் ஏன் சொற்பொழிவாற்றுகிறார்? மரித்து, அதன்பின் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த ஒரு கடவுளைப்பற்றி இவர்கள் ஏன் பேசுகிறார்கள்? சபையின் முழு உறுப்பினராக இருப்பதற்கு இரண்டு, மூன்று வருடங்கள் ஆகும் என்று சொல்லுகிறார்களே

ஏன்? ஏன் இவ்வளவு காலம்? ஆராதனையின் முதல் பாகம் முடிந்தவுடன் என்னை வெளியே போகச் சொல்லுகிறார்களே! ஏன்?” இப்படி பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கும்.

பிற மதங்களில் இல்லாத அல்லது உரோமப் பேரரசில் மக்களின் வழக்கமான பழக்கங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பல அம்சங்கள் கிறிஸ்தவ ஆராதனையில் இடம்பெற்றிருந்தன. தங்கள் வேலையோ, நடைமுறைப் பயிற்சிகளோ, ஆராதனை ஒழுங்குகளோ தங்களைச்சுற்றியிருக்கிற கலாச்சாரத்துக்கும், பழக்க வழக்கங்களுக்கும் ஒத்திருக்க வேண்டும் என்று அன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நினைக்கவில்லை. அவர்கள், “நாங்கள் எங்கள் விசுவாசத்தின்படி, கோட்பாட்டின்படி காரியங்களைச் செய்யப்போகிறோம். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் விசும்புகிறாரோ அதைச் செய்வோம்,” என்று சொன்னார்கள்.

சரி, இந்த அம்சத்தை நாம் இங்கு நிறுத்துவோம். ஆனால் ஒரு புறமதத்தானுக்கு, பார்வையாளனுக்கு, பல்வேறு காரியங்கள் விசித்திரமாக அல்லது விநோதமாகத் தோன்றியிருக்கும். அவை அவனுக்கு ஒருவேளை ஓரளவு மர்மமாகவும் இருந்திருக்கலாம். சில சமயங்களில் புரியாத புதிராக இருக்கலாம். ஆராதனையின் முதல் பகுதிக்குப்பிறகு அவன் வெளியேற வேண்டுமானால் நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். “என்னை அனுப்பிவிட்டு, இரண்டாவது பகுதியில் சபை உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள்? இரண்டாவது பகுதியில் நடக்கும் காரியத்தில் நான் ஏன் பங்குபெறக்கூடாது?” இதுபோன்ற பல கேள்விகள் எழும். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கிறிஸ்தவர்களிடம் பதில் இருந்திருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அது மர்மமாகத் தோன்றியிருக்கும்.

கிறிஸ்தவர்கள் ஒரு funeral Society, ஒரு burial Society அதாவது இழவு கொண்டாடும் சமூகத்தினர், அடக்க ஆராதனை நடத்தும் சமூகத்தினர் என்று உரோமர்கள் நம்பியதாக நான் படித்திருக்கிறேன். அவர்கள் இப்படி நினைத்ததற்கும், நம்பியதற்கும் காரணம் உண்டு. கிறிஸ்தவக் குடும்பங்களில் ஒருவர் இறந்தபிறகு அல்லது ஒரு கிறிஸ்தவன் இரத்தசாட்சியாக மரித்தபிறகு மூன்றாம் நாளிலோ, ஒன்பதாம் நாளிலோ, முப்பதாம் நாளிலோ, நாற்பதாம் நாளிலோ அவர்கள் நினைவுநாள் கூட்டம் நடத்தினார்கள். அவர்கள் இறந்தவரின் கல்லறையருகே கூடி, பாடல்கள் பாடினார்கள், வேதம் வாசித்தார்கள், ஜெபித்தார்கள், ஏழைகளுக்கு உதவுவதற்காக காணிக்கை எடுத்தார்கள், சேர்ந்து சாப்பிட்டார்கள். முதலாவது உறவினர்களுக்காகக் கூடினார்கள். பின்னாட்களில் இரத்தசாட்சிகளைக் கனப்படுத்தவும், நினைவுகூரவும் இந்தப் பழக்கம் தொடர்ந்தது. இந்தத் திருவிழா முதன்முதலாக இரத்தசாட்சியாக மரித்த பொலிகார்ப் என்ற பரிசுத்தவானுக்காகக் கொண்டாடப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பொலிகார்ப் ஓர் ஆயர். இவரைப்பற்றி முந்தைய ஒன்றிரண்டு பாகங்களில் பார்த்தோம். இவர் சுமார் 156ஆம் ஆண்டு இரத்தசாட்சியாக மரித்தார். அவர் மரித்தபின் இது நடந்திருக்கலாம்.

