Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

அப்போஸ்தலர் காலச் சபைக்குப்பின் வருவது ஆதிச் சபை. இது கி.பி 100முதல் கி.பி 312 வரையிலான காலகட்டம். அதாவது இது அப்போஸ்தலனாகிய யோவான் மரித்ததுமுதல் உரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட  காலம்வரையிலான வரலாறு. சித்திரவதையும், இரத்தசாட்சிகளும் என்ற இந்த நான்காம் பாகத்தில் ஆதிச் சபையில் கிறிஸ்தவர்கள் எப்படி, என்ன, ஏன் சித்திரவதைகள் அனுபவித்தார்கள் என்பதை   1. முன்னுரை 2. இரத்தசாட்சிகளைப்பற்றிய பாக்ஸின் புத்தகம் 3. வேதாகமமும், சித்திரவதையும், 4. சித்திரவதை - பொருள் 5. சித்திரவதை - அளவுகள் 6. சித்திரவதை - வகைகள் 7. அதிகாரபூர்வமான சித்திரவதை 8. சித்திரவதை - குணங்கள் 9. சித்திரவதை - காரணங்கள் 10. இரத்தசாட்சிகள் 11. வழிகாட்டும் கோட்பாடுகள் 12. முடிவுரை ஆகிய குறிப்புகளில் விவரமாகப் பார்ப்போம். 


சபை வரலாறு - 04

ஆதிச் சபை - சித்திரவதையும், இரத்தசாட்சிகளும்

I. முன்னுரை

இது சபை வரலாற்றைப்பற்றிய தொடரின் நான்காவது பாகம். முழுத் தொடரில் அப்போஸ்தலர் காலத்திலிருந்து சீர்திருத்த காலம்வரையிலான சபை வரலாற்றை நாம் பார்ப்போம். சபை வரலாற்றை 1. கி.பி 30முதல் கி.பி 100வரை அப்போஸ்தலர் காலத்துச் சபை என்றும், 2. கி.பி 100முதல் கி.பி 312வரை (கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனாகும்வரை) ஆதிச் சபை என்றும், 3. கி.பி 312முதல் கி.பி 1000வரை (கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனானபிறகு) கிறிஸ்தவப் பேரரசின் முந்தைய காலம் என்றும், 4. கி.பி 1000முதல் கி.பி 1500வரை (சீர்திருத்தகாலம்வரை) கிறிஸ்தவப் பேரரசின் பிந்தைய காலம் என்றும் நான்கு காலகட்டங்களாகப் பிரித்துக்கொள்கிறேன் என்று நான் ஏற்கெனவே சொன்னேன்.

முதல் பாகம் சபை வரலாற்றைப்பற்றிய ஒரு முன்னுரை, ஓர் அறிமுகம். இரண்டாம் பாகம் ஆண்டவராகிய இயேசு பரமேறியதிலிருந்து அப்போஸ்தலனாகிய யோவான் மரித்த கி.பி 100வரையிலான அப்போஸ்தலர் காலச் சபை வரலாறு. மூன்றாம் பாகம் கி.பி. 100லிருந்து உரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் கி.பி 312இல் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட காலம்வரையிலான ஆதிச் சபை வரலாறு. அந்தக் கால கட்டத்தில் கிறிஸ்தவம் எப்படிப் பரவியது என்று மூன்றாம் பாகத்தில் பார்த்தோம். இந்த நான்காம் பாகத்தில், அப்போஸ்தலர் காலத்துக்குப்பிந்தைய, உரோமப் பேரரசன் கான்ஸ்டைன்டீன் கிறிஸ்தவனாகி, தன் பேரரசைத் தீவிரமாகக் கிறிஸ்தவமயமாக்குவதற்கு முந்தைய, கி.பி. 100முதல் 312வரையிலான அதே கால கட்டத்தில், ஆதிச் சபைக்கு நேரிட்ட சித்திரவதையைப் பார்க்கப்போகிறோம்.

அந்தக் கால கட்டத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்துக்காகக் கொடுத்த விலை மிக அதிகம். நாம் பார்க்கபோகிற இந்தக் காரியத்தைப் புரிந்துகொள்வதற்கு உரோமப் பேரரசின் எல்லைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுவதுபோல் இருக்கும். ஏனென்றால், உரோமப் பேரரசின் எல்லைக்குள் கிறிஸ்தவத்துக்கு நேர்ந்த சித்திரவதையைத்தான் நாம் குறிப்பாகப் பார்க்கப்போகிறோம். ஆதிச் சபையின் காலகட்டத்தில் கிறிஸ்தவம் கிட்டத்தட்ட உரோமப் பேரரசெங்கும் பரவியிருந்தது. சில இடங்களில் கிறிஸ்தவம் மிகப் பலமாகவும், வேறு சில இடங்களில் பலவீனமாகவும் இருந்தது. கிறிஸ்தவம் உரோமப் பேரரசின் எல்லைகளுக்கு வெளியேயும் சில இடங்களில், சில வடிவங்களில், சில வழிகளில் பரவத் தொடங்கியது.

II. இரத்தசாட்சிகளைப்பற்றிய ஃபாக்ஸின் புத்தகம்

இந்தக் காலகட்டத்தில் நடந்த சில முக்கியமான சித்திரவதைகளை ஃபாக்ஸின் இரத்தசாட்சிகளின் புத்தகம் பட்டியலிடுகிறது. அவைகளை நான் இப்போது சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். அவைகளில் சிலவற்றை போகப்போகக் கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம்.

  1. முதலாவது, சுமார் 67வாக்கில் நீரோவின் ஆட்சியின்போது ஏற்பட்ட சித்திரவதை. இது பெரும்பாலும் உரோம் நகரத்தில் மட்டுமே ஏற்பட்டது. சித்திரவதையை எதிர்கொள்ள சபைகள் தயாராக வேண்டும் என்று சிறிய ஆசியாவில் இருந்த சபைகளுக்கு இந்த நேரத்தில்தான் பேதுரு தன் முதல் நிருபத்தை எழுதினார்

  2. இரண்டாவது, சுமார் 89வாக்கில் டொமிஷியனின் ஆட்சியின்போது நிகழ்ந்த சித்திரவதை. இந்தச் சித்திரவதை நடந்தபோதுதான் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்கு உத்தமமாக இருக்க வலியுறுத்தி யோவான் திருவெளிப்பாட்டை எழுதினார். இந்தக் காலத்தில்தான் யோவான் கொதிக்கும் எண்ணெயில் எறியப்பட்டும், சாகாமல் அற்புதமாக உயிர்பிழைத்தபின், பத்மு தீவுக்கு நாடுகடத்தப்பட்டார் என்பது வரலாறு. அந்த நேரத்தில், “ஒருமுறை நீதிமன்றத்துக்குமுன் நிறுத்தப்பட்ட ஒரு கிறிஸ்தவன் தன் மதத்தைக் கைவிடாதவரை தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கக்கூடாது,” என்ற ஒரு சட்டம் அமலில் இருந்தது.

  3. மூன்றாவது, 108இல் டிராஜன் ஆட்சியின்போது நிகழ்ந்த சித்திரவதை. இவருடைய காலத்திலும் சிலைவழிபாடு ஊக்கப்படுத்தப்பட்டு, கிறிஸ்தவம் இன்னலுக்கு இலக்கானது. கி.பி 112இல் பிளினி என்ற ஓர் ஆளுநர் பித்தினியா மாநிலத்தின் விவகாரங்களை மறுசீரமைக்க பேரரசர் டிராஜனால் அனுப்பப்பட்டார். கிறிஸ்தவர்களைச் சித்திரவதை செய்வதைப்பற்றிய விவகாரத்தில் அவருக்குப் பல கேள்விகள் எழுந்தன. எனவே அவர் அரசனுக்குக் கடிதம் எழுதி கிறிஸ்தவர்களைச் சித்திரவதை செய்வதற்கு ஆலோசனை கேட்கிறார். “கிறிஸ்தவம் என்ற பைத்தியக்காரத்தனம் சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் உள்ள எல்லா வயதினரையும் பாதித்திருக்கிறது. எங்கள் பகுதியில் உள்ள கோயில்கள் கிட்டத்தட்ட வெறிச்சோடிக் கிடக்கின்றன; பலிசெலுத்தப்படும் மிருகங்களுக்குத் தேவையான உணவை விற்பதுகூடக் கடினமாக உள்ளது,” என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். கிறிஸ்தவர்கள் அதிகமாகப் பெருகிவிட்டதால் கோயில்களில் அஞ்ஞான தெய்வங்களுக்குப் பலிசெலுத்துவோர் குறைந்துவிட்டதாகவும், அதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் பிளினி எழுதினார்.

கிறிஸ்தவர்கள் அரசனை வணங்கினால் விடுவிக்கப்பட்டார்கள். இல்லையேல் அவர்கள் துன்பப்படுத்தப்பட்டார்கள். இராயனுக்குத் தூபம் காட்ட மறுத்தவர்களைப் பிளினி கைதுசெய்து, கொலைசெய்தான் - இவ்வாறு கிறிஸ்தவர்களைப் பயமுறுத்தித் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முயன்றான். இது பிளினி டிராஜனுக்கு எழுதிய கடிதத்தின் இன்னொரு பகுதி: “கிறிஸ்தவர்களை நான் இவ்வாறு நடத்துகிறேன். முதலாவது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கிறிஸ்தவர்களா என்று நான் அவர்களிடம் கேட்கிறேன். அவர்கள்”ஆம்’ என்று ஒப்புக்கொண்டால், ‘நீ கிறிஸ்தவனா? நீ கிறிஸ்தவன் என்றால் உனக்கு மரண தண்டனை வழங்கப்படும்’ என்று பயமுறுத்தி, அதே கேள்வியை மூன்றுமுறை கேட்கிறேன். அவர்கள் ‘ஆம்’ என்று மூன்றுமுறை கூறினால், அவர்களுடைய பிடிவாதத்திற்காக நான் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உரோமக் குடிமக்களாக இருந்தால், அவர்கள் தங்களுக்காக வழக்காடுவதற்காக அவர்களை உரோமுக்கு அனுப்புவதற்கு நான் தயாராக இருக்கிறேன். கிறிஸ்துவைச் சபிக்க ஆயத்தமாக இருப்பவர்களை நான் விடுதலைசெய்கிறேன். ஆனால், ஓர் உண்மையான கிறிஸ்தவன் கிறிஸ்துவை சபிக்க மாட்டான், அதற்கு அவனை வற்புறுத்த முடியாது, என்று கூறுவதை நான் ஒப்புக்கொள்கிறேன்,” என்று எழுதினார்.

டிராஜன் என்ன பதில் எழுதினார் தெரியுமா? “எல்லாக் கிறிஸ்தவர்களையும் கைதுசெய்ய வேண்டும் என்பதற்காக அவர்களைத் தேடிப்போக வேண்டாம். நீர் சொன்னபடி ஒருவன் கிறிஸ்தவன் என்று தெரியவரும்போதும், பிறர் ஒரு கிறிஸ்தவனை அடையாளம்காட்டும்போதும், நீர் உம் கடிதத்தில் விவரித்துள்ளபடி அவர்களை நடத்தும்,” என்று பதில் எழுதினார். இதன் பொருள் என்னவென்றால் “ஒருவன் கிறிஸ்தவன் என்று உறுதியானால், கிறிஸ்துவை மறுதலிக்க அவனை வற்புறுத்துங்கள். மறுதலிக்கவில்லையென்றால் மரண தண்டனையை நிறைவேற்றுங்கள்.” 

அந்தியோக்கியாவின் மூன்றாவது ஆயராக இருந்த இக்னேஷியஸ் இந்தக் காலகட்டத்தில்தான் இரத்தசாட்சியாக மரித்தார்.

  1. நான்காவது கி.பி 117முதல் 138வரை ஆண்ட அட்ரியன் காலத்தில் ஏற்பட்ட சித்திரவதை. இவன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதை வாடிக்கையாகவோ, வேடிக்கையாகவோ வைத்துக்கொள்ளவில்லை. எனினும் கிறிஸ்தவத்துக்கு அங்கீகாரமோ, கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்போ, கொடுக்கவில்லை. வழக்கம்போல கிறிஸ்தவர்கள் மறைவான வாழ்க்கையையே வாழ்ந்தார்கள். வெளிப்படையாக விசுவாசத்தை வெளிப்படுத்தியவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இவனுடைய படைத்தளபதி யூஸ்டாசியஸ் ஒரு கிறிஸ்தவன். அவரே முன்னின்று நடத்தி பெற்ற வெற்றியைக் கொண்டாட மன்னன் உரோமத் தெய்வங்களுக்குப் பலிகொடுக்கச் சென்றபோது, அவர் அதில் பங்கேற்கப் பணிவுடன் மறுத்தார். அது அரசனின் கோபத்தைக் கிளறிவிட்டது. அரசன் அவரையும் அவருடைய முழு குடும்பத்தையும் கொல்ல உத்தரவிட்டான். உயர் பதவியில் இருந்தாலும் கிறிஸ்தவன் என்றால் மரணம்தான் நேரிடும் என்று எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் தெரியும்.

  2. கிபி 138க்குப்பின் அரியணை ஏறி 161வரை ஆட்சிசெய்த மன்னன் ஆன்டோனியஸ் பயஸ். இவனுடைய ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் போலிகார்ப்.

  3. கிபி 161முதல் 180வரை உரோம அரசனாக இருந்தவன் மார்கஸ் அரேலியஸ். இவனும் கிறிஸ்தவர்கள்மேல் வன்முறையைக் கட்டவிழ்துவிட்டான். இவனுடைய பார்வையில் கிறிஸ்தவர்கள் பிடிவாதக்காரர்கள், சொன்ன சொல் கேட்காதவர்கள். தன் பேச்சைக்கேட்காதவனை அரசனுக்குப் பிடிக்குமா? இந்தக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் ஜஸ்டின் மார்டர்.

  4. அதன்பின் செப்டிமஸ் செவேரஸ் என்ற மன்னன் அரியணை ஏறி கி.பி 211வரை ஆண்டான். இவனுடைய ஆட்சி தொடக்கத்தில் நல்ல ஆட்சிபோல தோற்றமளித்தது. ஆனால் போகப்போக அவனுடைய குணம் மாறியது. உரோமின் ஆயர் விக்டர், ஒரிஜினின் அப்பா லியோனிதாஸ், லியோனியஸில் இரேனியஸ், கார்தேஜில் பெர்பெத்துவா, பெலிசிட்டாஸ் என்ற இரு பெண்கள் - இவர்களெல்லாம் இந்தக் காலகட்டத்தில் இரத்தசாட்சிகளாக மரித்தார்கள்.

  5. கி.பி 235இல் மாக்சிமஸின் ஆட்சியின்போது எழும்பிய சித்திரவதை அலையில் உரோம ஆயர் போன்டியானுஸ், புகழ்பெற்ற இறையியலாளர் ஹிப்போலிடஸ் கொல்லப்பட்டார்கள்.

  6. கி.பி249முதல் 251வரை ஆட்சிசெய்த தேசியஸ் கிறிஸ்தவக் கொள்கைகள் அரசுக்கு எதிரானவை என்ற கண்ணோட்டத்தில் கிறிஸ்தவத்தை முழுமையாக எதிர்த்தான். இந்தக் காலத்தில் தங்கள் உடமைகளையும், உயிரையும் இழந்தவர்கள் அநேகர். உரோம ஆயர் ஃபேபியன், அந்தியோக்கியாவில் பாபிலாஸ், எருசலேமில் அலெக்சாண்டர், அலெக்ஸாண்ட்ரியாவில் ஒரிஜின், சிமிர்னாவில் பயோனியஸ் ஆகியோர் இந்தக் காலகட்டத்தில் உயிரிழந்த மிகவும் முக்கியமானவர்கள்.

  7. அதன்பின் கி.பி 257இல் வெலேரியனின் ஆட்சியின்போது, உரோம ஆயர் ஸ்டீபன், அதற்கடுத்த ஆயர் செக்ஸ்ட்ஸ் கொல்லப்பட்டார்கள். கார்த்தேஜின் சிப்ரியானும் இந்தக் காலகட்டத்தில்தான் கொல்லப்பட்டார்.

  8. கி.பி 275இல் அலீரியன் மன்னனின் ஆட்சியின்போது உரோம ஆயர் பெலிக்ஸ் கொல்லப்பட்டார். இந்த நேரத்தில் உரோம ஆயராக இருப்பது மிகவும் ஆபத்தானதாக மாறிவிட்டது.

  9. அதன்பின் டயக்ளீஷியன் என்னும் மன்னன் ஆட்சிக்கு வந்தான். இவனுடைய காலத்தில் கிறிஸ்தவர்கள் பேரரசில் பல மட்டங்களில் ஊடுருவியிருந்தார்கள். அரண்மனையில் மன்னனின் மனைவியும் மகளும் கிறிஸ்தவர்களானார்கள். அரண்மனைப் பணியாளர்களிலும் பலர் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். எனினும் கிறிஸ்தவர்களின் மீதான வெறுப்பு மன்னனுக்குக் குறையவில்லை. இவனுடைய ஆட்சிக் காலத்தில் மன்னன் நான்கு முக்கியமான கட்டளைகள் பிறப்பித்தான். இந்த நான்கு கட்டளைகளும் பல்வேறு காலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டன.

i)முதலாவது கட்டளை:

கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்படவேண்டும்; கிறிஸ்தவ மத நூல்கள் கொளுத்தப்படவேண்டும்; கிறிஸ்தவர்களுக்குப் பணிகளில் கீழ்நிலை மட்டுமே வழங்கப்பட வேண்டும்; அவர்கள் அடிமை நிலைக்கு தாழ்த்தப்பட வேண்டும். இந்தக் கட்டளையை எதிர்த்த கிறிஸ்தவர்கள் எரிக்கப்பட்டார்கள்.

ii) இரண்டாவது கட்டளை:

கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த அனைத்து குருக்களும் கொல்லப்படவேண்டும். இந்தக் கட்டளை அமல்படுத்தப்பட்டபோது அனைத்து சிறைச்சாலைகளும் குருக்களால் நிறைந்து வழிந்தன.

iii) மூன்றாவது கட்டளை

கிறிஸ்தவர்களை ஆசைகாட்டி மிரட்டியது. கிறிஸ்தவர்கள் பிற தெய்வங்களுக்குப் பலியிடவும், ஆராதனை செய்யவும் சம்மதித்தால் விடுதலை உண்டு என்றும், சமூக அந்தஸ்து உயர்த்தப்படும் என்றும் உறுதி தரப்பட்டது. பலி செலுத்தும்படியாக கிறிஸ்தவர்கள் பலவந்தப்படுத்தப்பட வேண்டும், வன்முறைகளினால் அவர்களை வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்றும், அந்தக் கட்டளை போதித்தது.

iv) நான்காவது கட்டளை:

கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும்.

இந்தக் கட்டளைகள் இருந்தபோதும், கிறிஸ்தவர்களுக்கு அரசு நிலையிலிருந்து ஏற்பட்ட விரோதம்போல பொதுமக்களிடமிருந்து கோபம் எழவில்லை. பல இடங்களில் கிறிஸ்தவர்கள் பரவியிருந்ததாலும், கிறிஸ்தவர்களால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏதும் நிகழாததாலும் பொது மக்களிடம் கிறிஸ்தவர்களை எதிர்க்கும் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இவனுடைய ஆட்சியின்போது அரசின் அதிகாரப்பூர்வமான சித்திரவதை பேரரசெங்கும் சுமார் 10 ஆண்டுகள் நீடித்தது; ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். அரசனின் காவல் அதிகாரியான செபாஸ்டியன் கிறிஸ்தவன். அவர் அஞ்ஞான தெய்வத்துக்கு பலிசெலுத்த மறுத்ததால், அவரை அம்புகள் எய்து கொல்ல அரசன் உத்தரவிட்டான். அம்புகள் எய்தார்கள்; ஆனால் அவர் இறக்கவில்லை; கிறிஸ்தவர்களுக்கு எதிரான மன்னனின் கொடுமையைக் குற்றுயிரோடு எதிர்த்தார். பொறுப்பானா மன்னன்? இரண்டாவது முறை கொன்றுதீர்த்தார்கள்.

III) வேதாகமமும், சித்திரவதையும்

சரி, சித்திரவதையைப்பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? கிறிஸ்தவர்கள் இப்படி சித்திரவதை செய்யப்படுவார்கள் என்று இயேசு கூறினாரா? தம் சீடர்கள் சித்திரவதையை எதிர்பார்க்க வேண்டும் என்று இயேசு ஏற்கெனவே கூறினார். நான் ஒன்றிரண்டு வசனங்களை மட்டும் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன். “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.” இது மத்தேயு 5:11,12.

