அப்போஸ்தலர் காலச் சபைக்குப்பின் வருவது ஆதிச் சபை. இது கி.பி 100முதல் கி.பி 312 வரையிலான காலகட்டம். அதாவது இது அப்போஸ்தலனாகிய யோவான் மரித்ததுமுதல் ரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட காலம்வரையிலான வரலாறு. ஆதிச் சபை வரலாற்றை விவரிக்க கிறிஸ்தவம் பரவுதல் என்ற தலைப்புக் கொடுக்கலாம். கிறிஸ்தவம் பரவியது, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியது. உரோமப் பேரரசில் கிறிஸ்தவம் மதிப்புவாய்ந்த சிறுபான்மையாக வளர்ந்தது. அது எப்படி? காரணம் என்ன?
சபை வரலாற்றின் இரண்டாம் பாகத்தில் நாம் அப்போஸ்தலர் காலச் சபை வரலாற்றைப் பார்த்தோம். இப்போது, மூன்றாம் பாகத்தில், நாம் ஆதிச் சபை வரலாற்றைப் பார்க்கப்போகிறோம். ஆதிச் சபை வரலாற்றைப் பார்க்கும்போது, அந்தக் காலகட்டத்தில் கிறிஸ்தவம் எப்படிப் பரவியது என்பதை நாம் குறிப்பாகப் பார்ப்போம்.
சபை வரலாற்றை நான்கு காலகட்டங்களாகப் பிரிக்கலாம் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். இப்படித்தான் பிரிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. நம் வசதிக்காக நாம் இப்படிப் பிரிக்கிறோம். அவ்வளவுதான்.
இது ஆண்டவராகிய இயேசு பரமேறியதிலிருந்து ஏறக்குறைய கி.பி 100 வரையிலான வரலாறு. ஏன் கி.பி 100 வரை? ஏனென்றால், யோவான்தான் கடைசியாக மரித்த அப்போஸ்தலன் என்றும், அவர் ஏறக்குறைய கி.பி 100 வாக்கில் மரித்தார் என்றும் நம்பப்படுகிறது. எனவே, இது முதல் தலைமுறையைச் சார்ந்த அப்போஸ்தலர் காலச் சபை வரலாறு. இதைத்தான் நாம் இரண்டாவது பாகத்தில் பார்த்தோம். தேவையான அளவுக்குப் போதுமான விவரங்களை நாம் பார்த்தோம் என்று நான் நம்புகிறேன். புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களான அப்போஸ்தலர் நடபடிகள், பவுலின் நிருபங்கள், பிற நிருபங்கள், திருவெளிப்பாடு ஆகியவைகளிலிருந்து அப்போஸ்தலர் காலச் சபை வரலாற்றை நாம் ஓரளவுக்குத் தெரிந்துகொள்கிறோம். அந்தக் காலகட்டத்தில் அரசியல், மதப் பின்புலம் என்னவென்றும், சபைகள் எப்படி பெருகின என்றும், சபைகளின் நிலைமை என்னவென்றும் நாம் இரண்டாம் பாகத்தில் பார்த்தோம். அப்போஸ்தலர் காலச் சபை வரலாற்றை அறிய புதிய ஏற்பாட்டின் நிருபங்கள் மிக நல்ல ஆதாரம்.
அப்போஸ்தலர் காலச் சபைக்குப்பின் வருவது ஆதிச் சபை. இது கி.பி 100முதல் கி.பி 312 வரையிலான காலகட்டம். அதாவது இது அப்போஸ்தலனாகிய யோவான் மரித்ததுமுதல் ரோமப் பேரரசன் கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட காலம்வரையிலான வரலாறு.
கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டபிறகு கிறிஸ்தவம் மிக வேகமாகப் பரவியது. அதைப்பற்றி நாம் பிறகு நிறையப் பேசுவோம். அந்தக் காலச் சபை வரலாற்றை நாம் கிறிஸ்தவப் பேரரசு என்றுகூட அழைக்கலாம். அந்த அளவுக்கு அந்தக் காலகட்டத்தில் கிறிஸ்தவம் தழைத்தோங்கியது. அதை நாம் இரண்டு கால கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் பகுதி கி.பி 312முதல் 1000வரையிலான காலம்;
அடுத்த பகுதி 1000முதல் 1500வரையிலான காலம். என் வசதிக்காக நான் இப்படிப் பிரித்துக்கொள்கிறேன். கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டதுமுதல் சீர்திருத்தக் காலம்வரையிலான வரலாற்றை ஒன்றாகச் சேர்த்துப் பார்ப்பவர்கள் பலர் உண்டு. அதில் எந்தப் பிரச்சினையோ, தவறோ இல்லை. அந்தக் கால கட்டத்தின் சபை வரலாற்றைப்பற்றி நிறையப் பேச வேண்டியிருக்கும். எனவே, அதை கிறிஸ்தவப் பேரரசின் முந்தைய கால வரலாறு, பிந்தைய கால வரலாறு என நான் இரண்டாகப் பிரித்துக்கொள்கிறேன்.
சரி, ஆதிச் சபை வரலாற்றில் நாம் என்ன பார்க்கப்போகிறோம்? ஆதிச் சபை வரலாற்றை விவரிக்க கிறிஸ்தவம் பரவுதல் என்ற தலைப்புக் கொடுக்கலாம். இது மிகவும் பொருத்தமான தலைப்பாக இருக்கும்.
நாம் பார்க்கபோவதை, நான் சொல்ல விரும்புவதை, சுருக்கமாகச் சொல்ல Kenneth Scott Latterette என்ற சபை வரலாற்றாசிரியர் எழுதிய சபை வரலாறு என்ற புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதியை மேற்கோள்காட்டுகிறேன். இவர் சபை வரலாற்றைப்பற்றி 7 தொகுப்புகள் அடங்கிய ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இதோ அவருடைய மேற்கோள்: “இவ்வளவு குறுகிய காலத்தில், வேறு எந்த மத நம்பிக்கையோ அல்லது வேறு எந்த மதக் கோட்பாடுகளோ, கருத்துக்களோ அல்லது வேறு எந்த அரசியல் சித்தாந்தங்களோ அல்லது வேறு எந்த பொருளாதாரச் சிந்தனையோ படை பலத்தைப் பயன்படுத்தாமல் அல்லது சமூக, கலாச்சார உதவியில்லாமல், இவ்வளவு முக்கியமான கலாச்சாரத்தில் இப்படிப்பட்ட அதிகாரமிக்க நிலையை அடைந்ததில்லை,” என்று அவர் கூறுகிறார்.
கிறிஸ்தவம் தனித்தன்மைவாய்ந்தது, தன்னிகரற்றது. வேறு மதங்களையோ, தத்துவங்களையோ, கோட்பாடுகளையோ, முறைமைகளையோ, சித்தாந்தங்களையோ, சிந்தனைகளையோ கிறிஸ்தவத்தோடு ஒப்பிடவே முடியாது. கம்யூனிசத்தையோ, மாபெரும் சமுதாயப் புரட்சிகளையோ, அரசியல் இயக்கங்களையோ எதையும் கிறிஸ்தவத்தோடு ஒப்பிடவே முடியாது. அவைகள் கிறிஸ்தவத்தோடு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல. கிறிஸ்தவம் பரவிய விதம் தன்னிகரற்றது. கிறிஸ்தவம் இராணுவத்தையோ, அதிகாரத்தையோ, பணத்தையோ, உடல் உரத்தையோ, அரசியல் செல்வாக்கையோ பயன்படுத்தி உரோமப் பேரரசின் முக்கியமான, முதன்மையான, இடத்தைப் பெறவில்லை. சமுதாயத்திலும், கலாச்சாரத்திலும் தனக்கு உயர்ந்த அந்தஸ்தும், மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்பதாலோ, அல்லது தன் பொருளாதார வசதி உயரும், பெருகும், என்பதாலோ யாரும் கிறிஸ்தவனாக மாறவில்லை. இதுபோன்ற உள்நோக்கத்தினால் கிறிஸ்தவம் பரவவில்லை. ஆனால் கிறிஸ்தவம் பரவியது, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியது. உரோமப் பேரரசில் கிறிஸ்தவம் மதிப்புவாய்ந்த சிறுபான்மையாக வளர்ந்தது. அது எப்படி? காரணம் என்ன? இதற்குக் காரணம் நற்செய்தியின் வல்லமை
இன்னும் ஒரு சில நிமிடங்களில் நாம் இதைப்பற்றி விவரமாகப் பார்ப்போம். ஆனால் நீங்கள் இப்போது உடனடியாக ஒரு காரியத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கி.பி 180வரை உரோமப் பேரரசில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருந்தது. கிறிஸ்தவர்கள் அங்கும் இங்குமாகக் கொஞ்சப்பேர்தான் வாழ்ந்தார்கள். எனினும் கி.பி 180 வாக்கில் கிறிஸ்தவர்கள் உரோமப் பேரரசின் எல்லா மாநிலங்களிலும் இருந்தார்கள். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால், இருந்தார்கள். அது மட்டும் இல்லை. கிறிஸ்தவம் உரோமப் பேரரசின் எல்லைகளைத் தாண்டியும், குறிப்பாக மெசப்பதோமியாவில், பரவ ஆரம்பித்தது. கிறிஸ்தவத்தின் செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்தது, கிறிஸ்தவத்தின் தாக்கம் உரோமப் பேரரசின் எல்லையெங்கும் அதிகமாக இருந்தது. இந்தப் போக்கு உரோமப் பேரரசன் மாற்குஸ் அவ்ரேலியூஸ் மரித்த கி.பி 180இலிருந்து பேரரசன் கான்ஸ்டான்டடீன் அரியணையேறிய கி.பி. 312வரையும், அதற்குப் பிறகும் நீடித்தது. அபரிமிதமான வளர்ச்சி; ஆச்சரியமான போக்கு. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதைக்குறித்து நாம் பின்னர் இன்னும் விவரமாகப் பார்ப்போம்.
கிறிஸ்தவம் வளர்ந்த விதத்தைக் கவனியுங்கள். அற்பமான ஆரம்பம்! அதாவது மெதுவாக ஆரம்பித்தது; மெல்ல நகர்ந்தது; போகப்போகக் கொஞ்சம் வேகமெடுத்தது. கடைசியாக வேகம் உச்ச கட்டத்தை எட்டியது. கி.பி 200 வாக்கில் உரோம் நகரில் மட்டும் குறைந்தபட்சம் 30,000 கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அப்போது உரோம் பெரிய மாநகரம்தான். எனினும் உரோமில் அப்போது 30,000 கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் என்றால் கிறிஸ்தவம் வியக்கத்தக்க முறையில் வேகமாக வளர்ந்துகொண்டிருந்தது என்று பொருள். ஆம், இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் வேகமெடுத்தது.
மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கு ஆப்பிரிக்காவில் தெர்த்துல்லியன் என்ற ஓர் இறையியலாளர் இருந்தார். அவர் கிறிஸ்தவத்தை நசுக்க உரோம அரசு எடுத்த நடவடிக்கைகளைக் கேலிசெய்து உரோம அதிகாரிகளுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கிறிஸ்தவம் எவ்வளவு வேகமாகப் பரவியது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர் எழுதிய கடிதத்தின் சாராம்சத்தை நான் மேற்கோள் காட்டுகிறேன்.
“நாங்கள் நேற்று முளைத்தவர்கள். ஆனால், நாங்கள் உங்கள் நகரங்கள், தீவுகள், கோட்டைகள், பட்டணங்கள், சந்தைகள், முகாம்கள், பழங்குடியினர், நிறுவனங்கள், அரண்மனை, செனட் மன்றம் என எல்லா இடங்களையும் நிரப்பிவிட்டோம். உங்கள் தேவர்களின், தேவதைகளின், கோவில்களை மட்டுமே நாங்கள் உங்களுக்கு விட்டுவைத்திருக்கிறோம்,” என்று எழுதினார். தெர்த்துல்லியன் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியை கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்வதுபோல் தோன்றலாம். ஆயினும், உரோமப் பேரரசின் எல்லா இடங்களிலும் கிறிஸ்தவர்கள் பரவியிருந்தார்கள் என்றும், அவர்கள் ஊடுருவாத இடம் இல்லையென்றும் அவர் கூறுகிறார். தன் கடிதத்தில் “உங்கள் தெய்வங்களின் கோயில்களை மட்டுமே நாங்கள் உங்களுக்கு விட்டுவைத்திருக்கிறோம்” என்று உரோமப் பேரரசைக் கிண்டல்செய்கிறார். பேரரசன் கான்ஸ்டான்டீன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டபின் கிறிஸ்தவம் அதைவிட வேகமாக வளர்ந்தது.
கி.பி 250இல் உரோமப் பேரரசில் கிறிஸ்தவர்கள் இரண்டு விழுக்காடு என்றும், கி.பி 300இல் 10 விழுக்காடாகவும், கி.பி 350இல் 56 விழுக்காடாகவும் உயர்ந்தார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள். இது மிகவும் வியக்கத்தக்க விந்தையான வளர்ச்சி. இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணம் என்ன?
உரோமப் பேரரசின் எல்லையெங்கும் கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது. உரோமப் பேரரசின் எல்லைகளைக் கவனியுங்கள். முதலாவது சிறிய ஆசியா, அதாவது இன்றைய துருக்கி. ஒருவேளை இங்குதான் அதிகமான கிறிஸ்தவர்கள் இருந்திருக்கக் கூடும். திருவெளிப்பாடு 2, 3ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ள ஏழு சபைகளும் இங்குதான் இருந்தன.
அங்கு மட்டும் அல்ல , உரோமப் பேரரசின் பிற பகுதிகளிலும், குறிப்பாக வட ஆப்பிரிக்காவில், எகிப்தில், கிறிஸ்தவம் ஆழமாக வேரூன்றியிருந்தது. வட ஆப்பிரிக்காவுக்குக் கிறிஸ்தவம் எப்படிச் சென்றது என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. எருசலேம் தேவாலயத்தில் ஆராதித்தபின் எத்தியோப்பாவுக்குத் திரும்பிக்கொண்டிருந்த கந்தாகே நாட்டு மகாராணியின் மந்திரி பிலிப்புவின்மூலம் நற்செய்தியைக் கேட்டு, ஞானஸ்நானம் பெற்று, தன் நாட்டுக்குத் திரும்பியபின் எத்தியோப்பாவில் நற்செய்தி அறிவித்திருப்பார் என்று நிச்சசயமாகச் சொல்லலாம். ஆனால், வட ஆப்பிரிக்காவில் நற்செய்தி எப்படி பரவிற்று? யூதர்கள் உரோமப் பேரரசெங்கும் சிதறியிருந்தார்கள். யூதர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழும் ஒரு சமுதாயத்தினர். அவர்கள் எங்கு போனாலும் தங்கள் இன மக்களோடு சேர்ந்துதான் வாழ்ந்தார்கள். எனவே, வட ஆப்பிரிக்காவில் சிதறியிருந்த யூதர்கள்மூலமாக அங்கு நற்செய்தி பரவியிருக்கலாம். சில முக்கியமான சபைத் தலைவர்கள் வட ஆப்பிரிக்க சபைகளிலிருந்து எழும்பினார்கள். இவர்களைப்பற்றி பின்னாட்களில் நாம் பேசுவோம்.