10. ஞாயிறு மாலை ஆராதனை

சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலையிலும் கூடினார்கள். அவர்களுடைய ஆராதனை யூதர்களின் ஜெப ஆலய வழிபாட்டு முறைமையை பின்பற்றினார்கள். ஜெப ஆலயங்களில் வேதம் வாசித்தார்கள், வாசித்த வேதவாக்கியங்களுக்கு ஏற்ப சங்கீதங்கள் பாடினார்கள், ஜெபித்தார்கள், போதித்தார்கள், கடைசியாக மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார்கள். கூட்டம் முடிந்தபிறகு கூடியவர்கள் ஒருவரோடொருவர் ஐக்கியன்கொண்டார்கள். இதுவே, ஆதிச் சபையின் வழிபாட்டு முறை. “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்,” என்று அப்போஸ்தலர் நடபடிகள் 2:42இலும், “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணினார்கள்,” என்று 2:46யிலும் வாசிக்கிறோம்.

இதுபோன்ற பல அம்சங்கள் கிறிஸ்தவர்களிடமும், அவர்களுடைய ஆராதனைகளில் இருந்ததால் பிறர் அவர்களை வித்தியாசமாகப் பார்த்தார்கள். ஆம், கிறிஸ்தவர்கள் மற்றவர்களைபோன்றவர்கள் இல்லை. அவர்கள் வித்தியாசமாக இருந்தார்கள் என்பது உண்மைதான்.

கிறிஸ்தவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளையும், கற்பனைகளையும் ஆராதனையாக மாற்றவில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தேவனுக்கே முதல் இடம், மைய இடம், மிக உயர்ந்த இடம், மிக மேன்மையான இடம் கொடுத்தார்கள். அவரே தங்கள் வாழ்கையின் எல்லாவற்றுக்கும் ஆதிகாரணர் என்பதை அங்கீகரித்தார்கள், ஆமோதித்தார்கள், உணர்ந்தார்கள், ஏற்றுக்கொண்டார்கள். அவரே தங்களை ஆள்கிற ஆண்டவர் என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்கள். அவருக்கு மட்டுமே தங்கள் வாழ்வில் எல்லா அதிகாரம் உண்டு, தாங்கள் அவருடைய அரசாங்கத்தின் குடிமக்கள். தங்கள் ஆள்தத்துவத்தின் எல்லாப் பகுதிகளிலும், தங்கள் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும், எந்த நிலைமையிலும், எந்தச் சூழ்நிலையிலும் அவருக்குத் தங்கள்மேல் முழு அதிகாரமும், உரிமையும் உண்டு; அவருக்கு மட்டுமே உண்டு. என்று உணர்ந்து ஆராதித்தார்கள். ஆராதனை அவர்களுடைய வாழ்க்கைமுறையாக இருந்தது.

VIII.கிறிஸ்தவர்களின் குணங்கள்

ஆதிச் சபையில் இருந்த கிறிஸ்தவர்களின் குறிப்பிடத்தக்க சில குணங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன். இது அன்றைய கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

1. கிளாடியேட்டர் விளையாட்டு

முதலாவது, அவர்கள் கிளாடியேட்டர் விளையாட்டுகளை வெறுத்தார்கள். கிளாடியேட்டர் விளையாட்டுகளைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிளாடியேட்டர் விளையாட்டு போர்க்குற்றவாளிகள், கைதிகள், அடிமைகள் ஆயுதமணிந்து ஒருவரோடுவர் அல்லது காட்டுவிலங்குகளோடு சண்டைபோடும் வன்முறை விளையாட்டு. இந்தச் சண்டை நடக்கும் அரங்கத்தில் உரோம அரசர்களும், உயர்குடி மக்களும், குடிமக்களும் பல்லாயிரக்கணக்கில் கூடினார்கள். கிளாடியேட்டர்கள் சண்டைபோடுவதையும், சாவதையும் பார்வையாளர்கள் இரசித்தார்கள், ஆரவாரம்செய்தார்கள், கைதட்டி ஆர்ப்பரித்தார்கள்.