கிறிஸ்தவன் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் ஒருவனை நிந்தித்தால், துன்புறுத்தினால், அவன் பாக்கியவான் என்று இயேசு கூறினார். ஒருவன் கிறிஸ்தவன் என்பதால் பிறர் அவன்மேல் இல்லாதது பொல்லாதது எல்லாம் பொய்யாகச் சொல்லும்போது, பரலோகத்தில் அவனுக்கு வெகுமதி அதிகமாக இருக்கும் என்பதால் அவன் அகமகிழ்ந்து களிகூர வேண்டும்; ஏனென்றால் அவனுக்குமுன் வந்த தீர்க்கதரிசிகளையும் இப்படித்தான் சித்திரவதை செய்தார்கள் என்று இயேசு தம் மலைப்பிரசங்கத்தில் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தார். இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லவே இல்லை. தம் நாமத்தின்பொருட்டு தம் சீடர்கள் சித்திரவதையை எதிர்பார்க்க வேண்டும் என்று இயேசு வெளிப்டையாகக் கூறினார். சித்திரவதை இயேசு கிறிஸ்துவின் சீடனாக இருப்பதின் ஓர் இன்றியமையாத அம்சம். இயேசு மதத் தலைவர்களிடம், “இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பபடுத்துவீர்கள்,” என்று கூறினார். இது மத்தேயு 23:34. தம் சீடர்களை மதத் தலைவர்கள் பிற்காலத்தில் சித்திரவதைசெய்வார்கள் என்று இயேசுவுக்குத் தெரியும். அவருடைய சீடர்களுக்கும் தெரியும்.

நான் இன்னும் சில வசனங்களைக் குறிப்பிடுகிறேன். இது லூக்கா 21:12. இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.”* இங்கு இயேசு குறிப்பிடுகிற ஒரு கூற்றைக் கவனியுங்கள். தம் சீடர்கள் அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள் என்றும், அரசர்களாலும் ஆட்சியாளர்களாலும் சித்திரவதைசெய்யப்படுவார்கள் என்றும், இந்த உலகத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினார். தம்மைப் பின்பற்றும் தம் சீடர்கள் உலகெங்கும் பரவி நிரம்புவார்கள் என்றும், அவர்கள் பிரசங்கிக்கும் நற்செய்தி உலகெங்கும் பரவும் என்றும், அவர்களுக்கும் அவர்கள் அறிவிக்கும் நற்செய்திக்கும் மூலைமுடுக்கெல்லாம் முட்டுக்கட்டைகள் முளைக்கும் என்றும், அவர்கள் பல சவால்களைச் சந்திக்கவேண்டியிருக்கும், சித்திரவதை அனுபவிக்கவேண்டியிருக்கும் என்றும் அவருக்குத் தெரியும், அதை அவர்களுக்குச் சொன்னார், அவர்களுக்கும் அது தெரியும்.

“நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள். அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.” இது யோவான் 15:19, 20, 21.

அப்போஸ்தலனாகிய பவுலும் இயேசு சொன்னதைப் புரிந்துகொண்டு, அவருடைய வார்த்தைகளுக்கு ஆமென் சொல்லி, “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்,” என்று 2 தீமோத்தேயு 3:12இல் கூறுகிறார். வேதாகமத்தின் இந்தப் பகுதிகள் ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாக இருந்தாலும், புரிந்துகொள்வதற்குக் கடினமானவை அல்ல. இவைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு, தயங்குபவர்களுக்கு ஒருவேளை இவைகள் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் சித்திரவதை கிறிஸ்தவத்தின், கிறிஸ்துவின் சீடனுடைய வாழ்க்கையின், ஓர் இணைபிரியாத மூலக்கூறு. சித்திரவதை நடக்கும் என்று இயேசு சொன்னார். அவருடைய காலத்திலேயே அது நடந்தது. அவர் வாழ்ந்தபோது யோவான்ஸ்நானன் சிரச்சேதம் செய்யப்படவில்லையா? யாருடைய நாமத்தினிமித்தம்? அதன்பின் அப்போஸ்தலர்களின் காலத்தில் ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படவில்லையா? யோவானைத்தவிர பிற அப்போஸ்தலர்களெல்லாம் இரத்தசாட்சிகளாகத்தானே மரித்தார்கள்!

IV) சித்திரவதை - பொருள்

துன்பப்படுவார்கள் என்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் dioko என்ற கிரேக்க வார்த்தையை “ஏளனம்செய்வார்கள்” “வேதனைப்படுத்துவார்கள்” “கொடுமைப்படுத்துவார்கள்” “பரிகாசம்செய்வார்கள்” “தொல்லைசெய்வார்கள்” “அலைக்கழிப்பார்கள்” “சித்திரவதைசெய்வார்கள்’ என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.

V) சித்திரவதை - அளவுகள்

சித்திரவதையில் பல்வேறு வகைகளும், பல்வேறு அளவுகளும் உள்ளன. நியாயமான சித்திரவதையையும், நியாயமற்ற சித்திரவதையையும் நாம் வேறுபடுத்திப்பார்க்க வேண்டும். ஒருவன் தன் தவறினிமித்தம் சித்திரவதையை அனுபவிக்கிறானா அல்லது அபாண்டமாக அனுபவிக்கிறானா என்று பார்க்க வேண்டும். ஓர் எத்தனை, ஏமாற்றுக்காரனை, கொள்ளைக்காரனை, கொலைகாரனை, மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் ஆச்சரியம் இல்லை. கிறிஸ்தவர்கள் இதுபோன்ற காரியங்களுக்காக சித்திரவதைசெய்யப்பட்டிருந்தால் அது ஆச்சரியம் இல்லை. ஆனால், அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அநியாயமாகச் சித்திரவதைசெய்யப்பட்டார்கள். பல்வேறு வழிகளில், பல்வேறு அளவுகளில்.

1. உணர்ச்சிரீதியான சித்திரவதை

முதலாவது தனிப்பட்ட அல்லது உணர்ச்சிரீதியான சித்திரவதை. கிறிஸ்தவன் என்பதால் அவனைத் தரக்குறைவாகப் பேசுவது, உணர்ச்சிரீதியாக தகாத வார்த்தைகளால் நிந்திப்பது இந்த வகை. அவனுடைய விசுவாசமும் ஒழுக்கத்தின் தரமும் அவனைச் சுற்றியிருப்பவர்களுக்கு சங்கடமாக இருக்கிறது. எனவே இயேசுவை வெறுப்பவர்கள் இயேசுவை நினைப்பூட்டுபவர்களையும் வெறுப்பார்கள்; கிறிஸ்தவர்களைக் கேலிசெய்வார்கள், வேடிக்கையாக்குவார்கள், திட்டுவார்கள், நிந்திப்பார்கள், பழிசுமத்துவார்கள். இது ஒரு மட்டம், ஒரு கட்டம்.

ஆதிச் சபையின் காலத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் தனிநபர்களால்தான் துன்புறுத்தப்பட்டார்கள். இத்தாலியில் உரோம் நகருக்கு அருகேயிருந்த பொம்பெயி என்ற நகரத்தில் ஒரு சுவரில் வரையப்பட்டிருந்த ஓர் ஓவியத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஒரு சிலுவை; அந்தச் சிலுவையில் ஒரு கழுதையின் படம். இயேசுவின் கைகளையும், கால்களையும் சிலுவையில் அறைந்திருந்ததுபோல், இந்தக் கழுதையின் கைகளையும் கால்களையும் வரைந்திருந்தார்கள். இந்த ஓவியத்துக்குமுன் அலெக்செம்னோஸ் என்ற ஒரு கிறிஸ்தவன் முழங்காற்படியிட்டு கழுதையை வணங்குவதுபோல் கேலிசெய்து வரைந்திருந்தார்கள். இந்தப் படத்தின்மூலம் அவர்கள் இயேசுவையும் கிறிஸ்தவர்களையும் கேலி செய்தார்கள், அசிங்கப்படுத்தினார்கள். கிறிஸ்தவர்கள் அன்றும் இன்றும் இவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் இதுபோன்ற அவமானச் செயல்களை அரசாங்கம் செய்யவில்லை. பொம்பெயில் ஒரு சுவரில் யாரோவொருவர் வரைந்த கேலிப்படம் பண்டைய உலகில் கிறிஸ்தவர்களும், அவர்களுடைய விசுவாசமும் தனிநபர்களால் எப்படித் தாக்கப்பட்டன, வெறுக்கப்பட்டன என்பதற்கு ஓர் சான்று. இதுபோன்ற காரியங்கள் இன்றும் தொடர்கின்றன.

2. சமூகரீதியான சித்திரவதை

உணர்ச்சிரீதியான சித்திரவதையைத் தொடர்ந்து வருகிற அடுத்த கட்டம் சமூகரீதியான சித்திரவதை. ஒருவன் கிறிஸ்தவன் என்பதால் அவனைத் தங்கள் சமுதாயத்திலிருந்து விலக்கிவிடுவார்கள். ஊருக்கு வெளியே அனுப்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஊருக்குள் இருந்தாலும் அவனோடு கலக்க மாட்டார்கள்; கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ள மாட்டார்கள்; போக்குவரத்து இருக்காது. அவனை மனிதனாக மதிக்கமாட்டார்கள், கருதமாட்டார்கள். அவர்களுடைய சமுதாயத்தில் அவர்கள் மிகவும் மட்டமாக நடத்தப்படுவார்கள். சமூகத்தில் பிறர் அனுபவிக்கும் சலுகைகள் இவர்களுக்கு மறுக்கப்படும். முறையாகவும், முறையில்லாமலும் பாரபட்சம் காட்டுவார்கள். விவரிக்கமுடியாத வகையில் சமூகத்தில் அநீதி இழைக்கப்படும்.

3. சட்டரீதியான சித்திரவதை.

அடுத்தது சட்டரீதியான சித்திரவதை. கிறிஸ்தவர்கள் கைதுசெய்யப்படுவார்கள், அவர்களுடைய உடைமைகள் பறிமுதல்செய்யப்படும், வீடுகள் சூறையாடப்படும், இடித்துத் தரைமட்டமாக்கப்படும். மதச்சார்பற்ற நாட்டில் மதமாற்றத் தடைச்சட்டம் அமலில் இருக்கிறதே! ஓரினச் சேர்க்கைக்காரர்களின் திருமணத்திற்கு அவர்கள் விரும்புகிற கேக் செய்து தரமுடியாது என்றும், அவர்கள் கேட்கும் குறிப்பிட்ட வாசகத்தை அச்சிடமுடியாது என்றும் சொன்ன கிறிஸ்தவர்கள்மேல் வழக்கு நடைபெறுகிறது. கூட வேலைபார்க்கும் நண்பனுக்கு இயேசுவை அறிவித்ததால் அவனுக்குக் குறிப்பாணை வழங்கப்படுகிறது. பொது இடங்களில் ஜெபிப்பது சட்டவிரோதம் என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொடிகட்டிப் பறந்த, ஆதிக்கம் செலுத்தும் சமூக பலமாக இருந்த கிறிஸ்தவம், இப்போது வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டு வெறுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இது எங்கு போய் முடியும் என்று தெரியாது. ஆசிய நாடுகளைபற்றிச் சொல்லவே வேண்டாம்.

4. உடல்ரீதியான சித்திரவதை

அடுத்து உடல்ரீதியான சித்திரவதை. அடி, உதை, மரணம். எனவே, சித்திரவதை என்றவுடன் மரணம் என்று மட்டும் நினைக்க வேண்டாம். இவைகளெல்லாம் சித்திரவதைகளே! ஆனால் அளவுகள் வித்தியாசம். எடுத்த எடுப்பில் உடல்ரீதியான சித்திரவதை வருவதில்லை. உணர்ச்சிரீதியான துன்பத்தில் ஆரம்பித்து அளவும், அழுத்தமும் போகப்போகக் மெல்லக் கூடும்.

VI) சித்திரவதை - வகைகள்

1. சித்திரவதை - நியாயமான, அநியாயமான

இந்த நான்காம் பாகத்தில், ஆதிச் சபையின் காலத்தில், அதாவது கி.பி 100முதல் கி.பி 312 வரையிலான காலகட்டத்தில், கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட சித்திரவதையைப்பற்றி நாம் பேசுவோம். பொதுவாக எல்லாக் காலத்திலும் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்கள். எனவே சித்திரவதை நூதனமானதல்ல. ஆனால் ஆதிச் சபையின் காலத்தில் கிறிஸ்தவர்கள் சந்தித்த சித்திரவதை வழக்கமான சித்திரவதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எப்படியென்றால், வழக்கமாகக் கிறிஸ்தவர்கள் தனி நபர்களால் துன்புறுத்தப்பட்டார்கள். அது இன்றும் நடக்கிறது. நாட்டின் சட்டத்தை மதிக்காத, சட்டத்தைத் தங்கள் கால்களின்கீழ் போட்டு மிதிக்கின்ற, தனி நபர்களாலும், குழுக்களாலும், கும்பல்களாலும் அன்றும் இன்றும் கிறிஸ்தவர்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இது அக்கிரமம், அநியாயம், அட்டூழியம். கிறிஸ்தவர்கள் உலகத்தின் எந்த மூலையில் சட்டத்திற்குப் புறம்பாகத் துன்புறுத்தப்பட்டாலும் இருதயம் கனக்கிறது. பெரும்பாலான துன்புறுத்தல்கள் அப்படித்தான் நடக்கும் என்றுகூட சிலர் நினைக்கலாம். நிறைய எடுத்துக்காட்டுகள் கூறலாம். ஒருவன் கிறிஸ்தவனானால் அவனுடைய குடும்பம் அவனை நிராகரிக்கிறது, அல்லது அவனுடைய வேலை பறிபோகிறது, அல்லது வேலையிலும், கல்வி நிலையங்களிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இப்படி எத்தனையோ நிகழ்வுகள் அங்கும் இங்குமாகத் தனிப்பட்ட அளவில் நடக்கின்றன. இதுவும் அநியாயம்! அன்றும், இன்றும், என்றும் கிறிஸ்தவர்கள் அநியாயமாகச் சித்திரவதைசெய்யப்படுவது வேதனையளிக்கிறது.

ஆனால், ஆதிச் சபையின் காலத்தில் கிறிஸ்தவர்கள் அனுபவித்த சித்திரவதை தனி நபர்களால் அல்ல, மாறாக உரோமப் பேரரசால் ஏற்பாடு செய்யப்பட்டது, அங்கீகரிக்கப்பட்டது, மேற்கொள்ளப்பட்டது. அது அரச பயங்கரவாதம். கிறிஸ்தவர்களைத் துன்பபடுத்த அரசின் பொருளாதார உதவி தாராளமாகக் கிடைத்தது.

2. சித்திரவதை - அதிகாரப்பூர்வமான, அதிகாரப்பூர்வமற்ற

அதிகாரபூர்வமான சித்திரவதைக்கும் அதிகாரபூர்வமற்ற சித்திரவதைக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஏதோவொரு வகையில், ஏதோவொரு நேரத்தில் அதிகாரபூர்வமற்ற சித்திரவதையை கொஞ்சமாவது எதிர்கொள்ளத்தான் வேண்டும். அப்போஸ்தலர்களும், சீடர்களும் மதவாதிகளாலும், அதிகாரிகளாலும், சில நேரங்களில் கட்டுக்கடங்காத கும்பல்களாலும் துன்புறுத்தப்பட்டதை நடபடிகள் புத்தகத்தில் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாட்களிலேயே நாம் இதைப் பார்க்கிறோம். சிலர் இயேசுவை நேசித்தார்கள். வேறு சிலர் அவரை வெறுத்தார்கள். சிலர் இயேசுவின் சீடர்கள்மேல் அன்புகூர்ந்தார்கள். வேறு சிலர் அவர்களைப் பகைத்தார்கள். சில நேரங்களில் சீடர்கள் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, அடிக்கப்பட்டார்கள். சில சீடர்கள் கொல்லப்பட்டார்கள்.

முதலாவது, யூதத் தலைவர்களும், புறமதத் தலைவர்களும் கிறிஸ்தவத்தைத் தங்கள் போட்டி மதமாகவும், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களைத் துரோகிகளாகவும் கருதியதால் கிறிஸ்தவர்களை எதிர்த்தார்கள். அடுத்த மூன்று நூற்றாண்டுகள் இந்தச் சித்திரவதை தொடர்ந்தது. கிறிஸ்தவர்கள்மேல் யார் கோபமாக இருந்தார்கள் அல்லது பொறாமைப்பட்டார்கள் அல்லது அவர்களைப் பார்த்து யார் பயப்பட்டார்கள் என்பதைப் பொறுத்து சித்திரவதை, கடலலைகளைப்போல், அங்கும் இங்கும் வந்துபோனது. ஆயினும், அவர்கள் உரோமப் பேரரசின் அதிகாரிகளால் அதிகாரபூர்வமாக தொந்தரவு செய்யப்படவில்லை, துன்புறுத்தப்படவில்லை.

VII) அதிகாரபூர்வமான சித்திரவதை

1. கிலவுது இராயன் ஆட்சி.

உரோமப் பேரரசன் கிளாடியஸ், அதாவது கிலவுது இராயன், ஆட்சி செய்த காலத்திலேயே ஆதிச் சபைக் கிறிஸ்தவர்கள் அதிகாரபூர்வமாகச் சித்திரவதையை அனுபவிக்க ஆரம்பித்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. நடபடிகள் புத்தகத்தில் கிலவுது இராயனைப்பற்றி வாசிக்கிறோம். கி.பி.41 முதல் 54வரை ஆட்சி செய்த கிலவுதி இராயன் பொதுவாக உரோமில் இருந்த பல்வேறு மதங்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார் என்றும், அவர்களுடைய நடவடிக்கைகளுக்கு அவர் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்றும் நம்பபப்படுகிறது. ஆனால் உரோம வரலாற்றாசிரியர் சுடோனியசின் சில வரிகளை வாசிக்கும்போது இந்தக் கருத்து முற்றிலும் உண்மை இல்லை என்று தெரிகிறது. கி.பி 52 ஆம் ஆண்டு உரோமில் நடந்த சில நிகழ்வுகளைப்பற்றி சுடோனியஸ் எழுதியிருப்பவை இந்தச் சந்தேகத்துக்குக் காரணம். இதோ அவருடைய வார்த்தைகள்: “யூதர்கள் கிறிஸ்துசின் தூண்டுதலின்பேரில் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தியதால், கிலவுதி இராயன் அவர்களை உரோமிலிருந்து வெளியேற்றினார்.” யூதர்கள் உரோம் நகரிலிருந்து வெளியேற வேண்டும் என்று கிலவுதி இராயன் கட்டளை பிறப்பித்தான் என்றும், அதனால் யூதர்கள் உரோமைவிட்டு வெளியேறினார்கள் என்றும் நடபடிகள் 18:2இல் வாசிக்கிறோம். அப்படி வெளியேறிய ஒரு குடும்பம் ஆக்கில்லா பிரிஸ்கில்லா தம்பதிகள். இவர்கள் உரோமிலிருந்து வெளியேறி கொரிந்துவில் குடியேறினார்கள்.

சுடோனியஸ் குறிப்பிடுகிற இந்தக் கிறிஸ்துஸ் யார்? இவர் கிறிஸ்துஸ் என்ற பெயர் கொண்ட ஒரு சாதாரணமான நபராக இருக்கலாம். இவர் ஒருவேளை உரோம ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முள்ளாக இருந்ததால் ஆட்சியாளர்கள் இவரையும், இவரைப் பின்பற்றியவர்களையும் நாட்டைவிட்டு விரட்ட முடிவுசெய்திருக்கலாம். இது ஒரு சாத்தியம். ஒருவேளை உரோம அரசாங்க அதிகாரிகள் கிறிஸ்து என்ற பெயரை கிறிஸ்துஸ் என்று உச்சரித்திருக்கலாம். எனவே சுடோனிஸ் குறிப்பிடுகிற நபர் கிறிஸ்துவாகவும் இருக்கலாம். அந்த நாட்களில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே கிறிஸ்துவைப்பற்றிய கடும் வாக்குவாதம் எழுந்ததுண்டு. இப்படிப்பட்ட வாக்குவாதங்களும் தர்க்கங்களும் கொரிந்துவிலும் எபேசுவிலும் நடந்ததாக நடபடிகள் 18, 19 ஆம் அதிகாரங்களில் பார்க்கிறோம். எனவே அன்று யூதமதத்தின் ஒரு பிரிவாகக் கருதப்பட்ட கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய முதல் பேரரசர் கிலவுதி இராயனாக இருக்கலாம். கிலவுது இராயன் கிறிஸ்தவர்களைச் சித்திரவதைசெய்வதற்குச் சொன்ன காரணம் என்ன தெரியுமா? சுடோனியஸ் கூறுவதுபோல “கிறிஸ்தவர்கள் பொது அமைதியைக் குலைக்கிறார்கள்” என்பதுதான் அவனுடைய குற்றச்சாட்டு. இதுதான் அரசே கிறிஸ்தவர்களைச் சித்திரவதை செய்ததைப்பற்றிய முதல் குறிப்பு.

2. நீரோவின் ஆட்சி.