அடுத்ததாக கவுல் என்ற ஒரு பகுதி. இது இன்றைய பிரான்ஸ் நாடும், ஜெர்மனியின் ஒரு பகுதியும் சேர்ந்த ஒரு நிலப்பரப்பு. கிறிஸ்தவம் அங்கும் பரவியது. தெற்கு கவுலில், ரோனே பள்ளத்தாக்கில் இருந்த கிரேக்க மொழி பேசிய யூதர்கள்மூலமாக கிறிஸ்தவம் அங்கு பரவிற்று என்று தெரிகிறது. கி.பி 177இல் லியோனிலும், வியென்னாவிலும் கிறிஸ்தவர்கள் கொஞ்சம் சித்திரவதைசெய்யப்பட்டார்கள். அப்போது ஐரேனியஸ் என்ற சபைத் தலைவர் கிரேக்க மொழியில் மட்டும் அல்ல, அவருடைய தாய்மொழியாகிய கெல்டிக் மொழியிலும் ஊழியம் செய்தார். இவைகள் இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த காரியங்கள்.
வடக்கு கவுலில் இருந்த கோலோக்னே, மெய்ன்ஸ் பகுதிகளில் அப்போது ஆயர்கள் (Bishops) இருந்தார்கள். அது கி.பி 185. முதலாவது கிரேக்க கலாச்சாரம் அதிகமாக இருந்த பகுதிகளில் கிறிஸ்தவம் பரவியது. பின்னர் உரோமப் பேரரசின் எல்லைகளைத் தாண்டியும் கிறிஸ்தவம் வளரத் தொடங்கியது. உரோமப் பேரரசின் எல்லைகளில் பெரிய நகரங்கள் அதிகமாக இருந்தன. கிறிஸ்தவம் அங்கும் ஊடுருவத் தொடங்கியது. அந்தப் பட்டணங்களும், நகரங்களும் முழுவதும் உரோம ஆதிக்கத்தின்கீழ் இல்லாதிருந்தும் கிரேக்கக் கலாச்சாரத்தின் தாக்கம் அங்கும் இருந்ததால் கிறிஸ்தவம் இயல்பாகவே அங்கு பரவத் தொடங்கியது.
இதுவரை கிறிஸ்தவம் எப்படிப் பரவிற்று என்று பார்த்தோம். மெல்ல ஆரம்பித்து, கொஞ்சம் வேகமெடுத்து, பின் அசுர வேகத்தில் பரவியது.
கிறிஸ்தவம் பரவிய விதத்தைப் பார்க்கும்போது இயல்பாகவே ஒரு கேள்வி எழ வேண்டும். உரோமப் பேரரசின் குடிமக்களைக் கிறிஸ்துவிடம் கவர்ந்திழுத்தது எது? அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கக் காரணம் என்ன? ஆதிச் சபையின் காலகட்டத்தில் மக்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள பல காரணங்கள் இருந்தன. நான் குறிப்பாக ஆறு காரணங்களை மட்டும் சொல்லப்போகிறேன்.
முதல் காரணம் மிக எளிமையானது, ஆனால் மிக முக்கியமானது. முதலாவது காரணம் நற்செய்தியின் வல்லமையும், பரிசுத்த ஆவியானவரின் வேலையும்.
நற்செய்தியிலும், பரிசுத்த ஆவியானவரிலும் இயல்பாகவே உள்ளார்ந்த வல்லமை உண்டு என்று வேதாகமம் கூறும் ஆணித்தரமான உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. எடுத்துக்காட்டாக ரோமர் 1:16ஐக் கவனியுங்கள். “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.” இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்கு வல்லமை உண்டு என்று மாத்திரம் பவுல் கூறவில்லை. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற ஒவ்வொருவரையும் இரட்சிக்கவும் நற்செய்திக்கு வல்லமை உண்டு என்றும் அவர் கூறுகிறார். அதோடு நிறுத்தாமல், அதன்பின் எந்தெந்த கலாச்சாரத்தில் வாழ்கிறவர்களை இரட்சிக்க வல்லமை உண்டு என்றும் அவர் கூறுகிறார். நற்செய்தியால் யூதர்களையும் இரட்சிக்க முடியும்; கிரேக்கர்களையும் இரட்சிக்க முடியும். இவ்வாறு எல்லாக் கலாச்சாரங்களிலும், எல்லா மொழிகளிலும், எல்லா இனங்களிலும், எல்லா இடங்களிலும் வாழ்கிற மக்களை இரட்சிக்க நற்செய்திக்கு வல்லமை உண்டு. ஆமென்.
இந்தக் காரியத்தை நாம் அசட்டைசெய்யவோ, உதாசீனம்செய்யவோ கூடாது. இதைக் காண்பதற்குக் கண் வேண்டும். இயேசு கிறிஸ்து உலகத்தின் இரட்சகர். உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலுள்ள எல்லாக் கலாச்சாரங்களுக்கும், எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்கும், எல்லா மக்களுக்கும் அவர் இரட்சகர். நடபடிகள் 1:8இல் “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்,” என்று இயேசு சொன்னார் என்று நமக்குத் தெரியும். நற்செய்திக்கு வல்லமை உண்டு என்று மட்டும் இயேசு சொல்லவில்லை. நற்செய்தியை அறிவிக்கும் மக்களுக்கு வல்லமையை வழங்குவதாகவும் அவர் சொன்னார். ஆம், தமக்குச் சாட்சிகளாக இருக்கத் தம் மக்களுக்கு வல்லமை, தெய்வீக பலம், தெய்வீக ஆற்றல் இருக்கும் என்று இயேசு சொன்னார். ஏதோ போனால் போகிறது என்பதுபோல் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் அல்ல. பூமியின் எல்லையெங்கும் அவர்கள் சாட்சிகளாயிருப்பார்கள் என்று அவர் கூறினார்.
உரோமப் பேரரசெங்கும் கிறிஸ்தவம் பரவியதற்கானப் பல்வேறு காரணங்களை நாம் பார்க்கப்போகிறோம். எத்தனை காரணங்கள் இருந்தாலும், நற்செய்தியிலும் பரிசுத்த ஆவியானவரிலும் உள்ளார்ந்த வல்லமை உண்டு என்ற முதன்மையான, முக்கியமான, மூல காரணத்தை நாம் ஒருபோதும் மறக்கவோ, புறக்கணிக்கவோ கூடாது.
இரண்டாவது காரணம் கிறிஸ்தவத்தின் inherently evangelistic nature. அதாவது கிறிஸ்தவம் பிறரையும் தங்கள் விசுவாசத்துக்கு இசைவாக்க வேண்டும், இழுக்க வேண்டும், ஈர்க்க வேண்டும் என்ற உள்ளார்ந்த இயல்புடையது. கிறிஸ்தவம் தன்னை அடக்கிக்கொள்ளும் இயல்புடையதல்ல; மாறாக, வெளியே புறப்பட்டுப்போய்த் தன்னை அறிவுக்கும் இயல்புடையது. தன் விசுவாசத்தைப் பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்ற முனைப்பு கிறிஸ்தவத்தில் இயல்பாகவே உண்டு. ஆயினும், தன்னைப் பரப்புவதற்கு கிறிஸ்தவம் பிற மதங்களைப்போல் பட்டயத்தையோ, பலத்தையோ பயன்படுத்துவதில்லை.
மத்தேயு 28:19-20யை நான் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனினும், நான் அந்த வசனத்தையும் இங்கு மேற்கோள்காட்ட விரும்புகிறேன். இது இயேசு நமக்குக் கொடுத்த மாபெரும் கட்டளை. “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.” “புறப்பட்டுப் போங்கள். எல்லா நாட்டு மக்களையும் என் சீடராக்குங்கள்,” என்பது நம் ஆண்டவர் நமக்குக் கொடுத்த பெரிய கட்டளை. ஆதிச் சபையின் கிறிஸ்தவர்கள் அன்று இந்தக் கட்டளையை நிறைவேற்றினார்கள். அவர்கள் இயேசுவின் கட்டளையைத் தலைமேல் சுமந்து செயலாற்றினார்கள். இதை இன்று நாம் இன்னும் மும்முரமாகவும், முனைப்பாகவும் செய்ய வேண்டும்; செய்துகொண்டேயிருக்க வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன்: இயேசு கிறிஸ்து எனக்கு என்ன செய்தார் என்பதைப் பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்ற ஓர் உள்ளார்ந்த இயல்பு கிறிஸ்தவ நற்செய்திக்கு உண்டு. தான் சுவைத்த கிறிஸ்துவைப் பிறருக்கு வழங்க வேண்டும் என்ற துடிப்பு, ஆர்வம், ஆவல், ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் உண்டு. “கிறிஸ்து என் வாழ்வை மாற்றினார். நான் தேடியவைகளை இயேசுவில் கண்டுகொண்டேன். இயேசு உங்கள் வாழ்வை மாற்றுவார். நீங்கள் தேடும் சமாதானம், திருப்தி, நிறைவு, இளைப்பாறுதல் கிறிஸ்துவில் உண்டு,” என்று கிறிஸ்துவை அறிவிக்கும் ஆர்வம் எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. அன்று அவர்கள் இதை உண்மையும் உத்தமுமாகச் செய்தார்கள். இன்று? கேள்வியோடு விடுகிறேன்.
என் நண்பர் ஒருவர் சிறிது காலம் யூதமதத்தில் கொஞ்சம் ஆர்வமாக இருந்தார். எனவே, சில நேரங்களில் அவர் யூதர்கள் கூடிவரும் ஜெப ஆலயங்களுக்குப் போய்வந்தார். ஒரு நாள் அவர் அங்கிருந்த ஒருவரிடம், “நான் யூதன் அல்ல. புறவினத்தான். ஆனால், யூத மதத்தில் எனக்கு ஆர்வம் உண்டு,” என்று சொன்னார். அதற்கு அந்த ஜெப ஆலயத்திலிருந்த ஒருவர், “யூதர்களாகிய நாங்கள் எங்கள் செய்தியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நித்திய ஆக்கினையை அடைவார்கள் என்று நாங்கள் நினைப்பதுமில்லை, நம்புவதுமில்லை, அறிவிப்பதுமில்லை. எனவே, யாரும் யூதனாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புவதில்லை, எதிர்பார்ப்பதில்லை. ஏற்கெனவே யூதர்களாக இருக்கிற நாங்கள் ஒரு சமுதாயமாக சேர்ந்திருக்கிறோம். நாங்கள் யாரையும் யூதர்களாக்குவதில்லை,” என்று சொன்னாராம்.
இதன் பொருள் என்னவென்றால், அவர்கள் இன்னொருவனை தங்கள் விசுவாசத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பவில்லை. இது கிறிஸ்தவத்துக்கு முற்றிலும் எதிர்மறையானது. கிறிஸ்தவம் பிறரை தங்கள் விசுவாசத்துக்கு வரவேற்கிறது, வர வேண்டும் என்று விரும்புகிறது, அதற்காகப் பிரயாசப்படுகிறது. இதுதான் இரண்டாவது காரணம்.
முதல் காரணம், நற்செய்தியிலும் பரிசுத்த ஆவியானவரிலும் வல்லமை உண்டு. இரண்டாவது காரணம், தங்கள் விசுவாசத்தைப் பரப்ப வேண்டும், பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்பது கிறிஸ்தவத்தின் உள்ளார்ந்த இயல்பு.
இப்போது நாம் மூன்றாவது காரணத்தைப் பார்ப்போம். இதை நாம் வரலாற்றுக் காரணம் என்று சொல்லலாம். நற்செய்தியிலும், பரிசுத்த ஆவியானவரிலும் வல்லமை உண்டு என்ற முதல் காரணத்தையும், தன்னைப் பரப்ப வேண்டும் என்ற உள்ளார்ந்த இயல்பு கிறிஸ்தவத்திற்கு உண்டு என்ற இரண்டாவது காரணத்தையும் ஆவிக்குரிய காரணங்கள் என்று சொல்லலாம். எனவேதான் மூன்றாவது காரணத்தை நான் வரலாற்றுக் காரணம் என்று சொல்லுகிறேன். இதைச் சமுதாயக் காரணம் என்றும் சொல்லலாம். தொடர்ந்து கேட்கும்போது நீங்கள் இதைத் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள்.
உரோமப் பேரரசின் மக்களை எது கிறிஸ்தவத்தின்பால் ஈர்த்தது என்ற கேள்விக்கான விடையை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
உரோமப் பேரரசில் இருந்த மதங்களோடு ஒப்பிடும்போது, கிறிஸ்தவ விசுவாசம் தனித்தன்மைவாய்ந்தது, ஒப்பற்றது, ஈடுயிணையற்றது. இதைப் புரிந்துகொள்ள நீங்கள் உங்கள் கற்பனைத் திறனைக் கொஞ்சம் பயன்படுத்த வேண்டும். கி.பி 240. நீங்கள் சிரியாவில் டுரா ஐரோப்பாஸ் என்ற நகரத்தைச் சுற்றிப்பார்க்கப் போயிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இது யூப்ரடீஸ் நதிக்கரையில் இருக்கிற உரோமப் படைகளின் கோட்டை. நீங்கள் டூரா ஐரோப்பாஸ் நகரத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்துபோய்க்கொண்டிருக்கிறீர்கள். அங்கு நிறைய கட்டிடங்கள் இருக்கின்றன. அந்தத் தெருவில் மித்ராஸ் என்ற ஒரு தேவதையின் கோவில், அதற்கருகே கடல் தெய்வங்களின் கோவில், அதற்கடுத்து யூதர்களின் ஜெபஆலயம், அடோனிஸ் தெய்வத்தின் கோவில், டைக்கி கோவில், ஜீயஸ் குரியோஸ் கோவில், கிறிஸ்தவர்களின் வீட்டுச் சபை இருக்கின்றன. இவையனைத்தும் ஒரே தெருவில் இருக்கின்றன. கிறிஸ்தவர்களின் வீட்டுச் சபையை அவ்வளவு எளிதில் அடையாளம் காண முடியாது. ஏனென்றால், அது மிகச் சாதாரணமான ஒரு வீடு. பார்த்ததும் அது கிறிஸ்தவர்களின் ஆலயம் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், அது ஒரு பெரிய கட்டிடம் இல்லை. அன்று கிறிஸ்தவர்கள் வீடுகளில்தான் கூடினார்கள். நீங்கள் அந்த நகரத்தைச் சுற்றிப்பார்க்கிறீர்கள். உள்ளூர் தெய்வங்களின் கோவில்களும் ஏராளம் இருக்கின்றன. ஜீயஸ் தேயோஸ், ஜீயஸ் மகுஸ்டோஸ், அட்டகார்ட்டஸ் என்ற சிரியா நாட்டுத் தேவதைகளுக்கும் சிறிய கோவில்கள் இருக்கின்றன. ஆர்ட்டெமிஸ் என்ற தியான தேவதைக்குக் கோவில், ஜுபிடர் டோலோகோரேஸ் என்ற சிரியாவின் பாகால் தெய்வத்தின் கோயில்., உரோம இராணுவத் தலைமையகத்துக்கு அருகே இராணுவக் கோவில் என எங்கு பார்த்தாலும் கோயில்கள் இருக்கின்றன.