இது உரோமர்களின் கலாச்சாரம். மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஏறக்குறைய இயேசுவின் காலம்வரை இந்த வன்முறை விளையாட்டு நடந்தது. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த விளையாட்டை வெறுத்தார்கள். மனித உயிரை மதிக்காத, துச்சமாகக் கருதுகிற, விளையாட்டை கிறிஸ்தவர்கள் வெறுத்தார்கள். அரங்கத்தில் கொலை வெறியோடு கிளாடியேட்டர்கள் மோதுகிறார்கள். கூடியிருக்கும் பார்வையாளர்கள் இரத்தவெறியுடன் கத்துகிறார்கள். இதை ஒரு கிறிஸ்தவன் எப்படி இரசிப்பான்? மேலும், இந்த விளையாட்டுகள் அஞ்ஞானத் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இது மட்டுமல்ல. இந்த அரங்கங்களில்தான் கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டார்கள், விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டார்கள், இரத்தசாட்சிகளாக மரித்தார்கள். எனவே, ஆதிக் கிறிஸ்தவர்கள் கிளாடியேட்டர் விளையாட்டையும், விளையாட்டு அங்கத்தையும் வெறுத்தார்கள்.

2. நாடக அரங்கங்கள்

கிறிஸ்தவர்கள் விளையாட்டு அரங்கங்களை மட்டுமல்ல, உரோமக் கலாச்சாரத்தின் இன்னோர் அம்சமான நாடக அரங்கங்களையும் தவிர்த்தார்கள். கிரேக்க நாடகங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தார்கள். உரோம நாடகங்களில் இந்த நிலை மாறி பெண்களே பெண் வேடங்களில் நடித்தார்கள். உரோமர்களின் நாடகங்களில் பாலியல் சார்ந்த காட்சிகள் மேலோங்கி நின்றன. ஒழுக்கக்கேடான பாலியல்சார்ந்த காட்சிகளை மேடையில் அப்படியே நடிக்குமாறு சில பேரரசர்கள் வற்புறுத்தினார்கள். பண்டைய உலகில் உரோம நாடகங்கள் ஒழுக்கக்கேடானவை என்பது வரலாற்று ஆசிரியர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. எனவே, கிறிஸ்தவர்கள், “இல்லை, நாங்கள் கிளாடியேட்டர் விளையாட்டு அரங்கத்துக்கு மட்டுமல்ல, நாடகங்களுக்கும் செல்ல மாட்டோம்,” என்று சொன்னார்கள்.

3.கிறிஸ்தவர்களின் வாழ்க்கைப்பாணி

பிறரைவிட கிறிஸ்தவர்கள் ஆரோக்கியமாக, சீரும்சிறப்புமாக நெடுநாள் வாழ்ந்தார்கள் என்று முந்தைய பாகத்தில் பார்த்தோம்.

அஞ்ஞானிகளும், அஞ்ஞான பூசாரிகளும் கோயிலில் வசூலித்த காணிக்கைகளை, நன்கொடைகளை, அல்லது கட்டணங்களை மதுஅருந்துவதற்குச் செலவு செய்வார்கள். அவர்கள் தங்கள் பணத்தை முட்டாள்தனமாக வீணாக்கினார்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் சபைகளில் சேர்ந்த காணிக்கைகளை ஏழைகளுக்கும், திக்கற்றோர்களுக்கும், விதவைகளுக்கும், தேவையில் உள்ளவர்களுக்கும் ஆதரவளிப்பதற்கும் உதவி செய்வதற்கும் பயன்படுத்தினார்கள்.

ஆதிச் சபையில் கிறிஸ்தவர்களின் ஒழுக்கத்தின் தரம் மிகவும் உயர்வாக இருந்தது. கிறிஸ்தவர்களின் ஒழுக்கம் அஞ்ஞானிகளின் ஒழுக்கத்தைவிட பலமடங்கு உயர்ந்திருந்தது. இது சபை வரலாறு முழுவதும் காணப்படுகிறது. கிறிஸ்தவர்கள் ஒருபோதும் பாவம் செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. அவர்களில் ஒருவன் பாவம் செய்தபோது அதை நேர்மையாகக் கையாண்டார்கள். சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், ஒருவன் பாவம் செய்தபோது கிறிஸ்தவனின் உயர்ந்த தரத்தின்படி வாழச் செய்தார்கள். இது அவிசுவாசிகள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