ஆனால் நீரோவின் ஆட்சியின்போதுதான் அரசு ஆதரவுடன் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாகவும் பயங்கரமாகவும் சித்திரவதைசெய்யப்பட்டார்கள் என்பது வரலாறு. 54முதல் 68வரை ஆட்சி செய்த நீரோ கிறிஸ்தவர்களைக் கொடுமைபடுத்தி சித்திரவதைசெய்த ஒரு கொடூரன். 64ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உரோம் நகரில் தொழிலாளர்கள் குடியிருப்பில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. தீ ஏழு நாட்கள் நகரம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. வீசிய பலமான கோடைக்காற்றில் தீ நாலாபுறமும் வேகமாகப் பரவியது. அந்நாட்களில் பெரும்பாலான வீடுகள் மரத்தால் கட்டப்பட்டவை. எனவே தீ மளமளவெனப் பரவி நகரத்தில் உள்ள நெரிசலான குடியிருப்புகளை முற்றிலும் அழித்தது. உரோம் நகரின் 14 குடியிருப்புகளில், மாவட்டங்களில், 3 மாவட்டங்கள் முழுவதும் அழிந்தொழிந்தன. 7 மாவட்டங்களுக்குப் பேரழிவு ஏற்பட்டது. நான்கு மாவட்டங்கள் மட்டுமே தப்பின.

உரோம் நகரம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது நீரோ பிடில் வாசித்ததாகச் சொல்வதுண்டு. ஆனால் நீரோவின் காலத்தில் பிடில் என்ற இசைக்கருவி கிடையாது. அவர் லையர் என்ற இசைக்கருவியை வாசித்திருக்கலாம் என்கிறார்கள். நீரோ இசைக்கருவியான லைர் வாசிப்பதிலும் பாடல் பாடுவதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும், மேடையில் நடிப்பதை விரும்பினார் என்பதும் உண்மை. நீரோ இசையை விரும்பினாரா, அவர் என்ன இசைக்கருவி வாசித்தாரா என்பது என் ஆராய்ச்சி இல்லை. அவன் எதை வேண்டுமானாலும் வாசிக்கட்டும். என் பாரம் சபை வரலாறு. நீரோ மன்னன்தான் உரோம் நகருக்குத் தீ வைத்தான் என்று அவன் வாழ்ந்த நாட்களிலேயே பலர் சொன்னார்கள். பல நவீன வரலாற்றாசிரியர்களும் இந்தக் கருத்தை ஏற்கிறார்கள். நீரோ பழைய உரோமை அழித்துவிட்டு அங்கு ஒரு புதிய நகரத்தை உருவாக்க விரும்பியதால் நீரோவே தீயைக் கொளுத்தினான் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய கூற்றின்படி நீரோ எரிந்து சாம்பலான பகுதிகளைக் கையகப்படுத்தி ஒரு புதிய நகரத்தையும் தனக்காக மாளிகைகளையும் கட்டத் தொடங்கினான்.

நீரோ மன்னன் அந்த காலத்தில் மதச் சிறுபான்மையினராக இருந்த கிறிஸ்தவர்கள்தான் ரோம் நகரத்துக்கு தீ வைத்ததாக குற்றம் சாட்டினான், அவர்கள்மேல் பழிசுமத்தினான். அந்த நேரத்தில் உரோமில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு; பொதுமக்கள் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைப்பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருந்தார்கள்; கிறிஸ்தவர்களின்மேல் பொதுமக்களுக்கு ஒருவிதமான வெறுப்பு இருந்தது. எனவே நீரோவின் பொய்யை பொதுமக்கள் எளிதில் நம்பினார்கள்.

கிறிஸ்தவர்கள் தீவைத்த குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டார்கள். காட்டு ஓநாய்களுக்கு இரையாக்கப்பட்டார்கள். உயிருடன் எரிக்கப்பட்டார்கள். இந்தத் தண்டனைகளை நீரோ பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக நிறைவேற்றினான்.

உரோம வரலாற்றாசிரியர் கொர்நேலியுஸ் டாசிடஸ், நீரோவும் அவனுடைய அரசும் கிறிஸ்தவர்களைச் சித்திரவதை செய்ததைப்பற்றி எழுதியிருக்கிறார். அரச சித்திரவதை 54யிலிருந்து 68வரை தொடர்ந்தது. இவருடைய ஒரு நீண்ட பகுதியை நான் இங்கு கூறுகிறேன். “மக்களுக்குத் தன்மேல் இருக்கும் அதிருப்தியைப் போக்க, அவர்களுடைய கவனத்தைத் திசைதிருப்ப, நீரோ பழியைக் கிறிஸ்தவர்கள்மேல் சுமத்தினான். கிறிஸ்தவர்கள்மேல் மக்களுக்கு வெறுப்பை விதைத்தான். மக்கள் அவர்களை அருவருத்தார்கள். இதன் விளைவாக அவன் கிறிஸ்தவர்கள்மேல் சித்திரவதையைக் கட்டவிழ்த்துவிட்டான்”

“பொந்து பிலாத்து கிறிஸ்துவுக்குத் தண்டனை கொடுத்ததுபோல், நீரோ மன்னன் கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்தான்,” என்று அவர் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவையும் கிறிஸ்தவர்களையும், பொந்து பிலாத்துவையும் நீரோவையும் அவர் எப்படி ஒப்பிட்டுப் பேசுகிறார் என்பதையும், கிறிஸ்தவர்கள் அனுபவித்த சித்திரவதையை அவர் எப்படி விவரிக்கிறார் என்பதையும் கவனியுங்கள்.

“நீரோவின்மேல் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. அவன்தான் உரோம் நகருக்குத் தீ வைத்தான் என்று மக்கள் உறுதியாக நம்பினார்கள். அது வதந்தியோ, உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால் அவன் எவ்வளவோ முயன்றும், குடிமக்களுக்குப் பல சலுகைகளை வாரி வழங்கியபிறகும், தெய்வங்களுக்குப் பலிகள் செலுத்தியபிறகும், தன் அவப்பெயரை அவனால் அழிக்க முடியவில்லை. எனவே அந்த வதந்தியை அழிப்பதற்காக, தனக்கு ஏற்பட்ட அவப்பெயரைப் போக்குவதற்காக, மக்கள் அருவருப்பாகப் பார்த்த கிறிஸ்தவர்கள்மேல் அபாண்டமாகப் பழிசுமத்தினான். கடுமையான தண்டனைகள் வழங்கினான். கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்குக் காரணமான கிறிஸ்து திபேரியுவின் ஆட்சியின்போது பொந்து பிலாத்து ஆளுநரால் கொடிய குற்றவாளிபோல் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். கொஞ்சக் காலம் அடங்கியிருந்த இந்த மோசமான மூடநம்பிக்கை மீண்டும் தலைதூக்கியது. இது இந்தப் பாதகத்தின் பிறப்பிடமாகிய யூதேயாவில் மட்டுமல்ல, வெட்கங்கெட்ட செயல்களெல்லாம் வெள்ளம்போல் ஓடிமுடிவடைகிற, கொண்டாடப்படுகிற உரோமிலும் வெடித்தது. ஆகையால் முதலாவது தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை ஒப்புக்கொண்டவர்கள் பிடிக்கப்பட்டார்கள். பின்பு அவர்கள் கொடுத்த தகவல்களைப் பயன்படுத்தி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிடிக்கப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டு, குற்றவாளிகள் என்று தீர்க்கப்பட்டார்கள். நகரத்தைக் கொளுத்தினார்கள் என்ற குற்றத்திற்காக அல்ல; மாறாக மனித இனத்தை வெறுக்கிறார்கள் என்பதற்காக; உரோம் நகருக்குத் தீ வைத்தார்கள் என்பதற்காகவோ, தேச துரோகிகள் என்பதற்காகவோ அல்ல, மாறாக அவர்கள் மனித இனத்தின் வெறுப்பாளார்கள் என்ற காரணத்தினால் அவர்கள் சித்திரவதைசெய்யப்பட்டார்கள். அவர்கள் மாளும்போது மக்களுக்கு வேடிக்கையானார்கள், விளையாட்டானார்கள், பொழுதுபோக்கு அம்சமானார்கள். அவர்களுடைய மரண தண்டனையின்போது கிறிஸ்தவர்கள் எல்லா வகையிலும் ஏளனம் செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு மிருகங்களின் தோல்கள் போர்த்தப்பட்டது; பின் நாய்களால் கடித்திழுக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்; சிலுவைகளில் அறையப்பட்டார்கள்; தீயில் எரிக்கப்பட்டார்கள். இந்தக் கொடூரக் காட்சிகள் நீரோவின் தோட்டத்தில் அரங்கேறின. கிறிஸ்தவர்களைப் பிடித்து சிங்கங்களின் கூண்டுகளிலும், முதலைகளின் தடாகத்திலும் போட்டு அவர்களை விலங்குகள் கொல்வதைப் பார்த்து ரசித்தார்கள். நீரோ, கிறிஸ்தவர்களைக் கொல்லும்போது, அவர்களை உயிரோடு கம்பங்களில் கட்டி வைத்து எரித்து, அவர்களை இரவு நேரத்தில் வீதிகளுக்கும் பூங்காக்களுக்கும் உல்லாச விடுதிகளுக்கும் வெளிச்சம் கொடுக்கும் தீவட்டிகளாக உபயோகித்தான். கிறிஸ்தவர்கள் தேர்களில் கட்டப்பட்டு தெருக்களில் இழுத்துச்செல்லப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் நீரோவால் கொடூரமான முறைகளில் மூர்க்கத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டார்கள். சித்திரவதைக்குள்ளான கிறிஸ்தவர்கள்மேல் பொதுமக்கள் பரிதாபப்படத் தொடங்கினார்கள். ஏனென்றால் அவர்கள் பொது நலனுக்காக அல்ல, ஒரு தனிமனிதனின் மூர்க்கத்தனத்துக்கு இரையாகிறார்கள் என்று அவர்கள் புரிந்துகொண்டார்கள்,” என்று அவர் எழுதுகிறார்.

நீரோ கிறிஸ்தவர்களை சித்திரவதை செய்த காலத்தில்தான் பேதுருவும் பவுலும் உரோமில் இரத்தசாட்சிகளாகக் கொல்லப்பட்டார்கள் என்று நம்பப்படுகிறது. நீரோவுக்குப்பின் கி.பி 69முதல் கி.பி 79வரை வெஸ்பெஷியன் என்ற மன்னன் உரோமை ஆண்டான். இவருடைய மகன்தான் எருசலேம் நகரத்தை அழித்த தீத்து. தீத்து கி.பி 81வரை ஆட்சி செய்தான். இவனுடைய காலத்திலும் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. கிறிஸ்தவர்கள் மறைந்தே வாழ்ந்தனர்.

3. டொமிஷியன் ஆட்சி.

இவனுக்குப்பின் அரசேறினான் இவனுடைய தம்பி டொமிஷியன். இவனுடைய ஆட்சிக்காலம் கி.பி 81முதல் 96வரை. இவன் பேரரசர் வழிபாட்டை மும்முரமாக அமல்படுத்தினான். மூன்றாம் பாகத்திலும் பேரரசர் வழிபாட்டைப்பற்றி நான் கொஞ்சம் பேசினேன். அதைப்பற்றி நான் இன்னும் கொஞ்சம் பேசுவேன். 81ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி டொமிஷியன் அதிகாரபூர்வமாகத் தனக்குத்தானே “தேவனாகிய கர்த்தர்” என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டான். மக்கள் தன்னைத் தேவனாகக் கருதவேண்டும் என்றும், தன்னை வணங்க வேண்டும் என்றும், சிலைகளுக்குத் தூபம் காட்டி வழிபடுவதுபோல் தன்னை வழிபட வேண்டும் என்றும் அவன் கட்டளை பிறப்பித்தான். “நீர் பூமியின் அதிபதி, வெல்லமுடியாத மகிமையுடையவர், நீரே பரிசுத்தர்,” என்று பிறர் தன் மகத்துவத்தைப் போற்ற வேண்டும் என்று அவன் வலியுறுத்தினான். இதுதான் பேரரசர் வழிபாடு.

பேரரசர் வழிபாடு பேரரசின் சில பகுதிகளில் சில நேரங்களில் எப்படி நடந்தது தெரியுமா? ஓர் அறை இருக்கும். அந்த அறையில் பேரரசரின் சிலை இருக்கும். அந்தந்த இடங்களில் வாழ்ந்தவர்கள் அரசு நியமித்த நாட்களில் அந்த அறைக்குச் செல்ல வேண்டும். அங்கு அரசு ஊழியர்கள் இருப்பார்கள். மக்கள் பேரரசரின் சிலைக்குமுன் நின்று, சிலைக்குத் தூபம் காட்டி, “இராயரே கர்த்தர்” என்ற உறுதிமொழி எடுத்து, பேரரசருக்கும், பேரரசுக்கும் தங்கள் விசுவாசத்தைப் பிரகடனம் செய்ய வேண்டும். இப்படிச் செய்தபின் அங்கு இருக்கும் அரசாங்க ஊழியர் கையொப்பமிடப்பட்டு ஒரு சான்றிதழை அவர்களுக்கு வழங்குவார். அந்தச் சான்றிதழ் அவர்கள் உண்மையில் இப்படிச் செய்தார்கள் என்பதை நிரூபிக்கும் ஓர் ஆவணம். இந்த ஆவணம் libellus என்றழைக்கப்பட்டது. இப்படிப்பட்ட சில libellus இன்றும் நம்மிடம் உள்ளன. கி.பி. 250இல் வழங்கப்பட்ட ஒரு libellusசை நான் உங்களுக்குக் காட்ட விரும்புகின்றேன். அதிலிருந்து ஒரு பகுதியை நான் படித்துக்காட்டுகிறேன். “நாங்கள் பேரரசர்களாகிய தேவர்களுக்கு எப்போதும்போல் இப்போதும் உத்தமமாகத் தொடர்ந்து பலிசெலுத்துகிறோம். இன்று உங்கள் முன்னிலையில் உங்கள் விதிமுறைகளின்படி நான் தூபங்காட்டி, பலி செலுத்தி, பிரசாதங்களைச் சுவைத்தேன்.”

இது “இராயரே கர்த்தர்” என்று பிரகடனம்செய்கின்ற சடங்கை ஒருவன் நிறைவேற்றினான் என்பதை நிரூபிக்கும் பல அரசாங்க அதிகாரிகளால் கையெழுத்திடப்பட்ட ஒரு சான்றிதழ். இந்தச் சூழ்நிலையில் ஒரு கிறிஸ்தவன் என்ன பாடுபட்டிருப்பான் என்று கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். இன்று நாம் ஒரு நாட்டின் கடவுச் சீட்டை வாங்கும்போது, நான் இந்த நாட்டுக்கு உண்மையும் உத்தமுமாக இருப்பேன் என்று சில படிவங்களில் கையெழுத்துப் போட வேண்டியிருக்கும். உரோமப் பேரரசு பேரரசர் வழிபாட்டை இப்படி அரசியல்சார்ந்த ஒரு செயல் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் அதை அப்படிப் பார்க்கவில்லை, பார்க்கமுடியாது. கிறிஸ்தவர்கள் இதை ஒரு வழிபாடாக பார்த்தார்கள். அது சரியான பார்வை. ஏனென்றால், ஒரு சிலைக்குமுன் நின்று, சிலைக்குத் தூபங்காட்டி, “இராயனே கர்த்தர்” என்று சொல்வது ஒரு சிறிய காரியமா? முதலாவது, அது ஒரு சிலை. எனவே சிலைக்குமுன் நின்று, தூபங்காட்டி, பலி செலுத்துவது சிலை வழிபாடு. இரண்டாவது இயேசு கிறிஸ்து மட்டுமே ஆண்டவர், கர்த்தர். கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவைத்தவிர வேறு யாரையும் கர்த்தர் என்று அழைக்க மாட்டார்கள். கிறிஸ்தவர்கள் பேரரசரின் கட்டளையை எதிர்த்தார்கள். எனவே கிறிஸ்தவர்கள் அரசுக்கு எதிரானவர்கள், கலகக்காரர்கள், என்னும் முத்திரைகுத்தி துன்பப்படுத்தப்பட்டார்கள். அரசனை வணங்காத கிறிஸ்தவர்களின்மேல் அரசனின் கோபம் பாய்ந்தது. கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்த அனைத்துக் கிறிஸ்தவர்களும் வன்முறைக்கு ஆளானார்கள்.

டொமிஷியன் சித்திரவதை செய்த நேரத்திலும் தேவன் அங்கு வேலைசெய்துகொண்டிருந்தார். கிறிஸ்தவம் அரண்மனைகளிலும் நுழைந்தது. மன்னனின் தம்பி கிளமெண்ட் கிறிஸ்தவனானார். கிறிஸ்தவர்களை வெறுத்த மன்னன் தன் தம்பியையும் வெறுத்தான். தன் தம்பி என்றும் பாராமல் மன்னன் கிளமெண்டைக் கொன்றான். அவனுடைய மனைவியை நாடுகடத்தினான்.

அந்த நாட்களில் உரோம் நகரில் நடந்த வன்முறைகளைக்குறித்து ‘Shepherd of Hermes’ எனும் நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. அரசன் தன் குடும்பத்தாரைக் கொன்றதற்கும், நாடுகடத்தியதற்கும் முக்கியமான காரணம் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதல்ல, மாறாக அவர்கள் நாத்திகர்கள் என்பதால். ஆம், கிறிஸ்தவர்களை அவர்கள் நாத்திகர்கள் என்றழைத்தார்கள். ஏனெனில் பிற மக்கள் வழிபட்ட கிரேக்க, உரோமக் கடவுள்களைப்போல் கிறிஸ்தவர்கள் எந்த சிலைகளையும் வணங்கவில்லை.

இந்தக் கண்ணோட்டத்தோடு, ஆதிச் சபைக்கு நேர்ந்த சித்திரதவதையை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்வதற்கு வசதியாக சில நுணுக்கமான காரியங்களை நான் இங்கு வரிசைப்படுத்துகிறேன்.

VIII) சித்திரவதை - குணங்கள்

1. இடைவிடாது நடைபெறவில்லை.

உரோமப் பேரரசின் எல்லையெங்கும் சித்திரவதை இடைவிடாமல் தொடர்ந்து, ஒரே நேரத்தில் நடைபெறவில்லை. ஆதிச் சபையின் காலம் கி.பி 100முதல் 312வரையிலான 212 ஆண்டுகள் என்று எடுத்துக்கொள்வோம். நான் சபை வரலாற்றை நான்கு காலகட்டங்களாகப் பிரிக்கிறேன் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். கிறிஸ்தவர்கள் உரோமப் பேரரசின் எல்லையெங்கும் 212 ஆண்டுகள் தொடர்ச்சியாகச் சித்திரவதைசெய்யப்பட்டார்கள் என்று நினைக்கவேண்டாம். அப்படி இல்லை. மாறாக வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அளவுகளில் சித்திரவதை கடல் அலைகளைப்போல் ஏறியிறங்கியது. சித்திரவதை தொடர்ந்து நடக்கவில்லை, எல்லா இடங்களிலும் நடக்கவில்லை. சில பகுதிகளில் நடந்தது. சில பகுதிகளில் நடக்கவில்லை. சில பகுதிகளில் அதிகமாகவும், வேறு சில பகுதிகளில் குறைவாகவும் நடந்தது. சில நேரங்களில் உரோமப் பேரரசெங்கும் நடந்தது. வேறு சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் நடந்தது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் பல்வேறு அளவுகளில் சித்திரவதைசெய்யப்பட்டார்கள்.

2. உள்ளூர் நிர்வாகம் சார்ந்தது.

அப்படியானால், சித்திரவதை எப்படி நடந்தது? இது இரண்டாவது குறிப்பு. பொதுவாக, கிறிஸ்தவர்களை எப்படி சித்திரவதைசெய்வது என்பது பெரும்பாலும் உள்ளூர் நிர்வாகத்தைப் பொறுத்தது. அதாவது, பேரரசின் பிரதிநிதியாக இருந்த உள்ளூர் அதிகாரிகள்தான் சித்திரவதையின் வகையையும், தன்மையையும் தீர்மானித்தார்கள். தண்டனை பொருளாதாரரீதியாகவும், சமூகரீதியாகவும் இருக்கலாம்; அவர்களைச் சிறையில் அடைக்கலாம்; அடிமைகளாக்கலாம்; மரணதண்டனை கொடுக்கலாம். எனவே, கிறிஸ்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பது பெரும்பாலும் உள்ளூர் ஆளுநரின் அதிகாரத்தைச் சார்ந்திருந்தது.

3. பலர் மறுதலித்தார்கள்.