ஆம், உரோமப் பேரரசில் மதங்களுக்குப் பஞ்சமே கிடையாது. தொல்பொருள் ஆராய்ச்சியிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் நாம் இவைகளை அறிய முடிகிறது. இதுதான் உரோமப் பேரரசின் எல்லா நகரங்களின் நிலைமையாகும். எல்லா வகையான மக்களும் பின்பற்றுவதற்கு எல்லாவிதமான மதங்களும் இருந்தன. தடுக்கி விழுந்தால் மதம். உரோமப் பேரரசில் மதங்களுக்கும், தெய்வங்களுக்கும், கோயில்களுக்கும் பஞ்சமே இல்லை. கணக்கிலடங்காத தெய்வங்கள், எண்ணமுடியாத மதங்கள், எண்ணற்ற கோயில்கள்.
இத்தனை மதங்கள் இருந்தபோதும் எதுவும் உருப்படியான மதம் இல்லை என்ற எண்ணமும், உணர்வும் மக்களுக்குள் ஆழமாக வேரூன்றியிருந்தது. இதைப்பற்றி Kenneth Scott Latterette, “கிறிஸ்தவம் வருவதற்கு கொஞ்சக் காலத்திற்குமுன்பே கிரேக்க, உரோம நாட்டுப் பாரம்பரிய மதங்களும், குடும்ப வழிபாடுகளும் மெல்ல தங்கள் செல்வாக்கை இழக்கத் தொடங்கின. அன்றைய மதங்கள் பெரும்பாலான மக்கள் தேடியதைத் தரவில்லை; அவர்களுடைய தேவைகளைத் திருப்திப்படுத்தவில்லை. அந்த மதங்கள் தங்கள் பிடிப்பை இழந்துகொண்டிருந்தன. தாங்கள் சார்ந்திருந்த மதங்களால் தங்கள் உள்ளான தேவையைத் திருப்திசெய்யமுடியவில்லை என்று மக்கள் உணர ஆரம்பித்தார்கள். மதங்கள் வேலைசெய்யவில்லை,” என்று கூறுகிறார்.
இன்னொரு மேற்கோளை நான் உங்களுக்குத் தருகிறேன். “ஒழுக்கம்சார்ந்த இயக்கங்களும், சமயதாகமும், செயல்பாடுகளும் அதிகமாக இருந்த ஒரு காலகட்டத்தில் கிறிஸ்தவம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்தது. அந்தக் காலகட்டத்தில் மக்கள் தங்களுடைய மதங்களில் விரக்தியடைந்திருந்தார்கள். ஒழுக்கம்சார்ந்த மதத்தை அவர்கள் எதிர்பார்த்தார்கள்; புதிதான ஒன்றை, மேலான ஒன்றை அவர்கள் எதிர்பார்த்தார்கள். உரோமப் பேரரசில் பல்வேறு மதங்கள் இருந்தபோதும், அவைகளெல்லாம் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருந்தன. அப்போது இருந்த மதங்களிலேயே கிறிஸ்தவத்தோடு கொஞ்சம் தொடர்புடைய மதம் யூதமதம்தான்,” என்று Latourette கூறுகிறார்.
அன்று உரோமப் பேரரசில் ஏராளமான மதங்கள் இருந்தபோதும், அவைகள் பல தெய்வங்களை ஆராதித்தன. ஒரே தேவனை ஆராதிக்கவில்லை. மேலும் அந்த மதங்களில் உயர்ந்த ஒழுக்கமும் இல்லை. கிறிஸ்தவம் மிகவும் அறிவார்ந்த, கருத்தாழமிக்க மதம். ஆனால் அது ஒரு தத்துவ இயக்கம் அல்ல.
அஞ்ஞானிகள் கிறிஸ்தவத்தைப்பற்றிக் கேள்விப்பட்டு, கிறிஸ்தவர்களின் சபைகளுக்கு வர ஆரம்பித்தார்கள். இதைக்குறித்து இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் விவரமாகப் பேசுவேன். ஆம், அஞ்ஞானிகள் சபைக்கு, இயேசுவின் சீடர்களின் சமுதாயத்துக்கு, வந்தார்கள். வேடிக்கை பார்ப்பதற்கு அல்லது கிறிஸ்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் அவர்கள் கிறிஸ்தவர்களின் கூட்டத்திற்கு வந்தார்கள். ஆனால் கூட்டம் முடியும்வரை கூட்டத்தில் இருந்தார்கள். கூட்டம் முடிந்தபிறகும் இருந்தார்கள். தாங்கள் தேடியது இயேசுவின் சீடர்களிடம் இருந்ததை அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் இயேசுவைப்பற்றி, குறிப்பாக அவருடைய வாழ்க்கை, அற்புதங்கள், போதனைகள், மரணம், உயிர்த்தெழுதல், ஆகியவைகளைப்பற்றிக் கேள்விப்பட்டார்கள். மேலும், அவர்கள் நித்திய ஜீவன் என்ற வாக்குறுதியைப்பற்றியும், நித்திய தீர்ப்பு, நித்திய ஆக்கினை ஆகியவைகளைப்பற்றியும் கேள்விப்பட்டார்கள். நித்திய ஆக்கினையைப்பற்றி கேள்விப்பட்டதோடு மட்டுமின்றி அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வழியைப்பற்றியும் அவர்கள் கேள்விப்பட்டார்கள். மேலும் அவர்கள் கிறிஸ்தவர்களின் கூட்டங்களில் இரண்டு முக்கியமான காரியங்களைக் கவனித்தார்கள். ஒன்று ஞானஸ்நானம், இன்னொன்று கர்த்தருடைய பந்தி.
அன்று பரவியிருந்த போட்டி மதங்களைப்பற்றிச் சொல்வதானால் ஒன்று மித்ராவியம். இது மித்ரா என்ற இரானிய சூரியக் கடவுளின் ஆராதனைமுறையாகும். இது கிரேக்க உரோமர்களின் கண்டுபிடிப்பு. இந்தக் கடவுளுக்குக் கிரகங்கள்மேலும், நட்சத்திரங்கள்மேலும், அதிகாரம் இருந்ததாக அவர்கள் நினைத்தார்கள், நம்பினார்கள். எனவே இந்த சாமி சோதிட சாமி. மித்ராவியத்தின் சோதிடத்தைக் கிரேக்கப் புதிர் மதங்களோடு கலந்து புதுவகை மதத்தை உருவாக்கினார்கள். மித்ராவியத்தில் ஏழு நிலைகள் இருந்தன. அதாவது மித்ராவியத்தில் சேர்பவன்காகம், மந்திரம், சிப்பாய், சிங்கம், பாரசீகம், சூரிய ஓட்டம், அப்பா என்ற ஏழு நிலைகளின்வழியாகக் கடந்து போக வேண்டும். அப்பா என்ற நிலைதான் மிக உயர்ந்த நிலை. இந்த நிலையை அடைந்தவர்கள் மித்ராவியத்தின் தலைவர்களாக மாறினார்கள். இந்த மதத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு பரீட்சைகளில் தேர்ச்சிபெற்றபின்தான் அடுத்த நிலைக்குப் போவார்கள். ஒவ்வொரு நிலையிலும் குறிப்பிட்ட உறுதிமொழி எடுக்க வேண்டும்.
கிறிஸ்தவர்களிடம் இருந்த இரண்டு பழக்கங்கள் அவர்களிடமும் இருந்தன. ஒன்று கிறிஸ்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டதுபோல அவர்களும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டார்கள். கிறிஸ்தவர்கள் உயர்ந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்ததுபோல, இவர்களும் உயர்ந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார்கள். குறிப்பாக சொல் தவறக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார்கள். அவர்களிடம், பிற மாதங்களில் இருந்ததுபோல், ஆசாரியர்கள்முறைமை, பூசாரிகள்முறைமை, கிடையாது. கிறிஸ்தவத்தில் இருந்த உயர்ந்த ஒழுக்கத்தை இந்த மித்ராவியம் தன் உறுப்பினர்களிடம் கோரியது.
அவர்களுக்கு ஒரு தெய்வம் உண்டு. அந்தத் தெய்வத்தின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகள் நடந்ததாக அவர்கள் நம்பினார்கள். ஆனால், அந்த நிகழ்வுகளெல்லாம் நம் ஆண்டவராகிய இயேசுவின் வாழ்க்கையில் நடந்ததுபோன்ற நிகழ்வுகள் இல்லை. மாறாக, அவர்களுடைய கதைகள் நட்சத்திரங்களோடும், கிரகங்களோடும் சம்பந்தப்பட்டவை. அவைகள் வரலாற்று நிகழ்வுகளோடு தொடர்புடையவை அல்ல. மேலும் மித்ராவியத்தைப் பின்பற்றியவர்கள் வேறு தெய்வங்களையும் வழிபடலாம், வழிபட்டார்கள். அதாவது அந்த மார்கத்தைப் பின்பற்றியவர்கள் வேறு எந்த மதத்தை வேண்டுமானாலும், எத்தனை மதங்களை வேண்டுமானாலும், பின்பற்றலாம். அதற்குத் தடை கிடையாது. இது கிறிஸ்தவத்துக்கு முற்றிலும் முரணானது. கிறிஸ்தவன் கிறிஸ்துவைத்தவிர வேறு யாரையும் விசுவாசிக்கக் கூடாது.
மேலும் பெண்கள் அந்த மதத்தின் உறுப்பினர்களாக அனுமதிக்கப்படவில்லை. எனவே அந்த மதத்தில் கொஞ்சப்பேர் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் தங்கள் சமுதாயத்தில் பெண்களை ஏற்றுக்கொள்ளவில்லை, அனுமதிக்கவில்லை. அங்கு பெண்களுக்கு இடம் கிடையாது. மிக உயர்ந்த பதவியில் இருந்த வெகு சிலர், மிகுந்த செல்வாக்குடைய வெகு சிலர், இந்த மதத்தைப் பின்பற்றினார்கள் என்பது உண்மை.
உரோமப் பேரரசில் மக்கள் இன்னொரு மதத்தையும் பின்பற்றினார்கள். அந்த மதத்தைப் பேரரசர் வழிபாடு என்று சொல்லலாம். உரோமப் பேரரசர் எவ்வளவு அதிகாரம் உடையவர் என்றால் மக்கள் அவரைத் தெய்வத்துக்கு இணையாகக் கருதினார்கள். தெய்வங்களுக்குக் கொடுக்கக்கூடிய கனத்தைப் பேரரசருக்குக் கொடுப்பதுதான் அவருக்குச் செய்யும் உயர்ந்த மரியாதை என்று மக்கள் நினைத்தார்கள். பேரரசரின் அதிகாரமும், வல்லமையும் இயற்கைக்கு அப்பாற்பட்டது என்று மக்கள் நம்பினார்கள். இதன் பொருள், பேரரசர்கள் அற்புதங்கள் செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள் என்பதல்ல. பொதுவாக மக்கள் பேரரசரைநோக்கி ஜெபிக்கவில்லை அல்லது அவருக்குப் பலி செலுத்தவில்லை. ஆனால், பேரரசர் பெயரில் பலி செலுத்தினார்கள். எனவே பேரரசருக்கு நன்றி சொல்லும் விதத்தில் அல்லது எதிர்காலத்தில் அவருடைய உபகாரத்தை நாடி, மக்கள் பேரரசர்களுக்குக் கோயில்கள் கட்டினார்கள். அவர்களுக்குச் சிலைகளை நிறுத்தினார்கள். பேரரசர்கள் தெய்வீகப் பண்புடையவர்கள் என்பதுபோல் மக்கள் பேசினார்கள். அவர்களைக் கனப்படுத்தும்வகையில் பலிகள் செலுத்தினார்கள். அவர்களுக்குத் தெய்வீகப் பட்டப் பெயர்கள் சூட்டினார்கள். பொதுவாக, அரசாளும் பேரரசர் தனக்கு முந்தைய பேரரசரைத் தெய்வமாக அறிவிக்குமாறு செனட்டிடம் பரிந்துரைத்தார். எனினும் கலிகுலா, நீரோ, டொமிஷின், கமோடஸ் போன்ற பேரரசர்கள் தங்கள் காலத்திலேயே மக்கள் தங்களுக்குத் தெய்வீகப் பட்டப்பெயர்களைத் தர வேண்டும் என்றும், அந்தப் பெயர்களால் தங்களை அழைக்க வேண்டும் என்றும் கோரினார்கள். ஆனால், பெரும்பாலும் பேரரசர் இறந்தபின்புதான் இப்படி நடந்தது. பல நேரங்களில் உரோமப் பேரரசரிடமிருந்து உபகாரத்தை எதிர்பாத்த நகரத்தார் உயிரோடிருந்த பேரரசருக்குக் கோவில் கட்டினார்கள்.
பெரும்பாலும் சிறிய ஆசியாவில்தான் இப்படி நடந்தது. சிறிய ஆசியாவில்தான் கிறிஸ்தவம் மிகவும் பலமாக இருந்தது என்பதையும் மறக்க வேண்டாம். அங்கு அப்போது மக்கள் மிகவும் செழிப்பாக இருந்தார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் அரசருக்குத் தங்கள் நன்றியைக் காண்பிக்கும் வகையில் அவருக்குக் கோவில்கள் கட்டினார்கள். குறிப்பாக எபேசு நகரில் ஜூலியஸ், நீரோ, அகுஸ்துஸ், பிளவின், ஹாட்ரியன் என்ற பல பேரரசர்களுக்குக் கோவில்கள் இருந்தன. அவர்கள் பேரரசரை ஒரு தெய்வம்போல வழிபட்டார்கள்.