4. விசுவாசிகள் நற்செய்தி அறிவித்தல்

பொதுவாக சபை வரலாற்றைப்பற்றிப் பேசும்போது பெயர் தெரியாத, முகம் தெரியாத கிறிஸ்தவர்களின் பங்களிப்பை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்கள் கிறிஸ்துவுக்கு உண்மையும், உத்தமுமாக வாழ்ந்தார்கள். அவர்கள் தனிப்பட்ட விதத்தில் தங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும், அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கும் நற்செய்தி அறிவித்தார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. பிரபலமான சபைத் தலைவர்களும், சபைப் பிதாக்களும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்காகவும், சபைகளை விரிவாக்குவதற்காகவும், சபைகளின் சாட்சிக்காகவும் எவ்வளவு பாடுபட்டார்களோ, அதே அளவுக்கு சாதாரண விசுவாசிகளும் பாடுபட்டார்கள் என்பதை தேவன் அறிவார்; தேவன் அவர்களுடைய பங்களிப்பை அங்கீகரிக்கிறார் என்று நான் உறுதியாக விசுவாசிக்கிறேன்.

ஒவ்வொரு தேசத்தையும் சீடர்களாக மாற்றுவதற்கு ஒரு மாற்றத்தை உருவாக்க நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம்,

IX.ஆதிச் சபையின் நிர்வாக அமைப்புமுறை

ஆதிச் சபையின் நிர்வாக அமைப்புமுறையைப்பற்றிய சில பொதுவான உண்மைகளையும், போக்குகளையும் பார்ப்போம். ஆதிச் சபை அகத்தளவில் ஓர் அமைப்பாக செயல்படவில்லை. பிற்காலத்தில்தான் சபையின் நிர்வாகம் மையப்படுத்தப்பட்ட கட்டமைப்பாக மாறியது. ஆதிச் சபையின் நிர்வாகம் அப்படி மையப்படுத்தப்படவில்லை, கட்டமைக்கப்படவில்லை, ஒழுங்கமைக்கப்படவில்லை. ஒழுங்கமைக்கப்படவில்லை என்பதால் அங்கு ஒழுங்கீனம் இருந்தது என்பதல்ல இதன் பொருள். உரோமப் பேரரசின் பல்வேறு பகுதிகளில் இருந்த சபைகளுக்கிடையே ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பதுபோன்ற நிர்வாக அமைப்போ, ஒரேவொரு தலைமையோ, கட்டமைப்போ, படிநிலையோ இருக்கவில்லை. ஆதிச் சபையில் நிர்வாகம் பரவலாக்கப்பட்டிருந்தது. உள்ளூர் சபைகளை உள்ளூர்த் தலைவர்கள் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வழிநடத்தினார்கள். அவர்கள் தங்களை நடத்தத் தங்களுக்கு ஒரு தலைமையகம் வேண்டும் என்றோ, தலைவர் வேண்டும் என்றோ, கோரவில்லை. அவர்கள் நாம் புதிய ஏற்பாட்டில் வாசிக்கின்ற தரத்தைப் பின்பற்றினார்கள். சபைகளை வழிநடத்த மூப்பர்கள் இருந்தார்கள். இவர்கள் கண்காணிகள் என்றும், மேய்ப்பர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு உதவிக்காரர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு சபையிலும் ஒரேவொரு மூப்பர் அல்ல, பல மூப்பர்கள் இருந்தார்கள். இந்த மூப்பர்களும் உதவிக்காரர்களும் சபையில் தீர்க்கதரிசிகளாகவும், போதகர்களாகவும் செயல்பட்டார்கள்.

உள்ளூர் சபைகளை வெளியேயிருந்து யாரும் கட்டுப்படுத்தவில்லை, சபைகள் சுயாதீனமாக செயல்பட்டன என்று சொல்லும்போது, பிராந்திய சபைகளுக்கிடையே எந்தத் தொடர்பும், ஐக்கியமும் இருக்கவில்லை என்று நினைக்க வேண்டாம். சபைகளுக்கிடையே போக்கும் வரத்தும் இருந்துகொண்டேயிருந்தது. தலைவர்கள் சபைகளைப் போய்ப் பார்த்தார்கள். அப்போஸ்தலர்களும், நற்செய்தியாளர்களும் ஆங்காங்கே நற்செய்தி

அறிவிக்கவும், சபைகளை சந்திப்பதற்காகவும், விசுவாசிகளை உற்சாகப்படுத்துவதற்காகவும், பலப்படுத்துவதற்க்காகவும் பயணித்துக்கொண்டேயிருந்தார்கள். பயணம் செய்யாத நேரங்களில் சபைகளுக்கு நிருபங்கள் எழுதினார்கள். அவர்கள் எழுதிய நிருபங்கள் எல்லாச் சபைகளிலும் வாசிக்கப்பட்டன. எனவே, பிராந்திய சபைகளுக்கிடையே தொடர்பும், ஐக்கியமும், ஒத்துழைப்பும் இருந்தன. உள்ளூர் சபைத் தலைவர்கள் தேவபக்தியுள்ளவர்களும், திறமையானவர்களுமாயிருந்தார்கள்.