ஆதிச் சபை அனுபவித்த சித்திரவதையைப்பற்றி நீங்கள் புரிந்துகொள்ளவேண்டிய மூன்றாவது காரியம் என்னவென்றால் சித்திரவதையைத் தாங்கமுடியாத பல கிறிஸ்தவர்கள் விசுவாசத்தை மறுதலித்தார்கள், பின்வாங்கினார்கள். சகோதர, சகோதரிகளே, ஆதிச் சபை சித்திரவதைக்குள்ளானபோது எல்லாக் கிறிஸ்தவர்களும் இரத்தசாட்சிகளாக மரித்தார்கள் என்றும், எல்லாரும் மரணத்தைத் தைரியமாக எதிர்கொண்டார்கள் என்றும், விசுவாசத்தில் உறுதியாக நின்றார்கள் என்றும், ஒருவரும் பிறரைக் காட்டிக்கொடுக்கவில்லை என்றும், வேதாகமத்தை மறுதலிக்கவில்லை என்றும், மறைந்திருந்த விசுவாசிகளைப்பற்றிய தகவல்களைச் சொல்லவில்லையென்றும், பின்வாங்கிப்போகவில்லை என்றும் நாம் ஒருவேளை நினைக்கக்கூடும். நாம் அப்படிதான் நினைக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை. பல கிறிஸ்தவர்கள் பேரரசின் கட்டளைக்கு அடிபணிந்தார்கள், பின்வாங்கினார்கள், விசுவாசத்தை மறுதலித்தார்கள், வேதகாமத்தைத் தூக்கியெறிந்தார்கள், அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைத்துப் பிற விசுவாசிகளைக் காட்டிக்கொடுத்தார்கள். அநேகக் காரியங்களில் சமரசம் செய்தார்கள். சித்திரவதையைத் தாங்கமுடியாமல் இவைகளைச் செய்தார்கள். கிறிஸ்தவர்கள் சித்திரவதைக்குள்ளானபோதெல்லாம் அநேகக் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தைக் கைவிட்டார்கள். எல்லாக் கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவுக்காகத் தைரியமாக நிற்கவில்லை.

கி.பி 250களில் சபைகளில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை நான் கூறுகிறேன். விசுவாசத்தைவிட்டு வழுவியவர்களை, கிறிஸ்துவை மறுதலித்தவர்களை, என்ன செய்வது என்ற பிரச்சினை சபையில் எழுந்தது. அதைக் கையாளுவதில் மாறுபட்ட கருத்து ஏற்பட்டதால் சபையில் பிரிவினை உண்டாயிற்று. “சித்திரவத்தையின்போது ஒரு கிறிஸ்தவன் தவறிவிட்டால், தன் விசுவாசத்தில் சமரசம்செய்தால், கிறிஸ்துவை மறுதலித்தால் அவனை சபையில் மீண்டும் சேர்க்கக்கூடாது,” என்று சில விசுவாசிகள் சொன்னார்கள். “அவன் கதை அத்தோடு முடிந்துவிட்டது. அவன் நரகத்துக்குத்தான் செல்வான்,” என்றார்கள். வேறு சிலரோ, “இது ஒரு பெரிய காரியம் இல்லை. சித்திரவதையைத் தாங்கமுடியாமல் வாயினால்தான் மறுதலித்தார்கள். எனவே, மன்னிப்பு கேட்டுவிட்டு சபைக்குள் வரலாம்,” என்றார்கள்.

பெரும்பாலான சபைகள் மிகவும் ஞானத்தோடு ஒரு நடுநிலையை எடுத்தார்கள். சித்திரவதையின்போது கிறிஸ்துவை மறுதலித்தவர்கள் சபைக்குத் திரும்ப வந்தபோது, “நீங்கள் கிறிஸ்துவையும், விசுவாசத்தையும், வேதாகமத்தையும் மறுதலித்ததற்காக உண்மையாகவே மனந்திரும்பினால் நீங்கள் மீண்டும் சபைக்கு வரலாம். நாங்கள் உங்களை ஒரு புதிய விசுவாசியாக ஏற்றுக்கொள்வோம்,” என்று சொன்னார்கள். புதிதாக வரும் விசுவாசிகளுக்கு எப்படி ஞானோபதேச வகுப்புகள் நடத்தினார்கள் என்றும், ஆரம்ப அடிப்படைக் கல்வி எப்படி அளித்தார்கள் என்றும் சபை வரலாற்றின் மூன்றாம் பாகத்தில் நான் சொன்னேன். இந்த ஞானோபதேச வகுப்புகள் மூன்று வருடங்கள்முதல் ஆறு வருடங்கள் வரை நீடித்தன. அவை சீடத்துவத்தைப்பற்றிய வகுப்புகள். விசுவாசத்தைவிட்டு வழுவியவர்கள் மீண்டும் சபைக்கு வந்தபோது, “நீங்கள் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் சீடத்துவ வகுப்புகளில் கலந்துகொண்டு உங்கள் விசுவாசத்தைப் புதுப்பிக்க வேண்டும். அதன்பின் நாங்கள் உங்களை எங்கள் மந்தையில் சேர்த்துக்கொள்வோம். ஆனால், நீங்கள் ஒரு புதிய விசுவாசியாக உங்கள் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்,” என்று சொன்னார்கள்.

எப்படியாயினும் சரி, சித்திரவதையின்போது பின்வாங்கிப்போன, விசுவாசத்தில் சமரசம்செய்து மறுதலித்த, கிறிஸ்துவைவிட்டு விலகிய, கிறிஸ்தவர்களோடு சபை இடைப்படவேண்டியிருந்தது.

4. தப்பிச்செல்ல வேண்டுகோள்.

நான்காவது இன்னொரு முக்கியமான காரியம். கிறிஸ்தவர்கள் சித்திரவதைசெய்யப்பட்ட இடங்களிலிருந்து தப்பித்துச்செல்வதற்கு முடியுமானால் தப்பித்துச்செல்ல சபை அனுமதித்தது, ஊக்குவித்தது. ஏனென்றால், சபை சித்திரவதைக்குள்ளான அந்தக் கால கட்டத்தில் கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சியாக மரிக்க வேண்டும் என்ற ஓர் ஆரோக்கியமற்ற ஆசை சில நேரங்களில் கிறிஸ்தவர்களுக்கு இருந்தது. எனவே, “தப்பித்துச் செல்வது பாவம் இல்லை, பரவாயில்லை,” என்று அவர்களிடம் சொல்ல வேண்டியிருந்தது. சபையின் அன்றைய பொதுவான ஞானமுள்ள அணுகுமுறையைக் கண்டு நான் வியக்கிறேன். “இயேசு கிறிஸ்துவை மறுதலிப்பதற்குப்பதிலாக, சகோதர சகோதரிகளைக் காட்டிக்கொடுப்பதற்குப்பதிலாக, கௌரவமாகத் தப்பிச்செல்வது நல்லது. வேறொரு இடத்திற்குச் செல்வதால் சித்திரவதையைத் தவிர்க்கமுடியுமானால், நீங்கள் அதைத்தான் செய்யவேண்டும்,” என்று சொன்னார்கள். எனவே, சபை முடிந்தவரை விசுவாசிகளைச் சித்திரவதையிலிருந்து காப்பாற்றியது. இதன்மூலம் விசுவாசிகளின் இரத்தசாட்சியாக மரிக்க வேண்டும் என்ற புத்தியற்ற எண்ணத்தைத் தடுத்தார்கள், எச்சரித்தார்கள்.

5. புனிதர்களின் திருவிழா.

சித்திரவதையைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டிய ஐந்தாவது காரியம். உயிரோடிருந்த விசுவாசிகள் இரத்தசாட்சிகளாக மரித்த விசுவாசிகள்மேல் வைத்திருந்த உயர்ந்த மரியாதை, அவர்களைப் புனிதர்களாக்கி கும்பிடும் வணக்கத்துக்கு வழிவகுத்தது. விசுவாசத்தைக் கடுகளவும் சமரசம்செய்யாமல் கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சிகளாக மரித்தவர்களை ஆதிச் சபையார் மிகவும் உயர்வாகக் கருதினார்கள். இது பாராட்டத்தக்க செயல். சபையின் முக்கியமான தலைவர்களும், சாதாரணமான விசுவாசிகளும் விசுவாசத்திற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள். அவர்களைக் கனப்படுத்தும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் அவர்கள் இறந்த நாளில் ஒன்றுகூடி, குறிப்பிட்ட விசுவாசியின் தைரியம், வாழ்க்கை, தியாகம் எல்லாவற்றையும் நினைவுகூர்ந்தார்கள். மிகவும் நல்ல எண்ணத்தோடு ஆரம்பித்த இந்தப் பழக்கம்தான் நாளடைவில் புனிதர்களின் திருவிழாக்களாக மாறியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

6. நிலத்தடி கல்லறைகள்.

ஆறாவது காரியம் உரோம் நகருக்கு வெளியே இருக்கும் நிலத்தடி கல்லறைகள். அப்போது இறந்தவர்களை உரோம் நகரத்திற்குள் அடக்கம்செய்வது தடைசெய்யப்பட்டிருந்தது. அஞ்ஞானிகள் இறந்தவர்களை எரித்தார்கள். எனவே, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் எழவில்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை எரிக்கும் வழக்கத்தை ஏற்கவில்லை. அரசின் சட்டத்தின்படி உரோம் நகரக்குள்ளே அடக்கம் செய்யவும் முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் உரோம் நகருக்கு வெளியே குன்றுகளின் பக்கவோரங்களில் அல்லது பயன்பாட்டில் இல்லாத கற்சுரங்கங்களின் அருகே சுரங்கங்கள் தோண்டி இறந்தவர்களை அங்கு அடக்கம்செய்தார்கள். இந்த நிலத்தடி கல்லறைகள் கேடாகோம்ப்ஸ் என்றழைக்கப்படுகின்றன. கி.பி இரண்டாம் நூற்றாண்டில்தான் இந்த நிலத்தடி கல்லறைகளைக் கட்டத் தொடங்கினார்கள் என்று கூறப்படுகிறது. 170 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த நிலத்தடி கல்லறைகள் இருக்கின்றன. சுமார் 7,50,000 கல்லறைகள் அங்கு இருக்கின்றன.

இறந்தவர்களின் உடல்களை ஒரு துணியால் சுற்றி, மாடத்தில் உள்ள குழியில் வைத்து, பளிங்கு அல்லது சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட கற்களால் மூடினார்கள். ஓர் அட்டையில் இறந்தவரின் பெயரை எழுதி வைத்தார்கள்.

இந்த நிலத்தடி கல்லறைகளில் எந்த இரகசியமும் இல்லை. ஏனென்றால், அரசு அதிகாரிகளுக்குத் தெரியாமல் இவ்வளவு நீளத்துக்குச் சுரங்கம் தோண்டமுடியுமா? 7,50,000 உடல்களைப் புதைக்கமுடியுமா? அது மட்டும் அல்ல. இந்த நிலத்தடி கல்லறைகளை அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும். கிறிஸ்தவர்கள் இந்த இடங்களைச் சில நேரங்களில் இரகசியமாகக் கூடுவதற்குப் பயன்படுத்தினார்கள் என்றும் சிலர் சொல்வதுண்டு. அது அறியாமை. ஒருவேளை ஒருவர் இறந்த நாளில் அவருடைய கல்லறைக்கு சிலர் சென்று அங்கு ஜெபித்திருக்கலாம். இதை ஒருவேளை சிலர் கிறிஸ்தவர்களின் கூட்டம் என்று நினைத்திருக்கலாம். எனவே, இந்த கேடாகோம்ப்ஸ் இருப்பது அரசுக்குத் நன்றாகத் தெரியும்.

தோளில் ஆட்டுக்குட்டியைச் சுமக்கும் இயேசுவின் படம் இந்த கல்லறைகளில் காணப்படுவது வியப்பு தருகிறது. பாய்மரக்கப்பல், திராட்சைக் கொடி, மீன், நங்கூரம் போன்ற பல சித்திரங்கள் இந்தக் குகைகளில் காணப்படுகின்றன.

7. சற்று இளைப்பாறுதல்.

ஆதிச் சபையின் சித்திரவதையைப்பற்றிய இன்னொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால் கி.பி 125யிலிருந்து 160வரையிலான 35 ஆண்டுகள் அதிகாரபூர்வமான சித்திரவதை அதிகமாக நடக்கவில்லை. அது கிறிஸ்தவர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்த காலம். அரசு அந்தக் கால கட்டத்தில் கிறிஸ்தவர்களைச் சகித்துக்கொண்டது என்று சொல்லலாம்.

8. இரத்தசாட்சிகளின் எண்ணிக்கை.

எட்டாவது குறிப்பு. 1900வரை கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையைவிட 1900யிலிருந்து இதுவரை கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று மதிப்பிடுகிறார்கள். ஆதிச் சபையின் காலத்தில் ஆயிரம் ஆயிரமாகக் கிறிஸ்தவர்கள் இரத்தசாட்சிகளாக மரித்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனினும், 1900க்குப்பின் அதைவிட அதிகமான கிறிஸ்தவர்கள் இரத்தசாட்சிகளாக மரித்தார்கள். இதைச் சொல்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் நேர்மை தேவை. ஆம், 20ஆம் நூற்றாண்டில் கம்யூனிசம் தலைதூக்கியபிறகு அதைவிட அதிகமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.

உரோமப் பேரரசில் நிகழ்ந்த சித்திரவத்தையின்போது இரத்தசாட்சிகளாக மரித்தவர்கள் பல்லாயிரம். ஆனால் இன்று உலக மக்கள்தொகையின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அதே எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தினிமித்தம் கொல்லப்படுகிறார்கள். ஆம், வேதகலாபனை உரோமப் பேரரசோடு நிற்கவில்லை. இன்றும் வட கொரியா, சீனா, ஈரான், நைஜீரியா, இஸ்லாமிய நாடுகள் எனப் பல இடங்களில் தொடர்கிறது. இந்தியா இந்தப் பட்டியலில் இடம் பெறும் காலம் தொலைவில் இல்லை.

ஒரு காலத்தில் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கிறிஸ்தவம் கொடிகட்டிப் பறந்தது. ஆதிக்கம் செலுத்தும் சமூக பலமாக இருந்த கிறிஸ்தவம் இப்போது வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டு, வெறுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இது எங்கு போய் முடியும் என்று தெரியாது. ஆசிய நாடுகளைபற்றிச் சொல்லவே வேண்டாம். தமிழ்நாட்டில் மதமாற்றத் தடைச் சட்டம் அமலில் இருக்கிறது

ஆதிச் சபையின் காலத்தில் கிறிஸ்தவர்கள் உடல்ரீதியாக அனுபவித்த சித்திரவதையைவிட ஆவிக்குரியரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் அதிகமாக அனுபவித்தார்கள் என்று சொல்லலாம். உரோம அரசு கிறிஸ்தவர்களைத் திறமையாகச் சித்திரவதை செய்தது. என்ன, எப்படி, சித்திரவதைசெய்தால் கிறிஸ்தவத்துக்குப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று நிதானித்து, அதை மிகச் சாமர்த்தியமாகச் செய்தார்கள். எப்படியென்றால், அரசு முதலாவது சபைப் பிதாக்களை, சபைத் தலைவர்களை, கடுமையாக சித்திரவதைசெய்து கொன்றார்கள். சபைத் தலைவர்களைச் சித்திரவதைசெய்து கொலைசெய்யும்போது, ஒன்று, சபையில் தலைவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள். இரண்டு, சபைத் தலைவர்களுக்கு ஏற்படும் கதியைப் பார்க்கும் யாரும் சபையை நடத்த முன்வரமாட்டார்கள். கொஞ்சக் காலத்துக்குப்பின் ஒருவேளை வேறு தலைவர்கள் எழும்பினாலும் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தலைவர்கள் இல்லாமல் போய்விடும். உரோமப் பேரரசு எப்படி நடந்தது என்று பாருங்கள்.

9. பலவிதம்.

ஆதிச் சபை அனுபவித்த சித்திரவதையைப்பற்றி நான் மேலும் சில குறிப்புகளைச் சொல்ல விரும்புகிறேன். இது ஒன்பதாவது குறிப்பு. சித்திரவதை என்று சொன்னவுடன் ஏதோவொரு வகையில் கொல்லப்பட்டார்கள் என்று எண்ணத் தோன்றும். அப்படி அல்ல. கிறிஸ்தவர்கள் பல வகைகளில் சித்திரவதைக்குள்ளானார்கள். அதில் மரண தண்டனையும் ஒன்று. சித்திரவதையில் பொருளாதாரத் தடை, சமூகப் புறக்கணிப்பு, கல்வி மறுக்கப்படுத்தல், சிறையில் அடைக்கப்படுதல், அடிமைகளாக விற்கப்படுத்தல், முகாம்களில் அடைத்தல், சுரங்கங்களில் பணியமர்த்தல் போன்றவையும் அடங்கும். நான் இதைச் சொல்வதற்குக் காரணம் என்னவென்றால் எல்லாரும் கொல்லப்படவில்லை. சித்திரவதை என்றால் எல்லாரும் கொல்லப்பட்டார்கள் என்று நாம் நினைத்தால் ஆதிச் சபையிலும், நவீன உலகத்திலும் இன்றும் பல கிறிஸ்தவர்கள் அனுபவிக்கின்ற பாடுகளை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்று பொருள். சபை வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே கிறிஸ்தவர்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள்.

ஆதிச் சபையில் சிப்பிரியான் என்ற ஒரு தலைவர் இருந்தார். அவர் நாடுகடத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். செகுராவுக்கு என்ற இடத்துக்கு அருகிலுள்ள உரோமச் சுரங்கங்களில் வேலை செய்ய கைதிகளாக அனுப்பப்பட்ட அந்த விசுவாசிகளை உற்சாகப்படுத்த அவர் ஒரு கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்திலிருந்து இரண்டு பத்திகளை நான் உங்களுக்குப் படிக்கப் போகிறேன். இதோ சிப்பிரியானின் வரிகள்.

“சுரங்கங்களில் உள்ள சகோதரர்களே, நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின், நம்மைப் பாதுகாக்கின்ற சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவனின், சாட்சிகளாகிய உங்களுக்கு நித்திய வாழ்த்துக்கள். மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட அன்பான சகோதரர்களே, விசுவாசத்தினிமித்தம் எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னைக் கட்டுப்படுத்தாவிட்டால் நான் உங்களைப் பார்க்கவும், உங்களோடு பேசவும், அரவணைக்கவும் ஓடோடி வந்திருப்பேன். ஆனால், எந்த வகையில் முடியுமோ அந்த வகையில் நான் உங்கள்முன், உங்கள் பிரசன்னத்தில், வந்து நிற்க முயல்கிறேன்; நேரில் வர அனுமதியில்லை, முகமுகமாய்க் காண முடியாது. ஆனால் அன்போடும், ஆவியிலும் நான் இந்தக் கடிதத்தின்மூலம் என் உள்ளத்தை ஊற்றி உங்களிடம் வருகிறேன். இதற்கு அனுமதி இன்னும் மறுக்கப்படவில்லை. உங்கள் நற்பண்புகளிலும், உங்களைப்பற்றிய புகழ்ச்சிகளிலும் நான் பேருவகை அடைகிறேன். நான் என்னை உங்களுடைய பங்காளியாகக் கருதுகிறேன். ஆயினும் நீங்கள் இப்போது படுகிற பாடுகளில் அல்ல, மாறாக அன்பின் பங்காளி. என் அன்பு நண்பர்களே, உங்களைப்பற்றிய தெய்வீக மகிமையான காரியங்களைப்பற்றி நான் கேள்விப்படும்போது, தெய்வீகக் கிருபை உங்களுக்கு அருளியிருக்கும் கனத்தை நான் அறிந்திருக்கும்போது, நான் மூலையில் மௌனியாக அமர்ந்து, என் குரலை அடக்கிக்கொள்ள முடியுமா? நீங்கள் கர்த்தரிடமிருந்து உங்களுக்குரிய கிரீடத்தைப் பெறுவதற்கு, நீங்கள் இரத்தசாட்சிகளாக மரிப்பதற்குமுன்பே உங்களின் ஒரு பகுதி நித்தியத்துக்குள் நுழைந்துவிட்டது. மீதி ஒரு பகுதி சிறையின் இருட்டறைகளில் அல்லது சுரங்கங்களில் சங்கிலிகளில் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் தரப்போகிற தண்டனைகள் தாமதமாவதால், தள்ளிப்போவதால், நீங்கள் காண்பிக்கும் உறுதியும் மனோதிடமும் சகோதரர்களை வலுப்படுத்துவதற்கும், தரிப்பிப்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக மாறுகின்றன; மிகவும் துணிச்சலான, ஆசீர்வதிக்கப்பட்ட சகோதரர்களே, உங்கள் மதத்தையும், விசுவாசத்தையும் நீங்கள் மறுதலிக்க மறுத்ததால் இவைகள் உங்களுக்கு நேர்ந்தது ஆச்சரியம் இல்லை. கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் உறுதியாகக் கடைப்பிடித்து, விசுவாசத்தைக் காத்து, அவருடைய சபையில் நீங்கள் எப்போதும் செழித்திருப்பதைக் கண்டு, கர்த்தர் தம் மகிமையின் மாண்பினால் உங்களை மகிமையின் உயரத்திற்கு உயர்த்தியிருக்க வேண்டும்;