மித்ராவியம், பேரரசர் வழிபாடு ஆகிய இரண்டையும்பற்றி நாம் கொஞ்சம் பார்த்தோம். அஞ்ஞானவழிபாடுகளைப்பற்றியும் நாம் கொஞ்சம் பார்ப்போம். உரோமப் பேரரசில் பல்வேறு மதங்களும், பல்வேறு வழிபாட்டுமுறைகளும் இருந்தபோதும், பாரம்பரிய அஞஞானமே கிறிஸ்தவத்திற்கு மிகப் பெரிய எதிரியாக இருந்தது. அஞ்ஞானிகள் பல தெய்வங்களை வழிபட்டார்கள். நூற்றுக்கணக்கான தெய்வங்கள். அந்தத் தெய்வங்களுக்கு தெய்வீக வல்லமை இருப்பதாக அஞ்ஞானிகள் நம்பினார்கள். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிகள் செலுத்தினார்கள், கோவில்கள் கட்டினார்கள், தங்கள் தெய்வங்களுக்கு சிலைகள் செய்து அவைகளைக் கோவில்களில் வைத்தார்கள், அவைகளை வழிபட்டார்கள், திருவிழாக்கள் கொண்டாடினார்கள், பின்னாட்களில் அஞ்ஞான மதங்களுக்கும் பிற தத்துவ சித்தாந்தங்களுக்கு இடையே ஒருவிதமான பிணைப்பு ஏற்பட்டது.
எத்தனை மதங்கள் இருந்தபோதும், எத்தனை வழிபாட்டுமுறைகள் இருந்தபோதும், எல்லாத் தடைகளையும் தாண்டி கிறிஸ்தவம் தொடர்ந்து வேகமாக வளர்ந்தது. உரோமப் பேரரசில் இருந்த மக்களைக் கிறிஸ்தவம் கவர்ந்திழுத்தது. பிற மதங்கள் மக்களுக்குக் கொடுக்கமுடியாத, ஆனால் மக்கள் தேடிக்கொண்டிருந்த, ஒன்றை கிறிஸ்தவம் அவர்களுக்குக் கொடுத்தது. எத்தனை மதங்கள் இருப்பினும், அவை கிறிஸ்தவத்தைப்போன்றவை இல்லை. கிறிஸ்தவத்துக்கு ஏறக்குறைய ஒத்தது என்று சொல்ல வேண்டுமானால் அது யூதமதம்தான். ஆனால், யூதமதமும் பிறரை யூதர்களாக்க வேண்டும் என்று விரும்பவில்லை. அவர்கள் ஒதுங்கி வாழ்ந்தார்கள். பிறரைத் தங்களோடு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மனப்பாங்கு இல்லாமல் தான் உண்டு தன் மதம் உண்டு என்று வாழ்ந்தார்கள். இது கிறிஸ்தவத்துக்கு முரணான போக்கு. கிறிஸ்தவம் தன் நற்செய்தியைப் பிறருக்கு அறிவித்து அவர்களையும் தன் விசுவாசத்துக்குள் கொண்டுவர விரும்பியது.
எனவே, உரோமப் பேரரசில் மக்களைக் கிறிஸ்தவத்தின்பால் ஈர்க்கச்செய்த மூன்றாவது காரணம் அஞ்ஞான மதங்கள்.
மக்களைக் கிறிஸ்தவத்தின்பால் கவர்ந்திழுத்த நான்காவது காரணத்தை நாம் இப்போது பார்ப்போம். தனிப்பட்ட கிறிஸ்தவர்களின், விசுவாசிகளின், சீடர்களின், நேர்மையும் நாணயமும் குணமும் இன்னொரு முக்கியமான காரணம். உங்களையும் என்னையும்போன்ற சாதாரணமான கிறிஸ்தவர்களின் நற்குணமும் நேர்மையும் மக்களைக் கிறிஸ்துவிடம் கவர்ந்திழுத்தது. கிறிஸ்தவம் பரவுவதில் இது பெரும் பங்கு வகித்தது. Latouretteஇன் புத்தகத்திலிருந்து நான் ஒரு மேற்கோள் தருகிறேன். கிறிஸ்தவத்தைக் கடுமையாக விமரிசித்த இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த செல்சஸ் என்று ஒரு கிரேக்க தத்துவஞானியைப்பற்றி அவர் தன் புத்தகத்தில் எழுதுகிறார். இவர் கிறிஸ்தவ இறையியலாளர் ஒரிஜெனோடு கிறிஸ்தவத்தைக்குறித்து வாக்குவாதம்செய்தார். “கிறிஸ்தவர்கள் குழந்தைகளையும் அறிவற்ற பெண்களையும் சந்தித்து கிறிஸ்தவத்தைப் போதிக்கிறார்கள் என்றும், தோல்தொழிலாளர்களையும், கம்பளித் தொழிலாளர்களையும், சலவைத்தொழிலாளர்களையும், படிப்பறிவற்றவர்களையும் கிறிஸ்தவர்களாக்குகிறார்கள் என்றும் செல்சஸ் கிறிஸ்தவத்தைப் பகிரங்கமாகச் சாடும்போது ஒரிஜன் அதை மறுக்கவில்லை,” என்று கூறுகிறார். அவர் என்ன சொல்லுகிறார் என்று புரிகிறதா? கிறிஸ்தவத்தைக் கடுமையாக விமரிசிக்கும் செல்சஸ் என்ன சொல்லுகிறார்? “கிறிஸ்தவர்களாகிய நீங்கள் தோல் தொழிற்சாலைகளிலும், கம்பளித் தொழிற்சாலைகளிலும் வேலை செய்கிற படிப்பறிவற்ற சாதாரணமான வேலையாட்களையும், துணிதுவைக்கிற அப்பாவிகளையும், ஒன்றும் தெரியாத குழந்தைகளையும், சாமான்யமான பெண்களையும் தேடிப்போய், அவர்களை நீங்கள் கிறிஸ்தவர்களாக்குகிறீர்கள். இப்படித்தான் நீங்கள் உங்கள் மதத்தைப் பரப்புகிறீர்கள்,” என்று சொல்லுகிறார். ஒரிஜன் இதை மறுக்கவில்லை. அவர் அதை ஒப்புக்கொள்கிறார். இதுதான் நான் சொல்ல விரும்பும் காரியம். சாதாரணமான எளிய கிறிஸ்தவர்களின் சாட்சி இந்த மக்கள்மேல் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒருபுறம் அவர்கள் சொன்ன நற்செய்தி . இன்னொருபுறம் நற்செய்தியை அறிவித்த எளிய கிறிஸ்தவர்களின் உயர்ந்த வாழ்க்கைத் தரம்.
அடுத்த பாகத்தில் ஆதிச் சபைக்கு நேர்ந்த சித்திரவதையைப்பற்றிப் பேசுவோம். கிறிஸ்தவர்கள் உயர்ந்த ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்ததால் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால், அதே நேரத்தில் உரோமப் பேரரசில் வாழந்த அநேக மக்கள் கிறிஸ்தவர்களின் உயர்ந்த ஒழுக்கமான வாழ்க்கையைப் பெரிதும் மதித்தார்கள். அவர்களுடைய உயர்ந்த ஒழுக்கமான வாழ்க்கையும், பாரபட்சமற்ற அவர்களுடைய தானதருமங்களும் அநேக அவிசுவாசிகளின் இருதயத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கேலென் என்ற பிரபலமான ஒரு கிரேக்க மருத்துவர் கிறிஸ்தவர்களின் தானதருமங்களைப்பற்றித் தன் எழுத்துக்களில் குறிப்பிடுகிறார். அவர் அன்றைய கிறிஸ்தவர்களைப்பற்றி, “கிறிஸ்தவ ஆண்கள் மட்டும் அல்ல, கிறிஸ்தவப் பெண்களும் திருமணத்துக்குமுன் சேர்ந்து வாழ்வதில்லை. அவர்கள் உண்பதிலும் குடிப்பதிலும் சுய கட்டுப்பாடும், சுய-ஒழுக்கமும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நீதி, நேர்மை, நியாயம் ஆகியவைகளில் உண்மையான தத்துவத்தைவிட கடுகளவும் குறையாத மிக உயர்ந்த தரத்தை எட்டியிருக்கிறார்கள்,” என்று கூறுகிறார்.
கிறிஸ்தவனாக இல்லாத ஒரு மருத்துவர் கிறிஸ்தவர்களைப்பற்றி இவ்வளவு உயர்வாகப் பேசுகிறார் என்றால், அவர்களுடைய ஒழுக்கம் எவ்வளவு உயர்வாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர்கள், மற்றவர் செய்ததைப்போல், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழவில்லை. அவர்கள், மற்றவர்களைப்போல், புசித்துக் குடித்து வெறிக்கவில்லை. எல்லாவற்றிலும் சுய கட்டுப்பாடோடு வாழ்ந்தார்கள். நீதி நியாயங்களுக்காகப் பாடுபட்டார்கள். உலகம் இந்த வித்தியாசத்தைப் பார்த்து வியந்தது. இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில் ஊர்ஊராகச் சென்று நற்செய்தி அறிவித்த நற்செய்தியாளர்கள் பலர் இருந்தார்கள். ஆனால், இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சாமான்ய விசுவாசிகள் யாருடைய உந்துதலுமின்றி சர்வசாதாரணமாக நற்செய்தி அறிவித்தார்கள்.
இரண்டாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் இப்படிப்பட்ட தைரியமான, ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்த பலரைப்பற்றிய எடுத்துக்காட்டுகள் வரலாற்றில் உள்ளன. அவர்களுடைய சமகாலத்தில் வாழ்ந்த செல்வாக்குடைய சிலர் கிறிஸ்தவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பார்த்து, அவர்களை விரும்பாவிட்டாலும், முறுமுறுப்போடு மதித்தார்கள். கிறிஸ்தவர்கள் தேவனை மகிமைப்படுத்தி வாழ்வதையும், தைரியமாக மரணத்தை எதிர்கொள்வதையும், பார்த்து அவர்கள் பிரமித்தார்கள். எல்லாக் கிறிஸ்தவர்களும் இப்படித் தைரியமாக மரணத்தைச் சந்தித்தார்கள் என்றோ, உயர்ந்த ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால், பெரும்பாலும் எல்லாரும் இப்படி வாழ்ந்தார்கள். எனவே கிறிஸ்தவர்களின் தைரியத்தையும், ஒழுக்கத்தையும், நேர்மையையும் அஞ்ஞானிகள் பார்க்கத் தவறவில்லை. இவ்வளவு நல்லவர்கள் கொடுமையாகக் கொல்லப்படுவதும், கேவலமாக நடத்தப்படுவதும் தவறு என்று அஞ்ஞானிகள் புரிந்துகொண்டார்கள்.
இரண்டாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் ஆப்பிரிக்காவின் கார்த்தேஜ் என்ற நகரத்தில் வாழ்ந்த ஒரு சபைத் தலைவர் தெர்த்துல்லியன் சொன்ன வார்த்தைகளை நான் இங்கு மேற்கோள் காட்டுகிறேன். “கிறிஸ்தவர்களின் இரத்தம் விதை. இதுவே மக்களை எங்கள் பள்ளிக்கு இழுத்துக்கொண்டு வரும் தூண்டில். நீங்கள் எங்களை நசுக்கி அழிக்கும்போதெல்லாம் நாங்கள் பெருகுகிறோம்,” என்று சொன்னார்.
ஆம், கிறிஸ்தவர்கள் புதைக்கப்படவில்லை. அவர்கள் விதைக்கப்பட்டார்கள். இது சற்று உயர்வுநவிற்சி அணிபோல் தோன்றலாம். திறந்தவெளி அரங்கங்களிலோ, விளையாட்டுத் திடல்களிலோ கிறிஸ்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டதைப் பார்த்தவுடன் அஞ்ஞானிகள் ஆட்டு மந்தைகளைப்போல் சபைக்கு வந்துவிடவில்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் மிகக் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டபோது அவர்கள் மரணத்தைத் தைரியமாக எதிர்கொண்ட விதம் அஞ்ஞானிகள்மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டு நூற்றாண்டுகள் கிறிஸ்தவர்கள் இந்தக் கொடுமையை அனுபவித்தார்கள். இதைக்குறித்து அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
சரி, இப்போது நாம் ஐந்தாவது காரணத்தைப் பார்ப்போம். உரோமப் பேரரசில் மக்களைக் கிறிஸ்தவத்தின்பால் ஈர்த்தது எது என்ற கேள்வியை நான் மறக்கவில்லை.
கிறிஸ்தவ சமுதாயத்தின், அதாவது சபைக் கூட்டங்களின், தன்மை ஐந்தாவது காரணம். கிறிஸ்தவர்களிடமும், கிறிஸ்தவர்கள் கூடிவந்த விதத்திலும் ஏதோவொரு கவர்ச்சி இருந்தது. அது காலப்போக்கில் மெல்ல மெல்ல மக்களைக் கிறிஸ்தவத்திடம் கவர்ந்திழுத்தது. சபை வரலாறு முழுவதும் இது உண்மை. ஆதிச் சபையிலும் இது உண்மை. தேவன் உரோமப் பேரரசெங்கும் நற்செய்தியைப் பரப்புவதற்கு இயேசு கிறிஸ்துவின் சீடர்களாலான ஒழுங்கமைக்கப்பட்ட சமூகங்களையே அடிப்படையில் பயன்படுத்தினார்.
இந்த நாட்களில் நான் இந்தக் காரியத்தைக்குறித்து அடிக்கடி சிந்திக்கிறேன். கிறிஸ்தவர்களாகிய நாம் 2000 ஆண்டுகளாகக் கூடிவருகிறேம். வாரந்தோறும் எத்தனைவிதமான கூட்டங்கள்! கூடிவரும்போது என்ன செய்கிறோம்? நாம் ஜெபிக்கிறோம், பாடுகிறோம், ஆராதிக்கிறோம், தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறோம், கர்த்தருடைய பந்தியை அனுசரிக்கிறோம், அதில் நாம் பங்குபெறுகிறோம், புதியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறோம். விசுவாசிகளாகிய நாம் ஒன்றாகக் கூடிவருவதையும், கூடியிருப்பதையும் விரும்புகிறோம், அனுபவிக்கிறோம். கிறிஸ்தவர்கள் இதை 2000 வருடங்களாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். அவரவர் தத்தம் போதனைகளுக்கும், உபதேசங்களுக்கும் ஏற்றாற்போல் நான் சொன்ன இந்தக் காரியங்களில் சிலவற்றை மிகவும் வலியுறுத்துவார்கள், சிலவற்றை அவ்வளவு முக்கியமாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். சிலர் ஆராதனையையும், வேறு சிலர் ஜெபத்தையும், இன்னும் சிலர் பிரசங்கிப்பதையும், மேலும் சிலர் கர்த்தருடைய பந்தியையும், இன்னும் சிலர் கூட்டத்தின் ஒழுங்கையும், சிலர் சடங்குகளையும் வலியுறுத்துகிறார்கள். யார் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சரி, கிறிஸ்தவர்கள் 2000 ஆண்டுகளாகக் கூடிவருகிறார்கள்.