அன்று மேய்ப்பர்கள் பிஷப் என்றும் அழைக்கப்பட்டார்கள். நாளடைவில் பிஷப் என்பவர் ஒரு பிராந்தியத்தில் இருந்த பல சபைகளுக்கு கண்காணிபோல் செயல்பட்டார். இப்படி ஒரு படிநிலை உருவாக்க ஆரம்பித்தது.

சபை ஒரு நிறுவனம்போல் செயல்பட வேண்டுமா, அதை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதை வேதாகமத்தின் அடிப்படையிலும், வரலாற்றுரீதியாகவும் மிகத் துல்லியமாக வரையறுப்பது கடினம். ஒருவிதமான அமைப்பு இன்னொருவிதமான அமைப்புமுறையைவிட சிறந்ததாகத் தோன்றலாம். ஆனால், ஒன்றை நிச்சயமாகச் சொல்லமுடியும். ஒரு அமைப்புமுறை நல்லதா கெட்டதா என்பது அதன் தலைமைப்பொறுப்பை வகிப்பவர்களின் தரத்தையும், குணத்தையும் பொறுத்தது.. நிர்வாக அமைப்பைவிட நிர்வாக அமைப்பின் தலைமைத்துவத்தின் தரமும், குணமும் அதிக முக்கியம். எப்படிப்பட்டவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது முக்கியம்.

அப்போஸ்தலனாகிய பவுல் கூறியதுபோல எந்த மனிதன்மேலும் அவசரப்பட்டு கைவைத்துவிடக்கூடாது. ஒருவன் தலைமைப்பொறுப்பாய் எடுக்க விரும்பினால், அவன் தன் அழைப்பை உறுதிசெய்யவேண்டும், தேவனுக்குமுன் தன்னை ஆராய்ந்துபார்க்க வேண்டும். தேவ மக்களைத் தேவ பாதையில் வழிநடத்தத் தான் தகுதியுள்ளவனா என்று அவன் தேவனுக்குமுன் தன்னை நேர்மையாகச் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும்.

சரி, இந்தப் பாகத்தை முடித்துக்கொள்வோம். எல்லாக் காலங்களிலும் வாழ்ந்த கிறிஸ்தவர்களைப் போலவே ஆதிச் சபையில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும் ஏதோவொரு வகையில் இயல்பான வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஒரு பொருளில், கிறிஸ்தவர்களாகிய நாம் இயல்பான மனிதர்கள்; ஆனால் இன்னொரு பொருளில் அவர்கள் இயல்பானவர்கள் இல்லை.

டயக்னெட்டசுக்கு எழுதிய ஒரு கடிதத்திலிருந்து ஒரு பகுதியைப் படித்து இந்தப் பாகத்தை முடித்துக்கொள்வோம். இது இரண்டாம் நூற்றாண்டின் மத்தியில், அதாவது 150 முதல் 180 A.D வரையிலான காலகட்டத்தில், எழுதப்பட்ட ஒரு கடிதம். இதை எழுதியவர் யார் என்று தெரியாது.