தங்க வெள்ளிப் பாத்திரங்களாகிய நீங்கள், தங்கமும் வெள்ளியும் வெட்டியெடுக்கப்படும் சுரங்கத்துக்குள் இருக்கிறீர்கள். சுரங்கத்தில் அல்லவா தங்கத்தை எடுப்பார்கள்? தங்கத்தையா சுரங்கத்துக்குள் வைப்பார்கள்? இப்போது சுரங்கங்களின் தன்மை மாறிவிட்டதோ! முன்பு தங்கத்தையும், வெள்ளியையும் விளைவிக்கும் இடங்களாகக் கருதப்பட்ட சுரங்கங்கள் இப்போது தங்கத்தையும், வெள்ளியையும் பெற்றுக்கொள்ளும் இடங்களாக மாறிவிட்டனவோ! ஆசீர்வதிக்கப்பட்ட உங்கள் கால்களில் விலங்குளை மாட்டி, உங்களை முடக்கிவிட்டார்கள்; தேவனுடைய ஆலயங்களை அவமானச் சங்கிலிகளால் கட்டிவைத்துவிட்டார்கள். உடலை முடக்கியதால் உள்ளிருக்கும் ஆவியையும் முடக்கிவிடலாம் என்று நினைத்தார்களோ! இரும்பினால் தங்கத்தைக் கறைப்படுத்தலாம் என்று நினைத்தார்களோ! தங்களைத் தேவனுக்கு அர்ப்பணித்து, தங்கள் விசுவாசத்தைத் தைரியமாக அறிக்கைபண்ணுகிறவர்களுக்கு இவைகள் சங்கிலிகள் இல்லை, ஆபரஅணிகலன்கள். அவைகளால் கிறிஸ்தவர்களை அவமானப்படுத்த அவர்களுடைய கால்களைக் கட்ட முடியாது; மாறாக அவைகள் அவர்களுக்கு முடிசூட்டி மகிமைப்படுத்துவதற்காகவே. ஆசீர்வாதமான கட்டுண்ட பாதங்களே, நீங்கள் கட்டப்பட்டிருக்கவில்லை, நீங்கள் கட்டுகள் தகர்க்கப்பட்டவர்கள். உங்கள் கட்டுகளைத் தகர்த்தவர்கள் பொற்கொல்லர்கள் அல்ல, கர்த்தர். ஆசீர்வதிக்கப்பட்ட கட்டுண்ட பாதங்களே! நீங்கள் இரட்சிப்பின் பாதையில் பரதீசுக்குப் பயணிக்கிறீர்கள். இந்த உலகத்தில் நிகழ்காலத்தில் கட்டுண்ட பாதங்களே! நீங்கள் தேவனுடன் எப்போதும் விடுதலையோடு உலாவுவீர்கள். ஓ! விலங்களுக்கும், குறுக்குக் கம்பிகளுக்கும் இடையே கொஞ்சக் காலம் அரைகுறை உயிரோடு காலங்கழிக்கும் பாதங்களே! மகிமையின் சாலையில் நீங்கள் சீக்கிரத்தில் கிறிஸ்துவிடம் விரைந்துவிடுவீர்கள். பொறாமையினாலோ அல்லது விரோதத்தினாலோ கொடுமை தான் விரும்பும்வரை உங்களைக் கட்டுகளிலும், விலங்குகளிலும் பிணைத்துவைத்துக்கொள்ளட்டும். இந்தப் பூமியிலிருந்தும், இந்தத் துன்பங்களிலிருந்தும் நீங்கள் மிக விரைவில் பரலோக இராஜ்யத்திற்குள் நுழைவீர்கள். உங்கள் உடலைச் சீராட்ட சுரங்கத்தில் படுக்கைகளும், மெத்தைகளும் இல்லை, ஆனால், கிறிஸ்துவின் ஆறுதலும், தேறுதலும், விருந்தும் அங்கு உண்டு. உழைத்துக் களைத்த உங்கள் மெல்லிய உடல் வலுவிழந்து ஒரு கூடுபோல் தரையில் விழுந்து கிடக்கிறது. கிறிஸ்துவுடன் படுத்திருப்பது தண்டனை இல்லை. குளிக்காத, கழுவாத உங்கள் உடலில் துர்நாற்றம் வீசினாலும், அழுக்கு உங்கள் அழகைக் கெடுத்து, தூசி உங்கள் தோற்றத்தை விகாரப்படுத்தினாலும் ஆவிக்குரிய கழுவுதல் எப்போதும் நடந்துகொண்டேயிருக்கிறது. அங்கே அப்பம் உங்களுக்கு அரிதாகவே கிடைக்கிறது. ஆனால் மனிதன் அப்பதினால் மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்; குளிரில் நடுங்கும் உங்கள் உடலுக்கு ஆடை வேண்டும். ஆனால் கிறிஸ்துவை அணிந்துகொண்டவன் தாராளமாக உடுத்தியிருக்கிறான், அலங்கரிக்கப்பட்டிருக்கிறான். பரட்டைத் தலைமுடி. ஆனால் கிறிஸ்துவே மனிதனின் தலையாயிருப்பதால், எது தேவையோ அது கிறிஸ்துவின் பெயரின் உங்களுக்கு இருக்கிறது. புறவினத்தாருக்கு அருவருப்பானதும் அசிங்கமானதுமான ஊனங்களெல்லாம் எப்பேர்ப்பட்ட மகிமையால் ஈடுசெய்யப்படும்! பூமிக்குரிய, தற்காலிகமான, அதிசீக்கிரத்தில் நீங்கும் இந்த இலேசான உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது. ஆசீர்வதிக்கப்பட்ட அப்போஸ்தலரின் வார்த்தையின்படி, “தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.”

சிப்ரியாவின் முழு கடிதத்தையும் நான் படிக்க வேண்டுமானால், அதற்காக இன்னொரு காணொளி தேவைப்படும். சிப்ரியானுக்கு நன்றாகத் தெரிந்த இந்த ஒன்பது சகோதரர்களை நினைத்துப்பார்க்கிறேன். கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகக் கைதுசெய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டு, செகுராவுக்கு அருகிலுள்ள உரோமச் சுரங்கங்களில் அடிமைகளாக வேலைக்கமர்த்தப்பட்டார்கள். இறக்கும்வரை உழைக்க வேண்டும். அவர்களைப்பற்றிய சாட்சியை சிப்ரியான் கூறும்போது அந்தக் கடிதத்தைப் படித்த அந்த ஒன்பதுபேர் என்ன நினைத்திருப்பார்கள்! இந்த அன்பான சகோதரர்களை புதிய படைப்பில் சந்திப்பது எவ்வளவு மகிமையாக இருக்கும்!

10. வேதப் பிரதிகள் அழிப்பு.

இன்னோர் அம்சத்தை நாம் மறந்துவிடக்கூடாது. இது 10ஆவது குறிப்பு. இந்தக் கால கட்டத்தில் உரோமப் பேரரசு கிறிஸ்தவர்களை மட்டும் அல்ல, கிறிஸ்தவர்களோடு சம்பந்தப்பட்ட வேத எழுத்துக்களையும் அழித்தார்கள். வேதங்கள் பெரும்பாலும் இந்தச் சித்திரவதையின்போதுதான் அழிக்கப்பட்டன. சித்திரவதையின்போது கிறிஸ்தவத் தலைவர்களையும் வேதங்களையும் அழிப்பதில் அரசு அதிக கவனம் செலுத்தியது. கி.பி. 303 இல் உரோமப் பேரரசன் டயக்லீஷியன் பேரரசில் உள்ள எல்லா வேதப் பிரதிகளையும் எரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். நீங்கள் இதைப்பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்று நம்மிடம் எத்தனை வேதப் பிரதிகள் இருக்கின்றன? இவைகளைப் பாதுகாக்க அன்றைய தலைவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள்! எத்தனை பிரதிகளை, தோல்சுருள்களை அந்த மூர்க்கர்கள் எரித்திருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள். ஆயிரக்கணக்கான தோல்சுருள்களை அவர்கள் எரித்தார்கள். தேவன் தம் கிருபையால் பாதுகாத்து நமக்குத் தந்திருக்கும் வேத எழுத்துக்களுக்காக அவருக்கு நன்றி.

IX) சித்திரவதை – காரணங்கள்

சரி, இப்போது, இந்தக் காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் ஏன் சித்திரவதைசெய்யப்பட்டார்கள் என்று பார்ப்போம். உரோம அரசர்கள் ஒரு நாள் தூங்கியெழுந்தவுடன், “இன்றிலிருந்து நாங்கள் கிறிஸ்தவர்களைச் சித்திரவதைசெய்யப்போகிறோம்” என்று சொன்னார்களா? இல்லை யாரும் ஒருநாள் திடுதிப்பென்று, “நான் கொடியவன்; இன்றுமுதல் நான் உங்களைக் கொடுமைப்படுத்த விரும்புகிறேன்; நான் கிறிஸ்தவர்களைச் சித்திரவதைசெய்யப்போகிறேன்,” என்று செய்வதில்லை. கிறிஸ்தவர்களைச் சித்திரவதைசெய்வதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாக அவர்கள் நம்பினார்கள். வரலாறு முழுவதும் இப்படித்தான் நடந்திருக்கிறது. ஆனால், அவர்களுடைய காரியமும் காரணமும் தேவனுக்குமுன் செல்லுபடியாகாது. கிறிஸ்தவர்களை சித்திரவதை செய்யத் தங்களிடம் இருந்ததாகச் சொன்ன காரணங்களை நாம் இப்போது பார்ப்போம்.

அரசியல் கலாச்சார சூழ்நிலை

1. கிறிஸ்தவர்கள் சமூக விரோதிகள் என்ற குற்றச்சாட்டு

முதல் காரணம். கிறிஸ்தவர்கள் விசித்திரமானவர்களாகவும் சமூக விரோதிகளாகவும் கருதப்பட்டனர். உரோமப் பேரரசின் இயல்பு வாழ்க்கையின் இணைபிரியாத அம்சங்களான சிலைவழிபாடு, வதைத்தல், துன்மார்க்கம் ஆகியவைகளில் கிறிஸ்தவர்கள் பங்கேற்காததால் அவர்கள் மனிதகுலத்தை வெறுப்பவர்களாகக் கருதப்பட்டனர். உரோமப் பேரரசின் பல நகரங்களில் பெரிய அரங்குகளில் கிளாடியேட்டர் விளையாட்டு மிகப் பிரபலமாக இருந்தது. இது மிகக் கொடூரமான விளையாட்டு. இந்த விளையாட்டில் பங்கேற்றவர்கள் ஆர்ப்பரிக்கும் பார்வையாளர்களுக்குமுன் ஒருவரையொருவர் கொன்றார்கள். இதை மக்கள் வேடிக்கை பார்த்தார்கள், இது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. இன்று குத்துச்சண்டையையும், மல்யுத்தத்தையும் ஒருவேளை நாம் ஆபத்தான விளையாட்டுக்கள் என்று நினைத்தால், கிளாடியேட்டர் விளையாட்டை நாம் என்னவென்று சொல்வோம்! கிறிஸ்தவர்கள், “நாங்கள் கிளாடியேட்டர் விளையாட்டுகளைப் பார்க்கப்போவதில்லை. எங்கள் பொழுதுபோக்கிற்காக ஒரு மனிதன் இன்னொருவனைக் கொலைசெய்வதைப் பார்க்கமாட்டோம்,” என்று சொன்னார்கள். நகரமே திரண்டு கொலையை ஒரு விளையாட்டாகக் கொண்டாடும்போது அதில் பங்குபெறாதவனை “மனித நேயத்தை வெறுப்பவன்” என்று சொன்னால் அதை என்னவென்பது? அன்று கிறிஸ்தவர்களை அப்படிதான் அழைத்தார்கள். “சமூக விரோதிகள்,” “மனுக்குலத்தை வெறுப்பவர்கள்” என்று கிறிஸ்தவர்களை அழைத்தார்கள்.

அஞ்ஞானிகளும், புறவினத்தார்களும், உரோமர்களும் ஈடுபட்ட பாவச் செயல்களில் கிறிஸ்தவர்கள் ஈடுபடவில்லை, அவைகளுக்கு அவர்கள் உடன்படவில்லை. அஞ்ஞானிகளின் கோயில்களில் ஒழுக்கக்கேடு மலிந்துகிடந்தது. எடுத்துக்காட்டாக ஜூபிட்டரின் கோயிலுக்குப் போய் இரவு முழுவதும் பாவச் செயல்களில் மூழ்கினார்கள். ஒன்று இப்படிப்பட்ட மக்களோடு கிறிஸ்தவர்கள் பழகவில்லை. சில நேரங்களில் சிலர் கிறிஸ்தவர்களைத் தங்கள் கோயில்களுக்கு அழைத்தபோது கிறிஸ்தவர்கள் மறுத்தார்கள். உரோமப் பேரரசெங்கும் இருந்த பெரும்பாலான மதங்களின் நிலைமை இதுதான். எனவே அவர்கள் ,“அப்படியானால் நீங்கள் எங்களை வெறுக்கிறீர்களா?” என்று வினவினார்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள் மனிதர்களை வெறுக்கிறவர்கள் என்று எண்ணினார்கள்.

கிறிஸ்தவ விசுவாசத்தால் சில நேரங்களில் குடும்பங்கள் உடைந்தன. ஓர் அஞ்ஞானக் குடும்பத்தில் ஒருவன் கிறிஸ்தவனானால் அந்தக் குடும்பத்தார் அவனை குடும்பத்திலிருந்து விலக்கிவைத்தார்கள். காரணம் என்ன? “நீ கிறிஸ்தவனாக மாறியதால் நீ மனித இனத்தை வெறுப்பவனாகிவிட்டாய்,” என்று கூறி ஒதுக்கினார்கள். இது அப்பட்டமான பொய். ஆயினும் அன்று கிறிஸ்தவர்களைப்பற்றி இப்படித்தான் அவர்கள் நினைத்தார்கள், பேசினார்கள். கிறிஸ்தவர்கள் மனித இனத்தை வெறுப்பவர்கள் என்ற பொய்யான காரணத்தினால் சித்திரவதைக்குள்ளானார்கள். கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் பொது நலனுக்காக அல்ல, ஒரு தனி மனிதனின் கொடூர குணத்தைத் திருப்திப்படுத்துவதற்காக சித்திரவதை செய்யப்பட்டதை தான் நேரில் பார்த்ததாக கொர்நேலியுஸ் டாசிடஸ் குறிப்பிடுகிறார்.

2. கிறிஸ்தவர்கள் பேரரசர் வழிபாட்டை ஏற்கவில்லை.

“உரோமப் பேரரசர்கள் அல்ல, இயேசுவே தேவன், இயேசுவே கர்த்தர்,” என்று கிறிஸ்தவர்கள் விடாப்பிடியாக நின்றதால், அவர்கள் உரோமப் பேரரசுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டனர். இது ஒரு மிக முக்கியமான அம்சம். “இயேசு கிறிஸ்துவே கர்த்தாதி கர்த்தர், இராஜாதி இராஜா இயேசு கிறிஸ்து உரோம ஆளுநர்களைவிட, உரோம செனட்டரைவிட, உரோமப் பேரரசரைவிட உயர்ந்தவர்,” என்று கிறிஸ்தவர்கள் வலியுறுத்தினார்கள். உரோம அரசைவிட கிறிஸ்துவின் அரசு உயர்ந்தது என்று கிறிஸ்தவர்கள் கூறினார்கள். எனவே அவர்கள் அரசையோ, அரசின் தலைவர்களையோ முதன்மையானவர்களாகக் கருதவில்லை. அவர்களுக்கு மனிதர்களுக்குரிய மரியாதையை மட்டுமே கொடுத்தார்கள். தேவனே முதன்மையானவர். அவருக்குப்பின்தான் மற்றவர்கள் என்பதில் கிறிஸ்தவர்கள் உறுதியாக இருந்தார்கள். மனிதருக்குக் கீழ்ப்படிவதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிவது மேல் என்று நம்பினார்கள், போதித்தார்கள். அவர் கர்த்தாதி கர்த்தர். உரோமப் பேரரசெங்கும் இருந்த கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் மிகவும் நெருக்கமாகப் பின்னிப்பிணைந்திருந்தார்கள். ஒருவரோடொருவர் தொடர்பும், உறவும் இருந்தது. அவர்களுடைய எண்ணிக்கை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்தது. பேரரசெங்கும் அவர்களுக்கு நேர்த்தியான அமைப்பு இருந்தது. இதன் காரணமாக அதிகார வெறிபிடித்த அரசர்கள் கிறிஸ்தவர்களைத் தங்கள் அதிகாரத்துக்குப் போட்டியாகவும் அச்சுறுத்தலாகவும் பார்த்தார்கள்.

3. கிறிஸ்தவர்கள் நாத்திகர்கள் என்ற குற்றச்சாட்டு.

உரோம அரசு பிற மதங்களையும், நம்பிக்கைகளையும் அனுமதித்தபோதும், “உங்கள் தெய்வங்களும் எங்கள் தெய்வங்களும் இசைந்திருக்க வேண்டும்,” என்ற எண்ணமும், உரோமத் தெய்வங்கள்தான் அரசின் தெய்வங்கள் என்ற எண்ணமும் மேலோங்கிநின்றன. ஆனால், உரோமத் தெய்வங்களையோ, பாரசீகத் தெய்வங்களையோ, கிரேக்க தெய்வங்களையோ கிறிஸ்தவர்கள் தெய்வங்களாகக் கருதவில்லை, அங்கீகரிக்கவில்லை. அஞ்ஞானிகளின் சிலை வழிபாடுகளை கிறிஸ்தவர்கள் ஆதரிக்கவில்லை, பின்பற்றவில்லை. அஞ்ஞான வழிபாடுகளோடு சம்பந்தப்பட்ட சமூகச் சடங்குகளில் பங்கேற்கவில்லை. பேரரசனைக் கடவுளாக வணங்கும் வணக்கமுறையையும் அவர்கள் பின்பற்றவில்லை. எனவே, கிறிஸ்தவர்களுடைய வழிபாட்டைக்குறித்து மக்களிடையே வியப்பும் சந்தேகமும் எழுந்தன. கிறிஸ்தவர்கள் தேவனை வழிபடுபவர்கள் அல்ல என்று மக்கள் நினைத்தார்கள். எனவே கிறிஸ்தவர்கள் நாத்திகர்கள் என்று கண்டனம்செய்யப்பட்டார்கள். அவர்கள் இயேசுவை மட்டுமே விசுவாசித்தார்கள், ஆராதித்தார்கள். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை மட்டும்தானே விசுவாசிக்க முடியும், விசுவாசிக்க வேண்டும் என்று இன்று நாம் நினைக்கிறோம். அன்று கிறிஸ்தவர்களைத்தவிர மீதியனைவரும் பல தெய்வங்களை வழிபட்டார்கள். எனவே அவர்கள் கிறிஸ்தவர்களை நாத்திகர்கள் என்று குற்றம் சாட்டினார்கள். “நீங்கள் ஒரு தேவனை மட்டுமே ஆராதிக்கிறீர்கள். எனவே நீங்கள் நாத்திகர்கள். நீங்கள் எங்கள் அஞ்ஞான தெய்வங்களை, உரோம, பாரசீக, கிரேக்க, தெய்வங்களை தெய்வங்களாக ஏற்க மறுக்கிறீர்கள். ஏனென்றால், நீங்கள் இயேசுவை மட்டுமே வழிபடுகிறீர்கள,” என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள். நிச்சயமாக, கிறிஸ்தவர்கள் இயேசுவைத்தவிர வேறு யாரையும் தேவனாக ஏற்கமாட்டார்கள். இயேசுவே ஒரே தேவன்.

சித்திரவதைசெய்தவர்களின் மனநிலை

“இந்தக் கிறிஸ்தவர்கள் வித்தியாசமானவர்கள். இவர்கள் நம்மைப்போல் சிந்திப்பதில்லை, நடப்பதில்லை. எனவே, இவர்கள் கெட்டவர்கள்,” என்பதுதான் அன்று மக்களுடைய மனநிலை. “அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்,” (1 பேதுரு 4:4) என்று பேதுரு சொல்வதுபோல் நடந்தது.

அவர்களுடைய மனநிலையை நீங்கள் இப்போது புரிந்துகொள்ளலாம். இதுபோல் இனி நடக்காது என்று நினைக்காதீர்கள்.

இவைகளையெல்லாம் கூர்ந்து கவனிக்கும்போது ஒரு காரியம் ஆழமாக இழையோடுவதைக் காணலாம். அது என்னவென்றால், தேவனை வெறுத்தவர்கள் தேவனுக்காக நின்றவர்களை வெறுத்தார்கள். தேவன்மேலுள்ள கோபத்தை, எரிச்சலை, தேவனை நேசித்தவர்கள்மேல் காட்டினார்கள். தேவனை எதிர்த்து யுத்தம் செய்து வெற்றிபெற முடியாத வலுசர்ப்பம் தன் கோபத்தைத் தேவ மக்கள்மேல் காட்டியது என்று திருவெளிப்பாட்டில் பார்க்கிறோம்.