ஒரு காரியத்தை நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன். முதல் 150 ஆண்டுகள் சபைகளுக்குச் சொந்தக் கட்டிடம் கிடையாது. அவர்கள் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்டபிறகு, கட்டிடம் கட்ட வசதியிருந்தவர்கள் கட்டத் தொடங்கினார்கள். அதுவரை அவர்கள் வீடுகளில்தான் கூடினார்கள். இருப்பினும் அந்த வீட்டுச் சபைகள் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின என்பது மறுக்க முடியாத உண்மை. கான்ஸ்டான்டீன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வதற்குமுன்னும் பின்னும் உண்மையான கிறிஸ்தவச் சமுதாயங்கள் இதை உத்தமமாகச் செய்தன என்பது உண்மை. கிறிஸ்தவர்கள் நற்செய்தி அறிவித்தார்கள், சபைகளை நிறுவினார்கள், மக்களைச் சீடர்களாக்கினார்கள், கிறிஸ்தவ சமுதாயங்களை உருவாக்கினார்கள். மக்கள் கிறிஸ்தவத்தின்பால் கவர்ந்திழுக்கப்பட்டார்கள், கிறிஸ்தவர்களானார்கள், கிறிஸ்துவின் சீடர்களானார்கள்.
சபைகள் பல்வேறு வழிகளில் நிறுவப்பட்டன. சில நேரங்களில் வெளியே போய் நற்செய்தி அறிவித்து, மக்களை ஆதாயப்படுத்தி, சபைகளை நிறுவுவதற்காக சபைத் தலைவர்களும், மூப்பர்களும், உதவிக்காரர்களும் அனுப்பப்பட்டார்கள். எடுத்துக்காட்டாக மூன்றாம் நூற்றாண்டில், சுமார் 250இல், நற்செய்தி அறிவிக்கவும், சபைகளை நிறுவவும் உரோம கொர்நேலியுஸ் ஏழு சபைத் தலைவர்களை பிரான்சு நாட்டுக்கு அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது.
வேறு சில நேரங்களில் சாமான்யர்கள் நற்செய்தி அறிவித்ததால் நிறையப்பேர் கிறிஸ்தவர்களானார்கள், சபைகள் எழும்பின. வெளியேயிருந்து வந்து யாரும் இதைச் செய்யவில்லை. தானாகவே சபைகள் எழும்பின. அதன்பின் அவர்கள் அருகிலிருந்த சபைகளை அணுகி தங்களை வழிநடத்தத் தங்களுக்கு ஒரு மேய்ப்பன் தேவை என்று சொல்ல, அதற்குப்பிறகு மேய்ப்பன் அங்கு போய் அவர்களை வழிநடத்தினார்.
பொதுவாக சபை வரலாற்றைப்பற்றிப் பேசும்போது நாம் சபைப் பிதாக்களையும், சபையின் தலைவர்களைப்பற்றிப் பேசுவோம். ஆனால், சபையிலிருந்த சாதாரண விசுவாசிகளைப்பற்றி நாம் பேசுவதில்லை. இதற்குக் காரணம் ஒரு சிக்கல்: இவர்களைப்பற்றி நமக்கு அதிகமாகத் தெரியாது. அவர்களுடைய பெயர் தெரியாது; முகம் தெரியாது. ஆனால் பெயர் தெரியாத, முகம் தெரியாத இந்தக் கிறிஸ்தவர்களின் பங்களிப்பை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் அவர்களுடைய பங்களிப்பு அதிகம். அவர்கள் கிறிஸ்துவுக்கு உண்மையும், உத்தமுமாக வாழ்ந்தார்கள். அவர்கள் தனிப்பட்ட விதத்தில் தங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும், அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கும் நற்செய்தி அறிவித்தார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. பிரபலமான சபைத் தலைவர்களும், சபைப் பிதாக்களும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்காகவும், சபைகளை விரிவாக்குவதற்காகவும், சபைகளின் சாட்சிக்காகவும் எவ்வளவு பாடுபட்டார்களோ, அதே அளவுக்கு சாதாரண விசுவாசிகளும் பாடுபட்டார்கள். இதைத் தேவன் அறிவார்; தேவன் அவர்களுடைய பங்களிப்பை அங்கீகரிக்கிறார் என்று நான் உறுதியாக விசுவாசிக்கிறேன்.
எல்லாச் சபைகளும் நற்செய்தி அறிவிப்பதை தங்களுடைய மிக முக்கியமான இலக்காக வைத்திருந்தன. எகிப்தில் இருந்த ஒரு சபையில் சபையார் ஜெபித்த ஒரு ஜெபத்தை நான் உங்களுக்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். இது எகிப்தில் இருந்த ஆரம்ப காலக் கிறிஸ்தவர்கள் சபையில் சேர்ந்து ஜெபித்த ஜெபம். “இருளில் இருப்பவர்களை ஒளியூட்டும். வீழ்ந்தவர்களைத் தூக்கிவிடும். பலவீனமானவர்களைப் பலப்படுத்தும். நோயுற்றோரைக் குணமாக்கும். நல்ல ஆண்டவரே, எல்லாரையும் இரட்சிப்பின் வழியிலும், உம் பரிசுத்த மந்தைக்குநேராகவும் வழிநடத்தும்.” இந்த ஜெபம் அவர்களுடைய வாழ்க்கையிலும், அவர்களைச் சுற்றியிருந்தவர்களின் வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இயேசு கிறிஸ்து உலகத்தின் இரட்சகர் என்று அவர்கள் புரிந்துகொண்டதால், அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு மக்களைத் தங்கள் விசுவாசத்துக்குக் கொண்டுவர விரும்பினார்கள், உழைத்தார்கள். எப்படிப் புதிய விசுவாசிகள் வந்தார்கள்? எப்படிப் புதியவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்தைப்பற்றிக் கேள்விப்பட்டார்கள்? சிலர் சபையிலிருந்த தங்கள் நண்பர்கள்மூலம் கேள்விப்பட்டார்கள். மக்களுடைய வாழ்க்கையில் நடந்த அற்புதங்களைப் பார்த்து, மக்கள் நோய்களிலிருந்து குணமடைந்ததைப் பார்த்து அவர்கள் தேவனை அறிந்துகொண்டார்கள். அசுத்த ஆவிகளின் பிடியிலிருந்து மக்கள் விடுதலை பெற்றார்கள். கிறிஸ்தவர்கள் கைதுசெய்யப்படுவதை அல்லது சித்திரவதைசெய்யப்படுவதை அல்லது படுகொலைசெய்யப்படுவதை மக்கள் பார்த்தார்கள். கிறிஸ்தவர்களின் வீடுகளில் வேலைசெய்த வேலைக்காரர்கள் விசுவாசத்தைக்குறித்து கேள்விப்பட்டார்கள். மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவர்கள் உரோமப் பேரரசு முழுவதும் அஞ்ஞான கோவில்களுக்கு அருகில் முறையான சபைக் கட்டிடங்களைக் கட்டத் தொடங்கினார்கள்.
சிறிய ஆசியாவில் போந்துஸ் என்ற பகுதியில் நியோ செசாரியா என்ற ஒரு நகரம். அங்கு Gregory Thaumaturgos என்ற ஒரு கிறிஸ்தவர் இருந்தார். Thamaturgos என்றால் அற்புதங்கள் செய்பவர் என்று பொருள். அவர் 240இல் தன் சொந்த ஊருக்கு வந்தபோது அந்த நகரத்தில் மொத்தம் 17 கிறிஸ்தவர்கள் மட்டுமே இருந்தார்கள். 30 வருடங்கள் கழித்து 270இல் அவர் மரித்தபோது அந்த நகரத்தில் 17பேர் மட்டும்தான் இரட்சிக்கப்படவில்லை. அப்படியானால், நற்செய்தி அறிவிப்பதில் அவர்கள் எவ்வளவு ஆர்வமாக இருந்திருப்பார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.
“கிரெகோரி தன் குறிக்கோளை அடைவதற்கு ஏற்றார்போல் தன் வழிகளை மாற்றிக்கொண்டார். அஞ்ஞானிகளின் அற்புதங்களைக் கிறிஸ்தவ அற்புதங்களோடு ஒப்பிட்டு, அவைகளின் அபத்தத்தை அம்பலப்படுத்தினார். அஞ்ஞான மதங்களின் பூசாரிகளின் மோசடி வேலைகளை அவர் தோலுரித்தார். ஒருவன் கிறிஸ்தவனாவதற்குமுன் வேறு தெய்வங்களுக்குத் திருவிழா கொண்டாடினான். அவன் கிறிஸ்தவனானபிறகு, அதற்கு மாற்றாக இரத்தசாட்சிகளைக் கனப்படுத்தும் வகையில் அவர்களுடைய நினைவாகப் பண்டிகை கொண்டாடுமாறு அவர் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். அவர்கள் பழைய பழக்கத்திலிருந்து புதிய பழக்கத்திற்கு எளிதில் மாறினார்கள். இதனால் எந்த அஞ்ஞான மதங்களின் வழிபாடுகளும், பாரம்பரியங்கலும், சடங்குகளும் வேண்டாம் என்றார்களோ, அதுபோன்றவைகளைத் தங்களை அறியாமலே இவர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். இந்தப் பண்டிகைகள் மிகப் பிரபலமாயின. ஆயினும், அஞ்ஞான மதங்களில் இருந்ததுபோன்ற சில மூடநம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் கிறிஸ்தவத்துக்குள் நுழைந்தன,” என்று அவர் கூறுகிறார். இந்த மேற்கோளில் ஒரு காரியத்தைக் கவனியுங்கள். நற்செய்தி அறிவிக்கும் ஊழியத்தில் கிரெகோரி நியோ செசாரியாவில் அஞ்ஞான மதங்களுக்கு சவால் விட்டார் என்றும், இரத்தசாட்சிகளாக மரித்தவர்களின் நினைவாகப் பண்டிகைகள் கொண்டாட அவர் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார் என்றும் Latourette கூறுகிறார். இதன்மூலம் அஞ்ஞானிகளின் பழக்கங்களும், நம்பிக்கைகளும், பயிற்சிகளும் சபைக்குள் வந்தன. எடுத்துக்காட்டாக அஞ்ஞானிகள் அடோனிஸ் என்ற அஞ்ஞான தெய்வத்துக்குத் திருவிழா கொண்டாடிய நாளில் கிறிஸ்தவர்கள் பொலிகார்ப்புக்குத் திருவிழா கொண்டாடினார்கள் என்று வைத்துக்கொள்வோம். பெயர் மாறியது. ஆனால் அதே பழைய பழக்கங்கள் தொடர்ந்தன. இது அன்றுமுதல் இன்றுவரை கிறிஸ்தவம் சந்திக்கும் ஒரு பெரிய சவால். நற்செய்தி அறிவிப்பதிற்கு இது ஒரு பெரிய சவால். நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நம்மைச் சார்ந்தது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். நம் பொறுப்பை நாம் தட்டிக்கழிக்க முடியாது. இந்த வேலையைச் செய்யும்போது, நற்செய்தி அறிவிக்க நாம் அஞ்ஞானிகளைச் சந்திக்கும்போது, அறிந்தோ அறியாமலோ, நாம் சிக்கலில் சிக்கிக்கொள்கிறோம். கிறிஸ்தவ விசுவாசத்தை அவர்களுக்குக் கொண்டுபோக வேண்டும் என்ற அவசரத்தில், அவசியத்தில், நாம் கிறிஸ்தவத்தை அவர்களுடைய அஞ்ஞான மதத்தோடு ஒப்பிட்டு, அவர்களுடைய பழக்கவழக்கங்களோடு இசைவாக்கிவிடுகிறோம். அவர்களுடைய அஞ்ஞான மதத்துக்கும், கிறிஸ்தவத்துக்கு பெரிய வித்தியாசம் இல்லை என்பதுபோல் காட்ட முயல்கிறோம். இது தொன்றுதொட்டு இருந்துவருகிற பிரச்சினை. “நீங்கள் உலகத்தில் இருக்க வேண்டும். ஆனால் உலகத்தானாக இருக்கக்கூடாது,” என்று ஆண்டவராகிய இயேசு சொன்னதை நினைவுகூருவது நல்லது.
கிரெகோரியைப்பற்றியும், ஆர்மேனியாவில் அவருடைய ஊழியத்தைப்பற்றியும், இன்னும் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் உள்ளன. சில நேரங்களில் இதுபோல் நிகழ்ந்தன. ஆனால் இது விதிவிலக்கு. பொதுவாக தனிப்பட்ட நபர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். தனிநபர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். ஆதிச் சபை வரலாற்றில் தனித்தனி விசுவாசிகள் தனிப்பட்ட விதத்தில் நற்செய்தி அறிவித்தார்கள். ஒவ்வொருவராகத்தான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். கூட்டம் கூட்டமாக இல்லை. ஒவ்வொருவரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டது ஒரு தனிக்கதை. கூட்டத்தோடு கூட்டமாக இல்லை. மக்கள் திரள்திரளாகக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நிகழ்வுகள் பிற்காலத்துக்குரியவை. ஆதிச் சபையில் இப்படி அபூர்வமாகவே நடந்தது.
இரத்தசாட்சியாக மரித்த ஜஸ்டின் ஓர் அற்புதமான நற்செய்தியாளர். அவர் ஏராளமானவர்களை கிறிஸ்தவர்களாக்கினார். அவர் ஆரம்பத்தில் பல்வேறு பாரம்பரியங்களிலும், தத்துவங்களிலும் ஞானத்தைத் தேடினார். கிறிஸ்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டபோது அவர்கள் மரணத்தைத் தைரியமாக எதிர்கொண்டதைப் பார்த்து ஜஸ்டின் பிரமித்தார். பழைய ஏற்பாட்டிலும் அவர் இந்த அம்சத்தைப் பார்த்தார். அன்றைய சாதாரணமான கிறிஸ்தவர்களோடு உரையாடியபோதும் அவர் இதைத் தெரிந்துகொண்டார். இப்படித்தான் அவர் கிறிஸ்தவரானார்.
அலெக்ஸாண்ட்ரியாவைச் சேர்ந்த கிளமெண்ட் ஒரு கல்விமான். அவர் கிறிஸ்தவராகவதற்குமுன் பல்வேறு வழிகளிலும், இடங்களிலும் சமாதானத்தைத் தேடினார். அவர் தேடிய சமாதானத்தைக் கடைசியில் அவர் கிறிஸ்தவத்தில் கண்டடைந்தார்.