“கிறிஸ்தவர்கள் பிரத்தியேகமான நாடுகளில் வாழவில்லை; அவர்கள் பிற மக்களைப்போல் தத்தம் நாடுகளில் வாழ்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்தந்த நாடுகளின்வழியாகக் கடந்துபோகிற வழிப்போக்கர்களைப்போல் வாழ்கிறார்கள். அவர்கள் பிரத்தியேகமான நகரங்களில் வாழவில்லை; அவர்கள் தேவன் தங்களுக்குப் பகிர்ந்தளித்தபடி கிரேக்கர்களின் நகரங்களிலும், காட்டுமிராண்டிகளின் நகரங்களிலும் வாழ்கிறார்கள். அவர்கள் பிரத்தியேகமான மொழி பேசவில்லை; தங்களைச்சுற்றியுள்ள மக்கள் பேசும் மொழியையே பேசுகிறார்கள். அவர்கள் பிரத்தியேகமான உடை அணியவில்லை, பிரத்தியேகமான உணவைச் சாப்பிடவில்லை. தங்களைச் சுற்றியிருக்கும் மக்களைப்போல் உடுத்துகிறார்கள், அவர்களைப்போல் சாப்பிடுகிறார்கள், வாழ்வின் எஞ்சியுள்ள காரியங்களிலும் அவர்களுடைய பழக்கவழங்கங்களைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், அவைகளில் அவர்கள் கிறிஸ்துவின் முத்திரையைப் பதிக்கிறார்கள்; கிறிஸ்தவ வாழ்க்கையை அற்புதமாக வாழ்கிறார்கள். அவர்களைப்போல் நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அவர்கள் பிறரோடு எல்லாவற்றிலும் பங்கேற்கிறார்கள்; ஆனால், அவர்கள் வெளிநாட்டவர்போல் எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறார்கள். அந்நிய நாடு அவர்களுக்குத் தாய்நாடுபோல; தாய்நாடு அவர்களுக்கு அந்நிய நாடுபோல. எல்லாரையும்போல் அவர்கள் திருமணம் செய்கிறார்கள், குழந்தைகளைப்பெறுகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் சந்ததிகளை அழிக்கமாட்டார்கள். அவர்கள் எல்லாவற்றையும் பொதுவாய் வைத்துச் சாப்பிடுவார்கள்; ஆனால், அவர்கள் படுக்கையைப் பொதுவாக வைப்பதில்லை. அவர்கள் மாம்சத்தில் வாழ்கிறார்கள்; ஆனால் அவர்கள் மாம்சத்தால் வாழ்வதில்லை. அவர்கள் பூமியில் தங்கள் நாட்களைக் கடத்துகிறார்கள், ஆனால் அவர்கள் பரலோகத்தின் குடிமக்கள். அவர்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையினால் சட்டம் கோருவதைவிட அதிகமாகக் கீழ்ப்படிவார்கள். அவர்கள் எல்லா மனிதர்களையும் நேசிக்கிறார்கள், ஆனால், அவர்கள் எல்லாராலும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் அறியப்படாதவர்கள், ஆனால், ஆக்கினைக்குள்ளாய்த் தீர்க்கப்படுகிறார்கள். அவர்கள் சாவுக்குக் கையளிக்கப்பட்டவர்கள்; ஆனால், உயிரோடிருக்கிறவர்கள், அவர்கள் ஏழைகள்; ஆனால், அவர்கள் அநேகரைச் செல்வந்தராக்குகிறார்கள். அவர்கள் ஒன்றுமில்லாதவர்கள், ஆனால் அவர்களிடம் எல்லாம் நிறைந்து வழிகிறது. அவர்கள் கனவீனப்படுத்தப்படுகிறார்கள்; ஆனால், கனவீனத்தில் அவர்கள் மகிமைப்படுத்தப்படுகிறார்கள்; அவர்களைக்குறித்துத் தவறாகப் பேசுகிறார்கள், எனினும் நியாயப்படுத்தப்படுகிறார்கள்; அவர்கள் நிந்திக்கப்பட்டாலும் ஆசீர்வதிக்கிறார்கள்; அவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள், ஆனால், அவர்கள் பிறரைக் கனம்பண்ணுகிறார்கள். தூஷிக்கப்படும்போது ஆசீர்வதிக்கிறார்கள். நன்மை செய்கிறார்கள். ஆனால், தீமைசெய்கிறவர்களைப்போல் தண்டிக்கிறார்கள். தண்டிக்கப்படும்போது, மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்ததுபோல களிகூருகிறார்கள். யூதர்கள் அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று சொல்லுகிறார்கள்; கிரேக்கர்கள் அவர்களைச் சித்திரவதைசெய்கிறார்கள். ஆனாலும் அவர்களை வெறுப்பதற்கு எந்தக் காரணமும் சொல்லமுடியாது.”

தேவனுடைய மக்கள் என்ற முறையில் இதுவல்லவா நம் அழைப்பு? நாம் இந்த உலகத்தில் இருக்கிறோம், ஆனால் நாம் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் இல்லை. இந்தப் பூமியில் நாம் செய்யும் எல்லாவற்றிலும் இயேசு கிறிஸ்துவை கனப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். சபை வரலாற்றின் இந்தப் பாகம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இதைக் கேட்க வேண்டும், பார்க்க வேண்டும், படிக்க வேண்டும், பயன்பெற வேண்டும், என்று நான் விரும்புகிறேன், ஆனால், அது என் கையில் இல்லை. நாம் தொடர்வோம்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.