ஆண்டவராகிய இயேசுவும், “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்,” என்று சொல்லியிருக்கிறார். நாம் எவ்வளவு அன்பாகச் சத்தியத்தைப் பேசினாலும், நாம் பேசும் சத்தியத்தை அவர்கள் வெறுப்பதால், மக்கள் நம்மை வெறுக்கும்போது நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

4. கிறிஸ்தவர்கள் நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்ற குற்றச்சாட்டு.

இது நான்காவது காரணம். கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிறைய பொய்களைப் பரப்பினார்கள். ஆதிச் சபையின் காலத்தில் கிறிஸ்தவர்கள் “நரமாமிசம் உண்பவர்கள், ஒழுக்கமற்றவர்கள், சமூக ஒழுங்கிற்கு எதிரான புரட்சியாளர்கள்” என்றெல்லாம் குற்றம் சுமத்தப்பட்டார்கள். மக்கள் ஏன் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட பொய்களைக் கூறினார்கள்? ஏன் இப்படி அபாண்டமாகப் பழித்தார்கள்? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஏன் நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்று கூறினார்கள்? கிறிஸ்தவர்கள் அன்றே கர்த்தருடைய பந்தியைப்பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள். உண்மையான விசுவாசிகள் மட்டுமே திருவிருந்தில் பங்குபெற அனுமதிக்கப்பட்டார்கள். மற்றவர்கள் திருவிருந்தில் பங்குபெற அனுமதிக்கப்படவில்லை. இது அஞ்ஞானிகளுக்குப் புதிராக இருந்தது. கிறிஸ்தவர்கள், “நாங்கள் கிறிஸ்துவின் உடலை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடிக்கிறோம்,” என்று சொன்னதையும் பிரசங்கித்ததையும் கேட்ட அஞ்ஞானிகள், “இந்தக் கிறிஸ்தவர்கள் தங்கள் கூடுகைகளில் தங்கள் மதத்தின் ஸ்தாபகரின் உடலை உண்கிறார்கள், அவருடைய இரத்தத்தைக் குடிக்கிறார்கள். இவர்கள் நரமாமிசம் சாப்பிடுகிறார்கள்,” என்று நினைத்தார்கள், சொன்னார்கள், பழித்தார்கள்.

சரி, கிறிஸ்தவர்களை ஒழுக்கமற்றவர்கள் என்று சொன்னார்களே! அது ஏன்? ஏனென்றால், கிறிஸ்தவர்கள் கூடிவந்தபோது சேர்ந்து சாப்பிட்டார்கள். அதை அவர்கள் அகபே விருந்து, அன்பின் விருந்து, என்று அழைத்தார்கள். மேலும் கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் அன்புகூருவத்தைப்பற்றி அடிக்கடி பேசினார்கள். அன்றைய கட்டுப்பாடற்ற பாலுறவு நிறைந்த உரோமக் கலாச்சாரத்தில் மக்கள் இவைகளைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள். அன்பு, அன்பின் விருந்து, ஒருவரையொருவர் அன்புசெய்யவேண்டும் - இவைகளையெல்லாம் அந்த மக்கள் காதல்களியாட்டம் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்த்தார்கள். “இவர்களுக்கிடையே கட்டுப்பாடு இல்லை. எல்லாரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். இவர்களுடைய உறவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. காதல் விருந்துகள் வைக்கிறார்கள். காதல் விருந்துகளில் கலந்துகொண்டபின் காதல் களியாட்டுகள் நடக்கும். ஒழுக்கங்கெட்டவர்கள்,” என்று முத்திரைகுத்தினார்கள். விழுந்துபோன மனிதன்! எவ்வளவு எளிதாகப் பொய் சொல்லுகிறான்!

மூன்றாவது, கிறிஸ்தவர்கள் சமூக ஒழுங்கிற்கு எதிரான புரட்சியாளர்கள் என்று சொன்னார்கள். இது உண்மைதான். ஏனென்றால், அன்று அந்தச் சமுதாயத்தில் ஆண்டான் அடிமை என்ற பாகுபாடு நிலவியது. கிறிஸ்தவர்கள் எந்தப் பாரபட்சமுமின்றி அடிமைகளையும், சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருந்தவர்களையும் அன்போடு வரவேற்றார்கள், ஏற்றார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு சபைக்குச் சென்றால் அங்கு அடிமைகளும் எஜமான்களும் அருகருகே அமர்ந்து தேவனை ஆராதித்தார்கள். சில நேரங்களில் சபையில் ஓர் அடிமை மேய்ப்பராகவும், ஓர் எஜமான் அவருடைய மேய்த்தலின்கீழ் இருக்கும் ஓர் ஆடாகவும் இருப்பார். இது அன்றைய உரோமச் சமுதாயத்தில் ஒரு மாபெரும் புரட்சி. ஆனால், அவர்கள் இதை ஏற்க மறுத்ததால், “இது குழப்பம், ஒழுங்கீனம், அராஜகம்,” என்று கூறினார்கள். கிறிஸ்தவர்களுக்கு மகிமையாக இருந்தது உலகத்துக்கு அவமானமாகத் தோன்றியது, ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் கிறிஸ்தவர்கள் வேறு வகை அரசைச் சார்ந்தவர்கள். உலகத்தின் படிநிலைகளை கிறிஸ்தவர்கள் மதிக்கவில்லை. ஏற்றத்தாழ்வுகளை அங்கீகரிக்கவில்லை. தேவன் சபைக்குக் கொடுத்த கட்டளையைக் கிறிஸ்தவர்கள் கனம்பண்ணினார்கள். இதை உரோமர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, ஜீரணிக்கமுடியவில்லை.

பிளினி என்னும் ஆளுநர், “சிறிய ஆசியாலுள்ள அனைத்து நகரங்களிலும் கிறிஸ்தவர்கள் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேற்றுமை பாராட்டுவதில்லை. பல இடங்களில் தாழ்ந்தவர்களாய்க் கருதப்படுவோர் தலைவர்களாக இருக்க, உயர்குலத்தோர் அங்கத்தினர்களாக உள்ளனர்’ என்று கூறுகிறார்.

சாட்சிகளின் மனநிலை

5. கிறிஸ்தவர்களின் தைரியம்

கிறிஸ்தவர்களின் தைரியத்தினால் அரசர்களுக்குப் பயம். கிறிஸ்தவர்கள் மிகவும் தைரியமாக இருந்தார்கள். கிறிஸ்தவர்களின் தைரியம் அரசுக்குச் சவாலாக இருந்தது. உரோமத் தெய்வங்களுக்கு தூபம் காட்ட கிறிஸ்தவர்கள் மறுத்தார்கள். அரசனைத் தெய்வமாக ஏற்க மறுத்தார்கள். அதற்காக எந்த ஒரு பெரிய தண்டனையையும் புன்னகையுடன் பெற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தார்கள். இயேசுவின் இரண்டாம் வருகை விரைவிலே வரும் என்று நினைத்ததால், பாடுகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள். மரணத்தைத் தைரியமாக எதிர்கொண்டார்கள். கிறிஸ்தவர்களின் தைரியத்தைப் பார்த்த ஆட்சியாளர்கள் நாளடைவில் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றக்கூடும் என்று சந்தேகித்தார்கள்.

303முதல் 312வரை 9 ஆண்டுகள் நிகழ்ந்த சித்திரவதையை மிகக் கொடிய சித்திரவதை என்றுகூடச் சொல்லலாம். இது உரோமப் பேரரசின் நகரங்கள், பட்டணங்கள், குக்கிராமங்கள் எனக் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் வாழ்ந்த கிறிஸ்தவர்களைப் பாதித்தது. உரோம அரசாணையின் எழுத்தின்படி கிறிஸ்தவர்கள் அனைவரும் உபத்திரவத்தை அனுபவித்தார்கள். கிறிஸ்தவர்கள் இத்தனை கொடூரமாகச் சித்திரவதைசெய்யப்பட்டு கொல்லப்பட்டபிறகும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறையவில்லை, கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை மறுதலிக்கவில்லை. எனவே அஞ்ஞானிகள் இந்தக் சித்திரவதைகளைச் சந்தேகிக்கத் தொடங்கினார்கள், கேள்விகேட்கத் தொடங்கினார்கள்.

முதலாவது, கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்ட விவரிக்கமுடியாத வன்முறையைக் கண்டு மக்கள் வருந்தத் தொடங்கினார்கள். ஏனென்றால், எத்தனைபேரைக் கொல்வது? எத்தனை நாட்கள் கொல்வது? நாளும், கிழமையும் கொன்றுகொண்டேயிருக்க வேண்டுமா?

இரண்டாவது, சித்திரவதை வீரியமற்றது என்று எண்ணத் தொடங்கினார்கள். அரசு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. கிறிஸ்தவம் செத்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால் சாகவில்லை, உயிர்த்துடிப்புடன் வளர்ந்தது.

இந்த நேரத்தில் பல கிறிஸ்தவர்கள் இராணுவத்திலும் அரசாங்கத்திலும் பணியாற்றினார்கள். மேலும், சித்திரவத்தைக்குப்பிறகும் கிறிஸ்தவர்கள் ஒன்றும் கூட்டம்கூட்டமாகக் கிறிஸ்தவத்தைக் கைவிடவில்லை. அங்கும் இங்கும் சிலர் விசுவாசத்தை மறுதலித்தார்கள் என்பது உண்மை. சித்திரவதை செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் தைரியத்தைக் கண்ட மக்கள் வாயடைத்துப்போனார்கள். அது அவர்களுடைய உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

வட ஆப்பிரிக்காவில் லாக்டான்டியஸ் என்ற ஓர் அணியிலக்கண ஆசிரியர் இருந்தார். மிகத் திறமையான பேச்சாளர். அவர் அன்றைய சிறிய ஆசியாவுக்கு, இன்றைய துருக்கிக்கு, குடிபெயர்ந்தார். அவருக்கு அங்கு உரோமப் பேரரசன் டயோக்லீஷியன் நீதிமன்றத்தில் வேலை கிடைத்தது. அங்கு அவர் கிறிஸ்தவரானார். அவர் நிக்கோமீடியாவிலும், பித்தினியாவைச் சுற்றியுள்ள மாநிலங்களிலும் நடந்த நிகழ்வுகளை எழுதினார். “கிறிஸ்தவம் வேகமாக வளர்ந்துகொண்டிருந்தது. அதிகமான விசுவாசிகளை ஈர்ப்பதற்காக தேவன் தம் மக்களில் சிலரைத் துன்புறுத்தலுக்கு ஆளாவதை அனுமதித்தார்,” என்று லாக்டான்டியஸ் கூறினார். இதோ அவருடைய மேற்கோள்.

“பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை வெறுப்பதால் பொய்யான தெய்வ வழிபாட்டிலிருந்து விலகி ஓடுகிறார்கள். உபத்திரவத்தை அனுபவிக்கும்போது, ‘நாங்கள் மனிதனுடைய கையால் செய்யப்பட்ட கற்களை அல்ல, மாறாகப் பரலோகத்தில் வாழ்கின்ற ஜீவனுள்ள தேவனையே ஆராதிப்போம்,’ என்று முழங்கியதை சுற்றியிருந்தவர்கள் கேட்டார்கள். அநேகர் இது உண்மை என்று புரிந்துகொண்டு, தங்கள் இருதயத்தில் ஒப்புக்கொள்கிறார்கள். உரோமத் தெய்வங்களை வணங்குவதைவிட இறப்பதை விரும்புகிற கிறிஸ்தவர்களைக் கண்டு அஞ்ஞானிகள் வியப்படைகிறார்கள். கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின்மேல் வைத்திருக்கும் விசுவாசத்தைக் கைவிடுவதைவிட இறப்பதை விரும்புகிறார்கள். இதைக் கண்ட அஞ்ஞானிகள், ‘எங்கள் தெய்வங்களுக்காக நாங்கள் எங்கள் உயிரைக் கொடுப்பதற்கு அவைகள் தகுதியானவைகளா? நிச்சயமாகத் தகுதியானவைகள் இல்லை,’ என்று முடிவுசெய்தார்கள்,” என்று குறிப்பிடுகிறார்.

திரளான மக்கள் இயேசுவை விசுவாசிப்பதற்குப் பல காரணங்கள் இருந்ததாக லாக்டான்டியஸ் கூறுகிறார். அன்றும் மக்கள் அற்புதங்களை எதிர்பார்த்தார்கள், அசுத்த ஆவிகளின் பிடியிலிருந்து விடுதலையை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டபோது அதை எதிர்கொண்ட விதம், அவர்களுடைய தைரியம், மக்கள்மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

6. பிற மதத்தவரின் வதந்தி.

யூத மதகுருக்களும், யூத மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியவர்களும் கிறிஸ்தவ மதத்தைக் குறித்து பொய்பிரச்சாரங்களையும், புகார்களையும் உரோம அரசுக்கு அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். கிறிஸ்தவர்கள் பிற மதச் சிலைகளுக்கு தூபம் காட்ட மறுத்ததையெல்லாம் அரச விரோத செயல்களாகச் சித்தரித்து அவர்களுக்கு எதிராகக் கலகம் மூட்டினார்கள். கிறிஸ்தவர்களால்தான் இயற்கைச் சீற்றங்கள் நடக்கின்றன என்றும், அவர்கள் தனித்தனிக் குழுக்களாகக் கூடுவது பின்னாளில் அரசைப் பிடிப்பதற்கான ஆலோசனையே என்றும் அரச காதுகளில் செய்திகள் சொல்லப்பட்டன. அரசரின் நல்லெண்ணத்தையும் சலுகையையும் பெறுவதற்காக அரசர் விரும்பாத கிறிஸ்தவர்களைப்பற்றி இவர்கள் பொய்யான வதந்திகளைப் பரப்பினார்கள்.

7. மக்களின் வியாபாரத்தில் பாதிப்பு.

கிறிஸ்தவர்களின் வளர்ச்சி ஆலய வியாபாரங்களையும் பெருமளவில் பாதித்தது. பாவத்துக்குப் பரிகாரமாக யூதர்கள் பலிசெலுத்தினார்கள். கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் பலிசெலுத்துவதை நிறுத்திவிட்டார்கள். இது யூதர்களுடைய வியாபாரத்தைப் பாதித்தது. குறிகாரர்கள், சிலைசெய்வோர் வியாபாரம் பாதிக்கப்பட்டது. ஆடு மாடுகள் விற்பனை விழுந்துபோனது. இதனால், யூதர்களுக்கும் பிற வியாபாரிகளுக்கும் கிறிஸ்தவர்கள்மேல் கடுங்கோபம். நடபடிகள் 19ஆம் அதிகாரத்தில், தங்கள் தொழிலுக்கு நட்டம் ஏற்பட்டதால் தெமேத்திரியு என்ற தட்டான் பவுலுக்கு விரோதமாகக் கலகம் ஏற்படுத்தியதுபோல இவர்களும் கிளர்ந்தெழுந்தார்கள்.

8. அங்கீகாரமின்மை.

ஆரம்பத்தில், கிறிஸ்தவம் யூதமதத்தின் ஒரு பிரிவாகப் பார்க்கப்பட்டது. யூதமதம் ஒரு சட்டபூர்வமான மதம் என்பதால் அதற்குக் கிடைத்த அங்கீகாரமும், பாதுகாப்பும் கிறிஸ்தவத்துக்கும் கிடைத்தது. கிறிஸ்தவம் யூதமதத்திலிருந்து மாறுபட்டது என்று தெரிந்தபோது, அது தன் அங்கீகாரத்தையும், பாதுகாப்பையும் இழந்தது. உரோம அரசு கிறிஸ்தவ மதத்தை அங்கீகரிக்கவில்லை என்பதும் உரோமர்கள் கிறிஸ்தவர்களை எதிர்க்க, சந்தேகிக்க, முக்கியமான இன்னொரு காரணம் என்று சொல்லலாம்.

9. போர்களுக்கும், இயற்கை அழிவுகளுக்கும் கிறிஸ்தவர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு.

அந்த நாட்களில் நாட்டில் நடந்த போர்களுக்கும், இயற்கை அழிவுகளுக்கும் கிறிஸ்தவர்களே காரணம் என்று கருதினார்கள். கிறிஸ்தவர்களின் புதிய வழிபாட்டு முறையினால் கோபம் கொண்ட மற்ற தெய்வங்கள் மனிதர்களுக்கு இடர்களை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறினார்கள். கிறிஸ்தவர்கள் அரசனுக்கு விசுவாசமாக இல்லாததாலும், உரோமத் தெய்வங்களை வழிபடாததாலும் அந்தத் தெய்வங்கள் கோபமடைந்து யுத்தத்தில் உரோமர்களுக்காகப் போராடவில்லையென்றும், போரில் தோற்றுப்போனதற்குக் கிறிஸ்தவர்களே காரணம் என்றும் மக்கள் நம்பினார்கள்.

கிறிஸ்தவர்களை வெறுக்க அரசுக்கும், பொதுமக்களுக்கும் இத்தனை காரணங்கள் போதாதா? இந்தச் சூழ்நிலையில், “கிறிஸ்தவர்களே நாட்டின் மிகச் சிறந்த குடிமக்கள், நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள், அரசருக்கு விசுவாசமானவர்கள்,” என்று மதச்சார்பற்ற எழுத்தாளர்கள்கூட ஒப்புக்கொண்டார்கள்.

கிறிஸ்தவர்களுடைய அணுகுமுறையும், வாழ்க்கைமுறையும் பலரால் வியப்புடன் பார்க்கப்பட்டன. கி.பி 125ல் அரிஸ்டைடிஸ் என்பவர் எழுதிய நூலில் கிறிஸ்தவத்தைப்பற்றி மிகவும் வியந்து எழுதியுள்ளார்.

“கிறிஸ்தவர்கள் ஏமாற்று வேலைகளில் ஈடுபடாமல் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறார்கள். விபச்சாரப் பாவத்தைச் செய்வதில்லை. பொய்சாட்சி சொல்ல மறுக்கிறார்கள். பெற்றோரைப் பெருமையுடனும் அன்புடனும் நடத்துகிறார்கள். மனத்தாழ்மை, அன்பு ஆகியவைகளைக் கடைபிடிக்கிறார்கள். தன்னைவிடத் தாழ்ந்தவர் என்று யாரையும் அவர்கள் நினைப்பதில்லை. அடிமைக்கும் மன்னனுக்கும் ஒரே கவுரவத்தைத் தருகிறார்கள். அவர்கள் தேவனை எல்லா நிகழ்வுகளுக்கும் புகழ்கிறார்கள். எனவேதான் பூமி செழிக்கிறது,” என்று அவர் தன் நூலில் குறிப்பிடுகிறார்.

X) இரத்தசாட்சிகள்

ஆதிச் சபையின் காலத்தில் சித்திரவதைசெய்யப்பட்டு இரத்தசாட்சிகளாக மரித்த சிலரைப்பற்றி, சில சபைப் பிதாக்களைப்பற்றி, நான் இப்போது பேசப்போகிறேன்.

1. இக்னேஷியஸ்.

இவர் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சபைப் பிதாக்களில் ஒருவர். இவர் அந்தியோக்கியாவின் மூன்றாவது ஆயர். இக்னேஷியஸ் முதியவராக இருந்தபோது உரோமப் பேரரசன் டிராஜன் அந்தியோக்கியாவுக்கு வருகை தந்தபோது, இக்னேஷியசை அழைத்துப் பேசினான். டிராஜன் இக்னேஷியசிடம், “நீ மனிதர்களை வஞ்சிக்கும் பொல்லாத பிசாசு,” என்று கூற, இக்னேஷியஸ், “நான் தீய ஆவி அல்ல, என் இதயத்தில் இயேசு கிறிஸ்து இருக்கிறார்,” என்றார். அதற்கு டிராஜன், “இயேசு கிறிஸ்து உனக்குள் இருக்கிறாரா? பொந்து பிலாத்துவினால் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவா?” என்று நக்கலாகக் கேட்டான். இக்னேஷியஸ், “ஆம், அவர் என் பாவங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டார்,” என்று கூறினார். இந்த உரையாடலுக்குப்பின், எந்த விசாரணையும் இல்லாமல், பேரரசன் இக்னேஷியசை உரோமுக்குக் கொண்டுபோய் ஆரவாரிக்கும் மக்கள் கூட்டம் புடைசூழ கொடிய காட்டு விலங்குகளுக்கு இரையாக வீசக் கட்டளையிட்டான்.