டேஷான் வேதாகமத்தை வாசித்தபோது பரவசமடைந்தார். அது கூறும் உயர்ந்த ஒழுக்கத்தையும், பாவத்தின்மேல் வெற்றிபெறுவதற்கு அங்கு காணப்படும் வழியையும் கண்டு அவர் பிரமித்தார்.
ஒரிஜென் ஆரம்பத்தில் கிறிஸ்தவத்தை ஏற்க மறுத்தார். ஒரு தரிசனத்தின்மூலம், ஒரு கனவின்மூலம் அவர் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு நிறைய எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கலாம். ஒவ்வொருவருடைய இரட்சிப்பும் ஒரு தனிக்கதை. ஒவ்வொருவரும் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டதற்கு ஒரு பிரத்தியேகமான பின்புலம் இருக்கிறது. பத்தோடு பதினொன்று, அத்தோடு நானொன்று என்ற பாணியில் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாக கிறிஸ்துவை விசுவாசித்தார்கள். அன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தின், சபைக் கூட்டங்களின், தன்மையைப்பற்றி நான் இன்னோர் அம்சத்தைக் கூற விரும்புகிறேன். கிறிஸ்தவர்கள் பிறரைவிட நீண்ட நாட்கள் சீரும் சிறப்புமாக வாழ்ந்தார்கள். இதுவும் உலக மக்களுக்கு மிகவும் விந்தையாகவும், கவர்ச்சியாகவும் இருந்தது. பண்டைய உலகத்தில் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது- கிறிஸ்தவர்களுக்கு மட்டும் இல்லை, எல்லாருக்கும். கிறிஸ்தவர்கள் பிறரைவிட இன்னும் அதிகமான சித்திரவைதைகளை அனுபவித்தார்கள். எனினும், கிறிஸ்தவர்கள் தங்கள் அண்டை அயலகத்தாரைவிட நீண்டநாட்கள் சிறப்பாக வாழ்ந்தார்கள். இது இப்படி சாத்தியமாயிற்று? கிறிஸ்தவர்கள் எப்படி நீண்ட நாட்கள் சிறப்பாக வாழ்ந்தார்கள்? மிக எளிமையான ஒரு காரணம் என்னவென்றால் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவினார்கள், ஒருவரையொருவர் கவனித்துக்கொண்டார்கள், ஒருவர்மேல் அக்கறையும் கரிசனையும் கொண்டிருந்தார்கள். பொதுவாக, அஞ்ஞானிகள் இப்படி வாழவில்லை. ஒரு சிலர் அப்படி சில நேரங்களில் வாழ்ந்தபோதும், அவர்கள் கிறிஸ்தவர்கள் வாழ்ந்த தரத்தின்படி வாழவில்லை. அன்று கிறிஸ்தவர்கள் ஒருவரொருவர்மேல் காட்டிய அன்பும், அக்கறையும் அளவிடமுடியாது. அது மிக உயர்ந்த தரம். இப்படி வாழ முடியுமா என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் வாழ்ந்தார்கள். அஞ்ஞானிகள் மூக்கின்மேல் விரல்வைத்தார்கள். கிறிஸ்தவர்கள் ஒருவர்மேல் காட்டிய அன்பைக் கண்டு அஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டார்கள்.
எடுத்துக்காட்டாக கி.பி 251இல் உரோம ஆயர் அந்தியோக்கியா ஆயருக்கு எழுதிய கடிதத்தில், உரோம சபையில் 1500 விதவைகளும், 1000க்கும் அதிகமானவர்கள் இடுக்கண்களில் அகப்பட்டோர்கள் இருப்பதாகவும், இவர்கள் அனைவரையும் சபையில் இருக்கும் விசுவாசிகள் கவனித்துக்கொள்வதாகவும் கூறுகிறார். விசுவாசிகளுடைய தாராள மனப்பான்மையையும், ஓத்துழைப்பையும் அவர் புகழ்ந்துபேசுகிறார்.
கிறிஸ்தவர்களின் தாராள குணத்தை அஞ்ஞானிகள் பாராட்டினார்கள், பார்த்தார்கள். ஜூலியன் என்ற ஓர் உரோமப் பேரரசன் இருந்தான். இவன் அன்றைய கிறிஸ்தவர்களைப்பற்றி என்ன சொன்னான் தெரியுமா? “இந்த பாவப்பட்ட கலிலேயர்கள் அவர்களிடையே இருக்கும் ஏழைகளுக்கு மட்டும் அல்ல, எங்களிடையே இருக்கும் ஏழைகளுக்கும் உதவுகிறார்கள்” என்று சொன்னான். கிறிஸ்தவர்களைத்தான் அவர் பாவப்பட்ட கலிலேயர் என்கிறார். கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். ஆதிக் கிறிஸ்தவர்கள் அஞ்ஞானிகளைப்போல் குடிப்பழக்கத்துக்கோ அதுபோன்ற வேறு கெட்ட பழக்கங்களுக்கோ, பாவங்களுக்கோ இடங்கொடுக்கவில்லை. நான் இதை வலியுறுத்தத் தேவையில்லை. பக்தியுள்ள வாழ்க்கை சிறந்த வாழ்க்கை என்பதை நான் வலியுறுத்த வேண்டுமா என்ன? “இது பாவம். இதைச் செய்யாதே,” என்று தேவன் சொல்லும்போது அதைச் செய்யாமல் தேவனுக்குப் பிரியமாக வாழ்பவர்கள் ம்கிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே, தேவனுக்குக் கீழ்ப்படிவதால் வரும் பலன்களை கிறிஸ்தவர்கள் அனுபவித்தார்கள்.
மேலும், கிறிஸ்தவர்கள் பெண் குழந்தைகள் உட்பட தங்கள் எல்லாக் குழந்தைகளையும் மதித்தார்கள், மதிப்புடையவர்களாகக் கருதினார்கள். உரோமப் பேரரசில் பெண் குழந்தைகள் அற்பமாகக் கருதப்பட்டார்கள். வரப்போகிற நாட்களில் தேவைப்பட்டால் இதைப்பற்றி பேசுவோம். கிறிஸ்தவர்கள் கைவிடப்பட்டவர்களையும், பெரியவர்களையும், பெண்களையும் மட்டும் அல்ல, சாகட்டும் என்று தெருக்களில் தூக்கியெறியப்பட்ட சிறு குழந்தைகளையும்கூட காப்பாற்றி வளர்த்தார்கள். இவைகளெல்லாம் சாதாரணமான காரியங்கள் இல்லை. கிறிஸ்தவர்கள் பிறர் நலத்தையே நாடினார்கள். அவர்களுடைய தியாகமும், தன்னலமின்மையும் கி.பி 165யிலும் 251யிலும் உரோமப் பேரரசில் ஏற்பட்ட கொள்ளைநோயின்போது வெளிப்டையாகத் தெரிந்தது. அந்தக் கொள்ளைநோயின்போது 30 விழுக்காடு மக்கள் இறந்தார்கள். கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்ட அஞ்ஞானிகளுக்குக்கூட உதவ பிற அஞ்ஞானிகள் முன்வரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை, தங்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் உட்பட அனைவரையும், அவர்கள் வெறுத்து ஒதுக்கினார்கள், தவிர்த்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களை உயிரோடு சாகட்டும் என்று அஞ்ஞானிகள் சாக்கடைகளில் தூக்கியெறிந்தார்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை அக்கறையோடு கவனித்தார்கள். கொள்ளைநோயினால் பாதிக்கப்பட்ட ஒருசில விசுவாசிகள் மரித்தார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை வெறுக்கவில்லை, ஒதுக்கவில்லை. மாறாக, அவர்களைப் பேணிப் பாதுகாத்தார்கள், பராமரித்தார்கள்.
இதன் விளைவுகள் மகத்தானவை. இப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்ச மருத்துவ உதவியும், உணவும், தண்ணீரும் கொடுத்தாலே போதும். பெரும்பாலானவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். எளிமையான உதவியும் பராமரிப்பும் போதும். இதைக் கிறிஸ்தவர்கள் வழங்கினார்கள்.
பண்டைய உரோம உலகில் ஏற்பட்ட பல பேரழிவுகளின்போதும், பேரிடர்களின்போதும் கிறிஸ்தவர்களின் சமுதாயப் பணிகளும் தொண்டுகளும் அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்தது,அனைவராலும் மதிக்கப்பட்டது. நிலநடுக்கங்கள், பஞ்சம், வெள்ளம், கலவரங்கள், உள்நாட்டுப் போர்கள், படையெடுப்புகள் ஏற்பட்டபோதெல்லாம் கிறிஸ்தவர்கள் மனமுவந்து முன்வந்து உதவினார்கள். அது மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
சமீப காலத்தில் நடந்த ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்.
கியூபா என்று ஒரு நாடு. இந்த நாடு பல ஆண்டுகளாகக் கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் செயல்பட்டது. கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும், கிறிஸ்தவர்களையும் இந்த நாடு வெறுத்தது. கிறிஸ்தவர்கள் சித்திரவதைசெய்யப்பட்டார்கள். ஆனால், சமீப காலத்தில் இந்த நாடு கிறிஸ்தவர்களை முன்புபோல வெறுக்கவில்லை, சித்திரவதைசெய்யவில்லை. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது? கியூபா முன்பு ஒரு கம்யூனிச நாடு. சோவியத் யூனியனின் ஆதரவில்தான் கியூபா நாடு வாழ்ந்தது, வளர்ந்தது. சோவியத் யூனியன் சிதறி பல்வேறு நாடுகள் உருவானபோது, கியூபா தத்தளித்தது. அதன் பொருளாதாரம் வீழ்ந்தது. ஒரே இரவில் நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. பேரழிவு ஏற்பட்டது. நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டது. உள்நாட்டுக் கலவரம் வெடித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்கள். இதை அன்றைய கம்யூனிச அரசாங்கம் கவனித்தது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் அரசாங்கம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தன் போக்கை மாற்றிக்கொண்டது. இது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி. உரோம உலகிலும் இதுபோன்று நிகழ்ந்தது. உரோமப் பேரரசெங்கும் இப்படி நடந்து என்று சொல்லமுடியாவிட்டாலும் பல நகரங்களில் இப்படி நடந்தது. இதனால் பலர் கிறிஸ்துவின்பால் ஈர்க்கப்பட்டார்கள்.
உரோமப் பேரரசில் கிறிஸ்தவம் எப்படி நுழைந்து, எப்படி வளர்ந்தது என்பதைப் பார்க்கும்போது சுவாரஸ்யமான பல காரியங்கள் உள்ளன. உரோமப் பேரரசில் எல்லாம் நன்றாக இருந்தபோது, சமாதானம் நிலவியபோது, வளம் செழித்தபோது, அமைதி கோலோச்சியபோது கிறிஸ்தவம் வேகமாக வளரவில்லை. உரோமப் பேரரசில் இவைகளெல்லாம் குறைவுபட்டபோதுதான் கிறிஸ்தவம் அங்கு வேகமாகப் பரவியது. நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோது, பஞ்சம் வந்தபோது, பெருவெள்ளம்போன்ற பேரழிவுகள் நிகழ்ந்தபோது, உள்நாட்டுப்போர்களும், வெளிநாட்டுப் படையெடுப்புகளும் நடந்தபோது கிறிஸ்தவம் தழைத்தோங்கியது. உரோமப் பேரரசில் நிலைமை மோசமாக இருந்தபோதுதான் கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது. அந்த நேரத்தில்தான் மக்கள் கிறிஸ்துவின்மேல் அதிக நாட்டம் கொண்டார்கள். தங்களுக்கு உண்மையாகவே உதவக்கூடிய ஒரு தேவனை அவர்கள் தேடினார்கள். இது வரலாறு. இது இப்படித்தான் நடக்கிறது என்பது வரலாறு.
சில வாரங்களுக்குமுன் உக்ரைனிலிருந்து ஒரு பாஸ்டர் எங்கள் சபைக்கு வந்திருந்தார். அங்கு நடக்கும் போரைப்பற்றியும், சபைகளின் நிலைமையைப்பற்றியும் அவர் எடுத்துரைத்தார். இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு மக்கள் கிறிஸ்துவைத் தேடுவதாகவும், நற்செய்தியைக் கேட்பதாகவும், மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொள்வதாகவும், சபைக் கூட்டங்களுக்கு அதிகமானவர்கள் வருவதாகவும் கூறினார். இது வரலாறு. இது அன்று நடந்ததுபோல், இன்றும் நடக்கிறது.
இன்றும் மக்களுடைய நிலைமை அதுதான். மக்கள் திருப்தியாக இருக்கும்போது, நல்ல வேலை, கைநிறைய வருமானம், சொந்த வீடு, நல்ல உடல் நலம், போக்குவரத்துக்குத் தேவையான வசதியான வண்டிகள், நிறைய நண்பர்கள், வசதிகள், வாய்ப்புகள் இருக்கின்றன. எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படியிருக்கும்போது, அவர்கள் தேவனைத் தேடுவதில்லை. தேடுவதில்லை என்று சொல்வதைவிட அவர்களுக்குத் தேவன் தேவையில்லை. தேவையான எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும்போது தேவன் தேவையில்லை. அன்றும் இன்றும் இது இப்படித்தான் வேலை செய்கிறது. உரோமப் பேரரசு செழித்திருந்தபோது, கிறிஸ்தவம் துன்பப்பட்டது அல்லது வேகமாக வளரவில்லை என்று சொல்லலாம். உரோமப் பேரரசுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது கிறிஸ்தவம் வேகமாக வளர்ந்தது.
இன்னொரு காரணமும் மக்களைக் கிறிஸ்தவத்திடம் ஈர்த்தது. இது அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தோடு தொடர்புடையது. இது அவர்கள் பெண்களை எவ்வளவு மதித்தார்கள், உயர்வாகக் கருதினார்கள் என்பதோடு சம்பந்தப்பட்டது.
ஆதிச் சபையில் ஆண்களைவிட பெண்களே அதிகம். இதற்குக் காரணம் சமுதாயத்தில் பெண்கள் அதிகம் இருந்தார்கள் என்பதல்ல. கிறிஸ்தவர்கள் பெண்களை மதித்தார்கள், மதிப்புக்குரியவர்களாகக் கருதினார்கள். கிறிஸ்தவ சமுதாயம் தங்களை மதிக்கும் என்றும், தங்களைக் கவனித்துக்கொள்ளும் என்றும் அவர்களுக்குத் தெரியும். மேலும் கிறிஸ்தவ ஆண்கள் தங்கள் மனைவிகளை அஞ்ஞானிகளைப்போல் எளிதில் விவாகரத்துசெய்யவில்லை. கிறிஸ்தவர்களுடைய ஒழுக்கத்தின் தரம் மிக உயர்வாக இருந்தது. இது உரோமப் பேரரசில் வாழ்ந்த பெண்களுக்கு மிகப் பாதுகாப்பாக அமைந்தது. எனவே, கிறிஸ்தவம் அன்றைய உரோமப் பெண்களை ஈர்த்தது.