உரோம் நகருக்குச் செல்லும் வழியெங்கும் அவர் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். போகும் வழியில் அவர் எழுதிய நிருபங்கள் Apostolic Fathers என்ற புத்தகத்தில் உள்ளன. இதோ சில வரிகள்: “உரோம் நகரில் வாழும் கிறிஸ்தவர்களே, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனையிலிருந்து என்னைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம். அந்த எண்ணத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பு எனக்குத் தீங்கு விளைவிக்குமோ என்று நான் அஞ்சுகிறேன். ஒருவேளை உங்கள் எண்ணம் ஈடேறினால், நான் தேவனைச் சேரும் நாள் தள்ளிப்போகும். நீங்கள் அமர்ந்திருந்தால், என் மரணத்திலும் நான் தேவனுடைய வார்த்தையாக மாறுவேன். ஆனால் உங்கள் அன்பினால் நீங்கள் என்னைக் கட்டிவைத்தால், நான் வெறுமனே ஒரு மனிதக் குரலாக மட்டுமே இருப்பேன். கிறிஸ்துவை நான் என் மரணத்திலும் பின்பற்ற விரும்புகிறேன். அப்போது என் பணிவிடை இன்னும் வல்லமையாக இருக்கும். உங்கள் முயற்சியால் ஒருவேளை நான் விடுவிக்கப்பட்டால், அது நான் கிறிஸ்துவை மறுதலித்ததாகக்கூடத் தோன்றலாம்.” என்று அவர் எழுதுகிறார். இக்னேஷியஸ் இரத்தசாட்சியாக மரித்தார்.

2. ஜஸ்டின் மார்ட்டர்.

இவர் கிபி 161 முதல் 180 வரை உரோமப் பேரரசனாக இருந்த மார்கஸ் அரேலியசின் காலத்தில் படுகொலை செய்யப்பட்ட முக்கியமான இரத்தசாட்சி. மார்ட்டர் என்பது அவருடைய பெயர் இல்லை. அவர் இரத்தசாட்சியாக மரித்தபின் எல்லாரும் அவரை ஜஸ்டின் மார்ட்டர் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அவர் தத்துவ ஞானத்தின்மூலம் தேவனைத் தேடினார். அவருடைய தேடல் தோற்றது, திருப்தியளிக்கவில்லை. ஒரு முதியவர் கூறிய கிறிஸ்துவின் நற்செய்தியைக் கேட்டு கிறிஸ்தவரானார். நற்செய்தியைக் கேட்ட ஜஸ்டின், “என் உள்ளத்தில் திடீரென்று அனல் மூண்டது. நான் முற்பிதாக்களையும், தீர்க்கதரிசிகளையும், அவர்கள் நேசித்த கிறிஸ்துவையும் நேசிக்க ஆரம்பித்தேன். வேத எழுத்துக்களைத் தியானித்தேன், படித்தேன். கிறிஸ்தவத் தத்துவம் மட்டுமே சத்தியம், பயனுள்ளது என்று கண்டறிந்தேன்,” என்று கூறினார். இவர் சிறந்த தத்துவஞானி, கல்விமான். இவர் பல கிறிஸ்தவ நூல்களை இயற்றி மக்களுக்குக் கிறிஸ்தவ சமயத்தைத் தெளிவாகப் புரியவைத்தார். கிறிஸ்தவ விசுவாசம் மட்டுமே உண்மையாகவே பகுத்தறிவுசார்ந்தது என்று விளக்கினார். மனுக்குலத்துக்குச் சத்தியத்தைப் போதிக்கவும், மக்களைப் பிசாசின் பிடியிலிருந்து மீட்கவும் யாஹ்வேவாகிய வார்த்தையானவர் மனிதனானார், மாம்சமானார், என்று அவர் போதித்தார். கிறிஸ்தவம்சார்ந்த கோட்பாடுகளை விவாதத்தின்மூலம் மும்முரமாகப் பரப்பினார். இவருடைய விவேகமான வேகமான போதனையினால் பலர் கிறிஸ்தவர்களானார்கள்.

உரோம அரசன் ஜஸ்டினைக் கொல்ல முடிவெடுத்தான். ஜஸ்டின்மீதும், அவருடைய நண்பர்கள் சிலர்மீதும் குற்றச்சாட்டுகள் பதிவாகின, நீதிமன்றத்தில் சேனாதிபதியின்முன் நிறுத்தப்பட்டார்கள். சேனாதிபதி அவரை நோக்கிக் கேள்வியை வீசினார். ” நீ கிறிஸ்தவனா? “ஆம்”. “நீ தெய்வங்களுக்குப் பலிசெலுத்துவாயா?” “தெளிந்த புத்தியுடைய ஒருவனும் மெய்யைத் துறந்து பொய்யைப் பற்றிக்கொள்ளமாட்டான்” “நீ உயிர்த்தெழுவாய் என நினைக்கிறாயா?” “நினைக்கவில்லை. உண்மையிலேயே நடக்கும் என்று எனக்குத் தெரியும்”. சேனாதிபதி அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தபோது ஜஸ்டின், “எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்நிமித்தம் நாங்கள் தண்டிக்கப்படுகிறோம் என்றால், நாங்கள் நிச்சயமாக இரட்சிக்கப்படுவோம் என்று நம்புகிறோம்,” என்று கூறினார். ஜஸ்டினின் பதிலைக் கேட்டு சேனாதிபதி சினமடைந்தான். அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு எழுதப்பட்டது. குரூரமான ஆணையைக் கேட்டு அவர்கள் கலங்கவில்லை. ஜஸ்டினும், அவருடைய நண்பர்களும் வெளியே அழைத்துச் செல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்டார்கள். ஜஸ்டின் மார்ட்டர், “நீங்கள் எங்களைக் கொல்லலாம்; ஆனால் நீங்கள் எங்களைக் காயப்படுத்த முடியாது,” என்று கூறினார். இது நடந்தது கி.பி 165ஆம் ஆண்டு.

3. போலிகார்ப்.

இவர் யோவானின் சீடர். சிமிர்னாவின் ஆயர். கி.பி 165 அல்லது 166. ஆண்டோனியஸ் பயஸ் என்ற உரோமப் பேரரசனின் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த சித்திரவத்தையின்போது போலிகார்பைக் கைது செய்யத் தேடினார்கள். போலிகார்ப் கைது செய்யப்படுவதற்குமுன்பு வேறு பல கிறிஸ்தவர்கள் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள். சகோதரர்களின் அறிவுறுத்துதலின்படி அவர் பக்கத்து ஊருக்குச் சென்று பதுங்கினார். போலிகார்ப் ஒரு நாள் ஒரு கனவு கண்டார். அதில் அவருடைய தலையணை தீப்பற்றி எரிந்தது. அது தான் எரித்துக் கொல்லப்படப் போவதன் அறிகுறி என்று அவர் புரிந்துகொண்டார்.

அரசனின் வீரர்கள் அவரைத் தேடி அலைந்தார்கள். ஆனால், அவருடைய ஆதரவாளர்கள் அவரைக் காட்டிக் கொடுக்கவில்லை. கடைசியில் சித்திரவதையைத் தாங்க முடியாத ஒருவன் அவருடைய மறைவிடத்தைச் சொன்னான். படைவீரர்கள் அவருடைய வீட்டைக் கண்டுபிடித்தார்கள். நடப்பதெல்லாம் தேவசித்தம் என்று உறுதியாக நம்பிய போலிகார்ப் மாடியிலிருந்து இறங்கி வந்து அவர்களுடன் உரையாடினார். ஜெபிக்கத் தனக்குக் கொஞ்ச நேரம் தருமாறு வேண்டினார். படைவீரர்கள் அனுமதித்தார்கள். இரண்டு மணி நேரம் நின்றவாறே ஜெபித்தார்.

போலிகார்ப் ஆளுநரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். “உன் வயதை மனதில் வைத்துக்கொண்டு பதில் சொல். நீ மன்னனை வணங்கித் தூப ஆராதனை செய்தால் உன்னை விடுவிப்பேன்.” “நான் உங்கள் விருப்பப்படி நடப்பவன் அல்ல,” என்று போலிகார்ப் உறுதியாகப் பதிலளித்தார். அவரைப் பயமுறுத்தினார்கள். “இந்த வயதில் உனக்கு என்ன இத்தனை பிடிவாதம். நீ மன்னனை வணங்காவிட்டால் கூடப் பரவாயில்லை. உன் சக கிறிஸ்தவர்களைப் பார்த்து, ‘நீங்கள் தேவனற்ற நாத்திகர்கள்,’ என்று பழித்துச் சொல். அப்போது உன்னை விடுவிப்பேன்” என்றான். பெருமூச்சோடு வானத்தை அண்ணார்ந்துபார்த்து, “தேவனே, இந்த நாத்திகர்களைக் காப்பாற்றும். நாத்திகர்களிடமிருந்து காப்பாற்றும்,” என்று ஜெபித்தார். “நீ கிறிஸ்துவை மறுதலிக்கப்போகிறாயா, இல்லையா?” போலிகார்ப், “எண்பத்து ஆறு ஆண்டுகள் நான் என் தேவனைச் சேவித்துக்கொண்டிருக்கிறேன். அவர் எனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. என்னை இரட்சித்த என் இரட்சகருக்கு விரோதமாக நான் எப்படித் தேவதூஷணம் சொல்ல முடியும்? என் தேவனை நான் எப்படி இழிவாகப் பேச முடியும். அவர் உண்மையான தேவன்,” என்றார். “நீ கிறிஸ்தவர்களைப் பழிக்காவிட்டால் உயிரை இழப்பாய்,” என்று மன்னன் எச்சரித்தான். “கிறிஸ்தவர்களைப் பழிப்பது என்பது கிறிஸ்துவைப் பழிப்பதற்குச் சமம். அதைவிட உயிரை இழப்பதே மேல்,” என்று போலிகார்ப் சொன்னார். “உன்னைக் காட்டு மிருகங்களுக்கு உணவாகப் போடுவேன் அல்லது எரித்துக் கொல்லுவேன்,” மன்னன் கோபமடைந்தார். “உங்கள் நெருப்பு கொஞ்ச நேரம் எரியும். ஆனால் தேவபக்தியற்றவர்களுக்கான நெருப்பை ஒருபோதும் அணைக்கமுடியாது. செய்ய வேண்டியதை விரைவிலேயே செய்ய வேண்டியதுதானே? ஏன் இன்னும் தாமதம்?” போலிகார்ப் சொன்னார். சுற்றியிருந்த மக்கள், “இவனை எரித்துக் கொல்லுங்கள்,”என்று கத்தினார்கள். ஆளுநரும் இசைந்தான்.

எரிப்பவர்களை மரத்தில் கட்டி கைகளை ஆணிகளால் அறைந்து தீ வைப்பது அவர்களுடைய வழக்கம். போலிகார்ப்பும் மரத்தில் கட்டப்பட்டார். ஆணிகளால் அவருடைய கையை அடிக்க முனைந்தபோது அவர் தடுத்தார். “என் கைகளை ஆணிகளால் அறைய வேண்டாம். நான் எந்த நெருப்புக்கும் அசையாத உறுதியை தேவன் எனக்குத் தருவார்,” என்றார். அவர் கைகளில் அவர்கள் ஆணி அடிக்கவில்லை. அவரைக் கட்டி வைத்தபின் அவரை எரித்தார்கள். அவர் அசையாமல் ஜெபநிலையிலேயே நின்றார். அவரை ஈட்டியாலும் குத்தினார்கள். போலிகார்ப்பின் உயிர் பிரிந்தது. அவர் மரணமடைந்த ஆண்டு 155 பெப்பிரவரி 23.

4. இன்னொருவர். இவர் பெயர் பிளாண்டினா.

கி.பி 177ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் லியன்ஸ் நகரத்திலும், அருகிலுள்ள வியன்னாவிலும் கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். கிறிஸ்தவர்களை சித்திரவதைசெய்து கொலைசெய்ய அதிகாரிகளுக்குப் போதுமான ஆதாரங்கள் தேவைப்பட்டன. எனவே அவர்கள் சந்தேகத்திற்குரிய சில கிறிஸ்தவர்களின் வேலைக்காரர்களைக் கைது செய்து சித்திரவதை செய்தார்கள். சித்திரவதையைத் தாங்கமுடியாத சில கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்தவ எஜமான்களைக் காட்டிக்கொடுத்தார்கள்; கொடுமைக்காரர்கள் எதிர்பார்த்த குற்றங்களை அவர்கள்மேல் சுமத்தினார்கள். வழக்கம்போல் கிறிஸ்தவர்கள் நரமாமிசம் சாப்பிடுகிறார்கள் என்றும், ஒழுக்கங்கெட்டவர்கள் என்றும் பழிசுமத்தினார்கள். இதைக் கேட்ட ஒரு கும்பல் கொதித்தெழுந்து விசுவாசிகளின் வீடுகளைக் கொள்ளையிட்டது, வீடுகளைத் தாக்கியது. மொத்தம் 48 கிறிஸ்தவர்கள் சிறையில் அல்லது பொது அரங்கில் இறந்தார்கள். இவர்களில் ஒருவர் பிளாண்டினா என்ற கிறிஸ்தவ அடிமைப் பெண். லியன்ஸில் விசுவாசிகள் அனுபவித்த சித்திரவதைக்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு.

ஒரு கடிதம் இவருடைய வீரத்தையும் தைரியத்தையும் விவரிக்கிறது. இந்த பிளாண்டினா எந்த அளவுக்கு உள்ளான வல்லமையால் நிரப்பப்பட்டிருந்தார் என்றால் காலைமுதல் மாலைவரை இவரை எல்லா வகையிலும் சித்திரவதை செய்தவர்கள் சோர்ந்துபோனார்கள். தங்களால் இதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாது என்று அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். ஒருவருடைய உயிரைப் பறிக்க இலேசான உபத்திரவம் போதும். ஆனால் ஆட்கள் மாறிமாறி இவ்வளவு சித்திரவதை செய்தபிறகும் உருக்குலைந்து, சின்னாபின்னமாகிப்போன இவருடைய உடலில் உயிர் இன்னும் இருப்பதைப் பார்த்து அவர்கள் வியந்தார்கள்.

கடைசியாக, கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்தி வேடிக்கை பார்க்கும் பந்தய அரங்கத்துக்குள் கொண்டுசென்று, ஒரு பெரிய மரத்தூணில் தலைகீழாய் தொங்கவிட்டு, கொடிய விலங்குகளை அவிழ்த்து விட்டார்கள். பிளாண்டினா உரத்த சத்தமாய் ஜெபித்தாள். பந்தய அரங்கில் சித்திரவதை செய்யப்பட்ட மற்ற விசுவாசிகள் பிளாண்டினாவைப் பார்த்து தைரியமடைந்தார்கள். சீறி வந்த ஒவ்வொரு விலங்கும் அவள் அருகில் வந்து முகர்ந்து பார்த்துவிட்டு தீண்டாமல் அமைதியாக சென்றது. ஆத்திரமடைந்த அரசும் கொடிய மக்களும் அவளை மீண்டும் சிறையில் அடைத்தார்கள். கடைசிநாளில் அவளை மீண்டும் திடலுக்குக் கொண்டுவந்தார்கள். கூடியிருந்த கிறிஸ்தவர்களிடம் மிகுந்த சவாலுடன், “உங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருங்கள்,” என உரத்த சத்தமாய்க் கூறினாள். அவளைக் கண்ட விசுவாசிகள் “பிளாண்டினா மிருகத்திற்கு விருந்தாக வந்தவளைப்போல் காணப்படாமல், கர்த்தர் கொடுக்கும் ராஜ போஜனத்திற்கு புறப்பட்டு வந்தவளைப்போல் காணப்பட்டாள்,” என்று கூறினார்கள். பிளாண்டினாவை வாரினால் அடித்து, அதன்பின் பழுக்கக் காய்ச்சிய இரும்பு நாற்காலியில் அவளுடைய உடலைச் சுட்டார்கள். கொஞ்சம் அவிந்து போன உடலை ஒரு வலைப்பையில் வைத்து காட்டெருமைகளுக்குமுன் தூக்கி எறிந்தார்கள். காட்டெருமைகள் அவளுடைய உடலைக் குத்திக் கிழித்ததைக் கண்டு அந்த பொல்லாத கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது. அவள் இரத்தசாட்சியாக மரித்தாள்.

5. 40 போர்வீரர்கள்.

316இல் அன்றைய ஆர்மேனியாவில், இன்றைய துருக்கியில், உள்ள செபஸ்தி என்ற நகரில் இரத்தசாட்சிகளாக மரித்த 40 போர்வீரர்களைப்பற்றிப் பார்ப்போம். இவர்கள் செபஸ்தேயின் 40 இரத்தசாட்சிகள் என்றழைக்கப்படுகிறார்கள். உரோம இராணுவத்தில் பணிபுரிந்த 40 போர்வீரர்கள் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று பகிரங்கமாக அறிவித்ததால் அவர்கள் கடும் குளிர் இரவில் செபஸ்தே என்ற நகருக்கு அருகே இருக்கும் பனிக்கட்டிகள் நிறைந்த ஏரியில் நிர்வாணமாக விடப்பட்டார்கள். எதற்காக? குளிரில் உறைந்து சாவதற்காக. உரோம அரசு அன்று தன் இராணுவத்தில் கிறிஸ்தவர்களை அனுமதிக்கவில்லை. தங்கள் விசுவாசத்தை மறுதலிக்க அரசன் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தான். அவர்கள் வாய்ப்பை மறுத்தார்கள், விசுவாசத்தை மறுதலிக்கவில்லை. அவர்கள் அங்கிருந்து தப்பித்துப் போய்விடக்கூடாது என்பதற்காக ஏரிக்கரையில் காவலர்கள் நிறுத்தப்பட்டார்கள். இயேசுவை மறுதலிப்பவன் ஏரியில் மறுகரைக்கு வந்தால் அங்கு அவனுக்கு வெந்நீர் குளியல் தயாராக இருந்தது. அந்த 40 பேரில் ஒரேவொரு போர்வீரன் தன் விசுவாசத்தை மறுதலித்து அடுத்த கரைக்குப் போனான். வெந்நீர் குளியல் போட்டான். கொப்பரையில் இருந்த வெந்நீரில் குளித்த அதிர்ச்சியில் அவன் இறந்துபோனான். இது ஒரு புறம். இன்னொரு புறம் என்ன நடந்தது என்றால் 40 பேரையும் கண்காணித்துக்கொண்டிருந்த காவலர்களில் அக்லாய்ஸ் என்ற காவலர் உறைந்த பனிக்கட்டிகளின்மேல் கடுங்குளிரில் நிர்வாணமாக நின்ற 39 பேரின் விசுவாசத்தையும், துணிவையும் கண்டு பிரமித்தான். நெகிழ்ந்துபோனான். அதே நேரத்தில் அந்த 39 பேர் மேலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அழகான ஒளி அமர்ந்திருப்பதைக் கண்டான். உடனே அவன் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று அறிக்கைசெய்து, தன் காவலன் உடையைக் கழற்றெறிந்துவிட்டு மீதமுள்ள முப்பத்தொன்பதுபேருடன் போய் சேர்ந்துகொண்டான். விசுவாசத்தை மறுதலித்தவனின் இடத்தை விசுவாசத்தை அறிக்கைசெய்தவன் எடுத்துக்கொண்டான்.

விடியற்காலையில் போய்ப்பார்த்தார்கள். அவர்களுடைய உடல்கள் உறைந்துபோயிருந்தன. உயிர் கொஞ்சம் ஒட்டியிருந்தது. உடல்களை எடுத்து எரித்து சாம்பலை அருகிலிருந்த ஆற்றில் வீசியெறிந்தார்கள்.

6. ஆப்பிரிக்காவில்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் கிறிஸ்தவர்கள் பட்ட பாடுகளையும் மறக்க முடியாது. ஆதிச் சபையின் கடைசி காலத்தில், ஏறக்குறைய 311இல், டயோக்லீஷியன் ஆட்சியின்போது, எகிப்தியக் கிறிஸ்தவர்கள் அனுபவித்த பயங்கரமான பாடுகளையும், உபத்திரவங்களையும் சிசரியாவின் யூசிபியஸ் திருச்சபை வரலாறு என்ற தன் புத்தகத்தின் எட்டாவது பாகத்தில் 7, 8, 9 ஆகிய மூன்று அத்தியாயங்களில் விவரிக்கின்றார். இவைகளுக்குத் தான் நேரடி சாட்சி என்று அவர் கூறுகிறார்.

சிலர் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்; வேறு சிலர் நெருப்பில் தூக்கி வீசப்பட்டார்கள்; இன்னும் சிலர் காட்டு மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டார்கள். மிருகங்களுக்குமுன் தூக்கி வீசப்பட்டபோது அவர்களால் தங்களைக் காத்துக்கொள்ளமுடியவில்லை, கையறு நிலையில் நிர்வாணிகளாக நின்றார்கள். ஜெபித்தார்கள். பல வேளைகளில் மிருகங்கள் அவர்களைத் தாக்கவில்லை. இது தேவனுடைய தெய்வீக ஏற்பாடு. தேவன் அவர்களை அற்புதமாகப் பாதுகாத்தார். பின்னர் அவர்கள் “வாளால் வெட்டப்பட்டார்கள்”, அவர்களுடைய உடல்கள் கடலில் தூக்கிவீசப்பட்டன.

விதிவிலக்கின்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சித்திரவதைபட்டார்கள். சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டார்கள்; பட்டினியால் இறந்தார்கள்.

தெபெஸ் என்ற எகிப்திய மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் பட்ட பாடுகளும், உபத்திரவங்களும் வேறு எங்கும் நடந்திருக்காது. மரங்களின் கிளைகளை வளைத்து கிறிஸ்தவர்களின் கைகளையும் கால்களையும் தனித்தனியாகக் கட்டினார்கள். வளைத்துக் கட்டிய மரக்கிளைகளை விட்டபோது அவைகளில் கட்டியிருந்த கைகளும் கால்களும் தனித்தனியாகக் கிழிந்து தொங்கின. ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் இப்படிக் கொல்லப்பட்டார்கள். இந்தச் சித்திரவதை பல ஆண்டுகளாக நீடித்தது. பெண்களையும், சிறு குழந்தைகளையும்கூட விட்டுவைக்கவில்லை.

ஒரே நாளில் ஒரே இடத்தில் சில நூறு பேர் தலை துண்டிக்கப்பட்டு இரத்தசாட்சிகளாக மரித்ததால், கோடரிகள் மழுங்கிப்போனதாம்; தலைவெட்டிகள் களைத்துப்போனார்களாம். விசுவாசிகளின் வைராக்கியத்தைக் கண்ட தீர்ப்பாயம் மலைத்துப்போனது. அப்படி என்ன நடந்தது? விசுவாசிகள் இப்படிக் கொல்லப்படுவதைப் பார்த்து பிற விசுவாசிகள் பின்வாங்கிப்போவார்கள், விசுவாசத்தை மறுதலிப்பார்கள் என்று அரசு நினைத்தது. ஆனால், அரசு நினைத்தற்கு முற்றிலும் மாறாக நடந்தது. தீர்ப்பாயம் ஒரு கிறிஸ்தவனுக்கு மரண தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்து அவனைக் கொல்லக் கொண்டுபோனவுடன், இன்னொரு கிறிஸ்தவன் தானாக முன்வந்து தானும் ஒரு கிறிஸ்தவன் என்று தன் விசுவாசத்தை அறிக்கைசெய்தான். அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

அடுத்து இன்னொருவன் முன்வந்தான். மரணசாலைக்குக் கொண்டுபோனபோது எல்லாரும் சங்கீதங்களும், கீர்த்தனைகளும் பாடிக்கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றார்கள். இவர்களில் பெரும்பாலோர் பெரும் செல்வந்தர்கள், உயர்குடி மக்கள், பேரும் புகழும் வாய்ந்தவர்கள், மிகச் சிறந்த கல்விமான்கள்.

இவர்களில் குறிப்பிடத்தக்க இரத்தசாட்சிகள் அலெக்ஸாண்ட்ரியாவில் அரசாங்கத்தில் நிர்வாக அதிகாரியான ஃபிலோரோமஸ், தூதிடீசின் ஆயராகிய ஃபிலியாஸ். “உங்கள் முதிர் வயதினிமித்தமும், உங்கள் குடும்பத்தினிமித்தமும் இயேசுவை மறுதலித்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்,” என்று ஆளுநர் பரிந்துரைத்தபோதும், அவர்கள் தங்கள் விசுவாசத்தைவிட்டு அசையவில்லை.

எகிப்திய விசுவாசிகள் மரணத்தைத் தைரியமாக எதிர்கொண்டார்கள். அவர்கள் தங்கள் மரணத்திலும் நற்செய்தியாளர்களாக மாறினார்கள். அவர்களுடைய துன்பத்தின் அளவு மிக அதிகமாக இருந்தபோதும், துன்புற்ற இந்தக் கொடிய நேரத்திலும், விசுவாசிகள் உண்மையாக இருந்தார்கள் என்று யூசிபியஸ் விவரிக்கிறார்.

ஆதிச் சபையின் பிற்காலத்தில் கிறிஸ்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு இரத்தசாட்சிகளாக மரித்தபோது, கிறிஸ்துவின் நற்செய்தி, வார்த்தையால் அல்ல, அவர்களுடைய சாட்சியால் இன்னும் பரவிற்று. இரத்தசாட்சிகள் அனைவரும் நற்செய்தியாளர்களாக மாறினார்கள். உரோமப் பேரரசு செழிப்பாக இருந்தபோது, உரோம நாகரிகம் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டபோது, உயர்வாகக் கருத்தப்பட்டபோது கிறிஸ்தவர்கள் சட்டவிரோதமானவர்களாகவும், நம்பத்தகுதியற்ற சிறுபான்மையினராகவும் கருதப்பட்டார்கள். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு விரோதமான, கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்திய, சமுதாயத்தில் இரத்தசாட்சிகளின் வைராக்கியத்தைக் கண்ட மக்கள் வியந்தார்கள். அது அவர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மரணத்தைச் சந்தித்த தைரியத்தைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

கார்தேஜில் படுகொலைசெய்யப்பட்டவர்களில் பெர்பெத்துவா, பெலிசிட்டாஸ் என்ற இரண்டு பெண்கள் மிகவும் முக்கியமானவர்கள். பெர்பெத்துவா நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அப்போது அவருக்கு 22 வயது. திருமணமாகி ஒரு சிறு குழந்தை இருந்தது. உலகில் எதையும்விட இயேசுவே வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். காவலர்களால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, அவருடைய மனதை மாற்ற அவருடைய அப்பா பலமுறை பல வழிகளில் முயன்றார். ஆனால் எதுவும் பயன் தரவில்லை.

சிறைச்சாலையில் பலவிதமான சித்திரவதைகளுக்கு உட்பட்டு இறுதி மூச்சுவரை இயேசுவை மறுதலிக்காமல் விசுவாசத்தில் நிலைத்து நின்றார்.

பெலிசிட்டாஸ் ஓர் அடிமைப் பெண். அப்போது அவர் எட்டு மாதக் கர்ப்பிணி. காவலர்களிடம் பிடிபட்டாள். “கிறிஸ்துவை மறுதலி, உனக்கு விடுதலை. உன் குழந்தையுடன் நீ ஆனந்தமாய் வாழலாம்,” என்று காவலர்கள் கூறினார்கள். கிறிஸ்துவை மறுதலித்து வாழ்வதை விட, கிறிஸ்துவுக்காய் உயிரை விடுதல் சிறந்தது என்று விசுவாசத்தில் நிலைத்து நின்றார் பெலிசிட்டாஸ். இறுதியில் இருவரும் முரட்டுத்தனமான மாடுகளுக்கு முன்பாகப் வீசியெறியப்பட்டார்கள். விலங்குகள் இவர்களை மிதித்து, இடித்து சித்திரவதை செய்தன. இறுதியில் இவர்கள் இருவரையும் குத்திக்கொன்றார்கள்.

XI) வழிகாட்டும் கோட்பாடுகள்

1. கிறிஸ்துவுக்காக நாம் படும் பாடுகள் பலவகை.

ஒருவர் நம் விசுவாசத்தைக் கிண்டல் செய்தவுடன், நாம் இரத்தசாட்சிகள் என்று நினைக்கக்கூடாது. ஆனால் இது ஓர் ஆரம்பப்புள்ளி என்பதை மறுக்க முடியாது. ஹிட்லர் எடுத்த எடுப்பிலேயே யூதர்களைக் கொல்லவில்லை. முதலாவது யூதர்களைப்பற்றி அவதூறு பரப்பி, படிப்படியாக தீவிரமாகி, கடைசியில் அது இனஅழிப்பில் போய் முடிந்தது. எனவே நம் விசுவாசத்தை ஒருவன் கேலி செய்வதும், நம் விசுவாசத்திற்காக நம்மைக் கொலைசெய்வதும் சமம் இல்லை. அளவில் வித்தியாசம் உண்டு.

2. இரண்டாவது தம் மக்கள் துன்பப்படுத்தப்படுவார்கள் என்று இயேசு முன்னறிவித்தார்.

எனவே, அது நடக்கும்போது நாம் அதிர்ச்சியடைய வேண்டாம். பாடுகளும், துன்பங்களும் கிறிஸ்தவ வாழ்வின் ஓர் இயல்பான பகுதி. ஆனால் இந்தத் துன்பத்துக்கு நாம் நேரடியான காரணமாக இருக்கக்கூடாது. அதாவது நாம் தீமை செய்து பாடநுபவிக்கும்போது நாம் கிறிஸ்துவுக்காகப் பாடநுபவிப்பதாக நினைக்கக்கூடாது. நாம் நன்மைசெய்து பாடநுபவிக்க வேண்டும். நீதியினிமித்தம் துன்பப்படவேண்டும். அதாவது நாம் அநீதியாகத் தண்டிக்கப்படவேண்டும்.

மேலும் பிறர் நம்மைத் துன்பப்படுத்தும்போது நாம் பதிலுக்கு அவர்களைத் துன்பப்படுத்தக்கூடாது. தீமைக்குத் தீமையோ, வெறுப்புக்கு வெறுப்போ பதில் இல்லை.

மேலும் நாம் “செல்லும் செலவைக்” கணக்கு பார்க்க வேண்டும். துன்பப்படுவதற்கும் விலை கொடுக்க வேண்டும்; துன்பப்படாமல் இருக்கவும் கொடுக்க வேண்டும். கிறிஸ்துவுக்காக நிற்கவும் விலை, கிறிஸ்துவை நிராகரித்தாலும் விலை - இரண்டு செலவுகளையும் நாம் கணக்கிட வேண்டும். சூழ்நிலைகள் கடினமாக இருக்கும்போது நாம் அவரை மறுதலிக்கக்கூடாது என்று இயேசு எச்சரித்தார். தற்காலிகமாகத் துன்பப்படுவதற்கும் மரிப்பதற்கும் கொடுக்க வேண்டிய விலையைவிட, கிறிஸ்துவை மறுதலித்தால் நாம் நித்தியமான பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கும். கிறிஸ்தவனைப்பொறுத்தவரை மரணம் தற்காலிகமானது. ஆனால் கிறிஸ்துவை மறுதலிப்பவர்களுக்கு நித்திய மரணம் காத்திருக்கிறது. எனவே கிறிஸ்துவுக்காகப் பாடநுபவிக்கும் விருப்பம் நல்லது. அதாவது நாம் குற்றமற்ற முறையில், இயேசுவின் மதிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் சரியான வழியில் துன்பப்பட வேண்டும். நம் துன்பம் எந்த மாற்றீட்டையும்விட கிறிஸ்து சிறந்தவர் என்பதற்கான காரணங்களை நிரூபிக்கும் ஒரு நல்ல சாட்சியாக இருக்க வேண்டும்.

எல்லோரையும்விட, எல்லாவற்றையும்விட, தங்களையும் தங்கள் உயிரையும்விட இரத்தசாட்சிகள் கிறிஸ்துவை அதிகமாக நேசித்தார்கள். தாங்கள் செய்வது இன்னதென்று அவர்களுக்குத் திட்டவட்டமாகத் தெரியும். அவர்கள் “செல்லுஞ்செலவைக் கணக்கிட்டிருந்தார்கள்.” ஒருவன் இயேசுவை மறுதலித்ததைப் பார்த்த டெனிசா என்ற 16 வயது பெண் “O unhappy wretch, why would you buy a moment’s ease at the expense of a miserable eternity!” என்று கூறினாள். “கண நேர நிம்மதிக்காக, ஏன் நித்தியத்தை இழக்கிறாய்?”

கிறிஸ்தவப் பெற்றோர்கள் கொல்லப்பட்டபோது கூடவே தங்கள் குழந்தைகளையும் அரங்கிற்குக் கொண்டுவந்தார்கள். எதற்காக? கூடவே சாவதற்காக. ஏன்? ஏனென்றால் தங்கள் குழந்தைகள் இந்தப் பூமியில் அஞ்ஞானிகளாக வாழ்வதைவிடக் கிறிஸ்தவர்களாக இறப்பது மேல் என்று அவர்கள் நினைத்தார்கள். தங்கள் குடியுரிமை இந்த உலகில் இல்லை என்பதை மிகவும் தீவிரமாக விசுவாசித்தார்கள். எனவே, நித்தியத்திற்காகவும், நித்தியத்தில் கிறிஸ்துவிடமிருந்து ஒரு பெரிய வெகுமதியைப் பெறுவதற்காகவும் எந்த விலைக்கிரயம் கொடுப்பதற்கும் அவர்கள் தயாராக இருந்தார்கள். அதை மரணம்கூடத் தங்களிடமிருந்து பறிக்க முடியாது என்று அவர்கள் நம்பினார்கள். ஆம், செல்லும் செலவைக் கணக்கிட வேண்டும்.

3. தேவபக்திக்கேதுவான துன்பம் நல்ல சாட்சி

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்குமுன், தேவனுக்குத் தொண்டுசெய்வதாக நினைத்து, கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்தியதுபோலவே, துன்புறுத்துபவர்கள் தாங்கள் செய்வது சரி என்றும், நல்லது என்றும் நினைக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்துவின் சாட்சிகளாகிய நாம் இதைப் புரிந்துகொண்டால் அவர்களை அடிமைப்படுத்தியிருக்கும் பாவத்திற்கு எதிராக உறுதியாக நின்று, நாம் அவர்களுக்கு நேர்த்தியான பதிலளிக்க முடியும்; அவர்களும் பாவத்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலைபெற்று, உண்மையான பொருளுள்ள, கனிநிறைந்த, நிறைவான வாழ்க்கை வாழ உதவ முடியும்.

இதன் பொருள் என்னவென்றால், தேவபக்திக்கேதுவான துன்பம் நல்ல சாட்சி. நாம் அநியாயமாகத் துன்புறுத்தப்படும்போது நேர்த்தியாகப் பதிலளித்தால், நாம் விசுவாசிக்கும் தேவன் எப்படிப்பட்டவர் என்று உலகம் அறிந்துகொள்ளும். இதன்மூலம், அவருக்காகத் துன்பப்பட அவர் தகுதியானவர், இந்த உலகம் வழங்கும் எதையும்விட அவர் மதிப்புமிக்கவர், முக்கியமானவர், என்று இந்த உலகத்துக்குக் காண்பிக்கின்றோம். துன்புறுத்தப்படும்போது வெறுப்போடு அல்ல, கிருபையோடு, நாம் பதிலளிக்கும்போது, அது நாம் பாவிகளாக இருந்தபோதும் தேவன் நமக்குக் காண்பித்த அதே அன்பைக் காண்பிக்கிறது.

4. தேவன் உண்மையுள்ளவர்.

இது கிறிஸ்துவுக்காக நாம் பாடுபடும்போது உலகுக்குச் சொல்லும் செய்தி. இதை நம் மனதில் ஆழமாகப் பதித்துக்கொள்ள வேண்டும். நாம் துன்புறுத்தப்படும்போது, அதை மகிழ்ச்சியாக எண்ண வேண்டும் என்றும் வேதம் கோருகிறது.

ஏனென்றால், நாம் இழந்ததைவிட அதிகமாகத் தேவன் நமக்கு ஈடுசெய்வார். மேலும் நம் துன்பங்களை நன்மைக்கேதுவாக மாற்றுவார். தேவனுடைய நித்திய திட்டத்தில் நாம் துன்பப் படவேண்டும் என்று இன்று நமக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் நாம் தேவனை அறிய முடியும். இந்தத் துன்பத்தைத் தாண்டிச் செல்ல அவர் உதவுவார் என்று நமக்குத் தெரியும்.

XII) முடிவுரை

சரி, இன்னும் ஒரேவொரு காரியத்தை மட்டும் சொல்லி இந்தப் பாகத்தை முடித்துக்கொள்வோம். இது கிறிஸ்தவத்தை மிகவும் தீவிரமாக எதிர்த்த உரோமப் பேரரசன் டயோக்லீஷியனைப்பற்றியது. அவன் கிறிஸ்தவத்தைக் கடுமையாக எதிர்த்தான்; கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்தினான். கடுகளவு ஈவுயிரக்கமின்றி சபையைத் துன்புறுத்தினான். தான் கிறிஸ்தவத்தை தோற்கடித்துவிட்டதாக அவன் நினைக்க விரும்பினான். இதைப் பறைசாற்றும் விதமாக அவன் ஒரு பதக்கத்தை, நாணயத்தை, அச்சடித்தான். அதில் கிறிஸ்தவத்தின் பெயர் அணைக்கப்படுகிறது என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயத்தில் அவனுடைய உருவமும், இந்த வாசகமும் இருந்தன. இவன் கிறிஸ்தவத்தை அணைத்தவன், கிறிஸ்தவத்தின் பெயரைத் துடைத்தளித்தவன். இதைப் பறைசாற்றும்விதமாக அவன் தன் பேரரசின் எல்லையில் சில நினைவுச்சின்னங்களையும் நிறுவினான். அப்படிப்பட்ட இரண்டு நினைவுச் சின்னங்களில், கல்வெட்டுகளில், இந்த வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

முதல் கல்வெட்டு

கிழக்கிலும் மேற்கிலும் உரோமப் பேரரசை விரிவுபடுத்தியதற்காகவும், உரோமக் குடியரசை அழிவுக்குக் கொண்டு வந்த கிறிஸ்தவர்களின் பெயரை அழித்ததற்காகவும் - டயோக்லீஷியன் ஜோவியன் மாக்சிமின் ஹெர்குலஸ் சிசேரியா அகஸ்டின். இது ஒரு கல்வெட்டு.

இரண்டாவது கல்வெட்டு.

எல்லா இடங்களிலும் கிறிஸ்தவம் என்னும் மூடநம்பிக்கையை ஒழித்ததற்காகவும், பிற தெய்வங்களின் வழிபாட்டை விரிவுபடுத்தியதற்காகவும் - டயோக்லீஷியன் ஜோவியன் மாக்சிமின் ஹெர்குலஸ் சிசேரியா அகஸ்டின். ஆதிச் சபையின் இறுதிக் காலத்தில் கிறித்தவத்தைத் தான் அழித்துவிட்டதாகப் பெருமைப்பட்ட டயக்லீஷியனை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன்.

டயக்லீஷியன் இருந்தான், இறந்தான். அவன் இப்போது வரலாற்றின் பக்கங்களில் ஒரு சிறு அடிக்குறிப்பு. அவ்வளவே. ஆனால் சபை சாகவில்லை. இயேசுவின் வாக்குறுதின்படியே சபை சாகவில்லை. உரோம அரசு நினைத்தபடி சபை சாகவில்லை. சித்திரவதையினூடாக, சித்திரவதையினால், சபை வளர்ந்தது. இயேசுவின் இரத்தத்தாலும், மரணத்தாலும், உயிர்ப்பாலும் பிறந்த சபை தேவ மக்களின் இரத்தத்தாலும், மரணத்தாலும் வளர்ந்தது. அன்று கிறிஸ்தவனாக இருப்பதற்குப் பெரிய விலைக்கிரயம் கொடுக்கவேண்டியிருந்தது. யாரும் அரைகுறை மனதோடு, அரைகுறை இருதயத்தோடு, அரைகுறை ஆத்துமாவோடு, அரைகுறை பலத்தோடு கிறிஸ்தவனாகவில்லை. முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும், முழு மனதோடும்தான் கிறிஸ்தவனானார்கள். ஒவ்வொரு நாளையும் இந்தப் பூமியில் கடைசிநாள்போல்தான் வாழ்ந்திருப்பார்கள். எனவே கிறிஸ்துவுக்காக, தங்கள் விசுவாசத்துக்காக, சபைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள், துணிந்தார்கள். இரத்தசாட்சிகள் சிந்திய இரத்தம் சபையின் விதை என்று தெர்த்துல்லியன் சொன்னார்.

இயேசு கிறிஸ்துவின் மகத்துவம் உலகெங்கும் பரவியிருக்கிறது. நரகத்தின் வாயில்களால் இயேசு கிறிஸ்துவின் சபையை இதுவரை மேற்கொள்ளமுடியவில்லை. இயேசுவின் அற்புதமான வாக்குறுதிகளுக்காக நாம் தேவனைத் துதிக்கிறோம். ஆதிச் சபையின் காலத்திலும் அதற்குப்பிறகும் கிறிஸ்தவ விசுவாசத்துக்கு விரோதமாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட எல்லாவைகயான சித்திரவதைகளையும் கடந்து இயேசு கிறிஸ்து வெற்றிவாகை சூடியிருக்கிறார். அவருடைய சபையும் பூமியெங்கும் மகிமையாக வீற்றிருக்கிறது. இது நம்மெல்லோருக்கும் உற்சாகம் அளிக்கிறது. அடுத்த பாகம் வரும்வரை நீங்கள் இவைகளைச் சிந்தித்து வலுவடைவீர்களாக.