அன்றைய உரோமப் பேரரசையும், ஆதிச் சபையையும்பற்றிய இன்னோர் அம்சம் என்னவென்றால், அன்று சபைகள் பெரும்பாலும் நகரங்களில்தான் தோன்றின. ஆதிச் சபை ஆண்களையும், பெண்களையும் கவர்ந்திழுத்தது. எல்லாரையும் சீடர்களாக்கியது. மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்த நகரங்களில் வாழ்ந்த மக்களுக்கு அவர்கள் தேடிய நம்பிக்கையும், உதவியும் கிறிஸ்தவ சமுதாயங்களில் கிடைத்தன. அன்று அந்தியோக்கியா நகரத்தின் மக்கள் நெருக்கம் இன்றைய சென்னை மக்கள் நெருக்கத்தைவிட மூன்றுமடங்கு அதிகம். அன்றைய உரோமில் மக்கள் புகைபடிந்த, அழுக்கடைந்த, புழுக்கமான, சிறிய இருட்டறைகளில் வாழ்ந்தார்கள். துர்நாற்றம் வீசும். வீட்டைவிட்டு வெளியே வந்தால் திறந்த சாக்கடை. அங்கு பிணங்களும் மிதக்கும். மிக மோசமான சூழல். இந்தச் சூழலில் கிறிஸ்தவம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியது. கிறிஸ்தவ சமுதாயங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பையும், பராமரிப்பையும் வழங்கியன. நகரங்களில் இருந்த கிறிஸ்தவச் சமுதாயங்களில் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். நகரங்களில் நிர்க்கதியாக நின்றவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் கிறிஸ்தவம் அன்புக்கரம் நீட்டி அவர்களை அரவணைத்துக்கொண்டது. அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியது. நகரங்களுக்கு வந்த புதியவர்களுக்கும், அந்நியர்களுக்கும் கிறிஸ்தவ சமுதாயங்கள் அடைக்கலம் கொடுத்தன. உறவுகளை ஏற்படுத்தின. கிறிஸ்தவ சமுதாயங்கள் குடும்பங்களைப்போல் அவர்களை ஏற்றுக்கொண்டார்கள். கிறிஸ்தவம் யாரையும் கைவிடவில்லை. விதவைகளையும் கனத்தோடும், மரியாதையோடும் நடத்தினார்கள், கவனித்தார்கள். குடும்பம் என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் இருந்தது.
மக்களைக் கிறிஸ்தவத்திடம் ஈர்த்த கடைசி அம்சத்தை இப்போது பார்ப்போம். மொத்தம் ஆறு காரணிகளைப் பார்த்தோம். இது ஆறாவது காரணி. ஆறாவது காரணி என்னவென்றால் அவர்கள் சீடத்துவத்தில் கவனம் செலுத்தினார்கள். இதன் பொருள் என்னவென்றால், ஒருவன் “நான் கிறிஸ்தவனாக விரும்புகிறேன்,” என்று சொன்னால், கிறிஸ்தவ விசுவாசத்தில் கொஞ்சம் ஈடுபாடும் நாட்டமும் காட்டினால், ஏற்கெனவே விசுவாசிகளாக இருந்தவர்கள் அவர்களுக்குக் கிறிஸ்தவத்தைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். கேள்வி பதில்கள், சிறிய பாடங்கள் அடங்கிய ஞானோபதேசப் பாடங்ககளை அவர்களுக்குக் கற்பித்தார்கள். இன்று சபைகளில் ஒருவரை அங்கத்தினராக ஏற்றுக்கொள்வதற்குமுன் அல்லது ஒருவருக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்குமுன் அவருடன் ஐக்கியம் கொள்வதுபோல், கற்பிப்பதுபோல். புதியவர்களுடன் ஐக்கியம்கொண்டார்கள். இது புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அப்போஸ்தலர் காலத்துக்கு அடுத்த தலைமுறையைச் சார்ந்த கிறிஸ்தவத் தலைவர்கள் சபைப் பிதாக்கள் என்றழைக்கப்படுகிறார்கள். Apostolic fathers என்ற புத்தகத்தில் இவர்களைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம். இவர்களுக்கு அப்போஸ்தலர்களை நேரடியாகத் தெரியும். இதிலுள்ள சில புத்தகங்கள் கொஞ்சக் காலம் வேதாகமத்தின் பகுதிகளாகக் கருதப்பட்டன. அவை இன்று வேதாகமத்தில் இல்லாமல் போனாலும், அவை நிச்சயமாகப் பயனுள்ளவை. நீங்கள் அவைகளை ஒருமுறையாவது படிக்குமாறு நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன். வேதாகமத்துக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை நீங்கள் இவைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்றோ, வேதாகமத்தை வாசிப்பதுபோல் இவைகளை வாசிக்க வேண்டும் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால், நிச்சயமாக அவை உங்களை உலுக்கும், உயிர்ப்பிக்கும்.
இந்தத் தொகுப்பிலுள்ள முதல் புத்தகம் Didache. இதன் பொருள் போதித்தல் அல்லது உபதேசித்தல் அல்லது கற்பித்தல். பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்மூலம் தேவன் புறவினத்தாருக்குப் போதிக்கும் வார்த்தை என்பதுதான் இதன் பொருள். இந்தப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆனால் ஆரம்பத்திலேயே எழுதப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இந்தப் புத்தகம் கிறிஸ்தவனாக மாற விரும்பியவர்களுக்கான, புதியவர்களுக்கான, ஒரு கையேடு என்று சொல்லலாம். இது கிறிஸ்தவ விசுவாசம், ஞானஸ்நானம், கர்த்தருடைய பந்தி, கிறிஸ்தவக் கூட்டங்கள் ஆகியவைகளைப்பற்றிப் புதியவர்களுக்குக் கற்பிக்கும் ஒரு பாடநூல் போன்றது. இது புதியவர்களை ஞானஸ்நானத்திற்கு ஆயத்தம்செய்வதற்கும், அவர்களுக்குப் போதிப்பதற்கும் பொருத்தமான ஒரு கையேடு. இதை ஞானோபதேச புத்தகம் எனலாம். இந்தப் புத்தகத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதி ஜீவ பாதை, மரணப் பாதை என்ற இரண்டு பாதைகளைப்பற்றிப் பேசுகிறது. ஜீவ பாதை வேதாகமம் கூறும் ஒழுக்கம்சார்ந்த கட்டளைகளையும் போதனைகளையும்பற்றிப் பேசுகிறது. நான்கு நற்செய்திகளிலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியவைகள்தான் இங்கு பெரும்பாலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. மரணப் பாதையைப்பற்றியும் இது விரிவாகப் பேசுகிறது.
இந்தப் புத்தகத்தின் இரண்டாவது பகுதி சபையின் ஒழுங்கைப்பற்றிய ஒரு கையேடு என்று சொல்லலாம். ஒருவன் கிறிஸ்தவனாக வாழ்வது எப்படி என்றும், ஜெபம், ஞானஸ்நானம், கர்த்தருடைய பந்தி, நன்றி கூருதல் போன்றவைகளைப்பற்றியும் இந்தப் பகுதி பேசுகிறது. ஒருவன் பணம் கேட்டால் அல்லது பணத்தைப்பற்றிப் பேசினால் அவன் கள்ளத் தீர்க்கதரிசி என்ற ஒரு கூற்று இந்தப் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது.
இந்தத் தொகுப்பிலுள்ள இன்னொரு புத்தகத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். அது உரோமச் சபையின் ஒரு முக்கியமான தலைவரான கிலேமெந்து என்பவரின் முதல் நிருபம். இவர் பிலிப்பியர் 4:3இல் குறிப்பிடப்பட்டுள்ள கிலேமெந்துவாக இருக்கலாம். இந்த நிருபம் உண்மையில் உரோம சபை கொரிந்து சபைக்கு எழுதிய அதிகாரபூர்வமான ஒரு நிருபம். எனினும் கிலேமெந்துதான் இந்த நிருபத்தை எழுதினார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிருபம் யோவான் திருவெளிப்பாட்டை எழுதிய காலத்தில் எழுதப்பட்டது என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். இந்த நிருபம் கொரிந்து சபையைச் சீரமைப்பதற்காக எழுதப்பட்டது. பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதியிருக்கும் நிருபத்தில் பேசுகிற அவர்களுடைய பொறாமை, பெருமை, பிரிவினைகள்போன்றவைகளை இந்த நிருபமும் பேசுகிறது.
The shepherd of Hermas என்ற பர்னபாவின் நிருபங்களைப்பற்றி நான் பேசப்போவதில்லை. எனினும் இக்னேஷியஸ், பொலிகார்ப் ஆகிய இருவருடைய நிருபங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன். இவைகள் அவர்கள் தாங்கள் போய் சந்தித்து வந்த சபைகளுக்கு எழுதிய நிருபங்கள். ஆரம்ப காலத்தில் சபைப் பிதாக்கள் சபைகளில் என்ன போதித்தார்கள் என்றும், புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளபடி விசுவாசிகள் தேவனுக்குப் பிரியமாக எப்படி வாழ வேண்டும் என்று அவர்கள் கிறிஸ்தவர்களுக்குக் கற்பித்தார்கள் என்றும் இந்த நிருபங்களிலிருந்து அறியலாம். அப்போஸ்தலர் காலச் சபைகளும், ஆதிச் சபைப் பிதாக்களும் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கும், அவர்கள் அவைகளைக் கையாண்ட வழிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அவர்கள் தாங்கள் அறிந்திருந்த கிறிஸ்துவின் சத்தியத்தை தங்கள் காலத்திற்கும் நிலைமைக்கும் தக்கவாறு வாழ முயன்றார்கள்.
ஒருவனைக் கிறிஸ்துவின் சீடனாக்க இந்தப் புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த வகுப்புகள்மூலம் புதியவர்கள் கிறிஸ்தவத்தை நன்றாகக் புரிந்துகொண்டார்கள். சத்தியத்தை அறிந்தபின் தேவனுக்குப் பிரியமாக வாழ்வதற்கும், அஞ்ஞானப் பழக்கங்களை விட்டுவிடுவதற்கும் தயாரராக இருந்தவர்களுக்கு மட்டுமே அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். உரோமப் பேரரசில் முதல் 300 ஆண்டுகளில் இந்த ஞானோபதேச வகுப்புகள் எல்லா நேரமும் ஒரே மாதிரிதான் நடைபெற்றன என்று உறுதியாகச் சொல்லமுடியாது. கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் இதுபோன்ற வகுப்புகள் நடைபெற்றன. ஆனால், கி.பி 217இல் ஹிப்போலைடஸ் என்பவர் இந்த வகுப்புகளைப்பற்றி சொல்லியிருக்கிறார். கிறிஸ்தவ விசுவாசத்தைக்குறித்து கேட்பவர்களுக்கு இந்த வகுப்புகளில் சொல்லிக்கொடுத்த காரியங்களைப்பற்றி அவர் குறிப்பிடுகிறார். இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு தெளிவடைந்து, இயேசுவை முழுமையாக விசுவாசித்தவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். கிறிஸ்தவத்தைக்குறித்து யாராவது விசாரித்தால், சந்தேககங்களுக்கு விளக்கம் கேட்டால் இந்த ஞானோபதேச வகுப்புகள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளவைகளாக இருந்தன. புதியவர்கள் உண்மையாகவே இயேசுவின் சீடர்களாக மாற விரும்புகிறார்களா என்று உறுதி செய்தார்கள். உண்மையான நாட்டமோ ஈடுபாடோ இல்லாதவர்களை அவர்கள் வற்புறுத்தவில்லை. களைகள் தோட்டத்துக்குள் வந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் குறியாயிருந்தார்கள். உண்மையாகவே இயேசுவின் சீடர்களாக விரும்பாதவர்களை அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை. தொடர்ந்து கற்பித்தார்கள், உற்சாகப்படுத்தினார்கள். சபை சித்திரவதை செய்யப்பட்டபோது, இது மிக முக்கியமான காரியமாக மாறியது. ஏனென்றால் சபைக்குள் போலிக் கிறிஸ்தவர்கள் நுழைந்துவிட்டால், அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களைக் காட்டிக்கொடுப்பார்கள். சபை சித்திரவதைக்குள்ளாகும் என்று ஆதிச் சபையாருக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் தங்களை அறியாமலேயே, பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலின்படி, இந்தக் காரியத்தில் கண்ணுங்கருத்துமாய் இருந்தார்கள். போலியானவர்கள், பொய்யானவர்கள், சபைக்குள் நுழையாதவாறு எல்லா வகையிலும் உன்னிப்பாய்க் கவனித்தார்கள்.
எனவே, ஒரு நீண்ட வழிமுறைக்குப்பின்தான் புதியவர்கள் சபைக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். ஞானோபதேச வகுப்புகளில் கலந்துகொண்டு, கற்றுக்கொண்டு, நம்பிக்கை ஏற்பட்டபிறகுதான் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். புதியவர்களைப்பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டார்கள். அவர்கள் கிறிஸ்தவனாக மாற விரும்புவதையும் அவர்களுடைய நோக்கத்தையும் தெரிந்துகொண்டார்கள். அவர்களை வினவினார்கள். தேவனுடைய வார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்ள முடிகிறதா என்று உறுதிசெய்தார்கள். பரத்தையர் கிறிஸ்துவை விசுவாசிப்பதாகச் சொன்னபோது அவர்கள் தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றச் சொன்னார்கள். சிலைகளை செய்பவர்கள் சபைக்கு வந்தபோது அவர்கள் தங்கள் சிலை செய்யும் வேலையை விட்டுவிடச் சொன்னார்கள். நடிகர் நடிகைகளையும், அஞ்ஞானிகளின் பள்ளிகளில் ஆசிரியர்களாக வேலைசெய்தவர்களையும், க்ளாடியேட்டர்களையும், வேறு சமயபேதகங்களில் குருக்களாக இருந்தவர்களையும், மந்திரவாதிகளையும், குறிகாரர்களையும் விசுவாசிகளாக ஏற்றுக்கொள்வதற்குமுன் அவர்கள் தங்கள் தொழிலை விட்டுவிட வேண்டுமென்று வலியுறுத்தினார்கள்.
சில இடங்களில் இந்த ஞானோபதேச வகுப்புகள் மூன்று ஆண்டுகள் நடைபெற்றன. வேறு சில இடங்களில் ஆறு வருடங்கள் நடைபெற்றன. குறிப்பாக சபையின் சித்திரவத்தையின்போது அவர்கள் இதை இன்னும் கண்டிப்பாகக் கடைப்பிடித்தார்கள். சபைக்கு சித்திரவதை ஏற்பட்டபோது, உண்மையாகவே கிறிஸ்தவனாக வாழ வேண்டும் என்ற அர்ப்பணிப்பும் உறுதியும் இருந்தால் மட்டுமே ஒருவனை ஏற்றுக்கொண்டு, போதித்தார்கள்; சீடர்களாக்கினார்கள். புதிய விசுவாசிக்களுக்கான வகுப்புகள் அல்லது ஞானோபதேச வகுப்புகள் அல்லது ஆரம்ப வகுப்புகளின்மூலம் தங்கள் விசுவாசத்தை அறிக்கைசெய்யாதவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை; கர்த்தருடைய பந்தியில் பங்குபெற அனுமதிக்கவில்லை. இதன் பொருள் என்னவென்றால், மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிறிஸ்தவர்களாக மாறவில்லை. ஆனால், உண்மையாகவே மனந்திரும்பி, இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் உண்மையான சீடர்களாக, கிறிஸ்தவர்களாக, வாழ்ந்தார்கள்.
இவ்வாறு, கிறிஸ்தவம் வேகமாக வளர்ந்தது, செழித்தோங்கியது. நான் சொன்ன ஆறு காரணங்களையும் நாம் மீண்டும் ஒருமுறை சுருக்கமாகப் பார்ப்போம்.
முதல் 300 ஆண்டுகளில் கிறிஸ்தவம் இவ்வளவு அற்புதமாகவும், வேகமாகவும் வளர்ந்ததற்கு இந்த ஆறு காரணங்கள் மிக முக்கியமானவை என்று சொல்லலாம். வரலாற்றின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, அப்போஸ்தலர்களின் காலத்திலிருந்து கிறிஸ்தவம் மிக வேகமாக வளர்ந்தது. கிறிஸ்தவத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. அதாவது கி.பி 100இல் உலகத்தில் 360 பேரில் ஒருவர் கிறிஸ்தவராக இருந்தார். கி.பி 2000இல் ஐந்தில் ஒருவர் கிறிஸ்தவர். சகோதர்களே, இது மிகப் பிரமாண்டமான வளர்ச்சி என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். கடந்த நூற்றாண்டுகளில் மக்கள் தொகை வேகமாக உயர்ந்திருக்கிறது. அதே நேரத்தில், கிறிஸ்தவ விசுவாசமும் விசுவாசிகளின் எண்ணிக்கையும் பெருகியிருக்கிறது. மக்கள் தொகைப் பெருக்க விகிதத்தைவிட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது என்பது வரலாற்று உண்மை. ஐந்துபேரில் ஒருவர் கிறிஸ்தவர் என்று நான் சொல்லும்போது அவர்கள் உண்மையாகவே திடமான விசுவாசிகள் என்று நான் சொல்லவில்லை. தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற அநேகர் உண்மையான விசுவாசிகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? தேவன் தம் சபையைக் கட்டிக்கொண்டிருக்கிறார். பாதாளத்தின் வாசல்கள் அவருடைய சபையை மேற்கொள்ளவில்லை, இனிமேலும் மேற்கொள்ளப்போவதில்லை. ஆதிச் சபையின் காலத்தில் சபை வேகமாகப் பரவியதுபோல எதிர்காலத்திலும் சபை வேகமாகப் பரவும். பரவிக்கொண்டேயிருக்கும்.
ஆதிச் சபை வரலாற்றத் திரும்பிப்பார்க்கும்போது, அப்போஸ்தலர் காலத்துக்குப் பிறகு சபைப் பிதாக்களும், நற்செய்தியாளர்களும், கிறிஸ்தவர்களும் நற்செய்தியைத் தொடர்ந்து தொய்வின்றி, ஊக்கமாக, அறிவித்தார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. அவர்களுக்கு அதில் எந்தத் தயக்கமும் இல்லை. தாங்கள் பெற்றனுபவிக்கும் இன்பத்தைப் பிறரும் பெற வேண்டும் என்ற வாஞ்சையோடு அவர்கள் வாழ்ந்தார்கள். நற்செய்தியை அறிவிப்பதற்கு உரோமப் பேரரசின் அன்றைய சூழல் சாதகமாக இருந்தது. அப்போஸ்தலர்கள் அனைவரும் தங்கள் விசுவாசத்தினிமித்தம் ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டார்கள். நற்செய்தி பல்வேறு கலாச்சாரத்துக்கும் சென்றது.
நேரடியாக இயேசுவிடமிருந்தும், இயேசுவைப்பற்றி அப்போஸ்தலர்கள்மூலமாகவும் வந்த போதனைகளைத் தொடர்வதிலும், ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்வதிலும், அவர்கள் குறியாக இருந்தார்கள். ஆயினும், பல்வேறு கலாச்சாரங்களும் ஏற்கும் வண்ணம் நற்செய்தி தன் நிலையைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டது. பல்வேறு இடங்களில், பல்வேறு சபைகளில், மேய்ப்பர்களுக்கும் விசுவாசிகளுக்குமிடையே பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன என்பதையும், அவர்கள் அவைகளோடு இடைப்படுவதையும் நாம் காண்கிறோம். இந்தக் காலகட்டத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில வழிகாட்டும் நெறிமுறைகளை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.
மிஷனரி வளர்ச்சி ஓர் இயல்பான வளர்ச்சி. அது குறிப்பிட்ட சிலர் மட்டும் செய்கிற வேலை இல்லை. நாம் நம் வீட்டில், தெருவில், பள்ளி கல்லூரிகளில், நாட்டில், உலகம் முழுவதும் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்று ஆண்டவராகிய இயேசு கட்டளையிட்டார். சபையார் அனைவரும் நற்செய்தியைப் பொதுமக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். சபையார் அனைவரும் மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டுசெல்லவில்லையென்றால், அவர்கள் ஆண்டவராகிய இயேசு சொன்ன கட்டளையை ஏன் நிறைவேற்றவில்லை என்ற கேள்விக்குப் பதில் சொல்லவேண்டிய நேரம் வரும்.
இரண்டாவது, கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களுக்கும் இடையே ஏற்படும் உராய்வும், சிராய்ப்பும் இயல்பானவை. பிறர் தங்களை நேசிக்காததை, பாராட்டாததை, மதிக்காததை, அங்கீகரிக்காததை அறியும்போது இன்றைய நவீன கிறிஸ்தவர்கள் அதிர்ச்சியடைவது ஆச்சரியமாயிருக்கிறது. ஆனால், ஆண்டவராகிய இயேசு சொன்னதுபோல, அன்று மக்கள் அவரை வெறுத்ததுபோல, துன்புறுத்தியதுபோல, இன்றும் அவிசுவாசிகள் விசுவாசிகளை வெறுப்பார்கள், துன்புறுத்துவார்கள்,என்று நாம் அறிந்திருக்க வேண்டும், எதிர்பார்க்க வேண்டும். ஆனால் கிறிஸ்தவர்கள் ஒருபோதும் மோதலுக்குக் காரணமாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில் எப்படியாவது மோதலைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக நற்செய்தியையோ, வேதாகமத்தின் போதனைகளையோ, நீர்த்துப்போகச் செய்யக்கூடாது. தேவனை வெறுக்கும் கும்பலுக்கு நாம் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால், கொஞ்சம் அடிபணிந்தால், அவர்கள் நம்மை நேசிப்பார்கள், மதிப்பார்கள், வரவேற்பார்கள், என்று நாம் நினைத்தால், அது தவறு. அப்போதும் அவர்கள் நம்மை நேசிக்கமாட்டார்கள், நம்மைத் தொந்தரவு செய்யாமல் விடமாட்டார்கள். இந்தப் பாடத்தை நீங்கள் உங்கள் வாழ்நாளில் கற்றுக்கொள்வீர்கள். விட்டுக்கொடுத்தல் சிக்கலைத் தீர்க்காது. மாறாக, அவர்கள் உங்களை இன்னும் அதிகமாக வெறுப்பார்கள், உங்களிடம் அவர்கள் இன்னும் அதிகமான சமரசங்களைக் கோருவார்கள். இதன் பொருள், நாம் அவர்களுக்குமுன் தாழ்ந்து போகக்கூடாது என்பதல்ல. நாம் என்ன சிந்திக்க வேண்டும் அல்லது சிந்திக்கக்கூடாது, நாம் யாரைச் சந்திக்க வேண்டும் அல்லது சந்திக்கக்கூடாது, நாம் எங்கு போக வேண்டும் அல்லது போகக்கூடாது, நாம் என்ன பேச வேண்டும் அல்லது பேசக்கூடாது என்பதைத் தீர்மானிக்க நாம் அவர்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
மூன்றாவது, கிறிஸ்துவுக்காகத் துன்பப்படலாம் என்ற விருப்பம், எண்ணம், நல்லது. “துன்பம் நல்லது. எனவே, நாம் துன்பத்தை ஆவலோடு எதிர்பார்த்து, அது வரும்போது அரவணைத்துக்கொள்ள வேண்டும்” என்று நான் சொல்லவில்லை. நம்மிடம் துன்பப்படுவதற்கு விருப்பம் இருந்தால், ஆயத்தமாக இருந்தால், நாம் நம் செளகரியத்தையும், சுகவசதிகளையும்விட, கிறிஸ்துவை அதிகமாக நேசிக்கிறோம் என்று பொருள். இதற்குரிய ஏற்ற வெகுமதியைத் தேவன் ஏற்ற காலத்தில் தருவார். வெகுமதி ஒன்றும் இல்லையென்றாலும், கிறிஸ்துவுக்காகத் துன்பப்பட, பாடநுபவிக்க, அவர் முற்றிலும் தகுதியானவர்.
நான்காவது, நற்செய்தியின் சாராம்சத்தை சமரசம் செய்யாமல் பல்வேறு கலாச்சாரங்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பது நல்லது. நாம் கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு, யூதர்களிடையே வாழும்போது யூதர்களாகவோ, கிரேக்கர்களிடையே வாழும்போது கிரேக்கர்களாகவோ, இந்தியர்களிடையே வாழும்போது இந்தியர்களாகவோ, அமெரிக்கர்களிடையே வாழும்போது அமெரிக்கர்களாகவோ, வாழத் தேவையில்லை. ஏனென்றால், இயேசு எல்லாக் காலத்திற்கும், இடத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஆண்டவர். நற்செய்தி எல்லாக் கலாச்சாரத்திற்கும் பொருந்தும், எல்லாக் கலாச்சாரத்திலும் வேலை செய்யும். அந்தந்தக் கலாச்சாரத்தில் இருக்கும் நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தீயவைகளை ஒதுக்கிவிட வேண்டும். வேதாகமத்தின் சத்தியத்தையோ, தரத்தையோ, மதிப்பீடுகளையோ கிஞ்சித்தும் சமரசம் செய்யாமல், நற்செய்தியால் எல்லாக் கலாச்சாரத்திலும் செழித்து வளர முடியும். ஏனென்றால், அவர்தான் முழுப் பிரபஞ்சத்தின் தேவன். ஏனென்றால், பரிசுத்த ஆவியானவர் நமக்குமுன் செல்கிறார். சத்தியத்தைத் சமரசம் செய்வது மோசமான செயல்.
கடைசியாக, ஒற்றுமை நல்லது. கிறிஸ்துவை ஆதாரமாகக் கொண்ட உண்மையான ஒற்றுமை நல்லது. நம்மைப்பற்றிய இரண்டாம் நிலைக் காரியங்கள் நம்மைப் பிரிக்கும், உடைக்கும். ஆனால், கிறிஸ்துவில் நமக்கிருக்கும் ஒருமை விசுவாசிகளாகிய நம்மை ஒருங்கிணைக்க வேண்டும். ஒருவிதமான தவறான, பொய்யான ஒற்றுமையின் ஆபத்துக்களைப்பற்றி வரப்போகிற நாட்களில் நாம் பேசுவோம். ஆனால், கிறிஸ்துவை மையமாகக்கொண்ட உண்மையான ஒற்றுமை எப்போதும் நல்லது. இப்படிச் சொல்லும்போது சில கேள்விகள் நிச்சயமாக எழும். இதைப்பற்றி நாம் பின்னர் பேசுவோம்.
ஆதிச் சபை வரலாற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஆதிச் சபையில் சபைப் பிதாக்கள், நற்செய்தியாளர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லாரும் என்ன செய்தார்கள்? குறுகிய காலத்தில், கொஞ்சப்பேர் நற்செய்தியை உலகத்தின் இத்தனை நாடுகளுக்குக் கொண்டுசென்றார்களே! அவர்களிடம் எப்படிப்பட்ட மனப்பாங்கு இருந்தது? அவர்களை எது இப்படி நெருக்கி ஏவியது? உந்தித்தள்ளியது? அன்று உரோமப் பேரரசின் மக்களைக் கவர்ந்திழுத்த நற்செய்தியின் கவர்ச்சி இன்று மறைந்துவிட்டதா அல்லது குறைந்துவிட்டதா? ஒரு நிறுவனம் கொகோகோலாவை எல்லா நாடுகளுக்கும் மிகக் குறுகிய காலத்தில் கொண்டுபோய்ச் சேர்க்க முடியுமானால், நம்மால் கிறிஸ்துவின் நற்செய்தியை ஏன் கொண்டுபோக முடியவில்லை?
உங்களை உற்சாகப்படுத்துவதற்காக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், என்ன நடக்கிறது என்ற ஒரு புள்ளிவிவரத்தை நான் உங்கள்முன் வைக்கிறேன்.
சகோதர சகோதரிகளே, இது அற்புதம் இல்லையா? ஆச்சரியம் இல்லையா? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் 114பேர் கிறிஸ்தவர்களாகிறார்கள். இது உண்மை.
ஆரம்ப காலச் சபையில் சபைப் பிதாக்களின்மூலமாகவும், சாதாரண விசுவாசிகளின்மூலமாகவும் தேவன் செய்த செயல்களை நினைத்து நான் பரவசமாகிறேன். நம் காலத்திலும், நம் வாழ்க்கையிலும், நாம் வாழும் நாட்டிலும் தேவன் அதே காரியங்களை செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அழைப்பை முழுமையாக வாழுமாறு நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன்.
இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். அடுத்த பகுதியில் நாம் சபைக்கு ஏற்பட்ட சித்திரவைதையைப்பற்றி பேசுவோம். மீண்டும் சந்திப்போம். ஆமென்.